LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

இக்கால உலகின் மத நல்லிணக்கத்திற்குத் திருக்குறள் தேவை - இ.எம்.இராமச்சந்திரன்

திருக்குறள் தனிமனித வாழ்வு, சமுதாய வாழ்வு, நாட்டு வாழ்வு, உலக வாழ்வு என்று அனைத்தையும், அணைத்துத் தழுவிய ஒரு வாழ்வியல் நூல். இது வெறும் கற்பனையால் உருவாக்கப்பட்டது அன்று. அறமென்னும் பாலில் உலகியல் என்னும் ஊடு நூலிழைத்து அது அழகிய வாழ்க்கை என்னும் ஆடையாக அமைந்துள்ளது. ஆன்மீகமும், உலகியலும் கலந்து முக்காலத்திற்கும் உரியதாக உள்ளது. நடைமுறைக்கு ஒத்த கருத்துக் கருவூலத்தை அரசியலாகவும், மதமாகவும், பொருளியலாகவும், வாழ்க்கைச் சட்டங்களாகவும் தந்துள்ளது. நீதிநெறி முறைகளோடு மக்களின் உரிமைகட்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. அதுவே அறம். அதில் கூறப்படும் எல்லாக் கருத்துகளும் என்றும் வாழும். என்றும் நிலைத்திருக்கும் என்று எண்ணி உருவாக்கப்பட்ட நூலே திருக்குறள்.

 

வள்ளுவம் ஏன் பிறந்தது? என்ற வினாவை நாம் கேட்போமேயானால் அது மண் செழிக்க மழை பொழிவது போல் மானிடம் செழிக்க, மனித உள்ளங்கள் செழிக்க, இந்த உலகம் செழிக்க அதைக் கண்டு உயர் கடவுள் சிரித்து மகிழ வள்ளுவர் பிறந்தது என்று கூறலாம்.

 

மனித இனம் நடமாடும் பூஞ்சோலை. பூஞ்சோலையில் மலர்ந்து குலுங்கும் மலர்கள் எல்லாம் நல்ல மணம் பரப்புவது போல, மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வநிலை அடைய வேண்டும் எனக் கருதி திருக்குறள் என்ற மறையைத் தந்தவர் திருவள்ளுவர். திருவள்ளுவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் கடவுளே எல்லாம் என நினைத்து நூல் எழுதவில்லை. மனித வாழ்வின் அனைத்துத் துறைகளையும் வளப்படுத்த விரும்பி, அதற்காகக் கடந்தகால வரலாற்று நிகழ்வுகளை நிகழ்கால நிகழ்வுகளோடு இணைத்து, எதிர்காலத்தைத் தன்னுடைய தூய சிந்தையால், தீர்க்க தரிசனத்தால் கண்டு, எக்காலத்திற்கும் பொருந்தும்படியாக நீதிநெறியோடு சார்ந்த அறத்தின் அடிப்படையில் எவ்விதச் சாதி, சமய, சமுதாயச் சார்புமின்றி எழுதியுள்ளார்.

 

வள்ளுவரின் கொள்கை என்றாலும், வள்ளுவரின் மதம் என்றாலும் ஒன்று எனலாம். அப்படியாயின் வள்ளுவரை சைவர் எனச் சாதிப்பவர்களும் உளர். வைணவர் என்று வாதிடுவோரும் உளர் இல்லை, இல்லை அவர் சமண சமயத்தவரே என்று இறுமாப்போடு எடுத்தியம்புபவரும் உளர். பௌத்தக் கொள்கை மேலோங்கி இருக்கின்றது என மார்தட்டுவோரும் உளர். கிறித்துவுக்கும் வள்ளுவருக்கும் 31 ஆண்டுகளே இடைவெளி; அதனால் கிறித்துவ மதத்தவரே என்பாரும் உளர். திருக்குறளுக்கும் திருக்குரானுக்கும் உள்ள வித்தியாசம் ''ன்'' என்ற எழுத்தே எனக் கூறி வள்ளுவர் ஒரு இசுலாமியர் என்பாரும் உண்டு. அவருடைய குறட்பாக்களில் பகுத்தறிவுக் கொள்கைகள் ஏராளம் உள்ளன. எனவே அவர் ஒரு பகுத்தறிவுவாதி என்பாரும் உளர்.

 

வள்ளுவர் காலத்தில் மகாவீரரரின் சமண சமயமும், புத்தரின் பௌத்தமும், வேத மார்க்கங்களாகிய சைவம், வைணவம், வேதாந்தமும் இந்திய மண்ணில் நிலவிய சமயங்களாம். அவருடைய குறட்பாக்களில் மேற்கண்ட சமயக் கருத்துகள் எடுத்தாளப்படுவது மட்டுமின்றித் தேவையற்றவற்றை நீக்கித் தன்னுடைய அறிவார்ந்த சிந்தனைகளால் தீர்க்க தரிசனமாகத் தோன்றிய கருத்துகளையும் சேர்த்துக் கொண்டுள்ளார். உலக சமயங்களாகிய கிறித்துவம், இஸ்லாம் இவற்றின் கருத்துகளும் அவரது குறட்பாக்களின் ஆங்காங்கே அமைந்துள்ளமை பெரிதும் வியப்பிற்குரியதாகும்.

 

அதனால் தான் எல்லாச் சமயத்தாரும் வள்ளுவரை தத்தம் சமயத்தவர் என வாதிடுகின்றனர். வள்ளுவரின் காலத்திற்குப் பின்னர் வாழ்ந்தவர்களின் கருத்துகளை வைத்து ஆய்ந்து பார்த்தல் வேண்டும். மணிமேகலை ஆசிரியர் சாத்தனார் புறச் சமயவாதிகளின் உரையையெல்லாம் பழித்தும், வள்ளுவர் உரையை மட்டுமே பொருளுரை எனப் புகழ்ந்தும், ''பொய்யிற் புலவன் பொருளுரை தேறாய்'' என்கின்றனர். சமணக் காப்பியம் நீலகேசியோ, ''தேவன் உரைப்பத் தெளிந்தேன்'' என்று வள்ளுவரைப் பாராட்டிக் கூறும். சைவ சித்தாந்த செம்மல் வச்சிரவேல் முதலியார் அவர்கள்

 

வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்

 

ஓதத் தமிழால் உரை செய்தல்

 

என்று கூறுவது வள்ளுவத்தில் மதச் சார்பின்மையை விளக்கும்.

 

அப்படியானால் திருவள்ளுவரின் சமயம்தான் எது? என்ற கேள்வி எல்லாருக்கும் எழுகின்றது. எல்லாச் சமயங்களும் காட்டுகின்ற இறைவழிபாட்டைத்தான் வள்ளுவரும் பேசுகின்றனர். இன்பங்கள் எல்லாவற்றிற்கும் மேலான இன்பங்களை நல்கி, அதன்வழிப் பேரின்பத்தை நல்கும் ஆற்றல் உடையது இறைவழிபாடு கவலையைப் போக்கிக் களிப்படையச் செய்வதே இறைவழிபாடு. துன்பத்தை மாற்றி இன்பத்தை வழங்குவது இறைவழிபாடு எனலாம். நாவுக்கரசர் கூறுவது போன்று,

 

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

 

நரகத்தில் இடர்ப்படோம் நடலை யல்லோம்

 

ஏமாப்போம் பிணிஅறியோம் பணிவோமல்லோம்

 

இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை

 

என மக்கள் எப்போதும் இன்பத்தோடு இருக்க வழிகாட்டுவதே திருக்குறள். அதற்கு எங்கும் எதிலும் அன்பைச் செலுத்துகின்ற மனோபக்குவம் வேண்டும். அறவழியில் நடக்க வேண்டும். இவற்றைக் கடைப்பிடித்து இலட்சியத்துடன் வாழந்து ஆன்மாவை உருக்கிக் கசியவைத்து நன்னெறியில் நடக்க வைக்க வேண்டும்.

 

இன்றைய சமுதாயத்தில் நாம் காண்பது சமயச் சண்டைகள், பூசல்கள். இவற்றை கற்றறிந்தவர்களும் நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டு வருகின்றனர். உலகமெங்கும் ஒன்றுபட வேண்டும் என்ற உணர்வை அன்றே வள்ளுவர் கருதினார். ''ஒன்றே குலம் ஒருவனே தேவன்'' என்ற திருமூலர் கருத்தும், ''யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற புறநானூற்றுப் புலவனின் பரந்த உள்ளமும் வள்ளுவரின் வாய்மொழியால் இன்றும் நின்று நிலவுகின்றன.

 

வள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாரா? என்பதில் பல கருத்துகள் ஆராய்ச்சியாளர்களிடம் நிலவுகின்றன. ஆயினும் அவர் கடவுள் வாழ்த்துடன் நூலைத் தொடங்கியுள்ளாராயினும் தொல்காப்பியம் போன்று நான்கு நிலக் கடவுளரைப் பாடவில்லை. கடவுள் வாழ்த்தைப் பொருட் குறிப்பாலே, குணக் குறிப்பாலே, பாலில் படுநெய்போல் இந்த உலகில் வாழும் உயிர்களோடு இறைவன் கலந்திருப்பதாகக் காண்கின்றார். வேறுபாடற்ற ஒருமித்த கடவுள் கொள்கை இந்த உலகில் நிலவ வேண்டுமென்று வலியுறுத்துகின்றார். நினைத்தலையும், சிந்தித்தலையுமே சிறந்த வழிபாடு எனக் காட்டுகின்றார்.

 

இந்தச் சமுதாயத்தில் சமயங்களால் ஏற்படும் பிரச்சினைகள் எவை? எவை? என ஆய்ந்து அவற்றை அகற்ற வேண்டுமென்று கருதுகின்றார். கடவுள் பெயரால் பலியிடப்படுவதை வெறுக்கின்றார். எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஒத்த கருத்தை, கடவுள் கொள்கையாகக் காட்டுகின்றார். அதற்கு முன்னர் ஏன்? இன்றுவரை யாராலும் கூறமுடியாத கருத்தை வள்ளுவர் கூறுகின்றார். கடவுள் பெயரால் நடைபெறும் தீமைகளைச் சாடுகின்றார். கடமையைச் செய், பலன் தானே கிடைக்கும் என்ற நம்பிக்கையை உலக மக்களுக்கு ஊட்டுகின்றார்.

 

பிற்கால மேலைநாட்டு அறிஞர்கள் கருத்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் கருத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

 

கடமையே மிகச் சிறந்த நோக்கம். ஏனெனில் அது கடவுட் கருத்தைத் தழுவியதாக இருக்கின்றது என்று ''லக்கர் டயர்'' கூறுகிறார். கடமையை விருப்பத்தோடு செய்பவர்களுக்குக் கடவுள் எப்பொழுதும் உதவியாக இருக்கின்றார் என்று ''கெய்லர்'' கூறுகிறார்.

 

கடமையைச் செய்யாமல் தட்டிக்கழித்தல் அறிவையும் மனத்தையும் பலவீனப்படுத்தித் தூய்மையான தவ வாழ்க்கையைப் புதைத்து விடுகிறது என்று ட்ரயான் எட்வார்ட்ஸ் என்பவர் கூறுகிறார்.

 

உயிர்கள் தம்முடைய கடமைகளை உடனடியாகச் செய்வதாக முடிவெடுத்துக் கொள்வது கடவுளின் இதய சந்நிதிக்குச் செய்வது என்று பேகன் கூறுகின்றார்.

 

ஆகவே வள்ளுவர் காட்டும் கடவுள் ''வாலறிவனே'' தவிர ஆதிக்க சக்திகளின் தலைவனல்லன். அவன் வழி நடத்துபவனே தவிர ஆட்டிப் படைப்பவனுமல்லன். வள்ளுவர் காட்டும் கடவுள் எல்லா மதத்திற்கும் பொருத்தமான தூய்மையான அறிவே ஆகும். எண் குணங்களின் உருவமேயாகும். அஃது ஒரு பண்பும் பயனும் ஆகும். அந்த பண்பையும், பயனையும் திரும்பத் திரும்ப உயிர்கள் நினைத்தலின் மூலமே பெற முடியும். அத்தகைய நெறியைத்தான் மத நல்லிணக்க வழிபாட்டு நெறியாக வள்ளுவர் காண்கின்றார். மனிதனுக்குள்ளேயே பேராற்றல் அடங்கிக் கிடக்கின்றது. ''தெய்வம் நீ என்று உரை'' என்றும், ''கைவருந்தி உழைப்பவர் தெய்வம்'' என்றும் பாரதியார் பாடுவார். ''சமயக் கணக்கர் மதிவழிக் கூறாது, பொருளிது வென்ற வள்ளுவன்'' என்று கல்லாடர் வள்ளுவரைச் சிறப்பித்துக் கூறுவார்.

 

எனவே திருக்குறள் எல்லாச் சமயங்களும் ஏற்றுப் போற்றக் கூடிய பொதுமறையாக அமைந்து விளங்குகின்றது. கடவுளை நம்பாத உலகாயதவாதிகள் கூட, திருக்குறளை நம்பி ஏற்றுக் கொள்கின்றார்கள். எந்த ஒன்று எல்லாரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கின்றதோ, அதுவே உயர்ந்த சமய நெறியின் பொது இயல்பாகும் என்பது திருக்குறள் காட்டும் சமயநெறி வேறுபாடுகளையும், காழ்ப்புணர்வுகளையும் நீக்கி நிறைவான உயர்ந்த உலகச் சமயங்கள் எல்லாம் ஏற்றுக் கொள்கின்ற சமயமாக அமைந்துள்ளது. தத்துவ žலங்களால் உயர்ந்தோங்கி நிற்கின்றது. அது தனிமனிதனை அறிவூட்டி, உணர்வூட்டி, ஆள்வினை காட்டி அன்பில் தோய்ந்து, அறநெறியில் நின்று, ஒழுக்க நெறியில் செலுத்தி, அருள்நெறியில் நிற்கச் செய்து, இறுதியாக இறைநெறியில் கொண்டு செல்கின்றது. குறள் நெறி தனி மனிதனோடு உறவு கொண்டு வளர்ந்து சமுதாயமாக மலர்ந்து உலகளாவிப் பரவிட வேண்டும். அங்ஙனம் உலகளாவிப் பரவுமேயானால் உலகம் செழிக்கும். எங்கும் சமத்துவமும், சகோதரத்துவமும் மலரும்; அதன் மூலம்தான் பலரை வாழ்வித்து நாமும் வாழலாம்.

 

இன்றைய உலகிற்குத் தேவை இத்தகைய ஒருமைப்பாட்டுடன் கூடிய உயர்ந்த மத நல்லிணக்கமே.

 

இன்று உலகில் காண்பதென்ன? மதச் சண்டைகள்! அன்புக்கு ஏங்கும் மக்கள் எங்கே? இன்பம் எங்கே இன்பம்? என்று தத்தளிக்கும் மக்கள். மானுடம் தன்னுடைய மதியை இழந்து நிற்கின்றது. மக்களுடன் சண்டை! அறம் செத்து விட்டதோ? என்று எண்ணத் தோன்றுகிறது. நீதி விலை பேசப்படுகின்றது. பொருள் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற உணர்வுகள் எல்லோரிடமும் வளர்ந்துள்ளன. உழைப்பு என்றால் என்ன? என்ற கேள்வி எழுகின்ற காலமாகிவிட்டது. எப்படியும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற குறுகிய உள்ளம் வளர்ந்துவிட்டது. இதையெல்லாம் தூக்கி எறிந்து இன்பவாழ்வு வாழ, உழைத்துப் பொருள் ஈட்ட, அறநெறியில் வாழ, இன்றைக்குத் தேவை திருக்குறள்.

 

உலகத்தில் தனிமனிதனுக்காயினும் சரி, சமுதாயத்திற்காயினும் சரி, வளம் பல பெற்று நலமோடு வாழ, பகையிலிருந்து விலகிப் பண்புடன் கூடி வாழ வள்ளுவம் காட்டுவது மத நல்லிணக்கமே ஆகும். அன்புநெறி, ஒழுக்க நெறியாக, அறநெறியாக, அருள்நெறியாக, அறிவுடன் சிந்தித்துக் செயல்பட்டு ஒருமைப்பாட்டுடன் உலகமே ஒரு குடும்பமாக வாழ வழிகாட்டும் திருக்குறள், இன்றைய உலகின் மதநல்லிணக்கத்திற்குத் தேவை.

by Swathi   on 11 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன் திருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன்
திருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன் திருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்
திருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன் திருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்
திருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன் திருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன்
பொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன் பொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன்
வள்ளுவம் படிப்போமா!! வள்ளுவம் படிப்போமா!!
அனைத்து திருக்குறளுக்கும் தமிழ்-ஆங்கில விளக்க உரை, ஓவியம், ஒலி, காணொளி கொண்ட முழு தொகுப்பு www.valaitamil.com/thirukkural.php அனைத்து திருக்குறளுக்கும் தமிழ்-ஆங்கில விளக்க உரை, ஓவியம், ஒலி, காணொளி கொண்ட முழு தொகுப்பு www.valaitamil.com/thirukkural.php
திருக்குறளின் பெருமையை உணர்த்தும் திருக்குறள் வீடு !! திருக்குறளின் பெருமையை உணர்த்தும் திருக்குறள் வீடு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.