LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1182 - கற்பியல்

Next Kural >

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.) (யான் ஆற்றியுளேனாகவும்) பசப்பு - இப்பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால் - என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என் மேனிமேல் இவர்தந்து ஊரும் - என் மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது.('குருதி கொப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல' (சீவக.விமலை.1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல்அறிக. 'அஃது உரிமைபற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
காதலர் வரவிட்டாரென்னும் மிகுதியானே, பசப்பு என்னுடம்பின்மேலே பரந்து ஊரும். இஃது இப்பசலையை நீக்கவேண்டுமென்ற தோழிக்கு இஃது என் குறிப்பினாலே வந்ததல்ல: நீக்கவேண்டுவாயாயின் அவர்க்குச் சொல்லென்று கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.) (யான் ஆற்றியிருக்கவும்) பசப்பு- இப்பசலைதான்; தந்தார் அவர் என்னும் தகையால்- என்னை யுருவாக்கினவர் அவர் (காதலர்) என்னும் பெருமிதத்தால்; என் மேனிமேல் இவர் தந்து ஊரும்-என் உடம்பின்மேல் ஏறி என்னைச் செலுத்துகின்றது. இப்பசலை தன்னை என் தலைவர் தோற்றுவித்தார் என்னும் உரிமை பற்றி என்மீது ஊர்கின்றது. இதற்கு நீ கவல வேண்டேன் என்பதாம. ஊர்தல், பசலை படர்தல்.இப்படர்ச்சி குதிரையேற்றம் போற் கூறப்பட்டிருப்பது குறிப்புருவகம்.
கலைஞர் உரை:
பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!.
சாலமன் பாப்பையா உரை:
இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.
Translation
'He gave': this sickly hue thus proudly speaks, Then climbs, and all my frame its chariot makes.
Explanation
Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.
Transliteration
Avardhandhaar Ennum Thakaiyaal Ivardhandhen Menimel Oorum Pasappu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >