LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

மாச்சு பிச்சு பயணம் - மகளிர் மட்டும் -கவிதா சுந்தர்

கடந்த வருடம் 2018  அக்டோபர் மாதத்தில் சில தோழிகளின் மனதில்நாம் தினமும் நடக்கிறோம், சில செயல்களைத் தைரியமாகச் செய்கிறோம், ஏன் நடைப்பயணத்தை ஒரு சவால் நிறைந்த செயலாகச் செய்யக்கூடாது என்று தோன்றிய ஒரு தீப்பொறி - 16 பெண்கள் பயிற்சி எடுத்து, இன்கா சாலைகளில் மாச்சு பிச்சுக்கு நடை/மலையேறும் பயணத்திற்கு வித்திட்டது! 4 நாட்கள் (3 நாட்கள் இரவு கூடாரங்களில் தங்குதல்), 45 கிலோமீட்டர் மலைகளுக்கு ஊடே பயணம் செய்து மாச்சு பிச்சு வந்தடையும் மலையேறும் பயணத்தைத் தேர்ந்தெடுத்தோம். இங்குதான் நாம் போகப்போகிறோம் என்று முடிவான பின், 8 பேர் இருக்கும் குழுவாக இருந்தால் தான் தனிச் சுற்றுப்பயணமாகப் போக முடியும் என்ற விவரம் தெரிந்து அது நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து 16 பேர் குழுவாக உருமாறியது! இதற்குமேல் வேண்டாம் என்று முடிவுசெய்தோம்.

சுற்றுப்பயண நிறுவனம், வானிலை தோதாக இருக்கும் மாதம் எல்லாம் தேர்வு செய்து, செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல் 15ம் தேதி என்று முடிவு செய்து கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்து கொண்டோம்.ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே அனுமதி (சுற்றுலா, வழிகாட்டிகள் மற்றும் சுமை தூக்குபவர்கள் அனைவரையும் சேர்த்து) என்பதால் ஆறு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்வது அவசியம். அதனால் நாங்கள் ஜனவரி முதல் வாரத்திலேயே முன் பதிவு செய்து விட்டோம்.

இதற்காக ஒரு புலனக் குழுவை (WhatsApp குழுவை) உருவாக்கி அதில் எந்த மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யலாம், தினமும் பயிற்சி செய்யும் விவரங்கள் அனைத்தையும் பகிர்ந்தோம் முக்கியமாக, நடைப்பயிற்சி, படிகள் ஏறி இறங்குதல், யோகாசனம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை அன்றாடம் செய்தோம். 4-5 படிக்கட்டுகள் ஏறி இறங்குதலே கஷ்டமாக இருக்கும் சூழ்நிலையில், பயிற்சி எடுத்து 40-60 படிக்கட்டுகள் என்று செல்ல முடிந்தது! வெப்பநிலை நன்றாக இருக்கும் வாரயிறுதி நாட்களில் பக்கத்தில் இருக்கும் சிறுமலைகளுக்குச் சென்று மலையேறுதல்,இறங்குதல், அதற்குண்டான மலையேறும் உபகரணங்கள் வாங்குதல் என்று நன்றாகத் திட்டமிட்டோம்.

பயண விவரங்கள்

நியூயார்க் ஜான் கென்னடிவிமானநிலையத்தில் இருந்து பெரு நாட்டு தலைநகரம் லீமாவிற்கு 7 மணிநேர விமான பயணம். அதன் பிறகு குடியேற்ற வழி முறைகளை முடித்த பிறகு பெட்டிகளை எடுத்துக் கொண்டு குஸ்கோ என்னும் ஊருக்கு 1 மணிநேர விமான பயணம். குஸ்கோ 11154.86 அடி உயரத்தில் இருப்பதால் அங்கிருக்கும் தட்ப வெட்ப நிலைக்கு நம் உடல் பழகுவதற்காக, 2-3 நாட்கள் அங்கு தங்கி அங்குள்ள சில சுற்றலா தலங்களுக்குச் சென்றோம். இதற்கு அங்கு தரும் கோகோ, டீ அல்லது அந்த இலைகளை வாயில் மடித்து வைத்துக்கொள்வது உதவியது.

குஸ்கோவில் மத்தியில் இருக்கும் கதீட்ரல், அடுத்த நாள் புக்கா புக்காரா என்னும் இடத்தில் இருக்கும் இன்கா கோட்டை, லாமா, அல்பாக்க, விக்குனா எனும் விலங்குகளின் மீட்பிடங்களைச் சுற்றிப்பார்த்ல் அதன் பிறகு கடைகளில் பொருட்கள் வாங்குவது என்று சென்றது. அதற்கு அடுத்த நாள் சிஞ்சரோ நகர், மார்க்கெட், பிஸாக் சூரிய கோவில் என்று பல இடங்களுக்குச் சென்றோம்.

நான்காம் நாள் காலை இன்கா சாலைகள் வழியாக 4 நாள் பயணமாக மாச்சு பிச்சுக்கு செல்லும் மலையேறும் பயணத்தைத் தொடங்கினோம்இன்காப் பேரரசு கிபி 1200 முதல் 1533வரை பெரு உட்பட பல தென்னமெரிக்க நாடுகளை ஆட்சி செய்தது. இன்கா இனத்தவர்கள் தங்களுடைய படை வீரர்கள், மக்கள் போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்காக மலைகளுக்கு இடையே சாலைகளை அமைத்துக்கொண்டார்கள். அவர்களின் சாலை அமைப்பு மிகவும் மேம்பட்டதும் விரிவானதுமாகும். அதில் மாச்சு பிச்சுக்கு போகும் சாலை அமைப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.

இப்பயணத்தை ஏற்கனவே ஒரு வழிகாட்டி முகவருடன் வேக்கி டிரக் (Wayki Trek) யில்  பதிவு செய்திருந்தோம். 84வது மைல் கல்லடியில் இறங்கி நடக்க வேண்டும்நம் கடவுச் சீட்டு, பயணச் சீட்டு பரிசோதனை முடிந்து பாலம் வழியாகக் கீழே உருபாம்பா நதி ஓட, மலைக்கு மேல நடக்க பயணமானோம்நமக்கு முன்னும் பின்னும் வழிகாட்டிகள் நம்முடனேயே வருகிறார்கள். இங்கு இன்கா படிக்கட்டுகள் அவ்வளவாக இல்லை, சிறு சிறு ஊர்களின் வழியாக மலைக்கு மேலே நடக்க ஆரம்பித்தோம்

இரண்டாம் நாள் மிகவும் சிரமமாக இருக்கும் என்று தெரியும். ஆனால் அவ்வளவு சிரமமாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. காலை 5:30 எழுந்து 6:30க்குள் நடக்க ஆரம்பித்தோம். பெரிய பெரிய படிக்கட்டுகள் நிறைந்த மலைகளுக்குள் இருக்கும் சாலைகள். டெட் உமன் பாஸ் (Dead Woman pass) என்னும் மலையின் உச்சியில் இருக்கும் இடத்திற்கு போய்விட்டு, பின்பு கீழே இறங்கி பக்கமாயோ (Pacamayo), என்னும் இடத்திற்கு வந்து தங்க வேண்டும். நீண்ட நேரம் மலையேற வேண்டும் என்பதால் காலை உணவுடன் மதியத்திற்கு சாப்பாடு கட்டிக் கொடுத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட 16கிலோமீட்டர் நடந்து, மழையில் வேறு நனைந்து அனைவரும் பத்திரமாக இரவு தங்கும் இடத்திற்கு வந்துவிட்டோம். முன்பாதி பயணத்தில் படிக்கட்டுகளில் மேலே ஏறினால் பின்பாதி முழுக்கப் படிக்கட்டுகளில் இறங்கினோம்

மூன்றாவது நாள், இரண்டாம் நாளை விட சிரமமானதாக இருந்தது. கால், முட்டி, உடல்  எல்லாம் வலியெடுக்க, குறைவான தூக்கம் (காலை 5:30 மணிக்கு நடக்க ஆரம்பிக்கவேண்டும்) வேறு. ரன்குரகயே (Runkuraqay) போய்விட்டு அங்கிருந்து சையகமார்கா (Sayacmarca) என்னும் ஒரு சிறு மலைமேல் இன்கா சிதைந்த கோட்டை ஒன்று இருக்க, நான் உட்பட எங்களில் சிலர் அதை மேலே ஏறி, சுற்றிப்பார்த்தோம். பின்பு கீழ் இறங்குவழியாக மூங்கில் காடுகள் வழியே சென்று புயூபடமார்கா (Phuyupatamarca) மதிய உணவு முடித்து பிறகு வின்யாவயான (winyawayana) என்ற இடத்திற்கு இரவுக்குள் வரவேண்டும். கிட்டத்தட்ட 14 மணிநேரம் அன்று நடந்தோம், அதாவது படிக்கட்டுகளில் ஏற்றம் இறக்கம். இருட்ட தொடங்க, தலையில் தலைவிளக்கு(headtorch) மாட்டிக்கொண்டு, நிலா வெளிச்சத்தில் வந்து சேர்ந்தது புது அனுபவம். இரண்டு நாட்கள் தாண்டிவிட்டால் இன்கா பயணத்தை என்ன சிரமம் என்றாலும் முடித்துவிடலாம்.

நான்காம் நாள் காலை 3 மணிக்கு எழுந்து காலை உணவு முடித்து 5:30 மணிக்குள் சன் கேட் (Sun gate) எனும் இடத்திற்கு போவதற்கு முன்பு அங்கிருக்கும் சோதனைச் சாவடிக்குச் சென்று காத்திருந்தோம். சோதனை முடிந்த பிறகு, அந்தப் பாதை வழியாக நடந்து சன் கேட் (Inti Punku எனும் இடத்திற்கு) வந்து சேர்ந்தோம். இங்குதான் காலைக் கதிரவன் உதயமாகி மாச்சு பிச்சு தூரமாகத் தெரியத் துவங்கும், எங்கள் மலையேறுதல் பயணம் முடிவுக்கு வரும் நாள். சன் கேட்டில் இருந்து கீழே இறங்கி அப்படியே மாச்சு பிச்சுக்கு வந்து சேர்ந்தோம். அழகான கற்களை கொண்டு அடுக்கி ஒரு சிறு நகரம் உருவாக்கி மலைகளிடையே வாழ்ந்த மன்னராட்சியின் மிச்சம் இருந்தது. வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத மகிழ்ச்சி, நிறைவு. மாச்சு பிச்சுவின் அழகு வசீகரித்தது. நன்றாகச் சுற்றிப் பார்த்து ரசித்தோம்.

பின்பு அங்கிருக்கும் உணவகத்தில் மதிய உணவு முடித்து, பேருந்தில் ரயில் நிலையம் வந்து, ரயிலில் இரவு குஸ்கோ வந்து சேர்ந்தோம். இந்த ரயில் பயணம் மிகவும் அருமையான ஒன்று. மலைகளுக்கு நடுவே பயணம். ரயில்களின் ஜன்னல், கூரைகள் கண்ணாடியில். நன்றாக வெளியே இருக்கும் அழகை ரசிக்க முடிந்தது. சாப்பிட உணவும், ஆடை அலங்கார அணிவகுப்பு,நடனம் என்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இருந்தன. குஸ்கோவில் எங்கள் தங்கும் விடுதிக்கு வந்தவுடன், களைப்பு தீரக் குளித்து, இரவு உணவு முடித்து நன்றாகத் தூங்கினோம்.

அடுத்த நாள் இரவுதான் நாங்கள் ஊர் திரும்ப வேண்டும் என்பதால், காலை உணவு முடித்து, அங்கே சில கடைகளுக்குச் சென்று நினைவுப் பரிசுகள் வாங்கினோம், பிறகு நன்றாகச் சாப்பிட்டு விட்டு (பெரு உணவுகள் நல்ல தரமாக, சுவையாக இருந்தன) மூட்டை முடிச்சுகளுடன் விமான நிலையம் வந்து அமெரிக்காவிற்குப் பயணமானோம்.

16 பெண்கள் தனியாகச் சென்று, மலையேற்றம் முடித்துப் பாதுகாப்பாகத் திரும்பி வந்தது மட்டற்ற மகிழ்ச்சி. குஸ்கோ கதீட்ரல், சன் கேட்டில் நாங்கள் புடவை அணிந்து புகைப்படம் எடுத்தது, எங்கள் புடவைகளைப் பார்த்து உள்ளூர் மக்கள் எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது, JFK விமானநிலையத்தில் எங்கள் விமான வாயிலுக்கருகில் பாலிவுட் பாட்டுக்கு நடனம் ஆடியது, ஒருவருக்கொருவர் உதவி செய்து, தட்டிக் கொடுத்து, சிரித்து, ஆண்டியன் மலைகளில் இருக்கும் அழகை ரசித்தது என்று இந்தப் பயணம் என்றும் எங்கள் மனதில் நீங்காமல் இருக்கும். ஒரு சாதனை செய்த நிறைவு... இது மேலும் தொடரும்!

by Swathi   on 14 Oct 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.