LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1242 - கற்பியல்

Next Kural >

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது.) என் நெஞ்சு வாழி - என் நெஞ்சே, வாழ்வாயாக; அவர் காதல் இலராக நீ நோவது - அவர் நம்கண் காதல் இலராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துதற்கு ஏது; பேதைமை - நின் பேதைமையே, பிறிதில்லை.('நம்மை நினையாமையின், நங்கண் காதல் இலர் என்பதுஅறியலாம், அஃதறியாமை மேலும் அவர்பால் செல்லக் கருதாது அவர் வரவு பார்த்து வருந்தா நின்றாய், இது நீ செய்துகொள்கின்றது' என்னும் கருத்தால் 'பேதைமை' என்றாள். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு, 'யாம் அவர்பால் சேறலே அறிவாவது' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
அவர் நம்மேற் காதலிலராக, என் நெஞ்சே! நீ கூட்டத்தைக் கருதி வருந்துகின்றது பேதைமை. இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
[ தலைமகனைக் காணும் வேட்கை மிகுதியாற் சொல்லியது. ] என் நெஞ்சு வாழி - என் உள்ளமே நீ வாழ் வாயாக; அவர் காதல் இலராக நீ நோவது - அவர் நம்பாற் காதவில்லாதவராகவும் நீ யவர் வரவு நோக்கி வருந்துவது பேதைமை - உன் பேதைமையின் விளைவேயன்றிப் பிறிதன்று . விரைந்து மீளாமையானும் நம்பால் தூதுவிடாமையானும் அவர் நம்மை நினையாமை வெளியாகின்றது . இந்நிலையில் நீ அவர்பாற் செல்லாது அவர் வரவு நோக்கி வருந்துகின்றாய் . இது உன் அறியாமை என்னுங் கருத்தாற் ' பேதைமை ' யென்றாள் . ' வாழி ' இகழ்ச்சிக் குறிப்பு .
கலைஞர் உரை:
அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.
சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.
Translation
Since he loves not, thy smart Is folly, fare thee well my heart!.
Explanation
May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.
Transliteration
Kaadhal Avarilar Aakanee Novadhu Pedhaimai Vaazhiyen Nenju

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >