LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- லா.ச.ராமாமிருதம்

அம்முலு

 

அம்முவுக்கு தூக்கமே பிடிக்கவில்லை. பழக்கக்கோளாறு அப்போதைக்கப்போது கடியாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் மணி பார்க்கத் தெரிந்திருந்தால்தானே ஆனநேரம் தெரியும் ?
அப்புறம் படுத்திருக்கவும் முடியவில்லை. எழுந்து போய் பல் விளக்கிவிட்டு, வென்னீரடுப்பை மூட்டி, தாமிரம் பளபளக்கத் தேய்த்து செம்மண் பூசிய வென்னீர்த் தவலையை அடுப்பில் ஏற்றினாள். பிறகு எண்ணெய் தேய்த்துக் கொண்டாள். அளகபாரத்தில் அங்கங்கே வெள்ளி சுடர்விட்டது.
வேறு யாராவது, வெற்றிலை மடித்துக் கொடுத்து, குங்குமமிட்டு, ‘கெளரி கல்யாணம் ‘ பாடி தலையில் ஒரு கை எண்ணெய் வைத்தால் அவளுக்கு இஷ்டம் தான். ஆனால் மன்னி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். பக்ஷணமெல்லாம் அம்முலுதான் பண்ணினாள். ஆனால் நேற்று முழுக்க சற்று உளையக் காரியம் தான். இப்போ போய், நேரமாச்சுன்னு அண்ணா அறைக்கதவைத் தட்டி எப்படி எழுப்புவது ?
எதற்கும் ஸ்னானம் பண்ணிவிட்டு இட்டிலிப் பாத்திரத்தை அடுப்பில் போட்டு விட்டு வந்தால், மன்னியையும் குழந்தைகளையும் எழுப்பச் சரியாயிருக்கும்.
முழுகிவிட்டு வந்து கண்ணாடி எதிரில் நின்றாள். அவள் நிறம் உற்ற சிவப்பைச் சேர்ந்ததல்ல; வெளுப்புமல்ல. இரண்டும் கலந்தவொரு பொன்னிறம், முகத்தில் காலத்தின் வடுக்களோ, வயதின் கோளாறுகளோ இல்லை. இன்னமும் பத்து வருஷங்களானாலும் அவளால் இப்படியே இருக்கமுடியுமோ என்னவோ ? புன்னகையில் இடது கன்னம் குழிந்தது.
குழந்தை மாதிரி கையைக் கொட்டிச் சிரித்துக் கொண்டே ஓடிப்போய் அண்ணாவின் அறைக் கதவைத் தட்டினாள்.
‘மன்னி ‘ மன்னி ‘ ‘
‘ஊம்– ?ஆ– ? ‘உள்ளிருந்து கொட்டாவிகள் கிளம்பின.
‘மன்னி ‘ — தீபாவளி வந்துடுத்து, எழுந்திரு ‘ ‘
‘இப்போத்தானே உடம்பை சாய்ச்சேன் ‘ ‘ மதுரம் இன்னொரு கொட்டாவி விட்டாள்.
‘இதென்ன அக்கிரமம் ‘ பாதிராத்திரி ஒண்ணரை மணிக்கே தீபாவளி வந்து விடுமா என்ன ? ‘ என்று அவள் அகமுடையான் சாப்பிட மறந்தாலும், கையில் கட்டிக் கொள்ள மறக்காத கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
‘பம்பாயெல்லாம் ராத்திரி முழுக்கவே தீபாவளி தான் ‘ என்றாள் மதுரம்.
‘உங்கள் அண்ணாவாத்துப் பெருமை இங்கே வேண்டாம். இந்தப் பக்கமெல்லாம் விடிய இரண்டு நாழிக்குத்தான் தீபாவளி. அதோ அம்முலு கதவையுடைக்க ஆரம்பித்து விட்டாள். சொன்னாலும் கேட்காது. மரியாதையாய் எழுந்து நீ வெளியே போய்விடு. நான் இன்னும் நாலு இன்னும் நாலு மணி நேரமாவது தூங்கணும். ‘
‘விடிஞ்சா அமாவாசை. தர்ப்பணமுண்டு. தெரியுமோன்னோ ? ‘
‘தர்ப்பணம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இட்டிலி முன்னாள் ஆகட்டும் ‘ என்று அவன் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
‘தூங்கவிடமாட்டேங்கறாளே பாவி கொள்ளிவாய்ப் பிசாசு மாதிரி தானும் தூங்கமாட்டேன் என்கிறாள் ‘ என்று உரக்கத் திட்டிக் கொண்டே, மதுரம் கதவைத் திறந்தாள்.
அம்முலு எதிரே நின்றாள். அவள் மனதில் பொங்கி வழியும் தீபாவளிக் கொந்தளிப்பில், மன்னியின் முகச் சுளிப்புக் கூட தெரியவில்லை.
‘மன்னி ‘ மன்னி ‘ தீபாவளி ‘ ‘ அம்முலு கையைக் கொட்டினாள். ‘முன்னாலே உன்னைத் தூக்கி மணையில் வைக்கலாம் வா ‘ ‘ முகத்தை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு மதுரம் வென்னீருள் அறைப்பக்கம் சென்றாள்.
‘அடே வாசு ‘ அடே மணி ‘ சீனா ‘ கமலம் ‘ எல்லோரும் எழுந்திருங்கோ தீபாவளி ‘ தீபாவளி ‘ ‘
‘இந்தச் செவிடு பண்ணற ரகளையைப் பாரு ‘ என்று மாடியில் படுத்திருந்த மதுரத்தின் தம்பி பாலு இரைந்தான்.
‘என்னப்பா இப்படி கத்தறே ‘ காதிலே விழப்போகிறது. ‘
பாலுவின் நண்பன் பாஸ்கரன், பாலுவின் அழைப்பின் பேரில் தீபாவளிக்காக வந்திருந்தான். அவன் பெற்றோர்கள் வெளியூரில் இருந்தனர். இந்த ஒரு நாளைக்காக அவ்வளவு தூரம் எங்கே போவது ?
‘கவலையே படாதே. அவள் காதில் குண்டு போட்டாலும், விழாது. படுசெவி. ஐயையோ, இந்த வீட்டில் நாங்கள் பேசுவதெல்லாம் அம்முலுவுக்குக் காது கேட்குமென்றிருந்தால், எங்கள் அத்தனை பேருக்கும் நாக்கு இழுத்து விடவேண்டியதுதான் ‘ ‘
‘கெளரீ கலியாணம் வைபோகமே…. ‘
‘யாரப்பா அது ? குரல் ‘ஜம்மென்று இருக்கிறதே ‘ கம்பீரமா, புருஷக் குரல் மாதிரி ‘ ‘
‘யாரு, எல்லாம் செவிடாம்பாள் தான் ‘ ‘
‘குரலில் என்ன சுத்தம் ‘ ஆனால் அவள் பாடுவது அவளுக்கே கேட்காதல்லவா ? ‘
‘வாசுதேவ தவபாலா — அரசகுல காலா…. ‘
அம்முலுவின் குரல் கணீரென இயற்கையான காத்திரம் படைத்து நல்ல கணகணப்புடன் எழும்பி மலையருவி போல் வீட்டை நிறைத்தது. நட்டா முட்டியாய், தாயின் வாய்வழி கேட்டு நறுக்காய் நாலு உருப்படிகள் தான் அவளுக்குத் தெரியும். அவைகளும் அவளுக்குக் காது கேட்காது.
உள்ளே, ஆனந்தசிவம் பல்லைக் கடித்துக்கொண்டு தலைமேல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.
பாஸ்கரனும் பாலுவும் கீழிறங்கி வருகையில், குழந்தைகளெல்லாம் நீராடிவிட்டு எண்ணெய் பிசுக்கு உலருவதற்காகப் பழந்துணிகளைக் கட்டிக் கொண்டு மத்தாப்புக்களைக் கொளுத்திக் காண்பித்துக் கொண்டிருந்தன. அம்முலு கைகுழந்தையை முழங்காலில் போட்டுக்கொண்டு, எண்ணெய் தடவிக்கொண்டிருந்தாள். இன்னமும் சீக்காய் தேய்க்கும் கட்டம் வரவில்லையாதலால் பாப்பா தலையை தூக்கித் தூக்கி அவளையே பார்த்து பொக்கை வாயைக் காட்டிக் கொக்கரித்தது.
மதுரம் புதுத் துணிகளை எடுத்துவர மாடிக்குச் சென்றிருந்தாள். எப்பவுமே அப்படித்தான். உடல் நலுங்காத வேலைகளைத் தனக்குப் பங்கு போட்டுக் கொள்வதில் மதுரத்துக்கு அலாதி சாமர்த்தியமுண்டு. வரப்பிரசாதி என்றுகூட சொல்லலாம். சமையல் வீட்டுவேலைகளுக்கும், குழந்தைகளுக்குப் பணிவிடைக்கும் அம்முலுதான்.
அம்முவின் அசாதாரண அழகைக் கண்டு பாஸ்கரன் பிரமித்துப் போனான். முட்கள் நடுவே சப்பாத்திப் பூவைப்போல், இத்தனை பேர்களுக்குமிடையில், அவள் அழகின் பூரிப்பில் ஒரு தனி ஒதுக்கம், வீட்டுக்குப் புதிதாய் வந்திருக்கும் அவனால் அறிய முடிந்தது.
ஆம், அவளே ஒரு தனி உலகத்திலிருந்தாள்; நித்திய மெளன உலகம். மற்றவர்கள் பேசினால், மெளனப் படங்களில் காண்பதுபோல, உதட்டின் அசைவிலும் உடல் ஆட்டத்திலும் சமிக்கையிலும் அவள் அர்த்தம் கண்டுகொள்ளணுமேயொழிய, வாய்ப் பேச்சிலிருந்து அறிந்து கொள்ள முடியாது.
தினசரி, குழந்தை பெரியவர்களின் கூக்குரல்களும், சிறுஞ்சண்டை பெருஞ் சண்டைகளும், நாகரிகம் முற்ற முற்ற நாளடைவில் உலகத்தை நாசத்துக்கே இழுத்துச் செல்லும் தெருச் சந்தங்களும், சொல்வதெல்லாம் காது கேட்பதால் நேரும் கவலைகளும், அவள் உலகத்தில் புகுந்து, மற்றவர்களைச் செய்வது போல், உடலையும் மனதையும் துளைத்து உருக்கி அவளை உளுக்க வைக்கவில்லை. அவளை விட நாலு வயது மதுரம் இளையவள். ஆனால் மதுரத்திற்குக் கன்னத்துச்சத்தை ஒட்ட ஆரம்பித்து விட்டது. ஆனால் அலங்காரம், பூச்சு எல்லாம் அமர்களம்தான். தான் இன்னும் புது மெருகு அழியாமல் இருப்பதாகவே எண்ணம்.
அம்முலுவின் முகத்தில் இன்னமும் பால் சொட்டிற்று ஆயினும் கூந்தலில் மாத்திரம் இருண்ட மேகத்தில் மின்னல் போல், ஒன்றிரண்டு வெள்ளி மயிர்கள் புரண்டன. அவள் பல்வேறு பிடுங்கல்களுக்கு ஆளாகவில்லை. கணப்புச் சட்டியில் தணல் மூடிய பொன்னுருண்டை போல் ஒரே ஒரு மஹோன்னதமான துயரத்தில் துலங்கிக் கொண்டிருந்தாள்.
பாலுவையும் பாஸ்கரனையும் பார்த்துவிட்டுச் சட்டென எழுந்து, புன்னகை புரிந்த வண்ணம் குழந்தையை அலக்காய்த் தூக்கிக் கொண்டு வென்னீர் அறையுள் சென்றாள்.
‘உடம்பைப்பார், சரியான நாட்டுக் கட்டை‘ என்றான் பாலு. பாஸ்கரனுக்குத் திடாரென்று பாலுவைக் கண்டு கரிப்பு எடுத்தது.
‘என்ன முழிக்கிறாய் ? நாட்டுக் கட்டையென்றால் எல்லா விதத்திலும் நாட்டுக் கட்டைதான். எழுதப் படிக்கத் தெரியாது. எல்லாம் கைநாட்டுதான். ‘இந்த இடது கைப் பெருவிரல் குறி செவிடாம்பாள் — இல்லை–அம்முலு–இல்லை அலமேலு அம்மாளுடையது. ‘ ‘இன்று முழுவதும் பற்றுப் பாத்திரங்களைத் தேய் அல்லது கிணற்றிலிருந்து ஜலம் இழுத்து ஊற்று ‘ என்றால் செய்து கொண்டிருப்பாள். அதுவும் என் அக்காளுக்கு வேலை வாங்க சொல்லிக் கொடுக்கணுமா ? ‘
அம்முலுவுக்கு, பாலு தன்னை ஏளனம் பண்ணுவதெல்லாம் தெரியாது. கொல்லைப் புறத்து முற்றத்தில் குழந்தையின் தலையைத் துவட்டிக் கொண்டே ஆகாயத்தை குழந்தைக்குச் சுட்டி வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தாள்.
திடாரென்று ஒரு அவுட்டு வாணம் கிளம்பி ஆகாயத்தில் சீறிக் கொண்டே சென்று ‘பட் ‘டென்று வெடித்தது. அதனின்று நாலைந்து வர்ணங்களில், நஷத்திரக் கூட்டங்கள் உதிர்ந்து குடை கவிந்து அவிந்தன. ஆயினும் ஒரே ஒரு நீலப் பொறி மாத்திரம் அழியாது, வெகு தூரம் வானவெளியில் தனியே மிதந்து சென்றது. அதன் கதியைக் கண்ணுக்கெட்டிய வரை கவனித்த வண்ணம், அம்முலு அதிசயித்து நின்றாள்.
அது கடைசியாய்க் கரியாய்த்தான் ஆயிற்றோ அல்லது நஷத்திரங்களுடன் கலந்துவிட்டதோ ? நிச்சயமாய்த் தெரியவில்லை.
அம்முலு பெருமூச்செறிந்தாள். குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
மதுரம் புதுத் துணிகளுக்குக் குங்குமம் தடவிக் கொசுவிக் கொண்டிருந்தாள். குழந்தைகள் அவளைச் சுற்றி ஆரவாரித்துக் கொண்டிருந்தன. ஆனந்தசிவம் அறையை விட்டு வெளியே வந்து நின்று கையை முறித்து முதுகைச் சொரிந்து கொண்டிருந்தான்.
‘இந்தாடா வாசு, உனக்கு சொக்காய் வேஷ்டி; மணி, உனக்கு அரை நிஜார் சொக்காய்; சீனு, உனக்கு சொக்காய் வேஷ்டி; கமலுவுக்குப் பாவாடை ஜாக்கெட்; எனக்குப் புடவை ரவுக்கை; பாலு, உனக்கு உன் அத்திம்பேருக்கும் வேஷ்டி துண்டு– ‘
அம்முலு எல்லோருக்கும் பங்கீடு ஆவதைப் பார்த்துக் கொண்டு வாய் பேசாது தன் பங்கிற்காகக் காத்துக் கொண்டிருந்தாள் முகத்தில் ஆவல் ததும்ப. புன்சிரிப்புடன் அப்படி அவள் நின்றது, அப்பா ஆபீஸிலிருந்து வருகையில் வாங்கி வந்த பொட்டலத்தைப் பிரிக்கக் காத்துக்கொண்டிருந்த குழந்தை மாதிரியிருந்தது.
திடாரென்று இம்சையான மெளனம் அங்கு தேங்கியது.
அம்முலுவை அவர்கள் அடியோடு மறந்து விட்டார்கள். பாஸ்கரனுக்கு முகம் திகுதிகு என்று எரிந்தது. கண்ணுக்கெதிரில், இருள் தூலங்கள், கூட்டானிட்டாற் போல், ஒன்றன்பின் ஒன்று குறுக்கே பாய்ந்து சென்றன.
இங்கு நான் ஏன் வந்து மாட்டிக் கொண்டேன் ?
இந்த வீடே காடு மாதிரி இருந்ததேயொழிய வீடாய் இல்லை. அவரவர் துணியை அவரவர் பிய்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தால் மாமிசத்துண்டை முன்னங்கால்களுக்கிடையில் பதுக்கிக்கொண்டு ஒன்றுக்கொன்று ‘உர்–ர்– ‘ என்று உறுமிக்கொண்டிருக்கும் மிருகங்கள்….
அம்முலு–
ஆனந்தசிவத்தின் முகத்தில் அசடு தட்டிற்று. போன தீபாவளிக்கு என்ன பண்ணினானோ, அல்லது இந்த தீபாவளிக்குப் பாஸ்கரனில்லாவிட்டால் என்ன சாக்குச் சொல்லித் தட்டிக் கழித்திருப்பானோ ? இருந்தாலும் மூணாம் மனிதனுக்கெதிரில்….. மதுரத்தைப் பார்த்துக் கடுகடுவென விழித்தான். மதுரம் மென்று விழுங்கினாள்.
‘எல்லாம் ஏகப்பட்ட செலவாயிடுத்து, நான் என்ன பண்றது ? உள்ளே என் கலியாணப் புடவை இருக்கு. வேணுமானால்… ‘
ஆனந்தசிவம் பல்லைக் கடித்துக்கொண்டு சீறினான். கொண்டு வா அதை இல்லை, இவளை அழைத்துக் கொண்டு போய்க் கொடு — என்ன ஸார், பாருங்கோ இந்த பொம்மனாட்டிகளை ‘ நமக்கு இவர்களோடு கடைக்குப் போகப் பொழுது இல்லையே என்று காசை இவர்கள் கிட்டேவிட்டால் இப்படித்தான். தன் காரியம் தன் கணக்குத்தான்– ‘
Damn you ‘ உங்களைப் பற்றி எனக்கு ஒண்ணும் தெரிய வேண்டாம். இங்கே நான் ஏன் வந்து மாட்டிக் கொண்டேன் ? Damn you, Damn பாலு Damn all of you ‘
பட்டுப் புடவையுடன் அம்முலு மாடி அறையிலிருந்து வெளிப்பட்டாள். சுயம்வர மண்டபத்திற்கு வந்த ராஜகுமாரி மாதிரியிருந்தாள் அவள் பின்னால் மதுரம், புதுப் புடவையைக் கட்டியும், சோபையிழந்து, தாதி மாதிரி.
அம்முலு வந்து அண்ணனை நமஸ்கரித்தாள்.
ஆனந்தசிவத்துக்கு தொண்டையை என்னவோ பண்ணிற்று. விழிகளில் கண்ணீர் விளும்பு கட்டியது. தொண்டையைப் பலமாய்க் கனைத்துக்கொண்டு ஸ்னானத்திற்குச் சரேலென்று சென்றான்.
அம்முலு மன்னியைச் சேவித்துக்கொண்டாள். மதுரம் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே, ‘தீர்க்க சுமங்கலீ பவா ‘ என்று ஆசிர்வதித்தாள். ஆசி சாபம்போல் ஒலித்தது.
பாஸ்கரனுக்கு, குளித்துவிட்டுப் படியேறுகையில் ‘ஏண்டாப்பா இந்த வீட்டிற்கு வந்தோம் ‘ என்ற ஒரே எண்ணம், இசைத்தட்டில் கீறல் விழுந்தாற்போல், திரும்பத் திரும்ப அதே எண்ணம், இடம் தூக்கி எடுத்து விடுவார் இன்றி, நெஞ்சில் தவித்தது.
மாடியில் ஆனந்தசிவம், மதுரத்திற்குப் பட்டாசு சுடக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஐந்து பெற்றும் இன்னமும் ஆசை விடவில்லை. அவளுக்கும் பட்டாசுக்குப் பயப்பட ஆசைவிடவில்லை.
பாஸ்கரன் பாலு அறைக்குச் சென்றான். பாலு ஒரு சோமாசியை அப்படியே முழுசாய் விழுங்க முயன்று கொண்டிருந்தான்.
‘அம்முலுவின் கணவன் எங்கே ? ‘ என்று பாஸ்கரன் ஏதோ பேச்சுவாக்கில் கேட்பதுபோல் கேட்டான்.
‘ஓ, அதுவா, அது ஒரு கதை. அவள் கணவன் எங்கே என்று ஒருத்தருக்கும் தெரியாது. அவன் ஒரு சங்கீத வித்வான். அப்படியென்றால் என்ன தெரியுமோல்லியோ ? தேங்காமூடி வித்வான். இஸ்பேட் ராஜா. ‘ வாய் நிறைய அடைத்துக் கொண்டு, கன்னம் உப்பக் குதப்புகையில், பாலுவின் விழிகள் பயங்கரமாய்ப் பிதுங்கின.
‘அக்காவுக்கும் அம்முலுவுக்கும் ஒரே பந்தலில்தான் கலியாணம் நடந்தது. பையன் கொஞ்சம் தறிதலை. படிப்பு வரவில்லை என்றுதான் பாட்டில் போட்டிருந்தார்கள் என்று பந்தல் பேச்சு. ஏதோ பொறுப்பையும் தலையில் கட்டிப் போட்டால், பையன் உருப்பட்டு விடுவான் என்று பெற்றவர்கள் எண்ணம். அதனால் ஒரு கலியாணத்தையும் பண்ணி வைத்தார்கள். ‘
‘அவனுக்கும் அம்முலுவுக்கும் ஒரு வயது வித்தியாசம் தானிருக்கும் என்று நினைக்கிறேன். நான் ஒரு பத்து வருஷத்திற்கு முந்திய கதை சொல்கிறேன். ‘
‘தலை தீபாவளி வந்தது. அதுவும் ஒன்றாகத்தான் நடந்தது. மாப்பிள்ளைப் பையனை வழக்கம்போல் கூப்பிட்டிருந்தார்கள். மாப்பிள்ளை ஒரு கல்லிழைத்த மோதிரத்தை சண்டை போட்டு வாங்கினார். வித்வான் அட்சரம் எண்ணி தாளம் போடுவது சபைக்கு எப்படித் தெரிகிறது ? ‘
‘எல்லாம் ‘குஷி ‘யாய்த்தானிருந்தது மாப்பிள்ளைப் பையன்கள் பட்டாசு சுட்டான்கள். பெண்டாட்டிகளுக்கு சுடக் கற்றுக் கொடுத்தான்கள் — இல்லையா சேஷ்டையெல்லாம் ‘ ‘
பாலு தாத்தா மாதிரி பேசினான்.
‘பொல்லாத வேளை வந்தால் யார் என்ன பண்ண முடியும் ? அம்முலு, பட்டாசு வெடித்து அப்பொழுதான் அணைந்து போன விளக்கை குனிந்து ஏற்றிக்கொண்டிருந்தாள். அம்முலு புதுப் புடவையும் புதுமணப் பெண்ணுமாய் விளக்கை ஏற்றுகையில் எப்படியிருந்திருப்பாள். அந்தக் காட்சியை எண்ணிப் பார்த்துக்கொள். ‘
அவள் அகமுடையானுக்குத் திடாரென கும்மாளம் பிறந்து விட்டது. கல்யாணி ராகத்தின் உச்சஸ்தாயி ஸ்வரத்தை ஒரே மூச்சாய்ப் பிடித்துக் கொண்டு, இரண்டு கையிலும் ஓலைப் பட்டாசுகளை பக்கத்து விளக்கில் ஏற்றி அவள் முகத்துக்கெதிரே பிடித்தான்.
‘ப–டா–ர்– ‘
இரண்டு காதுகளையும் கெட்டியாப் பொத்திக் கொண்டு அம்முலு அப்படியே, குனிந்த தலை நிமிராது, குன்றி உட்கார்ந்து விட்டாள்.
பையனுக்குக் கிலி பிடித்துவிட்டது. ஏதோ செய்யத் தகாததைச் செய்துவிட்டோம் என்று தெரிந்து விட்டது இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தான்.
‘அம்முலு ‘—அம்முலு ‘ ‘ ‘
அன்றிலிருந்து அம்முலுவுக்குக் காதே கேட்கவில்லை. திருப்பித் திருப்பி என்ன கேட்டாலும், ‘நீளமாய் ஒரே சத்தம்தான் எனக்குக் கேட்கிறது — யாரோ பாடறாளா ? ‘ என்பாள்.
‘என்ன நடந்தது ? எது நடந்தது ? மாப்பிள்ளை பையன் எங்கே ? ‘
‘மாப்பிள்ளைப் பையனாவது மண்ணாங்கட்டியாவது ‘ எண்ணெய் ஸ்னானம் பண்ணி, புது வேஷ்டியுடன் ஓடினவன்தான். இன்னமும் அகப்படப் போகிறான். இங்கு வந்தவனுமில்லை. அவன் வீட்டுக்குத் திரும்பியவனுமில்லை. ஆச்சு, பத்து வருஷங்களும் போச்சு. அவனைத் தேடாத இடமில்லை. அம்முலுவுக்குப் பண்ணாத வைத்தியமில்லை. ஒன்றும் பயனில்லை. காதும் போச்சு, கணவனும் போனான். வாழ்வும் போச்சு. ‘
அதே ஏக்கத்தில் அம்முலுவின் தாயார் இறந்து விட்டாள். ஒரே பெண். அப்புறம் அம்முலுவுக்கு கதி ஆனந்தசிவம்தான்.
அம்முலு மனம் என்ன பாடுபட்டிருக்குமோ, அதை ஆராய எனக்கு யோக்யதையுமில்லை, தைரியமுமில்லை. அவள் தன் வாழ்க்கையின் சூன்யத்தில் தான் ஐக்கியமாகி விட்டாளோ, அல்லது இன்னமும் என்றாவது ஒரு நாள் அவள் கணவன் திரும்பி வருவான் என்னும் நம்பிக்கையில் தான் இன்னமும் ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கிறாளோ ? ‘
அறைக்கு வெளியே யாரோ போகும் அரவம் கேட்டது. பாஸ்கரன் எட்டிப் பார்த்தான்.
அம்முலு புதுப்புடவை சரசரக்க வான வீதியில் மிதந்து சென்ற நீலப்பொறிபோல், அதிசயக் கனவு கண்டு இன்னும் அதனின்று விழித்தெழாத கண்களுடன், புன்னகை புரிந்த் வண்ணம் நிதானமாய் மாடிப்படி வழியாக கீழே போய்க் கொண்டிருந்தாள்.

    அம்முவுக்கு தூக்கமே பிடிக்கவில்லை. பழக்கக்கோளாறு அப்போதைக்கப்போது கடியாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் மணி பார்க்கத் தெரிந்திருந்தால்தானே ஆனநேரம் தெரியும் ?அப்புறம் படுத்திருக்கவும் முடியவில்லை. எழுந்து போய் பல் விளக்கிவிட்டு, வென்னீரடுப்பை மூட்டி, தாமிரம் பளபளக்கத் தேய்த்து செம்மண் பூசிய வென்னீர்த் தவலையை அடுப்பில் ஏற்றினாள். பிறகு எண்ணெய் தேய்த்துக் கொண்டாள். அளகபாரத்தில் அங்கங்கே வெள்ளி சுடர்விட்டது.வேறு யாராவது, வெற்றிலை மடித்துக் கொடுத்து, குங்குமமிட்டு, ‘கெளரி கல்யாணம் ‘ பாடி தலையில் ஒரு கை எண்ணெய் வைத்தால் அவளுக்கு இஷ்டம் தான். ஆனால் மன்னி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

 

      பக்ஷணமெல்லாம் அம்முலுதான் பண்ணினாள். ஆனால் நேற்று முழுக்க சற்று உளையக் காரியம் தான். இப்போ போய், நேரமாச்சுன்னு அண்ணா அறைக்கதவைத் தட்டி எப்படி எழுப்புவது ?எதற்கும் ஸ்னானம் பண்ணிவிட்டு இட்டிலிப் பாத்திரத்தை அடுப்பில் போட்டு விட்டு வந்தால், மன்னியையும் குழந்தைகளையும் எழுப்பச் சரியாயிருக்கும்.முழுகிவிட்டு வந்து கண்ணாடி எதிரில் நின்றாள். அவள் நிறம் உற்ற சிவப்பைச் சேர்ந்ததல்ல; வெளுப்புமல்ல. இரண்டும் கலந்தவொரு பொன்னிறம், முகத்தில் காலத்தின் வடுக்களோ, வயதின் கோளாறுகளோ இல்லை. இன்னமும் பத்து வருஷங்களானாலும் அவளால் இப்படியே இருக்கமுடியுமோ என்னவோ ? புன்னகையில் இடது கன்னம் குழிந்தது.குழந்தை மாதிரி கையைக் கொட்டிச் சிரித்துக் கொண்டே ஓடிப்போய் அண்ணாவின் அறைக் கதவைத் தட்டினாள்.‘மன்னி ‘ மன்னி ‘ ‘‘ஊம்– ?ஆ– ? ‘உள்ளிருந்து கொட்டாவிகள் கிளம்பின.‘மன்னி ‘ — தீபாவளி வந்துடுத்து, எழுந்திரு ‘ ‘‘இப்போத்தானே உடம்பை சாய்ச்சேன் ‘ ‘ மதுரம் இன்னொரு கொட்டாவி விட்டாள்.

 

   ‘இதென்ன அக்கிரமம் ‘ பாதிராத்திரி ஒண்ணரை மணிக்கே தீபாவளி வந்து விடுமா என்ன ? ‘ என்று அவள் அகமுடையான் சாப்பிட மறந்தாலும், கையில் கட்டிக் கொள்ள மறக்காத கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.‘பம்பாயெல்லாம் ராத்திரி முழுக்கவே தீபாவளி தான் ‘ என்றாள் மதுரம்.‘உங்கள் அண்ணாவாத்துப் பெருமை இங்கே வேண்டாம். இந்தப் பக்கமெல்லாம் விடிய இரண்டு நாழிக்குத்தான் தீபாவளி. அதோ அம்முலு கதவையுடைக்க ஆரம்பித்து விட்டாள். சொன்னாலும் கேட்காது. மரியாதையாய் எழுந்து நீ வெளியே போய்விடு. நான் இன்னும் நாலு இன்னும் நாலு மணி நேரமாவது தூங்கணும். ‘‘விடிஞ்சா அமாவாசை. தர்ப்பணமுண்டு. தெரியுமோன்னோ ? ‘‘தர்ப்பணம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இட்டிலி முன்னாள் ஆகட்டும் ‘ என்று அவன் திரும்பிப் படுத்துக் கொண்டான்.‘தூங்கவிடமாட்டேங்கறாளே பாவி கொள்ளிவாய்ப் பிசாசு மாதிரி தானும் தூங்கமாட்டேன் என்கிறாள் ‘ என்று உரக்கத் திட்டிக் கொண்டே, மதுரம் கதவைத் திறந்தாள்.

 

      அம்முலு எதிரே நின்றாள். அவள் மனதில் பொங்கி வழியும் தீபாவளிக் கொந்தளிப்பில், மன்னியின் முகச் சுளிப்புக் கூட தெரியவில்லை.‘மன்னி ‘ மன்னி ‘ தீபாவளி ‘ ‘ அம்முலு கையைக் கொட்டினாள். ‘முன்னாலே உன்னைத் தூக்கி மணையில் வைக்கலாம் வா ‘ ‘ முகத்தை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு மதுரம் வென்னீருள் அறைப்பக்கம் சென்றாள்.‘அடே வாசு ‘ அடே மணி ‘ சீனா ‘ கமலம் ‘ எல்லோரும் எழுந்திருங்கோ தீபாவளி ‘ தீபாவளி ‘ ‘‘இந்தச் செவிடு பண்ணற ரகளையைப் பாரு ‘ என்று மாடியில் படுத்திருந்த மதுரத்தின் தம்பி பாலு இரைந்தான்.‘என்னப்பா இப்படி கத்தறே ‘ காதிலே விழப்போகிறது. ‘பாலுவின் நண்பன் பாஸ்கரன், பாலுவின் அழைப்பின் பேரில் தீபாவளிக்காக வந்திருந்தான். அவன் பெற்றோர்கள் வெளியூரில் இருந்தனர். இந்த ஒரு நாளைக்காக அவ்வளவு தூரம் எங்கே போவது ?‘கவலையே படாதே. அவள் காதில் குண்டு போட்டாலும், விழாது. படுசெவி. ஐயையோ, இந்த வீட்டில் நாங்கள் பேசுவதெல்லாம் அம்முலுவுக்குக் காது கேட்குமென்றிருந்தால், எங்கள் அத்தனை பேருக்கும் நாக்கு இழுத்து விடவேண்டியதுதான் ‘ ‘‘கெளரீ கலியாணம் வைபோகமே…. ‘‘யாரப்பா அது ? குரல் ‘ஜம்மென்று இருக்கிறதே ‘ கம்பீரமா, புருஷக் குரல் மாதிரி ‘ ‘‘யாரு, எல்லாம் செவிடாம்பாள் தான் ‘ ‘‘குரலில் என்ன சுத்தம் ‘ ஆனால் அவள் பாடுவது அவளுக்கே கேட்காதல்லவா ? ‘‘வாசுதேவ தவபாலா — அரசகுல காலா…. ‘அம்முலுவின் குரல் கணீரென இயற்கையான காத்திரம் படைத்து நல்ல கணகணப்புடன் எழும்பி மலையருவி போல் வீட்டை நிறைத்தது.

 

    நட்டா முட்டியாய், தாயின் வாய்வழி கேட்டு நறுக்காய் நாலு உருப்படிகள் தான் அவளுக்குத் தெரியும். அவைகளும் அவளுக்குக் காது கேட்காது.உள்ளே, ஆனந்தசிவம் பல்லைக் கடித்துக்கொண்டு தலைமேல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.பாஸ்கரனும் பாலுவும் கீழிறங்கி வருகையில், குழந்தைகளெல்லாம் நீராடிவிட்டு எண்ணெய் பிசுக்கு உலருவதற்காகப் பழந்துணிகளைக் கட்டிக் கொண்டு மத்தாப்புக்களைக் கொளுத்திக் காண்பித்துக் கொண்டிருந்தன. அம்முலு கைகுழந்தையை முழங்காலில் போட்டுக்கொண்டு, எண்ணெய் தடவிக்கொண்டிருந்தாள். இன்னமும் சீக்காய் தேய்க்கும் கட்டம் வரவில்லையாதலால் பாப்பா தலையை தூக்கித் தூக்கி அவளையே பார்த்து பொக்கை வாயைக் காட்டிக் கொக்கரித்தது.மதுரம் புதுத் துணிகளை எடுத்துவர மாடிக்குச் சென்றிருந்தாள். எப்பவுமே அப்படித்தான். உடல் நலுங்காத வேலைகளைத் தனக்குப் பங்கு போட்டுக் கொள்வதில் மதுரத்துக்கு அலாதி சாமர்த்தியமுண்டு. வரப்பிரசாதி என்றுகூட சொல்லலாம்.

 

    சமையல் வீட்டுவேலைகளுக்கும், குழந்தைகளுக்குப் பணிவிடைக்கும் அம்முலுதான்.அம்முவின் அசாதாரண அழகைக் கண்டு பாஸ்கரன் பிரமித்துப் போனான். முட்கள் நடுவே சப்பாத்திப் பூவைப்போல், இத்தனை பேர்களுக்குமிடையில், அவள் அழகின் பூரிப்பில் ஒரு தனி ஒதுக்கம், வீட்டுக்குப் புதிதாய் வந்திருக்கும் அவனால் அறிய முடிந்தது.ஆம், அவளே ஒரு தனி உலகத்திலிருந்தாள்; நித்திய மெளன உலகம். மற்றவர்கள் பேசினால், மெளனப் படங்களில் காண்பதுபோல, உதட்டின் அசைவிலும் உடல் ஆட்டத்திலும் சமிக்கையிலும் அவள் அர்த்தம் கண்டுகொள்ளணுமேயொழிய, வாய்ப் பேச்சிலிருந்து அறிந்து கொள்ள முடியாது.தினசரி, குழந்தை பெரியவர்களின் கூக்குரல்களும், சிறுஞ்சண்டை பெருஞ் சண்டைகளும், நாகரிகம் முற்ற முற்ற நாளடைவில் உலகத்தை நாசத்துக்கே இழுத்துச் செல்லும் தெருச் சந்தங்களும், சொல்வதெல்லாம் காது கேட்பதால் நேரும் கவலைகளும், அவள் உலகத்தில் புகுந்து, மற்றவர்களைச் செய்வது போல், உடலையும் மனதையும் துளைத்து உருக்கி அவளை உளுக்க வைக்கவில்லை. அவளை விட நாலு வயது மதுரம் இளையவள். ஆனால் மதுரத்திற்குக் கன்னத்துச்சத்தை ஒட்ட ஆரம்பித்து விட்டது. ஆனால் அலங்காரம், பூச்சு எல்லாம் அமர்களம்தான். தான் இன்னும் புது மெருகு அழியாமல் இருப்பதாகவே எண்ணம்.அம்முலுவின் முகத்தில் இன்னமும் பால் சொட்டிற்று ஆயினும் கூந்தலில் மாத்திரம் இருண்ட மேகத்தில் மின்னல் போல், ஒன்றிரண்டு வெள்ளி மயிர்கள் புரண்டன. அவள் பல்வேறு பிடுங்கல்களுக்கு ஆளாகவில்லை.

 

   கணப்புச் சட்டியில் தணல் மூடிய பொன்னுருண்டை போல் ஒரே ஒரு மஹோன்னதமான துயரத்தில் துலங்கிக் கொண்டிருந்தாள்.பாலுவையும் பாஸ்கரனையும் பார்த்துவிட்டுச் சட்டென எழுந்து, புன்னகை புரிந்த வண்ணம் குழந்தையை அலக்காய்த் தூக்கிக் கொண்டு வென்னீர் அறையுள் சென்றாள்.‘உடம்பைப்பார், சரியான நாட்டுக் கட்டை‘ என்றான் பாலு. பாஸ்கரனுக்குத் திடாரென்று பாலுவைக் கண்டு கரிப்பு எடுத்தது.‘என்ன முழிக்கிறாய் ? நாட்டுக் கட்டையென்றால் எல்லா விதத்திலும் நாட்டுக் கட்டைதான். எழுதப் படிக்கத் தெரியாது. எல்லாம் கைநாட்டுதான். ‘இந்த இடது கைப் பெருவிரல் குறி செவிடாம்பாள் — இல்லை–அம்முலு–இல்லை அலமேலு அம்மாளுடையது. ‘ ‘இன்று முழுவதும் பற்றுப் பாத்திரங்களைத் தேய் அல்லது கிணற்றிலிருந்து ஜலம் இழுத்து ஊற்று ‘ என்றால் செய்து கொண்டிருப்பாள். அதுவும் என் அக்காளுக்கு வேலை வாங்க சொல்லிக் கொடுக்கணுமா ? ‘அம்முலுவுக்கு, பாலு தன்னை ஏளனம் பண்ணுவதெல்லாம் தெரியாது.

 

    கொல்லைப் புறத்து முற்றத்தில் குழந்தையின் தலையைத் துவட்டிக் கொண்டே ஆகாயத்தை குழந்தைக்குச் சுட்டி வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தாள்.திடாரென்று ஒரு அவுட்டு வாணம் கிளம்பி ஆகாயத்தில் சீறிக் கொண்டே சென்று ‘பட் ‘டென்று வெடித்தது. அதனின்று நாலைந்து வர்ணங்களில், நஷத்திரக் கூட்டங்கள் உதிர்ந்து குடை கவிந்து அவிந்தன. ஆயினும் ஒரே ஒரு நீலப் பொறி மாத்திரம் அழியாது, வெகு தூரம் வானவெளியில் தனியே மிதந்து சென்றது. அதன் கதியைக் கண்ணுக்கெட்டிய வரை கவனித்த வண்ணம், அம்முலு அதிசயித்து நின்றாள்.அது கடைசியாய்க் கரியாய்த்தான் ஆயிற்றோ அல்லது நஷத்திரங்களுடன் கலந்துவிட்டதோ ? நிச்சயமாய்த் தெரியவில்லை.அம்முலு பெருமூச்செறிந்தாள். குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.மதுரம் புதுத் துணிகளுக்குக் குங்குமம் தடவிக் கொசுவிக் கொண்டிருந்தாள். குழந்தைகள் அவளைச் சுற்றி ஆரவாரித்துக் கொண்டிருந்தன. ஆனந்தசிவம் அறையை விட்டு வெளியே வந்து நின்று கையை முறித்து முதுகைச் சொரிந்து கொண்டிருந்தான்.

 

    ‘இந்தாடா வாசு, உனக்கு சொக்காய் வேஷ்டி; மணி, உனக்கு அரை நிஜார் சொக்காய்; சீனு, உனக்கு சொக்காய் வேஷ்டி; கமலுவுக்குப் பாவாடை ஜாக்கெட்; எனக்குப் புடவை ரவுக்கை; பாலு, உனக்கு உன் அத்திம்பேருக்கும் வேஷ்டி துண்டு– ‘அம்முலு எல்லோருக்கும் பங்கீடு ஆவதைப் பார்த்துக் கொண்டு வாய் பேசாது தன் பங்கிற்காகக் காத்துக் கொண்டிருந்தாள் முகத்தில் ஆவல் ததும்ப. புன்சிரிப்புடன் அப்படி அவள் நின்றது, அப்பா ஆபீஸிலிருந்து வருகையில் வாங்கி வந்த பொட்டலத்தைப் பிரிக்கக் காத்துக்கொண்டிருந்த குழந்தை மாதிரியிருந்தது.திடாரென்று இம்சையான மெளனம் அங்கு தேங்கியது.அம்முலுவை அவர்கள் அடியோடு மறந்து விட்டார்கள். பாஸ்கரனுக்கு முகம் திகுதிகு என்று எரிந்தது. கண்ணுக்கெதிரில், இருள் தூலங்கள், கூட்டானிட்டாற் போல், ஒன்றன்பின் ஒன்று குறுக்கே பாய்ந்து சென்றன.இங்கு நான் ஏன் வந்து மாட்டிக் கொண்டேன் ?இந்த வீடே காடு மாதிரி இருந்ததேயொழிய வீடாய் இல்லை. அவரவர் துணியை அவரவர் பிய்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தால் மாமிசத்துண்டை முன்னங்கால்களுக்கிடையில் பதுக்கிக்கொண்டு ஒன்றுக்கொன்று ‘உர்–ர்– ‘ என்று உறுமிக்கொண்டிருக்கும் மிருகங்கள்….அம்முலு–ஆனந்தசிவத்தின் முகத்தில் அசடு தட்டிற்று. போன தீபாவளிக்கு என்ன பண்ணினானோ, அல்லது இந்த தீபாவளிக்குப் பாஸ்கரனில்லாவிட்டால் என்ன சாக்குச் சொல்லித் தட்டிக் கழித்திருப்பானோ ? இருந்தாலும் மூணாம் மனிதனுக்கெதிரில்….. மதுரத்தைப் பார்த்துக் கடுகடுவென விழித்தான்.

 

     மதுரம் மென்று விழுங்கினாள்.‘எல்லாம் ஏகப்பட்ட செலவாயிடுத்து, நான் என்ன பண்றது ? உள்ளே என் கலியாணப் புடவை இருக்கு. வேணுமானால்… ‘ஆனந்தசிவம் பல்லைக் கடித்துக்கொண்டு சீறினான். கொண்டு வா அதை இல்லை, இவளை அழைத்துக் கொண்டு போய்க் கொடு — என்ன ஸார், பாருங்கோ இந்த பொம்மனாட்டிகளை ‘ நமக்கு இவர்களோடு கடைக்குப் போகப் பொழுது இல்லையே என்று காசை இவர்கள் கிட்டேவிட்டால் இப்படித்தான். தன் காரியம் தன் கணக்குத்தான்– ‘Damn you ‘ உங்களைப் பற்றி எனக்கு ஒண்ணும் தெரிய வேண்டாம். இங்கே நான் ஏன் வந்து மாட்டிக் கொண்டேன் ? Damn you, Damn பாலு Damn all of you ‘பட்டுப் புடவையுடன் அம்முலு மாடி அறையிலிருந்து வெளிப்பட்டாள். சுயம்வர மண்டபத்திற்கு வந்த ராஜகுமாரி மாதிரியிருந்தாள் அவள் பின்னால் மதுரம், புதுப் புடவையைக் கட்டியும், சோபையிழந்து, தாதி மாதிரி.அம்முலு வந்து அண்ணனை நமஸ்கரித்தாள்.ஆனந்தசிவத்துக்கு தொண்டையை என்னவோ பண்ணிற்று.

 

     விழிகளில் கண்ணீர் விளும்பு கட்டியது. தொண்டையைப் பலமாய்க் கனைத்துக்கொண்டு ஸ்னானத்திற்குச் சரேலென்று சென்றான்.அம்முலு மன்னியைச் சேவித்துக்கொண்டாள். மதுரம் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே, ‘தீர்க்க சுமங்கலீ பவா ‘ என்று ஆசிர்வதித்தாள். ஆசி சாபம்போல் ஒலித்தது.பாஸ்கரனுக்கு, குளித்துவிட்டுப் படியேறுகையில் ‘ஏண்டாப்பா இந்த வீட்டிற்கு வந்தோம் ‘ என்ற ஒரே எண்ணம், இசைத்தட்டில் கீறல் விழுந்தாற்போல், திரும்பத் திரும்ப அதே எண்ணம், இடம் தூக்கி எடுத்து விடுவார் இன்றி, நெஞ்சில் தவித்தது.மாடியில் ஆனந்தசிவம், மதுரத்திற்குப் பட்டாசு சுடக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஐந்து பெற்றும் இன்னமும் ஆசை விடவில்லை. அவளுக்கும் பட்டாசுக்குப் பயப்பட ஆசைவிடவில்லை.பாஸ்கரன் பாலு அறைக்குச் சென்றான். பாலு ஒரு சோமாசியை அப்படியே முழுசாய் விழுங்க முயன்று கொண்டிருந்தான்.‘அம்முலுவின் கணவன் எங்கே ? ‘ என்று பாஸ்கரன் ஏதோ பேச்சுவாக்கில் கேட்பதுபோல் கேட்டான்.‘ஓ, அதுவா, அது ஒரு கதை. அவள் கணவன் எங்கே என்று ஒருத்தருக்கும் தெரியாது. அவன் ஒரு சங்கீத வித்வான். அப்படியென்றால் என்ன தெரியுமோல்லியோ ? தேங்காமூடி வித்வான். இஸ்பேட் ராஜா. ‘ வாய் நிறைய அடைத்துக் கொண்டு, கன்னம் உப்பக் குதப்புகையில், பாலுவின் விழிகள் பயங்கரமாய்ப் பிதுங்கின.‘அக்காவுக்கும் அம்முலுவுக்கும் ஒரே பந்தலில்தான் கலியாணம் நடந்தது.

 

      பையன் கொஞ்சம் தறிதலை. படிப்பு வரவில்லை என்றுதான் பாட்டில் போட்டிருந்தார்கள் என்று பந்தல் பேச்சு. ஏதோ பொறுப்பையும் தலையில் கட்டிப் போட்டால், பையன் உருப்பட்டு விடுவான் என்று பெற்றவர்கள் எண்ணம். அதனால் ஒரு கலியாணத்தையும் பண்ணி வைத்தார்கள். ‘‘அவனுக்கும் அம்முலுவுக்கும் ஒரு வயது வித்தியாசம் தானிருக்கும் என்று நினைக்கிறேன். நான் ஒரு பத்து வருஷத்திற்கு முந்திய கதை சொல்கிறேன். ‘‘தலை தீபாவளி வந்தது. அதுவும் ஒன்றாகத்தான் நடந்தது. மாப்பிள்ளைப் பையனை வழக்கம்போல் கூப்பிட்டிருந்தார்கள். மாப்பிள்ளை ஒரு கல்லிழைத்த மோதிரத்தை சண்டை போட்டு வாங்கினார். வித்வான் அட்சரம் எண்ணி தாளம் போடுவது சபைக்கு எப்படித் தெரிகிறது ? ‘‘எல்லாம் ‘குஷி ‘யாய்த்தானிருந்தது மாப்பிள்ளைப் பையன்கள் பட்டாசு சுட்டான்கள். பெண்டாட்டிகளுக்கு சுடக் கற்றுக் கொடுத்தான்கள் — இல்லையா சேஷ்டையெல்லாம் ‘ ‘பாலு தாத்தா மாதிரி பேசினான்.‘பொல்லாத வேளை வந்தால் யார் என்ன பண்ண முடியும் ? அம்முலு, பட்டாசு வெடித்து அப்பொழுதான் அணைந்து போன விளக்கை குனிந்து ஏற்றிக்கொண்டிருந்தாள். அம்முலு புதுப் புடவையும் புதுமணப் பெண்ணுமாய் விளக்கை ஏற்றுகையில் எப்படியிருந்திருப்பாள். அந்தக் காட்சியை எண்ணிப் பார்த்துக்கொள்.

 

     ‘அவள் அகமுடையானுக்குத் திடாரென கும்மாளம் பிறந்து விட்டது. கல்யாணி ராகத்தின் உச்சஸ்தாயி ஸ்வரத்தை ஒரே மூச்சாய்ப் பிடித்துக் கொண்டு, இரண்டு கையிலும் ஓலைப் பட்டாசுகளை பக்கத்து விளக்கில் ஏற்றி அவள் முகத்துக்கெதிரே பிடித்தான்.‘ப–டா–ர்– ‘இரண்டு காதுகளையும் கெட்டியாப் பொத்திக் கொண்டு அம்முலு அப்படியே, குனிந்த தலை நிமிராது, குன்றி உட்கார்ந்து விட்டாள்.பையனுக்குக் கிலி பிடித்துவிட்டது. ஏதோ செய்யத் தகாததைச் செய்துவிட்டோம் என்று தெரிந்து விட்டது இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தான்.‘அம்முலு ‘—அம்முலு ‘ ‘ ‘அன்றிலிருந்து அம்முலுவுக்குக் காதே கேட்கவில்லை. திருப்பித் திருப்பி என்ன கேட்டாலும், ‘நீளமாய் ஒரே சத்தம்தான் எனக்குக் கேட்கிறது — யாரோ பாடறாளா ? ‘ என்பாள்.‘என்ன நடந்தது ? எது நடந்தது ? மாப்பிள்ளை பையன் எங்கே ? ‘‘மாப்பிள்ளைப் பையனாவது மண்ணாங்கட்டியாவது ‘ எண்ணெய் ஸ்னானம் பண்ணி, புது வேஷ்டியுடன் ஓடினவன்தான். இன்னமும் அகப்படப் போகிறான். இங்கு வந்தவனுமில்லை. அவன் வீட்டுக்குத் திரும்பியவனுமில்லை. ஆச்சு, பத்து வருஷங்களும் போச்சு. அவனைத் தேடாத இடமில்லை. அம்முலுவுக்குப் பண்ணாத வைத்தியமில்லை. ஒன்றும் பயனில்லை. காதும் போச்சு, கணவனும் போனான். வாழ்வும் போச்சு. ‘அதே ஏக்கத்தில் அம்முலுவின் தாயார் இறந்து விட்டாள். ஒரே பெண். அப்புறம் அம்முலுவுக்கு கதி ஆனந்தசிவம்தான்.

 

    அம்முலு மனம் என்ன பாடுபட்டிருக்குமோ, அதை ஆராய எனக்கு யோக்யதையுமில்லை, தைரியமுமில்லை. அவள் தன் வாழ்க்கையின் சூன்யத்தில் தான் ஐக்கியமாகி விட்டாளோ, அல்லது இன்னமும் என்றாவது ஒரு நாள் அவள் கணவன் திரும்பி வருவான் என்னும் நம்பிக்கையில் தான் இன்னமும் ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கிறாளோ ? ‘அறைக்கு வெளியே யாரோ போகும் அரவம் கேட்டது. பாஸ்கரன் எட்டிப் பார்த்தான்.அம்முலு புதுப்புடவை சரசரக்க வான வீதியில் மிதந்து சென்ற நீலப்பொறிபோல், அதிசயக் கனவு கண்டு இன்னும் அதனின்று விழித்தெழாத கண்களுடன், புன்னகை புரிந்த் வண்ணம் நிதானமாய் மாடிப்படி வழியாக கீழே போய்க் கொண்டிருந்தாள்.

by parthi   on 15 Mar 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
13-Feb-2019 06:35:29 bharathi said : Report Abuse
படிக்க படிக்க தெவிட்டாத கதைகள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.