LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

அம்மா - எஸ்.கண்ணன்

"உங்கம்மாவுக்கு எப்பவுமே இங்க இருக்கறதுக்கு இருப்பே கொள்ளாது.  எப்பவும் கால்ல கஞ்சி கொட்டிண்ட மாதிரி வந்தன்னிக்கே திரும்பி உங்க தம்பி வீட்டுக்கு போறதப் பத்திதான் நினைப்பெல்லாம்... பாருங்க நேத்துதான் உங்கப்பா தெவசம் முடிஞ்சுது, இன்னிக்கு ஆரம்பிச்சுட்டா என்ன எப்ப கொண்டு விடப் போறேன்னு..."

"சரி கமலா. நீ அத ஏன் பெரிசு படுத்தற?  அம்மாவுக்கு எங்க இருக்க பிடிக்கறதோ அங்க இருந்துட்டுப் போறா.."

மூர்த்தி தன் மனைவி கமலாவை சமாதானப் படுத்தினாலும், அவள் சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை என்பது புரிந்துதான் இருந்தது.  இன்று நேற்றல்ல அப்பா இறந்தபிறகு கடந்த நான்கு வருடங்களில் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு தடவைகள்தான் மயிலாப்பூரிலுள்ள மூத்த மகன் மூர்த்தி வீட்டுக்கு வருவாள், நான்கு நாட்கள் இருந்துவிட்டு குரோம்பேட்டையில் உள்ள இரண்டாவதும் கடைசி மகனுமான ராஜாராமன் வீட்டுக்கு திரும்பிச் சென்று விடுவாள்.  

இத்தனைக்கும் மூர்த்தி வீட்டில்தான் வசதிகள் ஜாஸ்தி.  லஸ் கார்னரில் ஐந்து பெட்ரூம்களுடன் பெரிய தனிவீடு.  அம்மாவுக்கென்று விஸ்தாரமான தனி பெட்ரூம், உள்ளேயே ஆண்டி ஸ்கிட் டைல்ஸ்களுடன் பெரிய பாத்ரூம், ஏ.ஸி., டி.வி., தனி பால்கனி, படிப்பதற்கு ஏராளமான சஞ்சிகைகள் என பார்த்து பார்த்துதான் கவனிப்பெல்லாம்.

டைனிங் ஹால், கூடத்தில் பெரிய ஊஞ்சல் என மற்ற வசதிகளுக்கும் குறைவில்லை.  எட்டு வயது பேரன் ஹரனும், ஐந்து வயது பேத்தி ஹரிணியும் பாட்டியிடம் மரியாதையுடன் இருப்பார்கள். கோவிலுக்கு போகும்போது சொகுசு காரில் கமலாதான் டிரைவருடன் அம்மாவை கூட்டிச் செல்வாள்.  எப்போதும் ஸ்பெஷல் தரிசனம்தான்.

இவ்வளவு இருந்தும் அம்மாவுக்கு மூர்த்தி வீட்டில் மனசே ஒட்டாது.  

மாறாக ராஜாராமன் வீட்டிற்கு செல்வதிலேயே குறியாக இருப்பாள்.  நேற்று அப்பாவின் திவசத்திற்கு மூர்த்தியின் தம்பி ராஜாராமனும் அவன் மனைவி விஜயாவும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்றுவிட்டார்கள்.  இன்று அம்மாவுக்கு இங்கு இருப்புக் கொள்ளவில்லை. எப்ப என்ன குரோம்பேட்டைக்கு கூட்டிண்டு போற? என்று மூர்த்தியிடம் காலையில் கேட்டாள்.  அதுதான் கமலாவுக்கு கோபம்.  

மாலை அம்மா தன் பெட்ரூமில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள்.  ஏதோ ஒரு நகைச்சுவையை ரசித்து பெரிதாக வாய்விட்டு சிரித்தாள். மூர்த்தி உள்ளே சென்று அம்மாவுடன் சற்று நேரம் டி.வி பார்த்தான்.

பிறகு அம்மாவிடம் அன்பான குரலில், "ஏம்மா இன்னும் ஒரு பத்து நாள் இங்கேயே இரேம்மா... நாம எல்லாரும் இந்த வாரக் கடைசியில் காஞ்சிபுரம் கோவிலுக்கு போயிட்டு வரலாம்" என்றான்.

அம்மா பதிலேதும் உடனே சொல்லாது சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.  

பிறகு "காஞ்சிபுரம் எத்தன தடவ பார்த்தாச்சு.. வேண்டாம்டா என்ன நாளைக்கு குரோம்பேட்டைல விட்ரு" என்றாள்.

மறு நாள் டிரைவருடன் காரில் குரோம்பேட்டைக்குச் சென்றுவிட்டாள்.

அம்மா சென்ற அடுத்த பதினைந்து நாட்களில்  மூர்த்தியின் பெயருக்கு வீட்டு முகவரிக்கு அம்மாவிடமிருந்து ஒரு நீண்ட கடிதம் வந்தது.

கமலா கடிதத்தை மூர்த்தியிடம் கொடுத்துவிட்டு அருகிலேயே நின்றாள்.  

என் அன்புள்ள மூர்த்திக்கு,

நாம் அடிக்கடி மொபைல் ஃபோனில் பேசிக்கொண்டாலும், ஒரு நல்ல புரிதலுக்காக இந்தக் கடிதத்தை உனக்கு எழுதனும்னு எனக்கு தோணித்து. அப்பாவின் திவசத்திற்குப் பின், நான் தனியே நிறைய யோசித்துப் பார்த்ததில், நிறைய விஷயங்கள் எனக்குப் புரிந்தன. பல விஷயங்களை பேசிப் புரியவைக்க முடியாது, அதனால்தான் இந்தக் கடிதம்.  

கமலா அன்று உன்னிடம், 'அம்மாவுக்கு எப்பவுமே இங்க இருக்கறதுக்கு இருப்பே கொள்ளாது' என்று சொன்னதை நான் கேட்க நேரிட்டது.  அவள் சொன்னது முற்றிலும் உண்மைதான்.  கடந்த நான்கு வருடங்களில் நான் உன்னுடன் மயிலாப்பூர் வீட்டில் இருந்த நாட்கள் மிகவும் குறைவுதான்.  யோசித்துப் பார்த்ததில் இது இயல்பாக நடந்த ஒன்றுதான், வேண்டுமென்றே என்னால் செய்யப்பட்டதல்ல என்று எனக்குத் தோன்றியது.

உன் மயிலாப்பூர் வீட்டில் எனக்கு எந்த விதமான குறையும் இல்லை.  மாறாக வசதிகள்தான் அதிகம்.  தேவைகள் எதுவும் இல்லை, நிறைகள்தான் ஜாஸ்தி. நீ நிறைய படித்தவன். ஒரு பெரிய கம்பெனியில் சி.ஈ.ஓ.  உன் மனைவி கமலாவும் படித்தவள், கெட்டிக்காரி. அவள் அப்பா ரிடையர்டு ஆன ஐ.ஏ.எஸ் அதிகாரி. வசதியான குடும்பத்திலிருந்து வந்தவள், பண்பாடு தெரிந்தவள். ஹரனும், ஹரிணியும் காரில் பள்ளிக்குச் சென்று வருபவர்கள்.  உன் வீட்டில் அது அது திட்டமிட்டபடி வசதியுடன் நேர் கோட்டில் நடக்கிறது.

ஆனால் உன் தம்பி ராஜாராமன் ஒரு சிறிய கம்பெனியில் அஸிஸ்டெண்ட்.  உன்னை மாதிரி படித்தவனில்லை.  சொற்ப சம்பளத்தில் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் சிரமப் படுகிறான்.  அவன் மனைவி விஜயா படிக்காதவள்.  சமர்த்து சாமர்த்தியம் போறாது. திருவானைக்காவலில் ஒண்டுக் குடித்தன வாடகை வீட்டில் தொட்டி மித்தத்தில் குளித்து வளர்ந்தவள். அவள் அப்பா திருச்சி பொன்மலையில் ஷண்டிங் ரயில் இஞ்சின் ஓட்டுனராக இருந்தவர்.

அம்மா ஊமை என்பதனால் விஜயாவுக்கு சின்ன வயதிலிருந்தே குரலை உயர்த்தி மிகுந்த சத்தம் போட்டு பேசித்தான் பழக்கம்.  அது இன்றும் மாறவில்லை. பண்பாடும், நாகரிகமும் அறியாதவள்.   அவர்களுக்கு உள்ள ஒரே நம்பிக்கை இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பும் முன்னேற்றமும்தான்.

விஜயாவுக்கு என் அருகாமையும், வழி காட்டுதலும்தான் யானை பலம்.  என்னக் கேக்காம எதையும் அவ செய்யறது இல்ல. குழந்தைகளுக்கும் என்னுடைய உதவிகள் நிறைய தேவை.  அதுகளை எழுப்பி, குண்டான்ல வென்னீர் போட்டு குளிப்பாட்டி, தலை வாரி, தயார் பண்ணி, யூனிஃபார்ம் போட்டு தினமும் ஸ்கூலுக்கு அனுப்பறது நான்தான்.  பாட்டி பாட்டின்னு அதுகளுக்கு நான் இல்லாம எதுவும் நடக்காது.  ராத்திரி தரையில் படுத்து தூங்கும் போதுகூட என் பக்கத்துல ஆளுக்கு ஒரு பக்கமா படுத்துண்டு கால என் மீது போட்டுண்டுதான் தூங்கும்.  

மயிலாப்பூர் வாழ்க்கை எனக்கு அதீத சொகுசு.  நான் நன்றாகக் கவனிக்கப்படும் கூண்டுக்கிளி. ஆனால் குரோம்பேட்டை எனக்கு சவாலான சுகம். உன் வீட்டில் என்னால் பயனடைபவர்கள் யாரும் இல்லை.  ஆனால் இங்கு நான் தான் கிரியா ஊக்கி. எல்லா அம்மாக்களுக்கும் தன் குழந்தைகளிடம் அன்பும், பாசமும், வாஞ்சையும் சமம்தான். ஆனால் கஷ்டப்படும் குழந்தையின் மீது பிரத்தியேக கவனிப்பும், அருகாமையும் அதிகம்.  இது இயல்பான ஒன்று.
 
இப்போது உனக்குப் புரிகிறதா, எனக்கு ஏன் அங்கு இருப்புக் கொள்ளவில்லை என்று?  எனக்கு உன் குடும்பமும், ராஜாராமன் குடும்பமும் இரண்டு கண்கள். என் அன்பும், வாஞ்சையும், பாசமும் உங்களிடம் சமமானதுதான். ஆனால் என் உடல் உழைப்பின் பங்கு ராஜாராமன் குடும்பத்திற்கு அதிகம்.  அது தேவையானதும், அவசியமானதும் கூட.

உன் புரிதலுக்கு என் சந்தோஷங்கள்.

கமலாவுக்கும், குழந்தைகளுக்கும் என் ஆசீர்வாதங்கள்.

அன்புடன்,
அம்மா

பக்கத்திலிருந்த கமலாவும் கடிதத்தை வாங்கி முழுவதுமாக படித்தாள்.  உடனே அம்மாவுக்கு ஃபோன் செய்தாள்.

"அம்மா, இப்பதாம்மா நீங்க அவருக்கு எழுதின கடிதத்தை நானும் அவரும் படிச்சோம்....என்ன மன்னிச்சிடுங்கம்மா...

உங்க அன்பும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு நிறைய இருந்தா போதும்" குரல் உடைந்து கண்களில் நீர் முட்டியது. 

by Swathi   on 01 Jan 2016  2 Comments
Tags: Amma   Amma Kathai   அம்மா   அம்மா சிறு கதை   அம்மா கதை        
 தொடர்புடையவை-Related Articles
கட்டு நீத்தலும் கடவுட் பற்றும் - மு.வள்ளியம்மை கட்டு நீத்தலும் கடவுட் பற்றும் - மு.வள்ளியம்மை
அம்மா - கவிப்புயல் இனியவன் அம்மா - கவிப்புயல் இனியவன்
நானும் அம்மாவும் - கணேஷ் நானும் அம்மாவும் - கணேஷ்
இந்த வாரம் பெண் இயக்குனர்களின் வாரம் !! இந்த வாரம் பெண் இயக்குனர்களின் வாரம் !!
அம்மா - எஸ்.கண்ணன் அம்மா - எஸ்.கண்ணன்
அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா.. அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா..
அம்மா அம்மா
அன்னையர் தினம் - தாய்மை - வித்யாசாகர் அன்னையர் தினம் - தாய்மை - வித்யாசாகர்
கருத்துகள்
25-Jan-2019 09:22:00 mohanraj said : Report Abuse
super Sir very nice story
 
01-Dec-2016 00:55:03 ரொனால்ட் ரோஸ் said : Report Abuse
வெரி நைஸ்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.