LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- சார்லஸ் டார்வின் (Charles Darwin )

சார்லஸ் டார்வின்-பகுதி 2

 

சார்லஸ் டார்வின்-பகுதி 2  
-சூர்யா சரவணன் 

சார்லஸ் டார்வின்-பகுதி 2  

-சூர்யா சரவணன் 


 

           நோயின் பிடியில் சார்லஸ் டார்வின்

 

 

    மதங்கள் உலகத்தில் இருக்க வேண்டியவைதான். மதங்களால்தான் மக்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க முடியும். ஆனால் இன்றுள்ள மதங்கள் இதைச் செய்யவில்லை. கடவுளை வாழவைக்க வேண்டும், அவர் ஒழுக்கமானவர் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்ற கவலையுடன்தான் அவை இப்பொழுது வேலை செய்து வருகின்றன. 

 

 

          யிரினங்கள் குறித்து மிகக்கடுமையான ஆய்வுகளைச் செய்துவந்த சார்லஸ் டார்வின், அதனால் பெரிய இன்னல்களுக்கு ஆளானார். தன்னுடைய பயணக்கட்டுரையை மீண்டும் திருத்தி எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டார். அதில் தன்னுடைய மாதிரிகள் குறித்து நிபுணர்கள் கூறிய கருத்துக்களையும் அதில் சேர்த்து எழுதினார். அந்தப் பணிக்காக ஹென்ஸ்லோவின் மூலம் ஆயிரம் பௌண்ட் கிடைத்தது. பீகிள் கடற்பயணத்தின் விலங்கியல் கருத்துக்கள் என்ற பல தொகுதிகளைக் கொண்ட நூலை எழுத அது உதவியாக இருந்தது. அந்தப் பணம் நில அமைப்பியல் தொடர்பான புத்தகத்தின் செலவுக்கு  பயன்படுத்த டார்வின் விரும்பினார். புத்தக வெளியீட்டாளரிடம் சிறிது நாட்களிலேயே புத்தகத்தை எழுதித் தருவதாக வாக்களித்தார். சார்லஸ் டார்வின், இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து. வாக்களித்தபடி புத்தகத்தை விரைவிலேயே முடித்தார். கடுமையான வேலைப்பழு, அதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அவரது உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதயக்கோளாறு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து ஸ்ரூஸ்பாரிக்கு சென்ற டார்வின், அங்கு தன்னுடைய உறவினர்களை சந்தித்தார். அவருடைய உறவினர்கள் சார்லஸ் டார்வினின் பீகிள் கடற்பயணத்தைப்பற்றி கேட்பதில் அதிக ஆர்வம் காட்டினர். அங்கு அவரது மாமா ஜோஸின் மகள் எம்மா வெட்ஜ்வுட்டை சந்தித்தார் டார்வின். அவரைவிட ஒன்பது மாதங்கள் மூத்தவரான எம்மா அழகாக, புத்திசாலியாக இருந்தார்.

 

Êசார்லஸ் டார்வினை சந்தித்த அவருடைய மாமா ஜோஸ், அருகில் இருந்த ஒரு நிலப்பகுதியைப் பற்றி குறிப்பிட்டு, சாம்பல் அதிகமாக இருந்த அந்த நிலப்பரப்பு தற்பொழுது வளம் நிறைந்ததாக மாறிவிட்டது. அதற்கு காரணம் மண்புழுக்கள்தான் என்று கூறினார். இந்தக் கருத்து டார்வினின் நிலவியல் சார்ந்த ஆராய்ச்சிக்கு பெரிதும் துணை புரிந்தது. மண்ணை வளமாக மாற்றுவது குறித்த தன்னுடைய ஆய்வை அவர் தன்னுடைய நிலவியல் குழுவின் முன்னிலையில் நவம்பர் மாதம் படிப்பதற்கும் அவருடைய மாமாவின் இந்த கருத்து அவருக்கு உறுதுணையாக இருந்தது. இதையடுத்து மண்ணின் வளம் பெருக மண்புழுக்களே காரணம் என்பதைக் கண்டறிந்து அதை ஒரு நூலாகவும் கொண்டு வந்தார் சார்லஸ் டார்வின் நிலவியல் குழுவின் செயலாளராக சார்லஸ் டார்வின் பணியாற்ற வேண்டும் என்று வில்லியம் விவல் என்பவர் அவரை கேட்டுக் கொண்டார். முதலில் மறுத்தாலும் சார்லஸ் டார்வின் 1838 மார்ச் மாதம் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார் டார்வின்.

 

இதையடுத்து பீகிள் பயணக்குறிப்புகளை செம்மைப்படுத்துவதை விடுத்து, உயிரினங்களின் மாற்றங்கள் குறித்த குறிப்புகளை சேகரிக்க தொடங்கினார் அவர். தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் அதற்காக அவர் பயன்படுத்திக்கொண்டார். இயற்கை ஆய்வாளர்களை ஆலோசிப்பதை மட்டும் செய்யாமல், நடைமுறை வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாக உயிரினங்களைப்பற்றி அறிந்து கொண்டிருக்கும் விவசாயிகள், பறவைகள், மிருகங்கள் முதலியவற்றை வளர்ப்பவர்கள் ஆகியோரிடமும்  இதைப்பற்றி தொடர்ந்து விவாதித்து வந்தார். மேலும் இதுகுறித்து தன்னுடைய உறவினர்கள், நண்பர்கள், வீட்டு சமையல்காரர், பக்கத்து வீட்டுக்காரர்கள், கப்பல் மாலுமிகள் முதலியவர்களிடமும் கேட்டு அறிந்துக்கொண்டார். இவ்வாறு தான் சந்திக்கும் மனிதர்கள் அனைவரையும் தன்னுடைய ஆய்வில் உட்படுத்திய சார்லஸ் டார்வின், மிருகக்காட்சி சாலை ஒன்றில் ஓரங்குட்டன் குரங்கு ஒன்றை சந்தித்தார். அதனுடைய குழந்தைத்தனமான நடத்தை அவரை பெரிதும் கவர்ந்தது. 

 

ஓய்வுக்கு சொந்த ஊர் சென்ற சார்லஸ் டார்வின், ஓய்வில்லாமல் தன்னுடைய ஆய்வை செய்து வந்தார். இது அவரது உடல் நிலைக்கு பெரிதும் ஊறு விளைவித்தது. தொடர்ந்து பல நாட்கள் வாந்தி, வயிற்று உபாதைகள் மற்றும் இதயநோய்கள் அவரை வாட்டின. வாழ்நாள் முழுவதும் அவருக்கு தொடர்ந்து அவரை பலவீனப்படுத்தும் வகையில் வாந்தி, வயிற்று உபாதைகள், கடுமையான கொப்புளங்கள், இதயவலி, நடுக்கம் போன்ற பல தொந்தரவுகள் அவரைத் தாக்கின. குறிப்பாக ஏதாவது மாநாட்டிற்கோ, முக்கியமானவர்களை பார்க்கச் செல்லும்போதோ இத்தகைய உபாதைகள் அவரை தொல்லைப்படுத்தும். இந்த உபாதைகளுக்கு மருத்துவர்களால் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் சிகிச்சை மூலம் ஓரளவு சரியாகிவந்தது.

 

சார்லஸ் டார்வின் திருமணம் யோசித்தார். திருமணம் செய்வதால் ஏற்படும் நண்னைகள் என்ன? திருமணம் செய்யாமல் இருந்தால் ஏற்படும் நிலை என்ன என்பது பற்றி தீவிரமாக யோசித்தார். தன்னுடைய கருத்துக்களை நோட்டில் எழுதிப் பார்த்துக் கொண்டார். திருமணம் செய்தால் அதன்மூலம் தனக்கு நிலையான ஒரு துணை கிடைக்கும். வயதான காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும். திருமணம் செய்யவில்லை என்றால் புத்தகங்கள் எழுத, ஆராய்ச்சிகள் செய்ய நிறைய நேரம் கிடைக்கும் குடும்பத்தால் ஏற்படும் காலவிரயம் தவிர்க்கப்படும். உறவினர்களில் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது போன்ற தனது கருத்துக்கள் குறித்து தந்தையிடம் விவாதித்தார். நீண்ட யோசனைக்குப்பின் எம்மாவை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டார். அவரிடம் தன்னுடைய எதிர்காலம் குறித்த கருத்துக்களை சார்லஸ் டார்வின் தெரிவித்தார். திறந்த மனதுடன் சார்லஸ் டார்வின் பேசியது எம்மாவை மிகவும் கவர்ந்தது. தன்னுடைய கிறிஸ்துவ நம்பிக்கைகள் குரித்தும் எம்மா, சார்லஸ் டார்வினிடம் பேசினார். எதிர்காலத்தில் சார்லஸ் டார்வினின் கடவுள் குறித்த சந்தேகங்கள் தங்களை பிரித்துவிடக்கூடாது என்பது குறித்தும் அவர்கள் பேசினர். 1839ஆ-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் நாள் நடைபெற்றது. அப்பொழுது சார்லஸ் டார்வினின் வயது முப்பது. தம்பதிகள் லண்டனில் குடியேறி தங்கள் இல்வாழ்க்கையை தொடங்கினர். திருமணத்திற்கு பின் சார்லஸ்டார்வினின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. தன்னுடைய ஆய்விற்கு முதன்மையான பொருளாக எதை எடுத்துக்கொள்வது என்பது குறித்து அவர் யோசனை செய்தார். கால்நடைகளை விவசாயத்திற்கு பயன்படுத்து, செடி, கொடிகள் ஆகியவை குறித்து தீவிரமாக ஆய்வு செய்தார்.உயிரினங்கள் தற்போது இருப்பது போலவே ஆதியில் இருக்கவில்லை. படிப்படியான மாற்றங்களை பெற்று வந்துள்ளனஎன்ற தன்னுடைய ஆய்விற்கான சாட்சியங்களைக் கண்டுபிடிக முயன்றார். நிலவியல் குறித்த ஆய்வுகள் பற்றிய கட்டுரைகள் எழுதுவது பீகிள் கப்பற்பயணம் தொடர்பான ஆய்வுகளுக்கான நிபுணர்களின் கருத்துக்களைகேட்டு அதை பிரசுரம் செய்வது என்பன போன்ற பணிகளில் மூழ்கியிருந்தாலும் மேற்சொன்ன ஆய்வினையும் ஒரு பக்கம் செய்துக் கொண்டுதான் இருந்தார்.

 

பவழப்பாறைகளின் அமைப்பும் வகைகளும் குறித்த டார்வினின் புத்தகம் 1842-ல் வெளிவந்தது. அதன்பிறகு மூன்று வருடங்கள் கடுமையான உழைப்பிற்கு பிறகு இயற்கை தேர்ந்தெடுப்பு தொடர்பான தன்னுடைய முதல் பென்சில்வரைபடத்தை டார்வின் வரைந்தார். பிறகு 1844, ஜூலை மாதம் தான் வரைந்த பென்சில் வரைபடத்திற்கு 230 பக்கத்தில் விரிவான விளக்கம் எழுதினார். தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடும் முன்னால் இறக்க நேர்ந்தால் அந்த விளக்கம் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவருடைய உடல்நிலைக் குறித்த கவலை அவருக்கு தொடர்ந்து இருந்து வந்தது. 

 

சார்லஸ் டார்வினின் இத்தகைய வேகமான ஆராய்ச்சிக்கு லண்டனின் நாகரிக வாசம் ஒத்துவரவில்லை. அவர் அடிக்கடி நோய்வாய்பட்டார். இதனால் அவருடைய ஆராய்ச்சி வேலைகள் தடைப்பட்டன. இதனால் 1842 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டனிலிருந்து பதினாறு மைல் தொலைவிலுள்ள டௌன் ஹவுஸ் என்ற சிறிய கிராமத்திற்கு தன்னுடைய மனைவி, இரண்டு குழந்தைகளுடன் குடியேறினார். அந்த சின்னஞ்சிறு கிராமத்தில்தான் டார்வினின் அரிய பெரிய ஆராய்ச்சிகளெல்லாம் நடந்தன.

 

அந்நாட்களில் தான் சார்லஸ் டார்வினுக்கு பகுத்தறிவு சிந்தனை மேலோங்கியது. அதே சமயத்தில் அந்த சின்னஞ்சிறு கிராமம் மதத் தரகர்களுக்கும், கடவுள் என்ற ஒரே ஒரு சொல்லை மூலதனமாக வைத்துக் கொண்டு மதவியாபாரம் செய்பவர்களுக்கு அச்சத்தையும் நடுக்கத்தையும் கொடுத்தது. பகுத்தறி சிந்தனையை எடுத்துக்கூறி மக்களிடம் மதத்தை பரப்பும் தன்னிடைய பிழைப்பைக் கெடுக்கிறானே என்று மதவாதிகள் கருதினர். அந்தக் குக்கிராமத்தை நரகத்தின் தலைமைப் பிசாசான லூசிஃபார் என்பவனின் தலைநகரம்என்று மக்களிடையே பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டிருந்தனர். ஆனால் இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் சார்லஸ் டார்வின் தன்னுடைய ஆராய்ச்சியிலேயே கண்ணும் கருத்துமாக ஈடுபட்ட. அந்த அழகான கிராமத்தைப் போல வேறொரு இடத்தை நான் எங்குமே கண்டதில்லைஎன்று சர்லஸ் டார்வின் அடிக்கடி கூறுவது வழக்கம். டௌன் ஹவுசிற்கு வந்த சிரிது காலம் வரை தென்னமெரிக்காவின் அருகாமையிலிருந்த எரிமலைத் தீவுகளைப் பற்றியும், அதன் பூதத்துவங்களைப் பற்றியும் மரக்கலங்களில் ஒட்டி வாழும் சிறுசிறு சிப்பிகளைப் பற்றியும் ஆராய்ச்சி செய்தார் சார்லஸ் டார்வின். அத்துடன் பறவையின் இறக்கையையும், நாயின் காலையும், மனிதனின் கையின் மேல் தோற்றத்தை மட்டும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவை மூன்றும் ஒன்றுக்கு ஒன்று பலத்த வேறுபாட்டுடன் சம்பந்தமில்லாதவை போல தோன்றும். ஆனால் அதன் எலும்புகளை  ஒப்பிட்டுப் பார்த்தால், அதன் அமைப்புத் தோற்றம் ஏறத்தாழ ஒரே மாதிரியாகவே இருக்கும். அத்துடன் இன்னொன்றையும் சார்லஸ் டார்வின் ஆராய்ந்தார். அதாவது ஒரு குரங்கு நடக்கிறது. அப்படி அது நடக்கும்போது, பின்னங்கால்களில் ஒன்றான வலது கால் அடியெடுத்து வைத்தால் அதே சமயத்தில், முன்னங்கால்களில் இடதுகால் அடியெடுத்து வைக்கிறது. முன்னங்கால்களில் வலதுகால் அடியெடுத்து வைத்தால் அதே சமயத்தில், முன்னங்கால்களில் இடதுகால் அடியெடுத்து வைக்கிறது. இப்படி இடம் வலமாக அந்நான்கு கால்களும் இயங்குகின்றன. அதேபோல் தான் மனிதனும் நடக்கிறான். மனிதனின் வலதுகால் அடியெடுக்கும்போது அவன் இடது கை முன்னே செல்கிறது. வலது கை முன்னே வீசும்போது இடது கால் அடியெடுக்கிறது. ஆக, மனிதனும் குரங்கும் நடக்கும் முறையில் ஏறத்தாழ ஒரே மாதிரி மிக நெருங்கிய ஒற்றுமையுடன் இருப்பதை சார்லஸ் டார்வின் ஆராய்ந்தார்.

 

  மனிதத் தோற்றத்தை இறுதி திருத்தமாக வைத்துக்கொண்டு, பிற ஜீவராசிகளனைத்தையும் தீவிரமாக ஆராயும்போது அதற்கெல்லாம் மூலமான ஒரு பொது மூதாதையர் உண்டு என்பதை சார்லஸ் டார்வின் தெளிவாக தெளிவாக அறிந்தார். இந்த ஆராய்ச்சிக் கருத்துக்களையெல்லாம் ஒன்று திரட்டி, தமது பாணாமத் தத்துவத்திற்கு ஒரு பலமான அஸ்திவாரம் அமைத்தார்.

 

1842-ஆம் ஆண்டின் முடிவில் இயற்கைப் பிரிநிலைத் தத்துவம்என்ற முப்பத்தைந்து பக்க சிறு நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார் டார்வின். அந்தச் சிறு புத்தகம் ஒரு சில விஞ்ஞானிகளின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது என்றாளும் மக்களின் கவனத்தை கவரவில்லை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் சார்லஸ் டார்வின் கவலைப்படவில்லை. இரண்டு வருடங்கள் வரை தமது பழைய ஆராய்ச்சியில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். 1838-ம் வருடம் பேராசிரியர் மாலதஸ் என்பவரால் எழுதி வெளியான ஜனத்தொகைஎன்ற கட்டுரை டார்வின் ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. தாவர வகையறாக்களையும், ஊர்வன, நீந்துவன, பறப்பன, நடப்பன ஆகிய ஜந்துக்களையும், அதன் எலும்பு நிணங்களையும் பெருத்த அளவில் சேகாரித்து இடைவிடாது ஆராய்ந்தார்.

 

இந்த ஆராய்ச்சிகளைப் பற்றித் தம் நண்பர்களான லாயல் என்ற நிலவியல் ஆய்வாளருக்கும், ஹுக்கர் ஆஸாசிரே என்ற தாவரவியல் ஆய்வாளருக்கும் அடிக்கடி கடிதங்கள் மூலம் தொரிவித்துவந்தார் டார்வின். அவர்கள் டார்வினின் இந்த ஆராய்ச்சிகளைக்கேட்டு அதிசயித்தார். இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை உடனடியாக உலகம் அறியும்படி செய்யவேண்டும் என்று அவர் துடித்தார். சார்லஸ் டார்வினை அணுகி, அவரின் ஆராய்ச்சிக் கருத்துக்களை நூல் வடிவில் எழுதி வெளியிடும்படி கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் விருப்பப்படி டார்வின் தமது முடிவுகளை எழுதினார். சார்லஸ் டார்வின் ஒரு எழுத்தாளர் இல்லை என்பதால் அவருக்கு எழுத்து வேலையில் ஆர்வம் ஏற்படவில்லை. எந்நேரமும் ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்கத்தான் விருப்பமாக இருந்தது. எண்ணங்களை ஏட்டில் எழுதுவதால் என் பொன்னான நேரம் பாழாகிறதுஎன்று அவர் அடிக்கடி அழுத்துக் கொள்வார். ஆனாலும் ஆராய்ச்சி முடிவுகளை மக்களிடம் சேர்க்க எழுத்துதான் மூலதனம் என்பதை அவர் உணர்ந்தால். இன்றுபோல் அன்று மீடியாக்கள் இல்லாத காரணத்தால் புத்தகம், பத்த்ரிக்கை மூலமாகவே தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை சார்லஸ் டார்வினுக்கு இருந்தது.  அதனால் சார்லஸ் டார்வின் எழுத்துப் பணியில் ஈடுபட்டார்.

------*------             

 

                  ஜீவராசிகளின் மூலம் 

 

 

   உலகத்தில் துன்பம் அதிகமாக நிறைந்திருக்கிறதென்பதை யாரும் மறுப்பதற்கில்லை. மனிதனுடைய ஆன்ம வளர்ச்சியை இந்தத் துன்பங்கள் துரிதப்படுத்துகின்றன என்று சிலர் கூறுகின்றனர். உலகத்திலுள்ள மற்ற ஜீவராசிகள், மனிதர்களுடைய எண்ணிக்கையைவிட அதிகமானவை. ஆனால் அவை எந்தவிதமான ஆன்ம வளர்ச்சியுமின்றி எண்ணில்லாத துன்பங்களை அனுபவிக்கின்றனவே? உலகத்திலே அதிகமான துன்பங்கள் இருப்பதைக் கொண்டு, இயற்கைப் பரிணாமத்தினாலேயே சிருஷ்டிக்கிரமம் நடைபெறுகின்றதென்பது நிர்ணயிக்கப்படுகிறது.

 

  ருநாள் காலை மலேயாவிலிருந்து புகழ்பெற்ற பிரிட்டீஷ் இயற்கை நூல் நிபுணரும், புதுப் பிரதேசங்களைக் கண்டுபிடித்தவருமான ஆல்பிரட் ரஸல் வாலஸ் என்பவரிடமிருந்து  ஒரு கடிதம் வந்தது. அதில் இத்தனை காலமாக டார்வின் செய்துவந்த ஆராய்ச்சியின் சாரம் முழுவதும் அப்படியே அடங்கியிருந்தது. அதைக் கண்டு டார்வின் திகைத்துப் போனார். இதுபோன்று அகஸ்மாத்தாக ஏற்படும் ஒற்றுமையை நான் இதுவரை கண்டதே இல்லைஎன்று வியப்படைந்தார். ஆனால் அக்கடிதத்தை எழுதிய வாலஸ், தமது அந்த முடிவுகளை எக்காரணத்தைக் கொண்டும் வெளியிடப் போவதில்லை என்று அதில் குறிப்பிட்டிருந்தார். ஒரு வேளை அந்த நபர், ஆராய்ச்சிசெய்யும் திறன் பெற்றிருந்தும், ஏதோ ஒரு பலவீனத்தால் யாருக்காகவோ எதற்காகவோ அஞ்சி, அந்தக் கருத்தை வெளியிடக் கூடாதென்று நினைத்திருக்கலாம். டார்வினுக்கு இந்தக் கடிதத்தால் ரொம்பவும் மன வேதனையை ஏற்படுத்தியது. இத்தனை கால ஆராய்ச்சிகளை, மேலும் தொடர்ந்து எழுதலாமா வேண்டாமா என்ற சிந்தனையில் ஆழ்ந்தார் சார்லஸ் டார்வின்.  தாம் எழுதும் நூலை முடித்து வெளியிடுவது அத்தனை உசிதமல்ல என்று அவருக்குப்பட்டது. இதுபற்றி டார்வின், தமது நண்பர்களான லாயலிடமும் ஹுக்காரிடமும் யோசனை கேட்டார். அந்தப் பயங்கொள்ளி ஆராய்ச்சியாளனுக்காக உமது சொந்த ஆராய்ச்சிகளை எழுதாமல் இருக்க வேண்டாம். கண்டிப்பாக எழுதியே தீர வேண்டும்என்று பிடிவாதமாக கூறினார்கள். அதனால் தொடர்ந்து தம் நூல்களை எழுதினார் சார்லஸ் டார்வின். 1846-ம் ஆண்டு எழுத ஆரம்பித்த அந்நூல் 1850-ம் வருடம் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி முடிந்தது. எழுதி முடித்த கையெழுத்துப் பிரதியைப் பல முறை படித்தும், திருத்தியும், சந்தேகமான பகுதிகளை மீண்டும் ஆராய்ந்து சேர்த்தும் அச்சுக்குக் கொடுத்தார். ஜீவராசிகளின் மூலம்’’ என்ற அந்தப் புத்தகம் 1859-ஆம் வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளிவந்தது.

 

Êசார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு கீழ்வரும் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது.

 

1. மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது)

2.மரபுவழி (ஒத்த உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல்)

3.உயிர் வாழ்தலுக்காணப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச் சாதகமக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப் பெருக்க முறைகளை  தீர்மானித்து உயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது)

 

      இத்தைகை இன்றைய நவ நாகரீக, விஞ்ஞான  உலகம் அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் மகிமைப் பற்றி நமக்கு விளக்கம் தருகிறது.

 

சார்லஸ் டார்வின் ஜீவராசிகளின் மூலம் என்ற நூல், பிரபலமடையவும் மிகுந்த பாராட்டைப் பெறவும் காரணமாக அமைந்தது. முதல் பிரதியிலேயே 1250 பிரதிகள் விற்றன. இங்கிலாந்தில் மட்டும் 5 ஆண்டுகளில் பதினாராயிரம் நூல்கள் விற்றன. சார்லஸ் டார்வின் பரிணாம வளர்ச்சி இயற்கைத் தேர்வின் மூலடம் நடைபெறுவதை பல ஆதாரங்களுடன் விளக்கி உள்ளார். சார்லஸ் டார்வின், தன் ஆராய்ச்சியின் பயணாக பதினெட்டு நூல்களை எழுதினார்.

 

          ஜீவராசிகளின் மூலம் என்ற அந்நூல், இப்பரந்த உலகம் அன்றுவரை கண்டரியாத ஒரு மாபெரும் பரபரப்பை உண்டு பண்ணிவிட்டது. எண்ணற்ற ஆண்டுகளாய் இப்படியொரு சலசலப்பை இவ்வுலக சரித்திரம் இதுவரை காணாத அளவுக்கு அந்நூல் செய்துவிட்டது. யார் இந்த சார்லஸ் டார்வின் என்று அனைவரையும் திரும்பிப்பார்க் வைத்தது. அந்நூலைப் படித்துவிட்டு நிதானமாகச் சிந்திக்க ஆரம்பித்தனர். சிந்திக்க விரும்பாதவர்கள் கடுமையாக விமர்சித்தனர். புத்தகம் வெளியான ஒருசில நாட்களில் முழு இங்கிலாந்தில் ஏற்பட்டுவிட்ட புயல், ஒருசில மாதங்களுக்கெல்லாம் அகில உலகையும் தாக்க ஆரம்பித்தது. ஹிப்ரூ, ஸ்பானீஷ், போலிஷ், ஜப்பான். பொஹிமியன் உள்பட பல மொழிகளில் இந்தநூல் மொழிபெயர்க்கப்பட்டது. எங்கு திரும்பினும் இந்த நூலைப்பற்றி பேச்சுத்தான். குறுகிய காலத்தில் உலகில் உள்ள 250 கோடி மக்களும் மூன்று பிரிவாகப்பிரிந்து நிற்க செய்துவிட்டது கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்ற சர்ச்சையில் இறங்காமல், அறிவின் வழி நடக்கும் அறிஞர்கள் ஒரு புறம், கடவுளைப்பற்றி ஏதும் அறிந்து கொள்ளாமல் ஆனால் அவனைப்பற்றி அதிகம் அறிந்தவர்கள் போல் நடித்து உலகின் ஒளி நானே என்று தனக்குத்தானே கூறிக்கொள்ளும் கடவுளின் பிரதிநிதிகள் தாங்களை அழைத்துக் கொள்ளும் மதவாதிகள் ஒருபுறமும், அறிவின் வழிநடக்கவோ அல்லது ஆண்டவனின் கட்டளைப்படி செல்லவோ போதிய சுயத்தெளிவில்லாமல் எந்த ஒரு சிறிய காரியத்திற்கும் அவ்விரு சாராரின் நாவசைப்பையும் மூளைச் சலனத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பாமரமக்கள் ஒரு புறம் என மூன்று பகுதிகளாகப் பிரிந்து நின்றது மக்கள் கூட்டம்.

 

          சார்லஸ் டார்வினுக்குப் பக்கபலமாயிருந்து, அவரின் புதிய தத்துவத்தை இவ்வுலகில் நிலை நாட்ட பாடுபட்ட பல்லாயிரக்கணக்கானவர்களில் குறிப்பாகச் சிலரை குறிப்பிடலாம். லாயல் ராம்சே, ரில்ஸ், ரோஜர்ஸ் - பூதத்துவ ஆய்வாளர்கள். ஹக்ஸ்லி, லோபாக், ஜெனின்ஸ் -விலங்கியல் ஆய்வாளர்கள். கார்பன்டர், சர்.எச்.ஹாலண்ட், - உடற்கூறு ஆய்வாளர்கள். ஹுக்கர், வாட்சன், ஆசாகிரே - தாவிரவியல் ஆய்வாளர்கள். ஆதரவு கோஷ்டி, எதிர்ப்பு கோஷ்டிகள் தீவிரமாக வேலைசெய்ய ஆரம்பித்தன. இறுதியில் இவ்விரு கோஷ்டிகளும், இந்தப் புதிய தத்துவத்தைப்பற்றி வாதப்போர் புறிய குறிப்பிட்ட நாலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டன. இவ்விரு சாராரின் முஸ்தீபுகளைப் பார்த்துக் கொண்டிருந்த டார்வின், “கடவுளைப் போல மௌனப் புன்னகைபூத்தார். ஜீவராசிகளின் மூலம்என்ற அந்த நூலைப்பற்றி சொற்போரிட இரு கோஷ்டிகளும் 1860-ஆம் வருடம் ஜூன் மாதக் கடைசியில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்தனர். குறிப்பிட்ட நாளும் வந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரிட்டீஷ் சங்கத்தின் சார்பில், இந்த மாபெரும் விவாதக் கூட்டம் நடக்கவிருந்தது.

 

பல நாடுகளிலிருந்தும் இந்தச் சொற்போரின் வெற்றி தோல்விகளைத் தெறிந்துகொள்ள மக்கள் அலையெனத் திரண்டு வந்தனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நான்கு புறமும் பல மைல் தொலைவில் ஒரே மனிதத் கூட்டமாக இருந்தது. நம்மை சிருஷ்டித்தது கடவுளா? வானரக்கூட்டமா? என்ற கேள்விக்கு பதிலை எதிர்ப்பார்த்து அனைவரும் காத்திருந்தனர். விநாடிக்குவிநாடி வந்து கூடும் ஜனக்கடல் விரிவடைந்து கொண்டேபோனது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பிரம்மாண்டமான விழா மன்றம், அங்கு வந்திருந்த ஜனக்கடலைத் தன்னுள் அடக்கிக்கொள்ள வலுவிழந்துவிட்டது. அதனால் விவாத நிகழ்ச்சியை ஆக்ஸ்போர்டு லைப்ராரி மியூசியம் இருந்த பெரிய கட்டிடத்தில் நடத்த உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது. எதிர்ப்பு கோஷ்டிக்குத் தலைவராக ஆண்டவனால் படைக்கப்பட்டவனே மனிதன் என வாதிட ஆக்ஸ்போர்டைச் சேர்ந்தவரும் மதத்துறையில் மிகவும் பிரபலமானவருமான சோபிசாம்என்று அழைக்கப்படும் பிஷப் வில்பர்போர்ஸ் என்பவர் உட்கார்ந்திருந்தார். அவருக்கு உதவியாக இறைவனடியார்களும் உடன் அமர்ந்திருந்தார்கள். இந்த மாபெரும் விவாதக் கூட்டத்திற்கு மூலகாரணமான சார்லஸ் டார்வின் வரவில்லை. அவர் டௌன் கிராமத்தில் வழக்கம்போல் தன்னுடைய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவருடைய கொள்கைகளை கண்டுப்பிடித்ததோடு இவ்வுலகத்திற்கான அவருடைய கடமை முடிந்து விட்டதல்லவா? மாறாக அதை இவ்வுலகம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்காவிட்டாலும் அதைப்பற்றி கவலைக்கொள்ள அவர் விரும்பவில்லை. அதனால் தான் சார்லஸ் டார்வின் அந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. ஆனால் சார்லஸ் டார்வினின் நலம் விரும்பிகளான ஹக்ஸ்லியும், ஹூக்கரும் விவாதத்தில் கலந்துகொண்டனர். பல்கலைக்கழக மியூசிய மண்டபம் கட்டுக்கடங்காத ஜனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

 

சிலுவை ஏந்திய கரங்களின் பலத்த கோஷத்திற்கிடையே பிஷப் வில்பர்போர்ஸ் மேடையேறினார். அவர் அணிந்திருந்த மதச் சின்ன உடைகள் மக்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது. அவர்களின் உள்ளங்களில் அவரைப் பற்றி ஒரு பயத்தையும் பக்தியையும் உண்டு பண்ணுவதாய் இருந்தது. உலகமெங்கும் வியாபித்திருக்கும் ஒரு சத்திய மறையின் புராதன நம்பிக்கைக்கு ஒரே ஒரு மனிதனால் எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறு புத்தகத்தால் எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்டிருக்கும் ஆபத்தை, தமது அரைமணி நேரப் பேச்சின் மூலம் அடித்துத் தகர்த்து எரியப்போகும் பிஷப் வில்பர்போர்ஸை அங்கு கூடியிருந்த முப்பிரிவினரும் அசையாச் சிலைகள் போலிருந்து அதிசயத்துடனும் விநயத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தனர். பிஷப் பேச ஆரம்பித்தார். அடுக்கடுகான வார்த்தைகளால், அழகழகான உபமான உபமேயங்களால், தம்மை எதிர்ப்பவர்களையெல்லாம் வாய் கூசாமல் நாஸ்திகர் என்று தூற்றினார். அரைமணி நேரம் தொடர்ந்து  நிறுத்தாமல் சொற்பொழிவாற்றினார் பிஷப் வில்பர்போர்ஸ். அவரது  அரைமணிநேரப் பேச்சில் அர்த்தக் கோளாறுகளும், அனுபவ ஓட்டைகளும், நேர்மை பிறழ்ச்சிகளும், நெறியற்ற கேள்விகளும் நிறையவே இருந்ததைக் கண்டு கூடியிருந்த மக்கள் அனைவரும் கைகொட்டி சிரித்தனர். இவருடைய உளறலைக்கேட்டு இவர் சார்லஸ் டார்வினின் புத்தகத்தைப் படிக்கவே இல்லை போலிருக்கிறது என்று மக்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் இவர் பைபிளைக்கூட ஒழுங்காக படித்தது இல்லை என்பது அவரது பேச்சில் இருந்து தெரிந்தது. மதவாதிகளுக்கு அதிக தன்னம்பிக்கை இருப்பதால் தங்களது முட்டாள் தனத்தை மறந்துவிடுகிறார்கள்.

 

இந்த கோஷங்களைக் கேட்ட பிஷப் வில்பர்போர்ஸின் உடல் கொள்ளிக் கட்டையாகக் கொதித்தது. அவர் மக்களைப் பார்த்து கூக்குரலிட்டு, “மதிப்பிற்குரிய மகா ஜனங்களே! பரமபிதாவின் பெயரால் நான் உங்களை ஒன்று கேட்கிறேன். சாத்தானின் அவதாரமான சார்லஸ் டார்வின் நீங்களெல்லாம் குரங்கிலிருந்து உற்பத்தியானவர்கள் என்று கொஞ்சமும் கூசாமல் கூறுகிறார். நீங்களே கூறுங்கள். உங்களுடைய பாட்டன்மார்களும் முப்பாட்டன்மார்களும் குரங்குகளா? உங்கள் பாட்டன் குரங்கா? பாட்டி குரங்கா? யாரை குரங்கு என்று நீங்கள் தீர்மானிக்கப் போகிறீர்கள்? மற்றொரு கேள்வியையும் நான் உங்களிடம் கேட்கிறேன். டார்வின் தனது அபத்தமான தத்துவத்தில் கூறியிருக்கிறார். புழு பூச்சியாகி, பூச்சி வண்டாகி, வண்டு பறவையாகி, பறவை பிராணியாகி, பிராணி குரங்காகி, குரங்கு மனிதனானான் என்று. இந்தப் பாரிணாமப்படி பார்த்தால் குரங்கிலிருந்து தோன்றிய மனிதன் இத்தனை லட்ச ஆண்டுகளுக்குப் பின்னும் எந்தவித பாரிணாம வளர்ச்சியும் கொள்ளாமல் அப்படியே தானே இருக்கிறான்? ஏன் அவனுக்கு இன்னும் ஒரு கொம்போ, ஒரு இறக்கையோ, ஒரு வாலோ அல்லது வேறு எதுவுமே உண்டாகவில்லை? குரங்கின் பாரிணாமம் மனிதன் என்றால் மனிதனின் பாரிணாமம் என்ன? அதற்கு டார்வின் தன் தத்துவத்தில் என்ன கூறியிருக்கிறார்? பாரிணாமம் என்றால் அதற்கு ஒரு இறுதி முடிவு இருக்க முடியாதே இதைச் சிந்தித்துப் பார்க்காமல் நம்மைப் படைத்த ஆண்டவனை ஏளனம் செய்வது எவ்வளவு பெரிய பாவம் என்பதை நீங்கள் உணரவில்லையா? இந்த எனது கேள்விக்கு டார்வினின் ஆதரவாளர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? இந்த எனது கேள்விக்கு ஏற்ற பதிலைச் சொல்லாமற் போனால், இங்கே குழுமியிருக்கும் மக்களின் எதிரில் அவர்களுடைய தலைவன் எழுதிய புத்தகத்தை கிழித்தெறிய முற்படுவார்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். ஹக்ஸ்லி மற்றும் ஹூக்காரின் சொற்பொழிவையும் கேட்டுவிட்டு பின் ஒரு முடிவுக்கு வரலாம் என்ற எண்ணத்துடன் அனைவரும் காத்திருந்தனர். தன்னடக்கத்துடனும் கம்பீரத்துடனும் அமர்ந்திருந்த ஹக்ஸ்லி மென்முறுவல் பூத்தவாறே மெல்ல எழுந்து மேடை மீதேறி நின்றார்.

 

அன்புள்ள பெருமக்களே! நான் இங்கு விஞ்ஞானக் கருத்துக்களுக்காகத்தான் வந்திருக்கிறேன். மதத்தைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதற்கல்ல! அதற்கு பிஷப் போன்ற அநேகம் பேர் உள்ளனர். இவ்வளவு நேரமும் மனிதன் பாரிணாம வளர்ச்சி பெற்றவனல்லன் என்றும் உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்தும் ஆண்டவனால் படைக்கப்பட்டன என்றும் பிஷப் அழுது புலம்பினார். அவருடைய பேச்சில் எந்த புத்திசாலித்தனமும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அவருடைய தாயின் வயிற்றில் அவர் ஐந்துநாள் பிண்டமாயிருக்கும்போது, அந்தப் பிண்டம் ஒரு பென்சிலின் முனையளவு கூட இருந்திராமலிருந்து, அதுவே பத்துமாதத்திற்குப்பின் ஒரு முழு மனித உருவாய் வளர்ச்சி பெற்று இவர் ஜனித்திருக்கிறார் என்பதை சிரிதும் சிந்தியாமல் இவர் பேசி விட்டார். என்னைப்பொறுத்தவரை என் முன்னோர்கள் குரங்காக இருந்தார்கள் என்று கூறிக் கொள்வதில் எனக்கு தயக்கம் சிறிதும் இல்லை. மாறாக தன்னுடைய வாதம் நிலைபெற பொய்யான விளக்கங்களை கொடுக்கும் பிஷப் வில்பர்போர்ஸின் பரம்பரை என்று கூறிக் கொள்ளத்தான் நான் பெரிதும் வெட்கமடைகிறேன்என்று கூறித் தமது பேச்சை நிறுத்திவிட்டு கட்டுக்கடங்காமல் கொந்தளித்துக் கொண்டிருந்த ஜனக்கடலை அமைதியுடன் நோட்டமிட்டார் ஹக்ஸ்லி.

 

ஹக்ஸ்லி, டார்வினின் பரிணாமத் தத்துவத்தை அழகான வார்த்தைகளால் அமைதியாகவும் நிதானமாகவும் கௌரவமாகவும் தெளிவாகவும் பாமரரும் புரியும் விதமாகவும் விளக்கினார். ஹக்ஸ்லியின் பிரசங்கத்தை, இதுவரை ஆழ்ந்த கவனத்தோடு கேட்டுக் கொண்டிருந்த மகள் ஆனந்தம் மிகுதியால் ஆகாயத்தை முட்டுமளவுக்கு ஆரவாரக் கோஷமிட்டனர். வாழ்க டார்வின்! நிலைபெறுக டார்வினிஸம்!’’ என்று தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஆர்ப்பரித்தனர். டார்வினை நாஸ்திகன் என்று சித்தரித்துக் காட்டி வாதத்தில் சுலபமாக வென்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வில்பர்போர்ஸ் கழுத்தை வளைத்துத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரைச் சேர்ந்தவர்களும் அவமானத்தால் வெட்கி தலை குனிந்தனர். டார்வினசமே வெற்றிபெற்றது. ஆனாலும் இன்றளவும் டார்வினின் பாரிணாமத் தத்துவம் குதிரை பூட்டிய ஒரு வண்டி போலவும், மதவாதிகளின் சிருஷ்டித் தத்துவம் எருமை மாடு பூட்டிய வண்டி போலவும், இன்றைய உலகத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன, இன்னும் கொஞ்ச காலத்திற்கெல்லாம் இவ்விரு வண்டிகளின் ஓட்டத்தால் ஏற்படும் இடைவெளி, திடீரென்று ஒருநாள் விஸ்வரூபம்எடுத்து, பின்தங்கிவிட்ட வண்டியைக் கவிழ்த்து விட்டு, முன்னேறிச்சென்ற வண்டியையே இம்முழுவுலகத்தின் ஏகப்பிரதிநிதியாக ஆக்கப்போகிறது என்பது மட்டும் முன்கூட்டியே செய்து கொள்ளவேண்டிய ஒரு முடிவான உறுதி!

 

பரிணாமத் தத்துவம் உலகிடையே ஏற்படுத்தியிருக்கும் மாபெரும் புயலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் எப்பொழுதும் போல டார்வின் தனது ஜீவராசிகளின் மூலம் குறித்த ஆராய்ச்சியிலேயே மேன்மேலும் மூழ்கினார். தாவர விஞ்ஞானத்தை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்த அவர் 1862-ம் வருடம் கனிவர்க்க விதைகளின் கருவுறம்என்ற நூலை எழுதினார். பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து, “படரும் செடி கொடிகளின் இயக்கமும் சுபாவப் போக்குகளும்என்ற நூலை எழுதினார். இவ்விரு நூல்களிலுள்ள ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டு மீண்டும் தமது பரிணாமத் தத்துவத்தைப்பெரிய அளவில் ஆராய்ந்து வீட்டில் வளரும் மிருக-தாவர இனங்களின் பாகுபாடு’’ என்ற பெரிய நூலை எழுதினார். மறுபடி 1871 ஆம் ஆண்டு,“மனிதனின் தோற்றம்என்றொரு நூலையும் எழுதினார். இந்த நூலில், மனிதன் மற்றெல்லா ஜீவராசிகளையும்விட மிக உயர்ந்தவனாகக் கடவுளால் முழு உருவமாக படைக்கப்பட்டான் என்று இதுவரை நிலவி வந்த கொள்கைக்கு நேர்விரோதமாக ஓரங்குட்டான், சிம்பன்சி, கொரில்லா போன்ற குரங்குகளுக்கு உறவான நான்கு கைகளும் ரோம மயமாக உள்ள ஒரு மிருக பரம்பரையிலிருந்து திருத்தமுற்றுத் தோன்றியவனே ‘‘மனிதன்என்பதாகத் தகுந்த ஆதாரங்களுடனும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். மேலும் அந்நூலில் பலவகை மிருகங்களின் ஆண், -பெண் இனப்பாகுபாட்டையும் அந்த இனத்தின் குண வேறுபாட்டையும் உடல் மனத்தத்துவ ரீதியாக ஆராய்ந்து அவற்றையெல்லாம் ஒன்று திரட்டி மனித மனம், -உடல் தத்துவத்துடன் ஒப்பிட்டுக் காட்டி, செடி கொடி முதல், மிருகம், -மனிதன் வரை ஒன்று போல் ஆண்-, பெண் பால்கவர்ச்சி, இனவிருத்தி செய்யும் சக்தி முதலியன இருப்பதையும் விளக்கினார். இந்த ஆராய்ச்சியை மூலமாக வைத்து இவருக்குப்பின்னால் வந்த பரிணாமவாதிகள், உலகில் ஜீவராசிகள் உற்பத்தியான விதத்தைப் பற்றித் தெளிவான விளக்கினர்.

 

புரோடோஸா என்னும் (நிறம் உருவமற்ற) நொய்ய நீர் வாழுயிர்களிலிருந்து கடற்பஞ்சைப்போன்ற பிராணிகள் தோன்றின. அவைகளிலிருந்து பவளக்கொடியாக்கும் பிராணிகள் தோன்றின. அவைகளிலிருந்து நட்சத்திர மீன்களும் புழு, பூச்சி, நத்தை, நண்டு, தவளைகளும் தோன்றின. அவைகளிலிருந்து ஒரு கிளையாகத் தும்பி, பட்டாம்பூச்சி, பறவை, வௌவால்களும், இன்னொரு கிளையாக எலி, பெருச்சாளி, கரடி, யானைகளும், அவைகளின் ஒரு கிளையிலிருந்து வானரங்களும், வால் இல்லாக் குரங்குகளும் தோன்றின. இறுதியில் அதன் இன்னொரு கிளையிலிருந்து மனிதனின் முதல் இனம் தோன்றியது. இஃது இவ்வுலகில் இன்றைக்குச் சுமார் மூன்று லட்சம் வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததாகும். ஜீவராசிகளின் உற்பத்தி தத்துவத்திற்கு, பாரிணாமவாதிகள் தந்திருக்கும் விளக்கச் சுருக்கம் இதுதான். எனினும் இந்த அற்புதமான, தெளிவான ஆராய்ச்சிக் கருத்துக்களைக்கூட அன்றும் இன்றும் உள்ள உலகம் ஏற்றுக்கொள்ளத் தயங்கித் தடுமாறியது. தமது அரும்பெரும் ஆராய்ச்சிகளை ஏற்றுக் கொள்ளத் திராணியற்றுக் கிடக்கும் இந்த உலகத்தைப்பற்றி வழக்கம்போல டார்வின் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அவரின் ஆராய்ச்சி எனும் வேர் அதல பாதாளம் வரை சென்று கொண்டேதானிருந்தது.

 

1872ஆ-ம் வருடம் மனிதனும் மிருகங்களும் தம் உணர்ச்சிகளை வெளியிடும் விதம் என்றொரு நூலை எழுதி வெளியிட்டார் டார்வின். இந்த நூலே அவரால் எழுதப்பட்ட கடைசி நூல். தள்ளாத வயது வந்து, அவரின் ஆராய்ச்சிகளைத் தடுத்தாட் கொண்டு விட்டாலும், டார்வின் ஒருநாள் கூட இவ்வாராய்ச்சியில் ஈடுபடாமலிருந்ததே இல்லை! கடவுளே என் மூளையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்த ஒரேவித எண்ணத்தைப் பெயர்த்தெரிந்துவிட மாட்டாயா? அந்த எண்ணம் இருக்கும்வரை என்னால் நிம்மதியாக இருக்கமுடியவில்லைஎன்று டார்வின் அடிக்கடி சலித்துக் கொள்ளும்படியான அளவுக்கு அந்த பரிணாம ஆராய்ச்சி அவரின் மூளையை வளைத்துக் கொண்டிருந்ததென்றால் அந்த ஆராய்ச்சியில் அவர் எத்தகைய தீவிர உற்சாகமும் உறுதிப்பாடும் விடாமுயற்சியும் கொண்டிருந்தார் என்பது விளங்கும்.

 

 “ஆராய்ச்சித் துறையில் டார்வினுக்கிருந்த அபார விருப்பத்தைப்போல இவ்வுலகில் வேறு எந்த ஆராய்ச்சியாளனுக்கும் இதுவரை இருந்ததில்லை! 

 

 

 

 

-தொடரும்..............

by Swathi   on 30 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.