LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலேவலா

உரைநடையில் (அத்தியாயம் 1-32)

முகவுரை

ஒரு சந்ததியின் காவியத்தை, ஓர் இனத்தவாின் பாடல்களைப் பாட எனது உள்ளுணர்வு அழைக்கின்றது. அந்த ஆர்வத்தில் வாயிலே வார்த்தைகள் சுழல்கின்றன; நாவிலே நெகிழ்ந்தோடி உருள்கின்றன; பற்களில் பாட்டாகப் புரள்கின்றன.

பொன்னான சோதரனே, பேரன்புத் தோழனே, நாங்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து சந்திக்கிறோம். எனவே, வாருங்கள்! கரங்களைக் கோர்த்து, விரல்களைச் சேர்த்து வண்ணமாய்ப் பாடுவோம். உயர்ந்து வரும் இளைஞர்களும் மேன்மையுறும் தேசிய மக்களாரும் எங்கள் பாடல்களைக் கேட்டுப் பேருவகை அடையட்டும். இந்தப் பாடல்களும் இனிய கதைகளும் எங்கிருந்து கிளர்ந்து வந்தன தொியுமா? முதிய வைனாமொயினனின் இடுப்புப் பட்டியிலிருந்து! இல்மாினன் என்பானின் கொல்லுலையின் ஆழத்திலிருந்து! தூரநெஞ்சினனின் வாள் முனையிலிருந்து! வடநாட்டு வயல்களின் எல்லையிலிருந்து! கலேவலா என்னும் புதர்ச் சமவௌியிலிருந்து!

அப்பா கோடாிக்குப் பிடி செதுக்கிய நேரத்தில் பாடிய பாடல் இது. அம்மா தறியில் நூற்கோலைச் சுழற்றுவாள். நான் பால்தாடியுடன் அவளுடைய முழங்கால்களை நோக்கித் தவழ்ந்து செல்வேன். அப்போது அவள் பாடிய பாடல் இது.

இக்காவியத்தில் சம்போ பற்றிய பாடல்களுக்குப் பஞ்சமேயில்லை. லொவ்ஹியின் மந்திர சாகசங்களுக்கு எல்லையே இல்லை. ஆனால் சம்போவும் அப்பாடல்களுடன் முதிர்ச்சி பெற்றது. மந்திர சாகசங்களிலேயே மாதரசி லொவ்ஹியும் மாண்டு போனாள். பாடல்களைப் பாடியே விபுனனும் மறைந்து போனான். லெம்மின்கைனனும் விளையாடல்களில் வீழ்ச்சியுற்றான்.

நான் சொல்வதற்கு இன்னமும் எவ்வளவோ மர்மக் கதைகள் இருக்கின்றன. பாதையிலே பொறுக்கிய கதைகள் இருக்கின்றன. புதர்களில் பறித்த கதைகள் இருக்கின்றன. இன்னும் பற்றைகளில் பெற்றவையும் முளைகளில் முகிழ்த்தவையும் புல்லின் தாள்கள் உரசியதால் கிடைத்தவையும் இருக்கின்றன. இவை தவிர, கறுத்தப் பசு மூாிக்கிக்குப் பின்னால் மந்தை மேய்க்கும் இடையனாகச் சென்றபோதும், தேன் சொட்டும் மேட்டிலேயும் பொன் நிறத்துச் சிறு மலைகளிலும் புள்ளிப் பசு கிம்மோவுக்குப் பக்கத்தில் புல்வௌிச் சிறுவனாகத் திாிந்தபோதும், சேகாித்த கதைகளும் இருக்கின்றன. குளிர் வந்து கூறிற்று ஒரு கதையை. மழை வந்து மொழிந்தது ஒரு கவிதை. காற்று வந்து ஒன்று சொல்லக் கடலலையும் ஒன்று சொன்னது. பறவைகள் சொற்களைக் கொண்டு வந்து சேர்க்க, மர நுனிகள் அவற்றை மாயச் சொற்றொடர்கள் ஆக்கி அமைத்தன.

இவற்றை எல்லாம் ஒரு பந்தாகச் சுருட்டிப் பனிமழையில் சறுக்கிச் செல்லும் வண்டியில் ஏற்றிக் களஞ்சியத்துக்குக் கொண்டு போனேன். அதனை ஒரு செப்புச் சிமிழில் போட்டுப் பரண்மீது வைத்திருந்தேன்.

இவை பல ஆண்டுகள் படுகுளிாிலும் கடும் இருட்டிலும் மறைந்திருந்தன. இப்போது எனது கதைகளை குளிாில் இருந்து வௌியே கொண்டு வரட்டுமா? எனது பாடல்களை உறைகுளிாிலிருந்து மீட்டு வௌியேற்றட்டுமா? அந்தச் செப்புச் சிமிழை வீட்டுக்குள்ளே கொண்டு வந்து, கூரையின் கீழே வீட்டு உத்தரத்தின் அடியில் ஓர் ஆசனத்தின் நுனியில் வைக்கட்டுமா? சொற்கள் நிறைந்த அந்தப் பெட்டகத்தை இப்போது திறக்கட்டுமா? கதைகள் நிறைந்த பெட்டியின் பூட்டை நீக்கட்டுமா? உருட்டி வைத்த பந்தை எடுத்துக் குலைக்கட்டுமா? கட்டி வைத்த சுருளின் முடிச்சை அவிழ்க்கட்டுமா?

தானியத்தில் சுட்ட ரொட்டியைச் சாப்பிட்ட பின்னர், பார்லியில் வடித்த 'பீரை'க் குடித்த பின்னர், ஒரு பாடலைப் பாடப் போகிறேன்; நன்றாக முழங்கிப் பாடப் போகிறேன். குடிப்பதற்கு 'பீரோ' வேறு மதுவகையோ கிடைக்கவில்லை என்றால், வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டு வரண்டுபோன இந்த வாயாலே பாடுவேன். ஏனென்றால் எங்களுடைய இந்த மாலைப் பொழுதை இனிதாக்க வேண்டும்; சிறப்பான பகற்பொழுதை மதிப்பாக்க வேண்டும். நாளைய தினத்தை நலமாக்க வேண்டும். ஒரு புதிய விடியலைத் தொடக்கி வைக்க வேண்டும்.
     அட்டவணை    மேலே
1. வைனாமொயினனின் பிறப்பு

இரவுகளும் பகற் பொழுதுகளும் மாறிமாறி வந்து போய்க் கொண்டிருந்த காலத்தில், அழகிய மங்கையான வாயுமகளுக்கு நித்தியக் கவிஞன் வைனாமொயினன் பிறந்தான்.

வாயுவின் மகளான இந்தக் கன்னிமகள், இயற்கையன்னை அழகையெல்லாம் அள்ளிக் கொட்டிப் படைத்த இந்த அழகுமகள், வாயுவின் பரந்த பெரும் முற்றத்தில், வானத்தின் வெட்டவௌி விதானத்தில், வெகு காலம் கன்னியாய்த் தனித்திருந்தாள். அதனால் அவளுக்கு வாழ்வு அலுத்தது; மனம் சலித்தது.

ஒருநாள் அவள் கீழே இறங்கி வந்து பரந்து விாிந்த கடல் நீர்ப் பரப்பிலே படிந்தாள். அப்பொழுது ஒரு கொடிய காற்றுக் கிழக்கிலிருந்து எழுந்தது. காலநிலை சீறிச் சினந்தது. கடலலை நுரைநுரையாய்க் கலக்கி அலையலையாய் அடித்தது. காற்றும் கடலலையும் அவளை அசைத்தன; அணைத்தன. அவள் கருவுற்றாள்.

அவள் அந்தக் கனத்த கருவுடனும் கொடிய வலியுடனும் மனிதாின் ஒன்பது ஆயுட்காலமான எழுநூறு ஆண்டுகள் எல்லாத் திசைகளிலும் திாிந்தாள்; எல்லாக் கரைகளிலும் நீந்தினாள். ஆனால் பிறப்பென்று ஒன்றும் நடக்கவில்லை. படைப்பென்று எதுவும் நிகழவில்லை.

அவள் அழுதாள்; அரற்றினாள்; இறைவனை நினைத்து இவ்விதம் சொன்னாள்: "ஐயனே, மாபெரும் தெய்வமே, மனுக்குல முதல்வனே, வானத்தைத் தாங்கும் வள்ளலே, தேவையான நேரமிது. தவறாமல் வாருமையா! கூப்பிட்ட குரலின் குறை தீர்க்க வாருமையா! எனது துயரத்தை நீர் வந்து தீருமையா! வயிற்றில் வரும் வலியை விடுவிக்கப் பாருமையா! வாரும் உடனே. வந்திடுவீர் இக்கணத்தில்!"

சிறிது நேரம் கழிந்தது. ஒரு வாத்துத் தாழப் பறந்து வந்தது. அது கூடு கட்ட ஒரு இடம் தேடித் திாிந்தது. எல்லாத் திசைகளிலும் பறந்து பார்த்தும் அதற்கு ஓர் இடம் கிடைக்கவில்லை. அது அந்தரத்தில் பறந்து, அசையாது நின்று சிந்தனை செய்தது; சிந்தித்துப் பார்த்தது: 'நான் எனது கூட்டைக் காற்றிலே கட்டவா? கடலிலே கட்டவா? காற்றிலே கட்டினால் காற்று வீழ்த்துமே! கடலிலே கட்டினால் கடல் கொண்டு போகுமே!'

அப்பொழுது அங்கிருந்த நீரன்னையான வாயுமகள் கடலுக்கு வௌியே முழங்காலைத் தூக்கி வாத்துக்குக் கூடு கட்ட ஓர் இடம் தந்தாள். அந்த அழகான வாத்து அந்தரத்தில் பறந்து அசையாது நின்று நீலக் கடலின் நீண்ட பரப்பினில் நீரன்னை தந்த முழங்காலைக் கண்டது. அந்த முழங்காலைப் பசுமையான ஒரு புல்மேடு என்று நினைத்தது. மெதுவாக முழங்காலில் இறங்கிக் கூடொன்று கட்டி முட்டைகளை இட்டது. ஆறு முட்டைகள் பொன்னால் ஆனவை; ஏழாவது முட்டை இரும்பினால் ஆனது.

பின்னர் அந்த வாத்துத் தனது முட்டைகளை அடைகாக்கத் தொடங்கிற்று. முதல் நாளும் மறு நாளும் மூன்றாம் நாளும் அது அடைகாத்தபோது, நீரன்னைக்கு உடலெல்லாம் தீப்பற்றி எாிவதுபோலவும் தோலெல்லாம் நெருப்பாலே சுடுவதுபோலவும் நரம்பெல்லாம் உருகி வடிவது போலவும் இருந்தது. அதனால் அவள் அவசரமாய்த் தனது முழங்காலை அசைத்தாள். உடல் உறுப்புகளை உலுக்கினாள். அப்பொழுது முட்டைகள் நீாில் உருண்டு, கடலலைகளில் மூழ்கி, நொருங்கிச் சிதறின.

ஆனால் அந்தத் துண்டுகள் கடலடியில் சேற்றில் அமிழ்ந்து அழியவில்லை. அவையெல்லாம் சிறந்த பொருட்களாய் மாறின. ஒரு முட்டையின் கீழ்ப்பாதி பூமியன்னையாய் மாறிக் கீழே நின்றது. ஒரு முட்டையின் மேற்பாதி சுவர்க்கமாய் மாறி மேலே எழுந்தது. மேற்பாதியில் இருந்த மஞ்சள் கருவானது மங்கள சூாியனாக மலர்ந்தது. மேற்பாதியில் இருந்த வெள்ளைக் கரு வெண்ணிலவாக வானில் திகழ்ந்தது. ஒரு முட்டையில் இருந்த பலநிறப் புள்ளிகள் விண்மீன்களாக வானில் வந்தன. ஒரு முட்டையில் இருந்த கறுப்பு நிறத்தவை மேலே சென்று முகில்களாயின. இவ்விதமாய்ப் பிரபஞ்சம் தோன்றலாயிற்று.

புதிய சூாியன் ஒளியிலும் புதிய திங்களின் நிலவிலும் காலம் கரைந்தது; வருடங்கள் விரைந்தன. நீரன்னையான வாயுமகள் இன்னமும் நீந்தினாள். அவளின் முன்னே தணிந்த நீர்ப்பரப்பு. அவளின் பின்னே தௌிந்த நல்வானம்.

இப்படியாக ஒன்பது ஆண்டுகள் ஓடிய பின்னர் வந்த பத்தாவது கோடையில், பரந்து விாிந்த கடல் நீர்ப் பரப்பில் அவள் தனது தலையைத் தூக்கிப் படைப்புத் தொழிலைத் தொடங்கினாள்.

அவள் எந்தப் பக்கம் தனது கைகளைத் திருப்பினாளோ, அந்தப் பக்கம் மேட்டு நிலங்கள் வந்தன. எங்கெங்கு அவள் அடியிலே கால்களைப் பதித்தாளோ அங்கெல்லாம் மீனினம் வாழக் குழிகளைப் பறித்தாள். எங்கெல்லாம் நீாில் குமிழ்கள் வரச் செய்தாளோ, அங்கெல்லாம் ஆழக் குழிகளைப் படைத்தாள். அதன்பின் அவள் தனது பக்கத்தைத் தரைக்குத் திருப்ப, மென்மையாம் கரைகள் மெதுவாய் வந்தன. நிலத்தை நோக்கிக் கால்களை நீட்ட, வஞ்சிர மீனின் வலை வீச்சிடம் வந்தது. தலையைத் திருப்பித் தரையை நோக்க, கடலின் கரையில் வளைகுடா வந்தது.

பின்னர் கரையிலே இருந்து கடலுக்குள் நீந்தி, அலைகளின் மேலே அமைதியாய் இருந்தாள். கடலில் செல்லும் கப்பல்கள் மோதிக் கப்பல்காராின் தலைகளை உடைக்கக் கடலின் நடுவே கற்பாறைத் தீவுகள் படைத்தாள்; நீருள் மறைவாய்ச் சிறுமலைகளை வளர்த்தாள்.

இப்பொழுது தீவுகள் எல்லாம் ஒழுங்காய் அமைந்தன. பாறைத் தீவுகள் பரவையில் எழுந்தன. வானத்துத் தூண்கள் நிறுத்தப்பட்டன. நாடு கண்டங்கள் நன்கே அமைந்தன. பாறைகளில் சித்திரங்கள் வரையப்பட்டன. கோடுகள் வரைகள் மலைகளில் தோன்றின. ஆனால் நித்தியக் கவிஞன் வைனாமொயினன் இன்னமும் பிறக்கவில்லை.

நித்திய முதிய வைனாமொயினன் தாயின் கருப்பையில் முப்பது கோடைக் காலமும் முப்பது குளிர்க் காலமும் சுற்றித் திாிந்தான். அவன் சிந்தனை செய்தான்; சிந்தித்துப் பார்த்தான். 'இந்த இருண்ட ஒடுங்கிய மறைவிடத்தில் எப்படி வாழ்வது?'

வைனாமொயினன் இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்: "சந்திரனே, என்னை அவிழ்த்துவிடு! சூாியனே, என்னை விடுதலை செய்! நட்சத்திர மண்டலமே, எனக்கு வழிகாட்டு! மனிதனை ஒடுங்கிய சிறிய வதிவிடத்தில் இருந்து வௌியேற்று! பயணியைத் தரைக்குக் கொண்டுவா! மனிதக் குழந்தையை வெட்டவௌிக்குக் கொண்டுவா! வானத்து நிலவைக் காண்பதற்கு! சூாியனை நயப்பதற்கு! நட்சத்திர மண்டலத்தை நோக்குதற்கு! விண்மீன்களைப் பயில்வதற்கு!"

சந்திரன் வைனாமொயினனை அவிழ்த்துவிடவில்லை. சூாியனும் விடுதலை செய்யவில்லை. அதனால் வாழ்வே அலுத்துப் பொறுமையற்றுப் போனது. எனவே மோதிர விரலால் கோட்டைக் கதவைத் திறந்தான். இடது கால் பெருவிரலால் எலும்பின் பூட்டை விலக்கினான். முழங்கால்களில் தவழ்ந்து வாயில் வழியாய் வௌியே வந்தான்.

அவனுடைய தலை கடலை நோக்கி வந்து வீழ, கைகள் கடலின் அலைகளில் புரண்டன. கடலின் கருணையில் மனிதன் இருந்தான். அலைகளின் அணைப்பில் வீரன் இருந்தான். எட்டு ஆண்டுகள் அவ்விதம் இருந்த வைனாமொயினன் கடைசியில் கடலின் பரப்பினில் இருந்தான்; பெயர் இல்லாத மேட்டினில் இருந்தான்; மரங்களேயில்லா நிலத்தினில் இருந்தான்.

பின்னர் முழங்கால்களைத் தரையில் ஊன்றிக் கைகளைச் சுழற்றி மெதுவாய்த் திரும்பி எழுந்து நின்றான், வானத்து நிலவைக் காண்பதற்கு! சூாியன் அழகை நயப்பதற்கு! நட்சத்திர மண்டலத்தை நோக்குதற்கு! விண்மீன்களைப் பயில்வதற்கு!

இதுதான் வைனாமொயினனின் பிறப்பு. அவனைச் சுமந்த அழகிய மங்கையான வாயுமகளிடமிருந்து நெஞ்சம் துணிந்த பாடகன் ஒருவன் தோன்றிய கதையாம்.
     அட்டவணை    மேலே
2. வைனாமொயினனின் விதைப்பு

கடல் நடுவே இருந்த அந்தத் தீவிலே, மரஞ்செடிகள் இல்லாத அந்த நிலத்திலே, இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்து நின்றான் வைனாமொயினன். பேச்சு மொழியில்லாத அந்தத் தீவிலே அவன் பல்லாண்டு காலம் வாழ்ந்து வந்தான்.

அவன் சிந்தனை செய்தான்; சிந்தித்துப் பார்த்தான். 'இந்த நிலத்திலே நெருக்கமாய் விதைத்து நல்ல விளைச்சலை யார் தருவார்?'

விளைநிலத்துக்கு அதிபதி ஒருவன் இருந்தான். அவனுக்குப் பெயர் சம்ஸா பெல்லர்வொயினன். அவன்தான் விதைப்பான்; நல்ல விளைச்சலும் தருவான்.

சம்ஸா விதைத்தலைச் செய்யப் புறப்பட்டுப் போனான். அவன் நல்ல நிலத்திலும் விதைத்தான். சேற்று நிலத்திலும் விதைத்தான். மணலிலும் விதைத்தான். மண் மேட்டிலும் விதைத்தான். பாறைப் படியிலும் விதைத்தான். பாழ் நிலத்திலும் விதைத்தான்.

மரங்களும் செடிகளும் புல்லின் வகைகளும் முளைத்து வளர்ந்தன. சூரைச் செடியின் சிறந்த பழங்களும் 'சொி'ப் பழச் செடியின் சிவந்த பழங்களும் சிலிர்த்துக் குலுங்கின.

ஒரு நாள் சம்ஸா விதைத்த விதைகளைப் பார்க்க வைனாமொயினன் வந்தான். மரங்கள் எல்லாம் வளர்ந்து இருந்தன. செடிகள் எல்லாம் செழித்து இருந்தன. ஆனால் தெய்வாம்சம் பொருந்திய சிந்தூர மரம் மட்டும் முளைக்கவேயில்லை. 'சாி, அதனுடைய தலைவிதி அதுதான்' என்று எண்ணிய வைனாமொயினன் ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தான். ஊகூம், வேர்கூட வந்திருக்கவில்லை.

அவன் பின்னர் நான்கு பெண்களைக் கண்டான். அவர்கள் ஐவராகி மணப்பெண்களைப் போல நீாிலிருந்து எழுந்தனர். அந்தத் தீவின் பனிப்புகார் படிந்த கடல்முனை யோரம் புல்லை வெட்டினர். வெட்டிய புல்லை வாாி எடுத்துக் கட்டினர். கட்டி ஒன்றாய்க் கொட்டிக் குவித்தனர்.

கடலிலிருந்து ஒரு பூதம் எழுந்தது. குவித்த புல்லைக் கனலில் இட்டுச் சாம்பராய்த் துகளாய் எாித்து முடித்தது. சாம்பர் உயர்ந்து திடராய் இருந்தது. அதனுள் ஒரு விதையும் தளிரும் தனியாய்த் தொிந்தன. தளிர்கள் முளைத்தன. கிளைகள் செழித்தன. வானை நிறைத்தன. விண்ணில் முட்டி வியாபித்து நின்றன. அதனால் ஓடும் மேகங்கள் ஓடாது நின்றன. நகரும் முகில்கள் நகராது நின்றன. சூாிய ஒளியும் சந்திர நிலவும் தடுக்கப்பட்டன.

முதிய வைனாமொயினன் சிந்தனை செய்தான்; சிந்தித்துப் பார்த்தான்: 'சூாிய ஒளியும் சந்திர நிலவும் தடுக்கப்பட்டதால் மனித வாழ்வில் மனத் துயர் வந்தது. மீன்களும் நீந்த முடியாமல் போனது. ஆனால் இந்தப் பாாிய மரத்தை வீழ்த்த ஒரு வீரன் இல்லையே!'

"அம்மா, தாயே, இயற்கையின் மகளே, ஆழியிலிருந்தொரு சக்தியை அனுப்பு" என்று வைனாமொயினன் தன் தாயை வேண்டினான்.

கடலிலிருந்து ஒரு வீரன் எழுந்தான். அந்த வீரன் ஒன்றும் பொியவனல்லன்; ஆனால் அத்தனை சிறியனுமல்லன். நீளம் என்று பார்த்தால் மனிதனின் பெருவிரல் அளவு இருப்பான். உயரம் என்று சொன்னால் ஒரு பெண்ணின் கைச்சாண் அளவு இருப்பான்.

அவனுடைய தோளில் செப்பினால் செய்த தொப்பி தொங்கியது. கால்களில் செப்பினால் ஆன பாதணிகளை அணிந்திருந்தான். கைகளில் செப்பில் கையுறைகள். கையுறைகளில் செப்பில் அலங்காரம். இடுப்பிலே செப்பில் ஒரு பட்டி. பட்டியின் பின்புறம் செப்புக் கோடாி. கோடாியின் பிடியோ பெருவிரல் நீளம். அதனுடைய அலகோ நகத்தளவு இருக்கும்.

'ஒரு வீரனாகத் தொிந்த போதிலும் ஒரு எருத்து மாட்டின் குழம்பளவுதானே இருக்கிறான்' என்று வியந்த வைனாமொயினன், இவ்வாறு வினவினான்: "யாரப்பா நீ? எந்த இனத்தவன்?"

"நான் கடலின் சக்தி. சிந்தூர மரத்தைச் சிதைக்க நான் வந்தேன்."

"உன்னால் அது முடியும் என்று நான் நினைக்கவில்லை" என்று சொல்லிக் கொண்டே திரும்பிய வைனாமொயினன் திகைத்துப் போனான். அங்கே அந்தச் சிறிய மனிதன் ஒரு மாபெரும் உருவத்தில் நிற்கக் கண்டான். அவனுடைய பாதங்கள் தரையில் திடமாய் நிற்க, தலையோ வானில் முகிலைத் தொட்டது. முழங்காலை மூடித் தாடி சென்றது. இரண்டு கண்களுக்கும் நடுவில் ஆறடி இடைவௌி. முழங்காலின் அளவு[1] ஒன்பது அடிகள். இடுப்பின் சுற்றளவு பன்னிரண்டு அடிகள்.

அவன் கோடாி அலகை ஏழு கற்களில் தீட்டினான். அதனுடன் மென்மையான மணலில் முதல் அடி வைத்தான். ஈரல் நிறத்து மண்ணில் இரண்டாம் அடி வைத்தான். மூன்றாம் அடியில் மரத்தை முடித்தான்.

பாாிய விருட்சம் பாாில் வீழ்ந்தது. அடிமரம் கிழக்கிலும், நுனிமரம் வடமேற்கிலும், இலைதளை[2] தெற்கிலும், கிளைகள் வடக்கிலும் சிதறி வீழ்ந்தன. தெறித்துப் பறந்த சிதைவுகளும் துண்டுகளும் பரந்த கடலில் எழுந்த அலைகளில் வீழ்ந்து கிடந்தன. கடலில் மிதக்கும் கப்பல்களைப்போலக் காற்று அவற்றைத் தட்டித் தாலாட்டி இழுத்துச் சென்றது.

வடநாட்டில் ஒரு சிறிய பெண் இருந்தாள். அவள் முக்காட்டுத் துணிகளைத் தோய்த்துக் கடற்கரைப் பாறையில் காய வைத்துக் கொண்டிருந்தாள். அவள் கடலலையில் மிதந்து வந்த மரத் துண்டுகளைக் கண்டாள். அவள் அவற்றை எடுத்துத் தனது கைப்பையில் வைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றாள். அவற்றில் மாய வித்ததைக்கு அம்புகள் செய்யலாம்; மந்திர வேலைக்கு ஆயுதம் செய்யலாம்.

சிந்தூர மரம் சிதைந்து போனதால், அந்தத் தீவின் பனிப்புகார் படிந்த கடல்முனை யோரம் சூாிய ஒளி வியாபித்து இருந்தது. சந்திரன் ஒளியும் வீச முடிந்தது. முகில்கள் எங்கும் ஓடித் திாிந்தன.

அதன்பின் காடுகள் முளைத்து வளரத் தொடங்கின. வனங்கள் எல்லாம் செழித்து வளர்ந்தன. மரங்களில் இலைகளும் நிலத்தினில் புல்லும் நிறைந்து கிடந்தன. மரங்களில் பாடப் பறவைகைள் வந்தன. பாடிய பறவைகள் பரவசப்பட்டன. மரங்களின் உச்சியில் குயில்களும் கூவின.

சிறுபழத் தண்டுகள் தரையில் எழுந்தன. வயல் வௌிகளில் வர்ணப் பூக்கள் வகையாய் வளர்ந்தன. எல்லா இனத்திலும் எல்லா வடிவிலும் புல் பூண்டு மூலிகை தோன்றத் தொடங்கின. ஆனால் அருமையான பார்லிச் செடி மட்டும் முளைக்கவேயில்லை.

பின்னர் கடலோரத்தில் நடந்து சென்ற வைனாமொயினன் மணலில் ஏழு தானிய விதைகளைக் கண்டான். ஓர் அணிலின் காலில் செய்த பைக்குள் அவற்றைப் போட்டு வைத்தான். அவன் அந்த விதைகளை ஒஸ்மோவின் வயலில் விதைக்கப் போனான்.

அப்போது மரத்தில் இருந்த ஒரு குருவி இவ்வாறு கீச்சிட்டது: "காட்டு மரங்களை வெட்டிச் சுட்டு நிலத்தைப் பதமாக்காவிட்டால் பார்லி வளரவேமாட்டாது."

நித்திய முதிய வைனாமொயினன் கூாிய கோடாி கொண்டு காட்டை வெட்டி அழித்தான். ஆனால் ஒரேயொரு மிலாறு மரத்தைமட்டும் வெட்டாது விட்டான். வானம் முழுவதையும் நிறைத்துக் கொண்டு பறந்த ஒரு பொிய கழுகு கீழே வந்து கேட்டது: "ஏனப்பா இந்த அழகான மரத்தை நீ வெட்டவில்லை?"

"பறவைகள் தங்கி ஓய்வெடுப்பதற்காக இந்த மரத்தை வெட்டாமல் விட்டேன். காற்றின் கழுகு அமர்வதற்காக இதனைத் தவிர்த்து விட்டேன்."

"நான் வந்து அமர ஒரு நல்ல வேலை செய்தாய்" என்று கூறிய காற்றின் கழுகு தீ மூட்டிற்று. வாடைக் காற்று வீழ்த்திய வனத்தை எாிக்கத் தொடங்கிற்று. வடகீழ்க் காற்று எாித்து முடித்துச் சாம்பல் ஆக்கிற்று.

அதன் பின் வைனாமொயினன் அணிலின் காலில் வைத்திருந்த தானிய விதைகளை எடுத்து நிலத்தில் தூவி இவ்வாறு சொன்னான்: "சகல வல்லவன் கைகளிலிருந்து செழித்து வளரும் இந்தக் காட்டு வௌியில் இந்த விதைகளை விதைக்கிறேன்.

"பூமாதே, மண்ணின் மங்கையே, நிலத்தின் தலைவியே, முளையை முளைத்து வரச்செய்! மண்ணின் துணையால் செழித்து வரச்செய்! என்றென்றும் மண்ணின் சக்தி பொய்க்கமாட்டாது. இயற்கை மகளின் துணை தவறாது."

"மண்ணே. உறக்கத்தில் இருந்து எழுந்தருளாயோ! இறைவனின் புல்லே, தூக்கத்தில் இருந்து கண் விழியாயோ! தண்டுகளைத் தரையில் தண்டுகளாய் வரச்செய்! காம்புகளை நிலத்தில் காம்புகளாய் நிறுத்து! எனது விதைப்பினில் ஆயிரம் கதிர்கள் அடர்ந்து எழுக! எனது உழைப்புக்கு ஊதியமாக நூறு நூறாய்க் கிளைகள் படர்க!"

"ஓ, மனுக்குல முதல்வனே, மாபெரும் தெய்வமே, விண்ணுலகில் இருக்கும் வியனுறு தந்தையே, முகில் கூட்டங்களை நிர்வாகம் செய்பவனே, மழை மேகங்களை ஆளும் அரசே, முகில்களின் மேல் ஒரு மன்றத்தை நிறுவி, அதில் ஒரு ஆலோசனைச் சபையை அமைப்பீர்! கிழக்கிலிருந்து ஒரு முகில் வரட்டும். வடமேற்கிருந்து மறு முகில் வரட்டும்! மேற்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் விரைவாய் வரட்டும்! முளைத்து உயிர்த்த முளைகளின்மீது வானத்தில் இருந்து மழையைப் பொழியும்! உயிர்த்து எழும்பும் பயிர்களின்மீது மேகத்திலிருந்து தேனைச் சொாியும்!"

அந்த மனுக்குல முதல்வன், மாபெரும் தெய்வம், விண்ணுலகில் இருக்கும் வியனுறு தந்தை முளைத்து வளர்ந்த தளைகளின்மீது வானத்தில் இருந்து மழையைப் பொழிந்தார். உயிர்த்து எழுந்த பயிர்களின்மீது மேகத்தில் இருந்து தேனைச் சொாிந்தார்.

நித்திய முதிய வைனாமொயினன் தானே உழுது தானே விதைத்த தனது உழைப்பின் உயர்வைக் காண வலமாய் வந்தான். பார்லிச் செடி மூன்று கணுக்களில் தண்டுகள் பிாித்து ஆறு திசைகளில் கிளைகளைப் பரப்பி எழுந்து நின்றது.

அப்போது வசந்தக் குயிலும் அங்கே வந்தது. வளர்ந்து நின்ற மிலாறுவைக் கண்டது. "ஏனப்பா இந்த மரத்தை நீ வெட்டவில்லை?" என்று அந்தக் குயில் கேட்டது.

முதிய வைனாமொயினன் சொன்னான். "நீ வந்து கூவ உனக்கு ஒரு மரம் தேவை. இதற்காகத்தான் இந்த மரத்தை வெட்டாமல் விட்டேன். இப்பொழுது கூவு குயிலே, கூவு! வெண்பொன் நெஞ்சே, வனப்பாய்ப் பாடு! ஈயத்து நெஞ்சே, இனிதாய்ப் பாடு! காலையில் பாடு! மாலையில் பாடு! நண்பகல் நேரமும் ஒருமுறை பாடு! ஏனென்றால் இந்தக் கரையெல்லாம் களிப்படைய வேண்டும்! காட்டுநிலம் செழிப்படைய வேண்டும்! வயல் வௌிகள் வளமடைய வேண்டும்!"
     அட்டவணை    மேலே
3. பாடற் போட்டி

நித்திய முதிய வைனாமொயினன் தனது மந்திரப் பாடல்களைப் பாடிக்கொண்டு வைனோ என்னும் வனப்புல் வௌிகளில் வாழ்ந்து வந்தான். ஆதிகாலத்து அாிய கதைகளையும் முற்காலத்தின் மூலக் கதைகளையும் அவன் இரவு பகலாகப் பாடி வந்தான். இந்த அறிவுக் கதைகள் பூமியில்[2a] எல்லா வீரர்களும் விளங்கிக் கொள்ளக்கூடிய கதைகள் அல்ல.

வைனாமொயினனின் ஞானப் பாடல்களின் திறனும் புகழும் வௌியிடங்களில் விரைந்து பரந்தன. இந்தச் செய்தி தெற்கிலே கேட்டது. வடக்கேயும் சென்றது; வடக்கிலும் கேட்டது.

லாப்புலாந்து என்ற இடத்திலே மெலிந்த இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பெயர் யொவுகாஹைனன். அவன் தன் தந்தையிடம் கற்ற பாடல்களினால் தானே ஒரு சிறந்த அறிஞன் என்று எண்ணியிருந்தான். ஆனால் அவன் ஒரு முறை வைனோ என்னும் வனப்புல் வௌிகளுக்குச் சென்ற சமயம், அங்கே அற்புதமான சொற்கள் அமைந்த வைனாமொயினனின் அருமையான மந்திரப் பாடல்கள் பக்குவமாகப் பாடப்படுவதைக் கண்டான். அவை தனக்குத் தொிந்த பாடல்களிலும் பார்க்கச் சிறந்தவையாகப் பேசப்படுவதை உணர்ந்தான்.

இதனால் பொறாமை கொண்ட யொவுகாஹைனன், தான் மீண்டும் வைனோவின் வாழ்விடங்களுக்கு வந்து வைனோவுடன் பாடல்களில் போட்டி இடுவதாக அறிவித்துவிட்டுத் தனது வீட்டுக்குப் போனான்.

இதை அறிந்த அவனுடைய பெற்றோர் அவனைத் தடுத்தார்கள். "மகனே, மீண்டும் அங்கே போகாதே! வைனாமொயினன் உன்னைச் சபித்துப் பாடுவான். அவனது சாபப் பாடல்களால் உனது கையும் வாயும் பனித் திரளில் புதைந்து போகும்."

பெற்றோாின் சொற்களுக்கு அவன் செவி சாய்க்கவில்லை. அவன் சொன்னான், "அப்பாவின் அறிவு நல்லது. அம்மாவின் அறிவு அதைவிட நல்லது. உங்கள் இருவாிலும் பார்க்க எனது அறிவு இன்னும் நல்லது. நான் வைனாமொயினனை எதிர்த்துப் பாடுவேன். எனது சாபப் பாடல்களினால் அவனுடைய காலணிகள் கல்லாகிப் போகும். இடுப்புத் துணி மரக் கட்டையாய் மாறும். நெஞ்சம் கல்லாகிக் கனக்கும். தோள்கள் பாறையாய் மாறும். கையுறையும் தொப்பியும் கல்லாகிப் போகும்."

பெற்றோாின் சொல் கேளாத அவன், வாயிலும் கால்களிலும் தீப்பொறி பறந்த நலமடித்த குதிரையை அவிழ்த்தான். தங்கத்தாலான சறுக்கு வண்டியில் பூட்டினான். ஆசனத்தில் அமர்ந்து அடித்தான் சவுக்கால். தொடங்கிய பயணம் தொடர்ந்து நடந்தது. ஒரு நாள் சென்று, மறு நாள் சென்று, மூன்றாம் நாளில் வைனோ என்னும் வனப்புல் வௌிகளை அடைந்தான்.

அங்கே நித்திய முதிய வைனாமொயினன் என்னும் மந்திரக் கலைஞன் அமைதியாகத் தனது வழியே வந்துகொண்டிருந்தான்.

அதே பாதையில் வேகமாக வந்த யொவுகாஹைனன், வைனாமொயினனின் வண்டியில் மோதினான். ஏர்க்கால்கள் ஒடிந்தன. கடிவாள வார்கள் சிக்குண்டன. குதிரைகளின் கழுத்துவார் வட்டங்கள் முட்டின. இழுவை வளையங்கள் இடித்துக் கொண்டன.

அங்கே இருவரும் எதிரெதிர் நின்றனர். ஏர்க்கால்களிலே வெயர்வை வழிந்தது. இழுவை வளையத்தில் நீராவி பறந்தது.

"முட்டாள் மாதிாி முன்னே வந்து முட்டிய நீ எந்த இனத்தவன்? எனது வண்டியின் இழுவை வட்டத்தை உடைத்தாய். ஏர்க்காலை முறித்தாய். வண்டியையே நொருக்கிப் போட்டாயே" என்று கேட்டான் வைனாமொயினன்.

"நான்தான் இளைஞன் யொவுகாஹைனன். நீ எந்த இனத்தவன்? எந்தக் கீழ் வகுப்பைச் சேர்ந்தவன் நீ?"

நித்திய முதிய வைனாமொயினன் தன்னைப்பற்றித் தானே சொல்லி, "சாி, சாி, நீ இளைஞன் யொவுகாஹைனன் என்றால் வழியைவிட்டு விலகி நில். ஏனென்றால் வயதில் நீ என்னிலும் பார்க்க இளையவன்."

"இளமையும் முதுமையும் அற்ப விஷயங்கள். இந்த ஞாலத்தில் ஞானத்தில் சிறந்தவன் யார் என்பதே கேள்வி. நீதான் புகழான பாடகன் வைனாமொயினன் என்றால், எங்களில் அறிவிலும் ஆற்றலிலும் யார் சிறந்தவர் என்று பார்க்கலாம்."

"அறிவுள்ளவனாகவோ ஆற்றலுள்ளவனாகவோ நான் எதைச் சொல்வது? இந்த வனப்புல் வௌிகளில், இந்தக் காட்டு வழிகளில் வீட்டுக் குயிலிசையைக் கேட்டுக் கொண்டே வாழ்ந்து வருகிறேன். அது சாி, மற்றவர்களை எல்லாம் மிஞ்சக் கூடியதாக நீ பெற்றிருக்கும் அறிவுதான் என்ன?"

இளைஞன் யொவுகாஹைனன் சொன்னான். "எனக்குச் சில விஷயங்கள் தொியும். அவற்றின் ஆழமும் தொியும். அர்த்தமும் தொியும். புகைத்துளை வீட்டின் முகட்டில் இருக்கும். கணப்பின் அருகில் கனலும் இருக்கும்."

"கடல்நாய் ஒன்று நன்றாய் இருந்தது. அந்த நீர்நாய் அலையில் உருண்டு புரண்டது. வஞ்சிர மீனையும் வெண்மீனையும் உண்டு வந்தது. மென்கடல் வயலில் வெண்மீன் வாழ்ந்தது. விாிந்த நீர்ப் பரப்பில் வஞ்சிரம் வாழ்ந்தது. கோலாச்சி மீன் பனிப் புகாாிலும் சேற்றுமீன் குளிாிலும் முட்டைகள் இட்டன. கூச்சமும் கூனிய கழுத்தும் கொண்ட ஏாி மீனினம் இலையுதிர் காலத்தில் ஆழத்தில் நீந்தும். கோடையில் உலர்ந்த தரையினில் சினைக்கும். நீர்க்கரையோரம் அசைந்து திாியும்."

"இதுவும் உனக்குப் போதாது என்றால், எனது பேரறிவில் இருந்து இன்னும் கேள்! வடநாட்டு வயல்களைக் கலைமான் உழுதது. தெற்கிலே பெண்குதிரையும் லாப்பிலே காட்டெருதும் உழுதன. பிஸா மலையின் மரங்களும் அசுரமலையின் ஊசியிலை மரங்களும் உயரமானவை என்பதும் அறிவேன்."

"இந்த வானத்து வளைவின் கீழ் மூன்று வலிய நீர்வீழ்ச்சிகளும் மூன்று பொிய ஏாிகளும் மூன்று உயர்ந்த மலைகளும் இருக்கின்றன. ஹமே என்னும் இடத்தில் ஹல்லா நீர்ச்சுழி. கரேலியாவில் காத்ரா நீர்வீழ்ச்சி. ஆனால் இவை எதுவும் இமாத்ராவின் வுவோக்ஸி நீர்வீழ்ச்சிக்கு நிகரேயில்லை."

முதிய வைனாமையினன் சிாித்தான். "உனது அறிவு குழந்தையின் அறிவு. பெண்ணின் பேதமை. தாடியுள்ள வீரனுக்குத் தகுந்ததேயில்லை. இப்போது ஆதியின் ஆழத்தின் அர்த்தத்தைச் சொல்வாய். தனித்துவப் பொருளின் தத்துவம் சொல்வாய்!"

யொவுகாஹைனன் சொன்னான். "சின்னக்[3] குருவியின் பிறப்புத் தொியும். சீறும் பாம்பை நானும் அறிவேன். நன்னீர் மீனையும் நன்கு அறிவேன். இரும்பு உடையும். கருஞ்சேறு கசக்கும். கொதிநீர் வருத்தும். சூடான நெருப்புக் கேடாக முடியும். தண்ணீர்தான் முன்னாளில் பூச்சு மருந்து. நீர்வீழ்ச்சி நுரைதான் மந்திர மருந்து. கடவுளே கண்கண்ட மந்திரவாதி. கர்த்தரே காக்கும் வைத்தியராவார்."

"மலையின் முடியில் தண்ணீர் பிறந்தது. சொர்க்கத்தின் மடியில் நெருப்புப் பிறந்தது. துருவிலிருந்து இரும்பு வந்தது. குன்றின் உச்சி செப்பைத் தந்தது."

"சேற்று நிலமே பழைய பூமி. அலாியே மரங்களில் ஆதி மரமாம். மரத்தின் அடியே முதல் வசிப்பிடமாம். கலயத்தை முன்னாளில் கல்லினால் செய்தனர்."

வைனாமொயினன் இடைமறித்துக் கேட்டான். "நினைவில் இன்னமும் ஏதாவது இருக்கிறதா? அல்லது பிதற்றல் எல்லாம் பேசி முடிந்ததா?"

யொவுகாஹைனன் தொடர்ந்து சொன்னான். "அந்த நாள் ஞாபகம் இன்னும் கொஞ்சம் இருக்கறதப்பா. நான் வயல்களை உழுத நாட்கள். நான் கடலைக் குடைந்த நாட்கள். மீன்களுக்கு மீன்வளைகள் பறித்த நாட்கள். நீாின் ஆழத்தை ஆழமாய் அகழ்ந்த நாட்கள். ஏாிகள் குளங்களை அமைத்த நாட்கள். குன்றுகளைக் கூட்டிக் குவித்து மாமலைகளைப் படைத்த நாட்கள்."

"இந்த உலகத்தை படைத்தபோது, காற்றை ஊதி உயிர்ப்பித்தபோது, தூண்களை நிறுத்தி வானத்தை வளைத்துக் கட்டியபோது, சுவர்க்கத்தின் வளைவுகளை நிறுவியபோது, சந்திரனை வலம்வர வைத்தபோது, சூாியன் உலாவர உதவியபோது, சப்த நட்சத்திரங்களுக்கு விண்ணில் ஓர் இடம் அமைத்தபோது, வானில் விண்மீன்களை வாாி விதைத்தபோது ஆறு நாயகர்கள் இருந்தார்கள். நான் ஏழாவதானேன்."

"நீ சொல்வது அனைத்தும் பொய்யே" என்றான் வைனாமொயினன். "இவ்வளவும் நிகழ்ந்தபோது உன்னை யாரும் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை."

யொவுகாஹைனன் சொன்னான், "எனது அறிவில் கூர்மை இல்லையெனக் கண்டால், நான் எனது வாளின் கூர்மையை நாடுவதுண்டு. ஓ, பொிய வாயுள்ள பாடகனே, வா! இப்போது எங்கள் வாள்களை [4]அளப்போம். வாள்களின் வீச்சில் எங்கள் வீரத்தை மதிப்போம்."

"நான் உனது புத்திக்கும் அஞ்சேன்; கத்திக்கும் அஞ்சேன். ஆனால் நான் உன்னுடன் வாட்போர் புாிய விரும்பவில்லை. ஏனென்றால் நீ ஒரு நோஞ்சான்."

அப்போது யொவுகாஹைனன் கோபம் கொண்டான். வாயைக் கோணித் தலையைத் திருப்பிக் கறுத்தத் தாடியைத் திருகி முறுக்கி இவ்விதம் சொன்னான்: "வாட்போருக்கு வராதவனைச் சபித்துப் பாடிப் பன்றியாக்குவேன். எருக் குவியலில் தூக்கியெறிவேன். மாட்டுத் தொழுவின் மூலையில் போடுவேன்."

இந்த இழிவான வார்த்தைகளைக் கேட்ட வைனாமொயினன் சினம் கொண்டான். அதனால் அவனே மந்திரப் பாடல்களைப் பாடத் தொடங்கினான். அந்தப் பாடல்கள் பிள்ளைகளின் பாடல்களோ பெண்களின் கேலியோ அல்ல. அவை தாடி வளர்த்த வீராின் தரமான பாடல்கள்.

வைனாமொயினனின் பாடல்களால் ஏாிகள் பெருக்கெடுத்தன. அகிலம் அசைந்தது. செப்பு மலைகளின் சிரங்கள் நடுங்கின. பாாிய பாறைகள் பாதியாய்ப் பிளந்தன. வெற்புகள் வெடித்தன. சிகரங்கள் தெறித்தன. தெறித்தவை சிதறிக் கரையில் வீழ்ந்தன.

வைனாமொயினன் இளைஞன் யொவுகாஹைனனைச் சபித்துப் பாடினான். அதனால் யொவுகாஹைனனின் சறுக்கு வண்டியின் [5]ஏர்க்காலில் நாற்றுச் செடிகள் தோன்றின. குதிரையின் இழுவைவார் வட்டமும் இழுவைப் பட்டியும் அலாி மரங்களாயின. பொன்னலங்காரச் சறுக்கு வண்டி மரக்கட்டையாய் மாறி ஏாியில் வீழ்ந்தது. மணிகள் கட்டிய சாட்டை நாணற்புல் ஆனது. வெண்சுட்டி முகத்துக் குதிரை நீர்வீழ்ச்சி அருகில் பாறையாய் நின்றது.

அவனுடைய பொற்கைப்பிடி வாள் வானத்தில் ஏறி மின்னலாய் நின்றது. பலநிறத்துக் குறுக்குவில் வானவில் ஆகி விண்ணில் நின்றது. சிறகுகள் கட்டிய அம்புகள் எல்லாம் பருந்துகள் ஆகி விரைந்து பறந்தன. கோணல் வாயுள்ள நாய் கல்லாய் மாறி நிலத்தில் நின்றது.

அவனுடைய தொப்பி மேலே எழுந்து முகிலாய் மிதந்தது. கையில் இருந்த கையுறைகள் ஆம்பல் மலர்களாய் நீாில் நீந்தின. நீலமேலாடை நீர்மேகம் ஆயிற்று. இடுப்புப் பட்டி சிதறி விண்மீன்கள் ஆகின. அவன் இடுப்பு வரைக்கும் சேற்றில் புகுந்து பின்னர் கக்கம் வரைக்கும் புதைந்து போனான்.

யொவுகாஹைனன் திட்டமிட்டு வந்த பாடல் போட்டியில் தான் மட்டமாகிவிட்டதை இப்போது உணாந்தான். கல்லினால் செய்தன போன்ற காலணிகளில் கிடந்த கால்களை அசைக்க முடியவில்லை. வாதையும் வந்தது. வேதனை தொடர்ந்தது. அவன் சொன்னான், "நித்தியக் கவிஞனே, நீ ஒரு ஞானியப்பா! உனது மந்திரச் சொற்களைத் திரும்பப் பெற்று எனக்கு இந்த வேதனையிலிருந்து விடுதலை தா! உனக்கு நான் நல்ல வெகுமதிகள் தருவேன்."

வைனாமொயினன் தனது பாடலை நிறுத்தி இப்படிக் கேட்டான்: "அப்படியா? எனக்கு நீ என்ன வெகுமதி தருவாய்?"

யொவுகாஹைனன் சொன்னான், "என்னிடம் இரண்டு குறுக்குவில்கள் இருக்கின்றன. ஒன்று விரைந்து பாயும். மற்றது குறி தப்பாமல் தாக்கும். இவற்றில் ஒன்றை நீ பெறலாம்!"

"என்னிடம் ஏராளமான வில்கள் சுவாில் செருகியிருக்கின்றன. அவை ஆள் இல்லாமலே அடவியில் திாியும். வீரனில்லாமலே வனத்தினில் தாக்கும்" என்று சொல்லி மேலும் சபித்துப் பாடினான் வைனாமொயினன்.

"என்னிடம் இரண்டு தோணிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை நீ பெறலாம்" என்றான் யொவுகாஹைனனன். அதற்கும் வைனாமொயினன் சம்மதிக்கவில்லை.

"என்னிடம் இரண்டு குதிரைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை நீ பெறலாம்" என்றான் யொவுகாஹைனன். அதற்கும் வைனாமொயினன் சம்மதிக்கவில்லை. அவன் சொன்னான், "எனது இலாயம் நிறையக் குதிரைகள் நிற்கின்றன. அவற்றுக்குத் தௌிந்த நீரோடை போன்ற திரண்ட முதுகுகள். கொழுப்புக் குவிந்து குளம்போல் ஆன பின்புறத் தசைகள்."

"உனக்கு நான் தங்கத்தில் செய்த தொப்பியைத் தருவேன். தொப்பியில் வெள்ளியை அள்ளியும் தருவேன்."

வைனாமொயினன் சம்மதிக்கவில்லை.

"உனக்கு எனது வயலெல்லாம் தருவேன். கூலக்கதிாின் குவியலும் தருவேன்."

வைனாமொயினன் சம்மதிக்கவில்லை.

யொவுகாஹைனன் தனது ஆற்றல் அனைத்தும் அழிந்த அவல நிலையில் இருந்தான். அவனுடைய தாடை சேற்றினில் தாழ்ந்தது. சேற்றுப் பாசி வாய்க்குள் புகுந்தது. மரக்கட்டையில் பற்கள் கிட்டியிருந்தன. "ஓ, ஞானியே, வைனாமொயினனே, எனது கால்களின் கீழ் ஒரு நீரோடை வந்தது. கண்களில் புகுந்த மண் எாிச்சலைத் தந்தது. உனது மந்திரப் பாடலை மீளப் பாடு. மந்திரக் கட்டை உடைத்துப் பாடு. இளைத்த என் ஆவியை மீட்கப் பாடு. உனக்கு என் சகோதாி ஐனோவைத் தருவேன். அவள் உனது வாழ்விடத்தை சுத்தமாய் வைப்பாள். நிலத்தைப் பெருக்கி நலமாய் வைப்பாள். மரப்பாத்திரங்களைக் கழுவி வைப்பாள். மேலாடைகளைத் தோய்த்துத் தருவாள். பொன்னாடைகளைப் புனைந்து தருவாள். தேன் பலகாரம் சுட்டுத் தருவாள்" என்று சொன்னான் யொவுகாஹைனன்.

இதைக் கேட்ட வைனாமொயினன் மகிழ்ச்சி அடைந்தான். ஐனோவைப் பெற்றால் அவள் தன்னைத் தனது முதுமைக் காலத்தில் கவனிப்பாள் என்று எண்ணினான். எனவே களிப்பென்னும் கல்லில் அமர்ந்து ஒரு பாடலைப் பாடினான்; இரண்டாம் பாடலைப் பாடினான்; மூன்றாவதையும் முடிவில் பாடினான். அவ்விதம் தூய நற்சொற்களைத் திரும்பப் பெற்றான். மந்திரப் பாடலை மீளவும் பெற்றான்.

இளைஞன் யொவுகாஹைனன் விடுதலை பெற்றான். சேற்றிலிருந்து தாடை வந்தது. தீய இடத்திலிருந்து தாடி வந்தது. நீர்வீழ்ச்சிப் பாறையிலிருந்து குதிரை வந்தது. ஏாியின் மரக்கட்டையிலிருந்து சறுக்குவண்டி வந்தது. நீர்க் கரையோர நாணலிலிருந்து சாட்டையும் வந்தது.

யொவுகாஹைனன் வண்டியில் ஏறினான். ஆழ்ந்த துயருடன் தாழ்ந்த தலையுடன் வீட்டை அடைந்தான். பெரும் முழக்கத்தோடு சென்ற அவன் களஞ்சியக் கதவில் வண்டியை மோதி, வாயில் படியினில் ஏர்க்காலை உடைத்தான்.

இதைக் கண்ட அவனுடைய அன்னை திடுக்கிட்டாள். தந்தை சொன்னார், "விசித்திரமாக வீட்டுக்கு வந்தாய். முட்டாளைப்போல வண்டியை மோதினாய். என்ன நடந்தது?"

அப்போது அவன் கவலைப்பட்டான்; கண்ணீர்விட்டான். ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய், தொப்பியைப் பிடித்து ஒருபுறம் திருப்பினான். உதடுகள் உலர்ந்தன. மூக்கு வளைந்து சோர்வாய்த் தொிந்தது. "தாயே, நான் ஒரு தவறு செய்தேன். தங்கை ஐனோவை வைனாமொயினனுக்கு தாரமாக்குவதாக வாக்களித்தேன். இதற்காக நான் வாழ்நாள் முழுவதும் அழுவேன்" என்றான் அவன்.

தாய் கைகளைத் தட்டி இவ்வாறு சொன்னாள்: "அழாதே மகனே, அழாதே! அழுவதற்கு இதில் என்ன இருக்கிறது? மகளுக்குக் கணவனாயும் எங்களுக்கு இனத்தவனாயும் ஒரு உயர்ந்தோன் வர வேண்டும் என்று நானே வெகு காலமாய் விருப்பப்பட்டேன்."

இதனை அறிந்த ஐனோஅழுதாள்.

"ஐனோ, நீ எதற்காக அழுகிறாய்?" என்று தாய் கேட்டாள். "ஓர் உயர்ந்த மனிதனை நீ மணம் முடிப்பாய்! மதிப்பான ஒரு வீட்டை நீ அடைவாய்! யன்னலோரத்து வாங்கில் அமர்ந்து பேச்செல்லாம் பேசுவாய்!"

"அம்மா, இந்த அழகான கூந்தலை இந்த இளம் வயதிலேயே மறைத்து வைக்க வேண்டி வருமே என்று அழுகிறேன். இந்த வயதிலேயே இனிய சூாியனையும் வண்ண நிலவையும் விட்டுவிட்டுப் போக நேருமே. அண்ணாவின் தச்சு வேலைத்தலத்தையும் அப்பாவின் யன்னலையும் இழக்க நேருமே. இவைக்காக அழுகிறேன்."

"உனது அழுகைக்கு அர்த்தமேயில்லை. நீ அழுவதற்கு எதுவுமேயில்லை. முட்டாள்த்தனமான எண்ணங்களைக் கைவிடு! அண்ணாவின் வேலைத் தலத்திலும் அப்பாவின் யன்னலிலும் மட்டுமல்லாமல் உலகின் எல்லா இடங்களிலும் சூாியனையும் சந்திரனையும் நீ பார்க்கலாம். அத்துடன் அப்பாவின் தோட்டத்தில் மட்டுமல்லாமல் நீ செல்லும் இடமெல்லாம் 'ஸ்ரோபொி'ப் பழங்களையும் பொறுக்கியெடுக்கலாம்."
     அட்டவணை    மேலே
4. ஐனோவின் முடிவு

யொவுகாஹைனனின் தங்கையான அழகிய இளம் பெண் ஐனோ ஒரு நாள் காட்டுக்குப் போனாள். குளிக்கும் போது விசிறிக் கொள்ளும் இலைக் குச்சிகளை அங்கே ஒடித்தாள். தந்தைக்கு ஒன்று, தாய்க்கு ஒன்று, செந்நிறக் கன்னத்து அண்ணனுக்கும் ஒன்றை ஒடித்துச் சேர்த்தாள்.

அவ்வழியே வந்த வைனாமொயினன் அவளைக் கண்டான். "பருவத்துப் பெண்ணே, கழுத்திலே மணிமாலையையும் மார்பிலே சிலுவையையும் இனிமேல் எனக்காக அணிவாய்! கூந்தலைக் கூட்டிப் பட்டினால் கட்டு! எனக்காகக் கட்டு! வேறு யாருக்காகவும் அல்ல!" என்று அவன் சொன்னான்.

"நான் மார்பிலே சிலுவையை அணிவதும் கூந்தலைக் கூட்டிப் பட்டினால் கட்டுவதும் உனக்காக அல்ல. வேறு யாருக்காகவும் அல்ல. எனக்கு வௌிநாட்டுத் துணியிலும் கோதுமை ரொட்டியிலும் அக்கறையில்லை. அன்பான அப்பா அம்மாவுக்கு அருகில் இருந்து கைத்தறி உடைகளை அணிந்து ரொட்டித் துகள்களை உண்டு வாழ்வேன். அது எனக்குப் போதும்" என்று சொன்ன ஐனோ மோதிரங்களையும் மணிகளையும் கூந்தல் பட்டியையும் கழற்றி நிலத்தில் எறிந்துவிட்டு அழுதுகொண்டு வீட்டுக்கு ஓடிப் போனாள்.

யன்னல் அருகில் அப்பா கோடாிப் பிடியைச் செதுக்கிக் கொண்டிருந்தார். வாசலில் அண்ணன் சறுக்கு வண்டியின் ஏர்க்காலைச் சீவிக்கொண்டிருந்தான். கூடத்தில் சகோதாி தங்க இழையில் ஒட்டியாணம் பின்னிக்கொண்டிருந்தாள். அவர்கள், "என்ன நடந்தது, ஐனோ? ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார்கள்.

"நான் எனது கூந்தல் பட்டியையும் பொன் வெள்ளி அணிகளையும் இழந்து விட்டேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள். உள்ளே கதவருகில் அம்மா பாலிலிருந்து ஆடை எடுத்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு ஐனோ உண்மையைச் சொன்னாள். "அன்புத் தாயே, நான் அழுவதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன" என்று ஆரம்பித்துக் காட்டில் நிகழ்ந்தவற்றை அழுதழுது சொல்லி முடித்தாள்.

நாடெல்லாம் மந்திரப் பாடல்களால் மகிமை பெற்றவன் முதிய வைனாமொயினன். அவனை மணம் செய்வதால் பெருமைப்படாமல் ஐனோ ஏன் அழுகிறாள் என்று தாய்க்குப் புாியவில்லை. அவள் அன்புடன் சொன்னாள். "அழாதே! என் அருமை மகளே, ஒரு வருடத்துக்கு வெண்ணெய் சாப்பிடு! அடுத்த வருடம் பன்றியிறைச்சியைச் சாப்பிடு! மூன்றாம் வருடம் பாலாடைப் பணியாரம் சாப்பிடு! நீ கொழுத்துச் செழித்துப் பேரழகியாய் வருவாய்!"

தாய் மேலும் சொன்னாள். "மலையிலே ஒரு மண்டபம் இருக்கிறது. அங்கே ஒரு சிறப்பான அறை இருக்கும். அதனுள் ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கிய பல பெட்டிகள் இருக்கும். அவற்றுள் சிறப்பான பெட்டியின் பலநிற மூடியைத் திறந்துபார்! உள்ளே ஆறு தங்க ஒட்டியாணங்களும் ஏழு நீல உடைகளும் இருக்கும். அவை சந்திரன் மகளாலும் சூாியன் மகளாலும் செய்யப்பட்டவை."

தாய் தொடர்ந்தாள். "நான் கன்னியாய் இருந்த காலத்தில் ஒரு நாள் சிறுபழம் பொறுக்கக் காட்டுக்குப் போனேன். அங்கே துணி நெய்வதுபோன்ற விசித்திரமான சத்தம் கேட்டது. நான் பசுமையான சோலையூடாகச் சென்று பார்த்தேன். அங்கே சந்திரன் மகளும் சூாியன் மகளும் பொன்னிலும் வெள்ளியிலும் ஆடைகள் நெய்து கொண்டிருந்தனர்". நான் தைாியமாக நெருங்கிச் சென்று, "இந்த ஏழைச் சிறுமி வெறும் கையுடன் வந்திருக்கிறேன். சந்திரன் மகளே, உனது பொன்னை எனக்குத் தருவாயா? சூாியன் மகளே, உனது வெள்ளியை எனக்குத் தருவாயா?" என்று கெஞ்சிக் கேட்டேன்.

"அந்த நல்ல பெண்கள் எனக்குப் பொன்னையும் வெள்ளியையும் தந்தார்கள். நான் அவற்றை நெற்றியிலும் மார்பிலும் அணிந்து பார்த்தேன். மகிழ்ச்சியில் நான் ஒரு மலர் போலத் துள்ளிக் குதித்து, அப்பாவின் தோட்டத்துக்கு ஓடி வந்தேன். அவற்றை மூன்று நாட்கள் அணிந்து பார்த்த பின்னர் மலையிலே இருக்கும் மண்டபத்துக் கொண்டு போய் ஒரு பெட்டிக்குள் பூட்டி வைத்தேன். அதன்பின் நான் அவற்றைப் பார்த்ததேயில்லை. இன்றுவரை அவை அங்கேயே இருக்கின்றன.

"இப்பொழுது நீ பட்டுத் துணியை நெற்றியில் கட்டி, கம்பளி உடையை உடலில் அணிந்து, பட்டிலே பட்டியும் காலுறையும் நல்ல காலணிகளும் அணிவாய்! அத்துடன் தங்க மோதிரங்களையும் வளையல்களையும் அணிந்து கூந்தலைப் பின்னிப் பட்டினால் கட்டு!

"அப்படியே எங்கள் இனத்துக்கோர் இனியவளாய் எங்கள் குலத்துக்கொரு குலமகளாய் மலையிலிருந்து இறங்கி மனைக்கு வா!"

அவளுடைய தாயார் இப்படியெல்லாம் சொன்ன போதிலும், ஐனோ அவற்றைக் கேட்கவுமில்லை; அதன்படி நடக்கவுமில்லை. அவள் குனிந்த தலையுடன் தோட்டமெல்லாம் சுற்றித் திாிந்து இப்படி முணுமுணுத்தாள். "மகிழ்ச்சி நிறைந்த மனம் எப்படி இருக்கும்? நீர்த் தொட்டியில் துள்ளும் நீரலைபோல இருக்கும்! நீளமான வாலுள்ள வாத்தைப் போல நொந்துபோன நெஞ்சம் எப்படி இருக்கும்? பனிக்கட்டியின் கீழ் அகப்பட்ட பனிமழைபோல இருக்கும்; கிணற்றுக்குள் அகப்பட்ட தண்ணீரைப்போலவும் இருக்கும். எனது குழந்தை மனம், வாடிய புல்லைப்போல அலை மோதுகிறது. எனது மனம் புதாிலே சிக்குண்டு பற்றையிலே சிதைபட்டு புல்வௌியில் அலைகின்றது. நான் பிறவாதிருந்தால் என்ன நடந்திருக்கும்? நான் பிறந்த ஆறாம் இரவிலோ எட்டாம் இரவிலோ இறந்திருந்தால், ஒரு சாண் துணியும் சிறு துண்டு நிலமும்தாம் தேவைப்பட்டிருக்கும். அம்மா கொஞ்சம் அழுதிருப்பாள். அதற்கும் குறைவாகத்தான் அப்பா அழுதிருப்பார். அண்ணன் அழுதிருக்கவேமாட்டான்."

அவள் மூன்று நாட்கள் அழுது திாிந்த பின்னர் அன்னை மீண்டும் கேட்டாள், "எதற்காக அழுகிறாய், ஐனோ?"

"ஒரு வயோதிபனுக்கு என்னைக் கொடுக்க நீ சம்மதித்தாய். அதற்கு அழுகிறேன். நாளெல்லாம் அடுப்புப் புகட்டில் குந்தியிருக்கும் முதுகிழவனுக்கு என்னைக் கொடுக்க முற்பட்டாய். அதற்கு அழுகிறேன். அதிலும் பார்க்க, 'கடலிலே மூழ்கி மீன்களின் சகோதாியாகப் போ' என்று நீ சொல்லியிருக்கலாமே!"

அதன்பின், ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஐனோ மலையிலே ஏறி மண்டபத்துக்குச் சென்றாள். பலநிற மூடியுடன் இருந்த சிறந்த பெட்டியைத் திறந்தாள். அதனுள் பொன் வெள்ளியுடன் ஏழு நீல நிற ஆடைகளும் இருந்தன. அவள் ஆடைகளை அணிந்து கொண்டாள். தங்கப் பட்டியைப் புருவத்தில் வைத்தாள். வெள்ளியைக் கூந்தலில் வைத்தாள். நீலப் பட்டைக் கண்களில் கட்டிச் சிவப்பு இழையைத் தலையில் சூடினாள்.

மண்டபத்தைவிட்டு வௌியே வந்த ஐனோ, கால் போன போக்கில் வயல்களிலும் சேற்று நிலத்திலும் காட்டு வௌியிலும் நடந்து திாிந்தாள். நடந்து திாிகையில் இப்படிச் சொன்னாள்: "எனது நெஞ்சில் துன்பம் சூழ்ந்தது. நான் இந்த உலகத்தைவிட்டு மரண உலகம் செல்லும் நேரம் வந்துவிட்டது. நான் கடலிலே வீழ்ந்து கருஞ்சேற்றில் அமிழ்ந்து இறந்தாலும் எனக்காக அழ எவருமே இல்லை."

அவள் ஒரு நாள் நடந்தாள்; இரு நாள் நடந்தாள்; மூன்றாம் நாளில் புல்பூண்டு நிறைந்த ஒரு கடற்கரையை அடைந்தாள். அந்த வளைகுடா எல்லையில் அவள் இருட்டினில் அழுதாள். இரவெல்லாம் அழுதாள்.

பொழுது விடிந்தது. வளைகுடாவில் இருந்த அவள் கடலில் மூன்று பெண்களைக் கண்டாள். ஐனோ தன்னை நான்காவதாக நினைத்தாள். ஒரு மெல்லிய நாணல் ஐந்தென நின்றது.

துன்பத்தில் மூழ்கியிருந்த ஐனோ தனது ஆடைகளையும் அணிகளையும் காலுறைகளையும் காலணிகளையும் கழற்றிச் செடியிலும் கொடியிலும் கிளையிலும் புல்லிலும் போட்டாள்.

துரத்தில் கடற்பாறை ஒன்று பொன்போல மிளிர்ந்தது. ஐனோ நீந்தி அதனை அடைய முயன்றாள். கடைசியில் பாறையை அடைந்து அதன்மேல் ஏறி அமர்ந்தாள். பாறை அவளுடன் கடலில் தாழ்ந்தது. அவளும் அதனுடன் நீாில் மூழ்கினள். மூழ்கும் போது இவ்வாறு சொன்னாள்: "நான் கடலில் குளிக்கப் போனேன். நீாினில் நீந்த முற்பட்டேன். அங்கே நான் ஒரு கோழியாய் வீழ்ந்தேன். அங்கே நான் ஒரு பறவையாய் இறந்தேன். எனது அன்புள்ள அப்பா இந்தக் கடலில் இனி என்றுமே மீன் பிடிக்கமாட்டார். எனது அருமை அம்மா ரொட்டிக்கு மாப் பிசைய இங்கே தண்ணீர் அள்ள மாட்டாள். எனது அண்ணன் தனது குதிரைக்கு இங்கே நீர் கொடுக்க மாட்டான். எனது சகோதாி இங்கே தனது முகத்தைக் கழுவாள்."

ஐனோவின் மரணம் இவ்வாறு நிகழ்ந்தது. இந்த மரணச் செய்தியைக் கொண்டு செல்ல ஒரு சேவகன் தேவையே. கரடி வந்து செய்தியைக் கொண்டு போகுமென்றால், அது பசுக் கூட்டத்தில் தொலைந்து போயிற்றாம். ஓநாய் வந்து செய்தியைக் கொண்டு போகுமென்றால், அது செம்மறிக் கூட்டத்தில் தொலைந்து போயிற்றாம். நாி வந்து செய்தியைக் கொண்டு போகுமென்றால், அது வாத்துக் கூட்டத்தில் தொலைந்து போயிற்றாம். கடைசியில் சிலுவை போன்ற வாயும் நீண்ட காதுகளும் வளைந்த கால்களையும் கொண்ட முயல்தான் செய்தியைக் கொண்டு போயிற்று.

ஐனோவின் வீட்டில் சவுனா என்னும் நீராவிக் குளியலறையில் பெண்கள் குழுமியிருந்தனர். அவர்கள் உடல்களை இலைக் கட்டுகளினால் விசிறிக்கொண்டு நீராவிக் குளியலில் இருந்தனர். சின்ன முயல் வாசலில் வந்து பதுங்கியதைக் கண்டதும் அவர்கள், "வட்டவிழி முயலே, வா! எசமானருக்கு நீ பொாியலாவதற்கு வந்தாயா அல்லது அவியலாவதற்கு வந்தாயா?" என்று கேட்டனர்.

"உங்களுக்கு உணவாக மாற இங்கே பிசாசுதான் வரும். அழகிய பெண் ஐனோ கடலில் மூழ்கி இறந்துவிட்டாள். அவள் மீன்களின் சகோதாியாகப் போய்விட்டாள்" என்றது முயல்.

இதை அறிந்த ஐனோவின் அன்னை கதறினாள். "அதிர்ஷ்டம் இல்லாத் தாய்மாரே, இனி வேண்டாம்! நான் செய்ததுபோல நீங்களும் உங்கள் மகள்மாரை அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்த வேண்டாம்!"

அவளுடைய நீல நிறத்து நயனங்களில் நீர் நிறைந்தது. கண்களிலிருந்து ஒன்றின் பின் ஒன்றாக உருண்ட கண்ணீர்த் துளிகள் அவளுடைய மங்கிய கன்னத்தில் வடிந்து, பரந்த மார்பினில் பெருகி, சிறந்த ஆடையின் ஓரத்தில் ஓடி, சிவப்புக் காலுறைகளை நனைத்து, பொன்னிறக் காலணிகளைக் கடந்து பூமியில் பாய்ந்தது.

அன்னையின் கண்களிலிருந்து நிலத்தினில் பாய்ந்த கண்ணீர் ஒரு நதியாக உருவெடுத்தது. அது பின்னர் மூன்று நதிகளாகப் பிாிந்தது. ஒவ்வொரு நதியிலும் மும்மூன்று பயங்கர நீர்வீழ்ச்சிகள் தோன்றின. ஒவ்வொரு நீர்வீழ்ச்சியிலும் மும்மூன்று பாறைகள் கிளம்பின.

ஒவ்வொரு பாறையிலும் ஒவ்வொரு முடிகள் தோன்றின. ஒவ்வொரு முடியிலும் மும்மூன்று மிலாறு மரங்கள் முளைத்தன. ஒவ்வொரு மரக் கிளைகளிலும் மும்மூன்று தங்கக் குயில்கள் அமர்ந்தன. அந்தக் குயில்கள் இனிமையாய்ப் பாடின.

கடலுள் கிடந்த குலமகளுக்காக ஒரு குயில், "அன்பே! அன்பே!" என்று மூன்று மாதங்கள் பாடியது.

வாழ்நாளெல்லாம் வருந்தும் துணைவருக்காக ஒரு குயில், "காதலா! காதலா!" என்று ஆறு மாதங்கள் பாடியது.

முடிவில்லா மனத்துயாில் மூழ்கிய மாதாவுக்காக ஒரு குயில், "இன்பம்! இன்பம்!" என்று நாளெல்லாம் பாடியது.

குயில்களின் பாடலைக் கேட்ட ஐனோவின் அன்னை இப்படிச் சொன்னாள். "துயருற்ற தாய்மாரே, குயில்களில் பாடலைக் கேளாதீர்! வசந்த காலத்தில் குயில்களின் கீதத்தைக் கேட்கும்போது எனது நெஞ்சம் பதறுகிறது. கண்களில் நீர் நிறைகிறது. கன்னத்தில் வடிந்து பாய்கிறது. உடல் வீழ்ந்ததோ, உயிர் மாய்ந்ததோ என்பதை அறியேன்."
     அட்டவணை    மேலே
5. கடற்கன்னி

ஐனோ இறந்த செய்தி எல்லாத் திசைகளிலும் பரவிச் சென்றது. வைனாமொயினன் தனது மணமகள் கடலில் உறங்குவதை அறிந்து இரவும் பகலும் வருந்தி அழுதான்.

ஒரு நாள் கடற்கரையில் நடந்து செல்கையில், வைனாமொயினன் இவ்வாறு சொன்னான்: "உந்தமோ என்னும் உறக்கத்தின் சக்தியே, கடலரசன் அஹ்தோ எங்கிருக்கிறான்? அவனது மனைவியான கடலரசி வெல்லமோவின் பெண்கள் எங்கிருக்கிறார்கள்?"

உந்தமோ கனவினில் சொன்னான். "தூரத்தில் ஒரு கடல்முனை இருக்கிறது. அங்கே பனிப்புகார் மூடிய தீவொன்று இருக்கிறது. அதன் அடியாழத்தில் கருஞ்சேற்று மேடையில் அஹ்தோ இருக்கிறான். வெல்லமோவின் பெண்களும் இருக்கிறார்கள்."

இதைக் கேட்ட வைனாமொயினன் தோணித்துறைக்குச் சென்று ஒரு தோணியை எடுத்தான். மீன்பிடிக் கயிற்றையும் தூண்டில் முள்ளையும் எடுத்தான். பனிப்புகார் மூடிய தீவினை நோக்கி விரைந்து சென்றான்.

அங்கே அவன் ஓாிடத்தில் மீன் பிடிக்கத் தொடங்கினான். மீன்பிடிக் கயிற்றைக் கையில் ஏந்தித் தூண்டிலைத் தூக்கித் தூர எறிந்தான். செப்புக் கோல் அசைந்தது. வெள்ளிக் கயிறு ஒலித்துச் சுழன்றது.

பல நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் அந்தத் தூண்டில் முள்ளை ஒரு மீன் விழுங்கிற்று. வைனாமொயினன் தூண்டிலை இழுத்தான். மீனைத் தூக்கித் தோணித் தட்டில் போட்டுத் திருப்பிப் பார்த்தான். மீனைப் பார்த்ததும் கொஞ்சம் குழப்பமாய் இருந்தது.

"இது நான் அறியாத ஒரு வகை மீனாக இருக்கிறதே! வெண்மீன் என்று சொல்லலாம்; ஆனால் மிகவும் மென்மையாக இருக்கிறதே! நன்னீர் மீனென்றால் வெண்மையாய் இல்லையே! மிகவும் மஞ்சளாக இருப்பதால் இது கோலாச்சி மீனும் அல்ல. பெண் மீன் எனலாம். ஆனால் சிறகைக் காணோமே! ஆண் மீன் எனலாம். ஆனால் செதிலைக் காணோமே! கடற்கோழி எனலாம்தான்; ஆனால் காதுகள் இல்லையே! கடற்கன்னி எனலாம்தான்; ஆனால் அரைப்பட்டி இல்லையே! இது வஞ்சிர மீனாகவோ கடலடியில் வாழும் வேறொரு இனமாகவோதான் இருக்க வேண்டும்."

இவ்வாறு குழம்பிய வைனாமொயினன் தனது இடுப்பிலிருந்து வெள்ளிப் பிடிக் கத்தியை உருவி மீனைத் துண்டாட முனைந்தான். அப்பொழுது மீன் துள்ளிக் குதித்துக் கடலில் பாய்ந்தது.

கடலைப் பார்த்த வைனாமொயினன் அங்கே ஒரு தலையையும் தோளையும் கண்டான். ஒன்றின்பின் ஒன்றாக எழுந்து வந்த ஒன்பதாவது அலையிலிருந்து ஒரு குரல் கேட்டது. "வைனாமொயினனே, நான் உன்னிடம் வந்தது உனக்கு உணவாகவல்ல!"

"அப்படியானால் என்னிடம் எதற்காக வந்தாய்?"

"நான் வந்தது உனது அணைப்பில் அன்புக் கோழியாய் இருக்க! உனது கட்டிலைத் தட்டி விாிக்க! உனது தலையணையை மென்மைப் படுத்த! உனது அறையைத் தூசு தட்ட! உனது நிலத்தைப் பெருக்கி வைக்க! அடுப்பை மூட்டி நெருப்பு உண்டாக்க! ரொட்டியும் தேன் பலகாரமும் சுட்டு மேசைக்கு எடுத்து ஒழுங்கு படுத்த!"

"நான் கடலடியில் வாழும் வஞ்சிரமீன் அல்ல. ஒரு காலத்தில் உன் மனைவியாக வேண்டும் என்று நீ விரும்பிய இளம் பெண். யொவுகாஹைனனனின் தங்கை. புத்தியில்லாத வைனாமொயினனே, நான் தோணியில் கிடந்தபோது நீ என்னை அறியவில்லையே!"

வைனாமொயினன் வருந்தினான். ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய், "மீண்டும் ஒரு முறை என்னிடம் வரமாட்டாயா, ஐனோ?" என்று கேட்டான்.

அவன் தூண்டில் கயிற்றை மீண்டும் வீசினான். அவள் ஒளிரும் பாறைகளுக்கு உள்ளே போய், ஈரல் நிறத்துப் பிளவுகளுக்குள் புகுந்து மறைந்து போனாள். அவள் பின்னா வரவே யில்லை.

வைனாமொயினன் பட்டில் ஒரு வலையைப் பின்னி ஆறுகளிலும் மற்றும் நீர்நிலைகளிலும் முன்னும் பின்னுமாய் குறுக்கும் நெடுக்குமாய் வீசி வலித்தான். ஏராளமான மீன்கள் வலையில் வீழ்ந்தன. ஆனால் எதிர்பார்த்த அவள் மட்டும் அகப்படவில்லை.

அவன் பெருமூச்சு விட்டபடி வீட்டுக்குத் திரும்பினான். "ஒரு காலத்தில் குயிலினங்கள் மாலையிலும் கூவின; காலையிலும் கூவின; நண்பகலிலும் கூவின. அந்தக் குரல்கள் எப்படி ஓய்ந்தன? எனது மனதைப்போலவே அவற்றின் மகழ்ச்சியும் மாறிப் போய்விட்டன. இதன்மேல் எப்படி வாழ்வது என்றே எனக்குத் தொியவில்லை. துன்பம் சூழ்ந்த இந்த நாட்களில் காற்றின் கன்னியாகிய என் அன்னை மட்டும் உயிரோடு இருந்திருந்தால், இந்தத் துயரத்தைத் தாங்கும் தைாியத்தைத் தந்திருப்பாள்."

அவனுடைய அன்னை இதனைக் கேட்டாள். அலையின் மேலிருந்து இவ்வாறு சொன்னாள்: "உன் அன்னை இன்னமும் உயிரோடுதான் இருக்கிறாள். உனது துயரத்தைத் தாங்கும் வழிவகைகளைச் சொல்லுவாள். வடநாட்டுக்குப் போ! ஏனைய பெண்களிலும் பார்க்க இரு மடங்கு அழகான பெண்களை, ஐந்தாறு மடங்கு இனிமையான பெண்களை நீ அங்கே காண்பாய்! அவர்கள் இந்தப் பகுதிப் பெண்களைப்போலக் கொழுத்தவர்களோ குண்டானவர்களோ அல்லர்."

"வட நாட்டு வனிதையர் வசீகரமானவர்கள்; கண்ணுக்குக் குளிர்ச்சியானவர்கள்; சுறுசுறுப்பான கால்களை உடையவர்கள்."
     அட்டவணை    மேலே
6. சகோதரனின் பழிவாங்கல்

முதிய வைனாமொயினன் இருண்ட வடநாட்டின் குளிர் மூடிய கிராமம் ஒன்றுக்குப் புறப்பட்டான். வைக்கோல் நிறத்துக் குதிரையை அவிழ்த்து, அதற்குப் பொன்னில் கடிவாளமும் வெள்ளியில் தலையணியும் பூட்டினான். அதன்மேல் ஏறி அமர்ந்து பயணத்தைத் தொடங்கினான்.

அவன் வைனொலாவின் வயல்களைக் கடந்து விரைந்து கொண்டிருந்தான். குதிரை விரைந்தது. பயணம் தொடர்ந்தது. வழித்தொலை குறைந்தது. குதிரையின் குளம்புகளில் நீர் படாமலேயே அலைகளின் மேலே விரைந்து சென்றான். இவ்வாறு எந்த இடையூறும் இல்லாமல் யொவுகாஹைனனின் வயல்வௌிப் பக்கம் வந்து சேர்ந்தான்.

இதற்கிடையில், முன்னொரு காலத்தில் வைனாமொயினுடன் பாடல் போட்டியில் தோல்வியுற்ற யொவுகாஹைனன் பொறாமையிலும் பெரும் கோபத்திலும் ஒரு பயங்கரமான குறுக்குவில்லை செய்தான். இரும்பினாலும் செம்பினாலும் செய்யப்பட்ட அந்த வில்லுக்கு பொன்னிலும் வெள்ளியிலும் அலங்காரம் செய்தான். அரக்க மாட்டின் நரம்பு எடுத்து, பிசாசச் செடியின் நாாிலே தொடுத்து வில்லுக்கு நாண் கட்டினான்.

கடைசியில் வில்லானது சிறப்பாக முடிந்தது. பார்வைக்குப் பகட்டாகத் தொிந்தது. அதன் அலங்காரம் இப்படி இருந்தது. வில்லின் முதுகில் ஒரு குதிரை நின்றது. குதிரைக் குட்டி ஒன்று ஓரமாய் ஓடிற்று. வில்லின் வளைவில் ஒரு வனிதை இருந்தாள். அதன் விசையில் ஒரு முயல் பதுங்கியிருந்தது.

அவன் அவ்விதமே அம்புகளையும் செய்தான். தண்டைச் சிந்தூர மரத்தினால் செய்தான். முனையைப் பிசின் மரத்தினால் செய்தான். குருவிகளின் சிறகுகளை அம்புகளுக்குக் கட்டி, அம்புகளைச் சீறும் பாம்பின் கொடிய நஞ்சில் தோய்த்து எடுத்தான்.

அம்புகளும் ஆயத்தமானதும் வில்லின் நாணை இறுக்கமாய் இழுத்துக் கட்டி, இரவும் பகலுமாய் வைனாமொயினனின் வரவுக்காகக் காத்திருந்தான். அவன் களைப்பேதுமில்லாமல் ஒரு வாரம் இருந்தான். யன்னலோரத்தில் இருந்தான். படிகளின் முடிவினில் இருந்தான். பாதையின் கோடியில் நின்றான். வயல்களின் வௌியினில் நின்றான். கையினில் வில்லும் தோளினில் கணையும் தயாராய் இருந்தன.

பின்னர் அவன் வீட்டின் மறு பக்கம் வந்தான். கடல்முனைப் பக்கம் கவனமாய் நின்றான். புனித நதியின் பக்கலில் நின்றான்.

ஒரு நாள் காலை, அவன் கிழக்கேயும் மேற்கேயும் பார்த்துக் கொண்டிருந்த சமயம், கிழக்கில் நீலக் கடலலைமேல் ஒரு கறுப்புப் புள்ளி தொிந்தது. "அது என்னவாயிருக்கும்?" என்று அவன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். "மேகமா? அல்லது தொடு வானத்தில ஒரு சூாிய உதயமா?"

அந்தக் கறுப்புப் புள்ளி வளர்ந்து வைனாமொயினனாகத் தொிந்தது. ஆம், அந்த முதிய பாடகன் வைக்கோல் நிறக் குதிரையில் வடநாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறான்.

இளைஞன் யொவுகாஹைனன் வில்லைத் தூக்கி வைனாமொயனனுக்குக் குறி பார்த்தான்.

"எதற்காக வில்லை வளைக்கிறாய்? நீ யாருக்குக் குறி பார்க்கிறாய்?" என்று அருகினில் வந்த அவனுடைய அன்னை கேட்டாள்.

"வைனாமொயினனுக்கு! அவனுடைய ஈரலையும் தோளையும் இதயத்தையும் துளைத்துச் செல்ல ஒர் அம்பை விடப் போகிறேன்!"

"வேண்டாம்," என்றாள் அன்னை. "கலேவலாப் பகுதியைவிட்டு அவனை அனுப்பாதே. அவன் என் மருமகன். ஓர் உயர்ந்த இனத்தவன். நீ அவனை அழித்தால் இந்த உலகத்தைவிட்டு இன்பம் போய்விடும். பாடல்கள் மறைந்துவிடும். இந்தப் பூவுலகமும் மரண உலகம்போல மாறிவிடும்."

யொவுகாஹைனன் ஒரு கணம் நின்றான். ஒரு கை 'அம்பை விடு!'என்றது. மறு கை 'வேண்டாம், விடு!' என்றது.

பின்னர் அவன் சொன்னான். "இரு தடவைகள் இன்பம் பூமியைவிட்டு போனால், அதனால் என்ன? பழைய பாடல்கள் பாழாய்ப் போகட்டும். நான் அவனை எய்வேன்."

அவன் நாணை இறுக்கினான். அவன் ஓர் அம்பை எடுத்தான். அம்பை நாணிலே தொடுத்தான். வில்லை இடது காலில் அழுத்தித் தோளுக்கு நேராய் நிறுத்தி இவ்வாறு சொன்னான்: "அரக்கச் செடியின் நாணே விடு கணையை! மிலாறுமரக் கணையே, போ! போய்த் தாக்கு! எனது கை எவ்வளவு தாழ்கிறதோ அவ்வளவுக்கு அம்பு உயரப் போகட்டும்! எனது கை எவ்வளவு உயர்கிறதோ அவ்வளவுக்கு அம்பு தாழ்ந்து போகட்டும்!"

அவன் விட்ட முதலாவது கணை வானத்தில் பாய்ந்து முகிலைக் கிழித்துச் சுழன்று சென்றது. அடுத்து இரண்டாவது கணையைச் செலுத்தினான். அது பூமிக்குள் புதைந்து மண்ணைப் பிளந்தது. பின்னர் விட்டான் மூன்றாம் கணையை. இந்தக் கணை நேராய்ச் சென்று வைனாமொயினன் பயணம் செய்த குதிரையின் இடது தோளின் தசையைத் துளைத்தது.

வைனாமொயினன் குதிரையிலிருந்து கைகளைப் பரப்பிக் கடலில் வீழ்ந்தான். அப்பொழுது ஒரு பொிய காற்று அடித்தது. அது கடலலைகளை உயர்ந்து எழச் செய்தது. அது வைனாமொயினனை கரையிலிருந்து நடுக் கடலுக்கு இழுத்துச் சென்றது.

இதைப் பார்த்த யொவுகாஹைனன் சொன்னான். "வைனாமொயினனே, நீ முடிந்தாய்! கலேவலா என்னும் புதர்ச்சமவௌியில் பொன்னிலாத் திகழ்வதை இனி நீ உனது கண்களால் காணமாட்டாய்! ஆறு ஆண்டுகள், ஏழு கோடைகள், ஏன் எட்டு ஆண்டுகள்கூட நீ இந்தக் கடலில் நீந்திக்கொண்டிருக்கலாம். ஊசியிலை மரம்போல ஆறு ஆண்டுகள் அலைவாய்! தேவதாரு மரம்போல ஏழு ஆண்டுகள் இருப்பாய்! மரக்கட்டைபோல எட்டு ஆண்டுகள் உழல்வாய்!"

அவன் வீட்டுக்கு வந்தான். அவனுடைய அன்னை கேட்ட கேள்விக்கு இவ்விதம் மறுமொழி சொன்னான். "ஆம், நான் வைனாமொயினனை எய்தேன். அவன் இப்பொழுது கடலைப் பெருக்கிக்கொண்டிருக்கிறான்."

"நீ பிழை செய்தாய். மனிதாில் மாணிக்கம்போன்ற கலேவலா மைந்தனை மாய்த்த பாதகன் நீ" என்று தாய் கவலையுடன் சொன்னாள்.
     அட்டவணை    மேலே
7. வைனாமொயினனும் லொவ்ஹியும்

நித்திய முதிய வைனாமொயினன் கோடையில் ஆறு நாட்களாக ஓர் உழுத்த மரக்கட்டைபோலக் கடலில் நீந்திக்கொண்டிருந்தான். அவனின் முன்னே பரந்த நீர்ப்பரப்பு. அவனின் பின்னே தௌிந்த நல்வானம். மேலும் இரண்டு நாட்கள் நீந்தினான். எட்டாம் நாளில் அவனுடைய கால்விரல்களில் நகங்கள் கழன்றன. கைவிரல்களில் பொருத்துகள் சிதைந்தன.

அவன் உரத்த குரலில் கத்தினான். "இந்த வானத்தின் வெட்டவௌியில் வாழ்வதற்கா நான் எனது சொந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டேன். கொடிய குளிர் என்னைக் கொல்கிறது. கொடுந் துயர் என்னை வதைக்கிறது. நான் எனக்கு ஒரு வீட்டை இந்தக் காற்றிலே கட்டவா? அல்லது இந்தக் கடலிலே கட்டவா?"

அப்பொழுது லாப்புலாந்திலிருந்து ஒரு கழுகு பறந்து வந்தது. அது ஒன்றும் பொியதுவல்ல; ஆனால் அத்தனை சிறியதுமல்ல. அது தன் ஒற்றைச் சிறகால் நீரைத் துடைத்தது. மற்றச் சிறகால் வானைப் பெருக்கிற்று. அதன் வால் கீழே கடலைத் தொட்டது. அலகு மேலே மலையில் பட்டது. பறவை வந்தது; பறந்தது; நீலக் கடல்மேல் நிலையாக நின்றது. வைனாமொயினனை வருமாறு கேட்டது: "மனிதனே, விறல் கொண்ட வீரனே, ஏன் கடல் நடுவில் இருக்கிறாய்?"

"இருண்ட வடநாட்டில் ஒரு மங்கையை மணக்கப் புறப்பட்டேன்" என்று சொன்னான் வைனாமொயினன். "லுவோத்தலா என்னும் வளைகுடாவின் பக்கத்தில், யொவுகா ஆற்றின் அருகில் நான் வரும்போது எனக்கு வந்த அம்பொன்று எனது குதிரையை வீழ்த்திற்று. அலைகள் என்னை பொிய நீர்ப் பரப்புக்கு அடித்துச் சென்றன. நான் பட்டினியால் மாய்வேனோ கடலில் மூழ்கிச் சாவேனோ அறியேன்."

"வருந்தாதே!" என்றது கழுகு. "நீ எனது முதுகில் ஏறி அமர்! இந்தக் கடலிலிருந்து நீ எங்கு செல்ல விரும்புகிறாயோ அங்கே உன்னைச் சுமந்து செல்வேன். ஏனென்றால் முன்னொரு காலத்தில் நீ கலேவலாக் காட்டை அழித்தபோது பறவைகளுக்குப் புகலிடம் தர ஒரு மிலாறு மரத்தைத் தவிர்த்துவிட்டாய். அது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது."

வைனாமொயினன் கடலிலிருந்து எழுந்து கழுகின் பொிய சிறகுகளில் அமர்ந்தான். கழுகு கிளம்பிற்று. காற்றின் பாதையில் விரைந்து சென்றது. கடுங்குளிர் மூடிய வடநாட்டை அடைந்தது. இருள் நிறைந்த வடநாட்டில் அவனை இறக்கிவிட்டு வானத்தில் ஏறி விரைந்து மறைந்தது.

இனம் தொியாத நீர்க் கரையில் இருந்து வைனாமொயினன் அழுதான். அவனுக்கு நூறு புண்கள்; ஆயிரம் காயங்கள். தாடி திரண்டு அசிங்கமாய் இருந்தது. தலைமயிர் ஒட்டிச் சிக்கியிருந்தது. எந்த வழியால் புற்பட்டுச் சொந்த நாட்டை அடையாலாம் என்று தொியாமல் மூன்று நாட்கள் அங்கே இருந்தான்.

அந்த வட நாட்டில் ஒரு சிறிய பெண் இருந்தாள். சூாியனும் சந்திரனும் துயில்விட்டு எழும் நேரம் தானும் எழுவதென்று அவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்திருந்தாள். அதன்படி சூாியன் எழுவதற்கும் முன்னர், கோழி கூவுவதற்கும் முன்னர், கோழிக் குஞ்சுகளின் கீச்சொலி கேட்பதற்கும் முன்னர் அன்றும் அவள் எழுந்திருந்தாள். ஐந்தாறு கம்பளி ஆடுகளில் உரோமத்தை வெட்டி, தறியில் நூலாக நூற்று, சூாியன் எழுவதற்கு முன்னர் ஆடைகளைத் தைத்து முடித்தாள்.

அதன் பிறகு, நீண்ட மேசைகளைக் கழுவினாள். இலைக் கட்டினால் நிலத்தைக் கூட்டிச் சுத்தப்படுத்தினாள். குப்பையை அள்ளி ஒரு செப்புக் கூடையில் போட்டு எடுத்துக் கொண்டு வயலின் தூரத்து எல்லைக்குச் சென்றாள். அங்கே, அருவிக்கு அப்பால், ஓர் அழுகுரல் கேட்டது. "கடல் பக்கமாய் ஓர் அழுகுரல் கேட்கிறதே" என்று சொல்லிக் கொண்டு அவள் ஓடினாள்.

லொவ்ஹி என்பவள் நீக்கல் பல்லுள்ள முதியவள். ஆனால் வடநாட்டின் புத்திசாலித் தலைவி. அவள் செய்தியை அறிந்ததும் தானே நோில் பார்க்கத் தோட்டவௌிக்கு ஓடினாள். வயல்புறம் வந்தாள். காது கொடுத்துக் கேட்டாள். "இது ஒரு குழந்தையின் விசும்பல் அல்ல. ஒரு பெண்ணின் விம்மலுமல்ல. இது தாடி வைத்த தலைவனின் அழுகை" என்றாள் லொவ்ஹி.

லொவ்ஹி ஒரு தோணியில் ஏறி அழுகுரல் கேட்ட பக்கமாக விரைந்தாள். சிறுபழச் செடிகளின் புதாின் பக்கத்தில் வைனாமொயினனைக் கண்டாள். அவனுடைய வாய் அசைந்தது. தாடி தளர்ந்து சோர்வாயிருந்தது. ஆனால் தாடையை அசைத்துப் பேச முடியாமல் இருந்தான்.

லொவ்ஹி, "ஓ, அதிட்டமில்லாத மனிதனே, நீ ஒரு வேற்று நாட்டுக்கு வந்திருக்கிறாய்" என்று சொன்னாள்.

"உண்மைதான்" என்று வைனாமொயினன் கடைசியாகப் பேசினான். "எனது சொந்த நாடு ஒரு சிறந்த நாடு."

"யார் நீ? வீரனேயாகிலும் எந்த இனத்து வீரன் நீ?"

"வைனோ என்னும் வனப்புல் வௌிகளில் நான் ஒரு தரமான பாடகன். மாலைப் பொழுதுகளை மகிழ்வாக்க வல்லவன். ஆனால் இப்பொழுது எனக்கே என்னை யார் என்று தொியவில்லை."

"மனிதனே, எழுந்து வா! ஒரு புதிய பாதையைப் புத்துணர்வுடன் தொடங்கு! உனது கதையை எனக்குக் கூறு!" என்று சொன்ன லொவ்ஹி அவனைத் தோணியில் ஏற்றிக் கொண்டு தனது வீட்டுக்குச் சென்றாள்.

அவள் அவனுக்கு நல்ல உணவையும் பானங்களையும் கொடுத்தாள். அவனைக் குளிக்க வைத்து, உலர வைத்து, காயங்களுக்கு மருந்திட்டுக் காய வைத்துத் தேற்றினாள். அதன்பின் ஒரு நாள், "வைனாமொயினனே, கடற்கரையில் இருந்தபோது எதற்காக அழுதாய்?" என்று கேட்டாள்.

"நான் காரணத்தோடுதான் அழுதேன். பல நாட்கள் நான் கடலலைகளில் அலைக்கழிக்கப்பட்டேன். நான் பழகிய இடத்தை இழந்துவிட்டேன். இங்கே மரங்கள்கூட எனக்கு அன்னியமாகத் தொிகின்றன. இங்கே காற்று ஒன்றுதான் எனக்குப் பழக்கமானது."

"வீட்டையும் சொந்த நாட்டையும் நினைத்து அழாதே! இங்கே வஞ்சிர மீனையும் பன்றி இறச்சியையும் நிறைய உண்ணலாம்."

வைனாமொயினன், "நல்லவரேயானாலும், அன்னியரோடு அன்னிய நாட்டில் உணவு உண்பதில் ஊக்கமேயில்லை. சொந்த வீட்டிலே, மிலாறு மரப் பட்டைக் காலணி, சேற்றில் பதிந்த தடத்தில் தேங்கிய தண்ணீரைக் குடிப்பது மிகவும் மகிழ்ச்சியானது. அது அன்னிய நாட்டில் தங்கக் கிண்ணத்தில் தேன் குடிப்பதையும்விட மேலானது" என்று சொன்னான்.

"சாி, உன்னை நான் உனது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தால் எனக்கு நீ என்ன தருவாய்?" என்று லொவ்ஹி கேட்டாள்.

"என்ன கேட்கிறாய்? தொப்பி நிறைய வெள்ளி தரட்டுமா? அல்லது தங்கம்?"

"ஓ, வைனாமொயினனே" என்றாள் லொவ்ஹி. "உன்னிடம் நான் பொன்னும் வெள்ளியும் கேட்கவில்லை. பொன் பிள்ளைகளின் விளையாட்டுப் பொருள். வெள்ளி குதிரையின் அற்ப மதிப்புள்ள அலங்காரப் பொருள். சம்போ என்னும் ஆலையை உனக்கு அடிக்கத் தொியுமா? அதற்கொரு பலநிற [6]மூடியைச் செய்ய முடியுமா? அதுவும் அன்னத்தின் இறகு முனையிலிருந்து. மலட்டுப் பசுவின் பாலிலிருந்து. பார்லியின் ஒற்றைத் தானியத்திலிருந்து. ஒரே ஆட்டின் கம்பளி உரோமத்திலிருந்து. இதை உன்னால் செய்ய முடிந்தால், அதற்கு அன்பளிப்பாக என் மகளை உனக்குத் தந்து சொந்த நாட்டுக்கும் அனுப்பி வைப்பேன்."

"அதை என்னால் செய்ய முடியாது" என்றான் வைனாமொயினன். "என்னை எனது நாட்டுக்குப் போகவிடு. சம்போவைச் செய்வதற்கு இல்மாினன் என்னும் கொல்லனை நான் அங்கிருந்து அனுப்பி வைப்பேன். சகல கொல்வேலைக் கலைஞர்களிலும் இல்மாினன் முதன்மையானவன்; திறமையானவன். வானத்தை வளைத்து அடித்தவன் அவனே. சுவர்க்கத்தைச் செய்து முடித்தவன் அவனே. ஆனாலும் சுத்தியலோ வேறு கருவிகளோ பயன்படுத்திய அடையாளங்கள் எங்கேயும் இல்லை."

"சம்போவைச் செய்து முடித்தால், அவனுக்கே என் மகளைக் கொடுப்பேன்" என்று சொன்ன லொவ்ஹி, ஓர் இளம் குதிரையை சறுக்கு வண்டியில் பூட்டி, வைனாமொயினனை அதில் இருத்தி, மேலும் வருமாறு சொன்னாள். "குதிரை களைத்துப் போனால் தவிர, இராப் பொழுது வந்தால் தவிர, நீ நிமிர்ந்து எதையும் பார்க்கக் கூடாது. நீ தலையை உயர்த்தினால் உனக்குக் கேடு வரும்."

வைனாமொயினன் சவுக்கைச் சுழற்றி அடித்தான். இருண்ட வடநாட்டிலிருந்து பிடர்மயிர்ப் புரவி விரைந்து சென்றது.
     அட்டவணை    மேலே
8. வைனாமொயினனின் காயம்

கடலிலும் தரையிலும் புகழ் பெற்ற ஓர் அழகான பெண் வடநாட்டில் இருந்தாள். அவள் வெண்ணிற ஆடைகள் உடுத்து வானவில்லின் வளைவினில் அமர்ந்து துணிகளை நெய்து கொண்டிருந்தாள். அவள் நெய்யும்போது தறியின் அச்சு அசைந்தது; செப்புச் சட்டம் சப்தமிட்டது; வெள்ளிச் சக்கரம் சுழன்றது.

வடநாட்டிலிருந்து சிறிது தூரம் சென்ற வைனாமொயினனுக்குத் தறியின் சத்தம் கேட்டது. சக்கரம் சுழல்வது செவியில் விழுந்தது.

லொவ்ஹியின் வார்த்தைகளை மறந்து வைனாமொயினன் தலையைத் தூக்கி வானத்தைப் பார்த்தான். வானவில்லில் ஒரு மின்னலாய் இருந்த மங்கையைக் கண்டான்.

"இனியவளே, இறங்கி எனது வண்டிக்குள் வா!" என்றான்.

"உனது வண்டிக்குள் நான் ஏன் வரவேண்டும்?"

"நீ என்னுடன் வா! வந்து தேன் பலகாரம் சுட்டுத் தா! மதுபானம் வடித்துத் தா! யன்னல் பக்கத்தை இசை மயமாக்கு! கலேவலாத் தோட்டத்தில் துள்ளித் திாி!"

அவள் ஒரு கதை சொன்னாள்.

"நேற்று மாலை நான் பொன்னிறமான புற்றரையில் நடந்து சென்றேன். அடி வானத்தில் ஆதவன் சாியும் சமயத்தில் சோலையில் ஒரு வயற் பறவை பாடல் இசைத்தது. 'மணமான மருமகளின் மனம் எப்படியிருக்கும்' என்று அது அந்தப் பாட்டில் சொன்னது.

" 'வயற் பறவையே, வயற் பறவையே, தந்தையார் வீட்டிலே மகளின் வாழ்க்கையா, கணவனின் வீட்டில் மனைவியின் வாழ்க்கையா சிறந்தது?' என்று நான் கேட்டேன்.

"அது இப்படிச் சொன்னது. 'கோடை நாட்கள் ஒளிமிக்கவை. தந்தை வீட்டில் வாழும் மங்கையின் நெஞ்சம் அதனிலும் ஒளியாம். உறைபனியில் புதைந்திருக்கும் இரும்பு கொடிய குளிராக இருக்கும். மருமகளாக மாறிய மங்கையின் நிலமை அதனிலும் கொடிதாம். தந்தை வீட்டில் தனயை இருப்பது செழித்த மண்ணில் முளைத்த செடியின் சிறுபழம் போன்றது. மணந்தவன் வீட்டில் மனைவி இருப்பது சங்கிலியால் கட்டி வைத்த நாயைப் போன்றது. ஓர் அடிமைக்குக்கூட என்றாவது ஒரு நாள் ஆறுதல் கிடைக்கும். ஆனால் மருமகளுக்கு என்றுமே இல்லை.' "

"வயற்பறவை சொன்னது வெறும் பேச்சு. அழகிய பெண்ணே, எனது வண்டிக்குள் வா! நான் ஒரு மதிப்பில்லாத மனிதன் அல்லன். மற்றைய வீரர்களுக்கு நான் இளைத்தவன் அல்லன்" என்றான் வைனாமொயினன்.

"சாி. உன்னை நான் ஒரு மனிதனாக மதிப்பேன். உன்னால் முனை இல்லாத கத்தியால் ஒரு குதிரை மயிரைக் கிழிக்க முடியுமா? முடிச்சில்லாத முடிச்சுக்குள் ஒரு முட்டையை மறைக்க முடியுமா?"

மந்திர அறிவுள்ள வைனாமொயினன் இவை இரண்டையும் செய்து முடித்தான். புத்திசாலியான அந்த அழகான பெண் இன்னொரு நிபந்தனை விதித்தாள். ஒரு கல்லிலே நார் உாிக்கச் சொன்னாள். துண்டு துகள் சிதறாமல் பனிக்கட்டியில் தூண் அறுக்கச் சொன்னாள்.

வைனாமொயினன் இவற்றையும் செய்து முடித்துவிட்டு, வானவில்லின் வளைவில் அமர்ந்திருந்த வனிதையை, "வா வண்டிக்குள்!" என்றான். அவள் இன்னும் கடினமான ஒரு நிபந்தனை விதித்தாள்.

"எனது தறியிலும் தறிச் சட்டத்திலும் இருந்து கழிபட்ட துண்டுகளில் இருந்து எவன் ஒரு தோணியைச் செதுக்குகிறானோ, முழங்கால் முட்டாமல் கைமுட்டி தட்டாமல் புயத்தால் அசைக்காமல் தோளால் தள்ளாமல் எவன் அந்தத் தோணியை நீாில் மிதக்க விடுகிறானோ அவனையே நான் நயப்பேன்" என்று அவள் சொன்னாள்.

வைனாமொயினன் பெருமையாக இப்படிச் சொன்னான். "இந்த உலகம் முழுவதிலும் என்னைப்போல படகு செதுக்கும் திறன் படைத்தவன் எவனுமே இலன்." அதன்பின் அவன் தறியிலும் தறிச் சட்டத்திலும் இருந்து கழிபட்ட துண்டுகளைச் சேர்த்து, ஓர் இரும்பு மலைக்கு அருகில் தோணியைச் செதுக்கத் தொடங்கினான்.

வைனாமொயினன் ஒரு நாள் செதுக்கினான். மறு நாளும் செதுக்கினான். மூன்றாம் நாளில் கோடாியைப் பிசாசு கைப்பற்றியது. அது கோடாியின் அலகைத் திருப்பியது. பேய் கோடாிப் பிடியை அசைத்தது. கோடாி இலக்கு மாறிப் பாறையில் மோதித் திரும்பி வந்து வைனாமொயினனின் தசையுள் பாய்ந்தது. கோடாியின் அலகு முழங்காலைக் கிழித்துக் கீழே இறங்கி நரம்பை அறுத்தது. இரத்த ஆறு பெருகிப் பாய்ந்தது.

வைனாமொயினன், "கோணல் அலகுக் கோடாியே, உனக்கு என்ன நினைப்பு? மரத்தைப் பிளப்பதாக நினைத்து எனது தசையுள் புகுந்து நரம்பைப் பிளந்தாயோ?" என்று முனகினான்.

அவன் மந்திரத்தால் இரத்தப் பெருக்கை நிறுத்த முயன்றான். ஆதியின் மூலத்தை ஓதி முடித்தான். ஆனாலும் இரும்பின் மூலத்தின் முக்கிய வார்த்தைகள் நினைவுக்கு வரவில்லை. கோடாி பிளந்த காயத்தை மாற்றவல்ல மந்திரச் சொற்கள் மனதிலே தோன்றவில்லை.

ஆறாக ஓடிய இரத்தம் நீர்வீழ்ச்சியைப்போலப் பெருகிப் புதர்களில் பாய்ந்தது. இரத்தம் புகாத மண்மேடுகளே இல்லை எனலாம்.

வைனாமொயினன் கல்லிலும் மண்மேட்டிலும் சேற்று நிலத்திலும் பாசிகளைப் பிடுங்கி இரத்தம் பெருகிய பொந்தை அடைக்க முயன்றான். ஆனால் இரத்தப் பெருக்கு நிற்கவில்லை.

அவனுக்கு வேதனை அதிகாித்தது. துன்பம் தொடர்ந்து வதைத்தது. அவன் கண்ணீர்விட்டுக் கதறி அழுதான். குதிரைக்குச் சேணம் கட்டி வண்டியில் பூட்டி மணிகட்டிய சவுக்கால் ஓங்கியடித்தான். குதிரை பறந்தது. வண்டி விரைந்தது. பயணம் தொடர்ந்தது. வழித்தொலை குறைந்தது. முடிவில் ஒரு கிராமத்தின் முச்சந்தியை அடைந்தான்.

அங்கே ஒரு தாழ்ந்த தெருவில் ஒரு தாழ்ந்த வீட்டை அடைந்து, "இரும்பினால் வந்த காயத்தை மாற்றி, அதனால் ஏற்பட்ட துன்பத்தை ஆற்ற வல்லவர் யாராவது இங்கே இருக்கிறார்களா?" என்று கேட்டான்.

அங்கே அடுப்பங் கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு பிள்ளை, "அப்படி ஒருவரும் இங்கே இல்லை. சில சமயம் அடுத்த வீட்டில் யாராவது இருக்கலாம். அங்கே போய்ப் பார்" என்றது.

வைனாமொயினன் மத்திய தெருவின் மத்திய வீட்டுக்குப் போனான். அங்கே, அடுப்பின் அருகில் நீண்ட ஆடையில் இருந்த ஒரு கிழவி மூன்று பற்களை நெருமிச் சொன்னாள்: "அப்படி ஒருவரும் இங்கே இல்லை. அடுத்த வீட்டில் யாராவது இருக்கலாம். அங்கே போய்ப் பார்!"

மீண்டும் திரும்பிய வைனாமொயினன், உயர்ந்த தெருவின் உயர்ந்த வீட்டு வாசலில் நின்றான்.அங்கே அடுப்புப் புகட்டில் இருந்த நரைத்த தாடிக் கிழவன் உறுமினான். "இறைவன் படைத்த மூன்று சொற்களால் பொிய பாதைகள் மூடப்பட்டன. பாய்ந்த வெள்ளம் தடுக்கப்பட்டது. ஆதியில் தோன்றிய மந்திரச் சொற்களால் ஏாிகள் அருவிகள் அடித்தோடும் ஆறுகள் அனைத்துக்கும் அணைகள் அடிகோலப்பட்டன."
     அட்டவணை    மேலே
9. இரும்பின் மூலக்கதை

எவருடைய உதவியும் இல்லாமல் வண்டியைவிட்டு இறங்கிய வைனாமொயினன், வாசல் வழியாக வீட்டுக்குள் புகுந்தான். தங்கத்தில் சாடியும் வெள்ளியில் குடுவையும் கொண்டுவரப்பட்டன. ஆனால் பெருகிய இரத்தம் முழுவதும் கொள்ள அவை போதவில்லை.

அடுப்புப் புகட்டில் இருந்த நரைத்த தாடிக் கிழவன் உறுமினான். "எத்தகைய வீரனப்பா நீ? உனது முழங்காலில் இருந்து பெருகும் இரத்தம் ஏழு தோணிகள் கொள்ளுமே! எட்டுத் தொட்டிகள் நிறையுமே! என்னால் உன்னைக் குணமாக்க முடியும். எனக்கு எல்லா மந்திரமும் தொியும். ஆனால் இந்த இரும்பின், எளிய இரும்புத் துருவின் தொடக்கம் தொியவில்லையே!"

"எனக்கு இரும்பின் பிறப்புத் தொியும்" என்ற வைனாமொயினன் தொடர்ந்து கூறினான்.

"காற்றுத்தான் முதலாவது தாயாவாள். தண்ணீர்தான் மூத்த அண்ணன். அடுத்தவன் அக்கினி. இளையவன் இரும்பு."

"மாபெரும் கர்த்தர் நீாிலிருந்து மண்ணைப் பிாித்து, மண்ணைக் கூட்டி நிலத்தைப் படைத்தார். அப்பொழுது இரும்பு பிறக்கவில்லை. பின்னர், அவர் தனது உள்ளங்கைகளை முழங்காலில் தேய்த்தார். அப்போது மூன்று இயற்கை மகளிர் தோன்றினர். அவர்களே இரும்பின் அன்னையர் ஆகினர்.

"இந்தப் பெண்கள் மேகங்கள்மீது உலாவித் திாிந்தனர். அவர்களது மார்புகள் பூாித்துப் பொங்கின; மார்புக் காம்புகள் கனத்துக் கடுத்தன. அதனால் மண்ணிலும் சேற்றிலும் நீாிலும் பாலைப் பிழிந்து பாய்ச்சினர். மூத்தவள் பொழிந்த கறுப்புப் பாலிலிருந்து மெல்லிரும்பு வந்தது. அடுத்தவள் பொழிந்த வெள்ளைப் பாலிலிருந்து உருக்குப் பிறந்தது. இளையவள் பொழிந்த சிவப்புப் பாலிலிருந்து முதிர்ச்சி பெறாத இரும்பு கிடைத்தது.

"கொஞ்சக் காலம் சென்ற பின்னர், இரும்பு தனது அண்ணன் நெருப்பைச் சந்திக்க நினைத்தது. தீய நெருப்பு தனது இரும்புத் தம்பியைத் தகிக்க வந்தது.

"இரும்பு, நெருப்பின் கொடிய கரங்களிலிருந்து தப்பி ஓடியது. அன்னங்களும் வாத்துக்களும் முட்டையிட்டுக் குஞ்சு பொாிக்கும் வெற்று மலையுச்சியில் இருந்த சதுப்பு நிலத்துள் இரும்பு புகுந்து தன்னை ஒளித்தது. இரும்பு அவ்விதம் சேற்று நீருக்குள் மூன்று வருடங்கள் இருந்தது. அது இரண்டு மரக் குற்றிகளுக்கு நடுவிலும் பூர்ச்ச மரத்தின் மூன்று வேர்களுக்கு இடையிலும் இருந்த போதிலும் தீயின் கரங்களுக்குத் தப்ப முடியவில்லை.

"ஓர் ஓநாய் சேற்று நிலத்தில் நடந்து திாிந்தது. ஒரு கரடி அதன்மேல் உலாவித் திாிந்தது. அதனால் சேறு கலங்க, இரும்பு சேற்றின் மேலே வந்தது.

"இந்தக் காலத்தில், ஒரு நாள் இரவு ஒரு நிலக்காிக் குன்றில் தேவகொல்லன் இல்மாினன் பிறந்தான். பிறக்கும்போதே அவனுடைய கைகளில் செப்புச் சுத்தியலும் சிறிய குறடும் இருந்தன. அடுத்த நாளே சதுப்பின் மேட்டில் உலைக்களமும் துருத்தியும் பொருத்திப் பட்டறை அமைத்தான்.

"இதை இரும்பு அறிந்தது. தான் நெருப்புடன் கலபட இருப்பதைக் கேட்டுக் கலங்கியது. ஆனால் இல்மாினன் இரும்புக்கு இவ்வாறு ஆறுதல் சொன்னான்: 'வருந்தாதே. நெருப்புத் தனது இனத்துக்குக் கெடுதி செய்யாது. நெருப்பின் இருப்பிடத்துக்கு நீ வந்தால் இன்னமும் அழகாவாய். ஆண்களுக்கு வாளாகலாம். பெண்களின் இடுப்புப் பட்டியாகலாம்.'

"இல்மாினன் இரும்பை எடுத்துக் கொல்லுலையில் இட்டுத் துருத்தியை ஊதினான். ஒரு முறை ஊதி, இரு முறை ஊதி, மும்முறை ஊதியதும் இரும்பு குழைந்து கோதுமைக் களி போல் நெருப்பில் தொிந்தது.

"அப்போது, 'ஓ, கொல்லுலைக் கலைஞனே, இல்மாினனே, என்னை நெருப்பி லிருந்து வௌியே எடு!' என்று இரும்பு அலறியது.

" 'முடியாது' என்றான் இல்மாினன். 'உன்னை நான் வௌியே எடுத்தால் நீ கோபம் கொண்டு உன் சகோதரனையே தாக்குவாய்.'

"அப்போது இரும்பு துருத்தியின் மேல், கொல்லுலையின் மேல், சுத்தியலின் மேல். சம்மட்டியின் மேல் சுத்தமாய் ஒரு சத்தியம் செய்தது. 'நான் கடித்து மெல்ல மரம் இருக்கிறது. நான் உண்டு சுவைக்கக் கல்லின் இதயம் இருக்கிறது. எனது இனத்தவனை நான் தாக்கவே மாட்டேன். இனிமேல் நான் பயனுள்ள ஓர் ஆயுதமாய், நெருப்பின் தோழனாய் இருப்பேன்.'

"அதன் பிறகு, இல்மாினன் என்னும் நித்தியக் கலைஞன் இரும்பை எடுத்துப் பட்டறையில் வைத்து அடித்துத் தட்டி ஈட்டிகள் கோடாிகள் பயனுள்ள படைக்கலங்கள் எல்லாம் செய்தான்.

"ஆனால் அதிலும் ஏதோ குறைபாடு இருந்தது. சகோதரன் தண்ணீாின் துணை இல்லாதபோது, இரும்பின் நாக்கு இளகவில்லை; பதமாகவில்லை; வலிமைப்படுத்த முடியவில்லை.

"இல்மாினன் சாம்பலைக் காரநீாில் கரைத்துப் பசையாக்கி, இரும்பை இளக்க ஒரு திரவம் செய்தான். அதனை நாக்கு நுனியில் வைத்துச் சுவைத்துப் பார்த்து, 'சே, இரும்பை உருக்கி ஆயுதம் செய்ய இது உகந்ததாய் இல்லை' என்றான்.

"அப்போது புல்மேட்டிலிருந்து கிளம்பிய நீலச் சிறகுடைய ஒரு வண்டு கொல்லுலையைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. இல்மாினன் வண்டிடம், 'தேன் வண்டே தேன் வண்டே, நிறைகுறைந்த நண்பனே, ஆறு மலர்க் கிண்ணங்களில், ஏழு புல் முனைகளில் தேன் எடுத்து உனது சிறகுகளில் ஏந்தி வா. அதனால் நான் இரும்பை வலிமைப்படுத்துவேன்' என்றான்.

"வீட்டுக் கூரைத் தாவாரத்தில் மிலாறு மரப் பட்டையின் கீழ் பதுங்கியிருந்த அரக்க இனத்துக் குளவி ஒன்று இதனை ஒட்டுக் கேட்டது. அரக்காின் பயங்கரத்தைப் பரப்பியபடி பறந்து சென்றது. திரும்பி வருகையில், பாம்பின் காிய நஞ்சையும் எறும்பின் எாிக்கும் திரவத்தையும் தவளையின் விஷத்தையும் கொண்டு வந்தது. இல்மாினன் இரும்பை வலுப்படுத்த வைத்திருந்த திரவத்தினுள் இவற்றை போட்டது.

"தேன்வண்டுதான் தேனைக் கொண்டு வந்து திரவத்தில் போட்டது என்று தவறாக எண்ணிய இல்மாினன், நெருப்பிலிருந்து எடுத்த இரும்பை இந்தத் திரவத்தில் தோய்த்தான். தோய்த்ததும் இரும்பு பித்தம் கொண்டு பைத்தியமானது. அதனால்தான், இரும்பு தான் செய்த சத்தியத்தை மறந்து, தனது இனத்தையே கடிக்கும் நாய்போல, தன் இனமாகிய என்னையே இன்று தாக்கி இரத்தம் பெருக வைத்திருக்கிறது," என்று கூறி முடித்தான் வைனாமொயினன்.

அடுப்பருகில் இருந்த கிழவன் தாடியசைய உறுமினான். "இப்பொழுது நீ இரும்பின் பிறப்பை எனக்குச் சொால்லிவிட்டாய். இனி நான் மந்திரத்தை முடிப்பேன்" என்று கூறிய கிழவன் தொடர்ந்தான்.

"இரும்பே, நீ உனது இயற்கை அன்னையின் மார்பிலிருந்து பாலாகப் புதிதாய்ச் சுவையாய்ச் சொட்டிய நேரம், நீ பொியதுமல்லச் சிறியதுமல்ல. வானத்தில் ஓடிய மேகத்தில் இருக்கையில் நீ குணத்தில் கொடியதுமல்ல இனியதுமல்ல.

"நீ சேற்றில் புதைந்து கிடக்கையில், காட்டெருது ஏறிக் கடக்கையில், காட்டுக் கலைமான் நடக்கையில், ஓநாயும் கரடியும் மிதிக்கையில் நீ பொியதுமல்லச் சிறியதுமல்ல. சதுப்பிலிருந்து உன்னை எடுத்த நேரம், கொல்லுலையில் உன்னை விடுத்த நேரம் நீ பொியதுமல்லச் சிறியதுமல்ல. உன்னைக் கொல்லுலைத் தீயில் அழுத்திய நேரத்தில், நீ சுத்தமாய்ச் சத்தியம் செய்த நேரத்தில் நீ பொியதுமல்லச் சிறியதுமல்ல.

"அதன்பின் உனது உறவினன் வைனாமொயினனைக் கடித்தபோது, நீ உயர்ந்து விட்டாயா? மதிப்பையும் மாண்பையும் இழந்துவிட்டாயா? இத்தீச்செயலைச் செய்யும்படி உனக்குக் கூறியது யார்?" என்று கூறிய கிழவன் இரத்தப் பெருக்கை நிறுத்த வருமாறு மந்திரம் செபித்தான்.

"நிறுத்து, நிறுத்து, இரத்தமே, நிறுத்து! நிறுத்து உனது பெருக்கை நிறுத்து! எதிர்த்த சுவர்போல் உடனே நிறுத்து! வழியில் நிற்கும் வேலியைப்போல் நில்! கடலில் நிற்கும் கோரையைப் போல் நில்! சேற்றில் முளைத்த நாணலைப்போல் நில்! வயலோரத்து அணையைப்போல் நில்! பாயும் நீர்வீழ்ச்சிப் பாறையைப்போல் நில்!

"ஓடிப் பாய உனக்கு ஓர் எண்ணம் இருந்தால் தசை வழியாகப் பெருகு! நரம்புகளுள் பாய்! எலும்புகளுள் ஓடு! வீராின் தங்கமே, நீ இதயத்தில் தங்கியிரு! வீணாக வெற்றிடத்தில் பாயாதே!

"அன்பே, முன்னாளில் கொடிய வரட்சி வந்த நேரம், கடும் கனல் எழுந்த நேரம் துர்யா நீர்வீழ்ச்சியும் வரண்டதுண்டு; துவோனலா ஆறும் தூர்ந்ததுண்டு; கடலும் காய்ந்ததுண்டு. எனது சொல்லை நீ கேட்காவிட்டால் பேயிடம் ஒரு பானையை வாங்கி, அதில் இரத்தத்தை ஊற்றிக் கொதிக்க வைப்பேன்.

"இனி நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். அவர் மனிதரை மிஞ்சிய மகத்தான சக்தி. இந்த இரத்தப் பெருக்கை அவரால் மட்டுமே நிறுத்த முடியும். மனுக்குல முதல்வனே, விண்ணுலகத் தந்தையே, தேவையான நேரமிது. தவறாமல் வாருமையா. காயத்தின் துவாரத்தில் உமது பெருவிரலை வைத்து அழுத்தி இரத்தத்தை நிறுத்துமையா! அன்பின் இலையை அதன்மேல் பரப்பி, தங்க ஆம்பலால் தடுத்து நிறுத்தும்! எனது ஆடையிலும் தாடியிலும் பாயாதிருக்கப் பெருக்கை அடைப்பீர்!"

கிழவன் இவ்விதம் காயத் துவாரத்தை அடைத்தான். அதன்பின் கிழவன் புல்லின் தாள்களிலிருந்தும் ஆயிரம் இலைகளுடைய செடிகளிலிருந்தும் நிலத்தில் சொட்டும் தேனிலிருந்தும் ஒரு பூச்சு மருந்து செய்வதற்காக மகனை வேலைத் தலத்துக்கு அனுப்பினான்.

பையன் வழியில் கண்ட சிந்தூர மரத்திடம், "உனது கிளைகளில் தேன் இருக்கிறதா?" என்று கேட்டான்.

"நேற்றுத்தான் புகார் முகிலிலிருந்து எனது கிளைகளுக்குத் தேன் வடிந்தது," என்று கூறிய மரம் அவனுக்குச் சில சுள்ளிகளையும் பட்டைத் துண்டுகளையும் கொடுத்தது.

நூறு வழிப் பயணத்தில் ஒன்பது மந்திரவாதிகளும் எட்டு வைத்தியர்களும் தேடிச் சேகாித்த புல் மூலிகை வகைகளில் பலவற்றைப் பையன் பெற்றான். இவற்றுடன் சிந்தூரப் பட்டையையும் ஒரு பானைக்குள் போட்டு மூன்று இரவுகள் கொதிக்க வைத்தான். பின்னர் ஒன்பது இரவுகள் வைத்தான்.

பானையை அடுப்பிலிருந்து இறக்கி, மருந்து பதமாக வந்ததா என்று பார்த்தான். வயலோரத்தில் பல கிளைகளையுடைய அரச மரம் ஒன்று நின்றது. பையன் மரத்தை வீழ்த்தித் துண்டுகளாக நொருக்கினான். அந்தத் துண்டுகளில் தான் செய்த மந்திர மருந்தைப் பூசி, "இந்த மருந்தில் சக்தி இருந்தால், அரசமரமே, இப்போது முளைத்தெழு!" என்று சொன்னான்.

மரத்தின் துண்டுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஓங்கி எழுந்து பல கிளைகளுடன் முன்னாிலும் பார்க்க அழகாகவும் பலமாகவும் நின்றது. அடுத்து வெடித்த பாறைகளிலும் உடைந்து சிதறிய கற்களிலும் மருந்தைப் பூசினான். பாறைகளும் கற்களும் ஒன்றாகச் சேர்ந்து உரமாக இருந்தன.

பையன் திரும்பி வந்து தந்தையிடம், "இதோ ஒரு சக்தி வாய்ந்த மருந்து. இதனால் சிதறிய மலைகள் ஒன்றாய்ச் சேரும். பிளந்த பாறைகள் பொருந்திப் போகும்."

கிழவன் மருந்தை நாக்கில் தடவிப் பார்த்து, அது தரமான மருந்து என்பதை உணாந்தான். பின்னர் மருந்தை வைனாமொயினனுக்குப் பூசி, மந்திாித்து, மாபெரும் கர்த்தரை எண்ணிப் பிரார்த்தனை செய்தான்.

அந்தச் சக்தியுள்ள மருந்து வைனாமொயினனின் உடலை முறுக்கியது. முன்னும் பின்னும் புரண்டு மயக்கமுற்றான். கிழவன் இன்னொரு மந்தரத்தால் நோவை 'நோ'மலைக்கு அனுப்பினான். பேய் மலையில் செலுத்தினான்.

கிழவன் பின்னா உருட்டிச் சுற்றியிருந்த பட்டுத் துணியை காயத்துக்குக் கட்டினான். உடனே வைனாமொயினனின் உடலில் தசை வளர்ந்தது. நோ அகன்றது. பலம் சேர்ந்தது. முழங்காலை மடிக்க முடிந்தது.

கடவுளுக்கு நன்றி கூறிப் பாடல்கள் பாடிய வைனாமொயினன் மக்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறி முடித்தான்.

"மக்களே, தற்பெருமையான வார்த்தைகளுக்காகப் படகு கட்டப் புறப்பட வேண்டாம்! செருக்கினால் படகின் கைமரம்கூடக் கட்ட முடியாது. மனிதனின் சக்தியில் எதுவுமே இல்லை. இறைவனின் சக்தியில் அனைத்துமே இயங்கும். மனிதனின் ஓட்டத்தைத் தொடக்கி வைப்பவன் இறைவன். மனிதனின் ஓட்டத்தை முடித்து வைப்பவனும் இறைவனே!"
     அட்டவணை    மேலே
10. சம்போவைச் செய்தல்

பழுப்பு நிறக் குதிரையைச் சறுக்கு வண்டியில் பூட்டினான் வைனாமொயினன். வண்டியில் அமர்ந்து மணிகள் கட்டிய சவுக்கால் ஓங்கி அறைந்தான். குதிரை பறந்தது. வண்டி விரைந்தது. பயணம் தொடர்ந்தது. வழித்தொலை குறைந்தது. கலேவலா என்னும் புதர்ச்சமவௌியை மூன்றாம் நாளில் வந்து அடைந்தான்.

"எனது சொந்த நாடான வெண்ணிலவு திகழும் கலேவலாவுக்கு நான் இனி உயிரோடு வந்து சேர மாட்டேன் என்று சொன்ன லாப்புலாந்தியரை ஓநாய் விழுங்கட்டும்; நோய் அழிக்கட்டும்," என்று முணுமணுத்தபடி வைனாமொயினன் கலேவலா நாட்டை வந்தடைந்தான்.

பின்னர் வைனாமொயினன் மந்திரப் பாடல்களைப் பாடினான். அவனுடைய பாடலால் ஊசியிலை மரமொன்று ஓங்கி வளர்ந்து வானத்தைத் தொட்டு நின்றது. அப்பாடலால் மலர்களும் பொன்னிலைகளும் தளைத்து உயர்ந்து முகில்களை மூடி செழித்து நின்றன. அவன் பின்னர் சந்திரனும் வடமீனும் மரத்தின் கிளைகளின் மத்தியில் ஒளிவீசப் பாடினான்.

வைனாமொயினன் தன்னை விடுவிப்பதற்காக, சம்போ செய்வதற்கு இல்மாினனை அனுப்புவதாக லொவ்ஹிக்கு வாக்களித்திருந்தான். அந்த நினைவில் ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய் வீடு நோக்கி வந்தான்.

அவன் ஒஸ்மோவின் வயற்புறம் வந்து கொண்டிருந்த சமயம் கொல்லனின் வேலைத் தலத்தில் நிலக்காி கலக்கும் சத்தமும் கருவிகளை இயக்கும் சத்தமும் கேட்டன.

வைனாமொயினனை வாசலில் கண்டதும், இல்மாினன் தனது வேலையை நிறுத்திவிட்டு, "ஓ, முதிய வைனாமொயினனே, நீண்ட காலமாக எங்கே போயிருந்தாய்?" என்று கேட்டான்.

"நான் இவ்வளவு காலமும் புகார் படிந்த வடநாட்டில் தங்கியிருந்தேன். மந்திரவாதிகளின் மத்தியில் பனிக்கட்டியில் சறுக்கிச் சென்றேன்" என்றான் வைனாமொயினன்.

"அப்படியா? உனது பயணத்தைப்பற்றி எனக்கு என்ன சொல்லப் போகிறாய்?"

"எவ்வளவோ புதினங்கள் இருக்கின்றன. அந்தக் குளிரான வடநாட்டில் எழிலான ஒரு மங்கை இருக்கிறாள். அவள் எவரையும் தனது வாழ்க்கைத் துணையாக வாிக்கமாட்டாளாம். அவளுடைய புருவத்தில் சந்திரன் திகழ்கிறது. மார்பினில் சூாியன் பிரகாசிக்கிறது. தோள்களில் வடமீனும் முதுகிலே சப்த நட்சத்திரங்களும் மின்னுகின்றன. அதனால் பாதி நாடே அவளுடைய அழகைப் புகழ்ந்து நிற்கிறது" என்று கூறிய வைனாமொயினன் தொடர்ந்து சொன்னான். "இல்மாினனே, நீ போய் அவளைப் பெற்று வா. உன்னால் சம்போவையும் அதன் மூடியையும் அடிக்க முடிந்தால், அதற்கு ஊதியமாக அந்த அழகியைப் பெறலாம்."

"ஓகோ" என்றான் இல்மாினன். "உன் தலை தப்புவதற்காக என்னைத் தருவதாக வாக்குக் கொடுத்தாயோ? அது நடக்காது. இந்தத் திங்களின் வெண்ணிலவு திகழும்வரையில், வீரரை அழிக்கும் சூனியக்காரர் நிறைந்த அந்த இருண்ட நாட்டுக்கு நான் போகவே மாட்டேன்."

"இன்னொரு அதிசயமும் இருக்கிறது" என்றான் வைனாமொயினன். "ஒஸ்மோவின் வயற்புறத்தில் தங்க இலைகளுடன் ஒரு ஊசியிலை மரம் நிற்கிறது. சந்திரனும் வடமீனும் அதன் கிளைகளில் பிரகாசிக்கின்றன."

"நான் எனது கண்களால் காணாமல் அதை நம்பவே மாட்டேன்" என்றான் இல்மாினன்.

"என்றுடன் வா. அது உண்மையா பொய்யா என்பதைப் நோில் பார்த்துவிடலாம்."

அவர்கள் ஒஸ்மோவின் வயற்புறத்தை அடைந்ததும் அந்த ஊசியிலை மரத்தின் கிளைகளில் சந்திரனும் வடமீனும் திகழ்வதைக் கண்டு திகைத்து நின்றான் இல்மாினன்.

"போ!" என்றான் வைனாமொயினன். "மரத்தில் ஏறிப் போய் சந்திரனையும் வடமீனையும் கைப்பற்றி வா."

இல்மாினன் மரத்தில் ஏறினான்.

"அறிவில்லாத அப்பாவி மனிதா, சந்திரனின் சாயையையும் பொய்யான வடமீனையும் கைப்பற்ற ஏறி வந்தாயே" என்றது மரம்.

அப்போது வைனாமொயினன் பாடத் தொடங்கினான். காற்று வேகம்கொண்டு வீசப் பாடினான். "காற்றே, இவனை உனது தோணியில் ஏற்றி இருண்ட வடநாட்டுக்கு இழுத்துச் செல்!" என்று பாடினான்.

காற்று வேகம் கொண்டது. இல்மாினனைக் கொண்டுபோய் வடநாட்டில் சேர்த்தது. இல்மாினன் கால் போன போக்கில் நடந்து வடநாட்டின் தோட்டத்தை அடைந்தான். அவன் அங்கு வந்ததை நாய்கள் அறியவுமில்லை; அவை அவனைப் பார்த்துக் குரைக்கவுமில்லை.

"யாரப்பா நீ? காற்று வந்த வழியே வந்து சேர்ந்தாய். உன்னை நாய்கள் காணவுமில்லைக் குரைக்கவுமில்லை" என்று நீக்கல் பல்லுள்ள லொவ்ஹி கேட்டாள்.

"கிராமத்து நாய்கள் கடிப்பதற்காக நான் இங்கு வரவில்லை" என்றான் இல்மாினன்.

"உனக்குக் கொல்லன் இல்மாினனைத் தொியுமா? அவன் ஒரு சிறந்த கொல் வேலைக் கலைஞன். சம்போவைச் செய்வதற்காக அவன் இங்கே வருவான் என்று எதிர்பார்த்திருக்கிறோம்."

"அவனை எனக்குத் தொியும் என்றுதான் நம்புகிறேன். ஏனென்றால் நான்தான் அவன்."

கிழவி உடனே வீட்டுக்குள் விரைந்தாள். "இளையவளே, என் மகளே, வெண்மை நிறத்தில் இருக்கும் மிகச் சிறந்த ஆடையை எடுத்து அணிந்துகொள்! மென்மையான சிறந்த அணிகளை மார்பிலும் கழுத்திலும் அணிந்துகொள்! கன்னத்தைச் செந்நிறமாக்கு! முகத்தை அலங்காித்து இன்னும் அழகாக்கிக்கொள்! இல்மாினன் என்னும் நித்தியக் கலைஞன் சம்போவையும் அதற்குப் பலநிற மூடியையும் செய்ய வந்திருக்கிறான்."

நீாிலும் நிலத்திலும் புகழ்பெற்ற அந்த வடநாட்டு அழகிய மங்கை மிகவும் நேர்த்தியான உடைகளைத் தேர்ந்து எடுத்து அணிந்தாள். அவள் வீட்டின் உள்ளறையிலிருந்து வௌியே வந்தபோது விழிகள் சுடர்விட்டன. முகம் ஒளிவிட்டு மின்னிற்று. கன்னங்கள் சிவந்து செழுமையுற்றன. அணிகள் பொன்னில் மார்பிலும் வெள்ளியில் சிரசிலும் பிரகாசித்தன.

இதற்கிடையில், லொவ்ஹி இல்மாினனை வீட்டுக்குள் அழைத்துச் சென்று இனிய பானமும் அாிய உணவும் கொடுத்து உபசாித்தாள். "கொல்வேலைக் கலைஞனே, அன்னத்தின் இறகு முனையிலிருந்து, மலட்டுப் பசுவின் பாலிலிருந்து, பார்லியின் ஒற்றைத் தானியத்திலிருந்து, ஒரே ஆட்டின் கம்பிளி உரோமத்திலிருந்து உன்னால் சம்போவை ஒரு பலநிற மூடியுடன் செய்ய முடிந்தால், அதற்கு அன்பளிப்பாக என் மகளை உனக்குத் தருவேன்" என்று அவள் சொன்னாள்.

"என்னால் சம்போவைச் செய்ய முடியும் என்றே நம்புகிறேன். ஏனென்றால் வானத்தை வளைத்து அடித்தவன் நானே. சுவர்க்கத்தைச் செய்து முடித்தவன் நானே" என்றான் இல்மாினன்.

அவன் உடனடியாக வேலையைத் தொடங்கப் புறப்பட்டான். ஆனால் பட்டறை இல்லை. துருத்தி இல்லை. சுத்தியல் இல்லை. கருவிகளின் கைப்பிடிகூட இல்லை. "பெண்களோ சந்தேகப் பிராணிகள்; கோழைகள்; குறைவேலை செய்பவர்கள். ஆனால் பலமற்றவனாக இருந்தாலும், சோம்பேறியாக இருந்தாலும், ஆண்மகன் அவ்விதம் செய்யான்" என்றான் இல்மாினன்.

அவன் வயல் பக்கம் சென்று பட்டறை அமைக்கத் தகுந்த இடம் தேடினான். மூன்றாம் நாளில் ஓர் இடத்தில் மின்னும் பாறையைக் கண்டான். அங்கே பட்டறை அமைத்துத் துருத்தியைப் பொருத்தி நெருப்பை மூட்டினான். தேவையான பொருட்களைத் தீயினுள் திணித்து அடிமைகளை அழைத்து உலையை ஊத வைத்தான்.

அடிமைகள் மூன்று கோடை நாட்கள் பகல் இரவாய் ஊதினர். குதிக்கால்களின் கீழ் கல் தோன்றும்வரை, பெருவிரல்களின் கீழ் பாறை வளரும்வரை ஊதினர்.

முதலாம் நாள் இல்மாினன் குனிந்து உலைக்களத்துள் என்ன உண்டாகிறது என்று எட்டிப் பார்த்தான். அங்கே ஒரு குறுக்குவில் வந்தது. அது வெள்ளி முனை கொண்ட அழகான தங்க வில். அடித்தண்டும் செம்பில் அழகாய் இருந்தது. ஆனாலும் அதற்கு ஒரு தீக்குணம் இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு தலையைக் கேட்டது. நல்ல நாள் வந்தால் இரு தலைகளைக் கேட்டது.

இல்மாினனுக்கு அதனால் திருப்தி இல்லை. வில்லை முறித்துத் தீக்குள் திணித்தான். அடிமைகள் மீண்டும் உலையை ஊதினர்.

அடுத்த நாள் உலையில் ஒரு செந்நிறப் படகு தோன்றியது. அதன் முன்புறம் பொன்னாலும் அயற்புறம் செம்பாலும் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் அதற்கும் ஒரு தீக்குணம் இருந்தது. அநாவசியமாகப் போரைக் கேட்டது. அதனையும் உடைத்துத் தீக்குள் திணித்தான். அடிமைகள் மீண்டும் உலையை ஊதினர்.

மூன்றாம் நாள் கொல்லன் உலைக்குள் எட்டிப் பார்த்தான். அதற்குள் ஒரு பசு உதயமானது. அதன் கொம்புகள் தங்கம். நெற்றியில் வடமீன். சிரசினில் சூாிய சக்கரம். ஆனாலும் அப்பசு பயனிலாப் பசுவாம். பகலெல்லாம் காட்டில் படுத்துக் கிடந்து பாலைக் கறந்து நிலத்தில் சிந்திற்று. அதனால் இல்மாினன் பசுவை வெட்டித் துண்டுதுண்டாக்கித் தீயில் எறிந்தான். அடிமைகள் மீண்டும் உலையை ஊதினர்.

நான்காம் நாள் உலையில் ஒரு கலப்பை எழுந்தது. அதற்குத் தங்கத்தில் உழுமுனையும் செம்பில் கைமரமும் வெள்ளியில் கைப்பிடியும் இருந்தன. ஆனாலும் அதில் ஒரு தீக்குணம் இருந்தது. கிராமத்து வயல்களை மட்டும் உழுதது. அதையும் ஒடித்து உலையில் போட்டான்.

இப்பொழுது காற்று எழுந்து தீயை வளர்த்தது. கீழ்க் காற்றும் மேல்காற்றும் வடதென் காற்றுகளும் மூன்று நாட்கள் வேகம் கொண்டு வீசியடித்தன. பட்டறையின் யன்னல் பக்கமாய் நெருப்புப் பிடித்தது. தீப்பொறிகள் பறந்து கதவில் தாவின. தூசுகள் எழுந்து வானில் பறந்தன. புகை எழுந்து போய் முகிலோடு சேர்ந்தது.

மேலும் மூன்று நாட்கள் கழிந்தன. இல்மாினன் உலையுள் எட்டிப் பார்த்தான். அங்கே சம்போ பிறந்தது. பலநிற மூடியும் கூட இருந்தது. அதை நெருப்பிலிருந்து வௌியே எடுத்தான். திறமையாய் தட்டிச் சம்போவைச் செய்து முடித்தான். அந்த மந்திர ஆலையின் ஒரு பக்கம் தானிய ஆலை. ஒரு பக்கம் உப்பு ஆலை. ஒரு பக்கம் நாணய ஆலை.

உடனே பலநிற மூடி சுழல, ஆலை அரைக்கத் தொடங்கிற்று. ஒரு பீப்பாய் நிறைய உணவுக்கு அரைத்தது. ஒரு பீப்பாய் நிறைய விற்பனைக்கு அரைத்தது. ஒரு பீப்பாய் நிறையச் சேமித்து வைப்பதற்கு அரைத்தது.

வடநாட்டு முதியவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. சம்போவை வடநாட்டின் கல்மலைக்கு எடுத்துச் சென்று அதன் செப்பு முடியில் ஒன்பது பூட்டுகள் போட்டுப் பூட்டி வைத்தாள். அதிலிருந்து ஐம்பத்தாறு அடி ஆழத்துக்கு வேர்கள் இறங்கி இருந்தன. ஒரு வேர் பூமியன்னையைப் பலமாகப் பற்றியிருந்தது. மறு வேர் அருவிக்குள் ஓடி இறுக்கமாய் இருந்தது. மூன்றாவது வேர் வீட்டு மலைக்குள் மாட்டியிருந்தது.

அதன்பின் கொல்லன் இல்மாினன் லொவ்ஹியிடம் சென்று, "சம்போவைச் செய்துவிட்டேன். அதற்குப் பலநிற மூடியும் முடிந்துவிட்டது. உனது பெண் இனி எனக்குத்தானே?" என்று கேட்டான்.

லொவ்ஹியின் அழகிய பெண்ணான அந்த இனியவள் இப்படிச் சொன்னாள்: "வடநாட்டுக் கோழியாகிய நான் வேறொரு இடத்துக்குப் போய்விட்டால், அடுத்த ஆண்டுக் கோடை காலத்தில் குயிலிசையை இங்கே யாரப்பா கேட்பார்கள்? நான் இல்லாவிட்டால் சிறுபழங்கள் எல்லாம் வீணாய்ப் போகும். குயில்களும் மற்றும் பறவைகளும் பறந்து போய்விடும். அத்துடன் சிறு பழங்கள் எல்லாம் பறிபடாது இருக்கும். கடற்கரைகளில் பாடல்கள் கேட்கமாட்டாது. வயல்களிலும் வனங்களிலும் உலாவிவர யாரும் இருக்க மாட்டார்கள்."

இல்மாினன் ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய், உயர்ந்த தொப்பியும் ஒருங்கே சாிய, நீண்ட நேரம் சிந்தனை செய்தான். இந்த இருண்ட வடநாட்டிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்புவதே சிறந்தது என்று தீர்மானித்தான்.

"நீ ஏன் வருந்துகிறாய்? உனது சொந்த நாட்டுக்குப் போக விரும்புகிறாயா?" என்று லொவ்ஹி இல்மாினனைக் கேட்டாள்.

"ஆமாம். நான் எனது சொந்த நாட்டுக்குப் போய்ச் சாவதுதான் நல்லது"

லொவ்ஹி அவனுக்கு உண்ண உணவும் குடிக்கப் பானமும் கொடுத்தாள். வடநாட்டுக் காற்றை வீசப் பணித்தாள். மூன்றாவது நாளில் அவன் தனது சொந்த வீட்டில் இருந்தான்.

வைனாமொயினன் அவனிடம், "சகோதரா, சம்போ என்னும் மந்திர ஆலையைச் செய்தாயா? அதற்கொரு மின்னும் மூடியும் முடிந்ததா?" என்று கேட்டான்.

"புதிய ஆலை அரைக்கின்றது. சுடர்மிகு மூடியும் சுழல்கின்றது. ஒரு பீப்பாயை உண்பதற்கும் ஒரு பீப்பாயை விற்பதற்கும் ஒரு பீப்பாயைச் சேமிப்பதற்கும் அரைத்துக் கொண்டிருக்கிறது."
     அட்டவணை    மேலே
11. லெம்மின்கைனனின் விவாகம்

இப்போது துடிப்புமிக்க இளைஞன் லெம்மின்கைனனின் கதையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவனை அஹ்தி என்றும் அழைப்பர். லெம்பியின் மகனான அவன் தன் தாயுடன் கடல்முனையின் கோடிக் கரையில் வசித்து வந்தான்.

அந்த உல்லாச வாலிபன் லெம்மின்கைனன் சிவந்த கன்னங்களும் நிமிர்ந்த தலையுமாகச் செருக்குடன் இருந்தான். ஆனாலும் அவனிடம் ஒரு குறை இருந்தது. இரவெல்லாம் பெண்களோடு ஆடிக் களித்தான். அழகிய பெண்களைக் கூடிக் களித்தான்.

அங்கே ஒரு தீவிலே ஒரு பெண் இருந்தாள். அவளை அழகுக்கு அரசி என்றார்கள். குணத்திலே குன்றம் என்றார்கள். தந்தையோடு வாழ்ந்த அந்தச் சௌந்தர்யச் சிலையைத் தீவகத்து மலர் என்றும் அழைப்பர். அவளுக்குப் பெயர் குயிலிக்கி. அவளுடைய பேரும் புகழும் இனிமையும் செழுமையும் எங்கெங்கும் பரவிற்று. பற்பல இடங்களிலிருந்தும் மாப்பிள்ளைமார் அவள் கரம்பற்ற அவளுடைய தோட்டத்தைத் தேடி வந்தனர்.

சூாியன் தன் மகனுக்கு மனைவியாக வரும்படி கேட்டான். சூாியனுடைய கோட்டையிலே கோடை காலத்தில் காய்ந்து கொண்டிருக்க அவள் விரும்பவில்லை. அதனால் மறுத்துவிட்டாள். சந்திரன் தன் மகனுக்குக் கேட்டான். வசந்த இரவினில் வான வீதியில் வலம்வர அவள் விரும்பவில்லை. அதனால் மறுத்துவிட்டாள். நட்சத்திரம் அவளைத் தன் மகனுக்குக் கேட்டது. குளிர்கால இரவில் ஆகாய வௌியில் கண் சிமிட்டிக் கொண்டிருக்க அவள் விரும்பவில்லை. அதனால் மறுத்துவிட்டாள்.

எஸ்த்தோனியா நாட்டிலிருந்தும் இங்கிாியா நாட்டிலிருந்தும்கூட மாப்பிள்ளைமார் வந்து கேட்டார்கள். அவள் யாரையும் விரும்பவில்லை. "நீங்கள் உங்களுடைய பொன்னையும் வெள்ளியையும் வீணாகச் செலவழிக்கிறீர்கள்" என்றாள் அவள். "நான் எஸ்த்தோனியாவுக்குப் போகமாட்டேன். நான் அந்த நாட்டுப் படகில் ஏறமாட்டேன். அந்த நாட்டின் மீனையும் உண்ணேன்; ரசத்தையும் குடியேன். நான் இங்கிாியா நாட்டுக்கும் போகமாட்டேன். அங்கே குடிநீருக்குப் பஞ்சம். கோதுமைக்குப் பஞ்சம். தானிய ரொட்டிக்குப் பஞ்சம். எல்லாவற்றுக்குமே பஞ்சம்."

தீவகத்து மலாின் புகழ் லெம்மின்கைனனின் காதில் விழுந்தது. தான் உடனே போய் அவளை மணம் முடித்து வருவதாகத் தாயிடம் சொன்னான்.

"வேண்டாமப்பா" என்றாள் அவனுடைய அன்னை. "அந்தத் தீவிலே அது ஓர் உயர்வான குடும்பம். அவர்கள் உன்னை ஏற்கமாட்டார்கள்."

"நான் ஒரு சிறந்த சந்ததியில் வந்தவன் அல்லவென்றாலும், உயர் குடியில் பிறந்தவன் அல்லவென்றாலும், எனது உருவத்தினாலே அவளை வெற்றிகொள்வேன். பிற நலன்களினாலே அப்பெண்ணை அடைவேன்."

"அந்தத் தீவுப் பெண்கள் உன்னைக் கேலி செய்வார்கள். அந்தப் பாவையர் உன்னைப் பார்த்துச் சிாிப்பார்கள்."

அதனை அலட்சியம் செய்தான் லெம்மின்கைனன். "அவர்களுடைய சிாிப்புக்கு நான் சமாதி கட்டுவேன். வம்புக் கதைக்கு முடிவு தேடுவேன். தோளில் சுமக்க ஒரு பிள்ளையைக் கொடுப்பேன். கேலிக்கு ஒரு வேலி அமைப்பேன்" என்று அவன் சொன்னான்.

"ஐயோ, இப்படியும் ஒரு காலமோ!" என்றாள் அன்னை. "நீ தீவுப் பெண்களை மயக்க முயன்றால், அதனால் சண்டை ஏற்படும். எங்களை நோக்கி ஒரு பெரும் போரே வரும். தீவக மலரை மணக்க விரும்பும் நூற்றுக் கணக்கான மாப்பிள்ளைமார் நூற்றுக் கணக்கான வாள்களுடன் உன்மீது பாய்ந்து வருவார்கள். முட்டாளே, நீ தனித்து நிற்பாய்!"

தாய் சொன்ன எதையும் அவன் கேட்கவில்லை. அவன் ஒரு குதிரையை அவிழ்த்தான்; ஏர்க்காலில் பூட்டினான். தீவக மலரைத் திருமணம் செய்ய அவன் புறப்பட்டுவிட்டான். பெண்கள் அனைவாிலும் பேரழகு படைத்தவளைக் கைப்பிடிக்கக் கிளம்பிவிட்டான்.

தீவின் தோட்டத்துக்குள் வண்டியை வேகமாக செலுத்தி வந்தான் லெம்மின்கைனன். வண்டி வாயில் மரத்துடன் மோதித் தலைகீழாகப் புரண்டது. அதைக் கண்ட பெண்கள் சிாித்தார்கள். அவனுடைய முட்டாள்த்தனத்தை எண்ணிக் கேலி செய்தனர்.

லெம்மின்கைனன் வாயைக் கோணித் தலையைத் திருப்பிக் கறுத்தத் தாடியைத் திருகி முறுக்கி தனக்குத் தானே இப்படிச் சொன்னான். "இதுவரையில் எந்தப் பெண்ணும் என்னைப் பார்த்துச் சிாித்ததில்லை." பின்னர் சத்தமாக, "நான் விளையாடுவதற்கு இங்கே நிலம் ஏதேனும் இருக்கிறதா? பின்னிய கூந்தலுடைய பேரழகுப் பெண்களுடன் ஆடி விளையாட இடம் இருக்கிறதா?" என்று கேட்டான்.

"ஆமப்பா. மலையடிவாரத்திலோ புல்மேட்டிலோ ஓர் இடையனாக நீ விளையாடலாம். இந்தத் தீவிலுள்ள பிள்ளைகள் மெலிந்தவர்கள்; குதிரைக் குட்டிகள் கொழுத்தவை" என்றார்கள் பெண்கள்.

அதனை அலட்சியம் செய்தான் லெம்மின்கைனன். பகலெல்லாம் செம்மறிகளை மேய்த்துத் திாிந்தான். இரவெல்லாம் சுந்தாிகளுடன் சுற்றித் திாிந்தான். இரவுகள் சிாிப்பும் கேலியும் கும்மாளமுமாகக் கழிந்தன. அங்கே சுத்தமானவள் என்று சொல்ல ஒரு சிறுக்கியும் இல்லை. அவனைத் தொடாதவள் என்று சொல்ல ஒரு தையலும் இல்லை. அவன் பக்கத்தில் படுக்காத பாவையே இல்லை. ஆனால் பெண்கள் அனைவாிலும் பேரழகியான குயிலிக்கி என்னும் தீவக மலர் மட்டும் அவனைவிட்டு விலகியே இருந்தாள்.

அந்த உல்லாச வாலிபன் லெம்மின்கைனன் குயிலிக்கியை அடையும் முயற்சியில் நூறு காலணிகளை அணிந்து கழித்தான். நூறு தோணித் துடுப்புகளை ஒடித்து முடித்தான்.

ஒரு நாள் குயிலிக்கி, "ஈயப் பதக்கம் அணிந்த பெண்களைத் தேடிக் கடற்கரை யிலேயே சுற்றித் திாிகிறாய். கல் அரைபட்டு மாவாகும்வரை, கல்லுலக்கை உடைந்து துகளாகும்வரை, கல்லுரல் தேய்ந்து பொடியாகும்வரை நான் இந்தத் தீவைவிட்டுப் புறப்படமாட்டேன். நான் உன்னை விரும்பமில்லை. எனது உரமான உடலுக்கு ஓர் உரமான உடல் தேவை. எனது அழகான அமைப்புக்கு ஓர் அழகான ஆண் தேவை. எனது வடிவான முகத்துக்கு ஒரு வடிவான முகம் தேவை. நீ ஒரு நோஞ்சான்" என்று அவனிடம் சொன்னாள்.

பல நாட்கள் சென்று ஒரு நாள் வந்தது. குயிலிக்கி தன் தோழிகளுடன் புல்மேட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். லெம்மின்கைனன் ஒரு சிறந்த குதிரை பூட்டிய வண்டியைச் செலுத்திக்கொண்டு அந்த விளையாட்டு இடத்தின் மத்தியில் வந்து நின்றான். குயிலிக்கியை எட்டிப் பிடித்தான். அவளை இழுத்து வண்டியின் ஆசனத்தில் இருத்தினான். சாட்டையைச் சுழற்றிக் குதிரையை அடித்தான். புறப்படும்போது, "நான் இங்கே வந்து உங்களில் ஒருத்தியைக் கவர்ந்து செல்வதை நீங்கள் எவருக்கும் சொல்லக்கூடாது. சொன்னால் உங்கள் காதலர்கள் போர்க்களம் செல்லச் சபித்துப் பாடுவேன். அவர்கள் வாளிலே வீழ்ந்து போாிலே மாள்வர். அதன்மேல் அவர்கள் இந்தப் பசும் புல்வௌிகளில் பயணிப்பதை நீங்கள் காணவேமாட்டீர்கள்!" என்று மற்றப் பெண்களுக்குச் சொன்னான்.

"என்னை விடு!" என்று கத்தினாள் குயிலிக்கி. "அழுதுகொண்டிருக்கும் என் அன்னையிடம் என்னைப் போக விடு! விடாவிட்டால், எனது சகோதரர் ஐவரும் மாமனின் மக்கள் எழுவரும் என்னை மீட்க வருவர்."

அவன் அவளை விடுவிக்கவில்லை. அவள் அழுதாள். "நான் ஒரு பாவி. நான் பிறந்தும் பயனில்லை. வளர்ந்தும் பயனில்லை. போரைத் தவிர வேறு எதுவும் தொியாத ஒரு வீண் மனிதனால் கவர்ந்து செல்லப்படுகிறேன்."

லெம்மின்கைனன் அவளுடன் அன்பாகப் பேசினான். "கண்ணே, குயிலிக்கி, எனது சின்னஞ்சிறு பழமே, சற்றும் வருந்தாதே. நான் உன்னை வருத்தமாட்டேன். உண்ணும்போது நீ எனது மடியில் இருக்கலாம். ஓய்வானவேளை எனது அணைப்பில் இருக்கலாம். நிற்கும்போது எனது அருகில் நிற்கலாம். படுக்கும்போது என் பக்கத்தில் படுக்கலாம். எதற்கு அழுகிறாய்? எனக்கு உன்னில் அன்பு இல்லை என்றா? வீட்டிலே போதிய ரொட்டி இல்லையென்றா? சொத்துப்பத்து இல்லையென்றா? வேண்டாம்! வருந்தாதே! என்னிடத்தில் பால் தரும் பசுக்கள் பலவுண்டு. [7]மூாிக்கியும் மன்ஸிக்கியும் புவோலுக்காவும் காட்டுவௌியில் இருக்கின்றன. உணவில்லாமலே அவை எல்லாம் செழிப்பாய் இருக்கின்றன. அவற்றை மாலையில் கட்டி வைப்பதுமில்லை. காலையில் அவிழ்த்து விடுவதுமில்லை. அவற்றுக்கு வைக்கோல் வைப்பதுமில்லை. உப்பு உணவு கொடுப்பதுமில்லை."

லெம்மின்கைனன் தொடர்ந்தான். "நான் ஓர் உயர்ந்த குடும்பத்தவன் அல்ல என்று வருந்துகின்றாயா? நான் ஒரு நல்ல குலத்தில் பிறந்தவன் அல்ல என்றாலும் பரம்பரை பரம்பரையாக வந்த வாள் என்னிடம் இருக்கிறது. பிசாசுகள் தட்டியெடுத்த வாள் அது. இறைவன் தீட்டித் திருத்திய வாள் அது. அந்த வாளினால் எனது குலத்தைச் சிறக்க வைப்பேன்; எனது இனத்தை விளங்க வைப்பேன்."

"ஓ, அஹ்தியே, லெம்பியின் மைந்தனே" என்று தொடங்கினாள் குயிலிக்கி. "நீ என்னை உண்மையிலே நேசித்தால், வாழ்நாளெல்லாம் உனது துணையாக்க எண்ணினால், உனது அணைப்பில் ஓர் இனிய கோழியாய் வைத்திருக்க விரும்பினால், எனக்கு நீ ஒரு சத்தியம் செய்து தர வேண்டும். 'நான் இனிப் போருக்குப் போகேன். பொன் பொருள் வேண்டியும் போருக்குப் போகேன்' என்று சத்தியம் செய்ய வேண்டும்."

"நீயும் எனக்கு ஒரு சத்தியம் செய்து தர வேண்டும். 'இனிமேல் கிராமத்துக்குப் போகமாட்டேன், கிராமத்துப் பெண்களுடன் கூடமாட்டேன், அவர்களுடன் ஆடமாட்டேன்' என்று நீயும் சத்தியம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், நான் இனிப் போருக்குப் போகேன். பொன் பொருளுக்காகவும் போகேன்" என்று லெம்மின்கைனன் சொன்னான்.

சர்வ வல்லமை படைத்த இறைவன் முன்னிலையில் இருவரும் சத்தியம் செய்தனர். லெம்மின்கைனன் 'போருக்குப் போகமாட்டேன்' என்றான். குயிலிக்கி 'கிராமத்துக்குப் போக மாட்டேன்' என்றாள்.

தீவின் வௌிப்புற வயல் பக்கம் வந்ததும், லெம்மின்கைனன் குதிரையைச் சவுக்கால் ஓங்கி அடித்து இப்படிச் சொன்னான். "தீவின் வயல்களே, போய் வருகிறேன்! ஊசிமர வேரே, தாருமரத்தடியே, போய் வருகிறேன்! உங்கள் அருகில் கோடையில் உலாவினேன். குளிாிலே அலைந்தேன். முகில் மூடிய இரவுகளில் நடமாடித் திாிந்தேன். இப்போது விடைபெற்றுப் போய் வருகிறேன்!"

பயணம் தொடர்கையில், தூரத்தில் ஒரு வீடு கண்ணில் பட்டது. குயிலிக்கி, "அங்கே ஒரு சிறிய குடிசை தொிகிறது. பசியால் அடிபட்ட அந்தப் பாழ்பட்ட வீடு யாருடையதாக இருக்கலாம்" என்று கேட்டாள்.

"வீட்டைப்பற்றிக் கவலைப்படாதே" என்று சொன்னான் லெம்மின்கைனன். "பாாிய மரங்களை வீழ்த்திப் பொிய பலகைகள் அறுத்து எங்களுக்கு உயர்ந்த வீடு கட்டலாம்."

அவர்கள் வீட்டை நெருங்கியதும், லெம்மின்கைனனின் அன்னை வந்து, "நீ அந்நிய நாடுகளுக்குப் போய் வெகு காலமாகிவிட்டது, மகனே!" என்று சொன்னாள்.

"அங்கே என்னைப் பார்த்துச் சிாித்த பெண்களை மயக்கினேன். மாசற்ற மாதரைப் பழிவாங்கினேன். அவர்களில் சிறந்தவளை வண்டியில் கவர்ந்து வந்தேன். நான் தேடிச் சென்றது என்னுடன் கூடி வந்தது. சிறந்த படுக்கையைத் தட்டி விாி! மெதுமையான தலையணைகளைப் பதுமையாய்ப் போடு. எனது சொந்த நாட்டில் எனது சொந்த மனையாளுடன் நான் படுக்க வேண்டும்!" என்றான் அவன்.

லெம்மின்கைனனின் அன்னை மகிழ்ச்சியுற்றாள். "இறைவனே உமக்கு நன்றி! அடுப்பு மூட்ட ஓர் அாியவளை, நூல் நூற்க ஒரு நல்லவளை, துணி நெய்ய ஒரு தூயவளை, ஆடைகளை வெளுத்து அழகாக மடித்து வைக்க ஓர் ஆசை மருமகளை எனக்குத் தந்தீரே! ஆண்டவரே, எல்லாப் புகழும் உமக்கே உாியது!" என்றாள் அவள்.

"மகனே" என்றாள் அன்னை மீண்டும். "உனக்கு ஒரு நல்ல மனைவி கிடைத்திருக்கிறாள். கடவுள் நல்லவர். அவருக்கு நன்றி சொல்! உனது அருகில் இருப்பவள் பனிப்பறவையிலும் பார்க்கப் பாிசுத்தமானவள். கடல் நுரையிலும் பார்க்க வெண்மை நிறத்தவள். கடல் வாத்துக் கனிவானது. உனது காாிகை அதனிலும் கனிவானவள். விண்மீன் ஒளிமிக்கது. உனது அணங்கு அதைவிட ஒளிமிக்கவள்."

அன்னை தொடர்ந்தாள். "பொிய வீடொன்று கட்டுவோம். புதிய சுவர்களை அதற்கு வைப்போம். பொிய யன்னல்கள் பொருத்துவோம். கூடத்தைக் கூடவே கட்டி முடிப்போம். கூடத்தின் தரையை நீட்டி அகட்டிப் புதிய கதவுகள் ஆங்காங்கு பூட்டி, படிகளைத் தூண்களைப் பக்கத்தில் வைப்போம். ஏனென்றால் உன் மனைவி உன்னிலும் பார்க்க உயர் குடியினள்; உயர் குலத்தவள்."
     அட்டவணை    மேலே
12. சத்தியம் தவறுதல்

நீண்ட காலமாக லெம்மின்கைனன் தனது இளம் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் செய்துகொண்ட சத்தியங்களின்படி அவன் போருக்குப் போகவில்லை; அவளும் கிராமத்துக்குப் போகவில்லை.

ஒரு நாள் லெம்மின்கைனன் மீன் பிடிக்கப் போனான். இரவாகியும் அவன் வீடு திரும்பவில்லை. குயிலிக்கி மெதுவாக நழுவிக் கிராமத்துக்குப் போய்விட்டாள். லெம்மின்கைனன் வீடு திரும்பியதும், அவனுடைய தங்கை, "அன்பான அண்ணா, குயிலிக்கி கிராமத்துக்குப் போயிருந்தாள். அன்னிய வீடுகளில் நீண்ட கூந்தலையுடைய பெண்களோடு கும்மாளமிட்டாள்" என்று சொன்னாள்.

லெம்மின்கைனனுக்குக் கோபம் வந்தது. கோபத்தில் வெகுநேரம் குமைந்து கொண்டிருந்த அவன், தன் தாயிடம், "முதிர்ந்த என் தாயே, குயிலிக்கி கிராமத்துக்குப் போய் எங்கள் ஒப்பந்தத்தை மீறிவிட்டாள். நான் வடநாட்டுக்குப் போருக்குப் போகிறேன். வடநாட்டு இளைஞாின் நெருப்புத் தடங்களில் சண்டைக்குப் போகிறேன். எனது சட்டையை கறுத்தப் பாம்பின் நஞ்சில் கழுவிக் காயப்போடு!" என்று சொன்னான்.

"அன்பான லெம்மின்கைனா!" என்றாள் குயிலிக்கி. "நீ போருக்குப் போகாதே. நான் ஒரு சொர்ப்பனம் கண்டேன். ஆழ்ந்த உறக்கத்தில் அந்தக் கனவைக் கண்டேன். கனவில் உலைக்களம் போல ஒரு நெருப்பு எழுந்தது. யன்னல் பக்கமாய்த் தாவி வந்தது. சுவாில் பற்றி வீட்டுக்குள் நுழைந்தது. தரையிலிருந்து கூரை வரைக்கும் ஒரு நீவீழ்ச்சிபோலக் கொழுந்துவிட்டு எாிந்தது. "

"பெண்களின் கனவில் எனக்கு நம்பிக்கையில்லை. மனவிமாாின் சத்தியங்களிலும் நம்பிக்கையில்லை" என்ற லெம்மின்கைனன், தாயிடம் இப்படிச் சொன்னான்: "அம்மா, போருக்கு அணியும் சட்டையைக் கொண்டுவா! போருடைகள் அனைத்தையும் கொண்டு வா! நான் இப்போது போர்மது குடிக்க விரும்புகிறேன்."

"நான் சிந்தூர மரப் பீப்பாக்களில் நிறைய மதுவை அடைத்து வைத்திருக்கிறேன். உனக்குத் தேவையான மதுவை நான் கொண்டு வருவேன். நாள் முழுக்கக் குடிக்கலாம். ஆனால், மகனே, போருக்குப் போகாதே!" என்று கெஞ்சினாள் தாய்.

"வீட்டில் வடித்த 'பீாி'ல் எனக்கு அக்கறையில்லை. வீட்டு 'பீரை'க் குடிப்பதிலும் பார்க்கத் தோணி வலிக்கும் துடுப்பின் முனையில் ஆற்று நீரை ஏந்திக் குடிப்பேன். பொன்னும் வெள்ளியும் கொண்டுவர நான் வடநாட்டு மக்களின் களத்துக்குப் போருக்குப் போகிறேன். கொண்டுவா எனது போர்ச் சட்டையை!"

"என் அருமை மகனே, பொன்னும் வெள்ளியும் எங்கள் வீட்டில் நிறைய இருக்கின்றன. நேற்றுக்கூட எங்கள் அடிமை, பாம்புகள் நிறைந்த வயலை உழும்போது பூமிக்குள் புதைந்திருந்த இரும்புப் பெட்டகத்தின் மூடியை உழுமுனை கிளப்பியது. அதனுள் இருந்த நூற்றுக் கணக்கான ஆயிரக் கணக்கான காசுகளையும் கொண்டு வந்து களஞ்சிய அறையின் மேற்தட்டில் வைத்திருக்கிறேன்."

"வீட்டுக் காசு எனக்கு வேண்டவே வேண்டாம்" என்றான் லெம்மின்கைனன். "நான் ஒரு காசு உழைத்தாலும், அதைப் போாில் பெற்றால் பொிதாக நினைப்பேன். புகார் படிந்த வடநாட்டில் ஓர் அழகான மங்கை இருக்கிறாள். அந்த மங்கை இன்னமும் ஒரு மணவாளனைப் பெறவில்லை. அதை நான் எனது கண்களால் பார்க்க வேண்டும். எனது காதுகளால் கேட்க வேண்டும்."

லெம்மின்கைனனின் அன்னை சொன்னாள். "என் அருமை மகனே, ஓர் உயர் குடிப் பெண்ணான குயிலிக்கி உனக்கு வீட்டில் இருக்கிறாள். ஒரு கணவனின் கட்டிலில் இரு மனைவியர் படுப்பது கொடுமையப்பா!"

"குயிலிக்கி கிராமத்துக்கு ஓடுகிறாள். அவள் போய் எல்லா வீட்டிலும் படுக்கட்டும்; வம்பளக்கட்டும்; நீண்ட கூந்தல் பெண்களோடு கூத்தாடட்டும்."

அவனுடைய தாய் மீண்டும் எச்சாித்தாள். "வேண்டாமப்பா. போதிய மந்திர அறிவும் ஆற்றலும் இல்லாமல் வடக்கே போனால், அவர்கள் மந்திரப் பாடல்களால் உன்னை எாியும் காிக்குள் வாய்வரைக்கும் புதைத்துவிடுவார்கள்."

"முன்பொரு முறை மந்திரவாதிகள் என்னை மந்திரத்தால் கட்ட முயன்றனர்" என்ற லெம்மின்கைனன் தொடர்ந்தான். "ஒரு முறை, ஒரு கோடைகால இரவில் மூன்று லாப்புலாந்தியர் ஒரு பாறையில் நிர்வாணமாக நின்றனர். அவர்கள் என்னிடம் எதைப் பெற்றார்கள் தொியுமா? கோடாியால் பாறையைக் கொத்தினால் என்ன கிடைக்கும்? ஒன்றுமில்லை. அதைத்தான் பெற்றார்கள். குத்தூசியால் கல்லைக் குத்தினால் என்ன வரும்? ஒன்றுமில்லை. அதைத்தான் பெற்றார்கள். வழுக்கும் பனிக்கட்டியில் மரக்கட்டை சிக்கினால் என்ன நடக்கும்? வெற்று வீட்டில் மரணதேவன் போய் எதைப் பெறுவான்? அவர்கள் தங்கள் மந்திர சக்தியால் என்னை அழுக்குச் சேற்றில் ஆழ்த்தப் பார்த்தனர். தாடியைச் சதுப்பில் தாழ்த்தப் பார்த்தனர். ஆனால், அம்மா, நானும் ஒரு சக்தி வாய்ந்த மனிதன். நானே ஒரு மந்திரவாதியாக மாறினேன். மந்திரக் கணைகளுடன் புறப்பட்டவர்களை நான் மந்திரத்தால் கணைகளுடன் கட்டி துவோனியின் பயங்கர நீர்வீழ்ச்சியின் அடியிலுள்ள நீர்ச்சுழிக்குள் தள்ளினேன். அவர்கள் அங்கேயே கிடக்கட்டும். அவர்களுடைய தலை, தோள், மார்புகளைத் துளைத்துக் கொண்டு புல் முளைக்கட்டும்!"

அவனுடைய தாய் அவனை மீண்டும் எச்சாித்தாள். "வட நாட்டுக்கு நீ போக வேண்டாம்! போனால், பாவி மகனே, உனக்கு அழிவு வந்துவிடும். நீ [8]நூறு தடவை சொன்னாலும் வடநாட்டு மந்திரவாதிகளுக்கு நீ இணையானவன் என்று நான் நம்பமாட்டேன். வடநாட்டவாின் மொழியை நீ அறியமாட்டாய்!"

இதைக் கேட்டதும், தலை சீவிக்கொண்டிருந்த லெம்மின்கைனன் சீப்பை எறிந்தான். சீப்புச் சுவாில் பட்டுத் தூணில் மோதிற்று. "இந்த லெம்மின்கைனனுக்கு மரணம் ஏற்பட்டால் இந்தச் சீப்பிலிருந்து இரத்த ஆறு ஓடும்."

அவன் தாயாாின் எச்சாிக்கையைப் பொருட்படுத்தாமல், ஓர் இரும்புச் சட்டையை அணிந்துகொண்டு, "மனிதருக்கு மார்புக் கவசம் பாதுகாப்பானது. ஆனால் மந்திரவாதிகள் மத்தியில் இரும்புக் கவசம் இன்னமும் சிறந்தது" என்றவன் தொடர்ந்து சொன்னான். "வாள்வீரரே, பூமியிலிருந்து எழுங்கள்! போர்வீரரே, கிணற்றிலிருந்து எழுங்கள்! வில்வீரரே, ஆற்றிலிருந்து எழுங்கள்! வனமே, உனது வீரருடன் எழுக! அடவியே, உனது ஆட்களோடு எழுக!"

லெம்மின்கைனன் தான் வடநாட்டு மந்திரவாதிகளுடன் நடத்தப் போகிற போாில் தனக்கு உதவ வருமாறு கடலின், காட்டின், மலையின், அருவியின் மந்திர சக்திகளை அழைத்தான். வானத்தில் முகிலையும் நீராவியையும் ஆளுகின்ற மானிட முதல்வனையும் உதவிக்கு வருமாறு மந்திரப் பாடல்களைப் பாடினான்.

பற்றைக்குள் நின்ற பொன்னிறப் பிடாிமயிர்க் குதிரையை வருமாறு சீழ்க்கை அடித்தான் அவன். தீபோன்ற சென்னிற குதிரையை ஏர்க்காலில் பூட்டினான். வண்டியில் அமர்ந்தான். சவுக்கை வீசினான். குதிரை பறந்தது. வண்டி விரைந்தது. பயணம் தொடர்ந்தது. வழித்தொலை குறைந்தது.

மூன்று நாள் பயணத்தின் பின்னர் ஒரு கிராமத்துக்கு வந்தான். அங்கே தூரத்தில் இருந்த ஒரு வீட்டுக்குப் போய், "இந்தக் குதிரையின் அணிகலன்களைக் கழற்றுவதற்கு யாராவது இருக்கிறீர்களா?" என்று கேட்டான்.

அங்கே நிலத்திலிருந்த ஒரு பிள்ளை, "அப்படி யாரும் இங்கே இல்லை" என்றது.

அடுத்ததாக அவன் சென்ற வீட்டில் ஒரு கிழவி, "உனது குதிரையின் அணிகலன்களை அவிழ்க்க இங்கே பலர் இருக்கிறார்கள். எளியவா, பொழுது சாயும் முன்னர் உன்னை உனது அப்பன் வீட்டுக்கு அனுப்பவும் நூறு பேர் இருக்கிறார்கள்!" என்றாள்.

லெம்மின்கைனன் சொன்னான். "கிழவியே, உன்னைக் கொல்ல வேண்டும்! உனது வளைந்த தாடையை நொருக்க வேண்டும்!"

அதன்பின், அவன் உயர்ந்த தெருவிலுள்ள உயர்ந்த வீட்டுக்குப் போனான். அங்கே ஒரு மந்திரம் சொன்னான். "பிசாசே, நாயின் வாயைக் கட்டு! பிசாசே, நாயின் அலகைக் கட்டு! எனது வரவை அது அறிவிக்காமல் இருக்கட்டும்!"

தோட்டத்தின் உள்ளே நுழைந்ததும் அவன் சவுக்கால் நிலத்தில் அடித்தான். அந்தப் புகாாில் ஒரு சிறு மனிதன் தோன்றினான். அவன் குதிரையின் அணிகலன்களை அவிழ்த்து ஏர்க்காலைக் கீழே பணித்தான். யாருமறியாமல் சுவாில் பதித்த பலகைகளில் பூசிய பாசிகளின் ஊடாக உள்ளே நடப்பதைக் கேட்டான் லெம்மின்கைனன். உள்ளே அன்னியமான குரல்களில் பாடல்கள் கேட்டன. சுவாின் துவாரத்தின் வழியாய் உள்ளே பார்த்தான். உள்ளே ஓர் அறையில் பலர் இருந்தார்கள். வாங்குகளிலும் சுவர்ப் பக்கத்திலும் வாயில்களிலும் பாடகர்கள் நிரம்பியிருந்தார்கள். தூரத்தில் சுவர்ப் பக்கத்திலும் மூலைகளிலும் மந்திரவாதிகள் பிசாசின் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.

லெம்மின்கைனன் துணிந்து உள்ளே நுழைந்து ஒரு மூலையில் இடம் பிடித்துக்கொண்டான். அவன், "பாடல்கள் முடிவிலே பரவசப்படுத்தும். சின்னஞ்சிறு பாடல்கள் சிந்தையில் இனிக்கும். நடுவில் புகுந்து குழப்புவதிலும் பார்க்கப் பாடல்களைப் புத்தியாய்ப் பாதியில் நிறுத்துவது நல்லது" என்று சொன்னான்.

நடுவில் இருந்த லொவ்ஹி என்னும் முதியவள், "இங்கே புதிதாக வரும் மனிதாின் எலும்பைக் கடித்து இரத்தம் குடிக்கும் இரும்புச் சடை நாய் ஒன்று இருந்தது. அது உன்னைப் பார்த்துக் குரைக்கவேயில்லை. யாரப்பா நீ?" என்று கேட்டாள்.

"நாய்கள் உண்பதற்காக நான் இங்கே வரவில்லை" என்றான் லெம்மின்கைனன். "நிறைய மந்திரங்களைப் பயின்ற பின்னரே இங்கு வந்திருக்கிறேன். நான் எங்கும் ஒரு தேர்ந்த மந்தரவாதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, நான் சிறுவனாக இருக்கையில் மூன்று கோடை இரவுகளிலும் மூன்று இலையுதிர் காலத்து இரவுகளிலும் என்னை என் அன்னை கழுவினாள். வீட்டிலே நான் ஒரு சாமானியப் பாடகன். வௌியிலே நான் ஒரு மந்திரப் பாடகன்."

லெம்மின்கைனன் மந்திரப் பாடல்களைப் பாடத் தொங்கினான். அவனுடைய ஆடையில் தீயொளி திகழ்ந்தது. விழிகளில் தீப்பொறி சிந்திப் பறந்தது. அங்கிருந்த சிறந்த பாடகர்களைச் சிறிய பாடகர்கள் ஆக்கினான். அவர்களின் வாய்களில் கற்களைத் திணித்து முதுகுகளில் பாறைகளை ஏற்றினான்.

அங்கு இருந்தவர்கள் முதியவராயினும் இயைவராயினும் அனைவரையும் மந்திர சக்தியால் மாற்றியமைத்தான். ஆனால் ஒருவனை மட்டும் தவிர்த்துவிட்டான். அவன் ஒரு கொடியவன்; இடையன்; கிழவன்; கண் கெட்ட கபோதி. அவன், "லெம்பியின் மைந்தா, நீ முதியவரையும் இளையவரையும் சபித்துப் பாடினாயே! என்னை மட்டும் ஏன் சபிக்கவில்லை?"என்று கேட்டான்.

"நான் தொடக்கூட முடியாத மிகக் கொடியவன் நீ! இளைஞனாக இருக்கையில் நீ உன் தாயின் பிள்ளையைக் கெடுத்தாய். சகோதாியை மானபங்கப் படுத்தினாய். நீாிலும் நிலத்திலும் சேற்றிலும் குதிரைகளை முடக்கினாய்!"

ஈரத் தொப்பி அணிந்த அந்த இடையன் எதுவும் பேசாமலே வௌியேறினான். துவோனலா நதிக்குச் சென்று ஒரு நீர்ச்சுழி அருகில் காத்திருந்தான். லெம்மின்கைனன் வீடு திரும்ப அந்த வழியாலே வருவான் என்று அவன் பார்த்திருந்தான்.
     அட்டவணை    மேலே
13. பிசாசின் காட்டெருது

அங்கே லொவ்ஹி மட்டுமே நின்றிருந்தாள். "வடநாட்டின் முதியவளே, உனது பெண்களில் ஒருத்தியை எனக்குத் தா! மிகவும் உயர்ந்த மகளை, மிகவும் சிறந்த மகளை எனக்குத் தா!" என்று கேட்டான் லெம்மின்கைனன்.

"நான் உனக்கு எனது எந்தப் பெண்ணையும் தரேன். சிறந்தவளையும் தரேன். சிறப்பு அற்றவளையும் தரேன். உயர்ந்தவளையும் தரேன். உயரம் குறைந்தவளையும் தரேன். ஏனென்றால் உனக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கிறாள்" என்றாள் லொவ்ஹி.

"நான் அவளைக் கிராமத்துக்கு அனுப்பிவிட்டேன். உனது பெண்களில் சிறந்தவளைத் தருவாய்! நீண்ட கூந்தலுடையவளைத் தருவாய்!"

"தரங்கெட்ட ஒருவனுக்கும் தரேன் என் மகளை. நீ பேய் வயலில் பனிக்கட்டியில் சறுக்கிச் சென்று, பேய் எருதை வென்று வந்தால், கூந்தலில் பூச் சூடிய என் பூவையாில் ஒருத்தியை உனக்குத் தருவேன்" என்று லொவ்ஹி சொன்னாள்.

லெம்மின்கைனன் ஈட்டிக்கு முனையைப் பொருத்தி குறுக்குவில்லுக்கு நாணைக் கட்டினான். பின்னர் இப்படிச் சொன்னான். "ஈட்டிகளும் வில்லிலே நாணும் ஆயத்தமாகின. ஆனால் பனிக்கட்டியில் சறுக்கிச் செல்லச் சறுக்கணி இல்லையே!"

அவன் கௌப்பியின் தோட்டத்துக்குச் சென்றான். "அழகான கௌப்பியே, பேய் வயலில் உலாவும் காட்டெருதைப் பிடிக்கப் போகிறேன். எனக்குச் சிறப்பான சறுக்கணிகள் செய்து தருவாய்!" என்று கேட்டான்.

"பேய் வயலில் காட்டெருதைத் துரத்துவது ஒரு முட்டாள்த்தனமான வேலை. உனக்கு மிகுந்த துன்பத்தோடு உளுத்த மரத் துண்டுதான் கிடைக்கும்" என்றான் கௌப்பி.

அதை அலட்சியம் செய்தான் லெம்மின்கைனன். அவன் விடாப்பிடியாக நின்றதால், கௌப்பி இலையுதிர் காலத்தில் இடது சறுக்கணி செய்தான். குளிர் காலத்தில் வலது சறுக்கணி செய்தான். ஒரு நாள் சறுக்குத் தண்டுகள் செய்து வளையங்களையும் செய்து முடித்தான். தண்டு செய்ததின் கூலியாக நாய்த் தோலையும் வளையங்களின் செலவாக நாித் தோலையும் பெற்றான்.

இப்பொழுது சறுக்கணிகள் தயாராகிவிட்டன. ஊன்றிச் செல்லத் தண்டுகள் செதுக்கப்பட்டுவிட்டன. தண்டுகளின் நுனியில் வளையங்களும் பொருத்தப்பட்டுவிட்டன. சறுக்கணிகளுக்குக் கலைமானின் கொழுப்பைப் பூசித் தேய்த்தான். பின்னர், "இந்தச் சறுக்கணிகளைத் தள்ளிவிட இங்கே யாராவது இருக்கிறார்களா?" என்று கேட்டான்.

லெம்மின்கைனன் அம்புக்கூட்டை முதுகிலே மாட்டினான். குறுக்குவில்லைத் தோளில் கொளுவினான். தண்டுகளைக் கையில் பிடித்தான். சறுக்கும் அணியை முன்னே உதைத்துத் தள்ளி, "இறைவன் படைத்த இந்தக் காற்றினில், சறுக்கிச் செல்லும் கலேவாவின் மைந்தனாகிய நான் கைப்பற்ற முடியாத நாலுகால் பிராணி எதுவுமே இல்லை" என்று சொன்னான்.

இதை அறிந்த பிசாசு ஒரு காட்டெருதைப் படைத்தது. அதற்கு அடிமரத்தில் தலையைச் செய்து, மரக் கிளைகளில் கொம்புகள் வைத்து, சுள்ளிகளால் பாதங்கள் செய்து, சேற்றுக் கம்பினால் கால்களைச் செய்தது. வேலித் தம்பத்தால் முதுகையும் காய்ந்த புற்களால் நரம்புகளையும் ஆம்பல் மலாினால் கண்களையும் ஆம்பல் இலையால் காதுகளையும் அமைத்தது. அதற்குத் தேவதாருவின் பட்டையில் தோலைச் செய்து, உளுத்த மரத்தில் தசையையும் படைத்தது.

பிசாசு தான் படைத்த காட்டெருதுக்கு இப்படிச் சொன்னது: "பிசாசின் எருதே, ஓடு! லாப்பியாின் வயல்வௌிகளில் ஓடி லெம்மின்கைனனை அலைக்கழித்துக் களைக்கவை!"

காட்டெருது ஓடிற்று. வயல்களிலும் புல்வௌிகளிலும் ஓடிற்று. குடிசைகளின் பக்கமாய் வந்தது. சமையல் தொட்டியை உதைத்தது. கலயங்களை அடுப்புக்குள் கவிழ்த்தது. இறச்சியையும் ரசத்தையும் சிந்திற்று.

அங்கே ஒரே கூச்சலும் கூக்குரலுமாக இருந்தது. நாய்கள் குரைத்தன. பிள்ளைகள் அழுதனர். பெண்கள் சிாித்தனர். மற்றோர் மறுகினர்.

இதே நேரத்தில் லெம்மின்கைனன் எருதைத் துரத்திக் கொண்டு காடு வயல் சகதியெல்லாம் ஓடினான். அவனுடைய சறுக்கணிகளில் தீப்பொறி பறந்தது. தண்டுகளில் புகை கிளம்பியது. ஆனால் அவன் எருதைக் காணவில்லை.

அவன் பிசாசின் மலைகளையும் இடுகாட்டு வௌிகளையும் கடந்த சென்றபோது, அவனை விழுங்க மரணதேவன் வாயைப் பிளந்தான். ஆனால் அவனால் லெம்மின்கைனனைத் தொட முடியவில்லை.

லாப்புலாந்தின் மறுகரையை அவன் அடைந்தபோது, அங்கே நாய்கள் குரைத்தன. பிள்ளைகள் அழுதனர். பெண்கள் சிாித்தனர். மற்றோர் மறுகினர். "இங்கே என்ன கூச்சல்?" என்று அவன் கேட்டான்.

"காட்டெருது சமையல் கலயங்களை அடுப்புக்குள் கவிழ்த்தது. ரசத்தை நிலத்தில் சிந்திற்று" என்று அவர்கள் சொன்னார்கள்.

செந்நிறக் கன்னத்து லெம்மின்கைனன் புற்றரையில் பாம்பு ஓடுவதுபோலச் சறுக்கணியை நிலத்தில் உதைத்துத் தள்ளித் தண்டுகளைக் கையில் பிடித்தான். போகும்போது இப்படிச் சொன்னான்: "லாப்புலாந்தின் ஆண்கள் எல்லோரும் காட்டெருதைச் சுமக்க வரட்டும்! பெண்கள் சட்டிகளைக் கழுவி வைக்கட்டும்! பிள்ளைகள் விறகுச் சுள்ளிகளைப் பொறுக்கி வரட்டும்! லாப்பில் இருக்கும் கலயங்கள் எல்லாம் எருதைச் சமைக்கத் தயாராகட்டும்!"

முதல் முறை சறுக்கணிகளைத் தள்ளி விரைந்தபோது அவன் பார்வையிலிருந்து மறைந்து போனான். அடுத்த முறையில் அவனைப்பற்றி எதுவும் செவிகளில் விழவில்லை. மூன்றாம் முயற்சியில் அவன் காட்டெருதின் இடத்தை அடைந்துவிட்டான்.

பின்னர் மாப்பிள் மரத்துக் கிளையை ஒடித்து மிலாறு மரத்துக் கழியை எடுத்து சிந்தூர மரத்து அடைப்புள் எருதை அடைத்தான். "எருதே, இங்கேயே நில்!" என்று கூறிய லெம்மின்கைனன் தொடர்ந்தான். "எனக்கும் இங்கே இருக்க விருப்பம்தான், பக்கத்தில் படுக்க ஒரு அழகான பெண் இருந்தால்!"

இதைக் கேட்ட எருது சினம் கொண்டது. "உனது பக்கத்தில படுக்க பிசாசு ஒரு பெண்ணை அனுப்பட்டும்" என்ற எருது கட்டை அறுத்தது. கம்பை ஒடித்தது. வேலிமேல் பாய்ந்தது. ஓடி மறைந்தது.

கோபம் கொண்ட லெம்மின்கைனன் வேகமாக முன்னே பாய்ந்து காட்டெருதைத் துரத்தினான். அவன் பலமாக உந்திச் செல்கையில் இடது சறுக்கணி வெடித்தது. வலது சறுக்கணி உடைந்தது. தண்டு வளையத்தருகில் ஒடிந்தது. ஆனால் காட்டெருது காணாமல் போனது.

பின்னர் குறும்பன் லெம்மின்கைனன் ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய் இனிவரும் சொற்களில் இப்படிச் சொன்னான்: "இனிமேல் என்னைப்போல இன்னொரு மனிதன் காட்டெருதைத் துரத்திச் சறுக்கிச் செல்ல வேண்டாம். நான் எனது சறுக்கணிகளையும் தண்டுகளையும் அழித்ததோடு நல்ல ஈட்டிகளையும் இழந்தேன்."
     அட்டவணை    மேலே
14. லெம்மின்கைனனின் மரணம்

குறும்பன் லெம்மின்கைனன் சிந்தனை செய்தான். 'என்ன செய்யலாம்? இந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு வீடு திரும்புவதா? அல்லது காட்டெருதைப் பிடிக்க மீண்டும் முயற்சிக்கலாமா?'

மீண்டும் முயற்சிப்பது என்று முடிவு செய்து பிரார்த்தனை செய்தான்.

"மானிட முதல்வனே, விண்ணகத் தந்தையே, நல்ல கனமில்லாத சறுக்கணிகளைத் தாரும்! அதனால் காட்டிலும் மேட்டிலும் சறுக்கிக் காட்டெருதின் சுவடுகளைத் தொடர வழிகாட்டும்! நான் காட்டரசனின் பாதை வழியாகச் செல்கிறேன். மலைகளே வாழ்த்துக்கள்! பசுமை மரங்களே வாழ்த்துக்கள்!

"வனத் தலைவன் தப்பியோவே, எனக்கு அருள் புாிவீர்! காட்டெருதின் மலையுச்சிக்கு வழிகாட்டும்!

"தப்பியோ மைந்தனே, நுயூாிக்கியே, மடையன் எனக்கு வழி தொியாது. மலைக்குச் செல்லும் வழியில் அடையாளம் இட்டுவையும்!

"வனத்தின் தலைவியே, மியலிக்கியே, தூயவளே, சாியான பாதையில் என்னைப் பயணிக்க வை! உனது இடுப்பு வளையத்திலிருந்து தங்கத் திறவுகோலை எடு! வனக் கோட்டையைத் திற! உனக்கு இது சிரமமாயின் உனது பணிப்பெண்களை அழைத்து ஆணையிடு!

"தப்பியோவின் மகளே, உனது மதுர வாயால் காட்டுக் குழலை இசைப்பாய்! துயில் கொள்ளும் மியலிக்கியின் செவிகளில் உன்னிசை வீழ்ந்து அவள் துயில் கலைந்து எழட்டும்! நான் எனது தங்க நாவால் இரந்து நிற்பது அவளுடைய காதுகளில் விழுந்ததாகத் தொியவில்லையே!"

லெம்மின்கைனன் வனதேவதைகளை வணங்கிய பின்னர், காட்டிலும் மேட்டிலும் சதுப்பிலும் கடவுளின் மலையிலும் பிசாசின் காித் தடத்திலும் சறுக்கிச் சென்றான். மூன்றாம் நாளில் ஒரு பொிய பாறையில் ஏறி நின்றான். அங்கிருந்து வட திசைப் பக்கமாய் சேற்று நிலத்துக்கு அப்பால் பார்த்தபோது குன்றுகளின் கீழ் பொன்னிறக் கதவுகள் மின்னும் தப்பியோவின் வீட்டைக் கண்டான். அவன் அந்த வீட்டின் அருகில் சென்று ஆறாவது யன்னல் ஊடாக உள்ளே எட்டிப் பார்த்தான். அங்கே வன விளையாட்டுப் பெண்கள் வழமையான தொழில் உடையிலும் அழுக்குக் கந்தையிலும் இருந்தனர்.

லெம்மின்கைனன் சொன்னான்: "வனத் தலைவி, நீ ஏன் உனது தொழில் ஆடையில் இருக்கிறாய்? பார்வைக்குக் கருமையாகவும் இருக்கிறாய். உனது தோற்றம் சோர்வைத் தருகிறது. மார்புகள் விரக்தியைத் தருகின்றன. முன்னொரு முறை நான் காட்டில் பயணித்தபோது மூன்று கோட்டைகளைக் கண்டேன். ஒன்று மரத்தினாலும் மற்றது எலும்பினாலும் மூன்றாவது கல்லினாலும் கட்டியிருந்தன. ஒவ்வொரு கோட்டைக்கும் ஆறாறு யன்னல்கள் இருந்தன. நான் அதன் உள்ளே பார்த்தேன். அங்கே காட்டரசனும் காட்டரசியும் அவர்களுடைய மகள் தெல்லர்வோவும் மற்றும் குடும்பத்தினரும் இருந்தனர். அவர்கள் பொன்னிலும் வெள்ளியிலும் ஆபரணங்களை அணிந்திருந்தனர். காட்டரசியின் கைகளிலும் கழுத்திலும் விரல்களிலும், கூந்தலிலும்கூடப் பொன் மின்னிக்கொண்டிருந்தது.

"கருணையுள்ள காட்டரசியே, வனத்தின் இனியவளே. வைக்கோல் காலணிகளையும் அழுக்குக் கந்தலையும் கழற்றி வை. செல்வத்தின் சின்னமான சிறப்பான உடைகளை அணிந்துகொள். எனது வேட்டையின் இரையைத் தேடிச் செல்லும் இந்த நாளில் ஆடலுக்கான ஆடையை அணிவாய்!

"காட்டரசனே, நரைத்த தாடியனே, தளிாில் தொப்பியும் பாசியில் ஆடையும் அணிந்தவனே, காடு முழுவதையும் அலங்காரம் செய்வாய்! பொன்னாலும் செம்பாலும் வெள்ளியாலும் எல்லா மரங்களையும் அலங்காித்துப் பிரகாசிக்கச் செய்வாய்!

"வனத்தின் மகளே, தூலிக்கியே, உனது மந்தையைக் காட்டு வௌிகளுக்கு விரட்டு! அவற்றைப் பாதை வழியாக நடத்திச் செல்! காட்டு மிருகங்கள் குறுக்கே வந்தால், கொம்பைப் பிடித்துத் தூர விலக்கு! பாதையின் குறுக்கே மரக்குற்றி இருந்தால், அதனையும் தூக்கித் தூரப் போடு! பாதையின் நடுவே ஆறு இருந்தால், சிவப்புத் துணியால் படிகளைக் கட்டு!"

"தப்பியோவே, காட்டரசனே, நரைத்த தாடி முதியோனே, தப்பியோ மனைவியே, காட்டின் தலைவியே, நீல ஆடையும் சிவப்புக் காலுறையும் அணிந்து வாருங்கள்! என்னிடம் நிறையப் பொன்னும் வெள்ளியும் இருக்கின்றன. இவற்றை வெகுமதியாகப் பெற்றுக்கொண்டு எனது உதவிக்கு வாருங்கள்!"

இவ்விதமாக லெம்மின்கைனன் மந்திரப் பாடல்களைப் பாடி காட்டரசனையும் காட்டரசியையும் மகிழ்வித்தான். அவர்கள் காட்டெருதைத் துரத்தி அவனுடைய பாதையில் கொண்டு வந்து விட்டார்கள். அவன் உடனே சுருக்குக் கயிற்றை வீசி அதைப் பிணைத்தான்.

அதன்பின் லெம்மின்கைனன் வடக்கே வடநாட்டுக்கு வந்து வடநாட்டுத் தலைவியைச் சந்தித்தான். "லொவ்ஹியே, காட்டெருதைப் பிடித்துக் கட்டினேன். இப்பொழுது உன் பெண்களில் ஒருத்தியை எனக்கு மனைவியாய்த் தருவாய்!" என்றான்.

லொவ்ஹி சொன்னாள்: "நான் எனது பெண்களில் ஒருத்தியை உனக்குத் தருவேன். ஆனால் இன்னுமொரு வேலை இருக்கிறது. பேயின் புல்வௌியில் வாயில் நுரை தள்ளியபடி பழுப்பு நிறக் குதிரை ஒன்று நிற்கிறது. அதைப் பிடித்து வந்தால் எனது பெண்ணைப் பெறலாம்."

லெம்மின்கைனன் பொன் கடிவாளத்தையும் வெள்ளி வாய்ப்பட்டியையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். இடுப்பில் வாரும் தோளில் கடிவாளமும் சுமந்தபடி புல்வௌிகள் எங்கும் குதிரையைத் தேடித் திாிந்தான். எங்கிருந்தாவது குதிரையின் கனைத்தல் கேட்காதா என்று காத்திருந்தான்.

மூன்றாம் நாளில் ஒரு மலை முடியில் ஏறி நின்று பார்த்தான். கதிரவனின் கீழே தலையைத் திருப்பினான். அங்கே ஒரு மணற் தரையில் அந்தப் பேய்க் குதிரை பொன்னிறச் சடையுடன் நின்றது. அதன் முதுகிலிருந்து நெருப்பு எழுந்தது. பிடர் மயிாிலிருந்து புகை கிளர்ந்தது.

லெம்மின்கைனன் பிரார்த்தனை செய்தான். "மானிட முதல்வனே, மேகங்களைத் தாங்கும் தயாபரனே, நீராவி அனைத்தையும் ஆள்பவனே, உமது யன்னலைத் திறந்து, இந்தப் பேய்க் குதிரையின் மேல் பனிக்கட்டிகளைக் கொட்டும்!"

மானிட முதல்வனுக்கு லெம்மின்கைனனின் பிரார்த்தனை கேட்டது. அவர் வானத்தைப் பிளந்தார். பனிக்கட்டியையும் பனிக்கூழையும் குதிரையின் மேல் கொட்டு கொட்டென்று கொட்டினார். ஒவ்வொரு கட்டியும் குதிரைத் தலையிலும் சிறியது; ஆனால் மனிதத் தலையிலும் பொியது.

லெம்மின்கைனன் குதிரையை நெருங்கினான். அதனிடம், "மலைவாழ் குதிரையே, நுரைவாய்ப் பாியே, உனது தங்க மூக்கையும் வெள்ளித் தலையையும் இந்தத் தங்கக் கடிவாளத்துள் நுழைப்பாய்! உன்னைக் கொடுமையாய் நடத்த மாட்டேன். கடுமையாய்ச் சவாாியும் செய்ய மாட்டேன். பட்டினால் செய்த பட்டியால் கட்டிச் சிறிது தூரமே கொண்டு செல்வேன்."

அந்தப் பழுப்பு நிற, நுரை வாய்க் குதிரை தனது தங்க மூக்கையும் வெள்ளித் தலையையும் கடிவாளத்தினுள் நுழைத்தது. கடிவாளத்தைக் கட்டியபின், அதன் முதுகில் ஏறி அமர்ந்து வடக்கு நோக்கிப் பயணமானான். "லொவ்ஹியே, புல்வௌியில் நின்ற பேய்க் குதிரைக்குக் கடிவாளமிட்டுக் கொண்டு வந்திருக்கிறேன். உன் மகளைக் கொண்டு வா!" என்றான் அவன்.

லொவ்ஹி இன்னுமொரு வேலையைச் சொன்னாள். [9]"துவோனியின் கறுப்பு நதியில் ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது. அதிலுள்ள அன்னத்தை ஒற்றை அம்பினால் அடித்து வீழ்த்தினால்தான் எனது மகளைத் தருவேன்" என்றாள்.

பின்னர் அவன் அந்தக் கழுத்து நீண்ட பறவையைத் தேடிக் கறுப்பு நதிக்குச் சென்றான். அம்புக்கூட்டை முதுகிலும் குறுக்குவில்லைத் தோளிலும் சுமந்தபடி அவன் புனித நதியின் நீச்சுழிக்குச் சென்றான்.

அங்கே லெம்மின்கைனனால் இழிவுபடுத்தப்பட்ட ஈரத் தொப்பி இடையன் லெம்மின்கைனனுக்காகக் காத்திருந்தான். லெம்மின்கைனன் அண்மையில் வந்ததும், இடையன் ஒரு நீர்ப்பாம்பை எடுத்து லெம்மின்கைனனின் இதயத்தில் ஈரலில் இடது கக்கத்தில் வலது தோளில் செலுத்தினான்.

நோ அதிகாித்ததும் லெம்மின்கைனன் வாய்விட்டுக் கத்தினான். "நான் ஒரு பிழை செய்துவிட்டேனே! ஆபத்துக் காலத்தில் பயன்படக்கூடிய மந்திரத்தை என் அன்னையிடம் கேட்க மறந்துவிட்டேனே! நீர்ப்பாம்பின் கடிக்கான மந்திரம் எனக்குத் தொியவில்லையே! அம்மா, உன் மகனுக்கு நேர்ந்ததை நீ அறிவாயா? என்னை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற வருவாயா? என்னை இந்த மரணத்திலிருந்து விடுவிக்க வருவாயா?" என்று அழுதான்.

ஆற்று நீர் அவன் உடலை துவோனலாவின் இருப்பிடங்களுக்கு அடித்துச் சென்றது. துவோனியின் மகன் அந்த உடலை ஐந்து துண்டுகளாய், எட்டுத் துண்டுகளாய் வெட்டி, மணலா என்னும் மரண உலகின் ஆழநீாில் வீசினான். "உனது அம்புகளுடனும் குறுக்குவில்லுடனும் இங்கேயே கிடந்து அன்னங்களையும் பறவைகளையும் வேட்டையாடு!" என்று அவன் சொன்னான்.

இப்படியாக, அந்த ஈரத் தொப்பி இடையனால் லெம்மின்கைனனுக்கு கறுப்பு நதியில் மரணம் விளைந்தது.
     அட்டவணை    மேலே
15. லெம்மின்கைனனின் மீட்சி

வீட்டில் லெம்மின்கைனனின் அன்னை அவனைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள். "அவன் எங்கே போனான்? அவன் திரும்பி வரவுமில்லை. அவனைப்பற்றிய செய்தியும் எதுவும் இல்லையே!"

தனது தசையின் தசை எங்கே அசைகிறதோ, இரத்தத்தின் இரத்தம் எங்கே சுழல்கிறதோ என்று அந்த ஏழை அன்னை ஏங்கினாள். 'பசுமை நிறைந்த மலைப் பக்கம் சென்றானோ? புல்வௌிகளில் அலைந்து திாிகிறானோ? கடலில் பயணத்தை மேற்கொண்டானோ? நுரைத்த அலைகளின் மேலேதானோ? ஏதாவது பொிய யுத்தமோ? பயங்கரமான போரோ? காலிலும் முழங்காலிலும் இரத்தம் வடிய எங்காவது அடிபட்டுக் கிடக்கிறானோ?'

அவனுடைய மனைவி குயிலிக்கியும் வாசலையும் வழியையும் மாறிமாறிப் பார்த்துக் காத்திருந்தாள். அவன் விட்டுச் சென்ற சீப்பையும் பார்த்தாள். காலையிலும் பார்த்தாள். மாலையிலும் பார்த்தாள்.

ஒரு நாள் சீப்பிலிருந்து இரத்தம் வடிந்தது. குயிலிக்கி குரலெடுத்துக் கத்தினாள். "ஐயோ, என் கணவன் இறந்துவிட்டான். தொியாத ஒரு பாதையால் திரும்ப முடியாத இடத்துக்கு லெம்மின்கைனன் போய்விட்டான். சீப்பிலிருந்து இரத்தம் வடிகிறதே!"

பின்னர் லெம்மின்கைனனின் அன்னை வந்தாள். சீப்பிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்டாள். கவலையடைந்தாள். கண்ணீர்விட்டாள். "ஓ, நான் ஒரு பாவி! என் அருமை மகனுக்கு அழிவு வந்ததே! குறும்பன் லெம்மின்கைனனை நான் இழந்துவிட்டேனே!"

அவள் தனது ஆடைகளைக் கையிலெடுத்துக் கொண்டு ஓடினாள்; வெகு தூரம் ஓடினாள். அவள் செல்லும்போது மலைகள் அதிர்ந்தன. மேடுகள் தாழ்ந்தன. மடுக்கள் உயர்ந்தன.

கடைசியில் வடநாட்டுக்கு வந்து சேர்ந்த அவள், வடநாட்டுத் தலைவியிடம், "லொவ்ஹி, என் மகன் லெம்மின்கைனனை எங்கே அனுப்பினாய், சொல்!" என்று கேட்டாள்.

"உன் மகனைப்பற்றி எனக்கு எதுவுமே தொியாது" என்றாள் லொவ்ஹி. "அவனை நான் ஒரு குதிரை வண்டியில் இருத்தி அனுப்பினேன். அவன் பனிமழையில் புதைந்து போனானோ! கடலில் வீழ்ந்து உறைபனியில் உறைந்து போனானோ! ஓநாயோ கரடியோ அடித்துக் கொன்றதோ! எனக்கு ஒன்றுமே தொியாது."

"பொய்" என்றாள் லெம்மின்கைனனின் அன்னை. "ஓநாய்கள் எனது இனத்தைத் தின்னாது! கரடிகள் எனது உறவைக் கொல்லாது! அவனை எங்கே அனுப்பினாய் என்ற உண்மையைச் சொல்லாவிட்டால், களஞ்சிய அறையின் கதவுகளை உடைப்பேன். சம்போவின் பூட்டுகளைப் பெயர்ப்பேன்."

வடநாட்டின் முதியவள், "அவனுக்கு உண்ண உணவும் குடிக்கப் பானமும் கொடுத்தேன். உபசாரம் எல்லாம் செய்தேன். தோணியில் இருத்தி நீர்வீழ்ச்சிக்கு அனுப்பினேன். எங்கே போனானோ? என்ன ஆனானோ? எனக்குத் தொியாது" என்று சொன்னாள்.

"இதுவும் உண்மையல்ல. பொய் சொன்னது இதுவே கடைசியாக இருக்கட்டும்! இனிமேலும் பொய் சொன்னால் உனக்கு இறப்பு நேரும்!"

"இப்போது நான் உண்மையைச் சொல்கிறேன். முதலில் காட்டெருதின் பின்னே சறுக்க அனுப்பினேன். பிறகு பேய்க் குதிரையைப் பிடிக்க அனுப்பினேன். கடைசியாகப் புனித அன்னத்தை எய்ய அனுப்பினேன். அவன் ஏன் திரும்பி வரவில்லை? வந்து ஏன் என் மகளைக் கேட்கவில்லை என்று எனக்குத் தொியாது" என்றாள் லொவ்ஹி.

தாய் தொலைந்த மகனைத் தேடிப் புறப்பட்டாள். அவள் ஓர் ஓநாயைப்போல ஓடினாள் சேற்றிலே. கரடியைப்போல தேடினாள் காட்டிலே. நீர்நாய்போல நீந்தினாள் நீாிலே. வளைக்கரடிபோல விரைந்தாள் வௌியிலே.

கடற்கரைகளிலும் கற்பாறைகளிலும் முயல்போல் திாிந்தாள். பாறைகளைப் புரட்டினாள். மரக் குற்றிகளை உருட்டினாள். சுள்ளிகளைத் திரட்டினாள். கிளைகளை ஒதுக்கினாள். தொலைந்தவனைத் தேடித் தொலைதூரம் திாிந்தாள்.

அவள் தன் மகனைப்பற்றி மரங்களைக் கேட்டாள். சிந்தூர மரம் இப்படிச் சொன்னது: "எனக்கு எனது கவலையே பொியது. எனது கெட்ட காலத்துக்கு நான் இங்கே படைக்கப்பட்டேன். துண்டுகளாய்ப் பிளக்கப்படவும் விறகாக வெட்டப்படவும் தறித்து வீழ்த்தப்படவும் இங்கே நிற்கிறேன்."

அவள் பாதையைப் பார்த்தாள். மகன்பற்றிக் கேட்டாள். பாதையும் தனது துயரத்தைச் சொன்னது. நிலவைப் பார்த்தாள். தலைதாழ்த்தி வணங்கினாள். மகன்பற்றிக் கேட்டாள். நிலவும் தனது துயரைச் சொன்னது: "இரவில் தனியே பவனி வருகிறேன். புகாாில் ஒளிர்தலும் குளிாில் காவலும் கோடையில் தேய்தலும் வழக்கமாய்ப் போனது. உனது மகனை நான் கண்டதேயில்லை."

அவளுக்குச் சூாியன்மட்டும் விபரம் சொன்னது: "அப்பாவித் தாயே, உன் மகன் கொல்லப்பட்டான்! துவோனியின் கறுப்பு நதியில் வீசப்பட்டான்! துவோனலாவின் அடியில் நீர்வீழ்ச்சியின் ஆழத்தில் அடக்கமானான்!"

அவள் கண்ணீரும் கம்பலையுமாக கொல்லன் இல்மாினனின் பட்டறைக்குப் போனாள். "இல்மாினனே, செம்பிலே எனக்கு ஒரு வாாியைச் செய்து தா! அதற்கு அறுநூறு அடி நீளத்தில் பற்களைப் பொருத்து! அதற்கு மூவாயிரம் அடி நீளத்தில் ஒரு கைப்பிடியைச் செய்வாய்!" என்று கேட்டாள்.

இல்மாினன் அப்படியே அவளுக்கு ஒரு வாாியைச் செய்து கொடுத்தான். அதைத் துவோனலா நதிக்குக் கொண்டு போனாள். "கடவுளின் கதிரே, கொஞ்ச நேரம் சூடாக ஒளிர்வாய்! அடுத்துக் கொஞ்சம் மங்கலாய் ஒளிர்வாய்! பின்னா முழுச் சக்தியோடு ஒளிர்வாய்! தீய சக்தியை உறங்கிடச் செய்வாய்! துவோனியின் சக்தியைத் தேய்ந்திடச் செய்வாய்!" என்று சூாியனைப் பார்த்துச் சொன்னாள்.

சூாியன் ஒரு மிலாறு மரத்தை அடைந்தது. ஒரு வளைந்த பூர்ச்ச மரக் கிளையில் இருந்தது. கொஞ்ச நேரம் சூடாக ஒளிர்ந்தது. அடுத்துக் கொஞ்சம் மங்கலாய் ஒளிர்ந்தது. பின்னர் முழுச் சக்தியோடு ஒளிர்ந்தது. மணலா என்னும் மரண உலகின் தீய சக்திகள் உறக்கத்தில் ஆழ்ந்தன. இளம் மனிதர்கள் வாள்களுடனும் முதியவர்கள் கைத்தடிகளுடனும் நடு வயதினர் ஈட்டிகளுடனும் உறங்கிப் போயினர். பின்னர் சூாியன் சுவர்க்கத்தை அடைந்தது.

அதன்பின் லெம்மின்கைனனின் அன்னை நீர்வீழ்ச்சியில் இடுப்பு வரைக்கும் இறங்கி வாரத் தொடங்கினாள். அங்கும் இங்கும் வாாியை வீசி வாாியபோது, முதலில் மகனின் சட்டை வந்தது. சட்டையைக் கண்டதும் சஞ்சலமானது. மீண்டும் வாாினாள். தொப்பியும் காலுறையும் தொடர்ந்து வந்தன. ஆற்றின் ஆழத்தில் இன்னும் இறங்கினாள். வாாியை அசைத்து அடியில் வாாினாள். அடுத்து வந்தது தசைத் தொகுப்பு ஒன்று. உற்றுப் பார்த்தால் அது தசைத் தொகுப்பே யல்ல. அது லெம்மின்கைனனின் உடல்தான். ஆனால் அதில் ஒரு கை இல்லை. தலையில் பாதியில்லை. அத்துடன் அவனது ஆவியும் இல்லை.

"இதை மீண்டும் ஒரு மனிதனாக்கலாமா?" என்று வருந்தினாள் அன்னை.

காகம் ஒன்று அவளுக்கு மறுமொழி சொன்னது: "இதிலிருந்து ஒரு மனிதன் வரவே மாட்டான். கண்களையும் தோள்களையும் மீன்கள் தின்றுவிட்டன. அவனைத் திரும்பவும் ஆற்றிலே தள்ளிவிடு! அவன் ஒரு மீனாகவோ திமிங்கலமாகவோ வரக்கூடும்."

லெம்மின்கைனனின் அன்னை அவனை ஆற்றில் தள்ளிவிட விரும்பவில்லை. மீண்டும் வாாினாள். நீளமாய் வாாினாள். குறுக்காயும் வாாினாள். இப்பொழுது முதுகு எலும்பில் பாதி, நெஞ்சு எலும்புகளில் பாதி, மற்றும் சில துண்டுகளும் கிடைத்தன.

அவள் அவனுடைய உடலை ஒழுங்காகப் பொருத்தினாள். தசையைத் தசையோடு சேர்த்தாள். எலும்புகளை எலும்புகளோடு இணைத்தாள். நரம்புகளை நரம்புகளோடு தைத்தாள். அதன்பின் அவள் நரம்புகளின் சக்தியை நினைத்து மந்திரம் செபித்தாள். அந்தச் செபத்தை இப்படி முடித்தாள்: "நரம்புகளின் வாயை வாயுடன் வைப்பாய். நாடிகளின் தலைப்பை தலைப்புடன் சேர்ப்பாய். பட்டு நூல் கோர்த்த தகர ஊசியால் தைத்து முடிப்பாய்.

"இதுவும் இன்னமும் போதாது என்றால், விண்ணுலகத் தெய்வமே, உமது அலங்கார வண்டியில் குதிரையைப் பூட்டும்! குழம்பிக் கலந்த தசைகளின் ஊடாய், எலும்புகள் ஊடாய், நரம்புகள் ஊடாய் வண்டியைச் செலுத்தும்! உடைந்த எலும்புகளில் பொன்னையும் வெள்ளியையும் பூசிப் பொருந்த வையும்!

"கிழிந்த தோல் சேர்ந்து ஒன்றாகட்டும்! அறுந்த நரம்புகள் இணைந்து நன்றாகட்டும்! உடைந்த எலும்புகள் ஒட்டிப் பலமாகட்டும்! இறைவனே, தசைக்குத் தசை, எலும்புக்கு எலும்பு, நரம்புக்கு நரம்பு, பொருத்துக்குப் பொருத்து - அனைத்தும் இணைந்து ஒன்றாகட்டும்!"

லெம்மின்கைனனனின் அன்னை தனது மந்திர சக்தியால் அவனுடைய உடலைப் பொருத்தி முந்திய நிலைக்குக் கொண்டு வந்தாள். ஆனால் அவன் பேச்சு மூச்சின்றிக் கிடந்தான்.

லெம்மின்கைனனின் அன்னை, 'இவனை மீண்டும் பேச வைக்க வேண்டும். அதற்குத் தேவையான தேன் பூச்சு மருந்தை எங்கே பெறலாம்' என்று எண்ணினாள். "தேன்வண்டே, இப்போது நீ தப்பியோவின் இல்லத்துக்குப் போ! மலர்க் கிண்ணங்களில் இருந்தும் புல்லினங்களின் தாள்களில் இருந்தும் தேனைச் சேர்த்துச் சுமந்துவா!" என்று சொன்னாள்.

தேன்வண்டு பறந்தது. ஆறு வகையான பூக்களின் இதழ்களிலிருந்தும் நூறு வகையான புற்களின் மடல்களிலிருந்தும் தேனை எடுத்துச் சிறகுகளில் வைத்துச் சுமந்து வந்தது. ஆனால் அந்தத் தேன் சுகம் தரவில்லை. பின்னர் வண்டு தூாி என்னும் தேவதையின் வீட்டுக்குச் சென்றது. ஒன்பது கடல்களைக் கடந்து பத்தாவது கடலுக்குச் சென்றது. அங்கே பெருவிரல் அளவு சட்டிகளில் இருந்த அாிய மருந்தை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தது. இந்த மருந்தும் சித்தியாகவில்லை.

அவள் மீண்டும் வண்டிடம், "ஒன்பது வானங்களுக்கு அப்பால் சுவர்க்கத்தில் இறைவனின் புனித இல்லம் இருக்கிறது. இறைவன் மந்திரம் செபித்த தேன் மருந்து அங்கே இருக்கிறது. உனது இறகுகளில் அதைத் தோய்த்துக் கொண்டுவா! அதை இவனுடைய உடலில் பூசி உயிர்ப்பிக்கலாம்" என்று சொன்னாள்.

வண்டு பறந்தது. சந்திர வளையப் பக்கமாய்ப் போனது. சூாிய எல்லையைக் கடந்து பறந்தது. சப்தமீன்களுக்கு அப்பால் சென்றது. கர்த்தர் வாழும் கூடத்துள் நுழைந்தது. அங்கே வெள்ளிச் சட்டிகளிலும் தங்கக் கலயங்களிலும் தைலம் தயாராக இருந்தது. வண்டு தேவையான மருந்தை எடுத்துக்கொண்டு திரும்பியது.

லெம்மின்கைனனின் அன்னை அந்த மருந்தைச் சுவைத்துப் பார்த்தாள். "ம், இது சர்வ வல்லவன் செய்த மருந்துதான்" என்றாள். அவள் அந்த மருந்தை அவனுடைய உடல் முழுவதிலும் பூசினாள். பின்னர், "மகனே, கனவிலிருந்து கண் விழித்து எழுவாய்!"என்றாள்.

லெம்மின்கைனன் எழுந்தான். "நான் நீண்ட காலமாகத் தூக்கத்தில் இருந்து விட்டேன்" என்றான்.

"உன் அன்னை இல்லாவிடில் நீ இனிமேலும் நீண்ட காலம் தூங்கியிருப்பாய். சொல் மகனே. என்ன நடந்தது? உனக்கு யார் இதை செய்தது?"

"ஈரத் தொப்பி அணிந்த இடையன், கண்பார்வையற்ற கபோதி, அவன்தான் நீர்ப்பாம்பை எனது உடலில் செலுத்தினாள். பாம்புக் கடிக்கு மாற்று மந்திரம் எனக்குத் தொியாமல் போய்விட்டது."

"அடடா, உனக்கு எல்லா மந்திரமும் தொியும் என்றாயே! நான் இப்போது சொல்வதை நினைவில் வைத்துக்கொள்!" என்ற அன்னை தொடர்ந்தாள்.

"நீரும், நீாில் நாணல் படுக்கையும், வாத்தின் மூளையும், கடற்பறவையின் தலையுமே நீர்ப்பாம்பின் பிறப்பிடமாகும். அரக்கி ஒருத்தி நீாில் உமிழ்ந்தாள். நீர் அதனை நீளமாய் வளர்த்தது. சூாியன் தன் ஒளியை அதில் பாய்ச்சியது. காற்றுத் தாலாட்டிற்று. நீாின் சக்தி அதனை வளர்த்தது. அலைகள் அடித்துக் கரையில் சேர்த்தன."

லெம்மின்கைனனின் அன்னை அவனை முன்னிருந்தவாறு ஆக்கிய பின்னர், "இன்னும் ஏதாவது குறைபாடு இருக்கிறதா, மகனே?" என்று கேட்டாள்.

"ஆமம்மா" என்றான் லெம்மின்கைனன். "எனது மனம் இன்னமும் வடநாட்டு மங்கையையும் அவளது பின்னிய கூந்தலையுமே சுற்றி வருகிறது. அந்தப் புனித நீர்ச்சுழியில் அந்த அன்னத்தை அடித்தால் தவிர, வடநாட்டுத் தலைவி தன் மகளை எனக்குத் தரமாட்டாள்."

"அந்தக் கேடுகெட்ட அன்னம் துவோனியின் அந்தக் கறுப்பு நதியிலேயே இருக்கட்டும். இப்போது நீ என்னுடன் வீட்டுக்கு வா! நீ உயிர்த்து எழுந்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறு! கர்த்தாின் கருணை இல்லாமல் என்னால் ஆகக்கூடியது எதுவுமே இல்லை" என்றாள்.

லெம்மின்கைனன் தன் அன்பான தாயுடன் வீட்டுக்குத் திரும்பினான்.

இப்போது எங்கள் கதையில் இருந்து லெம்மின்கைனனைக் கைவிட்டுவிட்டுக் கதையை வேறு பக்கமாகத் திருப்புவோம்.
     அட்டவணை    மேலே
16. மரண உலகில் வைனாமொயினன்

நித்திய முதிய வைனாமொயினன் புகார் படிந்த கடல்முனைப் பக்கத்தில் ஒரு தோணி செய்துகொண்டிருந்தான். ஆனால் அவனுக்குப் போதிய பலகைகள் கிடைக்கவில்லை.

முன்னொரு முறை தனக்கு உதவிய சம்ஸா பெல்லர்வொயினனின் நினைவு அவனுக்கு வந்தது. தோணிக்குத் தகுந்த மரம் தேட அவன் சம்ஸாவின் உதவியை நாடினான்.

செம்புப் பிடியுடைய தங்கக் கோடாியைத் தோளில் தாங்கியபடி, சம்ஸா ஒரு குன்றில் ஏறினான்; மறு குன்றில் ஏறினான்; மூன்றாவது குன்றிலும் ஏறினான். முடிவில் பதினெட்டு அடி உயரமான ஓர் அரச மரத்தைக் கண்டு, அதை வெட்ட முயன்றபோது, அந்த மரம் வருமாறு சொன்னது: "என்னால் வைனாமொயினனுக்கு ஓர் ஓட்டைப் படகே கிடைக்கும். இந்தக் கோடையில் மூன்று தடவைகள் எனது அடி மரத்தைப் புழு அாித்தது. வேர்களைப் பூச்சி தின்றது. நான் வெறும் குழல்போல நிற்கிறேன்."

சம்ஸா வட புறமாக மேலும் நடந்தான். முப்பத்தாறு அடி உயரத்தில் ஒரு தேவதாரு மரம் நின்றது. அதைக் கோடாியால் அடித்துப் பார்த்தான். அந்த மரமும் முணுமுணுத்தது: "ஆறு வங்கக் கட்டைகள் பொருந்திய படகாக நான் வரவேமாட்டேன். நான் கணுக்கள் நிறைந்த ஒரு மரம். இந்தக் கோடையில் மூன்று தடவைகள் அண்டங்காகம் எனது உச்சியில் இருந்து கரைந்து அசைத்தது."

சம்ஸா தென் புறமாகத் திரும்பிப் போனான். அங்கே ஐம்பத்து நாலடியில் ஒரு சிந்தூர மரம் நின்றது. அது சொன்னது: "நான் கணுக்கள் விழுந்த மரமோ குழல்போன்ற மரமோ அல்ல. இந்தக் கோடையில் மூன்று தடவைகள் சூாியன் என்னை வலம் வந்தது. எனது உச்சியில் சந்திரன் திகழ்ந்தது. குயில்கள் இசைத்தன. பறவைகள் அமர்ந்தன. படகு அமைக்க நான் தகுந்த மரமே!"

சம்ஸா தனது கோடாியால் மரத்தை வீழ்த்தினான். கிளைகளைக் களைந்தான். அடி மரத்தைப் பிளந்து தோணியைச் செதுக்கினான்.

வைனாமொயினன் மந்திரப் பாடலால் படகு கட்டத் தொடங்கினான். ஒரு பாடலால் அடிப்புறம் கட்டினான். மறு பாடலால் பக்கங்களைப் பொருத்தினான். மூன்றாவது பாடலால் வங்கக்கட்டைகள் செய்தான். ஆனால் படகின் முன்னணியத்தையும் பின்னணியத்தையும் முற்றுப்படுத்த இன்னும் மூன்று மந்திரச்சொற்கள் தேவைப்பட்டன.

"ஆ, இந்த மந்திரச் சொற்கள் இல்லாமல் படகைத் தண்ணீாில் இறக்க முடியாதே!" என்ற வைனாமொயினன், மேலும் சிந்தித்தான்: 'இந்த மந்திரச் சொற்களை எங்கே பெறலாம்? தூக்கணங் குருவியின் தலையிலா? அன்னப் பறவைக் கூட்டத்திலா? அல்லது வாத்துக்களின் தோள்களிலா?' அன்னங்களை, வாத்துக்களை மற்றும் தூக்கணங் குருவிகளைக் கூட்டம் கூட்டமாக அழித்துப் பார்த்தான். ஆனால் அச்சொற்கள் கிடைக்கவில்லை.

'கோடை மானின் நாக்கின் அடியிலும் வெள்ளை அணிலின் வாயினுள்ளும் நூறு சொற்கள் இருக்கின்றன' என்று எண்ணிய வைனாமொயினன், வயல்வௌி மான்களையும் வெள்ளை அணில்களையும் கூட்டம் கூட்டமாக அழித்தான். அவற்றிலிருந்து அவனுக்கு ஏராளமான சொற்கள் கிடைத்தன. ஆனால் அவை பயனில்லாத சொற்கள்.

"மரண உலகத்தில் துவோனியின் இல்லங்களில் நூறு சொற்கள் இருக்கின்றன," என்று கூறிய வைனாமொயினன், துவோனலாவுக்குப் புறப்பட்டான். பற்றைகள் ஊடாக ஒரு வாரம் நடந்தான். சிறுபழக் காட்டில் மறு வாரம் சென்றான். சூரைச் செடி வழியாக மூன்றாம் வாரம் சென்றான். கடைசியில் மணலா என்னும் மரணத் தீவு கண்ணில் தொிந்தது. மரணக் குன்றுகள் தொலையில் மின்னின.

கறுப்புப் புனித ஆற்றுக்கு அருகில் வந்ததும், வைனாமொயினன் உரத்துக் கத்தினான்: "துவோனியின் பெண்ணே, எனக்கொரு தோணி கொண்டுவா!"

துவோனியின் கறுப்பு ஆற்றில் துணிகளை அடித்துக் கழுவிக் கொண்டிருந்த குள்ளத் தோற்றமுடைய ஒரு பெண், "நீ மரண உலகத்துக்கு ஏன் வந்தாய் என்பதைச் சொன்னால் நான் தோணி கொண்டு வருவேன். இயற்கையாக உனக்கு இறப்பு வராமல் நீ ஏன் இறப்புலகம் வந்தாய்?"

"என்னை இங்கே துவோனி கொணாந்தான்" என்றான் வைனாமொயினன்.

"நீ ஒரு கள்வன் என்று அறிந்துகொண்டேன்" என்றாள் அந்தக் குள்ளப் பெண். "துவோனி உன்னை இங்கே கொணாந்தால் துவோனி உன்னுடன் கூட வந்திருக்கும். துவோனியின் தொப்பி உனது தோளில் இருக்கும். கையுறைகள் கைகளில் இருக்கும். வைனாமொயினனே, உண்மையைச் சொல்! இங்கே ஏன் வந்தாய்?"

"என்னை இங்கே இரும்பு கொணாந்தது."

"மீண்டும் பொய்யே சொன்னாய்! இரும்பு உன்னை இங்கே கொணர்ந்தால், உனது ஆடையில் இரத்தம் பெருகுமே!"

"என்னை இங்கே தண்ணீர் கொணர்ந்தது."

வைனாமொயினன் மீண்டும் பொய் சொல்கிறான் என்பது அவளுக்குத் தொியும். ஏனென்றால் அவனைத் தண்ணீர் கொணர்ந்திருந்தால் அவனுடைய ஆடையில் தண்ணீர் சொட்டுமே! பின்னர் வைனாமொயினன் தன்னைத் தீ கொணர்ந்தது என்றதும், அவள், "நெருப்பு உன்னை இங்கே கொணர்ந்தால் உனது ஆடை கருகியிருக்குமே! தாடி பொசுங்கியிருக்குமே! இதுவே உனது கடைசிப் பொய்யாக இருக்கட்டும்! இயற்கையாகவோ நோய்வாய்ப்பட்டோ இறப்பு வராமல் நீீ எப்படி இங்கே வந்தாய்?" என்று கேட்டாள்.

"நான் இவ்வளவு நேரமும் உனக்குக் கொஞ்சம் பொய் சொன்ன போதிலும், இனி உண்மையைச் சொல்வேன்" என்ற வைனாமொயினன் தெடர்ந்தான். "நான் ஒரு படகைக் கட்டியபோது எனக்கு மூன்று மந்திரச் சொற்கள் தேவைப்பட்டன. அதற்காகத்தான் துவோனலா வுக்கு வந்தேன். தோணியைக் கொணர்வாய், நான் அக்கரை சேர!"

"நீ ஒரு முட்டாள்" என்று ஏசினாள் துவோனலாவின் மகள். "நோயே இல்லாமல் இங்கே வர, உனக்கு என்ன பைத்தியமா? நீ உனது நாட்டுக்கே திரும்பிச் செல்! இங்கே வந்தவர்கள் பலர்; திரும்பிச் சென்றவர்கள் சிலரே!"

"முதிய பெண் ஒருத்திதான் முன்வைத்த காலைப் பின் வைத்துப் போவாள். இளைத்தவனாயினும் ஆண்மகன் அதைச் செய்யான். துவோனியின் மகளே, தோணியைக் கொணாவாய்!"

அவள் தோணியைக் கொண்டு வந்தாள். "பாவம் நீ வைனாமொயினன். இறப்பில்லாமலே இறப்புலகம் வந்து உனது அழிவைத் தேடிக் கொாண்டாய்."

மரண உலகின் முதிய தலைவி இரண்டு கைபிடிகள் உடைய ஒரு சாடியில் 'பீரை'க் கொண்டு வந்து கொடுத்து, "வைனாமொயினனே, இதைக் குடி" என்றாள்.

வைனாமொயினன் சாடியின் உள்ளே பார்த்தான். உள்ளே தவளைகள் சினைத்தன. பக்கங்களில் புழுக்கள் நௌிந்தன. "நான் மரண உலகத்து மது அருந்த வரவில்லை. இதைக் குடிப்பவர் மயங்குவர். இந்த மதுவை முடிப்பவர் மண்ணிலே சாய்வர்."

"பின்னர் அழைப்பில்லாமல் இங்கே எதற்காக வந்தாய்?" என்று அந்த மரண தேவனின் மனையாள் கேட்டாள். வைனாமொயினன் தான் சில மந்திரச் சொற்களைத் தேடி வந்ததாகக் கூறியதும், அவள், "மரண உலகம் மந்திரச் சொற்களை உனக்கு வழங்க மாட்டாது. இனி நீ உனது உலகத்துக்குப் போகவும் முடியாது" என்று சொல்லி அவனைத் துவோனியின் கட்டிலில் படுக்க வைத்தாள்.

அங்கே வளைந்த தாடையுள்ள வயோதிபப் பெண் ஒருத்தி இருந்தாள். அவள் ஒரு கோடை இரவில் நீாின் நடுவில் இருந்த பாறையில் அமர்ந்து இரும்பிலும் செம்பிலும் நூலை நூற்று, நூற்றுக் கணக்காய் ஆயிரக் கணக்காய் வலைகளைப் பின்னுவாள்.

அங்கே மூன்று விரலுள்ள முதியவன் ஒருவன் இருந்தான். அவனும் அதே இரவில் அதே பாறையில் அமர்ந்து இரும்பிலும் செம்பிலும் நூற்றுக் கணக்காய் ஆயிரக் கணக்காய் வலைகளைப் பின்னுவான்.

அங்கே இரும்புக் கூருள்ள கோணல் விரலுடன் துவோனியின் மைந்தனும் இருந்தான். அவன் நூற்றுக் கணக்கான வலைகளை ஆற்றில் குறுக்கும் நெடுக்குமாய் விாித்து வைத்து, வைனாமொயினன் தப்பிச் செல்வதைத் தடுக்க முயன்றான்.

"எனது முடிவு இந்தத் துவோனியின் இல்லங்களிலேயே வந்துவிட்டதா?" என்று எண்ணிக் கொணடு வைனாமொயினன் எழுந்தான். அவன் மந்திரம் செபித்து, முதலில் நீர்நாயைப் போலவும், அடுத்து இரும்புப் புழுவைப் போலவும், பின்னா நச்சுப் பாம்பாகவும் வடிவங்கள் எடுத்துத் துவோனியின் வலைகளின் ஊடாக நௌிந்து வௌியேறினான்.

துவோனியின் மைந்தன் காலையில் ஆற்றுக்குச் சென்று வலைகளைப் பார்த்தான். அங்கே நூறாய் ஆயிரமாய் மீன்கள் அகப்பட்டிருந்தன. ஆனால் வைனாமொயினன் அகப்படவில்லை.

துவோனலாவிலிருந்து பத்திரமாய்த் திரும்பி வந்த வைனாமொயினன் இவ்வாறு சொன்னான்: "இறைவனே, விதி வருமுன்னர் எவரையும் மரண உலகத்துக்குச் செல்ல விடாதீர். அங்கே செனறவர் அநேகர். திரும்பி வந்தவர் சிலரே!"

அவன் மேலும் சொன்னான்: "பிள்ளைகளே, மாசற்ற மக்களை மனமொடிய வையாதீர். தவறற்ற மக்களுக்குத் தவறு செய்ய முயலாதீர். பாவிகளுக்குத் துவோனலாவில் கடும் தண்டனை கிடைக்கும். பாவப் படுக்கைகளும் கொதிக்கும் கற்பாறைகளும் நஞ்சு தோய்த்த போர்வைகளும் பாிசாகக் கிடைக்கும் அங்கே."
     அட்டவணை    மேலே
17. வைனாமொயினனும் விபுனனும்

துவோனலாவில் மந்திரச் சொற்களைப் பெற முடியாததால், வைனாமொயினனால் படகைக் கட்டி முடிக்க முடியவில்லை. இனி அந்த மந்திரச் சொற்களை எங்கே பெறலாம் என்று நீண்ட காலமாய்ச் சிந்தனை செய்தான்.

ஒரு நாள் வைனாமொயினன் ஓர் இடையனைச் சந்தித்தான். அந்த இடையன் ஆயிரம் மந்திரப் பாடல்களைத் தொிந்த அந்தரோ விபுனன் என்ற பூதத்தைப்பற்றி அறிவான். அவன், "அந்தரோ விபுனனிடம் செல்வது சுலபமல்ல; சிரமமுமல்ல. பெண்களின் தையலூசிகளின் முனைகளில் ஒரு பாதை அமைந்திருக்கிறது. ஆண்களின் வாள்களின் முனைகளில் மற்றொரு பாதை இருக்கிறது. வீரர்களின் போர்க் கோடாிகளின் அலகுகளில் மூன்றாவது பாதை செல்கிறது" என்று சொன்னான்.

வைனாமொயினன் உடனே தனது நண்பனான கொல்வேலைக் கலைஞன் இல்மாினனிடம் சென்றான். "ஓ, இல்மாினனே, எனக்கு நீ இரும்பிலே காலணிகளும் இரும்பிலே கையுறைகளும் இரும்பிலே சட்டையும் இரும்பிலே ஒரு தண்டமும் செய்து தர வேண்டும்! உட்புறத்தை உருக்கினால் அமைத்து, வௌிப்புறத்தை மெல்லிரும்பால் மூடு! அவற்றின் செலவுகளை உனக்குத் தருவேன். அந்தரோ விபுனனின் வாயிலிருந்து மந்திரப் பாடல்களைப் பெறுவதற்காக நான் புறப்படுகிறேன்" என்றான்.

"அந்தரோ விபுனன் எப்பொழுதோ இறந்துவிட்டானே! அவன் விாித்த வலையில் அவனே வீழ்ந்து இறந்து போனான். அவனிடமிருந்து பாதிச் சொல்லைத்தானும் உன்னால் பெறமுடியாது" என்றான் இல்மாினன்.

வைனாமொயினன் அதைச் சட்டை செய்யாமல் புறப்பட்டுவிட்டான். முதல் நாள் பெண்களின் ஊசிகளின் முனைகளிலும், மறு நாள் ஆண்களின் வாள்களின் முனைகளிலும், மூன்றாம் நாள் வீரர்களின் போர்க் கோடாிகளின் அலகுகளிலும் நடந்து சென்றான்.

சக்தி வாய்ந்த பாடல்களை அறிந்த அந்தரோ விபுனன் தனது மந்திரப் பாடல்களுடன் மல்லாந்து கிடந்தான். அவனுடைய தோள்களில் அரச மரம் முளைத்திருந்தது. புருவத்தில் மிலாறுவும் தாடையில் பூர்ச்சமும் தாடியில் அலாிப் பற்றையும் நெற்றியில் ஊசியிலை மரமும் பற்களில் பசுமை மரமும் வளர்ந்து இருந்தன.

வைனாமொயினன் அவனருகில் வந்தான். வாளை உருவினான். அரசு முதலான மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தினான். இளித்தபடி படுத்துக் கிடந்த விபுனனின் வாய்க்குள் இரும்புத் தண்டத்தை இறக்கினான். "பூமியின் கீழே நெடும் தூக்கத்தில் இருக்கும் அடிமையே, எழுந்திரு!" என்று கத்தினான்.

விபுனன் பொிய வாதையுடன் கண் விழித்தான். வாய்க்குள் கிடந்த இரும்புத் தண்டத்தைக் கடித்தான். ஆனால் அதன் உட்புறத்தில் இருந்த உருக்கை அவனால் மெல்ல முடியவில்லை.

விபுனனின் வாய்க்கு அருகில் நின்றிருந்த வைனாமொயினனுக்கு வலது கால் சறுக்கிற்று. இடது கால் இடறிற்று. அப்படியே விபுனனின் வாய்க்குள் சாிந்தான். விபுனன் தனது வாயை இன்னும் அகலமாய்த் திறந்து முதிய வைனாமொயினனை அவனுடைய வாளுடன் சேர்த்து விழுங்கினான். பின்னர், "நானும் எத்தனையோ விதமான உணவுகளை உண்டிருக்கிறேன். செம்மறியை விழுங்கினேன்; வெள்ளாட்டை விழுங்கினேன்; பசுமாட்டை விழுங்கினேன்; காட்டுப் பன்றியையும் விழுங்கினேன். ஆனால் இப்படி ஒரு சுவையான கவளத்தைத் தின்றதேயில்லை"என்று சொன்னான்.

"இந்த அரக்கனின் வயிற்றுக் கிடங்கிலேதான் எனக்கு அழிவு வரப்போகிறதோ?" என்று சொன்னான் வைனாமொயினன்.

வைனாமொயினனின் இடுப்புப் பட்டியில் மரப்பிடியுடன் ஒரு கத்தி இருந்தது. அந்தக் கத்தியின் துணையுடன் மந்திர சக்தியால் அவன் ஒரு படகு செய்தான். அவன் குடல் வழியாக ஒடுங்கிய பாதைகளில் மூலைக்கு மூலை படகை ஓட்டினான்.

விபுனன் இப்படி நிகழ்வதை உணராது இருந்ததால், வைனாமொயினன் தானே ஒரு கொல்லனாக மாறினான். தன் சட்டையைக் கழற்றிக் கொல்லுலை செய்தான். சட்டைக் கையில் துருத்தியைச் செய்தான். மேலாடையினால் காற்றுப் பையையும் காற்சட்டையாலும் காலுறைகளாலும் குழல்களையும் செய்தான். முழங்காலைப் பட்டறையாக்கி முழங்கையைச் சுத்தியலாக்கினான். பின்னர் ஓய்வில்லாமல் இரவு பகலாக சுத்தியலால் அடித்து அடித்து கொல்வேலை செய்தான்.

கடைசியில் விபுனன் கத்தினான். "நான் நூறு வீரரை விழுங்கினேன். ஆயிரம் மனிதரையும் விழுங்கியிருக்கிறேன். ஆனால் உன்னைப்போல ஒருவரும் இல்லை. எனது வாய்க்குள் காி வருகிறது. நாக்கில் நெருப்பு எழுகிறது. இரும்புக் கழிவுகள் தொண்டைக்குள் இருக்கின்றன. யார் நீ? அதிசயப் பிராணியே வௌியேறு! பூமியின் கொடிய சக்தியே போ வௌியே!"

இந்தத் துன்பத்தினால் அந்தரோ விபுனன் மந்திரப் பாடல்களைப் பாடத் தொடங்கினான். முதலில் முன்னறிமுகம் இல்லாத தீய சக்தியை இகழ்ந்து, அதை வௌியேற்றப் பாடினான். உதவிக்கு வருமாறு வனம் கடல் காற்றின் அதிபதிகளுக்கு அழைப்பு விடுத்தான். இதனால் பலன் கிடைக்காதததால், முன்னறிமுகம் இல்லாத தீயசக்திகளின் மூலத்தைப் பாடினான்; முலத்தின் சொற்களை செபித்தான். முடிவாக ஒரு வீரப் பாடல் பாடி, நோவை அதன் பிறப்பிடத்துக்கு அனுப்பித் தனது [10]நீண்ட மந்திரப் பாடலை முடித்தான்.

விபுனனின் வயிற்றில் இருந்த வைனாமொயினன் தொடர்ந்து சுத்தியலால் அடித்துக் கொண்டே, "எனக்கு இதுதான் இனிமையான வசிப்பிடம். ஈரலை ரொட்டியாய்த் தின்னலாம். சேர்த்து உண்ணக் கொழுப்பும் உண்டு. சுவாசப் பைகளைச் சுவைத்து உண்ணலாம். விபுனனே, எனது பட்டறையை உனது இதயத்தில் இன்னும் ஆழத்தில் இறக்குவேன். சுத்தியலால் மேலும் ஓங்கியோங்கி அடிப்பேன். எனக்குத் தேவையான ஆயிரம் மந்திரச் சொற்களும் எனக்குக் கிடைக்காவிடில், நீ என்னிடமிருந்து தப்ப முடியாது. மந்திரவாதிகள் மறையலாம். ஆனால் மந்திரம் மறையக் கூடாது" என்று சொன்னான்.

அதன்பின் அந்தரோ விபுனன் என்னும் அந்த மாபெரும் மந்திரப் பாடகன் பாடல் பெட்டகம் திறந்து சக்தி வாய்ந்த சொற்களைப் பாடினான். அவன் உலகத்தின் உதயத்தைப் பாடினான். உதயத்தின் ஆழத்தைப் பாடினான். ஆழத்தின் மூலத்தைப் பாடினான். மூலத்தின் வேதத்தைப் பாடினான். வேதத்தின் நாதத்தைப் பாடினான். இந்தத் தீய உலகிலே பிள்ளைகள் எவரும் பாடாத பாட்டிவை. [11]வீரர்கள்கூட விளங்காத பாட்டிவை.

அவன் அனைத்தையும் பாடினான். அவற்றின் ஆரம்பம் பாடினான். மந்திரம் பாடினான். அதன் மகத்துவம் பாடினான். அவற்றை ஒழுங்காகப் பாடினான். ஆண்டவன் ஆணையால் அண்டம் பிறந்தது, காற்றுத் தானே உற்பத்தியானது, காற்றிலிருந்து நீர் எவ்வாறு வந்தது? நீாிலிருந்து பூமி எவ்விதம் எழுந்தது? தாவரம் தரணியில் தோன்றியது எப்படி? இவை அனைத்தையும் அழகாகப் பாடினான்.

சந்திரன் தோன்றியது எங்ஙனம்? செங்கதிர் வானிலே வந்ததும் எவ்விதம்? வானத்துத் தூண்களை நிறுத்தியது எப்படி? விண்ணிலே மீன்களை வாாி இறைத்ததும் எப்படி? அவன் அனைத்தையும் பாடினான்.

முன்னர் எவரும் கண்டதோ கேட்டதோ இல்லை என்னும்படி விபுனன் பாடினான். அவனுடைய வாயிலே வார்த்தைகள் உருண்டன. நாக்கிலே சொற்றொடர்கள் புரண்டன. இரவு பகலாய் ஓயாது பாடினான். பாடலைக் கேட்கச் சூாியன் நின்றனன். தங்க நிலவும் தயங்கியே நின்றது. கடல்முனை எல்லையில் ஆர்ப்பாித்து எழுந்த அலைகள் அந்தரத்தில் நின்றன. நதிகளின் ஓட்டமும் நடுவிலே நின்றது. உறுத்தியா நீர்வீழ்ச்சி நுரைப்பதை நிறுத்திற்று. யோர்தான் ஆறும் ஆவலாய் நின்றது.

னைனாமொயினன் தனக்குத் தேவையான பாடல்களையும் மந்திரச் சொற்களையும் கேட்டு முடிந்ததும், விபுனனின் வயிற்றிலிருந்து வாய் வழியாக வௌியே வர விரும்பினான். "விபுனனே, உனது வாயை அகலத் திற! உனது குடலிலிருந்து வௌியே வந்து எனது வீட்டை அடைவேன்!" என்றான்.

வல்லமைமிக்க விபுனன், "நான் எத்தனையோ மனிதரை விழுங்கியிருக்கிறேன். ஆனால் உன்னைப்போல ஒருவரையும் விழுங்கியதில்லை. நீ புத்திசாலியாய் உள்ளே போனாய். இன்னும் புத்திசாலியாய் வௌியே வருகிறாய்" என்று சொல்லித் தனது வாயை அகலத் திறந்தான். முதியவன் வைனாமொயினன் வயிற்றிலிருந்து வாய்க்கு வந்து, ஒரு தங்க அணிலைப்போல, ஒரு பொன்னெஞ்சுக் கீாியைப்போல நிலத்தில் குதித்தான்.

வைனாமொயினன் இல்மாினனின் கொல்வேலைத் தலத்துக்கு வந்தான். "படகின் பக்கங்களைப் பொருத்துவதற்குத் தேவையான மந்திரச் சொற்கள் கிடைத்தனவா?" என்று இல்மாினன் கேட்டான்.

"எனக்கு ஆயிரம் சொற்கள் கிடைத்தன" என்று கூறிய வைனாமொயினன், தனது படகு இருந்த இடத்துக்குச் சென்றான். மந்திரச் சொற்களைச் சொல்லிப் படகைக் கட்டி முடித்தான்.
     அட்டவணை    மேலே
18. இரண்டு மாப்பிள்ளைகள்

கப்பல் கட்டி முடிந்தது.

வானவில்லின் வளைவில் இருந்த வடநாட்டு வனிதை கேட்டபடி கப்பலைக் கட்டி முடித்துவிட்டதால், அவளை மணம் முடிக்க வடநாட்டுக்குப் புறப்பட்டான் வைனாமொயினன்.

நீலத்திலும் சிவப்பிலும் கப்பலுக்கு வர்ணம் தீட்டி, பொன்னிலும் வெள்ளியிலும் அலங்காரம் செய்தான். ஒரு நாள் காலை, தேவதாரு மரத்து உருளையில் நிறுத்தியிருந்த அந்தக் கப்பலுக்குச் சிவப்பிலும் நீலத்திலும் பாய்களைக் கட்டிக் கடலில் இறக்கினான்.

பின்னர் இறைவனை நினைத்துப் பிரார்த்தனை செய்தான். "இந்த அகன்ற பெரும் நீர்ப் பரப்பிலே, பரந்து வீசும் பாாிய அலைகளில், கடவுளே, இந்தக் கப்பலில் அமரும்! இளைத்த எனக்குப் பலமாக வாரும்! சிறிய மனிதனான எனக்குச் சிறந்த சக்தியைத் தாரும்! எனது கைவிரல்கள் படாமலே காற்றுக் கப்பலைத் தாலாட்டிச் செல்லட்டும்! அலைகள் இதனை அணைத்துச் செல்லட்டும்!"

இல்மாினனுக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளுக்குப் பெயர் அன்னிக்கி. அவள் அதிகாலையிலேயே எழுந்து கடமைகளைக் கவனிப்பதால் 'வைகறை வனிதை' என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றவள். அவள் அந்தத் தீவின் பனிப் புகார் படிந்த கடல்முனை ஓரத்தில் துணிகளைக் கழுவுவாள்; சிவப்பு நிறப் படிக்கட்டில் காயப் போடுவாள்.

ஒரு நாள் அவள் துணிகளைக் கழுவியபோது கடலைப் பார்த்தாள். மேலே கதிரவன் பிரகாசித்தது. கீழே கடலலைகள் மினுமினுத்தன. தூரத்தில், பின்லாந்து ஆறு சங்கமிக்கும் இடத்தில், வைனோ நாட்டுக் கரையோரத்தில் என்னவோ ஒரு கறுப்புப் புள்ளி தொிந்தது.

அவள் முணுமுணுத்தாள்: "கறுத்தப் புள்ளியே, நீ என்ன? கடல் வாத்துக் கூட்டமா? அப்படியானால் எழுந்து பறந்து விண்ணில் மறைந்து போ! நீ என்ன வஞ்சிர மீனா? அல்லது வேறின மீனா? அப்படியானால் நீாில் மூழ்கி நீந்தி மறைந்து போ! நீ என்ன பாறைத் தீவா? பாழ்மரக் கட்டையா? அப்படியானால் அலை உன்னை அடித்துச் செல்லும். கடல்நீர் உன்னை மூடிச் செல்லும்."

அது அருகில் வந்ததும், அது ஒரு கப்பல் என்று அன்னிக்கி அறிந்தாள். அவள் அதைப் பார்த்து, "நீ என் தந்தையின் அல்லது சகோதரனின் கப்பலாக இருந்தால் இந்தத் துறைக்குத் திரும்பி வா! நீ ஓர் அந்நியன் செலுத்தும் கப்பலாக இருந்தால் அந்தப் பக்கமாகத் திரும்பிப் போ!" என்றாள்.

ஆனால் அது வீட்டுக் கப்பலோ அந்நியாின் கப்பலோ அல்ல. அது நித்திய முதிய வைனாமொயினனின் கப்பல். அது அவள் அருகில் வந்தது. அவள் ஒரு சொல் சொன்னாள்; இரு சொல் சொன்னாள்; முன்றாம் சொல்லில் இவ்விதம் கேட்டாள்: "நீர்மகனே, நிலமகனே, மணமகனே, எங்கே போகிறாய்?"

"துவோனியின் கறுப்பு நதியில் மீன் பிடிக்கப் போகிறேன்" என்றான் வைனாமொயினன்.

அவள் சிாித்தாள். "வெறும் பொய்யைச் சொல்லாதே! மீன் சினைக்கும் காலம் எனக்கும் தொியும். அப்பா மீன் பிடிக்கப் போகையில் படகில் வலை கயிறு ஈட்டிஎல்லாம் இருக்கும். சாி சாி, எங்கே போகிறாய்?"

சிவப்பு வாயுள்ள வாத்து வேட்டைக்குப் போவதாக அவன் மீண்டும் பொய் சொன்னான். கப்பலில் குறுக்குவில்லோ வேட்டை நாயோ இல்லாததால் அதையும் அன்னிக்கி நம்பவில்லை. அவன் போருக்குப் போவதாகச் சொன்னதையும் அவள் நம்பவில்லை. ஏனென்றால் கப்பலில் ஆட்களோ வாள்களோ இருக்கவில்லை.

கடைசியில் வைனாமொயினன். "வா பெண்ணே, எனது தோணிக்குள் வா! வந்ததும் உண்மையைச் சொல்வேன்" என்றான்.

"இப்போது உண்மையைச் சொல்லாவிட்டால், குளிர் காற்று வந்து உனது கப்பலைக் கலக்கியடிக்கும். நான் உனது கப்பலைக் கவிழ்த்துப் போடுவேன்" என்றாள் அன்னிக்கி.

வைனாமொயினன் உண்மையைச் சொன்னான். இருண்ட வடநாட்டில் இனிய மங்கையைத் தான் மணக்கச் செல்வதாகச் சொன்னான்.

அன்னிக்கி உண்மையை அறிந்ததும் துணி தோய்த்தலைக் கைவிட்டுவிட்டுத் தமையன் இல்மாினனிடம் ஓடினாள். இலமாினன் கொல்வேலைத் தலத்தில் ஓர் இரும்பாசனம் அடித்து வெள்ளியைப் பூசிக் கொண்டிருந்தான். அவனுடைய தலையில் மூன்றடிக்குச் சாம்பல் இருந்தது. தோளில் ஆறடிக்குக் காித்தூள் இருந்தது.

"இல்மாினனே, சகோதரனே, எனக்கு ஒரு நூனாழி செய்து தா! அத்துடன் விரலுக்கு மோதிரங்கள், இரண்டு மூன்று தோடுகள், நாலைந்து இடுப்புச் சங்கிலிகள் எல்லாம் செய்தால், உனக்கு ஓர் உண்மையைச் சொல்வேன்."

"சொல்! நீ உண்மையைச் சொன்னால் நீ கேட்ட அனைத்தையும் செய்து தருவேன். நீ பொய்யைச் சொன்னால், உன்னிடம் இருக்கும் நகைகளையும் உடைத்து நெருப்பில் வீசுவேன்."

"நீ வடநாட்டிலே ஒரு சம்போவை அடித்துக் கொடுத்தபோது, அங்கே ஒரு பெண்ணை விரும்பியதும் அவளை மனைவியாகத் தரும்படி நீ கேட்டதும் நினைவிருக்கிறதா?" என்று கேட்ட அன்னிக்கி தொடர்ந்தாள். "ஆனால் நீ ஓயாமல் சுத்தியலால் தட்டிக்கொண்டே இருக்கிறாய். கோடையில் குதிரைக்குக் காலணி, குளிர் காலத்தில் இரும்பில் பல பொருட்கள் என்று ஏதாவது செய்து கொண்டே இருக்கிறாய். மூன்று வருடங்களுக்கு முன்னர் நீ விரும்பிய பெண்ணை அழைத்து வருவதற்கு இரவிலே சறுக்குவண்டியைக் கட்டுவாய். பகலில் அதற்குப் பக்கங்களைப் பொருத்துவாய். ஆனால் அந்தப் பெண்ணை அடைய வைனாமொயினன் முந்திவிட்டான். பொன் முன்னணியத்துக் கப்பலில் செப்புத் துடுப்போடு புறப்பட்டு நீலக் கடலில் வடநாட்டுக்குப் போகிறான் அவன்."

இல்மாினனின் முகத்தில் கவலை இருள் கவிந்தது. சுத்தியலும் மற்றும் கருவிகளும் கைநழுவி விழுந்தன. "அன்னிக்கி, அருமைச் சகோதாி, நீ கேட்ட நகைகள் எல்லாம் செய்து தருவேன். உடனே சவுனாவைச் சூடாக்கு. விறகுகளை எாித்து வெப்பமாக்கு. குளிர் காலத்துக் காியெல்லாம் எனது உடலில் இருக்கிறது. அதை உடலிலிருந்து நீக்க, கழுவிப் போக்கச் சாம்பலில் சவர்க்காரமும் செய்து கொண்டுவா!" என்றான்.

அன்னிக்கி ஓடினாள். காற்று வீழ்த்திய விறகுகளையும் இடிமுழக்கத்தால் சிதறி விழுந்த விறகுகளையும் பொறுக்கிச் சேர்த்தாள். நீர்வீழ்ச்சியில் பொறுக்கிய கற்களை சவுனா அடுப்பில் அடுக்கிச் சூடேற்றினாள். இனிய அருவியிலிருந்து தண்ணீரை அள்ளிக்கொண்டு வந்தாள். நீராவிக் குளியலின்போது விசிறிக் கொள்வதற்குப் பசுமையான பற்றைகளில் நறுமணமான இலைக்கட்டுகளை ஒடித்துச் சேர்த்தாள். மாப்பிள்ளை தன்னைக் கழுவிச் சுத்தமாக்குவதற்குச் சாம்பலிலிருந்து நுரைக்கும் சவர்க்காரம் செய்து முடித்தாள்.

இதற்கிடையில் இல்மாினன் அன்னிக்கிக்குத் தேவையான எல்லா நகைகளையும் செய்து முடித்து, அவற்றை அவளுடைய கைககளில் திணித்தான். அவற்றைப் பெற்றுக் கொண்ட அன்னிக்கி, "நீராவிக் குளியல் தயாராகிவிட்டது. இனிமையான இலைக் கட்டுகள் ஆயத்தமாக இருக்கின்றன. விரும்பிய வரைக்கும் குளி, சகோதரா! சணல்போல் வெண்மையாகும்வரை தலையைக் கழுவு! பனிமழை போல் வெளுக்கும்வரை முகத்தைக் கழுவு!" என்று சொன்னாள்.

இல்மாினன் சவுனாவில் குளித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது அடையாளம் தொியாமல் ஓர் அந்நியனைப்போலக் காட்சியளித்தான். முகம் அவ்வளவு அழகாக இருந்தது. கன்னங்கள் அவ்வளவு சிவப்பாக இருந்தன. "அன்னிக்கி, அருமைத் தங்கச்சி, எனது உடைகள் அனைத்திலும் மிகச் சிறந்ததைக் கொண்டுவா! என்னை மாப்பிள்ளையாக அலங்காித்துக் கொள்ளப் போகிறேன்" என்றான்.

அன்னிக்கி சணலில் தைத்த மேற்சட்டை ஒன்றைக் கொணாந்தாள். அன்னை தைத்த அளவான காற்சட்டையை அடுத்ததாய்க் கொணாந்தாள். தாய் கன்னியாக இருந்த காலத்தில் பின்னிய சுத்தமான காலுறைகளைப் பின்னர் கொணாந்தாள். அதன்மேல் அணிய ஜேர்மன் சப்பாத்துகள். புயங்களில் போட நீல நிறத்தில் அரைக்கைச் சட்டை. அதற்கு ஈரல் நிறத்தில் பட்டியும் இருந்தது. இவற்றுக்கு மேலே சணல் மேலாடை. இவை அனைத்தையும் மூட ஒரு நீண்ட மேலாடை. இது புத்தம் புதியது. வீட்டிலே தைத்தது. இதற்கு நான்கு பட்டிகள். நூறு மடிப்புகள். ஆயிரம் தெறிகள். தாய் சிறு பெண்ணாக இருந்த காலத்தில் பொன்னலங்காரத்துடன் செய்த பட்டியை இடுப்பில் கட்டினான். லாப்புலாந்தில் செய்யப்பட்ட பொன்வேலை செய்த கையுறைககளை அணிந்தான். அவனுடைய சுருண்ட தங்க நிறத் தலைமயிரை மறைத்து உயரமான ஒரு தொப்பி. அவனுடைய தந்தை மாப்பிள்ளையாகப் போன காலத்தில் அணிந்தது அது.

இல்மாினன் தனது சேவகர்களுக்கு இவ்வாறு ஆணையிட்டான்: "எங்கள் ஆறு குதிரைகளில் சிறந்த ஒன்றைக் கொண்டு வந்து சறுக்கு வண்டியில் கட்டுங்கள். குயில்போலக் கூவும் ஆறு மணிகளையும் நீலப் பறவைபோல ஒலிக்கும் ஏழு மணிகளையும் ஏர்க்காலில் பூட்டுங்கள். அழகிய மனிதர் அதைப் பார்க்கட்டும். நங்கையர் கண்டு நெஞ்சுருகட்டும். கரடித் தோலைக் கொண்டு வாருங்கள்! நான் அமர்வதற்கு அதை வண்டியில் விாியுங்கள்! கடற்குதிரையின் தோலால் வண்டியை மூடுங்கள்!"

சேவகர்கள் ஆணையை நிறைவேற்ற ஓடினர்.

பின்னர் இல்மாினன் மானிட முதல்வனை வணங்கினான். இடிமுழக்கங்களின் தலைவனைத் தொழுதான். "மானிட முதல்வனே, புத்தம்புது பனிமழை பொழியட்டும்! எனது வண்டி அதில் சறுக்கி விரையட்டும்!" பனிமழை பொழிந்தது. புதர்ச் செடித் தண்டுகளையும் சிறுபழச் செடித் தண்டுகளையும் மூடிப் பொழிந்தது.

வண்டியில் ஏறினான். "அதிர்ஷ்டமே, கடிவாளத்தில் ஏறு! இறைவனே, வண்டியில் அமர்வீர்!"

குதிரை விரைந்தது. மணல் தரையிலும், ஒலிக்கும் புற்றரை மேட்டிலும் பூர்ச்சமரக் குன்றிலும், கடற்கரை அருகிலும் பயணம் தொடர்ந்தது. கண்களில் மண் வந்து வீழ்ந்தது. மார்பினில் கடலலை தெறித்தது.

மூன்றாம் நாளில் வைனாமொயினனை வழியில் கண்டான் இல்மாினன். "ஓ, முதிய வைனாமொயினனே, நாங்கள் இருவரும் ஒரே பெண்ணை விரும்பிச் செல்வதால், அவளுடைய விருப்பத்துக்கு மாறாக அவளைப் பலவந்தமாகக் கைப்பற்றுவதில்லை என்று ஒரு நட்பு உடன்படிக்கை செய்து கொள்வோம்" என்றான் இல்மாினன்.

"அது சாிதான்" என்றான் வைனாமொயினன். "நான் ஒரு நட்பு உடன்படிக்கைக்குச் சம்மதிக்கிறேன். அவளுடைய மனம் விரும்பிகிறவனை அவள் அடையட்டும். அதன்மேல் எந்தவிதமான கோபதாபமும் இல்லாமலே நாங்கள் இருவரும் இருப்போம்."

அவர்களுடைய பயணம் தொடர்ந்தது. கப்பல் ஓடியது. கரையெல்லாம் ஒலித்தது. குதிரை விரைந்தது. பூமி அதிர்ந்தது.

காலம் கொஞ்சம் கரைந்தது. வடநாட்டில் நரை நிறத்து நாய் குரைத்தது. அதன் வால் நிலத்தில படிந்திருந்தது. அது விட்டுவிட்டுக் குரைத்தது.

வடநிலத் தலைவன் மகளை அழைத்து, "மகளே, நாய் குரைக்கிறது. யாரோ வருகிறாாகள். போய்ப் பார்!" என்றான். மகள் போகவில்லை. அவளுக்கு மாட்டுத் தொழுவம் சுத்தமாக்க வேண்டியிருந்தது. கால்நடையைக் கவனிக்க வேண்டியிருந்தது. மா அரைக்க வேண்டியிருந்தது. தாய் லொவ்ஹியும் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தாள். மகன் விறகு வெட்டிக் கொண்டிருந்தான்.

நாய் குரைக்கும் சத்தம் பொிதாகக் கேட்டது. "வெறும் பச்சை மரத்தைப் பார்த்து நாய் குரைக்காது" என்று சொன்ன வடநிலத் தலைவன் தானே எழுந்து சென்று நாய் ஏன் குரைக்கிறது என்று பார்த்தான்.

நாயின் நாசி காட்டிய திசையில் நேராகப் பார்த்தான். காற்று வீசிய மேட்டினைப் பார்த்தான். ஓ, அங்கே காதலர் குடாவின் கடலோரத்தில் ஒரு சிவப்புப் படகு வந்து கொண்டிருக்கிறது. இங்கே தேன் சிந்தும் திடலிலே ஓர் அலங்காரச் சறுக்கு வண்டி வந்து கொண்டிருக்கிறது.

தலைவன் வீட்டுக்குள் விரைந்து வந்தான். கூரையின் கீழே நின்று, "யாரோ அந்நியர்கள் வருகிறார்கள். அங்கே காதலர் குடாப் பக்கமாய் நீலக் கடலில் ஒரு கப்பல் வருகிறது. இங்கே தேன் சிந்தும் திடலிலும் அலங்காரச் சறுக்கு வண்டியில் யாரோ வருகிறார்கள்" என்று சொன்னான்.

"வந்துகொண்டிருக்கும் அந்நியரைப்பற்றி ஒரு சாத்திரம் பார்க்கலாம்" என்றாள் லொவ்ஹி. "சிறு பெண்ணே, போிச் சுள்ளியை எடுத்து நெருப்பிலே போடு! அதில் இரத்தம் வந்தால் அவர்கள் சண்டைக்கு வருகிறார்கள் என்று அர்த்தம். தண்ணீர் வந்தால் சமாதானம் என்று நம்பலாம்."

சிறிய வேலைக்காாி போிச் சுள்ளியை நெருப்பிலே போட்டாள். அதில் இரத்தமோ தண்ணீரோ வரவில்லை; ஆனால் தேன் சுரந்தது. அங்கிருந்த ஒரு கிழவி அதற்குப் பலன் சொன்னாள்: "போிச் சுள்ளியில் தேன் சுரந்தால் பெண் கேட்க மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்று அர்த்தம்."

லொவ்ஹியும் மகளும் வௌியே தோட்டத்துக்கு வந்து கடல் பக்கமாகப் பார்த்தார்கள். நூறு பலகைகளால் கட்டப்பட்ட ஒரு கப்பல் காதலர் குடாவின் பக்கமாய் வந்து கொண்டிருந்தது. அதில் செப்புத் துடுப்புகளைக் கைகளில் ஏந்திய பெருமகன் ஒருவன் இருந்தான். இந்தப் பக்கம் தேன் சிந்தும் திடலிலே ஒரு சிவப்புச் சறுக்கு வண்டி வந்து கொண்டிருந்தது. அதன் ஏர்க்காலில் ஆறு தங்கக் குயில்களும் ஏழு நீலப் பறவைகளும் பாடிக் கொண்டிருந்தன. வண்டியில் அமர்ந்து இருந்தவன் ஒரு சிறந்த நாயகன்.

லொவ்ஹி மகளிடம், "இவர்களில் யாருடைய அணைப்பில் அன்புக் கோழியாக இருக்க நீ விரும்புகிறாய்? கப்பலில் வரும் முதிய வைனாமொயினன் பொருட்களுடன் வருகிறான். பெரும் திரவியத்துடன் வருகிறான். வண்டியில் சறுக்கி வரும் இல்மாினன் வெறுமனே வருகிறான். வண்டியில் மந்திரம்தான் இருக்கிறது" என்றாள்.

"இருவரும் உள்ளே வந்ததும், இரண்டு கைபிடிகள் உள்ள சாடியில் தேன் கொண்டு வந்து, நீ யாரை விரும்புகிறாயோ அவர் கையில் கொடு! வைனாமொயினன் பெரும் பொருட்களுடன் வருவதால் அவனுக்கே கொடு!" என்று லொவ்ஹி மேலும் சொன்னாள்.

அந்த அழகான மங்கை இவ்வாறு சொன்னாள்: "அம்மா, பொருளுக்காகவோ அறிவுக்காகவோ நான் கலியாணம் செய்ய மாட்டேன். அழகிய நெற்றியும் அருமையான உடற் கட்டும் கொண்டவனையே நான் விரும்புவேன். சம்போவையும் அதன் பலநிற மூடியையும் செய்த இல்மாினனையே நான் மணப்பேன். தையலைத் தனத்துக்காக விற்கக் கூடாது. கன்னியைத் தானமாய்க் கொடுக்க வேண்டும்."

"அருமைப் பெண்ணே, ஆட்டுக் குட்டியே, ஆமம்மா, நீ போய் அந்த இல்மாினனின் வெயர்வை நெற்றியைத் துடைத்து அவனுடைய அழுக்குத் துணிகளையும் துவைத்துக் கொடு, போ!" என்றாள் லொவ்ஹி.

"நான் வைனாமொயினனை மணக்கவே மாட்டேன். ஒரு கிழவனை மணந்தால் வாழ்வில் தொல்லைதான் மிஞ்சும்" என்றாள் மகள்.

முதிய வைனாமொயினன் தனது சிவப்புப் படகைச் செப்புத் துறைமுகத்தில் இரும்பு உருளைகளில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்தான். வரும்போதே இவ்வாறு கேட்டான்: "இளம் பெண்ணே, என்னுடன் வருகிறாயா? என்றைக்கும் என் சினேகிதியாக இருக்கலாம். வாழ்நாள் முழுக்க என் துணைவியாக இருக்கலாம். எனது கையணைப்பில் கோழியாய் இருக்கலாம்."

வடநில மங்கை மறுமொழி சொன்னாள். "முன்னொரு முறை எனது கைத்தறியில் சிந்திய துகளிலிருந்து ஒரு படகு செய்யும்படி கேட்டேனே; செய்து முடிந்ததா?"

"இப்பொழுது என்னிடம் ஒரு சிறந்த படகு இருக்கிறது. அது காற்றிலும் கடலலையிலும் கடுகிச் செல்லும். நீர்க்குமிழியைப் போல நழுவிச் செல்லும். நீராம்பல்போல் வழுக்கிச் செல்லும்."

அப்போது வட நாட்டு அழகி, "கடல் மனிதரைப்பற்றி நான் பெருமைப்படுவதில்லை. காற்று அவாின் மனதைக் கடல் பக்கமே திருப்பும். கடற்காற்று அவாின் நினைவைக் கெடுக்கும். உன் சினேகிதியாகவோ உனது கையணைப்பில் கோழி யாகவோ வாழ்க்கைத் துணைவியாகவோ நான் வருவதற்கில்லை" என்று சொன்னாள்.
     அட்டவணை    மேலே
19. திருமண நிச்சயம்

அதன்பின் இல்மாினன் வேகமாய் வந்து வீட்டின் கூரையின் கீழ் நின்றான். வந்ததும் சாடியில் தேன் கொணாந்து அவனுடைய கையில் தரப்பட்டது. ஆனால் அவன், "எனது மணப்பெண்ணை நான் காணும் முன்னர், நீண்ட காலமாக நான் காத்திருந்த கன்னியைக் கண்ணால் காணும் முன்னர், இந்த நிலாவொளியில் எந்தப் பானமும் அருந்தேன்" என்றான்.

வடநாட்டுத் தலைவி, "நீ காத்திருந்த கன்னி ஒரு கடுமையான தொல்லையில் இருக்கிறாள். அவள் இன்னும் காலணிகளை அணிந்து முடியவில்லை. நீ போய்ப் பாம்புகள் புரளும் வயலை உழுதுவிட்டுத் திரும்பிவா. அப்போது மணப்பெண் உனக்காக ஆயத்தமாக இருப்பாள். ஆனால் கலப்பையை அசைக்காமல் உழவேண்டும். முன்னொரு முறை செப்பு அலகுடைய கலப்பையால் பேயொன்று இவ்வயலை உழுதது. என் சொந்த மகனே பாதியை உழுதான். மீதியை விட்டான்" என்று சொன்னாள்.

இல்மாினன் லொவ்ஹியின் மகள் இருந்த அறைக்குச் சென்றான். "இரவின் அாிய நங்கையே, [12]மங்கிய பொழுதின் மங்கையே, நான் இங்கு வந்ததும், சம்போவைச் செய்து அதற்கு ஒரு பலநிற மூடியை அடித்ததும் உனக்கு நினைவிருக்கிறதா? ஒரு நல்ல கணவனான என்னிடம் ஓர் அன்புக்குாிய மனைவியாக வாழ்நாளெல்லாம் வந்திருக்கச் சம்மதித்து இறைவனின் பேரால் நீ சத்தியம் செய்தது நினைவிருக்கிறதா? ஆனால் நான் பாம்புகள் நிறைந்த வயலை உழாவிட்டால் உன்னை எனக்குத் தரமாட்டாளாம் உன் தாய்" என்று சொன்னான் இல்மாினன்.

"இல்மாினனே, நீ தங்கத்தில் ஒரு கலப்பையைச் செய்து அதற்கு வெள்ளியால் அலங்காரம் செய்! பாம்பு வயலை அதனால் உழலாம்" என்று அந்த இளம்பெண் அறிவுரை சொன்னாள்.

இல்மாினன் பொன்னிலும் வெள்ளியிலும் கலப்பை செய்தான். இரும்பிலே காலணி செய்தான். உருக்கிலே பாதவுறை செய்தான். இரும்பில் கவசமும் உருக்கில் பட்டியும் மற்றும் இரும்புக் கையுறைகளையும் செய்தான். அதன்பின் தீயுமிழும் குதிரையைத் தொிந்தான். வயலைப் புரட்டப் புறப்பட்டு விரைந்தான்.

வயலில் தலைகள் நௌிந்தன. மண்டையோடுகள் இரைந்தன. "பாம்பே, பாதையைவிட்டு விலகிநில்! பற்றைக்குள் நுழைந்து புல்லுக்குள் மறைந்து போ! இதன்மேல் நீ தலையைத் தூக்கினால் இறைவன் உன்னை உருக்கு முனை அம்புகளால் அடிப்பார். இரும்புக் குண்டு மழை பொழிந்து உன்னை ஒழிப்பார்."

அதன்பின் இல்மாினன் பாம்புகளைப் புரட்டி வயலை உழுது முடித்தான். வீட்டுக்குத் திரும்பி வந்து வடநாட்டு முதியவளிடம் பெண்ணைக் கேட்டான். அவள், "உனக்கு இன்னுமொரு வேலை இருக்கிறது. அதையும் முடித்துவிட்டு வந்தால்தான் மகளைத் தருவேன். மரண உலகில் மரணக் காடு இருக்கிறது. அதில் வாழும் மரணக் கரடியையும் மரண ஓநாயையும் பிடித்து அடக்கு! அதன்மேல் உனக்கு என் மகள் கிடைப்பாள்! அவற்றைப் பிடிக்கச் சென்றவர் நூறுபேர். திரும்பி வந்தவர் எவருமேயில்லை" என்றாள்.

இல்மாினன் லொவ்ஹியின் மகள் இருந்த அறைக்குச் சென்றான். "உன் தாய் எனக்கு இன்னுமொரு வேலை தந்திருக்கிறாள். மரண உலகத்துக் கரடியையும் ஓநாயையும் பிடித்து அடக்க வேண்டுமாம்."

அவனுக்கு மணமகள் அறிவுரை சொன்னாள். "இல்மாினனே, மூன்று நீர்வீழ்ச்சிகள் விழுந்தோடும் இடத்தில் ஒரு பாறை இருக்கிறது. அந்தப் பாறையில் உருக்கில் கடிவாளமும் இரும்பில் வாய்ப்பூட்டும் அடிப்பாய்! அவற்றால் மரண உலகத்துக் கரடியையும் ஓநாயையும் பிடிப்பாய்!"

வடநாட்டு வனிதையின் வார்த்தைகளின்படி அவன் கடிவாளமும் வாய்ப்பூட்டும் செய்தான். பின்னர் இந்த மந்திரம் சொன்னான்: "பனிப் புகார்ப் பெண்ணே, முகிலின் மகளே, உனது சுளகால் மூடுபனியைக் காடெல்லாம் தூவு! பனிப் புகாரை நிலமெல்லாம் நிறைய வீசு! காட்டு மிருகங்கள் என்னைப் பார்க்காது இருக்கட்டும்! எனது காலடி ஓசையைக் கேளாது இருக்கட்டும்!"

இப்படி அவன் துவோனியின் கரடியையும் ஓநாயையும் பிடித்தான். வீட்டுக்கு வந்ததும் இப்படிச் சொன்னான்: "கரடியையும் ஓநாயையும் பிடித்து அடக்கினேன். முதியவளே, கொண்டுவா உன் மகளை!"

"பொறப்பா. உனக்கு இன்னுமொரு வேலை இருக்கிறதுா என்றாள் லொவ்ஹி. "துவோனி ஆற்றிலே ஒரு கோலாச்சி மீன் இருக்கிறது. வலை வீசாமல் அதைப் பிடித்துக் கொண்டு வந்தால், நீல வாத்துப் போன்ற என் மகள் உனக்குக் கிடைப்பாள். இதைப் பிடிக்கச் சென்றவர் நூறு பேர் இருக்கலாம். திரும்பி வந்தவர் எவருமேயில்லை."

இல்மாினன் மிகுந்த துயருடன் வடநாட்டு மங்கையிடம் சென்றான். "முந்தியதிலும் பார்க்கப் பொிய வேலை ஒன்று கிடைத்திருக்கிறது. துவோனியின் கறுப்பு நதியில் கொழுத்த கோலாச்சியை வலை வீசாமல் பிடிக்க வேண்டுமாம்."

"இல்மாினனே, கலங்காதே!" என்றாள் மணமகள். "தீயுமிழும் கழுகு ஒன்றைப் பிரமாண்டமான அளவில் செய். அதனால் கொழுத்த கோலாச்சியைப் பிடிக்கலாம்."

இல்மாினன் ஒரு பொிய கழுகைச் செய்தான். அதற்கு உருக்கில் நகங்களையும் கப்பலின் இரும்புப் பக்கங்களால் சிறகுகளையும் படைத்தான். பின்னர் கழுகின் முதுகில் ஏறி அமர்ந்து, "எனது கழுகே, எழு! பற! கறுப்பு நதியின் கொழுத்த கோலாச்சியைக் கதற அடி!" என்று சொன்னான்.

கழுகு எழுந்தது. வானில் பறந்தது. பயங்கரப் பற்களுள்ள பாாிய மீனைத் தேடித் திாிந்தது. கழுகின் ஒற்றைச் சிறகு நீாில் தோய்ந்தது. மற்றச் சிறகு வானை அளந்தது. அதனுடைய நகங்கள் கடலில் முட்ட அலகு உயர்ந்த குன்றைத் தொட்டது. இவ்விதமாக இல்மாினன் கடலைக் கலக்கினான். நீாில் இருந்தொரு நீர்ச் சக்தி எழுந்து இல்மாினனை எட்டிப் பிடித்தது. கழுகு அதன் கழுத்தில் பாய்ந்து தலையைத் திருப்பி ஆற்றின் அடியில் கருஞ்சேற்றில் அமிழ்த்திற்று.

கோலாச்சி மீன் இல்மாினனை இலக்கு வைத்து விரைந்து வந்தது. ஆனால் கழுகு முன்னே பாய்ந்து அறைந்தது. அந்த மீன் ஒன்றும் பொியதுமல்ல; ஆனால் அத்தனை சிறியதுமல்ல. அதன் நாக்கு இரண்டு கோடாிப் பிடிகளின் நீளம் இருந்தது. குப்பைவாாியின் பிடியளவு நீளமான பற்கள். கடைவாய் மூன்று நீர்வீழ்ச்சிகளின் அகலம். முதுகு ஏழு தோணிகளின் நீளம். அது இல்மாினனை அடித்து உண்ண முன் வந்தது.

கழுகு தாழ்ந்து பறந்து மீனை அடித்தது. கழுகின் போராட்டம் பொியதாய் இருந்தது. கழுகின் சொண்டு அறுநூறு அடி நீளம். அதன் கடைவாய் ஆறு நீர்வீழ்ச்சிகளின் அளவு இருந்தது. நாக்கு ஆறு ஈட்டிகளின் நீளம். நகங்கள் ஐந்து அாிவாள்களின் அளவு. கழுகு பாய்ந்து மீனின் செதிலைக் கிழித்தது. கோலாச்சி கழுகை நீருக்குள் இழுத்தது. கழுகு மீனை மேலே எடுத்ததால் சேறும் கலங்கி மேலே வந்தது.

கழுகு உயர்ந்து பறந்து திரும்பிச் சுழன்று தனது ஒற்றைக் கால் நகங்களால் மீனின் முதுகைப் பற்றியது. மற்றக் கால் நகங்களை இரும்பு மலை உச்சியில் கொளுவி மீனை மேலே இழுத்தது. ஆனால் வழுக்கல் பாறையில் நகங்கள் வழுக்கின. மீனும் கழுகின் பிடியிலிருந்து வழுக்கி நீருள் சென்றது. ஆனால் கழுகின் கீறலும் காயமும் மீனின் முதுகில் தொிந்தன.

இரும்பு நகக் கழுகு மீண்டும் முயன்றது. அதன் இறகிலும் கண்களிலும் தீ பறந்தது. இம்முறை கோலாச்சியை நகங்களால் பற்றி அலைகளின் மேலே கொண்டு வந்தது. இந்த மூன்றாவது முயற்சியில் கழுகு பொிய கோலாச்சி மீனைச் சுமந்து பறந்து சிந்தூர மரக் கிளையில் அமர்ந்தது. அங்கே மீனின் தசையைத் தின்று பார்த்தது. வயிற்றைப் பிளந்தது. நெஞ்சைக் கிழித்தது. தலையை அடித்து நிலத்தில் போட்டது.

"நீ ஒரு கேவலமான பறவை. கோலாச்சியைக் கொன்று விட்டாயே" என்று இல்மாினன் சொன்னான்.

கழுகு கோபம் கொண்டு வானில் எழுந்து முகிலில் மறைந்தது. அப்போது மேகம் கலைந்தது. இடி இடித்தது. வானம் வளைந்தது. கடவுளின் பொிய வில் ஒடிந்தது. சந்திரனின் கூாிய கொம்புகள் உடைந்தன.

"வடநாட்டு இல்லத்தில் எப்போதும் ஒரு நாற்காலி இருக்கும்" என்று முணுமுணுத்த இல்மாினன் மீனின் தலையுடன் லொவ்ஹியிடம் சென்றான். "பாம்பு வயலை உழுதுவிட்டேன். துவோனியின் ஓநாயையும் கரடியையும் அடக்கிவிட்டேன். கடைசியில் பொிய கோலாச்சியையும் பிடித்துவிட்டேன். இப்பொழுது உன் மகளைத் தருவாயா?"

வடநாட்டுத் தலைவி வருமாறு சொன்னாள்: "ஆனாலும் நீ ஒரு பிழை செய்தாய்! மீனின் தலையைப் பிய்த்தாய்! வயிற்றைப் பிளந்தாய்! நெஞ்சைக் கிழித்தாய்! அதன் தசையைச் சுவைத்தாய்!"

"நல்ல இடங்களிலேகூட நட்டமில்லாத வெற்றி கிடைக்க மாட்டாது. இதுவோ துவோனியின் கறுப்பு நதியிலே கிடைத்த வெற்றி. எனது மணப்பெண் தயாரா?"

"நான் என் மகளை உனக்குத் தருவேன். நீ காத்திருந்த வாத்து உனக்குக் கிடைப்பாள். உனது அணைப்பில் அன்புக் கோழியாய் இருப்பாள்."

அதன் பின்னர் லொவ்ஹியும் நிலத்தில் இருந்த ஒரு பிள்ளையும் வடநாட்டு மங்கையின் மகிமைகளைப் பாடினார்கள்.

பிள்ளை இப்படிப் பாடிற்று: "வானத்தில் ஒரு பொிய கழுகு பறந்தது. அதன் ஒரு சிறகு முகிலைத் தொட்டது. மறு சிறகு கடலலையைத் தொட்டது. வாலிறகு நீாில் பட, தலையிறகு வானில் பட்டது. அது அசைந்து பறந்து திரும்பிச் சுழன்று ஆண்களின் கோட்டைக் கூரைக்கு வந்தது. அலகால் அதனைத் தட்டிப் பார்த்தது. ஆனால் அதனால் உள்ளே புக முடியவில்லை. அது பின்னர் பெண்களின் கோட்டையின் செப்புக் கூரையைத் தட்டிப் பார்த்தது. அங்கேயும் உள்ளே புக முடியவில்லை.

"பின்னர் இளம் கன்னியர் கோட்டைப் பக்கமாய் வந்தது. அதன் சணல் கூரை வழியாய் உள்ளே நுழைந்தது. கழுகு புகைக் கூண்டுக்குப் பறந்து யன்னலுக்குத் தாவித் தாழ்ப்பாளை நீக்கிச் சுவர்ப் பக்கம் வந்தது. அங்கிருந்த பின்னிய நறுங்குழற் கன்னியரைப் பார்த்தது. அவர்களில் மென்மையான ஒருத்தியை, இனிமையான ஒருத்தியை, முத்தையும் மலரையும் தலையில் சூடிய ஒருத்தியைக் கண்டது.

"அந்த மெல்லியளை, அந்த இனியவளை, செம்மை நிறத்தவளை, வெண்மை படைத்தவளைக் கழுகு கைப்பற்றிச் சென்றது."

லொவ்ஹி பாடினாள்: "எனது அன்புக்குாிய தங்க ஆப்பிளே, என் அருமை மகள், அழகிய கூந்தலாள் இங்கே வளர்வதுபற்றி உனக்கு எப்படித் தொிந்தது? அவளுடைய வெள்ளி அணிகளின் ஒளி அங்கே ஒளிர்ந்ததா? பொன்னின் நகைகளின் ஒலி அங்கே ஒலித்ததா? அல்லது எங்கள் மின்னும் சூாியனும் திகழும் நிலவும் அங்கே தொிந்தனவா?"

பிள்ளை பாடிற்று: "பாக்கியம் உள்ளவனுக்கு இந்த வீட்டுப் பாதையும் தொிந்தது. பெண்ணுடைய அப்பா கப்பல்கள் கட்டிக் கடலில் விட்டுப் பெரும் புகழ் பெற்ற பொிய பேராளன். பெண்ணுடைய அம்மா கோதுமை ரொட்டிகளை தடிப்பமாய்த் தட்டி, வந்தோரை வரவேற்று வயிறாரப் படைக்கும் வளமான சீமாட்டி.

"வடநாட்டு மங்கையின் வனப்பும் வடிவும் பிறநாட்டுக்கெல்லாம் எப்படிச் சென்றது என்று எனக்குத் தொியும். ஒரு நாள் அதிகாலையில் நான் இந்தத் தோட்டப் பக்கம் வந்து வேலியோரம் நின்றபோது, வடநாட்டின் வீட்டிலிருந்து நூல்போலப் புகை எழுந்ததைக் கண்டேன். அவளே திாிகையில் அரைத்துக் கொண்டிருந்தாள். திருகைக் கைபிடி குயில்போல் ஒலித்தது. கைத்தண்டு வாத்துப்போல இசைத்தது. திாிகையின் சக்கரம் குருவிபோலக் கீச்சிட திருகைக்கல் முத்துப்போல அசைந்தது.

"இரண்டாம் முறை நான் வயல் வழியாக வந்தபோது மஞ்சள் நிறத்துப் பசும்புற்றரையில் அவளைக் கண்டேன். அவள் அங்கே சிவப்புச் சாயத்தைக் கலயத்தில் காய்ச்சினாள். மஞ்சள் சாயத்தைக் கெண்டியில் ஊற்றினாள்.

"மூன்றாம் முறை நான் யன்னல் ஓரமாக நடந்து செல்கையில் அவள் துணி நெய்யும் ஓசை கேட்டது. தறியச்சின் ஒலி தனியாகக் கேட்டது. பாறைக் குழியின் கீாியைப்போல நூனாழி அசைந்தது. மரத்தைக் கொத்தும் மரங்கொத்திப் பறவைபோல தறியச்சுப் பல்லின் சத்தம் வந்தது. மரக்கிளைகளில் ஓடும் மரவணிலைப்போல பாவோட்டுச் சத்தம் பரபரத்தது."

"நல்லது" என்றாள் வடநிலத் தலைவி. " 'மகளே, `பள்ளத்தாக்குப் பக்கம் போகாதே! அங்கு நின்று பாடாதே! கழுத்தின் வளைவையும் கைகளின் வெண்மையையும் பிறருக்குக் காட்டாதே! இளம் மார்பின் எழுச்சியையும் ஏனைய உறுப்புகளின் வளர்ச்சியையும் ஒருவருக்கும் காட்டாதே!' என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?

"இலையுதிர் காலத்திலும் கோடையிலும் வசந்தத்திலும், ஏன் விதைப்புக் காலத்திலும்கூட, 'நாங்கள் இரகசியமாக ஒரு வீடு கட்ட வேண்டும். அதற்கு சின்னதாக மட்டும் ஒரு யன்னல் வைக்க வேண்டும். அதற்குள் மறைவாக எங்கள் பெண் இருந்து தறிவேலை செய்ய வேண்டும்' என்று அடித்துக் கொண்டேனே. அப்படிச் செய்திருந்தால், பின்லாந்து மாப்பிள்ளைகள் அவளைப்பற்றி அறிய வாய்ப்பில்லாமல் போயிருக்குமே!"

நிலத்தில் இருந்த இரண்டு வாரக் குழந்தை இப்படிச் சொன்னது: "ஒரு சடைத்த மயிர்க் குதிரையைக்கூட மறைத்து வைக்கலாம். ஆனால் நீண்ட கூந்தலுள்ள பருவ மங்கையைப் பதுக்கி வைப்பது சுலபமல்ல. நடுக் கடலில் கற்கோட்டை கட்டி உன் மகளைத் தடுத்து வைத்தாலும் உருக்கு லாடன் அடித்த குதிரையில் உயர்ந்த தொப்பியுடன் வரும் மாப்பிள்ளையை உன்னால் தடுக்க முடியாது."

ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய் வீடு திரும்பிய வைனாமொயினன், "ஆ, நான் எவ்வளவு ஒரு துர்ப்பாக்கியசாலி. இளம் வயதிலேயே ஒரு பெண்ணை மணக்கத் தொியாமல் போய்விட்டதே! மனிதன் வாழ்க்கையில் எதற்காகவும் வருத்தப்படலாம். ஆனால் இளமையில் திருமணம் செய்வதற்கோ இளமையில் குழந்தைகளைப் பெறுவதற்கோ அவன் வருந்தமாட்டான்," என்று சொன்னான்.

"ஒரு முதியவன் ஒரு பெண்ணை அடையவோ நீச்சல் போட்டியில் வெல்லவோ படகுப் போட்டியில் வெற்றிபெறவோ விரும்பினால், அவன் ஓர் இளைஞனுடன் போட்டியிடவே கூடாது," என்று அவன் மேலும் சொன்னான்.
     அட்டவணை    மேலே
20. விவாக விருந்து

வடநாட்டு மங்கைக்கும் இல்மாினனுக்கும் திருமணம் நிகழ்ந்தபோது நடைபெற்ற கொண்டாட்டம்பற்றியும் தெய்வீகப் பானம் அருந்தியதுபற்றியும் இப்போது பார்க்கலாம்.

வடநாட்டின் இல்லங்களில், திருமணக் கொண்டாட்டத்துக்கான ஆயத்தங்கள் வெகு காலமாக நடந்து கொண்டிருந்தன.

கரேலியா என்னும் இடத்தில் ஒரு பொிய எருது வளர்ந்தது. அது ஒன்றும் பொியதுமல்ல; ஆனால் அத்தனை சிறியதுமல்ல. நடுத்தரமான ஒரு கன்றுக்குட்டி. ஹமே என்னும் இடத்தில் அதன் வால் ஆடியது. கெமியொக்கி என்னும் நதியில் அதன் தலை அசைந்தது. அதன் கொம்பின் நீளம் அறுநூறு அடி. அதன் வாய்ப்பூட்டின் அளவு தொள்ளாயிரம் அடி. ஒரு கீாி அதன் நுகக்கட்டின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு ஓடி முடிக்க ஒரு வாரம் எடுக்கும். ஒரு தூக்கணங் குருவி அதன் ஒரு கொம்பிலிருந்து மறு கொம்புக்கு, இடையில் ஓய்வெடுக்காமல் பறந்து செல்ல ஒரு நாள் பிடிக்கும். கோடை அணில் ஒன்று அதன் கழுத்திலிருந்து வால் நுனியை நோக்கி ஓடிற்று. [13]ஒரு மாதத்தில் அது இலக்கை அடைந்ததாகச் செய்தியில்லை.

பின்லாந்தின் பிரமாண்டமான அந்தக் கன்றுக்குட்டியை வடநாட்டுக்குக் கொண்டு வந்தனர். கொண்டுவரும்போது அதன் கொம்புகளை நூறுபேர் பிடித்திருந்தனர். வாய்ப்பூட்டை ஆயிரம்பேர் பிடித்திருந்தனர். அது சாியொலா கால்வாய் ஓரம் புல் மேய்ந்தபோது, அதன் முதுகு முகிலில் முட்டியது. அந்த முரட்டுக் காளையை அடித்து நிலத்தில் வீழ்த்த வல்ல வீரவாலிபன் ஒருவன்கூட இருக்கவில்லை.

கரேலியாவிலிருந்து ஓர் அந்நியன் வந்தான். அவனுக்குப் பெயர் விரோக்கன்னாஸ். "பாவம் எருது! பொறப்பா, பொறு! தடியால் உனது மண்டையை அடித்து நொருக்க நான்தான் வந்துவிட்டேனே! அதன் பிறகு அடுத்த கோடையில் அசைக்க உனக்கு வாய் இருக்காது" என்றான் அவன்.

விரோக்கன்னாஸ் என்ற அந்தக் கிழவன் காளையைப் பிடிக்கப் போனான்; பிடித்து அடிக்கப் போனான். காளை தலையைத் திருப்பிற்று. கறுத்த விழிகளை உருட்டிற்று. கிழவன் போய்ப் பற்றைக்குள் விழுந்தான். பக்கத்து மரத்தில் பாய்ந்து ஏறினான்.

காளையை வீழ்த்தக் கவின்மிகு கரேலியாவிலிருந்து ஒருவனைக் கொண்டு வந்தார்கள். பின்லாந்தின் பரந்த பிரதேசத்திலிருந்தும் ஒருவனைக் கொண்டு வந்தார்கள். அமைதி நாடான ரஷ்யாவிலிருந்தும் கொண்டு வந்தார்கள். லாப்புலாந்தின் விாிந்த வௌிகளிலிருந்தும், வலிமைமிக்க துர்யாவிலிருந்தும், ஏன், துவோனலா என்னும் மரண உலகிலிருந்தும்கூடக் கொண்டு வந்தார்கள். எருதை அடிக்க வல்லவன் அகப்படவில்லை.

பரந்த கடலில் எழுந்த அலைகளில் காளையை வீழ்த்த ஒருவனைத் தேடினர். கடலிலிருந்து ஒரு கறுத்த மனிதன் தோன்றினான். அவன் ஒன்றும் பொியவனல்லன; ஆனால் அத்தனை சிறியனுமல்லன். ஒரு சட்டியினுள்ளே ஒடுங்கிப் படுப்பான். ஓர் அாிதட்டின் கீழே அடங்கி நிற்பான்.

அவனது கைமுட்டி இரும்பால் ஆனது. அவனது உரோமமும் இரும்பால் ஆனது. அவனுடைய தொப்பியும் காலணிகளும் கல்லால் ஆனவை. செப்புப் பிடி போட்ட தங்கக் கத்தி கரத்தில் இருந்தது. அந்தச் சிறிய மனிதன் காளையைக் கண்டான். கழுத்தில் அடித்தான். கவிழ்த்து நிலத்தில் கலங்க அடித்தான்.

அதிலிருந்து விவாகக் கொண்டாத்துக்குப் பொிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. கிடைத்ததோ நூறு பீப்பாய் இறைச்சி; அறுநூறு அடி பதனிறைச்சி; ஏழு தோணி இரத்தம்; ஆறு பீப்பாய் கொழுப்பு; அவ்வளவுதான்!

வடநாட்டில் திருமண மண்டபம் ஒன்று கட்டப்பட்டது. கூரையில் நின்றொரு கோழி கூவினால், அது நிலம்வரைக்கும் வந்து கேட்காது; அவ்வளவு உயரம்! கொல்லையில் நின்றொரு நாய் குரைத்தால், முன்வாசல்வரை வந்து கேட்காது; அவ்வளவு தூரம்!

பின்னர் லொவ்ஹி என்னும் வடநிலத் தலைவி பொிய கூடத்தின் நடுவில் வந்து நின்று, "திருமணத்துக்கு வரும் அத்தனை பேருக்கும் மது வழங்க வேண்டுமே! ஆனால் 'பீர்' எப்படிப் பிறந்தது? அதை எப்படி வடிப்பது?" என்று சிந்தித்தாள்.

அடுப்புப் புகட்டில் அமர்ந்திருந்த ஒரு முதியவன், " 'பீர்' என்னும் பானம் பார்லியிலிருந்து பிறந்தது. அதற்குப் போதைச் செடியையும் சேர்த்து வடித்தால் சுவையைக் கேட்கவா வேண்டும்! ஆனால் நீரும் நெருப்பும் அதற்கு அவசியம்" என்றான்.

'பீர்' பிறந்த கதையை அவன் தொடர்ந்து இவ்விதம் சொன்னான்.

"பூமியை உழுதபோது போதைச் செடி இளம் நாற்றாக நாட்டப்பட்டது. கலேவலாவின் கிணற்று ஓரத்திலும் ஒஸ்மோவின் வயல் வௌிகளிலும் காஞ்சோன்றிச் செடிபோல கவனிப்பாரற்றுக் கைவிடப்பட்டது. அதில் ஓர் இளம் தளிர் வந்தது. உரமாய் எழுந்தது. பசுமையாய்ப் படர்ந்தது. ஒரு சிறிய மரத்தில் தொற்றியது; தழுவியது; தொடர்ந்தேறிச் சென்றது.

"இதே நேரத்தில் ஒஸ்மோவின் புதிய வயல்களில் அதிர்ஷ்டக் கடவுள் பார்லியை விதைத்தார். பார்லி பார்வைக்குச் சிறப்பாய் வளர்ந்தது. உயர்ந்து எழுந்து உரமாய் நின்றது.

"காலம் கொஞ்சம் கரைந்தது.

"போதைச் செடி மரத்தில் இருந்தது. பார்லிச் செடி வயலோரத்தில் நின்றது. கிணற்றின் உள்ளே குளிர்ந்த நீர்இருந்தது. மூவரும் கலந்து இப்படிப் பேசினார்கள். 'நாங்கள் மூவரும் கூடுவது எக்காலம்? தனித்த வாழ்க்கை துன்பத்தைத் தரும். இருவர் மூவர் சேர்வதே இன்பம்.'

"அவள் ஒஸ்மோவின் வம்சத்தில் வந்தவள். அதனால் அவளை ஒஸ்மத்தாள் என்று அழைப்பர். அவளே 'பீரை' வடிக்கும் பக்குவம் தொிந்தவள். ஒரு கோடை நாளில், அந்தத் தீவின் பனிப்புகார் படிந்த கடல்முனையோரம், அவள் பார்லியில் ஆறு மணிகளை எடுத்தாள். போதைச் செடியில் ஏழு கதிர்களைக் கொய்தாள். தண்ணீரை எட்டு அகப்பையில் அள்ளினாள். அவற்றைப் பானையில் போட்டு அடுப்பில் எாித்தாள். பார்லி 'பீரா'ய் வடியத் தொடங்கிற்று. வடிந்த 'பீரை' மிலாறு மரத்துச் சாடியில் ஊற்றினாள்.

"ஆனால் அந்த 'பீர்' புளிக்கவில்லை; நுரைக்கவில்லை; பொங்கவுமில்லை. அவள் யோசித்தாள்: 'இதற்கு இன்னும் என்ன செய்யலாம். எதைப் போட்டு நுரைக்க வைக்கலாம்?'

"அவள் கலேவலாவில் பிறந்த கவினுறு மங்கை. அவளுக்கு மெதுமையான விரல்கள். பதுமைபோல நடப்பாள். நடந்து திாிந்து சிந்தித்த வேளையில் நிலத்தில் ஒரு சிராய்த் துண்டைக் கண்டாள். அதை எடுத்தாள். 'இது ஒரு பூவையின் பூப்போன்ற விரல்களில் இருந்தால், இதிலிருந்து என்ன செய்யலாம்?' என்று யோசித்தாள்.

"அவள் சிராய்த் துண்டைக் கைகளில் எடுத்தாள். கைகளால் தேய்த்தாள். தனது தொடைகளிலும் தேய்த்தாள். அதிலிருந்து வெள்ளை அணிலொன்று பிறந்தது.

"அந்த அணிலைத் தன் மகன் எனக் கருதி அறிவுரை சொன்னாள். 'தங்க அணிலே. தரணியின் அழகே, காட்டு மலரே, இப்போது தப்பியோவின் இல்லமான காட்டுக்குச் செல்! அங்கே சடைத்த மரத்தில் சட்டென்று ஏறு! கழுகு உன்னைக் காணமாட்டாது. கண்டு உன்னைக் கவர்ந்து செல்லாது. ஊசியிலை மரத்தின் கூம்புக்காய்களை எடு! அவற்றின் செதில்களைக் கொண்டுவந்து என்னிடம் கொடு!'

"சடைவால் அணில் சுழன்று திரும்பி வெட்டவௌியை ஓடி முடித்து, மூன்று பொழில்கள் முழுவதும் கடந்து, தப்பியோவின் வனத்தை அடைந்தது. ஊசியிலை மரங்கள் மூன்றும் தோவதாரு நான்கும் அங்கே நின்றன. தேவதாருவில் காய்களைப் பறித்தது. ஊசியிலை மரத்தில் இலைகளை ஒடித்தது. திரும்பி வந்து ஒஸ்மத்தாள் என்னும் பெண்ணிடம் கொடுத்தது.

"அவள் அதை 'பீாி'ல் போட்டாள். 'பீர்' புளிக்கவுமில்லை; பொங்கவுமில்லை.

"அந்தக் கலேவலாவின் கவினுறு மங்கை இன்னொரு சிராய்த் துண்டை நிலத்தில் கண்டாள். அதைக் கைகளில் எடுத்தாள். கைகளால் தேய்த்தாள். தனது தொடைகளிலும் தேய்த்தாள். தங்க நெஞ்சுடன் ஒரு கீாி தோன்றிற்று. 'தங்க மகவே, கரடிகள் பதுங்கி வாழும் பாறைக் குகைக்கு விரைந்து சென்று, சொட்டும் நுரையைப் பாதத்தில் ஏந்தி பத்திரமாகத் திரும்பி வந்திடு!' என்று அவள் கீாிக்குச் சொன்னாள்.

"பாறைக் குகைக்குக் கீாி சென்றது. இரும்பிலும் உருக்கிலும் உயர்ந்து நின்ற மலைகளில் ஏறியது. அங்கே போர் புாியும் கரடிகளின் வாயில் நுரை வழிவதைக் கண்டது. கீாி அதனைச் சேர்த்து, வீடு திரும்பி, அழகியின் கையில் அதனைக் கொடுத்தது.

"அவள் அதை 'பீாி'ல் போட்டாள். 'பீர்' புளிக்கவுமில்லை; பொங்கவுமில்லை. 'இனி எதைக் கொண்டு வந்து இதில் போடலாம்?' என்று சிந்தித்தாள்.

"புல் [14]நெற்று ஒன்று நிலத்தில் கிடந்தது. முன்போலவே அதனைக் கைகளில் எடுத்துத் தொடைகளில் தேய்த்தாள். வண்டு ஒன்று வந்து பிறந்தது.

" 'வண்டே, வண்டே, பசும் புற்றிடலின் மலர்களின் அரசே, நீ இப்போது கடல் நடுவே இருக்கும் தீவுக்குப் போவாய்! அங்கே செம்புப் பட்டி அணிந்த பாவை ஒருத்தி உறக்கத்தில் இருப்பாள். தேன் சொட்டும் புல்லினம் அவளைச் சுற்றிலும் இருக்கும். ஒளிரும் பூக்களின் நுனியிலிருந்தும் பூக்களின் பொன்வாய்க் கிண்ணங்களிலிருந்தும் தேனை எடுத்து இறகில் சுமந்து இங்கே திரும்பி என்னிடம் சேர்ப்பாய்!' என்றாள் அவள்.

"விரைந்தது வண்டு. ஒரு கடல் கடந்து, மறு கடல் கடந்து, மூன்றாம் கடலையும் கடந்து தீவை அடைந்தது. உறக்கத்தில் இருந்த அாிவையைக் கண்டது. ஈய நகைகளை மார்பில் அணிந்திருந்த அவளின் அருகில் தேன் வயல்கள். பொன் மலர்களும் வெள்ளிப் புற்களும் இடுப்புப் பட்டியில் இருந்தன. தனது இறகுகளைப் புல்லிலும் பூவிலும் தோய்த்துத் தேனை எடுத்த வண்டு ஒஸ்மத்தாளிடம் திரும்பி வந்தது.

"கலேவலாவின் கவனுறு மங்கை அந்தத் தேனை 'பீாி'ல் ஊற்றினாள். நுரைத்து எழுந்த 'பீர்' அந்தத் தொட்டியின் விளிம்பு வரைக்கும் வந்து தரையில் வழியப் பார்த்தது.

"காலம் கொஞ்சம் கரைந்தது.

"குடிக்கும் மன்னாகள் குடிக்க வந்தனர். அவர்களில் முதன்மையாக நின்றான் செங்கன்னம் படைத்த போக்கிாி லெம்மின்கைனன். பானத்தை வடித்த பாவை இப்படிச் சொன்னாள்: 'இந்த நாள் ஒரு தீய நாளாகிவிட்டதே! நான் வடித்த பானம் தொட்டியில் நிரம்பி நிலத்தில் வழிகிறதே!'

"மரத்திலிருந்த சிவப்புக் குருவி சொன்னது. வீட்டிறப்பில் இருந்த இன்னொரு குருவியும் இவ்வாறு சொன்னது: 'இந்த 'பீர்' தீயதல்ல. இது அருந்துவதற்குச் சிறந்த பானம். செப்பு வளையங்கள் பூட்டிய சிந்தூர மரப் பீப்பாய்களில் அடைத்துக் களஞ்சிய அறையில் வைக்கலாம்.'

"கலேவலா என்னும் இடத்தில் 'பீர்' என்னும் பானம் வடிக்கத் தொடங்கிய கதை இதுதான். அன்றிலிருந்து இந்த 'பீர்' மக்களிடையே நல்ல பானம் என்று நல்ல மதிப்பைப் பெற்றது. இது உயர்ந்த மனிதருக்குச் சிறப்பைத் தந்தது. நங்கையருக்கு நகைப்பைத் தந்தது. ஆண்களின் மனங்கள் ஆனந்தம் கொண்டன. மூடரை மேலும் மூடராய் மாற்றிற்று" என்று முடித்தான் அடுப்புப் புகட்டில் இருந்த அந்த முதியவன்.

வடநிலத் தலைவி இந்தக் கதையைக் கேட்டதும் பொிய தொட்டிகளில் தண்ணீரை நிரப்பினாள். அதில் போதிய பார்லியைப் போட்டாள். போதைச் செடியின் தளைகளைச் சேர்த்தாள். மிலாறு மரச் சாடிகளில் அடைத்து வைப்பதற்கு வலிமையுள்ள மதுபானத்தை வடிக்கத் தொடங்கினாள். மாதக் கணக்காகக் கற்களைச் சூடேற்றினாள். கோடை கோடையாக நீரைக் கொதிக்க வைத்தாள். காடு காடாக விறகு வெட்டி எாித்தாள். கிணறு கிணறாக நீரை அள்ளிச் சுமந்தாள். காடுகள் விறகில்லாமல் வெறுமையாகின. ஏாிகள் நீாில்லாமல் காய்ந்து போயின. கடைசியில் வடநாட்டு விழாவில் குடிக்கும் மாந்தர் குடித்து மகிழப் பீப்பாய்களில் 'பீர்' தயாராயிற்று.

'பீர்' வடித்த அடுப்புகளிலிருந்து எழுந்த புகை வடநாட்டில் பாதியை நிறைத்தது. கரேலியா முழுவதையும் இருட்டாக்கி மறைத்தது. இதைக் கண்ட மக்கள் வியந்தனர். ஒருவரையொருவர் இவ்வாறு வினவினா: "இது என்ன புகை? சிறிதாக இருப்பதால் இது போர் காலத்துப் புகையல்ல. பொிதாக இருப்பதால் இடையர் மூட்டிய தீயாகவும் இருக்காது."

லெம்மின்கைனனின் தாய் தண்ணீர் எடுக்க அருவிக்குப் போனாள். அப்பொழுது வடக்கில் எழுந்த தடித்த புகையைக் கண்டாள். "போாினால் எழுந்த புகைதான் அது" என்று சொன்னாள்.

அதைக் கண்ட லெம்மின்கைனன், "அது போர்ப் புகைதானா என்று நானே அருகில் போய்ப் பார்த்து வருகிறேன்" என்றான்.

அவன் அருகில் சென்று அது போர்ப் புகையல்ல என்பதைத் தொிந்து கொண்டான். சாியோலா என்னும் நீாிணை வாயிலில் மது வடிக்கும் நெருப்பு அது என்பதையும் அறிந்து கொண்டான்.

நீாிணைக்கு இந்தப் பக்கம் நின்ற அவனுடைய ஒரு கண் சுழன்றது. மறு கண் சாய்ந்தது. வாயையும் கோணி வளைத்து நௌித்தான். "மாமி, என் ஆசை மாமி, வடபுல நாட்டின் மதிப்பான தலைவி, இந்த லெம்மின்கைனன் உனது மகளைத் திருமணம் செய்யும் நாளில் ஒன்றுசேரும் மக்கள் எல்லோரும் நன்றாகக் குடிக்க மதுவை சிறப்பாகக் காய்ச்சு!" என்றான்.

வடநாட்டில் நடைபெறப்போகும் திருமண விழாவில் கூடும் விருந்தினா குடிப்பதற்கு, கல்லினால் கட்டிய களஞ்சியக் கூடங்களில் செப்பு வளையங்கள் பூட்டிய மிலாறு மரப் பீப்பாய்களில் மது பொங்கிப் புளித்துப் பதமாக இருந்தது. லொவ்ஹி உணவு வகைகளை ஆயத்தம் செய்தாள். கலயங்கள் கலகலத்தன. சட்டிகள் சலசலத்தன. கெண்டிகள் கொதி கொதித்தன. பொிய பொிய ரொட்டிகளைச் சுட்டாள். அாிய பலகாரங்கள் அளவில்லாமல் செய்தாள்.

ரொட்டிகள் சுட்டு முடிந்ததும் பலகாரங்கள் தயாரானதும் களஞ்சியக் கூடத்தில் இருந்த மது இவ்வாறு சொன்னது: "குடிப்பவன் இப்போது இங்கே வரலாம். சுவைப்பவன் இப்போது இங்கே வரலாம். என்னைப் புகழ்ந்து பாட ஒரு தரமான பாடகனும் வரலாம்."

ஒரு தரமான பாடகனைத் தேடித் திாிந்தனர். வஞ்சிர மீனை அழைத்து வந்தனர். கோலாச்சி மீனைக் கூட்டி வந்தனர். ஒன்றுக்கு வாய் கோணல். அடுத்தற்கு பற்களில் நீக்கல். ஒரு பிள்ளையைக் கொண்டு வந்தனர். பிள்ளையின் நாக்குத் தடித்தது. அடி நாக்கு விறைத்தது.

பீப்பாயில் இருந்த சிவந்த மதுபானம் சினந்து எழுந்தது. "என்னைப் புகழ்ந்து பாட ஒரு தரமான பாடகன் வராவிட்டால், உடைப்பேன் பீப்பாயின் வளையத்தை! பெயர்ப்பேன் அடித் தட்டை! பாய்வேன் நிலத்தில்!" என்றது.

பின்னர் லொவ்ஹி திருமண விழாவுக்கு அழைப்புகளை அனுப்பினாள். "ஓ, எனது சிறிய வேலைக்காரப் பெண்களே, சிறப்பான விருந்தினரை விழாவுக்கு அழையுங்கள்! எளியவரை ஏழைகளை கூன் குருடு முடம் நொண்டி அனைவரையும் அழையுங்கள்! குருடரைத் தோணியில் ஏற்றி வாருங்கள்! நொண்டியைக் குதிரையில் ஏற்றி வாருங்கள்! முடவரைச் சறுக்கு வண்டியில் இழுத்து வாருங்கள்! வடநில மக்களும் வரட்டும்! கலேவலா மக்களும் வரட்டும்! ஒரு சிறந்த பாடகனாக வைனாமொயினனை அழையுங்கள்! ஆனால் தூரநெஞ்சினன் என்று அழைக்கப்படும் அஹ்தி என்ற பெயருமுடைய லெம்மின்கைனனை மட்டும் அழைக்க வேண்டாம்!" என்று சொன்னாள்.

"ஏன் லெம்மின்கைனனை மட்டும் வேண்டாம்?" என்று அடிமைப் பெண் கேட்டாள்.

"அவன் ஒரு சண்டைக்காரன். திருமண விழாக்களில் அவமானத்தை உண்டாக்குபவன். புனிதமான ஆடையில் இருந்தாலும்கூட மங்கையாின் தூய்மையை மாசுபடுத்த நினைப்பவன்" என்று லொவ்ஹி சொன்னாள்.

"அவனை எங்களுக்கு எப்படித் தொியும்?" என்று கேட்டாள் அடிமைப் பெண்.

"அவனை நன்றாக அறிந்து கொள்ளலாம். அந்தப் போக்கிாி வளைகுடாப் பக்கத்தில் வசிப்பவன்."

அந்த அடிமைப் பெண் ஆறு வழிகளில் அனுப்பினாள் அழைப்பை! எட்டுப் பாதையில் விட்டாள் செய்தியை! வடநில மக்கள் அனைவரையும் அழைத்தாள். கலேவலா மக்கள் எல்லோரையும் கூப்பிட்டாள். எளியவர் ஏழைகள் அனைவரையும் அழைத்தாள். ஆனால் லெம்மின்கைனனுக்கு மட்டும் அழைப்பே இல்லை.
     அட்டவணை    மேலே
21. திருமணக் கொண்டாட்டம்

வடநாட்டுத் தலைவி திருமண விழா அலுவல்களில் ஈடுபட்டிருந்த நேரத்தில், சவுக்கு வீசும் சத்தமும் சறுக்கு வண்டியின் ஓசையும் ஒருங்கே கேட்டன. வடமேல் பக்கமாய் விழிகளை வீசினாள். கதிரவன் கீழே தலையைத் திருப்பினாள். 'இந்தக் கரையை நோக்கி என்ன இவ்வளவு கூட்டம்? போருக்கு வரும் படையோ?' என்று அதிசயித்தாள். அவள் அருகில் சென்று, மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்பதையும் மக்களின் மத்தியில் மாப்பிள்ளை இருக்கிறார் என்பதையும் அறிந்து கொண்டாள்.

"காற்று அடிக்கிறதோ, காடெல்லாம் சாிகிறதோ, கடலலைதான் புரள்கிறதோ, கூழாங்கல் உருள்கிறதோ என்றெல்லாம் நினைத்தேனே" என்ற லொவ்ஹி மேலும் சொன்னாள். "கிட்ட வந்து பார்த்தால், காற்றும் அடிக்கவில்லை. காடெல்லாம் சாியவில்லை. கடலலையும் புரளவில்லை. கூழாங்கல் உருளவில்லை. மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் சறுக்கு வண்டியிலே. கூட வந்தார் கூட வந்தார் இருநூறு பேரே!"

லொவ்ஹி தொடர்ந்தாள். "இவ்வளவு பேருக்கு மத்தியில் நான் மாப்பிள்ளையை எப்படி அறியலாம்? அவரை நன்றாக அறியலாம்! காட்டு மரங்களின் நடுவில் ஒரு சிறுபழச் செடி போலச் சிறப்பாக இருப்பார். சிறுசெடிகளின் நடுவில் சிந்தூர மரம்போலச் செழிப்பாக இருப்பார். விண்மீன்கள் நடுவில் வெண்ணிலவுபோல வனப்பாக இருப்பார்.

"கறுப்புக் குதிரையில் மருமகன் வருவது பசியெடுத்த ஓநாயில் வருவது போலவும் இரைதேடும் காக்கைமேல் வருவது போலவும் பறக்கும் மாயக் கழுகுமேல் வருவது போலவும் இருக்கிறது. ஏர்க்காலில் ஆறு தங்கப் பறவைகளும் கடிவாளத்தில் ஏழு நீலக் குருவிகளும் இசைக்கின்றன."

தெரு கலகலப்பாக இருந்தது. கிணற்றடியில் சத்தம் கேட்டது. முற்றத்துக்கு வந்தார் மருமகன். அவர் கூட்டத்தில் கடைசியிலும் இல்லை; முதலிலும் இல்லை; நடுவினில் இருந்தார்.

"ஓ, இளைஞர்களே, வீரர்களே, முற்றத்துக்கு வாருங்கள்! கடிவாளத்தைக் கழற்றுங்கள்! ஏர்க்காலை இறக்குங்கள்! மாப்பிள்ளையை உள்ளே வரவிடுங்கள்!" என்று கூறினாள் லொவ்ஹி.

இல்மாினனின் குதிரை அலங்கார வண்டியை இழுத்துக் கொண்டு முற்றத்துக்கு வந்தது. முதியவள் வேலைக்காரருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்தாள். "அழகிய தொழிலாளரே, செப்பு ஏர்க்காலிலிருந்து குதிரையை அவிழுங்கள்! ஈயத்து நெஞ்சுப் பட்டியையும் தோல் கடிவாளத்தையும் கழற்றுங்கள்! பட்டுக் கடிவாளமும் வெள்ளி வாய்ப்பூட்டும் கொண்ட குதிரையைப் பக்குவமாகக் கொண்டு செல்லுங்கள்! புதிதாகப் பனிமழை பொழிந்த வெண்மையான தரையில் அது உருண்டு புரளட்டும்! தேவதாருவின் வேரடியில் பாயும் அருவியின் சுவையான நீரை அது குடிக்கட்டும்! தங்கக் கூடையிலிருந்தும் வெள்ளிப் பெட்டியிலிருந்தும் கழுவிய பார்லியை, சுட்ட ரொட்டியை, கோடைக் கோதுமையை தானியத்துடன் கலந்து உணவாகக் கொடுங்கள்! பின்னர் உயர்ந்த ஓர் இடத்தில் சிறந்த ஓர் இலாயத்துக்கு இழுத்துச் செல்லுங்கள்! அதற்குப் புல்லாிசியைக் கொடுங்கள்! கூலத்தைக் கொடுங்கள்! வைக்கோலைக் கொடுங்கள்! கடற்குதிரை எலும்புச் சீப்பினால் அதை மென்மையாக வாாி வெள்ளியாலும் தங்கத்தாலும் செம்பாலும் இழைத்த போர்வையால் மூடுங்கள்!"

"இளைஞரே, ஊர் மக்களே," என்ற லொவ்ஹி தொடர்ந்து சொன்னாள். "மருமகனை உள்ளே அழைத்து வாருங்கள்! தொப்பியையும் கையுறைகளையும் கழற்றிவிட்டு அழைத்து வாருங்கள்! பொறுங்கள்...! இந்தக் கதவையும் கதவு நிலையையும் கழற்றாமல் அவர் உள்ளே நுழைவாரா என்று பார்க்கிறேன். இந்த உத்தரத்தை உயர்த்தாமல் படிக்கட்டைப் பணிக்காமல் சுவரை இடிக்காமல் சுவர் விட்டத்தை நகர்த்தாமல் மருமகன் உள்ளே வருவாரா?

"அடடா, அவர் கதவு நிலையிலும் பார்க்க உயரமானவர். உத்தரத்தை உயரத் தூக்குங்கள்! வாயிற்படியைப் பணியுங்கள்! கதவு நிலைகளைக் கழற்றுங்கள்! உயர்ந்த மருமகன் உள்ளே வரட்டும்!

"மாப்பிள்ளை உள்ளே வந்துவிட்டார். அழகுத் தெய்வமே, அர்ப்பணித்தேன் நன்றியை. இனி இல்லத்தின் உள்ளே கொஞ்சம் பார்க்கலாம். இங்கே மேசைகள் கழுவப்பட்டனவா? வாங்குகள் சுத்தமாக இருக்கின்றனவா?"

"அப்பாடா, வீடு நன்றாக இருக்கிறது. பக்கச் சுவர் பன்றி முள்ளாலும் புறச் சுவர் கலைமான் எலும்பாலும் கட்டப்பட்டன. கதவுச் சுவர் நீர்நாய் எலும்பாலும் கதவின் மேல்நிலை ஆட்டின் எலும்பாலும் ஆனவை. உத்தரம் ஆப்பிள் மரத்தாலும் தூண்கள் மிலாறு மரத்தாலும் அடுப்பின் பக்கம் நீராம்பலாலும் கூரை கெண்டை மீன் செதிலாலும் இயற்றப்பட்டன.

"ஒரு வாங்கு இரும்பினாலும் மற்றவைகள் ஜேர்மன் பலகைகளாலும் செய்யப்பட்டன. மேசையெல்லாம் பொன் வேலை. தரையெல்லாம் பட்டு விாிப்பு. அடுப்புகள் செம்பில். அதன் அடித்தளம் கல்லில். தீக் கற்கள் கடற் கற்கள். அடுப்புக்கு ஆசனம் கலேவலா மரத்திலாம்."

இல்மாினன் உள்ளே நுழைந்ததும், "இறைவனே, இந்த இல்லத்தில் தங்கி இன்னருள் புாிக!" என்றான்.

"வாருங்கள், வாருங்கள்! ஊசியிலை மரத்தின் இச்சிறு குடிலுக்கு உங்கள் வருகை நல்வரவாகுக!" என்று லொவ்ஹி மாப்பிள்ளையையும் கூட்டத்தினரையும் வர வேற்றாள்.

லொவ்ஹி, தான் மாப்பிள்ளையை நன்றாகப் பார்ப்பதற்காக மிலாறுப் பட்டையில் தீச்சுடரைக் கொண்டுவரும்படி வேலைக்காாிகளுக்கு ஆணையிட்டாள். பின்னர், "சே, இந்தச் சுடாில் புகை வருகிறது. இது மாப்பிள்ளையின் அாிய உருவை இருளாகக் காட்டும். இது வேண்டாம்! மெழுகுவர்த்தியில் தீச்சுடரைக் கொண்டுவாருங்கள்!" என்றாள்.

அடிமைச் சிறு பெண் மெழுகுவர்த்தியில் தீச்சுடர் கொணாந்தாள். இந்த ஒளியில் மாப்பிள்ளையின் கண்களும் முகமும் நன்கு துலங்கின. "இப்போது மாப்பிள்ளையின் கண்களை நான் நன்றாகப் பார்க்கிறேன். அவை நீலமல்ல; சிவப்பல்ல; துணிபோல் வெள்ளை நிறத்தவையுமல்ல. கடல் நுரைபோல வெளுத்தவை. கடல் நாணல்போலப் பழுத்தவை" என்றாள் லொவ்ஹி.

லொவ்ஹி தொடர்ந்தாள். "இளைஞரே, மாப்பிள்ளையை உயர்ந்த இடத்துக்கு உயர்ந்த ஆசனத்துக்கு அழைத்து வாருங்கள்! அவர் சுவருக்கு முதுகு காட்டி, சிவப்பு மேசைக்கு முகம் காட்டி அமரட்டும்! ஆரவாரம் செய்யும் ஊர்மக்களைப் பார்த்தபடி அவர் இருக்கட்டும்!"

லொவ்ஹி விருந்தாளிகளை நன்கு உபசாித்தாள். வெண்ணெயும் பலகாரமும் வஞ்சிர மீனும் பன்றி இறைச்சியும் நிறையக் கொடுத்தாள். உணவு வகைகள் தட்டுகளில் குவிந்து கிடந்தன. அடிமைப் பெண் எல்லோருக்கும் மதுபானம் வழங்கினாள். விருந்தாளிகளின் தாடிகள் மதுவின் நுரையால் வெண்மையாக இருந்தன. மருமகனின் தாடியோ அனைத்திலும் வெண்மை!

வைனாமொயினன் ஒரு நாடறிந்த பாடகன். நிலைபேறுடைய மந்திரப் பாடகன். அவன் மதுவை முதலில் சுவைத்ததும், "மதுவே, நல்ல மருந்தே, மனிதருக்குப் போதையைத் தராதே! பாடலைத் தருவாய்! தங்க வாயால் தருவாய் பாடலை! இல்லத் தலைவர்களும் இனிய மனைவியரும் பாடல்கள் எல்லாம் பாடி முடிந்துவிட்டதாகவும் நாக்குகள் ஓய்ந்துவிட்டதாகவும் நினைக்கிறீர்களா? தரம் கெட்ட பானம் வழங்கப்பட்டதால் தரமான பாடல்கள் முழங்கப்படவில்லை என்கிறீர்களா?

"வடநாட்டின் இந்தத் திருமண விழாவில் யார் பாடப் போகிறீர்கள்? வாங்குகளில் இருப்போர் வாய் திறவாமல் வாங்குகள் வந்து பாடமாட்டா. நிலத்தினில் நடப்போர் நாவசையாமல் நிலம் ஒருபோதும் பாடமாட்டாது. யன்னலில் இருப்போர் பாடாது போனால் யன்னல் வந்து பாட்டிசைக்காது."

பால் தாடியுள்ள ஒரு பிள்ளை அடுப்பு ஆசனத்தில் இருந்தது. அது, "நான் வயதில் மூத்தவனும் அல்லன். பலத்தில் வலியவனுமல்லன். ஆனால் இரத்தம் நிறைந்த பருத்த மனிதர்கள் இங்கே மௌனமாய் இருப்பதால், நான் ஒரு மெலிந்தவன், பலம் இல்லாதவன் பாடல்கள் பாடி இந்தப் பொழுதை இனிதாக்க முயல்வேன்" என்று சொன்னது.

அடுப்பின் புகட்டில் இருந்த முதியவன், "பிள்ளைகளின் பொய்யையும் சிறு பெண்களின் வெற்றுப் பாடலையும் கேட்பதற்கு இது நேரமல்ல. இங்கே அமர்ந்திருக்கும் அறிஞர் முன்வந்து அாிய பாடல்களைப் பாடட்டும்" என்று சொன்னான்.

அப்போது வைனாமொயினன், "கரத்தோடு கரம் கோர்த்துக் கனிவான பாட்டிசைக்க வல்ல இளைஞர்கள் யாராவது இங்கே இருக்கிறீர்களா?" என்று கேட்டான்.

அதற்கு அந்த முதியவனே மறுமொழி சொன்னான். "நான் எனது இளம் வயதில் அருவியோரத்திலும் காட்டிலும் காட்டு வௌியிலும் குயில்போல இசைத்துத் திாிந்திருக்கிறேன். அப்போது எனது குரல் உயர்ந்தும் இருந்தது. இனிமையாயும் இருந்தது. ஆற்றில் நீர் ஓடுதல்போல், பனிமழையில் சறுக்கணிகள் வழுக்கிச் செல்வதுபோல், கடலலையில் கப்பல் மிதப்பதுபோல் சீராக இருந்தது. ஆனால் இப்போது என்னால் பாட முடியவில்லை. எனது குரல் இனிமையாக இல்லை. இப்போது எனது குரல் முளைக்கட்டை நிறைந்த வயலில் பரம்புப்பலகையை இழுப்பதுபோலக் கரடுமுரடாக இருக்கிறது. தேவதாரு வேரைக் கிண்டி எடுப்பதுபோல, மணலில் சறுக்கு வண்டி கடகடத்து ஓடுவதுபோல. பாறைக் கல்லில் படகு ஓட்டுவதுபோல இருக்கிறது."

"எனவே, என்னுடன் எவருமே பாட முன் வராதபடியால் நானே தனித்துப் பாடு வேன்" என்றான் வைனாமொயினன். "நான் பாடகனாகவே பிறந்தவன். பாடல்கள் பாட நான் எவருடைய உதவியையும் நாடமாட்டேன்."

வைனாமொயினன் பாடலைப் பாடினான். தனது ஞானத்தைக் காட்டினான். சொல்லுக்குச் சொல் தொடராக வந்தன. ஆற்றலும் இசையும் ஆற்றொழுக்கானது. கல்மலையில் கற்கள் காணாது போயின. நீராம்பல் மலர்கள் மறைந்து போயின. மாலை இரவு முழுவதும் பாடினான். மங்கையர் வாயில் மென்னகை பிறந்தது. ஆடவர் மனங்கள் பூாித்து மகிழ்ந்தன. அாிய பாடல் என்று அனைவரும் அதிசயப்பட்டனர். அதிசயம் அபூர்வம் என்று பாராட்டி நின்றனர்.

பாடலின் முடிவினில், "எனது ஆற்றலில் எதுவுமே இல்லை. இறைவனின் பாட்டிது. இறைவனின் வார்த்தைகள். இறைவனின் வரமிது. இறைவன் பாடுவான். மந்திரம் கூறுவான். எவரையும் மயக்குவான். கடலைத் தேனாக்க வல்லவன். கற்களை பயற்றம் மணியாக்க வல்லவன். மணலை மாவூறலாக்குவான். கடற் கல்லை உப்புக்கல் ஆக்குவான். அகன்ற வனங்களை ரொட்டி வயல்களாய், வெறும் காட்டைக் கோதுமை வயல்களாய், சிறிய மலைகளைப் பணியாரமாகவும் குன்றத்தைக் கோழியின் முட்டையுமாக்குவான்.

"இறைவன் இந்த இல்லத்தைப் பாடுவான். இல்லத்துத் தொழுவத்தைப் பாடுவான். தொழுவத்தில் ஆநிரை நிறையவும் பாடுவான். சிவிங்கி உரோமத்தில் ஆடவர்க்கு ஆடைகள்; அகலத் துணிகளில் அாிவையர்க்கு ஆடைகள்; மகளிருக்குக் காலணி; மைந்தர்க்குச் செஞ்சட்டை; அனைத்துமே கிடைக்க ஆண்டவன் பாடுவான்.

"விழா எடுத்த இந்தத் தலைவனும் தலைவியும் வாழும் வரையிலும் கூடிக் களித்துக் கொண்டாட 'பீர்' என்னும் ஆறு பெருகி ஓடட்டும்! தலைவரை வாழ்த்துவீர்! தலைவியை வாழ்த்துவீர்! மகளிரை வாழ்த்துவீர்! மைந்தரை வாழ்த்துவீர்! இந்தப் பொிய விழா எடுத்ததுபற்றியும் இதில் குடித்து மயங்கிக் களித்ததுபற்றியும் எவரும் எதிர்காலத்தில் வருந்தாது இருப்பார்களாக!"
     அட்டவணை    மேலே
22. மணமகளின் பிாிவுத்துயர்

விழா சிறப்பாக நடந்தது. குடியும் விருந்தும் முடிவுக்கு வந்தன. வடநிலத் தலைவியான லொவ்ஹி மருமகன் இல்மாினனுக்கு இவ்வாறு சொன்னாள்: "உயர்ந்த பிறவியே, நாட்டின் பெருமையே, நீர் எதற்காக இங்கே காத்திருக்கிறீர்? தந்தையின் அன்புக்காகவா? தாயாாின் அருமைக்காகவா? இந்த வீட்டின் சிறப்புக்காகவா? அல்லது விருந்தினாின் மதிப்புக்காகவா?"

"இல்லை," என்று அவளே மறுமொழியும் சொன்னாள். "நீர் உமது இனிய மணமகளுக்காகக் காத்திருக்கிறீர். வெகு காலம் பொறுத்தீர். இன்னும் சில காலம் பொறுப்பீர். அவளின் கூந்தலில் பாதிதான் பின்னி முடிந்தது. மறு பாதி இன்னமும் பின்னாமல் உள்ளது. சாி, சாி, இப்போது எல்லாம் முடிந்து விட்டது. உமது வாத்து வந்து கொண்டிருக்கிறாள்."

லொவ்ஹி பின்னர் மகளுக்குச் சொன்னாள். "விலைப்பட்ட கோழியே, உன் தலைவருடன் விரைவாய்ப் புறப்படு! உன்னை ஏற்றவர் வாசலில் நிற்கிறார். குதிரை கடிவாளத்தைக் கடித்து நிற்கிறது. சறுக்கு வண்டியும் தயாராக உள்ளது.

"பணம் என்றதும் பரவசப்பட்டாய். மோதிரங்களையும் மற்றும் நகைகளையும் கைகளை நீட்டி ஆசையாய் வாங்கினாய். இப்பொழுது ஒளிரும் வண்டியில் ஏறி, வேற்றூர் செல்ல ஆவலாய் இருக்கிறாய். அப்பாவின் வீட்டையும் அம்மாவின் தோட்டத்தையும் பிாிந்து போவதால் உனக்கு வருத்தமே இல்லையா?

"நீ இங்கே பாதையில் பூத்த பூப்போல் இருந்தாய். காட்டிலே காய்த்த சிறுபழம் போல் இருந்தாய். படுக்கை விட்டு எழுவாய். வெண்ணெய் உண்பாய். பன்றி இறைச்சி உண்பாய். இங்கே சிந்திக்க உனக்கு எதுவுமே இல்லை. துன்பமும் இல்லைத் தொல்லையும் இல்லை. மேட்டிலே வளர்ந்த மரங்களைப் பற்றிய மனத்துயர் இல்லை. நாளையைப் பற்றிய கவலையும் இல்லை. இலைபோல் இருந்தாய். வண்ணத்துப் பூச்சிபோல பறந்தாய். மண்ணில் சிறந்த சிறுபழம் போலத் திகழ்ந்தாய்.

"இப்போது சொந்த வீட்டைப் பிாிந்து போகிறாய். அந்நிய வீட்டில் அந்நியத் தாயுடன் வாழப் போகிறாய். அங்கே எல்லாம் புதிதாக இருக்கும். ஆயாின் குழலோசை புதிது. கதவுச் சத்தமும் புதிது. வாயிற் சத்தமும் புதிது. இரும்புப் பிணைச்சலின் ஒலியும் புதிதாய்த்தான் இருக்கும்.

"இங்கே, இந்த வீட்டில் உனக்கு இருந்த நல்ல பழக்கம் அங்கே இருக்க மாட்டாது. அந்த அந்நிய வீட்டில் வழி புதிது. வாசல் புதிது. போம்வழி புதிது. வரும்வழி புதிது. உனக்கு அங்கே அடுப்பு மூட்டவே தொியாமல் இருக்கும். நீ என்ன ஒரு நாளைக்கு மட்டும் போய்விட்டுத் திரும்பி வருவதாக நினைத்திருக்கிறாயா? அடுத்த முறை நீ இங்கு வரும்போது தோட்டத்து முற்றம் ஓர் அடி கூடியிருக்கும். களஞ்சிய அறையில் ஒரு மரம் உயர்ந்திருக்கும்."

பாவம், புது மணப்பெண் பெருமூச்சு விட்டாள். பெரும் துயர் கொண்டாள். கண்கள் கலங்கிக் கண்ணீர் சொாிந்தாள். "ஒரு பெண் பருவம் அடைந்துவிட்டால் அதன்மேல் அவளுடைய பிதா மாதாவுடன் வாழ முடியாது என்பதையும் கணவனின் வண்டியில் கால் வைத்துப் புதுப் பயணம் தொடங்க வேண்டும் என்பதையும் நான் அறிந்துதான் இருந்தேன். இன்று அந்த நாள் வந்தது. எனது ஒரு கால் வீட்டுப் படியிலே. மறு கால் மணாளனின் வண்டிப் படியிலே. நான் வாழ்ந்த, விளையாடி வளர்ந்த இந்த இல்லத்தைவிட்டு நான் மகிழ்ச்சியாகப் புறப்படவில்லை; மனத்துயருடன்தான் போகிறேன்.

"வழக்கமாக விவாகமாகிச் செல்லும் மணப்பெண்களின் மனநிலை எப்படி இருக்கும்? என்னைப்போல கடுந்துயரும் கனத்த மனமுமாகப் புறப்பட மாட்டார்கள். அவர்களுடைய மனங்கள் வசந்த காலத்து விடியலைப்போல இருக்கும். எனது மனமோ குளத்தின் தரைமட்டக் கரைபோல இருக்கிறது. கறுத்த முகிலின் இருண்ட கரைபோல் இருக்கிறது."

வீட்டிலே ஒரு வயோதிபப் பெண் இருந்தாள். அவள், "நான் உனக்குச் சொன்னது நினைவிருக்கிறதா? மாப்பிள்ளையின் பார்வையில் பரவசப்படாதே, அவன் உன்னை இதமாக அணைத்துக் கண்களால் மயக்குவான் என்றெல்லாம் எச்சாித்தேன் அல்லவா? அவனுடைய வாயிலும் தாடையிலும் பிசாசே வாழும்."

அந்த முதியவள் தொடர்ந்து சொன்னாள். "நான் சொல்வதைக் கேள், பெண்ணே! அப்பா உன்னை வெண்ணிலவு என்றார். அம்மா உன்னை ஆதவனின் கதிர் என்றாள். சகோதரன் உன்னை நீாின் ஒளி என்றான். சகோதாி உன்னை நீலத் திரை என்றாள். இப்பொழுது நீ அந்நியர் வீட்டுக்குப் போகிறாய். அந்நியர் என்றும் அன்னைபோல் ஆகார். அன்பும் அமைதியும் அங்கெல்லாம் காணாய். மரக் கொம்பு என்று மாமா சொல்வார். மான் இழுக்கும் சறுக்கு வண்டி என்று மாமியும் சொல்வாள். படிக்கட்டு என்று மைத்துனன் சொல்வான். பாதகி என்று மைத்துனி சொல்வாள்.

"அங்கே நீ புகாராய் நகர்ந்து புகையாச் சுழன்றால்தான் வரவேற்பு இருக்கும். ஆனால் இனிமேல் ஒரு பறவையின் சுதந்திரம் ஓர் இலையின் சுயாதீனம் ஒரு தீப்பொறியின் விடுதலை உனக்கு இருக்காது. நீ உன் அப்பாவை விற்று மாமாவை வாங்கினாய். நீ உன் அன்னையை விற்று மாமியை வாங்கினாய். பட்டுப் படுக்கையை விடுத்துப் புகை அடுப்பை அடுத்தாய். தௌிந்த நீரைக் கொடுத்துச் சேற்று நீரை எடுத்தாய். மணல் நிறைந்த கரைக்குச் சதுப்பு அடித்தளம் பெற்றாய். வளமான வயலுக்கு வெறுங்காடு பெற்றாய். சிறுபழம் முளைத்த சிங்கார மேட்டுக்கு சுட்டஅடிமரத்து அழிந்த நிலம் பெற்றாய்.

"கட்டாத கூந்தலும் மூடாத முகத்திரையும் இங்கே உனக்கு மகிழ்ச்சியைத் தந்தன. திருமணத்தின் பின்னர் வரும் முக்காடும் முகத்திரையும் முடிவிலாத் துயருக்கு முகவுரை படிக்கும். அவை நாளும் மனதை அல்லலாய் இடிக்கும்.

"ஒரு பெண் தன் தந்தையின் வீட்டில் எப்படி இருப்பாள்? கோட்டையில் இருக்கும் கொற்றவன்போல! ஆனால் ஒரு குறை. அவளுக்குக் கையில் வாள் மட்டும் இல்லை. ஓர் ஏழை மருமகள் புகுந்த வீட்டில் எப்படி இருப்பாள்? ரஷ்யா நாட்டுக் கைதியைப்போல! ஆனால் ஒரு குறை. அவளுக்குக் காவலாய் ஆள் மட்டும் இல்லை."

முதியவள் இவ்விதம் சொல்லும்போது மணமகளின் கண்கள் கண்ணீர் சொாிவதைக் கண்டாள். "அழு பெண்ணே, அழு! நீ அழுத கண்ணீர் அப்பாவின் தோட்டத்தில் ஓடட்டும். வீட்டின் அறைகளில் அலைகளை எழுப்பட்டும். நிலத்தில் பாயட்டும். படிக்கட்டில் வெள்ளமாய்ப் பெருகட்டும். இப்பொழுதே நீ போதிய அளவு அழாதுபோனால், அடுத்த முறை நீ இங்கு வருகையில் வருந்தி அழுவாய். ஏனென்றால் அப்போது கையில் காய்ந்த இலைக்கட்டுடன் சவுனாவில் அப்பா மூச்டைத்துக் கிடப்பார். கையில் வைக்கோல் கட்டுடன் மாட்டுத் தொழுவத்தில் மாதா மாண்டே கிடப்பாள். செந்நிறக் கன்னத்துச் சகோதரன் வழியில் வீழ்ந்து கிடப்பான். துணி தோய்க்கும் இடத்துக்குச் செல்லும் பாதையில் அருமைச் சகோதாி செத்துக் கிடப்பாள்."

முதியவள் கூற்று ஒரு முடிவுக்கு வந்ததும், மணமகள் மனம் நொந்து அழுதாள். அப்போது அவள் இப்படிச் சொன்னாள். "என் ஆசை அம்மா, என்னை ஏன் பெற்று வளர்த்தாய்? எனக்குப் பதிலாக ஒரு மரக்கட்டையைத் துணியால் சுற்றித் தாலாட்டியிருக்கலாம். என்னைக் கழுவிக் குளிக்க வைத்த நேரம் கூழாங்கற்களைக் கழுவி வைத்திருக்கலாம். எனக்கு இந்த வீட்டில் அக்கறையும் இல்லை, இதைவிட்டு அகல்வதால் அகத் துயரும் இல்லை என்று பலர் சொல்வார்கள். ஆனால் நல்லவர்கள் அப்படிச் சொல்ல மாட்டர்கள். நீர்வீழ்ச்சியில் கற்கள் இருப்பது எவ்வளவு உண்மையோ, அதிலும் உண்மை எனக்கு அக்கறை இருப்பது. ஏர்க்காலை உயர்த்தாமல், அதனை அசைக்காமல் குதிரை வண்டியை இழுக்காது. எனக்கு அக்கறையும் உண்டு; அகத் துயரும் உண்டு."

நிலத்தில் இருந்த ஒரு பிள்ளை அவளுக்கு ஆறுதல் கூறிப் பாடிற்று. "நீ ஏன் அழுகிறாய்? எல்லாத் துன்பங்களையும் குதிரை சுமக்கட்டும். அதற்கு உன்னிலும் பார்க்க பொிய தலையும் பலமான எலும்புகளும் வளைந்த கழுத்தும் இருக்கின்றன.

"நீ அழுவதற்குக் காரணமே இல்லை. உன்னை ஒருவரும் சேற்று நிலத்துக்கு அழைத்துப் போகவில்லை. செழிப்பான வயல்களிலிருந்து இன்னும் செழிப்பான வயல்களுக்கே அழைத்துப் போகிறார்கள். மது நிறைந்த வீட்டிலிருந்து இன்னும் மது நிறைந்த வீட்டுக்கே உன்னை அழைத்துப் போகிறார்கள்.

"வீரர்கள் அனைவாிலும் சிறந்த வீரனைக் கணவனாகப் பெற்றாய். அவனுடைய குறுக்குவில் சோம்பி இருக்காது. அம்புகள் கூட்டில் தூங்கிக் கிடவா. நாய்கள் வைக்கோல் போாில் படுத்துக் கிடவா. இந்த வசந்த காலத்தில் மூன்று தடவைகள் அவன் எழுந்து கூடாரத்து நெருப்பின் முன்னர் நின்றான். இந்த வசந்தத்தில் மூன்று தடவைகள் அவனுடைய கண்களில் பனித்துளி வீழ்ந்தது. தேவதாரு மரத்தின் தளிர்கள் அவனுடைய தலைமயிரைச் சீவின. சுள்ளிகள் உடலை வருடின.

"உன் கணவன் பொிய ஆநிரைக் கூட்டங்களுக்கு அதிபதியாய் இருக்கிறான். அவனுக்கு எங்கெங்கும் தானியக் களஞ்சியங்கள். பூர்ச்சம் காடுகள் பெரும் வயல்களாயின. பள்ளப் பூமியில் பார்லி விளைந்தது. பாறையில் விளைந்தது புல்லாிசித் தானியம். நதியோரத்தில் நல்ல கோதுமை. காசு நாணயங்கள் கூழாங்கற்களைப்போல் கொட்டி கிடக்கும்."
     அட்டவணை    மேலே
23. மணமகளுக்கு அறிவுரைகள்

அதன் பின்னர் ஒஸ்மோவின் வம்சத்தில் வந்த ஒஸ்மத்தாள் என்பவளும் ஒரு முதியவளும் மணமகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள். கலேவலா என்னும் இடத்தில் ஒரு நல்ல மனைவி எப்படி ஒழுக வேண்டும், மாமியார் வீட்டில் எவ்வளவு அடக்கமாயும் மணாளனுக்கு எவ்வளவு இனிமையாயும் இருக்க வேண்டும், புகுந்த வீட்டை எப்படி மதிக்க வேண்டும் என்றெல்லாம் ஒஸ்மத்தாள் அறிவுரை கூறினாள்.

"அன்புச் சகோதாியே, இனிய மணமகளே, நான் சொல்லப் போவதைக் கவனமாகக் கேள்!" என்று தொடங்கினாள் ஒஸ்மத்தாள். "சிறிய மலரே, நீ இப்போது இந்த வீட்வைிட்டுப் போகிறாய். உனது பொருட்களை நினைவில் வைத்திரு! அத்துடன் மூன்று சங்கதிகளை இங்கேயே விட்டுவிட்டுச் செல்! பகலில் படுத்துத் தூங்குதல் ஒன்று. அடுத்தது அருமை அன்னையின் அன்பான வார்த்தைகள். கடைசியில், கடையத் திரளும் சுவையான வெண்ணெய்!

"அடுக்களைத் தூக்கத்தை வீட்டுப் பெண்களுக்கு விட்டுவிடு! பாடல்களை வாங்குகளில் விட்டுவிடு! சிறு பெண் இயல்பை இலைக்கட்டில் விட்டுவிடு! இளமைத் துடுக்கைப் போர்வைக்குள் விட்டுச் செல்! குறும்பும் சேட்டையும் அடுப்படியில் இருக்கட்டும்! சோம்பலை நிலத்தில் விட்டுவிடு! இவற்றை உன் தோழிக்குக் கொடுத்துவிட்டு நீ போய் வா!

"உனது இந்த இனசனத்தைக் கைவிடு! உனது புதிய இனத்தவரான உனது கணவாின் அப்பா, அம்மா, சகோதாி, சகோதரனை அன்பான சொற்களால் சீராட்டு! மதிப்பான பழக்கத்தால் பாராட்டு!"

ஒரு பெண் தான் புகுந்த வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை வாிசைப்படுத்தி, அவற்றை எவ்வளவு கவனமாகச் செய்ய வேண்டும் என்பதையும் விளக்கினாள் ஒஸ்மத்தாள். "பெண்ணானவள் அதிகாலையில் எழுந்து அடுப்பை மூட்ட வேண்டும். கால்நடையைப் பராமாிக்க வேண்டும். மைத்துனியின் குழந்தைக்கு உணவு கொடுக்க வேண்டும். நிலத்தைக் கூட்டிப் பெருக்க வேண்டும். வீட்டில் மேசை கதிரை வாங்குகளைக் கழுவ வேண்டும். சட்டி பானைகளைக் கழுவி, நூல் நூற்று, துணி நெய்து, மா அரைத்து, 'பீரு'ம் வடிக்க வேண்டும். பெருமூச்செறிதலும் புலம்புதலும் கூடாது. ஏனென்றால் நீ ஏதோ கோபத்தில் முணுமுணுப்பதாக மாமாவும் மாமியும் நினைத்துக் கொள்வார்கள்.

"வாளி ஒன்று சாிந்து கிடந்தால், அதை எடுத்துக் கக்கத்தில் வைத்துத் தண்ணீர் அள்ள அருவிக்குப் போ! ஒரு காவுத்தண்டில் வாளியைக் கொளுவி, அதைத் தூக்கித் தோளில்வைத்துச் சுமந்து வா! கிணற்றடியில் சோம்பி நிற்காமல் குளிர் காற்றைப் போல் விரைவாய்த் திரும்பி வா! இல்லாவிடில், கிணற்று நீாில் நீ உனது சிவந்த உருவத்தைப் பார்த்து மயங்கி நின்றாய் என்று உன் மாமாவும் மாமியும் பொருமுவார்கள்.

"மாலையில் குளியல் நேரத்தில், நீரை இறைத்து, இலைக்கட்டைப் பதமாக்கி, சவுனா அறையில் புகையை அகற்றி நீராவிக் குளியலுக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்! இல்லாவிட்டால் நீ குளியலறைப் பலகையில் படுத்துக் கிடந்தாயென உன் கணவாின் அப்பாவும் அம்மாவும் தப்பாக நினைப்பார்கள்.

"வௌியாடை மேலாடை இல்லாமல் வௌியே போகாதே! கைத்துண்டு காலணி இல்லாமல் உலாவப் போகாதே! அப்படிப் போவதை மாப்பிள்ளை கண்டால் கடுஞ்சினம் கொள்வார்.

"வௌியார் யாராவது வீட்டுக்கு வந்தால் வெறுப்படையாதே! அது நல்லதோர் இல்லத்துப் பெண்ணுக்கு அழகல்ல. அவர்களை அமரச் சொல்! அன்பாக உரையாடு! இறைச்சி வகையும் பலகாரங்களும் வீட்டில் எப்போதும் இருக்கும். உணவுவகைகளை ஆக்கி இறக்கும்வரை விருந்தாளிகளுக்குப் பேச்சுக் கொடு! அவர்கள் புறப்படும்போது 'போய் வாருங்கள்' என்று விடைகொடுத்து அனுப்பு! ஆனால் அவர்களோடு சேர்ந்து வாசலுக்கு வௌியே வராதே! அப்படி வந்தால் உன் கணவர் ஆத்திரப்படுவார்.

"அக்கம் பக்கத்துக்குப் போய் யாருடனாவது பேச வேண்டும் போலிருந்தால், அப்படிச் செய்யலாமா என்று கேள்! அதன்பின் போகும் இடங்களில் நிதானமாகப் பேசு! உனது புகுந்த வீட்டைப்பற்றி இகழ்வாகப் பேசாதே! உன் மாமியைப்பற்றிக் குறைவாகப் பேசாதே! 'நீ உண்ண உனக்கு உன் மாமி வெண்ணெய் தருவாளா?' என்று கிராமத்து இளம் பெண்கள் விசாாிப்பார்கள். உனக்குக் கோடை காலத்தில் ஒரு தடவை மட்டுமே வெண்ணெய் கிடைத்திருக்கலாம். அதுவும் கடைசியாகப் போன குளிர் காலத்துக்கு முந்திய கோடையாகவும் இருக்கலாம். ஆனால், 'ஆகா, நிறையத் தருவாளே' என்று சொல்லிவை!

"தோட்டத்துப் போிச் செடி மனத்தைக் கவர்பவை. அதன் இலைகளும் கிளைகளும் புனிதமானவை. அதன் பழங்கள் அனைத்திலும் திவ்வியமானவை. அவற்றினால் மணாளனின் மனத்தையும் இதயத்தையும் வெல்லலாம் என்பதை மங்கையர் அறிவார்.

"உன்னை ஈன்ற அன்னையை என்றும் மறவாதே. தாய் மனது நொந்தால் தான் வெந்து போவார். தாயை வருந்த விட்டவர். தான் வருந்திச் சாவார். மரண உலகில் அவர் அதிக விலை கொடுப்பார்.

"தலையில் தௌிவு தையலுக்கு அவசியம். நெஞ்சில் நிதானம், நோிய சிந்தனை, விளங்கும் ஆற்றலும் வனிதைக்கு வேண்டும். இரவினில் தீயைப் பேண விழிகளில் விழிப்புத் தேவை. காலையில் சேவலின் கூவலைக் கேட்கச் செவியில் கூர்மை கட்டாயம் தேவை." அங்கே மேலாடையால் தன்னை மூடிக் கொண்டு ஒரு முதியவள் இருந்தாள். அவள் அக்கம்பக்கம் எல்லாம் அலைந்து திாிபவள். அவளுக்கு அந்த ஊர்த் தெருக்கள் எல்லாம் தொியும். அவள் ஒரு கதை சொன்னாள்.

"சேவல் கூவ அதற்கொரு சோடி உண்டு. காகம் கரைய அதற்கும் ஒரு பேடு உண்டு. நான் நேசிக்க, என்னை நேசிக்க எவரும் இல்லை.

"அருமைச் சகோதாி, நான் கூறுவதைக் கவனமாகக் கேட்டுக் கொள். நீ கணவன் வீட்டுக்குப் போனதும், என்னைப்போல கணவனின் மனதை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும் என்று எண்ணிவிடாதே.

"முன்னொரு காலத்தில் நான் புதிதாகப் பூத்த பூவாக இருந்தேன். பற்றையில் துளிர்த்த பசும் தளிராக இருந்தேன். நிலத்தைக் கீறி நெடிதெழுந்த நாற்றாக இருந்தேன். முகையாகி மொட்டாகி மலராகி மங்கையாய் முழுதாக மலர்ந்து நின்றேன். மணல் தரையில் துள்ளித் திாிந்தேன். மலர்மேடுகளில் ஆடித் திாிந்தேன். பள்ளத்தாக்குகளில் பாடித் திாிந்தேன். சோலைகளிலும் செழித்த காடுகளிலும் தாவினேன்; கூவினேன்; கும்மாளமிட்டேன்.

"நாியின் வாய் கண்ணிக்குள் தானே போகும். கீாியும் பொறியைத் தேடியே போகும். அப்படித்தான் மனிதனின் மனக் குழிக்குள் மங்கை வீழ்வாள். பெண்ணாகப் பிறந்தவள் இன்னொரு வீட்டில் புகுந்து வாழ்வைத் தொடங்குவது சமூக இயல்பு. தொட்டிலிலிருந்து இடுகாடு வரைக்கும் பெண் தன் கணவனின் தாய்க்கு அடிமை என்பது இயற்கையின் நியதி.

"நாற்று மேடையில் இருந்த சிறுபழச் செடியை எடுத்து வேற்று நிலத்தில் நடுவது போல எனக்கும் நடந்தது. கணவன் வீட்டுத் தோட்டத்து மரங்கள் எல்லாம் என்னைக் கடிப்பது போல, கிழிப்பது போல, வதைப்பதுபோல, என்னைப் பார்த்துக் குரைப்பதுபோல உணாந்தேன்.

"எனக்குத் திருமணம் நிச்சயமானபோது மாப்பிள்ளையின் வீட்டைப்பற்றி நூற்றுக் கணக்கான வார்த்தைகளால் புகழ்ந்து புளுகினார்கள். அங்கே தேவதாரு மரத்தைத் தறித்துக் கட்டிய வீடுகள் ஆறு இருக்கின்றன என்றார்கள். மேட்டு நிலங்களில் எல்லாம் களஞ்சியக் கூடங்களாம். பாதை முழுவதும் மலர் மேடைகளாம். அருவியோரத்துப் பள்ளங்களில் பார்லி வயல்களாம்!

"போன பின்னர்தான் பொட்டுக்கேடு வௌித்தது. அங்கே ஆறு முட்டுக்காலில் ஒரு குடிசை இருந்தது. காட்டிலே கருணையில்லை. தோட்டத்தில் அன்பு இல்லை. எங்கெங்கும் வெறுப்பு, வேதனை, வேண்டாத தீய எண்ணங்கள்.

"இவற்றையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. மதிப்பாக வாழ்ந்து மனதில் அமைதி காண முயன்றேன். வீட்டுக்குள் நுழைந்தால் விறகுச் சுள்ளிகளில் தடுமாறினேன். கதவுத் தூணில் தலையை இடித்துக் கொண்டேன். கதவு வழியாக அன்னியமான கண்கள் பார்த்தன. வாயிலிலிருந்து விழிகள் வேவு பார்த்தன. கூடத்தின் குறுக்காய்க் கூர்ந்து பார்த்தன . வௌியிலிருந்தும் வெகுண்டு பார்த்தன. சொற்களால் கடித்தனர். நாவால் சுட்டனர்.

"இவற்றையும் நான் பொருட்படுத்தவில்லை. முயலின் பாதங்களைப்போல பாய்ந்து பாய்ந்து அலுவல்கள் பார்த்தேன். அமைதியாய் இயல்பாய்ச் சாந்தமாய் வாழ்ந்திட முயன்றேன். இரவில் பின் தூங்கி விடியலில் முன் எழுந்தேன். ஆனால் நான் மலையைத்தான் பெயர்த்தாலும் பாறையைப் பிளந்தாலும் பாராட்ட ஆளில்லை!

"என் கொடிய மாமிக்கு நான் மாவரைத்துக் கொடுத்தேனே! நீண்ட மேைசையின் தலைப் பக்கம் அமர்ந்து, தீயுமிழும் தொண்டைக்குள் தங்க விளிம்புக் கிண்ணத்திலிருந்து அள்ளியள்ளித் தின்றாளே! அடுப்புப் பலகையில் சிந்திய உணவை நான் மர அகப்பையால் எடுத்துச் சாப்பிட்டேன். எனக்கு உணவாக நான் பாசியில் ரொட்டி சுட்டேன். குடிக்கக் கிணற்று நீர் அள்ளி வந்தேன். அநேக நாட்கள் எனக்கு மீனே கிடைக்காது. தோணியில் நின்று தடுமாறும் போது வலையில் வீழ்ந்த சிறுமீனை உண்டதுண்டு.

"கூலிக்கு வந்த அடிமையைப்போலக் கோடையில் கால்நடைக்கு உணவு தேடினேன். குளிாில் கவர்த் தடியால் கருமம் ஆற்றினேன். எனக்குக் கழிபட்ட கதிரடிக் கம்பைக் கதிரடிக்கத் தந்தார்கள். சவுனா வேலைக்குக் கனமான நெம்புகோலைத் தந்தார்கள். பண்ணை முற்றத்துக்கு மிகப் பொிய எருவாாி. இவ்வளவு வேலைக்குப் பலமான வீரரும் சோர்ந்து சலிப்படைவார். பாிக் குட்டிகூடத் துவண்டு விழுந்துவிடும். எனக்காக இரங்க எவருமே அங்கில்லை.

"தீப் பொறியாய், இரும்பு மழையாய் வருத்தும் வார்த்தைகளால் என்னைத் திட்டித் தீர்த்தனர். தீயுமிழும் தொண்டைக் கிழட்டு மாமிக்குத் தோழியாய் இருந்து எப்படியோ சமாளித்திருப்பேன். ஆனால் மாப்பிள்ளையே ஒரு நாள் ஓநாயாய் மாறினார். எனக்கு வாய்த்த அழகன் கரடியாய் மாறினார். என்னை ஒதுக்கித் தனியாக உண்டார். தனியாகத் தொழில் பார்த்தார். புறங்காட்டித் தூங்கினார்.

"நான் அழுதேன். அந்த நாட்களில் நான் என் அப்பாவின் முற்றத்தில் இருந்ததை எண்ணி ஏங்கினேன். அம்மாவின் பக்கத்தில் இருந்ததை எண்ணிக் கலங்கினேன். நாற்று மேடையில் இருந்த இந்தச் செடியை அம்மா எடுத்து தடித்த மிலாறு மர வேர்களின் நடுவில் ஒரு தீய மண்ணில் நட்டுவிட்டாள். அதனால் நான் வாழ்நாளெல்லாம் வருந்தினேன். எனது தகுதிக்கு ஒரு நல்ல கணவனும் பொிய வீடுகளும் விசாலமான தோட்டங்களும் கிடைத்திருக்க வேண்டும். எனக்குக் கிடைத்தவரோ மந்தம் பிடித்தவர். உடல் காகத்தைப் போன்றது. அலகு அண்டங்காகத்தைப் போன்றது. வாய் ஓநாயைப் போன்றது. மற்றவை எல்லாம் கரடியைப் போன்றவை.

" 'இப்படிபட்ட ஒருத்தரை மலைப் பக்கத்தில் பெற்றிருக்கலாம். அடிமரக் கட்டையை அங்கே எடுத்து, புல்லைப் பிடுங்கி மூஞ்சையைச் செய்து, பாசியால் தாடியும் கல்லால் வாயும் களிமண்ணால் தலையும் சுடுகாியால் கண்ணும் மிலாறுக் கணுவால் காதும் கவர்த் தடியால் காலும் செய்தால் இப்படி ஒரு மாப்பிள்ளை வந்திருப்பாரே!' இப்படி நான் பாடிக் கொண்டிருக்கையில் அந்த வழியாக வந்த என் கணவர் சுவருக்கு மறு பக்கத்திலிருந்து எனது பாட்டைக் கேட்டுவிட்டார். அவர் உள்ளே பாய்ந்து வந்தார். காற்றில்லாமலே எனது கூந்தல் கலைந்தது. சினத்தால் பற்களை நெருமினார். கண்களில் கனல் பறந்தது. கையிலிருந்த தடியை ஓங்கி எனது தலையில் அடித்தார்.

"இரவு வந்தது. தொழுவத்தில் இருந்த கடற்பசுவின் எலும்புக் கைப்பிடியுள்ள சாட்டையுடன் படுக்கைக்குச் சென்றார். நானும் போய் அவர் அருகில் படுத்தேன். அவர் எனது பக்கம் திரும்பிக் கடும் கோபத்தில் என்னைப் பிடித்துச் சவுக்கால் விளாசித் தள்ளினார்.

"நான் குளிர்ந்த கட்டிலிலிருந்து எழுந்து ஓடினேன். அவர் என்னைத் துரத்திக்கொண்டு வந்தார். நான் கதவுப் பக்கமாய் ஓடினேன். அவர் எனது கூந்தலைப் பிடித்துக் கலைத்தார்; குலைத்தார்; அலைத்தார்.

"நான் சுவருக்கு மறுபக்கம் போனேன். அவாிடமிருந்து தப்புவதற்காகத் தெருவுக்கு ஓடினேன். ஆனால் அவருடைய கோபம் தணியவில்லை. நான் கால் போன போக்கில் நடந்து சேற்று நிலம் மேட்டு நிலம் காட்டு நிலம் எல்லாம் திாிந்தேன். கடைசியில் என் சகோ தரனின் வீட்டுக்கு வந்தேன். அங்கே காய்ந்த மரங்களும் ஊசியிலை மரங்களும் நின்றன. காகங்களும் பறவைகளும் பறந்தன. எல்லாம் ஒன்றாக இவ்வாறு கூறின: 'இது உன் வீடல்லவே!'

"நான் அவற்றைப் பொருட்படுத்தாமல் உள்ளே போனேன். அங்கே வாயிலும் முற்றமும் ஒன்றாய்க் கேட்டன: 'எதற்காக இங்கே வந்தாய்? உன் அப்பாவும் அம்மாவும் இறந்து போனார்கள். உன சகோதரன் உனக்கு அன்னியன் போன்றவன். அவனுடைய மனைவி ரஷ்ய நாட்டுக்காாி போன்றவள்.'

"கதவின் கைப்பிடி குளிராக இருந்தது. நான் உள்ளே போனதும் கர்வம்கொண்ட வீட்டுக்காாி வந்து என்னை வரவேற்றுக் கைதரவில்லை. நானும் அவளுக்குக் கை கொடுக்கவில்லை. அடுப்புப் புகட்டில் கையை வைத்தேன். அதுவும் குளிராக இருந்தது. காிக்குள் கையை விட்டுப் பார்த்தேன். அதுவும் குளிராகத்தான் இருந்தது.

"என் சகோதரன் அங்கே வாங்கில் இருந்தான். அவனுடைய தோள்களில் காியும் தூசும் அடிக் கணக்கில் இருந்தன. 'யாாிவர் அன்னியர்? எங்கே வந்தீர்?' என்று அவன் கேட்டான்?

" 'உனக்கு உன் சகோதாியைத் தொியாதா? நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள். ஒரு கூட்டுக் குஞ்சுகள்' என்று நான் சொன்னேன். இதைக் கேட்டதும் அவன் கண்களில் நீர் வழிந்தது.

"அவன் தன் மனைவியைக் கூப்பிட்டு ஏதாவது உணவு கொண்டுவரும்படி சொன்னான். அந்த மாறுகண்ணாள், தன் சகோதாி முகம் கழுவிய அசுத்த நீரைக் கொணர்ந்தாள். அவள் கொணர்ந்த இலைக் கறியின் உப்பையும் கொழுப்பையும் நாய் தின்றிருந்தது.

"அதன்பின் நான் எனது பிறந்த வீட்டைவிட்டு அகன்றேன். அதிர்ஷ்டம் கெட்ட நான் தெருத் தெருவாய்ச் சுற்றினேன். வீடு வீடாகத் திாிந்தேன். இப்போது கிராமத்தார் தயவில் கீழ் நிலையில் வாழ்கிறேன்.

"பலர் என்னைக் கோபமாய்க் குரைப்பார்கள். கொடிய சொற்களால் துளைப்பர்கள். நான் மழையிலே நனைந்து குளிாிலே கொடுகி நின்றபோது என்னை வீட்டுக்குள்ளே அழைத்து அடுப்பங்கரையில் அமரச் சொல்லும் நல்ல மனம் படைத்த நல்லவர்களும் சிலர் இருக்கிறார்கள்.

"எனது இளம் வயதில், நூறு பேரென்ன ஆயிரம்பேர் வந்து பிற்காலத்தில் எனக்கு இப்படியெல்லாம் வரும் என்று சொல்லியிருந்தாலும் நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் இந்த நாட்கள் இப்படி வந்தன. எனது வாழ்க்கைப் பாதை இப்படித் திரும்பிற்று. சாி, சாி, நடந்தது நடந்ததுதான்! முடிந்தது முடிந்ததுதான்!"
     அட்டவணை    மேலே
24. மணமக்கள் புறப்படுதல்
"மணமகளுக்கு அறிவுரை சொல்லப்பட்டது" என்றாள் ஒஸ்மத்தாள். "நான் இனி என் சகோதரனாகிய மாப்பிள்ளைக்கும் சில நல்ல வார்த்தைகளைச் சொல்ல வேண்டும்.

"மாப்பிள்ளையாரே, மனமுவந்த சோதரரே, தாய் பெற்ற பிள்ளைகளில் தகுதி நிறைந்தவரே, உமக்கு மணமகளாக ஒரு சிறு பறவையைத் தந்திருக்கிறோம். அந்தக் கோழியைப்பற்றி நான் இனிச் சொல்வதைக் கேளும்

"இறைவன் உமக்கு அாிய பாிசு தந்தார். உமக்கு வாய்த்த அதிர்ஷ்டத்தைப் போற்றிடுக! இனியவளை வளர்த்த தந்தைக்கும் தாய்க்கும் நன்றி சொல்க! அந்தத் தூயவள், உள்ளொளி மிகுந்தவள், உமது பாதுகாப்புக்குள் வந்துவிட்டாள். உமது அருகில் இருக்கும் கன்னம் சிவந்த இக்காாிகை, கதிரைப் போரடிக்க, வைக்கோற் போரமைக்க, துணி தோய்க்க, நூல் நூற்க, துணி நெய்ய உமக்குத் துணையாக இருப்பாள்.

"அவளுடைய கைத்தறியின் அச்சொலி மலையுச்சிக் குயிலின் கூவலாய் இனிக்கும். கைத்தறியின் நூனாழியோசை பற்றைக்குள் கீாி கலகலப்பதுபோல இருக்கும். நூல் சுற்றும் சில்லின் சுழற்சி அணில் வாயில் கூம்புக்காய் சுழல்வதுபோலச் சுழலும். கைத்தறியின் சட்டத்தின் சத்தத்தாலும் நூனாழி தரும் ஓயாத ஒலியாலும் கிராமத்தார் தூங்கிப் பல காலமாயிற்றாம்.

"அாிவாள் ஒன்றை அாிவைக்குக் கொடுத்து, உதயத்தில் அவளைப் பசும்புற்றரைக்கு அழைத்துச் செல்வீர்! அவள் கைத்திறனில் வைக்கோல் கலகலப்பதையும் கோரைப் புல் கிலுகிலுப்பதையும் பூண்டுகள் அசைவதையும் நாற்றுகள் முறிவதையும் அங்கே காண்பீர்!

"இன்னொரு நாளில் அவளுக்கொரு கைத்தறியும் அதற்கான பொருட்களையும் கொடுத்துப் பாரும்! தறியின் ஓசையும் நூனாழி ஒலியும் உமக்குக் கேட்கும்; ஊர் முழுக்கக் கேட்கும். அயல் வீட்டுப் பெண்கள் வருவார்கள். அதிசயப் படுவார்கள். இப்படியும் கேட்பார்கள். 'யாரப்பா இப்போது துணி நெய்வது?' நீரும் இப்படிச் சொல்லலாம் பதிலை: 'என்னவள், எனது இனியவள் நெய்கிறாள் இப்போது. அவளின் கைத்திறன் சூாிய மகளின் சந்திர மகளின் தாரகைக் கூட்டத்தின் தனித்தொரு மகளின் திறனுக்கு நிகரானது.'

"நீர் இப்பொழுது அந்தச் சிட்டுக்குருவியுடன் புறப்படப் போகிறீர். அவளைப் பள்ளப் பகுதிக்குப் போக விடாதீர்! அடிமரக் கட்டை நிலத்தில் நடக்க விடாதீர்! கல்லில் பாறையில் உலாவ விடாதீர்! ஏனென்றால் தந்தை தாய் வீட்டில் அவள் அப்படி வாழ்ந்ததில்லை.

"அவளை மூலை முடுக்கெல்லாம் அனுப்பி வையாதீர்! சேம்பங் கிழங்கு இடிக்கவோ வைக்கோலை மரப் பட்டையை அரைத்து ரொட்டி சுடவோ கேளாதீர்! ஏனென்றால் தந்தை தாய் வீட்டில் அவள் அப்படி வாழந்ததில்லை. ஆனால் நீர் அவளைத் தானிய வகையை எடுக்க அனுப்பலாம். தடித்த ரொட்டிகள் சுடச் சொல்லலாம். தரமான மதுபானம் வடிக்கவும் சொல்லலாம்.

"அவளை ஏங்க விடாதீர்! வருந்த விடாதீர்! கண்ணீர் சிந்த விடாதீர்! அப்படியொரு நிலை வந்தால் கட்டும் குதிரையை! ஓட்டும் வண்டியை! தந்தை தாய் வீட்டுக்குக் கொண்டுவாரும் அவளை!

"அவளைக் கூலிக்கு வந்த வேலைக்காாியாகவோ விலைக்கு வாங்கிய அடிமையாகவோ நினைக்க வேண்டாம்! அவளைக் களஞ்சிய அறைக்கு அனுப்பும்போது சந்தேகப்பட வேண்டாம்! ஏனென்றால் தனது தந்தை தாய் வீட்டில் ரொட்டிகளை வெட்டுவதும் அவள்தான். முட்டைகளைப் பொறுக்குவதும் அவள்தான். பால் பெட்டிகளைப் பாதுகாப்பதும் அவள்தான். மதுக் கலங்களைக் கண்காணிப்பதும் அவள்தான். அவள் களஞ்சிய அறையைக் காலையில் திறந்தால் மாலையில்தான் பூட்டுவாள்."

ஒஸ்மத்தாள் பின்னர் மணமகளின் இன சனங்களின் பெருமைகளை எடுத்துச் சொன்னாள். "எங்கள் மணமகள் உயர்குடியில் பிறந்தவள். சாதி சனம் மிகுந்தவள். ஒரு படி அவரை விதைகளை விதைத்து, அதன் விளைச்சலைப் பங்கிட்டால் ஒருவருக்கு ஒரு மணிதான் கிடைக்கும். ஒரு படி சணல் விதைகளை விதைத்து, அதன் விளைச்சலைப் பங்கிட்டால் ஒவருக்கு ஒரு நூல்தான் கிடைக்கும். அவளுக்கு அவ்வளவு இனசனங்கள்.

"அவளைச் சவுக்கால் அடித்துத் திருத்தலாம் என்று எண்ணாதீர்! அவளுடைய தந்தை தாய் வீட்டில் அப்படி நடந்ததேயில்லை. மாமியால் மாமாவால் மற்றும் எவராலும் அவளுக்கு துன்பம் எதுவும் நேராமல் அவள்முன் ஒரு சுவராக நிற்பீர்! கதவுத் தூணாக நிற்பீர்!

"நீர் அவளுக்கு அறிவுரை சொல்ல விரும்பினால் முதலாம் ஆண்டில் கட்டிலில் சொல்லும்! பின்னர் கதவுக்குப் பின்னாலே சொல்லும்! முதலாம் ஆண்டில் வாயாலே சொல்லும்! அடுத்த ஆண்டில் கண்ணால் சொல்லும்! மூன்றாம் ஆண்டில் நிலத்திலே காலை ஊன்றிச் சொல்லும்!

"இன்னும் அவளுக்குப் புத்தி வரவில்லை யென்றால், நாணல் புல்லைப் பறித்துப் புத்தி சொல்லும். நான்காம் வருடம் கோரைப் புல்லால் அல்லது சிறு செடித் தண்டால் மெள்ள அடிக்கலாம். ஆனால் தடியையோ சவுக்கையோ கையில் எடாதீர்!

"இன்னமும் அவளுக்குப் புத்தி வரவில்லை யென்றால், மிலாறு மரத்தில் ஒரு குச்சியை ஒடியும்! அதைச் சட்டை மடிப்புக்குள் மறைத்து வீட்டுக்குக் கொண்டு செல்லும்! அதை அவளுக்கு அசைத்துக் காட்டி மிரட்டலாம். ஆனால் அடியாதீர்!

"அடுத்த ஆண்டும் அவளுக்குப் புத்தி வரவில்லையென்றால், மிலாறுக் கிளையில் தடி எடுத்து, வௌியே சத்தம் வராதபடிக்குப் பாசி பூசிய நான்கு சுவர்களுக்கு நடுவில் பாடத்தை நடத்துவீர்! ஆனால் வௌியிலே வயலிலே தோட்டக் கரையிலே வைத்து அடியாதீர். ஏனென்றால் சத்தம் கிராமத்தார் காதில் விழலாம். தோளில் அடியும். பின்புறத்தை மெதுவாக்கும். ஆனால் கண் காதில் அடியாதீர். ஏனென்றால் அடித்த இடத்தில் கட்டி கறுப்பென்று எதுவும் ஏற்பட்டால், உமது அப்பாவும் அண்டை அயலாரும் ஏதேனும் நினைப்பார்கள். கிராமத்துப் பெண்கள் இப்படியும் கேலி செய்வார்: 'இவளென்ன போருக்குப் போனாளோ? இவளை ஓநாய் கரடி பிராண்டியதோ? ஓகோ, இவளுடைய கணவன்தான் ஓநாயோ?' "

அடுப்புக்கு அருகில் ஒரு முதியவன் இருந்தான். அவன், "மாப்பிள்ளையே, மங்கையின் கருத்துக்கும் வானம்பாடியின் கத்தலுக்கும் காது கொடுக்காதீர். பெண்ணின் சொல்லைக் கேட்டதால் நான் பட்டது போதும்" என்று சொன்னான்.

"நான் இறைச்சி வாங்கினேன். ரொட்டி வாங்கினேன். வெண்ணெய், பார்லி, மீன், மதுவகை எல்லாம் வாங்கினேன். உள்ளூாிலும் வாங்கினேன். வௌியூாிலும் வாங்கினேன். இதனால் எனக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அவள் கோபத்தில் தனது தலைமயிரைப் பிய்த்தாள். முகத்தை முறுக்கினாள். கண்களை உருட்டினாள். என்னை மந்தன் என்றாள். மரத் தலையன் என்றாள்.

"எனக்கு இன்னொரு வழி தொிந்தது. மிலாறுக் கிளையில் தடியை ஒடித்தேன். அவள் அருகில் வந்து 'அருமைப் பறவையே' என்றாள். சூரைச் செடியில் தடியை ஒடித்தேன். 'அன்பே' என்று தலை குனிந்தாள். அலாிச் செடியில் தடியை ஒடித்தேன். கிட்ட வந்து என் கழுத்தில் விழுந்தாள்."

அழுகையும் முடிந்தது. மணமக்களுக்கு அறிவுரையும் முடிந்தது. தேவ கொல்லன் இல்மாினன் பிாியாவிடை பெற ஆயத்தமானான்.

மணமகள் பெருமூச்சு விட்டாள். கண்கள் கலங்கிக் கண்ணீர் சிந்தினாள். "பிாியும் நேரம் வந்தது. விடை பெற்றுப் போகும் காலமும் வந்தது. இந்த வீட்டையும் தோட்டத்தையும் பிாிந்து போவேன் என்று நான் எண்ணியதில்லை. ஆனால் நான் போகத்தான் வேண்டும் என்பதும் எனக்குத் தொியும். பிாியாவிடை மதுவும் குடித்தாயிற்று.

"நான் பிாியும் இந்த வேளையில் தாய் தந்த பாலுக்கு ஈடாக எதைச் செய்வேன்? தந்தை செய்த நன்மைக்கு, சகோதரனின் அன்புக்கு, சகோதாியின் பிாியத்துக்கு கைமாறு என்ன செய்வேன்? அப்பா, இனிய உணவு தந்து என்னை அருமையாய் வளர்த்தீர்கள். அதற்காக நன்றி சொல்வேன். அம்மா, சிறு வயதிலிருந்தே பாலூட்டித் தாலாட்டிச் சீராக வளர்த்தீர்கள். அதற்காக நன்றி சொல்வேன். சகோதரனே, சகோதாியே, என்னோடு இருந்தீர்கள். என்னோடு வளர்ந்தீர்கள். அதற்காக நன்றி சொல்வேன். இந்த வீட்டில் என்னோடு சேர்ந்து வாழ்ந்த அனைவருக்கும் நன்றி சொல்வேன்.

"இந்நாடுவிட்டு நான் பிற நாடு செல்கிறேன். சூாியனும் சந்திரனும் சுவர்க்கத்து விண்மீனும், நான் வளர்ந்த இந்தத் தோட்டத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் ஒளியூட்டும்.

"நீரையும் நீர் நிலைகளையும் கிராமத்துப் பெண்களுக்கு விட்டுச் செல்கிறேன். வேட்டைப் பிாியருக்குப் பூர்ச்ச மரங்கள். அலைந்து திாிவோருக்கு வேலிப் பக்கங்கள். மான்களுக்கு வயல்கள். சிவிங்கிகளுக்குக் காடுகள். வாத்துக்களுக்குப் புல் வௌிகள். பறவையினத்துக்குப் பொழில்களையும் விடுகின்றேன். இன்னொரு துணையோடு இலையுதிர் காலத்து இரவின் அணைப்புக்குள், வசந்த காலப் பனிக்கட்டிப் பரப்புக்குள் போகின்றேன். இனி மேல் இங்கே பனிக்கட்டிமேல் எனது பாதச் சுவடு தொியாது. எனது ஆடையின் இழைநூலின் அடையாளம் பனிமேல் இருக்காது.

"ஒரு நேரம், நான் திரும்பி இங்கே வரும்போது, எனது குரலை அம்மா கேட்க மாட்டாள். அழுமோசையை அப்பா அறியமாட்டார். புல்லும் பூண்டும் முளைத்து என்னைப் பெற்றவள் முகத்தை மூடியிருக்கும்.

"ஒரு நேரம், நான் திரும்பி இங்கே வரும்போது, இந்த இரண்டும் என்னை இனம் காணும். ஒன்று இந்த வேலி வாிச்சு மரம். மற்றது தூரத்து வயலில் வேலி மரம்.

"ஒருவேளை தாயின் மலட்டுப் பசுவும் என்னை இனம் காணும். கண்டால் குரல் காட்டும். அப்பாவின் கிழட்டுப் பாி தோட்டத்தில் நிற்கும். கண்டால் கனைக்கும். என்னை இனம் காணும். சகோதரனின் நாய்க்கும் என்னை அடையாளம் தொியும். கண்டால் குரைக்கும். ஏனையோருக்கு என்னை அடையாளம் தொியாது. இந்தத் தோணிகளும் வெண்மீன்கள் விளையாடும் நீர்நிலையும் மீன்வலைகளும் ஆங்காங்கு அப்படியே இருக்கும்."

மணமகள் கடைசியாகத் தனது விடைபெறும் பாடலைப் பாடினாள். "நான் வாழ்ந்த வீடே, போய் வருவேன். விடை தா! வாயில் கூடமே, மண்டபமே, போய் வருவேன். விடை தா! முற்றமே, போிச் செடி வளர்ந்த முன்றிலே, போய் வருவேன். விடை தா! நிலமே, சிறுபழங்கள் நிறைந்த வனமே, மலர்களைச் சொாியும் வழியே, பசும் புற்புதர்களே, நூறு தீவுகள் கொண்ட ஏாிகளே, ஆழ்ந்த குளங்களே, அடர்ந்த மரங்களே உங்கள் அனைவாிடமும் விடை பெறுகிறேன். நான் போய் வருகிறேன்."

கொல்லன் இல்மாினன் அவளைப் பற்றி வண்டியில் ஏற்றிக் குதிரையைச் சவுக்கால் அடித்து, இவ்வாறு சொன்னான்: "ஏாிகளே, ஏாிக் கரைகளே, ஊசியிலை மரங்கள் வளர்ந்த மலைகளே, உயர்ந்த தேவதாரு மரங்களே, அலாிப் புதர்களே, மர வேர்களே, தழைகளே, உாிகளே, நாங்கள் விடை பெறுகிறோம்."

வடநாட்டுத் திருமண விழாவை நிறைவுபடுத்திய பின்னர் மணமக்கள் இவ்வாறு புறப்பட்டார்கள். வாயிலில் நின்ற பிள்ளைகள் பாடினார்கள். "காட்டில் ஒரு காிக்குருவி. இங்கும் அங்கும் பறந்ததாம். வெள்ளியைக் காட்டி, மையலை ஊட்டி வாத்தைப் பிடித்துக் கொண்டதாம். எங்களோடு ஆற்றுக்குப் போவார் யாருமில்லை. நீர்க் கலயம் காய்ந்திருக்கும். காவு தண்டு சோர்ந்திருக்கும். கதவில் தரையில் அழுக்குச் சேர்ந்திருக்கும். கிண்ணத்துக் கைப்பிடியில் கறையே நிறைந்திருக்கும்."

இல்மாினனும் அவனுடைய இளம் மணமகளும் வடநாட்டின் கரைகளில் நீாிணையோரமாய் விரைந்து சென்றார்கள். கூழாங்கல் புரண்டது. மணல் திரண்டது. வண்டி விரைந்தது. இரும்புப் பட்டி ஒலித்தது. மிலாறுச் சட்டம் கடகடத்தது. பழமரப் பட்டம் படபடத்தது. சாட்டை சுழன்றது. குதிரை பறந்தது.

இல்மாினன் ஒரு நாள் சென்றான் இரு நாள் சென்றான். மூன்றாம் நாளும் சென்றான். ஒரு கை குதிரையின் கடிவாளம் பிடித்தது. மறு கை மங்கையை அணைத்துப் பிடித்தது.

மூன்றாவது நாள் உதயத்தின்போது இல்மாினனின் வீடு கண்ணில் தொிந்தது. அந்த வீட்டுப் புகைபோக்கியிலிருந்து எழுந்த தடித்த புகை உயர்ந்து சென்று முகிலில் கலந்தது.
     அட்டவணை    மேலே
25. மணமக்களுக்கு வரவேற்பு

மணமக்களின் வரவை மக்கள் எதிர்பார்த்திருந்தனர். மணமகளை வரவேற்க ஒரு பொிய கூட்டத்தினர் காத்திருந்தனர். யன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த முதியவர்களின் கண்களிலிருந்து நீர் வழிந்தது. வாயிலில் காத்திருந்த இளைஞர்களின் முழங்கால்கள் தாழ்ந்திருந்தன. சுவரோரத்தில் நின்ற குழந்தைகளின் கால்கள் குளிர்ந்து விறைத்திருந்தன. மணலில் நெடுநேரம் உலாவித் திாிந்த நடுத்தர வயதினாின் காலணிகள் சிதைந்திருந்தன.

ஒரு நாள் காலை காட்டுப் பக்கமாய் வண்டிச் சத்தம் கேட்டது. சறுக்கு வண்டியின் ஓசை புல்வௌிப் பக்கமாய்க் கேட்டது.

இல்மாினனின் தாய்க்குப் பெயர் லொக்கா. அவள் கலேவாப் பகுதியில் ஓர் அமைதியான பெண்மணி. அவள், "அது எனது மகனுடைய வண்டிதான். அவன் தன் இளம் மனைவியுடன் வருகிறான்" என்றாள்.

வண்டி அருகில் வந்ததும் அவள் சொன்னாள்: "ஒரு புதிய சந்திரனை எதிர்பார்த்து ஊர் மக்கள் காத்திருந்தார்கள். ஒரு புதிய சூாிய உதயத்துக்கு இளம் மக்கள் காத்திருந்தார்கள். சிறுபழங்கள் நிறைந்த நிலத்துக்குக் குழந்தைகள் காத்திருந்தார்கள். தார் பூசிய படகுக்கு நீர் காத்திருந்தது. நான் உனக்காகக் காத்திருந்தேன். உனது காலடிச் சுவடுகள் அழிவதற்குள் வருவதாகச் சொல்லிவிட்டுப் போனாயே! ஆனால் இத்தனை நாட்களாய்த் திரும்பி வரவில்லையே! மணப்பெண் வளரட்டும் என்று பார்த்திருந்தாயா? அல்லது கொழுக்கட்டும் என்று காத்திருந்தாயா? நான் என் தலை சாயும்வரை பார்த்திருந்தேன். குடுமி சாியும்வரை பார்த்திருந்தேன். கண்கள் சுருங்கும்வரை பார்த்திருந்தேன். கடைசியில் வந்து சேர்ந்தான். செங்கன்னம் படைத்த பாவை பக்கத்தில் இருக்கிறாள்."

அவள் தொடர்ந்து சொன்னாள்: "உங்கள் பயணம் நன்றாக நடந்தது என்று நினைக்கிறேன். இப்போது உன் அன்புக்குாியாளை வண்டியிலிருந்து இறங்க விடு! பழுப்பு நிறத்துப் பாதையில் கால் வைக்கட்டும்! பன்றிகள் நடந்து மென்மையானது இந்த நிலம். குதிரைகள் பிடாி மயிரைத் தேய்த்துப் பதமானது இந்த நிலம்.

"மணமகளே, மணமகளே, வா, வா! இறங்கி மண்ணில் அடி வைத்து வா, வா! மண்டபத்தை நோக்கி மெள்ள வா, வா! வீட்டுக் கூரையின் கீழ் நடந்து வா, வா! கடந்த குளிாிலும் கோடையிலும் இந்தக் கதவுப் பிடிகள் மோதிரம் அணிந்தவள் வந்து தம்மைத் தொடுவதற்காகச் சிலுசிலுத்திருந்தன. சிறந்த மேலங்கி அணிந்து வருபவளுக்காகக் களஞ்சியவறை காத்திருந்தது. அழகான மணமகள் நுழைவதற்காகக் கதவுகள் திறந்தே இருந்தன. பாதைகள் பாடிப் பாவையை எதிர்பார்த்தன. தொழுவங்கள் தம்மைச் சுத்தம் செய்யும் ஒருத்திக்குக் காத்திருந்தன. இன்று காலையில் எங்கள் பசுக்கள் காலை உணவுக்கு ஒருத்தியை எதிர்பார்த்திருந்தன. ஆடுகள் புதிய தலைவியை எதிர்பார்த்திருந்தன.

"மகனே, மதிப்புள்ள மாப்பிள்ளையே, சிவப்புத் துணியையும் பட்டுத் துணியையும் அவிழ்த்துப் போடு! ஐந்து எட்டு வருடங்களாக நீர் ஆசைப்பட்ட பெண்ணவளை நாங்களும் பார்ப்போமே! நீாிலும் நிலத்திலும் சிறந்தவளைத் தொிந்தாயா? அதுதான் கேட்காமல் நானும் பார்க்கிறேனே! செழித்த சிறுபழச் சோலையில் செழித்த சிறுபழக் கிளை அவள்!"

அங்கே நிலத்தில் ஒரு பிள்ளை இருந்தது. அது, "இங்கே நீ எதை இழுத்து வந்தாய்? அழகென்று பார்த்தால் தார் பூசிய அடிமரக் கட்டை போலிருக்கிறாள். நீண்ட பீப்பாயில் பாதி போலவும் இருக்கிறாள். ஆயிரத்தில் ஒருத்தியைத் தொிவு செய்வேன் என்றீரே! ஆயிரம் அவலட்சணங்களில் ஒருத்தியையா தொிவு செய்தீர்? அவள் ஒரு கையுறை காலுறைகூடவா பின்னவில்லை? வெறுங் கையை வீசிக் கொண்டு வந்திருக்கிறாளே. நீர் கொண்டு வரும் கூடைக்குள் சுண்டெலியா சலசலத்து ஓடுகிறது?" என்று கேட்டது.

"நீ ஒரு நாள் வயதுள்ள பிள்ளையைப்போல பிதற்றுகிறாய்" என்று லொக்கா சொன்னாள். "மாப்பிள்ளை பெற்றது ஒரு பேரழகுப் பாவை. அவள் பாதி பழுத்த சிறுபழம் போன்றவள். மலையில் உதித்த செம்பழம் போன்றவள். மரத்தில் அமர்ந்த குயிலவள். மாப்பிள் மரத்தில் இருக்கும் ஒளிமார்புப் பறவை போன்றவள். ஜேர்மனியிலிருந்தும் எஸ்த்தோனியாவிலிருந்தும்கூட இப்படி ஓர் அழகியைப் பெற முடியாது. இந்த முகத்தின் வனப்பையும் இந்த உடலின் சிறப்பையும் இந்தக் கைகளின் வெண்மையையும் இந்தக் கழுத்தின் கவர்ச்சியையும் வேறெங்கே பெறலாம்? அவள் ஒன்றும் வெறுங்கையை வீசிக் கொண்டு வரவில்லை. அவள் கொணாந்தவை உரோம ஆடைகள், போர்வைகள், சொந்தக் கைகளால் பின்னிய துணிவகைகள், பட்டுச் சால்வைகள், கம்பளி ஆடைகள், இன்னும் எவ்வளவோ!

"மங்கலப் பெண்ணே, செந்நிற மங்கையே, நீ உன் தந்தையின் வீட்டில் ஒரு மகளாகப் புகழோடு இருந்தவள். இங்கே கணவனின் வீட்டில் ஒரு மருமகளாகப் பெரும் புகழோடு இருப்பாய்! உனக்கு இங்கே தொல்லைகள் வரும் என்று நினைக்கவே வேண்டாம்! கட்டுக் கட்டாகக் கதிர்களும் தானியங்களும் குவித்து வைத்திருந்ததை வரும் வழியில் பார்த்திருப்பாயே! அவையெல்லாம் இந்த வீட்டுக்கு உாியவை. உன் கணவன் உழுததால் உண்டானவை. உன் கணவன் விதைத்ததால் விளைவானவை. இந்த வீட்டின் தலைவன் உன் தகப்பனைப் போன்றவன். தலைவி உன் தாயைப் போன்றவள். பிள்ளைகள் உனது சகோ தரர்கள்.

"எப்பொழுதாவது உனக்கென்றும் ஒரு ஆசை எழலாம். தாய் வீட்டில் உண்ட மீனையோ சகோதரன் பிடித்த காட்டுக் கோழியையோ நீ விரும்பலாம். இங்கே உன் கணவாின் கைக்கு அகப்படாத பறவையோ பிராணியோ கிடையாது. உனக்கு எது தேவையோ அதை அவாிடம் கேள். உன் சிந்தையில் உள்ளவர் உனக்குச் சிறந்ததைத் தருவார்."

அதன் பிறகு விருந்தாளிகளுக்கு இறைச்சியும் பலகாரமும் மதுபானமும் வழங்கப்பட்டது. செந்நிறக் கலயங்களில் வாட்டிய இறைச்சித் துண்டுகள், வெண்ணெய்க் கட்டி யோடு பாலாடைப் பணியாரம், வெள்ளிக் கத்தியால் வெட்டிய விதம்விதமான வெண்ணிற மீன்கள், தங்கக் கத்தியால் அறுத்த வஞ்சிர மீன்களின் தடித்த துண்டுகள், எல்லாம் போதும் போதுமெனப் பாிமாறப்பட்டது. இவற்றுக்குப் போட்டியாக மதுவையும் தேனையும் நிறையவே வழங்கினார்கள்.

விருந்தினருக்கு ஒரு பாடகன் தேவைப்பட்டான். வைனாமொயினனே அப்பொழுதும் பாட முன்வந்து பாடினான்.

"அன்பான சோதரரே, என்னருமைத் தோழர்களே" என்று தொடங்கினான் வைனாமொயினன். "வறிதாகிப் போன இந்த வட நிலத்தில் நேருக்கு நேராக வாத்துக்கள் சேர்வதே அாிது. ஆனால் நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம். பாடலை நான் பாடவா? பாடுதலே பாடகனின் தொழில். கூவுதலே குயில்களின் தொழில். சாய மகளார்க்குச் சாயம் தீட்டுவதும் கைத்தறிப் பெண்களுக்கு நெய்தலும் தொழிலாகும்.

"வைக்கோல் காலணி அணிந்து மரப்பட்டை ரொட்டியும் தண்ணீரும் அருந்தும் லாப்புலாந்துப் பிள்ளைகளே பாடுகிறார்கள். நான் ஏன் பாடக் கூடாது? மதுபானம் அருந்தும் எங்கள் மக்கள் ஏன் பாடக் கூடாது?

"இங்கே எங்களுக்கு ரொட்டிக்குப் பஞ்சம் இல்லை. மதுவுக்குக் குறைவில்லை. இந்த வீட்டின் தலைவனும் தலைவியும் செழிப்பாக உள்ளவரை எங்களுக்கு எந்தத் தட்டுப் பாடுமே இல்லை.

"நான் இங்கே முதலில் யாரைப் புகழ்வேன்? வீட்டுத் தலைவரையா, தலைவியையா? முன்னாள் பாடகர்கள் முதலில் தலைவரைப் புகழ்வதுதான் வழக்கம். ஏனென்றால் தலைவர் ஊசியிலை மரங்களைத் தறித்து முடியோடு கொணாந்து மனைகளைக் கட்டியவர். இந்த வீட்டைக் கட்டிய காலத்தில் இவருடைய தலைமயிர் எத்தனை காற்றைக் கண்டிருக்கும்! கையுறைகளை எத்தனை நாட்கள் கற்பாறையில் விட்டுவிட்டு வந்திருப்பார்! இவருடைய தொப்பி ஊசிமரத்தில் எத்தனை நாள் தொங்கியிருக்கும்! இவருடைய கையுறைகள் எத்தனை நாட்கள் சேற்றில் புதைந்திருக்கும்! ஒரு நல்ல தலைவர் கிராமத்தார் அறியாமல் துயில் எழுவார். அவாின் படுக்கையின் அருகில் நெருப்பு எாியும். குச்சிகளாலே தலையைச் சீவிப் பனித்துளியாலே கண்களைக் கழுவிப் புறப்பட்டுப் போவார். அவர் கட்டிய வீட்டில் இன்று விருந்தினரும் பாடகரும் குவிந்திருக்கின்றனர்.

"இனி இந்தத் தலைவியைப் பாடுவேன். பலவிதமான உணவுகளால் இந்த நீண்ட மேசையை நிறைத்து வைத்த தலைவியைப் பாடுவேன். அவள் மாவைப் பிசைந்து தடித்த ரொட்டிகள் சுடுவாள். தரமான பணியாரம் அத்துடன் செய்வாள். பன்றி இறைச்சியையும் பலவித மீன்களையும் வாட்டி எடுப்பாள். மதுவையும் முறையாக வடித்து முடிப்பாள். அவள் கவனம் மிகுந்த குடும்பத் தலைவி. முளைத்த முளையை முற்றுமுன் ஒடிப்பாள். ஒடித்ததை ஊறப் போட்டு உலர்த்தியும் வைப்பாள். உலர்ந்தது எதையும் நிலத்திலே சிந்தாள். காட்டு விலங்குகளுக்கு அஞ்சாமல் நள்ளிரவில் சவுனாவுக்குப் போவாள்.

"தலைவியைப் புகழ்ந்தேன். இனி இன்றைய நாயகனைப் பாடுவேன். அவர் இன்றைய விழாவின் நாயகன். எங்களை இங்கே அழைத்தவர். அவர் சிறந்தவர். இந்த ஊருக்கே சிறப்பைத் தந்தவர். அவரைப் பாருங்கள்! அகலத் துணியில் ஒரு மேலாடை அணிந்திருக்கிறார். அதன் கை அளவாக இருக்கிறது. இடுப்பருகில் ஒடுங்கிச் சீராக வருகிறது. நீண்டு இறங்கி நிலத்தைத் தொடுகிறது. மேற்சட்டை கொஞ்சம் வௌியே தொிகிறது. அது சந்திரன் மகள் நெய்தது போன்ற நலமான சட்டை. கம்பளி நூலில் கட்டிய பட்டி இடுப்பில் இருக்கிறது. நெருப்பே இல்லாத காலத்தில் சூாிய மகள் தனது ஒளிரும் விரல்களால் பின்னிக் கொடுத்தது. பட்டில் இழைத்த காலுறையோடு ஜேர்மன் நாட்டுச் சப்பாத்தும் அணிந்து அவர் இருக்கும் பாங்கு ஆற்றில் அன்னம் மிதப்பது போலில்லையா?

"எங்கள் விழா நாயகருக்கு சுருண்ட பொன்னிறத் தலைமயிர். தங்க நிறத்துப் பின்னல் தாடி தகதகக்கிறது. முகிலைக் கிழித்து மேலெழுந்த தொப்பி. அதன் ஒளி காடெல்லாம் சுடர்விடுகிறது.

"இனி நான் மணமகளின் தோழியைப் புகழ்வேன்" என்றான் வைனாமொயினன். "கடல் கடந்து போய்த் தல்லினாவிலிருந்து அவளைக் கொண்டு வந்தோம். இல்லையில்லை. அதற்குமப்பால் ஒரு பசும் புதர் இருந்தது. அங்கே ஒரு பழச் செடி இருந்தது. அதில் ஒரு சிறு பழம் இருந்தது. அங்கே ஒரு புல் வயலும் இருந்தது. அங்கே தங்க நிறத்தில் பூக்கள் பூத்தன. அங்கிருந்து வந்தவள் அவள்.

"பின்லாந்தில் கைத்தறியில் பொருத்தும் நூனாழியின் வடிவத்தில் அமைந்த அவளுடைய வாய் மிகவும் வடிவானது. சுவர்க்கத்து விண்மீன்போலச் சுடர்விடும் விழிகள். கடல்மேல் திகழும் வெண்ணிலவைப்போல அவளது புருவம் வெண்மையானது. கழுத்தில் கைகளில் விரல்களில் தங்க நகைகள். தலையிலும் புருவத்திலும் தங்க நூல் முடிச்சுக்கள். அவளது தங்க வளையம் மின்னியபோது, அது நிலவோ அல்லது எதுவோ என்று மயங்கினேன். கழுத்துப் பட்டி இலங்கியபோது, அது கதிரோ அல்லது எதுவோ என்று கலங்கினேன். தலையில் தொப்பி துலங்கியபோது நடுக்கடலில் நாவாய் நகர்வதாய் நினைத்தேன்.

"மணமகளின் தோழியையும் புகழ்ந்து பாடிவிட்டேன்" என்றான் வைனாமொயினன். "இங்கே அமர்ந்திருக்கும் மதிப்புள்ள விருந்தினரைக் கொஞ்சம் பார்க்க விடுங்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த மனிதரை நான் கண்டதேயில்லை. பனிமழை வனத்தை மூடி வனப்பாக்கியதுபோல அனைவரும் வெள்ளை உடையில் இருக்கிறார்கள். ஆடையின் அடிப்புறம் வைகறை நேரத்து வௌிறலைப் போன்றது. மேற்புறம் உதயத்தின் ஒளிச்சுடர் போன்றது. வெள்ளிக் காசுகளும் தங்கக் காசுகளும் நிறையவே இருந்தன. விழாவைச் சிறப்பாக்குவதற்காகப் பணப்பைகள் தெருக்களில் சிதறிக் கிடந்தன."

திருமண விழாப் பாடல்களை இனிதாய் முடித்த வைனாமொயினன் வண்டியில் ஏறிப் புறப்பட்டான். வழியெங்கணும் பாடல்கள் பாடினான். ஒன்றின் பின் ஒன்றாகப் பாடி வந்த வேளையில், வண்டியின் முன்புறம் ஓர் அடிமரக் குற்றியில் மோதியதால் ஏர்க்கால் ஒடிந்தது. விற்கால் வீழ்ந்தது. வண்டி உடைந்தது.

"இந்த வண்டியைத் திருத்துவதற்குத் துவோனலாவுக்குப் போய்த் துறப்பணம் கொண்டுவர வல்லவர் யாராவது இருக்கிறீர்களா?" என்று கேட்டான் வைனாமொயினன்.

"மரண உலகத்துக்குப் போய்த் துறப்பணம் கொண்டுவர வல்லவர் யாருமே இல்லை" என்று மறுமொழி வந்தது.

நிலைபேறுடைய மந்திரப் பாடகன் வைனாமொயினன் மரண உலகத்துக்குப் போனான். துறப்பணத்தைக் கொண்டு வந்தான். வண்டியைத் திருத்தினான். ஏறி அமர்ந்து தன் வீடு நோக்கிப் புறப்பட்டான்.
     அட்டவணை    மேலே
26. லெம்மின்கைனனின் பயணம்

லெம்மின்கைனன் வயலை உழுதுகொண்டிருந்தான். ஏாிக்கு அந்தப் பக்கமாகக் கிராமத்திலிருந்து ஏதோ கூச்சல் கேட்டது. மக்கள் பனிக்கட்டிமேல் நடமாடும் சத்தமும் புற்றரைப் பக்கமாய்ச் சறுக்கு வண்டியின் சலசலப்பும் கேட்டுக் கொண்டிருந்தன. 'ஒரு வேளை வடநாட்டில் இரகசியமாகத் திருமண விழா முடிந்துவிட்டதோ?' என்று நினைத்தான் அவன்.

அவன் வாயைக் கோணித் தலையைத் திருப்பிக் கறுத்தத் தாடியைத் திருகி முறுக்கினான். அந்தத் துர்ப்பாக்கியசாலியின் 15கன்னத்துக்கு இரத்தம் பாய்ந்தது. அவன் உழுத வேலையைப் பாதியில் விட்டுவிட்டுக் குதிரையில் ஏறி வீட்டுக்கு விரைந்தான்.

"அம்மா" என்று வீட்டுக்கு வந்ததும் தாயை அழைத்தான். "நான் நல்ல பசியில் வந்திருக்கிறேன். உணவை எடுத்து வை. அத்தோடு உடனடியாகச் சவுனாவில் தீ மூட்டிச் சூடேற்று. நான் சுத்தமாகக் குளித்து உடுத்து ஆயத்தமாக வேண்டும்."

தாய் உணவை எடுத்து வைத்துவிட்டுச் சவுனாவுக்கு விரைந்தாள். மகன் குளிப்பதற்காகச் சவுனாவைச் சூடாக்கினாள். அவன் விரைவாகச் சாப்பிட்டான்; அடுத்துடன் குளித்தான். பின்னர் களஞ்சிய அறையில் இருக்கும் தனது உடைகளில் மிகச் சிறந்த ஒன்றைக் கொண்டுவரும்படி தாயிடம் சொன்னான்.

"மகனே, நீ எங்கே போகிறாய்?" என்று கேட்டாள் தாய். "சிவிங்கி வேட்டைக்கா? காட்டெருதின் பின்னால் சறுக்கித் துரத்தவா? அல்லது அணில் வேட்டைக்கா?"

"நான் வடநாட்டில் இரகசியக் குடியர்களின் இடத்துக்குப் போகிறேன்" என்று மறுமொழி சொன்னான் லெம்மின்கைனன். "எனது சிறந்த ஆடைகளை விரைவாய்க் கொண்டுவா!"

அவனைத் தாயும் தாரமும் தடுத்தார்கள். "அழைப்பில்லாமல் அங்கே போகக் கூடாது" என்று தாய் எடுத்துச் சொன்னாள்.

"கூப்பிட்டவுடன் ஓடிப் போகிறவன் தரங்கெட்ட மனிதன். அாிய மனிதர் அழைப்பில்லாமலே செல்வர். கூாிய வாளில் சீறும் பொறியில் எப்போதும் எனக்கு அழைப்பு இருக்கிறது."

"வேண்டாம் மகனே, போகாதே!" என்று தாய் கெஞ்சினாள். "வழியில் பல அதிசயங்கள் நிகழும். மூன்று தரம் உன்னை மரணம் எதிர்கொள்ளும்."

"இந்தப் பெண்களுக்கு எப்போதும் மரணத்தைப்பற்றிய நினைவுதான். அழிவைப்பற்றியே எண்ணிக் கொண்டிருப்பார்கள். மனத் துணிவு உள்ளவனுக்கு மரண பயம் இல்லை. ஆனாலும் அந்த மூன்று பயங்கரங்களும் எவையெவை? அவற்றில் முதலாவதைச் சொல்!"

"நீ வழியில் எதிர்கொள்ளப் போகும் மூன்று பயங்கரங்களையும் ஒவ்வொன்றாகச் சொல்வேன்" என்று தொடங்கிய லெம்மின்கைனனின் தாய், அவனுக்குக் காத்திருந்த மூன்று மரணங்களையும் விபாித்தாள். அதன்பின் அவள் தொடர்ந்து சொன்னாள்: "இந்த மூன்று மரணங்கள் மட்டுமல்ல. உனது பயணத்தின் முடிவில் அதிபயங்கரமான சம்பவம் இன்னொன்று காத்திருக்கிறது. நீ வடநாட்டின் தோட்டத்து எல்லையை அடைந்ததும், இரும்பால் உருக்கால் அமைந்த வேலியைக் காண்பாய். அது பூமியிலிருந்து வான்வரை இருக்கும். ஈட்டிகள் அதனில் சொருகியிருக்கும். பாம்புகளாலும் இராட்சதப் பல்லிகளாலும் வாிச்சுகள் இருக்கும். அவற்றின் வால்கள் எல்லாம் உள்ளே ஆடும். தலைகள் எல்லாம் வௌியே சீறும்.

"நிலத்திலும் பலபல அரவுகள் ஊரும். அவற்றின் வால்கள் கீழ்நோக்கி ஆடும். நாக்குகள் எல்லாம் மேல்நோக்கிச் சீறும். இவை அனைத்திலும் பொிய பயங்கரமான பாம்பு வழியில் குறுக்கே படுத்துக் கிடக்கும். அது கூரை மரத்திலும் நீளமாய் இருக்கும். வாசல் தூணிலும் பருப்பமாய் இருக்கும். இவையெல்லாம் அதிர்ஷ்டம் கெட்ட உன்னைத்தான் எதிர்பார்த்து இருக்கின்றன. வேறு யாரையுமல்ல!"

"இவையெல்லாம் குழந்தைகளின் மரணங்கள். வீராின் மரணமேயல்ல" என்றான் லெம்மின்கைனன். "எனக்குப் பாம்பை மயக்கும் மந்திரம் தொியும். நேற்றுப் பாம்பு வயலை உழுதபோது பாம்புகளை வெறும் கையால் தூக்கி எறிந்தேன். இதோ, இன்னமும் பாம்புகளின் இரத்தக் கறையும் கொழுப்புக் கறையும் எனது நகங்களில் படிந்திருக்கின்றன. நான் எனது மந்திரப் பாடல்களால் பாம்புகளை வடநாட்டிலிருந்து விரட்டியடிப்பேன்."

லெம்மின்கைனனின் தாய் சொன்னாள்: "நீ வடநாட்டுக்குப் போனாலும் அங்கே அந்த மர வீட்டுக்குள் நுழையாதே. அங்கே மது அருந்தி மதி மறந்த மனிதர்கள் இடுப்பில் வாள்களுடன் இருக்கிறார்கள். அவர்கள் வாள் நுனியால் உன்னைச் சபித்து மயக்குவார்கள். உன்னிலும் பார்க்க வல்லமை படைத்த பலரை முன்னர் மயக்கியிருக்கிறார்கள்."

"நான் முன்னர் அங்கு சென்றிருக்கிறேன்" என்றான் லெம்மின்கைனன். "எந்த லாப்புலாந்துக்காரனும் என்னை அசைக்க முடியாது. எந்த துர்யா மனிதரும் என்னை வெல்ல முடியாது. அவர்களின் தோள்கள் இரண்டாகப் பாடுவேன். எனது வாக்கால் அவர்களின் தாடைகளை வெடிக்கச் செய்வேன். சட்டைக் கழுத்தைக் கிழித்து நெஞ்செலும்பை நொருக்குவேன்."

"பாவமப்பா நீ!" என்றாள் தாய். "நீ அங்கே சென்றதைப்பற்றிப் பெருமை பேசலாம். உண்மைதான். அங்கே நீ பல சாகசங்களைச் செய்தாய். வடநாட்டுக்குப் போனாய். குளங்களில் நீந்தினாய். மரண ஆற்றை அளந்தாய். ஆனால் இந்தப் பாவித் தாய் இல்லாவிட்டால் நீ இன்னமும் அங்கேதான் இருப்பாய்!"

தாய் தொடர்ந்தாள்: "இதை நினைவில் வைத்துக்கொள். அங்கே ஒரு மலைச்சாரலில் கம்பங்கள் இருக்கும். ஒவ்வொரு கம்பத்திலும் மனிதத் தலைகள் திணிக்கப்பட்டிருக்கும். ஒரேயொரு கம்பம்தான் வெறுமையாய் இருக்கும். அது உனது தலையை எதிர்பார்த்து இருக்கும்."

"இதற்கெல்லாம் பைத்தியக்காரன்தான் பயப்படுவான். எனது பழைய போராடையைக் கொண்டுவா. அப்பாவின் வாள் வெகு காலமாகக் குளிாில் இருக்கிறது. தன்னை வீச ஒரு வீரனைக் கேட்கிறது" என்ற லெம்மின்கைனன், தன் தந்தையின் வாளை எடுத்தான். கதவில் குத்திக் கூர்மை பார்த்தான். கையில் பிடித்தான். சுழற்றித் திருப்பினான். அது ஒரு சிறுபழச் செடிபோல் சிறந்து விளங்கிற்று. "இந்த வாளை 16அளக்கும் வல்லவன் ஒருவன் வடநாட்டில் இல்லை" என்றான் அவன்.

பின்னர் ஓர் உரமான குறுக்கு வில்லைச் சுவாிலிருந்து உருவினான். "இந்த வில்லை எவனாவது வளைக்க முடிந்தால், அவனை ஓர் உண்மையான வீரன் என்பேன்" என்ற லெம்மின்கைனன், அடிமையை அழைத்துப் போர்க் குதிரையை வண்டியில் பூட்டச் சொன்னான்.

நெருப்பு நிறக் குதிரை வண்டிமுன் நின்றது. லெம்மின்கைனன் வண்டியில் ஏறினான். "குடிகாராின் இடத்துக்கு இதோ புறப்படுகிறேன்" என்றான்.

தாய் வந்து அவனை மீண்டும் எச்சாித்தாள். "மகனே, அந்தக் குடிகாராின் இடத்துக்குப் போனால், சாடியில் இருக்கும் பானத்தில் பாதியை அருந்து. மீதியை யாராவது தீயவன் அருந்தட்டும். ஏனென்றால் சாடியின் அடியில் பாம்புகள் இருக்கும்."

தாய் வயல் பக்கத்தில் வந்து நின்று மீண்டும் சொன்னாள். "மகனே, நீ அந்தக் குடிகாராின் இடத்துக்குப் போக நேர்ந்தால், ஆசனத்தின் முன் பாதியில் இரு. பின் பாதியில் யாராவது தீயவன் இருக்கட்டும். அப்படிச் செய்தால் நீ ஒரு சிறந்த நாயகன் ஆவாய்."

மணிகள் கட்டிய சவுக்கால் குதிரையை அடித்தான். பயணம் விரைந்தது. வழியில் காட்டுக் கோழியின் கூட்டம் ஒன்று காற்றில் பறந்தது. ஒரு கைப்பிடியளவு இறகுகள் பாதையில் கிடந்தன. எதற்காவது பயன்படும் என்று எண்ணி அவற்றை எடுத்துப் பையில் போட்டான்.

மேலும் சிறிது தூரம் சென்றதும் குதிரை காதை நிமிர்த்திக் கனைத்தது. லெம்மின்கைனன் வண்டியில் ஏறி நின்று, என்ன நடந்தது என்று எட்டிப் பார்த்தான். அவனுடைய அன்னை சொன்னதுபோலவே ஒரு நெருப்பு ஆறு குதிரை முன் பாய்ந்தது. அந்த நெருப்பு ஆற்றில் ஒரு நெருப்புப் பாறை. அந்த நெருப்புப் பாறையின் உச்சியில் ஒரு நெருப்புக் கழுகு. அதன் தொண்டைக்குள் நெருப்புக் கொழுந்துவிட்டு எாிந்தது. அதன் இறகுகளில் இருந்தும் தீப்பொறி பறந்தது.

"லெம்பியின் மைந்தனே, எங்கே பயணம்" என்று கழுகு கேட்டது.

"வடநாட்டில் குடித்துக் கும்மாளமிடும் இடத்துக்குப் போகிறேன். வழியைவிட்டு விலகி நில்!" என்றான் லெம்மின்கைனன்.

"லெம்மின்கைனன் எனது தொண்டை வழியாகத் தனது பயணத்தைத் தொடரலாம். அங்கே நிரந்தரமான பொிய விருந்து கிடைக்கும்" என்றது கழுகு.

லெம்மின்கைனன் சட்டைப் பையில் கையைவிட்டான். காட்டுக் கோழியின் இறகுகளை வௌியே எடுத்தான். அவற்றைத் தனது இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையில் வைத்துத் தேய்த்தான். காட்டுக் கோழியின் கூட்டம் பிறந்தது. அந்தக் காட்டுக் கோழிகளைக் கழுகின் தொண்டைக்குள் திணித்துவிட்டு அவன் அதைக் கடந்து சென்றான். இப்படியாக அவனுடைய முதல் நாள் பயணமும் பயங்கரமும் முடிவுற்றன.

அடுத்த நாள் தொடங்கிய பயணத்தில் சிறிது தூரம் சென்றதும் குதிரை அதிர்ச்சியடைந்து நின்றது. லெம்மின்கைனன் வண்டியில் எழுந்து நின்று எட்டிப் பார்த்தான். அவனுடைய அன்னை சொன்னதுபோலவே ஒரு பொிய பயங்கர நெருப்புக் குண்டம் வழியை அடைத்துக் கொண்டு இருந்தது. அது கிழக்கிலிருந்து வடமேற்குவரை நீண்டு கிடந்தது. கொதிக்கும் கற்களும் எாியும் பாறைகளும் அதனுள் இருந்தன.

லெம்மின்கைனன் மாபெரும் கடவுளை மனதில் நினைத்தான் "மனுக்குல முதல்வனே, உயர்மா தெய்வமே, விண்ணுலகத் தந்தையே, வடமேற்கிலிருந்து ஒரு மேகத்தை அனுப்பும்! இன்னொன்றை மேற்கிலிருந்தும் வேறொன்றைக் கிழக்கிலிருந்தும் அனுப்பும்! வடகீழ்த் திசையில் அவற்றை ஒன்றாய் இணையும்! அவற்றைப் பக்கத்தோடு பக்கமாய் மோதித் தள்ளும்! கொதிக்கும் பாறைகளில் பனிமழையைக் கவிழ்த்துக் கொட்டும்!"

மனுக்குல முதல்வன் முகில்களைச் சேர்த்து மோதினார். கொதிக்கும் பாறைகளில் பனிமழையை அள்ளிக் கொட்டினார். ஓர் ஈட்டி அளவு உயரத்துக்குப் பெய்த பனிமழை ஏாிபோல் குளம்போல் பரந்து கிடந்தது. லெம்மின்கைனன் ஒரு மந்திரப் பாடலைப் பாடி அந்த ஏாிக்கு மேலாக பனிக்கட்டியில் ஒரு பாலம் அமைத்தான். அதன்மேல் வண்டியைச் செலுத்தி மறுகரையை அடைந்தான். இப்படியாக அவனுடைய இரண்டாம் நாள் பயணமும் பயங்கரமும் முடிவுற்றன.

மணிகள் கட்டிய சாட்டையால் குதிரையை ஓங்கி அடித்தான். குதிரை விரைந்து பறந்து சென்றது. சிறிது தூரம் சென்றதும் குதிரை திடீரென நின்றது. ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றது. லெம்மின்கைனன் எழுந்து எட்டிப் பார்த்தான். வடநாட்டின் வாயிலில் ஓர் ஓநாய் நின்றது. அதற்கப்பால் வழியில் ஒரு கரடி நின்றது.

லெம்மின்கைனன் தனது சட்டைப் பைக்குள் கையை விட்டான். கொஞ்சம் கம்பளி ஆட்டு உரோமத்தை வௌியே எடுத்தான். உள்ளங் கைகளில் வைத்துப் "பூ" என்று ஊதினான். ஒரு பொிய கம்பளி ஆட்டுக் கூட்டம் தோன்றி ஓடியது. ஓநாயும் கரடியும் அதன்மேல் பாய்ந்தன. லெம்மின்கைனன் வாயிலைக் கடந்து உள்ளே போனான். சிறிது தூரம் சென்றதும் இரும்பால் உருக்கால் அமைந்த வேலி ஒன்று குறுக்கே நின்றது. அது நுற்றுக் கணக்கான அடி ஆழமாய் நிலத்துக்குள் சென்றது. நூற்றுக் கணக்கான அடி உயரமாய் வான் நோக்கி நின்றது. அதில் இரும்பு ஈட்டிகள் சொருகி இருந்தன. பாம்புகளாலும் பயங்கரப் பல்லிகளாலும் வாிச்சுகள் இருந்தன.

"அன்னை சொன்னது போலத்தான் இருக்கிறது" என்று கூறிய லெம்மின்கைனன், உறையிலிருந்து கத்தியை உருவினான். வேலியை இரண்டாய் வெட்டிப் பிளந்தான். பாம்புகளைப் புரட்டித் தள்ளி ஐந்து தூண் இடைவௌியில் ஏழு ஈட்டிகள் அகலத்தில் ஒரு பாதையைத் திறந்தான். அவன் முன்னேறிச் செல்கையில் வாயிலின் குறுக்கே ஒரு பிரமாண்டமான பாம்பு படுத்துக் கிடந்தது. அது வீட்டு உத்தரத்திலும் நீளமானது. கதவுத் தூணிலும் பருமனானது. அதற்கு அாிதட்டின் கண்களைப்போல நூறு பொிய கண்கள். ஈட்டியின் அலகளவு நீளத்தில் ஆயிரம் நாக்குகள். வைக்கோல் வாாியின் பிடி போன்ற பாாிய பற்கள். ஏழு தோணிகளை இணைத்தது போல அதன் முதுகு நீண்டிருந்தது.

அந்தக் கொடிய பாம்பில் கைவைக்க விரும்பாத லெம்மின்கைனன் மந்திரம் சொன்னான். "காிய பாம்பே, மரணத்தின் நிறத்து மாபெரும் புழுவே, புல் மேடுகளிலும் மர வேர்களிலும் மறைந்து வாழும் பிராணியே, புற்களிலிருந்து உன்னைப் பிாித்தவர் யார்? உனது தலையை நிமிர்த்தி விறைப்பாய் நிறுத்தியது யார்? யாரோ உனது உறவினரா?"

"மூடு வாயை! மறை தலையை! அடக்கு அடக்கு அலையும் நாக்கை! சுருட்டு சுருட்டு உடலைச் சுருட்டு! விலகு விலகு வழியைவிட்டு! புற்றரைப் புற்றுள் புகுந்து ஓடு! பாசி நிலத்துள் புகுந்து ஓடு! அரசங் கட்டையாய் உருண்டு ஓடு! அங்கிருந்து நீ தலையைத் தூக்கினால் இறைவன் உன்னை உருக்கு முனை ஆணிகளாலும் இரும்புக் குண்டுகளாலும் அடித்து நொருக்குவார்."

பாம்பு அதைக் கேட்கவும் இல்லை. அடங்கவும் இல்லை. அது நாக்கை நீட்டிச் சீறிக்கொண்டு அவன் தலையைக் குறி பார்த்தது. அப்பொழுது அவனுடைய முதிய தாய் முன்னர் ஒரு முறை கற்றுக் கொடுத்த சில மந்திரச் சொற்கள் நினைவுக்கு வந்தன.

"தீய பிராணியே இரண்டாய்ப் பிளப்பாய்! மூன்று துண்டுகளாய்ச் சிதறிப் போவாய்! உனது பிறப்பு எனக்குத் தொியும். உனது தாயோ ஊன் உண்ணும் அரக்கி. உனது அப்பன் கடல் அரக்கன். அரக்கி நீாில் உமிழ்நீர் உமிழ்ந்தாள். திறந்த கடலில் விழுந்த அந்த எச்சிலை கடலலையும் காற்றும் ஏழு கோடை காலம் தாலாட்டி வளர்த்தன. அது சூாிய ஒளியில் மென்மை பெற்றது. அலைகள் இழுத்துக் கரையில் சேர்த்தன.

"இயற்கையின் மகளிர் மூவர் கரையில் நடந்தனர். அலை எற்றித் தள்ளிய எச்சில் உருவத்தை அவர்கள் கண்டனர். 'இதற்கு இறைவன் சுவாசத்தை ஊதிக் கண்களும் அருளினால் எப்படி இருக்கும்?' என்று கேட்டனர்.

"இறைவனின் காதில் இதுவும் விழுந்தது. 'சுவாசத்தை ஊதிக் கண்களும் அருளினால் என்னவாகும்? தீயதிலிருந்து தீயதே தோன்றும். எச்சிலிலிருந்து இழியதே தோன்றும்' என்றார் இறைவன்.

"சாத்தான் இதனைக் கேட்கவும் நேர்ந்தது. தானே கர்த்தராய் மாறவும் நினைத்தது. அரக்கியின் எச்சில் உருவுக்குச் சுவாசத்தை ஊதிக் கரும் பாம்பைப் படைத்தது. அந்தச் சுவாசம் சாத்தானின் நெருப்புக் காியிலிருந்து வந்தது. அரக்கியிடமிருந்து இதயம் வந்தது. ஒரு பயங்கர நீர்வீழ்ச்சியிலிருந்து அதற்கு மூளை வந்தது. அழுகிய அவரை விதையிலிருந்து தலையும் வந்தது. பிசாசின் சணல் விதையிலிருந்து கண்கள் வந்தன. பிசாசின் மிலாறு மரத்து இலைகளிலிருந்து காதுகள் வந்தன. அரக்கியின் இடுப்புப் பட்டி வளையத்திலிருந்து வாய் வந்தது. தீய சக்தியின் பின்னிய கூந்தலால் வாலும் வந்தது. மரணச் சங்கிலியால் குடல்களும் ஆகின.

"நிலத்துள் வாழும் பிராணியே, மரண நிறத்தின் புழுவே, இதுதான் உன் கௌரவம். இவர்கள்தாம் உன் இனத்தவர். விலகி நில்! வடநிலத்து விருந்துக்கு என்னைப் போக விடு!"

நூறு விழிப் பாம்பு விலகி வழிவிட்டது. லெம்மின்கைனன் குடியர்கள் கூடிய இடத்தை நோக்கிப் பயணமானான்.
     அட்டவணை    மேலே
27. வடநாட்டுப் போர்

பலவிதமான பயங்கரங்களையும் தொல்லைகளையும் கடந்து லெம்மின் கைனனை வடநாட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறோம். மணமக்கள் விழாவைவிட்டுப் போன பின்னர், அழைப்பு இல்லாமல் குடியர் கூடிய இடத்துக்கு வந்த லெம்மின்கைனனுக்கு என்ன நேர்ந்தது என்பதை இனிப் பார்ப்போம்.

செங்கன்னம் கொண்ட போக்கிாித் துடுக்கன் லெம்மின்கைனன் வீட்டுக்குள் நுழைந்து, வீட்டின் நடுவிலே நின்றான். அப்பொழுது வீட்டின் அடித்தளம் அசைந்தது. மரத்தால் கட்டிய அந்த வீடு எதிரொலித்தது. அவன் அங்கே நின்று வருமாறு சொன்னான்: "நான் இங்கு வந்ததால் நலமான வாழ்த்துக்கள்! என்னை வாழ்த்துவோர் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்! எனது குதிரை உண்ண பார்லியும் இந்த வீரன் அருந்த 'பீரு'ம் இங்கே கிடைக்குமா?"

ஒரு நீளமான மேசையில் தலைமை இடத்தில் அமர்ந்திருந்தான் வடநாட்டுத் தலைவன். அவன், "உனது குதிரைக்கு இங்கே இடம் இருக்கிறது. அமைதியாக இருப்பதானால் நீயும் இங்கே இருப்பதில் தடையில்லை. வீட்டு உத்தரத்தின் கீழே கதவுப் பக்கமாய் நிற்கலாம். அந்த இரண்டு கிடாரங்களுக்கு நடுவிலும் நிற்கலாம். அந்தக் கொளுவிகள் பொருத்திய இடத்திலும் நிற்கலாம்" என்று சொன்னான்.

லெம்மின்கைனன் தனது சட்டி நிறத்துக் கறுத்தத் தாடியைத் திருகி முறுக்கினான். "இங்கே தூசும் காியும் கீழே கொட்டுகிறது. அந்தத் தூசையும் காியையும் துடைத்து எடுக்கப் பிசாசுதான் வந்து இந்த வாசலில் நிற்கும். வாசலில், வீட்டு உத்தரத்தின் கீழ் என் தந்தை என்றுமே நின்றதில்லை. அப்போது அவருக்கென்று ஓர் அறை இருந்தது. குதிரைக்குத் தனியிடம் இருந்தது. கையுறைகளையும் வாள்களையும் வைக்கக் கொளுவிகளும் இருந்தன. இவையெல்லாம் என் தந்தைக்கு இருந்ததென்றால் எனக்கு மட்டும் ஏனில்லை?" என்று கேட்டான்.

அதன்பின் அவன் வீட்டின் உள்ளே சென்றான். ஒரு மேசையின் பக்கமாய்த் திரும்பி ஒரு வாங்கின் ஓரத்தில் உட்கார்ந்தான். வாங்கு ஆடி அசைந்தது. அவன், "புதிதாக வந்த இந்த விருந்தாளிக்கு 'பீர்'ப் பானம் வழங்கப்படமாட்டாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் ஓர் அழையாத விருந்தாளி" என்றான்.

இல்போவின் மகள் என்னும் வடநில மாது மறுமொழி சொன்னாள். "ஓ, பையா, லெம்மின்கைனா, நீ எத்தகைய விருந்தாளி? எனது தலையை நொருக்கவா இங்கே வாந்தாய்? 'பீர்' வடிபடாமல் இன்னமும் பார்லியாகவே இருக்கிறது. ரொட்டி சுடுபடாமல் மாவாகவே இருக்கிறது. இறைச்சி சமைபடாமல் பச்சையாகவே இருக்கிறது. நீ ஓர் இரவு முந்தியோ ஒரு பகல் பிந்தியோ வந்திருக்கலாமே!"

அப்போது லெம்மின்கைனன் வாயைக் கோணித் தலையைத் திருப்பிக் கறுத்தத் தாடியைத் திருகி முறுக்கி இப்படிச் சொன்னான்: "ஓகோ, அப்படியென்றால் இங்கே விருந்தொன்று நடந்திருக்கிறது. மக்களுக்கு மது வழங்கப்பட்டிருக்கிறது. சாடிகள் கலயங்கள் கொணரப்பட்டன. அவற்றில பானம் பாிமாறப்பட்டது. கொண்டாட்டம் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

"வடநாட்டுத் தலைவியே, இருண்ட நாட்டின் பல் நீண்ட பெண்ணோ என்ற லெம்மின்கைனன் தொடர்ந்தான். "நாய்க்கு மதிப்பளிப்பதுபோல நாடகத்தை நடத்தி முடித்து விட்டாய். பொிய பொிய ரொட்டிகள் சுட்டாய். 'பீர்' என்னும் பானம் வடித்தாய். ஆறு வழிகளில் அழைப்பு விட்டாய். ஒன்பது வழிகளில் அழைப்பவர் சென்றனர். இழிஞரை அழைத்தாய். ஏழையை அழைத்தாய். ஈனரை அழைத்தாய். குடிசை வாழ்வோர், நாடோடித் திாிவோர், இறுகிய ஆடைத் தொழிலாளர் அனைவரையும் அழைத்தாய். என்னை மட்டும் அழைக்காமல் விட்டாய்.

"எதற்காக எனக்கு நீ இப்படிச் செய்தாய்? எனது பார்லியைத் தந்துமா இப்படிச் செய்தாய்? மற்றவர்கள் அகப்பையிலும் கரண்டியிலும் தந்தார்கள். நான் மூடை மூடையாகக் கொணாந்து கொட்டினேனே! நீ இப்போது 'பீர்' கொண்டு வராததால், எனக்கு உணவு தயார் செய்யச் சட்டியை அடுப்பில் வைக்காததால் நான் லெம்மின்கைனன் அல்லவோ? நான் ஒரு மதிப்பான விருந்தாளி அல்லவோ?"

"ஏய், சின்னவளே" என்று லொவ்ஹி தனது அடிமைப் பெண்ணை அழைத்தாள். "சட்டியில் உணவை வேக வை! இந்த விருந்தாளிக்கு 'பீர்' கொண்டுவா!"

அந்தச் சிறியபெண் சட்டி பானையை அரைகுறையாகக் கழுவி வைப்பவள். அகப்பை கரண்டியைக் கொஞ்சம்தான் சுரண்டி எடுப்பவள். அவள் இறைச்சி எலும்பையும் மீன் தலையையும் காய்ந்த கிழங்கையும் ரொட்டித் தூளையும் சட்டியில் வைத்தாள். அத்தோடு சாடியில் 'பீரை'யும் கொணர்ந்தாள். தரங்கெட்ட 'பீரை' அவனுக்குக் கொடுத்து, "இதைக் குடிக்கத் தகுதியான மனிதனா நீ?" என்று கேட்டாள்.

லெம்மின்கைனன் சாடிக்குள் பார்த்தான். அடியில் புழுக்கள் இருந்தன. நடுவில் பாம்புகள் நௌிந்தன. மேலே பல்லியும் மற்றும் ஊரும் பிராணிகள் ஊர்ந்து திாிந்தன. "சந்திரன் இன்று உதிப்பதற்குள்ளே, இன்றைய பொழுது முடிவதற்குள்ளே இந்தச் சாடியைத் தந்தவர் சாவுலகை அடைவார். ஓ, நீ, 'பீரே', வீணாக இங்கே வந்திருக்கிறாய். உன்னைக் குடிக்கலாம். பின்னர் கழிவை மோதிர விரலாலும் இடது பெருவிரலாலும் எடுத்து நிலத்தில் எறியலாம்."

அவன் தனது சட்டைப் பையிலிருந்து இரும்புத் தூண்டிலை எடுத்தான். அதைச் சாடிக்குள்ளே விட்டு அந்தப் பிராணிகளைப் பிடித்தான். அந்தப் பானத்திலிருந்து ஆயிரம் கறுத்தப் பாம்புகளைப் பிடித்துத் தரையிலே போட்டான். கூாிய உருக்குக் கத்தியை உருவி, நிலத்தில் நௌிந்த பாம்புகளின் தலைகளைக் கொய்தான். பின்னர் கறுத்த மதுவைப் போதியவரையும் குடித்தான். "நான் ஒரு வரவேற்கப்படாத விருந்தாளி. அதனால் தரமான கைகளால் தரமான பானம் பொிய சாடியில் தரப்படவில்லை. ஆடு மாடு அடித்து விருந்தும் தரப்படவில்லை" என்று சொன்னான்.

அப்போது வடநாட்டுத் தலைவன், "உன்னை யார் அழைத்தது? ஏன் இங்கு வந்தாய்?" என்று கேட்டான்.

"அழைத்த விருந்தாளி சிறந்தவன்தான். அழையாத விருந்தாளி அதைவிடச் சிறந்தவன். வடநாட்டுத் தலைவா, நான் சொல்வதைக் கேள்! இப்போது நான் 'பீரை' விலைக்கு வாங்குவேன். கொண்டு வா!"

வடநிலத் தலைவனுக்குப் பைத்தியம் பிடித்ததுபோலப் பெரும் கோபம் வந்தது. அவன் ஒரு மந்திரப் பாடலைப் பாடி நிலத்திலே ஒரு குளத்தை உண்டாக்கினான். "அதோ ஓர் அருவி; நக்கிக் குடி!" என்றான்.

"அருவியில் குடிக்கப் பெண்கள் வளர்த்த பசுக்கன்று அல்ல நான். பின்னால் வாலுள்ள எருதுமல்ல!" என்ற லெம்மின்கைனன் தான் ஒரு மந்திரப் பாடலைப் பாடினான். தங்கக் கொம்புகளுடன் பிரமாண்டமான எருது ஒன்று தோன்றிற்று. அது அருவி நீரை மனம்போலக் குடித்தது.

வடநாட்டின் அந்த உயர்ந்த தலைவன், அந்தக் கொழுத்த மாட்டைக் கொன்று தின்ன ஓர் ஓநாய் உண்டாகப் பாடினான். உடனே லெம்மின்கைனன் அந்த ஓநாயின் வாய் முன்னால் வெள்ளை முயலொன்று துள்ளிவரப் பாடினான்.

சிலுவைக் கண் முயலைக் கிழிப்பதற்காக கோணல் வாய் நாயொன்று ஓடி வரப் பாடினான் வடநாட்டுத் தலைவன். அந்த நாய் அண்ணாந்து பார்த்துக் குரைப்பதற்காக வீட்டு உத்தரத்தில் அணில் ஏறப் பாடினான் லெம்மின்கைனன்.

வடநாட்டுத் தலைவன் படைத்த பொன்னெஞ்சுக் கீாி, உத்தரத்தில் ஏறிய அணிலைப் பிடித்தது. குறும்பன் படைத்த செந்நிற நாி, அந்தக் கீாியைக் கடித்துத் தின்றது.

தலைவன் தனது மந்திர பலத்தால் கோழி ஒன்று உருவாகச் செய்தான். உருவான கோழி நாி வாய் முன்னால் சிறகடித்துச் சென்றது. போக்கிாி படைத்த பொிய கழுகு கோழியைப் பிடித்துக் கிழித்துப் போட்டது.

அப்பொழுது வடநாட்டுத் தலைவன், "விருந்தினர் குறையாவிட்டால் விழா சிறப்படையாது. வீடு வேலைக்கே! பாதை பயணிகளுக்கே! நீசனே, பேயே, பிசாசே, போ வௌியே! உன் நாட்டுக்குச் செல்! உன் வீட்டுக்குச் செல்!" என்று கத்தினான்.

"என்னதான் பாவியாக இருந்நதாலும், சாபத்தினால் ஒருவனைத் துரத்த முடியாது" என்றான் லெம்மின்கைனன்.

உடனே வடநாட்டுத் தலைவன் சுவாில் இருந்த பயங்கர வாளை உருவி எடுத்தான். "லெம்மின்கைனா, வா! வாள்களை 16அளப்போம். வாள்களை அளந்து எங்கள் வீரத்தைக் கணிப்போம்" என்றான் வடநாட்டுத் தலைவன்.

"சாி, வா! அப்படியே செய்யலாம். வாளை அளக்க என் தந்தை என்றுமே அஞ்சியதில்லை. அப்பனுக்குப் பிள்ளை தப்பியா பிறக்கும்? மைந்தனின் சந்ததி மாறியா போகும்? வா!"

அவன் தோலுறையிலிருந்து வாளை இழுத்தான். இருவரும் வாள்களை அளந்து பார்த்தனர். வடநாட்டுத் தலைவனின் வாள் நகத்திலுள்ள கரும் புள்ளியளவு, விரல் பொருத்தில் பாதியளவு நீண்டிருந்தது. எனவே, "வீசு! உனது வீச்சே முதல் வீச்சு. வீசு!" என்றான் லெம்மின்கைனன்.

வடநாட்டுத் தலைவன் வாளை ஓங்கி வீசினான். லெம்மின்கைனனின் தலை உச்சிக்குக் குறி வைத்துச் சுழற்றி அறைந்தான். இலக்குத் தவறி உத்தரத்தில் பட்டதால் உத்தரம் உடைந்தது. கூரைமரம் வீழ்ந்தது.

"ஏனப்பா, உத்தரத்தை ஏன் அறைந்தாய்? அது செய்த பிழை என்ன? வடநாட்டு மைந்தனே, இதோ பார்! வீட்டுக்குள்ளே வேடிக்கை காட்டுவது விபாீதமாகும். பெண்கள் நடுவில் வீரம் காட்டுவதும் விபாீதமாகத்தான் முடியும். நாங்கள் வீட்டு மரங்களை உடைத்து வீட்டு நிலத்தில் இரத்தம் சிந்தாமல் வௌியே முற்றத்துக்குப் போவோம். வயற் புறத்தில் புதிதாகப் பொழிந்து வெள்ளை வெளேரென்று இருக்கும் பனிமழையில் இரத்தம் பளிச்சென்று தொியும்" என்று சொன்னான் லெம்மின்கைனன்.

இருவரும் முற்றத்துக்கு வந்தார்கள். "வடநில மைந்தனே, உனது வாளே நீளமாக இருப்பதால், வா! வந்து முதலில் வீசு! உனது கழுத்துக் கழலுவதற்கு முன்னர் வீசு!" என்றான் லெம்மின்கைனன்.

வடநிலத் தலைவன் வாளை ஒரு முறை வீசினான். இரு முறை வீசினான். மும்முறையும் வீசினான். வீச்சு இலக்கில் விழவில்லை. எதிராளியின் தோலைக்கூட அது தொடவில்லை.

"இனி வாள் வீசுவது என்னுடைய முறை" என்றான் லெம்மின்கைனன். வடநிலத் தலைவன் அதைக் கேட்காமல் தொடர்ந்து வீசினான். ஓயாமல் ஓங்கி ஓங்கி அறைந்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் இலக்குத் தவறிக்கொண்டே போனது.

வாள் முழுவதிலும் தீப்பொறி பறந்தது. வாள்நுனி தீயொளி சிந்திற்று. லெம்மின்கைனனின் வாளிலிருந்து எழுந்த ஒளி வடநிலத் தலைவனின் கழுத்தை நோக்கி நகர்ந்தது. அப்போது லெம்மின்கைனன், "ஓகோ, வடநிலத் தலைவா, அதோ பார்! இழியவனே, உனது கழுத்து விடியலைப்போல மிகவும் சிவப்பாக இருக்கிறது" என்றான்.

அப்போது வடநிலத் தலைவன் குனிந்து தனது கழுத்தைப் பார்த்தான். அந்தத் தருணத்தில் லெம்மின்கைனன் வீசினான் வாளை! தோள்களிலிருந்து வீழ்ந்தது தலை! தண்டிலிருந்து கிழங்கை ஒடிப்பதுபோல இருந்தது அது. பயிாிலிருந்து கதிரை அறுப்பதுபோல இருந்தது அது. அம்பால் அடிபட்ட பொிய காட்டுக் கோழி ஒன்று மரத்திலிருந்து வீழ்ந்து உருள்வதுபோல அவன் தலை உருண்டது.

அங்கே ஒரு முற்றத்தில் ஆயிரம் கம்பங்கள் நாட்டப்பட்டு இருந்தன. அவற்றில் ஒன்றில் மட்டும் தலை இல்லாமல் இருந்தது. வடநிலத் தலைவனின் தலையை எடுத்து அதில் சொருகினான் லெம்மின்கைனன்.

வீட்டுக்குத் திரும்பிய லெம்மின்கைனன், "வெறுப்புற்ற பெண்ணே, உன் தீய தலைவனின் இரத்தத்தைக் கழுவத் தண்ணீர் கொண்டுவா!" என்றான்.

சினங் கொண்ட வடநிலத் தலைவி மந்திரப் பாடல்களைப் பாடினாள். உடனே வாள்களுடனும் மற்றும் போர்க்கருவிகளுடனும் நூற்றுக் கணக்கான ஆயிரக் கணக்கான வீரர்கள் தோன்றி லெம்மின்கைனனின் கழுத்தைக் குறிபார்த்தனர்.

லெம்மின்கைனின் நிலைமை பாதகமாக இருந்தது. அங்கே மேலும் இருப்பதால் தொல்லைகள் ஏற்படும் என்று நினைத்தான். தான் வடநாட்டைவிட்டு வௌியேற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று எண்ணினான்.
     அட்டவணை    மேலே
28. லெம்மின்கைனனும் தாயும்

லெம்மின்கைனன் இருண்ட வடநாட்டைவிட்டுப் புகைபோல விரைந்து வௌியேறினான். முற்றத்தைக் கடந்து வந்த அவன் தனது குதிரையைத் தேடினான். அங்கே குதிரையைக் காணவில்லை. வயலோரத்தில் ஒரு பாறையும் அதன் அருகில் ஓர் அலாிப் புதரும்தாம் இருந்தன.

அயலில் இரைச்சல் கேட்கத் தொடங்கிவிட்டது. கிராமத்திலும் வீடுகளிலும் வௌிச்சங்கள் தோன்றின. யன்னல்கள் வழியாகக் கணைகள் துளைப்பதுபோலக் கண்கள் பார்த்தன. தலையைத் தப்பவைக்க இனி என்ன உபாயம் செய்யலாம்!

பின்னர் போக்கிாி லெம்மின்கைனன் தனது உருவத்தை மாற்றி ஒரு கழுகாக மாறினான். உயர எழுந்து விண்ணில் பறந்தான். சூாியன் அவனுடைய கன்னங்களைச் சுட்டது. சந்திரன் புருவங்களை வெளுக்க வைத்தது. பறக்கும்பொழுதே அவன் பிரார்த்தனை செய்தான். "ஐயனே, மனுக்குல முதல்வனே, விண்ணுலக ஞானியே, மேகங்களை ஆளும் அரசே, நீராவியை ஆள்பவனே, ஒரு புகைப் படலத்தைக் காற்றில் பரப்பு! மெல்லிய முகிலை அதன்மேல் விாிப்பாய்! அதன் ஊடாக நான் சென்று என் அன்னையைக் காண்பேன்."

பறக்கும் பாதையில் ஒரு நரைநிறக் கருடன் வந்தது. அதன் தீயுமிழும் கண்கள் வடநிலத் தலைவனின் கண்களைப்போல இருந்தன.

"ஓ, லெம்மின்கைனா, சகோதரனே, எங்கள் சண்டை நினைவிருக்கிறதா?" என்று கருடன் கேட்டது.

"கருடனே, நீ வீட்டுக்குப் போய், 'கழுகை நகங்களால் பிடிப்பது கடினம்' என்று சொல்! போ!" என்றான் லெம்மின்கைனன்.

லெம்மின்கைனன் விரைவில் வீட்டை அடைந்தான். தாயிடம் அவன் சென்றபோது வாயிலே வாட்டம்; இதயத்தில் இன்னலின் ஓட்டம். அவன் ஒழுங்கை வழியாக நடந்து வேலியின் ஓரம் வந்தபோது தாய் வந்து சந்தித்தாள்.

"அருமை மகனே, பொிய மனச்சுமையுடன் வந்திருக்கிறாய். வடநில விழாவில் ஏதேனும் விபாீதம் நிகழ்ந்ததா? மதுபானச் சாடிகளை வழங்கும்போது வருந்தும்படி ஏதும் நடந்ததா? உன் தந்தை போாில் வென்று கொணர்ந்த சிறந்த சாடிகளை நான் தருவேன்."

"இல்லையம்மா. சாடிகளால் சச்சரவு என்றால் ஆயிரம் வீரர்களை அழித்திருப்பேன். "

"குதிரையால் தொல்லையா? குப்புற வீழ்த்தியதா? அப்படியானால் உன் தந்தை வென்று சேர்த்த செல்வங்களிலிருந்து ஒரு சிறந்த குதிரையை வாங்கு!"

"இல்லையம்மா. குதிரையால் தொல்லையில்லை. குதிரைத் தலைவர்களையே நான் குப்புற வீழ்த்துவேன்."

"வேறென்ன? நெஞ்சில் துயரம் வந்தது எதற்கு? பாவையர் உன்னைப் பார்த்துச் சிாித்தனரா? பெண்கள் உன்னைப் பார்த்துச் சிாித்தால், அடுத்த முறை பெண்களை உன்னால் சிாிக்க வைக்கலாம்."

"அம்மா, என்னைப் பார்த்து எந்தப் பெண் சிாிப்பாள்? நானே பெண்களைக் கேலி செய்பவன். ஆயிரம் மணப்பெண்களை அவமானம் செய்பவன்" என்றான் லெம்மின்கைனன்.

"அப்படியானால் உனக்கு நேர்ந்தது என்ன?" என்று கேட்டாள் அவனுடைய தாய். "அங்கே அதிகமாய் உணவு உண்டாயா? அல்லது அதிகம் குடித்தாயா? இராத் தூக்கத்தில் அபூர்வமான கனவேதும் கண்டாயா?"

"பெண்களுக்குக் கனவுகள்தாம் நினைவுக்கு வரும். எனக்கு இராக் கனவுகள் பகற் கனவுகள் எல்லாம் நினைவில் இருக்கின்றன. வயதான தாயே, அதெல்லாம் இருக்கட்டும். இப்போது மூட்டையைக் கட்டு! மாவையும் உப்பையும் மற்றும் உணவுப் பொருட்களையும் ஒரு துணிச் சாக்கிலே கட்டு! உன் மகன் இந்த வீட்டைவிட்டுப் புறப்பட்டு வௌிநாடு செல்லவேண்டிய தருணம் வந்துவிட்டது. அங்குள்ள மனிதர்கள் ஈட்டிகளைத் தீட்டுகிறார்கள். வாள்களைச் சாணை பிடிக்கிறார்கள். வடநாட்டில ஒரு போர் நடந்தது. அதிலே நான் வடநிலத் தலைவனைக் கொன்றுவிட்டேன். இப்போது வடநாடே திரண்டு இந்தப் பாவியைத் துரத்துகிறது."

தாய் மகனுக்குச் சொன்னாள்: "வடநாட்டுக்குப் போக வேண்டாம் என்று நான் சொன்னேன் அல்லவா? அங்கே போனால் ஆபத்து வரும் என்றும் சொன்னேன் அல்லவா? எனது சொல்லைக் கேட்டு அங்கே போகாதிருந்தால் இந்தப் போர் வந்திருக்காதே! இப்பொழுது உனது தலை தப்ப வேண்டுமென்றால் நீ எங்காவது ஓடிப் போய்விடு!"

"அன்னையே, தாயே, நான் எங்கு செல்வேன்? எனக்கு யாரைத் தொியும்?"

"உனக்கு வழி சொல்ல எனக்கும் தொியவில்லை" என்றாள் தாய். "மலைச் சாிவிலே தேவதாரு மரமாகவோ சூரைச் செடியாகவோ நிற்கலாம். ஆனால் அங்கேயும் பலகை அறுக்கும் பகைவர்கள் வருவார்களே! தூண்கள் அறுக்கத் துட்டரும் வருவார்களே! மிலாறுவாய்ப் பூர்ச்சமாய்ப் போய் நில் எனலாம்தான். ஆனால் விறகுவெட்டிகள் வெட்டிட வருவார்களே! மலைமேல் சென்று பசும்புல் தரையில் சின்னப் பழமாய்ச் சிறு செம்பழமாய் இருக்கச் சொல்லலாம்தான். ஆனால் ஈயத்து அணிகளை மார்பிலே அணிந்த அாிவையர் வந்து ஆய்ந்து எடுப்பார்களே! கோலாச்சி மீனாய்க் கடலில் போயிரு எனலாம்தான். ஆனால் வலைஞர் வருவார்களே! வீசிப் பிடிப்பார்களே! ஓநாய் உருவெடுத்து ஓடு காட்டுக்குள் எனலாம்தான். அங்கேயும் வருவானே புகை நிறத்தில் இளம் மனிதன். ஈட்டிகளைத் தீட்டுவான். உனக்கு முடிவு கட்டுவான்."

"தாயே, அந்தக் கொடிய இடங்களை எல்லாம் நானும் அறிவேன். எங்கெங்கு எனக்குத் தீங்கு நேரும் என்பதையும் அறிவேன். எனது தாடிக்கு எதிரே அழிவு வருகிறது. எங்கே போகலாம்? ஒரு வழி சொல்வாய்!"

"எனக்கு ஒரு நல்ல இடம் தொியும்," என்று தாய் சொன்னாள். "வாள்வீரர்கள் மோதாத தீவொன்று எனது நினைவுக்கு வருகிறது. ஆனால் பொன் வேண்டியோ வெள்ளி வேண்டியோ பத்தாண்டுகளுக்குப் போருக்குப் போகேன் என்று நீ நிச்சயமான சத்தியம் செய்ய வேண்டும்."

"முந்திய போர்களினால் எனது தோள்களில் காயங்கள் இருக்கின்றன. மார்பிலே ஆழமான தழும்புகள் இருக்கின்றன. எனவே, இதோ, இது நிச்சயமான சத்தியம். பொன்னுக்காகவோ வெள்ளிக்காகவோ இனிப் போருக்குப் போகேன்."

லெம்மின்கைனனின் தாய், "உன் தந்தையின் படகில் புறப்படு! ஒன்பது கடல்களைக் கடந்த பின்னர் வரும் பத்தாவது கடலில் ஒரு தீவு இருக்கிறது. பொிய போர் நடந்த ஒரு காலத்தில் உன் தந்தை அங்கேதான் மறைந்து வாழ்ந்தார். நீயும் அங்கே போய் ஒன்று இரண்டு மூன்று ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் உனது பெற்றோர் கட்டிய இந்த வீட்டுக்குத் திரும்பி வா!" என்று சொன்னாள்.
29. லெம்மின்கைனனின் அஞ்ஞாதவாசம்
     அட்டவணை    மேலே

லெம்மின்கைனன் என்னும் குறும்பன் ஒரு முதுகில் சுமக்கும் பையில் உணவுப் பொருட்களைக் கட்டினான். ஒரு வருடத்துக்குப் போதுமான வெண்ணெயும் எடுத்தான். அடுத்த வருடத்துக்கு வேண்டிய பன்றி இறைச்சியையும் எடுத்தான். "நான் மூன்று வருடங்களுக்கோ ஐந்து வருடங்களுக்கோ இந்த இடத்தை விட்டு வௌியேறி மறைந்து வாழப் போகிறேன். இந்த மண்ணைப் புழுக்கள் புசிக்கட்டும்! இலைதளைக் காட்டில் சிவிங்கிகள் இளைப்பாறட்டும்! வயல்களில் கலைமான்கள் உருண்டு புரளட்டும்! காட்டு வௌிகளில் வாத்துக்கள் வாழட்டும்!

"அன்புத் தாயே, நான் போய் வருகிறேன். வடநாட்டவர் எனது தலையைத் தேடி வருவர். 'கதிர்களை வெட்டிக் கட்டிய பின்னர் காட்டைச் சுட்டுவிட்டுப் போய்விட்டான்' என்று சொல்."

உருக்கு உருளைகளில் இருந்தும் செப்புத் தடுப்புகளிலிருந்தும் படகைத் தள்ளித் தண்ணீாில் விட்டான். பாய்மரத்தில் பாயைக் கட்டினான். பின்னணியத்தில் அமர்ந்தான். மிலாறு மரத்து முன்னணியமும் சுக்கானும் துணையிருக்கப் புறப்பட ஆயத்தமானான். பின்னர் அவன், "காற்றே, கப்பலின் பாய்க்கு வீசு! வசந்தக் காற்றே விரைந்து வீசு! தேவதாரு மரத்தில் கட்டிய படகு பெயாில்லாத அந்தத் தீவுக்குப் போகட்டும்!" என்று சொன்னான்.

திறந்த பரந்த தௌிந்த நீர்ப் பரப்பில் கடல் கப்பலைத் தாலாட்டிச் சென்றது. நுரைகடல் படகைத் தள்ளிச் சென்றது. இரண்டு மூன்று மாதங்கள் அவ்விதம் சென்றன.

நீலக் கடலின் நீண்ட தொலைவில், பெயாில்லாத தீவின் கரையில் அமர்ந்திருந்த பெண்கள் கண்களைத் திருப்பினர். கடலையே பார்த்தனர். சகோதரனை எதிர்பார்த்து இருந்தாள் ஒருத்தி. தந்தைக்காக இருந்தாள் ஒருத்தி. காதலனைக் காணக் காத்திருந்தாள் இன்னொருத்தி.

லெம்மின்கைனனின் படகு தூரத்தில் தொிந்தது. நீருக்கும் வானுக்கும் இடையே ஒரு சிறு முகில்போல அவன் படகு தொிந்தது. "அதென்னப்பா கடலிலே புதினமாய்த் தொிகிறது?" என்றாள் ஒருத்தி. "இந்தத் தீவின் கப்பலாய் இருந்தால் இல்லத்தை நோக்கி இப்பக்கம் திரும்பு! தூர தேசச் செய்திகளைக் கேட்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம். வௌிநாடுகளில் நிகழ்வது போரா அமைதியா?"

காற்றுப் படகைத் தள்ளிச் சென்றது. அலைகள் படகை இழுத்துச் சென்றன. லெம்மின்கைனன் படகில் தீவின் கரையை அடைந்தான். அங்கே நின்று அவன், "கப்பல் ஒன்றைக் கரையில் ஏற்றிக் காய்ந்த மண்ணில் கவிழ்த்து வைக்க இந்தத் தீவில் இடம் இருக்கிறதா?" என்று கேட்டான்.

"ஆமப்பா. நீ நூறு ஆயிரம் கப்பல்களைக் கொண்டு வந்தாலும், அவற்றைக் கரையில் ஏற்றிக் கவிழ்த்து வைக்க இந்தத் துறையில் போதிய உருளைகள் இருக்கின்றன" என்றனர் தீவின் பெண்கள்.

லெம்மின்கைனன் கப்பலை இழுத்துக் கரையில் ஏற்றி மர உருளைகளின் மேல் நிறுத்தினான். "ஒரு பொிய போாிலிருந்து, மோதும் கூாிய வாள்களிலிருந்து தப்பி வந்த ஒரு சிறிய மனிதன் அடைக்கலம் பெற இந்தத் தீவில் இடமேதும் உண்டோ?" என்று அவன் கேட்டான்.

"ஆமப்பா. நூறு ஆயிரம் வீரர்கள் வந்தாலும், அவர்கள் மறைந்து வாழப் போதிய கோட்டைகளும் தோட்டங்களும் இருக்கின்றன" என்று தீவின் பெண்கள் கூறினர்.

"நான் வெட்டிச் சுட்டு விவசாயம் செய்ய, மிலாறுக் காடும் அதில் ஒரு நிலமும் இந்தப் பகுதியில் எங்கேனும் உண்டோ?"

"இந்தத் தீவிலே நீ வெட்டிச் சுட்டு விதைப்பதற்கு உனது முதுகளவு நிலமும் இல்லை. ஒரு (17)பறையளவு நிலம்கூட இல்லை. ஏனென்றால் எல்லா நிலமும் பங்கிடப்பட்டு எல்லை போடப்பட்டுவிட்டன."

"அப்படியானால் எனது பாடல்களைப் பாடி மகிழ, நீண்ட காவியத்தை நன்றாய் முழங்க இங்கே இடமேதும் உண்டோ? வார்த்தைகள் எனது வாயில் உருகுகின்றன. முரசில் முளைத்து முன்வருகின்றன" என்றான் குறும்பன் லெம்மின்கைனன்.

"ஆமப்பா. அதற்கு இடம் இருக்கிறது. செழித்த சோலைகளில் நீ ஆடலாம். சுந்தரத் தோப்புகளில் பாடலாம்" என்றனர் பெண்கள்.

குறும்பன் லெம்மின்கைனன் பாடத் தொடங்கினான். அந்த மந்திரப் பாடலால் முற்றத்தில் மாயமாய் ஒரு போி மரம் முளைத்தது. தோட்டவௌி மத்தியில் சிந்தூரம் வளர்ந்தது. சிந்தூர மரங்களில் சிறப்பான கிளைகள். ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு பழம். ஒவ்வொரு பழத்திலும் தங்க உருண்டை. உருண்டைகள் மேலே பாடும் குயில்கள். குயில்கள் பாடும்போது அவற்றின் வாய்களிலிருந்து வந்த தங்கமும் அலகிலிருந்து சொட்டிய செம்பும் சொாிந்த வெள்ளியும் தங்கமலையையும் வெள்ளி மலையையும் போய்ச் சேர்ந்தன.

லெம்மின்கைனன் மந்திரப் பாடல்களைத் தொடர்ந்து பாடினான். அந்தப் பாடல்களால் மணல் துணுக்கைகள் முத்துக்கள் ஆகின. பாறைகள் ஒளிர்ந்து பிரகாசமாகின. மரங்கள் எல்லாம் செந்நிறமாகிச் சுடர்விட்டு நின்றன. பூக்கள் எல்லாம் பொன்னிறம் பெற்றுப் பொலிந்து விளங்கின. தோட்டத்து நடுவில் கிணறு வந்தது. கிணற்றுக்குத் தங்கத்தில் மூடியும் இருந்தது. அத்தோடு தங்கத்தில் வாளியும் இருந்தது. தீவின் சகோதரர் தண்ணீர் குடிக்கலாம். சகோதாிகள் தங்கள் கண்களைக் கழுவலாம்.

மேலும் பாடினான். மந்திரம் பாடினான். தடாகமொன்று தரையிலே வந்தது. தடாகத்தில் நீல வாத்துக்கள் நீந்தின. வாத்துகளுக்குத் தங்கத்தில் நெற்றி. தலையெல்லாம் வெள்ளி. நகங்கள் எல்லாம் செம்பினால் ஆனவை.

தீவின் பெண்கள் திகைத்து நின்றனர். லெம்மின்கைனனின் பாடலும் ஆற்றலும் அவர்களைப் பரவசமூட்டின.

"எனக்கு ஒரு வீடிருந்தால், அதில் ஒரு நீளமான மேசை இருந்தால், மேசையின் முகப்பில் நானும் இருந்தால் இனிமையான பாடல்களை இன்னமும் பாடுவேன்" என்றான் லெம்மின்கைனன்.

வனிதையர் வியந்தனர். வார்த்தைகள் வருமாறு வந்தன: "உனது பாடல்களை வௌிக் கொணர எங்களிடம் எத்தனையோ வீடுகள் இருக்கின்றன."

குறும்பன் லெம்மின்கைனன் வீட்டுக்குள் வந்ததும் பாடினான். மேசை முகப்பில் சாடிகள் வந்தன. கிண்ணங்களில் 'பீர்' நிறைந்து இருந்தது. சாடிகள் நிறைந்ததால் மதுவெல்லாம் வழிந்தது. கலயங்கள் நிறையத் தேன்வகை இருந்தது. வெட்டிய வெண்ணெயால் பன்றி இறைச்சியால் தட்டுகள் நிறைந்தன. வெள்ளியிலும் பொன்னிலும் கத்திகள் இல்லாமல் உணவு உண்ண முடியாது என்றான் செருக்குடைய குறும்பன் லெம்மின்கைனன்.

தங்க வெள்ளிக் கத்திகளைப் பாடியே பெற்றான். பின்னர் வயிறார உண்டு குடித்தான். கிராாமப் புறங்களில் பெண்களோடு உலாவித் திாிந்தான். அழகிய கூந்தலையுடைய கன்னியரோடு களிப்படைந்தான். எந்தப் பக்கம் முகத்தைத் திருப்பினும் அங்கே ஒரு முகம் முத்தம் கொடுத்தது. எந்தத் திசையில் கையை நீட்டினும் அங்கே அதனையோர் அாிவை பிடித்தனள்.

இரவினில் வௌியே இருட்டினில் திாிந்தான். அந்தத் தீவிலே பத்து வீடுகள் இல்லாத கிராமமே இல்லை. அந்த வீடுகளில் பத்துப் பெண்கள் இல்லாத வீடே இல்லை. அவர்களில், அவனுடன் படுக்காதவள் என்று சொல்ல ஒரு தாய் பெற்ற பெண் எவளுமே இல்லை.

ஆயிரம் மணப்பெண்களை அவன் அறிந்திருப்பான். நூறு விதவைப் பெண்களோடு அவன் இருந்திருப்பான். அவன் அணைத்து அனுபவவிக்காதவள் என்று சொல்ல அங்கே பத்துப் பெண்களில் இருவருமில்லை; நூறு பெண்களில் மூவருமில்லை.

அவன் அந்தத் தீவுப் பெண்களுக்கு இன்பமூட்டி மூன்று கோடைக் காலம் மகிழ் வோடு இருந்தான். அந்தத் தீவின் கோடியில் பத்தாவது கிராமத்தில் ஒரு முதிர்கன்னி இருந்தாள். அவள் ஒருத்திதான் லெம்மின்கைனனால் திருப்திப்படாமல் இருந்தவள்.

ஒரு கட்டத்தில் லெம்மின்கைனன் தனது சொந்த வீட்டுக்குத் திரும்ப யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த முதிர்கன்னி வந்து, "லெம்மின்கைனனே, உனக்கு என்னை நினைவில்லாமல் போய்விட்டதா? நீ இந்தத் தீவைவிட்டுப் புறப்பட்டால் உனது படகைப் பாறையில் மோத வைப்பேன்" என்று சொன்னாள். ஆனால் கோழிச் சேவலின் கூவல் கேட்காததால், அவன் துயிலெழுந்து போய் அந்தப் பெண்ணைச் சிலிர்க்க வைத்துச் சிாிக்க வைக்க முடியவில்லை.

ஒரு நாள் அவன் சந்திர உதயத்துக்கு முன்னரே, கோழி கூவுவதற்கு முன்னரே துயிலெழுவது என்று தீர்மானித்தான். அன்று அவன் குறித்த நேரத்துக்கு முன்னரே எழுந்தான். அந்த முதிர்கன்னிக்குக் களிப்பூட்டக் கிராமத்துக்குள் புகுந்தான். அந்த இரவு நேர இருட்டில் அவன் பத்தாவது கிராமத்தை அடைந்ததும் அவன் கண்ட காட்சி அதிர்ச்சியாக இருந்தது. அங்கே மூன்று அறைகள் இல்லாத வீடு ஒன்றுகூட இல்லை. அவற்றில் மூன்று வீரர்கள் இல்லாத அறை ஒன்றுகூட இல்லை. அவர்களில் லெம்மின்கைனனின் தலைக்கு இலக்கு வைத்து வாளைத் தீட்டாத வீரன் ஒருவன்கூட இல்லை.

"அப்பாடா, ஆதவன் எழுந்தான்" என்றான் லெம்மின்கைனன். "நூறு ஆயிரம் பேர் எதிர்த்து வரும்போது என்னை எனது ஆடையுடன் பிசாசு காக்கட்டும்."

அவன் தனது தோணியைப் பார்த்துப் புறப்பட்டபோது அணைக்க ஆளில்லாமல் அாிவையர் இருந்தனர். அவன் கடற்கரைக்கு வந்து தனது தோணி எாிக்கப்பட்டுச் சாம்பலாய் இருப்பதைக் கண்டான்.

ஆபத்து எதிரே வந்து கொண்டிருப்பதை உணர்ந்த அவன், மந்திர சக்தியால் ஒரு படகைக் கட்டத் தொடங்கினான். படகைக் கட்டப் பலகைகள் தேவையே! நூல் நூற்கும் தடியில் ஐந்து துண்டுகளும் இராட்டினப் பலகையில் ஆறு துண்டுகளும் கிடைத்தன. மந்திர சக்தியால் ஒரு முறை அறைந்து படகின் ஒரு பக்கம் முடித்தான். இரண்டாம் அறையில் மறு பக்கம் முடித்தான். மூன்றாம் அறையில் முழுவதும் முடித்தான்.

கலத்தைக் கடலில் தள்ளி இறக்கினான். "படகே, கடலில் நீர்க்குமிழ்போல் செல்வாய்! அலையில் மிதக்கும் ஆம்பலாய்ச் செல்வாய்! கழுகே, கழுகே, மூன்று இறகுகளைக் கொண்டுவா! காக்கையே, இரண்டை நீயும் கொண்டுவா! அவை படகின் முன்புறம் காவலாய் இருக்கட்டும்!"

படகில் ஏறினான். முன்னணியத்தைத் திருப்பினான். அந்தத் தீவில் நாளெல்லாம் தங்கி, தீவுப் பெண்களுக்கு இன்பமூட்ட முடியவில்லை என்பதால் ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய் அமர்ந்திருந்தான். உயர்ந்த தொப்பியும் ஒருங்கே சாிந்தது.

அவன் புறப்பட்டதும் தீவுப் பெண்கள் அழுதனர். "இனிய மாப்பிள்ளையே, எங்களைவிட்டு ஏன் புறப்பட்டாய்? இங்குள்ள பெண்கள் புனிதமானவர்கள் என்பதால் புறப்பட்டாயா? அல்லது இங்கே போதிய பெண்கள் இல்லை என்பதால் புறப்பட்டாயா?"

"அப்படியல்ல" என்றான் லெம்மின்கைனன். "நான் நூறு, ஆயிரம் பெண்களையும் அணைத்திருப்பேன். ஆனால் என்னைத் தனிமை வாட்டுகிறது. எனது சொந்த மலையில் காய்க்கும் சிறுபழங்களின் நினைவு வந்துவிட்டது. சொந்த நாட்டின் பெண்கள்பற்றிய ஏக்கம் ஏற்பட்டுவிட்டது. சொந்தத் தோட்டத்துக் கோழிகளைக் காணும் ஆவல் உண்டாகிவிட்டது."

காற்றொன்று எழுந்தது. கப்பலைக் கடலில் இழுத்துச் சென்றது. கப்பலின் பாய்மரம் கண்ணில் தொிகிற வரையில் கரையில் நின்ற பெண்கள் கலங்கிக் கரைந்தனர். அவர்கள் பாய்மரத்துக்காக அழவில்லை. பாய்மரத்தை இணைத்த இரும்புக்காக அழவில்லை. பாய்மரத்தடியில் இருந்த இளைஞனுக்காக அழுதனர்.

லெம்மின்கைனனும் அழுதான். தீவின் கரைக்காக அவன் அழவில்லை. தீவின் திடலுக்கு அவன் அழவில்லை. தீவுப் பெண்களை நினைத்து அழுதான். அதன்பின் அவன் நீலக் கடலின் நெடிய அலைகளில் ஒரு நாள் சென்றான். இரு நாள் சென்றான். மூன்றாவது நாள் ஒரு பயங்கரமான காற்று எழுந்தது. கடலைக் கலக்கிச் சுழற்றியடித்தது. வடமேற்கிலிருந்து வந்த காற்றுப் படகின் ஒரு பக்கத்தைப் பிடித்தது. வடகீழ்க் காற்று மறுபக்கம் பிடித்தது. இரண்டும் சேர்ந்து படகைப் புரட்டிக் கவிழ்த்துப் போட்டது.

அவன் கைகளாலும் கால்களாலும் வலித்துக் கொண்டு நீாில் நீந்திச் சென்றான். ஓர் இரவும் ஒரு பகலும் நீந்திச் சென்ற பின், தூரத்தில் ஒரு சிறு முகில் தொிந்தது. போகப் போக அது பொிதாகி ஒரு நிலப் பகுதியாகத் தொிந்தது.

அவன் கரையில் ஏறினான். கரையில் இருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்தான். அங்கே பெண்கள் ரொட்டிகளைத் தட்டிக் கொண்டிருந்தனர். வீட்டின் தலைவி அவற்றைச் சுட்டுக் கொண்டிருந்தாள். அவன் அந்தத் தலைவியிடம் உண்ண உணவும் குடிக்கப் பானமும் கேட்டான். அந்த இரக்கமுள்ள நல்ல தலைவி மலையில் இருந்த களஞ்சிய அறைக்குச் சென்றாள். வெண்ணெயும் பன்றி இறைச்சியும் கொண்டு வந்தாள். இறைச்சியை அனலில் வாட்டி அன்புடன் கொடுத்தாள். போதிய அளவு 'பீரை'யும் கொடுத்தாள். அவன் உண்டு ஆறிய பின் ஒரு புதிய படகைக் கொடுத்து அனுப்பி வைத்தாள்.

கடைசியாக, லெம்மின்கைனன் தனது சொந்த நாட்டுக்கு வந்து சேர்ந்தான். அவன் முன்னர் திாிந்து பழகிய தீவுகள் நீாிணைக் கரைகள் அனைத்தையும் கண்டான். மலைகளில் முன்னர் பழகிய தேவதாரு மரங்களையும் ஊசியிலை மரங்களையும் கண்டான். ஆனால் அவன் வாழ்ந்த வீட்டைக் காணவில்லை. வீடிருந்த இடத்தைக்கூட அடையாளம் தொியவில்லை. வீடிருந்த இடத்தில் சிறுபழச் செடிகள் பற்றையாக இருந்தன. தேவதாரு மரங்கள் வளர்ந்திருந்தன. சூரைச் செடிகள் நிறைந்திருந்தன.

"இதோ, இது நான் விளையாடிய சோலை! இதோ, இது நான் உலாவிய பாறைகள்! இதோ, இது நான் ஓடித் திாிந்த புல்மேடுகள்! ஆனால் எனது வீடு எாிந்துவிட்டது. எாிந்த சாம்பலைக் காற்று எங்கும் பரப்பிவிட்டது" என்று லெம்மின்கைனன் அங்கேயே அமர்ந்து அழுதான். இழந்த வீட்டை எண்ணி அழுதான். வீட்டில் இருந்த உறவை எண்ணி அழுதான்.

அப்போது அங்கே ஒரு கழுகு உயரத்தில் பறந்து வந்தது. "கழுகே, கழுகே, என் தாய் எங்கே இருக்கிறாள் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டான் லெம்மின்கைனன். அந்த மூடப் பறவைக்கு ஒன்றும் தொியவில்லை. "அவள் போாில் வாளால் கொலையுண்டிருக்கலாம்" என்றது.

"ஓ, என் அழகான அம்மா, நீ இறந்துவிட்டாயா? உனது உடல் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டதா? அதன்மேல் மரங்களும் செடிகளும் முளைத்துவிட்டனவா? நான் ஒரு பாவி. வடநாட்டுக்குப் போய் வாளை வீசினேன். அதனால் என் அருமை அன்னையை இழந்தேன்" என்று வருந்தினான் லெம்மின்கைனன்.

பின்னர் அங்கே ஒரு சிதைந்த புதாில் கசங்கிய புல்லின் மேல் ஒரு மங்கலான ஒற்றையடிப் பாதை போவதைக் கண்டான். அவன் அந்த வழியே போனான். அது காட்டுக்குள் சென்றது. அது அவனை மரம் செடிகள் நிறைய வளர்ந்திருந்த அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்றது. அங்கே மூன்று ஊசியிலை மரங்களுக்கு நடுவில், இரண்டு பாறைகளுக்கு இடையில் ஓர் இரகசிய வீடும் சவுனாவும் மறைவாக இருந்தன. அங்கே அவனுடைய அன்னையும் இருந்தாள்.

லெம்மின்கைனனுக்கு பொிய மகிழ்ச்சி ஏற்பட்டது. "அருமை அம்மா, நீ இன்னமும் உயிருடன் இருக்கிறாயா? நீ வாளால் கொல்லப்பட்டுவிட்டதாக எண்ணி அழுதேன். எனது கண்கள் மறையும்வரை கண்ணீர் பெருக்கினேன். எனது முகம் அழிந்து போகும் அளவுக்கு அழுதேன்."

"ஆம். நான் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறேன். வடநாட்டு வீரர்கள் உன்னைத் தேடிப் போருக்கு வந்தார்கள். நான் ஓடி வந்து இந்த அடர்ந்த காட்டுக்குள் ஒளிந்துகொண்டேன். அவர்கள் வீட்டை எாித்துத் தோட்டத்தையும் அழித்துவிட்டார்கள்."

"அன்னையே, வருந்தாதே! இதைவிடச் சிறப்பான வீட்டை நான் கட்டுவேன். அத்துடன் வடநாட்டு இனத்தைக் கொன்று குவிப்பேன். அந்த வீரர்களை வென்று வருவேன்."

"மகனே, நீ வெகுகாலம் வௌிநாட்டில் வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறாய். அங்கே எப்படி வாழ்ந்தாய்?"

லெம்மின்கைனன் சொன்னான்: "ஆமம்மா. அங்கே வாழ்க்கை இனிமையாக இருந்தது. அங்கே மரங்கள் சிவப்பு. நிலமோ நீலம். தேவதாருவின் கிளைகள் வெள்ளி. புதர்களில் பூக்கள் பொன்னாய்ப் பூத்தன. மலைகளில் தேனும் மேடுகளில் கோழிமுட்டைகளும் நிறைய இருந்தன. தேவதாருவில் தேன் வழிந்தது. ஊசியிலை மரங்களில் பால் சுரந்தது. வேலி மூலையில் வெண்ணெயும் வேலிக் கம்பங்கள் மதுவையும் சொாிந்தன."

"அங்கே வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. பின்னர் தொல்லையாக மாறிற்று. அங்குள்ள ஆண்கள் தங்கள் பெண்களுக்காகப் பயந்தார்கள். அவர்களைச் சந்தேகப்பட்டார்கள். பெண்கள் இரவெல்லாம் தகாத நடத்தையில் என்னோடு கழித்தார்கள் என்று எண்ணினார்கள். பன்றிகளிடமிருந்து ஓநாய்கள் ஒளிப்பதுபோல, கிராமத்துக் கோழிகளிடமிருந்து கருடன் ஒளிப்பதுபோல பெண்களிடமிருந்து நானும் மறையலானேன்."
     அட்டவணை    மேலே
30 உறைபனியில் லெம்மின்கைனன்

ஒரு நாள் காலை லெம்மின்கைனன் படகுத் துறைக்குச் சென்றான். அங்கே அவனுடைய மரப் படகு அழுது கொண்டிருந்தது. "எளியேன் என்னை எதற்காகப் படைத்தார்கள்? லெம்மின்கைனன் இப்பொழுது பொன் வெள்ளியை விரும்புவதுமில்லை. போருக்குப் போவதுமில்லை" என்று அழுதழுது சொன்னது.

லெம்மின்கைனன் தனது அலங்கார வேலைப்பாடுள்ள கையுறையால் படகை அறைந்தான். பின்னர், "தாரு மரத் தோணியே, தவிர்ப்பாய் துயரை! பலகைகளால் பக்கம் அமைத்த படகே, புலம்புதல் வேண்டாம்! நாளைக் காலையில் உன்னைத் துடுப்பு வீரர்களால் நிரப்புவேன். நீயும் போவாய் போருக்கு!" என்று முழங்கினான்.

திரும்பி வந்த லெம்மின்கைனன் தாயின் அருகில் சென்றான். "அம்மா, நான் போருக்குப் புறப்பட்டால் நீ வருத்தப்படாதே! அந்த வடநாட்டாரை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் எனது நெஞ்சில் விழுந்துவிட்டது," என்றான்.

"அங்கே போகாதே, மகனே!" என்றாள் தாய். "போனால் அங்கே உனக்கு மரணம் நேரும்."

அதனை அலட்சியம் செய்தான் லெம்மின்கைனன். போருக்குப் போவது என்றே தீர்மானித்தான். "வாளுடைய வீரன் ஒருவன் எனக்குத் துணையாக வரவேண்டும். எங்கே யாரைக் கேட்கலாம். ஓ, என் பழைய நண்பன் தியேரா இருக்கிறானே! அவனைக் கேட்கலாம்."

அவன் தியேராவின் தோட்டத்து வழியாக விரைந்தான். அங்கே சென்றடைந்ததும், "தியேரா, எனது உண்மையான நண்பனே, போர்க்களங்களில் நாங்கள் இருவரும் நடத்திய வாழ்க்கை உனக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். அப்போது பத்து வீடுகள் இல்லாத கிராமம் ஒன்று இருந்ததில்லை. பத்து வீரர்கள் இல்லாத வீடு ஒன்று இருந்ததில்லை. நாங்கள் வெற்றி காணாத வீரரும் எவரும் இருந்ததில்லை" என்றான்.

தியேராவின் தந்தை யன்னல் பீடத்தில் ஈட்டிக்குப் பிடி செதுக்கிக் கொண்டிருந்தார். தியேராவின் தாய் கூடத்துப் படியில் தயிர் கடைந்து கொண்டிருந்தாள். தியேராவின் சகோதரர்கள் வாயிலில் ஒரு சறுக்கு வண்டியைச் செய்து கொண்டிருந்தார்கள். தியேராவின் சகோதாிகள் துறையில் துணிகளைத் தோய்த்துக் கொண்டிருந்தார்கள்.

எல்லோரும் ஒரேவிதமாகப் பதில் சொன்னார்கள். "அவனுக்கு இப்போது போருக்குச் செல்ல நேரமில்லை. ஈட்டி எறிந்து போர்புாிய அவகாசம் இல்லை. ஓர் இளம் பெண்ணை மணம் முடித்து நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருக்கிறான். அவனுக்கு உாித்தான அந்தத் தலைவியின் முலைக் காம்புகளில் இன்னமும் விரல்படவில்லை; மார்பகம் இன்னமும் தேய்படவில்லை."

அடுப்பின் அருகில் ஒரு காலை வைத்தபடி நின்ற தியோரா சிறிது சிந்தித்தான். பின்னர் வாசல் வழியாக வௌியே வந்தான். ஈட்டியைக் கையில் எடுத்தான். அந்த ஈட்டி ஒன்றும் பொியதுமல்ல; ஆனால் அத்தனை சிறியதுமல்ல. அந்த ஈட்டியின் முனையில் குதிரை ஒன்று நிற்பதுபோலச் செதுக்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஈட்டி அலகின் அருகில் (18)குதிரைக் குட்டி குதித்தது. பொருத்தில் ஓநாய் ஊளையிட்டது. குமிழில் நின்று கரடி உறுமியது. தியேரா எடுத்த ஈட்டியைச் சுழற்றினான். சுழற்றிய ஈட்டியை வயலின் களிமண் தரையில் லெம்மின்கைனனின் ஈட்டிகளின் நடுவில் குத்தி இறுக்கினான். அப்படி அவன் நண்பனுக்கு உதவியாகப் போருக்குச் செல்லும் தனது ஆர்வத்தை வௌிப்படுத்தினான்.

அதன் பின்னர் அந்த நண்பர்கள் இருவரும் தோணியில் ஏறி வடநாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

வடநாட்டை நோக்கி எதிாிகள் வந்து கொண்டிருப்பதைத் தனது மந்திர சக்தியால் அறிந்தாள் வடநாட்டுத் தலைவி. உடனே ஒரு பனிப் பையனைப் படைத்து வட கடலின் பெரு வௌிக்கு அனுப்பி, இவ்விதம் ஆணையிட்டாள்: "பனிப் பையனே, நான் வளர்த்த அழகான பிள்ளையே, நான் சொல்லும் இடத்துக்கு உடனே செல்வாய்! தௌிந்த பெரும் சமுத்திரத்தின் விாிந்து பரந்த நீர்ப் பரப்பிலே குறும்பன் லெம்மின்கைனனின் தோணியை உறையச் செய்வாய்! அந்தத் துடுக்கனையும் உறையச் செய்வாய்! நானே அவிழ்த்துவிட்டால் தவிர, அவன் என்றுமே வௌியே வராதிருக்கட்டும்!"

பனிப்பையன் என்னும் தீமனம் படைத்தோன் குளிர்ந்த கடலின் கொடிய அலைகளில் படியப் புறப்பட்டான். அவன் செல்லும்போது வழியில் அவன் கடித்ததால் இலைகள் எல்லாம் மரங்களிலிருந்து சொாிந்தன. புற்கள் வாடி நிலத்தில் சாிந்தன.

பனிப்பையன் வடகரையின் நீர்ப் பரப்புக்கு வந்து சேர்ந்தான். அவன் முதலிரவில் குடாக் கடல்களையும் குளங்களையும் குளிர்வித்தான். கடற் கரைகளில் பனிக்கட்டிகளைப் படைத்தான். ஆனால் அலைகள் இன்னமும் உறைந்து ஓயவில்லை. நீாின் பரப்பில் வாலாட்டிக் குருவி திாிந்தது. இன்னமும் அதன் நகங்களிலோ தலையிலோ குளிர் பிடிக்கவில்லை.

இரண்டாவது நாள் பனிப்பையன் பயங்கரமானான். கடும் குளிரைக் கொண்டு வந்தான். அனைத்தையும் உறைய வைத்தான். நீர்நிலை உறைந்து ஒரு முழத் தடிப்பில் பனிக்கட்டியானது. சறுக்கணிக் கம்பின் அளவு ஆழத்துக்குப் பனிமழை பொழிந்தது. துடுக்கன் லெம்மின்கைனனின் படகையும் குளிர வைத்தது.

அதன்பின் பனிப்பையன் லெம்மின்கைனனையே உறைய வைக்க நினைத்து அவனுடைய நகங்களிலும் விரல்களிலும் தாவினான். இதனால் பாதிப்படைந்த லெம்மின்கைனனுக்குப் பயங்கரமான கோபம் வந்தது. பனிபபையனைப் பிடித்து இரும்புச் சூளைக்குள் தள்ளினான். பனிப்பையனைக் கையால் பற்றிய லெம்மின்கைனன், "பனிப் பையனே, குளிர் காலத்தின் குளிரான மகனே, எனது நகங்களில் விரல்களில் செவிகளில் தலையினில் குளிரை ஏற்றாதே! நீ குளிராக்குவதற்கு, மனித இனத்தில் ஒரு தாய் பெற்ற உடலைவிட இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. சேற்றைக் குளிராக்கு! நிலத்தைக் குளிராக்கு! குளிர்ந்த கல்லையும் குளிர்ந்த அலாியையும் மேலும் குளிராக்கு! காட்டரசு மரங்களின் கணுக்களைக் குளிரச் செய்! மிலாறு மரத்தின் பட்டையையும் ஊசியிலை மரத்தையும் அாித்து நோகச் செய்! ஆனால் ஒரு தாய் பெற்ற பிள்ளையின் உரோமத்தையும் தொடாதே!

"இவ்வளவும் உனக்குப் போதாது என்றால், இன்னும் எவ்வளவோ அாிய பொருட்கள் இருக்கின்றன. கொதிக்கும் கற்கள் இருக்கின்றன. எாியும் பாறைகள் இருக்கின்றன. இரும்புக் குன்றங்கள், உருக்கு மலைகள், வுவோக்சி என்னும் நீர்வீழ்ச்சியும் இமாத்திரா நீர்வீழ்ச்சியும் இருக்கின்றன.

"உனது இனத்தையும் உனது மதிப்பையும் இப்போது நான் சொல்லட்டுமா?" என்ற லெம்மின்கைனன் மந்திரப் பாடல்களைச் சொல்லிப் பனிப்பையனின் அகோரத்தைத் தணிக்க முயன்றான். "உனது இனத்தை எனக்குத் தொியும். ஒரு கொடிய தாய்க்கும் கொடிய தந்தைக்கும் நீ பிறந்தாய். நீ பிறந்தது வட கோடியில் அலாிச் செடிகளுக்கும் மிலாறு மரங்களுக்கும் மத்தியில். உனது தாய்க்கு முலையுமில்லாமல் முலைப்பாலும் இல்லாமல் இருந்தபோது உனக்குப் பாலுட்டியது யார்? ஒரு கொடிய பாம்பு தனது காய்ந்த முலைகளால், காம்பில்லாத முலைகளால் உனக்குப் பாலூட்டியது. சதுப்பு நிலத்தின் நடுவில், அலாிப் புதாின் அடியில் வடகாற்று உன்னைத் தாலாட்டியது.

"சிறு மனம் கொண்ட இந்தத் தீய பையன் பெயாில்லாமலே இருந்தான். பனிப்பையன் என்றும் உறைபனியோன் என்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்டான். அவன் வேலிகளில் தாவினான். புல் புதாில் ஆடினான். கோடையில் சேற்றையே நாடினான். குளிர் காலத்தில் தாருவை, மிலாறுவை, பூர்ச்சம் புதர்களைத் தாக்கினான். காட்டையும் மேட்டு நிலத்தையும் வருத்தினான். மரங்களைக் கடித்து இலைகளை அழித்தான். புதர்களைப் பிடித்துப் பூக்களை ஒழித்தான். பூர்ச்ச மரப் பட்டைகளைப் போக்கினான். ஊசிமரத்துச் சுள்ளிகளை வீழ்த்தினான்.

"அப்படிப்பட்ட நீ இப்பொழுது ஒரு கொடியவனாகப் பொியவனாக மாறிவிட்டாயா? என்னையும் விறைக்க வைக்க வந்துவிட்டாயா? ஆனால் நான் எனது காலுறைகளுக்குள் நெருப்பைத் திணிக்கிறேன். எனது காலணிகளுக்குள் கனலைத் திணிக்கிறேன். சட்டைக்குள் எாியும் காியைக் கொட்டுகிறேன். காலணி நூலால் தணலைக் கட்டுகிறேன். அதனால் என்னை எதுவும் செய்யாது.

"நான் உன்னைச் சபிக்கிறேன்! போ, போ! வட எல்லைக்குப் போ! ஓடு, ஓடு, உனது வீட்டுக்கு ஓடு! அங்கே நெருப்பில் இருக்கும் கலயங்களைக் குளிராக்கு! அடுப்பில் இருக்கும் அனலைக் குளிராக்கு! மாப்பிசையும் மாதாின் கைகளைக் குளிராக்கு! மங்கையர் மார்புப் பையனைக் குளிராக்கு! செம்மறி மடியில் பாலைக் குளிராக்கு! பெண்குதிரை வயிற்றுக் கருவைக் குளிராக்கு!

"இதற்கும் நீ அடங்காது போனால், உன்னை மேலும் சபிப்பேன். சபித்துத் துரத்து வேன். போ, போ! அரக்கர் மத்தி நெருப்புக்குப் போ! பிசாசுகளின் சூளை நெருப்புக்குப் போ! திணி, திணி, உன்னை நீயே தீயில் திணி! கொடு, கொடு, கொல்லுலையில் உன்னைக் கொடு! கொல்லன் சுத்தியலால் உன்னை அடிக்கட்டும்! சம்மட்டியால் உன்னை அறையட்டும்!

"இன்னமும் நீ அடங்காது போனால், கோடை வீட்டுக்கு உன்னை விரட்டினேன். உனது கொடிய நாக்கை அங்கு கட்டினேன். நானே வந்து நானே அவிழ்த்து நானே உனக்கு விடுதலை தரும்வரை நீ அங்கேயே இருப்பாய்!"

பனிப்பையனுக்குப் பயம் வந்தது. தனக்கு அழிவு வரப் போகிறது என்று தொிந்தது. அதனால் லெம்மின்கைனனைக் கருணை காட்டும்படி கெஞ்சத் தொடங்கினான். "சாி, நாங்கள் இப்போது ஓர் ஒப்பந்தம் செய்யலாம். சந்திரனிலிருந்து பொன்னிலவு வரும்வரையில் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் கெடுதி செய்வதில்லை. இதற்குமேல் நான் உனக்கு எப்பொழுதாவது கெடுதி செய்தால், நீ என்னை இல்மாினனின் கொல்லுலையில் திணிக்கலாம். அல்லது கோடை வீட்டுக்கு அனுப்பலாம். நான் விடுதலை இல்லாமல் என்றைக்கும் அங்கேயே இருப்பேன்" என்றான் பனிப்பையன்.

குறும்பன் லெம்மின்கைனன் பனிக்கட்டியில் இறுகிய கப்பலை அங்கேயே விட்டுவிட்டு இறங்கி நடந்தான். அவனுடைய தோழன் தியேராவும் அவனைப் பின்தொடர்ந்தான். மூன்று நாட்களுக்குப் பின்னர் ஒரு வறிய கிராமத்துக்கு வந்து பசியால் பாதிக்கப்பட்ட கடல்முனையை அடைந்தனர்.

அந்தக் கடல்முனையில் ஒரு கோட்டை இருந்தது. அதன் வாயிலில் வந்து நின்ற லெம்மின்கைனன், "இந்தக் கோட்டையில் இறைச்சி இருக்கிறதா? இந்தத் தோட்டத்தில் மீன் இருக்கிறதா? இளைத்துக் களைத்த இந்த வீரர்களுக்கு இறச்சியும் மீனும் கிடைக்குமா?" என்று கேட்டான்.

அங்கே எதுவும் கிடைக்காததால், லெம்மின்கைனன், "இந்த வீட்டை நெருப்பு அழிக்கட்டும். தண்ணீர் இதனை அள்ளிக் கொண்டு போகட்டும்!" என்றான்.

அதன்பின் லெம்மின்கைனன் பழக்கப்படாத காட்டு வழியில் முன்னேறிச் சென்றான். பனிப்பையனால் பாதிக்கப்பட்ட அந்தக் கொடிய குளிர்ப் பிரதேசத்தில், கல்லிலே கம்பளி நூலையும் பாறையில் உரோமத்தையும் பிடுங்கிக் காலுறைகளும் கையுறைகளும் செய்தான்.

காட்டு வழியாக மேலும் சில தூரம் சென்ற பின்னர், லெம்மின்கைனன், "ஓ, தியேரா, சகோதரனே, மாதங்களும் நாட்களும் நடந்து திாிந்து எங்கேயோ வந்திருக்கிறோம்" என்றான்.

"வடநாட்டை வஞ்சம் தீர்க்கப் புறப்பட்டோம். முன்னறிமுகம் இல்லாத இந்தப் பாதையில் எங்கள் உயிர்களை இழக்கப் போகிறோம். இந்தக் காட்டில் எந்த வழி எங்களை மரணத்துக்கு அழைத்துச் சொல்லுமோ? இந்த அண்டங்காகங்களின் வயல்களில் நாங்கள் அழியப் போகிறோம். கொடிய பறவைகளுக்கு எங்கள் இறைச்சி உணவாகும். எங்கள் இரத்தம் அவைகளின் அலகுகளை நனைக்கும். எங்கள் எலும்புகள் பாறைச் சிகரங்களில் சிதறிக் கிடக்கும்" என்று சொன்னான் தியேரா.

அவன் தொடர்ந்து சொன்னான். "என் அன்னையின் இந்தத் தசையும் இரத்தமும் இப்போது இருப்பது பொிய போாிலா அல்லது பெருங்கடல் அலையிலா அல்லது தாரு மரத்து மலையிலா சிறுபற்றை வனத்திலா என்பதை என் அன்னை அறியமாட்டாள். ஒருவேளை தன் மகன் இறந்திருக்கலாம் என்று எண்ணி இப்படி அழுவாள்: 'என்னுடைய அதிர்ஷ்டம் கெட்ட மகன் துவோனி என்னும் மரண உலகில் விதைக்கிறான். கல்மா என்னும் இறப்புலக நிலத்தை மட்டப்படுத்துகிறான். அம்புகள் அவனால் தொடப்படாது இருக்கும். காட்டுப் பறவைகளும் கோழிகளும் கொழுத்துத் திாியும். கரடிகளும் கலைமான்களும் செழித்து வாழும்.' "

லெம்மின்கைனனும் தியேரா கூறியதை ஏற்று இவ்விதம் சொன்னான்: "ஆமப்பா. நீ சொன்னது சாிதான். அந்த ஏழைத் தாய் ஒரு கூட்டம் குஞ்சுகளை ஒன்றாக வளர்த்தாள். அவற்றைக் காற்றுச் சினந்து சிதறச் செய்தது. நாங்கள் முன்பு வீட்டுத் தோட்டத்து மலர்களாக இருந்தோம். பலர் எங்களைப் பார்த்து அதிசயப்பட்டனர். இப்பொது காற்றுத்தான் எங்கள் நண்பன். காற்றும் சூாியனும். சூாியனையும் முகில்கள் மூடுகின்றன.

"மரணப் பாதையில் பயணம் செய்யும் எங்களை எந்த வடநாட்டு மாந்திாீகனும் மயக்க முடியாது. மாந்திாீகர்கள் தங்களையே மயக்கட்டும். தங்கள் பிள்ளைகளையே பாடி அழிக்கட்டும். எனது தாயோ தந்தையோ மாந்திாீகர்களை மதித்ததும் இல்லை. லாப்புலாந்தியருக்கு வெகுமதி கொடுத்ததும் இல்லை. அவர்கள் இறைவனிலேயே நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் சொன்னதையே இங்கே நானும் சொல்கிறேன்: 'கருணைமிக்க கடவுளே, உமது அன்புக் கரங்களால் எங்களை அணைத்துக் கொள்ளும். மனிதாின் மனங்களில் இருந்தும் முதிய மாதாின் எண்ணங்களில் இருந்தும் தாடி வளர்த்த மனிதாின் வார்த்தைகளில் இருந்தும் எங்களைக் காப்பாற்றுவீராக! எங்களுக்கு எப்போதும் ஒரு நிரந்தரமான காவலனாக விளங்குவீராக! நீர் காட்டிய நல்ல நெறிகளில் இருந்து எங்கள் குழந்தைகள் விலகாது இருப்பார்களாக!' "

இந்தப் பிரார்த்தனைக்குப் பின்னர், லெம்மின்கைனன் தனது துன்பத்தைத் திரட்டி இரு கரும் குதிரைகள் படைத்தான். தீய நாட்களில் கடிவாளம் படைத்தான். வெறுப்புணாவில் ஆசனம் படைத்தான். ஒரு சுடர் நெற்றிக் குதிரையில் பாய்ந்து ஏறினான். அவனுடைய தோழன் தியேரா அடுத்ததில் ஏறினான். கடற்கரை வழியாகப் பயணம் செய்து தாயின் அருகை அடைந்தான்.

குறும்பன் லெம்மின்கைனனைச் சில காலம் கைவிடுவோம். தியேராவை அவனுடைய வீடு நோக்கிச் செல்ல விடுவோம். இந்தக் கதையை இன்னொரு பாதைக்குத் திருப்புவோம்.
     அட்டவணை    மேலே
31. குலப்பகையும் அடிமைவாழ்வும்

அந்த நாட்களில் ஒரு தாய் இருந்தாள். அவள் ஒரு கூட்டம் கோழிக் குஞ்சுகளை வளர்த்தாள். அந்தக் கோழிக் குஞ்சுகளை வேலியில் வைத்தாள். அவள் ஒரு கூட்டம் அன்னங்களை வளர்த்தாள். அன்னங்களை ஆற்றுக்குக் கொண்டு போனாள். அங்கே வந்த ஒரு கழுகு அவற்றைப் பற்றிக் கொண்டது. கருடன் அவற்றைச் சிதறச் செய்தது. ஒன்றைக் கரேலியா என்ற இடத்துக்குக் கொண்டு போனது. இன்னொன்றை ரஷ்யாவுக்குக் கொண்டு போனது. மூன்றாமதை வீட்டிலேயே விட்டுவிட்டது.

ரஷ்யாவுக்குச் சென்ற பிள்ளை ஒரு வர்த்தகனாக வளர்ந்தது. கரேலியாவுக்குப் போனவன் கலர்வோ என்ற பெயாில் விளங்கினான். வீட்டிலிருந்த உந்தமோ என்பவன் தந்தையின் கேட்டுக்கும் தாயின் துயருக்கும் காரணமானான்.

கலர்வோவுக்குச் சொந்தமான நீர்ப் பரப்பில் உந்தமோ வலை விாித்தான். கலர்வோ வந்தான். வலையில் மீன்களைக் கண்டான். அவற்றை எடுத்துத் தன் பையிலே போட்டான்.

உந்தமோ வந்தான். உண்மையைக் கண்டான். உள்ளம் கொதித்தான். அவன் உடல்வலி மிக்கவன். விரல்களினால் ஒரு போரைத் தொடங்குவான். உள்ளங் கைகளால் ஒரு போரைக் கேட்பான். மீன் குடலுக்காகப் போருக்குப் போனான். பொாித்த மீனால் ஒரு போரும் எழுந்தது. இருவரும் செய்த இந்தப் போாில் எவருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. ஒருவன் கொடுத்ததைத் திரும்பவும் பெற்றான்.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்னர், உந்தமோவின் வீட்டுக்குப் பின்புறத்தில் கலர்வோ கொஞ்சம் தானியத்தை விதைத்தான். அது முளைத்து வளர்ந்தது. உந்தமோவின் முரட்டு ஆடு அந்த விளைச்சலைத் தின்று தீர்த்தது. கலர்வோவின் பயங்கர நாய் ஆட்டைக் கிழித்துப் போட்டது. உந்தமோ தனது சகோதரன் கலர்வோவைப் பயமுறுத்தினான். கலர்வோவின் இனத்தை அழிப்பதாயும், சிறிதாய்ப் பொிதாய் அடிப்பதாயும், வீடுகளைக் கொழுத்திச் சாம்பராக்குவதாயும் அச்சுறுத்தினான்.

உந்தமோ தனது ஆட்களைத் தயார் செய்தான். வீரர்கள் கைகளில் படைக்கலம் கொடுத்தான். மனிதாின் கைகளில் வாள்களைக் கொடுத்தான். சிறுவாின் பட்டியில் குத்தூசி வைத்தான். அழகிய தோள்களில் கோடாிகள் இருந்தன. தனது சகோதரனுடன் ஒரு பொிய போரைத் தொடுத்தான்.

கலர்வோவின் மருமகள் ஓர் அழகான பெண்மணி. அவள் யன்னல் பலகையில் அமர்ந்திருந்தாள். அவள், "அதென்ன அது? தூரத்தில், வயல் எல்லையில் என்னவோ புகை மாதிாிக் கரும் முகில் மாதிாித் தொிகிறதே!" என்றாள். ஆனால் அது புகையுமல்ல; புகாருமல்ல. உந்தமோவின் போர் வீரர்கள் போருக்கு வந்து கொண்டிருந்தனர்.

உந்தமோவின் வீரர்கள் கலர்வோவின் இனத்தை அழித்தனர். வீடுகளை எாித்துக் கொழுத்தினர். வயல்களைச் சிதைத்து வெற்று நிலமாக்கினர். கலர்வோவின் குடும்பத்தில் ஒருத்தி மட்டுமே தப்பினாள். அவளும் கர்ப்பமாயிருந்தாள். உந்தமோவின் ஆட்கள் தங்களுடைய வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக அவளைப் பிடித்துக் கொண்டு போனார்கள்.

மகிழ்ச்சியை இழந்த இந்த அபாக்கியவதிக்குச் சிறிது காலத்தில் ஒரு பையன் பிறந்தான். அவனுக்கு என்ன பெயர் வைக்கலாம்? தாய் அவனைக் குல்லர்வோ என்று அழைத்தாள். ஆனால் உந்தமோ 'போர் நாயகன்' என்று பெயர் வைத்தான்.

அந்த அனாதைக் குழந்தையை ஒரு தொட்டிலில் போட்டு ஆட்டினார்கள். இரண்டு நாட்களாக அவனும் ஆட அவனுடைய தலைமயிரும் அசைந்தது. மூன்றாம் நாள் தொட்டிலைத் தள்ளி உதைத்தான். சுற்றுத் துணியை அறுத்துப் போட்டான். மூடிய துணிகளை பிய்த்து எறிந்தான். தொட்டிலை உடைத்து நொருக்கினான். உடுத்த உடைகளை உதறிக் கிழித்தான்.

அவன் நல்லவன் ஆகும் சகுனம் தொிந்தது. வல்லவன் ஆவான் போலவும் இருந்தது. 'இந்தப் பையன் ஒரு நல்ல மனிதனாய், பலம் மிகுந்தவனாய், சிறந்த வீரனாய் வருவான். நூறு ஆயிரம் அடிமைகளுக்குச் சமமாக வேலை செய்வான்' என்று உந்தமோவும் எண்ணினான்.

குல்லர்வோ இரண்டு மூன்று மாதங்களில் முழங்கால் அளவு உயரத்துக்கு வளர்ந்தான். அப்பொழுது அவன் தனக்குத் தானே இப்படிச் சொல்லிக் கொள்வான்: "நான் பொியவனாயும் பலசாலியாயும் வளர்ந்தால், என் தந்தையின் துயருக்கும் தாய் விழிநீருக்கும் பதிலடி கொடுப்பேன்."

இந்த வார்த்தைகள் உந்தமோவின் செவிகளிலும் விழுந்தது. 'ஓகோ, இவனால் எனது இனம் அழிந்துவிடும். இவனிலிருந்து இவனுடைய தந்தை கலர்வோவின் வம்சம் பெருகிவிடும்' என்று உந்தமோ நினைத்தான். உந்தமோவின் நாட்டில் இருந்த மனிதரும் மாதரும், 'இந்தப் பையனால் வரக்கூடிய அழிவைத் தடுக்க இவனை எப்படிக் கொல்லலாம்' என்று சிந்திக்கலாயினர்.

பையனை ஒரு பீப்பாய்க்குள் அடைத்து அலைகளின் அடியில் போட்டுவிட்டனர். இரண்டு மூன்று இரவுகள் கழித்துப் 'பையன் நீாில் மூழ்கிப் போனானா அல்லது பீப்பாய்க் குள்ளேயே மாண்டு போனானா' என்று பார்க்கச் சென்றார்கள். அவன் அலைகளின் மேல் உட்கார்ந்திருந்தான். செப்புக் கோலில் பட்டு நூல் கட்டிய ஒரு தூண்டிலால் மீன் பிடித்துக் கொண்டிருந்தான்.

உந்தமோ அடிமைகளை அழைத்தான். குல்லர்வோவை எாிக்க மிலாறு மரங்களையும் வயிர மரங்களையும் தார் வடியும் நூறு ஊசியிலை மரங்களையும் ஒன்றாகச் சேர்க்கச் சொன்னான். ஆயிரம் சறுக்கு வண்டிகளில் மிலாறுப் பட்டைகளையும் நூறு கையளவு வேறு மரங்களையும் குவித்துக் கொழுத்தினார்கள். குல்லர்வோவை இந்த நெருப்பில் தள்ளிவிட்டார்கள். மூன்றாம் நாள் அவனைப் பார்க்கப் போனார்கள். குல்லர்வோ முழங்கால் அளவு சாம்பலில் நின்று கொண்டிருந்தான். முழங்கை வரையில் காித்துகள் இருந்தது. அவன் ஒற்றைத் தலைமயிரைக்கூட இழக்கவில்லை. கையில் இருந்த காிவாாியினால் காியை வாாி நெருப்பில் போட்டு எாித்துக் கொண்டிருந்தான்.

கடைசியாக, குல்லர்வோவைக் கொல்வதற்கு அவனை மரத்தில் தொங்கவிட வேண்டும் என்று முடிவு செய்தான் உந்தமோ. அப்படியே ஒரு சிந்தூர மரத்தில் அவனைத் தூக்கில் போட்டனர். பின்னர் அடிமை அவனைப் பார்க்கச் சென்றபோது அவன் உயிரோடுதான் இருந்தான். திரும்பி வந்த அடிமை, "குல்லர்வோ சாகவில்லை. அவன் ஒரு சித்திரம் செதுக்கும் கருவியால் மரங்களில் சித்திரம் செதுக்குகிறான். மரம் நிறையச் சித்திரங்கள். சித்திரங்களில் வாளுடன் மனிதர்கள். பக்கத்தில் ஈட்டிகள்" என்று சொன்னான்.

குல்லர்வோவைக் கொல்ல எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோல்வி கண்ட உந்தமோ களைத்துப் போனான். அதனால் அவனைத் தன் சொந்த மகனைப்போல வளர்க்கத் திட்டமிட்டான். "நீ ஒழுங்காய் அமைதியாய் இந்த வீட்டிலே தங்கி அடிமையாக வேலை செய்வதானால் இங்கேயே இருக்கலாம்" என்றான் உந்தமோ. "உனது ஊழியத்துக்கு ஓர் ஊதியம் பின்னர் தீர்மானிக்கப்படும். இடுப்புக்கு அழகான ஒரு பட்டியும் தரப்படும். அல்லது செவியில் ஓர் அறைதான் கிடைக்கும்."

குல்லர்ேவோ ஒரு சாண் அளவு வளர்ந்ததும் ஒரு குழந்தையை கவனிக்கும் வேலைக்கு அனுப்பப்பட்டான். குழந்தையைக் கவனித்து உணவு கொடுத்துக் குழந்தையின் ஆடைகளை அருவியில் கழுவுவதுதான் அவனுடைய வேலை.

குல்லர்வோ குழந்தையை ஒரு நாள் பார்த்தான். இரண்டு நாட்களுக்குப் பின்னர், குழந்தையின் கையை ஒடித்துக் கண்களையும் தோண்டினான். மூன்றாம் நாள் குழந்தையைக் கொன்று, அதன் துணிகளை அருவியில் எறிந்து தொட்டிலையும் எாித்துவிட்டான்.

"குழந்தையைக் கவனிக்கும் வேலை இவனுக்குச் சாிவராது. இவனுக்கு வேறென்ன வேலை கொடுக்கலாம்? காட்டை வெட்டி அழிக்கச் சொல்லவா?" என்றான் உந்தமோ.

இந்தச் சொற்களைக் கேட்ட கலர்வோவின் மகனான குல்லர்வோ, "எனது கையில் ஒரு கோடாி கிடைத்துவிட்டால், நான் ஒரு மனிதனாகிவிடுவேன். பார்வைக்கும் அழகானவன் ஆகி, ஐந்தாறு வீரர்களுக்குச் சமமாகிவிடுவேன்" என்று சொன்னான்.

அவனுக்குத் தோதான ஒரு கோடாியைக் கொல்லன் அடித்துக் கொடுத்தான். குல்லர்வோ பகலில் அந்தக் கோடாியைத் தீட்டியெடுத்தான். இரவில் அதற்குப் பிடி செதுக்கினான். அடுத்த நாள் புறப்பட்டு மரங்கள் நிறைந்த காட்டுக்குப் போனான். கோடாி அலகால் ஒரு மரத்தை வீழ்த்தினான். ஒரே அறையில் பல மரங்களை விழுத்தலாம் என்றும் இளைத்த மரங்களைப் பாதி அறையில் விழுத்தலாம் என்றும் நினைத்தான்.

ஐந்து மரங்களை வெட்டிய பின்னர், எட்டு மரங்களை வீழ்த்திய பின்னர், "இந்த வேலையைப் பிசாசு வந்து செய்யட்டும்" என்று சொல்லிவிட்டு, ஒரு மரக் குற்றியில் ஏறிநின்று சீழ்க்கை அடித்து இப்படிச் சொன்னான்: "எனது குரல் கேட்கும் தூரம் வரையிலும், எனது சீழ்க்கையொலி எட்டும் எல்லை வரையிலும் நிற்கும் அத்தனை மிலாறுவும் மற்றும் மரங்களும் வீழட்டும். இந்தக் கல்லர்வோ மைந்தனின் காடுகளில், திங்களின் வெண்ணிலவு திகழும்வரை புல் பூண்டு பற்றை எதுவும் முளைக்கக் கூடாது. அப்படி ஏதாவது விதையோ முளையோ தண்டோ வௌிவர வேண்டுமாயின், கதிர் இல்லாமலே வரட்டும்."

வெட்டியழித்த காட்டைப் பார்வையிட வலியவன் உந்தமோ வலமாக வந்தான். காட்டில் குல்லர்வோ செய்த வேலையாக எதுவும் தொியவில்லை. "ஊகூம்! இந்த வேலைக்கு இவன் உகந்தவன் அல்லன். நல்ல மரங்களை எல்லாம் நாசமாக்கிவிட்டான். இவனை வேலி கட்ட அனுப்பலாம்" என்று சொன்னான்.

குல்லர்வோ வேலி கட்டத் தொடங்கினான். உயர்ந்த ஊசியிலை மரங்களைத் தறித்துத் தூண்களாக நிறுத்தினான். முழுத் தேவதாரு மரங்களைச் சாித்து இடைமரமாக்கினான். ஒரு வாயில் வைக்காமலே வேலியைக் கட்டி முடித்தான். "இரண்டு சிறகுகளில் பறக்கும் பறவையல்லாமல் வேறு எவரும் கல்லர்வோ மைந்தன் கட்டிய இந்த வேலியைக் கடக்க முடியாது" என்று சொன்னான்.

கடைசி முயற்சியாக, உந்தமோ அவனைத் தானியக் கதிர் அடிக்க அனுப்பினான். குல்லர்வோ தானியமும் வைக்கோலும் துகளாகிப் பொடியாகும் வரைக்கும் அடித்தான்.

"இவனைக் கொண்டு எந்த வேலையையும் செய்விக்க முடியாது. இவனை ரஷ்யாவுக்கு அனுப்பிவிடலாம். அல்லது கரேலியாவில் சம்மட்டி வேலை செய்யக் கொல்லன் இல்மாினனுக்கு விற்றுவிடலாம்" என்று சொன்னான் உந்தமோ.

இப்படியாகக் கல்லர்வோவின் மைந்தனான குல்லர்வோவை இல்மாினனுக்கு விற்றுவிட்டு, அவனுக்குப் பதிலாக இரண்டு ஓட்டைச் சட்டிகள் மூன்று பாதிக் கொளுவிகள் ஐந்து பழைய அாிவாள்கள் மற்றும் ஆறு தேய்ந்த வாாிகளைப் பெற்றுக்கொண்டான் உந்தமோ.
     அட்டவணை    மேலே
32. குல்லர்வோவும் இல்மாினனின் மனைவியும்

குல்லர்வோ என்னும் கல்லர்வோவின் மைந்தன் இப்பொழுது இல்மாினனின் வீட்டில் இருந்தான். மஞ்சள் தலைமயிருடன் அழகாகக் காணப்பட்ட அவன், தோலில் காலணிகளையும் நீல நிறக் காலுறையும் அணிந்திருந்தான். அவன் மாலையில் வீட்டுத் தலைவனிடமும் காலையில் வீட்டுத் தலைவியிடமும் தனது வேலைகளைப்பற்றி இப்படிக் கேட்டான்: "நான் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்று சொல்லுங்கள்!"

வடநாட்டுத் தலைவி லொவ்ஹியின் மகளான இல்மாினனின் மனைவி புதிய அடிமைக்கு என்ன வேலை கொடுக்கலாம் என்று சிந்தித்தாள். கடைசியில் அவனைக் கால்நடை மேய்ப்பவன் ஆக்கினாள்.

பின்னர் அந்தக் கொல்லனின் மனைவியான கேலிக் குணமுடைய அந்தக் கொடியவள், கால்நடை மேய்ப்பவனுக்கு ஒரு ரொட்டி சுட்டாள். அந்த ரொட்டிக்கு மேற்புறத்தைக் கம்பாிசியாலும் கீழ்ப் புறத்தைக் கோதுமையாலும் செய்து நடுவில் ஒரு கல்லை வைத்துத் தடிமனாகச் சுட்டாள். அவள் ரொட்டிக்கு வெண்ணெய் பூசி, அதை அன்றைய உணவென அடிமையிடம் கொடுத்து, மேலும் இப்படிச் சொன்னாள்: "காட்டுக்குள் மந்தை போய்ச் சேரும்வரை நீ இதனைச் சாப்பிடக் கூடாது!"

இல்மாினனின் மனைவி மந்தையைப் புல்வௌிக்கு அனுப்பிய பின்னர் மந்தையின் பழைய மந்திரத்தை இவ்வாறு சொன்னாள்: "பால் தரும் பசுக்களைப் புல்வௌிக்கு அனுப்புகிறேன். அகன்ற கொம்புகள் கொண்டவற்றை அரச மரங்களுக்கு அனுப்புகிறேன். கோணிய கொம்புகள் கொண்டவற்றை மிலாறு மரங்களுக்கு அனுப்புகிறேன். திறந்த புல் வௌிகளிலும் அகன்ற பசும் சோலைகளிலும் உயர்ந்த மிலாறுக் காடுகளிலும் தாழ்ந்த அரசம் அடவிகளிலும் பொன்போன்ற ஊசியிலைத் தோப்புகளிலும் வெள்ளியாய் விளங்கும் வனங்களிலும் மந்தை நிறையக் கொழுப்பைப் பெறட்டும். மாட்டு நிணத்தைப் பெற்று மீண்டும் வரட்டும்!

"நிலையான கர்த்தரே, நீர் அவற்றைக் காத்தருளும்! அவற்றுக்கு எந்த அல்லலும் வராதிருக்கட்டும்! அவை அங்குமிங்கும் சிதறி அலையாது இருக்கட்டும்! மந்தை மேய்ப்பவன் மந்தனாய்ப் போனால், அலாிச் செடியோ பூர்ச்ச மரமோ போிச் செடியோ சிறுபழச் செடியோ மேய்ப்பனாய் மாறி மந்தையை வழிநடத்தட்டும்! அதனால் தலைவி மந்தையைத் தேடாது இருப்பாள்.

"அலாியும் பூர்ச்சமும் அடுத்த செடிகளும் மேய்ப்பனாய் மாறி மந்தையைப் பாதுகாக்காது போனால், இயற்கையின் மகளிரை இங்கே அனுப்பும்! படைப்பின் செல்விகாள், மந்தையைக் காக்க உங்களை அழைக்கிறேன்!"

இல்மாினனின் மனைவி இவ்வாறு கோடையின் சக்தியை, தென்காற்று மங்கையை, பசும் மரப் பாவையை, சூரையின் சக்தியை, போியின் மகளிரை, சிறுபழச்செடியின் அரசியை - என்று எல்லா இயற்கை மகளிரையும் விளித்து மந்திரப் பாடல்களைப் பாடினாள்:

"கோடையின் சக்தியே, தென்காற்று மங்கையே, உமது நல்லாடை மேலாடை அனைத்தையும் பரப்பி எனது பசுக்களுக்கு ஒரு கூரை அமையுங்கள்! அவற்றைக் கொடிய காற்றுத் தொடாது இருக்கட்டும்! கோப மழை அவற்றில் படாது இருக்கட்டும்! அசையும் சதுப்பு நிலங்களிலிருந்தும் ஆடும் சேற்றுக் குளங்களில் இருந்தும் அல்லல் வராமல் அவற்றைக் காப்பாற்றுங்கள்! தேன் போல இசைக்கும் குழலைச் சுவர்க்கத்திலிருந்து கொண்டு வாருங்கள்! மலர்கள் மிளிரும் மலைகளுக்கும் மேடுகளுக்கும் கேட்கும்படி பலமாகக் குழலை ஊதுங்கள்! வயல்வௌிகள் இனிமை பெறட்டும்! பசும் சோலைகள் மென்மையுறட்டும்! சேற்றுக் கரைகளில் தேன் உருகட்டும்! அருவிச் சேறு உருண்டோடட்டும்!

"எனது கால்நடைக்குத் தேன் கலந்த உணவை உண்ணக் கொடுங்கள்! தேன் மிகுந்த பானத்தை அருந்தக் கொடுங்கள்! பொன் போன்ற புற்களையும் வெள்ளிப் புற்றாள்களையும் உண்ணக் கொடுங்கள்! பெருகும் அருவியிலும் இரையும் நீர்வீழ்ச்சியிலும் நீரை அருந்த விடுங்கள்!

"புல்வௌி மத்தியில் பொற்கிணறு வெட்டுங்கள்! அந்தத் தேன்போன்ற நீரைக் குடிக்கும் பசுக்களின் பருத்த மதமதத்த பால்மடிகளிலிருந்து பால் சொட்டட்டும்! பாலாறு பெருகிப் பாயட்டும். பாலை மரண உலகுக்கு அனுப்ப எண்ணும் தீயவாின் தீய நினைவுகள் ஓயட்டும்!"

வடநாட்டின் மந்திரப் பாடல்களில் தேர்ச்சி பெற்றவளான இல்மாினனின் மனைவி அடுத்து வன சக்திகளை அழைத்துப் பாடினாள்.

"மியலிக்கியே, வன அரசனின் தயாளமான கை படைத்த மனைவியே, உனது பெண்களில் உயர்ந்தவள் ஒருத்தியை எனது மந்தையைக் காக்க அனுப்பு! தெல்லர்வோவே, காட்டரசன் தப்பியோவின் மகளே, மஞ்சள் கூந்தலில் மனோகரம் பெற்றவளே, வனத்தின் படைப்புகளைப் பாதுகாப்பவளே, எனது கால்நடையையும் காத்தருள்வாயே! உனது அழகிய விரல்களால் அவற்றைத் தடவு! உனது தடவுதலால் சிவிங்கியின் தோலின் சிறப்பைப் பெறட்டும்! மீனின் சிறகுபோலச் சீரைப் பெறட்டும்! கடற்கன்னியின் கூந்தல்போல மென்மையுறட்டும்! கம்பளி ஊரோமத்தின் கவினையுறட்டும்! மந்தையை மங்கிய மாலையில் நல்ல தலைவியின் வீட்டுக்கு அனுப்பு! முதுகில் நீர்ப்பையும் மடியில் பால்க் குளமும் அசைந்தே வரட்டும்!

"கதிரவன் ஓய்வு பெற்று ஒதுங்குகிற நேரத்தில், மாலைப் பறவைகள் இசைத்து மகிழும் நேரத்தில் எனது கால்நடைக்கு இவ்விதம் சொல்வீர்: 'வளைந்த கொம்புகளே வீட்டுக்குத் திரும்புங்கள்! காட்டுவௌிகளிலும் நீர்க்கரையோரங்களிலும் திாிவது தனிமையை உணர்த்தும். வீட்டுக்கு வந்து ஓய்வு பெறுங்கள்! வீட்டு பெண்கள் தேன்புல்லும் சிறுபழத் தண்டுகளும் நிறைந்த திடல்களில் தீயை மூட்டுவர்.'

"நுயீாிக்கியே, காட்டரசன் தப்பியோவின் மகனே, நீல உடை அணிந்த நெடுங்காட்டு மைந்தனே, சேற்று நிலத்தின்மேல் ஊசியிலை மரங்களையும் தேவதாருவின் கிளைகளையும் பரப்பி நிரப்பி ஒரு பாலம் அமைப்பீர்! எனது பசுக்கள் சேற்றில் அமிழ்ந்து போகாமல் பாதுகாப்பாகப் புகைக்கும் இடங்களுக்கு வந்து சேரட்டும்!"

பின்னர் இல்மாினனின் மனைவி பசுக்களைக் கரடிகள் தாக்காமல் இருப்பதற்காக மந்திரம் செபிக்கிறாள்.

"அன்புக் கரடியே, ஆப்பிள் பழமே, தேன் பாதமே, வளைந்த முதுகே, இப்பொழுது நாங்கள் ஓர் உடன்படிக்கை செய்யலாம். இந்தப் பெரும் கோடை காலத்தில் பாலைச் சுமந்து வரும் பிளவுபட்ட குளம்புள்ள பசுக்களுக்கு நீ கெடுதி செய்யமாட்டாய்! பசுக்களின் மணி யோசை கேட்கும்போது, பசுக்களின் குழலோசை கேட்கும்போது புற்றரையில் படுத்துக் காதுகளை நிலத்தில் அழுத்தி நித்திரை செய்வாய்! அல்லது பசுக்களின் மணியும் மேய்ப்பனின் குரலும் உனக்குக் கேட்காத தூரத்து மலைகளுக்குப் போய்விடுவாய்!

"உனக்குக் கோபம் வருமாயின், புதாிலே உனது கோபத்தைக் காட்டு! ஊசியிலை மரத்தில் உனது வேகத்தைக் காட்டு! உழுத்த மரங்களைக் கடித்து உதறு! மிலாறுக் கட்டைகளைத் திருப்பிப் போடு! சிறுபழப் புதர்களைப் புரட்டிப் போடு!

"கடும்பசி வந்தால் காட்டுக் காளான்களைக் கடித்து உண்பாய்! எறும்புப் புற்றை அடித்து உடைப்பாய்! நிலத்தைக் கிண்டிச் சிவப்புக் கிழங்குகளைத் தோண்டி எடுப்பாய்! காட்டில் தேன்சுவை உணவைத் தேடிப் பெறுவாய்! ஆனால் எனது கால்நடை உணவான புல்லுணவைத் தவிர்த்து விடுவாய்!

"மனுக்குல முதல்வனே, மாபெரும் தெய்வமே, கரடி வரும் ஓசை காதில் விழுந்தால், எனது பசுக்களைக் கற்களாய்க் கட்டைகளாய் மாற்றி அமைப்பீர்!

"நான்மட்டும் ஒரு கரடியாய் இருந்தால், இங்கே முதிய பெண்களின் காலடிகளைச் சுற்றிப் பொழுதைக் கழியேன். நீல நிறத்து நெடுங்காட்டுள்ளே பொழுதைக் கழிப்பேன்."

முடிவில், இல்மாினனின் மனைவி காட்டரசனையும் கடவுளையும் வேண்டுகிறாள்.

"தப்பியோவே, காட்டரசனே, நரைத்த தாடியுடைய நல்வனத் தலைவனே, உமது நாய்களைத் தூரத்தில் நிறுத்தும்! அவற்றின் ஒற்றை நாசிகளைக் காளான்களாலும் மற்ற நாசிகளை ஆப்பிள்களாலும் அடைத்து வைப்பீர்! அப்படியானால் மந்தையின் மணம் எதுவும் அவைகளை எட்டாது. பட்டுத் துணியால் கண்களைக் கட்டிச் சுற்றுத் துணியால் செவிகளைச் சுற்றும்! இதுவும் இன்னமும் போதாது என்றால், உமது படைப்புகளை புல்வௌிகளிலில் இருந்து, காடுகளில் இருந்து, கரைகளில் இருந்து வெகு தூரத்துக்கு வழிநடத்திச் செல்வீர்!

"மனுக்குல முதல்வனே, தங்க மாமன்னனே, போித் தண்டில் வளையங்கள் செய்து, காட்டு விலங்குகளின் வாய்களைக் கட்டும்! போியின் கட்டுக்கு அடங்காது இருந்தால், செப்பிலே இரும்பிலே பொன்னிலே வளையங்கள் செய்து வாய்களைக் கட்டும்!"

இப்படியாகப் பல மந்திரங்களைச் செபித்த பின்னர், குல்லர்வோ என்னும் இடையனுடன் கால்நடையைக் தொழுவத்திலிருந்து அனுப்பினாள் இல்மாினனின் மனைவி.

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.