LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !!

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை என்பது, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு. [FeTNA - Federation of Tamil Sangams of North America]. இந்தப் பேரவை அனைத்து தமிழ்ச் சங்கங்களையும் இணைத்து ஒவ்வோரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் வாரம், அமெரிக்காவின் ஏதாவது ஒரு மாநிலத்தில் உள்ள நகரத்தில் இரண்டு நாள் தமிழ் விழாவாகக் கொண்டாடுகிறது.
 
இந்த ஆண்டு கலிபோர்னியா மாநிலத்தில் சான் ஓசே [San Jose] நகரில் சீரும் சிறப்புமாக பேரவை தமிழ் விழா நடந்துள்ளது. இந்தத் தமிழர் மாநாட்டில் கிட்டத்தட்ட 2500 தமிழர்கள் கலந்து கொண்டார்கள். தமிழ்ச்சங்கப் பேரவை என்பது "அமெரிக்க வாழ்தமிழர்களின் முகவரி" எனலாம். இந்தப் பேரவை விழாவில் தமிழ் நாட்டில் இருந்து தமிழ் அறிஞர்கள், திரைத் துறை கலைஞர்கள், தமிழ் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.  
 
தமிழ்ச்சங்கப் பேரவையின் தலையாய நோக்கம், அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் நம் தாய்மொழி தமிழின் சிறப்பை, தமிழர்களின் கலையை, பண்பாட்டை எளிய முறையில் இயல், இசை, நாடகம் மூலம் பரப்புவது.
 
இரண்டு நாள் முழு நிகழ்வில் ஏராளமான தமிழர் சார்ந்த நிகழ்ச்சிகள் அரங்கு ஏறியது. முதல் நாள் தமிழ்த் தாய் வாழ்த்து, வரவேற்பு பாடலோடு, திருக்குறள் மறை ஓதியும், பாரதியார் மற்றும் சங்க இலக்கிய பாடல்கள், பாரதிதாசனின் தமிழ்ப் பாடல்களும்வளைகுடா தமிழ் மன்றத்தின் குழந்தைகள் மிக அருமையாக அழகு தமிழில் பாடி ஆடினார்கள். இந்த முதல் நிகழ்ச்சிகளே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
 
இந்த விழாவில் நிறையச் சிறப்பு அம்சம் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகள் கலந்து கொண்ட “திருக்குறள் தமிழ்த் தேனீ” நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது. பல அமெரிக்க மாநில தமிழ்ச் சங்கங்களில் முதல் நிலை போட்டியில் வெற்றி பெற்று,இறுதிப் போட்டி பேரவை மேடையில், குறளின் பொருளை சொல்ல, குழந்தைகள் குறளையும், அதன் அதிகாரத்தையும் பதில் சொல்லும் பொழுது, பார்வையாளர்கள் அரங்கு நிறைந்த கரவொலியோடு எண்ணற்ற மகிழ்ச்சியும் அடைந்தார்கள். இந்தப்போட்டியில் பங்குப் பெற்ற ஐந்து குழந்தைகளும் பரிசுகளைப் பெற்றார்கள், முதல் பரிசு பெற்ற பெண் குழந்தை ஈழத்தைச் சார்ந்த பெண். இந்தக் குழந்தை ஐபேட்(iPad) கருவியைப் பரிசாகப் பெற்றார்.
 
இந்த ஆண்டு பேரவை விழாவின் மிக முக்கிய அம்சம் - அரசியல் சிறப்பு பேச்சாளர்.
பேரவையில் தமிழகத்து சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் கலந்து பலர் உரையாற்றி இருக்கிறார்கள். ஆனால் இந்த வருடம் சிறப்பு விருந்தினராக “இலங்கை வடக்கு மாகாண முதல்வர், மாண்புமிகு நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன்” கலந்து கொண்டு விழாவில் மிக அருமையான உரையை நிகழ்த்தினார். தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் நிலையாமையைத் தக்கவைத்து கொள்ளுதல், அதன் தொடர்ச்சியாக தமிழர்களின் எதிர்கால நலன் எவ்வளவு முக்கியம் மற்றும் காலத்தின் கட்டாயம் என்பதனை இரத்தினச் சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். நீதியரசர், முதல் அமைச்சர் - இலங்கையில் நடந்தது “ஒரு இனப் படுகொலையே” என்பதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி இருப்பதை - அமெரிக்க வாழ் தமிழர்கள் ஏகோபித்த மனதோடு பாராட்டினார்கள். ஒரு முதல் அமைச்சர் அதிகாரத்தில் அவரால் தமிழர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதனை நிச்சயம் செய்வேன் என்று நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் முன்பு பேசிய பொழுது, ஊடகங்களில் அவரது பேச்சு பரவலாக கவனிக்கப் படுகிறது. இவருடைய முதல்வர் பதவியால் நிச்சயம் ஈழ மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட வாய்ப்பு உண்டு. முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களும் பேரவையின் தமிழ் ஆர்வம், தமிழ் மக்களின் மீது உள்ள அளவற்ற பற்றை நேரில் கண்டு தெரிந்துகொண்டார். அதன் மகிழ்ச்சியை தனது பேச்சில் தெரிவிக்கவும் செய்தார்.
 
பேரவையின் முக்கியமான நேரம் - தமிழ் வரலாறு மற்றும் பண்பாடு - சிறந்த அறிஞர்களைச் சிறப்பித்தல். இந்த வருடம் முதன் முறையாக விரிகுடாப் பகுதியில் [சான் ஓசே - கலிபோர்னியாவில்] இந்தத் தமிழர் விழா சீரும் சிறப்புமாக நடந்து முடிந்துஇருக்கிறது. தமிழ்ச்சங்கப் பேரவை என்பது வெறும் விழாவில் கூடி கலையும் கூட்டம் அல்ல என்பதும், தமிழ் உலகிற்கு தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து நல்லது செய்து வரும் ஒரு உன்னதமான அமைப்பு தமிழ்ச் சங்கப் பேரவை என்பதும், அதன் விழாக்களில் சில நிகழ்ச்சிகளை மிகக் கவனமாக ஊற்று நோக்கினால் அதன் முக்கியத்துவத்தை நன்கு உணர முடியும்.
 
சிறந்த கல்வி ஆளுமைகளை, பெரும் புரவலர்களை வரவழைத்து அவர்களின் தமிழ் பணி, தமிழ்க் கொடையை - அமெரிக்க தமிழர்களுக்கு அடையாளப் படுத்தி அவர்களுக்கு சிறப்பு செய்யும் பணியைத் தொடர்ந்து செய்வது தமிழ்ச்சங்கப் பேரவை. இந்தஆண்டு, முனைவர் ராஜம் அவர்களை வரவழைத்து மரியாதை செய்தது பேரவை. முனைவர் ராஜம் அவர்களின் உரை பரவலாக கவனிக்கப் பட்டது. தன்னுடைய பேச்சின் பொழுது, தாய் மொழி எவ்வளவு முக்கியம் என்பதும், நமது வீட்டில் வளரும் குழந்தைகள் மருத்துவராக, பொறியாளராக அல்லது எந்தத் துறை எடுத்தாலும், இல்லத்தில், நமது உறவினர்களோடு தமிழில் உரையாடுவது மிக மிக முக்கியம் என்றார் - இது மொழி வளர்ச்சிக்கு முக்கிய பாதை என்றார். அதை விட முனைவர் ராஜம் சொன்னத்தில் எல்லோர் மனதை மிக மிக பாதித்தது என்னவென்றால் - எனக்கு இங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் பொன்னாடை, பட்டயம், மாலைகள் இவை எல்லாம் என்னோடு இறுதிவரை வராது - என் எழுத்துகளே கடைசி வரை நிற்கும் என்றும்!  நமக்கு பிறகுநமது பணியே பேசப் பட வேண்டும் என்று சொன்னார்.
 
மேலும் அவர் ” ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் வர இருக்கும் தமிழ் இருக்கைக்கு“ தன்னிடம் உள்ள நிதியைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் தில்லை குமரனிடம் கொடுத்து உதவினார். தமிழ் நாட்டில் இருந்து நல்ல மொழி ஆளுமை உள்ள, முனைவர் பட்டம்பெற்ற தமிழ் ஆசிரியரை - அந்தப் பதவிக்கு வர வழைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
 
பேரவையின் அடுத்த மிக முக்கியமான நிகழ்வு அமெரிக்கா - ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை !!!!  வைதேகி ஹெர்பர்ட்.ஹாவாய் தீவைச் சேர்ந்தவர். சங்க இலக்கியங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். ஒருபல்கலை கழகம் செய்யும் பணியைத் தனி ஒரு ஆளாக அனைத்து சங்க இலக்கியத்தையும் ஆங்கிலத்தில் / எளிமையான தமிழில் மொழி பெயர்த்துள்ளார் வைதேகி. வைதேகி மற்றும் சில கல்வியாளர்கள் உள்ளிட்ட ஒரு குழு ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் முன் அனுமதி பெற்று, தமிழ் பயிற்றுவிக்க ஒரு தமிழ் பேராசியர் வேண்டும் என்று வைத்த கோரிக்கைக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்கிய மகிழ்ச்சியான செய்தியை பேரவை மேடையில் அறிவித்தார்.

இந்த சீரிய தமிழ் இருக்கைக்கு பல்கலைக் கழகத்திற்கு ஆறு மில்லியன் டாலர்கள் முன் பணமாக கட்ட வேண்டும். இரண்டு தனி நபர்கள் இணைந்து ஒரு மில்லியன் கொடுக்க விருப்பம் தெரிவித்ததை மேடையில் அறிவித்தார். பலத்த கரவொலி. மீதி ஐந்து மில்லியன் பணத்தை நாம் எல்லோரும் சேர்ந்து பல்கலைக்கழகத்திற்குச் செலுத்த வேண்டியது நமது கடமை. நம் பிள்ளைகள் அமெரிக்காவில் இருந்தாலும், நமது தாய்மொழி தமிழைப் படிக்க நாம் செய்யும் பெரும் முயற்சி இது என்றார். இன்னும் இரண்டுஆண்டுகளில் மீதம் உள்ள 5 மில்லியன் டாலர்கள் சேர்க்க வேண்டும்.
 
பேரவை விழாவில் கலை சார்ந்த எண்ணற்ற நபர்கள் வந்தாலும், ஒடுக்கப் பட்ட, உரிமைகள் மறுக்கப் பட்ட கலைஞர்களை அழைத்து விழாவில் அவரது கலைகளைக் கேட்டு ரசித்து, அவர்களை மரியாதையும் செய்யும் பழக்கம் பேரவைக்கு உண்டு. இதுபேரவைக்கு பெருமையும் கூட. தமிழ் நாட்டில் தமிழ் இசையில் மிகப் பெரும் பாடகர்களை வரவழைத்தும் பேரவை மரியாதை செய்து இருக்கிறது. நித்யஸ்ரீ மகாதேவன், சுதா ரகுநாதன், இந்த ஆண்டு முனைவர் செளம்யா என்று பலரை. ஆனால் இந்த ஆண்டும் வழக்கம் போலவே ஒரே ஒரு பாடலில் உச்சம் தொட்ட “மகிழினி மணிமாறனை” வரவழைத்து மரியாதை செய்து இருக்கிறது பேரவை. தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் ஒரு குப்பத்தில் பிறந்த பெண் பாடகரை - அமெரிக்கமேடைகளில் இன்று!!!
 
மகிழினி தனது எளிமையான கிராமத்து குரலில், எங்கோ பிறந்த என்னை, இப்படி மாபெரும் மேடைகளில் மரியாதை செய்ததை நான் என்றென்றும் மறவேன் என்றும், இந்த இத்தனை புகழுக்கும் காரணமான எனது இசை அமைப்பாளர் “டி இமானுக்கு”நன்றியும் மறக்காமல் கூறினார் !!!  இசை நிகழ்ச்சியில் - ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கு இணங்க தொடர்ந்து அதே பாடலை இரண்டு முறை பாடினார் மகிழினி - இது பேரவைக்கு புது அனுபவம்!!!
 
கவி மாமணி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம் பலரின் கவனத்தை ஈர்த்தது. அழகிய செந்தமிழில் அற்புதமான முறையில் கவியரங்கத்தை நடத்தி கரவொலிகளை அள்ளினார். கவியரங்கத்தில் பங்குபெற்றோர் மிகவும் அழகாக தமதுகவிதைகளை வடித்தார்கள். அதற்கு மிகவும் செழிப்பாக விளக்கம் வழங்கினார் கவி மாமணி அப்துல் காதர் அவர்கள்.
 
இவை மட்டுமல்லாது வேறும் பல நிகழ்ச்சிகள் மக்கள் கவனத்தை ஈர்த்தது - இலக்கிய வினாடி வினா, கருத்துக்களம், பேச்சரங்கம்- போன்றவை.
 
இந்த விழாவின் மற்றொரு சிறப்பு நிகழ்ச்சியாக இசைப்பேரறிஞர் பாபநாசம் சிவன் அவர்களுக்கு ஒரு நினைவு அஞ்சலி பாமாலையாக வழங்கப்பட்டது. 30 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வாய்பாட்டு, வாத்தியம் (வயலின், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம்,கஞ்சிரா) மூலம் ஒரு அற்புதமான இசை நிகழ்ச்சியை வழங்கினார்கள். இந்த இசை நிகழ்ச்சியைச் சுகி ஷிவா, வித்துவான் முல்லைவாசல் சந்திரமௌலி தயாரித்து வழங்கினார்கள்.
 
தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் கணீரென்று குரலில் தமிழிசை பாடல்களை முனைவர் செளம்யா பொறுமையாக கதைகளை விளக்கி, பாபநாசம் சிவன் பாடல்கள், மற்றும் நந்தனார் சரித்திர பாடல்களைப் பாடினார். இவரது பாடல்களுக்கு வித்துவான்முல்லைவாசல் சந்திரமௌலி வயலின் வாசித்தும் வித்துவான் வினோத் சீதாராம் மிருதங்கம் வாசித்தும் இசை நிகழ்ச்சியை மேம்படுத்தினார்கள். பார்வையாளர்கள் மிக மிக ரசித்துக் கேட்டார்கள்.
 
அமரர் கல்கியின் காவியங்களில் ஒன்றான சிவகாமியின் சபதம், நாடக வடிவில் சிறப்பாக அரங்கேறியது. பாகிரதி சேஷப்பன் எழுத்து வடிவத்தில் ஸ்ரீதர் மைனர் இசை அமைப்பில் இடம்பெற்று பலரின் கரவொலிகளை அள்ளியது. இதில் வளைகுடாப்பகுதிப் பகுதியைச் சேர்ந்த பல கலைஞர்கள் பங்காற்றினார்கள்.
 
பேரவை விழாவில் மற்றொரு சிறப்பு பேச்சாளர் இளைஞர், சமூக ஆர்வலர் பொறியாளர்  பூவுலகின் சுந்தரராஜன். இவர் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாய இயக்கத்தின் பெயர் “பூ உலகின் நண்பர்கள்” - இந்தஅமைப்பில் ஏராளமான இளைஞர்கள் உண்மையான சமுதாய மறுமலர்ச்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தத் தொடர்ந்து தன்னலம் பாரமல் உழைத்து வருகிறார்கள். இயற்கையோடு தமிழன் எப்படிச் சேர்ந்து வாழ்ந்தான் எனவும், இயற்கையை எப்படி நாம் பாழ்படுத்திவிட்டோம் எனவும், இயற்கையின் அரிய படைப்பான ஏரி, குளம், நீர் ஊற்று, நீர் வீழ்ச்சி எவ்வாறு மனித வாழ்க்கைக்கு அவசியம் எனவும், ஒரு மனிதன் தன் குடும்பத்தோடு வாழ்வதற்கு போதுமான இடத்தை விட்டுவிட்டு, நிறைய இயற்கைக்குசொந்தமான இடத்தை அழித்து, தன் சொந்த வாழ்வை முன்னிலை படுத்தி, இயற்கையை பாழ் படுத்துவது சமுதாயத்திற்கு முரணான செயல் என்றும், கூடன் குளம் அணு உலையால் கன்னியகுமரி மாவட்ட மக்களுக்குப் பாதிப்பு என்றும் தன்னுடையசிற்றுரையில் பகிர்ந்து கொண்டார். இவரது பேச்சு பார்வையாளர்களை மிகவும் சிந்திக்க வைத்தது.
 
விழாவின் மற்றொரு முக்கிய அம்சம் – “சங்கங்களின் சங்கமம்” - அணிவகுப்பு. அமெரிக்காவின் பல மாநிலங்கள் வாசிங்டன் வடக்கு, மற்றும் தெற்கு, டல்லஸ், கரலினா, பென்சில்வேனியா, நியூயார்க், நியூசெர்சி, கனெடிக்டெட், சிகாகோ, செயிண்ட்லூயிஸ், அட்லாண்டா, மினசோட்டா, சாக்ரமேண்டோ, கனடா மற்றும் வளைகுடா தமிழ் மன்றத்தின் அணி வகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படி பரவலான தமிழ்ச் சங்கங்கள் - பேரவையின் ஒரு குடையின் கீழ் ஒன்றாகச் சேர்வதுஅனைவருக்கும் மிக மன மகிழ்ச்சியைக் கொடுத்தது.
 
சங்கங்களின் சங்கமம் நேரத்தில் நடைபெற்ற திருக்குறள் சார்ந்த நடனம், மரபுக் கலைகள் - கோலாட்டம், காவடியாட்டம், சிலம்பம் அனைத்தும் மிக துல்லியமாக நடைபெற்று மக்கள் மனதைக் கவர்ந்தன. இந்த நாட்டில் பிறந்த நம் வீட்டுக் குழந்தைகள்இப்படிப்பட்ட மரபுக் கலைகளை முன் எடுத்து ஆடுவது என்பது மிகப் போற்றுதலுக்கு உரிய விடயம்.
 
தமிழ்நாட்டில் வந்து இருந்த மற்றொரு பேச்சாளர் சுமதிஸ்ரீ. இவரது தலைமையில் ”மொழியா, கலையா” என்ற தலைப்பில் சிறப்பான கருத்தரங்கம் இருந்தது. இரண்டு அணியில் உள்ளவர்களும் மொழியைப் பற்றியும், கலையைப் பற்றியும் மிக நுண்ணியகருத்துகளை எடுத்துரைத்தனர். நடுவர் சுமதிஸ்ரீ கலையை விட மொழி உணர்வு முக்கியம் என்பதை சில எடுத்துக்காட்டுகளோடு பதில் அளித்து முடிவுரை வழங்கினார்...அவரோடு தியாகராசர் கல்லூரி தமிழ் ஆசிரியர் முனைவர் பேச்சிமுத்துவும் தமிழனின்மொழி உணர்வு மற்றும் கலை உணர்வைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
 
பேரவையில் சிறந்த குறும்படம், திரைப்படம் மற்றும் புகைப்பட விருதுகள் வழங்கப்பட்டது.
 
பேரவை தமிழ் விழாவின் இரண்டாவது நாளில் ஹரிசரண் மற்றும் பூஜா, ரோஹிணி, ஆலாப் ராஜ் திரை இசைப் பாடல்கள் கச்சேரி அருமையாக இருந்தது. அதிலும் குறிப்பாக இளையராசா பாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அறிவிப்பாளர் B. H. அப்துல் ஹமீது அவர்களின்கம்பீர தொனியும் அரங்கத்தை அதிர வைத்தது.
 
தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டின் முதன் முறையாகக் கிட்டத்தட்ட 600 மேற்பட்டோர் தமிழ் தொழில் முனைவர் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து, படித்து, வேலைப் பார்த்து விட்டு, தொழில் தொடங்கி - பலவெற்றிகளைக் குவித்த இளைஞர்கள் பலர் கலந்து கொண்டார்கள்...தமிழகத்தில் இருந்து கரு.முத்து கண்ணன் - தியாகராசர் பொறியியல் கல்லூரி தாளாளர் மற்றும் பெரும் தொழில் அதிபர் கலந்து கொண்டு, தொழில் முனைவோர் கூட்டத்தைசிறப்பித்தார்.  புதிய தொழில் தொடங்கிப் பல கோடிகள் சம்பாதிக்கவேண்டும் என்பது உங்கள் இலக்காக இருக்க கூடாது, பலருக்கும் உதவ வேண்டும் என்பது உங்களது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றார்.
 
அடுத்த ஆண்டு தமிழ்ச்சங்கப் பேரவை விழா நியூசெர்சி மாநிலத்தில் நடைபெறவுள்ளது. அமெரிக்க வாழ் தமிழர்கள் ஒருமுறை பேரவை விழாவில் கலந்து கொண்டால் - பேரவையின் சீரிய தமிழ் சமுதாய பணி தெரிய வரும். தமிழ்ச்சங்கப் பேரவை - அடுத்ததலைமுறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக தாய் மொழி தமிழை கடத்துகிறது. இது பேரவைக்கும், அடுத்த தலைமுறைக்கும் பெருமை.
 
வருடா வருடம் தமிழ்ச் சங்கப் பேரவை நிகழ்வை - உலக நாடுகளில் தமிழர்கள் எங்கு எல்லாம் வாழுகிறார்களோ அவர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள், அதிலும் குறிப்பாக நம் தமிழ் நாட்டுத் தமிழர்கள் கவனித்தும், பாராட்டியும் வருகிறார்கள்.
 
தமிழ்ச்சங்கப் பேரவை விழா முதன் முறையாக விரிகுடாப் பகுதியில் நடைபெற்று மிகப் பெரும் வெற்றியடைந்தது என்றால் அது மிகையல்ல.
 
தமிழால் இணைவோம்...அறிவால் உயர்வோம்....
 
வாழ்க தமிழ்...வெல்க தமிழர்....
 
கட்டுரைத் தொகுப்பு: மயிலாடுதுறை சிவா.  

Silambam
by Swathi   on 22 Jul 2015  0 Comments
Tags: வட அமெரிக்க தமிழ்ச்சங்கம்   தமிழ் விழா   வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை   திருக்குறள் தமிழ்த் தேனீ   பூவுலகின் சுந்தரராஜன்   B.H.அப்துல் ஹமீது   North America Tamil Sangam  
 தொடர்புடையவை-Related Articles
வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !! வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !!
2015 பேரவையின் தமிழ் விழா தமிழிசை அறிஞர் பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் நூற்றாணாடு விழாவாகக் கொண்டாடப்படுகிறது 2015 பேரவையின் தமிழ் விழா தமிழிசை அறிஞர் பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் நூற்றாணாடு விழாவாகக் கொண்டாடப்படுகிறது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.