LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- நாமக்கல் கவிஞர் பாடல்கள்

சமுதாய மலர்

98. புதிய சமுதாயம்

பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் ;
    பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும் ;
    கூட்டாளி வர்க்கங்கள் குணம்மாற வேண்டும் ;
    குற்றேவல் தொழிலென்ற மனம்மாற வேண்டும் ;
    வீட்டொடு தான்மட்டும் சுகமாக உண்டும்
    வேறுள்ளோர் துன்பங்கள் கண்ணாரக் கண்டும்
    நாட்டோடு சேராத தனிபோக உரிமை
    நடவாதிங் கினியென்று நாமறிதல் பெருமை.

    உடலத்தின் வடிவத்தில் பேதங்கள் உண்டு ;
    உள்ளத்தின் எண்ணத்தில் வித்யாசம் உண்டு ;
    சடலத்தை ஆள்கின்ற பசிதாகம் எல்லாம்
    சகலர்க்கும் உலகத்தில் சமமான தன்றோ!
    கடலொத்த தொழிலாளர் வெகுபாடு பட்டும்
    கஞ்சிக்கு வழியின்றிக் கண்ணீரைக் கொட்டும்
    மடமிக்க நிலைமைக்கு மாற்றில்லை யானால்
    மனிதர்க்கிங் கறிவுள்ள ஏற்றங்கள் ஏனோ?

    பசைமிக்க தொழில்செய்து பலன்முற்றும் யாரோ
    பரிவற்ற முதலாளி பறிகொண்டு போக
    பசிமிக்கு மிகநொந்த தொழிலாளர் எல்லாம்
    பகையென்று நமையெண்ணிப் பழிகொள்ளு முன்னால்
    வசைமிக்க நிலைமாற வழியன்று சூழ்வோம்
    வறுமைக்கே இடமற்ற சமுதாய வாழ்வை
    இசைமிக்க முறைகண்டு ஏற்பாடு செய்வோம்
    எல்லாரும் குறைவற்ற நலமெய்தி உய்வோம்.

    99. பூமிதான யாத்திரை

    பூமி தானம் செய்வதே
    புண்ணி யத்திற் புண்ணியம்,
    புனித மான முறையில் நாட்டின்
    வறுமை போகப் பண்ணிடும் ;
    சாமி சாட்சி யாக எங்கும்
    சண்டை கள்கு றைந்திடும் ;
    சரிநி கர்ச மான வாழ்வு
    சத்தி யம்நி றைந்திடும்.

    ஏழை யென்றும் செல்வ னென்றும்
    ஏற்றத் தாழ்வு போய்விடும் ;
    எங்கும் யாரும் பகைமை யின்றிப்
    பங்கு கொள்வ தாய்விடும் ;
    கோழை யின்பொ றாமை தூண்டும்
    குற்றம் யாவும் நீங்கிடும் ;
    கொடுமை யான பஞ்சம் விட்டுக்
    குணந லங்கள் ஓங்கிடும்.

    உடலு ழைத்தே உணவு முற்றும்
    உண்டு பண்ணும் உழவர்கள்
    உரிமை சொல்ல நிலமி லாமல்
    உள்ளம் வெந்திங் கழுவதா?
    உடல் சுகித்திங் குலகி னுக்கே
    உதவி யற்ற ஒருசிலர்
    ஊரி லுள்ள பூமி முற்றும்
    உரிமை கொண்டு திரிவதா?

    உலகி லுள்ள நிலம னைத்தும்
    உலக நாதன் உடைமையே ;
    ஊரி லுள்ள விளைநி லங்கள்
    ஊர்ப்பொ துவாம் கடமையே.
    கலக மின்றிச் சட்ட திட்டக்
    கட்டுப் பாடும் இன்றியே
    கவலை யற்ற சமர சத்தின்
    காட்சி காண நன்றிதே.

    காந்தி தர்ம நெறியைக் காக்கக்
    கடவு ளிட்ட கட்டளை
    கருணை யோடு பூமி தானம்
    செய்யக் கோரும் திட்டமே ;
    ஆய்ந்து பார்க்கின் உலகி லெங்கும்
    அமைதி யற்ற காரணம்
    அவர வர்க்கு நிலமி லாத
    ஆத்தி ரத்தின் பேரில்தான்.

    தான தர்ம ஆசை யேநம்
    தமிழ கத்தின் கல்வியாம் ;
    தந்து வக்கும் இன்ப மேநம்
    தலைசி றந்த செல்வமாம் ;
    தீன ருக்குப் பூமி கொஞ்சம்
    தான மாகத் தருவதால்
    தேச மெங்கும் அமைதி பெற்றுத்
    திருவி லாசம் பெருகுமே.

    கும்பி வேகும் பசிமி குந்த
    கோப தாபம் என்னவே
    கொடுமை சேர்பு ரட்சி வந்து
    கொள்ளை போகு முன்னமே
    அன்பி னோடு பூமி தானம்
    ஆன மட்டும் செய்வதே
    அச்ச மின்றி நாட்டி லெங்கும்
    அமைதி பெற்றே உய்வதாம்.

    விளைவு முற்றும் சொந்த மாகும்
    விளைநி லங்கள் தந்திடில்
    வேலை யற்ற கோடி மக்கள்
    விளைச்சல் செய்ய முந்துவார்.
    களைவி ழுந்து தரிசு பட்ட
    கோடி கோடி காணிகள்
    களிசி றக்கச் செழுமை பெற்றுக்
    கதிர்கள் முற்றும் காணலாம்.

    காந்தி சொன்ன ராம ராஜ்யம்
    காண வல்ல தலைவனாய்க்
    கர்ம, பக்தி, ஞான யோகம்
    கருதும் புத்தி நிலையனாய்ச்
    சாந்த சத்தி யாக்ர கத்தின்
    சாட்சி யாம்நம் வினோபா
    சாற்று கின்ற பூமி தானம்
    சோற்றுப் பஞ்சம் மாற்றுமே.

    விரத மாகக் காந்தி யண்ணல்
    விட்டுப் போன வேலையை
    விட்டி டாமல் கட்டிக் காக்கும்
    வீறு கொண்ட சீலனால்
    பரத நாட்டின் தர்ம சக்தி
    பாரி லெங்கும் சூழவே
    பகையி லாமல் யுத்த மென்ற
    பயமி லாமல் வாழலாம்.

    தெய்வ ஜோதி காந்தி யண்ணல்
    தேர்ந்தெ டுத்த சீடனாம்
    திருவி னோபா பாவே நமது
    தேச நன்மை நாடினார்
    வைய மெங்கும் பெருமை பெற்ற
    வண்மை மிக்க தமிழகம்
    வந்து பூமி தானம் வாங்க
    வரவு சொல்லி வாழ்த்துவோம்.

    கருணை வாழ்வின் அருண னான
    காந்தி சீடர் வருகிறார்
    கால் நடந்தே ஊர்கள் தோறும்
    கைகு விக்கப் பெறுகிறார்
    தருண மீது தமிழ கத்தின்
    தனிமை யாகும் வண்மையைத்
    தாங்கிப் பூமி தான மீந்து
    தர்ம வேள்வி பண்ணுவோம்.

    வாழ்க வாழ்க காந்தி நாமம்
    என்றும் நினறு வாழ்கவே!
    வந்து தித்த நம்வி னோபா
    வாய்மை யாளன் வாழ்கவே!
    வாழ்க பூமி தானம் செய்யும்
    வண்மை போற்றும் யாவரும்
    வாழ்க சாந்த சத்தியத்தில்
    வந்த நம்சு தந்தரம்.

    100. தீண்டாமை ஒழிக!

    தீண்டாமை என்கிற தீய வழக்கம்
    தீரத் தொலைந்திட நல்லநா ளாச்சு!
    ஆண்டவன் பொதுவென்று நம்பின யாரும்
    அந்தப் பழியை அகற்றிட வாரும்.

    இந்த வழக்கம் நாளுக்கு நாளாய்
    இந்து மதத்தினை வெட்டுது வாளாய் ;
    நிந்தை மிகுந்து அழிந்திடு முன்னே
    நீங்கிட யாரும் எழுந்திடும் இன்னே!

    வேதத்தி லில்லை கீதையில் இல்லை
    வேறுள சாத்திரம் யாருக்கினி?
    சாதித்து யாரையும் சண்டாள னென்றிடும்
    சாத்திரம் சத்தியச் சம்மதமோ?

    நால்வ ருரைத்ததே வாரத்தி லில்லை
    நந்தன் குலத்துக்கு நிந்தைசொலல் ;
    பால்வரும் ஆழ்வார் பாசுரத் தில்லை
    பாணர் வளர்ந்ததைக் கோணலெனல்,

    சங்கரர் காசியில் அங்கென்ன சொன்னார்?
    சண்டாள பக்தனும் தம்குரு வென்றார் ;
    எங்கள்ரா மானுஜர் தம்கல மென்றே
    யாரையும் கொண்டுடன் கோயிலுட் சென்றார்.

    காட்டொரு வேடனைத் தம்பியென் றெய்திக்
    கழுகினைத் தந்தையெ னக்கடன் செய்து
    சேட்டைக் குரங்கையும் தன்னுடன் சேர்த்துச்
    சீதாபி ராமனும் செய்ததைப் பார்த்தோம்.

    கண்ணப்ப னெச்சிலை முக்கண்ண னுண்டார் ;
    கண்ணபி ரான்கடை நீரையுங் கொண்டார் ;
    எண்ணிய பக்தருக் கெளியது தெய்வம்
    என்பது வேநல்ல இந்துவின் தர்மம்.

    101. ஓட்டடா!

    ஓட்டடா! ஓட்டடா!
    நாட்டைவிட்டே ஓட்டடா!
    தீட்டடா மனிதருக்குள்
    தீண்டலென்ற தீமையே.

    தொத்து நோய்கள் மெத்தவும்
    தொடர்ந்து விட்ட பேரையும்
    தொட்டுக் கிட்டிச் சொஸ்தமாக்கல்
    தர்ம மென்று சொல்லுவார்.
    சுத்த மேனும் ஜாதியால்
    தொடப்ப படாதிங் கென்றிடில்
    தொத்து நோயைக் காட்டிலும்
    கொடிய ரென்று சொல்வதோ?

    நாய்கு ரங்கு பூனையை
    நத்தி முத்த மிடுகிறோம் ;
    நரக லுண்ணும் பன்றியும்
    நம்மைத் தீண்ட ஒப்புவோம் ;
    ஆயும் நல்ல அறிவுடை
    ஆன்ம ஞான மனிதனை
    அருகி லேவ ரப்பொறாமை
    அறிவி லேபொ ருந்துமோ?

    செடிம ரங்கள் கொடிகளும்
    ஜீவ ரென்ற உண்மையை
    ஜெகம றிந்து கொள்ளமுன்பு
    செய்த திந்த நாடடா!
    முடிவ றிந்த உண்மைஞானம்
    முற்றி நின்ற நாட்டிலே
    மூடரும் சிரிக்கு மிந்த
    முறையி லாவ ழக்கமேன்?

    உயிரி ருக்கும் புழுவையும்
    ஈச னுக்காம் உறையுளாய்
    உணரு கின்ற உண்மைஞானம்
    உலகி னுக்கு ரைத்தநாம்
    உயருகின்ற ஜீவருக்குள்
    நம்மொ டொத்த மனிதனை
    ஒத்திப் போகச் சொல்லுகின்ற
    தொத்துக் கொள்ள லாகுமோ?

    அமல னாகி அங்குமிங்கும்
    எங்கு மான கடவுளை
    ஆல யத்துள் தெய்வமென்றே
    அங்கி ருந்தே எண்ணுவோம் ;
    விமல னான கடவுள்சக்தி
    மனிதன் கிட்டி விலகினால்
    வேறு ஜீவன் யாவும்அந்த
    விமல னென்ப தெப்படி?

    ஞாய மல்ல ஞாயமல்ல
    ஞாய மல்ல கொஞ்சமும்
    நாடு கின்ற பேர்களை
    நாமி டைத்த டுப்பது ;
    பாயு மந்த ஆற்றிலே
    பருகி வெப்பம் ஆறிடும்
    பறவை யோடு மிருகமிந்தப்
    பாரி லார்த டுக்கிறார்?

    102. விட்டது சனியன்

    விட்டது சனியன் விட்டது சனியன்
    விட்டது நம்மை விட்டதடா!
    கொட்டுக முரசு கொம்பெடுத் தூது
    கொடும்பாவி கள்ளைக் கொளுத்திவிட்டோம்!

    செத்தது கள்பேய் இத்தினம் ; இதையினி
    தீபா வளிபோல் கொண்டாடு ;
    பத்திரம் கள்மேல் சித்தம்வா ராவிதம்
    பார்ப்பதும் காப்பதும் உன்பாரம்!

    ஈஸ்வர வருஷம் புரட்டா சியிலே
    இங்கிலீஷ் ஒன்றுபத்து முப்பத்தேழில்
    சாஸ்வதம் போலவே நமைப்பிடித் தாட்டிய
    சனியன் கள்கடை சாத்திவிட்டார்!

    கூலியைத் தொலைப்பதும் தாலியை இழுப்பதும்
    கூசிட ஏசிடப் பேசுவதும்
    சாலையில் உருண்டொரு சவமெனக் கிடப்பதும்
    சந்தி சிரிப்பதும் இனியில்லை!

    அழுதிடும் மக்களும் தொழுதிடும் மனைவியும்
    ஐயோ! பசியுடன் காத்திருக்க,
    பொழுதுக்கும் உழைத்தது முழுவதும் கூலியைப்
    போதையில் இழப்பதும் இனியில்லை!

    பெற்றதன் குழந்தைகள் சுற்றி நடுங்கிப்
    பேயெனும் உருவொடு வாய்குளற
    உற்றவர் உறவினர் காறி உமிழ்ந்திட
    ஊரார் நகைப்பதும் ஒழிந்ததினி!

    விடிகிற வரையிலும் அடிதடி ரகளை
    வீதியில் மாதர்கள் ரோதனமும்
    குடிவெறி யால்வரும் கொடுமைகள் யாவையும்
    கூண்டோ டொழிந்தன இனிமேலே!

    எல்லா விதத்திலும் கள்ளால் வரும்பணம்
    ஏளனத் துக்கே இடமாகும் ;
    நல்லார் சரியெனக் கொள்ளா வரியிதில்
    நம்மர சடைந்திட்ட பழிநீங்கும்.

    போதையைத் தந்தபின் நீதியை ஓதுதல்
    புத்தி யுடைஓர் அரசாமோ?
    பேதைக ளாக்கிப்பின் பிழைபுரிந் தாயெனல்
    பேச்சுக் காகிலும் ஏச்சன்றோ?

    காந்தியின் அருந்தவம் சாந்தமும் பலித்தது ;
    காங்கிரஸ் ஆட்சியும் ஓங்கிடுமே ;
    போந்தது புதுயுகம் ; தீர்ந்தது கலிபலம் ;
    பூமிக் கேஒரு புதுமையிது!

    சக்கர வர்த்திநம் ராஜா ஜீக்கொரு
    சன்மா னம்நாம் தந்திடுவோம் ;
    அக்கறை யோடவர் ஆணைப் படிகள்ளில்
    ஆசை புகாவிதம் காத்திடுவோம்.

    பாழும் கள்ளால் பட்டதை நினைத்தால்
    பதைக்குது நெஞ்சம் கொதிக்குதடா!
    வாழும் நாடினி ; ஏழைக ளில்லை ;
    வானவர் வணங்கிட வாழ்ந்திடுவோம்!

    103. எது வேண்டும்?

    எதுஉனக்கு வேண்டு மென்று
    எண்ணிப் பார்த்துச் சொல்லடா!
    மதிமி குந்த மனிதஜன்ம
    மகிமை காத்து நில்லடா!

    ஞான முள்ள நாடிதென்று
    பேர்நி லைத்தல் வேண்டுமா?
    சேனை கொண்டு சென்றுகொன்று
    சீர்கு லைத்தல் வேண்டுமா?

    தந்தி ரத்தை வெல்லும்தூய்மை
    தாங்கி நிற்க வேண்டுமா?
    எந்தி ரத்தின் அடிமையாகி
    ஏங்கி நிற்க வேண்டுமா?

    அறிவு கொண்டு மக்களுக்கே
    அன்பு செய்தல் வேண்டுமோ?
    செறிவு கொண்ட சக்திபெற்றுச்
    சேதம் செய்தல் வேண்டுமா?

    வெள்ளை யாகத் தீமையை
    எதிர்த்து வெல்ல வேண்டுமா?
    கள்ளமாய் மறைந்து செய்யும்
    காரி யங்கள் வேண்டுமா?

    அன்பு சொல்லித் தீமையை
    அடக்கி யாள வேண்டுமா?
    வன்பு பேசித் தீமையை
    வளர்த்து வைக்க வேண்டுமா?

    சத்தி யத்தின் பற்றுக்கொண்ட
    சாந்த வாழ்வு வேண்டுமா?
    மற்ற செய்து மனிதமேன்மை
    மாய்ந்து போக வேண்டுமா?

    தீர மாகப் பொறுமைகாட்டும்
    திறம டுக்க வேண்டுமா?
    வீர மென்று கோபமூட்டும்
    வெறிபி டிக்க வேண்டுமா?

    ஆசை யற்ற சேவைசெய்யும்
    நேச வேலை வேண்டுமா?
    தேச பக்தி மாசுகொள்ளும்
    நாசவேலை வேண்டுமா?

    தெய்வம் உண்மை என்றுநம்பும்
    தேச பக்தி வேண்டுமா?
    பொய்யும் போரும் புனிதமென்று
    பேசும் புத்தி வேண்டுமா?

    வலியப் பூமி தானம்செய்து
    வாழ்த்துக் கொள்ள வேண்டுமா?
    வலிமை வந்து நம்மைத்தாக்கி
    வீழ்த்திக் கொல்ல வேண்டுமா?

    104. கூட்டுறவில் சேருங்கள்

    கூட்டுறவில் சேருங்கள்
    கூடி வாழப் பாருங்கள்
    நாட்டில் மிக்க ஏழையும்
    நன்மை பெற்று வாழலாம். .(கூட்)

    சேர்ந்து வாழும் நிலைமையே
    சீர்சி றந்த வலிமையாம்
    சோர்ந்து போன மக்களும்
    சுகங்கள் நாடத் தக்கது. . .(கூட்)

    குடிசை வாழும் எளியரும்
    குறைகள் தீர வழிஇது
    கடிசி லாத கைத்தொழில்
    கவலை நீக்கி வைத்திடும். .(கூட்)

    பட்டிக் காடும் சீர்பெறும்
    பண்டம் மாற்றல் நேர்பெறும்
    குட்டிப் பண்ணைக் காரரும்
    கூட்டு றவால் பேர்பெறும். .(கூட்)

    கைத் தறிக்கு நூல்வரும்
    கழனி ஏற்றச் சால்பெறும்
    வைத்தி ருக்கும் விளைபொருள்
    வாங்க நல்ல விலைவரும். .(கூட்)

    தொழில் நடத்த வசதிகள்
    துணை இலாத அசதியால்
    பழுது பட்ட மாந்தரை
    பாது காக்க வாய்ந்ததாம். .(கூட்)

    105. கூட்டுறவு இல்லாத நாடு

    கூட்டுற வில்லா ஒருநாடு
    குறைவற வாழ்வது வெகுபாடு ;
    மேட்டிமை பேசும் நாடெல்லாம்
    மேன்மை பெற்றது கூட்டுறவால்.

    கல்வி சிறந்திடும் கூட்டுறவால்
    கலைகள் நிறைந்திடும் கூட்டுறவால்
    செல்வம் வலுத்திடும் கூட்டுறவால்
    சேமம் நிலைத்திடும் கூட்டுறவால்.

    சோம்பலை ஒழித்திடும் கூட்டுறவு
    சுறுசுறுப் பளித்திடும் கூட்டுறவு
    தேம்பிடும் கைத்தறி நெசவாளர்
    திடமுறச் செய்திடும் கூட்டுறவு.

    வாணிபம் பெருகிடும் கூட்டுறவால்
    வளப்பம் மிகுந்திடும் விவசாயம்
    நாணய நடத்தைகள் அதிகரிக்கும்
    நம்பிக்கை வளர்ந்திடும் கூட்டுறவால்.

    பண்டக சாலைகள் நிறைவாகும் ;
    பணமுடை என்பது குறைவாகும் ;
    கொண்டுள காரியம் எதுவெனினும்
    கூட்டுற விருந்தால் அதுமுடியும்.

    அன்பு புலப்படும் கூட்டுறவால்
    ஆட்சி பலப்படும் கூட்டுறவால்
    தென்பு மிகுந்திடும் யாருக்கும்
    தேசம் உயர்ந்திடும் பாருக்குள்.

    கூட்டுற வென்னும் கொள்கையினைக்
    குற்றமில் லாமல் மேற்கொண்டால்
    நாட்டில் தரித்திரம் நீங்கிவிடும்
    நம்முடை சுதந்தரம் ஓங்கிவிடும்.

    106. யார் தொண்டன்?

    தொண்டு செய்யக் கற்றவன்
    துயரம் போக்கும் உற்றவன்
    சண்டை போடும் மக்களைச்
    சரச மாக்கி வைக்கவே . .(தொ)

    தீர வாழ்வு சொல்லுவான்
    தீமை யாவும் வெல்லுவான்
    ஈர மற்ற செய்கைகள்
    வீர மென்றல் பொய்யென .(தொ)

    சேவை செய்யும் நல்லவன்
    செம்மை கண்ட வல்லவன்
    தேவை யுள்ள யாரையும்
    தேடிச் சென்று சேருவான். .(தொ)

    அன்பி னைப்பெ ருக்குவான்
    ஆசை யைச்சு ருக்குவான்
    துன்ப முற்ற எவரொடும்
    துணையி ருக்கத் தவறிடான். .(தொ)

    பணிவு மிக்க தொண்டனே
    பரம ஞானம் கண்டவன்
    தணிவு மிக்க சொல்லினால்
    தரணி எங்கும் வெல்லுவான். .(தொ)

    கூவி டாமல் ஓடுவான்
    குறைகள் தீர்க்க நாடுவான்
    ஏவி டாத தொண்டனே
    எதிலும் வெற்றி கொண்டவன். .(தொ)

    கடவு ளென்ற சக்தியைக்
    கருதி டாத பித்தரின்
    மடமை நீக்கும் சேவைதான்
    மனிதர்க் கின்று தேவையாம். .(தொ)

    பூமி தான போதகன்
    பூஜி தன்வி நோபாவின்
    புதுமை மிக்க தொண்டுதான்
    போற்ற வேண்டும் இன்றுநாம். .(தொ)

    107. குடிப்பதைத் தடுப்போம்

    குடிப்பதைத் தடுப்பதே
    கோடிகோடி புண்ணியம்
    அடிப்பினும் பொறுத்துநாம்
    அன்புகொண்டு வெல்லுவோம்! . .(குடி)

    மக்களை வதைத்திடும்
    மனைவியை உதைத்திடும்
    துக்கமான கள்ளினைத்
    தொலைப்பதே துரைத்தனம். . .(குடி)

    பித்தராகி ஏழைகள்
    பேய்பிடித்த கோலமாய்ப்
    புத்திகெட்டுச் சக்தியற்றுப்
    போனதிந்தக் கள்ளினால். . .(குடி)

    பாடுபட்ட கூலியைப்
    பறிக்குமிந்தக் கள்ளினை
    வீடுவீட்டு நாடுவிட்டு
    வெளியிலே விரட்டுவோம்! . .(குடி)

    கஞ்சியின்றி மனைவிமக்கள்
    காத்திருக்க வீட்டிலே
    வஞ்சமாகக் கூலிமுற்றும்
    வழிபறிக்கும் கள்ளினை . . .(குடி)

    மெய்தளர்ந்து மேனிகெட்டுப்
    போனதிந்தக் கள்ளினால் ;
    கைநடுக்கங் கால்நடுக்கங்
    கண்டதிந்தக் கள்ளினால். . .(குடி)

    தேசமெங்கும் தீமைகள்
    மலிந்ததிந்தக் கள்ளினால் ;
    நாசமுற்று நாட்டினார்
    நலிந்ததிந்தக் கள்ளினால். . .(குடி)

    குற்றமற்ற பேர்களும்
    கொலைஞராவர் கள்ளினால் ;
    கத்திகுத்துச் சண்டைவேண
    கள்ளினால் விளைந்தவே. . .(குடி)

    குற்றமென்று யாருமே
    கூறுமிந்தக் கள்ளினை
    விற்கவிட்டுத் தீமையை
    விதைப்பதென்ன விந்தயே! . .(குடி)

    108. கர்ப்பிணிக்குப் பூ முடித்தல்

    கல்லி னுட்சிறு தேரை யோடு
    கருவி லேவளர் யாவையும்
    எல்லை யில்பல ஜீவ கோடியை
    எங்கு மாய்நின்று காத்திடும்
    வல்ல வெம்பெரு மான ருள்தனால்
    வஞ்சி யேபிள்ளை யாண்டானை
    நல்ல பூமுகை சூட்டு வோமந்த
    நாத னுன்றனைக் காக்கவே.

    மல்லி கைநல்ல முல்லை யாதிய
    வெள்ளை யாமலர் சூட்டுவோம் ;
    சொல்லு மன்னவை வெண்மை போலநீ
    சுத்த மாயிரு நித்தமும் ;
    பல்லு முன்றன்ப டுக்கை யோடின்னும்
    பாவை யேஉன்றன் யாவையும்
    நல்ல வெள்ளை யெனச்சொல் லும்படி
    நாளும் வைத்திட வேண்டியே.

    வாடி னாலும்வ தங்கி னாலும்தம்
    வாடை வீசுதல் வாடிடா
    நாடி யேமரு காம ருக்கொழுந்
    தோடு நன்மகிழ் சூட்டுவோம் ;
    பாடு நீமிகப் பட்ட போதிலும்
    பக்தி யோடிரு நித்தமும் ;
    தேடி யேஉனைத் தேவன் வந்தருள்
    செய்கு வான்பய மில்லையே.

    தொட்ட போதிலும் சற்று வாடிடும்
    சொல்லொ ணாமிக மெல்லிது
    இஷ்ட மாகவே யாரு மாசைகொள்
    இன்ப ரோஜா இம்மலர்
    கஷ்ட மாகிய வேலை யன்றையும்
    கட்டி நீசெயல் விட்டிடு ;
    நுட்ப மாகிய உன்றன் மேனியும்
    நொந்தி டில்துயர் தந்திடும்.

    நீளுமா மலர்த் தாழை யோடு
    நிறைந்த மாமரச் சண்பகம்
    சூழும் நல்ல மணமி குந்தவை
    சுந்த ரிக்கிவை சூட்டுவோம்
    வாழு மந்த வனமு ழுவதும்
    வாடை யோடியு லாவல்போல்
    நாளும் நீஉன்தன் வீடி தெங்கும்
    நடந்து லாவுதல் வேண்டியே.

    சேற்றில் நின்று வளர்ந்து நீரினிற்
    சேர்ந்தி ருப்பினும் தாமரை
    சாற்று மோரள வுக்கு மீறிடத்
    தான ருந்துமோ நீரினை?
    சோற்றின் மூழ்கி யிருந்த போதிலும்
    சொற்ப மாகவே சுத்தமாய்ப்
    போற்றி யுண்ணுதல் வேண்டு மென்றந்தப்
    பூமு டித்தனள் பூவையே.

    109. மக்கட் செல்வம்

    பெற்றிடும் செல்வத் தெல்லாம்
    பெரியது மக்கட் செல்வம் ;
    உற்றிடும் இன்பத் தெல்லாம்
    உயர்ந்தது மக்க ளின்பம் ;
    மற்றிதை உலகி லெந்த
    மனிதனும் மறுக்கொ ணாது ;
    சற்றிதை மதித்து நாமும்
    சரிவர நடப்போ மாக.

    சிறந்திடும் இன்ப மான
    சிசுவது நமக்கு வந்து
    பிறந்திடு முன்னும் பின்னும்
    நாம்செயும் பிழைக ளாலே
    அருந்தவக் குழந்தை யின்பம்
    அனுபவிப் பதற்கு முன்னால்
    இறந்திடும் அதனைப் போல
    இன்னொரு துன்ப முண்டோ?

    உருவினிற் குறைந்த தென்றும்
    உடல்மிக மெலிந்த தென்றும்
    அறிவினிற் குறைந்த தென்றும்
    அழகினை யிழந்ததென்றும்
    பிறவியின் குறைக ளெல்லாம்
    பெற்றவர் குற்றத் தாலே
    கருவினில் அமைந்த தல்லாற்
    கடவுளின் குற்ற முண்டோ?

    விதிவிலக் கறிந்து வாழ்ந்து
    விமலனை மனத்து ளெண்ணி
    மதியினைக் கொண்டு சுத்த
    மார்க்கத்தில் நின்று நாமும்
    புதல்வரைப் பெற்று மற்றும்
    புத்தியாய் வளர்ப்போ மானால்
    இதமுற வந்த மக்கள்
    இளமையில் இறப்ப துண்டோ?

    வித்தினைப் போற்றித் தூவும்
    விளைநிலம் பழுது பார்த்துச்
    சுற்றிடும் மிருக வாசை
    துடைத்திடா வேலி சுற்றிப்
    பத்தியிற் காத்துப் பண்ணைப்
    பயிரது செய்து விட்டால்
    சொத்தையாய்ச் சோகை யாகத்
    தோன்றுமோ செந்நெல் சொல்வாய்?

    110. ஒரு மருந்து

    தெய்வத் தனம்மிக்க மானிட ஜென்மம்
    தீமை வளர்த்துத் திகைப்பதும் என்னே!
    கையிற் கடுங்கொலைக் கருவிகள் கொண்டு
    கண்ணில் வெறிகொண்ட பார்வை மருண்டு
    வெய்யிற் புழுவென்ன வேதுடி துடிப்போம்
    வேதனை பொங்கும் மனம்படும் பாடும்
    வையத்தில் எங்கும் மனிதர்கள் யாரும்
    வாழ்க்கையின் இன்பம் இழந்தனர் பாரும்.

    அன்பிற்கென் றேவந்த மனிதப் பிறப்பே
    ஆறறி வுள்ளதென் பார்கள் சிறப்பே.
    'துன்பத்துக் கேமுற்றும் அறிவைச் செலுத்திச்
    சுட்டு மடிக்கிறார் ஊரைக் கொளுத்தி.
    இன்பம் அடைந்தவர் யாரையும் காணோம்.
    ஏதுக்கு மக்களைக் கொல்லுவார் வீணே!'
    என்பத்தை மாற்ற மருந்தென்ன வென்றே
    ஏங்குவர் யாரும் அறிஞர்கள் இன்றே.

    கொஞ்சிக் குலாவுதல் மக்கள்ம றந்தார்.
    கூடிப் பழகுதல் கூடக்கு றைந்தார்.
    அஞ்சிந டுங்கிஒ துங்குகின் றார்கள்.
    ஆகாயம் பார்த்துப் பதுங்குகின் றார்கள்.
    வஞ்சனை யற்ற வலிமையில் லாமல்
    வானத்தில் வந்தே எதிர்க்கநில் லாமல்
    குஞ்சுகு ழந்தைகள் பெண்களைக் கொல்வார்
    கோரத்தை வீரத்தின் போரென்று சொல்வார்!

    வாளுக்கு வாளாம், வில்லுக்கு வில்லாம்,
    வகைமிக்க ஆயுதம் தீர்ந்திடில் மல்லாம்!
    ஆளுக்கே ஆள்நின்று நேருக்கு நேராம்
    ஆண்மையும் ஆற்றலும் செய்வது போராம்!
    நாளுக்கு நாள்வந்து நள்ளிருள் தன்னில்
    நரிபோலும் குறிதேடும் கள்ளர்கள் என்னப்
    பாலுக்கு வாய்வைக்கும் பாலரைக் கொல்வார்
    பாவத்தை நாகரீ கம்மெனச் சொல்வார்!

    எந்திர வித்தைகள் வேணது கற்றோம்!
    என்னென்ன மோபல புதுமைகள் பெற்றோம்!
    சந்திரன் செவ்வாய் மண்டலத் தோடும்
    சங்கதி பேச வழிகளைத் தேடும்
    அந்தமில் லாபல சக்திகள் உற்றும்
    அடிதடி சண்டையை விட்டிட மட்டும்
    தந்திரம் ஒன்று படித்திலம் ஐயோ!
    தரணியில் மக்கள் தவிப்பது பொய்யோ?

    இத்தனை தீமைக்கும் ஏற்ற மருந்து
    இந்திய ஞானிகள் கண்ட மருந்து ;
    உத்தமர் யாரும் உவக்கும் மருந்து ;
    உலகத்தில் துன்பம் ஒழிக்கும் மருந்து ;
    சத்தியம் சாந்தம் இரண்டு சரக்கைச்
    சமனிடை அன்பெனும் தேனில் குழைத்துப்
    பத்தியம் தெய்வ நினைப்பொடும் உண்டால்
    பாருக்குள் பேருக்கும் போரிலை கண்டாய்.

    111. சுதந்தரம் யாது?

    அச்சம் விட்டது சுதந்தரம் ;
    அன்பு விடாதது சுதந்தரம் ;
    இச்சைப் படிசெயல் சுதந்தரம் ;
    இடர்செய் யாதது சுதந்தரம் ;
    பிச்சை கொள்ள விரும்பாது
    பிறருக் கீய வருந்தாது
    கொச்சை மொழிகளைச் சொல்லாது
    கோணல் வழிகளிற் செல்லாது.

    மடமை விட்டது சுதந்தரம் ;
    மானம் விடாதது சுதந்தரம் ;
    கடமை கற்றது சுதந்தரம் ;
    கபடம் அற்றது சுதந்தரம் ;
    கொடுமை கண்டு பொறுக்காது
    கொடியர் தமையும் வெறுக்காது
    அடிமை செய்து சுகிக்காது
    யாரையும் அடிமை வகிக்காது.

    கொல்லக் கூசும் சுதந்தரம்
    கொள்கைக் குயிர்தரும் சுதந்தரம்
    எல்லை விட்டு நடக்காது
    எதிரியை ஒண்டி மடக்காது
    வெல்லற் கேனும் பொய்யாது
    வேற்றுமைக் காரரை வையாது
    பல்லைக் கெஞ்சிப் பிழைக்காது
    பட்டதன் தோல்வி ஒளிக்காது.

    தன்சோ றுண்பது சுதந்தரம்
    தன்துணி யணிவது சுதந்தரம்
    என்னே வறுமை வந்தாலும்
    எத்தனை துன்பம் தந்தாலும்
    தன்னேர் செம்மை பிரியாது
    தன்குறை சொல்லித் திரியாது
    பொன்சேர் போகம் மதிக்காது
    பொய்ப்புகழ் பாடித் துதிக்காது.

    தாழ உரைப்பது சுதந்தரம் ;
    தன்மதிப் புள்ளது சுதந்தரம் ;
    ஏழை செல்வனென் றெண்ணாது
    எவருக் கும்குறை பண்ணாது
    ஊழிய னாகப் பணிசெய்யும்
    உலகுக் கெல்லாம் அணிசெய்யும்
    வாழிய மக்கள் எல்லோரும்
    வாழிய வென்றே அதுகோரும்.

    112. கிளியும் வழியும்

    ஆதிசு தந்தரத்தைக் கிளியே அடைய வழிதேடு ;
    நாதன் திருவடியைக் கிளியே நாடி ஜெயம்பாடு.

    இந்தப் பெருநிலத்தில் கிளியே இச்சைப் படிப்பறக்க
    சொந்தம் உனக்கிலையோ கிளியே சொல்லடி வாய்திறந்து.

    காட்டினி லேபிறந்தாய் கிளியே காற்றென வேபறந்தாய்
    கூட்டினி லேகிடக்க கிளியே கூசலை யோஉனக்கு.

    தங்க மணிக்கூண்டில் கிளியே தங்கி யிருந்தாலும்
    அங்குச் சுதந்தரத்தின் கிளியே ஆனந்த மேதுனக்கு?

    சொந்தமெ லாம்மறந்து கிளியே சுற்றமெல் லாம்துறந்தே
    இந்தப் படியிருக்கக் கிளியே இச்சைகொண் டாயோநீ?

    பச்சை மரக்கிளைமேல் கிளியே பாடுதல் நீயிழந்தாய்
    இச்சை உயிர்மேலே கிளியே இன்னும் எதற்காக?

    ஓடி யிரைதேடிக் கிளியே உண்பது நீமறந்தாய்
    நாடிப் பிறர்கொடுக்கக் கிளியே நாணமின் றிப்புசித்தாய்.

    காட்டுப் பழவகையைக் கிளியே காணுதல் நீமறந்தாய்
    போட்டதை உண்டிருக்கக் கிளியே புத்தி மகிழ்ந்தாயே.

    சொந்த மொழிமறந்தாய் கிளியே சொன்னது சொல்லுகின்றாய்
    இந்த விதம்வாழும் கிளியே இன்ப முனக்கேது?

    உன்குலத் தைப்பழிக்கக் கிளியே உத்தர வானாலும்
    அங்கது செய்துயிரைக் கிளியே ஆசையு டன்வகித்தாய்.

    எண்ண முனக்கிருந்தால் கிளியே எத்தனை நேரமடி
    கண்ணைத் திறக்குமுன்னே கிளியே காட்சி சுதந்தரமாம்.

    நல்ல வழிசொல்லுவேன் கிளியே நாடித் தெரிந்துகொள்நீ
    அல்லல் வழிவிடுத்துக் கிளியே அன்பின் வழிதேடு.

    கூட்டை உடைத்துவரக் கிளியே கூடா துன்னாலே
    சேட்டை வழிகளைநீ கிளியே செய்திடும் ஜாதியல்ல.

    சொன்னதைச் சொல்லாதே கிளியே சோறிட உண்ணாதே
    என்ன அழைத்தாலும் கிளியே ஏனென்று கேளாதே.

    ரங்கரங் காவென்று கிளியே இங்கிதம் பேசாதே
    எங்கேயெங் கேயென்று கிளியே ஏளனம் சொல்லாதே.

    கொஞ்சி மகிழாதே கிளியே கெஞ்சி புகழாதே
    அஞ்சி நடுங்காதே கிளியே ஆடி நடக்காதே.

    கொண்ட எஜமானன் கிளியே கோபித்துக் கொண்டாலும்
    அண்டி உயிர்வாழக் கிளியே ஆகா தென்றுசொல்வாய்.

    கொல்லுவ னென்றாலும் கிளியே கொஞ்சமும் அஞ்சாதே
    மெல்லுவ னென்றாலும் கிளியே மேனி நடுங்காதே.

    வெட்டுவ னென்றாலும் கிளியே வெற்றுரை யென்றிருப்பாய்
    சுட்டிட வந்தாலும் கிளியே சோதனை யென்றிருப்பாய்.

    சோதனைக் காலமடி கிளியே சோர்ந்திடு வாயோநீ
    வேதனை யைப்பொறுத்தால் கிளியே வெற்றி யுனதாகும்.

    இந்தப் படிகிடக்க கிளியே இயலா தென்பதனை
    உன்றன் எஜமானன் கிளியே உணரும்படி நடப்பாய்.

    இப்படி நீநடந்தாற் கிளியே எண்ணியெண் ணிப்பார்த்தே
    ஒப்பி எஜமானன் கிளியே யோசனை செய்வாண்டி.

    காரிய முன்னாலே கிளியே காசள வில்லையென்று
    வீரியம் பேசாமல் கிளியே விட்டிடு வானுனையே.

    கோதிச் சிறகுலர்த்திக் கிளியே கூசா மல்விரித்து
    நாதன் புகழ்பாடிக் கிளியே நாற்றிசை யும்பறப்பாய்.

    நீண்ட பெருவானம் கிளியே நீயதி லேபறந்து
    ஆண்டவன் சன்னிதியைக் கிளியே அண்டிச் சுகமடைவாய்.

    113. பெண் மனம்

    ஏனைய நாடுகள் எப்படி யாயினும்
    தமிழ்நா டதனில் தானமும் தருமமும்
    புண்ணியம், விரதம், தெய்வம், பூசனை
    ஆகிய இவற்றை ஆடவர் மறப்பினும்
    பெண்களே இன்னமும் பெரிதும் காப்பவர்.
    இன்றும் தினந்தினம் இத்தமிழ் நாட்டில்
    பிச்சைக் காரர்கள் பிரியத் துடனே
    குறைகளைச் சொல்லிக் கூவும் போது
    'அம்மா' 'தாயே', 'ஆத்தா', 'ஆச்சி'
    என்பன கூவி இரப்பதே சாட்சி,
    ஐயா மறுப்பினும் அம்மா மறுத்திடாள்.
    ஒருபிடி அன்னமோ உப்பிட்ட கஞ்சியோ
    ஐயமிட் டுண்பதே அருந்தமிழ்ப் பெண்மை
    அதனால் தானோ என்னமோ அறியோம்
    தமிழன் இல்லறம் தனிச்சிறப் புடையதாய்
    வறுமையும் அடிமையும் வருத்திடும் நாளிலும்
    கொடுமைகள் குறைந்து குலவிடச் செய்வது.
    வாழிய தமிழ்தரும் வண்மைசேர் பெண்மை!

    114. பெண்மை

    அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும்
    உண்மைத் தன்மையும் உறுதியும் மிகுந்தும்
    தன்னல மறுப்பும் சகிப்புத் தன்மையும்
    இயல்பாய் அமைந்தும் இன்பச் சொரூபமாய்த்
    தாயாய் நின்று தரணியைத் தாங்கும் ;
    தாரமாய் வந்து தளர்வைப் போக்கும் ;
    உடன்பிறப் பாகி உறுதுணை புரியும் ;
    மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும் ;
    அயலார் தமக்கும் அன்பே செய்யும் ;
    நாணம் கெடாமல் நட்புகொண் டாடும் ;
    சினேகம் இன்றியும் சிரித்துப் பேசும் ;
    காமமில் லாமலும் கொஞ்சிக் களிக்கும் ;
    பெருமை மிக்கது பெண்ணியல் பாகும் ;
    அந்தப் பெருமையை அறியா ஆடவர்
    அன்புப் பேச்சை ஆசையென் றயிர்த்துச்
    சிரித்து விட்டதில் சிற்றின்பம் எண்ணி,
    களிப்பைக் காமமாய்க் கற்பனை செய்தே
    அவமதிப் படைவதும் அடிக்கடி உண்டு.
    இப்படிப் பலபேர் ஏமாந்து போவதால்
    பெண்மனம் என்பதைப் பிழைபடப் பேசிப்
    'புதிர்' என்று சொல்வது புரியாத் தனமே ;
    'வஞ்சனை' என்பர் வஞ்சக முடையோர்.

    115. குறத்தியர் பாட்டு

    இமயம்முதல் குமரிவரை எங்களுடை நாடு
    இடையிலுள்ள தேசமெல்லாம் எங்களுக்கு வாசம்
    தமிழ்முனிவன் பொதிகைமலை தன்னிலெங்கள் வீடு
    தரணியெல்லாம் சுற்றிடுவோம் தைரியம்தான் ஜோடு.

    ஜாதியில்லை மதமுமில்லை சண்டையில்லை அதனால்
    சாமியென்றும் நேமமென்றும் சடங்குகளும் இல்லை ;
    நீதிஎன்ற ஒன்றுமட்டும் நெஞ்சிலுண்டு பின்னே
    நீசரென்று எங்களையார் பேசினாலும் என்னே?

    பட்டமில்லை பதவியில்லை பகையுமில்லை ஐயே!
    பணமுமில்லை திருடரென்ற பயமுமில்லை மெய்யே!
    கஷ்டமில்லை நஷ்டமில்லை கவலையில்லை அம்மா!
    காணியில்லை பூமியில்லை கடனுமில்லை சும்மா!

    மலையினிலே குடிசைகட்டி மரநிழலில் வாழ்வோம்
    மான்மயிரும் தேன்முதலாய் மக்களுக்கு விற்போம் ;
    தலையினிலே இடிவரினும் தைரியமாய் ஏற்போம்
    தஞ்சமற்ற யாரையும் அஞ்சிடாமல் காப்போம்.

    எந்தபாஷை எந்த நாட்டில் என்னபேச்சு எனினும்
    எங்களுக்குப் பேதமில்லை எதையும்பேசத் துணிவோம்
    சொந்தபாஷைப் பெருமைக்காகத் தூறு சொல்ல மாட்டோம்
    சுற்றிச்சுற்றி எங்கும்சென்று சுகமுரைத்துக் கேட்போம்.

    வீடுவாசல் மாடிகூடம் எங்களுக்கு வேண்டாம்
    வீதிதிண்ணை சத்திரங்கள் வேணதுண்டு ஆண்டே!
    பாடுபட்டு ஓடியாடிப் பசியெடுத்தே உண்போம்,
    பயமுறுத்தும் நோய்களெங்கள் பக்கமில்லை என்போம்.

    பச்சைகுத்தி குறிகள் சொல்லிப் பாடியாடித் திரிவோம் ;
    பாசிஊசி பலவும் விற்றுக் காசுவாங்கி வருவோம் ;
    இச்சையான உணவைநேர்ந்த இடத்திலாக்கித் தின்போம் ;
    இங்கும்அங்கும் எங்கும்தூங்கி இன்பவாழ்க்கை என்போம்.

    பச்சையென்றால் ஒருநிறமாம் பச்சைமட்டும் அல்ல ;
    பலநிறமும் நேர்த்தியாகப் பதியவைப்போம் ; நல்ல
    இச்சையான உருவமெல்லாம் எழுதிடுவோம் மெய்யே ;
    இப்பொழுதே காட்டுகிறோம் என்னவேண்டும் ஐயே!

    காதலனோ காதலியோ கண்காணாப் பொழுதில்
    கண்டுகளி கொண்டுமனக் கவலை கொஞ்சம் ஒழிய
    ஆதரவாய்க் கைதனிலே அவர்வடிவம் பேரும்
    அழகாகப் பச்சைகுத்தி அமைந்திடுவோம் பாரும்.

    குறிதவறாக் குறியுரைப்போம் குறைகளெல்லாம் தீர
    குற்றமெல்லாம் நீங்கிவிடக் கோளாறும் கூறி
    நெறிமுறையாய் நீங்களெல்லாம் நெடுநாளும் வாழ
    நினைத்திடுவோம் எங்கள்குலத் தெய்வமெலாம் சூழ.

    நாள்கிழமை நட்சத்திரம் பார்ப்பதில்லை நாங்கள்
    நல்லநல்ல ஜோசியங்கள் சொல்லிவிடுவோம் பாங்கே ;
    ஆள்வடிவம் பேச்சுநடை அவைகளையே கொண்டு
    அத்தோடு கைரேகை அதையும்பார்ப்ப துண்டு.

    காசுபணம் பேசிவரும் ஜோசியரைப் போலக்
    காயிதமும் பென்சிலுமாய்க் கணக்குப்போட வேண்டாம்
    ஆசையுடன் பகவதியின் அருள்வாக்கி னாலே
    அச்சமற்றுக் குறியுரைப்போம் பச்சைக்குத்தல் போல.

    [என்பன பாடி இருகரம் கூப்பி,
    "எது வேணும் சாமி! என்ன வேணும் அம்மா?
    பச்சை குத்தவா? பாசி ஊசி வேணுமா?
    குறிகேட்க ஆசையா?" என்றனர் குறத்தியர்.
    சந்தோஷ மடைந்த சங்கர லிங்கம்,
    "குறிசொல்லு பார்ப்போம் பணமின்னும் கூட்டித்
    தருகிறேன் என்றான்" தயங்கா(து) அவர்கள்:]

    ராணியுடன் ராஜனைப்போல் நல்ல ஜோடி நீங்கள் ;
    ராமனுடன் சீதையைப்போல் ரஞ்சிதமாய் வாழ்வீர்.
    ஆணையிட்டுச் சொல்லுகிறோம் ஐயமில்லை ராஜா
    அம்மாளும் நீங்களுமே ஆசைமிக்க நேசம்.

    கண்மணிபோல் பெண்ணிவளைக் கலியாணம் பண்ணிக்
    கப்பலேறி சீமைசென்று காசுபணம் சேர்ப்பீர்
    பெண்மணியும் ஒருகணமும் பிரிந்திருக்க மாட்டாள்
    பேசுவதேன் உங்களுக்கு ஈசன்முடி வேண்டாம்.

    பொல்லாத வேளைகொஞ்சம் புலப்படுதே பின்னால்
    பொன்னான வாழ்க்கையிலே சின்னதுன்பம் மன்னா
    நில்லாது சீக்கிரமே நீங்கிவிடும் ஆண்டே
    நெஞ்சமதில் கொஞ்சங்கூட அஞ்சிடுதல் வேண்டாம்.

    அம்மாளைப் பெற்றவருக்(கு) அதிகபணம் இல்லை ;
    ஐயாவின் வீட்டினிலே அளவில்லாச் செல்வம் ;
    கொம்மாளம் போட்டே உங்கள் குடிவிளங்க வேணும்
    குத்திவிளக் கேபோலப் புத்திரரும் தோணும்.

    பாருக்குள் எத்தனையோ பாதகரும் உண்டு
    பழிபேசித் தூற்றிடுவார் பயமில்லை ஒன்றும் ;
    போருக்குள் ஆண்சிங்கம் போலஜயம் பெறுவீர்
    பொன்னான பெண்ணிவளைப் போற்றிநலம் உறுவீர்.

    கோபமில்லாக் குணமுடனே குடித்தனமே செய்வீர்
    குறைச்சலில்லா யோகமெல்லாம் கூடிவரும் மெய்தான்
    சோபனமே சோபனமே சோபனமே நீங்கள்
    சுகமுடனே வாழ்ந்திடுவீர் குறியுரைத்தோம் நாங்கள்.

    வயிரமதைத் தங்கத்தில் வைத்திழைத்தாற் போலே
    வடிவழகா உன்றனுடன் சுந்தரியைக் கண்டே
    துயரமெல்லாம் விட்டுவிட்டோம் துணிமணியும் சோறும்
    துரைமகனே! எங்களுக்குத் துட்டுக்கூடத் தாரும்.

    குள்ளநரிக் கொம்பிதுதான் கூடக்கொண்டு போனால்
    கூட்டமாகப் பகைவரினும் ஓட்டமாகும் தானே ;
    கள்ளமில்லை இதனுக் கொன்றும் காசுபணம் வேண்டாம்
    கனவானே தந்திடுவோம் கைக்கொள்வீர் ஆண்டே!

    116. அன்னையின் மகிழ்ச்சி

    பெற்றிட விரும்பும் பேறுகள் யாவினும்
    மக்களைப் பெறுவதே மாபெரும் பேறென
    உலகம் மகிழ்வது கண்கண்ட உண்மை.
    குறைகளி லெல்லாம் மிகப்பெரும் குறையென,
    குழந்தை யில்லாததைக் குறிப்பதும் வழக்கம்.
    உணவுப் பொருள்கள் உற்பத்தி குறைந்து,
    பற்பல நாட்டிலும் பஞ்சம் மிகுந்திட
    ஜனத்தொகை மிகுவது சங்கடம் தருமெனக்
    குழந்தை பெறுவதைக் குறைத்திட வேண்டிக்
    கருப்பத் தடைகளைக் கருதுமிந் நாளிலும்
    குழந்தை யில்லாமல் குறைபடுவோர் பலர்.
    கூனோ, மூடமோ, குருடோ, செவிடோ,
    ஆணோ, பெண்ணோ, அழகோ, அசிங்கமோ
    தான்பெற்ற மகவே தனிச்சிறப் புளதாய்
    உணரச் செய்வதே உடம்பின் இயல்பு.
    குணமிலாக் குரூபக் குழந்தை பெறினும்
    அப்படி இன்பம் அடைகுவ ரென்றால்
    அறிவுடன் அழகும் அமைந்த மக்களைப்
    பெற்றவர் அடையும் பெருமித மகிழ்வை
    எழுதவும் முடியுமா? ஏடுதான் அடங்குமா?
    பெற்றோர் இருவருள் பெற்றவ ளாகிய
    அன்னையின் மகிழ்ச்சி அளவுக் கடங்குமா?

    117. அவனும் அவளும் விரும்பிய நாடு

    மன்னவன் என்ற மனிதனில்லை--அங்கே
    மந்திரி தந்திரி யாருமில்லை.
    சின்னவர் என்றும் எவருமில்லை--பட்டம்
    தேடி யலைந்திடும் மக்களில்லை.

    ஊருக்குப் பத்துப்பேர் நல்லவர்கள்--பொது
    யோசனை செய்திட வல்லவர்கள்
    ஆருக்கும் எதிலும் ஓரங்கள் செய்யாமல்
    அப்பப்போ தீர்ப்புகள் செப்பிடுவர்.

    நல்லவர் கெட்டவர் என்பதெல்லாம்--அங்கே
    ராஜாங்கம் பட்டம்ப தவியல்ல
    சொல்லில் நடத்தையில் சூரத்தில் தீரத்தில்
    சுத்தரென் றுபலர் நத்துவதே.

    கச்சேரி என்றொரு கட்டிடமும்--அதைக்
    கண்டு நடுங்குதல் அங்கிலையே
    அச்சமில் லாமலே யாரும் பொறுப்புடன்
    அங்கங்கே நீதிந டத்திடுவார்.

    வீதிக்கு வீதியோர் நீதிஸ்தலம்--பத்து
    வீட்டுக்கும் அங்கொரு பள்ளிக் கூடம்.
    நீதிக்கே ஓடி யலைந்து செலவிட்டு
    நிலைகெட்டுப் போகிற நிந்தையில்லை.

    பள்ளிப் படிப்புக்குச் சம்பளம்--இன்னும்
    பரீட்சைக்குக் கட்டப் பணமெனவும்
    பிள்ளைகள் பந்தாடப் பின்னும் பணமென்று
    பிச்சிப் பிடுங்குதல் அங்கில்லையே.

    வேலையில் லாதவர் யாருமில்லை--முற்றும்
    வீணருக் கங்கே வேலையில்லை.
    கூலியில் லாதவர் யாருமில்லை--சும்மா
    கும்பிட்டுத் தின்கின்ற கும்பலில்லை.

    கூனும் குருடனும் நொண்டி முடங்களும்
    கொஞ்சம் ; அவருக்கும் பஞ்சமில்லை.
    தானங் கொடுப்பதென் றில்லாமல்--பொது
    தர்ம மென்றே வைத்துத் தாங்கிடுவார்.

    ஒப்பி மனங்களித் தெல்லோரும்--அங்கே
    உண்டு உடுத்துக்க ளித்திடுவார்
    தப்பிதம் செய்திடத் தோன்றாதே--அதன்
    தண்டனை தந்திட வேண்டாது.

    வாது வழக்குக்கு நேரமில்லை--அங்கே
    வஞ்சித்து வாழமு டியாது
    சூதுசெய் பந்தயம் ஏதுமில்லை முற்றும்
    சோம்பிச் சுகிக்க வழியுமில்லை.

    கள்ளைக் குடிப்பது கூடாது--அங்கே
    காமக் கலகங்கள் கண்டதில்லை.
    கொள்ளை யடித்திடத் தேவையில்லை--என்றும்
    கொஞ்சமும் யாருக்கும் பஞ்சமில்லை.

    காவிரி நீர்வற்றிப் போவதில்லை--ஒரு
    கால்வாய் மேஸ்திரி எங்குமில்லை ;
    காவலும் கட்டுகள் ஏதுக்கங் கெப்போதும்
    கள்ளர் பயமென்ற சள்ளையில்லை.

    பண்ணையக் காரர்கள் எல்லாரும்--எங்கும்
    பட்டினி என்கிற சொல்லேது?
    கண்ணியம் அற்றவர் யாருமில்லை--ஒரு
    காலித்தனம் பண்ண ஏலாது.

    கண்டதும் கேட்டதும் எப்படிப் போனாலும்
    கச்சேரி வந்துபொய் சொன்னது மெய்
    கண்டவர் உண்மையைச் சொல்லவும் வாய்பொத்திக்
    கைகட்டி நின்றிடும் கஷ்டமில்லை.

    கொடுத்த பணத்தையும் வாங்குதற்கு--நித்தம்
    கோர்ட்டு வாசலில் காத்திருந்தும்
    அடுத்த பிறவிக்குப் போகுமட்டும் நொந்தே
    அல்லல் அடைகின்ற தொல்லையில்லை.

    துக்கத்தைச் சொல்லி அழுவதற்கும்--வெகு
    தூரம் நடந்துபி ராதுசொல்லிப்
    பக்கத்தில் நின்றவர் ஏனென்று கேட்கவும்
    பற்றற்றுப் போவதும் சற்று மில்லை.

    தீண்டப் படாதென்று சொன்னாலும்--அங்கே
    தீண்டுதல் வேண்டித் திரிவதில்லை.
    வேண்டிய சுகங்கள் யாவும் பிறரைப்போல்
    வேணமட்டும் உண்டு வேறெதற்கு?

    கோயில் குளங்களும் வேணதுண்டு--ஆனால்
    கும்பிடப் போவதில் சண்டையில்லை ;
    வாயில் ஜெபதபம் வஞ்சனை நெஞ்சத்தில்
    வைத்துப் பிழைத்திடத் தேவையில்லை.

    வட்டிக்குப் போடப் பணமும் இல்லை--அங்கே
    வட்டிக்கு வட்டிசெய் சட்டமில்லை.
    பெட்டிக்குச் சாவியும் இல்லாமல்--வெறும்
    பேச்சில் புரண்டிடும் நாணயங்கள்.

    தானியம் தவசம் அல்லாமல்--அங்கே
    தங்கமும் வெள்ளியும் செல்வமல்ல ;
    நாணய மாற்றென்ற நாடக ஜாலங்கள்
    நாகரி கப்பித்த லாட்டமில்லை.

    சின்னக் குழந்தைக்குத் தாலிகட்டி--வெகு
    சீக்கிரம் தாலி அறுத்தாலும்
    வன்னம் கெடுத்தவள் வாழ்க்கைக் குலைத்திடும்
    வண்ட வழக்கங்கள் கண்டதில்லை.

    நாட்டுக்குப் பகைவர் யாருமில்லை--பிறர்
    நாட்டின்மேல் ஆசையில் லாததனால்
    சூட்டுக்குச் சூடும் கொடுத்திடுவார்--பகை
    துஷ்டர் வந்தாலும்து ரத்திடுவார்.

    118. தாலாட்டு

    (காவேரியில் கிடைத்த குழந்தையை
    ஒரு படகோட்டியின் மனைவி தாலாட்டுதல்)

    ஆராரோ! ஆரிரரோ!
    அம்மா! நீ கண்ணுறங்கு
    பேரேதோ! ஊரெதுவோ!
    பெற்றவர்கள் யாரெவரோ!
    சீராரும் காவேரித்
    தேவி திருவருளால்
    வாராமல் வந்துதித்த
    மாமணியே கண்ணுறங்கு. .(ஆரா)

    ஆழக் கரைபுரளும்
    காவேரி ஆற்றருகே
    ஏழைப் படகோட்டி
    என்கணவன், ஆனாலும்
    கூழைக் குடித்துறங்கும்
    குடித்தனந்தான் என்றாலும்
    கோழைகள் அல்லவம்மா
    குறைச்சல்உனக் கேதுமில்லை. .(ஆரா)

    நாளைக் கணக்கெண்ணி
    நல்லநல்ல சம்பளத்தில்
    ஆளை மிரட்டுகின்ற
    அதிகாரம் இல்லையம்மா!
    வேளைப்பொழு தில்லாமல்
    வேலைசெய்யும் ஜீவனந்தான்
    காளி குலதெய்வம்
    காத்திடுவாள் கண்ணுறங்காய். .(ஆரா)

    அதிகாரம் என்றுசொல்லி
    அநியாயம் செய்தறியோம்
    சதிகாரத் தந்திரத்தால்
    சம்பாதித் துண்பதில்லை
    துதிபாடிப் பொய்பேசிச்
    சுகித்திருக்கும் சூதறியோம்.
    கதிகேடு வந்துவிடக்
    காரணங்கள் இல்லையம்மா. .(ஆரா)

    வாது வழக்கறியோம் ;
    வம்புதும்பு செய்தறியோம் ;
    சூது புரிந்தறியோம்
    பொய்ச்சாட்சி சொன்னதில்லை ;
    நீதி நெறிதவறி
    நிந்தைசொல்ல நின்றதில்லை ;
    ஏதும் ஒருகெடுதி
    இங்குவர ஞாயமில்லை. .(ஆரா)

    வேலையின்றிக் கூலிகொள்ளும்
    வித்தைகளைக் கற்றறியோம்.
    கூலியின்றி வேலைகொள்ளும்
    கொடும்பாவம் செய்தறியோம்.
    காலையென்றும் மாலையென்றும்
    காலமின்றிப் பாடுபட்டு
    நாலுபணம் வந்தாலும்
    நல்லசுகம் செய்துவைப்போம். .(ஆரா)

    தேடிப் புதைத்துவைத்து
    வயிறாரத் தின்னாமல்
    வாடிப் பசித்துநொந்து
    வந்தவரை நிந்தைசொல்லி
    ஓடி ஒளிந்துகொள்ளும்
    உலுத்தரல்ல நாங்களம்மா!
    நாடி ஒருதீம்புவர
    ஞாயமில்லை இவ்விடத்தே. .(ஆரா)

    கோவம் மிகுந்தாலும்
    குத்துச்சண்டை வந்தாலும்
    பாவம் பழிகளுக்குப்
    பயந்தொதுங்கும் எங்களுக்குச்
    சீவன் இருக்குமட்டும்
    தேகம் உதவும்அம்மா.
    தேவி துணையிருப்பாள்
    தெள்ளமுதே! கண்ணுறங்கு. .(ஆரா)

    பள்ளிப் படிப்பறியோம்
    பட்டணத்துப் பேச்சறியோம்
    வெள்ளைத் துணியறியோம்
    வீண்பிலுக்குச் செய்தறியோம்.
    கள்ளப் பிழைப்பறியோம்
    காவேரி சாட்சியம்மா.
    உள்ளபடி இங்குனக்கே
    ஒருகுறையும் இல்லையம்மா! .(ஆரா)

    119. சுதந்தர மக்களின் சமதர்மம்

    வானவெளி ஆராய்ச்சி மிகுந்து மேலும்
    வகைவகையாய் விஞ்ஞானம் வளர்ந்தே அந்தப்
    பானுவையே தொட்டுவரும் பாணம் ஏவிப்
    பயணத்தில் முழுவெற்றி பலித்திட் டாலும்
    ஆனஉயிர் உடலனைத்தும் ஈசன் கோயில்
    ஆகுமென்ற மெய்யுணர்வை அளிக்க வல்ல
    ஞானஒளி காணாத மனித வாழ்க்கை
    நரகமென்று சொல்லுவதே ஞாய மாகும்.

    மற் றெவரும் கண்டறியாச் சன்மார்க் கத்தால்
    மாறுபட்ட அன்னியரின் மனத்தை மாற்றிச்
    சுற்றியுள்ள தேசமெல்லாம் வியந்து வாழ்த்தச்
    சுதந்தரத்தை நாமடைந்த சூட்சு மத்தை
    உற்றுணர்ந்தால் 'தெய்வ பக்தி' ஒன்றா லன்றோ
    உயர்வுபெற்றோம் என்றமுழு உண்மை காண்போம்.
    சற்றிதனை அனுதினமும் மனத்திற் கொண்டால்
    சமதர்மம் மக்களிடை எங்கும் தங்கும்.

    திட்டமிட்டே அரசாட்சி செய்திட் டாலும்
    தீவிரமாய்ச் செல்வங்கள் திரண்டிட் டாலும்
    கட்டுதிட்டம், காவல், படை கனத்திட் டாலும்
    'கருணை' என்ற ஓருணர்ச்சி கலக்கா விட்டால்
    சுட்டெரிக்கும் தீஉடலிற் பட்டா லென்னச்
    சுதந்தரத்தின் இன்பமெல்லாம் சுருங்கிப் போகும் ;
    அட்டியென்ன? கருணைஅன்பிங் கென்ப வெல்லாம்
    ஆண்டவன்பால் 'பக்தி'என்ற அதுதான் நல்கும்.

    அரும்புகின்ற தெய்வபக்தி அணுவா னாலும்
    அகங்காரம் குறைவதற்கும் அதுவே வித்தாம் ;
    தரும்பயனாம் அன்பறங்கள் தழைக்கும் என்றே
    தவம்மிகுந்த தமிழ்நாட்டின் நமது முன்னோர்
    திரும்புகின்ற பக்கமெல்லாம் தெய்வம் தோன்றத்
    திருக்கோயில் கோபுரங்கள் திகழ்ச் செய்தார் ;
    பரம்பரையாம் பக்தியைநாம் பாது காத்தால்
    பழுதற்ற சமதர்மம் பரவி வாழ்வோம்.

    120. தமிழ்ப் பண்பைக் காப்போம்!

    இசைமலிந்த பலகலையும் உலகுக் கீந்தார்;
    'இனிமை'எனும் தமிழ்மொழியின் உரிமைபூண்டார் ;
    திசைமொழிகள் எங்கெங்கும் வணங்கி வாழ்த்தும்
    திருக்குறளாம் அறிவளித்த தமிழர் முன்னாள்
    பசைமிகுந்த ஊக்கமுடன் கடலும் தாண்டிப்
    பலநாட்டில் நம்பெருமை பரவச் செய்தோம் ;
    வசைகூறும் கட்சிகளாய்ப் பிரிந்தோம் இன்று
    வறுமையுற்றுப் பெருமைகெட்டு வாழ்தல் காணீர்.

    அறம்வளர்த்த தமிழ்த்தாயைப் பொதுவாய்க் கொண்டும்
    அன்றிருந்த மூவேந்தர் அவர்கள் கூட
    மறம்வளர்த்துச் சண்டையிட்ட மடமை யாலே
    மாற்றார்கள் தமிழ்நாட்டை மடக்கி ஆண்டார் ;
    உரம்இருந்தும் உறவிருந்தும் தமிழர் தம்முள்
    ஒற்றுமைதான் இல்லாமல் ஒடுங்கிப் போனோம் ;
    திறந்தெரிந்தோம் ஒன்றுபட்டே இனிமே லேனும்
    தேசநலப் பொதுப்பணிகள் செய்வோம் வாரீர்!

    அயல்நாட்டை அபகரிக்கும் ஆசைக் கல்ல ;
    பிறமொழியை அவமதிக்கும் அகந்தைக் கல்ல ;
    இயல்பான உரிமைகள் இழந்தி டாமல்
    இனப்பெருமை நற்குணத்தை இகழ்ந்தி டாமல்
    செயலாலும் சொல்லாலும் சிந்தை யாலும்
    செய்யதமிழ்த் திருநாட்டின் நலமே பேணி
    உயர்வான தமிழ்ப்பண்பைக் காப்போ மானால்
    உலகநலம் காப்பதற்கும் உதவி யாகும்.

    121. இடந்தடுமாற்றம்

    அறிவுக் கேற்ற அலுவல் கிடைப்பதோ
    படிப்புக் குகந்த காரியம் பார்ப்பதோ
    விரும்பிய படிக்கொரு வேலையில் சேர்வதோ
    தகுதியைப் பற்றிய தன்மை யுள்ளதாய்
    உத்தியோகம் அடைவதோ ஊதியம் பெறுவதோ
    இந்திய நாட்டில் இப்போ தில்லை.
    இலக்கிய ஞானம் இணையிலா ஒருவன்
    கல்வியே வேண்டாக் காரியம் செய்வதும்
    கணித சாத்திரம் கைதேர்ந்த ஒருவன்
    எண்ணிக்கை வேண்டா வேலையில் இருப்பதும்,
    ரஸாய னத்தில் ரஸனை மிகுந்தவன்
    கச்சேரி மேசையில் கவிழ்ந்து கிடப்பதும்
    சங்கீத வித்தையில் சமனிலாக் கலைஞன்
    தபால் ஆபீஸ் தந்திய டிப்பதும்,
    சித்திரக் கலையில் கைத்திறம் சிறந்து
    பத்திரம், 'ரிஜிஸ்டர்' பதிவு செய்வதும்,
    சத்தியம் தவறா உத்தம குணவான்
    வக்கீல் தொழிலில் வருத்தப் படுவதும்,
    கொல்லா விரதமே கொண்டுள ஒருவன்
    பட்டாள வீரனாய்ப் பதிந்து கொள்வதும்,
    விஞ்ஞா னங்களில் விருப்புள இளைஞன்
    'டிக்கட் கலெக்டராய்'த் திண்டாட நேர்வதும்,
    புத்தகம் படிப்பதில் பித்துள்ள புலவன்
    'புக்கிங் கிளார்க்காய்'ப் புழுங்கு கின்றதும்,
    உருட்டி மருட்டத் தெரியா ஒருவன்
    போலீஸ் காரனாய்ப் பொழுதுபோக் குவதும்,
    திட்டிப் பேசவும் தெரியா நல்லவன்
    அமீனா வேலையில் அடிபட்டு வருவதும்,
    கள்ளுச் சாராயம் கடிந்திடும் கருத்தன்
    கலால் வேலையில் 'டிகிரி' கணிப்பதும்,
    மாமிச உணவை மறுக்கும் மனத்தன்
    ஆட்டுக் கறிவையும் மாட்டுக் கறியையும்,
    சுத்தம் பார்த்தலில் முத்திரை குத்தலும்,
    இப்படிப் பற்பலர் இடந்தடு மாறுவர்.

    122. நோயற்ற வாழ்வு

    உலகினிற் சிறந்த தென்றும்
    உருவினிற் பரந்த தென்றும்
    உயர்தவ யோக சித்தர்
    ஒப்பிலார் இருந்த தென்றும்
    பலவளம் நிறைந்த தென்றும்
    பகுத்தறி வுயர்ந்த தென்றும்
    படித்தனம் கேட்டோ மந்தப்
    பாரத தேச மக்கள்
    புலபுல வென்று நித்தம்
    புதுப்புது நோய்க ளாலே
    புழுக்கள்போல் விழுந்து மாண்டு
    போவதைக் கண்டு மையோ
    விலகிட வழிதே டாமல்
    விலங்கினம் போல வாழ்ந்து
    விதியென வாதம் பேசி
    வீணரா யிருத்தல் நன்றோ?

    கற்பமும் அறிந்து காய
    சித்தியும் கற்க மேலோர்
    பற்பலர் இருந்த யிந்தப்
    பாரத தேச மக்கள்
    அற்பமாய் ஆயுள் குன்றி
    ஆழ்ந்திடல் ஏனோ வென்று
    சொற்பனந் தன்னிற் கூட
    எண்ணிடத் துணிந்தோ மில்லை.

    உடல்வழி மிகுந்து நல்ல
    ஊக்கமும் உறுதி பொங்க
    உலகினில் இன்ப மெல்லாம்
    உயர்வழி அனுப வித்த
    திடமுள தீர வீரர்
    திகழ்ந்தஇச் சிறந்த நாட்டில்
    சிறியதோர் நோய்வந் தாலும்
    தாங்கிடத் திறனில் லாமல்
    நடைபிணம் போல நாமும்
    நாள்கழித் திருந்தோ மையோ
    நாடிலோம் இதனை மாற்ற
    நல்வழி யென்ன வென்று
    மடமையோ மதியோ அன்று
    விதியெனும் மயக்கந் தானோ
    மாற்றநாம் அல்ல தென்றால்
    மதியினாற் பயந்தா னென்னே?

    முற்றிய ஒழுக்கத் தாலும்
    முறைதெரி வாழ்க்கை யாலும்
    பெற்றவர் காண முன்னாள்
    பிள்ளைகள் இறந்த தில்லை ;
    கற்றவர் பெரியோர் நித்தம்
    கதைகளிற் சொல்லக் கேட்டோம்
    இற்றைநாள் கோடி கோடி
    பிறக்குமுன் இறப்ப தேனோ?

    மணத்தையே விரும்பி யோடி
    மலரினைக் கசக்கு வார்போல்
    பணத்தையே பெரிதென் றெண்ணிச்
    சுகத்தினைப் பழித்து வாழ்ந்து
    குணத்தையே விலைக்கு விற்றுக்
    குரங்கினைக் கொண்டார் போல
    இனத்தையே பிணிகள் வாட்ட
    இருந்தனம் அறிவி ருந்தும்.

    உண்டியில் ஆசை வைத்தோம்
    ஒழுக்கமே மறந்து போனோம்
    பெண்டுகள் மக்கள் தம்மை
    வளர்த்திடும் முறைமை பேணார்
    மண்டையி லெழுத்தி தென்று
    மயங்கினோம் கர்மந் தன்னை
    மண்டின நோய்கள் ‡¡மம்
    மலிந்திட நலிந்தோ மையோ!

    பிணியிலே பிறந்து நித்தம்
    பிணியையே அருந்திப் பொல்லாப்
    பிணியிலே வளர்ந்தும் அந்தப்
    பிணியினாற் சாகக் கண்டும்
    அணியிலே ஆடை யாலே
    அலங்கரித் தோமே யன்றி
    அறிவிலே ஆசா ரத்தால்
    அழகெதும் செய்தோ மில்லை.
    பணியிலும் பணத்தி லேயும்
    சுகமெலாம் இருந்தாற் போலப்
    பழகினோம் நாமே யன்றிப்
    பழக்கினோம் மக்கள் தம்மை.
    துணிவிலோம் தூய்மை யில்லோம்
    சுசிகர நடத்தை யில்லோம்
    துவக்குவோம் இனிமே லேனும்
    நோய்களைத் துடைக்கும் வாழ்க்கை.

    123. தமிழ்க் கலை


    வியப்புற இன்பம் விருப்புற விளைக்கும்
    காரியத் திறமையே 'கலை'எனப் படுவது ;
    இன்பம் தருகிற எல்லாச் செய்கையும்
    கலையின் இனமாய்க் கருதத் தக்கதே ;
    இன்பம் என்பதில் இரண்டு விதங்கள் ;
    இயற்கை இன்பமும் செயற்கை இன்பமும்.
    இயற்கை இன்பம் ஈடற்ற தெனினும்
    செயற்கை இன்பமே சிறப்பென எண்ணி
    மகிழ்வது மாநில மக்களின் இயல்பு.
    கண்ணிற் காணும் இயற்கைக் காட்சியைச்
    சித்திரம் வரைந்து சிறப்பென எண்ணுவர்.
    உயிருடன் பார்க்கும் ஒருவரின் உருவைச்
    சிற்பச் சிலையில் சீராட்டு வார்கள்.
    ஊக்கமும் உணர்ச்சியும் ஊட்டும் சொற்களைப்
    பாட்டாய்க் கேட்கவே பலரும் விரும்புவர்.
    மணமிக்க மலர்கள் மடியில் இருப்பினும்
    அவற்றின் அத்தரின் ஆசையே அதிகம் ;
    எலுமிச் சம்பழம், இளநீர், கரும்பைத்
    தனித்தனி அவற்றின் தன்மை கெடினும்
    மூன்றும் கலந்தால் முதிர்சுவை என்பர்.
    இன்பம் தருகிற இயற்கை நிகழ்ச்சிகள்
    அநேகம் உள்ளன. ஆயினும், அவைதாம்
    வேண்டிய போதுநாம் விரும்பும் விதத்தில்
    அகப்பட மாட்டா, அதற்கோர் உதாரணம் ;
    காதில் விழுந்ததும் களிக்கச் செய்கிற
    ஓசைகள் அநேகம் இயற்கையில் உண்டு ;
    ஆனால் அவைகள் நேர்வது அருமை.
    அதனால் அல்லவா அப்படி ஓசையை
    வாய்பாட் டென்றும் வாத்திய மாகவும்,
    சமைத்துக் கொடுக்கும் சங்கீ தத்தைஓர்
    உயர்ந்த கலையென உலகம் கொள்வது?
    இப்படி யேபிற எல்லா இன்பமும்
    செய்யத் தெரிந்த திறமையே 'கலை'யாம்.
    கலைகளின் இன்பம் புலன்களைக் கவரும் ;
    ஒழுக்கக் கேட்டையும் உண்டாக்கும். அதனால்
    தமிழன் கலையெனத் தந்தன யாவும்
    அறங்களைப் போற்றும் அறிவையே நாடும்.
    வேடிக்கை என்றும், விநோதம் என்றும்
    அநேகக் கலைகளைத் தமிழன் அறிவான் ;
    ஆயினும், அவைகளும் அறத்தையே அடுக்கும் ;
    நூல்களை எழுதும் கலையின் நோக்கமும்,
    கற்பனைக் கதையின் கலையும் அறமே,
    தருமம் பேசாத் தமிழ்நூல் கலையை
    இலக்கிய மாகவே எண்ணான் தமிழன்.
    கலைகளின் வழியே கருணையைப் புகட்டல்
    எளிதாம் எனநம் முன்னோர் எண்ணிய
    கண்ணுங் கருத்துமாய்க் கலைகளைக் காத்தனர்.
    இயலென எழுதியும், இசையெனப் பாடியும்,
    கற்பனை நிறைந்த கவிதைகள் செய்தும்,
    நாட்டியம் பயின்றும், நாடகம் நடித்தும்,
    குளங்களை வெட்டியும், கோபுரம் கட்டியும்,
    சிலைகளைச் செதுக்கிச் சித்திரம் வரைந்தும்,
    மலைகளைக் குடைந்து மண்டபம் ஆக்கியும்,
    கலைகளை வளர்த்த காரணம் எல்லாம்,
    செயற்கை இன்பமும் இயற்கையில் சேர்ந்துடன்
    அறிவைத் துலக்கி, அன்பைப் பெருக்கிச்
    சச்சர வில்லாச் சமுதாய வாழ்வை
    உண்டாக்கி வைத்தல் ஒன்றே நோக்கம்.
    புலன்களுக் கெட்டாப் பொருளாம் இறைவனைப்
    புலன்களுக் கின்பம் புகட்டவே புரியும்
    கலைகளின் மூலமாய்க் கருதலாம் என்றே
    கடவுளின் நினைப்பே கலைகளில் கலந்திடப்
    பழகிய பெருமையே தமிழ்க்கலைப் பண்பு.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.