LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

2015ல் தமிழகம் - முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!!

ஜனவரி 12 : மாதொருபாகன் நாவல் தொடர்பாக 18 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டம் நூலாசிரியர் பெருமாள் முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதையடுத்து முடிவுக்கு வந்தது. மேலும் தான் எழுதிய அனைத்து நாவல்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

ஜனவரி 14 : காவல், தீயணைப்பு-மீட்பு, சிறைத் துறையைச் சேர்ந்த 1,685 பேருக்கு அவர்களது சிறப்புப் பணியைப் பாராட்டி முதலமைச்சரின் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

ஜனவரி 21 : தனியார் தொலைக்காட்சிக்கு நவீன தொலைபேசி இணைப்புகள் பெறப்பட்டது தொடர்பான வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறனின் கூடுதல் தனிச் செயலாளர் உள்பட 3 பேரை சிபிஐ கைது செய்தது.

பிப்ரவரி 5 : முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக பொதுச் செயலர் கே.அன்பழகனை மனுதாரராகச் சேர்க்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு.

பிப்ரவரி 14 : எந்த வித காரணத்துக்காகவும் சுதந்திரப் போராட்ட தியாகிகள், பாதுகாப்பு படையினரின் அசையும், அசையா சொத்துகளை பறிமுதல் செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிப்ரவரி 16 : ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி 1 லட்சத்து 51.561 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மார்ச் 5 : வேளாண்மைத் துறையில் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான புகாரின் பேரில் திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்.

மார்ச் 27 : மேக்கேதாட்டு பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டும் விவாகரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன் மொழிந்தார்.

மார்ச் 29 : திருவாரூரில் உள்ள மத்தியப்பல்கலைக் கழகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் சாவு; 18 பேர் பலத்த காயம்.

மார்ச் 31 : அரசு பேருந்து எரிப்பு தொடர்பான வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்பட 18 பேரை விடுதலை செய்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு.

ஏப்ரல் 5 : பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது.

ஏப்ரல் 7 : ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர மாநில போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஏப்ரல் 08 : மிக சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.தமிழக மக்களால் JK என அறியப்படுபவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பரந்து இருக்கின்றது.இவர் ஏப்ரல் 8ஆம் தேதி தனது 80தாவது வயதில் இயர்க்கை எய்தினார்..

ஏப்ரல் 13 : சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பழையனூர் நாராயண பிரகாஷ், புஷ்பா சத்யநாராயணா, ஆர்.மகாதேவன் உள்ளிட்ட 8 நீதிபதிகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நியமித்தார்.

மே 1 : சிதம்பரம் நடராஜர் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மே 4 : கோவையில் மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் ரூபேஷ் என்கிற ஜோகி உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மே 11 : சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு.

மே 17 : சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பி.வெற்றிவேல் ராஜினாமா.

மே 23 : சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ஜெயலலிதா 5-ஆவது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

ஜூன் 1 : சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற தனியார் பொருள்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த ராட்டினத்திலிருந்து தவறி விழுந்து பௌசியா பேகம் (40) என்ற பெண் உயிரிழந்தார்.

ஜூன் 3 : சென்னை பாரிமுனையில் பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது மோட்டார்சைக்கிள்கள் மோதியதில் இரு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

ஜூன் 8 : கடலோர காவல் படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானம் மாயம்.

ஜூன் 12 : சென்னையைச் சேர்ந்த பார்வையற்ற பெண் பெனோ ஜெஃபைன் ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

ஜூன் 17  :
திமுக தலைவர் கருணாநிதியை முதல்வர் எனக் குறிப்பிட்டு தவறுதலாக அச்சிடப்பட்ட 11-ஆம் வகுப்பு பொருளியல் புத்தகத்தை திரும்பப் பெற தமிழக அரசு உத்தரவு.

ஜூன் 18 : விருதுநகரில் ரூ.77 கோடி செலவில் அமைக்கப்பட்ட தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

ஜூன் 18 : ஸ்ரீரங்கத்தில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியின் பதிவாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.அருண்ராய் நியமனம்.

ஜூன் 22 : விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ரூ.17 கோடி மதிப்பிலான 63 தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஜூன் 30 : சென்னையில் ஆலந்தூர்-கோயம்பேடு மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.

ஜூன் 30 :
குடியாத்தம் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் இரு பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

ஜூலை 4 : சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக முதல்வர் ஜெயலலிதா பதவியேற்று கொண்டார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜூலை 12 : டோனியர் விமான விபத்தில் உயிரிழந்த இளம் வீரர்களான வித்யாசாகர், எம்.கே.சோனி, சுபாஷ் சுரேஷ் ஆகிய மூன்று விமானிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

ஜூலை 14 : காணாமல் போன இந்தியக் கடலோர காவல் படை விமானத்தின் கருப்புப் பெட்டி உள்ளிட்ட சில பாகங்கள் 35 நாள்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, பிச்சாவரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

ஜூலை 14 : எம். எஸ். விஸ்வநாதன் (M. S. Viswanathan), அல்லது பொதுவாக எம்எஸ்வி, (24 சூன் 1928 – 14 ஜூலை 2015) தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்ரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி). விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.


ஜூலை 19 : 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அவரது உறவினர்களின் இல்லங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. ஆ. ராசா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜூலை 20 : சென்னை அடையாறு காந்தி நகர் 4-வது பிரதான சாலையின் பெயர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலை என பெயர் மாற்றப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

ஜூலை 25 : சட்டப்பேரவையில், "அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்', "அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம்' ஆகியவை தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

ஜூலை 27 : தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக களமிறங்கும் மக்கள் நலக் கூட்டு இயக்கம் 37 பக்கங்களைக் கொண்ட குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையை வெளியிட்டது.

ஜூலை 27 : தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. கட்சி பதவிகளிலிருந்தும் நீக்கம் செய்து, அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

ஜூலை 30 : ஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்த விபத்தில் சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரது உடல் ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜூலை 31
: விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணாக்கர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.

ஆகஸ்ட் 8 : கழிவுகளை திறம்பட மறு சுழற்சி செய்வதன் அடிப்படையில், மத்திய அரசு வெளியிட்ட தூய்மை இந்தியா தர வரிசைப் பட்டியலில், திருச்சி நகரம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

ஆகஸ்ட் 9 : மாநிலத் தலைமை தகவல் ஆணையராக, முன்னாள் டிஜிபி ராமானுஜம் பொறுப்பேற்று கொண்டார். வழக்கறிஞர் ஜி.முருகன், நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி ஆகியோரும் மாநில தகவல் ஆணையர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

செப்டம்பர் 7 : சென்னை ஒமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய அரசு மருத்துவக் கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இது, தமிழகத்தில் தொடங்கப்படும் 20-ஆவது அரசு மருத்துவக் கல்லூரியாகும்.

செப்டம்பர் 10 :
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி, 2.42 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் வந்துள்ளன என முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்துடன் தெரிவித்தார்.

 

அக்டோபர் 10 : மனோரமா தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார்.  இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்டார்.

இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார். ஆகவே இவர் 5 முதல்வர்களுடன் நடித்த பெருமைக்குறியவர். இவர் அக்டோபர் 10 அன்று தனது 78 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

 

அக்டோபர் 18 : நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தனர். தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் தேர்வாகினர்.

அக்டோபர் 30 : மதுவிலக்கு போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் "டாஸ்மாக்கை மூடு' என்ற பாடலை இயற்றி பாடிய மக்கள் கலை இலக்கியக் கழக பாடகர் கோவனை திருச்சியில் போலீஸார் கைது செய்தனர்.

நவம்பர் 2 : இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டார்.

நவம்பர் 4 :
ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது தொடரப்பட்ட வருமான வரி வழக்கில், அவர்கள் இருவரையும் விடுவித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நவம்பர் 23 : மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை செய்வதற்காக சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது. இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட சகாயம் குழு, தங்களது விசாரணை அறிக்கையை நவம்பர் 23-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

டிசம்பர் 16 : ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

டிசம்பர் 22 : தமிழகத்தில் மழை வெள்ள நிவாரணத்துக்காக ரூ.25,912 கோடி தேவை என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

டிசம்பர் 23 : 2016-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்தார்.

டிசம்பர் 24 : பூரண மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தி நமது இலக்கு மதுவிலக்கு என்ற கோஷத்துடன் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் நடைப்பயணம் தொடங்கினார்.

டிசம்பர் 25 : 2016-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

டிசம்பர் 25 : தமிழக உளவுத் துறை ஐஜி உள்பட காவல் துறை உயர் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

டிசம்பர் 25 : தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தராக எஸ். கீதாலட்சுமி நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 29 : சென்னையில் வெள்ளத்தால் வீடு இழந்த 10 ஆயிரம் குடும்பங்களுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

டிசம்பர் 30 : தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாரதிய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

டிசம்பர் 31 : தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான வியூகங்கள் வகுக்க அதிமுக பொதுச் செயலாளரும்  முதல்வருமான ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் வழங்கி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டிசம்பர் 31 : தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

by Swathi   on 31 Dec 2015  0 Comments
Tags: 2015ல் தமிழகம்   2015 in Tamilnadu   Current Affairs Tamilnadu              
 தொடர்புடையவை-Related Articles
2015ல் தமிழகம் - முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!! 2015ல் தமிழகம் - முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.