LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவரும், இலக்கியச் சொற்பொழிவாளருமான டாக்டர் அ. அறிவொளி அவர்கள் காலமானார்

திருச்சியைச் சேர்ந்த தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவரும், ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவாளருமான டாக்டர் அ. அறிவொளி (80) செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.  தூர்தர்ஷன் தொடங்கி அனைவரும் மேடைகளில் ரசித்த  ஓர் ஆளுமை.  கம்பன் கழகம் உள்ளிட்ட மேடைகளில் எளிமையான மொழியில் பேசி, சாமானியனை சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்தவர். தமிழே பேச்சாக , மூச்சாக இறுதிவரை வாழ்ந்தவர் .. 

அறிவார்ந்த பட்டிமன்றங்களை டாக்டர் அறிவொளி அவர்கள் தூர்தர்ஷன் தொடங்கி அனைத்து தொலைக்காட்சிகளிலும்  நடத்தினார்.

டென்மார்க் தலைநகர் கோபன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தைக் கொண்டு சென்றவர்.

அண்ணாமலை பல்கலைக்கழகம்,  பூம்புகார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

திருக்கோயில்கள் வரிசைகள் என்ற தலைப்பில் தமிழகம் மட்டுமின்றி நாடுமுழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள், பஞ்சபூத தலங்களுக்கு நேரில் சென்று அதன் வரலாறுகளையும் சிறப்புகளையும் ஆராய்ந்து பதிவிட்டவர்.

120-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ள இவர், திருச்சி கம்பன் கழகத்தில் ஆய்வுரை திலகம் என்ற பட்டம் மற்றும் கபிலவாணர் விருது பெற்றவர்.

1986-இல் வழக்காடு மன்றத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர். இவரது சொந்த ஊர் நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த சிக்கல் ஆகும்.

திருச்சியில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்உள்ளனர்.

அவரது மறைவு தமிழ்நாட்டிற்கு ஒரு பேரிழப்பு. அன்னாரது இழப்பால் வாடும் அவர் தம் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய  வலைத்தமிழ்.காம் வாசகர்கள் சார்பாக இறையருளை பிரார்த்திக்கிறோம்.

இவரது இறுதிச் சடங்கு திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகில் உள்ள ஹனிபா  காலனியில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.

சிந்திப்பதை...பேசுவதை டாக்டர் அ. அறிவொளி அவர்கள் நிறுத்திக்கொண்டார் .. இருப்பினும் அவர் மேடைகளில் ஏற்படுத்திய தாக்கங்கள், பேசிய சிந்தனைகள், எழுதிய எழுத்துகள் என்றும் நிலைத்திருக்கும்...  தமிழுக்கு மிகப்பெரிய இழப்பு...

 

இறுதி அஞ்சலிகள் ...

 

 

==============தமிழறிஞர் பத்மஸ்ரீ ஔவை நடராசன் தனது இரங்கல் செய்தியில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் .. 

அறிவொளி அணைந்ததே !
=========================

ஆழ்ந்த கல்வியும், தோய்ந்த புலமையும் சொற்றிறம் வாய்ந்த வன்மையும் கொண்ட அருமை நண்பர் அறிவொளி மறைந்தார் என்ற செய்தி, அறிவொளி மறைந்ததே என்று அரற்றச் செய்கிறது .

நண்பர் அறிவொளி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர விழைந்தபோது அண்ணல் புலவர் கா .கோவிந்தன் பால் அழைத்துச் சென்றது நினைவில் நிரம்புகிறது .

சொல்லும் சொற்களில் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் ஒரு சொல்லை வைத்துப் பேசியதால், பல்கலைக்கழகத்தில் மறியலுக்கு ஆளானார் .

அன்று முதல் வேண்டா ஆசிரியப்பணி என்று கல்விப் பணியை வீசியெறிந்தார். மேடை மின்னலாக மிளிர்ந்தார்.

சங்க இலக்கியப் புலமையோடு இன்றைய இலக்கியம்வரை கற்றுத் தெளிந்த நல்லறிவு படைத்தவர்.

மந்திரம், தந்திரம், சோதிடம், யோகம், மருத்துவம், பூசனை எனப் பல நிலைகளிலும் பங்கு பெற்றார்.

அறிஞர் அறிவொளியைப் போலவே புலவர் அறிவு ஒளியும் எனக்கு நண்பர்.

திருக்கழுக்குன்றத்தில் புலவர் திலகமாகத் திகழ்ந்த அறிவு ஒளியின் தந்தையார் மறைவுக்கு நான் ஓர் இரங்கலுரை அனுப்பியிருந்தேன்.

தெளிவில்லாமல் அக்கடிதம் திருச்சிக்குச் சென்றது. மறுநாள் ஒரு மடல் வந்தது.

இனியவரே, என் தந்தையார் நோயுற்றிருப்பது உண்மை. 
அவர் மறைவுக்காகத் தாங்கள் எனக்கு அனுப்பிய மடலை ஒரு நாள் அவர் மறைவுக்காக துயர்க் குளத்தில் மூழ்கி நான் துடிக்கும்போது இந்த மடலை நான் பயன்படுத்திக்கொள்வேன் என்று மடலெழுதினார் . பொல பொலவென்று என் கண்கள் கலங்கின. முகவரி மாறிய கடிதத்தை எவ்வளவு கனிவாகச் சுட்டிக்காட்டினார் என்பதைப் பல மேடைகளில் நான் கூறியிருக்கிறேன்.

நானும் அவரும் ஏறத்தாழ ஒரே காலத்தில்தான் பிணியின் பிடிப்புக்கு ஆளானோம்.

பிடித்த நிலையில் நான் இருக்கும்போது, அவர் எப்படித் தம் கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டார் என்பது தீராத கலக்கத்தைத் தருகிறது.

இலங்கையில் நடந்த கம்பர் விழாவில் எங்களோடு உடன் வந்திருந்தார் , என் மகனைக் கண்டு இவன் பெயர் அருள் ஒளி என்று வையுங்கள் என்று ஆரத் தழுவி மகிழ்ந்தார்.

உலகெங்கும் உள்ள கம்பன் கழகங்கள் தம் கலைத் திலகத்தைக் கலைத்துக் கொண்டு கலங்குகின்றன .

தோளை இழந்த சோதரர் சத்தியசீலனுக்கு ஆறுதல் யார் வழங்குவது ?

பின்னல் பின்னலாகப் பேசிய மின்னல் மறைந்ததே !

காவியை நம்பாமலேயே , காவி உடுத்தியவர்.

பக்தி நூல்களைப் புரட்டியது போலவே, பகுத்தறிவு நூல்களை ஆராய்ந்தவர்.

கை கழகத்திற்கு கண்கள் கடவுள் நெறிக்கு என்ற இரட்டை நிலை கூட ஆற்றாத இடர் தருமோ ? என நான் எண்ணியதுண்டு . இருளில் கலங்கவைத்து விட்டார் எப்போது விடியுமோ !

----- பத்மஸ்ரீ ஔவை நடராசன்

by Swathi   on 09 May 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தேனீ மாவட்டத்தை சேர்ந்த திருமதி அமுதா பெரியசாமி இயேசு கலைஞரை வழியனுப்ப நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி தேனீ மாவட்டத்தை சேர்ந்த திருமதி அமுதா பெரியசாமி இயேசு கலைஞரை வழியனுப்ப நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி
தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் கலைஞர் - காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் கலைஞர் - காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார் தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்
14-வது ‘ஈரோடு புத்தகத் திருவிழா’ நாளை துவங்குகிறது! 14-வது ‘ஈரோடு புத்தகத் திருவிழா’ நாளை துவங்குகிறது!
தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் பெற்றுத்தர வழக்கு தொடுத்த டி.கே.ரங்கராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள் ... தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் பெற்றுத்தர வழக்கு தொடுத்த டி.கே.ரங்கராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள் ...
17வது உலகத் தமிழ் இணைய மாநாடு - கோவையில் மூன்று நாள்கள் நடக்கிறது!! 17வது உலகத் தமிழ் இணைய மாநாடு - கோவையில் மூன்று நாள்கள் நடக்கிறது!!
யூடியூப்பில் ஒரு லட்சம் வாசகர்களை கடந்து பயணிக்கும் வலைத்தமிழ்.... யூடியூப்பில் ஒரு லட்சம் வாசகர்களை கடந்து பயணிக்கும் வலைத்தமிழ்....
தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி : கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள் தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி : கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.