LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 543 - அரசியல்

Next Kural >

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது, மன்னவன் கோல் - அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல். (அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி அந்தணர் நூல் என்றார். 'மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்' (மணி. 22 208 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப் பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.
தேவநேயப் பாவாணர் உரை:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - ஐயரும் பார்ப்பாருமான இருவகைத் தமிழ் அந்தணரும் இயற்றிய பல்துறை நூல்கட்கும் மக்களின் அறவொழுக்கத்திற்கும் அடிமணையாயிருப்பது ; மன்னவன் கோல் - அரசனின் செங்கோலே. பரிசாலும் முற்றூட்டாலும் நூலாசிரியரைப் போற்றுவதும் அவர்நூல் வழங்குமாறு அரங்கேற்றுவிப்பதும் அரசன் தொழிலாதலின் 'ஆதி' என்றார் . "அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வு யிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகலான்" , என்று பிராமணரை விலக்கியதால் , இங்கு அந்தண ரென்றது தமிழ் அறிஞரையே . அந்தணர் என்பது சிறப்பாகத் துறவியரையே குறிக்குமேனும் , சிறு பான்மை இல்லறத்தாரையும் தழுவும். "வினையி னீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும்".(தொல். 1564) என்றதனால் , முதற்காலத்து முதனூல்களெல்லாம் முனிவராலேயே இயற்றப்பட்டதாகத் தெரிகின்றது . அதன் பின்பே இல்லறத்தாரான பார்ப்பாரும் நூலியற்றினர் . நூல்களைப் பார்ப்பவர் பார்ப்பார் . முனிவர் ஐயர் எனவும் படுவர் . கடைக்கழகக் காலத்திலும் இளங்கோவடிகள் என்னும் தமிழ் அந்தணர் , இயைபுவனப் பியற்றியமை காண்க. அந்தணர் நூற்கு அரசியல் அடிப்படையாயிருந்தமைக்கு முக்கழக நடவடிக்கைகளே போதிய சான்றாம் . ஒழுக்கத்திற்கு அது தூண்டு கோலாயிருந்தது. "அச்சமே கீழ்கள தாசாரம்" ( குறள் . 1075) என்பதனாலும் , நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே ( புறம் . 312) என்பதனாலும் , அறியப்படும் . நூற்கும் அறத்திற்கும் முந்தியே யிருந்ததனாலும் நிலைபெற்றதனாலும் 'நின்றது' என்றார். "அந்தணர்க் குரித்தாய வேதத்திற்கும் அதனாற் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது ................ செங்கோல்" "அரசர் வணிக ரென்னு மேனையோர்க்கு முரித்தாயினும் , தலைமை பற்றி அந்தணர் நூலென்றார்" என்பன பரிமேலழகரின் ஆரியப்பிதற்றல்கள் . நூலென்றது மறைநூலை மட்டுமன்று . அங்ஙனங் கொள்ளினும் அது கடவுள் வழிபாட்டை அறவே அறியாத ஆரிய வேதத்தையன்று ; தமிழ் மறையையே குறிக்கும். "மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்" என்று மாணிக்க வாசகர் பாடியிருத்தல் காண்க. இன்னும் தமிழிலுள்ள பண்டை மறை (மந்திர ) நூல்களும் மருத்துவ நூல்களும் சித்தர் என்னும் முனிவர் இயற்றியவையே.
கலைஞர் உரை:
ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.
Translation
Learning and virtue of the sages spring, From all-controlling sceptre of the king.
Explanation
The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.
Transliteration
Andhanar Noorkum Araththirkum Aadhiyaai Nindradhu Mannavan Kol

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >