LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
-

புழல் சிறையில் 5 மணி நேரம்.. அனுபவப் பகிர்வு

 தமிழகத்தில் இலட்சக்கணக்கான குடும்பங்களைச் சீரழித்துக் கொண்டிருக்கும் மதுவை ஒழிக்க, மதுவிலக்கினை அமல்படுத்திடக்கோரி காந்தி நினைவு தினமான ஜனவரி 30,2013 அன்று நாமக்கல்லைச் சேர்ந்த காந்தியவாதிகள் சசிபெருமாள், பழனிச்சாமி ஆகியோர் மெரினா கடற்கரையிலுள்ள உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். காவல்துறையினருக்கு முறைப்படி முன்னரே தகவல் தெரிவித்து அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற இந்த இருவரை காவல்துறை கைது செய்து( பொதுமக்களைத் தகாத வார்தைகளில் திட்டினார்கள், பொதுமக்களைப் போராட்டத்திற்கு அழைத்தார்கள் என்ற சம்பந்தமில்லாத பிரிவுகளின் கீழ்) 14 நாட்கள் புழல் சிறையிலடைத்தனர். உண்ணாவிரதத்தை சிறையிலும் தொடர்ந்தார்கள் தோழர்கள். அவர்களை சந்தித்து வணங்கி, வாழ்த்து கூற சென்னை புழல் சிறைக்கு நானும், நல்லோர் வட்டம் பாலசுப்ரமணியமும் 11-02-2013 அன்று சென்றிருந்தோம்.

 

மணி மதியம் 12.30. புழல் சிறை வாசல். காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கும் போதே ஒரு காவல்காரர் ஓடி வந்து “..சார். இங்க வண்டி நிறுத்தக்கூடாது” என்றார். சரி, எங்கே நிறுத்தலாம் என்று கேட்டதற்கு அவரிடம் முறையான பதிலில்லை. ”தூரமாய் போய் நிறுத்திங்க” என்றார் பொத்தாம் பொதுவாக. அருகே நின்று கொண்டிருந்த கட்சி கொடி பறக்கும் காரை நான் பார்க்க, காவல்காரரும் அதைப் பார்த்தார். உடனே, சுதாரித்துக்கொண்டு ”..அந்த வண்டி நிறுத்தும்போது நானில்லை” என்றார். அவர் என்ன செய்வார் அப்பாவி காவல்காரர். மிஸ்டர்.ஏமாளி பொதுஜனம் மீது மட்டும்தான் தன் அதிகாரத்தைக் காட்டமுடியும். ஒரு கி.மீ பயணம், இரண்டு யூ டர்ன் அடித்து வண்டியை நிறுத்தினோம். இப்போதும் சிறை வாசலில், சாலை ஓரத்தில்தான். வாகன நிறுத்தம் என்று தனியாக இருப்பதாகத் தெரியவில்லை, காவல்காரர் தெரிவிக்கவுமில்லை. இருக்கட்டும். பொதுமக்கள் வந்து போற இடத்தில வாகன நிறுத்தமெல்லாம் செய்யற அளவுக்கு நம்ம ஜனநாயகம் முன்னேறலங்கறதை பலதடவை பட்டுத் தெரிஞ்சிகிட்டதால, எந்த கூச்சமும், அச்சமும் இல்லாமல் தூரமாக, கிடைத்த இடத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு நடையைக் கட்டினோம், நானும் பாலு ஐயாவும்.

 

சிறையிலிருப்பவர்களைப் பார்க்க விண்ணப்பிக்கும் இடம் வந்தது. இரண்டு வரிசையில் ஆண்கள், ஒருவரிசையில் பெண்கள் என ஏராளமானோர் பரபரப்பாக இருந்தனர். விசாரித்தபோது சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்று கூட்டம் அதிகம் என்றனர். செல்போன், பணம் எதுவும் எடுத்துப்போகக்கூடாது, வேண்டுமானால் அங்கிருக்கும் ஒரு அலுவலகத்தில் கொடுத்துச் செல்லலாம் என்றார்கள். அப்புறம் திரும்பி வாங்கும் போது, கமிஷன் கேட்டா அதுக்கு தேவையில்லாம சண்டை போட வேண்டிவரும்னு பட்சி சொல்லுச்சு. பொடி நடையா போய் கார்லயே வெச்சுட்டு வந்துரலாம்னு முடிவுக்கு வந்து, ரெண்டுபேரோட செல்,பணம் எல்லாத்தையும் சின்ன மூட்டையா கட்டி வண்டியில வெச்சேன். வெச்சுட்டு கதவை மூடும்போது ஒரு சந்தேகம். காவல்காரர்கள்,களவு செய்தவர்கள் இரண்டுபேரும் இருக்கும் இடம் இது. வண்டி பத்திரமாக இருக்குமா..? கதவைத் திறந்து களவாண்டு போயிரமாட்டங்களா..ன்னு ஒரு சின்ன டவுட்டு. சரி..காவல் துறையை நம்ம்ம்பிபிபி போவோம்னு நடந்தேன் மனுப்போடும் இடம் நோக்கி( சிறையிலிருப்பவர்களை சந்திக்க விண்ணப்பிப்பதை அப்படித்தான் சொல்கிறார்கள்). 1 மணிநேரம் வரிசையில் நின்றோம். பாலு ஐயாவிடம் சமூகப் பிரச்னைகள், போக்குகள் குறித்துப் பேசியது மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. ஒரு சேஞ்சுக்காக.. பக்கத்துல நின்றிருந்த சில இளைஞர்களிடம் பேச்சு கொடுத்தேன். இருக்கும் இடம் என்னனு யோசிக்காம கேள்வியை கேட்டுட்டேன்.  ”தம்பி....இங்க அடிக்கடி வருவீங்களா?” சூடா ரத்தம் ஓடற வயசாச்சே. பதிலும் சூடா வந்துச்சு. ”அண்ணே, இதென்ன, சத்யம் தியேட்டரா, சங்கம் காம்ப்ளக்ஸா அடிக்கடி வர.? தப்பான கேஸ்ல மாட்டிக்கிட்ட நண்பனப் பார்க்க வந்திருக்கோம், நீங்க ஏன்னே கடுப்பேத்தறீங்க” என்றான் அந்த இளந்தம்பி. ஓப்பனிங்கே சரியில்லையே. !! சரி, வந்த வேலையைப் பார்ப்போம்னு அத்தோட அந்தத் தம்பி கூட பேசின லைனை கட் பண்ணிட்டேன். பசி வேற வயித்தக் கிள்ள ஆரம்பிச்சிருச்சு. இப்ப மனுப்போடறது எப்படினு கத்துக்குவோம்.. நாளைக்கு உதவியா இருக்கும் உங்களுக்கு.

 

சிறையிலிருப்பவர்களைப் பார்க்க வருபவர்கள் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என்ற இரண்டில் தங்களுக்கான வரிசையைத் தேர்ந்தெடுத்து நிற்கவேண்டும். புரியாத விண்ணப்பம் கொடுத்து, பூர்த்தி செய்யச் சொல்வார்கள் என்ற பயம் வேண்டியதில்லை. பார்க்க வந்திருப்பவர்களின் பெயர் சொன்னால் போதும், டக் டக் னு கம்ப்யூட்டர்ல தட்டி, கொஞ்சம் கேமரா முன்னாடி வாங்கனு சொல்லி நம்மளை போட்டோ எடுத்துக்கிட்டு நம்ம போட்டோவோட ஒரு அனுமதிச் சீட்டைக் கொடுப்பாங்க அவ்வளவுதான். மனுப்போட்டாச்சு. சிறைக்குள் செல்ல நாம் தயார் !!.

 

நாங்க மனுப்போடப் போன போது சின்ன சிக்கல். ஒரு மணி நேரம் வரிசையில் நின்று, எங்கள் முறை வந்தபோது  நாங்கள் பார்க்கப்போகும் தோழர்களின் பெயர் சென்னோம். தோழர்களின் அப்பா பெயர் கேட்டார்கள். தெரியாது என்றோம். சட்டைப்பைக்குள் விரலைவிட்டு செல்போன் தேடினோம். ஆங்… செல் காரில் அல்லவா உள்ளது. காவல்காரர் கனிவுடன், போய் போன் பேசிட்டு வாங்க. நேர முன்னாடியே வந்திருங்க, வரிசையில் நிற்க வேண்டியதில்லை என்ற சிறப்பு அனுமதி கொடுத்தார். செல்..செல்.செல்..  செல்லை நோக்கிச் செல் என்று நடையை கட்டினேன். போனில் பேசி விவரங்களைத் தெரிந்துகொண்டு, மனப்பாடம் செய்துகொண்டு வரிசைக்குத் திரும்பி வந்தபோது பார்த்தால் காவல்காரர் சாப்பிடப்போய்விட்டார். வடை போச்சே !!… 20 நிமிடம் நின்னோம். ஒருவழியாக எல்லாத்தையும் முடிச்சுட்டு கையில் நுழைவுச்சீட்டை வாங்கும்போது மணி மதியம் 2.30.                     மணி மதியம் 2.30. ஜெயிலுக்குள் போக நுழைவுச்சீட்டு பெற்றாயிற்று. அடுத்த கட்டம். நம்மையும், உள்ளே இருப்பவர்களுக்கு நாம் கொண்டு செல்லும் பொருட்களையும் கடுமையாகச் சோதனையிடுகிறார்கள். காக்கி நிறத்தில் பை ஒன்று கொடுக்கிறார்கள். அதில் கைவிட்டுப் பார்த்தால் குறிப்பிட்ட எண் கொண்ட சின்ன அட்டை இருக்கிறது. அதை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். கைதிகளுக்கு நாம் கொடுக்க விரும்பும் உணவு,துணி போன்ற பொருட்களை அப்பைக்குள் போட்டுக் கொடுத்துவிட வேண்டும். நாம் கொடுத்த பொருட்கள் தனியாக உள்ளே போய்விடும். உள்ளிருப்பவர்களை நாம் சந்திக்கும்போது டோக்கனை அவர்களிடம் கொடுத்துவிடவேண்டும். டோக்கனைக் காண்பித்து சிறைக்குள்ளேயே அவர்கள் பொருளைப் பெற்றுக்கொள்வார்கள்.

 

எல்லாம் முடிந்தது. சிறைக்குள் வந்தாயிற்று. இப்போது இறுதிகட்டம்.கைதிகளும், பார்வையாளர்களும் சந்திக்கும் அறைக்குச் சென்றோம். அறைக்கு வெளியே கிட்டத்தட்ட 50 பேர்  காத்திருக்கிறார்கள். கைதிகளின் பெயர் படிக்கப்படுகிறது. அவரவரின் குடும்பத்தினர், நண்பர்கள் சந்திக்கும் அறைக்கு உள்ளே செல்கின்றனர். சந்தித்துப் பேசுதல் என்றால் வழக்கம்போல் அருகருகே நின்றோ, அமர்ந்தோ பேசுவதல்ல. சினிமாக்களில் காட்டும்போது சத்தம்போட்டு டயாலாக் பேச முடியாது என்பதால் அருகருகே நின்று பேசுவது போல் காட்டப்படுகிறது. ஆனால், இருவருக்கும் இடையில் கிட்டத்தட்ட 5 அடியாவது இடைவெளி இருக்கும். இரண்டு பக்கமும் கட்டம் போட்ட கம்பிகள். கம்பிகளுக்கு இடையே கத்திக் கத்தித்தான் பேச வேண்டும். வரிசையாக பெயர் படிக்கப்படுகிறது. நாங்கள் பார்க்கவந்தவர்களின் பெயர் மட்டும் வாசிக்கப்படவில்லை.

 

மணி 3. மணி 3.30. கிடைத்த நேரத்தில் பாலு அய்யாவிடம் பொதுவாழ்க்கை, பொதுப்பிரச்னைகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் கேட்டு தெரிந்துகொண்டேன். நாங்கள் பார்க்க வந்தவர்கள்தான் வரவில்லை. பார்க்க வந்த மற்றவர்கள் என்னதான் பேசுகிறார்கள் என்பதை ஒரு நோட்டம் விடலாம் என்று உள்ளே சென்றேன். பலவிதமான உணர்வுகளின் கலவையாகத்தான் தெரிந்தது. கணிசமான பெண்கள் தங்கள் மகன், கணவர், அண்ணன், தம்பி என பார்க்க வந்திருக்கின்றனர் என்பது புரிந்தது. ”… ஒரு நிமிஷம் ஆத்திரப்பட்டது இப்படி எப்ப ஆயிடுச்சு பாருப்பானு” ஒரு அம்மா எந்த விஷயமும் தெரியாத என்னிடம் கதறினார். ”அடுத்த வாரம் கண்டிப்பா வந்திருங்க” என்று விசேசத்திற்கு கூப்பிடற மாதிரி எந்த வருத்தமும் இல்லாமல், புன்னகையோடு பேசி முடித்து, கை காட்டி உள்ளே சென்றார் ஒருவர்.

 

மணி 4. ஒவ்வொரு முறை பெயர் படிக்கும்போது காவல்காரரிடம் நாங்கள் தந்த பெயர் வரவில்லையே என்று கேட்டுவிட்டு, 13 நாட்களாக உண்ணாவிரதம் இருப்பவர்களைப் பார்க்க வந்திருக்கிறோம் என்று விளக்கிச் சொல்ல பலமுறை முயன்றும்.. “..மனுப் போட்டாச்சல்ல.. பேர் கூப்பிடுவாங்க சார்.. போய் உட்காருங்க”. அதே பாட்டை மனப்பாடமாகப் பாடினார்.

 

பசி மயக்கம் எனக்கு. காலையில் 8 மணிக்கு சாப்பிட்டது. ஒரு நாள் உணவில்லாமல் இருப்பதையே நம்மால் தாங்க முடியவில்லையே, 13 நாள் உணவின்றி உள்ளே இருப்பவர்களின் நிலை..?

 

மணி 4.30. இதுதான் இறுதி பட்டியல் என வாசித்தார்கள். இந்த முறையும் இல்லை. இனி பொறுப்பதில்லை என்று காவல்காரரிடம் சென்று விசயத்தை விளக்கினோம். ”..உண்ணாவிரதம் இருக்கறவங்களைப் பார்க்க வந்திருக்கீங்கனு முன்னாடியே சொல்ல வேண்டியதுதான் சார்” என்றார் அவர். வந்த கடுப்புல “..எங்க சொல்ல விட்டீங்கனு” கேட்கத் தோணுச்சு. சரி, சட்டம் பேச இது சமயம் இல்லைனு விட்டுட்டேன். இப்போது அந்த காவல்காரர் பொறுப்பாக தொலைபேசி மூலமாகப் பேசி அவர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய முயன்றார். அவர்களின் உடல்நிலை கருதி வழக்கமாக கைதிகளைச் சந்திக்கும் 5 அடி இடைவெளி கம்பி வேலிக்குள் இல்லாமல், ஜெயிலர் அறையில் அருகருகே அமர்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. பழனிச்சாமி சில காரணங்களால் 9வது நாளோடு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். சசி பெருமாள் 13வது நாளாகத் தொடர்வதோடு மவுன விரதமும் இருந்து வருகிறார். நாங்கள் சந்தித்தபோது கூட பேப்பரின் மூலமே(எழுதிக்காட்டி) பேசினோம். மணி 5.15. இவ்வளவு நேரம் காத்திருந்து சந்திக்கமுடியாமல் போய்விடுமோ என்ற வருத்தத்தை அருகிலிருந்து சில நிமிடங்கள் சந்தித்தது நீக்கியது. திரும்பி வந்து பார்த்தபோது பணம்,செல்போன் என அத்தனையும் பத்திரமாக இருந்தது.  சாரயத் தீயைக் குடித்து வயிறு வெந்து வாழ்க்கை தொலைப்பவர்களுக்காக தன் வயிற்றில் பசித் தீஏந்தி கடந்த 13 நாட்களாக புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்துவரும் சசிபெருமாளை நினைக்கும்போது பெருமிதமாக இருக்கிறது. ஆனால், மதுவிலக்குப் போராட்டத்தை தீவிரமாக தொடர்ந்து நடத்த இவர் போன்றவர்கள் மக்களிடம் பெருமளவில் ஊடுருவி ஒரு பேரெழுச்சியை உருவாக்கினால்தான் சாராயம் விற்று சம்பாரித்த பணத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அரசு சற்றாவது அசைந்து கொடுக்கும் என்றே உள்மனது நினைத்தது. கனத்த மனதோடு அன்று மாலை முடிந்தது.

பின்குறிப்பு: உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்ததால் 13ம் தேதியன்று நடந்த விசாரணையின் போது பிப்ரவரி 27வரை சசிபெருமாளை சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

 

 

செந்தில் ஆறுமுகம்  

சமூக ஆர்வலர்  

சென்னை 


by Swathi   on 16 Feb 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.