அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகோடி பீடமாகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வாயாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.
துர்வாச முனிவரால் கிருதயுகத்தில் இரண்டாயிரம் சுலோகங்களாலும், பரசுராமரால் திரேதாயுகத்தில் ஆயிரத்து ஐநூறு சுலோகங்களாலும், தவுமியாசார்யாரால் துவாபரயுகத்தில் ஆயிரம் சுலோகங்களாலும், ஆதிசங்கரரால் கலியுகத்தில் ஐநூறு சுலோகங்களாலும் பாடப்பட்ட பெருமை காமாட்சிக்கு உண்டு.இங்கே அம்பிகைக்கு மூன்று வடிவங்கள் உள்ளன.
பார்த்தவுடனேயே சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால் "காமகோடி காமாட்சி' என அழைக்கப்படுகிறாள். காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து கோயில்களும் காமாட்சி கோயிலை நோக்கியே அமைந்திருக்கிறது. |