LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இவர்களுக்குப் பின்னால் (Behind These People)

இவர்களுக்குப் பின்னால் (நாகம்மை) - பகுதி 5

 

இவர்களுக்குப் பின்னால் (நாகம்மை) - பகுதி 5  
behind-these-people-periyar-nagammai-5
சூர்யா சரவணன் 

இவர்களுக்குப் பின்னால் (நாகம்மை) - பகுதி 5

-சூர்யா சரவணன்

 

 

கள்ளுக்கடை மறியலை நிறுத்துவது என்னுடைய கையில் இல்லை. அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களின் கைகளில்தான் உள்ளது. மறியலை கைவிட வேண்டும் என்றால் அவர்களிடம்தான் பேசவேண்டும். 

 

 

மகாத்மாகாந்தி.  

 

 

    ரங்கசாமி&பொன்னுத்தாயி தம்பதிக்கு 1885ம் ஆண்டு பிறந்தார் நாகம்மை. சாதாரண ஏழைக் குடும்பம். படிப்பறிவு இல்லாதவர் நாகம்மை.  ராமசாமியின் குடும்பம் வசதியாக இருந்தது என்பதாலும் நாகம்மை குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தாலும் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க ராமசாமியின் பெற்றோர் விரும்பவில்லை. ஈவேராவுக்கு அப்போது 19 வயது. சிற்றின்பங்களில் நாட்டம் உடையவராக ஈவேரா இருந்தார். மைனராக வலம் வந்தார். பெரியாருக்கு பெண் தேடும் படலம் நடந்தது.   

 

     பெரியாரும் நாகம்மையும் உறவினர்கள் என்பதால் சிறுவயதிலிருந்தே பழகிவந்தனர். இரண்டு திருமணம் செய்து இரு மனைவிகளையும் இழந்த ஒரு முதியவர் நாகம்மையை பெண் பார்த்தார். அவருக்குத் திருமணம் செய்துவைக்க நாகம்மையின் பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு நாகம்மை சம்மதிக்கவில்லை.  

 

     ‘‘ராமசாமியை ( பெரியார்) தான் திருமணம் செய்துகொள்வேன். இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்’’ என்று உறுதியாகக் கூறிவிட்டார். 

 

    நாகம்மையின் மன உறுதியாளும், மன திடத்தாலும்தான் பெரியாருக்கும் நாகம்மைக்கும் 1898 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது ஈவேராவுக்கு 19 வயது. நாகம்மைக்கு 13 வயது. திருமணத்துக்குப் பின்பும் கூட பெரியார் பொறுப்புடன் குடும்பம் நடத்தவில்லை. அவருடைய குறும்புத்தனங்கள் திருமணத்துக்குப் பின்பு கூட குறையவில்லை. 

  

   பெரியாரின் குடும்பம் தீவிர வைஷ்ணவ குடும்பம். எனவே மருமகளும் வைஷ்ணவ சம்பிரதாயங்களை கடைபிடிக்க வேண்டும் என ஈவேராவின் பெற்றோர் மிகவும் விரும்பினர். நாகம்மை தினமும் கோயிலுக்குச்செல்ல வேண்டும். விரதங்கள் இருக்க வேண்டும். புலால் உண்ணக்கூடாது. சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பது அவர்களது விருப்பம். ஈவேரா. புலால் உணவில் நாட்டம் உடையவர். உடல் நலம் சரியில்லை என்றாலும்கூட அவருக்குப் புலால் வேண்டும் என்று விரும்புவார். மேலும் நான்கு நாட்கள் ஆனாலும்கூட குளிக்கமாட்டார். ஆசாரங்கள், சாஸ்திரங்களை கடைபிடிக்காதவர். பெரியாரின் பெற்றோர்கள் அவரை தொட்டுக்கூட பேசமாட்டார்கள். நாகம்மை தனது கணவருக்குரிய புலாலை சமைத்துவிட்டு அதன் பின்பு குளித்து விட்டுத்தான் தங்களுக்குத் தேவையான உணவைச் சமைப்பார். இதுபோன்ற பழக்க வழக்கங்கள் பெரியாருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. இன்றைய நாத்திகர்கள், கோயிலுக்குச் செல்ல மாட்டார்கள் என்றாலும் கூட தங்களது மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்கமாட்டார்கள். அது அவர்களது உரிமை என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். ஏனெனில் அவர்கள் போலி நாத்திகர்கள். ஆனால் பெரியார் போலி நாத்திகராக இருக்க விரும்பவில்லை. தன்னுடைய கொள்கையை தனது மனைவியும் கடைபிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக பெரியார் பல்வேறு குறும்புகள் செய்தார். ஒரு நாள் நாகம்மை கோயிலுக்குச் சென்றார். தனது நண்பர்களைக் கோயிலுக்கு அனுப்பி ரவுடிகளைப்போல் நாகம்மையை மிரட்டினார். பயந்து கோயிலுக்குள் இருந்து தலை தெறிக்க ஓடிவந்தார் நாகம்மை. 

 

 ‘‘ பார்த்தாயா? தெய்வங்கள் ஆயுதங்களை கையில் வைத்திருந்து என்ன பயன்? நாம்தான் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்’’ என்று கூறினார்.  

 

  நாகம்மை வெள்ளிக்கிழமை விரதம் இருப்பது வழக்கம். ஒருமுறை விரதம் இருக்க சமைத்துவைத்த சாப்பாட்டில் எலும்புத் துண்டுகளை போட்டு விரதத்திற்கு இடையூறு செய்தார். அன்று முதல் நாகம்மையின் வெள்ளிக்கிழமை விரதம் தடைபட்டது.  

 

    ஒரு நாள் பெரியார், நாகம்மையின் தாலியைக் கழற்றிவிடும்படி கூறினார். அதற்கு நாகம்மை மறுத்தார்.

 

    ‘‘நான் பக்கத்தில் இருக்கும்போது தாலி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? நான் வெளியூரில் இருக்கும்போது தான் தாலி இல்லாமல் இருக்கக் கூடாது. எனவே, தாலியை கழற்று’’ என்று கூறி மனைவியின் தாலியை கழுற்றினார். தாலி என்பது அடிமைச் சின்னம் என்பது ஈவேராவின் கருத்து. எனவே தனது மனைவி தாலி அணிவதை அவர் விரும்பவில்லை. பெரியார், சமூக சீர்திருத்தத்தை தனது மனைவியிலிருந்து தொடங்கினார். மனைவின் மூட நம்பிக்கைகளை களைய வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தார்.

 

     மனைவி நாகம்மை, தங்கை கண்ணம்மாள் மூட நம்பிக்கைகளையும் முதலில் அகற்றினார். இருவரையும் தன்னுடன் போராட தயார் செய்தார். பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்வதையே அவமானமாக கருதிய காலம் அது.

 

 பள்ளிக்குச் செல்லாத நாகைம்மைக்கு எழுதவும் மேடையில் பேசவும் கற்றுக் கொடுத்தார். ஊர்வலம், மறியல், போராட்டம் உள்பட பல போராட்டங்களில் துணிவுடன் போராட இருவருக்கும் கற்றுக்கொடுத்தார்.

 

 ‘‘சுயமரியாதை இயக்கம் தொடங்கியபிறகு அக் கொள்கைகளை நன்கு அறிந்து கொண்டார். இயக்க கொள்கைகளைப் பற்றி விவாதமிடும் படித்த பெண்களுடன் தாராளமாக விவாதம் செய்வார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆணித்தரமான பதில்களை எடுத்துக் கூறுவார். பதில் சொல்வதுடன் திக்குமுக்காடும்படியான எதிர்க் கேள்விகளையும் கேட்பார். அவருடன் விவாதம் செய்பவர்கள் நாகம்மையிடம் தங்களது தோல்வியை ஒத்துக் கொள்வதுடன் நாகம்மையின் கொள்கையை ஏற்றுக் கொள்வார்கள்.’’

இவ்வாறு நாகம்மையின் ஆற்றலைப் பற்றி எஸ்.சி. சிவசாமி பதிவு செய்துள்ளார்.

 

  நாகம்மையார் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் பொறுமை, பெருந்தன்மை அவருக்குள் குடிகொண்டிருந்தது. ஏழை, பணக்காரர் என்று வித்தியாசம் பார்க்காதவர். விலை உயர்ந்த ஆடைகள், நகைகள் அணிவதை தவிர்த்தார். தனது பண்பால் அன்னை நாகம்மையார் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

அன்னையார் தன்னை எதிப்போர், மதிக்காதவர் என யாராக இருந்தாலும் அவர்களை மதிக்கவோ அவர்களிடம் அன்பு செலுத்தவோ தவறுவதில்லை. பெரியாருடன் இயக்க கொள்கைக்காக பாடுபட்டதைப் பார்த்து ‘‘ஆண்பிள்ளை எப்படியாவது திரிகிறான், நீயும் ஏன் அவனுடன் சேர்ந்து கெட்டலைகிறாய்?’’ என்று உறவினர்கள் ஏச்சுக்கும் பேச்சுக்கும் நாகம்மை ஆளானாலும் கூட அதுபற்றியெல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை.

 

      ஒத்துழையாமை இயக்கம்

 

  1920 ஆம் ஆண்டு ஒத்துழைமையாமை இயக்கம் தொடங்கியபோது பெரியார் அதில் தீவிரம் காட்டினார். நாகம்மையும் பெரியாருடன் கதர் ஆடை உடுத்தி தேசிய வீராங்கனையாக போராட்டக் களத்தில் குதித்தார். மேலும் நாகம்மை தன்னுடன் ஏராளமான பெண்களையும் போராட்டத்தில் பங்குகொள்ள களம் இறக்கினார்.

 

 எஸ்.சி.சிவசாமி கூறுகையில், ‘‘ பின்னாளில் பெரியார் சொந்த வாழ்வைத் துறந்து பொதுநல வாழ்வில் ஈடுபட்டார். அன்னையும் கூடவே அச் சேவையில் இறங்கினார். பெரியார் பொதுநல வாழ்க்கையில் சிறப்படைய காரணம் அன்னையே. அன்னையரின் பூரா உதவியின்றேல் ஒத்துழைப்பின்றேல் பெரியார் சிறப்படைந்திருக்க முடியாதது என்பதே உண்மை.

 

  1920 ஆம் ஆண்டு நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஈவேரா அதிதீவிரமாக ஈடுபட்டார். அன்னையும் தமது சுக வாழ்க்கையைத் துறந்தார். விலை உயர்ந்த நகைகளைத் துறந்தார். மெல்லிய பட்டாடைகளை வெறுத்தார். முரட்டுக் கதராடையை உடுத்தினார். நாம் தேசத்தின் ஏழை மக்களுக்காக உழைக்கிறோம். ஆதலால் நாமும் எளியோர் போலவே ஆடையணிகள் பூண வேண்டும் என்னும் கருத்தை மேற்கொண்டார். அஞ்சாமல் வெளிவந்தார். தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வழிகாட்டியாக முன்வந்தார். ஒத்துழையாமை இயக்கம் வலுவடைந்தது. அரசாங்கத்துக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையில் பலத்த போராட்டம் உண்டானது. இந்த சமயத்தில் அன்னை முன்னின்று போராடினார். இது தமிழ்நாட்டில் ஒரு பெருங் கிளர்ச்சியை உண்டாக்கியது. இதனால் அனேக பெண்களும் தைரியமாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள முன்வந்தனர்.

 

       நாகம்மையின் விருந்தோம்பல் பண்பு

 

   நாகம்மையின் விருந்தோம்பல் பண்பு குறித்து திருவிக முதல் பல அறிஞர்கள் மேடையிலும் பேச்சிலும் பாராட்டினார்கள்.

  ‘‘ நாகம்மையார் உயிருடன் இருக்கும் வரையிலும் பெரியாரின் வீடு எப்பொழுதும் ஒரு விருந்துக் கூடமாகவே விளங்கும்! அவர் எத்தனை பேரானாலும் முன்னெச்சரிக்கை இல்லாமல் வீட்டுக்குச் சாப்பிட அழைத்துப் போவார். எந்த நேரத்தில் எவர் சென்றாலும் இரவு 12 மணியானாலும் சாப்பிட வாருங்கள்.... இலைபோட்டாயிற்று என்பதுதான் அம்மையாரின் முதல் உபச்சாரம் ஆகும்.

   ஈவேரா எந்தக் காரியம் செய்தாலும் அதற்கு துணை நிற்பது. இல்லத்துக்கு வரும் அனைவருக்கும் சோறுபோடுவது என இரண்டு கொள்கைகளிலும் நாகம்மை தீவிர ஈடுபாடு கொண்டவர். எவ்வளவுக்கெவ்வளவு விருந்தினர்கள் தங்களுடைய வீட்டுக்கு வந்து சாப்பிட்டாலும் மிகவும் மகிழ்ச்சியடைவார். அடுத்த பந்திக்கு இன்னும் அதிகமானவர்கள் வரமாட்டார்களா? என்பதுதான் நாகம்மையின் அடுத்த கேள்வியாக இருக்கும். ஈவேராவின் அரசியல் எதிரிகள் கூட நாகம்மையிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்ததற்கு காரணம் நாகம்மையின் அன்பும் உபசரிப்பும்தான் என்பது மிகையில்லை.

 

 

        கள்ளுக்கடை மறியல்

 

        1921ம் ஆண்டு கள்ளுக்கடையை எதிர்த்து மறியல் செய்ய பெரியாரின் வீட்டில் காந்தி, ராஜாஜி உள்ளிட்டவர்கள் முடிவு செய்தனர்.

பெரியார் தனது தோப்பிலிருந்த அனைத்துத் தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தினார். நாகம்மையும் கண்ணம்மாளும் கள்ளுக்கடை மறியலை தொடங்கினர். அப்போது கள்ளுக்கடை மறியலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. நாகம்மையும் கண்ணம்மாளும் மிகத் துணிவுடன் கள்ளுக்கடைகளுக்கே நேரடியாகச் சென்று கடைகளை சூறையாடினர். இந்த சமயத்தில் பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். கண்ணம்மாளும் நாகம்மையும் மறியலை தொடர்ந்தனர். போராட்டம் தீவிரமடைந்தது. உடனடியாக தடை உத்தரவு நீக்கப்பட்டது.

 

    நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் கள்ளுக்கடை மறியல் பிரபலமடைந்தது. ஆங்கில அரசு நாகம்மை, மணியம்மையின் மறியல் போராட்டங்களைக் கண்டு அஞ்சி நடுங்கியது. ஆங்கில அரசு, காந்தியடிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது.  

கள்ளுக்கடை மறியலைக் கைவிடும்படி ஆங்கில அரசு கேட்டதற்கு  காந்தி,

     ‘‘மறியலை நிறுத்துவது என்னுடைய கையில் இல்லை. அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களின் கைகளில் தான் உள்ளது. மறியலை கைவிட வேண்டும் என்றால் அவர்களிடம் தான் பேச வேண்டும்.’’ என்றார். இதுகுறித்த செய்தி 19.1.1922 ஆம் தேதி இந்து பத்திரிகையில் வெளிவந்திருந்தது.

 

 கள்ளுக்கடை மறியல் குறித்து காந்திகூட தன்னிச்சையான முடிவு எடுக்க முடியாது என்ற நிர்பந்தத்தை நாகம்மையும் கண்ணம்மாலும் ஏற்படுத்தினர்.

    

         வைக்கம் போர்

 

    கேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்னும்  ஊரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தெருவில் நடக்கக் கூடாது என்று நீண்ட நாட்களாக தடை இருந்தது. அதை எதிர்த்து போராட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதினர். அதற்காக போராட்டமும் நடந்தது. அதில் ஜார்ஜ் ஜோசப் உட்பட காங்கிரஸின் பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். எனவே வைக்கம் போரை எப்படி நடத்துவது, யார் தலைமை ஏற்பது என்னும் கேள்விகள் அவர்களுக்குள் எழுந்தன.

 

 ஜார்ஜ் ஜோசப்பும், நீலகண்ட நம்பூதிரியும் ஈவேராவுக்கு ஒரு கடிதம் எழுதினர்.

 

    ‘‘நாங்கள் ஒரு பெரிய காரியத்தை தொடங்கிவிட்டோம். அடக்குமுறை பலப்பட்டுவிட்டது. ஆனால் இவ்வளவு சீக்கிரம் நாங்கள் அனைவரும் கைது செய்யப்படுவோம் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தாங்கள் உடனே வந்து சத்தியாகிரகத்தை ஏற்று நடத்த வேண்டும். தாங்கள் வந்து சத்தியாகிரகத்தை ஏற்று நடத்தினால் தான் காங்கிரஸின் மானம் காப்பாற்றப்படும். யோசிக்கவோ காலதாமதம் செய்யவோ நேரம் இல்லை. தாங்கள் உடனே புறப்பட்டு வரவும்’’ என்று ரகசிய கடிதம் அனுப்பினார்.

 

       மூடநம்பிக்கையை எதிர்ப்பது என்பது பெரியாரின் ரத்தத்தில் ஊறிய விஷயமாயிற்றே. நம்பூதிரி எழுதிய கடிதம் கிடைத்தபோது தொடர் போராட்டங்கள் காரணமாக பெரியார் கடும் வயிற்று வலியால்  அவதிப்பட்டு வந்தார். ஆனால் மூடநம்பிக்கையை அழிக்கவேண்டும் என்ற அவரது தாகம் வயிற்று வலியை எளிதில் குணமாக்கிவிட்டது. உடனே வைக்கம் நோக்கிப் புறப்பட்டார். பெரியாரைத் தொடர்ந்து நாகம்மையும் வைக்கம் வந்தார். வைக்கம் போரில் பெரியார் சிறை சென்றபின் அந்த போராட்டத்தை நாகம்மை தொடர்ந்தார். நாகம்மை பல பெண்களை ஒருங்கிணைத்து திருவாங்கூர் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து போராட்டம் நடத்தினார்.

 

  மலையாள கவுமதி என்ற நாளிதழில் 1924 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி வெளிவந்த செய்தி.

 

 ‘‘ 924 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்குபெற 5 பெண்கள் வந்தனர். நாகம்மையார், எஸ்.ஆர். கண்ணம்மாள், திருமதி நாயுடு, திருமதி சாண்ணார், திருமதி தாணுமலைப் பெருமாள் பிள்ளை ஆகியோர் தடையை மீறி சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை அகற்ற முயன்றபொது இன்ஸ்பெக்டர் சர்மா என்பவர் நாக்கம்மாளிடம் ‘‘நீங்கள் எந்த சாதி?’’ என்று கேட்டார். அதற்கு, ‘‘எங்களில் யார் எந்த சாதி என்று பார்த்து தாழ்த்தப்பட்ட சாதியினரை அறிந்து அவர்களுக்கு அனுமதி மறுக்கலாம் என்ற நோக்கத்தில் தானே கேட்கிறீர்கள். நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை. அனைவரும் இந்த வீதியில் செல்ல அனுமதிக்க வேண்டும்’’ என்று நாகம்மை உறுதியுடன் கூறினார்.

 

 மீனவர்கள், மீன் கூடையைத் தூக்கிக் கொண்டுபோகக்கூட இங்கே அனுமதிக்கும்போது மனிதர்கள் நடமாட ஏன் அனுமதி மறுக்க வேண்டும் என்று பெரியாரின் சகோதரி கேள்வி எழுப்பினார். தடையை மீறி வந்த அவர்கள் மேலும் அந்த இடத்தை விட்டு செல்ல மறுத்தனர். இறுதியாக பீச்சு அய்யங்கார் என்ற போலீஸ் கமிஷனர் வந்தார்.

 

  ’’பெண்கள் என்பதற்காக தனிச்சலுகை எதுவும் காட்ட வேண்டாம். ஆண்களை எப்படி நடத்துவீர்களோ அப்படியே இவர்களையும் நடத்துங்கள்’’ என்று இன்ஸ்பெக்டர் சர்மாவுக்கு உத்தரவிட்டார். ஆனாலும் போலீசாரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இறுதியாக சத்தியாகிரகமே வென்றது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு அனுமதி கிடைத்தது. இந்த வைக்கம் போருக்குப்பின் பெரியாருக்கு பேரும் புகழும், அதிகளவில் கிடைத்தது. திரு.வி.க. சூட்டிய வைக்கம் வீரர் என்ற பட்டம் இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அதற்கு காரணம் நாகம்மை. பெரியாரின் சகோதரி கண்ணம்மாள் தான்.

 

    1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் தோன்றியது. நாகம்மையின் பணி இரட்டிப்பாகிவிட்டது. இயக்கப்பணிகளை மக்களுக்குக் கொண்டு செல்ல குடியரசு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பதிப்பாசிரியராக நாகம்மை நியமிக்கப்பட்டார். பத்திரிகை பணி, மாநாடு சுயமரியாதை கூட்டங்கள் என்று நாகம்மை இரவு பகல்பார்க்காமல் உழைத்தார். பத்திரிகை ஆரம்பித்தபோது பெரியாருக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. பெரியாரை எதிர்த்து பல மிரட்டல் கடிதங்கள் வந்தன. ஆனால் அதற்கெல்லாம் நாகம்மை சிறிதும் கலங்கவில்லை. சுயமரியாதை கூட்டங்களில் பெண்கள் கலந்துகொள்ள நாகம்மையும் முக்கிய காரணம்.

 

நாகம்மையின் சுயமரியாதைப்பணி குறித்து அதன் முதல் செயலாளர் எஸ். ராமநாதன் கூறுகையில்,

  ‘‘ நாகம்மை தனது கணவரின் அனைத்து முயற்சிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் ஒத்துழைத்தார். மூட நம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிக்க தமிழ்நாடு, கேரளம், மலாய் ஆகிய நாடுகளுக்குப் பெரியாருடன் சுற்றுப் பயணம் செய்தார். அவர் ஒரு சிறந்த பேச்சாளர் இல்லை. ஆனால் அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். நாகம்மை இயக்கத் தொண்டர்களுடன் அன்புடன் பழகுவார். பெரியாரின் கொள்கைகளுக்கு பாடுபட்ட அனைவருக்கும் தாயாக இருந்தார். பெரியாருடன் சமூக போராட்டங்களில் கலந்து கொள்பவர்களின் சொந்தப் பிரச்சனைகளுக்கும் நாகம்மை உதவினார்.’’

 

      குடியரசுரிவொல்ட் பத்திரிகைப்பணி

 

   பெரியார், நாகம்மையின் மலேயாப் பயணம் குறித்து ‘‘சிங்கப்பூர் முன்னேற்றம்’’ என்ற பத்திரிகை வெளியிட்ட கட்டுரையில்,

   ‘‘பெரியார், நாகம்மை மலேயா நாட்டு விஜயத்தால் மலேயாவில் சுயமரியாதை இயக்கம் அதித்தீவிரமாக பரவியது.  அதைப் பார்த்த நாகம்மைக்கும் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. மலேயாவுக்கு பெரியாரும், நாகம்மையும் வந்துவிட்டு புறப்படும்போது நாகம்மைக்கு மலேயா நாட்டு பரிசுப் பொருள் வழங்கப்பட்டது. ஆனால் நாகம்மை அதை ஏற்கவில்லை.

 நீங்கள் எல்லோரும் மலேயாவில் சுயமரியாதை இயக்கத்தை பரப்பியுள்ளீர்களே.... அதுதான் நான் விரும்பும் பொருள் என்று கூறினார்.

 

        சுயமரியாதை மாநாடுகளில் கலப்பு மணம், விதவை திருமணம், சடங்குகள் இல்லாத சீர்திருத்த திருமணம் ஆகியவற்றை நாகம்மை முன்னின்று நடத்தினார். சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு அந்நாளில் கடும் எதிர்ப்பு இருந்தது. எனவே, சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு நாகம்மை தன்னுடைய வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தார்.

 

    நாகம்மையார் பெரியாருடன் 35 ஆண்டுகள் வாழ்ந்தார். இருவரும் ஒரே கருத்து உடையவர்களாக வாழ்க்கை நடத்தினர். சாதாரணப் பெண்களைப் போல் நாகம்மைக்கு நகை, பூ, புடவைகள் என்று அற்பப் பொருட்களின் மீதும் அணிகலன்கள் மீதும் ஆசை ஏற்படவில்லை. அவைகள் அனைத்தும் அடிமையின் சின்னங்கள் என்று பெரியாரின் கருத்துக்களுக்கு ஏற்ப வாழ்ந்து வந்தார். கல்வியறிவு இல்லாத நாகம்மை பெரியாருடன் வாழ்ந்ததால் அவரது கொள்கைகள், கருத்துக்கள், சிந்தனைகள் ஆகியவற்றை எழுதி வைத்துப் படிக்காமல் சுயமாக பேசும் அளவிற்கு அவர் தன்னைத் தயார் படுத்திக் கொண்டார். பெரியாரை நாகம்மை தோழர் என்றே அழைத்து வந்தார். 

 

     24.4.1932 இல் நாகம்மை வெளியிட்ட அறிக்கையில்,

 ‘‘நமது பதிரிக்கையில் தோழர் ஈ.வே.ராமசமி அவர்கள் மேல்நாட்டு சுற்றுப் பயணத்தின்பொருட்டு புறப்பட்டுச் சென்று நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் குடியரசு பத்திரிகைக்கு கட்டுரையோ, பத்திரிகை நடத்த தேவைப்படும் செல்வத்திலோ எதுவும் அவர் குறை வைக்கவில்லை.  அடுத்தவாரம் பத்திரிகைக்கு எட்டாவது வாரம் வருகிறது என்பதால் இயக்கத் தோழர்கள், பத்திரிகைக்கு தேவையான சந்தாதாரர்களை சேர்த்துக் கொடுத்தும் நல்ல கட்டுரைகள் வழங்கியும் பத்திரிகையின் வளர்ச்சிக்கு பங்கெடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

           

   ‘‘செல்வச் செழிப்பு இருந்தபோதும் நாகம்மையார் தேச நலனின் பொருட்டு அவற்றையெல்லாம் உதறிவிட்டார். ஏட்டுக்கல்வி அவருக்கு அதிகம் இல்லாவிட்டாலும் கூட உலக அறிவில் சிறந்து விளங்கினார். என்னுடைய சீர் திருத்த பணிக்கு அவரது பணி மிகவும் உதவியாக இருந்தது’’ என்றார் ஈவேரா.

 

      பெண்களின் விடுதலைக்காக பெண்களே போராட வேண்டும் என்பதுதான் ஈவேராவின் கருத்து

 

   ‘‘ ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்ணடிமைத்தனம் வளருவதுடன், என்றும் விடுதலைபெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதாகவும் அவர்களின் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்கு செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்கு செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருகால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகி விட்டாலும் கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம். ஏனெனில் ‘‘ ஆண்மை’’ என்ற பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றதென்றால் ‘‘ஆண்மை’’ உலகில் உள்ளவரையிலும் பெண்மைக்கு மதிப்பில்லை என்பதை பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உலகத்தில் ‘‘ ஆண்மை’’ நிற்கும் வரையில் பெண் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ‘‘ஆண்மை’’ என்ற தத்துவம் அழிக்கப்படாமல் அல்லது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. ஆண்மையால்தான் பெண்கள் அடிமைப்பட்டிருக்கிறார்கள்.

   

    நாகம்மையின் மறைவு குறித்து 14.5.1933 ஆம் ஆண்டு குடியரசு நாளிதழில் பெரியார் எழுதியது.

 

      ‘‘ எனதருமை ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1993ல் காலை 7.45 மணிக்கு இயற்கை எய்தினார். அதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுவரையிலும் என்னால் பதில் காணமுடியாத கேள்வியாக உள்ளது. எது எப்படி இருந்தாலும் நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணைவியாக 35 ஆண்டு காலம் வாழ்ந்துவிட்டேன். நாகம்மாளுக்கு நான் ஏற்ற வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது கேள்விக்குறிதான். நான் சுயநலமாக மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும்கூட எனக்கு வாழ்க்கைத் துணையாக இருந்திருக்கிறார். பெண்களின் சுதந்திரத்துக்கு நான் எவ்வளவு போரடியிருக்கிறேன் பேசியிருக்கிறேன். ஆனால் என் மனைவிக்கு அந்தச் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறேனா? என்பது எனக்குத் தெரியவில்லை. நாகம்மாள், சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் எவ்வளவு கடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அவற்றை விட பத்துமடங்கு கூடுதலாகவே நடந்து கொண்டேன் என்பதை மிகவும் வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

 

   நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும் வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய, தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாக உணர்ந்து வந்தேன். அதற்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஏதாவது ஒரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறியதேயாகும். நான் பொது நல சேவையில் ஈடுபட்ட பிறகு பொது நலக் காரியங்களுக்கும் சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்பட்டு வந்தேன் என்பதுதான். நாகம்மாள் நான் காங்கிரசிலிருக்கும்போது மறியல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியா கிரக விஷயத்திலும் சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்தது உலகம் அறிந்ததே.

 

     ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? அல்லது எல்லாம் போயிற்றென்று என்றே சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே! எது எப்படியிருந்தாலும் நாகம்மாள் மறைவு என்பது ஓர் அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை. நாகம்மாள் அற்ப ஆயுள் காரி என்று யாரும் சொல்லிவிட முடியாது. நாகம்மாளுக்கு 48 வயது ஆகிறது. ஆனாலும் அது சராசரி வாழ்நாளாகிய 23.1/2 வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். செத்தால் சிரிக்க வேண்டும் பிறந்தால் அழவேண்டும் என்ற ஞானமொழியின்படி நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும் ஒரு நஷ்ட சம்பவமாகவும் கருதலாம் அதை ஒரு மகிழ்ச்சியாகவும் லாபமாகவும் கருதவேண்டும் என்றே நான் ஆசைப்படுகிறேன். ஆசைப்படுவது மட்டுமல்ல. அதை உண்மையென்றே நான் கருதுகிறேன்.

 

    எப்படியெனில், எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்கள் சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால், அந்த அம்மாளுக்கு மிகுந்த துக்கமாகவும் துயரமாகவும் கூட இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அத்துடன் அதைக் கண்டு சகிக்க முடியாமல் நானும் கலங்க நேரிடும்.

 

  நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும் லாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கிறேனோ அதுமாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ளமாட்டார். அதற்கு நேர்மாறாகவே உபயோகப்படுத்திக்கொள்வார் ஆதலால் நாகம்மாள் நலத்தைக் கோரியும் அவர் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.

 

   என் அருமைத் தோழர்கள் பலருக்கு நாகம்மாள் மறைவு எனக்கு ஈடுபடுத்த முடியாத இழப்பு என்று தோன்றலாம். அது சரியான அபிப்பிராயம் இல்லை. அவர்கள் சற்று பொறுமையாக இருந்து இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை காண்பார்களேயானால் அவர்களும் என்னைப்போல் நாகம்மாள் மறைவு நலமென்றே கருதுவார்கள். நாகம்மாளுக்கு நோய் ஏற்படக் காரணம் என் மேல்நாட்டு சுற்றுப் பயணம் தான். ஒருவருடம் அவர் என்னை பிரிந்திருந்தார். அந்தப் பிரிவின் ஆற்றாமை அவரை பாதித்திருக்கக்கூடும். இரண்டாவது என்னுடைய ரஷ்யப்பயணத்தில் எனக்கு ஏதாவது பெரிய ஆபத்து வந்துவிடுமோ என கருதியது, மூன்றாவது நமது புதிய வேலைத் திட்டங்களை உணர்ந்தபின் ஒவ்வொரு நிமிஷமும் தனக்குள் ஏற்பட்ட பயம் இப்பேற்பட்ட அற்பக் காரணங்களே அவ்வம்மைக்கும் கூற்றாக நின்றது என்றால் இனி இதைவிட மேலான பிரிவு, ஆபத்து, பொருளாதார கஷ்டம் ஆகியவை உண்மையாய் ஏற்பட இருக்கும் நிலை அந்த அம்மையாருக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப்பார்க்கும் தோழர்கள், நாகம்மாளின் பிரிவுக்கு வருந்தமாட்டார்கள் என்றே கருதுகிறேன். இரண்டு, மூன்று  ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சுற்றுப்பயணத்திலேயும் பகுத்தறிவை மக்களிடம் பரப்புவதிலும் இருக்கவேண்டும்.... எனக்கென்று தனியாக ஒரு வீடு இருக்கக்கூடாது என்று கருதினேன். இது இனி நிகழும்.

இவ்வாறு குடியரசு இதழில் எழுதினார்.

 

            பெரியாரின் சகோதரி   கண்ணம்மாள் (1891&1971)

 

 

  இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்துவரும் கஷ்டத்தைவிட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.

 

      தந்தை பெரியார்.

 

  பெரியாரின் வாழ்க்கையில் நாகம்மை மணியம்மையின் பங்கு எந்த அளவிற்கு முக்கியமானதோ அதைப்போல் பெரியாரின் சகோதரி கண்ணம்மாளின் பங்கும் முக்கியமானது.

 

 வெங்கட நாயக்கருக்கு 1877ல் கிருஷ்ணசாமி, 1879ல் இராமசாமி, 1881ல் பொன்ணுத்தாய் 1891 ல் கண்ணம்மாளும் பிறந்தனர். பெரியாரின்  தங்கை பொன்னுத்தாய் அம்மாளை கண்ணம்மாளின் கணவர் எஸ்.ராமசாமியின் அண்ணன் கல்யாண சுந்தரருக்கு திருமணம் செய்துவைத்தனர். அவர்களுக்கு அம்மாயி அம்மாள், அப்பய்யன் என்ற இரு குழந்தைகள் பிறந்தன. அம்மாயி அம்மாளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டது, கணவர் இறந்ததால் அம்மாயி, சிறுவயதிலேயே விதவையானார். ஊருக்கு மட்டும் உபதேசம் செய்துவிட்டு சுய நலப்போக்குடன் வாழும் ஒரு சில போலிப் பகுத்தறிவாதிகள் போல்

வாழ விரும்பாத பெரியார் முதல் முதலாக தன் குடும்பத்தை சேர்ந்த பொன்னுத்தாயி அம்மாளுக்கு விதவைத்திருமண்ம் செய்துவைத்தார்.

 

   ஈ.வே. கண்ணம்மாள் எஸ். ராமசாமி நாயக்கரை திருமணம் செய்தபின் அவர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் என்று அழைக்கப்பட்டார். எஸ். ஆர். கண்ணம்மாள் சிறுவயதில் இருந்தே அண்ணன் பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை பரப்புவதில் தீவிரமாக ஆர்வம் காட்டினார். கதர் உடுத்தி, காங்கிரஸ் கொள்கைகளை ஏற்பது, குடியரசு பத்திரிகைப்பணி என தனது அண்ணனின் வழிகாட்டுதலின் படியே வாழ்ந்து வந்தார். வைக்கம்போர், கள்ளுக்கடை மறியலில் நாகம்மையாருடன் அவர் நடத்திய போராட்டங்கள் இன்றைக்கும் மறக்கமுடியாதவை.

 

 1929 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் ஈரோடு உண்மை நாடுவோர் சங்கம் சார்பில் ஈவேரா மாளிகையில் திருமதில் லெஷ்மியம்மாள் தலைமையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அவர் பேசியது.

 

  ‘‘சீமந்தம், வளைகாப்பு என்பதன் பெயரால் கர்ப்பஸ்திரீயை நமது நாட்டில் கஷ்டப்படுத்தும் கொடுமையைச் சொல்லி முடியாது. கர்ப்ப ஸ்திரீக்கு பூ முடித்தல் என்பதன் பெயரில் ஊரிலுள்ள புஷ்பங்களை எல்லாம் தலையில் சூட்டி மேற்படி வாசனையால் தலைவலி வரச் செய்துவிடுகிறார்கள். மேலும் கர்ப்ப ஸ்திரீக்கு பளுவான புடவைகளை கட்டி சுமார் 2, 3 மணிநேரம் மனை இருத்தல் என்று சொல்லி இருக்க வைக்கின்றனர். இம்மாதிரியான கஷ்டமான அநாகரீகமான சடங்குகள் எதற்கு என்று கேட்டால் இவைகளெல்லாம் பெரியோர்கள் செய்தது. அதனால் அப்படியே நடக்க வேண்டுமென்று பதில் கூறுகிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் பெரியோர்கள் 20, 30 மைல்தூரம் பிரயாணம் போவதாக இருந்தால் கட்டை வண்டி கட்டிக்கொண்டு போவார்கள் ஆனால் இந்த காலத்தில் ரயிலென்றும் மோட்டாரென்றும் ஜட்கா என்றும் அநேக வாகனங்கள் இருக்கின்றன. ஊர்ப்பிரயாணம் செல்ல வேண்டும் என்றால் உடனடியாக கொண்டுவா மோட்டாரை என்கிறார்கள். இது விஷயத்தில் மாத்திரம் பெரியோர்கள் நடந்தபடி நடப்பதில்லையே. ஏன் தற்கால நாகரீகத்துக்குக் கேற்றபடி நடப்பதால் தானே அதுபோல் அக்கால நாகரீகத்துக்கு ஒவ்வாத சடங்குகளை ஒழிக வேண்டும். மேலும் குழந்தைகளௌக்கு காதுகுத்துதல் போன்ற இம்சைகளும் செய்கின்றனர். எனவே இந்த மாதிரியான அனாவசியமானதும் அர்த்தமற்றதுமான சடங்குகளை ஒழித்து அதற்காக செலவிடும் பணத்தை ஏழை மக்களுக்கு படிப்பூட்டினால் மிகவும் நன்மையாகவும் பிரயோஜனமாகவும் இருக்கும்’’

 

                             ( திராவிடன், 1929ம் ஆண்டு மே 20)

 

      கண்ணம்மாள் கைது

 

     29.10.1933 அன்று குடியரசு இதழில், ‘‘இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?’’ என்று ஆசிரியவுரை ஒன்று வெளியிடப்பட்டது.

 

 இந்தியாவில் இன்றைய அரசாங்கமானது ஆட்சி முறையில் எவ்வளவு தூரம் பாமர =மக்களுக்கு விரோதமாகவும் பணக்காரர்களுக்கு அனுகூலமாகவும் இருக்கிறது என்கிற விஷயம் ஒரு புறமிருந்தாலும் நிர்வாக முறையானது ஏழைக்குடி மக்களுக்கு மிகவும் கொடுமையை விளைவிக்கக் கூடியதாகவே இருந்து வருகிறது,

 

  அரசியல் நிர்வாகத்திற்கென்று குடிகளிடம் இருந்து வசூல் செய்யப்படும் தொகைகளில் 100க்கு 75 பாகம் அக்கிரமமான வழிகளில் செலவழிக்கப்படுகிறது. பாமர மக்கள், ஏழை மக்கள் உழைப்பெலலாம் ஸ்ரீஇயாக சர்க்காருக்குப் போய் சேர்ந்துவிடுகின்றன. இதன் பயனாய் ஒரு நல்ல ஆட்சியினால் குடும்பங்களுக்கு என்ன விதமான பயன்கள் ஏற்பட வேண்டுமோ அப்பலன்களில் 100க்கு 5 பாகம் கூட மக்களுக்குக் கிடைக்காமல் இருக்கின்றன. 

 

  பிரிட்டீஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்து சுமார் 175 வருட காலமான பிறகும் கல்வித்துறையில் 100க்கு 8 பேர்களே தான் நம்மவர்கள் படிக்கத் தெரிந்தவர்களாக இருக்கின்றனர் என்றால் அதுவும் பெரும் பணக்காரர்களும் மேல் ஜாதிக்காரர்களுமே என்றால் அது நிர்வாகமானது ஏழைகளுக்குப் பயன்படும் வகையில் தனது வரிப்பணத்தைச் செலவு செய்து இருக்கிறது என்று சொல்லமுடியுமா? என்று கேட்கிறோம்.

 

  ஆனால் அரசாங்கத்திற்கு வரி வருமானங்கள் மாத்திரம் நாளுக்கு நாள் விஷம் ஏறுவதுபோல் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. நமக்குத் தெரியவே இந்திய வருமானம் வருஷம் ஒன்றுக்கு 75 கோடி ரூபாயாக ஆகியிருக்கிறது.

 

   இராணுவ செலவுக்கு வருஷம் 20 கோடி ரூபாயாக இருந்தது. இன்று 60 கோடி வரை செலவாகிறது. மற்ற அநேக துறைகளிலும் உத்தியோகச் செலவுகள் இது போலவே உயர்வாகி வருகின்றன.

 

 உதாரணமாக கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் கல்வி இலாகா உத்தியோகச் செலவுகள் இதுபோலவே வளர்ந்திருக்கின்றது. ஆனால் கல்விப் பெருக்கத்தில் மாத்திரம் சென்ற 10வது வருஷத்திற்கு முன் 100க்கு 7 பேராயிருந்த கல்விமான்கள் இன்று 100க்கு 8 பேராகத்தான் இருக்கிறார்கள் என்றால் இந்த நிர்வாகம் ஏழை மக்களுக்கும் பொது மக்களுக்கும் அனுகூலமானது என்று எப்படிச் சொல்ல முடியும்? ரூ ஒன்றுக்கு 6 படி. சில இடங்களில் 8 படி அரிசி வீதம் கிடைக்கக்கூடிய காலத்தில் பி.ஏ., எம்.ஏ., படித்த மக்கள் மாதம் ரூ15, ரூ20 சம்பளம் கூட வெளியில் கிடைக்காமல் திண்டாடுகின்ற இந்தக் காலத்தில் அரசாங்க நிர்வாக உத்தியோகங்களில் ஏராளமான ஆட்களை நியமித்துக் கொண்டு அவர்களுக்கு மாதம் 100, 200, 500, 1000, 5000 வீதம் சம்பளங்களை அள்ளிக் கொடுப்பதென்றால் இப்படிப்பட்ட அரசாங்கமும் அரசாங்க நிர்வாக உத்தியோகங்களும் இந்திய பாமர ஏழை குடி மக்களை சுரண்டும் கூட்டுக் கொள்ளையடிக்கும் ஸ்தாபனம் என்று சொல்ல வேண்டிய தல்லவா என்று கேட்கின்றோம்.

 

  இன்றைய ஆட்சியானது அழிக்கப்பட வேண்டியது என்பதற்கு இது ஓர் உதாரணம் போதாதா என்றும் கேட்கிறோம். ஆட்சி நிர்வாகம் என்பது சுத்த விளையாட்டுத் தனமாகவும் அயோக்கியப் பொறுப்பற்றத்தனமாகவும் இருந்து வருகின்றது என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும். சென்னை மாகாணமானது சுமார் 20 வருஷங்களுக்கு முன்பு 2 மந்திரிகளாலேயே நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது யாவரும் அறிந்ததே. ஆனால் இப்பொழுது 7 மந்திரிகளால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இதன் பயனாக மக்கள் அடைந்த பயன் என்ன என்பதை கவனித்தோமானால் மேலே கூறியபடி 2 மந்திரிகள் இருக்கும்போது 7 பேர் படித்தவர்களாய் இருந்து இப்பொழுது கல்விக்காக என்று ஒரு தனி மந்திரி மாதம் ரூ.5000 சம்பளத்தில் ஏற்படுத்தி இந்த இலாகாவில் 20 வருஷங்களுக்கு முன்பு இருந்ததைவிட 100க்கு 200 பங்கு பணம் அதிகம் செலவு செய்தும் இன்றும் 100க்கு 8 பேர் படித்தவர்களாக இருக்கின்றனர்.

என்கின்ற அளவில்தான் அபிவிருத்தி காட்டப்படுகின்றது. ஆனால் இந்த மந்திரிப் பதவிகள்  இந்தப்படி 100க்கு 350 பங்கு வந்ததற்கு காரணம் என்ன என்று பார்ப்போமானால் ஆட்சி முறையை ஒரு திருட்டுத்தனம் போலவும் மந்திரிப் பதவி தங்களுக்கென்று ஒரு பாகம் கூட்டு கொடுக்காவிட்டால் அத்திருநாட்டைக்காட்டி கொடுத்து விடுவோம் என்று மிரட்டி பங்குபெற்றது போலவும் ஆகி இருக்கின்றதே தவிர வேறு ஒன்றுமே இல்லை.  இப்படி 100க்கு 8 சதவீதமான கல்வி என்பதும் செல்வான் வீட்டுப் பிள்ளைக்கு மாத்திரம் கிடைக்கும்படியாகவே தான் கல்வியின் தத்துவமும் கல்வி இலாகாவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

 

 உதாரணமாக ஒரு பையன் எஸ்.எஸ்.எல்.சி., படித்துவிட்டு வெளியே வரவேண்டுமானால் மாதம் 1க்கு 5&4&0 சம்பளம் கொடுக்க வேண்டும் அவன் புத்தகம் முதலியவைகளுக்கு மாதம் ரூ 2 வீதம் படிப்புக்கு வேண்டி இருக்கிறது. இந்தத் தொகையானது மாதம் 7&4&0 ரூ வீதம் ஒரு மாணவனுடைய படிப்புக்கு வேண்டி இருக்கிறது. இந்தத் தொகையான மாதம் 7&4&0 ரூ கூட 4, 5 பேரைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு வரும்படி இல்லாத மக்கள் நம் நாட்டில் 100க்கு 60, 70 பேர்கள் இருப்பார்கள் என்றால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் எப்படி படிக்க முடியும் என்பதை யோசித்துப் பார்த்தால் கல்வித் தத்துவத்தின் புரட்டு அயோக்கியத்தனமும் சுலபத்தில் விளங்காமல் போதாது. மேற்கண்ட கல்விச் செலவானது மாதம் 7&4& ரூ என்பது பட்டத்துப் பிள்ளைகளுக்குத்தானே ஒழிய, மாமாந்திரப் பிள்ளைகளுக்குப் பட்டினங்களுக்குச் சென்று படிக்க 17&4&0 ரூ ஆகிவிடுமென்பதை நினைத்துப் பார்த்தால் 100ல் ஒரு பிள்ளையாவது குறைந்த யோகியதா படிப்பு என்னும் எஸ்.எஸ்.எஸ்.எல்.சி. படிக்க முடியுமா என்று கேட்கிறோம். மக்கள் நிலை இருந்தபடி இருக்கும்போது இந்தப் படிப்பு சொல்லிக் கொடுக்கும் உபாத்தியார்களுக்கு மாதம் ரூ.75 முதல் ரூ 350 வரை சம்பளம் கொடுப்பது என்றால் அது எவ்வளவு கொடுங்கோன்மையான நிர்வாகம் என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும். மாதம் ஒன்றுக்கு ரூ.30, ரூ.35 சம்பளத்து வேலைக்கு வருவதற்கு 100க்கணக்கான பி.ஏ,, எல்.டி.க்கள் இன்று காத்துக் கிடக்கிறார்கள். அந்தப்படி பலர் அமர்ந்தும் இருக்கிறார்கள். அது மாத்திரமல்லாமல் பி.ஏ., எல்.டி., படிப்பையும் பரிட்ச்சையையும் வஞ்சகம் இல்லாமல் இன்னும் சிறிது தாராளமாகிவிட்டால் மாதம் ஒன்றுக்குக்கு 20 ரூபாயிலும் 25 கிடைக்கும்படியாக ஆயிரக்கணக்கான பி. ஏ., எல்.டி., உபாத்தியார்களையும் காணலாம். அப்படியெல்லாம் இருக்க படிப்புக்காக மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரியையும் பாரமாக்கி தனிப்பட்ட முறையில் படிப்புக்காகப் பெற்றோர்கள் செய்ய வேண்டிய செலவையும் பாரமாக்கி அவ்வளவையும் உபாத்தியார்கள் படிப்பு இலாகா நிர்வாக உத்தியோகஸ்தர்களை செல்வான்களாகவும் ராஜபோகக்காரர்களாகவும் ஆக்குவதல்லாமல் அந்தப்படிப்பில் மக்களுக்கு பலனும் இல்லாமல் செய்து மொத்த ஜனத் தொகையில் 100க்கு 92 பேர்களை கையெழுத்துக்கூட போடத் தெரியாமல் தற்குறிகளாய் விடப்பட்டிருக்கின்றதென்றால் இந்த அக்கிரமங்களை எப்படித்தான் சகித்துக் கொண்டிருப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.

 

  இப்படிப்பட்ட கொடுமைகளையும் அயோக்கியத்தனங்களையும் மக்கள் என்றென்றும் தெரிந்து கொள்ளாமலும் தெரிந்தாலும் சகித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்பதாகத்தான் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு கடவுள் செயல் பிரச்சாரத்தையும் கொண்ட புஸ்தகமுப் படிப்பும் கற்பிக்கப்படுகின்றது என்று தீர்மானிக்க வேண்டியதாய் இருக்கிறது.

 

  ஆயிரம் சமாதானம் சொன்னபோதிலும் இன்றைய ஆட்சி முறையும் நிர்வாக முறையும் முதலாளித்துவத் தன்மை கொண்டது என்பதிலும், இவை ஏழை மக்களுக்கு விஷம் போன்றது என்பதிலும், கண்டிப்பாக இவை அழிக்கப்பட்டே ஆக வேண்டும் என்பதிலும் நமக்குச் சிறிதும் சந்தேகமோ தயவோ தாட்சண்யமோ தோன்றவில்லை. ஆனால் இப்படிப்பட்ட சூழ்ச்சி ஆட்சித் தன்மைக்கு இந்தியாவில் இன்று தூண்கள் போல் இருந்து வருபவை முதலாளித்தன்மையும் புரோகிதத் தன்மையுமே பிரதானமாகும். அதற்கேற்ற முறையிலேயே காங்கிரஸும் காந்தீயமும் வேலை செய்து கொண்டு வந்திருக்கின்றது என்பதுடன் அதில் இருந்தால் தங்களுக்கு பதவி கிடைக்காது எனக் கருதா வெளிவந்தது அவற்றோடு போட்டி போட்டிக் கொண்டு இருக்கும் மற்ற அரசியல் ஸ்தாபனங்களுக்கு நடுத்தூண்களாய் இருந்து வருகின்றன.

 

  இந்தக் காரணத்தால் தான் நாம் காங்கிரசை அழித்தாகவேண்டும் என்றும் காந்தீயத்தை ஒழித்தாக வேண்டும் என்றும் அதே தத்துவம் கொண்ட மற்ற அரசியல் கிளர்ச்சியையும் ஒழிக்க வேண்டும் என்றும் புரோகித சம்பந்தமான எந்த உணர்ச்சியையும் அடியோடு புதைத்தாக வேண்டும் என்றும் கூப்பாடு போடுகின்றோம்.

 

 இக் கூப்பாட்டைக்கண்டு முதலாளிகளும் முதலாளிகளின் கூலிகளும் உத்தியோக வர்க்கங்களும் உருமுவதில் நமக்கு அதிசயமொன்றுமில்லை. ஆனால் ஏழை மக்கள், தொழிலாளிகளின் சரீரத்தால் சதாகாலமும் பாடுபட்டு துன்பப்படும் கூலி மக்கள், முதலாளிகளுக்கும் முதலாளிகள் கூலிகளுக்கும் ஆதரவளிப்பதும் அவர்களை அண்டுவதும் நமக்கு அதிசயமாய் இருக்கிறது.

 

  ஆகையால் வரப்போகும் தேர்தல்களில் ஏழை மக்கள் தொழிலாளிகள் ஆகியவர்கள் இவற்றை உணர்ந்து ஏமாந்து போகாமல் நடந்து கொள்வார்களாக.

 

(29.10.1993 குடியரசு பக்கம் 10,11) 

 

இந்தக் கட்டுரையை தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் நாள் பெரியார் கைது செய்யப்பட்டார். அந்த கைது சம்பவம் குறித்து புரட்சி இதழ் விவரிக்கிறது.

 

  ‘‘சுயமரியாதை இயக்கத் தலைவரும் குடியரசு, புரட்சி இதழின் ஆசிரியருமான தோழர் ஈ.வே.ராமசாமி அவர்கள் மீதும் அவருடைய சகோதரியும் பத்திரிகையின் பப்ளிஷருமான தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் அவர்கள் மீதும் தொடுத்திருந்த ராஜநிந்தனை வழக்கில் 24.1.1934 அன்று காலை 11 மணிக்கு கோவை ஜில்லா மாஜிஸ்திரேட் வி.டபிள்யூ. வெல்ஸ் ஐ.சி.எஸ். தீர்ப்பு கூறினார்.

 

  சென்ற அக்டோபர் மாதம் 24ம் தேதி குடியரசு பத்திரிகையில் வெளியான இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும் என்ற தலையங்கத்திற்காகவே அவர்கள் மீது வழக்கு தொடர்ந்ததின் முக்கிய கருத்தாகும்.

 

  மாஜிஸ்ட்திரேட் தீர்ப்பில் இருவரும் குற்றவாளிகளெனக் கூறி தோழர் இராமசாமி அவர்களுக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனையும் ரூ 300 அபராதம், அப்படி அபராதமும் செலுத்தத் தவறினால் மீண்டும் ஒரு மாதம் சிறை தண்டணை விதித்தார். தோழர் கண்ணம்மாளுக்கு 3 மாதம் வெறுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் அபராதம் செலுத்தத் தவறினால் மீண்டும் ஒரு மாதம் வெறுங்காவல் தண்டனையும் விதித்தார். இவர்கள் இருவரையும் பி.வகுப்பு கைதியாக நடத்த உத்தரவிட்டார்.

அதன்பின்பு தோழர் ஈவே.ராமசாமி, புரட்சி இதழை தொடர்ந்து நடத்தும் பொறுப்பை அவரது சகோதரர் ஏவே கிருஷ்ணசாமியிடம் ஒப்படைத்துவிட்டு சிறை சென்றார்.

 

  ஈவே ராமசாமி புரட்சி இதழின் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் ஈவேராமசாமி, கண்ணம்மாள் கைது குறித்து ஈ.வெ.ராமசாமிக்கும் சா.ரா. கண்ணம்மாளுக்கும் ஜெ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதினார்.

 

 

 ஈ.வெ.ராமசாமிக்கும் சா.ரா. கண்ணம்மாளுக்கும் ஜெ

 

  நமது நாட்டில் நமதியக்கத்தின் பேரால் நிறுவப்பட்டிருக்கும் சங்கங்களின் எண்ணிக்கையானது நமது பிரசுராலயத்திற்கு இதுமாறும் கிடைத்திருக்கும் தகவல்களிலிருந்து அறியக்கூடிய சுமார் நூத்திப்பத்து என்பதாகும். நமது தோழர்கள் சிறைப்பட்டதிலிருந்து இனிமேல் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் நமதியக்கச் சங்கங்கள் நிறுவப்பட்டு அவைகளுக்கு தலைமையாக ஒரு சங்கம் அவைகளின் தாலுகா தலை நகரங்களில் ஏற்பட வேண்டும்.

 

  அப்படி ஏற்படுகின்ற தாலுகாக்களின் தலை நகர்களில் தலைமை சங்கங்களால் நிறுவப்பட்டு ஒவ்வொரு சங்கங்களிலும் அங்கத்தினர்களை ஏராளமாகச் சேர்க்கப்பட்டும் பிரசாரங்களை முன்னிலும் அதிகமான மக்களுக்கு சமதர்ம துவேஷ உணர்ச்சியையே முன்னிலும் அதிக ஊ

 

அதனால் மக்களுக்குள் ஒருவித வித்தியாசமற்ற ஒற்றுமையை உண்டாக்கி அறியாமையையும் அடிமைப் புத்தியையும் மூடப் பழக்க வழங்கங்களையும் வேரோடு களையும் படியான திறன் உண்டாகும் படியும் பிரசாரங்கள் நடைபெற வேண்டியதே முக்கியமான கடமையாகும்.

 

நமது கொள்கை சமதர்மமும் சமத்துவமுமான தற்கேற்றபடி நமது இயக்கத்தவர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களாகையால் தற்போது நமதியக்கப் பிரச்சாரங்களிலும் மற்ற நிர்மாண வேலைத் திட்டங்களிலும் ஒரு ஈ.வெ.ராவும் சா.ரா. வும் இல்லாதபோது நமதியக்கத்திலுள்ள அனைவரும் அவர்களைப் போலாராகி இவர்கள் தற்போது நம்மிடையில்லாத குறையை நிவர்த்திக்க முற்படுவார்களென்றே நம்புகிறார்.

 

வழக்கின் தீர்ப்பு:

 

   ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு 6 மாதம் வெறுங்காவல் தண்டணை, ரூ 300 ரூபாய் அபராதம் சா.ரா.கண்ணம்பாளுக்கு 3 மாதம் வெறுங்காவல் தண்டணை ரூ 300 அபராதம். அபராதத் தொகை கட்டத்தவறினால் தலா ஒரு மாத தண்டணை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 

 

குடியரசு இதழுக்காக கண்ணம்மாள் இரண்டுமுறை சிறை சென்று வந்தார். கண்ணம்மாள் ஈரோடு முனிசிபல் கவுன்சிலராக பதவி வகித்து வந்தார்.

 

 ஈரோடு முனிசிபல் கவுன்சிலுக்கு கண்ணம்மாள் அனுப்பிய தீர்மானங்கள்:

 

1. ஈரோடு முனிசிபல் கவுன்சில் அதிகார எல்லைக்கு உட்பட்ட ஸ்தாபனங்களில் பெண்களுக்கு உத்தியோகம் வழங்கப்பட வேண்டுமென இந்த கவுன்சில் தீர்மானிக்கிறது.

 

2. அந்தப்படி வழங்கப்படுவதை அமுலில் நடத்துவதற்காக பெண்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட அளவாவது உத்தியோகங்கள் ஒதுக்கிவைக்க வேண்டுமென்றும் அந்தப்படி ஒதுக்கிவைப்பதில் முக்கியமாய் ஜனன, மரண பதிவு வேலை, அம்மை குத்துதல், கஜான்ஸி, டைப் அடித்தல், வரி வசூல் செய்தல். வார்ட் மேஸ்திரி, ஆபீஸ் அட்டெண்டர் முதலிய உத்தியோகங்களும் மற்றும் சாத்தியமானவைகளும் ஒதுக்கி வைத்து அவைகளில் பெண்களை நியமிக்க வேண்டுமென்று இந்தக் கவுன்சில் தீர்ப்பளிக்கிறது.

 

3. மேற்கண்ட இந்த உத்தியோகங்களுக்காக தனி பரீட்சையோ, கற்பித்தோ செய்யப்பட வேண்டிய அவசியமிருந்தால் அதற்கும் வேண்டிய உதவி கூடுமானவரை செய்ய வேண்டியது இக்கவுன்சிலின் கடமை என்பதாக தீர்மானிக்கிறது.

 

4. பள்ளிக் கூடங்களில் உபாத்தியார்களை நியமிப்பது பெண்கள் பள்ளிக் கூடங்களின் உபாத்தியாயர்கள் அல்லாமல் ஆண்கள் பள்ளிக்கூடங்களிலும் குறைந்த அளவில் 1, 2, 3 ஆவது வகுப்புகளுக்கு பெண்கள் உபாத்தியார்களையே நியமிக்க வேண்டுமென்று இந்த கவுன்சில் தீர்மானிக்கிறது.

 

5. என்னால் அனுப்பப்பட்ட தீர்மானங்கள் பெண்களும் ஆண்களோடு உத்தியோகத்தில் போட்டி போட வேண்ணுமென்ற காரணத்திற்காகவே கொண்டுவரப்பட்டதல்ல. ஆனால் உத்தியோகம் பார்க்கவும் போதிய சாமர்த்தியமும் தைரியமும் நிர்வாகத் திறமையும் உண்டு என்பதை நிதர்சனகாக்கவும் பெண்களுக்கு ஆண்மக்களைப் போலவே சமூக வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலும் சம பங்கும் சம சுதந்திரமும் பொறுப்பும் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை சகோதரிகளால் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் பெரிதும் விரும்புகிறேன்.

 

இந்த தீர்மானங்கள் ஆணுக்கு பெண் சமமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்.எஸ். கண்ணம்மாளால் கொண்டுவரப்பட்டவை ஆகும். 

 


 


-தொடரும்..............

by Swathi   on 30 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.