LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

2015ல் இந்தியா - முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!!

ஜனவரி 1 : இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) தலைமை இயக்குநராக எம்.சத்தியவதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் ஆவார்.

ஜனவரி 4 : காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் சர்ச்சைக்குரிய மரணம் தற்கொலை அல்ல என்று தில்லி காவல் துறை அறிவித்தது.

ஜனவரி 14 : 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, தேர்தல் விதிகளை மீறியதாகவும், காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் கூறி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவருக்கு நீதிமன்றம் உடனடியாக பிணை வழங்கியது.

ஜனவரி 25 : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தில்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை விரைந்து செயல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

ஜனவரி 30 : மத்திய முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர், தமிழக காங்கிரஸின் அறக்கட்டளை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். தான் அமைச்சராக இருந்தபோது தனது செயல்பாடுகளில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறுக்கீடு செய்தார் என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.

பிப்ரவரி 4 : உள்துறைச் செயலாளர் அனில் கோஸ்வாமியை மத்திய அரசு பதவிநீக்கம் செய்தது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் மதங் சின் மீதான கைது நடவடிக்கைக்கு அவர் தடை ஏற்படுத்தியாக புகார் கூறப்பட்டது.

பிப்ரவரி 10 : தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த பாஜக 3 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

பிப்ரவரி 14 : தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் பதவியேற்றார்.

பிப்ரவரி 22 : ஜிதன்ராம் மாஞ்சி பதவி விலகியதை அடுத்து, பிகார் முதல்வராக நிதீஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 22 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மார்ச் 1 : ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியும் முடிவுக்கு வந்தது. அரசியலில் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட மக்கள் ஜனநாயகக் கட்சியும் (பிடிபி), பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. பிடிபியின் நிறுவனத் தலைவர் முஃப்தி முகமது சயீது முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பாஜகவைச் சேர்ந்த நிர்மல் சிங் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

மார்ச் 14 : இலங்கை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணம், அனுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். அப்போது இலங்கை அதிபர் சிறீசேனாவும் உடனிருந்தார். யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட மறுவாழ்வு இல்லங்களை தமிழர்களிடம் மோடி ஒப்படைத்தார்.

மார்ச் 14 : லண்டனில் உள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திறந்து வைத்தார். விழாவில், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மார்ச் 16 : ஹரியாணாவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கக் கோரிய மசோதா, அந்த மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

மார்ச் 16 : ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏப்ரல் 2 : மும்பையில் நடத்தப்பட்ட பகவத் கீதை தொடர்பான எழுத்துப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக மர்யம்

சித்திகுய் என்ற 12 வயது முஸ்லிம் மாணவி வெற்றி பெற்றார். மொத்தம் 195 பள்ளிகளில் இருந்து கலந்து கொண்ட 4,500 மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளி இந்தச் சிறுமி முதலிடம் பிடித்தார்.

ஏப்ரல் 10 : மத்திய உளவுத் துறையின் (ஐ.பி.) மிக முக்கியமான இரண்டு ஆவணங்கள் அம்பலமாயின. இதன்படி கொல்கத்தாவில் வசிந்து வந்த நேதாஜியின் நெருங்கிய உறவினர்கள் இருவரது குடும்பங்களை 1948 முதல் 1968-ஆம் ஆண்டு வரை உளவுத் துறை நோட்டமிட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

ஏப்ரல் 10 : அமில வீச்சால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறப்பு அறுவை சிகிச்சை, மருந்துகள், உணவு உள்பட அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாக செய்ய வேண்டும் என தனியார் மருத்துவமனைகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏப்ரல் 15 : கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பரை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வர்த்தக ரீதியில் யுரேனியம் இறக்குமதி செய்வதற்கான மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஏப்ரல் 15 : சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சமாஜவாதி ஜனதா கட்சி ஆகிய ஆறு கட்சிகள் ஒன்றாக இணைக்கப்படவுள்ளதாக கூட்டாக அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த இணைப்பு முயற்சி பின்னாளில் தோல்வியைத் தழுவியது.

ஏப்ரல் 16 : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் முறைப்படி விடுமுறை பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் 56 நாள்கள் ஓய்வு எடுத்த அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஏப்ரல் 16-ஆம் தேதி பாங்காக்கில் இருந்து தில்லி திரும்பினார். முன்னதாக, ராகுல் காந்தியின் இந்த ஓய்வு குறித்து பலத்த சர்ச்சைகள் எழுந்தன.

ஏப்ரல் 19 : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானம் அக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஏப்ரல் 19 : நாட்டின் 20-ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக நஜீம் ஜைதி பதவியேற்றுக் கொண்டார். இந்தப் பதவியில், அவர் தனது 65 வயது வரை, அதாவது, 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நீடிப்பார்.

ஏப்ரல் 22 : மத்திய அரசின் நிலம் கையக அவசரச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் முதல்வர் கேஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி திடீரென மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏப்ரல் 28 : தில்லி மாநில சட்டத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமரின் கல்விச் சான்றிதழ் போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்தது. அது நிரூபணம் ஆனதால், தோமர் பதவியிழந்தார்.

மே 5 : உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன "ஆகாஷ்' ஏவுகணை, இந்திய ராணுவத்தின் பாதுகாப்புப் பணிகளில் சேர்க்கப்பட்டது.

மே 6 : ஒரே மாதிரியான வரிவிதிப்புக்கு வழிவகுக்கும் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தங்களது கோரிக்கைகள் அந்த மசோதாவில் இடம்பெறவில்லை என்று கூறி அதற்கான வாக்கெடுப்பை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது.

மே 6 : நில மோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி ஆகியோர் மீது அந்த மாநில லோக் ஆயுக்த போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மே 6 : குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி ஒருவரை கொன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், சல்மான் கான் சிறைக்குச் செல்வதற்கு முன்பாகவே மும்பை உயர் நீதிமன்றம் உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்கியது.

மே 7 : சிறார் நீதிச் சட்டத் திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 16-லிருந்து 18 வயது வரை உள்ள சிறார் குற்றவாளிகள் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க இந்த சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

மே 8 : புணேவில் கால் சென்டரில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கி கொலை செய்ததாக கார் ஓட்டுநர் ஒருவருக்கும், அவரது நண்பருக்கும் மரண தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மே 9 : ஏழைகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களான பிரதமரின் விபத்துக் காப்பீட்டு திட்டம், ஆயுள் காப்பீட்டுத் திட்டம், ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை கொல்கத்தாவில் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.

மே 11 :
வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பணத்தை பதுக்குவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் கருப்புப் பணத் தடுப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது.

மே 12 : தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முகநாதன் மேகாலய மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

மே 13 : அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் ஆகியோர் படங்களை மட்டுமே இடம்பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. மாநில முதல்வர்கள் உள்பட வேறு தலைவர்களின் படங்களை வெளியிடத் தடை.

ஜூன் 4 : நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸூக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தடை. உடலுக்கு ஊறு விளைவிக்கும் மோனோசோடியம் குளூட்டோமேட் எனப்படும் ரசாயனப் பொருள் குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக அந்த உணவுப் பொருளில் கலந்திருப்பது தெரிய வந்ததையடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஜூன் 4 : மணிப்பூர் மாநிலத்தில் ரோந்து சென்ற ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 21 வீரர்கள் பலியாகினர்.

ஜூன் 6 : இந்தியா - வங்கதேசம் இடையே நில எல்லை வரையறை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் இரு நாட்டு எல்லைகளுக்கு இடையே 41 ஆண்டு காலம் நீடித்த பிரச்னைகள் முடிவுக்கு வந்தன.

ஜூன் 9 : மியான்மர் எல்லையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மணிப்பூரில் ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜூன் 9 : நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கயான மானபி என்பவர் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் பெண்கள் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

ஜூன் 13 : ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி அருகே கோதாவரி ஆற்றுக்குள் வேன் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலி.

ஜூன் 14 : ஐபிஎல் முறைகேடு புகார்களில் சிக்கியுள்ள லலித் மோடி, லண்டனிலிருந்து போர்ச்சுக்கல் செல்வதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவியதாக புகார் எழுந்தன. நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் சுஷ்மா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

ஜூன் 17 : மும்பை அருகே விஷச் சாராயம் குடிந்த 15 பேர் பலியாகினர். பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அடுத்த சில நாள்களில் பலி எண்ணிக்கை 102-ஆக உயர்ந்தது.

ஜூன் 19 : உத்தரப் பிரதேச ஹோட்டலில் நேர்ந்த தீ விபத்தில் 30 பேர் உடல் கருகி பலி.

ஜூன் 21 : சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தில்லி ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 35 ஆயிரம் பேர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

ஜூலை 1 : டார்ஜிலிங் மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 38 பேர் பலி.

ஜூலை 5 : மத்தியப் பிரதேச தொழிலகத் தேர்வு வாரிய (வியாபம்) முறைகேடு வழக்கில் தொடர்புடைய ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அருண் சர்மா, தில்லியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வியாபம் வழக்கில் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜூலை 10 : பிரிட்டனின் 5 செயற்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது "இஸ்ரோ'.

ஜூலை 14 : ஆந்திரத்தில், கோதாவரி புஷ்கரம் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 27 பக்தர்கள் பலி.

ஜூலை 21 : வரிஏய்ப்பு வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு "ஸ்பைஸ் ஜெட்' நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு தில்லி நீதிமன்றம் சம்மன்.

ஆகஸ்ட் 3 : நாகாலாந்து தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசு அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஆகஸ்ட் 5 : மத்தியப் பிரதேச மாநிலம், ஹார்டா மாவட்டத்தில் இரு ரயில்கள் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் பலியாகினர்.

ஆகஸ்ட் 11 : அரசு நலத் திட்டங்கள் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

ஆகஸ்ட் 25 : சொந்த மகளையே (ஷீனா போரா) கொலை செய்ததாக தனியார் தொலைக்காட்சியின் நிறுவனர் இந்திராணி முகர்ஜியை மும்பை போலீஸார் கைது செய்தனர்.

ஆகஸ்ட் 27 : பொலிவுறு நகரங்கள் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 98 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் தமிழகத்தின் 12 நகரங்கள் இடம்பெற்றிருந்ததன.

ஆகஸ்ட் 27 :
ஜிசாட்-6 செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி டி-6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆகஸ்ட் 30 : கன்னட எழுத்தாளரும், பகுத்தறிவுவாதியுமான கலபுர்கி, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

செப்டம்பர் 4 : கடற்படையில் நீண்டகாலம் பணிபுரிய பெண்களுக்கும் அனுமதியளித்து தில்லி உயர் நீதீமன்றம் தீர்ப்பளித்தது.

செப்டம்பர் 5 : மக்களவைத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு "ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அறிவித்தார். முன்னாள் ராணுவத்தினரின் இடைவிடாத போராட்டத்தின் விளைவாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

செப்டம்பர் 7 :
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை முக்கியமான சதிகாரர் என தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றம்சாட்டியது.

செப்டம்பர் 11 : மும்பை தொடர் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் 12 பேரை குற்றவாளியாகவும், அவர்களில் 5 பேரை கொலைக் குற்றவாளியாகவும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

செப்டம்பர் 12 : மத்தியப் பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டத்தில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் எதிர்பாராதவிதமாக வெடித்ததில், அருகிலிருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150 பேர் படுகாயமடைந்தனர்.

செப்டம்பர் 15 : மறைந்த பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் படங்களுடன் தபால்தலைகள் வெளியிடப்படுவதை மத்திய அரசு அதிரடியாக நிறுத்தி உத்தரவிட்டது.

செப்டம்பர் 18 : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ரகசிய ஆவணங்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிட்டார். அவற்றில், சுபாஷ் சந்திரபோஸ் இறந்ததாகக் கூறப்படும் 1945-ஆண்டுக்குப் பிந்தைய காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

செப்டம்பர் 26 : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி ஹிமாசல் மாநில முதல்வர் வீரபத்ர சிங் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

செப்டம்பர் 28 : விண்வெளியை ஆய்வு செய்வதற்கு "ஆஸ்ட்ரோசாட்' செயற்கைகோளை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியது.

செப்டம்பர் 30 : மும்பை புறநகர் ரயில்களில் கடந்த 2006-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் சிமி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அக்டோபர் 5 :  இந்தியா வந்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 18 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அக்டோபர் 7 :
ரிசர்வ் வங்கி உள்ளிட்ட சில அமைப்புகள் மூலம் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கப்பெற ஆதார் அட்டை அவசியமாக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அக்டோபர் 11 : ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்யவோ, திருத்தம் செய்யவோ அனுமதிக்க முடியாது என்று அந்த மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அக்டோபர் 16 : உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளைத் தேர்வு செய்வதற்காக மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

அக்டோபர் 25 : பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியாவில் அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

அக்டோபர் 28 : இந்தியாவுக்கு வருகைத் தந்த முகநூல் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க், இணையச் சமநிலைக் கொள்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார்.

நவம்பர் 5 :
தங்க முதலீடு செய்து பணம் ஈட்டும் 3 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

நவம்பர் 5 : நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாகக் கூறி திரைக் கலைஞர்கள் 10 பேர், தங்களது விருதுகளைத் திருப்பி அளித்தனர்.

நவம்பர் 6 : இந்தோனேசியாவில் கைதான மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் தில்லி அழைத்துவரப்பட்டார்.

நவம்பர் 7 : ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

நவம்பர் 8 : பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி 178 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 20-ஆம் தேதி அந்த மாநிலத்தின் முதல்வராக நிதீஷ் பதவியேற்றார்.

நவம்பர் 12 :
இந்தியா - பிரிட்டன் இடையே அணுசக்தி ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

நவம்பர் 23 : சகிப்பின்மை தொடர்பாக ஹிந்தி நடிகர் ஆமிர் கான் தெரிவித்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.

டிசம்பர் 3 : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்குர் பொறுப்பேற்றார்.

டிசம்பர் 10 : கார் விபத்து வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஹிந்தி நடிகர் சல்மான் கானை விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

டிசம்பர் 15 : தில்லி தலைமைச் செயலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மீதான கிரிக்கெட் சங்க முறைகேடு புகார் மற்றும் விசாரணை அறிக்கை தொடர்பாக தில்லி அரசிடம் இருந்த கோப்புகளை ஆய்வு செய்யவே சிபிஐ சோதனை நடத்தப்பட்டதாக அந்த மாநில முதல்வர் கேஜரிவால் குற்றம்சாட்டினார்.

டிசம்பர் 16 : தமிழக கோயில்களில் ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

டிசம்பர் 18 : நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை அபகரித்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இருவருக்கும் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டது.

டிசம்பர் 19 : தில்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா கொலையில் தொடர்புடைய சிறார் குற்றவாளி தண்டனைக் காலம் முடிந்து விடுவிக்கப்பட்டார்.

டிசம்பர் 21 : தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் "எஸ்.சி., எஸ்.டி. சட்டத் திருத்த மசோதா' மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது. முன்னதாக, மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது.

டிசம்பர் 22 : 16-ல் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்கள் கொடுங்குற்றம் புரிந்தால், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் சிறார் நீதி சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

டிசம்பர் 22 : குற்றச்செயல்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களை பெரியவர்களாகக் கருதி கடும் தண்டனை அளிக்க வகை செய்யும் "சிறார் நீதிச் சட்ட திருத்த மசோதா' மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

டிசம்பர் 22 : எல்லைப் பாதுகாப்பு படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் தில்லியில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானதில் 10 வீரர்கள் உயிரிழந்தனர்.

டிசம்பர் 22 : தெலங்கானா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வில் அடைந்த தோல்வியால் விரக்தியடைந்த இளைஞர் தமது பெற்றோர் உள்பட 24 பேரை கத்தியால் குத்தினார். அவரை காவல் துறை சுட்டுக் கொன்றது.

டிசம்பர் 22 : 2 ஜி வழக்கில் சிபிஐ இறுதி வாதம் நிறைவடைந்தது. பிப்ரவரி 1-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

டிசம்பர் 23 : பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ரஷியா புறப்பட்டுச் சென்றார்.

டிசம்பர் 23 :
தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பாக, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத், அக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

டிசம்பர் 23 : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நிறைவு பெற்றது. மக்களவையில் 13, மாநிலங்களவையில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

டிசம்பர் 23 : பாகிஸ்தானுக்காக இந்தியத் தூதராக கௌதம் பம்பாவாலே நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 25 : ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வரும் வழியில், இந்தியப் பிரதமர் திடீரென்று பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டு அந் நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார்.

டிசம்பர் 28 : வரி செலுத்தத்தக்க ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு உருளை மானியம் வழங்குவதில்லை என்று மத்திய அரசு முடிவு.

by Swathi   on 01 Jan 2016  0 Comments
Tags: 2015ல் இந்தியா   Indian Current Affairs   2015 in India              
 தொடர்புடையவை-Related Articles
2015ல் இந்தியா - முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!! 2015ல் இந்தியா - முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.