LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- திலீப்குமார்

அக்ரகாரத்தில் பூனை

”இந்த கிழட்டுமுண்டைக்கு ஒரு சாவு வர மாட்டேன் என்கிறது. இதோடு இது ஏழாவது தடவை!” பப்லிப் பாட்டி அசூயையுடன், தாழ்ந்த குரலில் குஜராத்தியில் கறுவினாள்.

சமையற்கட்டிலிருந்து வெளியே வந்த மதூரி பாய் பார்த்ததும் புரிந்துகொண்டாள். “குடித்துவிட்டுப் போய்விட்டதா, மறுபடியும்!” “பீடை, ஒரு நிமிஷம் இந்த வீட்டில் இப்படி அப்படி நகர முடிகிறதா”… என்ற பப்லிப் பாட்டி சட்டென்று, “அது சரி மகாராணி, திறந்த வீட்டில் பூனை நுழைந்ததுகூடத் தெரியாமல் அப்படி என்ன செய்துகொண்டிருந்தீர்களோ!” என்று தன் மருமகளைப் பார்த்து இலக்கணச் சுத்தமாக வக்கணை செய்தாள்.

கிழவிக்கு இதற்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று மதூரிக்குத் தெரியும். ‘நான் பூஜை முடிப்பதற்குள் கடலை மாவு பிசைந்து முருங்கைக்காய் கறியைச் செய்து முடித்துவிடு’ என்று அவள்தான் சற்றுமுன் கூறியிருந்தாள். கடலை மாவு ‘கமகம’ என்று வறுபட்ட வாசனையைக் கிழவி மோப்பம் பிடிக்காமலா இருந்திருப்பாள். சமையலறைக் கதவருகே, தன் முக்காட்டை நழுவவிடாமல் இரு விரல்களாள் பிடித்தபடி, வழக்கமான கோணத்தில் வழக்கம்போல் அமைதியாக நின்றாள் மதூரி.

“சரி, சரி என்ன பார்க்கிறாய், போ, இன்னொரு கிண்ணம் பால் எடுத்துக்கொண்டு வா!… இன்று நட்டூ வந்ததும் இந்தப் பூனைச் சனியனுக்கு ஏதாவது வழிசெய்ய வேண்டும்” என்றாள் பப்லிப் பாட்டி.

பப்லிப் பாட்டி வீட்டில் சலசலப்புக் கேட்டதும், அந்த முதல் மாடி முற்றத்தில் ஜட்டி அலசிக்கொண்டிருந்த கோபால் பாயும், பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்த சாரதா பெஹ்னும் வந்து எட்டிப்பார்த்தார்கள். “கெட்டிக்காரப் பூனைதான்! நான் பார்க்கப்பார்க்க நொடியில் மாயமாக மறைந்துவிட்டதே” என்று தாடையில் கைவைத்து நாசூக்காய் அங்கலாய்த்தாள் சாரதா பெஹ்ன். பப்லிப் பாட்டி பதில் சொல்லாமல் பூஜை அலமாரிப் பக்கம் திரும்பினாள்.

தங்கசாலைத் தெருவில் ஏகாம்பரேஸ்வர் கோயிலுக்குப் பின்புறம் தெப்பக்குளத்தைச் சுற்றி ஏகாம்பரேஸ்வர் அக்ரஹாரம் ‘ப’ வடிவில் இருந்தது. பொதுவாக ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகளே நுழைவதில்லை. கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளில் அக்ரஹாரத்தில் ஒரு பூனைகூட நுழைந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அக்ரஹாரவாசிகளும் பூனைகளை அவ்வப்போது தங்கசாலைத் தெருவிலோ கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலோ அல்லது  கொண்டித்தோப்பிலோதான் பார்க்க நேரிட்டது. ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகள் நுழையாததற்குச் சூழலியல் காரணங்கள் என்பதைவிடவும் தத்துவார்த்தக் காரணங்கள்தான் ஏதாவது இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அக்ரஹாரவாசிகளில் பெரும்பாலோர் புஷ்டி மார்க்கி வைஷ்ணவர்கள். தென்கலை வைஷ்ணவர்களுக்குப் பூனைகளின்மீது இருக்கக்கூடிய அபிமானம் புஷ்டி மார்க்கிகளிடம் இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. ‘பாலகிருஷ்ண’ பிரதானமான புஷ்டி பார்க்கத்திலும் பஷு பட்சிகளிடம் அன்பு என்ற உப கோட்பாடு இருப்பது வாஸ்தவம்தான். ஆனாலும், பாலித்தின் பைகளையும், சினிமாப் போஸ்டர்களையும் தின்று, கண்ட இடத்தில் சாணி போடும் மாடுகளுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். கிருஷ்ண பரமாத்மனே ஒரு மாட்டுக்காரந்தானே! பூனைகளின் உள்ளுணர்வு இந்தப் பேருண்மையைச் செம்மையாக விளக்கிக்கொண்டிருந்தது போலும் — அஃதாவது சென்ற ஏப்ரல் மாதம்வரை.

மே மாதம், மேற்கூறிய கிழட்டுப் பெட்டைப் பூனை எதேச்சையாக அக்ரஹாரத்தில் நுழைந்ததை யாரும் எதேச்சையாகக்கூடக் கவனிக்கவில்லை. அக்ரஹாரத்தின் 24 மத்தியவர்க்கக் குஜராத்திக் குடும்பங்கள் வாழும் 25-ஆம் எண் கட்டடத்தில், முதல் மாடியில் 9ஆம் எண் வீட்டின் முன்னறையில் பப்லிப் பாட்டி பூஜைக்குப் பால் எடுத்துவைத்துவிட்டு பாலகிருஷ்ணனுக்காக பீடா தயாரிக்க வெற்றிலையைக் கழுவ உட்கட்டுக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் துல்லியமாகப் பிரசன்னமாகி, தயக்கமின்றி உள்ளே புகுந்து ஒரு முழுக் கிண்ணப்பாலை நக்கித்தீர்த்துவிட்டு எதுவுமே நடக்காததுபோல் அது திரும்பிக்கொண்டிருந்தபோதுதான் முதல்முறையாகக் கண்ணில் பட்டது.

பூனையைப் பார்த்ததும் பப்லிப் பாட்டிக்கு முதலில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. “அரே… அரே… பிலாடி., பிலாடி. மதூ பிலாடி… மதூ பிலாடி.”(பிலாடி - பூனை மதூ - மதூரி) என்று சத்தமாக குஜராத்தியில் உளறினாள். சத்தம் கேட்ட பூனை திரும்பிப் பார்த்துச் சலனமின்றி ஓரிரு கணங்கள் நடுக்கூடத்தில் நின்று, பாட்டியைக் கண்ணுக்கு கண் பார்த்தது. பிறகு அலட்சியமாக நடந்து சென்றது. கதவருகே இருந்த மடிக்கோலைப் பாட்டி சட்டென்று எடுத்துப் பூனையை நோக்கித் தாறுமாறாக எறிந்தாள். பூனை லாவகமாக நகர்ந்து மறைந்தது.

குழாயடியிலிருந்து ஈரக்கையுடன் ஓடிவந்த மதூரிக்குத் தன் மாமியாரின் கலவரமடைந்த முகத்தைப் பார்த்ததும் முதலில் சிரிப்புதான் வந்தது. ஆனால் சிரிக்கவில்லை அவள். பப்லிப் பாட்டி உதட்டை மடித்து ஆதங்கத்துடன் நின்று கொண்டிருந்தாள். “போனால் போகிறது விடுங்கள் பா, வாயில்லா ஜீவன்” என்ற மதூரியை, “ச்சீ வாயை மூடு, மலட்டுக் கழுதை” என்று வன்மத்துடன் இரைந்தாள். சிறுமைப்பட்டு நின்றாள் மதூரி.

பப்லிப் பாட்டிக்கு பாரியான சரீரம். நரைதிட்டான சிறு கொண்டை. நீண்ட பெரிய மூக்கு. மெலிதான எஃகு பிரேம் போட்ட மூக்குக்கண்ணாடி. கழுத்தில் துளசிமாலை.

செக்கச்செவேலென்று பழம்போல் இருப்பாள்.

அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து குளித்து, வெள்ளைப் புடவை அணிந்து, பாழும் நெற்றியோடு, ஐந்து கட்டடம் தள்ளியிருந்த ஹவேலிக்குச் (புஷ்டி மார்க்கிகளின் கோயில்) சென்றால் 10 மணிக்குத்தான் திரும்பிவருவாள். வந்தபின், தன் குடும்ப விக்ரஹங்களுக்கு விஸ்தாரமாகப் பூஜை செய்யத் துவங்குவாள். சமையலைறைக் கதவருகே இருக்கும் கண்ணாடிச்

சட்டமிட்ட ஒரு தேக்கு அலமாரிமுன் உட்கார்ந்துகொள்வாள். அலமாரியைத் திறந்தால் சின்னச்சின்ன விக்ரஹங்கள் ஜரிகைத் துணி அணிவிக்கப்பட்டுக் குட்டிக்குட்டி மெத்தைகள்மேல் உட்கார்ந்திருக்கும். பாட்டி எல்லாவற்றையும் முறையாக வெளியே எடுப்பாள். ஜரிகை உடைகளைக் கழற்றிவிட்டு, விக்ரஹங்களுக்கு ஸ்நானம் செய்விப்பாள். வெல்வெட் துணியால் அவற்றைத் துடைத்து, பிறகு பெரிய பிஸ்கட் டப்பாவிலிந்து புதிய வஸ்திரங்களை எடுத்து நிதானமாக அணிவிப்பாள். பிரதான விக்ரஹமான பாலகிருஷ்ணனுக்குக் கட்டைவிரல் சுற்றளவில் ஒரு ஜரிகைத் தொப்பியும் இருக்கும். குங்குமப்பொட்டு வைத்து முடித்தபின் மீண்டும் அவற்றைக் குட்டிக்குட்டி மெத்தைகள் மேல் உட்காரவைப்பாள். பிறகு, அலமாரிக்குமுன் ஒரு பலகைமேல், ஒரு பெரிய தாம்பாளத்தில் அன்றைய உணவு வகைகள் எல்லாவற்றையு, சிறுசிறு கிண்ணங்களில் வட்டமாக அடுக்கிவைப்பாள். ஒரு கிண்ணத்தில் சின்னச்சின்ன பீடாக்கள்கூட இருக்கும். சற்றுக் கழித்து தீபாராதனை காட்டி, மணி அடித்து, ஜெய ஜெகதீஸ்வர ஹரே மெட்டில் ஒரு பஜனை பாடி அலமாரியை மூடிவிடுவாள். அதற்குப் பிறகுதான் பச்சைத் தண்ணீர்கூடக் குடிப்பாள்.

பப்லிப் பாட்டியை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்திற்க்கு அபார பிரக்யாதி ஏற்பட்டிருந்தது. ஆன்மீக விஷயங்களில் கரைகண்டவள் என்று பெயரெடுத்திருக்கிறாள். அதிலும் குறிப்பாகப் புஷ்டி மார்க்க நியம நிஷ்டைகளில் அவள் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. என்ன பிரச்சினைக்கு என்ன விரதம், என்ன பூஜைக்கு என்ன பலன், சிரார்த்தத்திர்ற்கு, திருமணத்துக்கு, வளைகாப்புக்கு, நவராத்திரிக்கு, நலங்குக்கு என்று எல்லா வைபவ விதிமுறைகளும், பரிகார உப விதிமுறைகளும் அவளுக்கு அத்துபடி. பாகவதத்தை தலைகீழாக ஒப்பிப்பாள். தத்துவ விசாரத்தில்கூட அதன் நுட்பமான எல்லைகள்வரை சென்று வாதிடுவாள். (சில வாரங்களுக்கு முன்பு, புஷ்டி பார்க்கம் குறித்து முனைவர் பட்ட ஆய்வுசெய்துகொண்டிருந்த ஒரு மாணவி பரோடாவிலிருந்து வந்து இவளுடன் பேசிக் தெளிந்துவிட்டுப் போனாள்.) ஒரு விசேஷத்திற்கு அவள் வந்திருக்கிறாள் என்றால் அங்கு மந்திரம் சொல்ல வந்திருக்கும் பிராமணர்கள்கூட உஷாராக இருப்பார்கள்.

பப்லிப் பாட்டி இவ்வளவு அருமை பெருமைகளுடன் திகழ்ந்து கொண்டிருந்தாலும் அவளது மாட்டுபெண்ணான மதூரி அவற்றைப் பிடிவாதமாக ஏற்க மறுத்தாள். மதூரியைப் பொறுத்தவரை “கிழவி லேசுபட்டவள் இல்லை” என்ற எண்ணமே இருந்தது.

என்றாலும், தன் மாமியாரின் பூஜைக்கு இப்படி அடிக்கடி பங்கம் ஏற்படுவது குறித்து அவளுக்கும் வருத்தம்தான். சென்ற ஆறு முறையும் இப்படித்தான் நிகழ்ந்தது. விளக்குத் திரி எடுக்க, பருப்பு சாதம் பிசைய, பழங்கள் நறுக்க, தீப்பெட்டி எடுக்க என்று பப்லிப் பாட்டி உட்கட்டுக்குள் மறைந்த ஓரிடு நிமிடங்களில் சொல்லிவைத்தாற்போல் வந்து கண் இமைக்கும் நேரத்தில் காரியத்தை முடித்துவிட்டுப் போய்விடும் அந்தக் கில்லாடிப் பூனை.

அன்று மாலை, பப்லிப் பாட்டியின் மகன் நட்டூ(என்கிற நட்வர்லால்) அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் அவனிடம் பாட்டி பூனையைப்பற்றிப் புகார்செய்தாள்.

“நட்டூ, நீ என்ன செய்வாயோ ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கிழட்டுப் பீடையை எப்படியாவது ஒழித்துக்கட்டிவிடு.”

நட்டூ பார்ப்பதற்க்குத்தான் போலீஸ்காரன் போல் வாட்டசாட்டமாக இருப்பானே ஒழிய சரியான அசமாந்தம். சத்தம்போட்டு பேசக்கூடப் பயப்படுவான். செம்புதாள் தெருவில் ஒரு மார்வாடி வியாபாரிக்கு 2-ஆம் நம்பர் கணக்கு எழுதுகிறான். நட்டூ 1-ஆம் நம்பரில் ஆயிரமும் 2ம் நம்பரில் ஆயிரமும் சம்பளம் வாங்குகிறான். வம்புதும்பு, பீடி சிகரெட், சினிமா-டிராமா எதுவும் கிடையாது. அவன் உண்டு. அவன் வேலையுண்டு. அலுவலகம் விட்டு வீடு திரும்பியதும் உடைமாற்றி, டீ சாப்பிட்டுவிட்டு ஹவேலிக்குப் போய்விடுவான். இரவு எட்டு மணிக்கு மேல்தான் திரும்புவான். சனிக்கிழமை மட்டும் இரவு பத்து மணிக்கு பஜனைக்குப் போவான். குஜராத்தி வருஷப்பிறப்பு அன்று மதூரியை சினிமாவுக்கோ பீச்சுக்கோ அழைத்துச்செல்வான்.

“என்ன பா சொல்கிறாய்! பூனையைக் கொல்வது பாவமில்மையா?” என்று பதறினான் நட்டூ.

”அட உப்பில்லாதவனே, பூனையைக் கொல்லவா சொன்னேன். அந்தக் கழுதையை எங்காவது விரட்டிவிட்டு வா என்கிறேன். பூனையைக் கொல்வது பாவம் என்று எனக்குத் தெரியாதா…. பேசிகிறான் பார்.”

”எங்கேயென்று போய் விரட்டுவது, பா. விரட்டுவதற்கு முதலில் அது கண்ணில் பட்டால்தானே. எல்லாம் உன் அஜாக்கிரதையினால்தான். பூஜை பண்ணுகிறேன் என்று, ஊருக்கு முன்னால் பால் கிண்ணத்தை எடுத்து வந்து நடுக்கூடத்தில் வைத்துவிட வேண்டியது. அப்புறம், ஹாய் ஹாய் என்று அலற வேண்டியது.” (ஹாய்=அய்யோ)

“போதும் போதும்”, ரொம்ப சமர்த்தாகாதே. பூஜை எப்படிப் பண்ணுவது என்று இனி நான் உன்னிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது.”

“சரி சரி, விடு. சூரியிடம் சொல்கிறேன். அவந்தான் இந்த மாதிரி வேலைக்கு லாய்க்கு.”

“உன் மூளை பிசகித்தான்விட்டது! போயும் போயும் அந்த துஷ்டப் பயலா. அந்த அக்கிரமி பூனையை நிஜமாகவே கொன்றாலும் கொன்ருபோட்டுவிடுவான். ஜாக்கிரதை.”

“நீ அதைப்பற்றிக் கவலைப்படாதே. எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான் நட்டூ தீர்மானமாக.

சூரி - பப்லிப் பாட்டியின் தம்பி ரஞ்சித்சிங்கின் மூத்த மகன் சுரேந்திரன். வேலைவெட்டி இல்லாதவன். ‘பளிச்’சென்று உடைகள் அணிந்து நண்பர்கள் புடைசூழ, கல்கத்தா பீடாவை ஓயாமல் குதப்பிக்கொண்டு உற்சாகமாகத் திரிந்துகொண்டிருப்பான். குஜராத்தி மற்றும் தமிழ் மொழிகளின் எல்லாம் கெட்டவார்த்தைகளையும் சரளமாகப் பயன்படுத்துவான். கடவுளையும் பணக்காரர்களையும் அவனுக்குப் பிடிக்காது. ஆனால் அன்புக்குக் கட்டுப்பட்டவன். அக்ரஹாரத்தில் எல்லாத் தப்பு-தண்டாவுக்கும் அவன்தான் கட்டைப் பஞ்சாயத்து. ‘நீதிக்குப் பின்தான் சாதி’ என்ற அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு, அக்ரஹாரத்திற்க்குப் பூ விற்க வந்த பெண்ணிடம் வம்புசெய்த ஒரு குஜராத்தி நடுவயதுக்காரர்களின் சைக்கிளைச் சேறும் பாசியும் படிந்த கோயில் தெப்பக்குளத்திற்குள் தூக்கிக் கடாசிவிட்டான்.

சமையலறையில் சப்பாத்திக்கு மாவு பிசைந்துகொண்டிருந்த மதூரிக்குத் தாயும் மகனும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. அவள் அந்த வெள்ளைப் பூனையை நினைத்துக்கொண்டாள்.

அந்த வயதான பூனை முகம் தளர்ந்து, தோல் சுருங்கி, ரோமம் உதிர்ந்து சாகக் காத்திருக்கும் பாவனையில் பரிதவித்துக் காணப்படும். அது உற்றுப்பார்த்தபோது திடீரென்று ஏதாவது பேசத்துவங்கிவிடும் என்றுகூடத் தோன்றும் அவளுக்கு. பப்லிப் பாட்டி வீட்டில் இல்லாத சமயங்களில் அது முன்கதவருகே வந்து களைத்துப்போன குரலில் ‘மியாவ்’ என்று வாயைப் பிளந்து காட்டும். தவறாமல் ஒவ்வொரு முறையும் அதற்குப் பால் கொடுத்திருக்கிறாள் மதூரி. ஒரு வகையில் தனக்கும் அந்த பூனைக்கும் அதிக வித்தியாசமில்லை என்று நினைத்தாள். அந்தப் பூனைபோலவே தானும் பதுங்கிப் பதுங்கி வாழ்வதாகப் பட்டது. அந்தப் பூனைக்குக் குட்டிகள் இருக்குமா? நிச்சயம், அதன் பருவத்தில் அது ஓரிரு குட்டிகளையாவது ஈன்றிருக்கும்.

அல்லது ஒருவேளை அதுவும் தன்னைப்போல் மலடுதானா. அதன் நிராதரவான சின்ன வாழ்க்கையின் சின்ன சாகஸங்களைப்போல்தான் தன் வாழ்க்கையிலும் என்று நினைத்தாள் மதூரி.

பூனைக்கு ஒரு கிண்ணம் பால் என்பது தனக்கு ஒரு புடவை அல்லது கடற்கரையில் ஒரு மாலை அல்லது ஒரு இந்திப் படம். அந்த பூனையைப் போலவே தானும் ஒரு நாள் முதிர்ந்து சிதைந்துவிடுவோம் என்று தோன்றியது. அந்த பூனையைப்போலவே தன்னையும் ஒரு நாள் தனிமை வாட்டும். அன்புக்கான சந்தர்ப்பம் வயோதிகத்தில் நிச்சயம் இருக்காது.

செலுத்துவதற்காக மண்டியா கிடக்கிறது அன்பு. அப்படியானால் யாருடைய இதயத்தில். பப்லிப் பாட்டியின் இதயத்திலா. தன் கணவன் நட்டூவின் இதயத்திலா. எங்கே… எங்கே பதுங்கிக் கிடக்கிறது அன்பு என்ற அபத்தம். அந்த கிழட்டுப் பூனையின் பழுப்பு நிறக் கண்களிலா?

பிசைந்த சப்பாத்தி மாவைத் திரட்டித் தட்டில் ஓங்கி அறைந்தாள் மதூரி.

நட்டூவுக்குப் பூனை விஷயம் பெரியதாகப் படவில்லை. அவன் அதை உடனே மறந்துவிட்டான். ஹவேலியிலிருந்து திரும்பும்போது சூரியைப் பார்த்ததும்தான் ஞாபகம் வந்தது.

”மனே கயி தீத்துந்தே நட்டூ பாய்! சம்ஜோ தமாரு காம் தய் க்யூந்.”(என்னிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா, நட்டூ அண்ணா. உங்கள் காரியம் ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள்.) சூரி உற்சாகமாகக் கூறினான். “நீங்கள் சொன்னால் அந்தப் பூனையை அக்ரஹாரத்தைவிட்டு என்ன, அமெரிக்காவிற்கேகூட ‘பாக்’ செய்யமாட்டேனா என்ன?”

நட்டூ கலவரத்துடன், “அதெல்லாம் வேண்டாம். 25-ஆம் நம்பர் பக்கம் வராமல் செய்துவிடு. அது போதும்” என்றான்.

“டன், நட்டு அண்ணா டன்” என்று ஆங்கிலத்தில் உறுதி அளித்தான் சூரி.

மறுநாள் காலை பாட்டியின் மாப்பிள்ளை ஹன்ஸ்ராஜ் வேலை விஷயமாகக் கொச்சியிலிருந்து வந்து இறங்கினார். அவர் எப்போதும் இப்படித்தான். சொல்லாமல்கொள்ளாமல் திடுதிப்பென்றுதான் வருவார்.

பப்லிப் பாட்டி தன் மாப்பிள்ளையை ரொம்பவும் உயர்வாகத்தான் மதித்தாள். அவரிடம் அவளுக்குப் பிடிக்காத விஷயம் அவர் பொடிப் போடுவார் என்பதுதான். ஹன்ஸ்ராஜூக்கு முப்பத்தெட்டு வயதுதான். பாகவதர் கிராப்போடு முகத்தை மறைக்கும் அடர்ந்த தாடி மீசையுடன் பேண்ட் போட்ட சாமியார்போல் இருந்தார். கல்யாணத்திற்குப் பிறகுதான் இப்படி ஆகிவிட்டார் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள்.

பப்லிப் பாட்டியின் மகள் நிம்மு, கல்யாணத்திற்கு முன் சாதாரணமாக இருந்தவள், கல்யாணம் ஆனவுடன் திடீரென்று உடல் பருக்க அரம்பித்துவிட்டாள். முதலில் ஏதோ கல்யாணமான சந்தோஷத்தில் தான் உடல் பருக்கிறது என்று நினைத்தார்கள். பிறகு, கொஞ்சம்கொஞ்சமாக அவ்ள் ரொம்பவும் குண்டாகிப்போனபோதுதான் அது எதோ வியாதி என்று தெரிந்தது.

ஹன்ஸ்ராஜுக்குப் பூர்வீகச் சொத்தும் இருந்ததோடு அவரும் நிறையச் சம்பாதித்தார். தன் மனைவிக்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தார். பயன் இல்லை. நிம்மு முப்பது வயதில் அசாத்திய குண்டாகிவிட்டாள். ஜாக்கட் தைக்க 2 1/4 மீட்டர் துணி தேவைப்பட்டது. ஆட்டோவில் அவள் ஒருத்திதான் உட்கார முடியும். பத்து அடி நடப்பதற்குள் மூச்சுவாங்கும்.

வீட்டில் கூட அவள் உட்கார்ந்தோ தவழ்ந்தோதான் காரியங்களைச் செய்வாள். அவளது  உடல்வாகிற்கு அனுகூலமான வகையில் சமையல்கட்டையே மாற்று அமைத்திருந்தார்.

ஹன்ஸ்ராஜ். நிம்மு தன் பருமனைபற்றி அதிகம் கவலைப்படமாட்டாள். சிரிக்கச் சிரிக்க எல்லோரிடமும் அன்பு பாராட்டுவாள். அவளுடன் பத்து நிமிடம் பழக நேர்பவர்கள்கூட நெகிழ்ந்து துடித்துவிடுவார்கள். விருந்தினர்கள் வரும்போது, சமையலைறைக்குள் ஒரு சிறு குழந்தையைப்போல் தவழ்ந்து தவழ்ந்து காரியங்கள் செய்து உபசரிப்பாள். அதிகம்போனால் அவள் இன்னும் பத்து ஆண்டுகள்தான் உயிர்வாழ்வாள் என்று டாக்டர்கள் கூறிவிட்டார்கள். “நான் செத்தால் என்னைத் தூக்குவதற்குப் பதினாறு பேர் வரவேண்டும் என்று சொல்லி ‘கெக்கெ கெக்கெ’ என்று சத்தமாக சிரிப்பாள் நிம்மு. ஹன்ஸ்ராஜூக்கு தன் நிம்முமீது உயிர்.

ஹன்ஸ்ராஜ் தங்கியிருந்த ஒரு வாரமும் பூனை பப்லிப் பாட்டி வீட்டுப்பக்கம் வரவில்லை. மாப்பிள்ளைக்கு உபசரணை செய்யும் மும்மரத்தில் பாட்டிகூட அதை மறந்துவிட்டிருந்தாள்.

ஹன்ஸ்ராஜ் ஊருக்குக் கிளம்பும்போது நிம்முக்குப் பிடித்த பட்சணங்களை ஒரு பெரிய டப்பாவில் போட்டுக் கொடுத்தாள்.

“இந்தக் தீபாவளியிலிக்காவது நிம்முவை அழைத்துவர முடியுமா என்று பாருங்கள்,” என்றாள்.

“அவள் நிலைமைதான் உங்களுக்குத் தெரியுமே. அவள் வருவதென்றால் வேன் வைத்துத்தான் அழைத்துவர வேண்டும். அதற்கு நீங்களே பேசாமல் கொச்சிக்கு வந்து ஒரு வாரம் தங்கிவிட்டுப் போங்களேன். உங்களுக்கும் மாறுதலாக இருக்கும்.”

”என்ன மாறுதல் போங்கள். நீங்கள் சொன்னால் ஆகிவிட்டதா? நான் கிளம்பிவிட்டால் வீட்டை யார் பார்த்துக்கொள்வார்கள்? இவளுக்கு துப்பிக் கிடையாது. கவர்னர் பட்வாரிக்குக் கூட நேரம் கிடைத்துவிடும். எனக்கு எங்கே?” என்று மருகினாள் பாட்டி.

வாசல் பக்கம் நட்டூவைப் பார்த்ததும், “சரி நீங்கள் கிளம்புங்கள். நட்டூ ரிக்‌ஷாக்கூடக் கூட்டிவந்துவிட்டான்.”

வாசல்வரை வந்து வழியனுப்பிய பாட்டி, தன் மகளை நினைத்து, அந்த அழுகையை அடக்கிக்கொண்டாள். “போய்வருகிறேன் சகோதரி” என்று மதூரியைப் பார்த்துச் சொல்லிவிட்டுக்

கிளம்பினார் ஹன்ஸ்ராஜ்.

பத்து நாட்கள் கழித்து தீடீரென்று ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 25-ஆம் எண் கட்டடத்திற்குச் சூரி வந்தான் அந்த கிழட்டுப் பூனையுடன். பப்லிப் பாட்டு வீட்டுக் கதவருகே வந்ததும் குழந்தைகளும் பெரியவர்களும் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள். சூரியின் மடக்கிய இடது கைக்குள், அவன் மார்பில் தலைசாய்ந்து ஒரு குழந்தையைப்போல் ஒடுங்கிக்கொண்டிருந்தது பூனை.

”என்ன ஜாலம்டா இது! திருட்டுச் சனியன் உன்னிடம் இப்படிக் குழைகிறதே” என்று வியந்தாள் பப்லிப் பாட்டி.

“அதுதான் சூரி! தெரிந்துகொள்ளுங்கள். இந்தப் பத்து நாட்களில் ஐந்து லிட்டர் பாலையும் எட்டு டபுள் ஆம்லெட்டுகளையும் விழுங்கியிருக்கிறது இது. பூனையை வசியம்செய்வது என்றால் சும்மாவா! கொண்டுபோய் விடுவதற்குமுன் உங்களிடம் காண்பித்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். சொல்லுங்கள் அத்தை, எங்கே கொண்டுபோய் விடட்டும்…. திருவொற்றியூரிலா திருவான்மியூரிலா?”

சூரி தன் வலது கையால் அதன் முதுகைத் தடவிக் கொடுக்கக் கொடுக்க, பூனை புதுப்பெண்போல் கூச்சத்துடன் நெளிந்து நெளிந்து காட்டியது.

பூனையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த பப்லிப் பாட்டி, ஏதோ தீர்மானித்தவள்போல், “டேய் சூரி, போய்விடாதே, இதோ வருகிறேன்” என்று உள்ளே சென்றாள். தன் மாப்பிள்ளை மறந்துவிட்டுச் சென்ற பொடி டப்பியைத் தேடினாள்.

அவசரமாகத் திரும்பி வாசலுக்கு வந்தாள். ரகசிய பாவத்துடன் கையசைத்துச் சூரியை அருகே வரச்சொன்னாள். பின் தாழ்ந்த குரலில் பூனையைத் தன்னருகே கொண்டுவரும்படி சொன்னாள். சூரி பூனையின் வயிற்றைப் பிடித்தபடி அதை பாட்டிக்குமுன் நீட்டினான். பாட்டி, சட்டென்று இடுப்பில் வைத்திருந்த மூடிய கையைப் பூனையின் முகத்தருகே கொண்டுவந்து, அதேநொடியில் உள்ளங்கையைத் திறந்து அதிலிருந்த மூக்குப்பொடி முழுவதையும் பூனையின் மூக்கில் வைத்து அழுத்தித் தேய்த்துவிட்டாள்.

மறுகணம், மின்சாரம் தாக்கியதுபோல் பூனை சூரியின் கைகளிலிருந்து எகிறி மல்லாக்கக் கீழே விழுந்தது. அதற்குப் பொறி கலங்கியிருக்க வேண்டும். பூனை எழுந்து நிற்க முனைந்ததும் மறுபடியும் எம்பித் தாறுமாறாக விழுந்தது. முற்றத்தின் குழாயடி, சாக்கடை, கழிவறைக் கதவு என்று மாறி மாறி மோதி விழுந்தது. அது எழுப்பிய வினோதமான குரல் பயங்கரமாக இருந்தது. ஒவ்வொரு முறையுமது சமாளித்து எழுந்து நடக்க யத்தனித்தபோது கால்கள் குழைந்து விழுந்தன. தன் சிறிய தலையை இப்படியும் அப்படியுமாகத் திருப்பிப் பரிதாபமாகத் தும்மித்தும்மி விழிந்தது.

பப்லிப் பாட்டி கையை உதறினாள். பூனைக்குப்போக, எஞ்சியிருந்த மூக்குப்பொடி காற்றில் பறக்க, குழுமி இருந்தவர்கள் பலரும், சூரி உட்படத் தும்ம ஆரம்பித்தார்கள். தள்ளி நின்றுகொண்டிருந்த சில ஆண்களும் சிறுவர்களும் பூனை தும்மி விழுவதைப் பார்த்துக் குலுங்கிக்குலுங்கிச் சிரித்தார்கள். பூனை அந்த முதல் மாடி விளிம்பின் ஒற்றைக்கல் சுவரில் ஏறி, மீண்டும் தும்மி, சத்தத்துடன் கீழ்த்தளத்தில் விழுந்தது. பிறகு மெல்ல எழுந்து கட்டடத்தை விட்டு ஓடியது.

சிரிந்துக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து மிக மிக ஆபாசமான ஒரு வசையைக் கத்திவிட்டுச் சூரி பூனையைத் தொடர்ந்து கீழே ஓடினான்.

திடீரென்று அங்கு ஒரு நிசப்தம் படர்ந்தது. ஒவ்வொருவராக எல்லோரும் கலைய ஆரம்பித்தார்கள். பாட்டி, வீட்டின் உட்புறம் திரும்பியதும், நடுக்கூடத்தில் மதூரி நின்றுக்கொண்டிருந்தாள். பாட்டி சட்டென்று தலைகுனிந்து முன்னே நகர்ந்து அவளைக் கடந்தாள்.

அன்று மாலை பாட்டியைப் பார்க்க யாரோ வந்தார்கள். பப்லிப் பாட்டி ஆரம்பித்தாள் : “புஷ்டி மார்க்கம் என்ன சொல்கிறதென்றால்……..”

by Swathi   on 29 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.