LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    சிறுவர்    குழந்தை வளர்ப்பு - Bring up a Child Print Friendly and PDF

அதிகரிக்கும் பதின்பருவத் தற்கொலைகள் !! தடுக்க என்ன தான் வழி?

ஜி.ராமானுஜம்

பள்ளி மாணவன் தற்கொலை, மாணவிகள் கூட்டாகத் தற்கொலை போன்ற செய்திகள் சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கின்றன. தற்கொலைகள் அதிகரிப்பதற்கு இதுதான் காரணம் என ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது. எல்லா தற்கொலைகளும் ஒன்றுபோலவே நடைபெறுவதில்லை. மனிதர்கள் ஒரு சமூக விலங்குகள். மனிதர்களின் அகமும் சமூகம் என்னும் புறமும் கொண்டுள்ள உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் கைமீறும் நிலையில், மனது தற்கொலைக்கு முடிவெடுக்கிறது.

சில தற்கொலைகளில் அகக் காரணிகளின் பங்கு அதிகமாக இருக்கும். தீவிர மனநோய்கள், குறிப்பாக மூளையில் ஏற்படும் ரசாயனக் குறைபாடுகளால் வரும் மனநோய்களால் நிகழலாம். உதாரணமாக, மனச்சிதைவு நோயில் சிலருக்குக் காதினில் யாரோ இறந்துபோகக் கட்டளையிடுவதுபோல் தோன்றும். சில தற்கொலைகளில் புறக் காரணிகளின் பங்கு அதிகமாக இருக்கும். உதாரணமாக, விவசாயம் பொய்த்துப் போவதால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது.

பதின்மவயதுப் பிரச்சினைகள்

சமீபகாலத்தில் அதிகரிக்கும் பதின்மவயது மாணவத் தற்கொலைகளில் அக மற்றும் புறக் காரணி கள் பின்னிப் பிணைந்திருப்பதை உணர முடிகிறது. மாணவர்களின் மனநிலையைத் தாண்டி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், கல்வி முறை, ஊடகங்கள் எனப் பல பரிமாணங்களும் கோணங்களும் உள்ள பிரச்சினை இது.

தற்போதைய இளம் தலைமுறையினரிடம் சில ஆளுமைக் கோளாறுகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக, ஈகோ எனப்படும் தன்னைப் பற்றிய முனைப்பு அதிகமாகவே காணப்படுகிறது என்பதைப் பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது. கூட்டுக் குடும்பங்களில் வேறு பல பிரச்சினைகள் இருந்தாலும் குழந்தைகளைப் பொறுத்தவரை பகிர்ந்துகொள்ளல் இருந்தது. பொருட்களை மட்டுமல்ல உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள கூட்டுக் கும்பத்தில் வழியிருந்தது.

இப்போது பலரும் ஒரு குழந்தையுடன் நிறுத்திவிடுவதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கவனம் அதிகமாகி ஈகோ பெரிதாக வளர்கிறது. தன்னையும் தனது தேவைகளையும் பூர்த்திசெய்யவே எல்லோரும் உள்ளனர் என்ற குறுகிய பார்வை தோன்றுகிறது. அதனால், தன்னை யாரும் ஒன்றுமே சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணம் வளர்கிறது. முகம்திரிந்து நோக்கினால்கூட வாடிவிடும் அனிச்சமலர் போல் ஒரு சுடு சொல்கூட அவர்களை வாடச்செய்துவிடுகிறது.

மேலும், கல்வி முறையால் ஏற்பட்டிருக்கும் சுமையை இறக்குவதற்கும் இறுக்கத்தைக் குறைப்பதற்கும் எந்தவித ஆக்கபூர்வமான பொழுதுபோக்குகளும் குறைவு. மன அழுத்தத்தைக் குறைக்கும் உடற்பயிற்சி, விளையாட்டுகள் போன்றவை அறவே இல்லை என்றே சொல்லலாம். குறிப்பாக, பெண் குழந்தைகள் நிலைமை இன்னும் மோசம். வெளியே சென்று விளையாடுவதற்குப் பெற்றோர்கள் அனுமதிப்பது இல்லை என்பது மிக முக்கியமான பிரச்சினை. சமீபத்தில் மாணவியரே அதிகம் தற்கொலை செய்துகொண்டதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை விளையாட்டு என்பது ‘ஆங்க்ரி பேர்ட்ஸ்’, ‘கேண்டி கிரஷ்’ போன்ற செல்பேசி விளையாட்டுகள்தான்.

பெற்றோர்களின் கடமை

தனியார்மயம், உலகமயமாக்கலால் போட்டிமய மான சூழலில் பெற்றோர்கள் மிகையான எதிர்பார்ப்பு களை வைத்துக்கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாவதுடன், குழந்தைகளிடமும் அழுத்தத்தை உருவாக்கிவிடுகிறார்கள். பிற மாணவர்களுடன் ஒப்பிட்டு விமர்சிப்பதும் அதிகம் நடக்கிறது. குழந்தைகள் தனித்தன்மை கொண்ட ஆளுமைகள் என்று பார்ப்பதில்லை.

குழந்தைகளின் தனித்தன்மை மிளிரும் வகையில் நேர்மை, துணிச்சல், பொறுமை, பொறுப்புணர்வு, விடாமுயற்சி போன்ற ஆளுமைப் பண்புகளை வளர்ப்பதற்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் இருப்பது பெற்றோரின் கடமை. இந்தப் பண்புகள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் பெரிய அளவில் உதவும். உங்கள் குழந்தைகளுக்குச் சில விஷயங்களில் திறமை இருக்கலாம். ஆனால், ஆர்வம் இருக்க வேண்டும். ஆர்வமும் திறமையும் உழைப்பும் சேர்ந்தாலே முழுமையானதாக இருக்கும். உடற்பயிற்சி, விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேர்வுகள் நடக்கும்போது நாள் முழுவதும் படித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கக் கூடாது.

முன்பெல்லாம் ‘கண்ணை மட்டும் விட்டுவிட்டு எல்லா இடத்திலேயும் அடிங்க சார்!’ எனப் பெற்றோர் கள் ஆசிரியர்களிடம் கூறுவார்கள். அது போன்ற உடல்ரீதியான துன்புறுத்தலை அறிவுள்ள யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அதேசமயம், கொஞ்சம் கடுமையான சொற்களைக்கூடத் தாங்கிக்கொள்ளாமல் போகும் அளவுக்குக் குழந்தைகளை உருவாக்காதீர்கள்.

சுடுசொற்களை, ஏமாற்றத்தை, வலிகளைத் தாங்கிக்கொள்ள குழந்தைகளைத் தயார் செய்வது பெற்றோர்களின் கடமை. வெற்றி அடையக் கற்றுக் கொடுப்பது முக்கியம்தான் என்றாலும், தோல்விகளை எதிர்கொண்டு முன்னேறி வரவும் கற்றுத்தர வேண்டும். தவறுகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் உணர்ச்சிவசப்படாமல் ஒப்புக்கொள்ளக் குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டும். யாரேனும் சீண்டினால் பயந்துபோகாமல் போராடக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஆசிரியர்களின் பொறுப்பு

குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப் பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. பள்ளிக்கூடம் என்பது மதிப்பெண்கள் எடுக்கக்கூடியவர்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் அல்ல. விளையாட்டுப் பாட வகுப்புகளில் பிற பாடங்களை நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வகையான திறமையும் வேகமும் இருக்கும். ஒரே வயது என்ற ஒரே அடிப்படை யில் வகுப்பில் இருக்கும் எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று கருதுவது தவறு.

மூளை வளர்ச்சிக் குறைபாடு, அதீத துறுதுறுப்பு (ஹைப்பர் ஆக்டிவிட்டி) , கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா), ஆட்டிசம் என்று குழந்தைகளிடம் காணப்படும் பாதிப்புகளைப் பற்றி பெரும்பாலான ஆசிரியர்கள் அறிந்திருப்பதில்லை. இந்தக் குழந்தைகளையும் மற்ற குழந்தைகள்போல் மதிப்பெண் இயந்திரமாக மாற்ற நினைப்பது தவறு. மேலும், இக்காலப் பதின்வயதினர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பதால், தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது மிகுந்த கவனம் தேவை. புண்படுத்தாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது, குழந்தைகளிடம் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும். தவறான செயலை மட்டும் கண்டிக்க வேண்டும்.

தற்கொலைகள் தொடர்பான செய்திகளைக் கையாள்வதில் ஊடகங்களுக்குப் பெரிய பங்குள்ளது. ஒரு நிகழ்வின் பின்புலம், நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் குற்றங்களின் நம்பகத்தன்மை, நாம் கொடுக்கும் காட்சி, செய்திகளின் தாக்கங்கள் என்னவென்னவாக இருக்கும் என்றெல்லாம் பொறுப்புணர்வோடு ஊடகங் கள் இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க ஆக்கபூர்வமான வழிமுறைகளை ஆராய வேண்டும். பரபரப்புக்காக மிகைப்படுத்தப்படும் செய்திகள் சமூகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதைக் கணக்கில்கொள்ள வேண்டும். குழந்தைகள்தான் எதிர்காலத்தில் உலகின் போக்கைத் தீர்மானிப்பவர்கள் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்துகொண்டால் இதுபோன்ற பிரச்சினைகளைப் பெருமளவில் குறைக்கலாம்!

- ஜி.ராமானுஜம், மனநலத் துறைப் பேராசிரியர்,
தொடர்புக்கு: ramsych2@gmail.com

by Swathi   on 03 Dec 2017  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
குழந்தைகளுக்கு தோல்விகளை பழக்குங்கள் குழந்தைகளுக்கு தோல்விகளை பழக்குங்கள்
பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு!! கோடை விடுமுறை வந்தாச்சு!! பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு!! கோடை விடுமுறை வந்தாச்சு!!
சகோதரச் சண்டை சகோதரச் சண்டை
கணவன், மனைவி இருவரில் யார் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் ? ஹீலர் பாஸ்கர் கணவன், மனைவி இருவரில் யார் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் ? ஹீலர் பாஸ்கர்
பெற்றோர்களின் கவனத்திற்கு - குழந்தை வளர்ப்பு பெற்றோர்களின் கவனத்திற்கு - குழந்தை வளர்ப்பு
குழந்தைகளுக்கு வளரும் 'பால் பற்களை' பாதுகாக்க சிறந்த வழிகள்:- குழந்தைகளுக்கு வளரும் 'பால் பற்களை' பாதுகாக்க சிறந்த வழிகள்:-
குழந்தைகளுக்கு ஏன் கதைகளை சொல்லவேண்டும்.... குழந்தைகளுக்கு ஏன் கதைகளை சொல்லவேண்டும்....
குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி வளருங்கள் ! குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி வளருங்கள் !
கருத்துகள்
03-Dec-2017 16:42:27 கப்பலோட்டி said : Report Abuse
அருமையான கட்டுரை.. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றது...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.