LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

அலமேலு பாட்டி

``பாட்டி தினமலர் பேப்பர் ஒண்ணு குடுங்க’’ 


``இந்தாப்பா மீதி காசு, தம்பிய போன வாரத்தில பாக்க முடியல” 


``ஊருக்குப் போயிருந்தேன், அதான் ஒரு வாரம் லீவு போட்டுட்டேன். நேத்து நைட் தான் திரும்பி வந்தேன்’’.

 

``ஊர்ல எல்லாரும் சௌக்கியமா இருக்காங்களாயா?” 


``எல்லாரும் நல்லா இருக்காங்க பாட்டி” 


``தம்பி பேரென்ன, எந்த ஊரு? தெனமும் பாக்கறது ஆன பேருதான் தெரியாது!” 


“என் பேரு ரவி பாட்டி, நமக்கு திண்டுக்கல்லுக்குப் பக்கத்தில இருக்கிற சின்னாளப்பட்டி தான் ஊரு. பெத்தவங்க ஊர்ல இருக்காங்க, தங்கச்சி படிச்சிட்டு இருக்கா, நான் இங்க பனியன் கம்பெனில சூப்பர்வைசரா இருக்கேன். எப்படி பாட்டி நான் ஊர்ல இல்லாதத கரெக்டா கண்டுபுடிச்சீங்க!” 


“அதான் தெனந்தோறும் பாக்கிறேன்ல, அவ்வளவு சீக்கிரத்தில மூஞ்சி மறந்து போயிருமா?” 


“சரி பாட்டி வேலைக்கு நேரமாச்சு, நான் கிளம்பறேன்”. 


“சரிப்பா பாத்துப் போயிட்டு வாங்க.”

 

இதுதான் நம்ம அலமேலு பாட்டி. பாட்டியைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் தினமும் நாம் சாலையில் செல்லும் போது பிளாட்பாரத்தில் பூ, பேப்பர் விற்றுக் கொண்டிருக்கும் கிழவியைப் போல இருப்பார்.  


பாட்டி பிறந்தது, வளர்ந்தது எல்லாமே திருப்பூர் தான். சுருக்கம் விழுந்த தோலும், முகத்தில் வாகனப்புகையால் படிந்த புழுதியும், வெத்தலைப் பாக்குக் கறையேறிய முன்பற்களும், தலையைச் சுற்றித் தூசும், வெள்ளை நரையும், நைந்த  நிலையிலிருக்கும் பழைய சீலையும், சாயம் போன ஜாக்கெட்டுடன், நடையில் சிறிது தளர்வும், காய்ந்த அந்த உதட்டின் ஓரத்தில் ஒரு மெல்லிய சோகம் கலந்த புன்னகையுடன் இருப்பார். 


பாட்டியின் கண்கள் அந்தச் சாலையில் செல்லும் பாதசாரிகளின் முகங்களை எடை போட்டுக் கொண்டே இருக்கும். பாட்டியின் ஒரே எதிரி வாகன நெரிசலின் போது ஏற்படுத்தப்படும் ஹாரன் தான். அந்த சபதத்தைக் கேட்கும்போதெல்லாம் அவர் கணவர் வாகன விபத்தில் இறந்ததுதான் நினைவுக்கு வரும். 


யாருடைய முகத்தையும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார், அப்படியொரு ஞாபகசக்தி இந்த 68 வயதிலும். கணவர் இறந்த பிறகு வயிற்றுப் பிழைப்பிற்காக இந்தப் பேப்பர் கடையைத் தொடங்கினார். ஏறக்குறைய 16 வருடங்களாகிறது, இதுவரை யாருடைய உதவியையும் நாடிச் சென்றதில்லை. வாழ்க்கையில் கடன் வாங்கக் கூடாது என்ற வைராக்கியத்தில் வாழ்ந்து வருகிறார். 


பாட்டியின் அந்தப் பேப்பர் கடை பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள நடைபாலத்தை ஒட்டியிருக்கும் பிளாட்பாரத்தில் இருக்கிறது. கடையிலுள்ள சொத்துக்கள் என்று பார்த்தால் தலைக்கு மேலிருக்கும் நீலநிற தார்ப்பாயும், உட்காருகின்ற முக்காலியும், தரையில் விரிக்கப்பட்டிருக்கும் தார்ப்பாயும், அதற்கு மேலே மொழிவாரியாக அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களும், நாளிதழ்களும், தார்ப்பாய் காற்றில் பறக்காமலிருக்க நான்கு முனையிலும் வைக்கப்பட்டிருக்கும் கருங்கற்களும் அடங்கும்.   


கடையில் தமிழ் மற்றும் ஆங்கில நியூஸ் பேப்பர், குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், மங்கையர் மலர்,  இந்தியா டுடே போன்ற வாரப் பத்திரிக்கைகள், சிறுகதைப் புத்தங்கள், சாமி பாட்டு,  ஜோசியம், ஆன்மீகப் புத்தகங்கள் என்று வெரைட்டியாக இருக்கும். 


கணவர் இறந்த பிறகு தனியாத்தான் இருக்கிறார். இந்த மார்க்கெட்டுக்குப் பின்புறம்தான் அவருடைய ஓலை மாளிகை. சிக்கனமாக இருப்பார், உதவின்னு வந்தா தன்னால் முடிந்ததைச் செய்வார். 

``பாட்டி என்ன இன்னைக்கு கடைய சீக்கிரமா மூடற மாதிரி தெரியுது? 


“பக்கத்துல நம்ம மாரியாத்தா கோயில் சாட்டியிருக்காங்க, அதான் நேரத்திலேயே  கிளம்பளாம்னு இருந்தேன்.” 


“உங்க வீட்டுல யார்லாம் இருக்காங்க பாட்டி?” 


“அவரு போனதுக்கப்பறம் நான் தனியாத்தான்யா இருக்கேன்.“ 


“புள்ள குட்டிக எங்க இருக்காங்க?” 


“பெரிய பையன் டிரைவரா இருக்கான், சின்னவன் ஏதோ பிரஸ்ல வேலை செய்றான். ஆத்தா புண்ணியத்தில ரெண்டு பேரும் குழந்தை குட்டிகளோட சொகமா இருக்காங்க.“ 


“அப்ப நீங்க மட்டும் ஏன் தனியா இருக்கீங்க, அவங்களோட போய் இருக்கலாம்ல!” 


“நமக்கு அந்த ஊரெல்லாம் சரிபட்டு வராது; இந்த ஊரை விட்டு வெளிய போக மனசு வரல. அங்கிருக்கற ஜனங்களோட பழக்க வழக்கம் நமக்கு ஒத்து வராது.“ 


“பேரக் குழந்தைகளோட சந்தோசமா இருக்காம, இப்படி தனியா கஷ்டப்படறீங்க, நீங்களும் அவங்ககூட ஒண்ணாயிருந்தா அவங்களுக்கும் பிரியமா இருக்கும்.” 


“நீ சொல்றது சரிதான்பா, ஆனா இந்த கெட்ழடுக்கு அப்படியே பழகிப் போச்சு.  கண்ணு மூடுற வரைக்கும் இங்கயே இருந்தாப் போதும். பையனும் மருமகளும் வரும் போதெல்லாம் இதையே தான் சொல்றாங்க, ஆனா எனக்குத் தான் அந்த டவுன் வாழ்க்கை புடிக்கல. அங்க போன கைதி மாதிரி வீட்டுக்குள்ளையே இருக்கணும், எத்தன நேரந்தான் டிவியப் பார்த்துட்டு இருக்கிறது. எனக்கு கொஞ்சங் கூடப் புடிக்கல.” 


“ஆமா பாட்டி, புது ஊர்னா அப்படித்தான் இருக்கும். எனக்கும் இங்க வந்த புதுசுல அப்படித்தான் இருந்துச்சு, மனுஷங்களோட பழகப் பழக இப்ப அதுவே புடிச்சுப் போச்சு. எல்லாரையும் கடைசியா எப்பப் பாத்தீங்க?” 


“ஏழெட்டு மாசம் இருக்கும், பசங்க வேலை செய்யறதால அடிக்கடி வரமுடியறதில்லை. அவங்களுக்கு இங்க வரப் பிரியந்தான், நான் தான் குழந்தைகளோட படிப்புக் கெட்டுப் போகுது வரவேண்டாம்னு சொல்லிட்டேன். பாவம் அதக் கேட்டு அவங்க மூஞ்சி வாடிப்போயிருச்சு” என்று அன்பான அம்மாக்கள் சொல்லும் அதே பொய்யைச் சரியாகச் சொன்னார். 


“புரியுது பாட்டி, என்னப்பாருங்க அப்பா அம்மாவ தனியா விட்டுட்டு இங்க வந்திட்டேன். உங்களுக்குப் புள்ளைக கூப்பிட்டாலும் போக மாட்டிறீங்க.” “ஆனாலும் பேரன் பேத்திகளோட வெளையாட முடியலன்னு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. எங்கிருந்தாலும் நம்ம புள்ளைக நல்லா இருந்தா அதுவே போதும். அந்த மாரியாத்தாகிட்ட நான் வேண்டறது அதுதான்.” 

“பாட்டிக்கு இங்கிருக்க புஸ்தகமெல்லாம் படிக்கத் தெரியுமா? “ 


“ஏதோ கொஞ்சம் படிக்கத் தெரியும் தம்பி, எல்லாம் கலியாணத்துக்கு அப்பறம் அவரு சொல்லிக் கொடுத்ததால கத்துக்கிட்டேன். ஹூம்ம் அதெல்லாம் நெனச்சாலே கண்ணீரு தான் வருது.  அப்படியே வாழ்ந்து பழகியாச்சு.” பசங்க அப்பப்ப காசு அனுப்புவாங்களா?” “இல்லப்பா, நான் எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டேன். இந்தப் பேப்பர் கடையில வர்ற வருமானமே என் ஒருத்திக்கு போதும். மீதிக் காசை கோயில்ல பிச்சையெடுக்கரவங்களுக்குத் தர்மம் பண்ணிருவேன். கையும் காலும் நல்லா இருக்கு, அதனால இருக்கற வரைக்கும் யாரோட காசும் வேண்டாம்.” 


“பாட்டி உங்ககிட்ட இருந்து நெறைய கத்துக்கணும். இந்த வயசிலயும் உழைச்சு சம்பாதிச்சு, யாரையும் தொந்தரவு செய்யாம, நேர்மையா இருக்கீங்க.  இந்த மாதிரி பாக்கறதே அபூர்வந்தான். இதோ பேப்பர்ல பாருங்க, டெய்லியும் கொலை கொள்ளைன்னு; அடுத்தவன்கிட்டயிருந்து திருடிப் பொழைக்கிறது, என்னவொரு கேவலமான பிறவிக.  உழைச்சு சாப்பிட ஆண்டவன் கை காலக் கொடுத்தா அத வச்சு கொள்ளையடிக்கிறானுக, இவனுகளுக்கெல்லாம் நல்ல சாவே வராது.” 


“தம்பி நேரமாயிட்டே இருக்கு கோயில்ல பூஜை ஆரம்பிச்சிருவாங்க, ஒரு உதவி பண்ண முடியுமா? என்கிட்ட 800 ரூபா இருக்கு, இந்தக் காசுக்கு ஒரு ஃபோன் வாங்கி தந்தீங்கன்னா சௌரியமா இருக்கும். பேரன்கூட பேசி ரொம்ப நாளாகுது. கடைக்குப் போய் வாங்க கொஞ்சம் தயக்கமா இருக்கு, அதான் தம்பிகிட்ட உதவி கேக்கலாம்னு இருந்தேன்.“ 


“ஒண்ணும் பிரச்சனையில்ல பாட்டி நான் வாங்கித் தர்றேன். பணத்தை அப்பறம் குடுத்தாப் போதும், அவசரமில்ல.  எந்த மாதிரி ஃபோன் வேணும் உங்களுக்கு?” 

“ஃபோனப் பத்தியெல்லாம் இந்த கெழுட்டுக்கு தெரியாதுப்பா, நீயே நல்லதா பாத்து வாங்கி குடு. அப்பப்ப புள்ளைகளோட பேசி அவங்க குரலக் கேட்டாலே போதும். வெளிய யார்கிட்டவும் கடன் வாங்கிப் பழக்கமில்லை, அப்படியே வாங்குனாலும் மனசை உறுத்திட்டே இருக்கும். இந்தப் பணத்துக்கு வர்ற மாதிரி வாங்கினா போதும்.” 

“சரி பாட்டி, நான் அப்படியே கிளம்பறேன்.“

 

 மூன்று நாட்களுக்குப் பிறகு: 


“சார் இங்க ஒரு பாட்டி பேப்பர் கடை வைச்சிருந்தாங்க பாத்தீங்களா?” 


“இல்ல சார் நான் ஊருக்குப் புதுசு எனக்கு தெரியாது, அந்த டீக்கடைல கேட்டுப் பாருங்க.” 


“அண்ணா இங்க பிளாட்பாரத்தில ஒரு பாட்டி கடை வைச்சிருந்தாங்களே அவங்க எங்கேன்னு தெரியுமா?” 


“யாரு நம்ம அலமேலு பாட்டியவா கேக்கிறீங்க.” 


“ஆமா அவங்க தான், வீடு எங்கிருக்குன்னு சொன்னா போய் பார்த்திட்டு வந்திருவேன்.” 


“தம்பி, நீங்க அவங்களுக்கு சொந்தமா? அந்தப் பாட்டி செத்துபோய் மூணு நாளாச்சு. சாயந்திரம் கோயிலுக்குப் போயிருக்காங்க, சாமி கும்பிடும்போது அப்படியே சன்னிதானத்திலேயே உசிரு போயிருச்சு. அதுக்கெல்லாம் புண்ணியம் பண்ணிருக்கணும். அந்தன்னைக்கு காலைலகூட பக்கத்து வீட்டு லட்சுமி அவங்க புள்ளைக்கு ஜூரம்னு சொன்னதுக்கு முன்னூறு ரூபா குடுத்திருக்காங்க. பாவம் அந்த லட்சுமி இதைச் சொல்லிச் சொல்லி அழுதிட்டிருக்கா.” 


அய்யோ கடைசியா அவங்க முகத்தை ஒரு தடவப் பார்த்திருக்கலாம், முடியாமப் போச்சே என்றெண்ணிய ரவியின் கண்களில் கண்ணீர் தேங்கியது. 


இந்தக் கண்ணீர் விலைமதிப்பற்றது. அலமேலு பாட்டியைப் போல் இன்றும் பலர் நம்மைச் சுற்றி வாழ்ந்து வருகிறார்கள். ``இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்   இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’’


by varun   on 03 Aug 2016  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா
அவர் - நிலாரவி அவர் - நிலாரவி
காதல் வீரியம் - எஸ்.கண்ணன் காதல் வீரியம் - எஸ்.கண்ணன்
கருத்துகள்
13-Nov-2019 12:05:49 கே. மோகன் said : Report Abuse
வெரி குட் தமிழ் ஸ்டோரி. நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல தமிழ் கதை படித்த திருப்தி. நன்றி.
 
27-Jun-2018 17:52:59 Kiruthiga said : Report Abuse
An excellent story
 
24-Mar-2018 13:55:22 பூ.சுப்ரமணியன் said : Report Abuse
அலமேலு பாட்டி சிறுகதை அசத்தலான அருமையான கதை பாராட்டுக்கள்
 
15-Dec-2017 06:51:03 விமல் said : Report Abuse
நான் படித்ததில் ஒரு நல்ல கதை.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.