LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மாதவிக்குட்டி

நெய் பாயசம்

மிகவும் சுருக்காகப் பிணத்தை அடக்கம் செய்துவிட்டு, அலுவலகத்தில் இருக்கும் நண்பர்களுக்கு வேண்டிய அளவிற்கு நன்றியை வெளிப்படுத்தி, இரவில் வீட்டிற்குத் திரும்பி வரும் அந்த மனிதரை நாம் "அப்பா' என்று அழைக்கலாம். காரணம்- அந்த நகரத்தில் அவருடைய மதிப்பை அறிந்திருப்பவர்கள் மூன்று பிள்ளைகள் மட்டுமே. அவர்கள் அவரை "அப்பா' என்றுதான் அழைக்கிறார்கள்.

பேருந்தில் அறிமுகமில்லாதவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு அவர் அந்த நாளின் ஒவ்வொரு நிமிடங்களையும் தனித் தனியாகப் பிரித்து ஆராய்ந்து பார்த்தார்.

காலையில் அவளுடைய குரலைக் கேட்டுத்தான் அவர் எழவே செய்தார்.

"மூடிக் கொண்டு படுத்திருந்தால் சரியாக இருக்குமா, உண்ணி? இன்னைக்கு திங்கட் கிழமையாச்சே!' -அவள் மூத்த மகனை எழுப்பிக் கொண்டிருந்தாள். அதற்குப் பிறகு கசங்கிய வெள்ளைப் புடவையை அணிந்து கொண்டு, அவள் சமையலறையில் வேலையை ஆரம்பித்தாள். அவருக்கு ஒரு பெரிய கோப்பையில் காப்பி கொண்டு வந்து தந்தாள். பிறகு... பிறகு... என்னவெல்லாம் நடந்தன? மறக்க முடியாத ஏதாவது வார்த்தைகளை அவள் கூறினாளா? எவ்வளவு முயற்சி செய்து பார்த்தும், அவள் அதற்குப் பிறகு கூறியது எதுவும் ஞாபகத்தில் வரவில்லை. "மூடிக் கொண்டு படுத்திருந்தால் சரியாக இருக்குமா, உண்ணி? இன்னைக்கு திங்கட்கிழமையாச்சே!' -இந்த வாக்கியம் மட்டும் மறையாமல் நினைவில் இருக்கிறது. அதை ஒரு கடவுளின் பெயரைப் போல அவர் முணுமுணுத்தார். அதை மறந்து விட்டால் தன்னுடைய இழப்பு திடீரென்று தாங்க முடியாத ஒன்றாக ஆகிவிடும் என்று அவருக்குத் தோன்றியது.அலுவலகத்திற்குச் செல்லும்போது அவருடன் பிள்ளைகளும் இருந்தார்கள். அவர்களுக்குப் பள்ளிக்கூடத்தில் இருக்கும்போது சாப்பிடுவதற்கான பலகாரங்களை சிறிய அலுமினிய பாத்திரங்களில் வைத்து அவள் எடுத்துக் கொண்டு வந்து தந்தாள். அவளுடைய வலக் கையில் சிறிது மஞ்சள் தூள் ஒட்டிக் கொண்டிருந்தது.

அலுவலகத்தில் இருந்தபோது அவளைப் பற்றி ஒருமுறைகூட அவர் நினைத்துப் பார்த்ததில்லை. ஒன்றிரண்டு வருடங்கள் நீடித்திருந்த ஒரு காதல் உறவின் விளைவாக அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். வீட்டில் உள்ளவர்களின் சம்மதத்துடன் அது நடக்கவில்லை. எனினும், அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று எந்தச் சமயத்திலும் தோன்றியதில்லை. பணத் தட்டுப்பாடு, குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்பட்ட காலங்கள்... இப்படி சில பிரச்சினைகள் அவர்களைச் சோர்வடையச் செய்து கொண்டிருந்தன. அவளுக்கு வாய்விட்டுச் சிரிக்கக்கூடிய சூழ்நிலை கிட்டதட்ட இல்லாமல் போனது.

எனினும் அவர்கள் ஒருவர்மீது ஒருவர் பாசம் வைத்திருந்தார்கள். அவர்களுடைய மூன்று பிள்ளைகளும் அவர்கள்மீது பாசம் வைத்திருந்தார்கள். எல்லாரும் ஆண் பிள்ளைகளாக இருந்தார்கள். உண்ணி- பத்து வயது, பாலன்- ஏழு வயது, ராஜன்- ஐந்து வயது. முகத்தில் எப்போதும் எண்ணெய் வழிய நின்று கொண்டிருக்கும் மூன்று பிள்ளைகள். கூறும்படியான அழகோ திறமையோ எதுவும் இல்லாதவர்கள். ஆனால், தாயும் தந்தையும் ஒருவரோடொருவர் கூறிக் கொண்டார்கள்:

""உண்ணிக்கு என்ஜினியரிங்கில்தான் விருப்பம். அவன் எப்போது பார்த்தாலும் ஒவ்வொன்றையும் தயாரித்துக் கொண்டிருப்பான்.''

""பாலனை டாக்டராக ஆக்க வேண்டும். அவனுடைய நெற்றியைப் பார்த்தாயா? அவ்வளவு பெரிய நெற்றி அறிவின் அடையாளம்.''

""ராஜனுக்கு இருட்டில் நடப்பதில் பயமே இல்லை. அவன் திறமைசாலி. ராணுவத்தில் சேர வேண்டியவன்.''

அவர்கள் நகரத்தில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கக்கூடிய ஒரு சிறிய தெருவில் வாழ்ந்தார்கள். முதல் மாடியில் மூன்று அறைகளைக் கொண்ட ஒரு ஃப்ளாட். ஒரு அறைக்கு முன்னால் மிகவும் சிரமப்பட்டு இரண்டு பேர் நிற்கக்கூடிய இடத்தைக் கொண்டு ஒரு சிறிய வராந்தா இருந்தது. அதில் அம்மா தண்ணீர் ஊற்றி வளர்த்த ஒரு பனிநீர்ச் செடி ஒரு பூச்சட்டியில் வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால், இதுவரை பூ மலர்ந்ததில்லை.

சமையலறையின் சுவரின்மீது மாட்டப்பட்டிருக்கும் கொக்கியில் பித்தளைப் பாத்திரங்களும் கரண்டிகளும் தொங்கிக் கொண்டிருந்தன. ஸ்டவ்விற்கு அருகில் அம்மா அமர்ந்திருக்கக்கூடிய ஒரு தேய்ந்துபோன பலகை இருக்கிறது. அவள் அதில் உட்கார்ந்து சப்பாத்தி தயாரிக்கும் போதுதான் பொதுவாக அப்பா அலுவலகத்திலிருந்து திரும்பி வருவார்.

பேருந்து நின்றதும் அவர் இறங்கினார். முழங்காலில் மெல்லிய ஒரு வேதனை தோன்றியது. வாதமாக இருக்குமோ? தான் படுக்கையில் படுத்தால் பிள்ளைகளுக்கு இனி யார் இருக்கிறார்கள்? திடீரென்று அவருடைய கண்கள் கண்ணீரால் நிறைந்தன. அவர் ஒரு அழுக்கடைந்து போயிருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துவிட்டு, வேகமாக வீட்டை நோக்கி நடந்தார்.

பிள்ளைகள் தூங்கிவிட்டிருப்பார்களா? அவர்கள் ஏதாவது சாப்பிட்டிருப்பார்களா? இல்லாவிட்டால் அழுதழுது உறங்கி இருப்பார்களா? அழக்கூடிய உணர்வுகூட அவர்களுக்கு வந்திருக்க வில்லை. இல்லாவிட்டால் அவர் அவளை எடுத்து வாடகைக் காரில் ஏற்றியபோது உண்ணி ஏன் அழாமல் வெறுமனே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்? இளைய மகன் மட்டும் அழுதான். ஆனால், அவனுக்கு வாடகைக் காரில் ஏற வேண்டும் என்ற பிடிவாதம். மரணத்தின் அர்த்தத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது மட்டும் உண்மை.

அவர் அறிந்திருக்கிறாரா? இல்லை. தினமும் வீட்டில் பார்க்கக் கூடிய அவள் திடீரென்று ஒரு சாயங்கால வேளையில் யாரிடமும் விடை பெறாமல் தரையில் ஒரு துடைப்பத்திற்கு அருகில் விழுந்து மரணத்தைத் தழுவுவாள் என்பதை அவர் நினைத்திருப்பாரா?

அலுவலகத்திலிருந்து வந்தவுடன் அவர் சமையலறையின் சாளரத்தின் வழியாக உள்ளே பார்த்தார். அவள் அங்கு இல்லை.

முற்றத்தில் பிள்ளைகள் விளையாடுவதன் சத்தம் உரத்துக் கேட்டுக் கொண்டிருந்தது. உண்ணி சத்தம் போட்டுச் சொன்னான்: ""ஃபஸ்ட் க்ளாஸ் ஷாட்.''

அவர் சாவியை எடுத்து முன்னறையின் கதவைத் திறந்தார். அப்போதுதான் அவள் கீழே கிடப்பதைப் பார்த்தார். வாயைச் சற்று திறந்து கொண்டு தரையில் சாய்ந்து படுத்திருந்தாள். மயக்கம் உண்டாகி விழுந்திருப்பாள் என்று நினைத்தார். ஆனால், மருத்துவமனையில் இருந்தபோது டாக்டர் சொன்னார்: ""இதயத்துடிப்பு நின்றுவிட்டதுதான் காரணம். இறந்து ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது.''

பல உணர்ச்சிகள். அவள்மீது காரணமே இல்லாமல் ஒரு கோபம். அவள் இப்படி முன்கூட்டி எதுவுமே சொல்லாமல், எல்லா பொறுப்புகளையும் தன்னுடைய தலையில் வைத்துவிட்டுப் போய்விட்டாளே!

இனி குழந்தைகளை யார் குளிப்பாட்டுவார்கள்? அவர்களுக்கு யார் பலகாரங்கள் செய்து தருவார்கள்? உடல் நலம் பாதிக்கப் படும்போது யார் அவர்களை கவனிப்பது?

"என் மனைவி இறந்துவிட்டாள்.' - அவர் தனக்குள் முணுமுணுத்தார். "என் மனைவி இன்று திடீரென்று மாரடைப்பால் மரணத்தைத் தழுவியதால் எனக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும்.'

எவ்வளவு நல்ல ஒரு "லீவ் லெட்டர்' அது! மனைவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அல்ல - மனைவி மரணமடைந்து விட்டாள் என்று. மேலதிகாரி ஒருவேளை அவரை அறைக்குள் அழைக்கலாம். "நான் மிகவும் வருந்துகிறேன்' என்று அவர் கூறுவார். ஹஹ! அவருடைய வருத்தம்! அவருக்கு அவளைத் தெரியாது. நுனியில் சுருண்டிருக்கும் அவளுடைய கூந்தல், தளர்ச்சியான புன்னகை, மிகவும் மெதுவான நடை- இவை எதுவுமே அவருக்குத் தெரியாது. அவை அனைத்தும் தனக்குத்தான் இழப்பு...

கதவைத் திறந்தவுடன் இளைய மகன் படுக்கையறையில் இருந்து ஓடி வந்து சொன்னான்: ""அம்மா வரல...''

அவர்கள் இவ்வளவு சீக்கிரமாக எல்லாவற்றையும் மறந்து விட்டார்களா? வாடகைக் காரில் ஏற்றி வைத்த அந்த உடல் தனியாகத் திரும்பி வரும் என்று அவன் நினைக்கிறானா?

அவர் அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டே சமையலறையை நோக்கி நடந்தார்.

""உண்ணி'' அவர் அழைத்தார்.

""என்ன அப்பா?''

உண்ணி கட்டிலில் இருந்து எழுந்து வந்தான்.

""பாலன் தூங்கிட்டான்.''

""ம்... நீங்க ஏதாவது சாப்பிட்டீங்களா?''

""இல்ல...''

அவர் சமையலறையின் திண்ணையின்மீது அடைத்து வைக்கப் பட்டிருந்த பாத்திரங்களின் மூடிகளைத் திறந்து பார்த்தார். அவள் தயார் பண்ணி வைத்திருந்த உணவுப் பொருட்கள் - சப்பாத்தி, சாதம், உருளைக்கிழங்கு குழம்பு, சிப்ஸ், தயிர், ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பிள்ளைகளுக்காக இடையில் அவ்வப்போது தயாரிக்கக்கூடிய நெய் பாயசம்...

மரணத்தின் கரம் தொட்ட உணவுப் பொருட்கள்! வேண்டாம்... அவை எதையும் சாப்பிடக்கூடாது.

""நான் கொஞ்சம் உப்புமா தயாரித்துத் தர்றேன். இதெல்லாம் ஆறிப் போயிருக்கு.'' அவர் சொன்னார்.

""அப்பா!''

உண்ணி அழைத்தான்.

""ம்....''

""அம்மா எப்போ வருவாங்க? அம்மாவுக்கு உடம்பு சரியாயிடுச்சா?''

உண்மைக்கு ஒருநாள் காத்திருக்கக்கூடிய பொறுமை உண்டாகட் டும்- அவர் நினைத்தார். இப்போது இந்த இரவுப் பொழுதில் பிள்ளைகளைக் கவலைக்குள்ளாக்கி என்ன கிடைக்கப் போகிறது?

""அம்மா வருவாங்க.'' அவர் சொன்னார்.

அவர் கிண்ணங்களைக் கழுவி, தரையில் வைத்தார். இரண்டு கிண்ணங்கள்.

""பாலனை எழுப்ப வேண்டாம். தூங்கட்டும்.'' அவர் சொன்னார்.

""அப்பா... நெய் பாயசம்.'' ராஜன் சொன்னான். அந்தப் பாத்திரத்தில் தன்னுடைய சுட்டுவிரலைத் தாழ்த்தினான்.

அவர் தன்னுடைய மனைவி அமரக்கூடிய பலகையின்மீது உட்கார்ந்தார்.

""உண்ணி, பரிமாறுகிறாயா? அப்பாவுக்கு முடியல. தலை வலிக்குது!''

அவர்கள் சாப்பிடட்டும். இனி எந்தக் காலத்திலும் அவள் தயாரித்த உணவு அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லையே!

பிள்ளைகள் பாயசத்தைச் சாப்பிட ஆரம்பித்தார்கள். அவர் அதைப் பார்த்துக் கொண்டே எந்தவித அசைவும் இல்லாமல் அமர்ந்திருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் கேட்டார்:

""சாதம் வேண்டாமா உண்ணி?''

""வேண்டாம்... பாயசம் போதும். நல்ல சுவையுடன் இருக்கு.''

உண்ணி சொன்னான்.

ராஜன் சிரித்துக் கொண்டே சொன்னான்:

""உண்மைதான். அம்மா அருமையான நெய் பாயசத்தை தயாரிச்சிருக்காங்க...''

தன்னுடைய கண்ணீரைப் பிள்ளைகளுக்குத் தெரியாமல் மறைப் பதற்காக அவர் உடனடியாக எழுந்து குளியலறையை நோக்கி நடந்தார்.

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா
அவர் - நிலாரவி அவர் - நிலாரவி
காதல் வீரியம் - எஸ்.கண்ணன் காதல் வீரியம் - எஸ்.கண்ணன்
கனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன் கனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்
ஐயர் தாதா -  எஸ்.கண்ணன் ஐயர் தாதா - எஸ்.கண்ணன்
டாக்டர் வீடு - எஸ்.கண்ணன் டாக்டர் வீடு - எஸ்.கண்ணன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.