LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் (Thirukkural )

திருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன்

சைவ சித்தாந்த ரெத்தினம் முனைவர் இரெ. சந்திரமோகன், 

முதல்வர் (ஓய்வு), ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி, தேவகோட்டை

 

மதுரைத்தமிழ் நாகனார் திருக்குறள் பாயிரத்தில் "எல்லாப் பொருளும் இதன் பாலுல" என்று மொழிந்தார். இதனை மெய்ப்பிக்கும் வகையில்  " Love Languages" என்ற கேரி  சாப்மேனின்  (Gary Chapman) புத்தகத்தில் கண்ட காதல் பற்றிய செய்திகள் திருக்குறளில் உள்ளதா?என்று ஆய்ந்தேன். வியந்தேன் !

காதல் பற்றிய புரிதலை இன்றைய இளைஞர்களுக்கு விதைக்க ஐந்து "காதல் மொழிகளை" பேச வேண்டும்   என்று ஆசிரியர் கேரி  சாப்மேனின் அழகாக விவரிக்கிறார். 

 

  1. காதல் முதல் மொழி:  காதலர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது உறுதியான நல் வார்த்தைகள் பேசப்பழகுதல். (Affirmative Words.): தமிழன் எப்போதும் ஒரு நல்ல காதலன். யாதும் ஊரே: யாவரும் கேளிர் ...என்றரீதியில்வாழ்ந்தவன்.தமிழ்க்காதலர் திருவள்ளுவர்காதல் முதல் மொழிஎப்படிச்  சொல்கிறார் என்று பார்ப்போம். 

சமீபத்தில் புலவர் நா .முத்துக்குமார் அங்காடித்தெரு என்றபடத்தில் எழுதிய பாடல் வரிகளைப்போன்று  “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...அவளுக்கு யாரும் இணையில்லை, ….   ஆனால்  அது ஒரு குறையில்லை    …என்று பாடுவார். காதல் உலகில் முதலில்நுழைந்த  இளைஞனுக்கு மட்டுமே தனி அழகாய் தெரியும் காதலிபற்றி பாடுவதைப்  போல....வியந்து போகவேண்டும்..பின் காதல் வசனம் பேச வேண்டும்..

திருக்குறள் 109 அதிகாரத்தில் நகை அணங்கு உறுத்தல் தலைப்பில் அசத்துகின்ற குறட்பாக்கள்   இதோ !

அணங்குகொள்? ஆய்மயில்கொல்லோ?  கனங்குழை 

மாதர்கொல் மாலும் என்நெஞ்சு -1081

காதலியின் அழகை விவரிக்க நெஞ்சு  தடுமாறுகிறதாம் . (நெல்லை கண்ணன் அய்யாவை இந்த இடத்தில் நினைத்துக்கொள்ளவேண்டும்..) இவ தேவலோகப் பெண்ணா? அழகிய மயிலா? (கிள்ளிப்  பார்த்துக்கொள்ளுதல்) மானுட ப் பெண்ணா ?அடடா ...அடடா .. என்ன அழகு !! நெஞ்சு தவிக்குதே ....மலைக்குதே ... இப்படி காதல் வார்த்தைகள் பேச வேண்டும்..என்று  கற்றுக்கொடுக்கிறார் வள்ளுவர் .

 

1106 குறள் இதை தூக்கி சாப்பிடும் பாருங்களேன்!!

கண்ணே ! மணியே ! அப்படின்னு அங்க அங்க போட்டுக்குங்க....

இவள் தோள் சேர்ந்தலில்தான் நான் உயிரோடிருக்கின்றேன். அதனால் நான் நினைக்கிறேன் இவள் தோள் அமிழ்தத்தால் 3D  தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டுள்ளதோ என்று வியக்கிறேன்!   

 

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலாள்  பேதைக்கு 

அமிழ்தின் இயன்றன தோள்  1106.

 

குறட்பாக்கள் 1105, 1082, 1115, 1116, 1122'' .... எங்கெங்கும் காதல் ... என்று பாடத்தூண்டுகிறது. 

1122 குறள் கூறுகிறது காதலை உறுதி செய்யும் வார்த்தைகள் பேசவேண்டும் ...உங்கள் காதல் உறுதியானது தானே என்று கேட்கும் காதலிக்கு 

"உடம்பொடு உயிரிடை என்ன மற்றுஅன்ன 

மடந்தையொடு எம்மிடை நட்பு" என்று காதலன் பேசவேண்டும்.

 

உடம்பும் உயிருமாய் நாம்  இருப்போம் . ஒன்று நீங்கின் மற்றொன்றும் நீங்காது என்றுகாதலை உறுதி செய்யும் வார்த்தைகள்!!   அதற்கு அவள் என்ன பேசவேண்டும்  குறள்1127: 

கண்ணுள்ளார் காதலராகக் கண்ணும் எழுதேம் 

 கரப்பாக்கு அறிந்து; 

 

மற்றும்

 

நெஞ்சத்தால் காதலராக வெய்துண்டல் அஞ்சுதம்

வேபாக்கு அறிந்து  1128

 

நீ இருக்க வேண்டும் என்று என் கண்ணில் நீ இருக்க, கண்மை 

 தீட்ட மாட்டேன். என் நெஞ்சில் நீ இருக்க சூடாக உண்ணமாட்டேன் என்று ஒருவர் மாற்றி ஒருவர் காதல் மொழி பேசுதல்  காதல் மொழிகளில் முதன்மையானது என்று வள்ளுவர் கூறுகின்ற மொழிதான் Words of Affirmation

  1. காதல் மொழியின் இரண்டாவது வார்த்தை பரிசுகள் வழங்குவது:காதலர்கள் தங்கள் காதல் நிலைத்து நிற்க அடிக்கடி பரிசுப்பொருட்களை பரிமாறி அன்பை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார் சாப்மேன்.  திருவள்ளுவர் அத்தகைய செய்தியை கூறியுள்ளாரா? என ஆய்ந்தேன். முதல்முறை வாசிக்கின்ற பொழுது காதல் மொழி ஒன்று அளவுக்கு காதல் மொழி இரண்டு அவருக்கு அவசியம்  தேவையில்லை என்று கருத்தியிருக்கிறார் என நினைத்தேன். மீண்டும் தேடினேன்.

அப்பொழுது அவர் காதல் பரிசாக கூடல் அமையவேண்டும் என்று கூறியதாக உணர்ந்தேன்.

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு 

வீழ்வார் அளிக்கும் அளி -1192 

 

என்ற குறளில் காதலில் வீழ்ந்தார்க்கு சரியான தருணத்தில் பெய்யும் மழை உயிர்களைக் காப்பது போல் சரியான தருணத்தில் கூடுதலே காதலின் பரிசு. 

116,117,118,119 அதிகாரங்களில் வருவது போல் பிரிவு ஆற்றாமையில் தவிக்கும் காதலியின் பசலை நோய் சில நேரம் உயிரையும் காவு கொள்ளும் வகையில் அமையும் என்று வலியுறுத்தி மழை போல் வந்து கூடல் காதலின் மிகச்சிறந்த பரிசு என்பர் வள்ளுவர். 

 

1164 குறளில் "காமக்கடல் மன்னும்  உண்டே அது நீந்தும் ஏமப் புணைமன்னும் இல்". இக் குறள் மூலம் கடல்போல் ஆசை கொண்ட காதலர்க்கு அக்கடலை கடக்கும் களமாக கூடல் பரிசு அமையவேண்டும் என்று குறிப்பிடுகிறார். இதில் மிகுந்த சலனத்துடன், அலைகளுடன் தன் காதலர்க்காக  காத்திருக்கும் காதலியை உடன் காக்க தன் வருகையை தெரிவிக்க பரிசு,   கடிதம், கவிதை, கட்டுரை  என்ற சாதனங்களை “களம்” என்ற சொல் மூலம் குறிப்பிடுகிறார் என்றும் கொள்ளல் தவறன்று.  

இன்பத்துப்பால் பசலை நோயின் கொடுமை உணர்த்துகிறது. அறத்துப்பாலில் அல்லது பொருட்பாலில் மேலும் சில குறள்கள் மனைவிக்கு பரிசுகள் தருவது பற்றியோ அல்லது 

என்னென்ன பரிசுகள் தரலாம்  என்ற குறிப்புகள் கொண்ட குறட்பாக்களை தேடினேன். 

குறள்  751 பொருளல்லவரைப்   பொருளாகக் செய்யும் பொரு 

ளல்லது இல்லை பொருள்  

என்று அனைத்து பொருள்களுமே வாழ்வை பொருளாக்கும். காதல் இல்லா வாழ்க்கை பொருளில் வாழ்க்கை. காதல் வாழ்க்கைக்கு  பொருள்ஈட்டி   சரியான தருணத்தில்  பரிசுப்பொருட்கள் கொடுத்து காதலியின் உயிரினை உறுதிப் படுத்தவேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார் என்றும் கொள்ளலாம். அதனால் தான் வள்ளுவர் உத்தரவு போடுகிறார் “செய்க பொருளை”. "யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற நிலை தமிழனின் பெருமையை  பறைசாற்றுவது. அவனிடம் இருந்த உயர் ஞானம், கடல் போன்ற செல்வம் இவற்றினால்தான். உலக மாந்தர் கேளிராக கொள்வதற்கு பொருள் அவசியம். எனவே "செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும் எஃ க தனில்   கூரியது இல் " என்று ஆணை இடுகிறார். 

அதோடு மட்டும் அல்ல .  நல்ல பொருளை திறலாகப் பெற்றவர்க்கு அறமும் இன்பமும் ஒருங்கே கிடைக்கும் என்ற பொருள் தரும் குறள் 760 ஒண்பொருள்  காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

    ஏனை இரண்டும் ஒருங்கு.

ஆனாலும் எனக்கு பரிசு பற்றி நேரடியாக குறள் சொல்லவில்லை என்றே பட்டது. 

 

திருவள்ளுவ முனிவர் சில விசயங்களை குறிப்பு கொண்டு உணர்த்துவார் என்பதால் குறிப்பறிவுறுத்தல்   என்ற அதிகாரத்தில் எதாவது குறிப்பு தெறிகிறதா என்று பார்த்தேன். அயர்ந்தேன்...

1271 நீ மறைக்க விரும்பினாலும் உன்னை மீறி என்னை உண்கின்ற  உன் மையிட்ட கண்கள் எனக்கு என்ன சொல்கிறது என்று அறிவேன்...

கரப்பினும் கையிகந்  தொல்லா நின் உன்கண்   

உரைக்க லுறுவது ஒன்றுண்டு. 

 

எனவே கண்ணுக்கு பரிசு தரவேண்டும். கண் கவர் அணிகள், கண்மைகள், மையிடும் சாதனங்கள், கண்ணாடிகள் என்று பரிசு பட்டியல் நீள்கின்றது. 

1272 கண் நிறைந்த காரிகைக் காம்பேர்      தோட் பேதைக்குப் 

பெண் நிறைந்த நீர்மை பெரிது.

 

இக்குறள்  தோளுக்கு அணிகலன், ஆடைகளை குறிப்பிடுவதாக அமைகிறது.   

1273 மணியில் திகழ் தருநூல் போல்  மடந்தை 

அணியில் திகழ்வது ஒன்றுண்டு.  

மணிக்கோவையில், மணிகளுக்கு இடையே நூலுள்ளது போல்  இவளது அழகே ஒரு குறிப்பினை சொல்கிறதே!.  திருவள்ளுவர் தாத்தா என்ன சொல்லறாருன்னு தெரியுதா.  பர்ஸுக்கு தெரியலையே ! நகைக்கடை விளம்பரம் போல உடம்பு பூரா மறையிரமாதிரிநகைகளை வாங்காமல் மணிகளால் ஆன லேட்டஸ்ட் டிசைனா பார்த்து சின்னதா ஒன்னு போதும்.. என்கிறார்.

1274 ல் மனம் கோணாமல் இருக்க மணம் கொண்ட  சென்ட் வாங்கி அனுப்பலாம் என்கிறார். 

1275 அடர்ந்த வளையல்கள் பற்றி பேசுகின்றார் .  அதோடு மருந்து  பொருள் பற்றியும் சொல்கிறார். இவ்வளவு பரிசுப்பொருட்கள் சரிக்கட்ட மட்டுமே. இதோடு கூடல் பரிசும் தரவேண்டும் 1276. அப்பொழுது அவள் ஊடுவாள் . மீண்டும் என்னைவிட்டு நீங்குவேன் என்பதைத்தானே   இக்கூடல் குறிக்கின்றது. அப்போதும் கூட நான் விரைவில் வந்து விடுவேன் என்ற உறுதியையும் பரிசோடு கூறு என்று தாத்தா தலையணை மந்திரம் சொல்லித்தருகிறார். ஆண்களுக்கான அற்புத இன்பக்கல்வி 1276ம் குறள் என்றால் மிகையாகாது.

 

3.சேவை : இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொருவர்க்கும் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே பெரிய விசயமாகிறது. ஒரு குடும்பத்தின் தேவை மிக அதிகமாகிப்போனது. அவரவர் தேவைகளை அவரவர்கள் செய்துகொள்வது அவசியம். ஆயினும் மனிதர்களின் மனங்களைக் கொள்ளைகொள்ள சிவனும் பெருமாளும் சேவகர்களாய் வந்ததைப்போன்று நீடித்த காதலுக்கு சேவை பரிமாறுதல் அவசியம். என் நண்பன் எனக்கு வேண்டுவதும் அவனுக்காக நான் பிரார்த்திப்பதும் நல்ல நட்பிற்கு உரமாவது போல காதலனுக்கு வேண்டிய உதவிகளை நினைந்து செய்வதும் காதலிக்கு வேண்டிய உதவிகளை காதலன் செய்வதும் மிக அவசியம் என்கிறார் சாப்மேன். 

வள்ளுவர் சொல்லுவார்,   

" நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ 

தாம்காதல் கொல்லாக் கடை? 1195. 

இக்கேள்வி வராவண்ணம்,   நம்மால் காதலிக்கப் பட்டவர் மாறாக நம்மீது காதல் கொள்ளாவிட்டால் அவர் நமக்கு என்ன இன்பத்தை செய்வார் என்ற நிலை வாராது ஒருவருக்கு ஒருவர் சேவை செய்தல் அவசியம்.

 

அப்படி காதலைப் பரிமாறிக்கொண்டவர் காதல் எப்படி அமையும் 

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்கும்காள் 

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து -1218

 

நனவினால் நல்காரை நோவர்  

கனவினால் காதல் காணாதவர் 1219. 

 

சேவை பரிமாறல், அவரவர் குடும்பங்களே பெரிது என்று நினையாமல் இருவர் உடலும் உள்ளமும் குடும்பங்களும் உறவுகளும் ஒன்றென எண்ணி சேவை பரிமாறல் காதல் நலம் காக்கும்  ரகசியவார்த்தைகளில் ஒன்று. 

1192 குறள் போன்று தக்க தருணத்தில் பூமியின் தேவை அறிந்து பெய்து சேவை செய்யும் மழைபோல்  ஒருவர்க்கு ஒருவர் சேவைசெய்தல் காதலை நிலை நிறுத்தும் வழிகளில் முக்கியமானது என்று காதோடு கூறுவார் வள்ளுவர்.

  1. காதல் மொழிநான்கு(Quality Time)  தரமான நேரம்: one's undivided attention in order to strengthen a relationship:  

சாப்மேன் சொல்கிறார் நீங்கள் காதலை நிலை நிறுத்தவேண்டும் என்று எண்ணினால் உங்களது நேரத்தில் காதலுக்காக ஒரு பகுதியை ஒதுக்குதல் வேண்டும் . பலர் இந்த காதல் மொழியை பேசுவதில்லை. தங்களது அலுவலக சாம்ராஜ்யத்தில், தொழில் ராஜ்யத்தில் தாங்களே அரசர் என்று நினைத்து 24/7 அலுவலகப் பணிக்கே ஒதுக்குதல் அறிவுடைமை அல்ல . குடும்பம், காதல் குழந்தைகள் என்று பிரித்து தரமான நேரத்தை அலுவலகத்துக்கு இணையாக குடும்பத்திற்கும் அதில் ஒரு பகுதியையும் காதலுக்கு ஒதுக்குதல் அவசியம் என்கிறார் சாப்மேன்.

குரல் 1199  ல்  வள்ளுவர் கூறும் கருத்தை உற்றுநோக்குவோம். 

 

நசைஇயியார்   நல்கார்  எனினும் அவர்மாட்டு 

இசையும் இனிய செவிக்கு.

காதலியைப் பொறுத்தவரை பொருள் ஈட்டும் நிமித்தம் தம்மை விட்டுபிரிந்த தலைவன் தினம் தினம் வந்து காதல் செய்ய இயலாது என்பது தெரிந்திருந்தாலும்   அவனுடைய சொல்லே இசையாகக்கொள்வாள். எனவே தங்களது நேரத்தில் தரமான தருணத்தில் தங்களின் இதமான சொற்கள் தரவேண்டியதன் அவசியத்தை 2000 வருடத்திற்கு முன்னே தொலைபேசி, செல்லிடைபேசி இல்லாத காலத்தே வள்ளுவர் வலியுறுத்துகிறார் . கடிதங்கள், விருந்தினர்கள், செவிலித்தாய்கள் என்று எத்தனையோ வழிகள் அக்காலத்திலும் இருந்திருக்கவேண்டும். பொன்னவன்  போனவன் போனானடி என்று ஏங்காமல், பசலை நோய் படர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது தலைவனின்(தற்போது தலைவியின்) தலையாய கடனாகும் . சரியான தருணத்தில் தங்களது தொடர்பு, உறவு மேம்படுத்த   வழிகாண்பது அவசியம் என்கிறார் வள்ளுவர்,

வீழ்வாரின் இன்சொல்  பெறாஅ து  உலகத்து 

வாழ்வாரின் வன்கணார் இல் -1196 என்ற குறட்பா மூலம் நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய், நீ இன்றி நானில்லை,  நம் காதலே தலை ச் சிறந்தது  என்ற சொற்களை காதலன் சொல்ல அதைக் கேட்காமல் உயிர் வாழும் மகளிரைப் போல  வன்மை நெஞ்சுடையார் வேறு எவருமில்லை என்கிறார் வள்ளுவர். எனவே குடும்பத்திற்கும் காதலுக்கும் தரமான நேரமும் அந்நேரத்தை தரமாக ஆக்கும் இன்சொலும் அவசியம் என்று காதோடு பேசுகின்றார்,

இப்போதே நாம் “நமது காதல் மொழி எது?” என்று கண்டறியும் முன் இறுதியாக க் காதல் மொழி ஐந்திணையும் காண்போம். 

 

  1. காதல் மொழி ஐந்து:ஸ்பரிசம் (டச்) தொடுதல் 

அன்போடு உடல் தொடுதல், அணைத்தல்(Hug)  மிகவும் முக்கியமான காதல் மொழி. அதை அடிக்கடி பேசவேண்டும் என்கிறார் சாப்மேன். உறவுகள் மேம்பட இத்தகைய முறையான தொடுதல் அவசியம்.  நல்ல தொடுதல்  (good touch) மூலம் நமது காதலை தெரியப்படுத்துதல் அவசியம். இதனை வள்ளுவர் வலியுறுத்துவதைப் போல  யாரும் சொல்லியதாக நான் கருதவில்லை .

பாரதி கூட " காற்றுவெளியிடை கண்ணம்மா நம் காதலை எண்ணி கழிக்கின்றேன்  " என்றது இக்குறளின் மூலம்தான் .  .

 

வீழும்  இருவர்க்கு  இனிதே வளியிடை

 போழ ப் படா அ முயற்கு 1108

 

நுண்ணிய காற்றும் இடைநுழையாத வண்ணம் தழுவுவது காதலர்க்கு இன்பம் என்கின்றார் இந்த முனிவர்.

 

இன்னொரு சமயம் 

 

" மலரினும் மெல்லிய காமம்  சிலர் அதன் 

செவ்வி தலைப் படுவார் -1289 என்கிறார். 

 

அப்படி அணைக்கையில் காமம் மலரினும் மெல்லியது என்று உணர்தலும் வேண்டும் என்கிறார் .

எனவே காதலின் வெற்றிக்கு “மேற்சொன்ன ஐந்து காதல் மொழிகளை ப் பேசப்பழகுதல் இன்றியமையாதது” என்ற சாப்மனின் கருத்துக்கள் வள்ளுவர் குறட்பாக்களை படித்திருப்பாரோ என்றே நினைக்க தோன்றுகிறது. இந்த நூல் மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கின்றது. உங்கள் காதல் மொழி என்ன? என்ற கேள்வியுடனும் ஒன்றுக்கும் மேற்பட்ட அல்லது அணைத்து காதல் மொழிகளையும் பேசப்பழகுதல் காதலை வலுப்படுத்தி வாழ்வை இனிமையாக்கும் வழி

 என்பது சாப்மேன் மற்றும் வள்ளுவர் கூறுவதாகக் கொள்வோம். 

 

நீங்கின் தெறூஉம் குறுகுங்கா தண் என்னும்தீ 

யாண்டு பெற்றாள் இவள்? 1104 

என்று வினவும் குறள் காதல்விஞ்ஞானிகள் வியக்கும் குறள். 

மீண்டும் நம்ம நெல்லைக்கண்ணன் அய்யாவை நினைத்துக்கொள்ளுங்கள். அங்கங்கே மானே!, தேனே!  என்று போட்டுக்கொள்ளுங்கள். இவ  என்ன  ஆளுயா ? அடடா .. அடடா .. இவகிட்ட உள்ள நெருப்பு இருக்கிறதே இது ரொம்ப வித்தியாசமான நெருப்பு (Infra Red rays) அருகில் சென்றால் குளிர்கிறது! தள்ளி, விலகிச் சென்றால் சுடுகிறது!. இது எங்கிருந்து வந்தது! என்று ஆராயும் காதலுடன்  காதல் மொழிகள் ஐந்திணையும் பயன்படுத்தி வாழ்க்கையை  அழகாய் வாழ்வோம்.

 

வள்ளுவன் போன்ற ஆசிரியரை, தவமுனிவரை, தாத்தாவைப்  பெற்ற நமது வாழ்க்கை உலக உயிர்களுக்கு இனிமையான வாழ்வை போதிக்கட்டும்!!. வாழ்க வள்ளுவம்! வளர்க அவர் காதல் மொழி! 

 

by Swathi   on 26 Oct 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன் திருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்
திருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன் திருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்
திருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன் திருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன்
பொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன் பொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன்
வள்ளுவம் படிப்போமா!! வள்ளுவம் படிப்போமா!!
அனைத்து திருக்குறளுக்கும் தமிழ்-ஆங்கில விளக்க உரை, ஓவியம், ஒலி, காணொளி கொண்ட முழு தொகுப்பு www.valaitamil.com/thirukkural.php அனைத்து திருக்குறளுக்கும் தமிழ்-ஆங்கில விளக்க உரை, ஓவியம், ஒலி, காணொளி கொண்ட முழு தொகுப்பு www.valaitamil.com/thirukkural.php
திருக்குறளின் பெருமையை உணர்த்தும் திருக்குறள் வீடு !! திருக்குறளின் பெருமையை உணர்த்தும் திருக்குறள் வீடு !!
ஓவிய வடிவில் திருக்குறள் ஒரு உன்னத சாதனை ஓவிய வடிவில் திருக்குறள் ஒரு உன்னத சாதனை
கருத்துகள்
28-Oct-2018 14:22:30 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம். வள்ளுவரை பெற்றதால் வான் புகழ் கொண்டது தமிழகம்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.