LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்...

(பொதுவாழ்வு ஒரு பொன்னாடு)

"பொதுப் பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை பணப் பெட்டியை நிரப்பும் வழியாக உபபோகிப்பவன், மக்களால் வெறுக்கப்படுவான். அவன் எவ்வளவு அருமையான கொள்கைகளை கூறினாலும் அது செம்பாகுமே தவிர பொன்னாக மதிக்கப்படமாட்டாது."
--------
பொது வாழ்வு புனிதமானது, உண்மையோடு விளங்கும் உயர் பண்புதான் அதற்கு அடித்தளமானது. ஆனால் அரசியல் இயக்கம் பொதுப் பணி உணர்வோடு கூடிய கூட்டமாக அமையாவிடில், பதவியைப் பெறும் வாயிலென்றும், உடமையாளன் தன் உடமையைக் காக்கும் பீடம் என்று கருதும் மனப்போக்கு உருவாகிவிடும்.
--------

(குடியாட்சி கோமான் - 14.01.1965)

”வெற்றி - எப்படியும் வெற்றி எதை செய்தாகிலும் வெற்றி - என்று மட்டும் கருதுபவர்கள், எதிர்த்து நிற்பதைவிட இணைந்து பலன் பெறலாம் என்கின்றனர். அதிலே அவர்கள் வெற்றியும் காண்கின்றனர். ஆனால் அந்த வெற்றி அவர்களுக்குச் சுவைதரும். சமூகத்திற்கு பலன் கிடைத்திடாது. கழகம் மேற்கொண்டுள்ள பணி சமூகத்திற்கு, குடியாட்சி நெறிக்கு வெற்றியைத் தேடித் தரும் பெரும் முயற்சியாகும்.”
--------

(சிதம்பரம் கூட்டம் - உருவாகும் வரலாறு - 25.08.1957)

"திராவிடப் பெருங்குடி மக்களே! உங்களுக்கு நான் பெருமையுடன் சொல்லிக்கொள்வேன். நாம் போட்டிருக்கிற இந்த அடித்தளம் சாமானியமானதல்ல, காலத்தாலே கிள்ளி எறியப்படக்கூடியதுமல்ல, காதகர்கள் எவ்வளவு பெரிய கல் நெஞ்சத்தை கடப்பாறையாக்கி அவர்கள் கல்லினாலும், போடப்பட்டிருக்கும் இந்த அடித்தளத்தை அவர்களாலே கிள்ளி எறியமுடியாது. அந்த அளவுக்குப் பலமான அடித்தளம் போட்டாகிவிட்டது."
--------

(இராச்சிய சபையில் - 03.02.1963)

"சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்துவிடமுடியும் என்று நினைக்காதீர்கள். சாமான்யன் நிரம்ப படித்தவனாக இல்லாது இருக்கலாம். ஆனால் வளமான பொது அறிவு பெற்றிருக்கிறான். வெண்ணெய் எது சுண்ணாம்பு எது என்று வித்தியாசம் கண்டறிய அவனுக்குச் தெரியும்."
---------

(திருமுகம் - 14.01.1955)

"நாம் மிகமிகச் சாமான்யர்கள்!
நாம் சாதித்துள்ளவைகளோ, மிகப் பெரியவை!
நாம் சாதித்தாகவேண்டியவற்றுடன் ஒப்பிடும்போது, இவை கடுகளவு!
நாம் சாமான்யர்களானாலும் சாதிக்கவேண்டியவற்றை சாதித்தே தீருவோம்.
நாம் சாமான்யர்களானாலும் என்பது கூட தவறு.
நாம் சாமான்யர்கள் - எனவேதான் நாம் சாதிக்கவேண்டியதை சாதிக்கப்போகிறோம்.
நாம் சாமான்யர்கள் - எனவேதான் சாமான்யர்களின் பிரச்சினையைக் கவனிக்கிறோம்."
----------

(கடிதம் - 19.08.1956)

"தம்பி, திடுக்கிடவைப்பது நாவினால் சுடுவது பிரச்சாரத்தில் ஒருவகை. வாதிடுவது, வழிக்குகொண்டுவருவது, வாஞ்சனையைப் பெறுவது, பிரச்சார முறையில் மற்றொருவகை. தம்பி நமக்கு இந்த இரண்டாவது முறையே போதும்."
---------

(வீரர் வேண்டும் - 10.09.1944)

" அரசியல் மூலம் நாம் வேண்டுவது சில்லரைப் பதவிகளையல்ல, சிங்கார வாழ்வையல்ல, நமது இனத்தின் விடுதலையை நாம் விரும்புகிறோம். அதற்கே அரசியலை நாம் துணை கொள்ளுகிறோம். அதன் பொருட்டே அரசியலில் பணியாற்றுகிறோம்."
---------

(முதல் பந்தி - 20.08.1961)

"விடுதலை இயக்கம் தடையால், படையால் அழிவதில்லை. விடுதலை இயக்கம் அழிந்துவிட்டது, அழித்துவிட்டோம் என்று எண்ணி எதேச்சாதிகாரிகள் எக்காளமிடலாம். ஆனால் அது புதைகுழியைப் பிளந்துகொண்டு மீண்டும், மீண்டும் எழும். "

-------------

மொழி
நமக்குக் கிடைத்திருக்கின்ற தாய் மொழி பிற மொழிகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கின்ற நேரத்தில் பிற மொழியாளர்களெல்லாம் பார்த்து, இவ்வளவு எழிலுள்ள மொழியா உங்களுடையது? இவ்வளவு ஏற்றம் படைத்த இலக்கியமா உங்களிடத்தில் உள்ளது? இவ்வளவு சிறந்த இலக்கணத்தையா நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்? ஈராயிரம் ஆண்டு காலமாகவா இந்த மொழி சிதையாமல், சீர்குலையாமல் இருந்து வருகிறது? என்று ஆவலுடன் சிலரும் ஆயாசத்துடன் பலரும், பொறாமையோடு சிலரும், பொச்சரிப்பாலே பலரும், கேட்கத்தக்க நல்ல நிலையில் தமிழ் மொழிக்காகப் போராடுவதற்காகத் தமிழர் மன்றத்திலே தமிழன் பேசவில்லை - ஆனால் தமிழ் மொழி இருக்கின்ற நேரத்திலே, பிற மொழியை நுழைக்கின்ற பேதைமை, தமிழ் மொழி இருக்கின்ற நேரத்திலே பிற மொழியை ஆதிக்க மொழியாக்குகின்ற அக்கிரமம் இவைகளைக் கண்டித்து, அந்த அக்கிரமத்தை நீக்குவதற்கு வழி என்ன என்று உங்களைக் கேட்க இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணா (இந்தி எதிர்ப்பு மாநாடு - திருவண்ணாமலை - 1957)

by Swathi   on 07 Nov 2017  0 Comments
Tags: அறிஞர் அண்ணா   அறிஞர் அண்ணா பொன்மொழிகள்   அறிஞர் அண்ணா சிந்தனைகள்   arignar anna ponmozhigal   Arignar Anna Sinthanaigal        
 தொடர்புடையவை-Related Articles
அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்... அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்...
அரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்! - மஞ்சை.வசந்தன் அரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்! - மஞ்சை.வசந்தன்
பழிக்குப் பழி!  - அண்ணா பழிக்குப் பழி! - அண்ணா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.