LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள்

இளைஞர் இலக்கியம் - பகுதி 1

                                   இளைஞர் இலக்கியம்

நூல்



1. தமிழ்


1. தமிழ் வாழ்த்து


தமிழே வாழ்க! தாயே வாழ்க!
அமிழ்தே வாழ்க! அன்பே வாழ்க!
கமழக் கமழக் கனிந்த கனியே
அமைந்த வாழ்வின் அழகே வாழ்க!

சேர சோழ பாண்டிய ரெல்லாம்
ஆர வளர்த்த ஆயே வாழ்க!
ஊரும் பேரும் தெரியா தவரும்
பாரோர் அறியச் செய்தாய் வாழ்க!

சீரிய அறமும் சிறந்த வாழ்வும்
ஆரும் அடையும் அறிவைப் பொழிந்தாய்;
வீரம் தந்தாய் மேன்மை வகுத்தாய்
ஈர நெஞ்சே இன்பம் என்றாய்.

குமரி நாட்டில் தூக்கிய கொடியை
இமயத் தலைமேல் ஏறச் செய்தாய்.
தமிழைத் தனித்த புகழில் நட்டாய்
தமிழின் பகைவர் நெஞ்சைச் சுட்டாய்.

முத்தமிழ் அம்மா! முத்தமிழ் அம்மா!
தத்துவ உணர்வை முதலில் தந்தாய்;
எத்தனை இலக்கியம், இலக்கணம் வைத்தாய்
முத்துக் கடலே! பவழக் கொடியே!

எழுத்தே பேச்சே இயலே வாழ்க!
இழைத்த குயிலே இசையே வாழ்க!
தழைத்த மயிலே கூத்தே வாழ்க!
ஒழுக்க வாழ்வின் உயிரே வாழ்க!

(இழைத்த - மணி பதித்த)

தமிழே ஆதித் தாயே வாழ்க!
தமிழர்க் கெல்லம் உயிரே வாழ்க!
தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும்
அமிழ்தாய் அமைந்த அம்மா வாழ்க!

ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும்
சீரைத் தந்த தமிழே வாழ்க!
ஓரா உலகின் ஒளியே வாழ்க!

(ஓரா - அறிவு நிரம்பாத ஒளியே - அறிவே)


2. முத்தமிழ்


படிப்பும் பேச்சும் இயற்றமிழ்!
பாடும் பாட்டே இசைத்தமிழ்!
நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே
நாடகத் தமிழ் என்பார்கள்.
முடிக்கும் மூன்றும் முத்தமிழே!
முத்தமிழ் என்பது புத்தமுதே!
முடித்த வண்ணம் நம் தமிழே
முத்தமிழ் என்றே சொல்வார்கள்.


3. மூவேந்தர்


சேர வேந்தர் தமிழ் வேந்தர்!
சிறந்த சோழர் தமிழ் வேந்தர்!
பாரோர் எல்லாம் புகழ்கின்ற
பாண்டிய வேந்தர் தமிழ் வேந்தர்!
நேரே தமிழைக் காத்தரே!
நீண்ட நாட்டை ஆண்டாரே!
வீரத் தாலே புகழெல்லாம்
விளைத்த இவரே மூவேந்தர்.


4. தமிழ்மொழி-தமிழ்நாடு


நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நாமெல்லாரும் தமிழர்கள்!
மாம் பழம் அடடா! மாம் பழம்
வாய்க் கினிக்கும் தமிழ் மொழி!
தீம்பால் செந்தேன் தமிழ் மொழி!
செங்க ரும்பே தமிழ் மொழி!
நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நாமெல்லாரும் தமிழர்கள்!

நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நமது நாடு தமிழ் நாடு!
காம்பில் மணக்கும் மல்லிகை
காதில் மணக்கும் தமிழ் மொழி!
வேம்பா நஞ்சா தமிழ்மொழி?
விரும்பிக் கற்பது தமிழ் மொழி!
நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நமது நாடு தமிழ் நாடு!


5. கட்டாயக் கல்வி


பன்றி எதற்குத் தெருவில் வந்தது?
பாட்டையி லுள்ள கழிவை உண்ண.
என்ன கழிவு தெருவில் இருக்கும்?
இருக்கும் பிள்ளைகள் வெளிக் கிருந்தனர்.

என்ன காரணம் அப்படிச் செய்ய?
இருக்கும் பெற்றோர் ஒழுக்க மற்றோர்.
சின்ன நடத்தை எப்படித் தொலையும்?
சிறந்த அறிவு பெருக வேண்டும்.

அறிவை எப்படி அடைய முடியும்?
அனைவர் தாமும் படிக்க வேண்டும்.
நிறைய எவரும் படிப்ப தெப்படி?
நீள முயன் றால் முடியும்.

குறைகள் தீர முயல்வ தெப்படி?
கூட்ட மக்கள் கிளர்ச்சி வேண்டும்.
கறைகள் போகா திருப்ப தென்ன?
கட்டாயக் கல்வி கிட்டாமை தான்.


6. தமிழன்


நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும்
நான் நான் நான்!
கல்வியில் என்னை வெல்ல நினைப்பதும்
ஏன் ஏன் ஏன்?

பல்லுயிர் காக்கும் எண்ணம் எனக்குண்டு
பார் பார் பார்!
செல்வத்திலே என்னை வெல்ல நினைப்பவன்
யார் யார் யார்?

சொல்லுடல் உள்ளம் ஞாலந் தாங்கும்
தூண் தூண் தூண்!
புல்லர்கள் என்னை வெல்ல நினைப்பது
வீண் வீண் வீண்!

தொல்லுல குக்குள்ள அல்லல்அ றுப்பதென்
தோள் தோள் தோள்!
வல்லவன் என்னை வெல்ல நினைப்பவன்
தூள் தூள் தூள்!


7. தமிழ்நாடு ஒன்றுபடுக!


தமிழ்நா டே!என் தாய்நா டே!நீ
தமிழைச் சேர்த்தாய் எங்கள் உயிரில்
அமிழ்தைச் சேர்த்தாய் எங்கள் வாழ்வில்
தமிழ்நா டேநீ வாழ்க! வாழ்க!

முத்தமிழ் அன்னாய்! முழுதும் நாங்கள்
ஒத்து வாழ்ந்தால் உனக்கும் நல்லது
செத்துக் கிடக்கும் எமக்கும் நல்லது
முத்தமிழ் அன்னாய் வாழ்க! வாழ்க!

குமரி தொடங்கி இமயம் வரைக்கும்
அமைந்த உன்றன் அளவும் குறைந்தது.
தமிழர் மேன்மைத் தரமும் குறைந்தது
தமிழின் மேன்மைத் தரமும் குறைந்தது.

வாழ்விற் புதுமை மலரக் கண்டோம்!
தாழாத் தலைமுறை தழையச் செய்யும்
வாழைக் கன்றுகள் வளரக் கண்டோம்.
வாழ்க அன்னாய் வாழ்க! வாழ்க!


8. தமிழ்தான் நீயா?


தமிழப் பெண்ணே தமிழப் பெண்ணே
தமிழ்ப டித்தாயா?

தமிழ்ப டித்தேன் தமிழ்ப டித்தேன்
தமிழப் பெண் நானே.

தமிழப் பெண்ணே தமிழப் பெண்ணே
தமிழை ஏன் படித்தாய்?

தமிழ் "படித்தேன் " அதை உண்ணத்தான்
தமிழ்ப டித்தேன் நான்.

(தமிழ் "படித்தேன்" என்றால், தமிழானது ஒரு படி
அளவுள்ள தேன் போல் இனிப்பது என்பது பொருள்)

அமிழ்தைத் தந்தால் தமிழைத் தள்ளி
அதை நீ உண்பாயா?

அமிழ்தும் தமிழுக் கதிக இனிப்பா?
அதுவா எனைவ ளர்க்கும்?

தமிழ்தான் நீயோ? நீதான் தமிழோ?
தமிழப் பெண்ணே சொல்!

தமிழை யும்பார் என்னை யும்பார்
வேற்றுமை யே இல்லை!


9. வானொலி


வானொலி எல்லாம் தேனொலி ஆக்கும்
செந்தமிழ்ப் பாட்டைக் கேட்டுக் கேட்டு
நானும் மகிழ்வேன் நாடும் மகிழும்
நானிலம் எல்லாம் நன்றாய் மகிழும்!

ஏன்ஒலி செய்தார் செந்தமிழ் நாட்டில்
இன்னொரு மொழியில் அமைந்த பாட்டை?
நானும் அழவா? நாடும் அழவா?
நமது நாட்டில் அதற்கென்ன வேலை?

தெலுங்கு நாட்டில் தெலுங்கு வேண்டும்.
செந்தமிழ் நாட்டில் அதற்கென்ன வேலை?
தெலுங்கு நாட்டில் செந்தமிழ்ப் பாட்டைச்
சேர்ப்பதுண்டா? இல்லவே இல்லை!

விலங்கு பறவை செந்தமிழ் நாட்டில்
விரும்பிக் கேட்பதும் செந்தமிழ்ப் பாட்டை!
குலுங்கும் அரும்பும் செந்தமிழ் நாட்டில்
குளிர்ந்த செந்தமிழ் கேட்டு மலரும்!



2. இயற்கை


1. மழைக் காலம்


வானி ருண்டது மின்னல் வீசிற்று
மடமடவென இடித்து - பயிர்
வளர்த்தது மழை பிடித்து.

ஆனது குளிர் போனது வெப்பம்
அங்கும்இங் கும்பெரு வெள்ளம் - அட
அதிலும் மீன்கள் துள்ளும்.

பூனை சுவரின் பொந்தில் ஒடுங்கும்
பொடிக் குருவிகள் நடுங்கும்-வண்ணப்
பூக்களில் ஈக்கள் அடங்கும்.

சீனன் கம்பளிக் குல்லாய் மாட்டிச்
சிவப்பு சால்வை போர்த்தான் - அவன்
தெருவில் வேடிக்கை பார்த்தான்!


2. மழை


வானத்தி லேபிறந்த மழையே வா! - இந்த
வையத்தை வாழவைக்க மழையே வா!
சீனிக்கரும்பு தர மழையே வா! - நல்ல
செந்நெல் செழிப்பாக்க மழையே வா!
கானல் தணிக்க நல்ல மழையே வா! - நல்ல
காடு செழிக்க வைக்க மழையே வா!
ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் - நீ
அழகுப டுத்தநல்ல மழையே வா!


3. கோடை


சுண்டிக் கொண்டே இருக்கும் கடலும்
சுட்டுக் கொண்டே இருக்கும் உடலும்
மண்டிக் கொண்டே இருக்கும் அயர்வே
வழிந்து கொண்டே இருக்கும் வியர்வை
நொண்டிக் கொண்டே இருக்கும் மாடும்
நொக்கும் வெயிலால் உருகும்இ லாடம்
அண்டிக் கொண்டே இருக்கும் சூடும்
அழுது கொண்டே திரியும் ஆடும்.

கொட்டிய சருகு பொரித்த அப்பளம்!
கொதிக்கும் மணலை மிதித்தால் கொப்புளம்!
தொட்டியில் ஊற்றிய தண்ணீர் வெந்நீர்!
சோலை மலர்ந்த மலரும் உலரும்.
கட்டி லறையும்உ ரொட்டி அடுப்பே!
கழற்றி எறிந்தார் உடுத்த உடுப்பே!
குட்டை வறண்டது தொட்டது சுட்டது;
கோடை மிகவும் கெட்டது கெட்டது!


4. குளம்


குடிக்கும் தண்ணீர்க் குளமே! - என்
குடத்தை நிரப்பும் குளமே!
படித்துறையில் எங்கும் - ஒரு
பாசி யில்லாக் குளமே!

துடித்து மீன்கள் நீரில் - துள்ளித்
துறையில் ஆடுங் குளமே!
எடுத்துக் கொண்டோம் தண்ணீர் - போய்
இனியும் வருவோம் குளமே!


5. குட்டை


சின்னஞ் சிறு குட்டை - அதில்
ஊறுந் தென்னை மட்டை! - அதோ
கன்னங் கரிய அட்டை! - எதிர்
காயும் எரு முட்டை! - அதோ
இன்னம் சோளத் தட்டை! - அந்த
எருமைக் கொம்பு நெட்டை - அதோ
பின்னால் எருது மொட்டை - நான்
பேசவாப கட்டை?

(பகட்டு - அழகு)


6. தாமரைக் குளம்


முழுதழகு தாமரைக் குளம்!
எழுத வருமா ஓவியப் புலவர்க்கும்? 
முழுதழகு தாமரைக் குளம்!

அழும் உலகை உவகையிற் சேர்ப்பது
அழகு சிரித் ததை ஒப்பது!
எழுந்த செங்கதிர் 'ஏன்'என்று கைநீட்ட
தேன்கொண்டு செந்தாமரை விரிந்தது.
முழுதழகு தாமரைக் குளம்!

செம்பும் தங்கமும் உருக்கி மெருகிட்டது
இதழ் ஒவ்வொன்றும் ஒளிபெற்றது.
அன்பு மதலை முகமென மலர்ந்தது
குதலை வண்டு வாய் மொழிந்தது.
முழுதழகு தாமரைக் குளம்!

(மதலை - குழந்தை, குதலை - மழலைச் சொல்)

மிதக்கும் பாசிலைமேல் முத்து மிதக்கும்
நம்விழி மகிழ்ச்சியில் குதிக்கும்
கொதிக்கும் செங்கதிர் மேற்கில் நடந்தது
கூம்பிடும் தாமைரையின் முகம் அதோ.
முழுதழகு தாமரைக் குளம்!


7. ஏரி


மாரி வந்தால் நீரைத் தேக்கும் ஏரி - அது
வயலுக் கெல்லாம் நீர் கொடுக்கும் ஏரி.
ஊரில் உள்ள மாடு குடிக்கும் ஏரி - அங்
குள்ளவரும் தண்ணீர் மொள்ளும் ஏரி.
ஏரிக்கரை எல்லாம் பனை, தென்னை - அதன்
இடையிடையே அலரி நல்ல புன்னை.
சார்ந்தவர்கள் எனக்குத் தந்தார் தொன்னை - பனஞ்
சாற்றை ஊற்றிக் குடிக்கச் சொன்னார் என்னை.


8. ஆறு


மேற்கிருந்து கிழக்கு நோக்கி
விரைந்து வந்தாய் ஆறே!
விதவிதப்பூ, பெரும்பெ ருங்கிளை
அடித்து வந்தாய் ஆறே!
தேற்ற வந்தாய் எங்கள் ஊரும்
சிறக்க வந்தாய் ஆறே!
செழிக்க உங்கள் நன்செய் என்று
முழக்கி வந்தாய் ஆறே!
நேற்றிருந்த வறட்சி எலாம்
நீக்க வந்தாய் ஆறே!
நெளிந்து நெளிந்து வெள்ளி அலை
பரப்பி வந்தாய் ஆறே!
காற்றோடும் மணத்தோடும்
கலந்து வந்தாய் ஆறே!
கண்டுமகிழக் கெண்டைவிழி
காட்டி வந்தாய் ஆறே!


9. கடற்கரை


கடலைச் சுண்டல் விற்கின்றார் - அவர்
கடலோரத்தில் நிற்கின்றார்.
கடலைச் சுண்டல் வா என்றேன் - புதுக்
காசு கொடுத்துத் தா என்றேன்.
கடலைச் சுண்டல் கொடுத் தாரே - அவர்
கையில் கூடையை எடுத்தாரே!
கடலைச் சுண்டல் விற்கின்றார் - பின்னும்
கடலோரத்தில் நிற்கின்றார்.


10. கடல்


முத்துக் கடலே வாழ்க! - இசை
முழங்கும் கடலே வாழ்க!
தத்தும் அலைகள் கரையை - வந்து
தாவும் கடலே வாழ்க!
மெத்தக் கப்பல் தோணி - மேல்
மிதக்கும் கடலே வாழ்க!
ஒத்துப் பறவைகள் பாடி - மீன்
உண்ணும் கடலே வாழ்க!

வண்ணம் பாடிப் பொழியும் - நல்ல
மழையும் உன்னால் அன்றோ!
தண்ணென் றுவரும் காற்றை - நீ
தந்தாய் கடலே வாழ்க!
கண்ணுக் கடங்க வில்லை - நான்
காணும் போதுன் பரப்பு!
மண்ணிற் பெரிதாம் கடலே - நீ
வாழ்க! வாழ்க! வாழ்க!

நீலக் கடலே வாழ்க! - ஒளி
நெளியும் கடலே வாழ்க!
மாலைப் போதில் கடலே - வரும்
மக்கட் கின்பம் தருவாய்.
காலைப் போதில் கதிரோன் - தலை
காட்டும் கடலே வாழ்க!
ஏலே லோப்பண் ணாலே - வலை
இழுப்பார் பாடும் கடலே!


11. வயல்


மலர் மணக்கும் தென்றல் காற்றில்
மாமன் வயற் சேற்றில்
சலசல என ஏரை ஓட்டித்
தமிழ் பாடினான் நீட்டி!
மலைகள் போல இரண்டு காளை
மாடுகள் அந்த வேளை
தலைநிமிர்ந்து பாட்டுக் கேட்டுத்
தாவும் ஆட்டம் போட்டு!


12 . சோலை


பச்சைமணிப் பந்தலல்ல "சோலை" - பசும்
பட்டுமெத்தை அல்லபுல்த ரைதான்!
நொச்சிச்செடிப் பாப்பாவை அணைத்துத் - தரும்
நூறுதரம் முல்லைக்கொடி முத்து!
மச்சிவீட்டை விடஉயரம் தென்னை - மிக
மணம்வீசும் அங்கே ஒரு புன்னை!
உச்சிக்கிளை மேற்குயிலும் பாடும் - பார்
ஒருபுறத்தில் பச்சைமயில் ஆடும்.

மணிக்குளத்தில் செந்தாமரைப் பூக்கள்-அங்கு
வகைவகையாய்ச் சிந்துபாடும் ஈக்கள்!
தணிக்கமுடி யாவியர்வைகழுவும்-நல்ல
சந்தனத்துத் தென்றல் வந்து தழுவும்!
இணைக்கிளைகள் மரக்கிளையில் கொஞ்சும்-மிக
இடிக்கும் பலா மரத்திற் பிஞ்சும்!
பிணிபோகும் மறைந்துபோகும் துன்பம்-இப்
பெருஞ்சோலை அளிப்பதெலாம் இன்பம்!

(கழுவும் தென்றல் என இயையும். கழுவுதல்-நீக்குதல்)


13. தோட்டம்


மாமரமும் இருக்கும்-நல்ல
வாழைமரம் இருக்கும்.
பூமரங்கள் செடிகள்-நல்ல
புடலை அவரைக் கொடிகள்,
சீமைமணற்றக் காளி-நல்ல
செம்மாதுளை இருக்கும்.
ஆமணக்கும் இருக்கும் - கேள்
அதன் பேர்தான் தோட்டம்.


14. தோப்பு


எல்லாம் மாமரங்கள்- அதில்
எங்கும் மாமரங்கள்;
இல்லை மற்ற மரங்கள்
இதுதான் மாந் தோப்பு.

எல்லாம் தென்னை மரங்கள்- அதில்
எங்கும் தென்னை மரங்கள்;
இல்லை மற்ற மரங்கள்
இது தென்னந் தோப்பு.

எல்லாம் கமுக மரங்கள்- அதில்
எங்கும் கமுக மரங்கள்;
இல்லை மற்ற மரங்கள்
இது கமுகந் தோப்பு.

எல்லாம் புளிய மரங்கள்- அதில்
எங்கும் புளிய மரங்கள்;
இல்லை மற்ற மரங்கள்
இது புளியந் தோப்பு.


15. மலை


அண்ணாந்து பார்த்தாலும் மலையே!-உன்
அடிதான் தெரியும்என் கண்ணில்.
மண்மேலே உட்கார்ந்த மலையே!-நெடு
வானத்தில் இருக்கும்உன் தலையே!
எண்ணாயி ரம்மரங்கள் இருக்கும் - அந்த
இலைபள பளவென்று சிரிக்கும்.
பண்ணாயிரம் கேட்கும் காதில்-அங்குப்
பல்லோரும் பாடுகின்ற போதில்.

வற்றா அருவிதரும் மலையே!-இங்கு
வாழ்வோர்க்கு நலம் செய்யும் மலையே!
சிற்றாடை கட்டிப்பல பெண்கள்-பூச்
செண்டாடிக் கொண்டிருக்கும் மலையே!
பற்றாக் குறை நீக்கக் குரங்கு-தன்
பல்லால் பலாப்பழத்தைக் கிழிக்கும்-நல்ல
தெற்குத் தமிழ்பாடிப் பெண்கள்-பெருந்
தினைப்புனம் காக்கின்ற மலையே!


16. விண்மீன்


மின்னாத வானில்
மின்னுகின்ற மீன்கள்
சின்ன சின்ன வயிரம்
தெளித்தமுத் துக்கள்
புன்னையின் அரும்பு
பூக்காத முல்லை
என்ன அழ காக
இருந்தன மீன்கள்!


17. கதிரவன்


தங்கத் தட்டே வாவா! - ஒரு
தனித்த அழகே வாவா!
பொங்கும் சுடரே வாவா!-பசும்
பொன்னின் ஒளியே வாவா!
எங்கும் இருப்பாய் வாவா!- நீ
எவர்க்கும் உறவே வாவா!
சிங்கப் பிடரைப்போல-பிடர்
சிலிர்த்த கதிரே வாவா!

கடலின் மேலே தோன்றி-நீ
காலைப் பொழுதைச் செய்வாய்.
நடுவா னத்தில் நின்று - நீ
நண்பகல் தன்னைச் செய்வாய்.
கொடிமேல் முல்லைம ணக்கும் - நல்
குளிர்ந்த தென்றல் வீசும்
படிநீ மாலைப் போதைப்-பின்
பரிவாய்ச் செய்வாய் வாழ்க.


18. நிலவு


சொக்க வெள்ளித் தட்டு - மிகத்
தூய வெண்ணைய்ப் பிட்டு!
தெற்கத்தியார் சுட்டு-நல்ல
தேங்காய்ப் பாலும் விட்டு
வைக்கச் சொன்ன தோசை-அது
வயிர வட்ட மேசை!
பக்க மீன்கள் பலவே-ஒரு
பட்டத் தரசு நிலவே.


19. நிலவு


வட்ட நிலவே!
வாடாப் பூவே!
சட்டிநி லாவே!
தாமரைப் பூவே!
தொட்டிப் பாலே!
சோற்றுத் திரளே!
எட்டிஇ ருந்தாய்
இனியவி ருந்தாய்.

வெள்ளித் தட்டே!
விண்ணுக் கரசே!
பிள்ளை முகமே!
பேசுந் தமிழே!
உள்ளக் களிப்பே!
உலக விளக்கே!
அள்ளிப் புரிந்தாய்
அழகு விருந்தே.


20. நிலவு


பள்ளியை விட்டு வந்தேனா?
பட்டப் பகலும் மங்கினதா?
உள்ளே வீட்டில் நுழைந்தேனா?
உள்ள சுவடியை வைத்தேனா?
பிள்ளைகள் எல்லாம் வந்தாரா?
பெரிய தெருவில் சேர்ந்தோமா?
வெள்ளி நிலாவும் வந்ததே!
விளையா டும்படி சொன்னதே!

ஓடித் தொட்டோம் ஓர் ஆளை!
ஒளியும் ஆட்டம் ஆடினோம்!
பாடி நடந்தோம் எல்லோரும்!
பச்சைக் கொடிக்கு நீர்விட்டோம்!
தேடிக் கள்ள னைப்பிடித் தோம்!
சிட்டாய்ப் பறந்தோம் வீட்டுக்கே!
ஆடச் செய்தது வெண்ணிலா
அழகைச் செய்தது வெண்ணிலா.
by Swathi   on 28 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.