LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

எரிவாயுக் குழாய் பதிப்பு: சென்னையில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தின் 2 ஆம்நாள் விவாதம்.:

கூட்டத்திற்கு தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

வேலுச்சாமி, விவசாயி : விவசாயத்தை தவிர வேறு தொழில் எங்களுக்கு தெரியாத நிலையில் தற்போது விளைநிலங்களான வாழ்வாதாரத்தை அழித்தால், வாழ்வதற்கான தகுதியை நாங்கள் இழக்கிறோம். இதனால் தற்கொலை செய்து கொள்ள, கருணை அடிப்படையில் அனுமதிக்க கோரி ஜனாதிபதிக்கு மனு அளிப்பதை தவிர வேறு வழி எங்களுக்கு தெரியவில்லை.

சின்னராசு, விவசாயி : என்னுடைய நிலத்தில் குழாய் பதிப்பதற்காக நஷ்டஈடாக ரூ.102க்கு கெயில் நிறுவனம் காசோலை வழங்கி உள்ளது. எங்களுக்கு பணம் வேண்டாம், எங்கள் நிலம் தான் வேண்டும். நிலத்தில் பதிக்கப்படும் குழாய்க்கு எதாவது சேதம் ஏற்பட்டால் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்குவதாகவும் மிரட்டுகின்றனர். எங்கள் நிலத்தையும் கொடுத்துவிட்டு, தண்டனையையும் பெற வேண்டும் என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆபத்து இதோடு நிற்காமல் எங்கள் சந்ததியினரையும் பாதிக்கும் வகையில் உள்ளதால் மாற்று வழியை கடைப்பிடிக்க வேண்டும்.

பழனிச்சாமி, விவசாயி : எங்கள் நிலத்திற்கு பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களை அரசு அளித்துள்ளது, நாங்களும் வரி செலுத்தி வருகிறோம். இந்நிலையில் எங்களை கேட்காமல் நிலத்தை சேதப்படுத்தினால், பட்டா, சிட்டாவை அரசிடமே அளித்துவிடுகிறோம் என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.

சுதா எம்.பி.ஏ, விவசாயி : விவசாய விளை நிலங்களைத் தவிர்த்து சாலைகள் வழியாக்க் குழாய்களைக் கொண்டு செல்ல தொழில் நுட்ப சாத்திய கூறு இல்லை என்று கெயில் நிறுவனம் கூறுகிறது. 1957ம் ஆண்டு ஆழியாறு அணையிலிருந்து மலைகளை குடைந்து குடிதண்ணீரை அப்போதைய முதல்–அமைச்சர் காமராஜர் கொண்டு வந்தார். அதேபோல் கடலுக்கு அடியில் பல்வேறு வசதிகள் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அப்போது எல்லாம் தொழில்நுட்ப சாத்திய கூறுகள் இருந்த போது, தற்போது நிலத்தில் குழாய் பதிக்க தொழில்நுட்ப சாத்திய கூறு இல்லை என்கின்றனர். தேவைப்பட்டால் விவசாயிகளான நாங்கள் குழாய் பதிப்பதற்காக வரைபடங்களை தயாரித்து தருகிறோம்.

பொன்னுசாமி, விவசாயி : எரிவாயு குழாய் எங்கள் நிலத்தில் பதிக்கபோகிறார்கள் என்று தெரிந்த உடன் என்னுடைய மகனுக்கு பெண்வீட்டார் பெண் தர மறுக்கின்றனர். எனவே இந்த திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்ற வேண்டும். தவறினால் உயிரை விடுவதை தவிர விவசாயிகளுக்கு வேறு வழி தெரியவில்லை.

மு.ஈசன், தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு : கர்நாடக மாநிலம் தாபூல் முதல் பெங்களூரு வரையிலான எரிவாயு குழாய் திட்டத்தில், கர்நாடகாவில் மட்டும் சுமார் 400 கிலோ மீட்டர் தூரம் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இங்கு தவிர்க்க இயலாத இடத்தில் மட்டுமே விளைநிலங்களில் வழியாக பதிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக விவசாயிகளிடம் கெயில் நிறுவனம், கர்நாடக அரசும் கருத்து கேட்டுள்ளது. வழிகாட்டி மதிப்பிலிருந்து 6 மடங்கு இழப்பீடு வழங்குவதுடன், பயிர்கள் மற்றும் மரங்களுக்கு தனியாக ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட்டு, இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. பெங்களூர் நகரின் சுற்றுவட்ட சாலையில் சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடுவிலும் ஓரத்திலும் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கேரளா, கர்நாடக மாநிலம் போன்று தமிழகத்திலும் நெடுஞ்சாலை ஓரத்தில் பணியை கெயில் நிறுவனம் மேற்கொள்ள வேண்டும்.

செ.நல்லசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு : இந்த திட்டத்தின் ஒரு பகுதியான கொச்சின் – மங்களூரு வரை சுமார் 300 கிலோ மீட்டர் நீளமுள்ள திட்டப்பாதைக்கு கேரள மாநில விவசாயிகளின் தீவிர எதிர்ப்பு காரணமாகவும், கேரள மாநில அரசு, விவசாயிகளுக்கு எதிராக போலீஸ் பாதுகாப்பு அளிக்க மறுத்துவிட்டதாலும், கெயில் நிறுவனம் இத்திட்டத்தை கேரள மாநிலத்தில் கைவிட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிராக யாரும் செயல்படக் கூடாது. தொடர்ந்து நிலங்களை பறித்தால் படித்தவர்களும் தீவிரவாதிகளாக மாறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை, மேலும் பாராளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் தமிழக அரசுக்கு எதிராக விவசாயிகளை திருப்பும் வேலையில், மத்திய அரசுடன் இணைந்து கெயில் நிறுவனம் செயல்படுகிறதா? என்றும் விவசாயிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வெங்கடாச்சலம், விவசாயி: எனக்கு சொந்தமான விவசாய நிலத்துக்குள் 150 போலீசாருடன் அதிகாரிகள் வந்தனர். நிலம் முழுவதும் தென்னை மரம் வைத்துள்ளேன். அனைத்து மரத்தையும் எடுத்து விட்டு நடுவில் குழாய் பதிக்க இருக்கிறோம் என்றனர். 2 அடி குழாய் பதிக்க 67 அடி அளவு நிலம் கையகப்படுத்துகிறார்கள். விவசாய நிலத்தை விட்டு விட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

நாராயணன், விவசாயி: மேற்கு வங்க மாநிலம் சிங்கூர் பகுதியில் கார் கம்பெனி அமைப்பதற்காக விவசாய நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்தனர். அங்குள்ள விவசாயிகள் நக்சலைட்டுகளாக மாறி நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரை அடித்து விரட்டினர். அதேபோன்று எங்கள் பகுதியிலும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பு அளிக்காமல் கெய்ல் நிறுவன அதிகாரிகள் நடந்து கொண்டால் நாங்களும் நக்சலைட்டுகளாக மாறுவோம். திருப்பூர் மாவட்ட விவசாயிகளை நக்சலைட்டுகளாக மாற்றி விடாதீர்கள்' ( விவசாயிகள் அனைவரும் கைதட்டினார்கள்)

பாபு, விவசாயி: கொச்சியில் இருந்து தமிழகம் வழியாக பெங்களூருக்கு எரிவாயு குழாய் பதிக்கப்பட உள்ளது. இதனால் பெங்களூரில் உள்ள தொழில் அதிபர்கள் பயன் பெறுவார்கள். தமிழக விவசாய பயிர்களை காக்க தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்கு எதற்காக நமது விவசாய நிலத்தையும் கொடுத்து, குழாய் பதிக்க இடம் கொடுக்க வேண்டும்''


விவசாயிகள் கெய்ல் நிறுவன அதிகாரிகளிடம் கேள்வி கேட்க முயன்ற போது, ‘நாங்கள் எங்களது கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக தமிழக அரசிடம்தான் தெரிவிப்போம்'' என்று கூறிவிட்டனர்.


ஒரு விவசாயி: எனது நிலத்தில் இருந்த 3 தென்னை மரங்களை வெட்டி விட்டனர்.  இதற்கு நஷ்டஈடாக ரூ.112 செக் அனுப்பியுள்ளனர். 20 வருடமாக வளர்த்த மரத்துக்கு இதுதான் கெய்ல் நிறுவனத்தின் பரிசா?

சுதாகர் விவசாயி: கடந்த இரண்டு மாதத்துக்கு முன் 100க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசாருடன் எங்கள் பகுதி விவசாய நிலத்துக்குள் புகுந்து ஆயிரக்கணக்கான காய்க்கும் மரங்களை புல்டோசர் உதவியுடன் வெட்டி போட்டனர். விவசாய நிலத்தை சமப்படுத்தி, சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு எரிவாயு குழாயை பூமிக்குள் பதித்து விட்டனர். போலீசார் மற்றும் தமிழக அதிகாரிகள் உதவியுடன்தான் விவசாய நிலங்களை கையகப்படுத்தினார்கள். அப்போதெல்லாம் தமிழக அரசு ஒன்றும் செய்யவில்லை. விவசாயிகளும் தொடர்ந்து போராடி வந்தோம்.. இந்நிலையில் கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதா தலையீட்டின் பேரில் குழாய் பதிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே தலையிட்டிருந்தால் எனது நிலத்தில் இருந்த 50 தென்னை, பலா, மா மரங்கள் வெட்டப்பட்டிருக்காது. விவசாயிகளுக்கு அரசு எந்த உதவியும் செய்ய வேண்டாம். தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும். நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள் என்று சொல்லிவிட்டு அவர்களையே ரோட்டுக்கு கொண்டு வந்து விட்டால் என்ன அர்த்தம்?''

by MAYIL   on 08 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.