LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

எழுத்து

தமிழ் எழுத்துக்கள்

1. உயிரெழுத்து: அ, ஆ - இவை வேறோர் எழுத்தின் உதவியில்லாமல் தாமே இயங்குகின்றன. நமது உயிர், மெய்யின் (உடம்பின்) உதவியில்லாமல் தானே இயங்குகின்றது. அதுபோலவே இயங்கும் அ, ஆ, முதலிய பன்னிரண்டு எழுத்துக்களும் உயிரெழுத்துக்கள் எனப்படும்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள - உயிர் எழுத்துக்கள் 12.

2. மெய்யெழுத்து: க், ங் - `இக்', `இங்' என உச்சரிக்கப்படும்: `க்' என்னும் எழுத்தை உச்சரிக்க உயிரெழுத்தின் உதவி தேவைப்படுகிறது. நமது மெய் (உடம்பு) இயங்குவதற்கு உயிர் தேவைப்படுவது போல `க்' முதலிய எழுத்துக்களை உச்சரிக்க உயிர் எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. ஆதலால் `க்' முதலிய பதினெட்டு எழுத்துக்களும் மெய்யெழுத்துக்கள் என்று சொல்லப்படும்.

க், ங், ச், ஞ் ட், ண், த் ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் - மெய்யெழுத்துக்கள் 18.

3. உயிர்மெய் எழுத்து: க என்னும் எழுத்தில் `க்' என்னும் ஒலியும், `அ' என்னும் ஒலியும் சேர்ந்திருக்கின்றன. அதாவது க(க்+ அ) - `க்' என்னும் மெய்யும் `அ' என்னும் உயிரும் கூடிப் பிறந்த எழுத்தாகிறது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18*12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.

க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ - 12; இவ்வாறு உண்டாகும் உயிர் எழுத்துக்கள் 216.

4. ஆய்த எழுத்து: (`ஃ' இங்ஙனம் மூன்று புள்ளி வடிவமாக இருப்பது ஆய்த எழுத்து. இது அஃது இஃது எஃது என்றாற் போலச் சொல்லின் இடையில் வரும்.


1. உயிர் எழுத்துக்கள் - 12
2. மெய் எழுத்துக்கள் - 18
3. உயிர்மெய் எழுத்துக்கள் - 216
4. ஆய்த எழுத்து - 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் - 247


5. உயிரெழுத்துக்கள் பன்னிரண்டில்

1.அ, இ, உ, எ, ஒ, என்னும் ஐந்தும் குறுகிய ஓசையுடையவை. ஆதலால் இவை குறில் எனப்படும்.

2.ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் எழுத்துக்களும் நீண்ட ஓசையுடையவை. ஆதலால் இவை நெடில் எனப்படும்.

6. பதினெட்டு மெய்யெழுத்துக்களுள்,

1.க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறும் வலிய ஓசையுடையவை: ஆதலால் இவை வல்லினம் எனப்படும்.

2.ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறு எழுத்துக்களும் மெலிந்த ஓசையுடையவை; அதனால் இவை மெல்லினம் எனப்படும்.

3.ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறும் இடைத்தர ஓசையுடையவை; ஆதலால் இவை இடையினம் எனப்படும்.

2. ஒலி வேறுபாடும் பொருள் வேறுபாடும்
(1) ர, ற


1.அரம், மரம் - இவற்றிலுள்ள ரகரத்தை உச்சரியுங்கள். நாவின் நுனி மேல்வாயைத் தடவுதலால் இவ்வெழுத்துப் பிறக்கின்றது என அறியலாம்.
வரம், கரி, கரை, குரவர் - இவற்றை உச்சரித்துப் பாருங்கள்.

2.அறம், மறம் - இவற்றில் வந்துள்ள றகரத்தை உச்சரியுங்கள். நாவின் நுனி மேல்வாயை மிகப் பொருந்துதலால் ற பிறக்கின்றமையை அறியலாம். இவ்வாறு இவை (ர-ற) பிறக்கும் முயற்சியில் வேறுபடுதலால்தான் உச்சரிப்பிலும் இவை வேறுபடுகின்றன. இவை உச்சரிப்பில் வேறுபடுதல் போலவே பொருளிலும் வேறுபடும்.

ர ற
அரம் - ஒரு கருவி அறம் - தருமம்
மரம் மறம் - வீரம்
இரை - உணவு இறை - தலைமை, வரி
கரி - யானை கறி - பதார்த்தம்
கரை - அணை கறை - அழுக்கு
திரை - அலை திறை - கப்பம்
பரவை - கடல் பறவை - பட்சி
மாரி - மழை மாறி - வேறுபட்டு
விரல் - ஓர் உறுப்பு விறல் - வலிமை, திறமை

இவ்வாறு இவை உச்சரிப்பிலும் பொருளிலும் வேறுபடுதலை அறியாமல் பலர் இரண்டையும் ஒன்று போலவே பிழைபட உச்சரிக்கின்றனர். இப்பிழையை நீங்கள் செய்யலாகாது.
(2) ந,ன, ண


1.நகம், நண்டு - இவற்றில் வந்துள்ள நகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்துதலால் இவ்வெழுத்துப் பிறக்கின்றது. கந்தன், பந்தம் என்று இதனையடுத்துப் பெரும்பாலும் `த' வருதலாலும், மெய்யெழுத்துக்களின் வரிசையில் இந்நகரம் தகரத்தை அடுத்திருத்தலாலும் இது தந்நகரம் எனப்படும்.

2.கன்று, நன்று - இவற்றில் வந்துள்ள னகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் நுனி மேல்வாயை மிகப் பொருந்துதலால் இவ்வெழுத்துப் பிறக்கின்றது. மன்று, சென்று என இதனையடுத்துப் பெரும்பாலும் `ற' வருதலாலும், மெய்யெழுத்துக்களின் இறுதியில் றகரத்தை அடுத்து இந்த னகரம் இருத்தலாலும் இது றன்னகரம் எனப்படும்.

3.பணம், மணல் - இவற்றில் வந்துள்ள ணகரத்தை உச்சரியுங்கள். நாவின் நுனி மேல்வாய் நுனியைச் சேர்தலால் இந்த ண பிறக்கின்றது. நண்டு, வண்டு, கண்டம் எனப் பெரும்பாலும் இதனையடுத்து டகரம் வருதலாலும், மெய்யெழுத்துக்களின் வரிசையில் டகரத்தை அடுத்து இந்த ணகரம் அமைந்திருத்தலாலும் இது டண்ணகரம் எனப்படும்.

இவை மூன்றும் இங்ஙனம் பிறக்கும் முயற்சியில் வேறுபடுவதால், உச்சரிப்பிலும் பொருளிலும் வேறுபடும்.

ந ன ண
நான் - பேசுவேன் நாண் - கயிறு
ஆன் - பசு ஆண் - ஆடவன்
ஆனை - யானை ஆணை - கட்டளை
கனி - பழம் கணி - சோதிடம்
பனி - குளிர்ச்சி பணி - வணங்கு

இவை இவ்வாறு உச்சரிப்பிலும் பொருளிலும் வேறுபடுதலை அறியாமல் பலர் இம்மூன்றையும் ஒன்று போலவே பிழைபட உச்சரிக்கின்றனர். இப்பிழையை நீங்கள் செய்யலாகாது.

(3) ல, ள, ழ


1.கலம், பலம் - இவற்றில் உள்ள லகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் ஓரம் மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்துதலால் ல பிறக்கின்றது.

2.குளம், குள்ளன் - இவற்றில் உள்ள ளகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் ஓரம் மேல்வாயைத் தடித்துத் தடவுதலால் ள பிறக்கின்றது.

3.பழம், மழை - இவற்றில் உள்ள ழகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் நுனி மேல்வாயைச் சிறிது அழுத்தமாகத் தடவுதலால் ழ பிறக்கின்றது.

இவை மூன்றும் உச்சரிப்பில் வேறுபடுகின்றன அல்லவா? அவ்வாறே அவை பொருளிலும் வேறுபடுதலைக் காண்க:

ல ள ழ

அலை - அலைதல் அளை - வளை அழை - கூப்பிடு
கலை - ஆடை களை - நீக்கு, களைப்பு கழை - கரும்பு, மூங்கில்
காலி - ஒன்றும் இல்லாதது காளி - ஒரு பெண் தெய்வம் காழி - ஓர் ஊர் (சீர்காழி)
தலை - உறுப்பு தளை - கட்டு தழை - செழி
வலி - வலிமை, நோதல் வளி - காற்றுழூ வழி - பாதை
விலை - விற்பனை விளை - பயிராக்கு விழை - விரும்பு

(4) க்ஷ, ட்ச


1.பக்ஷம், மீனாக்ஷி, அக்ஷய பாத்திரம் - இவற்றில் வந்துள்ள க்ஷ என்னும் எழுத்து வடமொழி எழுத்து. இதற்குப் பதிலாக ஏறத்தாழ இதே உச்சரிப்பையுடைய ட்ச என்னும் இரண்டு எழுத்துக்களைப் பயன்படுத்தி பட்சம், மீனாட்சி, அட்சய பாத்திரம் என்பனபோல் எழுதுதல் தமிழர் வழக்கம். இவற்றுள் பட்சம், அட்சய பாத்திரம் என்பனவற்றைத் தமிழ் எழுத்துக்களில் எழுதுவதில் தவறில்லை. ஏனெனில் இவற்றின் பொருள் வேறுபடவில்லை. மீனாக்ஷி என்பதற்கு மீன்போன்ற கண்ணையுடையவள் என்பது பொருள்: இதைத் தமிழில் மீனாட்சி என எழுதினால் மீன் + ஆட்சி எனப் பிரியும். அக்ஷி என்னும் வட சொல்லுக்குக் `கண்ணையுடையவள்' என்பது பொருள்; ஆட்சி என்னும் சொல் ஊராட்சி, நகராட்சி என்பது போலக் காணப்படுகிறது. மீனாக்ஷி என்னும் வட சொல் தொடருக்குரிய பொருள், மீனாட்சி என்னும் தமிழ்த் தொடரில் பெறப்படவில்லை என்பது அறியற்பாலது. ஆதலால் பொருள் கெடாத வகையில் வட எழுத்துக்குச் சமமான தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்துதல் பொருத்தமாகும். பொருள் கெடவருமாயின், அங்கு வட எழுத்துக்களைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.

2.காட்சி - இது காண் + சி என்ற பிரிக்கப்படும். இது தமிழ்ச்சொல். இதனைப் பலர் காக்ஷி எனத் தவறாக எழுதுகின்றனர். திரைப்பட விளம்பரங்களில் இத்தவற்றைப் பெரும்பாலும் காணலாம். இத்தகைய தவறுகள் வராமல் பார்த்துக் கொள்வதும் உங்கள் கடமையாகும்.

by Swathi   on 26 Mar 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
29-Dec-2016 06:25:15 Vikki said : Report Abuse
நல்லது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.