LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 752 - கூழியல்

Next Kural >

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - எல்லா நன்மையும் உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் - எல்லாத்தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர். (உயரச் செய்தல் - தாம் தாழ்ந்து நிற்றல். இகழ்தற்கண்ணும் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், 'யாவரும்' என்றார். பின்னும் கூறியது அதனை வலியுறுத்தற்பொருட்டு.)
மணக்குடவர் உரை:
பொருளில்லாதாரை எல்லாரும் இகழுவர்; பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்புச் செய்வர். இது சிறப்பெய்தலும் பொருளுடைமையாலே வருமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
இல்லாரை எல்லாரும் எள்ளுவர்-மற்றெல்லா நலமுமுடையராயினும் செல்வமில்லாதவரைத் தாயுட்பட எல்லாரும் தாழ்வாகக் கருதுவர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர்-வெறொரு நலமும் இல்லாதவராயினும் செல்வ முடையாரை அரசனுட்பட எல்லாரும் மதித்துப் போற்றுவர். எள்ளுதலாவது பார்த்தலும் உரையாடுதலுஞ் செய்யாமை. சிறப்புச் செய்தலாவது அரசன் பட்டமளித்தலும், அரசனும் பெற்றோருந் தவிரப் பிறரெல்லாம் கை கூப்புதலும் மதிப்பான இருக்கை யளித்தலும், எல்லாரும் அவர் வேண்டுகோளை நிறைவேற்றலுமாம். எள்ளுதல் என்னும் உளவினை, இகழ்தலாகிய வாய்வினையையும் புறக்கணித்தலாகிய மெய்வினையையுந் தழுவும். செல்வத்தின் சிறப்பை வலியுறுத்தும் பொருட்டு இருவகையாலுங் கூறினார். "கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின் எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர்-இல்லானை இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லா தவன்வாயிற் சொல். (நல்வழி,34)
கலைஞர் உரை:
பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.
Translation
Those who have nought all will despise; All raise the wealthy to the skies.
Explanation
All despise the poor; (but) all praise the rich.
Transliteration
Illaarai Ellaarum Elluvar Selvarai Ellaarum Seyvar Sirappu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >