Tamil Dictionary Baby Names Movies Tamil Sites Temples Events eBooks WebTV Photos Videos FM Radio Forum Classifieds Thirukkural Mobile Apps
  Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்     சிற்றிதழ்கள்-Tamil Magazine    மத்திய ஆப்பிரிக்கா (Central Africa )

Classifieds Search

Category  Sub Category 
Keys   
காங்கோ தமிழ்ச்சாரல்
Country : Democratic Republic of the Congo
State : Matadi
City : Kinshasa
Address : EIS School, 1154, avaenue de kassai, Kinshasa
Contact Number : +243815054333
Email Id : tycakinshasa@gmail.com
Website : tycacongo.com

நம்ம ஊரு அப்துல் கலாம்.

 

எண்ணூர்த்துறைமுக எண்ணெய்க் கசிவு

இரண்டாண்டுகளுக்கு முன்பு சென்னை எண்ணூர்த் துறைமுகத்தில் ஒருநாள் கடலலைகள்  கருப்பாக அடித்தன. எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை நீலக்கடலானது கருங்கடல் ஆனது. ஆமைகளும், மீன்களும், நண்டுகளும் அவற்றைக் கொத்தித் தின்ன வந்த பறவைகளும் கொத்துக் கொத்தாக மடியத் தொடங்கின.கிராமத்து ஏரிக்கரை,குளக்கரை, இடுகாட்டுக்கருகில் ஒற்றைக்கல் காவல் தெய்வங்களான அய்யனாரப்பன்,கெங்கையம்மன், புறையாத்தா, அரிச்சந்திரன் சிலைகள் ஆண்டாண்டு காலமாக எண்ணெய்த் தடவி தடவி, கருப்புப் படலம் படிந்து இருட்டினும் அடர்கருப்பில் நின்று கொண்டிருக்கும். அந்திமாலை நேரத்தில் தனியாகப் போகையில் கண்ணங்கரேலென்று நின்று கொண்டிருக்கும் இந்தக் கற்சிலைகளே  ஒருவித கலக்கத்தை உண்டாக்கும். அதைப்போல இந்தக் கடற்கரையோரம் கொட்டி வைத்திருந்த கற்கள் அனைத்தும் திடீரென கருப்பாக மாறி பகீர் கிளப்பின.

 

இத்தனைக்கும் காரணம் மும்பையிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலும் சமையல் எரிவாயு இறக்கிவிட்டு ஈரானுக்கு புறப்பட்ட கப்பலும் எண்ணூர் துறைமுகத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் உட்கடலில் மோதிக்கொண்டு பீப்பாய்கள் உடைந்து கச்சா எண்ணெய் கடலில் கொட்டியதுதான். துறைமுகத்துக்கருகில் இரண்டு கப்பல்கள் விபத்துக்குள்ளானது கவனக்குறைவினால் என்று  கூட ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் கொட்டிய எண்ணெயை அகற்ற மைய அரசும் அதன் எண்ணெய் வளத்துறையும் மேற்கொண்ட வழிமுறைதான் எல்லோராலும் எள்ளி நகையாடப்பட்டது. வல்லரசு என்று சொல்லிக் கொண்டு கடலில் கொட்டிய எண்ணெயை வாளி கொண்டு அள்ளிக் கொட்டியது இந்தியப் பேரரசு. தன்னார்வலர்களும் அரசு ஊழியர்களும் வரிசையில் நின்று அள்ளிக் கொட்டியதை மாநில முதல்வரும் மத்திய இணையமைச்சரும் மேற்பார்வையிட்டு ஆலோசனை வேறு வழங்கினர். இது ஒருபுறமிருக்க.

 

கிராமத்து மாணவன்

 

தன் வீட்டு சமையல் அறையில் தாயார் தோசை ஊற்றியபோது  தோசைக்கல்லில் எண்ணெய்ப் படிந்திருப்பதைக் கவனித்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் அதனையும் தான் இரண்டு வருடத்திற்கு முன்பு பார்த்த எண்ணூர்த் துறைமுக எண்ணெய்க் கசிவு மற்றும் அது அகற்றப்பட்ட விதத்தையும் தொடர்புப்படுத்திக் கொண்டு தன்னுடைய அறிவியல் ஆசிரியரிடம் சென்று சந்தேகம் கேட்கிறான். அவரும் எவர்சில்வர் போன்ற பாத்திரங்களில் எண்ணெய் ஒட்டாமல் படிந்திருக்கும் என்பதையும் ஏன் தண்ணீரிலே கூட எண்ணெய் கலக்காமல் மேலேதான் மிதக்கும் என்றும் அதற்குக் காரணமாக எண்ணெயின் அடர்த்தி தண்ணீரை விடக் குறைவு என்றும் ஆதலால் எடைகுறைவு என்றும் சொல்கிறார்.பிறகு மாணவன் தண்ணீரில் கலந்த எண்ணெயைப் பிரித்தெடுக்க பலவழிகளையும் யோசித்து ஒருவாறாக உராய்வு விசையினால் எண்ணெயையும் தண்ணீரையும் பிரித்தெடுக்க முயற்சிக்கறான். அதோடு கூட ஆசிரியர் சுழற்சி விசையையும் சேர்த்து ஒரு திட்ட மாதிரியாக்கி பரிசோதிக்கிறார்கள்.  இறுதியாக தண்ணீரிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கும் தங்களின் முயற்சியில் வெற்றி பெற்றனர். அந்த பரிசோதனை மாதிரியை தன் பள்ளிக்கூடத்தில் நடந்த வட்டார அரசுப்பள்ளிகளுக்கு இடையிலான அறிவியல் போட்டியில் வைத்து முதல்பரிசு பெறுகிறான். பின் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசினைப் பெறுகிறான். இந்த ஊக்கம் மாணவனுக்கும் அவர்தம் திட்ட வழிகாட்டி ஆசிரியருக்கும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இதே திட்ட மாதிரியை தமிழ்நாடு அரசு மதுரையில் நடத்திய மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் வைத்து முதல் பரிசினை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களின் கரங்களால் பெறுகிறார்கள்.பிறகு இவர்கள் தென்னிந்திய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி பெற்று பெங்களூருவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு ஆங்கில வழியில் விளக்கிச் சொல்வதில் கிராமத்து மாணவனுக்கு இருந்த தயக்கத்தின் காரணமாக வெல்ல முடியாவிட்டாலும் “ கச்சா எண்ணெயைக் கடலிலிருந்து பிரித்தெடுக்கும் தொழிற்நுட்பம் “ என்ற புதுமையான யோசனையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். இதுவரை கூட ஒரு பள்ளி மாணவன் அறிவியல்போட்டியில் வென்றான், இதிலென்ன  என்ற அளவிலேயே படிப்பவர்களுக்குத் தோன்றும். இனி இந்தக் கிராமத்து மாணவன் எப்படிப்பட்ட கிராமத்திலிருந்து வந்து, தான் படிக்கின்ற பள்ளிக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறான் என்பது கவனிக்கப்பட வேண்டும்.

 

கல்யாணம்பூண்டி  - கிராமங்கள்நிலை                                                                                                       

 

கிராமம் என்றால் பாரதிராஜா படத்தில் காட்டப்படும் பாயும் ஆறும் துள்ளும் மீன்களும், பச்சைப் பசேலென்று பரந்து விரிந்த வயற்காடுகளும் கொண்ட கிராமம் அல்ல அது. கல்வி,வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார ரீதியாக தமிழ் நாட்டில்  மிகவும் பின்தங்கிய மாவட்டமான விழுப்புரத்திலிருந்து இருபத்தியொரு கிலோமீட்டர் தூரத்தில் விழுப்புரம் - செஞ்சிக்கு இடையில் அனந்தபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கல்யாணம்பூண்டி கிராமம்.விவசாயம், விவசாயக் கூலி மற்றும் நெசவுத்தொழில் மூன்றும்தான் இந்த ஊர் மக்களின் வாழ்வாதாரம். தன் ஆயுட்காலத்தின் இறுதிநாட்களை எண்ணிக் கொண்டிருப்பவன் போல, இந்தத் தொழில்கள் இழுத்துக் கொண்டிருப்பதால் இவ்வூர் மக்களில் பாதிக்கும் மேலானோர் வாழ்வு தேடி இடம்பெயர்ந்து பாண்டிச்சேரியிலும் சென்னையிலும் பெங்களூருவிலும் என்று நகர வாழ்க்கையில் தங்களைத் தகவமைத்துக் கொண்டனர், மனித இனத்திற்கே உரிய வாழ்வியல் தேடல் இயல்பால். சிறுவயதில் கைத்தறி நெசவு செய்யும் நான்கு தெருக்களிலும் நடக்கக் கூட வழியில்லாத அளவிற்கு தரிப்பாவு எனும் நூற்கண்டைப் பிரித்து தரிச்சட்டத்தில் பொறுத்தும் பணி மும்முரமாக நடக்கும்.அன்று குறுக்கும் மறுக்குமாக ஓடும் நாய்கள் சில நேரம் இந்த வேலையை சிக்கலாக்கிவிடும், ஆனால் தற்போது நாய்களும் குறைவு, தறிப்பாவு நெய்வதும் குறைவு. கைத்தறி நொடித்துப் போனதால் பெரும்பாலான மக்கள் நகர வாழ்க்கைக்கு நகர்ந்துவிட்டதால் தெருவுக்குப் பத்து வீடுகள் பூட்டிக் கிடக்கின்றன. நகரமாக இருந்திருந்தால் விற்றாவது தொலைத்திருப்பார்கள், இது கிராமம், சும்மா இரு என்றால் கூட குடியிருக்க குடும்பங்களில்லை. வானம் பார்த்த பூமியில் பயிரிட்டும், மானம் காக்க நெசவும் செய்துவந்த இந்த கிராமத்து மக்களில் சிலர் மட்டுமே வேறு வழியில்லாமல் இன்றும் இவற்றோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். பிழைப்பிற்குச் சென்ற முந்தையத் தலைமுறையினரும் படித்து வேலைக்குச் செல்லும் இந்தத் தலைமுறையும் வெளியூர்களில் தங்கிவிட, மீதம் இருக்கின்ற குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருப்பவை வெளியூர்களில் சம்பாதிப்பவர்கள் அனுப்பும் பணமும், கொஞ்சம் நஞ்சம் கிட்டும் உள்ளூர் வருவாயும் மட்டுமே.

 

வரலாற்றில் கிராமங்கள்

 

ஊருக்கு நடுவில் பல்லவர்காலத்தில் கட்டப்பட்ட அரங்கநாதர் சாமி திருக்கோவிலும் அதையொட்டிய ஈசுவரன் கோவிலும் அதற்கடுத்த பழைய ஆரம்பப் பள்ளிக்கூடமும் மட்டுமே என்பது,தொண்ணூறு கால மாணவர்களின் உலகம். தடுக்கினால் தரிக்கட்டிலும் நிமிர்ந்தால் கூரை வாரிலும் இடித்துக் கொள்ளும் வீடுகளில் பிறந்த பிள்ளைகளுக்கு விளையாடக் கிடைத்த விசாலமான இடங்கள் பெருமாள் கோவிலும் ஈசுவரன் கோவிலும். அந்தக் காலத்திலேயே இவ்வளவு பெரிய கோவில் கட்டப்பட்டிருக்கிறது எனில் ஊரும் பெரிதாகத்தான் இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் நடந்த சண்டை, போர்களில் ஊரே சூறையாடப்பட்டு கோவில் மட்டுமே மிஞ்சியிருக்க வேண்டும், அதைத் தொடர்ந்து மறுபடியும் குடியிருப்புகள் தோன்றியிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது. ஆனால் அன்று விளையாடிய போது தெரியாது, பெரும் பல்லவன் யாரோ கட்டிய கோவில் என்று , அந்தக் கோவிலின் நீண்ட கல்தூண்களில் விளையாடும் போது  தெரியவில்லை ,இவை காலங்காலமாக படுத்துக் கிடக்கும் கலைவடிவங்கள் என்று. எண்ணாயிரம், பணமலை, செஞ்சிக் கோட்டை என்று சுற்றிலும் கிடக்கும் வரலாற்றின் மிச்சங்களைத் தற்போது படிக்கும் போது, கண்ணாமூச்சி ஆடிய பெருமாள் கோவிலிலும், சறுக்கி விளையாடிய தூண்களிலும், குளக்கரையில் கிடக்கும் கற்களிலும், சனிமூலத் தெருத்தாண்டிய அய்யங்குளத்திலும், அதையொட்டிய மலைக்கு மேலே கட்டப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கொத்தளத்திலும் ஊரைச்சுற்றிக் கிடக்கும் இடிந்த மண்டபங்களிலும் இன்னும் தேடப்படாத தடயங்கள் புதைந்துக் கிடப்பதாகத் தோன்றுகிறது.

 

அதையும் தாண்டி மனிதர்களிடம் வந்தால், முதலில் நினைவிற்கு வருபவர் பெரிய வாத்தியார், அய்யா புலவர் பா.கணேசன்அவர்கள் . சிறு வயதில் இவரைத் தாண்டி யாரும் இந்த உலகத்தில் பெரிய ஆள் கிடையாது, ஊர் மாணவர்களுக்கு. இவரைக் கண்டாலே மாணவர்கள் காத தூரம் ஓடிவிடும் அளவிற்கு பயமுறுத்தல் இருந்தாலும் பள்ளியிலும் ஊரிலும் பிள்ளைகள் ஒழுக்கமாக இருந்தமைக்கு இவர் காரணம்,பள்ளியில் மட்டுமல்ல ஊரிலும் ஒரு மாணவன் அவர் கண்ணிலிருந்து தப்ப முடியாது. அடுத்து மணியக்காரர் திரு.சரவணன் அவர்கள். ஊருக்குத் தேவையானதை அதிகாரிகளிடம் கேட்டுப் பெறுவதிலாகட்டும், பஞ்சாயத்திலிருந்து கிடைக்கும் வரை அத்தியாவசியத் தேவைகளை சொந்த செலவில் செய்வது வரை பலவற்றைச் சொல்லலாம். பல்லாண்டுகளுக்குப் பின்பு பெருமாள் கோவிலின் குடமுழுக்கு இவரின் முயற்சியால் நடந்தது.இவர்கள் இருவரின் அடுத்தடுத்த மரணங்கள் இன்னும் ஊரை வெறுமையாக்கின. பள்ளி மாணவனின் சாதனையைச் சொல்ல வந்து ஊரின் கதையையே சொல்வதாக நினைக்கத் தோன்றும். கிராமப்புறங்களைப் பொறுத்தவரை அரசுப் பள்ளிக்கூடங்கள்  கிராம மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்தவை. மாணவர்களுக்கு பாடம் நடத்துமிடம் என்பதைத் தாண்டி மருத்துவ முகாம் நடத்துமிடம், அரசாங்க விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடக்குமிடம், அவசர காலங்களில் மக்கள் தங்குமிடம், வாக்குச்சாவடி என்று பலவகைகளில் மக்களோடு பிணைந்தவை பள்ளிக்கூடங்கள்.தற்போது கிராமங்களிலும் தனியார் பள்ளிகள் வந்த பின்னால் மக்களுக்கும் பள்ளிகளுக்கும் உள்ள பிணைப்பு அறுபடுவதாகத் தெரிகிறது. கிராமப்புறங்களில் அரசுப்பள்ளிகள் மக்களைப் போல உயிரோட்டமுள்ளவை. கல்யாணம்பூண்டிக்கும் இது மிகப் பொருந்தும்.

 

கிராமத்து மாணவனின்சாதனை

 

நடுநிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டு புதிய ஆசிரியர்கள் பணிக்கு வந்து சிறப்பாகப் பள்ளிக்கூடத்தை நடத்தி வருகின்றனர்.அவர்களில் அறிவியல் ஆசிரியர் திரு.இராசன் அவர்கள் சிறப்பாக மாணவர்களை வழிநடத்துகிறார்.வகுப்பறைப் பாடங்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல் மாணவர்களை அறிவியல் கண்காட்சிக்கு அழைத்துச் செல்வது, போட்டிகளில் பங்கெடுக்கச் செய்வது என்று மாணவர்களுக்கு கல்வியின் மீது பிடிப்பை ஏற்படுத்துகிறார். இப்படி இவரின் மூலம் பெருமை பெற்ற மாணவ, மாணவியர்கள் பலர். அவர்களில்  மாணவர் க.செயச்சந்திரன் தென்னிந்திய அளவில் பெருமை சேர்த்துள்ளார். கல்யாணம்பூண்டி கிராமத்தின் திரு.கண்ணன் மற்றும் திருமதி.முத்துமாரி இவர்களின் மூத்த மகன் இந்த பத்தாம் வகுப்பு மாணவன். எட்டாம் வகுப்பு படிக்கும் இளைய மகளும் இவர்களுக்கு உண்டு. கல்வியில், கல்வித் தேர்ச்சியில் மிகவும் பின் தங்கிய விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கெடுத்து ஊருக்கே பெருமை சேர்த்துள்ளார். பின் தங்கிய மாவட்டம், கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கிய ஊர், முதல் தலைமுறையாக பள்ளிக்குச் செல்பவர், வசதி குறைவான அரசாங்கப் பள்ளிக்கூடம், சிறப்பு வகுப்பிற்கோ சிறப்புப் பயிற்சிகளுக்கோ செல்லமுடியாத கிராமத்துச் சூழல் என்று பல தடைகளைத் தாண்டி இந்த மாணவன் சாதித்துள்ளான். பள்ளியின் அறிவியல் ஆசிரியர், ஏனைய ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மட்டுமே மனரீதியான உறுதுணை தந்தவர்கள்.

 

மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் சி.பி.ஃஎஸ்.சி பாடத்திட்டங்களிலும் படிக்கின்ற மாணவர்களுக்குக் கூட தோன்றாத ஒன்று இந்த அரசுப்பள்ளியின் கிராமத்து மாணவனுக்கு தோன்றியிருக்கிறது என்றால் அறிவு என்பது எந்தப் பள்ளி, என்னப் பாடத்திட்டம் என்பதைத் தாண்டி மாணவன் ஆசிரியர் உந்துதலிலும் சாத்தியப்படும் என்பது உண்மை. இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று மாநில அளவில் சாதித்த இந்த கிராமத்து அரசுப்பள்ளி மாணவனால் ஆறு மாநிலங்கள் கலந்துகொண்ட தென்னிந்திய அளவிலான போட்டியில் சாதிக்க முடியாத காரணம் ஆங்கில வழியில் எடுத்துரைப்பதில் கொண்ட தடுமாற்றம் மட்டுமே. இது உணர்த்துவது என்னவென்றால் கிராமத்துப் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் என்பது இன்னும் எட்டாக்கனிதான் என்பது. ஆங்கிலம் மட்டுமல்ல தமிழ் மொழிப்பாடமும் இன்னும் செம்மைப் பெற வேண்டும். ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவன் தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாட்களை வாசிக்கும் அளவிற்கு மொழிப்புலமையினை உண்டாக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த மாணவன் அடுத்து உயர்கல்விக்கு வரும்போது நீட் போன்ற தடுப்புகளை நீட்டி இவனை முடக்கி விடக்கூடாது. இவனை ஊக்குவித்தால் இன்னும் பல செயற்கரிய அறிவியல் சாதனைகளைப் படைத்து இன்னொரு அப்துல் கலாம் கிடைக்கலாம் நாட்டிற்கு.

 

கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பு

 

கடலில் கொட்டிய கச்சா எண்ணையை பிரித்தெடுக்க மாதிரி உபகாரணத்தைக் கண்டறிந்த  மாணவன் க.செயச்சந்திரன் மற்றும் மாணவனின் வழிகாட்டி ஆசிரியர் இராசன், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்  மேலும் கல்யாணம்பூண்டி மக்களின் சார்பிலான கோரிக்கை ஒன்றே ஒன்றுதான் . விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் சாதிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விச் சேர்க்கையிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு இருப்பதைப் போல அறிவியல் போட்டிகளில் சாதிக்கும் மாணவர்களுக்கும் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தந்து இவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதேயாகும். அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்ல முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்த மாணவனின் வெற்றி இன்னும் பல கிராமத்து மாணவர்களை சாதிக்கத் தூண்ட வேண்டும். இளம் அப்துல்கலாம் க.செயச்சந்திரனும் அவர் வழிகாட்டி அறிவியல் ஆசிரியர் திரு.இராசனும், தலைமை ஆசிரியர், ஏனைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட உயர்நிலைப் பள்ளியும்  எங்கள் ஊரின் பெருமைகள். இவர்கள் இன்னும் பல சாதனைகளை புரிய வேண்டும். கிராமங்கள் விவசாயிகளை, கூலித் தொழிலாளர்களை,நெசவாளர்களை மட்டுமல்ல வாய்ப்புக் கிடைத்தால் விஞ்ஞானிகளையும் உருவாக்கும். கிராமங்கள் கரைவதில் இல்லை நாட்டின் வளர்ச்சி, கிராமங்களையும் சேர்த்து வளர்ப்பதே உள்ளபடி வளர்ச்சி.

 

அன்புடன்,

சௌந்தரராசன்,

கல்யாணம் பூண்டி.

 


 

 More Links..
- தமிழ்ச்சாரல் - மாத இதழ் - காங்கோ மக்களாட்சி குடியரசிலிருந்து வெளிவருகிறது
 Add Your Tamil Classifieds
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Category

  தமிழ் பள்ளிகள்-Tamil School  தமிழ் பள்ளிகள்-Tamil School
  தமிழ் சங்கங்கள்-Tamil Sangam  தமிழ் சங்கங்கள்-Tamil Sangam
  நடனப் பள்ளிகள்-Dance School  நடனப் பள்ளிகள்-Dance School
  பாரம்பரிய பயிற்சிகள்- Classical Trainings  பாரம்பரிய பயிற்சிகள்- Classical Trainings
  சிற்றிதழ்கள்-Tamil Magazine  சிற்றிதழ்கள்-Tamil Magazine
  தமிழ் சேவைகள்-Tamil services  தமிழ் சேவைகள்-Tamil services
  இயற்கை - சித்த மருத்துவம் (Siddha & Naturopathy)  இயற்கை - சித்த மருத்துவம் (Siddha & Naturopathy)
  இயற்கை விவசாயிகள் - Organic Farmers  இயற்கை விவசாயிகள் - Organic Farmers

Recently Added

காங்கோ தமிழ்ச்சாரல் காங்கோ தமிழ்ச்சாரல்
காங்கோ தமிழ்ப்பள்ளி காங்கோ தமிழ்ப்பள்ளி
காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம் காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம்
தமிழ்ச்சாரல் - மாத இதழ் - காங்கோ மக்களாட்சி குடியரசிலிருந்து வெளிவருகிறது தமிழ்ச்சாரல் - மாத இதழ் - காங்கோ மக்களாட்சி குடியரசிலிருந்து வெளிவருகிறது
SIVA SAKTHI SIDDHA CLINIC SIVA SAKTHI SIDDHA CLINIC
நாணய மாற்றம் நாணய மாற்றம் உலக நேரம் உலக நேரம்
 பங்கு வர்த்தகம் பங்கு வர்த்தகம்  தமிழ் காலண்டர் தமிழ் காலண்டர்