LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தேவாரப் பதிகங்கள்

ஐந்தாம் திருமுறை முதற் பகுதி


5.1 கோயில் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

1    அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே.     5.1.1
2     அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.     5.1.2
3    அரிச்சுற் றவினை யால்அடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.     5.1.3
4    அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோர் அடிமைபூண் டேனுக்கே.     5.1.4
5    ஊனி லாவி உயிர்க்கும் பொழுதெலாம்
நானி லாவி யிருப்பனென் னாதனைத்
தேனி லாவிய சிற்றம் பலவனார்
வானி லாவி யிருக்கவும் வைப்பரே.     5.1.5
6    சிட்டர் வானவர் சென்று வரங்கொளுஞ்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
சிட்டர் பாலணு கான்செறு காலனே.     5.1.6
7    ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர்
திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார்
விருத்த னார்இளை யார்விட முண்டவெம்
அருத்த னார்அடி யாரை அறிவரே.     5.1.7
8    விண்ணி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு
எண்ணி றைந்த இருவர்க் கறிவொணாக்
கண்ணி றைந்த கடிபொழில் அம்பலத்
துண்ணி றைந்துநின் றாடும் ஒருவனே.    5.1.8
9    வில்லைவட் டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லைவட் டம்மதின் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுதல் உண்மையே.    5.1.9
10    நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் னெஞ்சுள் இருக்கவே.     5.1.10
11    மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம் பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற
மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே.
    5.1.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.2 கோயில் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

12     பனைக்கை மும்மத வேழ முரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.    5.2.1
13    தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை
மூர்த்தி யைமுத லாய ஒருவனைப்
பார்த்த னுக்கருள் செய்த சிற்றம்பலக்
கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ.
    5.2.2
14    கட்டும் பாம்புங் கபாலங் கைமான்மறி
இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ.     5.2.3
15    மாணி பால்கறந் தாட்டி வழிபட
நீணு லகெலாம் ஆளக் கொடுத்தவன்
ஆணி யைச்செம்பொன் அம்பலத் துள்நின்ற
தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ.     5.2.4
16    பித்த னைப்பெருங் காடரங் காவுடை
முத்த னைமுளை வெண்மதி சூடியைச்
சித்த னைச்செம்பொன் அம்பலத் துள்நின்ற
அத்த னையடி யேன்மறந் துய்வனோ.     5.2.6
17    நீதி யைநிறை வைமறை நான்குடன்
ஓதி யையொரு வர்க்கு மறிவொணாச்
சோதி யைச்சுடர்ச் செம்பொனின் அம்பலத்
தாதி யையடி யேன்மறந் துய்வனோ.     5.2.6
18    மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணினன்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனார்
செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள்
ஐய னையடி யேன்மறந் துய்வனோ.     5.2.7
19    முழுதும் வானுல கத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை
இழுதை யேன்மறந் தெங்ஙனம் உய்வனோ.     5.2.8
20    காரு லாமலர்க் கொன்றையந் தாரனை
வாரு லாமுலை மங்கை மணாளனைத்
தேரு லாவிய தில்லையுட் கூத்தனை
ஆர்கி லாவமு தைமறந் துய்வனோ.     5.2.9
21    ஓங்கு மால்வரை ஏந்தலுற் றான்சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்
தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப்
பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ.     5.2.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.3 திருவரத்துறை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

22     <ஸ஼ௗ நே௬ஸ஼ ௖௻஦ே௘ ி௯்௱஼
உடலு ளானையொப் பாரியி லாதவெம்
அடலு ளானை அரத்துறை மேவிய
சுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே.     5.3.1
23     கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை
விரும்பொப் பானைவிண் ணோரு மறிகிலா
அரும்பொப் பானை அரத்துறை மேவிய
சுரும்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.     5.3.2
24    ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்மிறை
வேறொப் பானைவிண் ணோரு மறிகிலா
ஆறொப் பானை அரத்துறை மேவிய
ஊறொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.     5.3.3
25    பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா
இரப்பொப் பானை இளமதி சூடிய
அரப்பொப் பானை அரத்துறை மேவிய
சுரப்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.     5.3.4
26    நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர்
மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார்
ஐயொப் பானை அரத்துறை மேவிய
கையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.    5.3.5
27    நிதியொப் பானை நிதியிற் கிழவனை
விதியொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அதியொப் பானை அரத்துறை மேவிய
கதியொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.    5.3.6
28    புனலொப் பானைப் பொருந்தலர் தம்மையே
மினலொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அனலொப் பானை அரத்துறை மேவிய
கனலொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.    5.3.7
29    பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர்
மின்னொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அன்னொப் பானை அரத்துறை மேவிய
தன்னொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.    5.3.8
30    காழி யானைக் கனவிடை யூருமெய்
வாழி யானைவல் லோருமென் றின்னவர்
ஆழி யான்பிர மற்கும் அரத்துறை
ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே.     5.3.9
31    கலையொப் பானைக்கற் றார்க்கோ ரமுதினை
மலையொப் பானை மணிமுடி யூன்றிய
அலையொப் பானை அரத்துறை மேவிய
நிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.     5.3.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.4 திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

32     வட்ட னைமதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு வண்ணா மலையனை
இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும்
அட்ட னையடி யேன்மறந் துய்வனோ.     5.4.1
33    வான னைமதி சூடிய மைந்தனைத்
தேன னைத்திரு வண்ணா மலையனை
ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
ஆன னையடி யேன்மறந் துய்வனோ.     5.4.2
34    மத்த னைமத யானை யுரித்தவெஞ்
சித்த னைத்திரு வண்ணா மலையனை
முத்த னைமுனிந் தார்புர மூன்றெய்த
அத்த னையடி யேன்மறந் துய்வனோ.     5.4.3
35    காற்ற னைக்கலக் கும்வினை போயறத்
தேற்ற னைத்திரு வண்ணா மலையனைக்
கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த
ஆற்ற னையடி யேன்மறந் துய்வனோ.     5.4.4
36    மின்ன னைவினை தீர்த்தெனை யாட்கொண்ட
தென்ன னைத்திரு வண்ணா மலையனை
என்ன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
அன்ன னையடி யேன்மறந் துய்வனோ.     5.4.5
37     மன்ற னைமதி யாதவன் வேள்விமேற்
சென்ற னைத்திரு வண்ணா மலையனை
வென்ற னைவெகுண் டார்புர மூன்றையுங்
கொன்ற னைக்கொடி யேன்மறந் துய்வனோ.    5.4.6
38    வீர னைவிட முண்டனை விண்ணவர்
தீர னைத்திரு வண்ணா மலையனை
ஊர னையுண ரார்புர மூன்றெய்த
ஆர னையடி யேன்மறந் துய்வனோ.     5.4.7
39    கருவி னைக்கடல் வாய்விட முண்டவெந்
திருவி னைத்திரு வண்ணா மலையனை
உருவி னையுண ரார்புர மூன்றெய்த
அருவி னையடி யேன்மறந் துய்வனோ.     5.4.8
40    அருத்த னையர வைந்தலை நாகத்தைத்
திருத்த னைத்திரு வண்ணா மலையனைக்
கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்த
அருத்த னையடி யேன்மறந் துய்வனோ.     5.4.9
41    அரக்க னையல றவ்விர லூன்றிய
திருத்த னைத்திரு வண்ணா மலையனை
இரக்க மாயென் உடலுறு நோய்களைத்
துரக்க னைத்தொண்ட னேன்மறந் துய்வனோ.    5.4.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.5 திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

42     பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்
இட்ட மாக இரந்துண் டுழிதரும்
அட்ட மூர்த்திஅண் ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே.     5.5.1
43    பெற்ற மேறுவர் பெய்பலிக் கென்றவர்
சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும்
அற்றந் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
நற்ற வத்தொடு ஞானத் திருப்பரே.     5.5.2
44    பல்லி லோடுகை யேந்திப் பலஇலம்
ஒல்லை சென்றுணங் கல்கவர் வாரவர்
அல்லல் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
நல்ல வாயின நம்மை அடையுமே.     5.5.3
45    பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர்
ஓடிப் போயினர் செய்வதொன் றென்கொலோ
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போகுநம் மேலை வினைகளே.     5.5.4
46    தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே.     5.5.5
47    கட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
அட்ட மூர்த்திஅண் ணாமலை மேவிய
நட்ட மாடியை நண்ணநன் காகுமே.     5.5.6
48    கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்க ளாடும் பரமனார்
ஆணிப் பொன்னினண் ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.     5.5.7
49    கண்டந் தான்கறுத் தான்காலன் ஆருயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்டத் தோங்கும்அண் ணாமலை கைதொழ
விண்டு போகுநம் மேலை வினைகளே.     5.5.8
50    முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின்
அந்தி வாயொளி யான்றன்அண் ணாமலை
சிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடுங்
கந்த மாமலர் சூடுங் கருத்தனே.     5.5.9
51    மறையி னானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்
உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப்
பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.     5.5.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.6 திருவாரூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

52     எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்
முப்போ தும்பிர மன்றொழ நின்றவன்
செப்போ தும்பொனின் மேனிச் சிவனவன்
அப்போ தைக்கஞ்சல் என்னும்ஆ ரூரனே.     5.6.1
53    சடையின் மேலுமோர் தையலை வைத்தவர்
அடைகி லாவர வைஅரை யார்த்தவர்
படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா
அடைவர் போல்இடு காடர்ஆ ரூரரே.     5.6.2
54    விண்ட வெண்டலை யேகல னாகவே
கொண்ட கம்பலி தேருங் குழகனார்
துண்ட வெண்பிறை வைத்த இறையவர்
அண்ட வாணர்க் கருளும்ஆ ரூரரே.     5.6.3
55    விடையும் ஏறுவர் வெண்டலை யிற்பலி
கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல்
உடையுஞ் சீரை உறைவது காட்டிடை
அடைவர் போல்அரங் காகஆ ரூரரே.     5.6.4
56    துளைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்
வளைக்கை யாளையோர் பாக மகிழ்வெய்தித்
திளைக்குந் திங்கட் சடையிற் திசைமுழு
தளக்கஞ் சிந்தையர் போலும்ஆ ரூரரே.     5.6.5
57    பண்ணின் இன்மொழி யாளையோர் பாகமா
விண்ணி னார்விளங் கும்மதி சூடியே
சுண்ண நீறுமெய்ப் பூசிச் சுடலையின்
அண்ணி யாடுவர் போலும்ஆ ரூரரே.     5.6.6
58    மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறும் இறைவனார்
கட்டு வாங்கங் கனல்மழு மான்றனோ
டட்ட மாம்புய மாகும்ஆ ரூரரே.     5.6.7
59    தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நான்மறை யோதும்ஆ ரூரரே.    5.6.8
60    உண்டு நஞ்சுகண் டத்துள் அடக்கியங்
கிண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்
கொண்ட கோவண ஆடையன் கூரெரி
அண்ட வாணர் அடையும்ஆ ரூரரே.     5.6.9
61    மாலும் நான்முக னும்மறி கிற்கிலார்
கால னாய அவனைக் கடந்திட்டுச்
சூல மான்மழு வேந்திய கையினார்
ஆலம் உண்டழ காயஆ ரூரரே.     5.6.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.7 திருவாரூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

62     கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே.     5.7.1
63    எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்த மில்புகழ் ஆரூர் அரனெறி
சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே.     5.7.2
64    வண்டு லாமலர் கொண்டு வளர்சடைக்
கிண்டை மாலை புனைந்தும் இராப்பகல்
தொண்ட ராகித் தொடர்ந்து விடாதவர்க்
கண்டம் ஆளவும் வைப்பர்ஆ ரூரரே.     5.7.3
65    துன்பெ லாமற நீங்கிச் சுபத்தராய்
என்பெ லாம்நெக்கி ராப்பக லேத்திநின்
றின்ப ராய்நினைந் தென்றும் இடையறா
அன்ப ராமவர்க் கன்பர்ஆ ரூரரே.     5.7.4
66    முருட்டு மெத்தையில் முன்கிடத் தாமுனம்
அரட்டர் ஐவரை ஆசறுத் திட்டுநீர்
முரட்ட டித்தவத் தக்கன்றன் வேள்வியை
அரட்ட டக்கிதன் ஆரூர் அடைமினே.     5.7.5
67    எம்மை யாரிலை யானுமு ளேனலேன்
எம்மை யாரும் இதுசெய வல்லரே
அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற்
கம்மை யாரைத்தந் தார்ஆரூர் ஐயரே.     5.7.6
68    தண்ட ஆளியைத் தக்கன்றன் வேள்வியைச்
செண்ட தாடிய தேவர கண்டனைக்
கண்டு கண்டிவள் காதலித் தன்பதாய்க்
கொண்டி யாயின வாறென்றன் கோதையே.     5.7.7
69    இவண மைப்பல பேசத் தொடங்கினாள்
அவண மன்றெனில் ஆரூர் அரனெனும்
பவணி வீதி விடங்கனைக் கண்டிவள்
தவணி யாயின வாறென்றன் தையலே.     5.7.8
70    நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார்
காரொத் தமிடற் றர்கனல் வாயரா
ஆரத் தர்உறை யும்மணி ஆரூரைத்
தூரத் தேதொழு வார்வினை தூளியே.     5.7.9
71    உள்ள மேயொன் றுறுதி யுரைப்பன்நான்
வெள்ளந் தாங்கு விரிசடை வேதியன்
அள்ளல் நீர்வயல் ஆரூர் அமர்ந்தவெம்
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே.     5.7.10
72    விண்ட மாமலர் மேலுறை வானொடுங்
கொண்டல் வண்ணனுங் கூடி அறிகிலா
அண்ட வாணன்றன் ஆரூர் அடிதொழப்
பண்டை வல்வினை நில்லா பறையுமே.     5.7.11
73    மையு லாவிய கண்டத்தன் அண்டத்தன்
கையு லாவிய சூலத்தன் கண்ணுதல்
ஐயன் ஆரூர் அடிதொழு வார்க்கெலாம்
உய்ய லாமல்லல் ஒன்றிலை காண்மினே.     5.7.12

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.8 திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

74     பாற லைத்த படுவெண் டலையினன்
நீற லைத்தசெம் மேனியன் நேரிழை
கூற லைத்தமெய் கோளர வாட்டிய
ஆற லைத்த சடைஅன்னி யூரரே.     5.8.1
75     பண்டொத் தமொழி யாளையோர் பாகமாய்
இண்டைச் செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர்
கண்டத் தன்கரி யின்னுரி போர்த்தவன்
அண்டத் தப்புறத் தான்அன்னி யூரரே.    5.8.2
76    பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
துரவை யாகத் துடைப்பவர் தம்மிடங்
குரவம் நாறுங் குழலுமை கூறராய்
அரவ மாட்டுவர் போல்அன்னி யூரரே.     5.8.3
77    வேத கீதர்விண் ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
நாதர் நீதியி னாலடி யார்தமக்
காதி யாகிநின் றார்அன்னி யூரரே.     5.8.4
78    எம்பி ரான்இமை யோர்கள் தமக்கெலாம்
இன்ப ராகி இருந்தவெம் மீசனார்
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்
கன்ப ராகிநின் றார்அன்னி யூரரே.     5.8.5
79    வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர்
கந்த மாமலர் சூடுங் கருத்தினர்
சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர்
அந்த ணாளர்கண் டீர்அன்னி யூரரே.     5.8.6
80    ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை யார்குழ லாளையோர் பாகமா
ஆனை யீருரி யார்அன்னி யூரரே.     5.8.7
81    காலை போய்ப்பலி தேர்வர் கண்ணார்நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ்புறங் காடரங் காகவே
ஆலின் கீழறத் தார்அன்னி யூரரே.     5.8.8
82    எரிகொள் மேனியர் என்பணிந் தின்பராய்த்
திரியு மூவெயில் தீயெழச் செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்
கரிய ராகிநின் றார்அன்னி யூரரே.     5.8.9
83    வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும்
அஞ்சு மஞ்சுமோ ராறுநான் கும்மிறப்
பஞ்சின் மெல்விர லாலடர்த் தாயிழை
அஞ்ச லஞ்சலென் றார்அன்னி யூரரே.     5.8.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.9 திருமறைக்காடு - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

84     ஓத மால்கடல் பாவி உலகெலாம்
மாத ரார்வலங் கொண்மறைக் காடரைக்
காதல் செய்து கருதப் படுமவர்
பாத மேத்தப் பறையுநம் பாவமே.     5.9.1
85    பூக்குந் தாழை புறணி அருகெலாம்
ஆக்கந் தானுடை மாமறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி யீர்அடி யார்தமை
நோக்கிக் காண்பது நும்பணி செய்யிலே.     5.9.2
86    புன்னை ஞாழல் புறணி அருகெலாம்
மன்னி னார்வலங் கொண்மறைக் காடரோ
அன்ன மென்னடை யாளையோர் பாகமாச்
சின்ன வேடம் உகப்பது செல்வமே.     5.9.3
87    அட்ட மாமலர் சூடி அடம்பொடு
வட்டப் புன்சடை மாமறைக் காடரோ
நட்ட மாடியும் நான்மறை பாடியும்
இட்ட மாக இருக்கும் இடமிதே.     5.9.4
88    நெய்த லாம்பல் நிறைவயல் சூழ்தரும்
மெய்யி னார்வலங் கொண்மறைக் காடரோ
தையல் பாகங்கொண் டீர்கவர் புன்சடைப்
பைதல் வெண்பிறை பாம்புடன் வைப்பதே.     5.9.5
89    துஞ்சும் போதுந் துயிலின்றி ஏத்துவார்
வஞ்சின் றிவலங் கொண்மறைக் காடரோ
பஞ்சின் மெல்லடிப் பாவை பலிகொணர்ந்
தஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே     5.9.6
90    விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.     5.9.7
91    திருவி னார்செல்வ மல்கு விழாவணி
மருவி னார்வலங் கொண்மறைக் காடரோ
உருவி னாளுமை மங்கையோர் பாகமாய்
மருவி னாய்கங்கை யைச்சென்னி தன்னிலே.    5.9.8
92    சங்கு வந்தலைக் குந்தடங் கானல்வாய்
வங்க மார்வலங் கொண்மறைக் காடரோ
கங்கை செஞ்சடை வைப்பது மன்றியே
அங்கை யில்லனல் ஏந்தல் அழகிதே.     5.9.9
93    குறைக்காட் டான்விட்ட தேர்குத்த மாமலை
இறைக்காட் டியெடுத் தான்றலை ஈரைந்தும்
மறைக்காட் டானிறை ஊன்றலும் வாய்விட்டான்
இறைக்காட் டாயெம் பிரானுனை ஏத்தவே.     5.9.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.10 திருமறைக்காடு - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

94    பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.     5.10.1
95    ஈண்டு செஞ்சடை யாகத்துள் ஈசரோ
மூண்ட கார்முகி லின்முறிக் கண்டரோ
ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும்
நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே.     5.10.2
96    அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ
துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
பட்டங் கட்டிய சென்னிப் பரமரோ
சட்ட விக்கத வந்திறப் பிம்மினே.     5.10.3
97    அரிய நான்மறை யோதிய நாவரோ
பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ
பெரிய வான்கத வம்பிரி விக்கவே.     5.10.4
98    மலையில் நீடிருக் கும்மறைக் காடரோ
கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ
விலையில் மாமணி வண்ண வுருவரோ
தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே.     5.10.5
99    பூக்குந் தாழை புறணி அருகெலாம்
ஆக்குந் தண்பொழில் சூழ்மறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி யீர்அடி கேள்உமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே.     5.10.6
100    வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ
அந்த மில்லி அணிமறைக் காடரோ
எந்தை நீயடி யார்வந் திறைஞ்சிட
இந்த மாக்கத வம்பிணி நீக்குமே.     5.10.7
101    ஆறு சூடும் அணிமறைக் காடரோ
கூறு மாதுமைக் கீந்த குழகரோ
ஏற தேறிய எம்பெரு மானிந்த
மாறி லாக்கத வம்வலி நீக்குமே.     5.10.8
102    சுண்ண வெண்பொடிப் பூசுஞ் சுவண்டரோ
பண்ணி யேறுகந் தேறும் பரமரோ
அண்ண லாதி அணிமறைக் காடரோ
திண்ண மாக்கத வந்திறப் பிம்மினே.     5.10.9
103    விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.     5.10.10
104    அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்
இரக்க மொன்றிலீர் எம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க விக்கத வந்திறப் பிம்மினே.     5.10.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.11 திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

105     தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்
கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே.     5.11.1
106    வந்த னையடைக் கும்மடித் தொண்டர்கள்
பந்த னைசெய்து பாவிக்க நின்றவன்
சிந்த னைதிருத் துந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே.     5.11.2
107    பஞ்ச மந்திர மோதும் பரமனார்
அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே.     5.11.3
108    நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம்
வேறு வேறு விரித்த சடையிடை
ஆறு கொண்டுகந் தான்றிரு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.    5.11.4
109    வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ணக் கனல்விரித் தாடுவர்
செவ்வ வண்ணந் திகழ்திரு மீயச்சூர்
எவ்வ வண்ணம் பிரானிளங் கோயிலே.    5.11.5
110     பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும்
பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று
மின்னு மேகலை யாளொடு மீயச்சூர்
இன்ன நாள்அக லாரிளங் கோயிலே.    5.11.6
111    படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன்
சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் ணீற்றினன்
விடைகொ ளூர்தியி னான்றிரு மீயச்சூர்
இடைகொண் டேத்தநின் றாரிளங் கோயிலே.    5.11.7
112    ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்
வேறு கொண்டதோர் வேடத்த ராகிலுங்
கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.     5.11.8
113    வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர்
பூதத் தானென்பர் புண்ணியன் றன்னையே
கீதத் தான்கிள ருந்திரு மீயச்சூர்
ஏதந் தீர்க்கநின் றாரிளங் கோயிலே.     5.11.9
114     கடுக்கண் டன்கயி லாய மலைதனை
எடுக்க லுற்ற இராவணன் ஈடற
விடுக்க ணின்றி வெகுண்டவன் மீயச்சூர்
இடுக்கண் தீர்க்கநின் றாரிளங் கோயிலே.     5.11.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.12 திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

115     கரைந்து கைதொழு வாரையுங் காதலன்
வரைந்து வைதெழு வாரையும் வாடலன்
நிரந்த பாரிடத் தோடவர் நித்தலும்
விரைந்து போவது வீழி மிழலைக்கே.    5.12.1
116    ஏற்று வெல்கொடி ஈசன்ற னாதிரை
நாற்றஞ் சூடுவர் நன்னறுந் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்
வேற்றுக் கோலங்கொள் வீழி மிழலையே.     5.12.2
117    புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான்
வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான்
நினைய நின்றவன் ஈசனை யேயெனா
வினையி லார்தொழும் வீழி மிழலையே.     5.12.3
118    மாடத் தாடு மனத்துடன் வைத்தவர்
கோடத் தார்குருக் கேத்திரத் தார்பலர்
பாடத் தார்பழிப் பார்பழிப் பல்லதோர்
வேடத் தார்தொழும் வீழி மிழலையே.     5.12.4
119    எடுத்த வெல்கொடி யேறுடை யான்றமர்
உடுப்பர் கோவண முண்பது பிச்சையே
கெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினை
விடுத்துப் போவது வீழி மிழலைக்கே.     5.12.5
120    குழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால்
உழலை யாக்கையை யூணும் உணர்விலீர்
தழலை நீர்மடிக் கொள்ளன்மின் சாற்றினோம்
மிழலை யானடி சாரவிண் ணாள்வரே.     5.12.6
121    தீரன் தீத்திர ளன்சடைத் தங்கிய
நீரன் ஆடிய நீற்றன்வண் டார்கொன்றைத்
தாரன் மாலையன் றண்ணறுங் கண்ணியன்
வீரன் வீழி மிழலை விகிர்தனே.     5.12.7
122    எரியி னாரிறை யாரிடு காட்டிடை
நரியி னார்பரி யாமகிழ் கின்றதோர்
பெரிய னார்தம் பிறப்பொடு சாதலை
விரியி னார்தொழு வீழி மிழலையே.     5.12.8
123    நீண்ட சூழ்சடை மேலோர் நிலாமதி
காண்டு சேவடி மேலோர் கனைகழல்
வேண்டு வாரவர் வீதி புகுந்திலர்
மீண்டும் போவது வீழி மிழலைக்கே.     5.12.9
124    பாலை யாழொடு செவ்வழி பண்கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலை யாரழல் அந்தண ராகுதி
வேலை யார்தொழும் வீழி மிழலையே.     5.12.10
125    மழலை யேற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்தெடுத் தான்முடி தோளிறக்
கழல்கொள் காலிற் றிருவிர லூன்றலும்
மிழலை யானடி வாழ்கென விட்டதே.     5.12.11
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.13 திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

126     என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல்
நன்பொ னேநலந் தீங்கறி வொன்றிலேன்
செம்பொ னேதிரு வீழி மிழலையுள்
அன்ப னேயடி யேனைக் குறிக்கொளே.     5.13.1
127    கண்ணி னாற்களி கூரக்கை யாற்றொழு
தெண்ணு மாறறி யாதிளைப் பேன்றனை
விண்ணு ளார்தொழும் வீழி மிழலையுள்
அண்ண லேயடி யேனைக் குறிக்கொளே.     5.13.2
128    ஞால மேவிசும் பேநலந் தீமையே
கால மேகருத் தேகருத் தாற்றொழுஞ்
சீல மேதிரு வீழி மிழலையுள்
கோல மேயடி யேனைக் குறிக்கொளே.     5.13.3
129    முத்த னேமுதல் வாமுகி ழும்முளை
ஒத்த னேயொரு வாவுரு வாகிய
சித்த னேதிரு வீழி மிழலையுள்
அத்த னேயடி யேனைக் குறிக்கொளே.     5.13.4
130    கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம்
ஒருவ னேஉயிர்ப் பாய்உணர் வாய்நின்ற
திருவ னேதிரு வீழி மிழலையுள்
குருவ னேயடி யேனைக் குறிக்கொளே.    5.13.5
131    காத்த னேபொழி லேழையுங் காதலால்
ஆத்த னேஅம ரர்க்கயன் றன்றலை
சேர்த்த னேதிரு வீழி மிழலையுள்
கூத்த னேயடி யேனைக் குறிகொளே.     5.13.6
132    நீதி வானவர் நித்தல் நியமஞ்செய்
தோதி வானவ ரும்முண ராததோர்
வேதி யாவிகிர் தாதிரு வீழியுள்
ஆதி யேயடி யேனைக் குறிக்கொளே.     5.13.7
133    பழகி நின்னடி சூடிய பாலனைக்
கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய
அழக னேயணி வீழி மிழலையுள்
குழக னேயடி யேனைக் குறிக்கொளே.     5.13.8
134    அண்ட வானவர் கூடிக் கடைந்தநஞ்
சுண்ட வானவ னேஉணர் வொன்றிலேன்
விண்ட வான்பொழில் வீழி மிழலையுள்
கொண்ட னேயடி யேனைக் குறிக்கொளே.     5.13.9
135    ஒருத்தன் ஓங்கலைத் தாங்கலுற் றானுரம்
வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னிய
திருத்த னேதிரு வீழி மிழலையுள்
அருத்த னேயடி யேனைக் குறிக்கொளே.     5.13.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.14 திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

136    பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈச னெம்பெரு மான்இடை மருதினிற்
பூச நாம்புகு தும்புன லாடவே.     5.14.1
137    மறையின் நாண்மலர் கொண்டடி வானவர்
முறையி னான்முனி கள்வழி பாடுசெய்
இறைவன் எம்பெரு மான்இடை மருதினில்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.     5.14.2
138    கொன்றை மாலையுங் கூவிள மத்தமுஞ்
சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்
என்று மெந்தை பிரான்இடை மருதினை
நன்று கைதொழு வார்வினை நாசமே.     5.14.3
139    இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும்
எம்மை யாளும் இடைமரு தன்கழல்
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே.     5.14.4
140    வண்ட ணைந்தன வன்னியுங் கொன்றையுங்
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனார்
எண்டி சைக்கும் இடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே.     5.14.5
141    ஏற தேறும் இடைமரு தீசனார்
கூறு வார்வினை தீர்க்குங் குழகனார்
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்
கூறி யூறி உருகுமென் உள்ளமே.     5.14.6
142    விண்ணு ளாரும் விரும்பப் படுவர்
மண்ணு ளாரும் மதிக்கப் படுபவர்
எண்ணி னார்பொழில் சூழிடை மருதினை
நண்ணி னாரைநண் ணாவினை நாசமே.     5.14.7
143    வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடுங் கருத்தனார்
எந்தை யென்னிடை மருதினில் ஈசனைச்
சிந்தை யால்நினை வார்வினை தேயுமே.     5.14.8
144    வேத மோதும் விரிசடை அண்ணலார்
பூதம் பாடநின் றாடும் புனிதனார்
ஏதந் தீர்க்கும் இடைமரு தாவென்று
பாத மேத்தப் பறையுநம் பாவமே.    5.14.9
145    கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற் பாவைநல் லாரினுந்
தனிமு டிகவித் தாளு மரசினும்
இனியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே.    5.14.10
146    முற்றி லாமதி சூடும் முதல்வனார்
ஒற்றி னார்மலை யாலரக் கன்முடி
எற்றி னார்கொடி யாரிடை மருதினைப்
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே.     5.14.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.15 திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

147    பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் வைகும் அயலெலாம்
இறைவன் எங்கள் பிரானிடை மருதினில்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.     5.15.1
148    மனத்துள் மாயனை மாசறு சோதியைப்
புனிற்றுப் பிள்ளைவெள் ளைம்மதி சூடியை
எனக்குத் தாயையெம் மானிடை மருதனை
நினைத்திட் டூறி நிறைந்ததென் னுள்ளமே.     5.15.2
149    வண்ட ணைந்தன வன்னியும் மத்தமுங்
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனை
எண்டி சைக்கும் இடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே.     5.15.3
150    துணையி லாமையிற் றூங்கிருட் பேய்களோ
டணைய லாவதெ மக்கரி தேயெனா
இணையி லாஇடை மாமரு தில்லெழு
பணையி லாகமஞ் சொல்லுந்தன் பாங்கிக்கே.    5.15.4
151    மண்ணை யுண்டமால் காணான் மலரடி
விண்ணை விண்டயன் காணான் வியன்முடி
மொண்ணை மாமரு தாவென்றென் மொய்குழல்
பண்ணை யாயமுந் தானும் பயிலுமே.     5.15.5
152    மங்கை காணக் கொடார்மண மாலையைக்
கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை
நங்கை மீர்இடை மருதரிந் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே.     5.15.6

இப்பதிகத்தில் 7,8,9,10,11-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.16 திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

153    மறையு மோதுவர் மான்மறிக் கையினர்
கறைகொள் கண்ட முடைய கபாலியார்
துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்
பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே.     5.16.1
154    கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும்
வணக்கி லாநெறி கண்டுகொண் டாரையுந்
தணக்கு வார்தணிப் பாரெப் பொருளையும்
பிணக்கு வாரவர் பேரெயி லாளரே.     5.16.2
155    சொரிவிப் பார்மழை சூழ்கதிர்த் திங்களை
விரிவிப் பார்வெயிற் பட்ட விளங்கொளி
எரிவிப் பார்தணிப் பாரெப் பொருளையும்
பிரிவிப் பாரவர் பேரெயி லாளரே.     5.16.3
156    செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்
உறுவிப் பார்பல பத்தர்கள் ஊழ்வினை
அறுவிப் பாரது வன்றியும் நல்வினை
பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே.     5.16.4
157    மற்றை யாரறி யார்மழு வாளினார்
பற்றி யாட்டியோர் ஐந்தலைப் பாம்பரைச்
சுற்றி யாரவர் தூநெறி யால்மிகு
பெற்றி யாரவர் பேரெயி லாளரே.     5.16.5
158    திருக்கு வார்குழற் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழி யாற்றனை யேத்துவார்
சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றறப்
பெருக்கு வாரவர் பேரெயி லாளரே.     5.16.6
159    முன்னை யார்மயி லூர்தி முருகவேள்
தன்னை யாரெனிற் றானோர் தலைமகன்
என்னை யாளும் இறையவ னெம்பிரான்
பின்னை யாரவர் பேரெயி லாளரே.     5.16.7
160    உழைத்துந் துள்ளியும் உள்ளத்து ளேயுரு
இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல்
அழைக்கும் அன்பின ராய அடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே.     5.16.8
161    நீரு லாநிமிர் புன்சடை யாவெனா
ஏரு லாவனங் கன்றிறல் வாட்டிய
வாரு லாவன மென்முலை யாளொடும்
பேரு ளாரவர் பேரெயி லாளரே.     5.16.9
162    பாணி யார்படு தம்பெயர்ந் தாடுவர்
தூணி யார்விச யற்கருள் செய்தவர்
மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன்
பேணி யாரவர் பேரெயி லாளரே.     5.16.10
163    மதத்த வாளரக் கன்மணிப் புட்பகஞ்
சிதைக்க வேதிரு மாமலைக் கீழ்ப்புக்குப்
பதைத்தங் கார்த்தெடுத் தான்பத்து நீண்முடி
பிதக்க வூன்றிய பேரெயி லாளரே.     5.16.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.17 திருவெண்ணி - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

164     முத்தி னைப்பவ ளத்தை முளைத்தவெந்
தொத்தி னைச்சுட ரைச்சுடர் போலொளிப்
பித்த னைக்கொலும் நஞ்சினை வானவர்
நித்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.     5.17.1
165    வெண்ணித் தொன்னகர் மேயவெண் டிங்களார்
கண்ணித் தொத்த சடையர் கபாலியார்
எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு
அண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே.     5.17.2
166    காற்றி னைக்கன லைக்கதிர் மாமணி
நீற்றி னைநினைப் பார்வினை நீக்கிடுங்
கூற்றி னையுதைத் திட்ட குணமுடை
வீற்றி னைநெரு நற்கண்ட வெண்ணியே.     5.17.3
167    நல்ல னைத்திகழ் நான்மறை யோதியைச்
சொல்ல னைச்சுட ரைச்சுடர் போலொளிர்
கல்ல னைக்கடி மாமதில் மூன்றெய்த
வில்ல னைநெரு நற்கண்ட வெண்ணியே.     5.17.4
168    சுடரைப் போலொளிர் சுண்ணவெண் ணீற்றனை
அடருஞ் சென்னியில் வைத்த அமுதினைப்
படருஞ் செஞ்சடைப் பான்மதி சூடியை
இடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே.    5.17.5
169    பூத நாதனைப் பூம்புக லூரனைத்
தாதெ னத்தவ ழும்மதி சூடியை
நாத னைநல்ல நான்மறை யோதியை
வேத னைநெரு நற்கண்ட வெண்ணியே.     5.17.6
170    ஒருத்தி யையொரு பாகத் தடக்கியும்
பொருத்தி யபுனி தன்புரி புன்சடைக்
கருத்த னைக்கறைக் கண்டனைக் கண்ணுதல்
நிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.     5.17.7
171    சடைய னைச்சரி கோவண ஆடைகொண்
டுடைய னையுணர் வார்வினை தீர்த்திடும்
படைய னைமழு வாளொடு பாய்தரும்
விடைய னைநெரு நற்கண்ட வெண்ணியே.     5.17.8
172    பொருப்ப னைப்புன லாளொடு புன்சடை
அருப்ப னையிளந் திங்களங் கண்ணியான்
பருப்ப தம்பர வித்தொழுந் தொண்டர்கள்
விருப்ப னைநெரு நற்கண்ட வெண்ணியே.     5.17.9
173    சூல வஞ்சனை வல்லவெஞ் சுந்தரன்
கோல மாவருள் செய்ததோர் கொள்கையான்
காலன் அஞ்ச வுதைத்திருள் கண்டமாம்
வேலை நஞ்சனைக் கண்டது வெண்ணியே.     5.17.10
174    இலையி னார்கொன்றை சூடிய ஈசனார்
மலையி னாலரக் கன்றிறல் வாட்டினார்
சிலையி னான்மதி லெய்தவன் வெண்ணியைத்
தலையி னாற்றொழு வார்வினை தாவுமே.     5.17.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.18 திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

175    முற்றி லாமுலை யாளிவ ளாகிலும்
அற்றந் தீர்க்கும் அறிவில ளாகிலுங்
கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப்
பெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே.     5.18.1
176    தனகி ருந்ததோர் தன்மைய ராகிலும்
முனகு தீரத் தொழுதெழு மின்களோ
கனகப் புன்சடை யான்கடம் பந்துறை
நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே.     5.18.2
177    ஆரி யந்தமி ழோடிசை யானவன்
கூரி யகுணத் தார்குறி நின்றவன்
காரி கையுடை யான்கடம் பந்துறைச்
சீரி யல்பத்தர் சென்றடை மின்களே.     5.18.3
178    பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
வண்ண நன்மல ரான்பல தேவருங்
கண்ண னும்மறி யான்கடம் பந்துறை
நண்ண நம்வினை யாயின நாசமே.     5.18.4
179    மறைகொண் டமனத் தானை மனத்துளே
நிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவினை தீரத் தொழுமினே.     5.18.5
180    நங்கை பாகம்வைத் தநறுஞ் சோதியைப்
பங்க மின்றிப் பணிந்தெழு மின்களோ
கங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை
அங்க மோதி அரனுறை கின்றதே.     5.18.6
181    அரிய நான்மறை ஆறங்க மாயைந்து
புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன்
கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை
உரிய வாறு நினைமட நெஞ்சமே.     5.18.7
182    பூமென் கோதை உமையொரு பாகனை
ஓமஞ் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தாற்
காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை
நாம மேத்தநந் தீவினை நாசமே.     5.18.8
183    பார ணங்கி வணங்கிப் பணிசெய
நார ணன்பிர மன்னறி யாததோர்
கார ணன்கடம் பந்துறை மேவிய
ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே.     5.18.9
184    நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை
மேலால் நாஞ்செய்த வல்வினை வீடுமே.     5.18.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.19 திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

185     தளருங் கோளர வத்தொடு தண்மதி
வளருங் கோல வளர்சடை யார்க்கிடங்
கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக்
களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே.     5.19.1
186    வெலவ லான்புலன் ஐந்தொடு வேதமுஞ்
சொலவ லான்சுழ லுந்தடு மாற்றமும்
அலவ லான்மனை யார்ந்தமென் றோளியைக்
கலவ லான்கடம் பூர்க்கரக் கோயிலே.     5.19.2
187    பொய்தொ ழாது புலியுரி யோன்பணி
செய்தெ ழாவெழு வார்பணி செய்தெழா
வைதெ ழாதெழு வாரவர் எள்கநீர்
கைதொ ழாவெழு மின்கரக் கோயிலே.     5.19.3
188    துண்ணெ னாமனத் தால்தொழு நெஞ்சமே
பண்ணி னான்முனம் பாடல துசெய்தே
எண்ணி லாரெயில் மூன்றும் எரித்தமுக்
கண்ணி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.     5.19.4
189    சுனையுள் நீல மலரன கண்டத்தன்
புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக்
கனையும் பைங்கழ லான்கரக் கோயிலை
நினையும் உள்ளத் தவர்வினை நீங்குமே.     5.19.5
190    குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர் அன்புடை யாரெலாம்
வணங்கி வான்மலர் கொண்டடி வைகலுங்
கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே.    5.19.6
191    பண்ணி னார்மறை பல்பல பூசனை
மண்ணி னார்செய்வ தன்றியும் வைகலும்
விண்ணி னார்கள் வியக்கப் படுவன
கண்ணி னார்கடம் பூர்க்கரக் கோயிலே.     5.19.7
192    அங்கை ஆரழ லேந்திநின் றாடலன்
மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக்
கங்கை யானுறை யுங்கரக் கோயிலைத்
தங்கை யாற்றொழு வார்வினை சாயுமே.     5.19.8
193    நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.     5.19.9
194    பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும்
மணங்க மழ்மலர்த் தாமரை யானவன்
பிணங்கும் பேரழல் எம்பெரு மாற்கிடங்
கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே.     5.19.10
195    வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்றலை
அரைக்க வூன்றி அருள்செய்த ஈசனார்
திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலை
உரைக்கும் உள்ளத் தவர்வினை ஓயுமே.     5.19.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.20 திருக்கடம்பூர்க்கரக்கோயில் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

196     ஒருவ ராயிரு மூவரு மாயவன்
குருவ தாய குழகன் உறைவிடம்
பருவ ரால்குதி கொள்ளும் பழனஞ்சூழ்
கருவ தாங்கடம் பூர்க்கரக் கோயிலே.     5.20.1
197    வன்னி மத்தம் வளரிளந் திங்களோர்
கன்னி யாளைக் கதிர்முடி வைத்தவன்
பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும்
மன்னி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.     5.20.2
198    இல்லக் கோலமும் இந்த இளமையும்
அல்லற் கோலம் அறுத்துய வல்லிரே
ஒல்லைச் சென்றடை யுங்கடம் பூர்நகர்ச்
செல்வக் கோயில் திருக்கரக் கோயிலே.     5.20.3
199    வேறு சிந்தை யிலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவிடம்
ஏறு செல்வத் திமையவர் தாந்தொழும்
ஆறு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.     5.20.4
200    திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர்
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்
பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலுந்
தெங்கு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.     5.20.5
201    மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம்
எல்லை யான பிரானார் இருப்பிடங்
கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை
நல்ல சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.     5.20.6
202    தளரும் வாளர வத்தொடு தண்மதி
வளரும் பொற்சடை யாற்கிட மாவது
கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறாக்
களரி யார்கடம் பூர்க்கரக் கோயிலே.     5.20.7
203    உற்றா ராயுற வாகி உயிர்க்கெலாம்
பெற்றா ராய பிரானார் உறைவிடம்
முற்றார் மும்மதி லெய்த முதல்வனார்
கற்றார் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.     5.20.8
204    வெள்ளை நீறணி மேனிய வர்க்கெலாம்
உள்ள மாய பிரானார் உறைவிடம்
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்
கள்வன் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.     5.20.9
205    பரப்பு நீரிலங் கைக்கிறை வன்னவன்
உரத்தி னாலடுக் கல்லெடுக் கல்லுற
இரக்க மின்றி இறைவிர லாற்றலை
அரக்கி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.     5.20.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.21 திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

206    என்னி லாரும் எனக்கினி யாரில்லை
என்னி லும்மினி யானொரு வன்னுளன்
என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே.     5.21.1
207    மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கணால்
கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ
தட்டி முட்டித்தள் ளாடித் தழுக்குழி
எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே.     5.21.2
208    கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன்
புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை
அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர்
எனலும் என்மனத் தின்னம்பர் ஈசனே.     5.21.3
209    மழைக்கண் மாமயி லாலும் மகிழ்ச்சியான்
அழைக்குந் தன்னடி யார்கள்தம் அன்பினைக்
குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கு மென்மனத் தின்னம்பர் ஈசனே.     5.21.4
210    தென்ன வனென்னை யாளுஞ் சிவனவன்
மன்ன வன்மதி யம்மறை யோதியான்
முன்ன மன்னவன் சேரலன் பூழியான்
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே.     5.21.5
211    விளக்கும் வேறு படப்பிறர் உள்ளத்தில்
அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக்
குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே
இளக்கும் என்மனத் தின்னம்பர் ஈசனே.     5.21.6
212    சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர்
கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள்
படைக்க ணாற்பரு கப்படு வான்நமக்
கிடைக்க ணாய்நின்ற இன்னம்பர் ஈசனே.     5.21.7
213    தொழுது தூமலர் தூவித் துதித்துநின்
றழுது காமுற் றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதுங் கீழ்க்கணக் கின்னம்பர் ஈசனே.     5.21.8
214    விரியுந் தண்ணிள வேனலில் வெண்பிறை
புரியுங் காமனை வேவப் புருவமுந்
திரியும் எல்லையில் மும்மதில் தீயெழுந்
தெரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே.     5.21.9
215    சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும்
முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக்
கனிய வூன்றிய காரண மென்கொலோ
இனிய னாய்நின்ற இன்னம்பர் ஈசனே.     5.21.10
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.22 திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

216    பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணியங்
காவ ணத்துடை யானடி யார்களை
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை யான்குட மூக்கிலே.    5.22.1
217    பூத்தா டிக்கழி யாதேநீர் பூமியீர்
தீத்தா டித்திறஞ் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்தா டுங்காளி தன்விசை தீர்கென்று
கூத்தா டியுறை யுங்குட மூக்கிலே.     5.22.2
218    நங்கை யாளுமை யாளுறை நாதனார்
அங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள் கன்னி யெனப்படுங்
கொங்கை யாளுறை யுங்குட மூக்கிலே.     5.22.3
219    ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல்
ஏதா னுமினி தாகும் மியமுனைச்
சேதா ஏறுடை யானமர்ந் தவிடங்
கோதா விரியுறை யுங்குட மூக்கிலே.     5.22.4
220    நக்க ரையனை நாடொறும் நன்னெஞ்சே
வக்க ரையுறை வானை வணங்குநீ
அக்க ரையோ டரவரை யார்த்தவன்
கொக்க ரையுடை யான்குட மூக்கிலே.     5.22.5
221    துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவ னாய்ப்பார்த்தன் மேற்கணை தொட்டவெங்
குறவ னாருறை யுங்குட மூக்கிலே.     5.22.6
222    தொண்ட ராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக்
கொண்ட வன்னுறை யுங்குட மூக்கிலே.    5.22.7
223    காமி யஞ்செய்து காலம் கழியாதே,
ஓமி யஞ்செய்தங் குள்ளத் துணர்மினோ
சாமி யோடு சரச்சுவ தியவள்
கோமி யும்முறை யுங்குட மூக்கிலே.     5.22.8
224    சிரமஞ் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்
பரம னைப்பல நாளும் பயிற்றுமின்
பிரமன் மாலொடு மற்றொழிந் தார்க்கெலாங்
குரவ னாருறை யுங்குட மூக்கிலே.     5.22.9
225    அன்று தானரக் கன்கயி லாயத்தைச்
சென்று தானெடுக் கவுமை யஞ்சலும்
நன்று தான்நக்கு நல்விர லூன்றிப்பின்
கொன்று கீதங்கேட் டான்குட மூக்கிலே.     5.22.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.23 திருநின்றியூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

226    கொடுங்கண் வெண்டலை கொண்டு குறைவிலைப்
படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்
நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர்க்
கடுங்கைக் கூற்றுதைத் திட்ட கருத்தரே.     5.23.1
227    வீதி வேல்நெடுங் கண்ணியர் வெள்வளை
நீதி யேகொளப் பாலது நின்றியூர்
வேத மோதி விளங்குவெண் தோட்டராய்க்
காதில் வெண்குழை வைத்தவெங் கள்வரே.     5.23.2
228    புற்றி னார்அர வம்புலித் தோல்மிசைச்
சுற்றி னார்சுண்ணப் போர்வைகொண் டார்சுடர்
நெற்றிக் கண்ணுடை யாரமர் நின்றியூர்
பற்றி னாரைப்பற் றாவினைப் பாவமே.     5.23.3
229    பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் மல்கி அயலெலாம்
நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.     5.23.4
230    சுனையுள் நீலஞ் சுளியும் நெடுங்கணாள்
இனைய னென்றென்று மேசுவ தென்கொலோ
நினையுந் தண்வயல் சூழ்திரு நின்றியூர்ப்
பனையின் ஈருரி போர்த்த பரமரே.     5.23.5
231    உரைப்பக் கேண்மின்நும் உச்சியு ளான்றனை
நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர்
உரைப்பொற் கற்றைய ராரிவ ரோவெனிற்
திரைத்துப் பாடித் திரிதருஞ் செல்வரே.     5.23.6
232    கன்றி யூர்முகில் போலுங் கருங்களி
றின்றி ஏறல னாலிது வென்கொலோ
நின்றி யூர்பதி யாக நிலாயவன்
வென்றி யேறுடை எங்கள் விகிர்தனே.     5.23.7
233    நிலையி லாவெள்ளை மாலையன் நீண்டதோர்
கொலைவி லாலெயில் எய்த கொடியவன்
நிலையி னார்வயல் சூழ்திரு நின்றியூர்
உரையி னாற்றொழு வார்வினை ஓயுமே.     5.23.8
234    அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதில் எய்திமை யோர்தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.     5.23.9
235    எளிய னாமொழி யாஇலங் கைக்கிறை
களியி னாற்கயி லாய மெடுத்தவன்
நெளிய வூன்ற வலானமர் நின்றியூர்
அளியி னாற்றொழு வார்வினை யல்குமே.     5.23.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.24 திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

236     ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை
ஒற்றி யூருமப் பாம்பும் அதனையே
ஒற்றி யூர வொருசடை வைத்தவன்
ஒற்றி யூர்தொழ நம்வினை ஓயுமே.     5.24.1
237    வாட்ட மொன்றுரைக் கும்மலை யான்மகள்
ஈட்ட வேயிரு ளாடி இடுபிணக்
காட்டி லோரி கடிக்க எடுத்ததோர்
ஓட்டை வெண்டலைக் கையொற்றி யூரரே.     5.24.2
238    கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின்
ஆற்றுத் தண்டத் தடக்கு மரனடி
நீற்றுத் தண்டத்த ராய்நினை வார்க்கெலாம்
ஊற்றுத் தண்டொப்பர் போலொற்றி யூரரே.     5.24.3
239    சுற்றும் பேய்சுழ லச்சுடு காட்டெரி
பற்றி யாடுவர் பாய்புலித் தோலினர்
மற்றை யூர்களெல் லாம்பலி தேர்ந்துபோய்
ஒற்றி யூர்புக் குறையும் ஒருவரே.     5.24.4
240    புற்றில் வாளர வாட்டி உமையொடு
பெற்ற மேறுகந் தேறும் பெருமையான்
மற்றை யாரொடு வானவ ருந்தொழ
ஒற்றி யூருறை வானோர் கபாலியே.     5.24.5
241    போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர்
மாது தாழ்சடை வைத்த மணாளனார்
ஓது வேதிய னார்திரு வொற்றியூர்
பாத மேத்தப் பறையுநம் பாவமே.     5.24.6
242    பலவும் அன்னங்கள் பன்மலர் மேற்றுஞ்சுங்
கலவ மஞ்ஞைகள் காரென வெள்குறும்
உலவு பைம்பொழில் சூழ்திரு ஒற்றியூர்
நிலவி னானடி யேயடை நெஞ்சமே.     5.24.7
243    ஒன்று போலும் உகந்தவ ரேறிற்று
ஒன்று போலும் உதைத்துக் களைந்தது
ஒன்று போலொளி மாமதி சூடிற்று
ஒன்று போலுகந் தாரொற்றி யூரரே.     5.24.8
244    படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்
சடைகொள் வெள்ளத்தர் சாந்தவெண் ணீற்றினர்
உடையுந் தோலுகந் தாருறை யொற்றியூர்
அடையு முள்ளத் தவர்வினை யல்குமே.     5.24.9
245    வரையி னாருயர் தோலுடை மன்னனை
வரையி னால்வலி செற்றவர் வாழ்விடந்
திரையி னார்புடை சூழ்திரு வொற்றியூர்
உரையி னாற்பொலிந் தாருயர்ந் தார்களே.     5.24.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.25 திருப்பாசூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

246     முந்தி மூவெயி லெய்த முதல்வனார்
சிந்திப் பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார்
அந்திக் கோன்றனக் கேயருள் செய்தவர்
பந்திச் செஞ்சடைப் பாசூ ரடிகளே.     5.25.1
247    மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்
தொடர்ந்த வல்வினை போக்கிடுஞ் சோதியார்
கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர்
படர்ந்த நாகத்தர் பாசூ ரடிகளே.     5.25.2
248    நாறு கொன்றையும் நாகமுந் திங்களும்
ஆறுஞ் செஞ்சடை வைத்த அழகனார்
காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர்
பாறி னோட்டினர் பாசூ ரடிகளே.     5.25.3
249    வெற்றி யூருறை வேதிய ராவர்நல்
ஒற்றி யேறுகந் தேறு மொருவனார்
நெற்றிக் கண்ணினர் நீளர வந்தனைப்
பற்றி யாட்டுவர் பாசூ ரடிகளே.     5.25.4
250    மட்ட விழ்ந்த மலர்நெடுங் கண்ணிபால்
இட்ட வேட்கைய ராகி யிருப்பவர்
துட்ட ரேலறி யேனிவர் சூழ்ச்சிமை
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே.    5.25.5
251    பல்லில் ஓடுகை யேந்திப் பகலெலாம்
எல்லி நின்றிடு பெய்பலி யேற்பவர்
சொல்லிப் போய்ப்புகும் ஊரறி யேன்சொலீர்
பல்கு நீற்றினர் பாசூ ரடிகளே.    5.25.6
252    கட்டி விட்ட சடையர் கபாலியர்
எட்டி நோக்கிவந் தில்புகுந் தவ்வவர்
இட்ட மாவறி யேனிவர் செய்வன
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே.    5.25.7
253    வேத மோதிவந் தில்புகுந் தாரவர்
காதில் வெண்குழை வைத்த கபாலியார்
நீதி யொன்றறி யார்நிறை கொண்டனர்
பாதி வெண்பிறைப் பாசூ ரடிகளே.     5.25.8
254    சாம்பற் பூசுவர் தாழ்சடை கட்டுவர்
ஓம்பல் மூதெரு தேறு மொருவனார்
தேம்பல் வெண்மதி சூடுவர் தீயதோர்
பாம்பு மாட்டுவர் பாசூ ரடிகளே.     5.25.9
255    மாலி னோடு மறையவன் றானுமாய்
மேலுங் கீழும் அளப்பரி தாயவர்
ஆலின் நீழல் அறம்பகர்ந் தார்மிகப்
பால்வெண் ணீற்றினர் பாசூ ரடிகளே.    5.25.10
256    திரியு மூவெயில் செங்கணை யொன்றினால்
எரிய வெய்தன ரேனும் இலங்கைக்கோன்
நெரிய வூன்றியிட் டார்விர லொன்றினாற்
பரியர் நுண்ணியர் பாசூ ரடிகளே.     5.25.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசூர்நாதர்,
தேவியார் - பசுபதிநாயகி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.26 திருவன்னியூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

257     காடு கொண்டரங் காக்கங்குல் வாய்க்கணம்
பாட மாநட மாடும் பரமனார்
வாட மானிறங் கொள்வர் மணங்கமழ்
மாட மாமதில் சூழ்வன்னி யூரரே.     5.26.1
258    செங்கண் நாகம் அரையது தீத்திரள்
அங்கை யேந்திநின் றார்எரி யாடுவர்
கங்கை வார்சடை மேலிடங் கொண்டவர்
மங்கை பாகம்வைத் தார்வன்னி யூரரே.     5.26.2
259    ஞானங் காட்டுவர் நன்னெறி காட்டுவர்
தானங் காட்டுவர் தம்மடைந் தார்க்கெலாந்
தானங் காட்டித்தன் றாளடைந் தார்கட்கு
வானங் காட்டுவர் போல்வன்னி யூரரே.     5.26.3
260    இம்மை அம்மை யெனவிரண் டும்மிவை
மெய்ம்மை தானறி யாது விளம்புவர்
மெய்ம்மை யால்நினை வார்கள்தம் வல்வினை
வம்மின் தீர்ப்பர்கண் டீர்வன்னி யூரரே.    5.26.4
261    பிறைகொள் வாணுதற் பெய்வளைத் தோளியர்
நிறையைக் கொள்பவர் நீறணி மேனியர்
கறைகொள் கண்டத்தர் வெண்மழு வாளினர்
மறைகொள் வாய்மொழி யார்வன்னி யூரரே.     5.26.5
262    திளைக்கும் வண்டொடு தேன்படு கொன்றையர்
துளைக்கை வேழத்தர் தோலர் சுடர்மதி
முளைக்கு மூரற் கதிர்கண்டு நாகம்நா
வளைக்கும் வார்சடை யார்வன்னி யூரரே.     5.26.6
263    குணங்கொள் தோளெட்டு மூர்த்தி இணையடி
இணங்கு வார்கட் கினியனு மாய்நின்றான்
வணங்கி மாமலர் கொண்டவர் வைகலும்
வணங்கு வார்மனத் தார்வன்னி யூரரே.     5.26.7
264    இயலு மாலொடு நான்முகன் செய்தவம்
முயலிற் காண்பரி தாய்நின்ற மூர்த்திதான்
அயலெ லாம்அன்ன மேயும்அந் தாமரை
வயலெ லாங்கயல் பாய்வன்னி யூரரே.     5.26.8
    இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.    5.26.8
265    நலங்கொள் பாகனை நன்று முனிந்திடா
விலங்கல் கோத்தெடுத் தானது மிக்கிட
இலங்கை மன்னன் இருபது தோளினை
மலங்க வூன்றிவைத் தார்வன்னி யூரரே.     5.26.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.27 திருவையாறு - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

266     சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன்
பொந்து வார்புலால் வெண்டலைக் கையினன்
முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித்
தந்தி வாயதோர் பாம்பர்ஐ யாறரே.     5.27.1
267    பாக மாலை மகிழ்ந்தனர் பான்மதி
போக ஆனையின் ஈருரி போர்த்தவர்
கோக மாலை குலாயதோர் கொன்றையும்
ஆக ஆன்நெய்அஞ் சாடும்ஐ யாறரே.     5.27.2
268    நெஞ்ச மென்பதோர் நீள்கயந் தன்னுளே
வஞ்ச மென்பதோர் வான்சுழிப் பட்டுநான்
துஞ்சும் போழ்துநின் நாமத் திருவெழுத்
தஞ்சுந் தோன்ற அருளும்ஐ யாறரே.     5.27.3
269    நினைக்கும் நெஞ்சினுள் ளார்நெடு மாமதில்
அனைத்தும் ஒள்ளழல் வாயெரி யூட்டினார்
பனைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்
அனைத்து வாய்தலுள் ளாரும்ஐ யாறரே.     5.27.4
270    பரியர் நுண்ணியர் பார்த்தற் கரியவர்
அரிய பாடலர் ஆடல ரன்றியுங்
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கெலாம்
அரியர் தொண்டர்க் கெளியர்ஐ யாறரே.     5.27.5
271    புலரும் போது மிலாப்பட்ட பொற்சுடர்
மலரும் போதுக ளாற்பணி யச்சிலர்
இலரும் போதும் இலாதது மன்றியும்
அலரும் போதும் அணியும்ஐ யாறரே.     5.27.6
272    பங்க மாலைக் குழலியோர் பால்நிறக்
கங்கை மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை மாலை மதியமுங் கண்ணியும்
அங்க மாலையுஞ் சூடும்ஐ யாறரே.     5.27.7
273    முன்னை யாறு முயன்றெழு வீரெலாம்
பின்னை யாறு பிரியெனும் பேதைகாள்
மன்னை யாறு மருவிய மாதவன்
தன்னை யாறு தொழத்தவ மாகுமே.     5.27.8
274    ஆனை யாறென ஆடுகின் றான்முடி
வானை யாறு வளாயது காண்மினோ
நான்ஐ யாறுபுக் கேற்கவன் இன்னருள்
தேனை யாறு திறந்தாலே யொக்குமே.     5.27.9
275    அரக்கின் மேனியன் அந்தளிர் மேனியன்
அரக்கின் சேவடி யாளஞ்ச அஞ்சலென்
றரக்கன் ஈரைந்து வாயும் அலறவே
அரக்கி னானடி யாலும்ஐ யாறனே.     5.27.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொற்சோதீசுவரர், தேவியார் - அறம்வளர்த்தநாயகி.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.28 திருவையாறு - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

276     சிந்தை வண்ணத்த ராய்த்திறம் பாவணம்
முந்தி வண்ணத்த ராய்முழு நீறணி
சந்தி வண்ணத்த ராய்த்தழல் போல்வதோர்
அந்தி வண்ணமு மாவர்ஐ யாறரே.     5.28.1
277    மூல வண்ணத்த ராய்முத லாகிய
கோல வண்ணத்த ராகிக் கொழுஞ்சுடர்
நீல வண்ணத்த ராகி நெடும்பளிங்
கால வண்ணத்த ராவர்ஐ யாறரே.     5.28.2
278    சிந்தை வண்ணமுந் தீயதோர் வண்ணமும்
அந்திப் போதழ காகிய வண்ணமும்
பந்திக் காலனைப் பாய்ந்ததோர் வண்ணமும்
அந்தி வண்ணமு மாவர்ஐ யாறரே.     5.28.3
279    இருளின் வண்ணமு மேழிசை வண்ணமுஞ்
சுருளின் வண்ணமுஞ் சோதியின் வண்ணமும்
மருளு நான்முகன் மாலொடு வண்ணமும்
அருளும் வண்ணமு மாவர்ஐ யாறரே.     5.28.4
280    இழுக்கின் வண்ணங்க ளாகிய வெவ்வழல்
குழைக்கும் வண்ணங்க ளாகியுங் கூடியும்
மழைக்கண் மாமுகி லாகிய வண்ணமும்
அழைக்கும் வண்ணமு மாவர்ஐ யாறரே.     5.28.5
281    இண்டை வண்ணமும் ஏழிசை வண்ணமுந்
தொண்டர் வண்ணமுஞ் சோதியின் வண்ணமுங்
கண்ட வண்ணங்க ளாய்க்கனல் மாமணி
அண்ட வண்ணமு மாவர்ஐ யாறரே.     5.28.6
282    விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமுங்
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்
விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமு மாவர்ஐ யாறரே.     5.28.7
283    ஊழி வண்ணமும் ஒண்சுடர் வண்ணமும்
வேழ ஈருரி போர்த்ததோர் வண்ணமும்
வாழித் தீயுரு வாகிய வண்ணமும்
ஆழி வண்ணமு மாவர்ஐ யாறரே.     5.28.8
284    செய்த வன்றிரு நீறணி வண்ணமும்
எய்த நோக்கரி தாகிய வண்ணமுங்
கைது காட்சி யரியதோர் வண்ணமும்
ஐது வண்ணமு மாவர்ஐ யாறரே.     5.28.9
285    எடுத்த வாளரக் கன்றிறல் வண்ணமும்
இடர்க்கள் போல்பெரி தாகிய வண்ணமுங்
கடுத்த கைந்நரம் பாலிசை வண்ணமும்
அடுத்த வண்ணமு மாவர்ஐ யாறரே.     5.28.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.29 திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

286    நிறைக்க வாலியள் அல்லளிந் நேரிழை
மறைக்க வாலியள் அல்லளிம் மாதராள்
பிறைக்க வாலிப் பெரும்புனல் ஆவடு
துறைக்க வாலியோ டாடிய சுண்ணமே.     5.29.1
287    தவள மாமதிச் சாயலோர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம்மிறை
அளவு கண்டிலள் ஆவடு தண்டுறைக்
களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே.     5.29.2
288    பாதி பெண்ணொரு பாகத்தன் பன்மறை
ஓதி யென்னுளங் கொண்டவன் ஒண்பொருள்
ஆதி ஆவடு தண்டுறை மேவிய
சோதி யேசுட ரேயென்று சொல்லுமே.     5.29.3
289    கார்க்கொள் மாமுகில் போல்வதோர் கண்டத்தன்
வார்க்கொள் மென்முலை சேர்ந்திறு மாந்திவள்
ஆர்க்கொள் கொன்றையன் ஆவடு தண்டுறைத்
தார்க்கு நின்றிவள் தாழுமா காண்மினே.     5.29.4
290    கருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன்
பருகு பாலமு தேயென்னும் பண்பினன்
அருகு சென்றிலள் ஆவடு தண்டுறை
ஒருவன் என்னை யுடையகோ வென்னுமே.     5.29.5
291    குழலுங் கொன்றையுங் கூவிள மத்தமுந்
தழலுந் தையலோர் பாகமாத் தாங்கினான்
அழகன் ஆவடு தண்டுறை யாவெனக்
கழலுங் கைவளை காரிகை யாளுக்கே.     5.29.6
292    பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத்
தஞ்ச மென்றிறு மாந்திவ ளாரையும்
அஞ்சு வாளல்லள் ஆவடு தண்டுறை
மஞ்ச னோடிவள் ஆடிய மையலே.     5.29.7
293    பிறையுஞ் சூடிநற் பெண்ணொடா ணாகிய
நிறையு நெஞ்சமும் நீர்மையுங் கொண்டவன்
அறையும் பூம்பொழில் ஆவடு தண்டுறை
இறைவன் என்னை யுடையவன் என்னுமே.     5.29.8
294    வையந் தானளந் தானும் அயனுமாய்
மெய்யைக் காணலுற் றார்க்கழ லாயினான்
ஐயன் ஆவடு தண்டுறை யாவெனக்
கையில் வெள்வளை யுங்கழல் கின்றதே.     5.29.9
295    பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்
மிக்க வாளரக் கன்வலி வீட்டினான்
அக்க ணிந்தவன் ஆவடு தண்டுறை
நக்கன் என்னுமிந் நாணிலி காண்மினே.    5.29.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.30 திருப்பராய்த்துறை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

296     கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே.     5.30.1
297    மூடி னார்களி யானையின் ஈருரி
பாடி னார்மறை நான்கினோ டாறங்கஞ்
சேட னார்தென் பராய்த்துறைச் செல்வரைத்
தேடிக் கொண்டடி யேன்சென்று காண்பனே.     5.30.2
298    பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர்
நட்ட மாடுவர் நள்ளிருள் ஏமமுஞ்
சிட்ட னார்தென் பராய்த்துறைச் செல்வனார்
இட்ட மாயிருப் பாரை அறிவரே.     5.30.3
299    முன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர்
என்பெ லாம்பல பூண்டங் குழிதர்வர்
தென்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
அன்ப ராயிருப் பாரை அறிவரே.     5.30.4
300    போது தாதொடு கொண்டு புனைந்துடன்
தாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச்
சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே.     5.30.5
301    நல்ல நான்மறை யோதிய நம்பனைப்
பல்லில் வெண்டலை யிற்பலி கொள்வனைத்
தில்லை யான்றென் பராய்த்துறைச் செல்வனை
வல்லை யாய்வணங் கித்தொழு வாய்மையே.     5.30.6
302    நெருப்பி னாற்குவித் தாலொக்கு நீள்சடைப்
பருப்ப தம்மத யானை யுரித்தவன்
திருப்ப ராய்த்துறை யார்திரு மார்பின்நூல்
பொருப்ப ராவி இழிபுனல் போன்றதே.     5.30.7
303    எட்ட விட்ட இடுமண லெக்கர்மேற்
பட்ட நுண்டுளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல்
விட்டு நம்வினை யுள்ளன வீடுமே.     5.30.8
304    நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை
மருப்ப ராவளைத் தாலொக்கும் வாண்மதி
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்ப ராயிருப் பாரை அறிவரே.     5.30.9
305    தொண்டு பாடியுந் தூமலர் தூவியும்
இண்டை கட்டி இணையடி யேத்தியும்
பண்ட ரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே.    5.30.10
306    அரக்கன் ஆற்றல் அழித்த அழகனைப்
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை யேத்துமின்
பொருக்க நும்வினை போயறுங் காண்மினே.    5.30.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருப்பராய்த்துறைநாதர்,
தேவியார் - பசும்பொன்மயிலம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.31 திருவானைக்கா - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

307     கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள்
ஆனைக் காவிலெம் மானை அணைகிலார்
ஊனைக் காவி யுழிதர்வர் ஊமரே.     5.31.1
308    திருகு சிந்தையைத் தீர்த்துச்செம் மைசெய்து
பருகி யூறலைப் பற்றிப் பதமறிந்
துருகி நைபவர்க் கூனமொன் றின்றியே
அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.     5.31.2
309    துன்ப மின்றித் துயரின்றி யென்றுநீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
என்பொன் ஈசன் இறைவனென் றுள்குவார்க்
கன்ப னாயிடும் ஆனைக்கா அண்ணலே.     5.31.3
310    நாவால் நன்று நறுமலர்ச் சேவடி
ஓவா தேத்தி யுளத்தடைத் தார்வினை
காவா யென்றுதங் கைதொழு வார்க்கெலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே.     5.31.4
311    வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும்
வெஞ்சொ லின்றி விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சுநின் றுள்குளிர் வார்க்கெலாம்
அஞ்ச லென்றிடும் ஆனைக்கா அண்ணலே.     5.31.5
312    நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.     5.31.6
313    ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலுங்
கழுக ரிப்பதன் முன்னங் கழலடி
தொழுது கைகளாற் றூமலர் தூவிநின்
றழும வர்க்கன்பன் ஆனைக்கா அண்ணலே.     5.317
314    உருளும் போதறி வொண்ணா உலகத்தீர்
தெருளுஞ் சிக்கெனத் தீவினை சேராதே
இருள றுத்துநின் றீசனென் பார்க்கெலாம்
அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே.     5.31.8
315    நேச மாகி நினைமட நெஞ்சமே
நாச மாய குலநலஞ் சுற்றங்கள்
பாச மற்றுப் பராபர ஆனந்த
ஆசை யுற்றிடும் ஆனைக்கா அண்ணலே.     5.31.9
316    ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை
கீதங் கின்னரம் பாடக் கெழுவினான்
பாதம் வாங்கிப் பரிந்தருள் செய்தங்கோர்
ஆதி யாயிடும் ஆனைக்கா அண்ணலே.     5.31.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சம்புகேசுவரர்,
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.32 திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

317     கொடிகொள் செல்வ விழாக்குண லையறாக்
கடிகொள் பூம்பொழிற் கச்சிஏ கம்பனார்
பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்
அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.     5.32.1
318    ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப்
பார்த்த னோடு படைதொடு மாகிலும்
பூத்த நீள்பொழிற் பூந்துருத் திந்நகர்த்
தீர்த்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.     5.32.2
319    மாதி னைமதித் தானொரு பாகமாக்
காத லாற்கரந் தான்சடைக் கங்கையைப்
பூத நாயகன் பூந்துருத் திந்நகர்க்
காதி சேவடிக் கீழ்நா மிருப்பதே.     5.32.3
320    மூவ னாய்முத லாயிவ் வுலகெலாங்
காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன்
பூவின் நாயகன் பூந்துருத் திந்கர்த்
தேவன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.     5.32.4
321    செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில்
உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும்
பொன்பொ னார்செல்வப் பூந்துருத் திந்நகர்
நம்பன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.     5.32.5
322    வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினைக்
கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்
புல்லம் பேசியும் பூந்துருத் திந்நகர்ச்
செல்வன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.     5.32.6
323    ஒருத்த னாயுல கேழுந் தொழநின்று
பருத்த பாம்பொடு பான்மதி கங்கையும்
பொருத்த னாகிலும் பூந்துருத் திந்நகர்த்
திருத்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.     5.32.7
324    அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்
கருத நின்றவர் காண்பரி தாயினான்
பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச்
சதுரன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.    5.32.8
325    செதுக றாமனத் தார்புறங் கூறினுங்
கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும்
பொதுவின் நாயகன் பூந்துருத் திந்நகர்க்
கதிபன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.     5.32.9
326    துடித்த தோல்வலி வாளரக் கன்றனைப்
பிடித்த கைஞ்ஞெரிந் துற்றன கண்ணெலாம்
பொடிக்க வூன்றிய பூந்துருத் திந்நகர்ப்
படிக்கொள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.     5.32.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புஷ்பவனநாதர்,
தேவியார் - அழகாலமர்ந்தநாயகி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.33 திருச்சோற்றுத்துறை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

327     கொல்லை யேற்றினர் கோளர வத்தினர்
தில்லைச் சிற்றம் பலத்துறைச் செல்வனார்
தொல்லை யூழியர் சோற்றுத் துறையர்க்கே
வல்லை யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.     5.33.1
328    முத்தி யாக வொருதவஞ் செய்திலை
அத்தி யாலடி யார்க்கொன் றளித்திலை
தொத்து நின்றலர் சோற்றுத் துறையர்க்கே
பத்தி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.     5.33.2
329    ஒட்டி நின்ற உடலுறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்தவை போயறத்
தொட்டு நின்றுமச் சோற்றுத் துறையர்க்கே
பட்டி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.     5.333
330    ஆதி யானண்ட வாணர்க் கருள்நல்கு
நீதி யானென்றும் நின்மல னேயென்றுஞ்
சோதி யானென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
வாதி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.     5.33.4
331    ஆட்டி னாயடி யேன்வினை யாயின
ஓட்டி னாயொரு காதில் இலங்குவெண்
தோட்டி னாயென்று சோற்றுத் துறையர்க்கே
நீட்டி நீபணி செய்மட நெஞ்சமே.     5.33.5
332    பொங்கி நின்றெழுந் தகடல் நஞ்சினைப்
பங்கி யுண்டதோர் தெய்வமுண் டோ சொலாய்
தொங்கி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்குத்
தங்கி நீபணி செய்மட நெஞ்சமே.     5.33.6
333    ஆணி போலநீ ஆற்ற வலியைகாண்
ஏணி போலிழிந் தேறியும் ஏங்கியுந்
தோணி யாகிய சோற்றுத் துறையர்க்கே
பூணி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.     5.33.7
334    பெற்றம் ஏறிலென் பேய்படை யாகிலென்
புற்றி லாடர வேயது பூணிலென்
சுற்றி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
பற்றி நீபணி செய்மட நெஞ்சமே.     5.33.8
335    அல்லி யானர வைந்தலை நாகணைப்
பள்ளி யானறி யாத பரிசெலாஞ்
சொல்லி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
புல்லி நீபணி செய்மட நெஞ்சமே.     5.33.9
336    மிண்ட ரோடு விரவியும் வீறிலாக்
குண்டர் தம்மைக் கழிந்துய்யப் போந்துநீ
தொண்டு செய்தென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
உண்டு நீபணி செய்மட நெஞ்சமே.     5.33.10
337    வாழ்ந்த வன்வலி வாளரக் கன்றனை
ஆழ்ந்து போயல றவ்விர லூன்றினான்
சூழ்ந்த பாரிடஞ் சோற்றுத் துறையர்க்குத்
தாழ்ந்து நீபணி செய்மட நெஞ்சமே.     5.33.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர்,
தேவியார் - ஒப்பிலாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.34 திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

338    கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புர மூன்றெரி செய்தவன்
நெல்லி யானிலை யானநெய்த் தானனைச்
சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே.     5.34.1
339    இரவ னையிடு வெண்டலை யேந்தியைப்
பரவ னைப்படை யார்மதில் மூன்றையும்
நிரவ னைநிலை யானநெய்த் தானனைக்
குரவ னைத்தொழு வார்கொடி வாணரே.     5.34.2
340    ஆனி டையைந்தும் ஆடுவ ராரிருள்
கானி டைநடம் ஆடுவர் காண்மினோ
தேனி டைமலர் பாயுநெய்த் தானனை
வானி டைத்தொழு வார்வலி வாணரே.     5.34.3
341    விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறெழக்
கண்ட வன்கடி தாகிய நஞ்சினை
உண்ட வன்னொளி யானநெய்த் தானனைத்
தொண்ட ராய்த்தொழு வார்சுடர் வாணரே.     5.34.4
342    முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே
சங்கி யாது சமுத்திர நஞ்சுண்டான்
நங்கை யோடு நவின்றநெய்த் தானனைத்
தங்கை யாற்றொழு வார்தலை வாணரே.     5.34.5
343    சுட்ட நீறுமெய் பூசிச் சுடலையுள்
நட்ட மாடுவர் நள்ளிருட் பேயொடே
சிட்டர் வானவர் தேருநெய்த் தானனை
இட்ட மாய்த்தொழு வாரின்ப வாணரே.     5.34.6
344    கொள்ளித் தீயெரி வீசிக் கொடியதோர்
கள்ளிக் காட்டிடை யாடுவர் காண்மினோ
தெள்ளித் தேறித் தெளிந்துநெய்த் தானனை
உள்ளத் தாற்றொழு வாரும்பர் வாணரே.     5.34.7
345    உச்சி மேல்விளங் கும்மிள வெண்பிறை
பற்றி யாடர வோடுஞ்ச டைப்பெய்தான்
நெற்றி யாரழல் கண்டநெய்த் தானனைச்
சுற்றி மெய்தொழு வார்சுடர் வாணரே.     5.34.8
346    மாலொ டும்மறை யோதிய நான்முகன்
காலொ டும்முடி காண்பரி தாயினான்
சேலொ டுஞ்செருச் செய்யும்நெய்த் தானனை
மாலொ டுந்தொழு வார்வினை வாடுமே.     5.34.9
347    வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை
நெருங்க நீள்வரை யூன்றுநெய்த் தானனார்
புரிந்து கைந்நரம் போடிசை பாடலும்
பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே.     5.34.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர், தேவியார் - பாலாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.35 திருப்பழனம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

348     அருவ னாய்அத்தி ஈருரி போர்த்துமை
உருவ னாய்ஒற்றி யூர்பதி யாகிலும்
பருவ ரால்வயல் சூழ்ந்த பழனத்தான்
திருவி னாற்றிரு வேண்டுமித் தேவர்க்கே.     5.35.1
349    வையம் வந்து வணங்கி வலங்கொளும்
ஐய னைஅறி யார்சிலர் ஆதர்கள்
பைகொ ளாடர வார்த்த பழனன்பால்
பொய்யர் காலங்கள் போக்கிடு வார்களே.     5.35.2
350    வண்ண மாக முறுக்கிய வாசிகை
திண்ண மாகத் திருச்சடைச் சேர்த்தியே
பண்ணு மாகவே பாடும் பழனத்தான்
எண்ணும் நீரவன் ஆயிர நாமமே.     5.35.3
351    மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட
வாக்கப் பாம்பினைக் கண்ட துணிமதி
பாக்கப் பாம்பினைப் பற்றும் பழனத்தான்
தார்க்கொண் மாலை சடைக்கரந் திட்டதே.     5.35.4
352    நீல முண்ட மிடற்றினன் நேர்ந்ததோர்
கோல முண்ட குணத்தான் நிறைந்ததோர்
பாலு முண்டு பழனன்பா லென்னிடை
மாலு முண்டிறை யென்றன் மனத்துளே.     5.35.5
353    மந்த மாக வளர்பிறை சூடியோர்
சந்த மாகத் திருச்சடை சாத்துவான்
பந்த மாயின தீர்க்கும் பழனத்தான்
எந்தை தாய்தந்தை எம்பெரு மானுமே.     5.35.6
354    மார்க்க மொன்றறி யார்மதி யில்லிகள்
பூக்க ரத்திற் புரிகிலர் மூடர்கள்
பார்க்க நின்று பரவும் பழனத்தான்
தாட்கண் நின்று தலைவணங் கார்களே.     5.35.7
355    ஏறி னாரிமை யோர்கள் பணிகண்டு
தேறு வாரலர் தீவினை யாளர்கள்
பாறி னார்பணி வேண்டும் பழனத்தான்
கூறி னானுமை யாளொடுங் கூடவே.     5.35.8
356    சுற்று வார்தொழு வார்சுடர் வண்ணன்மேல்
தெற்றி னார்திரி யும்புர மூன்றெய்தான்
பற்றி னார்வினை தீர்க்கும் பழனனை
எற்றி னான்மறக் கேனெம் பிரானையே.     5.35.9
357    பொங்கு மாகடல் சூழ்இலங் கைக்கிறை
அங்க மான இறுத்தருள் செய்தவன்
பங்க னென்றும் பழனன் உமையொடுந்
தங்கன் றானடி யேனுடை யுச்சியே.     5.35.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.36 திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

358     கான றாத கடிபொழில் வண்டினந்
தேன றாத திருச்செம்பொன் பள்ளியான்
ஊன றாததோர் வெண்டலை யிற்பலி
தான றாததோர் கொள்கையன் காண்மினே.     5.36.1
359    என்பும் ஆமையும் பூண்டங் குழிதர்வர்க்
கன்பு மாயிடும் ஆயிழை யீரினிச்
செம்பொன் பள்ளியு ளான்சிவ லோகனை
நம்பொன் பள்ளியுள் கவினை நாசமே.     5.36.2
360    வேறு கோலத்தர் ஆணலர் பெண்ணலர்
கீறு கோவண வைதுகி லாடையர்
தேற லாவதொன் றன்றுசெம் பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ணல் அவனையே.     5.36.3
361    அருவ ராததோர் வெண்டலை யேந்திவந்
திருவ ராயிடு வார்கடை தேடுவார்
தெருவெ லாமுழல் வார்செம்பொன் பள்ளியார்
ஒருவர் தாம்பல பேருளர் காண்மினே.     5.36.4
362    பூவு லாஞ்சடை மேற்புனல் சூடினான்
ஏவ லாலெயில் மூன்றும் எரித்தவன்
தேவர் சென்றிறைஞ் சுஞ்செம்பொன் பள்ளியான்
மூவ ராய்முத லாய்நின்ற மூர்த்தியே.     5.36.5
363    சலவ ராயொரு பாம்பொடு தண்மதி
கலவ ராவதன் காரண மென்கொலோ
திலக நீண்முடி யார்செம்பொன் பள்ளியார்
குலவி லாலெயில் மூன்றெய்த கூத்தரே.     5.36.6
364    கைகொள் சூலத்தர் கட்டுவாங் கத்தினர்
மைகொள் கண்டத்த ராகி இருசுடர்
செய்ய மேனிவெண் ணீற்றர்செம் பொன்பள்ளி
ஐயர் கையதோர் ஐந்தலை நாகமே.     5.36.7
365    வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர்
பைங்கண் ஆனையின் ஈருரி போர்த்தவர்
செங்கண் மால்விடை யார்செம்பொன் பள்ளியார்
அங்க ணாயடைந் தார்வினை தீர்ப்பரே.     5.36.8
366    நன்றி நாரணன் நான்முக னென்றிவர்
நின்ற நீண்முடி யோடடி காண்புற்றுச்
சென்று காண்பரி யான்செம்பொன் பள்ளியான்
நின்ற சூழலில் நீளெரி யாகியே.     5.36.9
367    திரியு மும்மதில் செங்கணை யொன்றினால்
எரிய வெய்தன லோட்டி இலங்கைக்கோன்
நெரிய வூன்றியிட் டார்செம்பொன் பள்ளியார்
அரிய வானம் அவரருள் செய்வரே.     5.36.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.37 திருக்கடவூர்வீரட்டம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

368     மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை
நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே
கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலாற்
கலைக்கை யானைகண் டீர்கட வூரரே.     5.37.1
369    வெள்ளி மால்வரை போல்வதோ ரானையார்
உள்ள வாறெனை உள்புகு மானையார்
கொள்ள மாகிய கோயிலு ளானையார்
கள்ள வானைகண் டீர்கட வூரரே.     5.37.2
370    ஞான மாகிய நன்குண ரானையார்
ஊனை வேவ வுருக்கிய ஆனையார்
வேன லானை யுரித்துமை அஞ்சவே
கான லானைகண் டீர்கட வூரரே.     5.37.3
371    ஆல முண்டழ காயதோ ரானையார்
நீல மேனி நெடும்பளிங் கானையார்
கோல மாய கொழுஞ்சுட ரானையார்
கால வானைகண் டீர்கட வூரரே.     5.37.4
372    அளித்த ஆனஞ்சு மாடிய வானையார்
வெளுத்த நீள்கொடி யேறுடை யானையார்
எளித்த வேழத்தை எள்குவித் தானையார்
களித்த வானைகண் டீர்கட வூரரே.     5.37.5
373    விடுத்த மால்வரை விண்ணுற வானையார்
தொடுத்த மால்வரை தூயதோ ரானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததோ ரானையார்
கடுத்த வானைகண் டீர்கட வூரரே.     5.37.6
374    மண்ணு ளாரை மயக்குறு மானையார்
எண்ணு ளார்பல ரேத்திடு மானையார்
விண்ணு ளார்பல ரும்மறி யானையார்
கண்ணு ளானைகண் டீர்கட வூரரே.     5.37.7
375    சினக்குஞ் செம்பவ ளத்திர ளானையார்
மனக்கும் வல்வினை தீர்த்திடு மானையார்
அனைக்கும் அன்புடை யார்மனத் தானையார்
கனைக்கு மானைகண் டீர்கட வூரரே.     5.37.8
376    வேத மாகிய வெஞ்சுட ரானையார்
நீதி யானில னாகிய வானையார்
ஓதி யூழி தெரிந்துண ரானையார்
காத லானைகண் டீர்கட வூரரே.     5.37.9
377    நீண்ட மாலொடு நான்முகன் றானுமாய்க்
காண்டு மென்றுபுக் கார்க ளிருவரும்
மாண்ட வாரழ லாகிய வானையார்
காண்ட லானைகண் டீர்கட வூரரே.     5.37.10
378    அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்கள் இறநெரித் தானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததோ ரானையார்
கடுக்கை யானைகண் டீர்கட வூரரே.     5.37.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர், தேவியார் - அபிராமியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.38 திருக்கடவூர்மயானம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

379    குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தாங்கட வூரின் மயானத்தார்
பழைய தம்மடி யார்செயும் பாவமும்
பிழையுந் தீர்ப்பர் பெருமா னடிகளே.     5.38.1
380    உன்னி வானவர் ஓதிய சிந்தையிற்
கன்னல் தேன்கட வூரின் மயானத்தார்
தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம்
பின்னை என்னார் பெருமா னடிகளே.     5.38.2
381    சூல மேந்துவர் தோலுடை ஆடையர்
ஆல முண்டமு தேமிகத் தேக்குவர்
கால காலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமா னடிகளே.     5.38.3
382    இறைவ னாரிமை யோர்தொழு பைங்கழல்
மறவ னார்கட வூரின் மயானத்தார்
அறவ னாரடி யாரடி யார்தங்கள்
பிறவி தீர்ப்பர் பெருமா னடிகளே.     5.38.4
383    கத்து காளி கதந்தணி வித்தவர்
மத்தர் தாங்கட வூரின் மயானத்தார்
ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு
பித்தர் காணும் பெருமா னடிகளே.     5.38.5
384    எரிகொள் மேனி இளம்பிறை வைத்தவர்
கரியர் தாங்கட வூரின் மயானத்தார்
அரியர் அண்டத்து ளோரயன் மாலுக்கும்
பெரியர் காணும் பெருமா னடிகளே.     5.38.6
385    அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை
கணங்கள் சேர்கட வூரின் மயானத்தார்
வணங்கு வாரிடர் தீர்ப்பர் மயக்குறும்
பிணங்கொள் காடர் பெருமா னடிகளே.     5.38.7
386    அரவு கையினர் ஆதி புராணனார்
மரவு சேர்கட வூரின் மயானத்தார்
பரவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வார்
பிரமன் மாற்கும் பெருமா னடிகளே.     5.38.8
    இப்பதிகத்தில் 9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.    5.38.9-10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழன்மின்னம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.39 திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

387    கொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளை
உள்ளம் உள்கி யுரைக்குந் திருப்பெயர்
வள்ளல் மாமயி லாடு துறையுறை
வெள்ளந் தாங்கு சடையனை வேண்டியே.     5.39.1
388    சித்தந் தேறுஞ் செறிவளை சிக்கெனும்
பச்சை தீருமென் பைங்கொடி பான்மதி
வைத்த மாமயி லாடு துறையரன்
கொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே.     5.39.2
389    அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையுங்
கண்டு வீற்றிருக் குங்கருத் தொன்றிலோம்
வண்டு சேர்மயி லாடு துறையரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.     5.39.3
390    வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை பங்கன் அருளிலே.     5.39.4
391    குறைவி லோங்கொடு மானிட வாழ்க்கையாற்
கறைநி லாவிய கண்டனெண் டோ ளினன்
மறைவ லான்மயி லாடு துறையுறை
இறைவன் நீள்கழ லேத்தி யிருக்கிலே.     5.39.5
392    நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய்
கலைக ளாயவல் லான்கயி லாயநன்
மலையன் மாமயி லாடு துறையன்நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே.     5.39.6
393    நீற்றி னான்நிமிர் புன்சடை யான்விடை
ஏற்றி னான்நமை யாளுடை யான்புலன்
மாற்றி னான்மயி லாடு துறையென்று
போற்று வார்க்குமுண் டோ புவி வாழ்க்கையே.     5.39.7
394    கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமுந்
தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்
நீல மாமயி லாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே.     5.39.8
395    பணங்கொ ளாடர வல்குற் பகீரதி
மணங்கொ ளச்சடை வைத்த மறையவன்
வணங்கு மாமயி லாடு துறையரன்
அணங்கோர் பால்கொண்ட கோலம் அழகிதே.     5.39.9
396    நீணி லாவர வச்சடை நேசனைப்
பேணி லாதவர் பேதுற வோட்டினோம்
வாணி லாமயி லாடு துறைதனைக்
காணி லார்க்குங் கடுந்துய ரில்லையே.     5.39.10
397    பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தி னானவன் இன்னிசை கேட்டலும்
வரத்தி னான்மயி லாடு துறைதொழுங்
கரத்தி னார்வினைக் கட்டறுங் காண்மினே.     5.39.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாயூரநாதர், தேவியார் - அஞ்சொல்நாயகி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.40 திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

398     வண்ண மும்வடி வுஞ்சென்று கண்டிலள்
எண்ணி நாமங்க ளேத்தி நிறைந்திலள்
கண்ணு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்
அண்ண லேயறி வானிவள் தன்மையே.     5.40.1
399    மருந்து வானவர் உய்யநஞ் சுண்டுகந்
திருந்த வன்கழிப் பாலையுள் எம்பிரான்
திருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள்
பரிந்து ரைக்கிலு மென்சொற் பழிக்குமே.     5.40.2
400    மழலை தான்வரச் சொற்றெரி கின்றிலள்
குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ
அழக னேகழிப் பாலையெம் மண்ணலே
இகழ்வ தோயெனை ஏன்றுகொ ளென்னுமே.    5.40.3
401    செய்ய மேனிவெண் ணீறணி வான்றனை
மைய லாகி மதிக்கில ளாரையுங்
கைகொள் வெண்மழு வன்கழிப் பாலையெம்
ஐய னேஅறி வானிவள் தன்மையே.     5.40.4
402    கருத்த னைக்கழிப் பாலையுள் மேவிய
ஒருத்த னையுமை யாளொரு பங்கனை
அருத்தி யாற்சென்று கண்டிட வேண்டுமென்
றொருத்தி யாருளம் ஊசல தாகுமே.     5.40.5
403    கங்கை யைச்சடை வைத்து மலைமகள்
நங்கை யையுட னேவைத்த நாதனார்
திங்கள் சூடித் திருக்கழிப் பாலையான்
இங்கு வந்திடு மென்றிறு மாக்குமே.     5.40.6
404    ஐய னேஅழ கேஅன லேந்திய
கைய னேகறை சேர்தரு கண்டனே
மையு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்
ஐய னேவிதி யேஅரு ளென்னுமே.     5.40.7
405    பத்தர் கட்கமு தாய பரத்தினை
முத்த னைமுடி வொன்றிலா மூர்த்தியை
அத்த னைஅணி யார்கழிப் பாலையெஞ்
சித்த னைச்சென்று சேருமா செப்புமே.     5.40.8
    இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     5.40.9
406    பொன்செய் மாமுடி வாளரக் கன்றலை
அஞ்சு நான்குமொன் றும்மிறுத் தானவன்
என்செ யான்கழிப் பாலையு ளெம்பிரான்
துஞ்சும் போதுந் துணையென லாகுமே.     5.40.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ண நாதர், தேவியார் - வேதநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.41 திருப்பைஞ்ஞீலி - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

407    உடையர் கோவண மொன்றுங் குறைவிலர்
படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
சடையிற் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க் கில்லை அவலமே.     5.41.1
408    மத்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால்
பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம்
அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே.     5.41.2
409    விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருட் காட்டகத் தாடலான்
பழுதொன் றின்றிப்பைஞ் ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தம்வினை தூளியே.     5.41.3
410    ஒன்றி மாலும் பிரமனுந் தம்மிலே
நின்ற சூழ லறிவரி யானிடஞ்
சென்று பாரிட மேத்துபைஞ் ஞீலியுள்
என்றும் மேவி யிருந்த அடிகளே.     5.41.4
411    வேழத் தின்னுரி போர்த்த விகிர்தனார்
தாழச் செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
தாழைத் தண்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
யாழின் பாட்டை யுகந்த அடிகளே.     5.41.5
412    குண்டு பட்டுக் குறியறி யாச்சமண்
மிண்ட ரோடு படுத்துய்யப் போந்துநான்
கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
அண்ட வாணன் அடியடைந் துய்ந்தனே.     5.41.6
413    வரிப்பை யாடர வாட்டி மதகரி
உரிப்பை மூடிய வுத்தம னாருறை
திருப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள்போய்
இருப்பர் வானவ ரோடினி தாகவே.     5.41.7
414    கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல்
பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார்
பேடு மாணும் பிறரறி யாததோர்
ஆடு நாகம் அசைத்த அடிகளே.     5.41.8
415    காரு லாமலர்க் கொன்றையந் தாரினான்
வாரு லாமுலை மங்கையோர் பங்கினன்
தேரு லாம்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
ஆர்கி லாவமு தையடைந் துய்ம்மினே.    5.41.9
416    தருக்கிச் சென்று தடவரை பற்றலும்
நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே
அரக்கன் பாட அருளுமெம் மானிடம்
இருக்கை ஞீலியென் பார்க்கிட ரில்லையே.    5.41.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர்,
தேவியார் - விசாலாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.42 திருவேட்களம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

417     நன்று நாடொறும் நம்வினை போயறும்
என்று மின்பந் தழைக்க இருக்கலாஞ்
சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே.     5.42.1
418    கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
திருப்ப னாகில் எனக்கிட ரில்லையே.     5.42.2
419    வேட்க ளத்துறை வேதியன் எம்மிறை
ஆக்க ளேறுவர் ஆனைஞ்சு மாடுவர்
பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே.     5.42.3
420    அல்ல லில்லை அருவினை தானில்லை
மல்கு வெண்பிறை சூடு மணாளனார்
செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
வல்ல ராகில் வழியது காண்மினே.     5.42.4
421    துன்ப மில்லை துயரில்லை யாமினி
நம்ப னாகிய நன்மணி கண்டனார்
என்பொ னாருறை வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே.     5.42.5
422    கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
பட்ட வல்வினை யாயின பாறுமே.     5.42.6
423    வட்ட மென்முலை யாளுமை பங்கனார்
எட்டு மொன்றும் இரண்டுமூன் றாயினார்
சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு
திட்ட மாகி யிருமட நெஞ்சமே.     5.42.7
424    நட்ட மாடிய நம்பனை நாடொறும்
இட்டத் தாலினி தாக நினைமினோ
வட்ட வார்முலை யாளுமை பங்கனார்
சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே.    5.42.8
425    வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ்
சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே.     5.42.9
426    சேட னாருறை யுஞ்செழு மாமலை
ஓடி யாங்கெடுத் தான்முடி பத்திற
வாட வூன்றி மலரடி வாங்கிய
வேட னாருறை வேட்களஞ் சேர்மினே.     5.42.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசுபதேசுவரர், தேவியார் - நல்லநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.43 திருநல்லம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

427     கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்
இல்லத் தார்செய்ய லாவதென் ஏழைகாள்
நல்லத் தான்நமை யாளுடை யான்கழல்
சொல்லத் தான்வல்லி ரேற்றுயர் தீருமே.     5.43.1
428    பொக்கம் பேசிப் பொழுது கழியாதே
துக்கந் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்
நக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே.     5.43.2
429    பிணிகொள் வார்குழற் பேதையர் காதலாற்
பணிகள் மேவிப் பயனில்லை பாவிகாள்
அணுக வேண்டில் அரனெறி யாவது
நணுகு நாதன் நகர்திரு நல்லமே.     5.43.3
430    தமக்கு நல்லது தம்முயிர் போயினால்
இமைக்கும் போதும் இராதிக் குரம்பைதான்
உமைக்கு நல்லவன் றானுறை யும்பதி
நமக்கு நல்லது நல்ல மடைவதே.     5.43.4
431    உரைத ளர்ந்துட லார்நடுங் காமுனம்
நரைவி டையுடை யானிடம் நல்லமே
பரவு மின்பணி மின்பணி வாரொடே
விரவு மின்விர வாரை விடுமினே.     5.43.5
432    அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும்
வல்ல வாறு சிவாய நமவென்று
நல்லம் மேவிய நாத னடிதொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.     5.43.6
433    மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும்
பேத மாகிப் பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய நல்லம் நகர்தொழப்
போது மின்னெழு மின்புக லாகுமே.     5.43.7
434    வெம்மை யான வினைக்கடல் நீங்கிநீர்
செம்மை யாய சிவகதி சேரலாஞ்
சும்மை யார்மலர் தூவித் தொழுமினோ
நம்மை யாளுடை யானிடம் நல்லமே.    5.43.8
435    கால மான கழிவதன் முன்னமே
ஏலு மாறு வணங்கிநின் றேத்துமின்
மாலும் மாமல ரானொடு மாமறை
நாலும் வல்லவர் கோனிடம் நல்லமே.     5.43.9
436    மல்லை மல்கிய தோளரக் கன்வலி
ஒல்லை யில்லொழித் தானுறை யும்பதி
நல்ல நல்லம் எனும்பெயர் நாவினாற்
சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே.     5.43.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - உமாமகேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.44 திருவாமாத்தூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

437     மாமாத் தாகிய மாலயன் மால்கொடு
தாமாத் தேடியுங் காண்கிலர் தாள்முடி
ஆமாத் தூரர னேஅரு ளாயென்றென்
றேமாப் பெய்திக்கண் டாரிறை யானையே.     5.44.1
438    சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள்
புந்தி யானைப்புத் தேளிர் தொழப்படும்
அந்தி யானை ஆமத்தூர் அழகனைச்
சிந்தி யாதவர் தீவினை யாளரே.     5.44.2
439    காமாத் தம்மெனுங் கார்வலைப் பட்டுநான்
போமாத் தையறி யாது புலம்புவேன்
ஆமாத் தூரர னேயென் றழைத்தலுந்
தேமாத் தீங்கனி போலத்தித் திக்குமே.     5.44.3
440    பஞ்ச பூத வலையிற் படுவதற்
கஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை
நெஞ்சி னால்நினைந் தேன்நினை வெய்தலும்
வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே.     5.44.4
441    குராம னுங்குழ லாளொரு கூறனார்
அராம னுஞ்சடை யான்றிரு வாமாத்தூர்
இராம னும்வழி பாடுசெய் ஈசனை
நிராம யன்றனை நாளும் நினைமினே.     5.44.5
442    பித்த னைப்பெருந் தேவர் தொழப்படும்
அத்த னையணி யாமாத்தூர் மேவிய
முத்தி னையடி யேனுள் முயறலும்
பத்தி வெள்ளம் பரந்தது காண்மினே.     5.44.6
443    நீற்றி னார்திரு மேனியன் நேரிழை
கூற்றி னான்குழல் கோலச் சடையிலோர்
ஆற்றி னான்அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றி னான்எமை யாளுடை ஈசனே.     5.44.7
444    பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்
கண்ணித் தாகும் அமுதினை ஆமாத்தூர்
சண்ணிப் பானைத் தமர்க்கணித் தாயதோர்
கண்ணிற் பாவையன் னானவன் காண்மினே.     5.44.8
445    குண்டர் பீலிகள் கொள்ளுங் குணமிலா
மிண்ட ரோடெனை வேறு படுத்துயக்
கொண்ட நாதன் குளிர்புனல் வீரட்டத்
தண்ட னாரிடம் ஆமாத்தூர் காண்மினே.     5.44.9
446    வானஞ் சாடு மதியர வத்தொடு
தானஞ் சாதுடன் வைத்த சடையிடைத்
தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும்
ஆனஞ் சாடிய ஆமாத்தூர் ஐயனே.     5.44.10
447    விடலை யாய்விலங் கல்லெடுத் தான்முடி
அடர வோர்விரல் ஊன்றிய ஆமாத்தூர்
இடம தாக்கொண்ட ஈசனுக் கென்னுளம்
இடம தாகக்கொண் டின்புற் றிருப்பனே.     5.44.11

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அழகியநாதர், தேவியார் - அழகியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.45 திருத்தோணிபுரம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

448     மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால்
நீதி தான்சொல நீயெனக் காரெனுஞ்
சோதி யார்தரு தோணி புரவர்க்குத்
தாதி யாவன்நா னென்னுமென் தையலே.     5.45.1
449    நக்கம் வந்து பலியிடென் றார்க்கிட்ட
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க நீர்வயல் தோணி புரவர்க்குத்
தக்க தன்று தமது பெருமைக்கே.     5.45.2
450    கெண்டை போல்நய னத்திம வான்மகள்
வண்டு வார்குழ லாளுட னாகவே
துண்ட வான்பிறைத் தோணி புரவரைக்
கண்டு காமுறு கின்றனள் கன்னியே.     5.45.3
451    பாலை யாழ்மொழி யாளவள் தாழ்சடை
மேல ளாவது கண்டனள் விண்ணுறச்
சோலை யார்தரு தோணி புரவர்க்குச்
சால நல்லளா கின்றனள் தையலே.     5.45.4
452    பண்ணின் நேர்மொழி யாள்பலி யிட்டவிப்
பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது
சுண்ண மாடிய தோணி புரத்துறை
அண்ண லாருக்குச் சால அழகிதே.     5.45.5
453    முல்லை வெண்ணகை மொய்குழ லாயுனக்
கல்ல னாவ தறிந்திலை நீகனித்
தொல்லை யார்பொழில் தோணி புரவர்க்கே
நல்லை யாயிடு கின்றனை நங்கையே.     5.45.6
454    ஒன்று தானறி யாருல கத்தவர்
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர்
துன்று வார்பொழில் தோணி புரவர்தங்
கொன்றை சூடுங் குறிப்பது வாகுமே.     5.45.7
455    உறவு பேய்க்கணம் உண்பது வெண்டலை
உறைவ தீமம் உடலிலோர் பெண்கொடி
துறைக ளார்கடல் தோணி புரத்துறை
இறைவ னார்க்கிவள் என்கண்டன் பாவதே.     5.45.8
456    மாக யானை மருப்பேர் முலையினர்
போக யானு மவள்புக்க தேபுகத்
தோகை சேர்தரு தோணி புரவர்க்கே
ஆக யானு மவர்க்கினி யாளதே.     5.45.9
457    இட்ட மாயின செய்வாளென் பெண்கொடி
கட்டம் பேசிய காரரக் கன்றனைத்
துட்ட டக்கிய தோணி புரத்துறை
அட்ட மூர்த்திக்கு அன்பது வாகியே.     5.45.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோணியப்பர், தேவியார் - திருநிலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.46 திருப்புகலூர் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

458    துன்னக் கோவணச் சுண்ணவெண் ணீறணி
பொன்னக் கன்ன சடைப்புக லூரரோ
மின்னக் கன்னவெண் டிங்களைப் பாம்புடன்
என்னுக் கோவுடன் வைத்திட் டிருப்பதே.     5.46.1
459    இரைக்கும் பாம்பு மெறிதரு திங்களும்
நுரைக்குங் கங்கையும் நுண்ணிய செஞ்சடைப்
புரைப்பி லாத பொழிற்புக லூரரை
உரைக்கு மாசொல்லி ஒள்வளை சோருமே.     5.46.2
460    ஊச லாம்அர வல்குலென் சோர்குழல்
ஏச லாம்பழி தந்தெழில் கொண்டனர்
ஓசொ லாய்மக ளேமுறை யோவென்று
பூசல் நாமிடு தும்புக லூரர்க்கே.     5.46.3
461    மின்னின் நேரிடை யாளுமை பங்கனைத்
தன்னை நேரொப் பிலாத தலைவனைப்
புன்னைக் கானற் பொழில்புக லூரனை
என்னு ளாகவைத் தின்புற் றிருப்பனே.    5.46.4
462    விண்ணி னார்மதி சூடிய வேந்தனை
எண்ணி நாமங்கள் ஓதி எழுத்தஞ்சுங்
கண்ணி னாற்கழல் காண்பிட மேதெனிற்
புண்ணி யன்புக லூருமென் நெஞ்சுமே.     5.46.5
463    அண்ட வாணர் அமுதுண நஞ்சுண்டு
பண்டு நான்மறை யோதிய பாடலன்
தொண்ட ராகித் தொழுது மதிப்பவர்
புண்ட ரீகத்து ளார்புக லூரரே.     5.46.6
464    தத்து வந்தலை கண்டறி வாரிலை
தத்து வந்தலை கண்டவர் கண்டிலர்
தத்து வந்தலை நின்றவர்க் கல்லது
தத்து வன்னலன் தண்புக லூரனே.     5.46.7
465    பெருங்கை யாகிப் பிளிறி வருவதோர்
கருங்கை யானைக் களிற்றுரி போர்த்தவர்
வருங்கை யானை மதகளி றஞ்சினைப்
பொருங்கை யானைகண் டீர்புக லூரரே.     5.46.8
466    பொன்னொத் தநிறத் தானும் பொருகடல்
தன்னொத் தநிறத் தானும் அறிகிலாப்
புன்னைத் தாது பொழிற்புக லூரரை
என்னத் தாவென என்னிடர் தீருமே.     5.46.9
467    மத்த னாய்மதி யாது மலைதனை
எத்தி னான்றிரள் தோள்முடி பத்திற
ஒத்தி னான்விர லாலொருங் கேத்தலும்
பொத்தி னான்புக லூரைத் தொழுமினே.     5.46.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர், தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.47 திருவேகம்பம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

468    பண்டு செய்த பழவினை யின்பயன்
கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே
வண்டு லாமலர்ச் செஞ்சடை யேகம்பன்
தொண்ட னாய்த்திரி யாய்துயர் தீரவே.     5.47.1
469    நச்சி நாளும் நயந்தடி யார்தொழ
இச்சை யாலுமை நங்கை வழிபடக்
கொச்சை யார்குறு கார்செறி தீம்பொழிற்
கச்சி யேகம்ப மேகை தொழுமினே.     5.47.2
470    ஊனி லாவி இயங்கி உலகெலாம்
தானு லாவிய தன்மைய ராகிலும்
வானு லாவிய பாணி பிறங்கவெங்
கானி லாடுவர் கச்சியே கம்பரே.     5.47.3
471    இமையா முக்கணர் என்னெஞ்சத் துள்ளவர்
தமையா ரும்மறி வொண்ணாத் தகைமையர்
இமையோ ரேத்த இருந்தவன் ஏகம்பன்
நமையா ளும்மவ னைத்தொழு மின்களே.     5.47.4
472    மருந்தி னோடுநற் சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்றெனக் காயவெம் புண்ணியன்
கருந்த டங்கண்ணி னாளுமை கைதொழ
இருந்த வன்கச்சி ஏகம்பத் தெந்தையே.     5.47.5
473    பொருளி னோடுநற் சுற்றமும் பற்றிலர்க்
கருளும் நன்மைதந் தாய அரும்பொருள்
சுருள்கொள் செஞ்சடை யான்கச்சி யேகம்பம்
இருள்கெடச் சென்று கைதொழு தேத்துமே.     5.47.6
474    மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவந்
தாக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள்
நோக்கு வான்நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சி யேகம்பனே.     5.47.7
475    பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை
பெண்ணொ டாணென்று பேசற் கரியவன்
வண்ண மில்லி வடிவுவே றாயவன்
கண்ணி லுண்மணி கச்சி யேகம்பனே.     5.47.8
476    திருவின் நாயகன் செம்மலர் மேலயன்
வெருவ நீண்ட விளங்கொளிச் சோதியான்
ஒருவ னாயுணர் வாயுணர் வல்லதோர்
கருவுள் நாயகன் கச்சி யேகம்பனே.     5.47.9
477    இடுகு நுண்ணிடை ஏந்திள மென்முலை
வடிவின் மாதர் திறம்மனம் வையன்மின்
பொடிகொள் மேனியன் பூம்பொழிற் கச்சியுள்
அடிகள் எம்மை அருந்துயர் தீர்ப்பரே.     5.47.10
478    இலங்கை வேந்தன் இராவணன் சென்றுதன்
விலங்க லையெடுக் கவ்விர லூன்றலுங்
கலங்கிக் கச்சியே கம்பவோ வென்றலும்
நலங்கொள் செலவளித் தானெங்கள் நாதனே.    5.47.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர், தேவியார் - காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.48 திருவேகம்பம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

479     பூமே லானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவ ரெனாமை நடுக்குறத்
தீமே வும்முரு வாதிரு வேகம்பா
ஆமோ அல்லற் படவடி யோங்களே.     5.48.1
480    அருந்தி றல்அம ரர்அயன் மாலொடு
திருந்த நின்று வழிபடத் தேவியோ
டிருந்த வன்னெழி லார்கச்சி யேகம்பம்
பொருந்தச் சென்று புடைபட் டெழுதுமே.     5.48.2
481    கறைகொள் கண்டத்தெண் டோ ளிறை முக்கணன்
மறைகொள் நாவினன் வானவர்க் காதியான்
உறையும் பூம்பொழில் சூழ்கச்சி யேகம்பம்
முறைமை யாற்சென்று முந்தித் தொழுதுமே.    5.48.3
482    பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தை
நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு றும்மமு தாயவன் ஏகம்பம்
குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே.     5.48.4
483    சிந்தை யுட்சிவ மாய்நின்ற செம்மையோ
டந்தி யாய்அன லாய்ப்புனல் வானமாய்
புந்தி யாய்ப்புகுந் துள்ளம் நிறைந்தவெம்
எந்தை யேகம்பம் ஏத்தித் தொழுமினே.     5.48.5
484    சாக்கி யத்தொடு மற்றுஞ் சமண்படும்
பாக்கி யம்மிலார் பாடு செலாதுறப்
பூக்கொள் சேவடி யான்கச்சி யேகம்பம்
நாக்கொ டேத்தி நயந்து தொழுதுமே.     5.48.6
485    மூப்பி னோடு முனிவுறுத் தெந்தமை
ஆர்ப்ப தன்முன் னணிஅம ரர்க்கிறை
காப்ப தாய கடிபொழில் ஏகம்பம்
சேர்ப்ப தாகநாஞ் சென்றடைந் துய்துமே.     5.48.7
486    ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடுஞ்
சால நீயுறு மால்தவிர் நெஞ்சமே
நீல மாமிடற் றண்ணலே கம்பனார்
கோல மாமலர்ப் பாதமே கும்பிடே.     5.48.8
487    பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்திய
கைய னைக்கச்சி யேகம்பம் மேவிய
ஐய னைத்தொழு வார்க்கில்லை யல்லலே.     5.48.9
488    அரக்கன் றன்வலி உன்னிக் கயிலையை
நெருக்கிச் சென்றெடுத் தான்முடி தோள்நெரித்
திரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பந்
தருக்க தாகநாஞ் சார்ந்து தொழுதுமே.     5.48.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.49 திருவெண்காடு - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

489     பண்காட் டிப்படி யாயதன் பத்தர்க்குக்
கண்காட் டிக்கண்ணில் நின்ற மணியொக்கும்
பெண்காட் டிப்பிறைச் சென்னிவைத் தான்றிரு
வெண்காட் டையடைந் துய்ம்மட நெஞ்சமே.     5.49.1
490    கொள்ளி வெந்தழல் வீசிநின் றாடுவார்
ஒள்ளி யகணஞ் சூழுமை பங்கனார்
வெள்ளி யன்கரி யன்பசு வேறிய
தெள்ளி யன்றிரு வெண்கா டடைநெஞ்சே.     5.49.2
491    ஊனோக் குமின்பம் வேண்டி யுழலாதே
வானோக் கும்வழி யாவது நின்மினோ
தானோக் குந்தன் னடியவர் நாவினில்
தேனோக் குந்திரு வெண்கா டடைநெஞ்சே.     5.49.3
492    பருவெண் கோட்டுப்பைங் கண்மத வேழத்தின்
உருவங் காட்டிநின் றானுமை அஞ்சவே
பெருவெண் காட்டிறை வன்னுறை யும்மிடந்
திருவெண் காடடைந் துய்ம்மட நெஞ்சமே.     5.49.4
493    பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன்சடை யானுயர் ஞானங்கள்
கற்ற வன்கய வர்புரம் ஓரம்பால்
செற்ற வன்றிரு வெண்கா டடைநெஞ்சே.     5.49.5
494    கூடி னானுமை யாளொரு பாகமாய்
வேட னாய்விச யற்கருள் செய்தவன்
சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்
காட னாரடி யேஅடை நெஞ்சமே.     5.49.6
495    தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடை யான்கய வர்புரம்
எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம்
விரித்த வன்னுறை வெண்கா டடைநெஞ்சே.    5.49.7
496    பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள்

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.