LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இவர்களுக்குப் பின்னால் (Behind These People)

இவர்களுக்குப் பின்னால் (அன்னை சாரதாதேவி) -பகுதி 1

இவர்களுக்குப் பின்னால் (அன்னை சாரதாதேவி) - பகுதி  1 

-சூர்யா சரவணன்

நூல் உள்ளடக்கம்: 


1. அன்னை சாரதாதேவி   

2. கஸ்தூரிபாய்

3. ஜென்னி மார்க்ஸ்

4. குரூப்ஸ்காயா

5. நாகம்மை

6. மணியம்மை

7.கண்ணம்மாள்

                                                -----------------------*-----------------------------------

 நூல் அறிமுகம்

மலர்கள் ஏந்திய செடியைப் பார்க்கிறோம். கனிகளைத் தாங்கும் மரத்தையும் பார்க்கிறோம். அழகான மலர் என ரசிக்கிறோம்: சுவையான கனி எனச் சுவைக்கிறோம். அப்போது வேரை நினைப்பவர்கள் எத்தனைப் பேர். ஆனால் வேரை நினைக்க வேண்டும் என்பதுதான் இந்நூலா சிரியரின் விருப்பம்.

  ஆன்மிக உலகின் அதிசயம் ஸ்ரீராமகிருஷ்ணர். அதிசியத்திலும் அதிசயம் அன்னை சாரதா தேவி!

  இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர் மகாத்மா காந்தி. வேரைவிட்டு விலகாதவர் கஸ்தூரிபாய்!

  உழைக்கும் கூட்டத்தினரின் விடிவெள்ளி கார்ல் மார்க்ஸ் துணையாக மின்னும் ஒளி ஜென்னி!

   ரஷ்ய சோஷலிஸப் புரட்சியின் வித்து லெனின்: வித்து வளர்த்திய நிலம் குரூப்ஸ்கயா!


   பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார். பகலவனின் பாதைக்கு ஒளியூட்டிய கதிர்க் கண்மணிகள் மணியம்மை, நாகம்மாள், கண்ணம்மாள்!

  பெண் ஒருத்திக்கு திருமண வாழ்வின் எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு வகையில் மாறக்கூடும். அவற்றை உள்ளபடி ஏற்றுக் கொண்டு ஏணியாக அமைந்த பெண் குலத்தின் ஏழு திலகங்களை இந்நூலில் சந்திக்கிறோம்: அவர்களைப் பற்றியே சிந்திக்கிறோம்.

  இயற்கைக்கு மாறுபட்ட நிகழ்ச்சியை உடைய வாழ்வு அன்னை சாரதாவுடையது. கட்டில் இல்லாமல் தொட்டில் இல்லாமல் எத்தனையோ குழந்தைகளுக்குத் தாயாகும் பேறு கிட்டியது அவருக்கு. கணவனால் வணங்கப் பெற்ற அன்னையின் அர்ப்பணிப்பை அவ்வளவு எளிதாகத் தீட்டிவிட முடியாது. உணர்ச்சிக் கோயிலின் சன்னதி அது. ‘‘ வேஷிட பூஜை’’ பகுதி நூலாசிரியரின் எழுத்துக்கு கிடைத்திருக்கும் வெற்றியைக் குறிக்கிறது.

    இந்திய விடுதலை இயக்கத்தையும் சமுதாயச் சீரமைப்பையும் ஒரு சேரக் கருதிய காந்தியடிகளின் கொள்கை வாழ்வதற்குத் தன் உயிரையும் பணயம் வைத்தவர் கஸ்தூரி திலகம். தன் பொறுமைப் பண்பினால் ஆசிரம வாழ்க்கையில் ஒன்றியவர். உடல் நலம் குன்றிய போதும் மாமிச சூப் சாப்பிட மறுத்து ‘‘உங்கள் மடியிலேயே இறந்துபோகத் தயார்’’ என்கிறார். அவரது குரலை யார் கேட்டாரோ? காலத்தாயா? அப்படியே நடத்ததே! நினைப்பின் தூய்மையையும் உறுதியும் அவ்வாறே நடக்கச் செய்தனவா? ‘‘ காந்தியின் மடியில் தலைவைத்தபடி படுத்தபடி கஸ்தூரிபாய் காலமானார்’’ என்பது மிகவும் எளிய வாக்கியம் தான். ஆனால் அது படிப்பவரை ஏற்படுத்தும் கனம் அதிகம்.

    ஜென்னி என்னும் அழகு நிலா& செல்வ நிலா& அறிவு நிலா. கார்ல் மார்க்ஸ் என்னும் காதல் வனத்தில் ஒளிர்ந்தது அற்புத நிலாவாக போராட்டம் என்னும் வானத்தில் நீந்தியது என்பதுதான் உண்மை. அவருக்கு இருந்த பெருமிதங்கள் அனைத்தையும் தன் மண வாழ்க்கைக்கு விலையாகத் தந்தவர் ஜென்னி. கணவரின் கொள்கை வாழ்க்கைக்கும் எனலாம். வறுமையில் வாடியபோதிலும் கார்ல்மார்க்ஸின் அடியொற்றிய வரலாற்று வெளிச்சங்களில் நிறைவுடன் வாழ்ந்தவர். ஜென்னியின் கடிதங்கள் மூலமாக மார்க்ஸின் புரட்சிப்பாதை முழுவதும் ஜென்னியின் ஆதரவுப் பூக்கள் தூவப்பட்டிருப்பதை நமக்குப் புகைப்படமாக்கிக் காட்டி உணரச் செய்கிறார் நூலாசிரியர் சூர்யா சரவணன்.

  சோஷலிசப் புரட்சி நாயகன் லெனினைக் கைப்பிடித்து அவரது இலட்சியங்களுக்கு மாலையிட்டவர் குரூப்ஸ்கயா. வரவுக்கு ஏற்றபடி செலவு செய்யும் திறம் வாய்க்கப்பெற்றவர் மட்டுமல்ல: லெனின் மீது ஆஸ்திரிய அரசு சுமத்திய பொய் வழக்கிலிருந்து அவரை விடுவித்து வெற்றிக் கண்டவர். கண்ணகியின் மறுதோன்றலோ என எண்ணவைப்ப்வர். தகுதி உடையவர்களிடம் பதவி இருக்குமேயானால் சமுதாயம் பெறக்கூடிய நன்மைகளுக்கு இவ்ர் கல்வி அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகள் சான்றாகின்றன. குரூப்ஸ்கயா இயற்றிய அழியாத நூல்கள் இவரது பரந்துவிரிந்த ஆழமான உலக அறிவைப் பறைசாற்றுகின்றன.

    நாட்டின் நிலையை நேரில் அறியும் ஆவல்!

    உண்மையைப் புலப்படுத்தும் தேடல்!

    அப்போதுதான் ஆவன செய்ய முடியும் என்னும் உறுதி!

இந்த மூன்று இயல்புகளும் அவரை மெழுகுவர்த்தியாக்கிவிட்டன.

    நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்

    வாய்நாடி வாய்ப்பச் செயல்.

&என்னும் வள்ளுவர் மொழியை நினைவுபடுத்தும் வாழ்க்கை அவருடையது.


   நாகம்மையும் மணியம்மையும் கண்ணம்மாளும் பகுத்தறிவுப் பாசறை நடத்திய பெரியார் வாழ்க்கையின் கண்கள். கணவரின் பாதையில் இணைவதற்காகத் தம் தன் முனைப்பை அகற்றியவர்கள் அல்ல. துறந்தவர்கள். பெரியாரின் சகோதரியும் இவர்களுக்கு சளைத்தவர் அல்ல. ஆம். இந்தத் துறவறமே இவர்களது இல்லறம். மூவரும் பெரியாரது கொள்கைப் பிணைப்புடன் இணைந்த கரங்கள். ‘‘ மற்றொரு மனம். மற்றொரு சிந்தனை, மற்றொரு செயல் வீரம் என எண்ணத்தக்கவர்கள். பெரியாரின் மறைவுக்குப் பின்னர் அவரது இழப்பை ஈடு செய்து கழகத்தைக் காத்தவர் மணியம்மை. வீர முழக்கமிட்டு விழிப்புணர்ச்சியூட்டிய மணி மணியான பணிகளைச் செய்தவர் அவர்.

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சூர்யா சரவணன் அவர்கள் எழுதிய ‘‘ இவர்களுக்குப் பின்னால்’’ என்னும் இந்நூலில் சித்தரிக்கும் இல்லற விளக்குகள் எல்லாம் கல்தூண்கள்.

          ஓருடலில் ஈருயிர்களின் இயக்கமா?

          ஈருடலில் ஓருயிரின் இயக்கமா?

என வியக்கச் செய்பவர்கள். மென்மைக்குள்ளே வன்மை காட்டும் எல்லோரிடமும் இருக்கும் ஓர் ஒற்றுமை ‘‘கைப்பிடித்தவரால் போற்றப்பட்டவர்’’ என்பதாகும். வாழ்க்கைத்துணை: வாழ்க்கைத் துணை நலம் என்று கூறப்படும்போது நினைவில் நிற்பவர்கள் இவர்கள்.

            நூலாசிரியரது தமிழ் & மொழிநடை & காட்டும் எளிமை பலம் எனலாம். எந்த விதத்திலும் சிந்தனை சிதறாமல் வாசகர்களைக் கருத்தின் ஆழத்திற்கே கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது இது.


  பெண்ணை றத்தினை யான்மக்கள் வீரந்தான்

  பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!

என்றும்

   ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

   அறிவி லோங்கிவ் வையகங் தழைக்குமாம்

என்றும் மகாகவி பாரதியார் போற்றும் பெண்மை வழக்கம் படிப்பவர் மனத்தில் எழுமாறு& பெண் குலம் மூலம் உயர்க்குலம் உயர்ந்து எழுமாறு எழுதப்பட்டுள்ள திரு சூர்யா சரவணன் எழுதியா இந்நூலை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் நிறைவடைகிறேன்.


இவண்,

கமலம் சங்கர் 


                                                 -----------------------*-----------------------------------


முன்னுரை


   ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். அது உண்மையா என்ற கேள்விக்கான விடை இந்நூல்.


  பாரதியின்


   பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா!

  பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா!


  தையலை உயர்வுசெய்.


  பெண் விடுதலை வேண்டும்


என்ற வரிகள் தான் இந்த நூலுக்கு தூண்டுகோள். 


   எனது நூலுக்கு நல்லதோர் அணிந்துரை வழங்கிய டாக்டர் எஸ்.கமலம் சங்கர் எம். ஏ., பி.எட்., பிஎச்டி., அவர்களுக்கு நன்றி என்று கூறி என் நன்றிக் கடனை ஒரு வார்த்தையில் முடிக்க முடியாமல் தவிக்கிறேன். எனது புத்தக ஆர்வத்தை புரிந்துகொண்டு நான் எழுதும் ஒவ்வொரு நூலையும் வாசகர்கள் போல் எதிர்பார்க்கும் அன்பு மனைவி சூர்யா. ஆசை மகன் அனிருத் என் கண்கள்.


 இந்நூலை சிறப்புடன் வெளியிடும் வலைதமிழ் இணைய இதழ் வலைத்தமிழ் மற்றும் ஆசரியர் குழுவிற்கு என் நன்றி.  


அன்பன்.

சூர்யா சரவணன்


-----------------------*-----------------------------------


              முன்னதாக............


   திருமணத்தின்போது அழகான மனைவி கிடைப்பாளா என்று ஆணும் வசதியான, தான் கேட்டதை எல்லாம் வாங்கித்தரும் கணவன் கிடைப்பானா என்று பெண்னும் எதிர்பார்க்கிறார்கள்.  படிக்காத பெண் கிடைத்தாலும் அவளை படிக்க வைத்து உயர் நிலைக்கு கொண்டுவருவேன் என்று ஆணும் ஏழைக் கணவன் கிடைத்தாலும் அவனை அன்புடன் நடத்தி அவனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன்

என்று பெண்ணும் நினைத்தது உண்டா?


  அன்னை சாரதாதேவி, ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மிக வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார். சீமான் வீட்டில் பிறந்த ஜென்னி மார்க்ஸ் தனது கணவனின் கொள்கைக்காக  வறுமையை தாங்கிக் கொண்டார். தென்னாப்பிரிக்காவில் காந்தி தனது முதல் போராட்டத்தை துவங்கியபோது தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி கஸ்தூரிபாய் மன்றாடினார். குருப்ஸ்கயா லெனினுடன் பல போராட்டங்களில் பங்கேற்றதுடன் அவருக்குப் பின்பும் லெனின் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்தார். மணியம்மை, நாகம்மை பெரியாரின் சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் பெரியாரின் கொள்கைக்காக இரவு பகலாக அயராது பாடுபட்டனர். இந்நூலில் வரும் பெண்கள் யாரும் ‘‘உங்களை திருமணம் செய்துகொண்டு நான் என்ன சுகத்தை வாழ்க்கையில் அனுபவித்தேன்’’ என்று தன் கணவனைப் பார்த்து கேட்கவில்லை. அதன் விளைவு, இன்றைக்கும் ராமகிருஷ்ணர், மார்க்ஸ், லெனின், பெரியார் ஆகியோரைப்பற்றி நாம் படித்துக் கொண்டிருக்கிறோம்.


 இந்த நூலை படிக்கும் பெண்கள், திருமணத்திற்கு முன்பு தனது கணவன் எந்த நிலையில் இருந்தாலும் அந்த நிலையை மாற்றி ஓர் உயர் நிலையை நோக்கி வழி நடத்த வேண்டும். மது, சூது போன்ற தீய செயல்களில் இருந்து தங்களது கணவன்களை திருத்தி நல்வழிப்படுத்தும் சக்தி உள்ள பெண்களுக்கு தனது கணவனை உயர் நிலையை நோக்கி கொண்டு செல்ல முடியாதா என்ன! 


         அன்னை சாரதா தேவி 


*********************************************************************

ஸ்ரீராமகிருஷ்ணர்:  ‘‘நீ என்னை மாயையில் கட்டுப்படுத்துவதற்காக வந்துள்ளாயா?’’

சாரதா:  ‘‘நான் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? உங்களின் ஆன்மிக வாழ்க்கைக்குத் துணை செய்யவே வந்துள்ளேன்.’’

*********************************************************************



    அவதார புருஷர் ஸ்ரீராமகிருஷ்ணரின் மனைவி அன்னை சாரதாதேவி. ஏழை அந்தணர் குடும்பத்தில் பிறந்தவர். கொல்கத்தாவிற்கு மேற்கே அறுபது மைல் தொலைவில் உள்ள ஜெயராம்பாடி என்னும் கிராமத்தில் 1853ம் ஆண்டு டிசம்பர் 22ம் நாள் ராமச்சந்திர முகர்ஜிக்கும் சியாமா சுந்தரி தேவிக்கும் பிறந்த மூத்தப் பெண் சாரதாதேவி. இளைய குழந்தைகளைக் கவனித்துக் கொள்தல், மாடுகளைப் பேணுதல், வயலில் வேலை செய்யும் தந்தைக்கும் மற்றவர்களுக்கும் உணவு கொண்டு செல்லுதல்  போன்ற வீட்டுக் காரியங்களில் அவரது இளமைப் பருவம் கழிந்தது. சாரதாதேவி பள்ளிக்குச் சென்று படிக்கவில்லை. ஆனால் பிற்காலத்தில் தனது சொந்த முயற்சியால் வங்காள மொழியை எழுதவும் படிக்கவும் தெரிந்து கொண்டார். பக்தி மணம் கமழ்ந்த அந்தணர் குடும்பச் சூழலும் பிற்காலத்தில் கிடைத்த சாது சங்கமும் இயல்பிலேயே பண்பாடு மிக்க உயர்ந்த நிலையில் இருந்த சாரதாதேவிக்கு இயற்கையாகவே கல்வி அமைந்தது.


    சிறுவயதில் சுதாகரன் என அழைக்கப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஆன்மிக வாழ்க்கையின் காரணமாக உலக நாட்டத்தை முற்றும் இழந்திருந்த ஸ்ரீராமகிருஷ்ணருக்கு உலக வாழ்க்கையில் பற்றை உண்டாக்குவதற்குத் திருமணம் சிறந்த மருந்து என்று கருதிய சுதாகரரின் உறவினர்கள் ராமகிருஷ்ணருக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது. பெண் பார்க்கும் படலம் சுதாகரனுக்குத் தெரிந்தால்  திருமணத்துக்கு ஒத்துக் கொள்ளமாட்டார் என்று ரகசியமாகவே பெண் பார்த்தனர். 


ஒரு நாள், ‘‘பெண்ணைத்தேடி அங்கும் இங்கும் ஏன் வீணாக அலைகிறீர்கள்? ஜெய்ராம் பாடி கிராமத்தில் வசிக்கும் ராமச்சந்திர முகர்ஜியின் வீட்டில் எனக்கென்று ஒரு பெண் பிறந்திருக்கிறாள்’’ என்றார் சுதாகரர்.


   இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. அப்போது சுதாகருக்கு 22 வயது, சாரதாதேவிக்கு ஐந்து வயதுதான் ஆகியிருந்தது. திருமணத்துக்குப்பின் சாரதாதேவி ஸ்ரீராமகிருஷ்ணருக்குச்சேவை செய்வதை பாக்கியமாக கருதினார். சிறு பருவத்தில் தட்சிணேஸ்வரத்தில் வாழ்ந்து வந்த சாரதாதேவி, 1872ம் ஆண்டு மார்ச் மாதம் ஒருநாள் இரவு காய்ச்சலுடன் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் தட்சிணேஸ்வரம் கோயிலுக்கு வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் இறைவனுக்காக அருள் தாகம் கொண்டு ஏங்கித் தவித்த காலம் அது. மேலும் பண ஆசை, காமம் ஆகியவற்றை அறவே ஒதுக்கித் தள்ளி துறவு மனப்பான்மையின் மிக உச்ச நிலையில் அவர் திளைத்த அந்த வேளையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது மிக விசித்திரம். ஒரு துறவி இப்படிப்பட்ட சூழ்நிலையை அமைதியாக எப்படி வரவேற்றிருக்க முடியும்? அந்தத் துறவி, மனைவியை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் நீண்ட தூர பயணத்தில் மிகவும் களைத்துப் போயும் காய்ச்சலுடனும் வந்த மனைவியை அன்புடன் வரவேற்றார் ராமகிருஷ்ணர். சாரதா தங்குவதற்கும் அவருக்கு சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தார். ஒரு இல்லற வாழ்க்கை நடத்திவரும் கணவன், நோயின்போது மனைவியிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வாரோ அதேபோல் ராமகிருஷ்ணர் மனைவியிடம் அன்பாகவும் பரிவாகமும் நடந்து கொண்டார். சாரதா தங்குவதற்கு அறையும் அவரது நோய் தீர மருத்துவரையும் ஏற்பாடு செய்தார். 


     தட்சிணேஸ்வரத்தில் நகபத் என்ற அறையில் சாரதாதேவி தங்கியிருந்தார். அது மிகவும் தாழ்வான அறை ஆகும். ஒன்பதடி நீளமும் எட்டு அடி அகலமும் கொண்டது. அந்த அறையைச் சுற்றி நாலேகால் அடி அகலத்தில் ஒரு வராண்டா அமைந்திருந்தது.


  அந்தச் சிறிய அறைக்குள்தான் சமையல் அறை, விருந்தினர்களை உபசரிக்க, உறங்க, ஜபம் செய்ய என எல்லாம் அந்த அறையில் தான். சாரதாதேவியைச் சந்திக்க வந்த உறவினர்கள் இந்த அறையில் வசிக்க சாரதாதேவிக்கு மிகவும் பொறுமை வேண்டும் என்று கருதினர்.


 ‘‘அசோகவனத்தில் சீதாதேவி இருந்ததைப்போல் அல்லவா சாரதாதேவி இருக்கிறார்’’ என்றனர்.


  ‘‘அந்த அறையில் உங்களால் ஒரு நாள் கூட காலம் தள்ள முடியாது’’ என்று தனது உறவினர்களிடம் சாரதாதேவியே ஒருமுறை கூறியுள்ளார். 


    அன்னையின் சிரமத்தை நேரில் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர் சம்பு மல்லிக் என்பவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் கோயிலுக்கு அருகில் ஒரு சிறிய வீட்டை 1874ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டிக்கொடுத்தார். ஆனால் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு வயிற்றுவலி ஏற்பட்டபோது அவரை அருகே இருந்து கவனித்துக்கொள்ள சாரதாதேவி அங்கு வந்தார். ராமகிருஷ்ணர் உடல் நலம் தேறிய பின்பு அவருக்கு உதவ வேண்டுமே என்ற நோக்கத்தில் பழைய அறைக்கு அன்னை திரும்பவில்லை.


     சாரதாதேவி தினமும் அதிகாலை மூன்று மணிக்கே எழுந்துவிடுவார். சூரிய உதயத்துக்கு முன்பாகவே தனது தினசரி கடன்களை முடிப்பார். நன்கு பொழுதுவிடியும் வரை ஜபம், தவத்தில் ஈடுபடுவார். காலை விடிந்தபின் தனது கூந்தலை சூரிய ஒளியில் காயவைப்பார். சாரதாவுக்கு நீண்ட பெரிய கூந்தல் இருந்தது. எப்பொழுதும் முக்காடு போட்டபடி இருப்பார்.


   ஒருமுறை கோயில் அதிகாரி, ‘‘சாரதாதேவி இங்குதான் வசிப்பதாக கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் நாங்கள் அவரை ஒருமுறை கூடப் பார்த்ததில்லை’’ என்றே கூறியுள்ளனர்.


   சாரதாதேவின் இந்த அடக்கமான பண்பு ராமகிருஷ்ணரைப் பெரிதும் கவர்ந்தது. ஆயினும் அன்னை காற்றோட்டமும் வெளிச்சமும் இல்லாமல் வாழ்கிறாரே, அதனால் அவரது உடல் நிலை பாதிக்கப்படுமோ என்று அவர் கருதினார். ராமகிருஷ்ணர் யோக நிலையில் பலமுறை பரவச நிலையை அடைவார். அந்தச் சமயத்தில் அருகிலேயோ ஒரு தட்டியின் அருகிலேயோ நின்று ராமகிருஷ்ணரை அன்னை பார்ப்பார்.


    ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் அவரது பக்தர்களுக்கும் உணவு தயார் செய்து கொடுப்பது சாரதாதேவின் முக்கியப்பணி. ஸ்ரீராமகிருஷ்ணரின் வயிறு மிகவும் மென்மையானது என்பதால் கோயில் பிரசாதத்தை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் சாரதாதேவி, ஸ்ரீராமகிருஷ்ணரின் குடல் எளிதில் செரிக்கும்படியான உணவை அவருக்குத் தயார்செய்து கொடுப்பார். ஸ்ரீராமகிருஷ்ணரின் அறையை சுத்தம் செய்வது, ஆடைகளைத் துவைப்பது என்பது அவரது நித்திய கடமையாகும். நாட்கள் செல்லச்செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகமானது. ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்கள் அதிகரித்தனர். அதனால் சாரதாதேவின் பொறுப்பும் அதிகமானது. எனவே சாரதாதேவி கடுமையாக உழைத்தார். ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் அவரது சீடர்களுக்கும் உணவு மற்றும் வெற்றிலைச் சுருள் தயார் செய்து தருவார்.


   ராமகிருஷ்ணரைச் சந்திக்க வரும் பக்தைகள் அன்னையின் அறையில் தான் தங்குவார்கள். அவர்களை உபசரிப்பது அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது ஆகியவை அன்னையின் பணி. சாரதாதேவி இரவின் பெரும்பகுதியை தியானத்திலும் ஜபத்திலுமே கழிப்பார்.


  அன்னையின் ஆன்மிக வாழ்க்கை, உலக வாழ்க்கை இரண்டிலும் ஸ்ரீராமகிருஷ்ணர் கவனம் செலுத்திவந்தார். இந்நாளில் தனது வேலை நேரம் போக தினமும் ஒரு லட்சம் நாம ஜபம் செய்வதாக தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.


  சாரதாதேவி சீடர் ஒருவரிடம் கூறுகையில், ‘‘அந்தக் காலத்தில் நான் தினமும் மூன்று மணிக்கு எழுந்து தியானம் செய்ய அமர்வேன். பல நாட்கள் என்னை மறந்து தியானத்திலேயே ஒன்றிவிடுவேன். ஒரு நாள் நல்ல நிலவொளி வீசிக் கொண்டிருந்தது. எங்கும் ஒரே அமைதி. அன்று நகபத்தின் வாயிற் படியருகே அமர்ந்தபடி தியானத்தில் மூழ்கிவிட்டேன். அப்பொழுது பஞ்சவடிக்கு செல்வதற்காக ஸ்ரீராமகிருஷ்ணர் அந்த வழியாக வந்து போனதைக் கூட என்னால் உணர முடியவில்லை.


   காலைக்கடன் முடிக்க தினமும் ஸ்ரீராமகிருஷ்ணர் அந்த வழியாக செல்லும்போது அவரது செருப்பு ஓசை கேட்டு சில நாட்கள் தியானத்தில் இருந்து முழித்துக் கொள்வேன். அன்று ஆழந்த தியானத்தில் மூழ்கி விட்ட காரணத்தால் எனக்கு எதுவும் தெரியவில்லை. அப்பொழுது நான் என் தலை மீது முக்காடு இட்டு இருந்த சிவப்புக்கரை போட்ட சேலை, காற்றில் தழுவிக் கீழே விழுந்து கிடந்ததையும் உணராது தியானத்தில் மூழ்கிக்கிடந்ததாக ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர் யோகின்மா என்னிடம் கூறினார். அந்த நாட்களில் நான் தியானத்தில் ஆழ்ந்த பரவசநிலையில் மூழ்கிக்கிடந்தேன்.


  பால் போல் முழு நிலவு ஒளி வீசும் இரவுகளில் சந்திரனைப்பார்த்து இரு கைகளையும் கூப்பி வணங்கியபடியே ‘இறைவா! இந்த சந்திரனின் கிரணங்கள் போன்று என் மனதும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்தச் சந்திரனிலாவது சிறிதளவு களங்கம் இருக்கிறது. ஆனால் என்னுடைய மனத்தில் அதுகூட இருக்கக்கூடாது. எனது மனம் தூய்மையாக இருக்க வேண்டும்’ என்று வேண்டிக்கொள்வேன். ஒருவர் மனம் ஒருமுகப்பட்டு தியானத்தில் மூழ்கினால் அவர் தன் இஷ்ட தெய்வத்தைதன் இதயத்தில் தெளிவாகக் காண்பதுடன் இறைவனின் குரலையும் கேட்க முடியும். அப்படிப்பட்டவர்களின் மனத்தில் எந்த எண்ணம் உதித்தாலும் அது அந்தக் கணத்திலேயே நடக்கும். அப்படிப்பட்டவர்கள் ஆழ்ந்த அமைதியான ஆனந்தத்தில் மூழ்கி விடுவார்கள். அந்த நாட்களில் என் மனம் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தது.


   ஒரு நாள் நான் தியானத்தில் இருந்தபோது வேலைக்காரி பிருந்தா, தன் கையில் வைத்திருந்த தட்டைக் கீழே போட்டுவிட்டார். அந்த பயங்கர சப்தம் என்னுடைய நெஞ்சைப் பிளந்துவிடும் போல் இருந்தது. என்னுடைய இதயத்தில் தோன்றும் அதே இறைவன் தானே தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், துன்புறுத்தப்படுகிறவர்கள் இதயத்திலும் இருக்கிறது என்பதை என்னுடைய ஆழ்ந்த ஆன்மிக அனுபவத்தில் அறிந்து கொண்டேன். அந்த இறைவனைத் தனக்குள் அறிந்து கொண்டால் உண்மையான பணிவும் அடக்கமும் தானாகவே வந்துவிடும்’’ என்று கூறினார்.


 ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர் யோகின்மா சாரதாதேவி குறித்து கூறுகையில்,

  ‘‘முதல் முறையாக தட்சிணேஸ்வரத்துக்கு அன்னை வந்தபோது அவர் இறைவனுடன் இரண்டறக் கலக்கும் சமாதி அனுபவத்தை அடையவில்லை. நாள்தோறும் தியானமும் தவமும் செய்வார் என்றாலும் சமாதியில் மூழ்கவில்லை. அதற்கு மாறாக ஸ்ரீராமகிருஷ்ணருடன் ஒரே அறையில் படுத்து உறங்கியபோது ஸ்ரீராமகிருஷ்ணரின் சமாதி நிலையைக் கண்டு பயந்துள்ளார். நான் அன்னையிடம் பழகத் தொடங்கிய சிறிது நாட்களுக்குப்பின் அன்னை என்னிடம் ஒருநாள் கூறுகையில்,


  ’’எனக்கு சமாதிநிலை கிடைக்க அருள் புரியும்படி சொல்வாயா? அவரைச் சுற்றிலும் எப்போதும் சீடர்களும் பக்தர்களும் இருந்துகொண்டே இருக்கின்ற காரணத்தால் இதைப் பற்றி அவரிடம் பேச என்னால் முடியவில்லை. அதற்கு எனக்கு வாய்ப்பே கிடைப்பதும் இல்லை என்று கூறினார். அன்னையின் இந்த வேண்டுகோளை ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கூற விரும்பினேன்,


      மறுநாள் நான் ஸ்ரீராமகிருஷ்ணரை சந்திக்க அவரது அறைக்கு சென்றேன். அவர் கட்டிலில் தனியாக அமர்ந்திருந்தார். அவரை வணங்கிவிட்டு அன்னையின் வேண்டுகோளை அவருக்கு தெரிவித்தேன். அவர் கவனமாகக் கேட்டுக் கொண்டார். பதில் எதுவும் கூறவில்லை. சிறிது நேரம் மவுனமாக இருந்துவிட்டுச் சென்றுவிட்டேன்.


  நகபத்தை நான் வந்தடைந்தபோது அங்கு வழக்கம்போல் காலை வழிபாடு செய்ய அன்னை அமர்ந்திருந்தார். கதவை திறந்து பார்த்தபோது அவர் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார். அப்பொழுதே உணர்ந்தேன் அவர் சமாதி நிலை அடைந்த காரணத்தினால் ஆனந்தக் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார் என்று. கதவை மெல்ல மூடிவிட்டு நான் வெளியே வந்துவிட்டேன். நெடு நேரம் கழித்து மீண்டும் நான் அவரது அறைக்குச் சென்றேன்.


   ஒருநாள் இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது, புல்லாங்குழல் வாசிக்கும் சப்தம் எனக்குக் கேட்டது. அந்த ஓசையை கேட்டதும் அன்னையின் மனம் உள்முகமாக திரும்பிவிட்டது. இடையிடையே சிரித்தபடி தானாக ஆழ்ந்த சமாதி நிலையை நோக்கி சென்றுவிடுவார். அவர் உலக நினைவுக்குத் திரும்ப நீண்ட நேரம் ஆகும்.’’


  ஸ்ரீராமகிருஷ்ணர், சாரதா தேவிக்கு அன்றாட வாழ்கையில் எப்படி மற்றவர்களிடம் நடந்துகொள்வது? வீட்டில் எந்தப் பொருளை எங்கே வைக்க வேண்டும்? அடிக்கடி பயன்படும் பொருளை கைக்கு எட்டும் இடத்தில் வைக்க வேண்டும். ஒரு பொருளை எடுத்தால் அதை அந்த இடத்திலேயே வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இருட்டில் கூட தடுமாறாமல் அந்தப் பொருளை எடுத்துவிடலாம். விளக்கு போடுவதற்கு திரி எப்படி செய்வது? காய்கறிகளை எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும், சமையல் வேலைகளை எப்படிச் செய்வது? என்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளையும் சாரதாதேவிக்கு ஸ்ரீரமகிருஷ்ணபரமஹம்சர் கற்றுக் கொடுத்தார்.


  படகிலோ அல்லது வண்டியிலோ பயணம் செய்தால் முதலில் ஏறவேண்டும், கடைசியாக இறங்கவேண்டும். அப்பொழுதுதான் சாமான்கள் அனைத்தும் ஏற்றப்பட்டனவா என்றும் கொண்டுவந்த அனைத்துப் பொருட்களும் இறக்கப்பட்டுவிட்டனவா என்றும் சரிபார்க்க முடியும் என்று ராமகிருஷ்ணர் அன்னையிடம் கூறுவார். சமூக வாழ்வில்  அனைவரையும் அனுசரித்துப் போகவேண்டும் என்பார். 


   வெளித்தோற்றத்தில் அனைவரும் எலும்பு, தசை ஆகியவற்றால் ஆனவர்கள். ஆனால் உள்ளே இருக்கும் மனமோ வெவ்வேறாக அமைந்திருக்கும். ஆகவே நண்பர்களைத் தேர்வுசெய்யும் போதும் ஒருவரிடம் பழக்கம் வைத்துக் கொள்ளும்போதும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சிலரிடம் தாராளமாக நெருங்கிப் பழகலாம். சிலருடன் தலையை ஆட்டி சௌக்கியமா என்று விசாரிப்பதுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். இன்னும் சிலருடன் அந்த அளவுக்குக் கூட பேசாமல் இருப்பது மிகவும் நலமாகும்’’ என்று அன்றாட வாழ்க்கை குறித்து ஆலோசனை கூறினார்.


     கணவனின் லட்சியத்துக்கு மனைவி உறுதுணையாக இருப்பதுடன் அந்த லட்சியத்தைத் தனக்கு பின்னால் மேலும் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்த ஸ்ரீராமகிருஷ்ணர் அதற்கு அன்னையை தயார் படுத்தினார். கணவனும் மனைவியும் ஒரே குறிக்கோளின்படி இணைந்து வாழவேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். சாத்திரங்களின் கூற்றுப்படி ஆன்மிக, சமூக கடமைகளை நிறைவேற்றுவதே மனத்தை உயர்த்துவதற்கான வழியாகும். அதுவே தர்மம் ஆகும். இல்லறம், துறவறம் இரண்டையும் இரு கண்களாக இருவரும் கருதினர்.


 அன்னையிடம் ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர்,

    ‘‘ நீ என்னை மாயையில் கட்டுப்படுத்துவதற்காக வந்துள்ளாயா?’’ என்று கேட்டார்.


     அதற்கு அன்னை ‘‘ நான் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? ஆன்மிக வாழ்க்கைக்குத் துணை செய்யவே வந்துள்ளேன்’’ என்றார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் திருமண வாழ்க்கை குறித்து அவரது குரு தோதாபுரி

கூறியபோது,


    ‘‘ஸ்ரீராமகிருஷ்ணரின் திருமண வாழ்க்கை, அவரது ஆன்மிக வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது’’ என்றார்.


   ஸ்ரீராமகிருஷ்ணர், தனது ஆன்மிக வாழ்க்கை குறித்துக் கூறுகையில், ‘இந்த கடுமையான ஆன்மிக சாதனையின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சாரதையின் தூய்மைதான். அவர் மட்டும் தூயவளாக இல்லாமல் இருந்திருந்தால் நான் புலனடக்கம் இன்றி, நிலை தடுமாறி இருப்பேன்’ என்று கூறினார்.


  ஸ்ரீராமகிருஷ்ணர் எப்பொழுதும் காளியிடம், ‘‘தாயே! என்னுடைய மனைவிக்குச் சிற்றின்ப நினைவு சிறிது கூட இல்லாமல் இருக்கும்படி செய்வாயாக என்று வேண்டிக் கொள்வேன். அம்பிகையும் என்னுடைய பிரார்த்தனைக்கு செவிசாய்த்திருக்கிறார்'' என்பார்.


தட்சிணேஸ்வரத்தில் ஸ்ரீராமகிருஷ்ணருடன் வாழ்ந்த மறக்கமுடியாத நாட்களைப்பற்றி அன்னை பிற்காலத்தில் கூறுகையில்,

 ‘‘குருதேவர் தன்னை மறந்து அனுபவிக்க வைத்த தெய்வீக நிலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பரவச நிலையில் சில சமயம் அழுவார். சில சமயம் சிரிப்பார். இரவு முழுவதும் புற உணர்வு அவருக்கு வராது. அந் நாட்களில் அவருடைய தெய்வீகமான நிலையைக் கண்டு ஆச்சர்யத்தால் என் உடல் நடுங்கும்பொழுது, எப்பொழுது விடியும் என்று கவலையுடன் காத்திருப்பேன். ஏனெனில் அப்பொழுது பரவச நிலை என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது. ஓர் இரவு அவரது சமாதி வெகு நேரமாக நீடித்தது. நான் அவருடைய காதுகளில் இறைநாமத்தை ஓதினேன். பிறகு சிறிது சிறிதாக அவர் நினைவு திரும்பினார். இந்த நிகழ்ச்சிக்குப்பின்பு என்னுடைய கஷ்டத்தை அவர் உணர்ந்தார். சமாதி நிலைக்கு ஏற்ப மந்திரங்களை உச்சரித்து அவர் புற உணர்வு பெறுவதை நான் நேரில் கண்டபின்புதான் என்னுடைய பயம் ஒருவாறு நீங்கியது. உட்கார்ந்திருப்பவர் எந்நேரம் சமாதி நிலையை அடைவார் என்பது எனக்கு தெரியாது. நான் பல நாட்கள் அவருக்கு புற உணர்வு ஏற்படுகின்ற வகையில் இறைநாமம் சொல்லியபடி அவர் அருகில் கண்விழித்தபடியே அமர்ந்திருப்பேன். என்னுடைய துன்பத்தை அறிந்து கொண்ட அவர் என்னை தனி அறையில் படுத்து உறங்கும்படி கூறினார்.


-தொடரும்..............

by Swathi   on 30 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.