LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

கடலுடைக்கும் கோழிக்கறியும் குறவை வவ்வால் மீன்களும்... - வித்யாசாகர்

“எங்கப்பா போலாம்.. “கடிப்பா வெட்டு”

“அதென்ன மச்சி கடிப்பா வெட்டு புது ஓட்டலா ?”

"ஆமாம் ரவி. உள்ள போனா மூக்குல நாக்குல தண்ணி ஊத்தாம வெளியவரமாட்ட, இப்பல்லாம் ஓட்டல் பேருங்கக் கூட இப்படித்தான்., கடிப்பாவெட்டு, வாழைத்தட்டு ன்னெல்லாம்தான் வருது.. இதான் இப்போ ட்ரென்ட்.."

"அப்படியா அப்போ போ போலாம்.., ஆனா எனக்கு வேண்டாம்பா நான் அசைவம் சாப்பிட மாட்டேன்”

"அப்போ போலான்னு சொன்ன ?"

"நீ சாப்பிடுவ, தோ குழந்தைங்க சாப்பிடும்"

"சரி போ.."

வெளியூரிலிருந்து வந்த ரவியும் உள்ளூர் தாமுவும் அவரவர் குடும்பத்தோடு இரவு உணவருந்த அசைவ உணவகத்திற்குச் செல்கிறார்கள். ரவியை அசைவம் உண்ணக்கேட்டால் கொன்று பிணங்களை தின்கிறீர்களே, எனக்கு வேண்டாம் என்பான். அப்போ பச்சைக்கறி தின்றியே அதற்கும் உயிரிருக்கே என்று வாதாடுவான் தாமு. அதற்கும் அவனிடம் பதிலிறுக்கும். “ஒரு கோழியைக் கொன்றால் குஞ்சு தவிக்கும், மாட்டை வெட்டினால் கன்னுகுட்டி அழும், ஒரு பறவை இறந்தால் அதன் ஜோடி பறவை உயிர்விடும். அணைத்து உயிர்களுமே தனது உயிரை தன்னிடம் வைத்திருந்தாலும் உணர்வுரீதியாக எல்லா ஜீவராசியோடும் சங்கிலிபிணைப்பைப் போல இணைந்தேயிருக்கிறது. அதே ஒரு மரத்தை வெட்டினால் தூர நின்று பார்க்கும் வேறொரு மரம் அழாது. வெட்டாதே என்று தடுக்காது. கொன்றுவிட்டாயே என்று பதைக்காது. மரங்களுக்கும் செடிகொடிகளுக்கும் கூட உயிரிருப்பினும் அது தொடு உணர்வினை மட்டுமே கொண்டது. பிற உயிர்களைப்போல் காணுணர்வு செவியுணர்வு அறியுணர்வு என எதையுமே மரங்கள் பெற்றிருக்கவில்லை. மனிதனும் பிற உயிர் கொன்று வாழும் இன்னொரு விலங்குதான். என்றாலும் ஒவ்வொரு உயிரும் ஒன்றைச் சார்ந்தே இருக்கிறது. மனிதனுக்கும் அவன் வாழ வேறொன்றை உட்கொள்ள வேண்டியிருப்பதால் மரங்கள் அதற்கு தகுமென்று கருதினான் மனிதன். மரத்தைக் கொன்று தின்றால் அதன் பாவம் வெட்டிய ஒரு மரத்தோடு போகுமென்று நம்பினான். அதனால்தான் “கொன்றால் பாவம் தின்றால் போகுமென்றனர் மேன்மக்கள். அதை நாம்தான் விலங்குகளையும் கொன்றுவிட்டு இரக்கமின்றி “கொன்றால் பாவம் தின்றால் போகுமென்று” விலங்குகளுக்கும் சொல்கிறோம். விலங்குகள் ஒன்றோடொன்று சார்ந்து இருப்பவை. அதைக் கொன்றால் கொன்றதன் பாவம் எப்படிப் போகுமென்பான் ரவி.

மருத்துவரீதியாகப் பார்த்தாலும் மரக்கறியை உண்டுபழகும் உணவின் பலனுக்கும், துடிக்க துடிக்க பிற உயிர்களைக் கொன்று உண்ணும் உணவின் ருசியிலும் ஆத்மபலத்தின் வித்தியாசம் வெகுவாகத் தெரிவதுண்டு. இயற்கை விலங்குகளுக்கு அதற்குப் பிடித்தாற்போல, அல்லது அறிந்தாற்போல யாரை எதைவேண்டுமானாலும் அடித்துத்தின்னும் அறிவைத்தான் அவைகளுக்கு இயற்க்கை கொடுத்திருக்கிறது. ஆனால் மனிதனுக்கு மட்டும் பகுத்தறிந்து வாழத்தக்க பேரறிவு உண்டு. அந்தப் பேரறிவின்படி வாழ்தலே தர்மமாகும்.

உண்பது என்று வந்துவிடுகையில் அடித்தல் கொல்லல்கூட வாழ்வதற்கான தர்மத்திற்கு உட்பட்டதுதான் என்றாலும், அது தான்உண்பதை மட்டும் கொன்றதாய் இருத்தல்வேண்டும், ஒரு உயிரைக் கொன்று அதனால் இன்னொரு உயிரைக் கொல்வதோ, பிரிவுதுயரில் ஆழ்த்தித் துன்புறுத்துவதோ அத்தனை அறமாக இராது என்றெல்லாம் பெரிய பெரிய வியாக்கியானம் பேசுவான்.

ஆனால் ரவிக்கு யாரிடமும் அழுத்திப் பேசிக்கொள்ள பிடிப்பதில்லை, எப்போதும் ‘அவன் வாழ்க்கை வேறு, எனது வாழ்க்கை வேறு என்பான்’. உன் வாழ்க்கையை நீ வாழ்; எனதை நான் வாழ்ந்துக்கொள்கிறேன் என்பான். அதே அவனுடைய குழந்தைகளைக் கேட்டால் அது வேறு கதை, அவர்களுக்கு அத்தனைப்பெரிய வரையறை கட்டுப்பாடென்றெல்லாமில்லை.

அவர்களிடம் சென்று எது சாப்பிடப் பிடிக்குமென்றுக் கேட்டாலே அவர்கள் உடனே கே.எப்.சி தான் பிடிக்கும்னு சொல்வாங்க. ஏன்டா அது அப்படின்னு கேட்டா; எனக்குப் புரிந்தது அவர்களுக்கும் புரிகையில் அவர்களும் நிறுத்திக்கொள்வார்கள் என்பான்.

சிறுவயதிலிருந்தே துடிக்க துடிக்க மீனறுத்து, கோழி கழுத்துமுறுக்கி, ஆடு தலைவெட்டி, மாடு பன்றியென இன்னும் இன்னபிற உயிர்களைக் கண்டந்துண்டமாக்கி ருசிக்குவேண்டி உண்பதால் அச்செயல் அறத்திற்கு மாறான வேறொரு தீயவழியிலான பாவத்தைக் கொண்டுவந்து நம் குழந்தைக்கும் சேர்த்துவிடுகிறது. உண்மையில் பார்த்தால் குழந்தைகளுக்கு முதல் கொலையை நாகரீகத்தோடு அறிமுகப்படுத்துவதே நாம்தான். அவர்களுக்குப் பிஞ்சிலிருந்தே கொலையை நியாயப்படுத்திப் பழக்குவதே நாம் தான்” என்பான் ரவி.

இருந்தாலும் என்னச்செய்வது, இன்று கோழித்தொடைப் போய்’ கால்வறுவல் போய்’ விரல் பக்கோடா வரையென ‘மனிதர்கள் ருசிக்காக கீழிறங்கிவிட்டனர், நாக்கிற்கு கீழே வாழப்பழகிக் கொண்டனர். எனவே அந்தத் தீயச் சுவையின் வாசத்தில் எச்சிலூற, ‘எமது பிள்ளைகளும் வேறு வழியின்றி உயிர்க்கொல்லும் பாவத்துள் நனைந்துபோகிறார்கள். இதெல்லாம் இனி மெல்ல நாளை அவர்களுக்கும் புரியவரும். அப்படிப் புரிகையில் அவர்களும் மாறிப்போவார்கள் என்பான். அவனோடுச் சேர்ந்து அவனுடைய மனைவியும் இப்போதெல்லாம் அசைவம் உண்பதை நிறுத்திக்கொண்டாள்.

என்றாலும், இன்று அதலாம் மீறி, பிள்ளைகளுக்கு வேண்டியும் தாமு வந்திருப்பதாலும், எல்லோருமாய் குடும்பத்தோடு சேர்ந்துவந்து ஒரு கே.எப்.சி இருக்கும் கடையோரமாய் வண்டியை நிறுத்தி இறங்கிக் கொண்டிருந்தார்கள். பெரிய வண்டியை தாமு ஒட்டிவந்தான். பின்னால் சிறிய காரில் மனைவியோடு வந்த ரவி அவசரமாய் ஓடிவந்து தாமுவிடம் ஏன் இங்கே நின்றுவிட்டீர்களென்று கத்த, தாமு அதை ஏன் என்னிடம் கேட்கிறாய், உனது பையனிடம் கேள் என்றுச் சொல்ல.

“என்னடா அகில் ??”

“ப்ளீஸ்பா கே.எப்.சி நல்லாருக்கும்பா” என்றான். ரவி சரியென்று தலையாட்ட தாமுவின் குழந்தைகளும் அகிலும் ஹே... ஜாலி... என்றுக் கத்திக்கொண்டே கடையினுள் ஓடினார்கள்.

உயிர்களை அறுத்துப்போட்டு சதைகளுக்கு மசாலா தடவி அதை இன்னபிற உயிர்கள் உண்பதற்கு ஊறும் எச்சிலோடு வறுவலின் பச்சை வாசம் கடையெங்கும் பரவிக்கிடந்தது. ஏனோ கால் வைக்கும் இடத்திலெல்லாம் ஒரு கோழியை அல்லதொரு கோழிக்குஞ்சை உயிரோடு மிதித்துக்கொண்டுப் போவதைப்போலவே தோன்றியது ரவிக்கு. எல்லோரும் சென்று அமர்ந்தார்கள்.

“அப்பா எனக்கு லெக்பீஸ்”

“சரிடா., உனக்கு பாப்பா ?”

“எனக்கும்”

“நீ என்னமா சாப்பிடுற ?”

“அவரே சொல்லுவார்ண்ணே...”

“நமக்கு ரெண்டு டின்னர் பேக் டா மச்சி, சரி நீங்க என்ன சாப்பிடுவீங்க இங்க?”

“எங்களுக்கு கிங் சலாட்.. பச்சைக்கறி போதும்..”

ஒருவாறு எல்லாம் ஆடர் செய்துவிட. அமர்ந்துக்கொண்டு பிறர் உண்பதையும் உள்ளே எத்தனை வேகத்தில் கோழியின் சதைக்கண்டங்கள் வறுக்கப்பட்டு பக்கோடாபோல மாறுவதையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகளுக்கு கை பரபரவென்றிருந்தது.

அகில் அக்கம்பக்கம் திரும்பி திரும்பி கோழிக்கால்களைக் கடித்து இழுத்து மென்றுத் துப்புபவரை கண்ணசையாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஏன்டா அகில் உனக்குதான் மீன் வறுத்தா பிடிக்குமே பிறகு ஏன் “கடிப்பா வெட்டு” போலன்னா வேணாண்ட ?” ரவி கேட்டான்.

“இல்லைப்பா அங்க போக பிடிக்கலைப்பா”

“ஏன்பா..”

“நேத்து நான் ஒண்ணுப் பார்த்தேன் பா.. அதுலருந்து என்னவோ மாதிரி இருக்குப்பா”

“என்னடா பார்த்த அப்படி ?”

“ஒரு காக்காப்பா.. ஒரு உயிரோட ஒரு மீனை புடிச்சிவந்து ஒரு காலில் தலையை மிதித்துக் கொண்டு துடிக்க துடிக்க அதனுடைய வாலில் குத்தி குத்தி உயிரோட பிச்சிதுப்பா. அந்த மீன் பாவம் துள்ளி துள்ளி குதிக்குது”

“அச்சோ..”

“எகுறி எகுறி ஓடப் பாக்குதா ஆனா காக்கா அந்த மீனை விடவேயில்லைப்பா. எனக்கும் அப்பதான் தோனுச்சி; பாவம்ல இந்த மீன்கள்லாம்; ‘நாமும் இப்படித் தானே இந்த மீன்களைப் பிடித்து அறுத்து உயிரோட சாகடிச்சி தின்றோமேன்னு தோனுச்சி. அதோட அதை தின்னவே கூடாதுன்னு நினைச்சிருக்கேன்ப்பா”

“தோடா; அப்போ மீன் பாவம்னா (?) கோழி பாவமில்லையா ?”

“கோழியை அப்படிப் பண்ணாலும் பாவம் தான்..”

“அப்போ இங்க என்ன தின்றியாம் ?” நமுட்டாகச் சிரித்தான் ரவி.

“இது வெறும் கே.எப்.சி. தானேப்பா” என்றான் அகில்

“கே.எப்.சின்னா என்ன காய்கறி பகோடாவா ? இதுவும் அதுதானே, அங்க நீ பார்த்தது மீனு, இது கோழி, அவ்வளவுதான் வித்தியாசம்”

“டேய் ரவி, என்னடா இது, குழந்தை சாப்பிடும்போது ?, அகில் உனக்கு கிட்ஸ் பேக்தானே, இந்தா நீ பிரி தின்னு போ..”

“இல்ல தாமுமாமா இதுவும் மீனா?”

“அதலாமில்லைடா செல்லம், இது மீனில்ல கோழி. நீ சாப்பிடலாம் சாப்பிடு”

“அப்போ அந்தக் கோழியோட குஞ்சு பாவம்ல?”

“அது வேறடா கண்ணா. இந்தக் கோழியை இவுங்க இதுக்குன்னே தாயோட கூட வைக்காம எந்திரத்து வெப்பத்துல முட்டையை வைத்து இயற்கையா இல்லாம செயற்கையா குஞ்சு பொறிக்கச் செய்வாங்க. பிறகு அது வளர ஆர்மோன் ஊசி அது இதுன்னு போட்டு அதை சீக்கிரமா வளரவைத்து வெட்டி பதப்படுத்தி கே.எப்.சி.யோட பல துரித உணவகத்திற்கு அனுப்பி மசாலா சேர்த்து பொறிச்சு தராங்க. இதுக்குன்னே உலகெங்கும் பெரிய பெரிய நிறுவனங்கள் இயங்கிகிட்டு இருக்கு” என்று தாமு சொல்ல..

“அதனால் தான் இதை உண்பதால் அந்த ஆர்மோன் விளைவு நமக்குள்ளும் மாற்றங்களை ஏற்படுத்தி பல நோயிற்கு ஆளாக்கிவிடுகிறது” என்று ரவி முந்திக்கொண்டு வந்தான். அதற்குள்

“அப்போ இதுவும் ஒரு உயிர்தானா? நான் கே.எப்.சின்னா வேற ஏதோன்னு நினச்சேன்ப்பா” என்றான் அகில்.

“பாவம்ல இதலாம்; அதுங்களை உருவாக்கி, செயற்கையா வளர்த்து, பின் இடத்திற்கு இடம் மாற்றி, இங்கருந்து அங்க, அங்கிருந்து இங்கன்னு துன்புறுத்தி, சிலநேர நோய்வாய்ப்பட்டு சரியான தீனிகூட இல்லாம, நசுங்கி அதுங்க படுறப் பாடு இருக்கே’ அது பட்டென சாவதைவிட ஒரு படி மேல்’ தெரியுமா அது என்றான் ரவி.

“இல்லப்பா ஆனா சாப்பிட ரொம்ப பிடிச்சிருக்கே..
ரொம்ப நல்லாருக்குப்பா சாப்பிட” என்றான் அகில்

“அவனை விடு அகில், நீ சாப்பிடு” என்று தாமு சொல்ல,

என்னதான் தாமு சொன்னாலும், அகில் எடுத்து ஒரு துண்டினை வாயில் வைக்கப்போய் நிறுத்திவிட்டான். அப்பாவைப் பார்த்தான்.

“இல்ல அகில் உனக்கு பிடித்திருந்தா நீ சாப்பிடு. எனக்காகவெல்லாம் பார்க்கவேணாம். அங்கப்பார் பாப்பா எப்படி நல்லா சாபிடுது பார்.. ம்ம் நீயும் சாப்பிடு.. போலாம்..” என்றான் ரவி.

“சார் டின்னர் பேக், கிட்ஸ் மீல், கிங் சலாட் வேற எதனா வேண்டுமா?”

“பழச்சாறு இருந்தா, என்னென்ன இருக்கு ?” என்றான் தூய தமிழில் ரவி.

“என்னது...... பழம் சாரா ?” வெயிட்டர் ஆச்சர்யத்தோடு கேட்க

“ஜூஸ்ப்பா மேங்கோ ஜூஸ் இருக்கா” என்றான் தாமு.

“மேன்கோவா??? இங்க மேங்கோலாம் கிடையாது சார். ஜூசு. சாதா ஜூசு, மில்க்சேக் ஜூசு இருக்கு. அது கூட பிரெஸ் கிடையாது. எல்லாம் டின்னுதான்.. வேணுமா?”

“இட்ஸ் ஓகே.., ரெண்டு மேங்கோ ஒரு ஆரஞ்சு, ரவி உனக்கு காப்பியா டீயா ?”

“ம்ம்.. தேநீர், பாலில்லாம..”

“மல்லி உனக்கு ஜூசா? காப்பியா?”

“எனக்கு ஏதும் வேண்டாண்ணே. வீட்டுக்குப் போனதும் நானே கொஞ்சம் பால் வெச்சி குடிசிப்பேன்”

அதற்குள் அந்த வெயிட்டர் இவர்களை உர்ர்ர்ர்ரென்று முறைத்தவாறு பார்த்துக்கொண்டிருக்க “சாரிப்பா, அவ்வளோதான் கொண்டு வா.. மேக்இட் ஆல்சோ பில் ப்ளீஸ்..”

“ஏண்டா டேய் உங்களுக்கெல்லாம் இந்த சாதாரண உணவகத்துலக்கூட தமிழ் வராதா?” என்றான் ரவி.

“நண்பா; நீ வெளிஊர்ல இல்லை நண்பா. இருந்திருந்தா உன்னோட தமிழ்ப்பற்றை அங்கக் காட்டலாம். ஆனா நீ இப்போ நம்மூர்ல இருக்க. யாரையும் எதையும் இங்க நீ ஒன்னும் பண்ணமுடியாது. இங்கல்லாம் இப்படிதான் மச்சி”

“இப்படிதான் னா எப்படா ? எப்போ இதலாம் மாற்ரது?”

“அதலாம் நடக்கவே நடக்காது மச்சி.. இங்கல்லாம் வாழ்க்கை இதுதான்.. வந்தியா வாழ்ந்தியா போயிட்டே இரு.. இல்லைனா ரொம்ப கஷ்டம் மச்சி..”

“ஏங்க சாப்பிடுங்க.. உங்களால அகில்கூட பாருங்க அப்படியே வெச்சிருக்கான்”

“என்னடா அகில்?”

“இது உயிராப்பா ? ஒரு லேக் பீஸ் எடுத்து காட்டினான்”

“உயிரா இருந்துதுப்பா, அதுவும் கோழி தானே? ஆனா அதை நாமதான் கொன்னுட்டோமே, கொன்று துண்டுதுண்டா வெட்டி, மசாலா தடவி எண்ணெய்லப் போட்டு கொதிக்க வெச்சி..”

“ஐயோ பாவம் லப்பா..”

“ம்ம்..”

“அப்போ ஏன்பா இதை நீங்க முன்னாடியே சொல்லலை”

“நீதான் எப்போப் பார்த்தாலும் இதுவே வேணும்னு கேட்ப”

“இல்லைப்பா பள்ளிக்கூடத்துல கொண்டுவருவாங்கப்பா.. அப்புறம் டிவியில பாப்பேனா, அதான்பா எனக்கு புடிச்சிப் போச்சி. அப்போகூட இதை நான் வேற ஏதோன்னு நினச்சேன்ப்பா..”

“உனக்கு பிடித்ததுன்னு எடுத்துகிட்டா அது எல்லாமே இப்படி “கேஎப்சி, மெக்விங்க்ஸ், லாலிபாப்”ன்னு மசாலா தடவி எண்ணெயில் வறுத்ததாதான் இருக்கு, வேறென்ன பண்றது? ஆனா அது ஒவ்வொன்னுலையும் உயிர்களின் வலியும் வதைகளும் தான்டா இருக்கு செல்லம்”

அகிலுக்கு ஏழு வயது. மிக துடிப்பான குழந்தை. சிந்திக்கும் ஆற்றலும் கேள்வியின் ருசியும் தெரிந்தவன். மெல்ல திரும்பி தனது அருகில் கையில் ஒரு லெக்பீஸ் வைத்து கடித்து சுவைத்து சுவைத்து உண்ணும் பாப்பாவைப் பார்த்தான். மீண்டும் குனிந்து தனது தட்டையும் பார்த்தான். கொஞ்சம் திரும்பி அப்பாவைப் பார்த்தான்
ரவி கூட எதேச்சையாக ம்..ம்.. சாப்பிடு என்று கண்களை ஒப்புதலாக மூடி தலையையசைக்க, அகில் திரும்பி பக்கத்திலெல்லாம் ஒவ்வொருவரையாய்ப் பார்த்தான். ஆளுக்காள் கடித்து இழுத்து வேகமாக விழுங்கினார்கள். இன்னொரு பக்கம் ஆடர் தர வேறொரு கூட்டம் அலைமோதியது. அமர இடமிஇன்றி சிலர் அடுத்த அமர்விற்காக காத்துநின்றிருந்தார்கள்.

அகில் சட்டென எழுந்தான். யாரிடமும் எந்த சம்மதமும் கேட்கவில்லை. அவனுடைய தட்டை எடுத்துக்கொண்டு போய் குப்பைதொட்டியில் கொட்டினான். தட்டை மேஜையில் வைத்துவிட்டு கை கழுவும் இடம் நோக்கி போய் கை கழுவிக்கொண்டு வெளியே வர, ரவி ஓடிப்போய் தூக்கிக்கொண்டு –
“ஏன் அகில் உண்மையா வேண்டாமா?”

“இல்லப்பா எனக்கு வேண்டாம்பா.. பாவம்பா..”

அகிலுக்கு இன்னும் ஏதோ பேச உதடு துடித்தது. பிள்ளையை கட்டியணைத்து முத்தமிட்டான் ரவி. முத்தத்தில் உயிர்களின் மீதான அக்கறையின் பொதுவான பச்சைவாசம் அழுத்தமாகயிருந்தது. இன்றோ நாளையோ இல்லையதற்குப் பின்னோ; இனி வெட்ட இருக்குமொரு கோழியோ ஆடோ மீனோ ஏதோ ஒன்றின் இரண்டின் உயிர் இனி நம் அகிலால்கூட மிச்சப்படலாமென்று பெருமிதத்தோடு நினைத்துக்கொண்டான்..

ஒரு பெரிய மாற்றத்திற்கான முதல் புள்ளி நம்மிடமிருந்தே துவங்கவேண்டுமென்று ரவி அடிக்கடி சொல்வதை தாமுவும் மல்லியும் மனதுள் எண்ணி சிரித்துக்கொண்டார்கள்.

சற்று நேரத்தில் எல்லோரும் ஏறி ஒரே வண்டியில் அமர்ந்து வீட்டிற்கு புறப்பட ரவியும் அவனுடைய வண்டியை எடுத்துக்கொண்டு தனியே பின்னால் வந்துக்கொண்டிருந்தான். தாமு சன்னல் கண்ணாடியை கீழிறக்கி விட்டான். காற்று வேகமாக இருந்தாலும் முகத்தில் சில்லிடுமளவிற்கு குளிரோடிருந்தது.
அகில் வெளியே கைநீட்டி பாப்பாவிடம் எதையோ காட்டி பேசி சிரித்துக் கொண்டு வந்தான். முன்னே ஒரு பெரிய லாரியில் சின்னச்சின்ன இரும்புக் கம்பிகளின் கூடுகளில் கோழிகளை நெருக்கி ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிக் கொண்டுபோனார்கள். தாமு சற்று வேகமாக அந்த லாரியை கடந்து ஏறி முன்னே போனான்.
கோழிகளின் வாசம் பச்சையாய் அவன் முகத்தில் வந்து அடிக்க சன்னல்கண்ணாடியை அவசரமாக மேலேற்றி மூடினான். அந்தப் பச்சை வாசமின்னும் முழுமையாய் வெளியில் போகாமல் உள்ளேயே சுற்றியிருந்தது. தாமுவிற்குக் கூட அந்தக் கொழிகளெல்லாம் பாவம்போல் தான் தெரிந்தது.

ரவி தனது காரின் நடுக் கண்ணாடியின் வழியே அவன் முகத்தை எட்டிப் பார்த்தான். தாமுவும் அவனைப் பார்த்து ம்ம்.. சரிதான்.. என்பதுபோல் புன்னகைத்து கன்னசைத்துக் காட்டினான்.

ரவிக்கு சந்தோஷம். அவனுக்குத் தெரியும், இன்னும் ரெண்டு ஆடோ கோழியோ மீனோ கூட இன்னும் வெகுவிரைவில் காப்பாற்றப் படலாமென்று..

by Swathi   on 26 Dec 2015  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
10-Jul-2017 09:14:59 வித்யாசாகர் said : Report Abuse
நன்றி. நம் மானுடப் பண்பெனக் கருதுகிறேன். வாழ்க..
 
10-Jul-2017 08:55:57 Ragu said : Report Abuse
மிக அருமை. பிற உயிர்களின் மீது உங்களுக்கு உள்ள பாசம் மெய் சிலிர்க்க வைக்கிறது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.