LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 983 - குடியியல்

Next Kural >

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அன்பு - சுற்றத்தார் மேலேயன்றிப் பிறர்மேலும் உளதாய அன்பும்; நாண் - பழி பாவங்களின் நாணலும்; ஒப்புரவு-யாவர் மாட்டும் ஒப்புரவு செய்தலும்; கண்ணோட்டம் - பழையார்மேல் கண்ணோடலும்; வாய்மையொடு- எவ்விடத்தும் மெய்ம்மை கூறலும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சால்பு என்னும் பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஐந்து. (எண் 'ஒடு' முன்னவற்றோடும் கூடிற்று. இக்குணங்கள் இல்வழிச் சால்பு நிலைபெறாமையின், இவற்றைத் 'தூண்' என்றார். ஏகதேச உருவகம்.)
மணக்குடவர் உரை:
அன்புடைமையும், பழிநாணுதலும், ஒப்புரவுடைமையும், கண்ணோட்டமும், மெய்யுரையுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சால்பினைத் தாங்கும் தூண். இஃது இவை ஐந்தும் சால்பிற்கு அங்கமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
அன்பு - எல்லார் மேலுமுள்ள அன்பும், நாண் - பழி தீவினைகள் செய்யப் பின்வாங்கும் நாணமும் , ஒப்புரவு - வேளாண்மையும் ; கண்ணோட்டம் - எளியார்க்கும் சட்ட நெறியறியார்க்குங் காட்டுஞ் சிறப்பிரக்கமும் ; வாய்மையொடு - உண்மை யுடைமையும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சான்றாண்மையென்னும் மண்டபத்தைத் தாங்குந் தூண்கள் ஐந்தாம். "என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி ஒன்றுவழி யுடைய எண்ணினுட் பிரிந்தே," என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி (779), எண்ணோடு முன்னவற்றொடும் ஒன்றியது, இவ்வைங்குணமும் இல்லாவிடத்துச் சால்பு நில்லாமையின், இவற்றைத் தூணென வுருவகித்தார். சால்பை மண்டபமென வுருவகியாமையின் , இது ஒருமருங்குருவகம். இங்கு எளியார் என்றது செல்வம்,கல்வி, உடல்வலிமை, அகவை முதலிய பலவகையிலுந் தாழ்ந்தவரை.
கலைஞர் உரை:
அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.
Translation
Love, modesty, beneficence, benignant grace, With truth, are pillars five of perfect virtue's resting-place.
Explanation
Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests.
Transliteration
Anpunaan Oppuravu Kannottam Vaaimaiyotu Aindhusaal Oondriya Thoon

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >