LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- வைக்கம் முஹம்மது பஷீர்

ஐசுக்குட்டி

ஐசுக்குட்டி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். டாக்டர் வராமல் தான் குழந்தை பெற முடியாது என்று பிடிவாதம் பிடித்தாள். வேதனை தாங்க முடியாமல் உரத்த குரலில் அவள் கூக்குர லிட்டாள்.

""டாக்டரை சீக்கிரம் கொண்டு வாங்க...''

""மகளே...'' -பிரசவம் பார்க்கும் பெண், ஐசுக்குட்டியின் வீங்கிப் போயிருக்கும் வயிற்றைத் தடவியவாறே ஆறுதலான குரலில் சொன் னாள்: ""கொஞ்சம் திரும்பிப் படுத்து முக்கு... குழந்தை இப்பவே வெளியே வந்திடும்!''

""இல்ல... மாட்டேன்!'' -ஐசுக்குட்டி வெறித்த கண்களுடன் உறுதியான குரலில் சொன்னாள்: ""நான் சாகப் போறேன்...''உரத்த குரலில் இதைச் சொன்னாள் ஐசுக்குட்டி. கிழக்குப் பக்கத்தில் வராந்தாவில் உட்கார்ந்திருந்த பெண்களும், மேற்குப் பக்கத்தில் முற்றத்திலும் மற்ற இடங்களிலும் கூடியிருந்த ஆண்களும், கேட்கத்தக்க விதத்தில், டாக்டரை உடனே கொண்டு வரவில்லையென் றால், தான் கட்டாயம் இறந்துவிடப் போவதாக ஐசுக்குட்டி கதறி அழுது சொன்ன விஷயம் எல்லாருக்கும் தெரிந்த ஒரு பொதுச் செய்தி ஆகிவிட்டது. அவள் இறக்க நேர்ந்தால், அதற்குக் காரணமாக இருப்பவர்கள் அவளின் கணவனும், அவனின் வயதான தாயும்தான். எப்படி இருந்தாலும், அவர்கள் டாக்டரைக் கொண்டு வந்தே தீருவார்கள். டாக்டரைக் கொண்டு வருவதாக இருந்தால், குறைந்தது அவருக்கு அறுபதிலிருந்து நூறு ரூபாய் வரை செலவழிக்க வேண்டியது வரும். டாக்டரே வரவில்லையென்றால்கூட, ஐசுக்குட்டி குழந்தை பெற முடியும். ஆனால், டாக்டர் வந்து பிரசவம் ஆவது என்பது ஒரு கௌரவமான விஷயமாயிற்றே!

சுற்றியிருக்கும் பல பணக்காரர்களின் வீடுகளிலும் பிரசவம் நடப்பதாக இருந்தால், காரில் டாக்டரை அழைத்து வருகிறார்கள் அல்லவா? ஐசுக்குட்டியின் கணவன் கையில் தற்போது பணம் இல்லையென்றாலும், அறுபதோ நூறோ ரூபாய்களை வேறு எங்காவது இருந்து அவன் தயார் பண்ணட்டும். யாரிடமாவது கடனாகக் கேட்டு வாங்க வேண்டியதுதானே? இல்லாவிட்டால் எதையாவது விற்று அந்தப் பணத்தை உண்டாக்க வேண்டியதுதான். கொஞ்சநாட்களுக்கு முன்னால் ஐசுக்குட்டியின் கணவனின் தம்பி மனைவி ஆஸ்யாம்மா பிரசவமானபோது, டாக்டரை எப்படிக் கொண்டு வந்தார் கள்? அதேபோல எதையாவது விற்று, பணம் தயார் பண்ணட்டும். ஆஸ்யாம்மாவுக்காக அவளின் கணவன் என்னவெல்லாம் செய்கிறான்? சொல்லப்போனால்- பரம்பரை ரீதியாகப் பார்த்தால், ஆஸ்யாம்மா அப்படி யொன்றும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல. தாழ்ந்த நிலையில் இருந்த ஒரு குடும்பத்திலிருந்து வந்தவள் அவள். அப்படிப்பட்ட நிலையில் உள்ளவள் அல்ல ஐசுக்குட்டி. பெண்கள் பலர் ஒன்று கூடிப் பேசுகிறபோது தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேச வேண்டும் என்பதே ஐசுக்குட்டியின் ஒரே விருப்பம்.

"ஓ... நான் பிள்ளை பெறுகிறப்போ டாக்டரைக் கொண்டு வந்தாங்க. எண்ணி எண்ணி அவர் கையில் நூறு ரூபா கொடுத்தாங்க. வீட்டோட வாசலுக்கே அவரோட மோட்டார் வந்துச்சு. அதுக்கு தனியா பத்து ரூபா கொடுத்தாங்க. அன்னைக்கு டாக்டர் என்ன பண்ணினார் தெரியுமா? ஒரு குழாயை எடுத்து மேல வச்சு பார்த்தார். அதை அப்படி வச்சா வயித்துல இருக்குற பிள்ளை சிரிக்கிறதைப் பார்க்கலாமாம்...'

இதே விஷயத்தை ஆஸ்யாம்மா எப்போது பார்த்தாலும் கூறுவாள். அவள் அப்படிச் சொன்னதும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பெண்கள் எல்லாரும் அவளை வாயாறப் புகழ்வார்கள். வாழ்த்துவார்கள். இதைக் கேட்கும்போதெல்லாம் ஐசுக்குட்டிக்கு என்னவோபோல் இருக்கும். அதேபோல் தன் பிரசவ சமயத்திலும் ஒரு டாக்டரைக் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்று முதல் பிரசவ நேரத்திலேயே அவள் ஆசைப்பட்டாள். ஆனால் பிரசவம் நடக்கப்போகிற சமயத்தில் அதை அவள் மறந்து விட்டாள். ஆனால் இப்போது அதை மறக்காமல் ஞாபகத்தில் வைத்திருந்தாள். இருந்தாலும், பிரசவம் பார்க்கும் பெண் ஐசுக்குட்டியின் கருத்துக்கு எதிராக இருந்தாள். டாக்டரை வரவழைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை என்பதை அவள் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டாள். ஒரு பெண்ணுக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்பதை விரல்நுனியில் உணர்ந்து தெரிந்து வைத்திருப்பவள் அவள்! இதற்கு முன்பு நூற்றுக்கணக்கான பெண்களுக்குப் பிரசவம் பார்த்தவள் ஆயிற்றே அந்தப் பெண்! அந்தப் பெண் அப்படிச் சொன்னதைப் பார்த்து ஐசுக்குட்டிக்குக் கோபம் கோபமாக வந்தது. எங்கே அந்தப் பெண் சொல்வது மாதிரியே நடந்துவிடப் போகிறதோ என்று கவலைப்பட்டாள் அவள். ஆஸ்யாம்மாவைவிட தான் எந்தவிதத்தில் தாழ்ந்தவள் என்று மனதிற்குள் குமுறினாள் ஐசுக்குட்டி.

""சீக்கிரம் டாக்டரைக் கொண்டு வர்றீங்களா இல்லியா?'' -பற்களை "நறநற'வென்று கடித்தவாறு கத்தினாள் ஐசுக்குட்டி.

ஐசுக்குட்டியின் வயதான மாமியார் கிழவி அந்த இருட்டு அறைக் குள் ஓடி வந்து மெதுவான குரலில் கெஞ்சினாள்.

""ஐசுக்குட்டி... மகளே... நீ இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறது நல்லதா? சொல்லு... அவன் கையில் காசே கிடையாது.... என் தங்கப்பொண்ணாச்சே நீ! பேசாம குழந்தையைப் பெறுடா...''

""என் தங்க அத்தையே!'' -ஐசுக்குட்டி அழுதாள்: ""கடவுளைக் கும்பிடுங்க. எல்லாம் ஒழுங்கா நடக்கும். டாக்டரை உடனடியா கொண்டு வாங்க.''

""கடவுளே... நான் இப்ப என்ன செய்யட்டும்?'' -ஐசுக்குட்டியின் மாமியார் கிழவி கண்ணீர் விட்டாள்.

"ஹு....ஹு...ஹு...' என்று உதட்டைக் குவித்து என் னவோ சொல்லியவாறு ஐசுக்குட்டி தலையணையில் சாய்ந்து உட்கார்ந்தாள். பிரசவம் பார்க்கும் பெண் விளக்கின் திரியை இலேசாக நீட்டி விட்டவாறு சொன் னாள்: ""மகளே, பேசாம படு... அதாவே குழந்தை பிறந் திடும்!''

இதைக் கேட்டதும் ஐசுக்குட்டிக்குத் தாங்க முடியாத அளவிற்குக் கோபம் வந்தது. அந்தப் பெண்ணையே அவள் கொன்றுவிடுவதுபோல் பார்த்தாள். பிறகு, என்ன நினைத்தாளோ, உரத்த குரலில் கூப்பாடு போட்டாள். மாமியார் கிழவி மறுபடியும் மறுபடியும் அவளிடம் வந்து கெஞ்சினாள். ஆனால், ஐசுக்குட்டி அவள் சொல்வதையெல்லாம் காது கொடுத்துக் கேட்பதாய் இல்லை. தீர்க்கமான குரலில் அவள் சொன்னாள்:

""அத்தை... உங்களுக்குத் தெரியும்ல பிரசவத்தோட வலி எப்படி இருக்கும்னு? கடவுளே... டாக்டரை சீக்கிரம் கொண்டு வாங்க...''

மாமியார் கிழவி உண்மையிலேயே ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தாள். அவள் மொத்தம் ஒன்பது குழந்தைகளைப் பெற்றவள். ஒரு பிரசவத்திற்குக்கூட டாக்டர் வந்தது கிடையாது. இருந்தாலும், ஐசுக்குட்டி இப்படியொரு பிடிவாதம் பிடிக்கிறாள்! கிழவி ஒரு வார்த்தைகூட பதில் பேசாமல் கீழே இறங்கிப் போனாள். இந்தக் காலப் பெண்களின் பிடிவாதப் போக்கைப் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். அவளுக்கே இந்த மாதிரியான சொந்த அனுபவங்கள் இல்லாமலா இருக்கும்? சாதாரண காரியங்களுக்குக்கூட ஆண்களைத் தொல்லைப்படுத்துவதும், அவர்களைத் தேவையில்லாமல் அலையோ அலை என்று அலைய வைப்பதும், கஷ்டங்களை அனுபவிக்க வைப்பதும், பெண் இனத் திற்கே உரிய தனித்துவ குணமல்லவா? "ஆயிரம் இருந்தாலும் எனக் காகத்தான் அவர் இதைச் செய்தார்' என்றொரு தற்பெருமை மட்டுமே அதில் இருக்கும். இப்படிப்பட்ட தற்பெருமை அடித்துக் கொள்வதில் பெண்களுக்கு நிகர் பெண்களேதான்! அவர்கள் அடிக்கிற மேளத்திற்குத் தகுந்த மாதிரி ஆடிக் கொண்டிருப்பவர்கள்தானே ஆண்கள்! இந்த விஷயங்கள் எல்லாம் மாமியார் கிழவிக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் ஐசுக்குட்டியின் பிரசவ காரியம் என்பதால் இது பற்றியெல்லாம் பெரிதாக எண்ணிக் கொண்டிராமல், இப்போதுள்ள நிலைமையின் தீவிரத்தை மட்டுமே அவள் சிந்தித்துக் கொண்டிருந் தாள்.

டாக்டரைக் கொண்டு வராத ஒரே காரணத்தால், ஐசுக்குட்டி இறந்துபோய்விட்டால்...? அதற்குப் பிறகு மற்றவர்கள் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்? உண்மையிலேயே யோசிக்க வேண்டிய விஷயம்தான். ஆனால் டாக்டருக்குக் கொடுக்க பணம் கையில் இருக்க வேண்டுமே! அஸன்குஞ்னு கையில் பணமே இல்லை. காலை விடிந்ததிலிருந்து இரவு நேரம் வரை ஒரே இடத்தில் அமர்ந்து பீடி சுற்றுவது அவன் வேலை. அவ்வளவு நேரம் வேலை பார்த்தும், அவனுக் குக் கிடைக்கிற பணத்தை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றுவதே மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இருந்தாலும், கிழவி சென்று மகனிடம் சொன்னாள். அஸன்குஞ்னு தாய் சொன்ன விஷயத்தைக் கேட்டு, அசையாமல் சிலை என உட்கார்ந்து விட்டான். பேசாமல் திருமணமே செய்யாமல் இருந்திருக்கலாம் என்று அவன் மனம் அப் போது எண்ணியது. அதை இப்போது நினைத்து என்ன பயன்? அறு பது ரூபாய் எப்படி தயார் பண்ணுவது? யாரிடம் கடனாக வாங்குவது? கிட்டத்தட்ட நூறு ரூபாய் தேவைப்படுமே! முதலாளியிடம் போய்க் கேட்டால் நிச்சயம் அந்த மனிதர் காசு தர மாட்டார். வீட்டையும் நிலத்தையும் பணயமாக எழுதிக் கொடுத்தால், ஒரு வேளை அந்த ஆள் பணம் தரலாம். அதைக் கட்டாயம் செய்யத்தான் வேண்டுமா? அதற்கு இப்போதென்ன அவசியம் வந்துவிட்டது? அப்படியே செய்தாலும், வேலை செய்து கடனை அடைக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. வட்டி மாதா மாதம் கூடிக் கூடி கடைசியில் வீடும் நிலமும் முதலாளிக்குச் சொந்தமாகப் போவதுதான் நடக்கும். அஸன்குஞ்னு என்ன செய்வது என்று தெரியாமல் பிரசவ அறையின் ஜன்னலைத் திறந்து தன்னுடைய முகத்தைக் காட்டினான்.

""இங்கே பாருங்க... நான் செத்துப் போயிருவேன்!'' -அஸன்குஞ்ஞைப் பார்த்து ஐசுக்குட்டி அழுதாள்: ""டாக்டரை சீக்கிரம் அழைச்சிட்டு வாங்க.''

""ஏய்... அதிகமா துள்ளாதேடி நாயே... இதுக்குமேல ஏதாவது பேசினே, உன்னோட உடம்புல இருக்கிற எலும்புகளை எல்லாம் அடிச்சு நொறுக்கிடுவேன். நீ செத்தா செத்துட்டுப் போ. அதனால எனக்கு என்ன? நீ எனக்கு ஒரு புல்லு மாதிரி. நீ போயிட்டா நான் இன் னொருத்தியைக் கட்டிட்டுப் போறேன்'' என்று அஸன்குஞ்னு சொல்லவில்லை. அவன் ஐசுக்குட்டியின் காலில் விழாத குறையாகச் சொன்னான்:

""ஐசுக்குட்டி... என் தங்கம்ல... நான் கட்டாயம் இந்தத் தடவை டாக்டரைக் கொண்டு வர்றேன்!''

இந்தத் தடவையாம் இந்தத் தடவை!

""இந்தத் தடவைன்னா எப்ப கொண்டு வர்றது? இப்பவே கொண்டு வரணும்!'' -நிலாவைப் பிடித்துத் தரச்சொல்லும் சின்னக் குழந்தை மாதிரி பிடிவாதம் பிடித்தாள் ஐசுக்குட்டி. அப்படி அவள் பிடிவாதம் பிடிப்பதற்குக் காரணம் -அந்த அளவிற்குச் செல்லம் அதிகமாகக் கொடுத்து அவளின் வாப்பாவும் உம்மாவும் அவளை அன்புடன் வளர்த்ததே. ஐசுக்குட்டிக்கும் அஸன்குஞ்னுக்கும் திருமணம் நடந்தது கூட அவர்களின் வாப்பாக்களுக்கிடையே இருந்த ஆழமான நட்பை வைத்துத்தான். இந்தத் திருமணத்தை ஐசுக்குட்டியின் உம்மா ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தாள். இப்போதுகூட ஏதாவது பிரச்சினை வந்தால் அந்தத் திருமண பந்தத்தைப் பிரிப்பதற்கு எப்போதும் அவள் தயாராக இருக்கிறாள் என்பதே உண்மை. அஸன்குஞ்னுக்கு இந்த விஷயம் நன்றாகவே தெரியும். இருப்பினும் அவன் வாய் திறப் பதில்லை. காரணம்- அஸன்குஞ்னுவின் குடும்பத்தைவிட ஐசுக்குட்டியின் குடும்பம் வசதியானது. அவர்கள் கொடுத்த வரதட்சணைப் பணத்தைக் கண்டபடி செலவு செய்து ஒன்றுமே இல்லாமல் பண்ணிவிட்டான் அஸன்குஞ்னு. இருந்தாலும், அவன்மீது ஏகப்பட்ட அன் பையும், பாசத்தையும் வைத்திருந்தாள் ஐசுக்குட்டி. அவனை "செல்லமே' என்றுதான் அவள் பாசம் கொட்ட அழைப்பாள். அவள் இறந்துபோகப் போகிறாளா? இப்படி ஒரு விஷயத்தை மனதில் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை அஸன்குஞ்னுவால்.

""முத்தே... என் அருமை ஐசுக்குட்டியே... என் பொன்னான வைரக் கல்லே!'' -இப்படிப் பல வார்த்தைகளைக் கொட்டி அவளைச் சமாதா னப்படுத்திய அஸன்குஞ்னு அடுத்த நிமிடம் வெளியே போனான்.

ஐசுக்குட்டி திரும்பத் திரும்ப டாக்டரைக் கொண்டு வரச்சொல்லி கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள். அவள் பிரசவமாவதைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்த பெண்கள், அவளின் செயலைப் பார்த்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

""இந்தப் பொண்ணு செத்தால்கூட இவங்க டாக்டரைக் கொண்டு வரமாட்டாங்க!''

அதைக் கேட்டவாறு ஐசுக்குட்டியின் உம்மா கொடுங்காற்றைப் போல வேகமாக உள்ளே நுழைந்தாள்.

""மகளே... ஐசுக்குட்டி...!''

""உம்மா... நான் சாகப்போறேன். டாக்டரைக் கொண்டு வாங்க...''

இந்த ஊரே கேட்கிற அளவிற்கு ஐசுக்குட்டியின் தாய் சொன்னாள்:

""மகளே, கவலைப்படாதே. நீ கட்டியிருக்கிற தாலியை அறுத்தாவது டாக்டரை உன்னோட உம்மா கொண்டு வந்திடுவேன். பேசாம நீ படுத்திரு. நாம என்ன பணமும், அந்தஸ்தும் இல்லாதவங்களா என்ன?''

இப்படி சுயதம்பட்டம் அடித்துக் கொண்ட அவள் வெளியே வந்தாள். அஸன்குஞ்னு அங்கு நின்றிருந்தான். அவனை ஒரு பிடி பிடித்தாள் ஐசுக்குட்டியின் உம்மா.

""என் மகள்தான் பிரசவம் பார்க்க டாக்டர் வரணும்ன்றாளே! அவள் சொன்னபடி கொண்டு வராம பேசாம படுக்கப்போட்டுருந்தா எப்படி?''

""அத்தை... அந்தப் பிரசவம் பாக்குற பொம்பள டாக்டரெல்லாம் வேண்டாம்னு சொல்றாங்க. இங்க இருக்குற எல்லாருக்கும் இது தெரியும்.''

""அவ யார் என்னோட மகள் விஷயத்தைத் தீர்மானிக்கிறதுக்கு? உன்னால அதைச் செய்றதுக்கு வக்கு இல்லைன்னா அதை முதல்ல சொல்லு. அவ வேண்டாம்னா இப்பவே நீ சொல்லிடு. அவளை அள் ளிக் கொண்டு போறதுக்கு ஆண்களுக்கா பஞ்சம்! நாங்க ஒண்ணும் வேற வழியே இல்லாம வந்தவங்க இல்ல.''

ஐசுக்குட்டியின் உம்மா சொன்னதை எல்லாரும் கேட்டார்கள். ஆஸ்யாம்மாவும் கேட்டாள். வேற வழியே இல்லாம என்று அவள் சொன்னது தன்னைக் குறி வைத்துத்தான் என்பதை அவள் புரிந்து கொண்டாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இரவு வரட்டும்... இந்த விஷயத்தைத் தன் கணவனிடம் நூறு மடங்கு அதிகமாக்கிச் சொல்லிடுவோம் என்று அவள் தீர்மானித்தாள். ஐசுக்குட்டியின் உம்மா பேச்சோடு பேச்சாக தன்னை இந்த அளவிற்குக் கீழ்த்தரமாகப் பேசியதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவள் மனதில் கோபம் அக்னி ஜ்வாலையெனப் பற்றி எரிந்தது. எனினும் வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல் உதட்டில் புன்சிரிப்பு தவழ அவள் நின்றிருந்தாள்.

அந்தப் புன்சிரிப்புடன், அஸன்குஞ்னு டாக்டரைக் கொண்டு வரப் போயிருக்கும் செய்தியை எல்லாரிடமும் அவள் சொன்னாள். அங்கிருந்த எல்லாருக்கும் அது ஒரு முக்கிய செய்தி மாதிரி ஆனது. எல்லாரும் அந்தச் செய்தியை அறிந்தார்கள். பெண்கள் இதைக் கேட்டு தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

""அஸன்குஞ்னு டாக்டரைக் கொண்டு வரப் போயிருக்கான்!''

இந்தச் செய்தி பிரசவ அறைக்குள்ளும் நுழைந்தது. அங்கு போய்ச் சொன்னது ஆஸ்யாம்மாதான். இதைக் கேட்டதும் ஐசுக்குட்டிக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனினும் அதை அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

"உனக்கு மட்டும்தான் டாக்டரைக் கொண்டு வந்து பிரசவம் பார்ப்பாங்களா? எனக்கும் பார்ப்பாங்க தெரியுமா?' -என்ற எண்ணத்துடன் ஐசுக்குட்டி ஆஸ்யாம்மாவைப் பார்த்தாள். ஒரு பெண் மனதில் என்ன நினைக்கிறாள் என்பது இன்னொரு பெண்ணுக்கு நன்றா கவே தெரியும். இருந்தாலும் அவர்கள் அதை வெளியே சொல்ல மாட்டார்கள். ஆஸ்யாம்மா அந்த இடத்தைவிட்டு அகன்றதும், ஐசுக்குட்டி கண்களில் கண்ணீர் வழிய புன்னகைத்தாள். அதே நேரத்தில், இன்னொரு கவலையும் அவள் மனதில் எழுந்தது. டாக்டர் வருவதற்கு முன்பே தான் பிரசவம் ஆகிவிட்டால்...? நேரம் என்று வந்துவிட்டால், தான் என்னதான் முயற்சி பண்ணினாலும் பிரசவம் ஆவதைத் தன்னால் தடுத்து நிறுத்தத்தான் முடியுமா? அவளுக்கு இப்போது கொஞ்சம் பயம் உண்டானது. அதனாலோ என்னவோ அவள் உடல் வியர்க்கத் தொடங்கியது. வயிற்றில் தாங்க முடியாத வேதனையை அவள் உணர்ந்தாள்.

""கடவுளே... என்னைக் கைவிட்ராதீங்க!'' -கைகளை உயர்த்தி அவள் மன்றாடினாள். மறைந்துபோன புண்ணிய ஆத்மாக்கள் ஒவ்வொன்றும் தன்னுடைய பிரசவத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்று அவர்களின் பெயரை வாயால் உச்சரித்தாள் ஐசுக்குட்டி. ""என் மைதீனே! என் பத்ரீங்களே! என் மம்புரத்தவுலியா! என் நாகூர் வீராஸாயுவே! -நான் நாகூருக்கு வந்து பொன்னால காணிக்கை செலுத்துறேன்!''

இவ்வளவும் சொல்லி முடித்த பிறகு, ஐசுக்குட்டிக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது. வயிற்றில் கிடக்கிற குழந்தை ஆண் குழந்தை என்பதுதான் அது. பெண் குழந்தையாக இருந்தால் அடங்கி ஒடுங்கிப்போய் ஒரு மூலையில் கிடக்கும். இப்போது உள்ளே இருக்கும் குழந்தை அந்த அளவிற்கு அமைதியாக இல்லை. ஊஞ்சலைப் பிடித்துக்கொண்டு ஆடுவதைப்போல, வயிற்றுக்குள் அவன் துள்ளாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறான். சொல்லப்போனால் ஐசுக்குட்டியின் இதயத்தைப் பிடித்து அவன் தொங்கிக் கொண்டிருந்தான். அழுத்தமாக அவன் அதைப் பிடித்திருந்தான். கைகளை அவன் பின்னால் கட்டிக் கொண்டிருக்கிறான். இப்போது அவன் ஐசுக்குட்டியின் பிறப்பு உறுப்பில் தலையால் மோதி தன்னை "பேலன்ஸ்' பண்ணிக் கொண்டிருக் கிறான். அடுத்த நிமிடம் எழுந்து ஐசுக்குட்டியின் இதயத்தை எடுத்து கால்பந்து விளையாடினான். அவளுக்குத் தாங்க முடியாத வேதனை. நெருப்பு உடலுக்குள் நுழைவது மாதிரி உணர்ந்தாள். தலைவலி தாங்க முடியவில்லை. தலைக்குள் இருந்து யாரோ பலமாக அடிப்பதுபோல் இருந்தது. அவளுக்கு. உடம்பு முழுக்க ஒரே வலியும் எரிச்சலுமாய் இருந்தது. அவளால் கண்களையே திறக்க முடியவில்லை. மயக்கம் வருவதுபோல் இருந்தது. இருந்தாலும், சக்தியை வரவழைத்துக் கொண்டு அப்படியே படுத்துக் கிடந்தாள். நிமிடங்கள் மணியாக மாறி ஓடிக் கொண்டிருந்தன. இதயம் "டப் டப்' என்று துடித்துக் கொண்டிருந்தது. தலைக்குள் தாங்க முடியாத அளவிற்கு வேதனை. தான் நிச்சயம் இறக்கப் போவது உறுதி என்ற முடிவுக்கு அவள் வந்துவிட்டாள். அப்போது ஒரு குரல். அதைத் தொடர்ந்து யாரோ நடந்து வரும் ஒலி கேட்டது. அந்த ஒலி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து அவள் இருக்கும் வாசல் கதவுக்குப் பக்கத்தில் வந்து "டும்' என்று நின்றது. அதைத் தொடர்ந்து "டாக்டர்' என்று பலரும் உச்சரிப்பது அவள் காதில் விழுந்தது. அவ்வளவு தான் ஐசுக்குட்டிக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. அடுத்த நிமிடம் குழந்தையின் தலை வெளியே வந்தது. டாக்டர் உடன் இருந்தவர்களுடன் "கிர் கிர்' சப்தத்துடன் பிரசவ அறைக்குள் நுழைந்தார். ஐசுக்குட்டியின் உடலருகில் குனிந்து அவளைத் தொட்டுப் பார்த்தார். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சந்தோஷத்துடன் ஐசுக்குட்டி பிரசவமானாள்.

பூமிக்கு முதல் தடவையாக வந்திருக்கும் தன்னை இவ்வளவு நேரம் தாமதப்படுத்தியதற்காக அவன் பயங்கரமாக அழுதான். அவன் எங்கே படுக்கையை விட்டு எழுந்து வந்து கோபத்தில் தன்னை அடித்து விடுவா னோ என்றுகூட அவள் பயந்தாள். இருந்தாலும் டாக்டர் வந்த பிறகுதானே தனக்குப் பிரசவம் ஆனது என்ற அள வில் அவளுக்கு மகிழ்ச்சியே.

இப்படி ஐசுக்குட்டி பிடிவாதமாக டாக்டரை வரவழைத்து தன்னுடைய கௌரவத்தைக் காப்பாற்றிய கதையை பிரசவம் பார்க்கும் பெண் தன் கணவனிடம் கூற, அந்த மனிதன் தேநீர் கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தவர்களிடம் இந்த விஷயத்தைக் கூற, அவர் கள் ஊர் முழுக்க இந்த கதையைச் சொல்ல- எல்லாருக்குமே நாளடைவில் தெரிந்து போனது ஐசுக்குட்டியின் இந்த சாகசக் கதை. இது ஒருபுறமிருக்க, வாண்டுப் பையன்கள் ஐசுக்குட்டி மாதிரியே அவளின் குரலைப் பின்பற்றி நீட்டி முழக்கி "சீக்கிரம் டாக்டரைக் கொண்டு வாங்க' என்று தெருவில் ஐசுக்குட்டி நடந்து செல்லும்போது, அவளைப் பின்தொடர்ந்து கிண்டல் செய்யும்போதுகூட, ஐசுக்குட்டி கொஞ்சம்கூட கோபப்படவே இல்லை. அப்படியே கோபம் உள்ளே தோன்றினாலும், அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை. நேரில் பார்க்கும்போது அப்படி யாராவது இதை ஞாபகப்படுத்தி சொன்னால்கூட, உதட்டில் புன்னகை தவழ ஐசுக்குட்டி கூறுவாள்:

""ஓ... என்ன இருந்தாலும் நான் பிரசவம் ஆகுற நேரத்துல டாக்டரைக் கொண்டு வந்துட்டாங்களா இல்லியா?''

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா
அவர் - நிலாரவி அவர் - நிலாரவி
காதல் வீரியம் - எஸ்.கண்ணன் காதல் வீரியம் - எஸ்.கண்ணன்
கனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன் கனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.