LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1149 - களவியல்

Next Kural >

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள். அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, 'அலரஞ்சி ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) அஞ்சல் ஒம்பு என்றார் பலர் நாண நீத்தக் கடை - தம்மை எதிர்ப்பட்ட ஞான்று 'நின்னிற் பிரியேன் அஞ்சல் ஒம்பு' என்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்; அலர் நாணா ஒல்வதோ - நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது. ('நாண' என்னும் வினையெச்சம் 'ஒல்வது' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. 'கண்டார் நாணும் நிலைமையமாய யாம் நாணுதல் யாண்டையது'? என்பதாம்.)
மணக்குடவர் உரை:
அலராகுமென்று நாணுதல் இயல்வதோ? அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கினவிடத்து. பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை.
தேவநேயப் பாவாணர் உரை:
[வரைவிடை வைத்துப் பிரிவின்க ணாற்றாளாகிய தலைமகள் அவன் வந்து சிறைப்புறத்தானாத லறிந்து, அலரஞ்சி யாற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.] அஞ்சல் ஓம்பு என்றார் பலர் நாண நீத்தக்கடை-தலை நாளில் தம்மை எதிர்ப்பட்ட போதே, நான் உன்னை விட்டு ஒருபோதும் பிரியேன்; ஆதலால் நீ அஞ்சுதலை விட்டுவிடு என்று தேற்றியவர் தாமே, இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்தபின்; அலர்நாண ஒல்வதோ - அயலார் கூறும் அலருக்கு நாம் நாணக் கூடுமோ? கூடாதே!. கண்டார் நாணும் நிலைமையிலுள்ள நாம் நாணுதற்கு வழியேது என்பதாம்.
கலைஞர் உரை:
உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?.
சாலமன் பாப்பையா உரை:
அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?.
Translation
When he who said 'Fear not!' hath left me blamed, While many shrink, can I from rumour hide ashamed?.
Explanation
When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal.
Transliteration
Alarnaana Olvadho Anjalompu Endraar Palarnaana Neeththak Katai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >