LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பெரிய புராணம்

முதற் காண்டம் - மன்னிய சீர்ச் சருக்கம்

 12.1 பூசலார் நாயனார் புராணம் (4171- 4188 )
திருச்சிற்றம்பலம்

4171    அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி
ஒன்றும் அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை
நன்று என மனத்தினாலே நல்ல ஆயம் தான் செய்த
நின்ற ஊர்ப் பூசலார்தம் நினைவினை உரைக்கல் உற்றார்     12.1.1
4172    உலகினில் ஒழுக்கம் என்றும் உயர் பெரும் தொண்டை நாட்டு
நலமிகு சிறப்பின் மிக்க நான் மறை விளங்கும் மூதூர்
குல முதல் சீலம் என்றும் குறைவுஇலா மறையோர் கொள்கை
நிலவிய செல்வம் மல்கி நிகழ் திருநின்ற ஊராம்     12.1.2
4173    அருமறை மரபு வாழ அப்பதி வந்து சிந்தை
தரும் உணர்வான எல்லாம் தம்பிரான் கழல்மேல் சார
வருநெறி மாறா அன்பு வளர்ந்து எழ வளர்ந்து வாய்மைப்
பொருள் பெறு வேதநீதிக் கலை உணர் பொலிவின் மிக்கார்     12.1.3
4174    அடுப்பது சிவன்பால் அன்பர்க்காம் பணி செய்தல் என்றே
கொடுப்பது எவ்வகையும் தேடி அவர் கொளக் கொடுத்தும் கங்கை
மடுப்பொதி வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில்
எடுப்பது மனத்துக் கொண்டார் இரு நிதி இன்மை எண்ணார்     12.1.4
4175    மனத்தினால் கருதி எங்கும் மாநிதி வருந்தித் தேடி
எனைத்தும் ஓர் பொருட் பேறு இன்றி என் செய்கேன் என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம் எல்லாம்
தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டார்     12.1.5
4176    சாதனத் தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி
நாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே
ஆதரித்து ஆகமத்தால் அடிநிலை பாரித்து அன்பால்
காதலில் கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார்     12.1.6
4177    அடிமுதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம்
வடிவுறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரம் தானும் முன்னிய முழத்தில் கொண்டு
நெடிது நாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார்     12.1.7
4178    தூபியும் நட்டு மிக்க சுதையும் நல்வினையும் செய்து
கூவலும் அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கி
வாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும்
தாபரம் சிவனுக்கு ஏற்க விதித்த நாள் சாரு நாளில்     12.1.8
4179    காடவர் கோமான் கச்சிக் கல்தளி எடுத்து முற்ற
மாடெலாம் சிவனுக்கு ஆகப் பெரும் செல்வம் வகுத்தல் செய்வான்
நாடமால் அறியாதாரைத் தாபிக்கும் அந்நாள் முன்னாள்
ஏடலர் கொன்றை வேய்ந்தார் இரவிடைக் கனவில் எய்தி     12.1.9
4180    நின்ற ஊர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு
ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று
கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருளப் போந்தார்     12.1.10
4181    தொண்டரை விளக்கத் தூயோன் அருள் செயத் துயிலை நீங்கித்
திண்திறல் மன்னன் அந்தத் திருப்பணி செய்தார் தம்மை
கண்டு நான் வணங்க வேண்டும் என்று எழும் காதலோடும்
தண் தலைச் சூழல் சூழ்ந்த நின்ற ஊர் வந்து சார்ந்தான்     12.1.11
4182    அப்பதி அணைந்து பூசல் அன்பர் இங்கு அமைத்த கோயில்
எப்புடையது என்று அங்கண் எய்தினார் தம்மைக் கேட்கச்
செப்பிய பூசல் கோயில் செய்தது ஒன்று இல்லை என்றார்
மெய்ப் பெரு மறையோர் எல்லாம் வருக என்று உரைத்தான் வேந்தன்     12.1.12
4183    பூசுரர் எல்லாம் வந்து புரவலன் தன்னைக் காண
மாசிலாப் புசலார் தாம் யார் என மறையோர் எல்லாம்
ஆசில் வேதியன் இவ்வூரான் என்று அவர் அழைக்க ஓட்டான்
ஈசனார் அன்பர் தம்பால் எய்தினான் வெய்ய வேலான்     12.1.13
4184    தொண்டரைச் சென்று கண்ட மன்னவன் தொழுது நீர் இங்கு
எண் திசை யோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது இங்கு
அண்டர் நாயகரைத் தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மைக்
கண்டடி பணிய வந்தேன் கண் நுதல் அருள் பெற்று என்றான்     12.1.14
4185    மன்னவன் உரைப்பக் கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கி
என்னையோர் பொருளாக் கொண்டே எம்பிரான் அருள் செய்தாரேல்
முன்வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில்
இன்னதாம் என்று சிந்தித்து எடுத்தா வாறு எடுத்துச் சொன்னார்     12.1.15
4186    அரசனும் அதனைக் கேட்டு அங்கு அதிசயம் எய்தி என்னே
புரையறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரைப் போற்றி
விரை செறி மாலை தாழ நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து
முரசெறி தானை யோடு மீண்டு தன் மூதூர்ப் புக்கான்     12.1.16
4187    அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார் தம்மை
நன் பெரும் பொழுது சாரத் தாபித்து நலத்தினோடும்
பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணிப்
பொன் புனை மன்றுளாடும் பொன் கழல் நீழல் புக்கார்     12.1.17
4188    நீண்ட செஞ் சடையினார்க்கு நினைப்பினால் கோயில் ஆக்கி
பூண்ட அன்பிடையறாத பூசலார் பொன்தாள் போற்றி
ஆண்டகை வளவர் கோமான் உலகுய்ய அளித்த செல்வப்
பாண்டிமா தேவியார் தம் பாதங்கள் பரவல் உற்றேன்     12.1.18
திருச்சிற்றம்பலம்
12.2 மங்கையர்க்கரசியார் புராணம் (4189 - 4191 )
திருச்சிற்றம்பலம்

4189    மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம்
    வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கைமானி
    செங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள்
    தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
    எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே
    இருந்தமிழ் நாடுற்ற இடர் நீக்கித் தங்கள்
    பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார்
    கழல் எம்மால் போற்றலாமே     12.2.1
4190    பூசுரர் சூளா மணி ஆம் புகலி வேந்தர்
    போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால்
    தேசுடைய பாடல் பெறும் தவத்தினாரைச் செப்புவது
    யாம் என் அறிந்து தென்னர் கோமான்
    மாசில் புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ வழித்துணையாய்
    நெடும் காலம் மன்னிப் பின்னை
    ஆசில் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல்
    அமர்ந்திருக்க அருளும் பெற்றார்     12.2.2
4191    வரும் நாள் ஒன்றும் பிழையாத் தெய்வப் பொன்னி
    வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும்தங்கள்
    திருநாடு போற் செழியர் தென்னர் நாடு சீர்
    விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி
    ஒரு நாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு
    உடைகீளும் கோவணமும் நெய்து நல்கும்
    பெருநாமச் சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார்
    நேசர் திறம் பேசல் உற்றாம்     12.2.3
திருச்சிற்றம்பலம்
12.3 நேச நாயனார் புராணம் (4192 - 4196)
திருச்சிற்றம்பலம்

4192    சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றா
நார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும்
பார் வளர் புகழின் மிக்க பழம்பதி மதி தோய் நெற்றிக்
கார்வளர் சிகர மாடக் காம்பீலி என்பதாகும்     12.3.1
4193    அந்நகர் அதனில் வாழ்வார் அறுவையர் குலத்து வந்தார்
மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார்
பல்நாக ஆபரணர்க்கு அன்பர் பணி தலைக்கொண்டு பாதம்
சென்னியில் கொண்டு போற்றும் தேசினார் நேசர் என்பார்     12.3.2
4194    ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடிப்போதுக்கு ஆக்கி
ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு எழுத்துக்கு ஆக்கி
தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆகப்
பாங்குடை உடையும் கீளும் பழுதில் கோவணமும் நெய்வார்     12.3.3
4195    உடையொடு நல்ல கீளும் ஒப்பில் கோவணமும் நெய்து
விடையவர் அடியார் வந்து வேண்டுமாறு ஈயும் ஆற்றால்
இடையறாது அளித்து நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி
அடைவுறு நலத்தர் ஆகி அரனடி நீழல் சேர்ந்தார்     12.3.4
4196    கற்றை வேணி முடியார் தம் கழல் சேர்வதற்குக் கலந்த வினை
செற்ற நேசர் கழல் வணங்கிச் சிறப்பால் முன்னைப் பிறப்பு உணர்ந்து
பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட
கொற்ற வேந்தர் கோச்செங்கண் சோழர் பெருமை கூறுவாம்     12.3.5
திருச்சிற்றம்பலம்
12.4 கோச்செங்கட் சோழ நாயனார் புராணம் (4197- 4214 )
திருச்சிற்றம்பலம்

4197    துலையில் புறவின் நிறை அளித்த சோழர் உரிமைச் சோணாட்டில்
அலையில் தரளம் அகில் ஒடுசந்து அணி நீர்ப் பொன்னி மணி கொழிக்கும்
குலையில் பெருகும் சந்திரத் தீர்த்தத்தின் மருங்கு குளிர் சோலை
நிலையில் பெருகும் தருமிடைந்த நெடுந் தண் கானம் ஒன்று உளதால்     12.4.1
4198    அப் பூங்கானில் வெண்ணாவல் அதன் கீழ் முன்னாள் அரிதேடும்
மெய்ப் பூங்கழலார் வெளிப்படலும் மிக்க தவத்தோர் வெள்ளானை
கைப்பூம் புனலும் முகந்து ஆட்டிக் கமழ் பூங்கொத்தும் அணிந்து இறைஞ்சி
மைப்பூங் குவளைக் களத்தாரை நாளும் வழிபட்டு ஒழுகுமால்     12.4.2
4199    ஆன செயலால் திருவானைக்கா என்று அதற்குப் பெயர் ஆக
ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம் பொன் திருமுடிமேல்
கானல் விரவும் சருகு உதிரா வண்ணம் கலந்த வாய் நூலால்
மேல் நல்திரு மேற்கட்டி என விரிந்து செறியப் புரிந்து உளதால்     12.4.3
4200    நன்றும் இழைத்த சிலம்பி வலைப் பரப்பை நாதன் அடி வணங்க
சென்ற யானை அநுசிதம் என்று அதனைச் சிதைக்கச் சிலம்பிதான்
இன்று களிற்றின் கரம் சுலவிற்று என்று மீள இழைத்ததனை
அன்று கழித்த பிற்றைநாள் அடல் வெள் யானை அழித்ததால்     12.4.4
4201    எம்பிரான் தன் மேனியின் மேல் சருகு விழாமையான் வருந்தி
உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உறுத்து எழுந்து
வெம்பிச் சிலம்பி துதிக்கையினில் புக்குக் கடிப்ப வேகத்தால்
கும்ப யானை கை நிலத்தில் மோதிக் குலைந்து வீழ்ந்தது ஆல்     12.4.5
4202    தறையில் புடைப்பக் கைப்புக்க சிலம்பி தானும் உயிர் நீங்க
மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத யானைக்கும் வரம் கொடுத்து
முறையில் சிலபி தனைச் சோழர் குலத்து வந்து முன் உதித்து
நிறையில் புவனம் காத்து அளிக்க அருள் செய்து அருள நிலத்தின் கண்     12.4.6
4203    தொன்மை தரு சோழர் குலத்து அரசனாம் சுபதேவன்
தன்னுடைய பெரும் தேவி கமலவதி உடன் சார்ந்து
மன்னு புகழத் திருத்தில்லை மன்றாடும் மலர்ப் பாதம்
சென்னியுறப் பணிந்து ஏத்தித் திருப்படிக் கீழ் வழிபடு நாள்     12.4.7
4204    மக்கள் பேறு இன்மையினால் மாதேவி வரம் வேண்டச்
செக்கர் நெடுஞ் சடைக் கூத்தர் திரு உள்ளம் செய்தலினால்
மிக்க திருப்பணி செய்த சிலம்பிகுல வேந்து மகிழ்
அக் கமலவதி வயிற்றில் அணி மகவாய் வந்து அடைய     12.4.8
4205    கழையார் தோளி கமலவதி தன்பால் கருப்ப நாள் நிரம்பி
விழைவார் மகவு பெற அடுத்த வேலை அதனில் காலம் உணர்
பழையார் ஒரு நாழிகை கழித்துப் பிறக்கு மேல் இப் பசும் குழவி
உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என் ஒள்ளிழையார்     12.4.9
4206    பிறவா ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால்
உற ஆர்த்து எடுத்துத் தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றி
அறவாணர்கள் சொல்லிய காலம் அணைய பிணிவிட்டு அருமணியை
இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து என் கோச்செங்கண்ணனோ என்றாள்     12.4.10
4207    தேவி புதல்வர் பெற்று இறக்க செங்கோல் சோழன் சுபதேவன்
ஆவி அனைய அரும் புதல்வன் தன்னை வளர்த்து அங்கு மணி மகுடம்
மேவும் உரிமை முடி கவித்துத் தானும் விரும்பு பெரும் தவத்தின்
தாவில் நெறியைச் சென்று அடைந்து தலைவர் சிவலோகம் சார்ந்தான்     12.4.11
4208    கோதை வேலர் கோச்செம் கண் சோழர் தாம் இக் குவலயத்தில்
ஆதிமூர்த்தி அருளால் முன் அறிந்து பிறந்து மண் ஆள்வார்
பூதநாதன் தான் மகிழ்ந்து பொருந்தும் பெரும் தண் சிவ ஆலயங்கள்
காதலோடும் பல எடுக்கும் தொண்டு புரியும் கடன் பூண்டார்     12.4.12
4209    ஆனைக் காவில் தாம் முன்னம் அருள் பெற்று அதனை அறிந்து அங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார்
ஞானச் சார்வாம் வெண்நாவல் உடனே கூட நலம் சிறக்க
பால் நல் களத்துத் தம்பெருமான் அமரும் கோயில் பணி சமைத்தார்     12.4.13
4210    மந்திரிகள் தமை ஏவி வள்ளல் கொடை அனபாயன்
முந்தை வரும் குல முதலோராய முதல் செங்கணார்
அந்தமில் சீர்ச் சோனாட்டில் அகனாடு தொறும் அணியார்
சந்திர சேகரன் அமரும் தானங்கள் பல சமைத்தார்     12.4.14
4211    அக் கோயில் தொறும் சிவனுக்கு அமுதுபடி முதலான
மிக்க பெரும் செல்வங்கள் விருப்பினால் மிக அமைத்துத்
திக்கு அனைத்தும் தனிச் செங்கோல் முறை நிறுத்தித் தேர் வேந்தர்
முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார்     12.4.15
4212    திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம் செய்யும்
பெருமானை அடிவணங்கி பேர் அன்பு தலை சிறப்ப
உருகா நின்று உளம் களிப்பத் தொழுது ஏத்தி உறையும் நாள்
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார்     12.4.16
4213    தேவர் பிரான் திருத்தொண்டில் கோச் செங்கட் செம்பியர் கோன்
பூவலயம் பொது நீக்கி ஆண்டு அருளிப் புவனியின் மேல்
ஏவிய நல்தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற
மேவினார் திருத்தில்லை வேந்தர் திருவடி நிழல் கீழ்     12.4.17
4214    கருநீல மிடற்றார் செய்ய கழலடி நீழல் சேர
வருநீர்மை உடைய செங்கட் சோழர் தம் மலர்த்தாள் வாழ்த்தித்
தருநீர்மை இசை கொள் யாழின் தலைவராய் உலகம் ஏத்தும்
திருநீல கண்டப் பாணர் திறம் இனிச் செப்பல் உற்றேன்     12.4.18
திருச்சிற்றம்பலம்
12.5 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் (4215 - 4226 )
திருச்சிற்றம்பலம்

4215     எருக்கத்தம் புலியூர் மன்னி வாழ்பவர் இறைவன் தன் சீர்
திருத்தகும் யாழில் இட்டுப் பரவுவார் செழுஞ்சோணாட்டில்
விருப்புறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கும் கூடல்
பருப்பதச் சிலையார் மன்னும் ஆலவாய் பணியச் சென்றார்     12.5.1
4216    ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று
பாலை ஈர் ஏழு கோத்த பண்ணினில் கருவி வீக்கிக்
காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து
ஏவலார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார்     12.5.2
4217    மற்றவர் கருவிப் பாடல் மதுரை நீடு ஆலவாயில்
கொற்றவன் திருவுள்ளத்துக் கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம்
அற்றைநாள் கனவில் ஏவ அருள் பெரும் பாணனாரைத்
தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார்     12.5.3
4218    அன்பர்கள் கொண்டு புக்க பொழுதினில் அரிவை பாகன்
தன் பெரும் பணியாம் என்று தமக்கு மெய் உணர்த்தலாலே
மன் பெரும் பாணனாரும் மா மறை பாட வல்லார்
முன்பு இருந்து யாழில் கூடல் முதல்வரைப் பாடுகின்றார்     12.5.4
4219    திரிபுரம் எரித்த வாறும் தேர்மிசை நின்ற வாறும்
கரியினை உரித்த வாறும் காமனைக் காய்ந்தவாறும்
அரி அயற்கு அரிய வாரும் அடியவர்க்கு எளிய வாறும்
பரிவினால் பாடக் கேட்டுப் பரமனார் அருளினாலே     12.5.5
4220    அந்தரத்து எழுந்த ஓசை அன்பினில் பாணர் பாடும்
சந்த யாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கி அழியும் என்று
சுந்தரப் பலகை முன்நீர் இடும் எனத் தொண்டர் இட்டார்
செந்தமிழ் பாணனாரும் திரு அருள் பெற்றுச் சேர்ந்தார்     12.5.6
4221    தமனியப் பலகை ஏறித் தந்திரிக் கருவி வாசித்து
உமையொரு பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி
இமையவர் போற்ற ஏகி எண்ணில் தானங்கள் கும்பிட்டு
அமரர் நாடாளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார்     12.5.7
4222    கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம் செற்ற பெரும் திறலும்
தாயின் நல்ல பெருங் கருணை அடியார்க்கு அளிக்கும் தண் அளியும்
ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டுப் பாடக் கேட்டு அங்கண்
வாயில் வேறு வடதிசையில் வகுப்பப் புகுந்து வணங்கினார்     12.5.8
4223    மூலத் தானத்து எழுந்து அருளி இருந்த முதல்வன் தனை வணங்கிச்
சாலக் காலம் அங்கு இருந்து தம்பிரான் தன் திரு அருளால்
சீலத்தார்கள் பிரியாத திருவாரூரின் நின்றும் போய்
ஆலத்தார்ந்த கண்டத்தார் அமரும் தானம் பல வணங்கி     12.5.9
4224    ஆழி சூழும் திருத் தோணி அமர்ந்த அம்மான் அருளாலே
யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான்
காழி நாடன் கவுணியர் கோன் கமல பாதம் வணங்குதற்கு
வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த இசைப்பாணர்     12.5.10
4225    ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ்ப் பெரும் பாணர்க்கு
ஆன படியால் சிறப்பு அருளி அமரும் நாளில் அவர் பாடும்
மேன்மை பதிகத்து இசை யாழில் இடப் பெற்று உடனே மேயபின்
பானற் களத்தார் பெருமணித்தில் உடனே பரமர் தாள் அடைந்தார்     12.5.11
4226    வரும் பான்மையினில் பெரும் பாணர் மலர்த்தாள் வணங்கி வயல் சாலிக்
கரும்பார் கழனித் திருநாவலூரில் சைவக் கலை மறையோர்
அரும்பா நின்ற அணி நிலவும் பணியும் அணிந்தார் அருள் பெற்ற
சுரும்பார் தொங்கல் சடையனார் பெருமை சொல்லல் உறுகின்றோம்     12.5.12
திருச்சிற்றம்பலம்
12.6 சடைய நாயனார் புராணம் (4227)
திருச்சிற்றம்பலம்

4227    தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது தடம் புயஞ்சேர்
கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டு அருளும்
எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணயில் துணைவராம்
நம்பி ஆரூரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ     12.6.1
திருச்சிற்றம்பலம்
12.7 இசை ஞானியார் புராணம் (4228)
திருச்சிற்றம்பலம்

4228    ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார்
அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார்
இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன்
மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாதால்     12.7.1
திருச்சிற்றம்பலம்
மன்னிய சீர்ச் சருக்கம் முற்றிற்று.
13. வெள்ளானைச் சருக்கம் (4229 - 4281)
திருச்சிற்றம்பலம்
4229    மூலம் ஆன திருத்தொண்டத் தொகைக்கு முதல்வராய் இந்த
ஞாலம் உய்ய எழுந்து அருளும் நம்பி தம்பிரான் தோழர்
காலை மலர்ச் செங்கமலக்கண் கழற்று அறிவார் உடன் கூட
ஆலம் உண்டார் திருக் கயிலை அணைந்தது அறிந்தபடி உரைப்பாம்     13.1.1
4230     படியில் நீடும் பத்தி முதல் அன்பு நீரில் பணைத்து ஓங்கி
வடிவு நம்பி ஆரூரர் செம் பொன் மேனி வனப்பாகக்
கடிய வெய்ய இருவினையின் களைகட்டு எழுந்து கதிர் பரப்பி
முடிவு இலாத சிவ போகம் முதிர்ந்து முறுகி விளைந்ததால்     13.1.2
4231     ஆரம் உரகம் அணிந்தபிரான் அன்பர் அணுக்க வன் தொண்டர்
ஈர மதுவார் மலர்ச்சோலை எழில் ஆரூரில் இருக்கும் நாள்
சேரர் பெருமாள் தனை நினைந்து தெய்வப் பெருமாள் கழல் வணங்கிச்
சாரல் மலைநாடு அணைவதற்குத் தவிரா விருப்பின் உடன் போந்தார்     13.1.3
4232     நன்ன்ணர்ப் பொன்னித் திரு நாட்டு நாதர் மகிழும் திருப்பதிகள்
முன்னி இறைஞ்சி அகன்று போய் முல்லைப் படப்பைக்கு ஒல்லைமான்
துன்னி உகைக்கும் குடக் கொங்கில் அணைந்து தூய மதிவான் நீர்
சென்னி மிசை வைத்தவர் செல்வத் திருப்புக்கு ஒளியூர் சென்று அடைந்தார்     13.1.4
4233    மறையோர் வாழும் அப்பதியின் மாட வீதி மருங்கு அணைவார்
நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் நிகழ் மங்கல இயங்கள்
அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றினில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்கு
உறையும் மறையோர்களை இரண்டும் உடனே நிகழ்வது என் என்றார்     13.1.5
4234     அந்தணாளர் வணங்கி அரும் புதல்வர் இருவர் ஐயாண்டு
வந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவை
முந்த விழுங்க பிழைத்தவனை முந்நூல் அணியும் கலியாணம்
இந்த மனை மற்று அந்தமனை இழந்தார் அழுகை என்று உரைத்தார்     13.1.6
4235     இத்தன்மையினைக் கேட்டு அருளி இரங்கும் திரு உள்ளத்தினராம்
மொய்த்த முகைத்தார் வன்தொண்டர் தம்மை முன்னே கண்டு இறைஞ்ச
வைத்த சிந்தை மறையோனும் மனைவிதானும் மகிழ் இழந்த
சித்த சோகம் தெரியாமே வந்து இருந்தாள் இறைஞ்சினார்     13.1.7
4236    துன்பம் அகல முகம் மலர்ந்து தொழுவார் தம்மை முகம் நோக்கி
இன்ப மைந்தன் தனை இழந்தீர் நீரோ என்ன எதிர் வணங்கி
முன்பு புகுந்து போனது அது முன்னே வணங்க முயல் கின்றோம்
அன்பு பழுது ஆகாமல் எழுந்து அருளப் பெற்றேம் எனத் தொழுதார்     13.1.8
4237     மைந்தன் தன்னை இழந்த துயர் மறந்து நான் வந்து அணைந்து அதற்கே
சிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி தானும் சிறுவனையான்
அந்த முதலையின் வாய் நின்றும் அழைத்துக் கொடுத்த அவிநாசி
எந்தை பெருமான் கழல் பணிவேன் என்றார் சென்றார் இடர் களைவார்     13.1.9
4238     இவ்வாறு அருளிச் செய்து அருளி இவர்கள் புதல்வன் தனைக் கொடிய
வெவ்வாய் முதலை விழுங்கும் மடு எங்கே என்று வினவிக் கேட்டு
அவ்வாழ் பொய்கைக் கரையில் எழுந்தருளி அவனை அன்று கவர்
வைவாள் எயிற்று முதலை கொடு வருதற்கு எடுத்தார் திருப்பதிகம்     13.1.10
4239     உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியாமுன் உயர்ந்த
வரைப் பான்மையில் நீள் தடம்புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து
திரைப்பாய் புனலின் முதலைவாயில் உடலில்சென்ற ஆண்டுகளும்
தரைப்பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான்     13.1.11
4240     பெருவாய் முதலை கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளைதனை
உருகா நின்ற தாய் ஓடி எடுத்துக் கொடுவந்து உயிர் அளித்த
திருவாளன் தன் சேவடிக்கீழ் மறையோன் ஒடு வீழ்ந்தாள்
மருவார் தருவின் மலர் மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள்     13.1.12
4241     மண்ணினுள்ளார் அதிசயித்தார் மறையோர் எல்லாம் உத்தரியம்
விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார் வேத நாதம் மிக்கு எழுந்தது
அண்ணலாரும் அவிநாசி அரனார் தம்மை அருமறையோன்
கண்ணின் மணியாம் புதல்வனையும் கொண்டு பணிந்தார் காசினிமேல்     13.1.13
4242     பரவும் பெருமைத் திருப்பதிகம் பாடி பணிந்து போந்து அன்பு
விரவு மறையோன் காதலனை வெண்ணூல் பூட்டி அண்ணலார்
முரசம் இயம்பக் கலியாணம் முடித்து முடிச் சேரலர் தம்பால்
குரவ மலர்ப் பூந்தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார்     13.1.14
4243     சென்ற சென்ற குட புலத்துச் சிவனார் அடியார் பதிகள் தொறும்
நன்று மகிழ்வுற்று இன்புற்று நலம் சேர் தலமும் கானமும்
துன்று மணிநீர்க் கான் ஆறும் உறு கல் சுரமும் கடந்து அருளி
குன்ற வள நாட்டு அகம் புகுந்தார் குலவும் அடியேன் அகம்புகுந்தார்     13.1.15
4244     முன்னாள் முதலை வாய்புக்க மைந்தன் முன்போல் வரமீட்டுத்
தென்னாரூரர் எழுந்து அருளா நின்றார் என்று சேரர் பிரார்க்கு
அந்நாட்டு அரனார் அடியார்கள் முன்னே ஓடி அறிவிப்பப்
பொன்னார் கிழியும் மணிப்பூணும் காசும் தூசும் பொழிந்து அளித்தார்     13.1.16
4245    செய்வது ஒன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களி கூர்ந்து
என் ஐயன் அணைந்தான் எனை ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில்
சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம்
உய்ய அணைந்தான் அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்று வித்தார்     13.1.17
4246     பெருகு மதிநூல் அமைச்சர்களை அழைத்துப் பெரியோர் எழுந்து அருளப்
பொருவில் நகரம் அலங்கரித்துப் பண்ணிப் பயணம் புறப்படுவித்து
அருவி மத மால் யானையினை அணைந்து மிசை கொண்ட அரசர் பெரும்
தெருவு கழிய எதிர் வந்தார் சேரர் குலம் உய்ந்திட வந்தார்     13.1.18
4247     மலை நாட்டு எல்லை உள் புகுந்து வந்த வன் தொண்டரை வரையில்
சிலை நாட்டிய வெல் கொடித்தானைச் சேரர் பெருமான் எதிர் சென்று
தலை நாள் கமலப் போது அனைய சரணம் பணியத் தாவில் பல
கலை நாட்டு அமுத ஆரூரர் தாமும் தொழுது கலந்தனர் ஆல்     13.1.19
4248     சிந்தை மகிழும் சேரலனார் திரு ஆரூரர் எனும் இவர்கள்
தந்த மணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய்
முந்த எழும் காதலில் தொழுது முயங்கு உதியர் முதல் வேந்தர்
எந்தை பெருமான் திருவாரூர்ச் செல்வம் வினவி இன்புற்றார்     13.1.20
4249     ஒருவர் ஒருவரில் கலந்து குறைபாடு இன்றி உயர் காதல்
இருவர் நண்பின் செயல் கண்ட இரண்டு திறத்து மாந்தர்களும்
பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார் பெருமாள் தமிழின் பெருமாளை
வருகை வரையின் மிசை ஏற்றித் தாம் பின் மதிவெண் குடை கவித்தார்     13.1.21
4250     உதியர் பெருமாள் பெரும் சேனை ஓதம் கிளர்ந்தது என ஆர்ப்ப
கதிர் வெண் திரு நீற்று அன்பர் குழாம் கங்கை கிளர்ந்தது என ஆர்ப்ப
எதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளித் துகள் ஆர்ப்ப
மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணிவாயிலை அணைந்தார்     13.1.22
4251     ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைகள் அந்தணர்
வாரண மத மழை சிந்தின வாசிகள் கிளர் ஒளி பொங்கின
பூரண கலசம் மலிந்தன பூ மழை மகளிர் பொழிந்திடும்
தோரண மருகு புகுந்தது தோழர்கள் நடவிய குஞ்சரம்     13.1.23
4252     அரிவையர் தெருவில் நடம் பயில் அணி கிளர் தளிர் அடி தங்கிய
பரிபுர ஒலிகள் கிளர்ந்தன பணை முரசு ஒலிகள் பரந்தன
சுரிவனை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்து அணி
விரிதரு பவன நெடும் கடை விறல் மத கரியின் இழிந்தனர்     13.1.24
4253     தூ நறு மலர் தரளம் பொரிதூவி முன் இரு புடையின் கணும்
நான் மறை முனிவர்கள் மங்கல நாம நன்மொழிகள் விளம்பிட
மேல் நிறை நிழல் செய வெண் குடை வீசிய கவரி மருங்கு உற
வானவர் தலைவரும் நண்பரும் மாளிகை நடுவு புகுந்தனர்     13.1.25
4254    அரியணை அதனில் விளங்கிட அடல் மழ விடை என நம்பியை
வரிமலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்து பின்
உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவில என முன் செய்து
பரிசனம் மனம் மகிழும்படி பல பட மணி நிதி சிந்தினர்     13.1.26
4255     இன்ன தன்மையில் உதியர்கள் தலைவர்தாம் இடர் கெட முனைப்பாடி
மன்னர் தம் உடன் மகிழ்ந்து இனிது உறையும் நாள் மலை நெடு நாடுஎங்கும்
பன்னகம் புனை பரமர் தம் திருப்பதி பல உடன் பணிந்து ஏத்திப்
பொன் நெடும் தட மூது எயில் மகோதையில் புகுந்தனர் வன்தொண்டர்     13.1.27
4256     ஆய செய்கையில் நாள் பல கழிந்தபின் அரசர்கள் முதல் சேரர்
தூய மஞ்சனத் தொழில் இனின் தொடங்கிடத் துணைவராம் வன்தொண்டர்
பாய கங்கை சூழ் நெடும் சடைப் பரமரைப் பண்டுதாம் பிரிந்து எய்தும்
சேய நல்நெறி குறுகிடக் குறுகினார் திருவஞ்சைக் களம் தன்னில்     13.1.28
4257     கரிய கண்டர் தம் கோயிலை வலம் கொண்டு காதலால் பெருகு அன்பு
புரியும் உள்ளத்தர் உள்ளணைந்து இறைவர் தம் பூம் கழல் இணை போற்றி
அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை
சரியவே தலைக்குத் தலை மாலை என்று எடுத்தனர் தமிழ் மாலை     13.1.29
4258     எடுத்த அத்திருப் பதிகத்தின் உள் குறிப்பு இவ்வுலகினில் பாசம்
அடுத்த வாழ்க்கையை அறுத்திட வேண்டும் என்று அன்பர் அன்பினில் பாடக்
கடுத்த தும்பிய கண்டர் தம் கயிலையில் கணத்தவருடன் கூடத்
தடுத்த செய்கைதான் முடிந்திடத் தங்கு அழல் சார்பு தந்து அளிக்கின்றார்     13.1.30
4259     மன்றலந் தரு மிடைந்த பூம் கயிலையில் மலை வல்லியுடன் கூட
வென்றி வெள்விடைப் பாகர் தாம் வீற்று இருந்து அருளிய பொழுதின் கண்
ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள் யானையின் உடன் ஏற்றிச்
சென்று கொண்டு இங்கு வாரும் என்று அயன் முதல் தேவர் கட்கு அருள் செய்தார்     13.1.31
4260     வான நாடர்கள் அரி அயன் முதலினோர் வணங்கி முன் விடை கொண்டு
தூ நலம் திகழ் சோதி வெள்ளானையும் கொண்டு வன் தொண்டர்க்குத்
தேன் அலம்பு தண் சோலை சூழ் மாகோதையில் திருவஞ்சைக் களம் சேரக்
கானிலங் கொள வலம் கொண்டு மேவினார் கடிமதில் திருவாயில்     13.1.32
4261     தேவர் தங்குழாம் நெருங்கிய வாய்தலில் திருநாவல் ஊரர்தம்
காவல் மன்னரும் புறப்பட எதிர்கொண்டு கயிலை வீற்று இருக்கின்ற
பூவலம்பு தண் புனல் சடை முடியவர் அருளி இப் பாடு என போற்றி
ஏவல் என்றபின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்து எழுந்து எதிரேற்றார்     13.1.33
4262     ஏற்ற தொண்டரை அண்டர் வெள்ளானையின் எதிர் வலம் கொண்டு ஏற்ற
நாற்றடங் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்பப்
போற்றி வானவர் பூமழை பொழிந்திடப் போதுவார் உயிர் எல்லாம்
சாற்றும் மாற்றங்கள் உணர் பெரும் துணைவரை மனத்தினில் கொடு சார்ந்தார்     13.1.34
4263     சேரர் தம்பிரான் தோழர் தஞ்செயல் அறிந்து அப்போதே
சார நின்றதோர் பரியினை மிசைக் கொண்டு திருவஞ்சைக் களம்சார்வார்
வீர வெண் களிறுகைத்து விண்மேல் செலும் மெய்த்தொண்டர் தமைக் கண்டார்
பாரில் நின்றிலர் சென்றதம் மனத்தொடு பரியும் முன் செலவிட்டார்     13.1.35
4264     விட்ட வெம்பரிச் செவியினில் புவி முதல் வேந்தர் தாம் விதியாலே
இட்டமாம் சிவ மந்திரம் ஓதலின் இரு விசும்பு எழப் பாய்ந்து
மட்டலர்ந்த பைந் தெரியல் வன் தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தை
முட்ட எய்தி வலம் கொண்டு சென்றது மற்று அதன் முன்னாக     13.1.36
4265     உதியர் மன்னவர் தம் பெரும் சேனையின் உடன் சென்ற படைவீரர்
கதிகொள் வாசியில் செல்பவர் தம்மைத்தங்கட்புலப்படும் எல்லை
எதிர் விசும்பினில் கண்டு மின் கண்டிலர் ஆதலின் எல்லாரும்
முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் முறை முறை உடல் வீழ்ந்தார்     13.1.37
4266     வீரயாக்கையை மேல் கொண்டு சென்று போய் வில்லவர் பெருமானைச்
சார முன் சென்று சேவகம் ஏற்றனர் தனித் தொண்டர்மேல் கொண்ட
வாரும் மும் மதத்து அருவி வெள்ளானைக்கு வயப் பரி முன் வைத்துச்
சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலைத் திசை நோக்கி     13.1.38
4267     யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும்
தானை முன் செலத் தானெனை முன் படைத்தான் எனும் தமிழ் மாலை
மானவன் தொண்டர் பாடி முன் அணைந்தனரர் மதி நதி பொதி வேணித்
தேன் அலம்பு தண் கொன்றையார் திருமலைத் தென்திசைத் திருவாயில்     13.1.39
4268     மாசில் வெண்மை சேர் பேர் ஒளி உலகு எலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மை
ஆசில் அன்பர் தம் சிந்தை போல் விளங்கிய அணி கிளர் மணிவாயில்
தேசுதங்கிய யானையும் புரவியும் இழிந்து சேண் இடைச் செல்வார்
ஈசர் வெள்ளி மா மலைத் தடம் பல கடந்து எய்தினார் மணிவாயில்     13.1.40
4269     அங்கண் எய்திய திரு அணுக்கன் திரு வாயிலின் அடல் சேரர்
தங்கள் காவலர் தடை உண்டு நின்றனர் தம்பிரான் அருளாலே
பொங்கு மா மதம் பொழிந்த வெள்ளானையின் உம்பர் போற்றிடப் போந்த
நங்கள் நாவலூர் காவலர் நண்ணினார் அண்ணலார் திருமுன்பு     13.1.41
4270     சென்று கண்ணுதல் திருமுன்பு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து சேண் இடை விட்டு
அகன்று கோவினைக் கண்டு அணைந்தது எனக் காதலின் விரைந்து எய்தி
நின்று போற்றிய தனிப் பெரும் தொண்டரை நேர் இழை வலப் பாகத்து
ஒன்றும் மேனியர் ஊரனே வந்தனை என்றனர் உலகுய்ய     13.1.42
4271    அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்ட தொடக்கினை நீக்கி
முடிவிலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர்
படியும் நெஞ்சொடு பல் முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்த
வடிவு நின்றது போன்று இன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன் தொண்டர்     13.1.43
4272     நின்ற வன் தொண்டர் நீர் அணி வேணிய நின் மலர்க் கழல் சாரச்
சென்று சேரலன் திரு மணி வாயிலின் புறத்தினன் எனச் செப்ப
குன்ற வில்லியார் பெரிய தேவரை சென்று கொணர்க என அவர் எய்தி
வென்றி வானவர்க்கு அருளிப்பாடு என அவர் கழல் தொழ விரைந்து எய்தி     13.1.44
4273     மங்கை பாகர் தம் திரு முன்பு சேய்த்து ஆக வந்தித்து மகிழ்வு எய்திப்
பொங்கும் அன்பினில் சேரலர் போற்றிடப் புதுமதி அலைகின்ற
கங்கைவார் சடைக் கயிலை நாயகர் திருமுறுவலின் கதிர் காட்டி
இங்கு நாம் அழையாமை நீ எய்தியது என் என அருள் செய்தார்     13.1.45
4274     அரசர் அஞ்சலி கூப்பி நின்று அடியனேன் ஆரூரர் கழல் போற்றிப்
புரசை யானை முன் சேவித்து வந்தனன் பொழியும் நின் கருணைத் தொண்டு
இரை செய் வெள்ளமுன் கொடுவந்து புகுதலின் திருமுன்பு வரப் பெற்றேன்
விரைசெய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று     13.1.46
4275     பெருகு வேதமும் முனிவரும் துதிப்பு அரும் பெருமையாய் உனை அன்பால்
திருஉலாப் புறம் பாடினேன் திருச்செவி சாத்திடப் பெற வேண்டும்
மருவு பாசத்தை அகன்றிட வன்தொண்டர் கூட்டம் வைத்தாய் என்ன
அருளும் ஈசரும் சொல்லுக என்றனர் அன்பரும் கேட்பித்தார்     13.1.47
4276     சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருஉலாப் புறம் கொண்டு
நாரி பாகரும் நலம் மிகு திரு அருள் நயப்புடன் அருள் செய்வார்
ஊரன் ஆகிய ஆலால சுந்தரன் உடன் அமர்ந்து இருவீரும்
சார நங்கண் நாதராம் தலைமையில் தங்கும் என்று அருள் செய்தார்     13.1.48
4277     அன்ன தன்மையில் இருவரும் பணிந்து எழுந்து அருள் தலை மேல் கொண்டு
மன்னும் வன்தொண்டர் ஆலால சுந்தரர் ஆகித் தாம் வழுவாத
முன்னை நல்வினைத் தொழில் தலை நின்றார் முதல் சேரர் பெருமானும்
நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்பு உறு தொழில் பூண்டார்     13.1.49
4278     தலத்து வந்துமுன் உதயம் செய் பரவையார் சங்கிலியார் என்னும்
நலத்தின் மிகக் கவர் வல்வினைத் தொடக்கற நாயகி அருளாலே
அலத்த மெல்லடிக் கமலினியாருடன் அனிந்தை யாராக்஢
மலைத் தனிப் பெருமான் மகள் கோயிலில் தம் தொழில் வழிநின்றார்     13.1.50
4279     வாழி மாதவர் ஆலால சுந்தரர் வழி இடை அருள் செய்த
ஏழிசைத் திருப்பதிகம் இவ்வுலகினில் ஏற்றிட எறி முன்நீர்
ஆழி வேந்தன் ஆம் வருணனுக்கு அளித்திட அவனும் அவ் அருள் சூடி
ஊழியில் தனி ஒருவர் தம் திருவஞ்சைக் களத்தில் உய்த்து உணர்வித்தான்     13.1.51
4280     சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அத் திருஉலாப் புறம் அன்று
சாரல் வெள்ளியங்கயிலையில் கேட்ட மா சாத்தனார் தரித்து இந்தப்
பாரில் வேதியர் திருப்பிடவூர் தனில் வெளிப்படப் பகர்ந்து எங்கும்
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே     13.1.52
4281    என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுளார் அடியார் அவர் வான் புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்     13.1.53
திருச்சிற்றம்பலம்

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.