LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

காதலும் கைபேசியும் - ஐரேனிபுரம் பால்ராசய்யா

``ஹாய்…ப்ரியா, ஹவ் ஆர் யூ’’ தனது கைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி பார்த்து முகம் சுளித்தான் சாமிநாதன்.


ஐந்து நிமிட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் வந்தது அதே குறுஞ்செய்தி. யாரோ தவறுதலாக தனது கைபேசிக்கு அனுப்பியிருக்கும் குறுஞ்செய்திக்கு நான் ஏன் பதில் தரவேண்டும் என்று சும்மா இருந்தான்..


``கொழுப்புடீ உனக்கு, பதிலே அனுப்பமாட்டேங்கற…!’’ மீண்டும் வந்த குறுஞ்செய்தி பார்த்து ஒரு முடிவுக்கு வந்தான்.


தனது கைபேசியிலிருந்து ஃபைன் என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அன்றைய தினசரியில் பார்வையை விரித்தான்.


``நாளைக்கு கொல்லங்கோடு தூக்கம் பாக்கப்போறேன் நீயும் வர்றியாடீ…’’ மற்றுமொரு குறுஞ்செய்தி வந்து விழுந்தபோது வெலவெலத்துப்போனான். இனியும் இந்த விளையாட்டு வேண்டாம் பேசாமல் உண்மையைச்சொல்வது என்று அந்த எண்ணுக்கு டயல் செய்தான் சாமிநாதன்.


``சொல்லு ப்ரியா..’’ எடுத்த எடுப்பிலேயே அவளது குரல் வந்து விழுந்தது. சாமிநாதன் விக்கித்துப்போனான். அத்தனை இனிமையான குரலாக இருந்தது அவளது குரல்.

``நான் ப்ரியா இல்ல, நீங்க தவறுதலா என் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் பண்றீங்க…!’’


``சாரி சார் என் ஃபிரண்ட் ப்ரியாவோட நம்பர்ன்னு அனுப்பியிட்டேன்’’ சட்டென்று லைன் துண்டிக்கப்பட சாமிநாதன் நிம்மதியானான். மீண்டும் ஒரு குறுஞ்செய்திக்கான சத்தம் கைபேசியிலிருந்து வரவே எடுத்து பார்த்தான்


. ``சாரி சார்’’ மீண்டும் அவளிடமிருந்து வந்திருந்தது அந்த குறுஞ்செய்தி.


``நோ.பிராப்ளம்’’ என்று பதிலுக்கு அனுப்பிவைத்தான். அதன்பிறகு அவளிடமிருந்து ஏதாவது குறுஞ்செய்தி வருமா என்று எதிர்பார்த்து காத்திருந்தான். ஆனால் வரவில்லை.``பெயரை கேட்டிருக்கலாம்!’’ மனதிற்குள் சலனம் உதித்தது. அவளது குரலை மீண்டும் கேட்கவேண்டும் போல் தோன்றியது.


மறுநாள் காலை குட்மார்னிங் என்று குறுஞ்செய்தி ஒன்றை வெள்ளோட்டமாக அனுப்பிவைத்தான் சாமிநாதன். பதிலுக்கு அவளும் வெரி குட்மார்னிங் என்று அனுப்பியிருந்தாள்.

``உன்னோட பெயர் தெரிஞ்சிக்கலாமா’’


``இலக்கியா…’’


``.இலக்கியா என்றொரு இலக்கிய பெயர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’’


``தேங்க்ஸ்’’ எஸ்.எம்.எஸ்கள் மாறி மாறி பறந்துகொண்டிருந்தன.


சாமிநாதனால் அதற்குமேல் பொறுமையாக இருக்கமுடியவில்லை. அவளது எண்ணுக்கு டயல் செய்து அவளது குரலுக்கு காத்திருந்தான்.


``ஹலோ…’’


``உன்னோட வாய்ஸ் சூப்பரா இருக்கு!’’


‘…………………………..’’ அவளிடமிருந்து பதிலில்லை.


``ஹலோ லைன்ல இருக்கிறியா?…’’


``ம்..சொல்லுங்க… உங்க பேரென்ன…? அவள் கேட்டபோது சாமிநாதன் சற்று தடுமாறினான். தன்னுடைய பெயர் சொன்னால் அவளுக்கு சிலவேளை பிடிக்காமல்கூட போகலாம், பெயரை மாற்றிச்சொன்னால் என்ன என்று தோன்றியது.


``அகில்…’’


``உங்க பேரும் அழகா இருக்கு!’’ இருவரும் பேசத்தொடங்கி கைபேசியின் இருப்பு கரைந்தபோது நிறுத்திக்கொண்டார்கள். சாமிநாதன் மீண்டும் கடைக்குச் சென்று ஒரு மாதம் பேசவேண்டிய தொகையை ரீ சார்ஜ் செய்து விட்டு பேச ஆரம்பித்து இரவு பனிரெண்டு மணி வரை பேச்சுக்கள் நீண்டிருந்தது.


இலக்கியாவின் சொந்த ஊர் மார்த்தாண்டம் என்றும் கம்பியூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருப்பதாகவும், அவளுக்கு நடனம் என்றால் ரொம்ப பிடிக்கும் என்றும் சொல்லியிருந்தாள். அன்று அவளாகவே வலிய பேசினாள்


``உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’’ அவளது கேள்விக்கு சற்று தடுமாறித்தான் போனான் சாமிநாதன்.


``ஏய்.. என்ன நேரில கூட பார்க்கல, நான் எப்படி இருப்பேன்னு கூட உனக்கு தெரியாது அப்பறம் எப்படி என்ன பிடிச்சிருக்குன்னு சொல்ற!’’ கேட்டான் சாமிநாதன்.


``அகில்…உன்னோட போட்டோவ ஃபேஸ்புக்குல போட்டுடு நானும் என் போட்டோவ போட்டுடுறேன்’’


சரி என்று தலையாட்டினான் சாமிநாதன். அன்று இரவு இருவரும் ஃபேஸ்புக்கில் தங்களது புகைப்படங்களைப்போட்டு கமெண்ட் எழுதினார்கள். பின்பு இருவருக்கும் ஃபேஸ்புக்கே உலகமானது.


``நீ…ரொம்ப அழகா இருக்க அகில், உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, நான் எப்பிடி இருக்கேன், என்ன புடிச்சிருக்கா?’’ ஃபேஸ்புக்கிலிருந்து தனி மெசேஜ் அனுப்பி கேட்டாள் இலக்கியா.


``நீ கூட ரொம்ப அழகாத்தான் இருக்கே!’’ பதில் மெசேஜ் அனுப்பினான் சாமிநாதன். ஒரு மாதம் கழிந்தது. இலக்கியாவிடமிருந்து அவனது கைபேசிக்கு அழைப்பு வந்தது.


``அகில்…உனக்கு ஒரு சர்ப்பிரைஸ்… இண்ணைக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ்ல சென்னைக்கு வர்றேன், நாளைக்கு வசந்த் அன்கோவுல ஒரு இண்டர்வியூ இருக்கு, சாயங்காலம் கன்யாகுமரி எக்ஸ்பிரஸ்சுல திரும்பி போயிடுவேன். நீ நாளைக்கு காலையில எட்டரை மணிக்கு எக்மோர்ல என்ன பிக்கப் பண்ணணும் சரியா!’’ சாமிநாதனுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.


திருச்சியில் இஞ்சினியரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் தனது மகன் அகிலுக்கு ஃபோன் செய்து உடனே புறப்பட்டு வரும்படிச் சொன்னான் சாமிநாதன். இரவு அகில் வந்து சேர்ந்த போது தனது மகனிடம் நடந்த விபரங்களை ஒளிவு மறைவின்றிச் சொன்னான் சாமிநாதன்..


``அப்பா… என்னப்பா சொல்றீங்க…உங்க விளையாட்டுக்கு நான் தான் கிடைச்சனா...!’’ கோபமாய் கேட்டான் அகில்.


``என்ன மன்னிச்சுடுப்பா, இலக்கியாகிட்ட உன் பேரச்சொல்லி பேசியிருக்கிறேன். ஃபேஸ்புக்குல உன் போட்டோவத்தான் போட்டிருக்கேன், உன் அம்மா இல்லாத தனிமையில வாழ்ந்த எனக்கு இலக்கியா அறிமுகமானா, அவகிட்ட பொய்யா ஆரம்பிச்ச நட்பு அப்பறம் அவ என்ன விரும்புற அளவுக்கு காதலா மாறிச்சி, இப்போ அவ என்ன பார்க்கிறதுக்காக நாளைக்கு சென்னைக்கு வர்றா… எனக்கு பதிலா நீ அவள பிக்கப் பண்ணி அவள கூட்டிகிட்டு வீட்டுக்கு வா….பிளீஸ்பா!’’ சாமிநாதன் கெஞ்சிக்கேட்டபோது அகிலால் மறுப்பு சொல்ல முடியவில்லை. 


அப்பா ரிட்டையர் ஆகி ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. அம்மா சுவாசக்கோளாறில் சிரமப்பட்டு போய் சேர்ந்தபிறகு கடந்த நான்கு வருடங்களாக தனிமை அப்பாவை தத்து எடுத்திருக்கவேண்டும்..


வீட்டில் தனிமையில் தினசரிகள், வார இதழ்கள் படிப்பது, சமையல் செய்வது, நண்பர்களோடு அரட்டை அடிப்பது என்று பொழுது நன்றாக போய்க்கொண்டிருந்த அப்பாவிற்கு எப்படித்தான் இலக்கியா அறிமுகமானாளோ தெரியவில்லை அவளிடம் வயது வித்யாசத்தை மறைக்க என் பெயரை சொல்லியும் ஃபேஸ்புக்கில் என் புகைப்படத்தை போட்டும் இனம் புரியாத காதல் வலையில் சிக்கியிருக்கிறார் அப்பா.


அப்பாவை கோபித்துக்கொள்வதா இல்லை அவரை நாலு வார்த்தை திட்டுவதா என்றும் தெரியவில்லை. பருவ வயதில் நான் செய்ய வேண்டிய லீலைகளை அப்பா செய்திருக்கிறார். இப்பொழுது மாட்டிகிட்டு முழிக்கும் அப்பாவைப் பார்க்கப் பார்க்க அகிலுக்கு சிரிப்பு தானாய் வந்தது.


அப்பா சொல்வதுபோல் நாளை காலை இலக்கியாவை சென்று சந்தித்து அவளிடம் நான் தான் அகில் என்று சொன்னால் அவள் என்னிடமல்லவா கொஞ்சி குழைவாள். அதை அப்பா பார்க்கும்போது ஒரு நெருடல் வராதா..? அப்பா இதுநாள் வரை காதலித்த பெண்ணை நான் பார்க்கும்போது அவள் வயதில் குறைந்தவள் என்றாலும் எனக்கு அவள் அம்மா. முறை தானே…


இலக்கியாவின் உறவை துண்டித்தால் அப்பா துவண்டு விடுவார். சரி வருவது வரட்டும் நாளை அவளை எழும்பூர் சென்று சந்திப்பது என்ற முடிவுக்கு வந்தான் அகில். மறுநாள் காலை எட்டு மணிக்கு எக்மோர் ஸ்டேசனில் தனது அப்பாவின் கைபேசியோடு இலக்கியாவுக்காக காத்திருந்தான்.


ரயில் எக்மோர் ஸ்டேசனில் வந்து இளைப்பாறியது. இலக்கியா ரயிலைவிட்டு இறங்கி  அகிலின் கைபேசி எண்ணுக்கு டயல் செய்தாள்.


``ஹலோ…நான் இலக்கியா!’’


``சொல்லுங்க, எந்த கோச் பக்கம் நிக்கிறீங்க…’’ சட்டென்று கைபேசியை துண்டித்தாள் இலக்கியா.


ஐந்து நிமிட இடைவெளிக்குப்பின் மீண்டும் டயல் செய்தாள் இலக்கியா.


``ஹலோ’’ என்ற குரலைக்கேட்டதும் மீண்டும் கட் செய்தாள். அதன் பிறகு தனது கைபேசியை சுவிட்ச் ஆப் செய்தாள் இலக்கியா. அன்று அகிலை சந்திக்காமலேயே இண்டர்வியூவை அட்டெண்ட் செய்துவிட்டு கன்யாகுமரி எக்ஸ்பிரஸ்சில் வீடு திரும்பினாள் இலக்கியா.


``அப்பா, அந்த பொண்ணு சரியான ஏமாற்றுகாரிபோல, உங்க மொஃபைலுக்கு டயல் பண்ணிட்டு கட் பண்ணீட்டா, அப்பறம் நான் டயல் பண்ணுனா சுவிட்ச் ஆப். ஸ்டேசன்ல பத்து மணி வரைக்கும் காத்திருந்தேன் யாரும் வரல, அப்பறமா வீட்டுக்கு வந்துட்டேன்.’’ அகில் ஏமாற்றத்தோடு சொல்லியபோது இலக்கியாவால் தான் ஏமாற்றப்பட்டு விட்டோமா என்று நினைக்கத்தோன்றியது.

அன்று முழுக்க அவளது நினைவுகளோடு தூங்கியதில் தூக்கம் வராமல் அவளுடைய நினைவுகள் மட்டும் அடிக்கடி வந்து போயின. மறுநாள் காலை அகில் திருச்சிக்கு புறப்பட்டு போனதும் இலக்கியாவைப் பார்க்கணும் போல தோன்றியது.


ஃபேஸ்புக்கில் அவளது புகைப்படத்தை ஒரு தடவை பார்த்தால் தேவலாம் போல் இருந்தது. கம்பியூட்டரை உயிர்ப்பித்தபோது இலக்கியாவிடமிருந்து மெசேஜ் வந்து கிடந்தது.

``டீயர் அகில், ரொம்ப ஆசைப்பட்டு உங்கள பார்க்கலாமுன்னு சென்னை வந்தேன், உங்க மொபைல்ல வேற ஒரு ஆணோட குரல், உடனே கட் பண்ணீட்டேன், உங்க மொபையில தொலைச்சிட்டீங்களா? வேற மொபைல் வாங்கியிட்டீங்களா? உடனெ என்னோட எண்ணுக்கு டயல் பண்ணுங்க, உங்க குரலுக்காக நான் காத்துகிட்டு இருக்கேன். சீக்கிரமா போன் பண்ணுங்க!’’ ஃபேஸ்புக்கில் இப்படி எழுதியிருந்தாள் இலக்கியா..


சாமிநாதன் தனது கைபேசியிலிருந்து அவளது எண்ணுக்கு டயல் செய்துபேசிக்கொண்டிருந்தான் வழக்கம்போலவே.. 

 

ஐரேனிபுரம் பால்ராசய்யா (lgmrajaia@gmail.com)

by Swathi   on 25 Nov 2014  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
31-Oct-2015 12:54:29 Prabu said : Report Abuse
அருமை.. காதல் ஒரு மொழி.. அதை புரிந்து கொள்ள சற்று காலம் ஆகும்.!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.