LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- எஸ்.ராமகிருஷ்ணன்

இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன

 

கதை ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்.
இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன என்பதை, கடந்த மூன்றாண்டுகளாகவே நான் அறியத் துவங்கியிருக்கிறேன். முன்பு கடற்கரையைக் கடந்து செல்கையில் எப்போதாவது பறவைகள் கடந்து போவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் மீதான என் கவனம் கூடியதில்லை. ஆனால் இந்த மூன்றாண்டிற்குள் நகரில் எங்கெங்கும் எந்த வகைப் பறவைகள் வந்து அடைகின்றன. அதன் குரல் எப்படியிருக்கும். எந்தத் திசையில் அவை பறந்து போகின்றன என்பதைக் கவனமாக அறிந்திருக்கிறேன். என்னை இயங்க வைத்துக்கொண்டிருப்பது இந்தப் பறவைகள்தான். பறவை என்பது எனக்கு வெறும்காட்சிப் பொருள் அல்ல. அது ஒரு இயக்கம். அது ஒரு பரவசம். என்னை முன் நடந்தும் ஒரு உந்துதல்.
பறவைகளைத் தேடி நாங்கள் ஒவ்வொரு நாளின் மாலையிலும் சில மணி நேரங்களாவது நடந்து அலைகிறோம். இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன. அவை எப்போதாவது தன்னை மறந்து சப்தமிடுகின்றன. மிக அரிதாகச் சண்டையிட்டுக் கொள்கின்றன. அந்தக் குரல்கள் இயல்பாக இல்லை. பறவைகள் களிப்பில் சிறகடிப்பதையோ, ஒன்றையொன்று உரசி விளையாடுவதையோ காணவே முடிவதில்லை.
இந்த நகரின் பறவைகள் அலுப்பூட்டத் துவங்கிவிட்டன. அவற்றின் இயந்திரகதியான அசைவுகளும் சிறகடிப்பும் சகித்துக்கொள்ள முடியாதபடி ஆகி வருகின்றன. பெரும்பான்மை நேரங்களில் இந்தப் பறவைகளும் சப்தம் ஒடுங்கி மனிதர்களைப் போல சாலை இயக்கத்தை வெறித்தபடியே அமர்ந்திருக்கின்றன. கைவீசி கலைத்த போதும் பறவைகளின் நிசப்தம் கலைவதேயில்லை. அரிதாகக் கரையும் போதும் வாகன இரைச்சலிடையே அதன் துருவேறிய குரல்கள் அமுங்கிப்போய்விடுகின்றன.
எனக்கு இது போன்ற அரித்துப் போன குரல்கள் தேவையற்றவை. எனக்கு அசலான பறவையின் குரல் வேண்டும். அந்தக் குரல் வாழை இலையில் உருண்டோடும் தண்ணீரைப் போல நரம்புகளில் ஊர்ந்து செல்ல வேண்டும். கத்தியால் கை நரம்புகளைத் துண்டிக்கும் போது கசிந்து பீறிடும் ரத்தத்தைப்போல வெம்மையாகவும் வலியோடும் பிசுபிசுப்போடும் அவை பீறிட வேண்டும். எனக்குப் பறவைகளின் விசித்திரமான குரல்கள் வேண்டும்.
ஏதாவது ஒரு பறவையின் குரலின் வழியாக மட்டுமே என் சுகியின் பேச்சை நான் மீட்டு எடுக்க முடியும். ஆறு வயதைக் கடந்த பின்னும் பேச்சு வராத என் சுகிக்காகப் பறவைகளின் அகவல்கள் வேண்டும். என் கண்கள் கடந்து செல்லும் மரங்களைத் துளையிடுகின்றன. மனம் ஆகாசத்தின் அகண்டவெளியில் சப்தமில்லாது பறக்கும் பறவைகளைப் பின்தொடர்கின்றன. எனக்குப் பறவைகள் வேண்டும். ஓயாது குரலிடும் பறவைகள் வேண்டும்.
இரண்டு கற்கள் உரசப்படுகையில் நெருப்பு பற்றிக் கொள்வது போல ஏதோவொரு பறவையின் குரல் என் மகளின் குரலோடு உரசி சொற்கள் பீறிட வேண்டும். அது வரை நான் பறவைகளைத் தேடிக் கொண்டேயிருப்பேன். என் மகளின் குரலை மீட்டுத்தரப்போகின்ற ஒரு பறவை இந்த நகரின் ஏதோவொரு மரக்கிளையில் இருக்கக்கூடும். இன்றில்லாமல் போனாலும் நாளை இந்த நகரை நோக்கி வந்து கொண்டிருக்க சாத்தியமுண்டு.
இதற்காகவே ஒவ்வொரு நாளும் மாலை வருவதற்காகவே காத்திருக்கிறேன். தண்ணீரில் கரைந்து கொண்டிருக்கும் உப்பைப் போன்ற பகலின் நிசப்தம் என்னை அழுத்துகிறது. எனது ஆர்வம் ஒடுங்கிக் கொண்டே வருகின்றது. பின் இரவிலான தெருவிளக்கின் நிழல் போல யாருமறியாமல் நாங்கள் இந்த நகரில் அலைந்து கொண்டேயிருக்கிறோம்.
என் சுகி சாலையோரம் நின்றபடியே பறவைகளை அவதானித்துக் கொண்டிருக்கிறாள். பறவையின் கழுத்து அசைந்தபடியே இருக்கின்றது. பறவைகள் ஒரு போதும் சாந்தமடைவதில்லை. பறவைகளின் கண்கள் காட்சிகளை விழுங்கியபடியே இருக்கின்றன. கால்கள் எப்போதும் பறப்பதற்கான துடிப்பில் பட்டும் படாமலும் நிற்கின்றன. றெக்கைகள் ஒடுங்கியும் அசைந்தும் கொண்டிருக்கின்றன. நிம்மதியற்றவை பறவைகள்.
பறவைகள் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதில்லை. அவை இரவைக் கடந்து போவதற்காக மட்டுமே மரங்களுக்கு வந்துசேர்கின்றன. விடிந்ததும் பகலின் கடைசி நுனிவரை தேடிச் செல்கின்றன. என் நினைவில் வேறு எதுவுமில்லை. பறவைகள், பறவைகள், பறவைகள் மட்டுமே.
*
என் மகள் சுகி ஆறு வருடத்தின் முந்தைய ஒரு பகல் பொழுதில் முதுகுளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் பிறந்தாள். அப்போது நான் எனது அலுவலகப்பணி காரணமாக கோட்டயத்திலிருந்தேன். காலை எட்டரை மணிக்கு போன் செய்து வித்யாராணியின் அப்பா தகவலைச் சொன்னார். மதியம் வேலையை முடித்துவிட்டுப் புறப்பட்டு வருவதாகச் சொல்லியபடியே தங்கியிருந்த அறையை விட்டுக் கீழே இறங்கி உணவகத்திற்காக நடந்து சென்றேன்.
நானும் அப்பாவாக ஆகிவிட்டேன் என்பது மனதில் சந்தோஷத்தை உருவாக்கியிருந்தது. ஆனால் எதிர்பார்த்த ஒன்றுதானே நடந்திருக்கிறது என்பது போன்று உற்சாகம் அடங்கியே இருந்தது. சாலையைக் கடந்து போகின்ற ஆண்களை உற்றுக் கவனிக்கத் துவங்கினேன். அப்பாவாக ஆனவர்கள், என்றாவது அப்பாவாக ஆகப் போகின்றவர்கள் என்று இரண்டாகப் பிரிந்து தென்படத் துவங்கியது.
அத்தோடு என் வயதை ஒத்தவர்கள், அதைக் கடந்தவர்கள், வயதானவர்கள் ஒவ்வொருவரைக் காணும்போது இவர்கள் யாருடைய அப்பா, எத்தனை பிள்ளைகளை இவர்கள் உருவாக்கியிருப்பார்கள் என்று வியப்பான எண்ணங்கள் உருவாகின. அத்தோடு தாங்கள் ஒரு அப்பா என்பதற்கான எந்தச் சுவடும் இன்றி அவர்கள் தன்னியல்பாகப் போவதும் வருவதும் எனக்குப் பிடித்திருந்தது.
அப்பாக்களின் உலகம் மிகப் பெரியது. அதற்குள்ளாகத்தான் என் அப்பா இருக்கிறார். என் அண்ணன் இருக்கிறார். என் தாத்தா இருக்கிறார். நான் அறிந்த அத்தனை ஆண்களும் அப்பாக்கள் உலகின் பிரதிநிதிகள்தானே. இதில் நானும் இன்றிலிருந்து ஒரு ஆள் என்பது மனதில் களிப்பை உருவாக்கியது.
உணவகத்தில் இனிப்பு தருவித்துத் தனியே சாப்பிட்டபடியே சுகியைப் பற்றி நினைக்க ஆரம்பித்தேன், திருமணமான சில வாரங்களிலே வித்யாராணி கர்ப்பமாகிவிட்டாள். அதை உறுதி செய்ய மருத்துவரிடம் சென்று வந்த மறுநாளே அவள் பிறக்கப் போகும் குழந்தையின் பெயரை முடிவு செய்துவிட்டாள்.
சுகி என்னும் பெயரை எப்படித் தேர்வு செய்தாள் என்று தெரியவில்லை. தனக்குப் பெண்தான் பிறக்கும் என்று தீர்மானமாக நம்பினாள். அத்தோடு சுகி என்னும் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லத் துவங்கினாள். அந்தச் சொல்லின் மீது அவளுக்கு அதீத மயக்கம் உருவாகியிருந்தது. கையில் கிடைக்கும் காகிதங்களில் எல்லாம் சுகி சுகி என்று எழுதித் தள்ளினாள்.
அத்தோடு வித்யாராணி குழந்தையை எப்படி வளர்ப்பது, அதை எந்தப் பள்ளியில் சேர்ப்பது அவளை என்ன படிக்க வைப்பது, எங்கே வேலைக்கு அனுப்புவது, அவளுக்கு யாரைத் திருமணம் செய்து தருவது, வயதான காலத்தில் அவளோடு தங்கிக் கொள்வது வரை மனதில் கற்பனையானதொரு உலகை சிருஷ்டிசெய்து கொண்டு விட்டாள்.
எதற்காக பெண்கள் இவ்வளவு முன்திட்டமிடுகிறார்கள் என்று எனக்குப் புரியவேயில்லை.
நான் வித்யாராணியிடம், அவரசப்பட்டுவிட்டோம். நாம் இன்னும் தேனிலவிற்குக் கூடப் போய்வரவில்லை என்றேன். அவள் அதைப் பற்றிய அக்கறையின்றி எப்போ இருந்தாலும் பெத்துக்கப்போற பிள்ளைதானே, இப்பவே பெத்துட்டா நல்லது என்றாள். கர்ப்ப காலத்தில் அவளது பேச்சு, உடல் மொழி மற்றும் செய்கைகள் யாவுமே மாறத்துவங்கியிருந்தன.
திருமணம் செய்து கொள்ளும் வரை எனக்குக் குழந்தைகள் பற்றிய நினைப்பே கிடையாது. கைகளில் குழந்தைகளைத் தூக்கியே பல வருடகாலமாக இருக்கும். எப்போதோ சிறுவயதில் அருகாமை வீட்டிலிருந்த சர்வேயர் மகனைத் துணியில் சுற்றி பத்திரமாகப் பிடித்துக்கொள்ளும்படியாகக் கையில் தந்தார்கள். அந்தக் குழந்தை உறங்கிக்கொண்டிருந்தது. சில நிமிசங்கள் கையில் வைத்திருப்பதற்குள் கூச்சமாகிப் போனது.
அதன்பிறகு குழந்தைகளுடனான என் உறவு வெகுவாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. அண்ணன் வீட்டில் குழந்தைகள் பிறந்த போதுகூட எட்ட இருந்து பார்த்திருக்கிறேன். மற்றபடி குழந்தைகள் பிறக்கிறார்கள், வளர்க்கிறார்கள் என்பது எல்லாம் வெறும் செய்தியாகவே இருந்தது.
திருமணம் நடந்து முடிந்த சில நாட்களில் ஒரு நாள் படுக்கையில் வித்யாராணி நமக்கு எத்தனை குழந்தைகள் வேண்டும் என்று கேட்டாள். நான் அதைப்பற்றி அதுவரை யோசித்ததேயில்லை. இதை எப்படி நாம் முடிவு செய்ய முடியும் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள்ளிருந்தது. ஆனால் அவளாகவே எல்லா வீட்டிலும் ரெண்டு பிள்ளைகள் தான் இருக்கு. நமக்கு ஒண்ணு போதும். அதுவும் பொம்பளைப் பிள்ளையா இருந்துட்டா நல்லது என்றாள். நான் எதற்காக என்று கேட்டுக் கொள்ளவில்லை.
பிறகு அவளாகவே தன் வலது கையை நீட்டி தன் கையிலோடும் ரேகைப்படி ஒரேயொரு பிள்ளைதான் தனக்குப் பிறக்கும் என்று சொன்னாள். நீ கைரேகை எல்லாம் பார்த்திருக்கிறாயா என்று கேட்டேன். அவள் சிரித்தபடியே தன்னோடு படித்த மீனாவிற்குக் கை ரேகை பார்க்கத் தெரியும் என்றும் அவள் ஒரு நாள் கையைப் பார்த்து இப்படி பலன் சொன்னாள் என்ற படியே அவள் சொன்ன மாப் பிள்ளை மாதிரித்தான் நீங்கள் இருக்கீங்க என்றாள்.
பள்ளிக்கூட வயதிலே பிள்ளைகள் பெத்துக்கொள்வதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டாயா என்று கேட்டேன். அவள் ஆறாம் வகுப்பிலே படிக்கும் போதே யாரைக் கல்யாணம் பண்ணிக்கிடுறதுனு பொம்பளைப் பிள்ளைகளுக்குள்ளே போட்டி நடக்கும். நான் அப்பவே மெட்ராசுல இருந்து வர்ற மாப்பிள்ளையைத்தான் கட்டிக்கிடுவேனு சொன்னேன். எதுக்குன்னா மெட்ராசில இருக்கிறவங்கள் எல்லாம் ரெண்டு பிள்ளைகள் தான் பெத்துக்கிடுவாங்களாம். ஊர்ப்பக்கம்னா நாலு அஞ்சு பெத்துக் கொள்ள வேணுமில்லை என்று சொல்லிச் சிரித்தாள்.
என் கல்லூரி நாட்களில் ஒரு நாளும் நான் குழந்தைகளைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. நேற்றுவரை என் உலகில் என்னைத் தவிர யாருமேயில்லை. அந்த உலகிற்குள் வித்யாராணியைச் சேர்த்துக்கொள்வதற்கே எனக்குச் சில மாதங்கள் ஆனது. இதில் குழந்தையைப் பற்றி எதற்காக யோசனை செய்ய வேண்டும் என்று விட்டுவிட்டேன்.
பள்ளி, கல்லூரியில் படித்த நாட்களிலும் வேலைக்குச் சேர்ந்த பிறகும் நான் தனியாகவே இருந்தேன். இந்த உலகம், அதன் பரபரப்பு, முந்தித்தள்ளும் போட்டிகள் என்னைப் பற்றிக் கொள்ளவேயில்லை. ஆனால் எதற்கு எனப் புரியாத ஆழமான வருத்தம் ஒன்று என்னைப் பற்றியிருந்தது. அதை என்னால் தீர்த்துக் கொள்ள முடியாது என்றும் தீவிரமாக நான் நம்பியிருந்தேன்.
என் அறை, நாலைந்து உடைகள், ஒன்றிரண்டு சினிமாப் பாடல் கேசட்டுகள், ஒரு பைக் இவ்வளவு மட்டுமே என் உலகம். மரங்கள், பறவைகள், ஆகாசம், மழை, வெயில், காற்று எதுவும் என் கண்ணில் படவேயில்லை. எப்போதாவது மழை பெய்யும் போதுகூட என்னை அறியாமல்தான் ஒதுங்கி நின்றிருக்கிறேன். மழையை நின்று கவனித்ததேயில்லை.
உலகோடு நெருக்கமாக இல்லாமல் இருந்ததால் எனக்கு ஒரு நஷ்டமும் வந்துவிடவில்லை. மாறாக என் தனிமை என்னை ஒரு பாதுகாப்பு வலை போலப் போர்த்தி வைத்திருந்தது. அரிதாகச் சில நேரங்களில் பெண்களைப் பார்ப்பதுண்டு. அப்போதும்கூட மனதில் காமம் மட்டுமே நெளிந்து போகும். கடவுள் பிரார்த்தனை, திருவிழா, ஜனக்கூட்டம் என எதிலும் நான் கலந்து கொண்டதேயில்லை.
நான் வேலை செய்யும் பன்னாட்டுத் தனியார் வங்கி, அதன் கிளைகள், நீல நிற, மஞ்சள் நிற ரசீதுகள், என் முன்னே இயங்கிக் கொண்டிருக்கும் கணினி, சப்தமின்றி ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரம் இவை மட்டுமே என் உலகம். வித்யாராணியைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றிக்கூட அதிகம் யோசனை செய்து முடிவு எடுக்கவில்லை. அப்பாவே அதையும் தீர்மானம் செய்திருந்தார்.
நான் அவளைப் பெண்பார்க்கப் போன நாளில் அவள் அணிந்திருந்த இறுக்கிப்பிடித்த ஜாக்கெட் எனக்குள் அவசரமான காமத்தை உருவாக்கியது. ஒருவேளை அதனால்தான் திருமணத்திற்குச் சம்மதித்தேனோ என்னவோ தெரியாது. அவள் என்னைக் கவனித்த அளவிற்கு நான் அவளைக் கவனிக்கவேயில்லை. அவள் முன்னிருந்த நிமிடங்களில் ஒரு நீர்ப்பூச்சி குளத்தின் மீது ஊர்ந்து போவது போல காமம் என் உடலில் பட்டும் படாமலும் ஊர்ந்து கொண்டிருந்தது. திருமணம் அவள் ஊரில்தான் நடந்தது.
திருமணமான சில நாட்களுக்கும் மனதில் காமம் மட்டுமேயிருந்தது. உடல் சோர்வடையும் வரை காமத்திலே திளைத்துப் போயிருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தது போல காமம் எனக்குள் இருந்த தீராத தனிமையைப் போக்கவில்லை. மாறாக அது அதிகப்படுத்திவிட்டது.
அவளை விட்டு எங்காவது ஒரு நாள் தனியாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாக இருந்தன. அது என்னைக் கடுமையாக அழுத்தத் துவங்கியது. ஒருவேளை அந்த அழுத்தம் காரணமாகவோ என்னவோ ஒரு இரவு முழுவதும் காய்ச்சல் கண்டது.
நான் அறையில் தனியே கிடந்தேன். ஈரத்துணிகள் காற்றில் உலர்வது போல எனக்குள் இருந்த காமம் கொஞ்சம் கொஞ்சமாக உலரத் துவங்கியது. இரண்டு நாட்களின் பின்பாக எழுந்து கொண்ட போது வித்யாராணியும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்றப் பெண்களைப் போல தெரிந்த பெண்ணாகியிருந்தாள். அவளுக்கும் கூடுதலில் அதிக நாட்டமில்லை. கர்ப்பமாகிவிட்டபிறகு அவள் யோசனைகள் முழுவதும் அப்படியே குழந்தை பக்கமாகத் திரும்பிவிட்டன. நான் அவள் உலகிலிருந்து வெளியேறத் துவங்கியதைப் போலவே உணர்ந்தேன்.
*
கர்ப்பம் பெண்களிடம் காரணமற்ற ஆத்திரத்தை கோபத்தை உருவாக்கி விடுகிறது என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் துவங்கினேன். ஆறாவது மாதத்திற்குப் பிறகு வித்யாராணி காரணம் இல்லாமலே என்னோடு சண்டையிடத் துவங்கினாள். அல்லது நான் அவளோடு அற்ப காரணத்திற்காகக் கத்தத் துவங்கியிருந்தேன். இந்தச் சண்டையின் முடிவில் அவள் அழுதபடியே படுக்கையில் கிடப்பதைப் பலமுறை கண்டிருக்கிறேன். எதற்காக அவள் அப்படி அழ வேண்டும், அப்படி என்ன நடந்துவிட்டது என்று ஆத்திரமாக வரும். இருவருமே சில நாட்களுக்குப் பேசாமல் இருப்போம். பிறகு அது தானே கலைந்து போய்விடும்.
அவள் எப்போதும் யோசனையில் பீடிக்கப்பட்டவளாகவே இருந்தாள். ஒருநாள் வீடு திரும்பும் போது தன்னுடைய உதட்டில் வெள்ளையாக ஏதோ மரு போலப் படரத்துவங்கியிருக்கிறது. உடனே மருத்துவரிடம் சென்று காட்ட வேண்டும் என்று சொன்னாள். நீ கிளம்பி அலுவலகம் வந்திருந்தால் அப்படியே மருத்துவரிடம் போய்வந்திருக்கலாமே என்றேன். அது அவளுக்குள் ரௌத்திரத்தை உருவாக்கியது. இப்படியே நான் செத்துப் போயிருந்தாக்கூட உங்களுக்கு நல்லாதான் இருந்திருக்கும் என்றாள். நானும் கத்தினேன். அவள் ஓங்காரமாக அழுதாள்.
பிறகு இருவரும் மருத்துவமனையை அடையும்போது எட்டரை மணியாகியிருந்தது. பெண் மருத்துவரிடம் மட்டுமே காட்டுவேன் என்று அவள் அடம்பிடித்தாள். உதட்டில் உள்ள மருவிற்கு யாரிடமும் காட்டலாம் என்ற போதும் அவள் சமாதானம் அடையவேயில்லை. ஆனால் அன்று வேறுவழியில்லாமல் ஆண் மருத்துவரிடமே காட்டவேண்டிய சூழ்நிலை உருவானது. அவர் கர்ப்பிணிகளுக்கு இதுபோன்ற வெளிறிய உதடுகள் இருப்பது வழக்கம்தான். பயப்படத் தேவையில்லை. தேவைப்பட்டால் விட்டமின்கள் அதிகம் சாப்பிடுங்கள் என்று சிபாரிசு செய்தார். வித்யாராணி அதில் திருப்தி படவேயில்லை.
அவள் தன்னை மருத்துவரும் சேர்ந்துகொண்டு ஏமாற்றுவதாக உணர்ந்தாள். வீட்டிற்கு வந்த பிறகு கண்ணாடியைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு உதட்டையே பார்த்துக்கொண்டிருந்தாள். உதட்டைக் கையால் தேய்த்துத் தேய்த்துப் பார்த்தாள். பிறகு அவளாக குமுறிக் குமுறி அழத்துவங்கினாள். மறுநாள் அவளை ஒரு பெண்மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு போனேன். அவரும் இது வழக்கமான ஒன்று தான், பயப்படத் தேவையில்லை என்றார். ஆனால் வித்யாராணிக்கு இவை எவையும் சமாதானம் ஆகவில்லை.
மாறாக தனக்குத் தீர்க்கமுடியாத நோய் உண்டாகியிருக்கிறது. அதை எல்லோரும் மறைக்கிறார்கள் என்று நம்பத் துவங்கினாள். அவள் வேண்டுமானால் ஒரு வார காலம் ஊரில் போய் இருந்துவிட்டு வரட்டும் என்று அனுப்பி வைத்தேன். திரும்பி வந்தபோது உதட்டில் இருந்த வெள்ளை மறைந்து போயிருந்தது. அவள் வெட்கத்துடன் வெறும் தேமல், இதுக்குப் போயி பயந்துட்டேன், என்னை அறியாமலே மனசிலே நிறைய பயமாக இருக்கு. எதுக்குனு தெரியலை என்றாள்.
ஊருக்குப் போய்விட்டுத் திரும்பிய பிறகு திடீரென என் மீது அளவிற்கு அதிகமான அக்கறை காட்டத் துவங்கினாள். பத்து நிமிசத்திற்கு ஒரு முறை அலுவலகத்திற்கு போன் செய்து நலம் விசாரிப்பாள். சாப்பாட்டைத் தானே அலுவலகத்திற்குக் கொண்டுவருவாள். என் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு உறங்குவாள். அவள் செய்கைகள் எனக்குள் குழந்தை பிறப்பு தொடர்பான கசப்புகளை அதிகப்படுத்தியிருந்தது. இதற்கு மேல் குழந்தைகளே வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டேன்.
எட்டாவது மாசத்திலிருந்து அவள் யாருடனும் பேசிக்கொள்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டுவிட்டாள். யாராவது ஏதாவது கேட்டால் மட்டுமே ஒரு வார்த்தை பேசுவாள். மற்றநேரங்களில் யோசனையின் பெருஞ்சுழலில் தனியே மாட்டிக் கொண்டிருந்தாள்.
சுகி பிறப்பதற்குப் பத்து நாட்கள் முன்பாக வித்யாவைக் காண்பதற்கு அவள் ஊருக்குச் சென்றிருந்தேன். அவள் முகத்தில் விவரிக்கமுடியாத பயம் அப்பிப்போயிருந்தது. அத்தோடு அவள் குரல் உடைந்திருந்தது. கை நிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தாள். நெற்றி நிறைய திருநீறு இருந்தது. நீ பயப்படும் அளவு ஒன்றுமேயில்லை என்று அவளிடம் ஏதோ ஆறுதல் சொன்னேன். அன்று ஊருக்குத் திரும்பி வரும்போது கூட குழந்தையைப் பற்றி என் மனதில் எவ்விதமான சித்திரமும் உருவாகவில்லை. சொல்லப்போனால் எனக்குள்ளும் அப்பா என்பதைப் பற்றிய பயம் உருவாக ஆரம்பித்திருந்தது.
நீண்ட நாட்களுக்கு சுகி என்னும் சொல் எனக்கு வெறும் சொல்லாகவே இருந்தது. மருத்துவமனையில் இருந்த என் குழந்தையை அருகில் சென்று பார்த்த போது தான் அந்தச் சொல் குழந்தையோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. என்னை அறியாமல் சுகி சுகி என்று மெல்லிய குரலில் அழைத்தபடியே விரலால் குழந்தையின் கேசத்தை வருடிவிட்டேன்.
தூக்கம் கலைந்த முகத்துடன் இருந்த வித்யாராணி என்னை மாதிரி இருக்கா உங்களை மாதிரி இருக்கா என்று கேட்டாள். உன்னை மாதிரியேதான் என்றேன். அதைத் தான் எங்கம்மாவும் சொல்றா என்று சிரித்தாள். அந்தச் சிரிப்பு அதன் முன்பு நான் கண்டறியாதது. பிரசவம் பெண்ணிற்கு முன் இல்லாத ஒரு அழகை உருவாக்குகிறது போலும். அவள் குழந்தையைக் கையில் எடுத்து பால் புகட்டத் துவங்கினாள். குழந்தை அவள் மார்பில் முட்டியபடியே உறங்கத் துவங்கியது.
அவள் என் கையில் குழந்தையைக் கொடுத்தாள். அது என் குழந்தை. நான் குழந்தையின் அப்பா என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் துவங்கினேன். உலகில் அதுவரை பிறந்திருந்த அத்தனை குழந்தைகளும் என் கவனத்தை விட்டுப் போய் ஒரேயொரு குழந்தை, அது என்னுடைய குழந்தை என்பது மட்டுமே முக்கியமாகிக் கொண்டிருந்தது. அப்போது தோன்றியது அப்பா என்பது ஒரு பொறுப்புணர்வு. தீராத சந்தோஷம் என்று.
*
சுகி ஒரு வயது வரை மற்றக் குழந்தைகளைப் போல் அழுவதேயில்லை. பெரும்பாலும் உறக்கம். விழித்திருந்த போதுகூட எதையோ உற்று நோக்கி நிலைகுத்திய பார்வையோடு அப்படியே இருந்தாள். எதற்காக அவள் பார்வை அப்படியே நிலை குத்தியிருக்கிறது. அப்படி என்ன கவனிக்கிறாள் என்று வியப்பாக இருக்கும். பிற குழந்தைகளைப் போல அவளிடம் பரபரப்போ துடிப்போ இல்லை. தரையில் விட்டால்கூட அவள் அதிகம் தவழுவது இல்லை. எதையாவது உற்றுப் பார்க்கத் துவங்கி அப்படியே நிலை கொண்டுவிடுவாள். யாராவது தூக்கிக்கொண்டு வெளியே வந்தாலும் அவள் பார்வை ஒன்றின் மீதே குவிந்துவிடும்.
வித்யாராணிக்கு இது பயத்தை உருவாக்கத் துவங்கியது. அவளாகவே குழந்தையைக் கோவிலுக்குக் கொண்டு செல்வதும் நேர்ச்சைகள் செய்வதுமாக இருந்தாள். நான் அலுவலகம் இல்லாத சிலநாட்களில் சுகியைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது அவள் சோர்வாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.
குழந்தைகளுக்கான மருத்துவர்கள் அவளைச் சோதித்துவிட்டு பொதுவான சத்துக்குறைவு காரணமாகவே அவள் இப்படியிருக்கிறாள் என்பதைக் கண்டுபிடித்தார்கள். ஆனால் இரண்டு வயது வரை சுகியிடம் எந்த மாற்றமும் வரவில்லை. சுகி ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை என்பதை வித்யாராணி கண்டுபிடித்த நாளில் அவள் கதறி அழத்துவங்கினாள். என் பிள்ளைக்குப் பேச்சு வரலையே என்று சப்தமாகக் கத்தினாள். அப்படியெல்லாம் இருக்காது, அவள் சப்தம் கேட்டால் திரும்புகிறாள். அதனால் நிச்சயம் தப்பாக எதுவும் ஆகாது என்றேன். வித்யா சமாதானம் அடையவில்லை.
இதற்கான சிறப்பு மருத்துவரிடம் சுகியைக் கொண்டு சென்றோம். ஏதோ பெயர் தெரியாத குறைபாட்டினைக் காரணம் காட்டி மருந்துகள் தந்ததோடு அவள் முன்பாகத் தொடர்ந்து ஏதாவது பேசிக் கொண்டேயிருங்கள் என்றார்.
அன்றிலிருந்து வித்யாராணி குழந்தையைத் தன்மடியில் வைத்துக் கொண்டு அம்மா சொல்லு. . . அப்பா சொல்லு . . . தாத்தா சொல்லு . . . என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டேயிருந்தாள். அந்த சப்தங்களும் அவளைக் கவரவேயில்லை. நானும் மாலைநேரங்களில் சுகியைத் தூக்கி வைத்துக் கொண்டு தெரிந்த சொற்கள் யாவையும் சொல்லிப் பழக்கினேன். அவள் சொற்களைத் தனக்குள் அனுமதிக்கவேயில்லை. தண்ணீருக்குள் விழுந்த கூழாங்கற்களைப் போல அந்தச் சொற்கள் கரையாமல் அப்படியே விழுந்தன.
இரண்டு வார காலம் விடுமுறை எடுத்துக்கொண்டு குழந்தையோடு கோவில் கோவிலாகப் பயணம் செய்தோம். வழி முழுவதும் தென்பட்ட சூரியன், காற்று, மலை, மரம், ஆறு, நாய், வீடுகள், தெருக்கள், வாகனங்கள் என யாவையும் பெயர் சொல்லிச் சொல்லி அலுத்துப் போன பிறகும் குழந்தையின் கவனம் சொற்களின் மீது குவியவேயில்லை.
சில நேரங்களில் சுகியின் மௌனம் என்னை பயமுறுத்தியது. அவள் கையில் ஒரு ஸ்பூனை வைத்துக்கொண்டு அதையே மணிக்கணக்கில் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆத்திரத்தில் அந்த ஸ்பூனைப் பிடுங்கி வீசி எறிய வேண்டும் போலிருந்தது. அப்படிச் செய்தும் பார்த்தேன். ஆனால் அது சுகியை அசைக்கவேயில்லை. தன்னுடைய கைப்பொருள் பறிபோன போதும்கூட அவளிடம் அழுகையோ ஆர்ப்பாட்டமோ இல்லை.
இன்னொரு பொருள் தன் கைக்குக் கிடைக்கும் வரை அவள் தரையை வெறித்துப் பார்க்கத் துவங்கினாள். அன்றிரவு அவளைப் போலவே ஒரு ஸ்பூனைக் கையில் எடுத்துக்கொண்டு நானும் உற்றுப் பார்க்க ஆரம்பித்தேன். இதன் முன்பாக உலகில் அப்படியொரு பொருளை நான் கண்டதேயில்லையோ எனும்படியாக இருந்தது ஸ்பூன். அதை வித்யாராணி கவனித்திருக்க வேண்டும். பிள்ளை தான் படுத்தி எடுக்குதுன்னா. நீங்களும் ஏன் என் உயிரை வாங்குறீங்க என்று ஸ்பூனைப் பிடுங்கி வீசினாள்.
எனது சண்டைகள், கத்தல்களால்தான் குழந்தைக்கு இப்படியாகியிருக்கிறது என்றுவேறு அவள் நம்பத் துவங்கியிருந்தாள். நானும் கர்ப்பகாலத்தில் அவள் ஆத்திரமாக நடந்துகொண்டதும் கத்திக் கூப்பாடு போட்டு அழுததும்தான் குழந்தையை இப்படி ஆக்கிவிட்டது என்று கத்தினேன். அவள் ஆமாம் எல்லாமே என்னாலேதான் வந்தது நான் இப்படியே செத்துப் போய்விடுகிறேன். நீங்கள் சந்தோஷமாக இருங்கள் என்று ஆத்திரமுற்றாள். அப்போதும் சுகி பாட்டிலின் மூடி ஒன்றைக் கையில் வைத்து உற்றுப் பார்த்தபடியே அசைவற்று உட்கார்ந்தேயிருந்தாள். அப்பாவாக இருப்பது என்பது பொறுப்புணர்வு மட்டுமில்லை என்பது புரியத் துவங்கியது.
*
சுகியை அழைத்துக்கொண்டு பழனியில் உள்ள சித்த வைத்திய நிலையம் ஒன்றிற்குச் சென்றிருந்தோம். மலையின் பின்புறமிருந்தது. குழந்தையின் குரல்வளையில் சிறிய பிளவு இருப்பதாகச் சொல்லிய படியே வைத்தியம் ஆரம்பித்தார்கள். நாற்பது நாட்கள் சிகிச்சைகள். ஒவ்வொரு நாளும் மலையின் மீது படரும் பகலொளியைப் பார்த்த படியே இருப்போம். சுகியின் கண்கள் தொலை தூர மலையைவிட அருகாமையில் கடந்து செல்லும் சிற்றெறும்பின் மீது நகர்ந்து கொண்டிருந்தது. பகலிரவாக இருவரும் குழந்தையைப் பார்த்தபடியே இருந்தோம். எவ்விதமான மாறுதலும் இல்லை. அதன்பிறகு டி.கல்லுபட்டி, மார்த்தாண்டம், வாராங்கால், ஏர்வாடி என்று எங்கெங்கோ சிகிச்சைக்காக அழைத்துக்கொண்டு சென்றோம். சுகிக்கு நாலு வயது முடியும் வரை அவள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அது போலவே மற்றவர்கள் பேசும் ஒலிகளும் அவளுக்கு உவப்பாக இல்லை.
வித்யாராணி தனது தவற்றின் காரணமாகவே சுகி இப்படியிருப்பதாக நினைத்துக்கொண்டு உபவாசம், முடிகொடுத்தல் என்று தன்னை வருத்திக் கொள்ளத் துவங்கினாள். அவள் முகத்தில் எப்போதுமே படபடப்பும் வெளிக்காட்டிக்கொள்ள முடியாத பயமும் ஒட்டிக்கொண்டிருந்தது.
சாயாவனம் என்ஏம் சிற்றூரிலிருந்த மூலிகை வைத்தியர் ஒருவரைக் காண்பதற்காக விடிகாலையில் அவர் வீட்டிற்குப் போனபோது முதன்முதலாக சுகி அங்கிருந்த கிளி ஒன்றின் சப்தத்தைக் கேட்டு வேகமாக முகத்தைத் திருப்பியதைக் கவனித்தேன். அந்த வீட்டில் இருந்த நேரங்களில் கிளி கத்தும் போது எல்லாம் சுகியின் முகம் தானே அதை நோக்கித் திரும்பியதைக் கண்டேன். சுகியைக் கிளிக்கூண்டு அருகில் கொண்டு சென்றேன். அவள் வியப்போடு கிளியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். உனக்குக் கிளி வேண்டுமா என்று கேட்டேன். அவள் இமை மூடாமல் கிளியைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். கிளி விட்டு விட்டுக் கத்தியது. கிளி சப்தமிடும் போது சுகியின் கண்கள் வேகமாகச் சிமிட்டிக்கொண்டன.
*
ஊர் திரும்பிய பிறகு ஒரு மாலையில் சுகியை அழைத்துக்கொண்டு நகரிலிருந்து மேற்காகச் செல்லும் சாலையில் பைக்கில் பயணம் செய்யத் துவங்கினேன். நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் சாலையோரம் உள்ள ஒரு தர்க்கா ஒன்றையும் அதன் முன் அடர்ந்திருந்த மரங்களில் வந்து கூடும் பறவைகளின் இரைச்சல் ஒலியையும் ஒரு முறை கடந்து செல்கையில் கேட்டிருக்கிறேன். பைக்கில் அந்தச் சாலையை நெருங்கிச் செல்லும்போதே இடைவிடாத பறவைகளின் கரைப்பொலி கேட்கத் துவங்கியது.
மரம் தெரியாமல் காகங்களும் குருவிகளும் ஒன்றிரண்டு கொக்குகளும் சாம்பலும் இளஞ்சிவப்பும் கலந்த பறவைகளும் காணப்பட்டன. சுகி அந்த சப்தங்களால் கவரப்பட்டாள் என்பது அவள் முகமாற்றத்திலே தெரிந்தது. அவள் மரத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டேயிருந்தாள். காதைத் துளையிடும் அந்த ஒலி அவளுக்குள் நிரம்பத் துவங்கியிருந்தது. அவள் முகத்தில் பிரகாசமான வெளிச்சம் படர்ந்துகொண்டிருந்தது போல உணர்ந்தேன். இருட்டும் வரை நாங்கள் இருவரும் அங்கேயே இருந்தோம். சுகியின் கைவிரல்கள் தாளமிடுவது போல அசைந்து கொண்டிருந்தன. வரும் வழியில் மரப்பட்டை நிறத்திலிருந்த ஆந்தை ஒன்றைக் கூடக் கண்டோம்.
அன்றிரவு வித்யாராணியிடம் சுகி பறவைகளின் சப்தத்தால் கவரப்படுகிறாள். நாம் சில பறவைகளை வாங்கி வீட்டில் வைத்து அதன் சப்தத்தைக் கேட்க வைக்கலாமே என்றேன். வித்யாராணி ஒத்துக் கொண்டாள். புறாக்கள், மைனா, கிளி என்று கூண்டுப்பறவைகளைக் கொண்டுவந்து சுகியின் முன்பாக சப்தமிடச் செய்தோம். ஆரம்பத்தில் ஆர்வம் காட்டிய சுகி சில நாட்களுக்குள் அதில் கவனம் கொள்ளவேயில்லை. மாறாக அந்த சப்தங்கள் தன்னைக் குத்திக்காட்டுவது போலவே வித்யாராணி உணரத் துவங்கினாள். வீட்டில் அதை வைத்துக்கொள்ள முடியாது என்று வேலைக்காரப் பெண்ணிடம் தூக்கித் தந்துவிட்டாள்.
அதன்பிறகு அலுவலகத்தில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரின் வழியாக ஒரு ஆலோசனை கிடைத்தது. பதிவு செய்யப்பட்ட பறவைகளின் குரல்கள் உள்ள குறுந்தகடுகள் கிடைக்கின்றன. அதை வாங்கி கேட்க வைத்துப் பாருங்கள் என்றார். பதிவுசெய்யப்பட்ட பறவைகளின் குரல்கள் உள்ள இசைத்தட்டிற்காகத் தேடி அலைந்து ரிச்சி தெருவில் வாங்கிவந்தேன். நூறு பறவைகளின் ஒலிகள் அதில் அடங்கியிருந்தன.
ஒவ்வொரு பறவையின் ஒலியும் கேட்கும்போது சுகியின் கண்கள் தன்னை அறியாமல் விரிவடையத் துவங்கின. ஆனால் அவள் அந்தப் பறவை எங்கேயிருக்கிறது என்று சுற்றிலும் தேடத் துவங்கினாள். ஒரு இயந்திரத்தைக் காட்டி அவளை ஏமாற்றுகிறோமோ என்னும் குற்றவுணர்வு எனக்குள் உருவாகத் துவங்கியது.
அதற்காகவே அவளை அழைத்துக்கொண்டு பறவைகளைத் தேடி மாலையில் அலைந்து திரிவது என்று முடிவு செய்தேன். ஆரம்ப நாட்களில் பறவைகள் இந்த நகரில் இருக்கின்றனவா என்று சந்தேகம் வருமளவு அரிதாக இருந்தன. ஆனால் விசாரித்து விசாரித்து பறவைகள் எந்த மரங்களில் அடைய வருகின்றன. எந்த நேரத்தில் தரையிறங்குகின்றன என்பதை அறிந்துகொண்டு அதை நோக்கி நடக்கத் துவங்கினோம்.
பரபரப்பான வாகன இயக்கங்களைத் தாண்டி நாங்கள் மூவரும் மெதுவாக நடந்து கொண்டேயிருப்போம். ஏதாவது வீட்டின் சுவரிலோ, புழுதியடைந்து போன மரங்களிலோ பறவையொலி கேட்டால் அங்கேயே நின்றுவிடுவோம். சுகியின் கண்கள் பறவையைத் தேடத்துவங்கும். நானும் அதற்குப் பழகியிருந்தேன். சில நாட்கள் இலக்கற்று நடக்கத் துவங்கி அலுப்பும் வெறுமையாகவும் வீடு திரும்பி வந்திருக்கிறோம்.
ஏன் குரல்கள் அவளுக்குள்ளிருந்து எழும்புவதேயில்லை. எல்லாச் சொற்களும் ஏன் வடிந்து போய்விடுகின்றன என்னும் குழப்பம் தூக்கத்திலும் எனக்குள் பீறிட்டுக் கொண்டேயிருந்தது. அவள் கவனத்தைக் குவியவைப்பதற்காக ஏதேதோ செய்த போதும் மாற்றமேயில்லை. ஆனால் இதைத் தவிர சுகியிடம் வேறு வித்தியாசம் எதுவுமில்லை. அவளாகக் குளித்துக்கொண்டாள். அவளாக உடைகளை உடுத்திக் கொண்டாள். பசித்த வேளைகளில் மிகக் குறைவாகச் சாப்பிட்டாள். யாவும் மௌனமாக நடந்தன என்பதுதான் இதன் முக்கிய பிரச்சனை.
நாளுக்கு நாள் சுகி பறவைகளைத் தேடிப் போய் அதன் சப்தங்களைக் கேட்பதில் ஆர்வம் கொள்ளத் துவங்கினாள். ஆனால் எந்தப் பறவையின் குரலுக்கும் அவள் மறு மொழி தந்ததில்லை. இதற்காகவே நான் பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ளத் துவங்கினேன். சலீம்அலியின் புத்தகங்களை வாங்கி வந்து இரவெல்லாம் படித்தேன். எனக்குத் தெரிந்தவரை பறவைகளைப் பற்றி இடைவிடாமல் அவளோடு பேசினேன்.
அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு மின்சார ரயிலில் சென்று ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து செல்லும் கிளைவழிகளில் எங்கே என்ன பறவைகள் இருக்கக்கூடும் என்று அலைய ஆரம்பித்தேன்.
நகரம் எண்ணிக்கையற்ற கிளை வழிகளும் தெருக்களும் சந்துகளும் நிரம்பியதாக இருந்தது. நகரில் வாழும் மனிதர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவான பறவைகளே நகரில் இருந்தன.
தேடி அலுத்துப் போன நாட்களில் பயணம் செய்து காடுகளை நோக்கிச் செல்லத் துவங்கினோம். ஒரு புதிய பறவையைக் கண்டு பிடித்தபோது சுகியின் முகத்தில் சொல்லமுடியாத மகிழ்ச்சி ததும்புவதைக் கண்டிருக்கிறேன். எங்களோடு வித்யாராணி கூடவே அலைந்துகொண்டிருந்தாள். அவளுக்குப் பறவைகளோ, அதன் குரல்களோ எதுவும் முக்கியமாகவேயில்லை. குழந்தை எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற ஒற்றைப் பிரார்த்தனை மட்டுமேயிருந்தது.
சுகியை அவ்வப்போது காட்டிற்குள் அழைத்துப் போகத் துவங்கியதில் ஏற்பட்ட முதல் பாதிப்பு, காற்று. அவளால் சீரற்ற காற்றின் வேகத்தை எதிர் கொள்ள முடியவில்லை. அவள் நடுக்கத்தோடும் தலையைச் சிலுப்பியபடியும் காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தாள். அதுவும் அதிகாலை நேரக் காற்று அவள் உடலைத் துவளச் செய்தது. அதன் காரணமாக அடிக்கடி காய்ச்சலுக்கு உட்பட்டாள்.
இதற்காகவே காட்டை விலக்கி நகருக்குள் சுற்றியலையத் துவங்கினோம். சுகியின் உலகில் பறவைகள் மட்டுமேயிருந்தன. அதன் தொடர்ச்சியான பறத்தல், விசித்திரமான சப்தங்கள் மட்டுமே நிரம்பியிருந்தது. இந்த மூன்று வருடங்களில் நாற்பது ஐம்பது நாட்கள் மட்டுமே அலுவலகம் சென்றிருப்பேன். மற்ற நாட்களில் சுகிதான் என் கவனமாகிப் போனாள்.
*
சுகி வளரத் துவங்கியிருந்தாள். ஆறு வயது முடியப்போகிறது என்றாலும் பத்து வயதுச் சிறுமி போன்ற தோற்றம் உருவாகியிருந்தது. தன்னிச்சையாக அவள் வீட்டிலிருந்து இறங்கி தெருவில் நடந்து போய்வருவதும் எங்காவது சாலையில் பறவையின் குரலைக் கேட்டால் அப்படியே நின்றுவிடுவதும் இயல்பாக இருந்தது.
தன் மகளால் பேசவே முடியாது என்று முழுமையாக நம்பியவளைப் போலவே அவளுடன் சைகையில் உரையாடத் துவங்கினாள் வித்யாராணி. அது சுகியை இன்னமும் ஆத்திரப்படுத்தியிருக்க வேண்டும். அவள் அந்தச் சைகைகள் எதற்கும் பதில் தருவதேயில்லை. பசிக்கும் நேரங்களில் அவளாக எடுத்துச் சாப்பிடுவதும் பின்பு ஜன்னலை ஒட்டி ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டுக்கொண்டு வெளியே பார்த்துக்கொண்டிருப்பதையும் இயல்பாக்கிக்கொண்டிருந்தாள்.
சுகிக்காகவே வீடு மாற்றத் துவங்கினேன். சில மாதங்கள் நகரை விட்டு விலகி கடற்கரையை ஒட்டிய ஒரு பழைய வீட்டிற்குக் குடிமாறிப் போனோம். அந்த வீட்டிலிருந்து நடந்தே கடற்கரைக்குப் போய்விடலாம். சுகி அதிகாலை நேரங்களில் தனியே கடற்கரையில் அலைந்து கொண்டிருப்பாள். மீன்களைக் கொத்தியலையும் பறவைகளும் கடலின் மீது தாழப்பறக்கும் பறவைகளும் அவளை உற்சாகம் ஊட்டின. ஆனால் அந்த உற்சாகம் நெடுநாள் நீடிக்கவில்லை.
தன் வீட்டின் பின்னால் உள்ள ஏரியில் எண்ணிக்கையற்ற கொக்குகளும் நாரைகளும் வந்து போகின்றன என்று நண்பர் ஒருவர் சொன்னதை நம்பி இரட்டை ஏரி பகுதிக்கு வீடு மாறி சில மாதங்கள் வசித்திருந்தோம். அந்த வசீகரமும் நீடிக்கவில்லை. எல்லாமும் துளை விழுந்த பலூன் போலச் சில நிமிசங்களில் வடிந்துபோய்விடுகின்றது. சுகியைக் குழந்தையாகப் பார்த்த போது அவள் கண்கள் எப்படி நிலை குத்தியிருந்ததோ அப்படியே இப்போதும் இருந்தன.
பல இரவுகளில் அவள் உறங்கும் போது அருகில் அமர்ந்து அழுதிருக்கிறேன். எதற்காக சுகியின் மனதில் ஒரு வார்த்தைகூடத் தங்குவதில்லை. ஏன் அவள் உதடுகள் உறக்கத்திலும் இறுகிக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை நானும் வித்யாராணியும் போட்டுக் கொண்ட சண்டைகள் கர்ப்பத்திலே அவள் வாயைக் கட்டிவிட்டதா? எவருடனும் பேச வேண்டிய அவசியமேயில்லை என்று இந்த வயதிற்குள் முடிவுசெய்துவிட்டாளா?
மெல்ல சுகியால் பேசமுடியவில்லை என்ற துயரம் எனக்குள் உறைந்து இறுகிப்போக ஆரம்பித்தது. எவரிடமும் பகிர்ந்து கொள்ளவோ, ஆறுதல் படுத்திக் கொள்ளவோ முடியாத அந்த துக்கம் கடுகடுத்த வலியோடு எனக்குள் பூரணமாக வேர்விட்டிருந்தது.
*
கரிக்கலிக்கு சகியை அழைத்துக் கொண்டு போனபோது தொலைவிலே பறவைகளின் ஒலி கேட்கத் துவங்கியிருந்தது. ஏதேதோ நாடுகளிலிருந்து பறவைகள் புலம்பெயர்ந்து அங்கே வந்து சேர்கின்றன என்று சொன்னார்கள். சுகி தனியே நடந்து அலைந்தபடியே அந்தப் பறவைகளின் குரல்களை உன்னிப்பாகக் கேட்டாள். பிறகு கீழே விழுந்து கிடந்த நீலநிற இறகு ஒன்றை எடுத்துக் கையில் வைத்து ஆட்டிய படியே ஒரு சப்தத்தைப் பின் தொடர்கின்றவள் போல நடந்து போகத் துவங்கினாள். நான் அவள் பின்னாடியே சென்றேன். அவள் மிகக் கவனமாக நடந்து போய் புதர் போன்ற கிளைகளை விலக்கியபடியே அந்த சப்தத்தைப் பின் தொடர்ந்து சென்றாள். பிறகு அண்ணாந்து பார்த்தபடியே வியப்போடு சொன்னாள்,
புல்புல்.
ஆமாம் என்று தலையாட்டினேன். பிறகுதான் புரிந்தது. சுகி பேசினாள் என்பது. ஆச்சரியத்துடன் அது என்னவென்று கேட்டேன். அவள் பதிலற்று புல்புல்லின் சப்தத்தில் தன்னை மறந்து போயிருந்தாள். சுகியால் பேச முடிகிறது என்பது எவ்வளவு பெரிய விஷயம். ஆனால் அவள் பேசவிரும்பவில்லை. அல்லது பேசுமளவு அவளை வேறு எந்தச் செயலும் உந்தவில்லை. வரும்வழியெங்கும் ஏதேதோ பேச வைக்க முயன்றும் அவளிடமிருந்து வார்த்தை வரவில்லை. ஆனால் அன்றிரவு முழுவதும் அந்த ஒற்றைச் சொல் எனக்குள் நீந்திக் கொண்டேயிருந்தது
வீடு வந்தபிறகு வித்யாராணியிடம் அதைப்பற்றிச் சொன்னேன். அவளால் நம்பமுடியவில்லை. ஒரு முறை தானும் புல்புல் என்று சொல்லிக் கேட்க வேண்டும் என்பதற்காக அவள் எவ்வளவோ முயற்சி செய்தாள். ஆனால் மூடிக் கொண்ட சிப்பியைப் போல ஒரு சொல்லோடு அவள் மௌனம் திரும்பிவிட்டிருந்தது.
நிச்சயம் இன்னொரு பறவையால் அவள் மனதிலிருந்து இன்னொரு சொல்லைக் கொத்தி எடுத்து வந்துவிட முடியும் என்று நம்பினேன். இதற்காகவே அவளை அடையாற்றில் உள்ள ஆற்றின் கழி முகம் மற்றும் கிண்டி பூங்காவின் மரங்கள் அடர்ந்த பகுதி, நந்தனம் விளையாட்டு மைதானத்தின் புல் வெளி, மீனம்பாக்கத்தை ஒட்டிய கிராமங்கள் என்று எங்கெங்கோ கூட்டிக் கொண்டே சென்றேன்.
நாளாக ஆக அவள் பறவைகளின் ஒலியால் அடைந்த பரவசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறாள் என்பது புரிந்தது. இப்போது அவள் வேறுவேறு பறவைகளின் சப்தத்தைவிடவும் முன்பு கேட்ட பறவையின் ஒலியை மறுபடியும் எங்கே எப்போது கேட்போம் என்பதில்தான் நாட்டம் கொண்டிருக்கிறாள் என்பதை அறிய முடிந்தது.
அவளுக்காக பறவைகளை அறியத் துவங்கி என் உலகில் பறவைகளின் விசித்திரமான நிறங்கள் மாறுபட்ட குரல்கள் அது எழுப்பும் அக உணர்வுகள் மட்டுமே நிரம்பியிருந்தன. அன்றாட உலகின் வாகனங்கள், திரையரங்குகள், மின்சார ரயில்கள், உணவகங்கள் என யாவும் என்னிலிருந்து கழன்று போகத் துவங்கியது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை நானும் சுகியும் கேளம்பாக்கத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது சட்டென ஒரு இடத்தில் என் முதுகில் கையை வைத்து வண்டியை நிறுத்தும்படியாக அழுத்தினாள் சுகி. நான் சாலையோரமாக வண்டியை நிறுத்தியபோது அருகாமையில் இருந்த மரத்தில் பறவையைக் காட்டினாள். இவ்வளவு ஒதுங்கிய மரத்திலிருந்த பறவை எப்படி அவள் கண்ணில் பட்டது என்னும் வியப்புடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தலையும் மார்பும் வயிறும் வாலும் வெளுத்து மற்றெங்கும் செந்நிறமாக இருந்த பறவையது. கடல் மீது இதுபோன்ற பறவைகள் சுற்றியலைவதைக் கண்டிருக்கிறேன். பறவை விருட்டெனப் பறந்து இன்னொரு மரத்தின் உச்சிக்கிளைக்குச் சென்றது. அவள் ஆதங்கத்துடன் சொன்னாள்,
ஆலா . . . மழை வரும்.
நிச்சயம் சுகியால் பேச முடிகிறது. நான் சுகியைக் கட்டிக் கொண்டு பேசுடா பேசுடா என்றேன். சுகி பேசவில்லை. அவள் என் கைகளைத் தள்ளிக் கொண்டு பைக் நிறுத்தப்பட்ட இடத்திற்குப் போய் நின்று கொண்டாள். பறவை பறந்து போயிருந்தது. வெற்று மரத்தை இருவரும் வெறித்தபடியே சில நிமிசங்கள் நின்று கொண்டிருந்தோம். பிறகு மௌனமாக வீடு திரும்பிவிட்டோம். சுகி ஏன் பேச்சை உனக்குள்ளாகவே ஒளித்துக் கொள்கிறாய். உனக்குப் பிடித்தமான பறவைகள் பெயரை மட்டுமாவது நீ சொல்லிக்கொண்டேயிரேன் என்று அன்றிரவு படுக்கையில் கிடந்தபடியே அரற்றினேன். ஆனால் அவளிடம் மாற்றமே இல்லை.
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வார்த்தை சுகி பேசிவிட மாட்டாளா என்னும் நம்பிக்கையின் மீதே ஊர்ந்து நகர்கிறது. இன்றைக்கும் நானும் சுகியும் வித்யாராணியும் புறநகரின் மண்பாதைகளில் சுகியோடு பறவைகளைத் தேடி சுற்றியலைந்தபடியே இருக்கிறோம்.
பேசுவது என்பது எளிமையானதில்லை. அது ஒரு விந்தை என்று எங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத்துவங்கியிருக்கிறது. இப்போதெல்லாம் மிக அரிதாகவே நாங்களே எங்களுக்குள் பேசிக் கொள்கிறோம். கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த வாளியைப் போல பேச்சு எங்களுக்குள்ளாகவே அறுந்து விழுந்து கிடக்கிறது.
ஏதோவொரு பறவை இன்னமும் என் மகளைப் பேச வைத்துவிடும் என்னும் நம்பிக்கையிருக்கிறது. ஆயிரமாயிரம் மனிதர்கள், நெருக்கடியான வாகனங்கள், நான்குவழிச் சாலைகள், உறங்க இடமற்ற பிளாட் பாரவாசிகள், நோயாளிகள், உதிரி மனிதர்கள், எண்ணிக்கையற்ற அலுவலகங்கள், வீசி எறியப்பட்ட கழிவுகள் என நிரம்பி வழியும் இந்த மாநகருக்குள்ளும் பறவைகள் இருக்கின்றன. அவற்றில் ஏதோ வொன்று என் மகளுக்கான ஒரு வார்த்தையைச் சுமந்தபடியே அலைந்து கொண்டிருக்கிறது.
*
அப்பா என்னும் சொல் எத்தனை வெளிக்காட்ட முடியாத கனமும் துக்கமும் வலியும் நிராசைகளும் நிரம்பியது என்பதை இப்போது முழுமையாக உணர்ந்திருக்கிறேன்.
இந்த இரவில் எரிந்து வீழும் நட்சத்திரத்தின் அவசரத்தில் செல்லும் அந்தப் பெயர் தெரியாத பறவையைக் காணும் போதெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்,
அப்பாவாக இருப்பதும் எளிமையானதில்லை. அது தராசின் முள்ளைப் போல எப்போதும் நடுங்கிக் கொண்டேயிருக்கும் ஒரு ஸ்திதி.

        இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன என்பதை, கடந்த மூன்றாண்டுகளாகவே நான் அறியத் துவங்கியிருக்கிறேன். முன்பு கடற்கரையைக் கடந்து செல்கையில் எப்போதாவது பறவைகள் கடந்து போவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் மீதான என் கவனம் கூடியதில்லை. ஆனால் இந்த மூன்றாண்டிற்குள் நகரில் எங்கெங்கும் எந்த வகைப் பறவைகள் வந்து அடைகின்றன. அதன் குரல் எப்படியிருக்கும். எந்தத் திசையில் அவை பறந்து போகின்றன என்பதைக் கவனமாக அறிந்திருக்கிறேன். என்னை இயங்க வைத்துக்கொண்டிருப்பது இந்தப் பறவைகள்தான். பறவை என்பது எனக்கு வெறும்காட்சிப் பொருள் அல்ல. அது ஒரு இயக்கம். அது ஒரு பரவசம். என்னை முன் நடந்தும் ஒரு உந்துதல்.பறவைகளைத் தேடி நாங்கள் ஒவ்வொரு நாளின் மாலையிலும் சில மணி நேரங்களாவது நடந்து அலைகிறோம். இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன. அவை எப்போதாவது தன்னை மறந்து சப்தமிடுகின்றன.

 

        மிக அரிதாகச் சண்டையிட்டுக் கொள்கின்றன. அந்தக் குரல்கள் இயல்பாக இல்லை. பறவைகள் களிப்பில் சிறகடிப்பதையோ, ஒன்றையொன்று உரசி விளையாடுவதையோ காணவே முடிவதில்லை.இந்த நகரின் பறவைகள் அலுப்பூட்டத் துவங்கிவிட்டன. அவற்றின் இயந்திரகதியான அசைவுகளும் சிறகடிப்பும் சகித்துக்கொள்ள முடியாதபடி ஆகி வருகின்றன. பெரும்பான்மை நேரங்களில் இந்தப் பறவைகளும் சப்தம் ஒடுங்கி மனிதர்களைப் போல சாலை இயக்கத்தை வெறித்தபடியே அமர்ந்திருக்கின்றன. கைவீசி கலைத்த போதும் பறவைகளின் நிசப்தம் கலைவதேயில்லை. அரிதாகக் கரையும் போதும் வாகன இரைச்சலிடையே அதன் துருவேறிய குரல்கள் அமுங்கிப்போய்விடுகின்றன.எனக்கு இது போன்ற அரித்துப் போன குரல்கள் தேவையற்றவை. எனக்கு அசலான பறவையின் குரல் வேண்டும். அந்தக் குரல் வாழை இலையில் உருண்டோடும் தண்ணீரைப் போல நரம்புகளில் ஊர்ந்து செல்ல வேண்டும். கத்தியால் கை நரம்புகளைத் துண்டிக்கும் போது கசிந்து பீறிடும் ரத்தத்தைப்போல வெம்மையாகவும் வலியோடும் பிசுபிசுப்போடும் அவை பீறிட வேண்டும்.

 

          எனக்குப் பறவைகளின் விசித்திரமான குரல்கள் வேண்டும்.ஏதாவது ஒரு பறவையின் குரலின் வழியாக மட்டுமே என் சுகியின் பேச்சை நான் மீட்டு எடுக்க முடியும். ஆறு வயதைக் கடந்த பின்னும் பேச்சு வராத என் சுகிக்காகப் பறவைகளின் அகவல்கள் வேண்டும். என் கண்கள் கடந்து செல்லும் மரங்களைத் துளையிடுகின்றன. மனம் ஆகாசத்தின் அகண்டவெளியில் சப்தமில்லாது பறக்கும் பறவைகளைப் பின்தொடர்கின்றன. எனக்குப் பறவைகள் வேண்டும். ஓயாது குரலிடும் பறவைகள் வேண்டும்.இரண்டு கற்கள் உரசப்படுகையில் நெருப்பு பற்றிக் கொள்வது போல ஏதோவொரு பறவையின் குரல் என் மகளின் குரலோடு உரசி சொற்கள் பீறிட வேண்டும். அது வரை நான் பறவைகளைத் தேடிக் கொண்டேயிருப்பேன். என் மகளின் குரலை மீட்டுத்தரப்போகின்ற ஒரு பறவை இந்த நகரின் ஏதோவொரு மரக்கிளையில் இருக்கக்கூடும். இன்றில்லாமல் போனாலும் நாளை இந்த நகரை நோக்கி வந்து கொண்டிருக்க சாத்தியமுண்டு.இதற்காகவே ஒவ்வொரு நாளும் மாலை வருவதற்காகவே காத்திருக்கிறேன். தண்ணீரில் கரைந்து கொண்டிருக்கும் உப்பைப் போன்ற பகலின் நிசப்தம் என்னை அழுத்துகிறது. எனது ஆர்வம் ஒடுங்கிக் கொண்டே வருகின்றது.

 

        பின் இரவிலான தெருவிளக்கின் நிழல் போல யாருமறியாமல் நாங்கள் இந்த நகரில் அலைந்து கொண்டேயிருக்கிறோம்.என் சுகி சாலையோரம் நின்றபடியே பறவைகளை அவதானித்துக் கொண்டிருக்கிறாள். பறவையின் கழுத்து அசைந்தபடியே இருக்கின்றது. பறவைகள் ஒரு போதும் சாந்தமடைவதில்லை. பறவைகளின் கண்கள் காட்சிகளை விழுங்கியபடியே இருக்கின்றன. கால்கள் எப்போதும் பறப்பதற்கான துடிப்பில் பட்டும் படாமலும் நிற்கின்றன. றெக்கைகள் ஒடுங்கியும் அசைந்தும் கொண்டிருக்கின்றன. நிம்மதியற்றவை பறவைகள்.பறவைகள் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதில்லை. அவை இரவைக் கடந்து போவதற்காக மட்டுமே மரங்களுக்கு வந்துசேர்கின்றன. விடிந்ததும் பகலின் கடைசி நுனிவரை தேடிச் செல்கின்றன. என் நினைவில் வேறு எதுவுமில்லை. பறவைகள், பறவைகள், பறவைகள் மட்டுமே.

 

        என் மகள் சுகி ஆறு வருடத்தின் முந்தைய ஒரு பகல் பொழுதில் முதுகுளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் பிறந்தாள். அப்போது நான் எனது அலுவலகப்பணி காரணமாக கோட்டயத்திலிருந்தேன். காலை எட்டரை மணிக்கு போன் செய்து வித்யாராணியின் அப்பா தகவலைச் சொன்னார். மதியம் வேலையை முடித்துவிட்டுப் புறப்பட்டு வருவதாகச் சொல்லியபடியே தங்கியிருந்த அறையை விட்டுக் கீழே இறங்கி உணவகத்திற்காக நடந்து சென்றேன்.நானும் அப்பாவாக ஆகிவிட்டேன் என்பது மனதில் சந்தோஷத்தை உருவாக்கியிருந்தது. ஆனால் எதிர்பார்த்த ஒன்றுதானே நடந்திருக்கிறது என்பது போன்று உற்சாகம் அடங்கியே இருந்தது. சாலையைக் கடந்து போகின்ற ஆண்களை உற்றுக் கவனிக்கத் துவங்கினேன். அப்பாவாக ஆனவர்கள், என்றாவது அப்பாவாக ஆகப் போகின்றவர்கள் என்று இரண்டாகப் பிரிந்து தென்படத் துவங்கியது.அத்தோடு என் வயதை ஒத்தவர்கள், அதைக் கடந்தவர்கள், வயதானவர்கள் ஒவ்வொருவரைக் காணும்போது இவர்கள் யாருடைய அப்பா, எத்தனை பிள்ளைகளை இவர்கள் உருவாக்கியிருப்பார்கள் என்று வியப்பான எண்ணங்கள் உருவாகின.

 

      அத்தோடு தாங்கள் ஒரு அப்பா என்பதற்கான எந்தச் சுவடும் இன்றி அவர்கள் தன்னியல்பாகப் போவதும் வருவதும் எனக்குப் பிடித்திருந்தது.அப்பாக்களின் உலகம் மிகப் பெரியது. அதற்குள்ளாகத்தான் என் அப்பா இருக்கிறார். என் அண்ணன் இருக்கிறார். என் தாத்தா இருக்கிறார். நான் அறிந்த அத்தனை ஆண்களும் அப்பாக்கள் உலகின் பிரதிநிதிகள்தானே. இதில் நானும் இன்றிலிருந்து ஒரு ஆள் என்பது மனதில் களிப்பை உருவாக்கியது.உணவகத்தில் இனிப்பு தருவித்துத் தனியே சாப்பிட்டபடியே சுகியைப் பற்றி நினைக்க ஆரம்பித்தேன், திருமணமான சில வாரங்களிலே வித்யாராணி கர்ப்பமாகிவிட்டாள். அதை உறுதி செய்ய மருத்துவரிடம் சென்று வந்த மறுநாளே அவள் பிறக்கப் போகும் குழந்தையின் பெயரை முடிவு செய்துவிட்டாள்.சுகி என்னும் பெயரை எப்படித் தேர்வு செய்தாள் என்று தெரியவில்லை. தனக்குப் பெண்தான் பிறக்கும் என்று தீர்மானமாக நம்பினாள். அத்தோடு சுகி என்னும் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லத் துவங்கினாள்.

 

     அந்தச் சொல்லின் மீது அவளுக்கு அதீத மயக்கம் உருவாகியிருந்தது. கையில் கிடைக்கும் காகிதங்களில் எல்லாம் சுகி சுகி என்று எழுதித் தள்ளினாள்.அத்தோடு வித்யாராணி குழந்தையை எப்படி வளர்ப்பது, அதை எந்தப் பள்ளியில் சேர்ப்பது அவளை என்ன படிக்க வைப்பது, எங்கே வேலைக்கு அனுப்புவது, அவளுக்கு யாரைத் திருமணம் செய்து தருவது, வயதான காலத்தில் அவளோடு தங்கிக் கொள்வது வரை மனதில் கற்பனையானதொரு உலகை சிருஷ்டிசெய்து கொண்டு விட்டாள்.எதற்காக பெண்கள் இவ்வளவு முன்திட்டமிடுகிறார்கள் என்று எனக்குப் புரியவேயில்லை.நான் வித்யாராணியிடம், அவரசப்பட்டுவிட்டோம். நாம் இன்னும் தேனிலவிற்குக் கூடப் போய்வரவில்லை என்றேன். அவள் அதைப் பற்றிய அக்கறையின்றி எப்போ இருந்தாலும் பெத்துக்கப்போற பிள்ளைதானே, இப்பவே பெத்துட்டா நல்லது என்றாள். கர்ப்ப காலத்தில் அவளது பேச்சு, உடல் மொழி மற்றும் செய்கைகள் யாவுமே மாறத்துவங்கியிருந்தன.திருமணம் செய்து கொள்ளும் வரை எனக்குக் குழந்தைகள் பற்றிய நினைப்பே கிடையாது. கைகளில் குழந்தைகளைத் தூக்கியே பல வருடகாலமாக இருக்கும்.

 

      எப்போதோ சிறுவயதில் அருகாமை வீட்டிலிருந்த சர்வேயர் மகனைத் துணியில் சுற்றி பத்திரமாகப் பிடித்துக்கொள்ளும்படியாகக் கையில் தந்தார்கள். அந்தக் குழந்தை உறங்கிக்கொண்டிருந்தது. சில நிமிசங்கள் கையில் வைத்திருப்பதற்குள் கூச்சமாகிப் போனது.அதன்பிறகு குழந்தைகளுடனான என் உறவு வெகுவாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. அண்ணன் வீட்டில் குழந்தைகள் பிறந்த போதுகூட எட்ட இருந்து பார்த்திருக்கிறேன். மற்றபடி குழந்தைகள் பிறக்கிறார்கள், வளர்க்கிறார்கள் என்பது எல்லாம் வெறும் செய்தியாகவே இருந்தது.திருமணம் நடந்து முடிந்த சில நாட்களில் ஒரு நாள் படுக்கையில் வித்யாராணி நமக்கு எத்தனை குழந்தைகள் வேண்டும் என்று கேட்டாள். நான் அதைப்பற்றி அதுவரை யோசித்ததேயில்லை. இதை எப்படி நாம் முடிவு செய்ய முடியும் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள்ளிருந்தது. ஆனால் அவளாகவே எல்லா வீட்டிலும் ரெண்டு பிள்ளைகள் தான் இருக்கு. நமக்கு ஒண்ணு போதும். அதுவும் பொம்பளைப் பிள்ளையா இருந்துட்டா நல்லது என்றாள்.

 

      நான் எதற்காக என்று கேட்டுக் கொள்ளவில்லை.பிறகு அவளாகவே தன் வலது கையை நீட்டி தன் கையிலோடும் ரேகைப்படி ஒரேயொரு பிள்ளைதான் தனக்குப் பிறக்கும் என்று சொன்னாள். நீ கைரேகை எல்லாம் பார்த்திருக்கிறாயா என்று கேட்டேன். அவள் சிரித்தபடியே தன்னோடு படித்த மீனாவிற்குக் கை ரேகை பார்க்கத் தெரியும் என்றும் அவள் ஒரு நாள் கையைப் பார்த்து இப்படி பலன் சொன்னாள் என்ற படியே அவள் சொன்ன மாப் பிள்ளை மாதிரித்தான் நீங்கள் இருக்கீங்க என்றாள்.பள்ளிக்கூட வயதிலே பிள்ளைகள் பெத்துக்கொள்வதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டாயா என்று கேட்டேன். அவள் ஆறாம் வகுப்பிலே படிக்கும் போதே யாரைக் கல்யாணம் பண்ணிக்கிடுறதுனு பொம்பளைப் பிள்ளைகளுக்குள்ளே போட்டி நடக்கும். நான் அப்பவே மெட்ராசுல இருந்து வர்ற மாப்பிள்ளையைத்தான் கட்டிக்கிடுவேனு சொன்னேன். எதுக்குன்னா மெட்ராசில இருக்கிறவங்கள் எல்லாம் ரெண்டு பிள்ளைகள் தான் பெத்துக்கிடுவாங்களாம்.

 

          ஊர்ப்பக்கம்னா நாலு அஞ்சு பெத்துக் கொள்ள வேணுமில்லை என்று சொல்லிச் சிரித்தாள்.என் கல்லூரி நாட்களில் ஒரு நாளும் நான் குழந்தைகளைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. நேற்றுவரை என் உலகில் என்னைத் தவிர யாருமேயில்லை. அந்த உலகிற்குள் வித்யாராணியைச் சேர்த்துக்கொள்வதற்கே எனக்குச் சில மாதங்கள் ஆனது. இதில் குழந்தையைப் பற்றி எதற்காக யோசனை செய்ய வேண்டும் என்று விட்டுவிட்டேன்.பள்ளி, கல்லூரியில் படித்த நாட்களிலும் வேலைக்குச் சேர்ந்த பிறகும் நான் தனியாகவே இருந்தேன். இந்த உலகம், அதன் பரபரப்பு, முந்தித்தள்ளும் போட்டிகள் என்னைப் பற்றிக் கொள்ளவேயில்லை. ஆனால் எதற்கு எனப் புரியாத ஆழமான வருத்தம் ஒன்று என்னைப் பற்றியிருந்தது. அதை என்னால் தீர்த்துக் கொள்ள முடியாது என்றும் தீவிரமாக நான் நம்பியிருந்தேன்.என் அறை, நாலைந்து உடைகள், ஒன்றிரண்டு சினிமாப் பாடல் கேசட்டுகள், ஒரு பைக் இவ்வளவு மட்டுமே என் உலகம். மரங்கள், பறவைகள், ஆகாசம், மழை, வெயில், காற்று எதுவும் என் கண்ணில் படவேயில்லை.

 

        எப்போதாவது மழை பெய்யும் போதுகூட என்னை அறியாமல்தான் ஒதுங்கி நின்றிருக்கிறேன். மழையை நின்று கவனித்ததேயில்லை.உலகோடு நெருக்கமாக இல்லாமல் இருந்ததால் எனக்கு ஒரு நஷ்டமும் வந்துவிடவில்லை. மாறாக என் தனிமை என்னை ஒரு பாதுகாப்பு வலை போலப் போர்த்தி வைத்திருந்தது. அரிதாகச் சில நேரங்களில் பெண்களைப் பார்ப்பதுண்டு. அப்போதும்கூட மனதில் காமம் மட்டுமே நெளிந்து போகும். கடவுள் பிரார்த்தனை, திருவிழா, ஜனக்கூட்டம் என எதிலும் நான் கலந்து கொண்டதேயில்லை.நான் வேலை செய்யும் பன்னாட்டுத் தனியார் வங்கி, அதன் கிளைகள், நீல நிற, மஞ்சள் நிற ரசீதுகள், என் முன்னே இயங்கிக் கொண்டிருக்கும் கணினி, சப்தமின்றி ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரம் இவை மட்டுமே என் உலகம். வித்யாராணியைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றிக்கூட அதிகம் யோசனை செய்து முடிவு எடுக்கவில்லை. அப்பாவே அதையும் தீர்மானம் செய்திருந்தார்.நான் அவளைப் பெண்பார்க்கப் போன நாளில் அவள் அணிந்திருந்த இறுக்கிப்பிடித்த ஜாக்கெட் எனக்குள் அவசரமான காமத்தை உருவாக்கியது.

 

        ஒருவேளை அதனால்தான் திருமணத்திற்குச் சம்மதித்தேனோ என்னவோ தெரியாது. அவள் என்னைக் கவனித்த அளவிற்கு நான் அவளைக் கவனிக்கவேயில்லை. அவள் முன்னிருந்த நிமிடங்களில் ஒரு நீர்ப்பூச்சி குளத்தின் மீது ஊர்ந்து போவது போல காமம் என் உடலில் பட்டும் படாமலும் ஊர்ந்து கொண்டிருந்தது. திருமணம் அவள் ஊரில்தான் நடந்தது.திருமணமான சில நாட்களுக்கும் மனதில் காமம் மட்டுமேயிருந்தது. உடல் சோர்வடையும் வரை காமத்திலே திளைத்துப் போயிருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தது போல காமம் எனக்குள் இருந்த தீராத தனிமையைப் போக்கவில்லை. மாறாக அது அதிகப்படுத்திவிட்டது.அவளை விட்டு எங்காவது ஒரு நாள் தனியாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாக இருந்தன. அது என்னைக் கடுமையாக அழுத்தத் துவங்கியது. ஒருவேளை அந்த அழுத்தம் காரணமாகவோ என்னவோ ஒரு இரவு முழுவதும் காய்ச்சல் கண்டது.நான் அறையில் தனியே கிடந்தேன்.

 

        ஈரத்துணிகள் காற்றில் உலர்வது போல எனக்குள் இருந்த காமம் கொஞ்சம் கொஞ்சமாக உலரத் துவங்கியது. இரண்டு நாட்களின் பின்பாக எழுந்து கொண்ட போது வித்யாராணியும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்றப் பெண்களைப் போல தெரிந்த பெண்ணாகியிருந்தாள். அவளுக்கும் கூடுதலில் அதிக நாட்டமில்லை. கர்ப்பமாகிவிட்டபிறகு அவள் யோசனைகள் முழுவதும் அப்படியே குழந்தை பக்கமாகத் திரும்பிவிட்டன. நான் அவள் உலகிலிருந்து வெளியேறத் துவங்கியதைப் போலவே உணர்ந்தேன்.கர்ப்பம் பெண்களிடம் காரணமற்ற ஆத்திரத்தை கோபத்தை உருவாக்கி விடுகிறது என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் துவங்கினேன். ஆறாவது மாதத்திற்குப் பிறகு வித்யாராணி காரணம் இல்லாமலே என்னோடு சண்டையிடத் துவங்கினாள். அல்லது நான் அவளோடு அற்ப காரணத்திற்காகக் கத்தத் துவங்கியிருந்தேன். இந்தச் சண்டையின் முடிவில் அவள் அழுதபடியே படுக்கையில் கிடப்பதைப் பலமுறை கண்டிருக்கிறேன்.

 

     எதற்காக அவள் அப்படி அழ வேண்டும், அப்படி என்ன நடந்துவிட்டது என்று ஆத்திரமாக வரும். இருவருமே சில நாட்களுக்குப் பேசாமல் இருப்போம். பிறகு அது தானே கலைந்து போய்விடும்.அவள் எப்போதும் யோசனையில் பீடிக்கப்பட்டவளாகவே இருந்தாள். ஒருநாள் வீடு திரும்பும் போது தன்னுடைய உதட்டில் வெள்ளையாக ஏதோ மரு போலப் படரத்துவங்கியிருக்கிறது. உடனே மருத்துவரிடம் சென்று காட்ட வேண்டும் என்று சொன்னாள். நீ கிளம்பி அலுவலகம் வந்திருந்தால் அப்படியே மருத்துவரிடம் போய்வந்திருக்கலாமே என்றேன். அது அவளுக்குள் ரௌத்திரத்தை உருவாக்கியது. இப்படியே நான் செத்துப் போயிருந்தாக்கூட உங்களுக்கு நல்லாதான் இருந்திருக்கும் என்றாள். நானும் கத்தினேன். அவள் ஓங்காரமாக அழுதாள்.பிறகு இருவரும் மருத்துவமனையை அடையும்போது எட்டரை மணியாகியிருந்தது. பெண் மருத்துவரிடம் மட்டுமே காட்டுவேன் என்று அவள் அடம்பிடித்தாள். உதட்டில் உள்ள மருவிற்கு யாரிடமும் காட்டலாம் என்ற போதும் அவள் சமாதானம் அடையவேயில்லை.

 

      ஆனால் அன்று வேறுவழியில்லாமல் ஆண் மருத்துவரிடமே காட்டவேண்டிய சூழ்நிலை உருவானது. அவர் கர்ப்பிணிகளுக்கு இதுபோன்ற வெளிறிய உதடுகள் இருப்பது வழக்கம்தான். பயப்படத் தேவையில்லை. தேவைப்பட்டால் விட்டமின்கள் அதிகம் சாப்பிடுங்கள் என்று சிபாரிசு செய்தார். வித்யாராணி அதில் திருப்தி படவேயில்லை.அவள் தன்னை மருத்துவரும் சேர்ந்துகொண்டு ஏமாற்றுவதாக உணர்ந்தாள். வீட்டிற்கு வந்த பிறகு கண்ணாடியைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு உதட்டையே பார்த்துக்கொண்டிருந்தாள். உதட்டைக் கையால் தேய்த்துத் தேய்த்துப் பார்த்தாள். பிறகு அவளாக குமுறிக் குமுறி அழத்துவங்கினாள். மறுநாள் அவளை ஒரு பெண்மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு போனேன். அவரும் இது வழக்கமான ஒன்று தான், பயப்படத் தேவையில்லை என்றார். ஆனால் வித்யாராணிக்கு இவை எவையும் சமாதானம் ஆகவில்லை.மாறாக தனக்குத் தீர்க்கமுடியாத நோய் உண்டாகியிருக்கிறது. அதை எல்லோரும் மறைக்கிறார்கள் என்று நம்பத் துவங்கினாள். அவள் வேண்டுமானால் ஒரு வார காலம் ஊரில் போய் இருந்துவிட்டு வரட்டும் என்று அனுப்பி வைத்தேன். திரும்பி வந்தபோது உதட்டில் இருந்த வெள்ளை மறைந்து போயிருந்தது.

 

     அவள் வெட்கத்துடன் வெறும் தேமல், இதுக்குப் போயி பயந்துட்டேன், என்னை அறியாமலே மனசிலே நிறைய பயமாக இருக்கு. எதுக்குனு தெரியலை என்றாள்.ஊருக்குப் போய்விட்டுத் திரும்பிய பிறகு திடீரென என் மீது அளவிற்கு அதிகமான அக்கறை காட்டத் துவங்கினாள். பத்து நிமிசத்திற்கு ஒரு முறை அலுவலகத்திற்கு போன் செய்து நலம் விசாரிப்பாள். சாப்பாட்டைத் தானே அலுவலகத்திற்குக் கொண்டுவருவாள். என் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு உறங்குவாள். அவள் செய்கைகள் எனக்குள் குழந்தை பிறப்பு தொடர்பான கசப்புகளை அதிகப்படுத்தியிருந்தது. இதற்கு மேல் குழந்தைகளே வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டேன்.எட்டாவது மாசத்திலிருந்து அவள் யாருடனும் பேசிக்கொள்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டுவிட்டாள். யாராவது ஏதாவது கேட்டால் மட்டுமே ஒரு வார்த்தை பேசுவாள். மற்றநேரங்களில் யோசனையின் பெருஞ்சுழலில் தனியே மாட்டிக் கொண்டிருந்தாள்.சுகி பிறப்பதற்குப் பத்து நாட்கள் முன்பாக வித்யாவைக் காண்பதற்கு அவள் ஊருக்குச் சென்றிருந்தேன்.

 

     அவள் முகத்தில் விவரிக்கமுடியாத பயம் அப்பிப்போயிருந்தது. அத்தோடு அவள் குரல் உடைந்திருந்தது. கை நிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தாள். நெற்றி நிறைய திருநீறு இருந்தது. நீ பயப்படும் அளவு ஒன்றுமேயில்லை என்று அவளிடம் ஏதோ ஆறுதல் சொன்னேன். அன்று ஊருக்குத் திரும்பி வரும்போது கூட குழந்தையைப் பற்றி என் மனதில் எவ்விதமான சித்திரமும் உருவாகவில்லை. சொல்லப்போனால் எனக்குள்ளும் அப்பா என்பதைப் பற்றிய பயம் உருவாக ஆரம்பித்திருந்தது.நீண்ட நாட்களுக்கு சுகி என்னும் சொல் எனக்கு வெறும் சொல்லாகவே இருந்தது. மருத்துவமனையில் இருந்த என் குழந்தையை அருகில் சென்று பார்த்த போது தான் அந்தச் சொல் குழந்தையோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. என்னை அறியாமல் சுகி சுகி என்று மெல்லிய குரலில் அழைத்தபடியே விரலால் குழந்தையின் கேசத்தை வருடிவிட்டேன்.தூக்கம் கலைந்த முகத்துடன் இருந்த வித்யாராணி என்னை மாதிரி இருக்கா உங்களை மாதிரி இருக்கா என்று கேட்டாள். உன்னை மாதிரியேதான் என்றேன்.

 

     அதைத் தான் எங்கம்மாவும் சொல்றா என்று சிரித்தாள். அந்தச் சிரிப்பு அதன் முன்பு நான் கண்டறியாதது. பிரசவம் பெண்ணிற்கு முன் இல்லாத ஒரு அழகை உருவாக்குகிறது போலும். அவள் குழந்தையைக் கையில் எடுத்து பால் புகட்டத் துவங்கினாள். குழந்தை அவள் மார்பில் முட்டியபடியே உறங்கத் துவங்கியது.அவள் என் கையில் குழந்தையைக் கொடுத்தாள். அது என் குழந்தை. நான் குழந்தையின் அப்பா என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் துவங்கினேன். உலகில் அதுவரை பிறந்திருந்த அத்தனை குழந்தைகளும் என் கவனத்தை விட்டுப் போய் ஒரேயொரு குழந்தை, அது என்னுடைய குழந்தை என்பது மட்டுமே முக்கியமாகிக் கொண்டிருந்தது. அப்போது தோன்றியது அப்பா என்பது ஒரு பொறுப்புணர்வு. தீராத சந்தோஷம் என்று. சுகி ஒரு வயது வரை மற்றக் குழந்தைகளைப் போல் அழுவதேயில்லை. பெரும்பாலும் உறக்கம். விழித்திருந்த போதுகூட எதையோ உற்று நோக்கி நிலைகுத்திய பார்வையோடு அப்படியே இருந்தாள். எதற்காக அவள் பார்வை அப்படியே நிலை குத்தியிருக்கிறது. அப்படி என்ன கவனிக்கிறாள் என்று வியப்பாக இருக்கும்.

 

     பிற குழந்தைகளைப் போல அவளிடம் பரபரப்போ துடிப்போ இல்லை. தரையில் விட்டால்கூட அவள் அதிகம் தவழுவது இல்லை. எதையாவது உற்றுப் பார்க்கத் துவங்கி அப்படியே நிலை கொண்டுவிடுவாள். யாராவது தூக்கிக்கொண்டு வெளியே வந்தாலும் அவள் பார்வை ஒன்றின் மீதே குவிந்துவிடும்.வித்யாராணிக்கு இது பயத்தை உருவாக்கத் துவங்கியது. அவளாகவே குழந்தையைக் கோவிலுக்குக் கொண்டு செல்வதும் நேர்ச்சைகள் செய்வதுமாக இருந்தாள். நான் அலுவலகம் இல்லாத சிலநாட்களில் சுகியைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது அவள் சோர்வாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.குழந்தைகளுக்கான மருத்துவர்கள் அவளைச் சோதித்துவிட்டு பொதுவான சத்துக்குறைவு காரணமாகவே அவள் இப்படியிருக்கிறாள் என்பதைக் கண்டுபிடித்தார்கள். ஆனால் இரண்டு வயது வரை சுகியிடம் எந்த மாற்றமும் வரவில்லை. சுகி ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை என்பதை வித்யாராணி கண்டுபிடித்த நாளில் அவள் கதறி அழத்துவங்கினாள். என் பிள்ளைக்குப் பேச்சு வரலையே என்று சப்தமாகக் கத்தினாள்.

 

     அப்படியெல்லாம் இருக்காது, அவள் சப்தம் கேட்டால் திரும்புகிறாள். அதனால் நிச்சயம் தப்பாக எதுவும் ஆகாது என்றேன். வித்யா சமாதானம் அடையவில்லை.இதற்கான சிறப்பு மருத்துவரிடம் சுகியைக் கொண்டு சென்றோம். ஏதோ பெயர் தெரியாத குறைபாட்டினைக் காரணம் காட்டி மருந்துகள் தந்ததோடு அவள் முன்பாகத் தொடர்ந்து ஏதாவது பேசிக் கொண்டேயிருங்கள் என்றார்.அன்றிலிருந்து வித்யாராணி குழந்தையைத் தன்மடியில் வைத்துக் கொண்டு அம்மா சொல்லு. . . அப்பா சொல்லு . . . தாத்தா சொல்லு . . . என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டேயிருந்தாள். அந்த சப்தங்களும் அவளைக் கவரவேயில்லை. நானும் மாலைநேரங்களில் சுகியைத் தூக்கி வைத்துக் கொண்டு தெரிந்த சொற்கள் யாவையும் சொல்லிப் பழக்கினேன். அவள் சொற்களைத் தனக்குள் அனுமதிக்கவேயில்லை. தண்ணீருக்குள் விழுந்த கூழாங்கற்களைப் போல அந்தச் சொற்கள் கரையாமல் அப்படியே விழுந்தன.இரண்டு வார காலம் விடுமுறை எடுத்துக்கொண்டு குழந்தையோடு கோவில் கோவிலாகப் பயணம் செய்தோம்.

 

      வழி முழுவதும் தென்பட்ட சூரியன், காற்று, மலை, மரம், ஆறு, நாய், வீடுகள், தெருக்கள், வாகனங்கள் என யாவையும் பெயர் சொல்லிச் சொல்லி அலுத்துப் போன பிறகும் குழந்தையின் கவனம் சொற்களின் மீது குவியவேயில்லை.சில நேரங்களில் சுகியின் மௌனம் என்னை பயமுறுத்தியது. அவள் கையில் ஒரு ஸ்பூனை வைத்துக்கொண்டு அதையே மணிக்கணக்கில் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆத்திரத்தில் அந்த ஸ்பூனைப் பிடுங்கி வீசி எறிய வேண்டும் போலிருந்தது. அப்படிச் செய்தும் பார்த்தேன். ஆனால் அது சுகியை அசைக்கவேயில்லை. தன்னுடைய கைப்பொருள் பறிபோன போதும்கூட அவளிடம் அழுகையோ ஆர்ப்பாட்டமோ இல்லை.இன்னொரு பொருள் தன் கைக்குக் கிடைக்கும் வரை அவள் தரையை வெறித்துப் பார்க்கத் துவங்கினாள். அன்றிரவு அவளைப் போலவே ஒரு ஸ்பூனைக் கையில் எடுத்துக்கொண்டு நானும் உற்றுப் பார்க்க ஆரம்பித்தேன். இதன் முன்பாக உலகில் அப்படியொரு பொருளை நான் கண்டதேயில்லையோ எனும்படியாக இருந்தது ஸ்பூன். அதை வித்யாராணி கவனித்திருக்க வேண்டும்.

 

       பிள்ளை தான் படுத்தி எடுக்குதுன்னா. நீங்களும் ஏன் என் உயிரை வாங்குறீங்க என்று ஸ்பூனைப் பிடுங்கி வீசினாள்.எனது சண்டைகள், கத்தல்களால்தான் குழந்தைக்கு இப்படியாகியிருக்கிறது என்றுவேறு அவள் நம்பத் துவங்கியிருந்தாள். நானும் கர்ப்பகாலத்தில் அவள் ஆத்திரமாக நடந்துகொண்டதும் கத்திக் கூப்பாடு போட்டு அழுததும்தான் குழந்தையை இப்படி ஆக்கிவிட்டது என்று கத்தினேன். அவள் ஆமாம் எல்லாமே என்னாலேதான் வந்தது நான் இப்படியே செத்துப் போய்விடுகிறேன். நீங்கள் சந்தோஷமாக இருங்கள் என்று ஆத்திரமுற்றாள். அப்போதும் சுகி பாட்டிலின் மூடி ஒன்றைக் கையில் வைத்து உற்றுப் பார்த்தபடியே அசைவற்று உட்கார்ந்தேயிருந்தாள். அப்பாவாக இருப்பது என்பது பொறுப்புணர்வு மட்டுமில்லை என்பது புரியத் துவங்கியது.சுகியை அழைத்துக்கொண்டு பழனியில் உள்ள சித்த வைத்திய நிலையம் ஒன்றிற்குச் சென்றிருந்தோம். மலையின் பின்புறமிருந்தது. குழந்தையின் குரல்வளையில் சிறிய பிளவு இருப்பதாகச் சொல்லிய படியே வைத்தியம் ஆரம்பித்தார்கள். நாற்பது நாட்கள் சிகிச்சைகள். ஒவ்வொரு நாளும் மலையின் மீது படரும் பகலொளியைப் பார்த்த படியே இருப்போம்.

 

      சுகியின் கண்கள் தொலை தூர மலையைவிட அருகாமையில் கடந்து செல்லும் சிற்றெறும்பின் மீது நகர்ந்து கொண்டிருந்தது. பகலிரவாக இருவரும் குழந்தையைப் பார்த்தபடியே இருந்தோம். எவ்விதமான மாறுதலும் இல்லை. அதன்பிறகு டி.கல்லுபட்டி, மார்த்தாண்டம், வாராங்கால், ஏர்வாடி என்று எங்கெங்கோ சிகிச்சைக்காக அழைத்துக்கொண்டு சென்றோம். சுகிக்கு நாலு வயது முடியும் வரை அவள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அது போலவே மற்றவர்கள் பேசும் ஒலிகளும் அவளுக்கு உவப்பாக இல்லை.வித்யாராணி தனது தவற்றின் காரணமாகவே சுகி இப்படியிருப்பதாக நினைத்துக்கொண்டு உபவாசம், முடிகொடுத்தல் என்று தன்னை வருத்திக் கொள்ளத் துவங்கினாள். அவள் முகத்தில் எப்போதுமே படபடப்பும் வெளிக்காட்டிக்கொள்ள முடியாத பயமும் ஒட்டிக்கொண்டிருந்தது.சாயாவனம் என்ஏம் சிற்றூரிலிருந்த மூலிகை வைத்தியர் ஒருவரைக் காண்பதற்காக விடிகாலையில் அவர் வீட்டிற்குப் போனபோது முதன்முதலாக சுகி அங்கிருந்த கிளி ஒன்றின் சப்தத்தைக் கேட்டு வேகமாக முகத்தைத் திருப்பியதைக் கவனித்தேன். அந்த வீட்டில் இருந்த நேரங்களில் கிளி கத்தும் போது எல்லாம் சுகியின் முகம் தானே அதை நோக்கித் திரும்பியதைக் கண்டேன்.

 

      சுகியைக் கிளிக்கூண்டு அருகில் கொண்டு சென்றேன். அவள் வியப்போடு கிளியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். உனக்குக் கிளி வேண்டுமா என்று கேட்டேன். அவள் இமை மூடாமல் கிளியைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். கிளி விட்டு விட்டுக் கத்தியது. கிளி சப்தமிடும் போது சுகியின் கண்கள் வேகமாகச் சிமிட்டிக்கொண்டன.*ஊர் திரும்பிய பிறகு ஒரு மாலையில் சுகியை அழைத்துக்கொண்டு நகரிலிருந்து மேற்காகச் செல்லும் சாலையில் பைக்கில் பயணம் செய்யத் துவங்கினேன். நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் சாலையோரம் உள்ள ஒரு தர்க்கா ஒன்றையும் அதன் முன் அடர்ந்திருந்த மரங்களில் வந்து கூடும் பறவைகளின் இரைச்சல் ஒலியையும் ஒரு முறை கடந்து செல்கையில் கேட்டிருக்கிறேன். பைக்கில் அந்தச் சாலையை நெருங்கிச் செல்லும்போதே இடைவிடாத பறவைகளின் கரைப்பொலி கேட்கத் துவங்கியது.மரம் தெரியாமல் காகங்களும் குருவிகளும் ஒன்றிரண்டு கொக்குகளும் சாம்பலும் இளஞ்சிவப்பும் கலந்த பறவைகளும் காணப்பட்டன. சுகி அந்த சப்தங்களால் கவரப்பட்டாள் என்பது அவள் முகமாற்றத்திலே தெரிந்தது.

 

     அவள் மரத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டேயிருந்தாள். காதைத் துளையிடும் அந்த ஒலி அவளுக்குள் நிரம்பத் துவங்கியிருந்தது. அவள் முகத்தில் பிரகாசமான வெளிச்சம் படர்ந்துகொண்டிருந்தது போல உணர்ந்தேன். இருட்டும் வரை நாங்கள் இருவரும் அங்கேயே இருந்தோம். சுகியின் கைவிரல்கள் தாளமிடுவது போல அசைந்து கொண்டிருந்தன. வரும் வழியில் மரப்பட்டை நிறத்திலிருந்த ஆந்தை ஒன்றைக் கூடக் கண்டோம்.அன்றிரவு வித்யாராணியிடம் சுகி பறவைகளின் சப்தத்தால் கவரப்படுகிறாள். நாம் சில பறவைகளை வாங்கி வீட்டில் வைத்து அதன் சப்தத்தைக் கேட்க வைக்கலாமே என்றேன். வித்யாராணி ஒத்துக் கொண்டாள். புறாக்கள், மைனா, கிளி என்று கூண்டுப்பறவைகளைக் கொண்டுவந்து சுகியின் முன்பாக சப்தமிடச் செய்தோம்.

 

      ஆரம்பத்தில் ஆர்வம் காட்டிய சுகி சில நாட்களுக்குள் அதில் கவனம் கொள்ளவேயில்லை. மாறாக அந்த சப்தங்கள் தன்னைக் குத்திக்காட்டுவது போலவே வித்யாராணி உணரத் துவங்கினாள். வீட்டில் அதை வைத்துக்கொள்ள முடியாது என்று வேலைக்காரப் பெண்ணிடம் தூக்கித் தந்துவிட்டாள்.அதன்பிறகு அலுவலகத்தில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரின் வழியாக ஒரு ஆலோசனை கிடைத்தது. பதிவு செய்யப்பட்ட பறவைகளின் குரல்கள் உள்ள குறுந்தகடுகள் கிடைக்கின்றன. அதை வாங்கி கேட்க வைத்துப் பாருங்கள் என்றார். பதிவுசெய்யப்பட்ட பறவைகளின் குரல்கள் உள்ள இசைத்தட்டிற்காகத் தேடி அலைந்து ரிச்சி தெருவில் வாங்கிவந்தேன். நூறு பறவைகளின் ஒலிகள் அதில் அடங்கியிருந்தன.ஒவ்வொரு பறவையின் ஒலியும் கேட்கும்போது சுகியின் கண்கள் தன்னை அறியாமல் விரிவடையத் துவங்கின. ஆனால் அவள் அந்தப் பறவை எங்கேயிருக்கிறது என்று சுற்றிலும் தேடத் துவங்கினாள். ஒரு இயந்திரத்தைக் காட்டி அவளை ஏமாற்றுகிறோமோ என்னும் குற்றவுணர்வு எனக்குள் உருவாகத் துவங்கியது.அதற்காகவே அவளை அழைத்துக்கொண்டு பறவைகளைத் தேடி மாலையில் அலைந்து திரிவது என்று முடிவு செய்தேன்.

 

     ஆரம்ப நாட்களில் பறவைகள் இந்த நகரில் இருக்கின்றனவா என்று சந்தேகம் வருமளவு அரிதாக இருந்தன. ஆனால் விசாரித்து விசாரித்து பறவைகள் எந்த மரங்களில் அடைய வருகின்றன. எந்த நேரத்தில் தரையிறங்குகின்றன என்பதை அறிந்துகொண்டு அதை நோக்கி நடக்கத் துவங்கினோம்.பரபரப்பான வாகன இயக்கங்களைத் தாண்டி நாங்கள் மூவரும் மெதுவாக நடந்து கொண்டேயிருப்போம். ஏதாவது வீட்டின் சுவரிலோ, புழுதியடைந்து போன மரங்களிலோ பறவையொலி கேட்டால் அங்கேயே நின்றுவிடுவோம். சுகியின் கண்கள் பறவையைத் தேடத்துவங்கும். நானும் அதற்குப் பழகியிருந்தேன். சில நாட்கள் இலக்கற்று நடக்கத் துவங்கி அலுப்பும் வெறுமையாகவும் வீடு திரும்பி வந்திருக்கிறோம்.ஏன் குரல்கள் அவளுக்குள்ளிருந்து எழும்புவதேயில்லை. எல்லாச் சொற்களும் ஏன் வடிந்து போய்விடுகின்றன என்னும் குழப்பம் தூக்கத்திலும் எனக்குள் பீறிட்டுக் கொண்டேயிருந்தது.

 

     அவள் கவனத்தைக் குவியவைப்பதற்காக ஏதேதோ செய்த போதும் மாற்றமேயில்லை. ஆனால் இதைத் தவிர சுகியிடம் வேறு வித்தியாசம் எதுவுமில்லை. அவளாகக் குளித்துக்கொண்டாள். அவளாக உடைகளை உடுத்திக் கொண்டாள். பசித்த வேளைகளில் மிகக் குறைவாகச் சாப்பிட்டாள். யாவும் மௌனமாக நடந்தன என்பதுதான் இதன் முக்கிய பிரச்சனை.நாளுக்கு நாள் சுகி பறவைகளைத் தேடிப் போய் அதன் சப்தங்களைக் கேட்பதில் ஆர்வம் கொள்ளத் துவங்கினாள். ஆனால் எந்தப் பறவையின் குரலுக்கும் அவள் மறு மொழி தந்ததில்லை. இதற்காகவே நான் பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ளத் துவங்கினேன். சலீம்அலியின் புத்தகங்களை வாங்கி வந்து இரவெல்லாம் படித்தேன். எனக்குத் தெரிந்தவரை பறவைகளைப் பற்றி இடைவிடாமல் அவளோடு பேசினேன்.அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு மின்சார ரயிலில் சென்று ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து செல்லும் கிளைவழிகளில் எங்கே என்ன பறவைகள் இருக்கக்கூடும் என்று அலைய ஆரம்பித்தேன்.நகரம் எண்ணிக்கையற்ற கிளை வழிகளும் தெருக்களும் சந்துகளும் நிரம்பியதாக இருந்தது.

 

     நகரில் வாழும் மனிதர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவான பறவைகளே நகரில் இருந்தன.தேடி அலுத்துப் போன நாட்களில் பயணம் செய்து காடுகளை நோக்கிச் செல்லத் துவங்கினோம். ஒரு புதிய பறவையைக் கண்டு பிடித்தபோது சுகியின் முகத்தில் சொல்லமுடியாத மகிழ்ச்சி ததும்புவதைக் கண்டிருக்கிறேன். எங்களோடு வித்யாராணி கூடவே அலைந்துகொண்டிருந்தாள். அவளுக்குப் பறவைகளோ, அதன் குரல்களோ எதுவும் முக்கியமாகவேயில்லை. குழந்தை எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற ஒற்றைப் பிரார்த்தனை மட்டுமேயிருந்தது.சுகியை அவ்வப்போது காட்டிற்குள் அழைத்துப் போகத் துவங்கியதில் ஏற்பட்ட முதல் பாதிப்பு, காற்று. அவளால் சீரற்ற காற்றின் வேகத்தை எதிர் கொள்ள முடியவில்லை. அவள் நடுக்கத்தோடும் தலையைச் சிலுப்பியபடியும் காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தாள். அதுவும் அதிகாலை நேரக் காற்று அவள் உடலைத் துவளச் செய்தது.

 

      அதன் காரணமாக அடிக்கடி காய்ச்சலுக்கு உட்பட்டாள்.இதற்காகவே காட்டை விலக்கி நகருக்குள் சுற்றியலையத் துவங்கினோம். சுகியின் உலகில் பறவைகள் மட்டுமேயிருந்தன. அதன் தொடர்ச்சியான பறத்தல், விசித்திரமான சப்தங்கள் மட்டுமே நிரம்பியிருந்தது. இந்த மூன்று வருடங்களில் நாற்பது ஐம்பது நாட்கள் மட்டுமே அலுவலகம் சென்றிருப்பேன். மற்ற நாட்களில் சுகிதான் என் கவனமாகிப் போனாள்.சுகி வளரத் துவங்கியிருந்தாள். ஆறு வயது முடியப்போகிறது என்றாலும் பத்து வயதுச் சிறுமி போன்ற தோற்றம் உருவாகியிருந்தது. தன்னிச்சையாக அவள் வீட்டிலிருந்து இறங்கி தெருவில் நடந்து போய்வருவதும் எங்காவது சாலையில் பறவையின் குரலைக் கேட்டால் அப்படியே நின்றுவிடுவதும் இயல்பாக இருந்தது.தன் மகளால் பேசவே முடியாது என்று முழுமையாக நம்பியவளைப் போலவே அவளுடன் சைகையில் உரையாடத் துவங்கினாள் வித்யாராணி. அது சுகியை இன்னமும் ஆத்திரப்படுத்தியிருக்க வேண்டும். அவள் அந்தச் சைகைகள் எதற்கும் பதில் தருவதேயில்லை. பசிக்கும் நேரங்களில் அவளாக எடுத்துச் சாப்பிடுவதும் பின்பு ஜன்னலை ஒட்டி ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டுக்கொண்டு வெளியே பார்த்துக்கொண்டிருப்பதையும் இயல்பாக்கிக்கொண்டிருந்தாள்.

 

     சுகிக்காகவே வீடு மாற்றத் துவங்கினேன். சில மாதங்கள் நகரை விட்டு விலகி கடற்கரையை ஒட்டிய ஒரு பழைய வீட்டிற்குக் குடிமாறிப் போனோம். அந்த வீட்டிலிருந்து நடந்தே கடற்கரைக்குப் போய்விடலாம். சுகி அதிகாலை நேரங்களில் தனியே கடற்கரையில் அலைந்து கொண்டிருப்பாள். மீன்களைக் கொத்தியலையும் பறவைகளும் கடலின் மீது தாழப்பறக்கும் பறவைகளும் அவளை உற்சாகம் ஊட்டின. ஆனால் அந்த உற்சாகம் நெடுநாள் நீடிக்கவில்லை.தன் வீட்டின் பின்னால் உள்ள ஏரியில் எண்ணிக்கையற்ற கொக்குகளும் நாரைகளும் வந்து போகின்றன என்று நண்பர் ஒருவர் சொன்னதை நம்பி இரட்டை ஏரி பகுதிக்கு வீடு மாறி சில மாதங்கள் வசித்திருந்தோம். அந்த வசீகரமும் நீடிக்கவில்லை. எல்லாமும் துளை விழுந்த பலூன் போலச் சில நிமிசங்களில் வடிந்துபோய்விடுகின்றது. சுகியைக் குழந்தையாகப் பார்த்த போது அவள் கண்கள் எப்படி நிலை குத்தியிருந்ததோ அப்படியே இப்போதும் இருந்தன.பல இரவுகளில் அவள் உறங்கும் போது அருகில் அமர்ந்து அழுதிருக்கிறேன்.

 

     எதற்காக சுகியின் மனதில் ஒரு வார்த்தைகூடத் தங்குவதில்லை. ஏன் அவள் உதடுகள் உறக்கத்திலும் இறுகிக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை நானும் வித்யாராணியும் போட்டுக் கொண்ட சண்டைகள் கர்ப்பத்திலே அவள் வாயைக் கட்டிவிட்டதா? எவருடனும் பேச வேண்டிய அவசியமேயில்லை என்று இந்த வயதிற்குள் முடிவுசெய்துவிட்டாளா?மெல்ல சுகியால் பேசமுடியவில்லை என்ற துயரம் எனக்குள் உறைந்து இறுகிப்போக ஆரம்பித்தது. எவரிடமும் பகிர்ந்து கொள்ளவோ, ஆறுதல் படுத்திக் கொள்ளவோ முடியாத அந்த துக்கம் கடுகடுத்த வலியோடு எனக்குள் பூரணமாக வேர்விட்டிருந்தது.கரிக்கலிக்கு சகியை அழைத்துக் கொண்டு போனபோது தொலைவிலே பறவைகளின் ஒலி கேட்கத் துவங்கியிருந்தது. ஏதேதோ நாடுகளிலிருந்து பறவைகள் புலம்பெயர்ந்து அங்கே வந்து சேர்கின்றன என்று சொன்னார்கள். சுகி தனியே நடந்து அலைந்தபடியே அந்தப் பறவைகளின் குரல்களை உன்னிப்பாகக் கேட்டாள். பிறகு கீழே விழுந்து கிடந்த நீலநிற இறகு ஒன்றை எடுத்துக் கையில் வைத்து ஆட்டிய படியே ஒரு சப்தத்தைப் பின் தொடர்கின்றவள் போல நடந்து போகத் துவங்கினாள்.

 

      நான் அவள் பின்னாடியே சென்றேன். அவள் மிகக் கவனமாக நடந்து போய் புதர் போன்ற கிளைகளை விலக்கியபடியே அந்த சப்தத்தைப் பின் தொடர்ந்து சென்றாள். பிறகு அண்ணாந்து பார்த்தபடியே வியப்போடு சொன்னாள்,புல்புல்.ஆமாம் என்று தலையாட்டினேன். பிறகுதான் புரிந்தது. சுகி பேசினாள் என்பது. ஆச்சரியத்துடன் அது என்னவென்று கேட்டேன். அவள் பதிலற்று புல்புல்லின் சப்தத்தில் தன்னை மறந்து போயிருந்தாள். சுகியால் பேச முடிகிறது என்பது எவ்வளவு பெரிய விஷயம். ஆனால் அவள் பேசவிரும்பவில்லை. அல்லது பேசுமளவு அவளை வேறு எந்தச் செயலும் உந்தவில்லை. வரும்வழியெங்கும் ஏதேதோ பேச வைக்க முயன்றும் அவளிடமிருந்து வார்த்தை வரவில்லை. ஆனால் அன்றிரவு முழுவதும் அந்த ஒற்றைச் சொல் எனக்குள் நீந்திக் கொண்டேயிருந்ததுவீடு வந்தபிறகு வித்யாராணியிடம் அதைப்பற்றிச் சொன்னேன். அவளால் நம்பமுடியவில்லை. ஒரு முறை தானும் புல்புல் என்று சொல்லிக் கேட்க வேண்டும் என்பதற்காக அவள் எவ்வளவோ முயற்சி செய்தாள்.

 

    ஆனால் மூடிக் கொண்ட சிப்பியைப் போல ஒரு சொல்லோடு அவள் மௌனம் திரும்பிவிட்டிருந்தது.நிச்சயம் இன்னொரு பறவையால் அவள் மனதிலிருந்து இன்னொரு சொல்லைக் கொத்தி எடுத்து வந்துவிட முடியும் என்று நம்பினேன். இதற்காகவே அவளை அடையாற்றில் உள்ள ஆற்றின் கழி முகம் மற்றும் கிண்டி பூங்காவின் மரங்கள் அடர்ந்த பகுதி, நந்தனம் விளையாட்டு மைதானத்தின் புல் வெளி, மீனம்பாக்கத்தை ஒட்டிய கிராமங்கள் என்று எங்கெங்கோ கூட்டிக் கொண்டே சென்றேன்.நாளாக ஆக அவள் பறவைகளின் ஒலியால் அடைந்த பரவசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறாள் என்பது புரிந்தது. இப்போது அவள் வேறுவேறு பறவைகளின் சப்தத்தைவிடவும் முன்பு கேட்ட பறவையின் ஒலியை மறுபடியும் எங்கே எப்போது கேட்போம் என்பதில்தான் நாட்டம் கொண்டிருக்கிறாள் என்பதை அறிய முடிந்தது.அவளுக்காக பறவைகளை அறியத் துவங்கி என் உலகில் பறவைகளின் விசித்திரமான நிறங்கள் மாறுபட்ட குரல்கள் அது எழுப்பும் அக உணர்வுகள் மட்டுமே நிரம்பியிருந்தன.

 

      அன்றாட உலகின் வாகனங்கள், திரையரங்குகள், மின்சார ரயில்கள், உணவகங்கள் என யாவும் என்னிலிருந்து கழன்று போகத் துவங்கியது.ஒரு ஞாயிற்றுக்கிழமை நானும் சுகியும் கேளம்பாக்கத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது சட்டென ஒரு இடத்தில் என் முதுகில் கையை வைத்து வண்டியை நிறுத்தும்படியாக அழுத்தினாள் சுகி. நான் சாலையோரமாக வண்டியை நிறுத்தியபோது அருகாமையில் இருந்த மரத்தில் பறவையைக் காட்டினாள். இவ்வளவு ஒதுங்கிய மரத்திலிருந்த பறவை எப்படி அவள் கண்ணில் பட்டது என்னும் வியப்புடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.தலையும் மார்பும் வயிறும் வாலும் வெளுத்து மற்றெங்கும் செந்நிறமாக இருந்த பறவையது. கடல் மீது இதுபோன்ற பறவைகள் சுற்றியலைவதைக் கண்டிருக்கிறேன். பறவை விருட்டெனப் பறந்து இன்னொரு மரத்தின் உச்சிக்கிளைக்குச் சென்றது. அவள் ஆதங்கத்துடன் சொன்னாள்,ஆலா . . . மழை வரும்.நிச்சயம் சுகியால் பேச முடிகிறது. நான் சுகியைக் கட்டிக் கொண்டு பேசுடா பேசுடா என்றேன்.

 

        சுகி பேசவில்லை. அவள் என் கைகளைத் தள்ளிக் கொண்டு பைக் நிறுத்தப்பட்ட இடத்திற்குப் போய் நின்று கொண்டாள். பறவை பறந்து போயிருந்தது. வெற்று மரத்தை இருவரும் வெறித்தபடியே சில நிமிசங்கள் நின்று கொண்டிருந்தோம். பிறகு மௌனமாக வீடு திரும்பிவிட்டோம். சுகி ஏன் பேச்சை உனக்குள்ளாகவே ஒளித்துக் கொள்கிறாய். உனக்குப் பிடித்தமான பறவைகள் பெயரை மட்டுமாவது நீ சொல்லிக்கொண்டேயிரேன் என்று அன்றிரவு படுக்கையில் கிடந்தபடியே அரற்றினேன். ஆனால் அவளிடம் மாற்றமே இல்லை.ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வார்த்தை சுகி பேசிவிட மாட்டாளா என்னும் நம்பிக்கையின் மீதே ஊர்ந்து நகர்கிறது. இன்றைக்கும் நானும் சுகியும் வித்யாராணியும் புறநகரின் மண்பாதைகளில் சுகியோடு பறவைகளைத் தேடி சுற்றியலைந்தபடியே இருக்கிறோம்.பேசுவது என்பது எளிமையானதில்லை. அது ஒரு விந்தை என்று எங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத்துவங்கியிருக்கிறது. இப்போதெல்லாம் மிக அரிதாகவே நாங்களே எங்களுக்குள் பேசிக் கொள்கிறோம். கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த வாளியைப் போல பேச்சு எங்களுக்குள்ளாகவே அறுந்து விழுந்து கிடக்கிறது.ஏதோவொரு பறவை இன்னமும் என் மகளைப் பேச வைத்துவிடும் என்னும் நம்பிக்கையிருக்கிறது. ஆயிரமாயிரம் மனிதர்கள், நெருக்கடியான வாகனங்கள், நான்குவழிச் சாலைகள், உறங்க இடமற்ற பிளாட் பாரவாசிகள், நோயாளிகள், உதிரி மனிதர்கள், எண்ணிக்கையற்ற அலுவலகங்கள், வீசி எறியப்பட்ட கழிவுகள் என நிரம்பி வழியும் இந்த மாநகருக்குள்ளும் பறவைகள் இருக்கின்றன. அவற்றில் ஏதோ வொன்று என் மகளுக்கான ஒரு வார்த்தையைச் சுமந்தபடியே அலைந்து கொண்டிருக்கிறது.

 

        அப்பா என்னும் சொல் எத்தனை வெளிக்காட்ட முடியாத கனமும் துக்கமும் வலியும் நிராசைகளும் நிரம்பியது என்பதை இப்போது முழுமையாக உணர்ந்திருக்கிறேன்.இந்த இரவில் எரிந்து வீழும் நட்சத்திரத்தின் அவசரத்தில் செல்லும் அந்தப் பெயர் தெரியாத பறவையைக் காணும் போதெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்,அப்பாவாக இருப்பதும் எளிமையானதில்லை. அது தராசின் முள்ளைப் போல எப்போதும் நடுங்கிக் கொண்டேயிருக்கும் ஒரு ஸ்திதி.

by parthi   on 12 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.