LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- சமூகப் பங்களிப்பு

எக்ஸ்னோரா எம்.பி.நிர்மல் - ஒரு தனி மரத்தொப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் எழுத்தராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, புதிய சிந்தனைகளாலும் வித்தியாசமான செயல்பாடுகளாலும் படிப்படியாக உயர்ந்து உயர்  பதவிகள் அடைந்தவர். மத்திய அரசின் காஃபி போர்ட் உறுப்பினராகவும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் பொதுக் காப்பீட்டுக் கழகத்தின் தென்னிந்திய போர்ட் உறுப்பினராகவும் இருப்பவர்.

 

தூய்மையான சுற்றுப்புறச் சூழலுக்கான பணிகள், பசுமை இயக்கம் என்று அயராமல் பாடுபட்டுவரும் எம்.பி.  நிர்மல், சமூக சேவையில் முக்கியமான பங்களிப்பைச் செலுத்திவரும் எக்ஸ்னோரா இன்டர் நேஷனல் அமைப்பின் நிறுவனர். குப்பைகளே இல்லாத மாநகரத்தை  உருவாக்க முடியும் என்பது நிர்மலின் அசைக்க முடியாத நம்பிக்கை. இவர்  தொடங்கிய ‘குப்பை இல்லாத் திட்டம்’ பெரிய இயக்கமாக ஆரம்பித்து வெற்றி நடை  போட்டுவருகிறது. இந்தத் திட்டம் பற்றிய விளக்கங்களை அளிக்க, உலக  நாடுகளுக்கு நிர்மல் சுற்றுப் பயணம் செய்துவருகிறார்.

 

‘ஏழாவது அறிவு’ என்கிற கருத்தின் மூலம், மனித வள மேம்பாடு தொடர்பான கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் நடத்திப் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்திவருகிறார். ஓய்வில்லாத தன்னுடைய பணிகளுக்கிடையில் நம்ம சென்னைக்காகத் தன் அனுபவங்களை நிர்மல் பகிர்ந்துகொண்டார்.

 

எக்ஸ்னோரா என்கிற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே?

Excellent Novel Radical என்பதின் முதல் இரண்டெழுத்துச் சுருக்கம்தான் Exnora. தமிழில் சிறப்பான, புதுமையான தீவிரச் செயல்பாடு என்று சொல்லலாம்.

 

இந்த அமைப்பு எப்படி உருவானது?

ஹாங்காங்கில் உள்ள ஐ.ஓ.பி. கிளையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போதுதான் இந்த அமைப்புக்கான விதை உருவானது. உழைப்பு, திறமை, கொள்கை, கவனம் எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் அளித்து, மதிப்புத் தருவது அவசியம் என்பதை நான் உணர்ந்தபோது, உருவான சின்ன பொறிதான் எக்ஸ்னோரா. பிறகு, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். ஐ.ஓ.பி கிளை மேலாளராக இருந்தேன். மிகப் பெரிய அரசு அலுவலக வளாகமாக இருந்த டி.எம்.எஸ். மைதானத்தில் அப்போது குப்பைக் கூளங்கள் குவிந்திருந்தன. பெரிய வளாகத்தில் இது தவிர்க்க முடியாத விஷயம்தான். ஆனாலும், வளாகத்தைப் பராமரிக்க வேண்டியவர்கள் அதைச் செய்யவில்லை. அங்கு வனத்துறை அலுவலகம் இருந்தும் சொல்லும்படியாக மரங்கள் இல்லை. பேருக்கு ஒன்றிரண்டு மரங்கள் இருந்தன. குப்பைகள் அகற்றப்பட்டு, ஏராளமான மரங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். அன்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.ஏ. கிருஷ்ணசாமி உதவியோடு சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர் உள்ளிட்ட பல பிரமுகர்களோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுஊழியர்களும், அதிகாரிகளும் வளாகத்தைப் பெருக்கிச் சுத்தப்படுத்தினார்கள்.

 

அப்போதுதான் ‘இதே விஷயத்தை ஒரு இயக்கமாகவே நடத்தினால் என்ன?’ என்று தோன்றியது. அந்தச் சிந்தனைக்கு வடிவம் கொடுக்க ஆனந்த் தியேட்டரில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தேன். 1989 ஏப்ரல் 19 அன்று ‘இந்து’ ராம், ஏ.எம். சுவாமிநாதன் ஐ.ஏ.எஸ். ஆகியோர் அதில் கலந்துகொண்டார்கள். அந்தக் கூட்டத்தில்தான் எக்ஸ்னோரா உதயமானது.

 

சிவிக் எக்ஸ்னோராவின் செயல்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்... பீச் எக்ஸ்னோரா, டெம்பிள் எக்ஸ்னோரா, ஆட்டோ எக்ஸ்னோரா, ஐந்தாவது தூண், சர்வ சக்‘தீ’, பரம சாந்தி என்று சிவிக் எக்ஸ்னோராவுக்குப் பல கிளைகள் உள்ளன. முதலில் சென்னையின் ஒரு தெருவை அழகுப்படுத்தும் பொறுப்பை ஏற்பது என்று முடிவெடுத்தேன். எக்ஸ்னோராவின் முதல் பணி அதுவாகத்தான் இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன். அப்படி, அடையாறு, காமராஜர் அவென்யூவில் எக்ஸ்னோரா இயக்கம் தன் பணியைத் தொடங்கியது. அங்கிருந்த குப்பைகளை அகற்ற சென்னை மாநகராட்சியின் உதவியின்றி எக்ஸ்னோரா ஆர்வலர்களே பணியாற்றினார்கள்.

 

சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் இந்த தூய்மைப் பணி விரிவடைந்தது. இந்தச் சிந்தனைகளை இப்போது பலர், வேறு வடிவங்களில் செயல்படுத்திவருகிறார்கள்.

 

சிங்காரச் சென்னை உருவாகிவருகிறதா?

சென்னையில் இரண்டு ஆறுகள், இரண்டு கால்வாய்கள், இரண்டு கடற்கரைகள், இரண்டுசதுப்பு நிலங்கள் என்று இயற்கையிலேயே எல்லாம் இரண்டிரண்டாக அமைந்திருக்கின்றன. இந்தியக் கலை, கலாசாரத்தின் தலைநகரமாகவும் சென்னை விளங்குகிறது. மக்கள் அமைதியாக வாழ்வதற்கு எல்லா வசதிகளும் சென்னையில் இருக்கின்றன. இவையெல்லாம், சென்னைக்கே உரிய சிறப்பம்சங்கள். இந்த இயற்கை அழகைப் பராமரிப்பதிலும், மாநகரத்தை அழகுபடுத்துவதிலும் மேயர் மா. சுப்ரமணியன் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். அரசு சுவர்களில் அழகிய

ஓவியங்களால் தொன்மையான தமிழர் பண்பாட்டுப் பெருமைகளை வரைந்து, நகரை அழகுபடுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. சென்னை முழுவதும் கண்கவர் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்களை மேம்படுத்தி சிங்காரச் சென்னையாக மாற்றும் பணியை துரிதமாகச் செய்துவருகிறார்.

 

சென்னையில்தான் ஆசியாவிலேயே முதன்மையான பேருந்து நிலையம் கோயம்பேடு இருக்கிறது. அதேபோல உலகிலேயே தலைசிறந்த சந்தையாக கோயம்பேடு காய்கறி, பூ வணிக வளாகம் திகழ்கிறது. மெட்ரோ ரயில் திட்டமும் சென்னை நகர வளர்ச்சிக்கும் அழகுக்கும் துணையாக இருக்கும் என்பதால், சிங்காரச் சென்னையை நாம் விரைவிலேயே பார்க்க முடியும்.

 

சென்னையை அழகுபடுத்துவதற்கும், பராமரிப்ப தற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

நகரில் மாடு வளர்ப்பதை முற்றாகத் தடுக்க வேண்டும். இதன் மூலம், சுகாதாரச் சீர்கேட்டைத் தடுக்க முடியும். சாலைகளில் மழை நீர் தேங்காமல் இருக்க, கால்வாய்களைத் தூர் வாரி மேம்படுத்த வேண்டும். இவையெல்லாம் மாநகராட்சி செய்ய வேண்டிய பணிகள்.

 

அப்படியென்றால், மக்களின் கடமை என்ன?

எல்லாரும் அவரவர் வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ளத் தவறுவதில்லை. அதேபோல, அவர்கள் வீடு இருக்கிற தெருவையும் சுத்தமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதற்கு, தெருவில் குப்பை சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டுக் குப்பைக் கழிவுகளை இரண்டாகப் பிரித்து, மக்கும் குப்பைகளை வீட்டுத் தோட்டத்துக்கு உரமாகப் பயன்படுத்தலாம். மக்காத பிளாஸ்டிக், பாட்டில் போன்ற பொருட்களை விற்றுப் பணம் பார்க்கலாம்.

 

வீட்டு பால்கனியில் அல்லது மொட்டை மாடியில் சிறிய, பெரிய தொட்டிகளில் காய்கறி பயிரிடலாம். தேவையற்ற பழைய தகரம், பிளாஸ்டிக் வாளி, ஷூ போன்றவற்றைச் செடிகள் வளர்க்கப் பயன்படுத்தலாம். மக்கும் குப்பைகளைச் செடிகளுக்கு உரமாகப் போடலாம். அதற்கு முன்மாதிரியாக என் வீட்டு மாடியில்

வீட்டுப் பண்ணை, ஆகாயப் பண்ணை அமைத்திருக்கிறேன். இந்தச் சிந்தனை, இப்போது நிறைய பேருக்கு வருகிறது. அடிப்படையான இந்த விழிப்புணர்வு மாநகர மக்கள் அனைவருக்கும் வந்துவிட்டால் வளசரவாக்கம், பள்ளிக்கரணை போன்ற இடங்களில் பெருமளவு குப்பைகளைக் கொட்டி நிலத்தைப் பாழாக்க வேண்டிய அவசியம் இருக்காது.சென்னை சிங்காரச் சென்னையாக மாறிவிடும்.

by Swathi   on 25 May 2014  0 Comments
Tags: எக்ஸ்னோரா   Excellent Novel Radical   இந்தியன் ஓவர்சீஸ் வங்கி   ஏழாவது அறிவு   Exnora   Exnora MB Nirmal     
 தொடர்புடையவை-Related Articles
எக்ஸ்னோரா எம்.பி.நிர்மல் - ஒரு தனி மரத்தொப்பு எக்ஸ்னோரா எம்.பி.நிர்மல் - ஒரு தனி மரத்தொப்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணிவாய்ப்பு !! இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணிவாய்ப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.