LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

ரொறொன்ரோ தமிழர் ‘தெரு’ விழா பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டது ..

நான்காவதுவருடமாக, 2018 ஆகஸ்ட் 25 – 26 தேதிகளில் தமிழர் `தெரு’ விழா ரொறொன்ரோவில் வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டது. கனடாவில் தமிழர்கள் பெருந்தொகையாக வசிக்கும் நகரங்கள் ஸ்காபரோவும் மார்க்கமும் ஆகும். மார்க்கம் நகரில்தான் சென்ற வருடம், ஈழத்தமிழர்களின் விடுதலை களமாக விளங்கிய வன்னி பிரதேசத்தை நினைவூட்டும் விதமாக `வன்னி வீதி’ திறக்கப்பட்டது. ஸ்காபரோ நகரத்தின் பிரதிநிதியாகிய கரி ஆனந்தசங்கரிதான் கனடாவில் தை மாதத்தைத் தமிழர் மரபுரிமை மாதமாக நாடாளுமன்ற மசோதா மூலம் ஏகமனதாக நிறைவேற்றக் காரணமானவர். ஸ்காபரோ நகரமும் மார்க்கம் நகரமும் சந்திக்கும் வீதியின் போக்குவரத்தை நிறுத்தி, தமிழர் தெரு விழா இரண்டு நாள்கள் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்துக்கும் அதிகம். இந்தியத் துணைக் கண்டத்துக்கு வெளியே நடத்தப்படும் தெருவிழாக்களுள் பிரமாண்டமானதும் பிரமிப்பானதுமான சாதனை விழா, இந்தத் தமிழர் விழாதான். 

 

கடந்த வருடம் விழாவைத் தொடங்கி வைத்தது, தமிழர்களுக்கு மிகவும் அணுக்கமான, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள். இவர் விழாவைத் தொடங்கி வைத்ததும் அல்லாமல் சிலம்பாட்டத்தில் பங்குபற்றி சிலம்பாடியதை உலகத் தொலைக்காட்சிகள் பலவும் காட்டின. இம்முறை மத்திய அமைச்சர்கள், உறுப்பினர்கள், கவர்னர்கள் உட்பட பல அரசியல் தலைவர்கள் பங்காற்றினர். இலக்கியவாதிகள், நாடகக்காரர்கள், இசை மற்றும் நடனத் துறை சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் விழாவில் கலந்து சிறப்பித்தனர். பரதநாட்டியம், கரகாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து எனச் சகல கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முதல் நாள், மெகா ட்யூனர்ஸ் குழுவுடன் திரைப்படப் பின்னணிப் பாடகர் கார்த்திக்கின் இசை விருந்தும், அடுத்த நாள் அக்னி இசைக் குழுவினரின் நிகழ்ச்சியும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. உணவுச் சாவடிகளுக்கும் சிறுவர்களுக்கான களியாட்டங்களுக்கும் குறைவில்லை. பிற நாட்டினர் கரும்பையும், பலாப்பழத்தையும், இளநீரையும், நுங்கையும் சுவைத்தது, பார்த்துக்கொண்டிருந்த நம் தமிழர்களுக்குக் கண்கொள்ளா விருந்து.

 

கனடியத் தமிழர் பேரவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் அனைவருக்கும் அனுமதி இலவசம். பேரவையின் தலைவர் மருத்துவர் சாந்தகுமாரும், உபதலைவர் சிவன் இளங்கோவும் விழாவை ஆரம்பித்து வைத்தனர். விழா முடிவில் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு இயக்குநர் ஜோர்ஜெட் சினாட்டி, ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கவிருக்கும் தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் குறித்து உரை நிகழ்த்தினார். ஒப்பந்தம் கையொப்பமானதைக் குறிப்பிட்டு, கணிசமான தொகை ஏற்கெனவே திரட்டப்பட்டுவிட்ட நல்ல தகவலையும் சபையினரின் ஆரவாரத்துக்கிடையே பகிர்ந்துகொண்டார். அவர் பேச்சு நிகழும்போதே தமிழ் இருக்கைக்கான நிதி திரட்டலும் நடந்தது.

 

இந்த விழாவில் பயன் பெற்றவர்கள் முக்கியமாக இளைய தலைமுறையினர்தாம். இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழைமையான தமிழ் இலக்கியம், பாரம்பார்ய கலைகள், நடனம், இசை, பண்பாடு பற்றிக் கற்றுக்கொண்டது அவர்களைப் பெருமை கொள்ள வைத்தது. பலவகையான கலாசாரம், பன்முகத்தன்மை ஆகிய கனடியப் பெறுமானங்களைத் தக்கவைக்கும் செயலாகவும், தமிழ் மொழியையும், பண்பாட்டையும் உலகமயமாக்கும் முயற்சியாகவும் இந்த விழா அமைந்ததுதான் இதன் வெற்றி. திரண்டிருந்த கூட்டம் அடுத்த விழா எப்போது என்று கேட்டது, பெரும் நம்பிக்கை தருவதாக அமைந்தது.

 

உண்மையில், இது தமிழர்களின் விழாவாக இருந்ததுடன் தமிழர்களின் பண்பாட்டையும் போற்றுவதாக இருந்தது.

 

-கனடாவிலிருந்து அ.முத்துலிங்கம் 

by Swathi   on 05 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.