LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பெரிய புராணம்

முதற் காண்டம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம்

 11. 1 பத்தாராய்ப் பணிவார் புராணம் (4147-4154)
திருச்சிற்றம்பலம்

4147    ஈசருக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால்
கூசி மிகக் குது குதுத்துக் கொண்டாடி மனம் மகிழ்வுற்று
ஆசையினால் ஆவின்பின் கன்று அணைந்தால் போல் அணைந்து
பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார்     11.1.1
4148     தாவரிய அன்பினால் சம்பு வினை எவ்விடத்தும்
யாவர்களும் அர்ச்சிக்கும் படி கண்டால் இனிது உவந்து
பாவனையால் நோக்கினால் பலர் காணப் பயன் பெறுவார்
மேவரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார்     11.1.2
4149     அங்கணனை அடியாரை ஆராத காதலினால்
பொங்கிவரும் உவகையுடன் தாம் விரும்பிப் பூசிப்பார்
பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள்
தங்களுக்கும் சார்வரிய சரண் சாரும் தவம் உடையார்     11.1.3
4150    யாதானும் இவ் உடம்பால் செய்வினைகள் ஏறுயர்த்தார்
பாதார விந்தத்தின் பால் ஆக எனும் பரிவால்
காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கருக்குழியில்
போதார்கள் அவர் புகழ்க்குப் புவனம் எல்லாம் போதாவால்     11.1.4
4151    சங்கரனைச் சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய்
அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால்
கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திருமுடியார்
செங்கமல மலர்ப் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள்     11.1.5
4152    ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிகக் களிப்பு எய்தி
பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந் தாரை
மாசிலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிப்பக்
கூசியே உடல் கம்பித்திடுவார் மெய்க் குணம் மிக்கார்     11.1.6
4153    நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம் ஒரு காலும் மறவாமை
குன்றாத உணர்வு உடையார் தொண்டராம் குணம் மிக்கார்     11.1.7
4154    சங்கரனுக்காளான தவம் காட்டித் தாம் அதனால்
பங்கம் அறப் பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார்
அங்கணனைத் திருவாரூர் ஆள்வானை அடிவணங்கிப்
பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய்ப் போற்றுவார்     10.1.8
திருச்சிற்றம்பலம்
11.2 பரமனையே பாடுவார் புராணம் (4155 - 4156 )
திருச்சிற்றம்பலம்

4155    புரம் மூன்றும் செற்றானைப் பூணாகம் அணிந்தானை
உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானைக்
கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானை
பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம்     11.2.1
4156    தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன
மன்றின் இடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக
ஒன்றிய மெய் உணர் வோடும் உள் உருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார்     11.2.2
திருச்சிற்றம்பலம்
11.3 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம் (4157 )
திருச்சிற்றம்பலம்

4157     காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதம் கடந்து
பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்தத்து
ஆரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள்
ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார்     11.3.1
திருச்சிற்றம்பலம்
11.4 திருவாரூர் பிறந்தார் புராணம் (4158 - 4159 )
திருச்சிற்றம்பலம்

4158    அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான்
மருவாருங் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும்
திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத் தொண்டு தெரிந்து உணர
ஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமை அதோ     11.4.1
4159    திருக் கயிலை வீற்று இருந்த சிவபெருமான் திருக் கணத்தார்
பெருக்கிய சீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆதலினால்
தருக்கிய ஐம் பொறி அடக்கி மற்றவர்தந் தாள் வணங்கி
ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே     11.4.2
திருச்சிற்றம்பலம்
11.5 முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் (4160 - 4162 )
திருச்சிற்றம்பலம்

4160    எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதி கரித்து
மெய்ப் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே
அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர்     11.5.1
4161    தெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம்
வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின்
விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அப்
பெரும் தகையார் குலப் பெருமை ஆம் புகழும் பெற்றியதோ     11.5.2
4162    நாரணர்க்கும் நான் முகர்க்கும் அறிய ஒண்ணா
    நாதனை எம் பெருமானை ஞானம் ஆன
    ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும்
    அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின்
    காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள்
    கமல மலர்க் கழல் வணங்கிக் கசிந்து சிந்தைப்
    பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல்
    அறிந்தவாறு புகலல் உற்றேன்     11.5.3
திருச்சிற்றம்பலம்
11.6 முழுநீறு பூசிய முனிவர் புராணம் (4163 - 4168)
திருச்சிற்றம்பலம்

4163    ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன்
    எம் பெருமான் நீர் அணிந்த வேணிக்
    காதார் வெண் திருக் குழையான் அருளிச் செய்த
    கற்பம் அநு கற்பம் உப கற்பம் தான் ஆம்
    ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி
    ஆமென்று முன் மொழிந்த மூன்று பேதம்
    மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது
    நம் இரு வினைகள் கழிவதாக     11.6.1
4164    அம்பலத்தே உலகுய்ய ஆடும் அண்ணல் உவந்து
    ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள்
    இம்பர் மிசை அநா மயமாய் இருந்த போதில் ஈன்று
    அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று
    உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த
    சிவாங்கிதனில் உணர்வுக்கு எட்டா
    எம்பெருமான் கழல் நினைந்து அங்கிட்ட தூ நீறு
    இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும்     11.6.2
4165    ஆறணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு
    அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த
    நீரணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம்
    உறப் பிடித்து ஓம நெருப்பில் இட்டுச்
    சீரணியும்படி வெந்து கொண்ட செல்வத் திருநீறாம்
    அநு கற்பம் தில்லை மன்றுள்
    வாரணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்கக்
    கூத்தர் மொழி வாய்மை யாலே     11.6.3
4166    அடவி படும் அங்கியினில் வெந்த நீறும்
    ஆனிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும்
    இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி
    கைகள் சுட்ட எரி பட்ட நீறும்
    உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை
    திகழும் மந்திரம் கொண்டு உண்டையாக்கி
    மடம் அதனில் பொலிந்து இருந்த சிவ அங்கி
    தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும்     11.6.4
4167    இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே
    இரு திறமும் சுத்தி வரத் தெறித்த பின்னர்
    அந்தம் இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை
    அறிவித்த குரு நன்மை அல்லாப் பூமி
    முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும்
    மெய்ப் புண்டரம் சந்திரனில் பாதி
    நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர்
    அடியார் அணிவர் நன்மையாலே     11.6.5
4168    சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின்
    நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை
    நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர்
    நித்த நியமத்து நிகழ் அங்கி தன்னில்
    பூதியினைப் புதிய ஆசனத்துக் கொண்டு புலி
    அதளின் உடையானைப் போற்றி நீற்றை
    ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர்
    முழுவதும் மெய் அணிவர் அன்றே     11.6.6
திருச்சிற்றம்பலம்
11.7 அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் (4169 - 4170 )
திருச்சிற்றம்பலம்

4169    மூவேந்தர் தமிழ் வழங்கு நாட்டுக்கு அப்பால்
    முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்
    நா வேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும்
    நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும்
    பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை
    புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த
    சேவேந்து வெல் கொடியான் அடிச்சார்ந்தாரும்
    செப்பிய அப்பாலும் அடிச் சார்ந்தார் தாமே     11.7.1
4170    சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
செற்றார் தம் புரம் எரித்த சிலையார் செல்வத்
    திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில்
    சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்டதொகு
    நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு
    முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல்
    கணமே உடன் செல்ல முடியாப் பேறு
    பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னைப்
    பிறவியினில் செய்த தவம் பெரியவாமே     11.7.2

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.