LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

உங்களுக்கு ஏற்ற ஒரு நல்ல கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

+2 மாணவர்கள் தேர்வு முடிவு தெரிந்து தற்போது எந்த கல்லூரியில் படிக்கலாம்? என்ற தேடலில் மூழ்கி இருப்பீர்கள். உங்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த எதிர்காலம் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது. அதாவது நீங்கள் அடுத்து தேர்ந்தெடுக்கும் கல்லூரியைப் பொருத்து உங்கள் அடுத்த கட்டம் அமைய இருக்கிறது.   

 

சரியான கல்லூரியை தேர்ந்தெடுத்து அது நல்ல தரமான கல்லூரியாக அமைந்துவிட்டால் உங்கள் 70% வெற்றி உறுதிப்படுத்தப்படும். காரணம், கல்லூரிப் படிப்புகளில் பெரும்பாலானால் பங்கு வகிப்பது ஒரு கல்லூரியின் தரமும் அங்கு வழங்கப்படும் கல்வியின் தரமும்தான்.  சரி, ஒரு நல்ல கல்லூரியை தேர்ந்தெடுக்க எளிமையான வழிமுறை ஏதாவது இருக்கிறதா என்றால், அப்படி ஒன்றும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான  கல்வி  நிறுவனங்கள் செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், நேரடி ஏஜண்டுகள் வழியாகவும், அங்கே படிக்கும் மாணவர்கள் வழியாகவும் கூவி கூவி அவர்களின் கல்லூரியில் சேர அழைப்பார்கள். எனவே, அழகான விளம்பரம், அருமையான இசை, ரம்யமான சூழ்நிலை கொண்ட கல்விவளாகம், ஏசி உள்ளிட்ட பல்வேறு குளு குளு வசதிகள் போன்ற பலவற்றை நீங்கள் விளம்பரங்களில் பார்க்கலாம். ஆனால் இதில் எது உங்கள் வாழ்க்கையை வளப்படுத்த, உங்களை ஒரு வெற்றியாளராக மாற்றும் வல்லமை கொண்டது என்று அறிவதும் அந்த அறிவைக் கொண்டு சரியான கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதும் மாணவர்களாகிய உங்கள் கைகளிலிலும், பெற்றோர்கள் கைகளிலும் தான் உள்ளது.

 

சரி, ஒரு கல்லூரி நல்லதா என்பதை அறிய எளிமையான வழிமுறைகள் இல்லை என்றால் அதைப் பற்றி முழுமையாக அறிய வேறு என்னதான் செயவது?

 

உங்கள் படிப்பிறகு ஏற்ற கல்லூரியைத் தேர்ந்தெடுக்க அவசரம் காட்டாமல், விளம்பரங்களில் மயங்காமல் கீழ்கண்ட சில களப்பணி வேலைகளை செய்யவேண்டும்.

 

  • முதலில் உங்கள் வீட்டில் பொருளாதாரம் எப்படி உள்ளது? உங்களை எந்த ஊரில் வேண்டுமானாலும் விடுதியில் தங்கி படிக்க வைக்க வசதி வாய்ப்புகள் உள்ளதா?  அப்படி என்றால் நீங்கள் தமிழகம் முழுதும் அல்லது சிலர் நுழைவுத் தேர்வு எழுதி இந்தியா முழுதும் எது முதன்மையாக கல்லூரி என்று தேர்ந்தெடுக்கவும். உங்களுக்கு எவ்வித முட்டுக்கட்டையும் இல்லை.

 

  • நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவரா? உங்கள் வீட்டில் வெளியூரில் விடுதியில் மாதம் Rs.2000-4000 கட்டி படிக்கவைக்க வசதி இல்லாதவரா? அப்படியானால், விடுதிக் கட்டணம் இல்லாமல் உங்கள் அருகில் இலவசமாகத் தங்க அரசாங்கள் விடுதிகள் உள்ள (பிற்பட்டோர் நலத்துறை நடத்தும் விடுதிகள், ஆதி திராவிடர் நல விடுதிகள் மற்றும் பல்வேறு விடுதி வாய்ப்புகள் உள்ளன)  மற்ற கல்லூரிகள் எவை என்று பார்க்கவும்.

 

  • உங்கள் குடும்பத்தில் நீங்கள்தான் முதன் முதலாக பட்டப்படிப்பை படித்தால், உங்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சலுகை வழங்கப்படும். கல்விச் செலவுகள் உட்பட பல சலுகைகளை அரசாங்கமே வழங்குகிறது. அதை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும்.

 

  • நீங்கள் BC/MBC/SC/ST போன்ற எந்த இட ஒதுக்கீட்டில் வருகிறீர்கள் என்பதைப் பொருத்து சில வசதிகள், சலுகைகள் கிடக்கும், அதையும் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளவும்.

 

  • கல்வி உதவித்தொகை கொண்டு படிக்கப் போகிறீர்களா? அப்படி என்றால் உங்கள் அருகில் உள்ள வங்கியைத் தொடர்பு கொண்டு அதற்கான சாத்தியக் கூறுகளை கேட்டு அறியுங்கள். ஒருபுறம் கல்வி உதவித்தொகை விளம்பரப்படுத்தப் பட்டாலும், விவசாயக் கடன் வாங்குவதில் எவ்வளவு சிரமமும் அலைக்கழிப்பும் இருக்குமோ அதைவிட அதிகமாக மாணவர்களும், பெற்றோர்களும் கல்விக் கடனுக்கு அலைக்கழிக்கப் படுகிறார்கள். எனவே, மாணவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் வங்கியில் கணக்கு தொடங்குவதில் ஆரம்பித்து, கல்விக்கடன் விண்ணப்பம் பெறுவது என்று ஒவ்வொரு படியாக நீங்கள் கடக்க வேண்டும், இதில் ஏற்படும்  சிரமங்களை கையாள நேரடியாக உங்கள் வின்னபத்தை வாங்க மறுத்தால், பதிவுத் தபாலில் அனுப்புதல், தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் துணைகொண்டு கேள்விகளை கேட்டல் போன்ற பல்வேறு நடைமுறைகளை கையாண்டு கல்விக் கடன் பெற முயற்சி செய்யவும். இதுகுறித்த இலவச நூலை ஸ்டடிகைடுஇன்டியா.காம் இங்கிருந்து பெறலாம். மேலும் கல்விக் கடன் குறித்த உதவிக்கு ஒரு சில தன்னார்வ தொண்டு அமைப்புகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக www.eltf.in (Education Loan Task Force) என்னும் தளத்தில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.

 

அடுத்து கல்லூரி அளவில் என்னென்ன வசதிகளை மாணவர்களுக்கும் பெற்றோர்களும் கவனமாகப் பார்க்கவேண்டும் என்பதைப் பார்ப்போம்:

 

கல்லூரி மற்றும் படிப்பின் அங்கீகாரம்:

கல்லூரி எப்போது ஆரம்பிக்கப்பட்டது? அந்தக் கல்லூரி குறித்த வழக்குகள் ஏதும் நிலுவையில் உள்ளதா?  கல்லூரிக்கு அங்கீகாரம் வாங்கி சில படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லாமல் மாணவர்கள் இறுதியாண்டு வருவதற்குள் அங்கீகாரம் வாங்கிவிடலாம் என்று பல படிப்புகளை நடத்தி வருவதை காண்கிறோம். எனவே, பொறியியல் கல்லூரியாக இருந்தால் அண்ணா பல்கலைக்கழகம், அல்லது வேறு படிப்புகளாக இருந்தால் அந்தந்த அனுமதியளிக்கும் அமைப்புகளின் இணையதளங்களை பார்த்து அல்லது அவர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

 

உதாரணத்திற்கு கீழ்காணும் இணையதளங்களில் முழுமையான விவரங்களைப் பெறலாம்:

 

கல்லூரி குறித்த முழுமையான விபரங்கள்: ஸ்டடிகைடுஇன்டியா.காம்

ஆசிரியர் பயிற்சி: www.ncte-india.org

மருத்துவம்   - www.mciindia.org

பல் மருத்துவம் – www.dciindia.org

சட்டம்  - www.barcouncilofindia.org

கலை அறிவியல் படிப்புகள்: www.ugc.ac.in

 

கல்லூரி வளாக வசதிகள்:

கல்லூரிகள் விளம்பரங்கள் மற்றும் கையேடுகளில் கொடுக்கும் படங்களைப் பார்த்து முடிவெடுக்காமல், நீங்களே நேரடியாக கல்லூரிக்கு செல்லுங்கள். அங்கு உள்ள நீங்கள சேர விரும்பும் பாடத்திற்கு எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அவர்களில் எத்தனைபேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள், வகுப்பறை வசதிகள், தொழில் நுட்ப வசதிகள், ஆய்வகக வசதிகள், விளையாட்டு, போக்குவரத்து வசதிகள், தேசிய அளவில், மாவட்ட அளவில் போட்டிகள் போன்றவற்றில் இந்த கல்லூரி ஏதாவது பங்கேற்று இருக்கிறதா? போன்ற பலவற்றை பார்ப்பதன் மூலம் அந்த கல்லூரியின் முழுமையான நிலையை அறிய முடியும். சேர்ந்த பிறகு உங்களுக்கு ஏமாற்றம் இருக்காது.  

 

இதற்கு எளிமையான வழி, ஓரிரண்டு மாணவர்கள் அங்கே படிப்பவர்களை தொடர்புகொண்டு  சரியான தகவல்களை கொடுப்பவர்களா என்று பார்த்து அறிந்து கொள்ளவும்.

 

இணையதளம் பார்வையிடுதல்:

அரசாங்க வலியுருத்தளின்படி பெரும்பாலான கல்லூரிகள் அவர்கள் அங்கீகாரம், வசதிகள், அவர்களின் தரம், அவர்கள் அளித்த ஆண்டு அறிக்கைகள், ஆசிரியர்கள் அவர்களின் படிப்புகள், படிப்புகள்  போன்ற அனைத்தையும் வெளிப்படையாக இணையதளத்தில் போட்டிருப்பார்கள். அதைப் பார்த்து தேவையான தகவல்களை திரட்டிக்கொள்ளவும்.

 

வேலைவாய்ப்பு விபரம்:

பல்வேறு நல்ல கல்லூரிகள் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்பாடு செய்ய தனி அலுவலரை அல்லது துறையை ஏற்படுத்தி அதிக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை(Campus Placement) உண்டாக்கி வருகிறார்கள். எனவே, அப்படி ஒரு துறை இருக்கிறதா? கடந்த சில ஆண்டுகளில் எந்தெந்த நிறுவனகள் வேலைவாய்ப்பு வழங்க வந்தன, எத்தனை பேருக்கு அந்த வாய்ப்புகள் கிடைத்தன, என்ன சம்பளம் போன்ற விபரங்களை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

   

மற்ற வசதிகள்:

கல்லூரி தொடங்கி எத்தனை ஆண்டுகள் ஆகிறது, அதில் மேல்படிப்பு படிக்க வசதிகள் இருக்கிறதா, கல்லூரி பாடங்கள் தவிர்த்து வேறு என்னவிதமான திறமைகளை சொல்லிக் கொடுக்கிறார்கள் போன்ற விபரங்களை அறிந்துகொள்ளவும். 

 

 

ச.பார்த்தசாரதி 

கல்வியாளர் 

by Swathi   on 30 May 2014  0 Comments
Tags: Choose Right College   How to Choose a Right College   Choose College   நல்ல கல்லூரி   கல்லூரியை தேர்ந்தெடுப்பது எப்படி   நல்ல கல்லூரி எது     
 தொடர்புடையவை-Related Articles
உங்களுக்கு ஏற்ற ஒரு நல்ல கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது எப்படி? உங்களுக்கு ஏற்ற ஒரு நல்ல கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.