LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ராஜேஷ் குமார்

ஈஸ்வரி எட்டாம் வகுப்பு போகிறாள்

என் பேரு ஈஸ்வரி. ஏழாவது படிக்கிறேன். நான், சிந்து, கலைவாணி எல்லாரும் நடந்துதான் போவோம். வெயில்காலத்துல ஆத்துல தண்ணி கம்மியா இருந்தா ஆத்துக்குள்ளயே இறங்கி நடந்து போயிரலாம், ரொம்ப பக்கம். தண்ணி ஜாஸ்தியா இருந்தா, ரோட்டு வழியா முக்கா மணி நேரம் நடந்து போகணும். ஆனா, ஆத்த ஒட்டியே சின்ன காட்டு வழி இருக்கு. அந்தப் பக்கம் போனா, எங்கம்மா திட்டுவாங்க. துணைக்கி சிந்து, கலைவாணில்லாம் வர்றாங்கன்னு சொல்லுவேன், மூஞ்சிய கோவமா வச்சிக்கிட்டே, சொல்ற பேச்சை கேக்குதா பாரு. அராத்துன்னு திட்டிட்டு போயிருவாங்க.


இதே சாக்குல சிலநாள் என் பிரண்ட்ஸ் வரலேன்னாக்கூட நான் தினமும் நைசா ஆத்து வழியாதான் போவேன். கொஞ்சம் பயமாத்தான் இருக்கும், ஆனாலும் கொஞ்ச நடந்து வந்தா சூசையண்ணன் துணி துவைச்சிட்டிருப்பாரு. பக்கத்துல பியூலாக்கா துணி காய வச்சிட்டிருப்பாங்க, அவங்களோட மூனு வயசுல குட்டிப்பையன் இமான் பக்கத்துலயே விளையாடிட்டிருப்பான். அவங்ககிட்ட பேசிட்டே போயிருவேன்.


எப்பவாவது ஆத்துப்பக்கம் போனேன்னு தெரிஞ்சுருச்சுன்னா எங்கம்மா கரண்டியக் காய வச்சு. முட்டிக்குக் கீழ அடிப்பாங்க. நான் நீச்சலடிக்க ஆசைப்பட்டுத்தான் ஆத்துப்பக்கம் போறேன்னு அவங்களுக்குத் தெரியும். அந்த மகேசு பையன் நீச்சலடிக்கிறான்னா, அவன் ஆம்பளைப் பையன், பொட்டப்புள்ள, உனக்கு என்னடி ஆசை அவன்கூட போட்டி போட்றன்னு கேட்டு அடிப்பாங்க. அவங்க சொன்னமாதி அந்த மகேஸ் நீச்சல் அடிக்கிறதப் பாத்தா எனக்கு கால், கையெல்லாம் பரபரன்னு இருக்கும். அவன்கிட்ட எனக்கும் நீச்சல் கத்துக்குட்ரான்னு கேட்டதுக்கு, நீயெல்லாம் தண்ணில நீச்சலடிக்கணும்னு ஆசப்படாத ஈசு... தரையில அடிக்கிறதோட நிறுத்திக்கன்னு கிண்டல் பண்ணுவான். எட்டாவது போறதுக்குள்ள நான் நீச்சலடிப்பேன்டான்னு அவன்கிட்ட சவால் விட்டேன். அவன் கிண்டலா சிரிச்சுக்கிட்டே தண்ணிக்குள்ளயே ஒரு பல்டி அடிச்சு, வாய் நிறைய தண்ணியை ரொப்பி புஸ்வாணம் மாதிரி துப்புனான். அவன் கிண்டல் பண்றதக் கூட மறந்து அவன் துப்புனதையே பார்த்துக்கிட்டிருந்தேன். அப்பவே நானா இறங்கிக் கத்துக்கலாம்னு பாத்தா, எங்கம்மா கரண்டியோட கண்ணு முன்னாடி வருவாங்க. லேசா பயமாவும் இருக்கும்.தினமும் பொழுது விடிஞ்சதுமே நானும் அவன மாதியே தண்ணிக்குள்ள பல்டியடிச்சு நீச்சல் அடிக்கிற மாதியே கற்பனை பண்ணிப் பாப்பேன். ரொம்ப சந்தோஷமா இருக்கும். இன்னையோட ஏழாவதுக்கு முழுப்பரிட்சை முடியிது. என் பிரண்ட்ஸெல்லாம் முன்னாடியே போயிட்டாங்க. நான் மட்டும்தான் நடந்து போனேன். ஆத்தைப் பாத்தவுடனே நின்னுட்டேன். கொஞ்ச நேரம் பாத்துக்கிட்டே இருந்தேன். என்னமோ மாதி இருந்துச்சு. ஒரு மாசம் லீவு முடிஞ்சா எட்டாவதும் போயிருவேன். ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.


அப்ப திடீர்னு யாரோ அலறுற மாதி சத்தம் கேட்டுச்சு. திரும்பிப் பாத்தா, பியூலாக்கா இமானு,  இமானுன்னு சத்தம் போட்டு இடுப்பைப் புடிச்சுக்கிட்டே வேகமா நடந்து வந்துட்டிருந்தாங்க. பாவம் அவங்க வயித்துல பாப்பா இருக்கு. அவங்களால ஓட முடியல. என்னன்னு ஓடிப்போயி பாத்தா, இமானு தண்ணிக்குள்ள விழுந்துட்டான். கையக் கால ஆட்டிட்டே அம்மா, அம்மான்னு கத்திட்டிருந்தான். சுத்தி சுத்திப் பாத்தேன், சூசை அண்ணன் அங்க இல்ல, வேற யாரையும் காணோம். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. பியூலாக்கா இடுப்பைப் பிடிச்சுக்கிட்டு கரையிலயே ஒக்காந்துகிட்டு இமானைப் பாத்து கண்ணு, இங்க வா கண்ணுன்னு கைய நீட்டிக்கிட்டிருந்தாங்க. ஆனா இமானு தண்ணில மிதந்துக்கிட்டே கொஞ்சம் தள்ளித் தள்ளிப் போயிட்டிருந்தான். அவனுக்கு கொஞ்சம் தள்ளி அவன் கையில எப்பவும் விளையாட்ற பொம்மை மிதந்துக்கிட்டிருந்துச்சு. பியூலாக்காவுக்கு இடுப்பு வேற வலிச்சுதுன்னு நினைக்கிறேன். அவங்களால எந்திரிச்சு நடக்க முடியல. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.


பாத்தேன்.


ஓடிப்போயி எகிறி ஆத்துக்குள்ள குதிச்சேன்.


எனக்கு எல்லாம் கனவு மாதி இருந்துச்சு. நான் பறந்து போயி ஆத்துல விழுந்தேன். விழுந்த வேகத்துல தண்ணி தெறிச்சுது. நானும் தண்ணிக்குள்ள போயிட்டேன். தண்ணி உள்ள இழுத்துச்சு. தண்ணிக்குள்ள விழுந்தா என்ன பண்ணணும்னு எங்கப்பா சொன்னது ஞாபகம் வந்துச்சு. அவரு சொன்னமாதியே கையக் கால வேகமா ஆட்டுனேன். தண்ணி என்னை இழுத்துக்கிட்டே இருந்துச்சு. வாய்க்குள்ள, மூக்குக்குள்ளல்லாம் தண்ணி போச்சு, முட்டை முட்டையா வந்துச்சு. மறுபடியும் மறுபடியும் கைய, கால அடிச்சேன். மகேசு என்னை கிண்டல் பண்ணது, பொட்டபுள்ள உனக்கென்னடி ஆசைன்னு அம்மா திட்டுனது, எனக்கு ஏழாவது பரிட்சை முடிஞ்சது எல்லாம் ஞாபகம் வந்துச்சு. பல்லக் கடிச்சுக்கிட்டு மறுபடியும் மறுபடியும் கை, கால அடிச்சேன். கடைசியா கொஞ்சம் கொஞ்சம் தண்ணிக்குள்ளருந்து மேல வந்தேன். மறுபடியும் இழுக்குற மாதி இருந்துச்சு. விடாம மறுபடியும் மறுபடியும் கை, கால வேகமா ஆட்டிக்கிட்டே இருந்ததுல தண்ணிக்குள்ளருந்து மேல வந்தேன். அப்பதான் தெரிஞ்சுது, நான் தண்ணிக்குள்ள முழுகாம மேலயே நிக்கிறேன்னு. அப்படியே கால ஆட்டிக்கிட்டே தண்ணிக்கு மேல வந்து தலைய மட்டும் வெளிய வச்சுக்கிட்டு சுத்தி சுத்திப் பாத்தேன். கரையில உக்காந்துக்கிட்டு பியூலாக்கா என்னையும் இமானையும் மாத்திப் பாத்துக்கிட்டு ஐயோ, ஐயோன்னு கத்திக்கிட்டிருந்தாங்க. இமான் ஒரு பக்கம் மிதந்துக்கிட்டிருந்தான். நான் அப்படியே கை, காலால தண்ணியை பின்னால தள்ளிவிட்டேன். தண்ணி பின்னால போச்சு, நான் முன்னால போனேன். நான் போகப்போக இமானும் மிதந்துக்கிட்டே தள்ளித் தள்ளிப் போனான். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா இமான்கிட்ட போயிட்டேன். அவன் அழுதுகிட்டே துடிச்சுட்டிருந்தான். ஒருவழியா அவங்கிட்ட வந்துட்டேன். வேளாங்கண்ணிக்கு வேண்டுதலுக்காக அவன் தலையில விட்டிருந்த முடியை கொத்தா புடிச்சேன். ஒரு கையில அவனைப் புடிச்சு இழுத்துக்கிட்டே கரைப்பக்கம் திரும்பி இன்னொரு கையால தண்ணியைத் தள்ளுனேன். கொஞ்சம் கொஞ்சமா கரைப்பக்கம் போனேன். கரைக்கிட்ட வந்ததும் கரையைப் புடிச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் மூச்சு வாங்குனேன். என்னைப் பாத்துட்டு பியூலாக்கா எந்திரிச்சு கஷ்டப்பட்டு ஓடிவந்தாங்க. இமான் அழுதுகிட்டே இருந்தான். அவனைத் தூக்கி கரையில உக்கார வச்சேன். பியூலாக்கா ஓடிவந்து இமானை வாங்கிட்டே, ஏசப்பா... என்ன கண்ணுன்னு சொல்லிட்டே இமானைக் கட்டிப்புடிச்சுக்கிட்டாங்க. நல்லவேள அவனுக்கு ஒன்னும் ஆகல. ஆனா பயத்துல அழுதுக்கிட்டு மட்டும் இருந்தான்.


மறுபடியும் ஆத்தைப் பாத்தேன். இமானோட பொம்மை மிதந்துக்கிட்டிருந்துச்சு. அந்த பொம்மையப் பாத்துக்கிட்டே கையக் கால அடிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா கிட்ட போனேன். பொம்மைய எடுத்தேன். மறுபடியும் அதே மாதியே கரையப் பாத்து வந்தேன். பொம்மைய கரையில வச்சேன். கொஞ்சம் நேரம் மூச்சு விட்டேன். அப்பதான் நிமிந்து பாத்தா, கொஞ்ச தூரத்துலருந்து ஓடிவந்த மகேசு, கரையில நின்னுக்கிட்டு அதிர்ச்சியாகி கண்ணு ரெண்டையும் முழிச்சு மிரண்டு போயி என்னைப் பாத்தான். அவனைப் பாத்து சிரிச்சேன். ஏய், ஈசு, தண்ணிலயா குதிக்கிற? இரு, இரு, உங்கம்மாட்டயே சொல்றேன்னு சொல்லிட்டு ஓடுனான். நான் அதைப் பத்திக் கவலைப் படல.


மெதுவா கரையில ஏறி ஒக்காந்தேன். என்னால நம்பவே முடியல. நானும் நீச்சலடிச்சேன். இதே ஆத்துல. தலையிலருந்து தண்ணி நெத்தி, மூக்கு, வாய் வழியா வழிஞ்சுது. தண்ணிய ஊதுனேன். தெறிச்சுது.


பின்னாடி திரும்பிப் பாத்தா, சூசையண்ணன் ஓடிவந்தாரு. புள்ளைய ஆத்துக்குள்ள விட்டுட்டு நீ என்னடி பண்ணிட்டிருந்தன்னு கேட்டாரு. நான் என்னத்தைக் கண்டேன், பொம்மைய எடுக்கப் போறேன்னு தண்ணிக்குள்ள விழுவான்னா எனக்கெப்படித் தெரியும், அந்தப் புள்ள இருக்கப்போயி குதிச்சு தூக்கிட்டு வந்தானு என்னைக் காட்டினாங்க. என்கிட்ட ஓடிவந்த சூசையண்ணன் என் நெத்தியில முத்தம் குடுத்தாரு. மறுபடியும் போயி இமானைத் தூக்கிட்டு போனாரு. பியூலாக்கா அவரு பின்னாடியே போயிட்டாங்க.


மறுபடியும் ஆத்தப் பாத்தேன். இவ்வளவு நாளா என் கண்ணு நிறைய பெரிசா தெரிஞ்ச ஆறு, இப்ப என் காலுக்கு கீழ அமைதியா இருக்கு. இப்ப இந்த ஆத்தைப் பாத்தா எனக்கு பயமாவே இல்ல.


என் டிரஸ்ஸெல்லாம் தண்ணி, மொத்தமா நனைஞ்சுட்டேன். இருக்கட்டுமே!...


நிறைய தண்ணிவேற குடிச்சுட்டேன். இருக்கட்டுமே!...


குதிச்சதுல தண்ணிக்கடியில இருந்த முள்ளுல குத்திக் கட்டை விரலுல லேசா ரத்தம் வந்துச்சு. இருக்கட்டுமே!...


தூரத்துல பாத்தேன். எங்கம்மா கரண்டியோட வந்தாங்க. பின்னாடி மகேசு வந்துட்டிருந்தான். இருக்கட்டுமே!...

by Rajeshkumar Jayaraman   on 27 Feb 2015  0 Comments
Tags: Rajesh Kumar Stories   Easwari   Ettam Vaguppu   ஈஸ்வரி   எட்டாம் வகுப்பு   ராஜேஷ் குமார்     
 தொடர்புடையவை-Related Articles
ஏழாம் அறிவாய்க் காதல் ஏழாம் அறிவாய்க் காதல்
ஈஸ்வரி எட்டாம் வகுப்பு போகிறாள் ஈஸ்வரி எட்டாம் வகுப்பு போகிறாள்
என் இந்திய தேசம் என் இந்திய தேசம்
ஆணிவேர் ஆணிவேர்
சுவடுகள் சுவடுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.