LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-சுயமுன்னேற்றம் Print Friendly and PDF
- வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்!

வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! - அறிமுகம் ..

(தந்தைபெரியார் அவர்களுக்கு இத்தொடர் அர்ப்பணம்)

”வெற்றி!” – எல்லோரையும் ஈர்க்கும் ஒரு வசீகரச்சொல். இதனை விரும்பாதவர்கள் யாரிருக்கிறார்கள்? வெற்றிக்கான பாதையைக் கண்டறியவும், அறிந்தவுடன் அதனில் வேகமாகப்பயணிக்கவும் முயற்சிக்காதவர் என்று ஒருவர் உண்டா? ”வெற்றி” ”முன்னேற்றம்” போன்ற தலைப்புக்களில் வெளிவந்த புத்தகங்கள்தான் எத்தனை எத்தனை?”

தகவல் தொழில்நுட்பம்” உலகெங்கும் வியாபித்து பரவும் இக்காலகட்டத்தில், தன்முனைப்பு பேச்சாளர்கள், அவர்களது நூல்கள் இணைய உலகில் விரவிக்கிடக்கிறது. வேண்டிய புத்தகங்களையோ, அல்லது ஒலி, ஒளிவடிவங்களையோ எளிதில் கணினியிலும், “Kindle” “I Pod” போன்ற கருவிகளிலும் வினாடிகளில் தரவிறக்கம் செய்ய இயலும் காலகட்டம் இது.

இருப்பினும், வெற்றிபெறவேண்டும் என முயல்பவர்களில் ஏன் சிலர் மட்டுமே இலக்கை அடைகிறார்கள்?. அவர்களுக்கும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து மனமுடைந்து போகும் பலருக்கும் என்ன வேறுபாடு? வெற்றியாளர்கள் போகும் பாதைதான் என்ன? வெற்றியாளர்களை முன்னோடியாகக்கொண்டும் ஏன் பலரால் முன்னேற முடியவில்லை? இதுபோன்ற வினாக்களுக்கு விடைகாணும் முயற்சியே இத்தொடரின் நோக்கம்.

இத்தொடரைப் படிக்கத் துவங்கும் நீங்கள், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் வெளிவந்த பல தன்முனைப்பு நூல்களை படித்திருக்கலாம். படித்ததிலிருந்து சில நல்ல மாற்றங்களை உங்கள் வாழ்வில்; செயல் முறைகளில் கையாண்டிருக்கலாம். அந்த நோக்கில் பயணித்து படித்த, கேட்ட, பார்த்த, அறிந்த கருத்துக்களையும்; அவை தொடர்பான உங்கள் செயல்பாடுகளையும், அனுபவங்களையும் இப்போது நினைவு கூறுங்களேன்.

இந்த தொடரை படிக்கும் நீங்கள், ஒவ்வொருவாரமும் நீங்கள் படிக்கும்போது உங்களுக்கு தோன்றும் எண்ணங்களை ஒரு கையேட்டிலோ, கணினியிலோ எழுதிவாருங்கள். அப்படிச் செய்வதால்; இத்தொடரின் பயனை கூடுதலாகப் பெறமுடியும்.

முதலில் ”தன் முனைப்பு” “சுய முன்னேற்றம்” வாழ்வில் வெற்றி” என்பதைப்பற்றியெல்லாம் எப்போது எண்ணத்துவங்கினீர்கள் என்பதை நினைவு கூறுங்கள். அவற்றை உங்கள் கையேட்டின் துவக்கமாக எழுதத்துவங்குங்கள். அதன் பின் என்னென்ன புத்தகங்கள் அல்லது எந்த வெற்றிச் சிந்தனையாளர்களைப்பற்றி அறிந்து வந்திருக்கிறீர்கள் என்பதையும் சிந்தித்துப்பாருங்கள்.

நான் பின்னோக்கிச் சென்று பார்க்கும்போது எனக்குள் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்திய இரு அனுபவங்களைப்பற்றி குறிப்பிடுவது இங்கு பொறுத்தமாக இருக்கும். அப்போதைய திருச்சி மாவட்டம், இப்போதைய பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மாபாளையம் என்ற கிராமத்தில் ஒரு விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். (அம்மன் கோவில்கள் சிறப்புற இருப்பதனால் “அம்மன் பாளையம்” என்பது மறுவி அம்மாபாளையம் என ஆகியிருக்கலாம்). ஏற்றம் இறைத்த கிணறுகளில் மின்சாரம் இயக்கும் மோட்டார்/பம்ப் செட் வைக்கப்பட்ட காலகட்டம். அறுபதுகளின் இறுதியும் எழுபதுகளின் துவக்கமுமான அவ்வாண்டுகள் - அப்பகுதி விவசாயக்குடும்பங்களுக்கு மிகப்பெரும் மாற்றத்தை  ஏற்படுத்திக்கொண்டிருந்தது. இதுவரை மாடுகளை வைத்து கவலை ஏற்றத்தின் மூலம் கிணற்றிலிருந்து வயலுக்கு நீர் இறைத்ததை மாற்றி; ஒரு பொத்தானை அழுத்தியதும் பம்ப வழியாக நீர் பெரும் விசையோடு வந்து விழுந்ததை முதன் முதலில் பார்த்த எந்த விவசாயிதான் மனதுக்குள் கும்மாளமிடாமல் இருப்பார்?

அக்காலகட்டத்தில் கிராமங்களில்; வீடுகளுக்கும், கிணறுகளுக்கும் மின்சாரம் தரப்பட்டதால் – மின்சார மோட்டார்கள், பல்புகள், ச்விட்ச்கள், ஒயர்கள் என பல இதுவரை பார்த்திராத பொருள்கள் கடைகளில் விற்கப்படுவதும்; அவற்றை விற்கும் கடைகள் புதிதுபுதிதாக தோன்றிக்கொண்டிருப்பதையும் பார்த்தேன். அந்த புதிய அனுபவத்தில் திளைத்த சிறுவர்களில் நானும் ஒருவன். அப்போதுதான்; ஒரு தனித்துவமான ஒன்று என் கண்ணில் பட்டு; என்னை சிந்திக்கத் தூண்டியது. வயல்களின் கிணறுகளில் வைக்கப்படும் மோட்டார் பம்ப் செட்கள் பெயர்கள் வெவ்வாறாக இருப்பினும்; அவை உருவாக்கப்பட்ட இடம் ”கோயம்புத்தூர்” என அறிந்தபோது “அது ஏன்?” என்பது மிகவும் பூதாகரமான ஒரு கேள்வியாக என்னுள் எழுந்தது.

மோட்டார் பற்றிய விவரமறிந்தவர்களை நான் திரும்பத் திரும்ப “ஏன் கோவை மட்டும்?” ஏன் திருச்சியிலோ, தஞ்சையிலோ, சென்னையிலோ, மதுரையிலோ மோட்டார்கள் செய்யப்படவில்லை” என கேட்பேன். கிடைத்த ஒரே பதில் - ஜி.டி.நாயிடு என்பவர் முயற்சியால் கோவை ஒரு தொழில் நகரமாக மாறிவிட்டது. மோட்டார் பம்ப்செட் செய்யப்படும் தொழிற்சாலைகள் மிக அதிகமாகக் கோவையில் இருப்பதற்கும்  அவர்தான் மூல காரணம்” என்பதுதான்.

உடனே என்னுள் எழுந்த எண்ணம் –” அது எப்படி ஒரு தனிமனிதனின் முயற்சியால் ஒரு நகரமும் அதன் சுற்றுப்பகுதிகளும் தொழில் மயமாக முடியும்?

”அவரிடம் அப்படி என்னதான் திறமைகள் இருந்தன?” அவரைப்போன்ற திறமைபடைத்த மற்றவர்களும் இருக்கிறார்களா? அவரைப்ப்போன்ற திறமை எனக்கு இருக்கிறதா? இல்லையென்றால் என்னால் அத்திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியுமா? என்ற கேள்விகளும், ஆசைகளும் என்னுள் அலை அலையாய் எழ ஆரம்பித்தது இன்னும் அடங்கவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக, இக்கேள்விகளும்; அவை எழுப்பிய எண்ண அதிர்வுகளும்; அவை தூண்டிய சிந்தனைகளும், செயல்திட்டங்களும், அனுப்வங்களுமே – ஒரு விவசாய குடும்பத்தினனை உயிரியல் துறையில் முனைவர் பட்டம் பெறவும், திருச்சி செயிண்ட்ஜோசப் கல்லூரியிலும், பிஷப் ஹீபர் கல்லூரியிலும் ஆசிரியராகப்பணியாற்றவும்; கடந்த 30 ஆண்டுகளாக, அமெரிக்கத் திருநாட்டில் ”உயிரியல் மருத்துவத்துறையில் ஆய்வு, பின் கல்லூரி/பல்கலைக்கழகத்தில் ஆசிரியப்பணியாற்றவும் தூண்டுகோலாய் அமைந்தது என்றால் மிகையல்ல. குறிப்பாக பள்ளிப் பருவத்திலேயே எனது தந்தையார் எனக்கு வாங்கிக்கொடுத்த இருபுத்தகங்கள் ஏற்படுத்திய தாக்கமே துவக்கமானது.

அவற்றுள் ஒரு புத்தகம் – ஜி.டி. நாயிடு எழுதிய ”நான் கண்ட உலகம்” மற்றொன்று அமெரிக்காவில் அலபாமாவில் மிகப்பெரும் தாவரவியல் ஆய்வாளராக விளங்கி பொதுமக்கள் நன்மைக்காக பல கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தி புகழுடன் வாழ்ந்து மறைந்த “டாக்டர் வாசிங்க்டன் கார்வார்” வாழ்க்கை வரலாறு.

என்னுள் நம்பிக்கை தோன்றவும், என்னாலும் முடியும் என்று சில முயற்சிகளை மேற்கொள்ளவும் இவ்விருபுத்தக நாயகர்களும் திகழ்ந்தார்கள். 1985ம் ஆண்டு நான் அமெரிக்காவில் மிசொரி மாநிலத்தில் செயிண்ட்லூயிஸ் நகரம் வந்து அங்கு 15 ஆண்டுகள் வாழ்ந்து, அதன்பின் குடும்பத்துடன் மேரிலாந்து மாநிலத்தில், பால்டிமோர் அருகில் உள்ள கொலம்பியா எனும் ஊருக்கு வந்து, கடந்த 15 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். தமிழகத்தில் வாழ்ந்தபோதும், அமெரிக்காவில் வாழ்கிறபோதும் எனக்கு கிடைத்த வெற்றி தோல்விகள், படிப்பினைகள், வெற்றியாளர்களைப்பற்றியும், அவர்களின் தனித்தன்மைகளையும் பற்றி நான் அறிந்துகொண்டவைகள் அனைத்தையும் ஓரளவுக்காவது எனக்கு தெரிந்த தமிழ் நடையில் நற்றமிழ் உள்ளங்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டுமென்ற ஆர்வத்தில் துவங்கப்படுவதுதான் இத்தொடர்.

பள்ளிச்சிறுவனான என்னுள் பெரும் மாற்றம் ஏற்படுத்திய மேதை ஜி.டி. நாயிடு அவர்கள், நான் 15 ஆண்டுகளாக வாழ்ந்த செயிண்ட்லூயிஸ் நகருக்கே  வந்தசெய்தியும், அவர் பயின்ற, பணிபுரிந்த தொழில்கூடக்கட்டிடம் இன்னும் அங்கு இருப்பதுவும், அண்மையில்தான் எனக்கு தெரியவந்தது. அதுவே போன்று கருப்பு இனத்தைச்சார்ந்த ஜார்ஜ் வாசிங்க்டன் கார்வார் பிறந்து வளர்ந்த இடம் (Diamond Grove), நான் அமெரிக்காவில் 15 ஆண்டுகள் வாழ்ந்த மிசொரி மாநிலத்தில்தான் என்பதை அறிந்ததும் எனக்கு பெருவியப்பு. அவர் பிறந்து வளர்ந்த இடம் ஒரு அருங்காட்சியமாக சிறப்பாக பராமரிக்கிறார்கள்.

பெரும் சோதனைகளை சந்தித்து சாதனையாளர்களாக மாறியவர்கள் பலப்பலர் என்பதையும்; அவர்கள் பல நாடுகளிலும், பலகாலகட்டங்களிலும் வாழ்ந்து தனக்கும், சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் வியக்கத்தக்க அருஞ்செயல்கள் பலவும் செய்திருக்கிறார்கள் என்பதையும் அறிய அறிய; ஏன் எல்லோராலும் அவ்வாறு வளர்ச்சிபெறமுடியவில்லை என்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

உலகளாவிய அளவில், மிகப்பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்து வெற்றி பெற்றவர்களில் முக்கியமானவர்களாக நீங்கள் கருதுபவர்களை நினைவில் கொண்டு உங்கள் கையேட்டில் குறியுங்கள். அவர்களிடையே நிலவிய சிலபொதுப்பண்புகள் என்னவென்பதையும் சிந்தியுங்கள். அவற்றை நாமும் கைக்கொள்ளுவதில் என்ன சிக்கல் என்பதையும் எண்ணிப்பாருங்கள்.

ஜார்ஜ் வாசிங்டன் கார்வார், ஜி.டி. நாயிடு இருவரும் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு நாடுகளில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அவர்களை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்தி வெற்றிப்பாதையில் இட்டுச்சென்ற பண்புகள் என்ன? அவற்றை நாமும் உள்வாங்கமுடியுமா? உள்வாங்கி செயல்படுத்த முடியுமா? முடிந்தால் நிச்சயம் வெற்றிகளை நோக்கி நாம் விரைந்து செல்ல இயலுமா?

இக்கேள்விகளுக்கு அடுத்தவாரம் விடைகாண்போம்.

(கட்டுரை ஆசிரியர் முனைவர்.அரசு செல்லைய்யா அவர்கள் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூரில் பிறந்தவர். திருச்சி St Joseph’s கல்லூரியிலும், Biship Heber கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியல் துறையில் (Biochemistry) முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் மிசொரி மாநிலத்தில் உள்ள செயிண்ட்லூயிஸ் பல்கலைக்கழகத்திலும், வாசிங்க்டன் பல்கலைக்கழகத்திலும் மூலக்கூறு, செல் உயிரியல் துறைகளில் (Molecular and Cellular Biology) ஆய்வு செய்தார். தற்போது, பால்டிமோர் நகரில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப்பணி புரிந்துவருகிறார்.மிசொரி தமிழ்ச்சங்கம்,மிசொரி தமிழ்ப்பள்ளி, அமெரிக்கத் தமிழ்க்கல்விக்கழகம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை போன்றவற்றின் தலைவராக பல ஆண்டுகள் தமிழ்ப்பணி செய்துள்ளார். ”தமிழ் மொழி காக்கபடவும், வளர்க்கப்படவும், அடுத்த தலைமுறையினருக்கு கொடுக்கப்படவும் தொடர்ந்து பணியாற்றிவருகிறார். தமிழர்கள் அறிவிலும், ஆற்றலலிம், பொருளாதாரத்திலும் மேம்பட்டு வாழ, புதிய கட்டமைப்புக்கள் உருவாக்கவும். ஏற்கனவே இருக்கும் அமைப்புக்கள்  வலுப்பெறவும் - ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என விரும்புகிறார்.)

by Swathi   on 15 Jul 2015  5 Comments
Tags: வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்   Vetri Pathai   Vetri Pathaiyil Virainthu Selvom   Arasu Chellaiah   Arasu Chellaiah Article   Arasu Chellaiah Thodar   Self Condfidence Article  
 தொடர்புடையவை-Related Articles
வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! 4 – வெற்றி பெற வேண்டிய எட்டு அம்சங்கள்: வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! 4 – வெற்றி பெற வேண்டிய எட்டு அம்சங்கள்:
வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! - என்னை ஈர்த்த வெற்றிச் சிந்தனையாளர்கள் !! வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! - என்னை ஈர்த்த வெற்றிச் சிந்தனையாளர்கள் !!
வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்!  - அறிமுகம் .. வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! - அறிமுகம் ..
கருத்துகள்
17-May-2018 09:56:20 baskaran said : Report Abuse
ஐயா வணக்கம் , நீங்கள் எழுதிய கட்டுரை ரொம்ப ஆழமாக என் மனதில் பதிகிறது. நன்றி .
 
09-Sep-2017 14:03:06 கோபி said : Report Abuse
வளமுடன் வாழ்க முன்னேற வேண்டும் என்று எண்ணுகிற உறுதி உள்ள இதயம் அவசியம் வெற்றி பெறும்
 
19-Jan-2016 07:42:11 தனபால் said : Report Abuse
ஐயா வணக்கம் நான் தங்களிடம் பேச விரும்புகிறேன். ஆகவே தங்களின் போன் நம்பரை கொடுக்கவும். நன்றி.
 
21-Jul-2015 11:01:39 மகேந்திரன் said : Report Abuse
அருமை! அடுத்தடுத்த தொடர்களைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.
 
18-Jul-2015 04:53:00 ஜோதிஜி திருப்பூர் said : Report Abuse
வணக்கம் தொடர்ந்து எழுத வாழ்த்துகள். ஆர்வமுடன் காத்திருக்கின்றேன். நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.