LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஓர் அபூர்வக் கவிஞனின் அகால மரணம்!

மனிதன் சக மனிதர்களோடு பல்வேறு சமூக மற்றும் அரசியல் காரணங்களுக்காகப் போராடுவதோடல்லாமல் நோய்களோடும் போராடவேண்டிய அவல நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சில நோய்கள், உடலை வாடகை வீடாய் நினைத்துச் சிலகாலம் மட்டும் அங்கே குடியிருந்துவிட்டுத் தக்க மருந்துகள் எனும் தாக்குதல் ஏற்பட்டால் சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டம் பிடிக்கும்.


வேறுசில நோய்களோ உள்ளிருப்பதே தெரியாமல் திருடன்போல் ஒளிந்திருந்து, முற்றியபின்பு திடீரென்று வெளிப்பட்டு மனிதனைத் தாக்கும். இதுபோன்ற சங்கடமான சூழ்நிலையில், நோயாளி நோயை வென்று மீள்வதும், நோய்க்கு வெற்றிதந்து மாள்வதும் அவனுக்குத் தக்கதருணத்தில் கிடைக்கும் சரியான மருத்துவ வசதியைப் பொறுத்தது. அத்தகைய மருத்துவ வசதி ஒருவனுக்கு உடனடியாகக் கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் ’விதி’ என்னும் இரண்டெழுத்தால் தீர்மானிக்கப்படுவது போலும்!


‘ஊழ்’ என்று வள்ளுவரால் விளிக்கப்படும் இந்த விதி, ஒருவனுடைய ஜாதகத்தில் அவனுக்குச் சாதகமாக இருந்தால் பாயும் படுக்கையுமாக இருந்தவன், பாயும் குதிரையில் தாவியேறும் வல்லமை பெறுகின்றான். இல்லையேல்… அவன் வாழ்வே பாழ் என்றாகின்றது. இதற்குச் சமீபத்திய சான்று நம் உள்ளங்கவர் இளங்கவிஞர் நா. முத்துக்குமார். அவரின் அகால மரணம் நம்மை நெஞ்சைவிட்டு அகலா ரணம்!


”தொண்டை நன்னாடு சான்றோருடைத்து” என்ற நன்மொழிக்கு இலக்கணமாய்க் காஞ்சி மாநகர் இரண்டு பெரிய ஆளுமைகளை வரலாற்றில் விட்டுச் சென்றிருக்கிறது. ஒருவர், ஒப்பற்ற மேடைப் பேச்சு, கதை, கட்டுரை, திரைப்பட வசனம், அரசியல் வாழ்வு, தமிழோடு ஆங்கிலத்திலும் இணையற்ற மொழிப்புலமை ஆகியவற்றால் தமிழர்களைக் கவர்ந்த தன்னேரிலாத் தலைவர் பேரறிஞர் அண்ணா. மற்றொருவர், தமிழில் சிறந்த மொழிப்புலமையும், இலக்கிய ஆளுமையும், திரைப்படப் பாடல் புனைவதில் ஈடு இணையற்ற திறமையும் கொண்டிருந்த திரு. நாகராஜன் முத்துக்குமரனாகிய நா. முத்துக்குமார்.


விவரமறியாப் பிஞ்சுப் பருவத்திலேயே கொஞ்சிடும் அன்புத் தாயை இழந்த இக்கவிஞர், தமிழாசிரியராகவும் புத்தக வாசிப்பையே தன் சுவாசிப்பாகவும் கொண்டிருந்த தன் தந்தை திரு. நாகராஜன் அவர்களின் சீரிய வழிகாட்டுதலால் புத்தகங்கள் மீது தீராக் காதல் கொண்டார்; வாசிப்பில் தன் தாயை இழந்த வலிக்கான ஆறுதலைக் கண்டார். பள்ளிப்பருவத்திலேயே கவியெழுதும் ஆற்றல் கைவரப்பெற்றிருந்த முத்துக்குமார், காஞ்சியிலிருந்த பல்வேறு இலக்கிய அமைப்புக்களோடும், வாசிப்பு வட்டங்களோடும் தன்னைப் பிணைத்துக்கொண்டு எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.


கல்லூரிக் கல்வியில் இளங்கலை இயற்பியல் (B.Sc. Physics) படித்து, அதில் தொண்ணூறு விழுக்காடு மதிப்பெண்களோடு தேர்ச்சிபெற்றிருந்தும், பி.டெக் பொறியியல் படிக்க வாய்ப்பிருந்தும், தன்னுடைய தணியாத தமிழ்க்காதலால் முதுகலைத் தமிழில் சேர்ந்தார். அவ்விளவயதிலேயே பிழைப்புக்குரிய கல்வியைத் தேடாது, தனக்குப் பிடித்ததை நாடக்கூடிய சுயசிந்தனையும், சுதந்திரமும் அவருக்கிருந்ததை அறிய வியப்பும் மகிழ்ச்சியும் நமக்கு ஏற்படுகின்றது.


பேரறிஞர் அண்ணாவின் ஆளுமையை வளர்த்தெடுத்த பச்சையப்பன் கல்லூரியில்தான் நா. முத்துக்குமாரும் இச்சையோடு தமிழ் பயின்றார். எல்லாக் கல்லூரிகளின் கவிதைப் போட்டிகளிலும் முத்துக்குமாரின் குரலில் ஒலித்த ’பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்’ எனும் வாசகம் அந்நாளில் மிகப் பிரபலம்!


”புறா வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்

என்னிடமிருந்து பறிக்கிறான்

பூனை வளர்க்கும் சுதந்திரம்!”


’சுதந்திரம்’ என்ற பெயரில் நா. முத்துக்குமார் எழுதிய மேற்கண்ட கவிதை மாணவர்களிடம் மிகுந்த பாராட்டையும், கவிதைப் போட்டியில் அவருக்கு முதல் பரிசையும் பெற்றுத் தந்தது!


”சோற்றுக்கு வரும் நாயிடம்

யார் போய்ச் சொல்வது?

வீடு மாற்றுவதை!”  என்று அவரெழுதிய கவிதையில், நாயிடமும் தாயன்பு காட்டும் அவர் கருணையுள்ளம் துலக்கமாய்க் காட்சிதருகின்றது.


அனைத்திந்திய வங்கித் தொழிலாளர்கள் சங்கம், கல்லூரி மாணவர்களுக்காகச் சென்னையில் நடாத்திய கவிதைப் போட்டியில்,


”மாபெரும் அறைகூவலுக்குப் பின்

உலகத் தொழிலாளர்கள்

ஒன்று சேர்ந்தார்கள்!

லெனின் சொன்னான்…

‘என்னை மன்னித்துவிடுங்கள்!

உங்களுக்கு முன்பாகவே

முதலாளிகள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள்”

என்று!


‘யார் சொன்னது?

பின்னி ஆலையை மூடிவிட்டார்கள் என்று?

இப்போதும் பின்னி ஆலையில்

நூல் நூற்கும் பணி

நடந்துகொண்டுதான் இருக்கிறது!

சின்ன வித்தியாசம்…

நூல் நூற்பது தொழிலாளிகள் அல்ல…

சிலந்திகள்!”


என்று கவிதை பாடினார் இந்த இளங்கவிஞர். வேலையிழந்த தொழிலாளர்களின் வேதனைக் குரலைத் துல்லியமாய்ப் பிரதிபலித்த இந்தக் கவிதையைக் கேட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எழுந்துநின்று ஆரவாரத்தோடு கை தட்டினர்!


கவிதை, கட்டுரை, சிறுகதை எனத் தமிழின் அனைத்துத் தளங்களிலும் ஆர்வத்தோடு இயங்கிய முத்துக்குமார், திரைப்பட இயக்குநராகவேண்டும் என்று ஆசைகொண்டார். அதன்பொருட்டு இயக்குநர் பாலுமகேந்திராவிடம் சிலகாலம் உதவியாளராய்ப் பணியாற்றினார். திரைப்பட மெட்டுக்குப் பாட்டெழுதும் வித்தையையும் கவிஞர் அறிவுமதியிடம் கற்றுத்தேர்ந்தார்.


’பட்டாம்பூச்சி விற்பவன்’ என்னும் தலைப்பில் இவர் எழுதிய கவிதைத் தொகுப்பை வாசித்த இயக்குநர் இமயம் பாரதிராஜா மனம்நெகிழ்ந்தார். கவிஞரை ஆரத்தழுவிப் பாராட்டியதோடு, அந்நூலின் வெளியீட்டு விழாவையும் (தன் செலவில்) விமரிசையாய்க் கொண்டாடி மகிழ்ந்தார். அவருடைய அன்புவெள்ளத்தில் முத்துக்குமார் திண்டாடித்தான் போனார்!


திரைப்பட இயக்குநராகும் அவருடைய கனவு கானலாகிப் போனாலும், திரைப்படப் பாடல்கள் எழுதவேண்டும் எனும் அவருடைய ஆசையைக் காலம் (இயக்குநர் சீமானின் ’வீரநடை’ திரைப்படத்தின் மூலம்) கனிய வைத்தது. அதில் இவர் எழுதிய “முத்து முத்தாய்ப் பூத்திருக்கும் முல்லைப்பூவைப் புடிச்சிருக்கு” பாடல் அதிக உவமைகளையும் உருவகங்களையும் கொண்ட பாடலாய் இன்றுவரை நின்றுநிலவுகின்றது.


திரைப்படங்களுக்குப் பாட்டெழுதவந்த சில ஆண்டுகளிலேயே சிறந்த பாடலாசிரியராக மட்டுமின்றி, ஒவ்வோர் ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான பாடல்களை எழுதக்கூடியவராகவும் முத்துக்குமார் பெயர்பெற்றது பெருஞ்சாதனையே! ஆனால் அச்சாதனையைச் சாத்தியமாக்கவும், நிகழ்த்திய சாதனையைத் தக்கவைத்துக்கொள்ளவும் மெய்வருத்தம் பாராது, கண்துஞ்சாது, அசுரத்தனமாய் உழைக்கவேண்டிய அவலநிலையும் அவருக்கு ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை!


விளைவு? தீந்தமிழ்ச் சொல்லெடுத்து, தித்திக்கும் கவிதைகளைச் சரந்தொடுத்து எத்திக்கும் ஒலிக்கவிட்டிருந்த இளங்கவிஞனை மஞ்சள் காமாலை தாக்கியது. இன்னும் பல புதிய உயரங்களை அவர் தொடுவார் என்று நாம் ஆவலோடு காத்திருக்க…நமக்குக் கிடைத்ததோ பெருந்துயரம்!


”இருப்பதற்காக வருகிறோம்

இல்லாமல் போகிறோம்” என்ற கவிஞர் நகுலனின் வரிகளை மெய்ப்பித்திருக்கிறது அவருடைய அகால மரணம்!


வயோதிகத்தின் எல்லையில் நின்றுகொண்டு, நித்தமும் நோய்களோடு யுத்தம் செய்துகொண்டு, ”காலன் எப்போது வருவான்…தங்கள் காலம் எப்போது முடியும்?” எனக் காத்திருப்போர் பலரிருக்க, அவர்களையெல்லாம் விடுத்து, அற்புதத் திறமை படைத்த இளைஞனை, பொற்புடைப் பாடல்களால் கவிமழையில் நமை நனைத்த காஞ்சிக் கவிஞனைப் பற்றிச் சென்றிருக்கிறானே கூற்றுவன்! அவனை ’அந்தகன்’ என்று அழைப்பதில் பிழையென்ன?


”…முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு.“ என்று நாலடியார் நவில்வது வேதனைதரும் இச்சூழலுக்கு முற்றும் பொருந்துகின்றது.


சற்றே சிந்தித்துப் பார்த்தால், அசாத்தியத் திறமைக்கும் அகால மரணத்திற்கும் ஏதோ அத்யந்தத் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகின்றது. கீட்ஸ், ஷெல்லி, பாரதி, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் என்று அகால மரணத்தைச் சந்தித்த இளங்கவிஞர்களின் வரிசை இதனை உறுதிசெய்கின்றது. அந்த வரிசையில் நா. முத்துக்குமாரும் இணைந்தது நம் தவக்குறைவே!


வார்த்தைகளில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் எளிமையைப் போற்றியவர் நா.முத்துக்குமார். ஈத்துவக்கும் இன்பத்தைத் தன் கைகோத்து நடந்த பிஞ்சுமகனுக்கும் போதித்த அபூர்வக் கவிஞர் இவர்.


திரைப்பட வரலாற்றில், காலத்தைக் கடந்துநிற்கும் பாடலாசிரியர்கள் வரிசையில் நா. முத்துக்குமாரின் பெயரும் நிச்சயம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும்!


-மேகலா இராமமூர்த்தி

by Swathi   on 22 Aug 2016  0 Comments
Tags: Na Muthukumar   நா. முத்துகுமார்                 
 தொடர்புடையவை-Related Articles
ஓர் அபூர்வக் கவிஞனின் அகால மரணம்! ஓர் அபூர்வக் கவிஞனின் அகால மரணம்!
நா. முத்துகுமார் – மறைந்தும் ஒளிவீசும் சூரியன் நா. முத்துகுமார் – மறைந்தும் ஒளிவீசும் சூரியன்
2013 ல் தமிழ் சினிமாவில் அதிக பாடல் எழுதியவர் நா.முத்துக்குமார் !! 2013 ல் தமிழ் சினிமாவில் அதிக பாடல் எழுதியவர் நா.முத்துக்குமார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.