LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

மரபியல் காட்டும் சமுதாயம்

தொல்காப்பியர் காலச் சமுதாயத்தினை இருவகையாகப் பிரிக்கலாம். அவற்றுள் ஒன்று இலக்கியச் சமுதாயம்; மற்றொன்று உலக வழக்குச் சமுதாயம். இச்சமுதாயத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைப் பாகுபாடுகள் இருந்தன.

அந்தணர்

மக்கட் சமுதாயத்தில் அந்தணர் சிறப்பிடம் பெற்றிருந்தனர். அந்தணரும், அரசரும் சமநிலையில் வாழ்ந்தனர். அரசர்கள் அந்தணரைப் போற்றினர். நிலவுடைமையாளர்களாக மாற்றினர். அரசியல் வாழ்வில் அதிகாரம் மிக்க பொறுப்புகளை வழங்கிப் பெருமைப்படுத்தினர். மேலும் வள்ளுவர்,

''அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்''

எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கு அந்தணரின் சிறப்பைக் காணலாம்.

தொல்காப்பியர் சமுதாய அமைப்புப் பற்றிக் குறிப்பிடுகையில் அந்தணரை முதலில் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து அந்தணர் சமுதாயத்தில் உயர்ந்தவராகக் கருதப்பட்டனர் என்பதை அறியலாம்.

தொல்காப்பியர் அந்தணர்க்கு உரியவை எவையென என்பதை கூறியுள்ளார். இதனை,

''நூலே கரக முக்கோல் மனையே
ஆயுங்காலை யந்தணர்க்குரிய''
(மர.70)

என்னும் நூற்பாவால் அறியலாம்.

நூல், கரகம், முக்கோல், மனை என்பன அந்தணர்க்குரியவை. கரகமும், முக்கோலும் துறவு பூண்ட அந்தணர்க்கு மட்டுமே உரியன. இதனை,


''எறித்தகு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ
லுறித் தாழ்ந்த கரகமு முறைசான்ற முக்கோலும்''
(கலி.9)

என்ற சங்க இலக்கிய செய்யுளால் அறியலாம்.

எனவே, பிறப்பாலாமல் தகுதியாலும், புலமையாலும், துறவுத் தன்மையாலும், அந்தணர் என்ற பிரிவு தொல்காப்பியரால் கருதப்பட்டது எனலாம்.

அரசர்

தொல்காப்பியர் அந்தணர்க்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுபவர் அரசர் என்பார். தமிழகத்தில் ஆட்சிமுறை என்று ஏற்பட்டதோ அன்றுமுதல் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்துள்ளதை அறியமுடிகிறது. மண்ணாளும் அரசர்களை மக்கள் இறைவன் என்று கருதிப் போற்றினர். அதற்கேற்ப மன்னர்களும் வாய்மை தவறாது செம்மையாக செங்கோலாட்சியைச் செலுத்தினர். மக்கள் நல்வாழ்வு நிலைபெற அவர்கள் வாழும் நாட்டை நிலைபெறக் காக்குங் கடமை பூண்ட ஆட்சித்தலைவன் மன்னன் என நன்கு மதித்துப் போற்றப்பெற்றான். தொல்காப்பியர் அரசர்க்கென்று வரையறுக்கப்பட்ட பொருட்களை,

''படையும் கொடியும் குடையும் முரசும்
நடையில் புரவியும் களிறும் தேரும்
தாரும் முடியும் ஆர்வன பிறவும்
தெரிவுகோள் செங்கோல் அரசர்க்குரிய''
(மர.72)

என்னும் நூற்பாவால் சுட்டியுள்ளார்.

வணிகர்

வாணிகம் செய்யும் வாழ்க்கையை உடையவர் அனைவரும் வணிகர்கள் ஆவர். வணிகர்கள் வைசிகர் என அழைக்கப்பட்டனர். வணிகர்கள் நாகரிகம் வளர்ச்சியடையாத காலத்தே தங்கள் பண்டப் பொதிகளை எருதுகள் மீது ஏற்றிக் கொண்டும், கப்பல்கள் மூலம் கொண்டு சென்றும், கடல் வாணிபம் செய்து சிறந்திருந்தனர். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் தமக்கு வேண்டிய பொருட்களைப் பெற்று உள்நாட்டு வாணிபத்தையும் வளர்த்து வந்தனர்.

வணிகர்கள் ஏற்றுமதி இறக்குமதியில் சிறப்புற்றிருந்தனர். மேலும் வணிகர்கள் எட்டு வகையான உணவுப் பொருட்களை வணிகத்திற்குரிய பொருட்களாகக் கொண்டிருந்தனர். இதனையே அவர்களது உயிராகக் கொண்டிருந்தமையால் அவர்களை வணிகர் என்ற பெரும் பிரிவுக்குள் அடக்கியுள்ளனர்.

''கண்ணியும் தாரும் எண்ணினர்ஆண்டே''
(மர.81)

என்று குறிப்பிட்டுள்ளார்.

வேளாளர்

வேளாளர் என்போர் மருத நிலத்தில் வாழ்ந்து உழவுத் தொழில் செய்து வந்த மக்களாவர். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்னும் சிறப்புக்குரிய உழுதுண்ணும் வேலையைச் செய்பவர்கள் வேளாளர் எனப்பட்டனர். இலக்கியங்கள் அவர்களை உழவர் என்றும் பகர்கின்றன. சான்று பகர்கின்றன.

தொல்காப்பியம் வேளாளர்க்கு உழவுத் தொழில் உரியது என்பதை

''வேளாண் மாந்தருக்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி''
(மர.82)

என்னும் சுட்டியுள்ளது. மேலும் தொல்காப்பியரின்


''மேலோர் முறைமை நால்வருக்கும் உரித்தே''
(அகம்.29)


''மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப''
(அகம்.30)


''வேந்துவிடும் தொழிலில் படையும் கண்ணியும்
வாய்ந்தன ரென்ப அவர் பெரும் பொருளே''
(மர.83)

என்னும் நூற்பாக்கள் வேளாளர் படைத்தலைவராகவும், குறுகிய மன்னராகவும் சிறப்புப் பெறுவதற்கு உரியவர் என்பதை உணர்த்துகின்றன.

அந்தணரும் அரசரும்

அந்தணர்க்கு உரியவையாக கூறப்பட்டவற்றுள் அரசருக்குப் பொருந்துவனவாக வரும் பொருட்களும் உண்டு. இதனை,

''அந்தணாளர்க் குரியவு மரசர்க்கு
ஒன்றிய வரூஉம் பொருளுமா ருளவே''

என்ற நூற்பாவால் அறியலாம். முந்நூலும் மனையும் அந்தணர்க்கும் மட்டுமின்றி அரசர்க்கும் வரும் என்பதாகும்.

அரசர் இல்லாத காலத்து அந்தணர் அரசப் பொறுப்பை ஏற்றனர். இச்செய்தியை,

''அந்த ணாளர்க் கரசுவரை வின்றே''
(மர.75)

இந்நூற்பா சுட்டிக் காட்டுகின்றது.
அரசரும் வணிகரும்
நால்வகையினரில் படைவகை பெறுபவர் அரசரும் வணிகரும் ஆவர் இதனை,

''இடையிரு வகையோர் அல்லது நாடின்
படைவகை பெறாஅர் என்மனார் புலவர்''
(மர.78)

என்று தொல்காப்பியம் சுட்டியுள்ளது. இதன்படி அரசரும், வணிகரும் அன்றி முதலில் நிற்கும் அந்தணரும் இறுதியில் நிற்கும் வேளாளரும் படைவகைகளைப் பெறார் என்பது தொல்காப்பியர் கூற்று.

வணிகரும் வேளாளரும்

வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், வாள் என்பன மன்னனால் ஏவப்பட்ட ஏனோர்க்கும் உரியனவாகும். இதனைத் தொல்காப்பியர்,

''வில்லும் வேலும் கழலும் கண்ணியும்
தாரு மாலையும் தேரும் வாளும்
பின்பெறு மரபின் ஏனோர்க்குமுரிய''
(மர.84)

இந்நூற்பாவில் வகைப்படுத்தியுள்ளார்.

ஏனோர் என்பதற்கு வைசியர், வேளாளர் என இளம்பூரணரும் மன்னர் எனப் பேராசிரியரும் பொருள் கொள்வது. மரபியல் குறிக்கப்படுபவர்கள் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பவர்களே. எனவே அரசனால் சிறப்பு பெற்று அரசபதவியைப் பெறும் ''ஏனோர்'' வேளாளர் என்பது தெளிவாகும்.

முடிவுரை

தமிழ் மொழியின் வரலாற்றைக் காட்டும் சுவடியான தொல்காப்பியத்தில் தேனிலே மருந்தைக் கலந்து கொடுப்பது போல தொல்காப்பியனார் மரபியலின் இடையிடையே தமிழ்ச் சமுதாயத்தை இலக்கியச் சுவையாகத் தந்துள்ளனர். அத்துடன் அக்காலத்தில் கூறப்பட்ட நால்வகைப் பிரிவுகளும் தொழிலின் அடிப்படையிலேயே அமைந்திருந்தனவேயன்றிப் பிறப்பில் அமையவில்லை என்பதனையும் நன்கு விளக்கியுள்ளார். இவற்றைப் பார்க்கும் போது தமிழ்ச் சமுதாயத்தின் பண்பட்ட நிலையினையும் அக்கால மக்கள் நெறிபிறழாது வாழ்ந்து வந்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.