LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

அசுரன்


அசுரன் அருமையான படம். நிறைவான கதாபாத்திரங்கள். அட்டகாசமான திறமைகளின் வெளிப்பாடு. மிரட்டும் ஒளிப்பதிவு, மனதை படக், படக் என அடித்து கொண்டே வைத்திருக்கும் இசை. ஆழமான திரைக்கதை மற்றும் இயக்கம். சிந்திக்க வைக்கும் கருத்து. ரசிக்க தூண்டும் வசனம். மொத்தத்தில் இது “அடி தூதூள்ள்”!

இப்படத்தில் ஒரு தந்தையாக தனுஷ் மின்னுகிறார். தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். . வெற்றிமாறன் அவரை அழகாக உருமாற்றுகிறார், உருவாக்குகிறார், உயிர் கொடுக்கிறார். அவரின் கைகளில் வளைந்து, நெளிந்து ஒத்துழைப்பு கொடுத்து அழகான வடிவம் பெறுகிறார் தனுஷ். தன் பிள்ளைகளின் நலனுக்காக எப்படி தான் கட்டிக் காத்த சூடு , சொரணை எல்லாவற்றையும் இழக்க பெற்றோர் தயங்குவதில்லை என்ற நிதர்சன உண்மையை அழகாக நடித்து காட்டி இருக்கிறார்.

இப்படத்தில் தனுஷ் அப்படி மானம் , ரோசம் பார்க்காமல், தன் மகனின் கடுஞ்சொல்லை கூட பொருட்படுத்தாமல் தன் குழந்தைகளின் நலனுக்காக பிறந்தது முதல் ஒட்டிக்கிடக்கும் மானம், ரோசம் எல்லாவற்றையும் தள்ளி வைக்கும் பொழுது ஓர் பாசமிக்க தகப்பனாக, பொருப்புள்ள குடும்ப தலைவனாக மிளிர்கிறார்.

மஞ்சு வாரியார் கதாப்பாத்திரம் பாசமான அதே சமயம் கண்டிப்பான , வீரமான, வீரத்தை தன் பிள்ளைகளுக்கு பாலாக ஊட்டி வளர்த்த தாயாக மின்னுகிறார். அவர் நடையிலேயே அவரின் மிடுக்கும், தைரியமும் தெரிகிறது. கணவன் மனைவி இடையே மிகுந்த ஈடுபாடு இருக்கும் பட்சத்தில் எப்படி அந்த அன்பை இருவரும் அழகாக பார்வை மூலமாகவும், வார்த்தை மூலமாகவும், கண்டிப்பு மூலமாகவும் , செய்கைகள் மூலமாகவும் ஓர் கவிதையாக பரிமாறிக்கொள்ள முடியும் என்பதற்கு தனுஷ், மஞ்சு வாரியார் ஜோடியே சாட்சி. தனுஷ் குடித்து விட்டு வாந்தி எடுக்கும் போது சளித்துக்கொள்ளாமல் சுத்தம் செய்வதாகட்டும், அவருக்கு அடிப்பட்டு ரத்தம் வரும் போது அதை தன் முந்தானை கொண்டு துடைப்பதில் ஆகட்டும், தன் கணவர் நடக்கும் அக்கிரமங்களுக்காக ஆத்திரம் கொண்டு எதிர் நோக்காமல் அமைதியாக கையாள்வதை பார்த்து கோபம் கொள்வதில் ஆகட்டும் , மஞ்சு வாரியார் ஓர் தாயாய், மனைவியாய் ஒளிர்கிறார். ஒரு குடும்ப தலைவி எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் நிலைகுலையாமல் நிதானமாக கையாளுபவளாக இருக்கும் பொழுது எப்படிபட்ட சூழ்நிலையையும் அந்த குடும்ப தலைவனால் கையாள முடியும் என்பதற்கும் இந்த ஜோடி ஓர் எடுத்துக்காட்டு. தங்கள் குடும்பத்தில் நடந்த இழப்புகளுக்கு அழுது, கூப்பாடு போட்டு ஊரை கூட்டாமல் நிதானமாக ஒரு குடும்பமாக யோசித்து முடிவெடுக்கிறார்கள்.

இளம் கன்று பயம் அறியாது என்பதற்கு படத்தில் தனுஷின் மகன்களாக வரும் இருவராகட்டும், இளம் வயது தனுஷ் ஆகட்டும் இந்த கதாபாத்திரங்களே சான்று. ரத்தம் சூடாக இருக்கும் பொழுது ஒரு பிரச்சனையை அனுகும் விதமும் அதே ரத்தம் சுண்டும் பொழுது , வயதாக ஆக ஒருவன் ஓர் பிரச்சனையை அனுகும் முறையும் எப்படி வேறுபடுகிறது. ஆனால் சமயம் வரும் பொழுது கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது வெளிப்படத்தான் செய்கிறது. பின் விளைவுகளை யோசிக்காமல் மகன்கள் எடுக்கும் முடிவு எப்படி தன் குடும்பத்தை ஆட்டம் காணச்செய்தது என்பதை உணர்ந்து தன் உறவுகளை காக்க வயதான தனுஷ் நிதானமாக செயல் படுகிறார்.

சொத்து, ,சுகம், மானம், மரியாதை , எல்லாவற்றையும் விட ஒருவனுக்கு தன் குடும்பமே பெரிது என்பது தனுஷ் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுகிறது. அன்பும் அரவனைப்பும் மிகுந்த குடும்பங்கள் எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் நிலை குலைவதில்லை. இப்படத்தில் மகனுக்காக தந்தையும், அண்ணனுக்காக தம்பியும், அம்மாவிற்காக மகனும், ஊருக்காக தலைவனும், தந்தைக்காக மகனும், தங்கைக்காக அண்ணனும், காதலிக்காக காதலனும் , உறவிற்காக உற்றாரும் என்று பிறர் நலனுக்காகவே வாழும் நிறைய கதாபாத்திரங்கள் நம் கண் முன் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட சுயநலமில்லா உறவுகளை பார்க்கையில் மனம் இளகுகிறது. தனுஷின் மகன்களாக வரும் கென், டிஜே, மஞ்சு வாரியாரின் அண்ணனாக வரும் பசுபதி, ப்ரகாஷ் ராஜ், நரேன், அம்மு அபிராமி, மற்றும் எல்லா கதாபாத்திரங்களுமே மிக நன்றாக அவரவர் பங்கை செய்து இருக்கிறார்கள்.

படத்தில் சாதி ஆதிக்கம் ஆழமாக அழகாக கையாளப்பட்டிருக்கிறது. இப்படி பட்ட சமூகத்திலா நாம் வாழ்ந்தோம் , வாழ்கிறோம் என்று நினைக்கையில் மனதில் ஓர் வலி ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அந்த வலி படம் பார்த்து முடித்து வீடு வந்தும் மனதிலேயே ஊரல் போட்டு ஓர் சளிப்பை, வெறுப்பை, ஓரு ரணத்தை ஏற்படுத்துகிறது. ஆண்டான் அடிமை, சாதிக்கொடுமைகள் அன்றிருந்த மாதிரி இப்பொழுது இல்லை என்பதை நினைக்கையில் நிம்மதி ஏற்படுகிறது. முற்றிலும் அவை களையப்பட இன்னும் சில காலங்கள் ஆகலாம். ஆனால் அதில் முன்னோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் என்பதில் ஓர் எள் அளவு மகிழ்ச்சி.

படத்தில் வரும் திருநெல்வேலி தமிழை கேட்கும் பொழுது தாமிரபரணி தண்ணீரை அப்படியே எடுத்து பருகிய நிறைவு ! வசனங்களில் ஆழமும் உண்டு, விவேகமும் உண்டு, அர்த்தமும் உண்டு, நக்கலும் உண்டு, நையாண்டியும் உண்டு! அந்த காடுகளை படம் பிடித்திருக்கும் விதம் நாமும் அந்த காடுகளுக்கிடையே ஊடுருவி சென்று வந்ததை போன்ற அனுபவம்.

படம் முழுதும் அரிவாளின் உரசலும், கத்திகளில் இருந்து வெளிவரும் தீப்பொறிகளும், குத்தீட்டிகளின் பாய்ச்சலும் , கிழிக்கப்பட்ட சதையும், சிந்திக் கிடக்கும் ரத்தமும், எரிந்த சாம்பலும், மனிதம் மீது ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது.

படத்தின் முடிவில் ஆழமான கருத்து முன் வைக்கப்படுகிறது. கல்வி ஒன்றே ஒருவனை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்பது வலி உருத்தப்படுகிறது. அதை கொண்டு வாழ்வில் மேன்மை அடைவது மட்டும் இல்லை முன்னேறுவது என்பது. அதையும் தாண்டி, அந்த உயர் நிலையை அடைந்த பின் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிறருக்கு செய்யாதிருத்தலே உண்மையான சமூக முன்னேற்றம் என்னும் கருத்தை இயக்குனர் முன் வைக்கிறார்.

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.” என்ற பாரதியின் வரிகளை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து வாழ்ந்தால் அழகான ஒரு சமுதாயமாக நம் சமுதாயம் மாறும். நம் வருங்கால சந்ததியர் நலமாக வளமாக வாழ வழி வகுக்கும்.

"அசுரன்" கட்டாயம் பார்க்க வேண்டிய நல்ல படம் !!!

நன்றி

கீதா ரவிச்சந்திரன்.

by Swathi   on 21 Oct 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஒத்த செருப்பு 7 ஒத்த செருப்பு 7
அசுரன் -திரை விமர்சனம் அசுரன் -திரை விமர்சனம்
”அறம்”  இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே? நம்பவே முடியவில்லை! ”அறம்” இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே? நம்பவே முடியவில்லை!
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
சமுத்திரக்கனியின் - அப்பா சமுத்திரக்கனியின் - அப்பா
ருத்ரமாதேவி திரைவிமர்சனம் !! ருத்ரமாதேவி திரைவிமர்சனம் !!
குற்றம் கடிதல் திரை விமர்சனம் !! குற்றம் கடிதல் திரை விமர்சனம் !!
49 ஓ திரை விமர்சனம் !! 49 ஓ திரை விமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.