LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ஆதவன்

கால்வலி

 

மணி ஆறேகால். சித்ராவை இன்னும் காணோம். கணேஷ் பொறுமை இழந்து கொண்டிருந்தான். அவனுக்குக் காலை வேறு வலித்தது. உட்கார வேண்டும் போலிருந்தது.
வேறு ஏதாவது சினிமாத் தியேட்டருக்கு அவர்கள் – சித்ராவும் அவள் தம்பியும் – போய் நின்றிருக்க மாட்டார்களே? ரிவோலி தியேட்டர் என்று நேற்று நான் தெளிவாகச் சொன்னேனா என்று அவன் நினைவுபடுத்திப் பார்த்தான். ஆம்; சொன்னான். நினைவிருக்கிறது. சித்ரா பார்க்க விரும்பியதும் இந்தப் படத்தைத்தான். ஒரு வாரத்திற்கு முன்பு இதைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டபோது, பிளாஸாவில் ஓடிக்கொண்டிருந்த – ஆப்பிரிக்கக் காடுகளி லுள்ள வெவ்வேறு மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பழக்க வழக்கங்களைத் தத்ரூபமாகச் சித்தரிக்கிற – ஒரு படத்தைப் பார்க்கலாமென்று அவன் முதலில் யோசனை கூறியது உண்மைதான். ஆனால் சித்ரா அந்தப் படத்தை விட ரிவோலி படத்தைத்தான் பார்க்க விரும்புவதாகக் கூறி விட்டாள். இதுவும் நல்ல படம்தான். வெளிநாட்டுப் படம்தான். இது மனிதரைப் பற்றியது. மணமான ஆண் மனைவியைத் தவிர இன்னொரு பெண்னை நேசிக்கத் தொடங்கும்போது எழும் பிரச்னைகளைப் பற்றியது.-
ஆண், பெண், நேசம்!
கணேஷ் தன்னையுமறியாமல், ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டான். மறுபடி கண்களைத் திறந்தான். எடைகாட்டும் யந்திரத்தின் அருகில் அந்தச் சிவப்புப் புடவைக்காரி இன்னமும் நின்றிருந்தாள். அவனைப் போல அவளும் யாருக்காகவோ காத்திருக்கிறாள் போலும். அவ்வப்போது அவன் பார்வை அவள் பக்கம் இழுபட்டது. போல, அவள் பார்வையும் அவன் திசையில் பளிச் பளிச்சென்று ஒரு கணம், அரைக்கணம் நிலைத்து நகர்ந்தது. பரிச்சயமில்லாததால், நாங்களிருவரும் இந்தப் பார்வையின் மூலம் ஓராயிரம் இனிய கற்பனைகளை உருவாக்கிக் கொள்ள முடிகிறது என்று அவன் நினைத்தான். என்னைப் பற்றிய அவள் கற்பனை; அவளைப் பற்றிய என் கற்பனை – மாலை வெய்யிலில் நடைபாதையிலிருந்து தியேட்டர் வாசல் வரை விரித்திருந்த ஒரு ஒளிப்பாய் மீது அவள் நின்றிருந்தாள். வெய்யிலின் ஒளியில் மினுமினுத்த அவளுடைய புடவையும் கைப்பையும், சிலும்பி நின்ற அவளுடைய தலை மயிர்; எடை யந்திரத்தின் மேல் விழுந்திருந்த அவளுடைய நிழல்; அவ்வப்போது அவள் தன் கைக்கடிகாரத்தைக் கவனித்த விதம், மேலும் கீழுமாகப் பார்வையை அலைய விட்ட விதம் – எல்லாமே ஒரு விசே ஷ அழகு பொருந்தியதாக அவனுக்குத் தோன்றின. அரூபமாக அவனுள் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்மையின் அம்சங்கள் – இனி தன்னால் எடுக்கவோ கோர்க்கவோ முடியாதென அவன் கைவிட்டு விட்டிருந்தவை – திடீரென ரூபம் கொண்டது போலிருந்தது, முழுமை பெற்றது போலிருந்தது. இவள்தான், ஆம் இவள்தான். இவளைத்தான் அவன் தேடிக் கொண்டிருந்தான். அப்பாடா! கடைசியில், ஆனால்-
அவனுக்கு திடீரென சோர்வும் துக்கமும் உண்டாயிற்று. இப்போது இவளைப் பார்த்து என்ன பிரயோஜனம்! இரண்டு வருடங்கள் முன்பு, ஒரு வருடம் முன்பு, அல்லது குறைந்தபட்சம் ஒரு மாதம் முன்பு, அப்போது சித்ராவை மணப்பது நிச்சயமாகியிருக்கவில்லை. அப்போது அவன் சுதந்திர மானவனாயிருந்தான். ஆனால் இனிமேல் இல்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு நிச்சயமாக இல்லை. அவனுக்கும் சித்ராவுக்கும் திருமணம் நடக்கப்போகிறது, அடுத்த வாரம்.
எல்லா நிலைகளையுமே ஒருவன் சேர்ந்தாற்போல அனுபவிப்பதும்தான் எப்படி சாத்தியமாகும்? இவ்வளவு நாட்கள் அவன் கல்யாணம் செய்து கொள்வதை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தான். எந்தவிதமான முடிவுக்கும் வராமலிருந்தான். பிறகு திடீரென்று ஒரு மாதம் முன்பு முடிவு செய்தான் சித்ராவை மணப்பதாக. இது அவசரமான முடிவாயிருக்கலாம். சூழ்நிலைகள் அவன் மேல் திணித்ததா யிருக்கலாம். எப்படியோ, இது ஒரு முடிவு. ஒரு ஆரம்பம். நிச்சயமற்ற நிலையிலிருந்து விடுபடுவதற்காக (அதற்கு மாற்றாக) அவன் வலிந்து ஏற்றுக் கொள்ளும் ஒரு நிச்சயம், ஒரு ஸ்திரமான ஏற்பாடு. எல்லா ஏற்பாடுகளையும் போல இந்த ஏற்பாட்டிலும் சில சௌகரியங்கள் இருக்கின்றன. சில சங்கடங்களும் இருக்கின்றன. ஏற்பாடுகளை-தன்னுடன் தானே செய்து கொள்ளும் சமரச உடன்படிக்கைகளை- தீவிரமாக எதிர்த்து வந்திருப்பவனான அவன், இதோ, இன்னொரு ஏற்பாட்டில் சிக்கிக்கொள்ளப் போகிறான். பத்தோடு பதினொன்று…..
பத்தோடு பதினொன்றா? ஆமாமுந்தான். இல்லையும்தான். தன் வாழ்க்கையின் பல ஏற்பாடுகளுடன் இதையும் ஒன்றாக ஏற்றுக்கொண்டால் இது பத்தாவதாகவோ பதினொன்றாவ தாகவோ இருக்கலாம். ஆனால் உண்மையில் இது மற்ற எந்த ஏற்பாட்டையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததல்லவா? அவனை மிக அதிகமாக பாதிக்கப் போகும் ஒன்றல்லவா? மேலும் இந்த ஏற்பாட்டின் விசேஷமே (அல்லது துர்ப்பாக்கியமே) இதில் பத்து அல்லது பதினொன்றுக்கு வழியில்லை என்பதுதான். அவன் வாழும் சமூகத்தில், இவ்வகை ஏற்பாட்டில் ஒன்றே ஒன்றுதான் ஒருவனுக்கு ஒரு சமயத்தில் அனுமதிக்கப்படுகிறது. இதே ஏற்பாடு வெற்றிகரமாக அமையலாம். அமையாமலும் போகலாம்- அறிவு வளர்ச்சிக்காகப் பள்ளிக்கூடத்துக்கும் கல்லூரிக்கும் செல்லுதல், வயிற்றுப்பாட்டுக்காக ஏதாவது ஒரு ஸ்தாபனத்தில் குறிப்பிட்ட ஒரு வேலையை தினசரி செய்து கொண்டிருத்தல், சிற்றுண்டிக்கும், சாப்பாட்டுக்கும் ஹோட்டல் காரரையும், ரஞ்சகத்திற்கு ரேடியோவையும் சினிமா தியேட்டரையும் வாரப் பத்திரிகைகளையும், போக்குவரத்துத் தேவைகளுக்காக அரசாங்கப் போக்குவரத்தையும் நம்பி யிருத்தல் முதலிய ஏற்பாடுகளில், அந்த ஏற்பாட்டில் நமக்கு அசிரத்தையோ அவநம்பிக்கையோ ஏற்படும் போது அதனுடன் நமக்கு உள்ள சம்பந்தத்தைத் துண்டித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. திருமணம் என்ற ஏற்பாட்டில் இத்தகைய வாய்ப்பு இல்லை. சட்டப்பூர்வமாக இருக்கலாம். சமூகப்பூர்வமாகக் கூட இருக்கலாம். ஆனால் அவன் ரத்தத்தில் ஊறியிருந்த சம்பிரதாய பூர்வமாக இல்லை. சம்பிரதாயங்கள் மீறப்படக் கூடாதவை என்பதல்ல. ஆனால் இந்த மீறல் எந்த அளவு அவனைக் காயப்படுத்தும் அல்லது காயப் படுத்தாமலிருக்கும் என்பதே பிரச்னை. அவன் வளர்ந்த சம்பிரதாயம், சூழ்நிலை ஆகியவற்றின் பல அம்சங்களை அறிவு பூர்வமாக அவன் வெறுத்து வந்தாலும், உணர்ச்சி பூர்வமாக அவன் அவற்றுடன்-அவனையுமறியாமல்- சம்பந்தப்பட்டிருக்கலாம். வளரும் குழந்தைகள் தம் தாய்க்கெதிராக வெளிப்படுத்தும் அதிருப்தியும் வெறுப்பும் பல சமயங்களில் தாயின் அரவணைப்புக்கான அவர்களுடைய ஏக்கம், பாதுகாப்பற்ற உணர்ச்சி முதலியவற்றை வித்தாகக் கொண்டிருப்பதைப் போல், அவனுடைய வெறுப்பு உண்மையில் அவனுடைய பிரியத்திலிருந்து எழுந்ததாக இல்லாமலிராதென்பது என்ன நிச்சயம்?
ஆம். உணர்ச்சி வேர்கள் அறிவு வேர்களை விடத் தொன்மையானவை, ஆழமானவை. உணர்ச்சிதான் உரைகல். உணர்ச்சிதான் வழிகாட்டி.
ஆனால் உணர்ச்சிகள் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவை. வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு திசைகளில் பாயும் தன்னுடைய பிரியத்தையும் சரி, வெறுப்பையும் சரி, அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிரியத்தை வெறுப்பாகவும் வெறுப்பைப் பிரியமாகவும் தப்பர்த்தம் செய்து கொள்கிறோமோ என்று கூடச் சில சமயங்களில் தோன்றிற்று. தன்னுடைய உணர்ச்சிகளை இப்படியென்றால் பிறருடைய உணர்ச்சிகளைப் பற்றி என்ன சொல்வது? அவன் மீது பிரியமும் அக்கறையும் உள்ளவர்கள் என் அவன் நினைத்திருந்தவர்கள் பலர் ஒருவர் பின் ஒருவராக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவனை வஞ்சித்தார்கள். அவர்களுடன் அவன் வீணடித்த பல தருணங்களுக்காக அவனைப் பச்சாதாபப்பட வைத்தார்கள். பிற்பாடு பரிசுத்தமான அன்பைக் கூடப் பரிசீலனைக் குள்ளாக்கும் கோழையாக அவன் மாறினதற்கு அஸ்திவார மிட்டார்கள். இந்தப் பிந்தைய கட்டத்துக்கு முந்தின கட்டங்களும் தைரியமுள்ளவையாக இருக்கவில்லைதான். கூச்சம், தயக்கம், தன்னம்பிக்கையின்மை. கல்லூரியில் அவனுக்காகச் சிரித்தவளின், நடந்தவளின், சமிக்ஞைகளைச் சாத்தியக் கூறுகளாகவும், சாத்தியக் கூறுகளை நிச்சயங்களாகவும் மாற்ற இயலாத தன்னம்பிக்கையின்மை. அவன் வேலை பார்த்த தினசரியில் அவன் மனதை மிகவும் கவர்ந்த ஒருத்தியிடம் தன் நேசத்தை வெளிப்படுத்த இயலாமல் தடுத்த கூச்சம், வீறாப்பு. ஒரு நாள் மாலை இந்தக் கூச்சத்தை அவள் தணிக்க முயன்றபோது, அவனுடைய ஆசையின் வேகமும் புரிந்து கொள்ள முடியாமல், தணிந்து போயிற்று. ஒரே மாலை! தன்னிடம் அவனுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது போலிருந்தது. ஒவ்வொரு பளிச்சிடும் பார்வையின் ஓரத்திலும் ஒரு பெரும் சூழ்ச்சியின் வித்து; ஒவ்வொரு வெடிக்கும் சிரிப்பின் விளிம்பிலும் ஓராயிரம் வெடிக்காமல் (சாதுரியமாக) அமுக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சி கள், குரோதங்கள், துவேஷங்கள்.
இனி எந்தப் பெண்ணையுமே அவன் ஆழ்ந்து நேசிக்க முடியாது போலிருந்தது. இனி எவளும் இதமான நிரந்தரமான பிணைப்பு ஏற்படுத்திக் கொள்ளத் தூண்டும் கற்பனைகளை அவனில் உருவாக்க முடியாது போலிருந்தது. கற்பனைகளற்ற சூன்யத்தின் தகிப்பு அவனுடைய மாலை நேரங்களையும் இரவுகளையும் பயங்கரமானதாகச் செய்தது. பகல் நேரங்களில் ஒரு மௌடிகமான – வரவழைத்துக் கொள்ளப் பட்ட — வெறியுடனும் ஆர்வத்துடனும் அவனைத் தன் வேலையில் ஈடுபடச் செய்த. அந்தத் தினசரியில் வேலை பார்த்த ஸப் எடிட்டர்கள் எல்லாரிலும் அவன்தான் மிகவும் கெட்டிக்காரனாகக் கருதப்பட்டான். சீஃப் ஸப் அதிகமான ‘காபி’களை அவனுக்குத்தான் “மார்க்” செய்தார். செய்திகளைப் பிரசுரத்துக்கேற்ற முறையில் வெட்டுவதிலும் திருத்துவதிலும் பொரத்தமான தலைப்புகள் அளிப்பதிலும் ஒரு யந்திரத்தின் ஒழுங்கையும் லாவகத்தையும் அவன் பெற்றிருந்தான். அந்த யந்திரம் போன்ற இயக்கத்தில் அவன் தன்னைத்தானே இழக்க விரும்பியது போலிருந்தது, மறக்க விரும்பியது போலிருந்தது. இது சீஃப் ஸப்புக்கும் சரி, நியூஸ் ரூமிலிருந்த மற்றவர்களுக்கும் சரி, சௌகரியமாகவே இருந்தது. எந்த இடத்திலும் வேலை செய்வதைத் தவிர்க்க விரும்புபவர்களே பெரும்பாலும் அதிகம் இருப்பதால், வேலையை வரவேற்கும் ஒரு பிரகிருதி இந்தப் பெரும்பான்மையோரின் மீட்சிக்கு உதவுகிறான். அவர் களுடைய நன்றிக்குப் பாத்திரமாகிறான். கிரைம் ஸ்டோரியா? கணேஷ். விமான விபத்தா? கணேஷ். கோதுமை உற்பத்தி, எஃகு ஏற்றுமதி போன்ற புள்ளி விவரங்கள் நிறைந்த-கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு பார்க்க வேண்டிய சமாசாரம்?
கணேஷ், கணேஷ், கணேஷ்.
அவர்கள் பார்த்த கணேஷ் பிசிரில்லா, மனித தாகங்கள், பலவீனங்கள் யாவும் இற்றுப்போன, ஒரு யந்திரம். தன்னைப் பற்றிய அவர்களுடைய இந்த உருவத்தில் தன்னை ஒளித்துக் கொள்வது அவனுக்கும் இதமாகவும் பாதுகாப்பாகவும் தான் இருந்தது. உள்நாட்டு விவகாரங்கள், உலகெங்கிலுமுள்ள மிகமிகப் பெரிய புள்ளிகளைப் பற்றிய செய்திகள், எல்லாவற்றையும் “எடிட்” செய்யும் உரிமை பெற்றிருந்தவனான தான், பெரும் வல்லரச்சுத் தலைவர்களை விடவும் பலம் பொருந்தியவனென்ற மயக்கமும் அவனுக்கு அவ்வப்போது ஏற்படுவதுண்டு. ஆனால் தன்னிடமிருந்தே ஒருவன் ஒளிந்து கொள்வது எந்த அளவுக்குச் சாத்தியமானது? அவனைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த கிட்டத்தட்ட அவனுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் போல் தோன்றிய இளம் ஸப் எடிட்டர்கள், அந்தக் குழுவிலிருந்த பெண்பாலருடன், அரட்டைகளிலும், சீண்டல்களிலும் சல்லாபங்களிலும் அவ்வப்போது ஈடுபடு வார்கள்.அவன் மட்டும் முப்பது வயதிலேயே ஐம்பது வயசுக்குரிய அசிரத்தையுடனும் விலகிய போக்குடனும் அமர்ந்திருப்பான். அந்த இளைஞர்கள், வெகுளித்தன மாகவோ விஷமமாகவோ அவனைக் கணிக்க முற்பட்டார்கள். சாமியார், வேதாந்தின், பெண் வெறுப்பன். அவன் தனக்குள் அமுக்கி அமுக்கி வைத்துக் கொண்டிருந்த எது எதுவோ இத்தகைய தருணங்களில் உசுப்பப்படும். இந்த உசுப்புக்கு வடிகால் இல்லாமல் அவன் திணறுவான். முன்பு அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயன்றபோதும் பிறர் இந்த வெளிப்பாடுகளை அவமதித்து அவனைக் காயப்படுத்தினார்கள்; இப்போது, அவன் தன்னை ஒடுக்கிக் கொள்ள முயலும் போதும் ஏனோ இவர்கள் காயப்படுத்துகிறார்கள் என்று குமுறுவான்.
பிறகுதான் அவன் மாலை நேர டியூட்டிக்கு தன்னை மாற்றிக் கொண்டான். இளைஞர்கள்-குறிப்பாகப் பெண்கள்- இந்த டியூட்டிக்கு வர விரும்புவதில்லை. திருமண வாழ்க்கையில் சலிப்புற்ற சம்சாரிகள், அவனைப் போன்ற இறுகிப் போன பிரம்மச்சாரிகள் ஆகியோர்தான் மாலை நேர டியூட்டிக்குப் பெரும்பாலும் வருவார்கள். இவர்களிடையே அவன் சற்று ஆசுவாசமாக உணர முடிந்தது. சம்சாரிகள், “கல்யாணம் செய்து கொள்ளாதேயப்பா!” என்று அவனுக்கு உபதேசிப்பார்கள். பிரம்மச்சாரிகள், சில சமயங்களில் கிளர்ச்சிக்காகப் பயன்படுத்திய பிறகு மறந்து விட வேண்டிய லாகிரிவஸ்துவாகப் பெண்களை மதித்து, கொச்சையான பாஷையில், கொச்சையான ஹாஸ்யங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். பெண்களின், கல்யாணம் என்ற ஏற்பாட்டின் மீது இந்த தூஷணை மூலம் கணேஷுக்கு ஒரு வக்கிரமான இன்பமும் திருப்தியும் ஏற்பட்டது. அவனைக் கழிவிரக்கத்திலிருந்தும் சுய வெறுப்பிலிருந்தும் இந்தச் சூழ்நிலை காப்பாற்றியது. இப்படியே வாழ்நாள் முழுவதையும் கடத்திவிடலாமென்ற மன உறுதியும் நம்பிக்கையும் கூட அவனுக்கு ஏற்பட்டது. நள்ளிரவுக்கு மேல் டியூட்டி முடியும். அவன் தன் அறைக்குப் போவான். ஹோட்டல்காரர் காரியரில் கொண்டு வைத்திருக்கும் சாப்பாட்டைச் சாப்பிடுவான். தூங்குவான். சில இரவுகளில் நண்பர்களுடன் பிரஸ் கிளப்புக்கோ வேறு எங்காவதோ சென்று நன்றாகக் குடித்து விட்டுப் பிதற்றித் தள்ளுவான், பாடித் தள்ளுவான். தன்னுடைய மனதின் உட்புறத்தில் தன்னையுமறியாமல் சேர்ந்திருக்கக் கூடிய மென்மையான தாகங்களை மதுவினால் கழுவித் துப்புரவாக்கி வெளியே கொட்ட முயலுவது போலிருக்கும் அது.
மனதைக் கூட இப்படியெல்லாம் ஏமாற்றிவிடலாம், உடலை ஏமாற்ற முடிவதில்லை. அதன் நமைச்சலைப் பொறுக்க முடிவதில்லை. இந்த நமைச்சலைத் தீர்ப்பதற்காக, அதற்கென உள்ள இடங்களுக்கு, இந்த இடங்களுக்குச் செல்லும் வழக்கமுடையவர்களுடன் அவன் ஓரிரு தடவைகள் சென்று வந்தான். ஆனால் இந்த அனுபவங்கள் அவனுக்கு நிறைவளிப்பதாயில்லை. வெறுப்பும் கோபமும்தான் ஏற்பட்டது-தன் மேல், தன்னை அழைத்துச் சென்றவர்களின் மேல், அந்த இடங்களில் இருந்த பெண்கள்மேல். தான் ஒரு யந்திரமாக இல்லையென்பதே அவனுடைய கோபத்துக்குக் காரணமாயிருக்கலாம்; பெண்ணை ஸ்பானர், ஸ்க்ரூ டிரைவர் போன்ற ஜடக் கருவியாகத் தேவையுள்ள சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக் கொண்டு பின் அவளுடன் சம்பந்தமில்லாமல் இயங்கக் கூடிய யந்திரம்.
யந்திரமில்லையென்றால் பின் என்ன அவன்? அவன் வேண்டுவதென்ன? அவனுக்கு எதுவும் விளங்கவில்லை. விளங்க வேண்டும் போலிருந்தது, அதே சமயத்தில் விளங்காமலிருந்தால் தேவலை போலவும் இருந்தது. புதிய பரிசோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அதே சமயத்தில் முந்தைய அனுபவங்களின் பின்னணியில் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ளத் தயக்கமாகவும் இருந்தது. “நானும் உங்கள் வழிக்கு வரவில்லை. நீங்களும் தயவு செய்து என் வழிக்கு வராதீர்கள்” என்று மானசீகமாகப் பிற மனிதர்களுடன்-குறிப்பாகப் பெண்களுடன்- ஒப்பந்தம் செய்து கொண்டு, அவன் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வந்தான்.
இத்தகையதொரு கட்டத்தில்தான் அவன் முதன் முதலாக சித்ராவைச் சந்திதான்; ஒரு நாடக விழாவில். சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு நாடகக் குழுவினரால் நடிக்கப்பட்ட சில தமிழ் நாடகங்கள்; மாலை நேர டியூட்டி காரணமாக ஒரே ஒரு நாள்தான் அவனால் போக முடிந்தது. அதுவும் ஒரு நண்பன் மட்டுக் அன்று அங்கே அழைத்துச் சென்றிராவிட்டால், அவன் சித்ராவைப் பார்த்திருக்க மாட்டான். அவளுடன் பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள முயன்றிருக்க மாட்டான். அவளுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக ஆகியிருக்க மாட்டான்-சித்ராவின் எதிர் காலத்தை அவனுடையதுடன் பிணைக்கத் தயாராகுமளவுக்கு எதிர் காலம்…..
கணேஷ் மீண்டும் பெருமூச்சு விட்டான். அந்தச் சிவப்புப் புடவைக்காரியின் முகத்தில் திடீரென்று ஒரு புன்னகை தோன்றியது. தன்னைப் பார்த்துத்தானோ, என்ற நினைப்பில் ஒரு கணம் அவன் இதயம் படபடத்தது. இல்லை; அவள் அவனுக்கும் அப்பால் யாரையோ பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் திரும்பினான். சாலையில் அப்போதுதான் வந்து நின்றிருந்த ஆட்டோவிலிருந்து ஒரு இளைஞன் இறங்கிக் கொண்டிருந்தான்! ஆட்டோ டிரைவரிடம் இரண்டு ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தான். டிரைவர் சில்லறையில்லை என்று கூறியிருக்க வேண்டும். அவன் சிவப்புப் புடவையைப் பார்த்து ஏதோ சைகையால் தெரிவித்தான். அவள் அவன் பக்கம் நடந்து சென்று, எவ்வளவு வேண்டுமென்று விசாரித்து. தன் கைப்பையைத் திறந்து சில்லறை எடுத்து டிரைவரிடம் கொடுத்தாள். பிறகு அவன் அவள் இடுப்பைச் சுற்றிக் கையை வளைத்து அணைத்துக் கொள்ள இருவரும் கணேஷைக் கடந்து தியேட்டருக்குள் மெல்ல நடந்து சென்றார்கள்; அவனுக்குப் பொறாமையாயிருந்தது….
அன்றும் இப்படித்தான். அவனும் நண்பனும் நாடகத்துக்கு துவக்க நேரத்திற்கு மிகவும் முன்பாகவே கொட்டகையை அடைந்துவிட்டதால் வெளியே நின்றவாறு சிகரெட் குடித்துக் கொண்டிருந்தார்கள்; வருகிற பெண்களின் மேல் பார்வையை வீசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராமதுரை தன் குடும்பத்துடன் டாக்ஸியில் வந்து இறங்கினார். டாக்ஸிக்காரன் அவர் நீட்டிய பத்து ரூபாய் நோட்டைப் பார்த்து (சில்லறை இல்லையென்று?) கையை விரித்தான். அவர் பார்வை கொட்டகை வாசலில் நின்ற கூட்டத்தில் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடியது. கணேஷ்தான் முதலில் அவர் கண்ணில் தட்டுப்பட்டான்.
அவர் அவனருகில் வந்தார். “ஹலோ!” என்று இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள். அவனுடைய தினசரியின் அலுவலகத்திற்கு அவர் ஒரு முறை வந்தபோது அவன் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தான். அதன் பிறகு சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் ஒரு வார்த்தை. இருவார்த்தை பேசிக் கொள்ளாமல் இருந்ததில்லை. அவர் அவனிடம் விஷயத்தை விளக்கி, எட்டணா வாங்கிக் கொண்டார்.
“அப்புறம் தருகிறேன்” என்றார்.
“பரவாயில்லை,ஸார்!”
அவர் டாக்ஸிக்காரனிடம் திரும்பிச் சென்றபோது அவன் பார்வை அவரைப் பின் தொடர்ந்தது. அதே சமயத்தில் டாக்ஸியருகிலிருந்து ஒரு பார்வை அவன் பக்கம் மிதந்து வந்தது; சித்ராவினுடையது.
இடைவேளையின்போது அவன் காப்பி ஸ்டாலில் தன் நண்பனுடன் நின்றிருந்தபோது, சித்ராவும் தன் தம்பியுடன் அங்கே வந்தாள். அவள் தம்பி கணேஷ் அருகில் வந்து அவனிடம் எட்டணாவை நீட்டினான். கணேஷ் “ஓ இட்ஸ் ஆல்ரைட்” என்று அதை வாங்காமலிருக்க முயன்றான். “இல்லையில்லை; ப்ளீஸ், யூ மஸ்ட் ஹாவ் இட்!’ என்று அவள் வற்புறுத்தி அவனை அந்த எட்டணாவை வாங்கிக் கொள்ளச் செய்தாள்.
முதன் முதலாக அவள் அவனுடன் பேசியது அப்போதுதான்.
அவள் குரலில், தோரணையில் இருந்த ஒரு நிச்சயமும் பிடிவாதமும் அவனை அந்தக் கணத்தில் கவர்ந்திருக்க வேண்டும். அந்தப் பதினேழு வயதுப் பெண்ணின் சந்தேகமோ சோர்வோ அற்ற நிச்சயம் அவனுக்கு ஏதோ ஒரு வகையில் இதமாக இருந்திருக்க வேண்டும். அந்த வாரம் முழுவதும் அவன் அவள் நினைவாகவே இருந்தான். ஞாயிற்றுக்கிழமை வந்தது. அவர்களுடைய தினசரியின் ஞாயிறு மலரில் நடந்து முடிந்திருந்த அந்த நாடக விழாவை விமர்சித்து புரொபசர் ராமதுரை ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்ததும் தன்மனதில் ஏற்பட்ட அழகிய சலனங்களை அவருடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலினால் உந்தப்பட்டுச் சென்றவன் போன்ற பாசாங்குடன், அவன் அன்று மாலை அவரைத் தேடிச் சென்றான்-
ப்ரொபசர்,நான் உங்கள் வீட்டுக்கு வந்த அந்த முதல் நாள் உண்மையில் சித்ராவுக்காகத்தான் வந்தேன் என்பதை அன்று நீங்கள் ஊகித்திருப்பீர்களோ என்னவோ? ஆனால் பிற்பாடு உங்களுக்குத் தெரிந்துவிட்டது.உங்கள் மனைவிக்குத் தெரிந்துவிட்டது. பாபுவுக்குத் தெரிந்துவிட்டது.ஏன் உங்கள் வீட்டு நாய்க்குக்கூட தெரிந்துவிட்டது.நான் மிக உயர்ந்த இண்ட்லெக்சுவல் மட்டங்களில் உங்களுடன் பேசும்போது, அது ஒரு மூலையில் என்னைப் பார்தவாறு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு பல்லைக் காட்டிக் கொண்டு, பரிகசிப்பதுபோல இலேசாக தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கும்-இதெல்லாம் என்ன வீண் பேச்சு, நீ எதற்காக இங்கே வருகிறாயென்று எனக்குத் தெரியாதா என்று கேட்பது போல. பல சமயங்களில் அந்த நாயுடன் என்னை ஒப்பிட்டுக்கொண்டு பார்க்கும்போது எனக்கு என்மேலேயே சிரிப்பும் இரக்கமும் ஏற்படுவதுண்டு. அதற்கு அனாவசிய நடிப்புகள் கிடையாது. பேச்சுக்கள் கிடையாது. ஒரு பெண்ணின் மேல் ஆசை ஏற்பட்டால் அவளுடைய அப்பாவைப்போய் வசீகரிக்க அது முயல வேண்டியதில்லை.அவள் ஆயுள் காலம் முழுவதும் என்னிடம் பிரியமாக இருப்பாளா, என் போக்குகளை அனுசரித்து நடப்பாளா, சம்பிரதாயப் பிச்சுவாக இல்லாமலும் அதே சமயத்தில் சம்பிரதாயங்கள் மேல் காறி உமிழ்பவளாக இல்லாமலும் இருப்பாளா, என்றெல்லம் அது கவலைப்படத் தொடங்காது.பெரும்பாலான பிராணிகளைவிட அதிக ஆயுளைப் பெற்றிருந்தாலும், இந்த ஆயுளின்பெரும்பகுதியை அனாவசியமாக நடிப்புகளிலும் பேச்சுகளிலும் நினைவு களிலும் தானே மணிதர்களாகிய நாம் செலவிடுகிறோம்? நீங்கள் ஒரு முறை சொன்னதுபோல, கூட்டிக் கழித்துப் பார்த்தால் மனிதன் தன் வாழ்நாளில்செய்யும் உருப்படியான காரியங்கள் பல பிராணிகள் தம்முடைய குறைந்த ஆயுளில் செய்துமுடிக்கும் உருப்படியான காரியங்களைவிடக் குறைவனதாகக்கூடவே இருக்கலாம்…
ஆம். அந்த நாயைக் கண்டு அவனுக்குப் பொறாமையாக இருந்தது. அதைப் பார்த்ததுமே அவனுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்த தினங்கள் உண்டு. அதே சமயத்தில், அது அவன் நன்றிக்குப் பாத்திரமான தருணங்களும் இருக்கத்தான் செய்தன. உதாரணமாக, அந்த முதல் நாளன்று. அவன் சென்ற போது ராமதுரை வீட்டிலிருக்கவில்லை. அவருடைய மனைவியும் மகள் சித்ராவும்தான் இருந்தார்கள். “உட்காருங்கள்; வந்துவிடுவார்!” என்று அவர்கள் அவனை வரவேற்று உட்கார வைத்தார்கள். அவன் கதவைத் தட்டியவுடனேயே குலைக்கத் தொடங்கியிருந்த நாய், அவன் உள்ளே வந்து நாற்காலியில் உட்கார்ந்ததும் அவன் கை, கால், எல்லாவற்றையையும் மோந்து பார்க்கத் தொடங்கியது. “உஷ்! டாமி, சும்மாயிரு” என்று சித்ராவும் அவள் அம்மாவும் நாயை அவனுக்கு உபத்திரவம் கொடுப்பதிலிருந்து தடுக்க முயன்றார்கள். “பரவாயில்லை” என்று அவன் தன் சலிப்பையும், அருவருப்பையும் அடக்கிக் கொண்டு டாமியின் முகம், கழுத்து, முதுகு யாவற்றையும் வக்கணையாகத் தடவிக் கொடுத்தான். அது இதமாகக் காட்டிக் கொண்டு நின்றது. அவன் தொடர்ந்து தடவிக் கொண்டேயிருந்தான். நாய்களை நேசிக்கும் அன்புமயமான, தோரணையற்ற இளைஞனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு அவர்களுடைய நன்மைதிப்புக்குப் பாத்திரமானான். வார்த்தைகள் கூட இதைச் சாதித்திருக்க முடியாது. அன்னியோன்னியமான சூழ் நிலையை உருவாக்கியிருக்க முடியாது.
டாமிதான் சம்பாஷணைக்கும் வித்திட்டது. “எங்க வீட்டிலேயும் இப்படி ஒரு நாய் இருந்தது” என்றான் அவன்.
“இப்ப இல்லையா?” என்றாள் சித்ரா. “திடீர்னு ஒரு நாள் அது ஓடிப்போயிடுத்து”.
“ஐயையோ; ஏன் அப்படி?”
அது உண்மையில் அவர்களுடைய நாயே இல்லை என்று அவன் விளக்கினான். அவனுடைய அப்பாவின் நண்பர் ஒருவருக்கு சொந்தமான நாய் அது. அந்த நபருக்கு டில்லியிலிருந்து மாற்றலானபோது நாயை அவர்கள் வீட்டில் விட்டுச் சென்றார். முதலில் அது சரியாகத்தான் இருந்தது. பிறகு திடீர் திடீரென்று மூன்று நாள், நாலுநாள் டெல்லியில் எங்கெல்லாமோ சுற்றிவிட்டு வரத் தொடங்கியது. எங்கே போய்விட்டு வருகிறதென்று தெரியாது. கடைசியில் ஒருநாள் என்றென்றைக்குமாக ஓடிப் போய்விட்டது.
“பாவம், பழைய எஜமானர்களை நினைச்சிண்டிருக்கும் போலிருக்கு” என்றாள் சித்ராவின் அம்மா.
“உங்கள் வீட்டிலே அதை யாராவது அலட்சியப்படுத்தினாங்களோ, என்னவோ-அதாவது நீங்க இல்லை. வேறே யாராவது” என்றாள் சித்ரா. தன் வீட்டு மனிதர்களின் இயல்பைப் பற்றிச் சாதுரியமாக அறிந்து கொள்ள முயலுகிறாள் என்று அவன் நினைத்தான்.
“அதெல்லாம் எவ்வளவோ பிரியமாகத்தான் வச்சிண்டிருந் தோம்; ஒருவேளை பிரியம் தாங்காமல் ஓடிப் போயிருக்கலாம். என் தங்கை, அதனுடைய கழுத்தைக் கட்டிக் கொஞ்சிண்டேயிருப்பா. எங்கம்மா பிரஸாதம் முதலாக அதுக்கு இட்டு விடுவா”
அவன் சிரித்தாள். அவளைச் சிரிக்க வைத்ததில் அவனுக்குப் பெருமையாக இருந்தது. டாமி அவன் நேசிப்பது தன்னையல்லவென்று திடீரென்று உணர்ந்து கொண்டது போல அவன் தடவலை திரஸ்கரித்துவிட்டுத் தரையில் போய்ப் படுத்துக் கொண்டது. “டாமியை வேறு யார் வீட்டிலேயாவது விட்டால் அது என்ன செய்யும்னு யோசிச்சுப் பார்க்கிறேன்” என்றாள் மாமி.
“எங்கேயும் விட மாட்டோம் அதை. நாம் எங்கே போனாலும் அது கூடவே வரும். இல்லையா டாமி?”என்று சித்ரா டாமியருகில் தரையில் உட்கார்ந்து அதைக் கொஞ்சினாள்.
“இங்கிலீஷ்காரா ஊரைவிட்டுட்டுப் போறபோது நாயைச் சுட்டுக் கொன்றுடுவாளாமே எப்படித்தான் முடிகிறதோ?” என்று மாமி உடம்பைச் சிலிர்த்துக் கொண்டாள்.
“கொடூரமான வழக்கம்” என்று அவன் ஒத்துக் கொண்டான். தன்னைப் போன்ற ஒரு ஸென்டிமென்டல் டைப்பாக அவனையும் அடையாளம் கண்டு கொண்டவள்போல, மாமி அவனைத் திருப்தியுடன் பார்த்தாள். சித்ரா இங்கிலீஷ்காரர்களின் அந்த வழக்கத்தை ஆதரித்துப் பேசினாள். அவனைத் திண்டாட்டத்தில் சிக்க வைக்க விரும்பியவள் போல. அவன் உடனே அவன் பக்கம் பேசத் தொடங்குகிறானா என்று பார்க்க விரும்பியவள்போல.
ஆனால் அவன் தன் முந்தின கருத்தையே மீண்டும் எதிரொலித்தான். தான் ஒரு இளிச்சவாயன் அல்லவென்று நிரூபித்து அவளுக்கு அவன் மேல் மதிப்பு ஏற்படச் செய்தான்.
இப்போது யோசித்துப் பார்க்கும்போது அவ்வளவும் தவறாகத் தோன்றியது. அந்த முதல் நாளன்று அவன் நடந்து கொண்ட விதம் எல்லாமே. அவன் அவர்களுக்காக தன் இயல்புக்கு மாறான ஒரு வே ஷமணிந்திருக்க வேண்டாம். ஆனால் எது வே ஷம், எது வே ஷமில்லை? எது அவனுக்கு இயல்பற்றது? ஏதேதோ உந்துதல்களின் அடிப்படையில் எப்படிக்கெப்படியோ நம்மை ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்திக் கொள்கிறோம். இந்த உந்துதல்கள் உண்மையாயிருக்கிற வரையில் இந்த வெளிப்பாடுகளும் உண்மையானவைதாம். ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொன்று உண்மையாகத் தோன்றுகிறது. முக்கியமானதாகத் தோன்றுகிறது. நம்மை இயக்க வைக்கிறது. அப்படி நம்மை இயக்க வைக்கும் ஒவ்வொரு உண்மையையும் இறுதியில் ஒருநாள் பொய்யென உணர்ந்து நிராசையடைகிறோம். வேறு உண்மைகளில்–அப்படி அந்தக் கணம் தோன்றுபவற்றில்–தஞ்சமடைகிறோம். மனித இயக்கத்தின், யத்னங்களின், அடிப்படையே இவ்வகைத் தோற்றங்கள் தாமே? பொய்கள் தாமே?
கணேஷ் தலையை பலமாக ஒருமுறை குலுக்கிக் கொண்டான். தன் சிந்தனைகளின் தாக்குதலிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள விரும்பியவனைப் போல் இந்த சிந்தனைகள்தாம் நாளுக்குநாள் எவ்வளவு கூர்மையாகிக் கொண்டு வருகின்றன. அவனையும் அவன் வாழ்வில் சம்பந்தப்படுபவர்களையும் குத்திக் கிளறிப் பரிசீலனை செய்தவாறு இருக்கின்றன. இவ்வகைக் கூர்மையை நோக்கி என் சிந்தனைகள் மேற்கொண்ட படிப்படியான பயணத்தில், ப்ரொபசர், உங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
ஆனால் இந்தப் பயணத்தை மேற்கொள்ளாமலேயே இருந்திருக்கலாமென்று இப்போது சில சமயங்களில் தோன்றுகிறது.
மணி ஆறரை. சித்ராவை இன்னும் காணோம். அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. தியேட்டர் வாசலிலிருந்த தர்வான் தன்னை விநோதமாகப் பார்க்கத் தொடங்கி யிருப்பது போலத் தோன்றியது. அவ்வப்போது “ஸ்பேர் டிக்கெட் இருக்கிறதா?” என்று வேறு சிலர் கேட்டு அவன் எரிச்சலைக் கிளப்பினார்கள். அலுப்புத் தாங்காமல், ஒரு மாறுதலுக்காக, அவன் அங்கு உட்கார்ந்திருந்த ஒரு பாலிஷ்காரச் சிறுவனிடம் சென்று ஷூவைப் பாலிஷ் போட்டுக் கொள்ளத் தொடங்கினான். “டிக்கெட் கிடைக்கவில்லையா ஸாப்?” அவன் விளக்கினான்.
“ரொம்ப நல்ல படம் ஸாப்”.
“நீ பார்த்தாகி விட்டதா”
“மூன்று தடவைகள் ஸாப்”
“அவ்வளவு நல்ல படமா?”
“எனக்கு அந்த ஹீரோயினை ரொம்பப் பிடித்திருக்கிறது ஸாப்”
கணேஷுக்கு அந்தச் சிறுவன் மீது பொறாமை ஏற்பட்டது. அந்த ஹாலிவுட் நடிகை மூலம் அவனால் பெற முடிகிற கிளர்ச்சி குறித்து, நிறைவு குறித்து. பரிசுத்தமான இந்தக் கிளர்ச்சியையும் நிறைவையும் இனி தன்னால் என்றும் பெற முடியப் போவதில்லை. இந்த நடிகை மூலமாகவோ, அவனுடைய மயக்கங்கள் சிதைந்து விட்டிருந்தன. அந்த நடிகையைப் பற்றிய மயக்கம். அவள் அவனுக்கு (ஒரு காலத்தில்) எந்தப் பெண்மையின், வாழ்க்கை முறையின், பிரதிநிதித்துவமாக விளங்கினாளோ அந்தப் பெண்மை யைப் பற்றிய வாழ்க்கை முறையைப் பற்றிய மயக்கம், மன விடுதலை பெற்ற ஆண்கள், பெண்கள், சுதந்திரமான காதல், சுதந்திரமான வாழ்க்கை இளமையில் சினிமா தியேட்டரில் அமர்ந்திருக்கையில் அவன் வாழ்க்கையிலும் இவையெல்லாம் சாத்தியமானவையாகத் தோன்றின. அவனுடைய பெற்றோர், சகோதர சகோதரியர் ஆகியோரிடமிருந்து வேறுபட்டவனாக அவனை உணரச் செய்து அவர்கள் மீது தினசரி அவனுள் வெறுப்புணர்ச்சியைப் பொங்கிப் பொங்கியெழ வைத்தன. அவர்களுடைய கேள்விகளற்ற அசட்டுத் திருப்தி காரணமாய், போலியான ஊன்றுகோல்கள் காரணமாய். ஏன் இந்தப் பொய்யான உறவுகள், என்று அலற வேண்டும் போலிருந்தது. இந்த அமைப்பை அடியோடு இடித்துத் தரை மட்டமாக்கி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் போலிருந்தது. அவனைத் தம்மைப் போன்ற சாமானியமானவனாக நினைத்த ஒவ்வொருவரையும், பின் ஏன் அவனால் அப்படியெல்லாம் செய்ய முடியாமல் போயிற்று? எங்கே அல்லது யாரால் அவனுடைய முயற்சிகள் பங்கப்படுத்தப் பட்டன? அல்லது அவனுள் ஒரு பகுதியே ஒவ்வொரு கணமும் அவனுக்கு எதிராக வேலை செய்து வந்ததா? பாலிஷ் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த அந்தச் சிறுவனைப் பார்க்கப் பார்க்க, இதுவரை அவன் ஈடுபட்ட பயணங்கள, தடங்கள், வெற்றி தோல்விகள் எல்லாமே முக்கியத்துவ மற்றவையாகத் தோன்றின. பையா, நீ என்னைவிட எவ்வளவோ பரிசுத்தமானவன். இந்தக் கணத்தில் நீ ஷூவுக்குப் பாலிஷ் போடுகிறவனாகவும் நான் அந்த ஷூவை அணிந்திருப்பவனாகவும் இருப்பதை என்னால் நியாயப் படுத்த முடியவில்லை. விதி? சமூக அமைப்பு? எப்படியோ, இந்த ஏற்பாடு எனக்குச் சௌகரியமாக இருக்கிறது. இதை எதிர்த்து நான் புரட்சி செய்யவில்லை. வேறு சில ஏற்பாடுகளுக்கெதிராக எப்படி நான் புரட்சி செய்ய வில்லையோ, அதே போல.
டக்! என்று சிறுவன் தன் மரப் பெட்டியில் தட்டினான். காலை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்கு அடையாளமாக. கணேஷ் தன் இன்னொரு காலைப் பெட்டியின் மீது வைத்தான்.
ப்ரொபசர், அன்று உங்கள் வீட்டில் நாயைப் பற்றிய சர்ச்சைக்குப் பிறகு நாங்கள் நாடகங்களைப் பற்றிய சர்ச்சையைத் தொடங்கினோம். எனக்கு அந்த நாடகங்கள் பிடித்திருந்தனவா என்று சித்ரா கேட்டாள். ஒரு நாள்தான் வந்தேன். அன்றைக்கு அசட்டுப் பிசட்டென்று இருந்தது என்றேன் நான். ஸ்டுபிட் மெலோட்ராமா, என்றாள் அவள். அது போன்ற வார்த்தைகளை அவள் உபயோகிக்கத் தொடங்கி ஓரிரண்டு வருடங்கள்துர்ன ஆகியிருக்க வேண்டும்; குழந்தை தான் புதிதாக அடைந்த ஒரு பொம்மையைத் தன் பழைய பொம்மைகளைவிட அதிகமாகச் சீராட்டி மகிழ்வதையும் அது குறித்துப் பெருமை கொள்வதையும் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சி அவள் சில ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியபோது எனக்கு ஏற்பட்டது. எனக்கோ வார்த்தைகள் சலித்துப் போயிருந்தன.திகட்டிப் போயிருந்தன. வார்த்தைகளில் நீச்சலடிப்பதுதானே என் வேலை? சித்ராவின் அம்மாவுக்கு சித்ராவுக்குத் தெரிந்திருந்த அளவு வார்த்தைகள் தெரிந்திருக்கவில்லை. ஆனால் உணர்ச்சிப்பூர்வமாக எங்களிருவரையும் விட அதிகமாக அந்நாடகங்கள் அவளைப் பாதித்திருந்தனவென்பதை எங்களுக்கு அவளால் உணர்த்திவிட முடிந்தது. அந்நாடகங்களில் சிலவற்றின்போது தன் அம்மா பிழியப் பிழிய அழுததைச் சித்ரா எடுத்துச் சொன்னாள். தமாஷாக. ஆனால் எனக்கு அந்த அழுகை மிகவும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரியதாகத் தோன்றியது. என் அம்மாவும் இப்படித்தான் சினிமாவுக்கோ டிராமாவுக்கோ போனால் அழுதுவிடுவாள். கதாபாத்திரங்கள் படும் கஷ்டங்களைப் பார்த்து என்றேன் நான். அப்படி தான் இல்லை என்று சித்ராவுக்குப் பெருமையாக இருந்தது. அது பெருமைக்குரியதுதானா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது.
பிறகு நீங்கள் வந்தீர்கள். சம்பாஷணையில் கலந்து கொண்டீர்கள். நீங்கள் இல்லாத சமயத்தில் நான் வந்ததும், உங்கள் மனைவியுடனும் மகளுடனும் பேசிக் கொண்டிருந்ததும்., உங்களுக்கு முழுதும் திருப்தியளிக்கிற ஒரு சூழ்நிலையாக இல்லையென்பதை நான் நுட்பமாக உணர முடிந்தது.
அவர்களை நீங்கள் முட்டாளாக்கியிருக்கலாம். என்னை ஆக்க முடியாது என்பது போல நீங்கள் நான் தெரிவித்த ஒவ்வொரு கருத்தையும் (வேண்டுமென்றே) எதிர்த்துப் பேசினீர்கள். என் வாதங்களில் ஓட்டைகள் கண்டுபிடித்து என்னை வாயடைத்துப் போகச் செய்ய முயன்றீர்கள். ஓ! அந்த முதல் தடவையும், அதையடுத்து சில தடவைகளும் நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக என்னைச் சற்றுத் தொலைவிலேயே வைத்திருந்தீர்கள்! ஆனால் உங்களை நான் குற்றம் சொல்லவில்லை. என்னை உங்களிடம் அழைத்து வந்தது அறிவுப் பசிதானா என்று நீங்கள் சோதித்துப் பார்க்க விரும்பியது நியாயமே. உங்களுடன் பேசிய பிறகு, எனக்கும் சந்தேகம் உண்டாகத்தான் செய்தது – அதற்கடுத்த தடவைகளில், அறிவுப் பசிதானோ?
அன்று நான் உங்களிடம் அந்நாடகங்களை ஆதரித்துப் பேசினேன். அவற்றை அறிவுப்பூர்வமாக மட்டும் அணுகுவது தவறாகுமென்றேன். அவற்றால் உணர்ச்சி பூர்வமாக நம் மக்கள் ஆறுதலும் நிறைவும் பெறுவதைச் சுட்டிக்காட்டி அந்த நிறைவைத்தான் நான் மதிக்கிறேனென்றும், வெறும் அறிவுத் தீனியை அல்லவென்றும் கூறினேன்.
“அந்த நிறைவு ஒரு மயக்கமாக இருந்தாலுமா?” என்று கேட்டீர்கள்.
“இருக்கட்டும்: வாழ்க்கையே ஒரு மயக்கம்தான்” என்றேன்.
“நான் சொல்வது கொச்சையான மயக்கங்களைப் பற்றி என்றீர்கள். இரு பொருள்படப் பேசினீர்களோ என்னவோ!
“எது கொச்சை, எது கொச்சையில்லை? இது பற்றிய ஒவ்வொருவர் கணிப்பும் வேறுபடலாமல்லவா?” என்றேன்.
“நம்முடன் நாமே தொடர்பு கொள்ள உதவாதவை எல்லாமே கொச்சையான மயக்கங்கள்தான்” என்று நீங்கள் கூறினீர்கள். “அதாவது நம்மை நாமே உணர்ந்து கொள்ளத் தடையாக இருப்பவை”.
“இந்தத் தடைப்படுதல் உறைக்க வேண்டாமா, எல்லோருக்கும்?”
“நிச்சயம் உறைக்கும். நம் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு சூட்சுமமான உரைகல் இருக்கிறது; உணவுக்கென இருக்கும் நாக்கைப் போல உணர்வுக்கு ஒரு நாக்கு இருக்கிறது. இந்த நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் அபிப்பிராயங்களைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு மதிப்புக் கொடுக்கத் தெரியவேண்டும். புஷ்டியாக இல்லாத சிலது பழக்கப்பட்டு விடுகின்றன. காபி, டீ, சிகரெட் மாதிரி; பரவாயில்லை; ஆனால் இதையே ஆகாரமாக வைத்துக் கொள்ள முடியாது. புஷ்டியையே அளவு கோலாக கொண்டாலும் சப்பென்று போய்விடும். ருசிக்காககவும்தான் சாப்பிட வேண்டியிருக்கிறது. மொத்தத்தில், சாப்பிடுவதை இனம் கண்டு கொள்ளத் தெரியவேண்டும். அதற்கு ஒரு பயிற்சியும் அனுபவமும்தான் தேவை. குழந்தைக்குக் கொடுக்கப்படுவதைப் போல இந்தப் பயிற்சி நமக்கு அளிக்கப்படவில்லை. வீட்டிலும் சரி, பள்ளிக்கூடத்திலும் சரி….
நீங்கள் பேசிக்கொண்டே போனீர்கள். நான் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அதன் பிறகு ஒவ்வொரு முறையும் நான் கலைந்த சுருதியுடன்தான் உங்களிடம் வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இந்த சுருதியை நீங்கள் பொறுமையாகச் சீர்படுத்தியிருக்கிறீர்கள். உச்ச கட்டத்துக்கு நம் சம்பாஷணையை அழைத்துச் சென்றிருக்கிறீர்கள்.
எதைப் பற்றியெல்லாம் நாம் பேசினோமென்று யோசித்துப் பார்க்கும்போது எதைப் பற்றித்தான் நாம் பேசவில்லை என்று தோன்றுகிறது. நாடகங்களைப் பற்றி, நாயகனைப் பற்றி, தேசம், குடும்பம், திருமணம் என்ற உருவங்களைப் பற்றி, அமைப்புகள் பற்றி….
தோல்வி அடைந்த என் உறவுகள், என் நேசங்கள் இவற்றை நான் புதிய கோணத்தில் பரிசீலனை செய்து பார்க்கத் தொடங்கினேன். எதிராளியின் கோணத்திலிருந்து தனிமையைப் பாதிக்காத துணை; நான் பயன் படுத்தப்படாமல் என்னால் பயன் படுத்தக்கூடிய அமைப்பு- இதைத்தானே நான் தேடி வந்திருக்கிறேன்.
முரட்டுக் குதிரையாகத் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்த என்னை நீங்கள் வசமாக தாவிப் பிடித்து லாடமும் லகானும் பூட்டிவிட்டது போல எனக்குச் சில சமயங்களில் தோன்றுகிறது. வேறு சில சமயங்களில், என்ன பைத்தியக்காரத்தனம், குதிரையாவது, பிடிப்பதாவது என்று தோன்றுகிறது. ஒரு வேளை என் ஓட்டத்தில் நான் அடைந்த சோர்வும், உங்கள் வருகையும் ஒரு சேர நிகழ்ந்திருக்கலாம்.
அதுவும் சாத்தியந்தான்.
மனிதர்களிடம் நம்பிக்கையற்றுப் போயிருந்த எனக்கு மீண்டும் அவர்களிடம் நம்பிக்கை ஏற்படச் செய்தீர்கள். யாருக்கும் யாரிடமும் அக்கறையில்லையென்று விரக்தியடைந்திருந்த என்னை, அக்கறையுள்ளவர்களும் இல்லாமல் போகவில்லை என்ற ஆசுவாசம் பெறச் செய்தீர்கள். பத்து வருடங்கள் முன்பு உங்களைச் சந்தித்திருந்தால் என் வாழ்வின் திசையே மாறியிருக்கு மென்று நினைப்பேன், நான்.
ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு சித்ராவுக்குப் பத்து வயதுகூட நிரம்பியிராது.
வாழ்க்கை எவ்வளவு விசித்திரமான நிகழ்ச்சிகளை உருவாக்குகிறது. ஒன்றைத் தேடிச் செல்லும்போது இன்னொன்றைப் பெற வைக்கிறது! சித்ராவினால் ஈர்க்கப்பட்டு, நான் முதலில் உங்களிடம் வந்தேன். பிறகு உங்களுக்காகவும் வந்தேன்.
ஒரு கட்டத்துக்குப் பிறகு, உங்களுக்காக மட்டுமே வந்திருப்பேனா?
அதுதான் இப்போது என் சந்தேகம்.
சித்ராவின் காரணமாகப் பல சமயங்களில் நமக்குள் சுருதி சேராமல் போயிருக்கிறது. சம்பாஷனை முயற்சிகள் தோல்வியடைந்து, இறுக்கமான மௌனங்களில் நாம் சிக்கிக் கொள்ள அவசரமாக நான் விடைபெற்றுச் செல்ல நேர்ந்திருக்கிறது. என் நோக்கங்களைப் பற்றிய உங்கள் சந்தேகம், எனக்கே என்மேல் சந்தேகம். “சித்ரா, பாக்கு இருக்கா? சித்ரா, இன்றைய பேப்பர் எங்கே?” என்று ஏதாவது ஒரு காரணத்தை வைத்து நான் வந்து உட்கார்ந்தவுடன் நீங்கள் சித்ராவைக் கூப்பிடுவீர்கள். அவளைக் குசலம் விசாரிக்க எனக்குச் சந்தர்ப்பம் அளிப்பீர்கள். சில சமயங்களில் எங்களிருவரையும் தனியே விட்டு எழுந்து போயும் இருக்கிறீர்கள்.
ஏன் இந்த அவஸ்தை, அவளுக்காகத்தான் வருகிறாயென்றால் அதை அவளிடமோ என்னிடமோ சொல்லித் தொலையேன் என்று நீங்கள் எனக்கு உணர்த்த விரும்புவது போலிருக்கும் அது.
நம்மிருவரிடையே சுருதி பேதம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது என்பதாலேயே நான் அந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண முயன்றிருக்கலாம். என் கருத்தை வார்த்தைப் படுத்தியிருக்கலாம்; உங்கள் சந்தேகத்தை அது ஏற்பட்ட ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஊர்ஜிதப் படுத்தியிருக்கலாம். என் பெற்றோரை நீங்கள் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கலாம். எல்லாம் எவ்வளவு சுருக்கமாக நடந்து விட்டது!
அடுத்த வாரம் எங்களுக்குக் கல்யாணம்.
ஆனால் ?
எனக்கு ஒரு ஊன்றுகோலாக விளங்கியது சந்தேகங்களற்ற அவளுடைய நிச்சயம்தான், பரிசுத்தம்தான். ஆனால், நாங்கள் நுழையவிருக்கும் அமைப்பில் நிரந்தரத் தன்மையைப் பற்றிய பயம் காரணமாக அவளுடைய நிச்சயம் ஆட்டம் கண்டு வருவதை நான் பார்க்கிறேன். அவளுடைய நிச்சயம் அனுபவமின்மையினால் எழுந்ததென்ற ஞானோதயம் எனக்கு இப்போதுதான் உண்டாகியிருக்கிறது. என் குடும்பத்தினரைப் பற்றி ஊடுருவும் கேள்விகளை முன்பே அவள் கேட்டிருக்கிறாள். என் தாயைப் பற்றி, தங்கையைப் பற்றி… இப்போதும் அவர்களைச் சந்தித்த பிறகும் அவள் கேட்கிறாள். ஆனால், இப்போது அவள் விசாரணைகளில் ஒரு புதிய கவலையும் பயமும் தோன்றியிருகிறது! இந்தப் பயம் எனக்கு வருத்தத்தையளிக்கிறது. பாடிப் பறந்த குயிலொன்றைக் கூண்டில் அடைக்கப் பார்க்கும் குறவனைப் போல உணரச் செய்கிறது. இந்தப் பயம், இந்தக் குற்ற உணர்ச்சி-இதன் அடிப்படையிலா நாங்கள் வாழத் தொடங்கப் போகிறோம்?
மேலும், என் குடும்பத்தினரைப் பற்றி ஒரு சில வார்த்தைகளில் நான் அவளுக்கு என்ன சொல்ல முடியும், என்ன புரிய வைக்க முடியும்? உங்களைப் பற்றியோ சித்ராவைப் பற்றியோதான் ஆகட்டும், நான் என் குடும்பத்தினரிடமோ, மற்றவர்களிடமோ என்ன சொல்ல முடியும் ? நாலு வருடங்களுக்கு முன்பு சென்னையிலிருக்கும் என் அண்ணாவுடன் போய் வசிக்கத் தொடங்குகிற வரையில் நாங்களெல்லோரும் டில்லியில் சேர்ந்தாற் போலத்தான் இருந்து வந்தோம். ஆனால் ஒரே வீட்டில் இருந்தோமென்று பெயரே தவிர எனக்கு அவர்க்ளைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது. எல்லாம் நோக்கத்தைப் பொறுத்த விஷயம் தானே? மேலும், ப்ரொபசர், என்னைப் பற்றியே எனக்கு எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. பிறரைப் பற்றி யாரிடம் என்ன சொல்ல?
சித்ராவுக்கே இந்த அமைப்புப் பற்றி-இதில் அவள் அணிய வேண்டிய வேடம் பற்றி (மனைவி, மருமகள்) இவ்வளவு பயமாக இருக்கிறதே, என் மன்னிக்கு இன்னும் எவ்வளவு பயமாக இருந்திருக்கும் என்று தான் நினைதுப் பார்க்கிறேன். மூத்த மருமகளாகிய அவள்தானே மாமனாரோடும் மாமியாரோடும் என்றென்றும் இருக்க வேண்டியவள்? ஆனால், பாவம் அவளுக்குக் கேள்விகள் கேட்க சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. ஏதோ ஜாதகம் சேர்ந்தது. என் அண்ணா, அப்பா அம்மா தங்கை நால்வருமாக ஒரு நாள் அவர்கள் வீட்டிற்குப் போய் டிபன் சாப்பிட்டு விட்டு அவளுடைய நடையுடை பாவனைகளை “டெஸ்ட்” பண்ணிவிட்டு வந்து சேர்ந்தார்கள். பத்தே நிமிடம்! நல்ல பதவிசான பொண்ணு என்றாள் அம்மா. அவ அப்பாவுக்குக் கொஞ்சம் காது கேக்காதோன்னு எனக்குச் சந்தேகம் என்றார் அப்பா. (அது பரம்பரையாக வருவதாக இருக்காதே) சினேகிதமாயிருக்கிற் டைப்பாத்தான் தோணறது என்றாள் என் தங்கை. எனக்கு அவ ஸ்மைல் பிடிச்சிருக்கு என்றான் அண்ணா (மன்னி! மன்னி இத்தனைக்கும் நடுவில் உன்னால் ஸ்மைல் வேறு எப்படிப் பண்ண முடிந்தது?) பெரும் நடிகைகளாக நினைக்கபடுகிறவர்கள் தம் வாழ் நாள் முழுவதும் நடித்திராத ஒரு கடினமான பாகத்தை அந்தப் பத்து நிமிடங்களில் நீ ஏற்று நடித்தாக எனக்குப் பிற்பாடு தோன்றியது. நானாக இருந்தால் நீங்களுமாச்சு உங்கள் கல்யாணமுமாச்சு என்று அவர்கள் அதிர்ச்சி கொள்ளும் படியாக ஏதாவது சொல்லியிருப்பேன். செய்திருப்பேன் என்று நான் ஒரு முறை கூறினேன். அதற்கு நீ சிரித்துக் “நீ பெண்ணல்லவே” என்றாய்.
இப்போதுதான் அவனுக்கு அவள் பிரச்னை புரிகிறது. சித்ராவிடம் ஏற்பட்டு வரும் மாறுதல்களைப் பார்க்கும்போது தான் அவனுடைய குடும்பத்தினருக்காகத் தான் அணிய வேண்டிய பல்வேறு வேடங்களில் குறித்து சித்ரா கவலைப்படத் தொடங்கியிருக்கிறாள். தான் என்னென்ன செய்ய வேண்டி வருமோ என்று பயப்படுகிறாள். அவளுடைய மயக்கங்கள் தெளியத் தொடங்கியிருக்கின்றன. வாழ்க்கை என்பது ஒரு மாலை நேரச் சம்பாஷணை மட்டுமல்ல; சினிமாவுக்கும் டிராமாவுக்கும் போவது மட்டுமல்ல; உல்லாசப் பயணம் போவதும் ரெஸ்டாரெண்டில் காப்பியருந்துவதுமல்ல! வாழ்க்கை தினசரி காலை எழுந்திருப்பது, பல் தேய்ப்பது, குளிப்பது, ஆடையணிவது, பஸ் பிடிப்பது, ஆபிஸ் போவது, மாலையில் மீண்டும் பஸ் பிடிப்பது, வீட்டுக்கு வருவது. வாழ்க்கை என்பது காப்பி போடுவது, கறிகாய் நறுக்குவது, சமைப்பது, தோசை அரைப்பது, துணி துவைப்பது பெருக்குவது, துடைப்பது, பாத்திரம் தேய்ப்பது, கடைக்குப் போவது, ரேஷன் வாங்குவது ஜூரம் வந்து டாக்டரிடம் போவது, குழந்தை பெறுவது, குழந்தையை வளர்ப்பது, அதை டக்டரிடம் கூட்டிப் போவது, எங்கெங்கோ நின்று, எங்கெங்கோ நடந்து, எப்படியெப்படியோ உட்கார்ந்து அலுத்துப்போய் இரவில் படுக்கையில் அப்பாடாவென்று காலை நீட்டிக்கொண்டு படுத்துக்கொள்வது, மறுநாள் காலை வரையில் தூங்குவது, இதுதான் வாழ்க்கை. சலிப்பும் சோர்வும் மிக்கது. பசிக்காகச் சாப்பிட வேண்டியிருக்கிறது. சாப்பிடுவதற்காகச் சமைக்க வேண்டியிருக்கிறது. சாமான்கள் வாங்குவதற்கு பணம் தேவைப்படுகிறது. பணம் சம்பாதிப்பதற்கு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. மறுபடி மறுபடி பசிக்கிறது; மறுபடி மறுபடி வேலை செய்ய வேண்டியிருக்கிறது. பசிக்காக கல்யாணமும் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இது இன்னொரு பசி. வேலைக்குப் போகவுந்தான் அவனுக்கு முதலில் பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்வது? அதைத்தான் எல்லோரும் செய்கிறார்கள்.
எல்லோரும் வேலைக்குப் போகிறார்கள்; எல்லாரும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அவனும் எல்லாரையும் போலத்தான். சித்ராவும் வேலைக்குப் போக ஆசைப்படுகிறாள். அதைப்பற்றி அவன் அபிப்பிராயம் என்னவென்று கேட்கிறாள். அவனுக்கென்ன வந்தது? அவளும் வேலைக்குப் போகட்டும். அவளும் பஸ் கியூக்களில் நிற்கட்டும், பெண்கள் விடுதலை என்று சொல்லிக்கொண்டு பத்திலிருந்து ஐந்து வரையில் எங்கேயாவது ஒரு அலுவலகத்தில் உட்கார்ந்துவிட்டு அல்லது நின்று விட்டு வரட்டும். விடுதலையாவது மண்ணாங்கட்டியாவது? அன்பே, உலகில் விடுதலையென்று எதுவுமில்லை, உன் அம்மா செய்த தவற்றிலிருந்து நீ தப்பிக்க விரும்புகிறாய். என் அப்பா செய்த தவற்றிலிருந்து நான் தப்பிக்க விரும்புகிறேன். ஆனால் ஒரு சலிப்பிலிருந்து மீண்டும் இன்னொரு சலிப்பில்தான் நாம் சிக்கிக்கொள்ள வேண்டும். தப்புதல் என்று எதுவுமில்லை. எது எதிலிருந்தோ தப்ப முயன்று, ஓடி ஓடி, கடைசியில் கால்வலிதான் மிச்சம்.
டக்!
பாலிஷ் முடிந்துவிட்டது.
அந்தச் சிறுவனுக்கு பத்து பைசா சேர்த்துக் கொடுத்துவிட்டு, அவன் தியேட்டர் வாசலை நோக்கி நடந்தான். இன்னும் சித்ரா வரவில்லை. கால் இப்போது ஒரேயடியாக வலித்தது. இனி நிற்கமுடியாது போலிருந்தது. அவன் அங்கேயே தியேட்டர் வாசலில், படிக்கட்டுகளின் ஓரத்திலிருந்த ஒரு மேடை மீது அமர்ந்தான். கால்களை நன்றாக நீட்டிக் கொண்டான். அப்பாடா! தியேட்டருக்குள் இப்படி இளைப்பாற முடியாது. இவள் இன்னும் சற்றுத் தாமதமாகவே வரட்டும். இந்தப் படத்தைப் பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு சிரத்தையும் இல்லைதான். அவன் அந்த மிருகங்களைப் பற்றிய படத்துக்குக் கூட்டிப்போகிறேன் என்றால், அவளை அவன் ஒரு சிறு குழந்தையாகப் பாவித்து நடத்த முயல்வதாக, அவள் நினைக்கிறாள்.
நீ வேலைக்குப் போவானேன் என்று அவன் சொன்னால், அவன் ஒரு பிற்போக்கானவன் என்று அவள் நினைத்தாலும் நினைப்பாள்.
அவனை இவ்வளவு நேரம் காக்கவைத்ததற்காக அவன் கோபித்துக்கொண்டால், சிறிய விஷயத்தைப் பெரிது படுத்துவதாக நினைப்பாள்.
அவளுடைய பழக்கங்கள், அபிப்பிராயங்கள், ருசிகள் ஆகிய பலவற்றுடன் அவனுக்கு உடன்பாடு இல்லாமலிருந்த போதும் அவன் அவற்றுக்கு உடந்தையாக இருக்க வேண்டியிருக்கிறது; விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது.
அவனுக்குப் பிடிக்காத இந்தப் படத்தைப் பார்ப்பதற்காக அவனைவிடப் பத்து வயது சிறியவளான இவளுக்காக அரை மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்கும் தன்மீது அவனுக்குச் சிரிப்பும் இரக்கமும் எற்பட்டது. இப்படி அவனை எப்போதும் காக்க வைத்ததாலேயே ஒருத்தியை அவன் முன்பு நிராகரித்தான்.
தன்னைப் பற்றிய மிகையான நினைவுள்ளவளாகவும் உணர்ச்சியறிவை விட வார்த்தையறிவு அதிகமுள்ள வளாகவும் தோன்றியதால் முன்பு ஒரு பெண்ணிடமிருந்து அவன் மனம் கசந்து விலகிப்போக நேர்ந்திருக்கிறது. சந்திக்கச் சென்ற தருணங்களிலெல்லாம் அவனைக் காக்க வைத்துக் கொண்டிருந்தாள் என்பதால் அந்த இன்னொரு பெண்ணைப் பார்க்கப் போவதை அவன் நிறுத்தியிருக்கிறான். இப்போது இவள் தன்னைப் பற்றிய மிகையான நினைவிள்ளாதவளா என்ன? உணர்ச்சியறிவு அதிகமுள்ளவளா என்ன? இல்லை. இல்லவேயில்லை. ஆனால் இதை எல்லாமும், வேறு எதை எதையே கூட, இவளிடம் சகித்துக்கொள்ள அவன் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டு வருகிறான்.
இந்தச் சமரசத்தை முன்பே செய்துகொண் டிருக்கலாமென்று தோன்றியது. ஐந்து வருடங்கள் முன்பு. மூன்று வருடங்கள் முன்பு. இப்போதும் கூடச் செய்து கொள்வானேன்? செய்து கொள்ளாமலே இருக்கமுடியாதா?
அவனுக்கு அங்கிருந்து எழுந்து ஓட வேண்டும் போலிருந்தது. புரொபசரிடம், தன் பெற்றோரிடம், இந்தக் கல்யாணத்தை நிறுத்தச் சொல்ல வேண்டும் போலிருந்தது. புரொபசர், ஐ ஆம் ஸாரி. நான் அமைப்புகளின் எதிரி. பின் ஏன் உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் போவது போலக் காட்டிகொண்டேனென்றா சொல்கிறீர்கள்? எனக்குத் தெரியாது. புரொபசர் நிஜமாகத் தெரியாது. ஒருவேளை…
அது சரி; நீங்கள் என்னிடம் அமைப்புக்களை ஆதரித்துப் பேசியது எதனால்?உங்களுக்கு அவற்றில் நம்பிக்கை இருந்ததாலா? அல்லது…
அல்லது, என்னை மாட்டி வைக்கலாமென்றா? நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள். இல்லையில்லை, நானேதான் என்னை ஏமாற்றிக்கொண்டேன்…
இந்தக் கால் இன்று ஏன் இப்படி வலிக்கிறது? இதுவரை அவன் நடந்த நடையெல்லாம் சேர்ந்து வலிப்பது போலிருந்தது. ஓடின ஓட்டமெல்லாம் சேர்ந்து வலிப்பது போலிருந்தது. பெண்கள் பின்னால் நடந்த நடை, ஓடிய ஓட்டம், பெண்களை விட்டு விலகி ஓடிய ஓட்டம் இனி புதிதாக யார் பின்னாலும் ஓட முடியாது போலிருந்தது. இனி யாரையும் விட்டு விலகியும் கூட ஓட முடியாது போலிருந்தது.
தூரத்தில் சித்ராவும் அவள் தம்பியும் வருவது தெரிந்தது.
அவனுக்கு ஏற்பட்டது மகிழ்ச்சியா வருத்தமா என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

            மணி ஆறேகால். சித்ராவை இன்னும் காணோம். கணேஷ் பொறுமை இழந்து கொண்டிருந்தான். அவனுக்குக் காலை வேறு வலித்தது. உட்கார வேண்டும் போலிருந்தது.வேறு ஏதாவது சினிமாத் தியேட்டருக்கு அவர்கள் – சித்ராவும் அவள் தம்பியும் – போய் நின்றிருக்க மாட்டார்களே? ரிவோலி தியேட்டர் என்று நேற்று நான் தெளிவாகச் சொன்னேனா என்று அவன் நினைவுபடுத்திப் பார்த்தான். ஆம்; சொன்னான். நினைவிருக்கிறது. சித்ரா பார்க்க விரும்பியதும் இந்தப் படத்தைத்தான். ஒரு வாரத்திற்கு முன்பு இதைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டபோது, பிளாஸாவில் ஓடிக்கொண்டிருந்த – ஆப்பிரிக்கக் காடுகளி லுள்ள வெவ்வேறு மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பழக்க வழக்கங்களைத் தத்ரூபமாகச் சித்தரிக்கிற – ஒரு படத்தைப் பார்க்கலாமென்று அவன் முதலில் யோசனை கூறியது உண்மைதான். ஆனால் சித்ரா அந்தப் படத்தை விட ரிவோலி படத்தைத்தான் பார்க்க விரும்புவதாகக் கூறி விட்டாள். இதுவும் நல்ல படம்தான். வெளிநாட்டுப் படம்தான். இது மனிதரைப் பற்றியது. மணமான ஆண் மனைவியைத் தவிர இன்னொரு பெண்னை நேசிக்கத் தொடங்கும்போது எழும் பிரச்னைகளைப் பற்றியது.-ஆண், பெண், நேசம்!கணேஷ் தன்னையுமறியாமல், ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டான்.

 

        மறுபடி கண்களைத் திறந்தான். எடைகாட்டும் யந்திரத்தின் அருகில் அந்தச் சிவப்புப் புடவைக்காரி இன்னமும் நின்றிருந்தாள். அவனைப் போல அவளும் யாருக்காகவோ காத்திருக்கிறாள் போலும். அவ்வப்போது அவன் பார்வை அவள் பக்கம் இழுபட்டது. போல, அவள் பார்வையும் அவன் திசையில் பளிச் பளிச்சென்று ஒரு கணம், அரைக்கணம் நிலைத்து நகர்ந்தது. பரிச்சயமில்லாததால், நாங்களிருவரும் இந்தப் பார்வையின் மூலம் ஓராயிரம் இனிய கற்பனைகளை உருவாக்கிக் கொள்ள முடிகிறது என்று அவன் நினைத்தான். என்னைப் பற்றிய அவள் கற்பனை; அவளைப் பற்றிய என் கற்பனை – மாலை வெய்யிலில் நடைபாதையிலிருந்து தியேட்டர் வாசல் வரை விரித்திருந்த ஒரு ஒளிப்பாய் மீது அவள் நின்றிருந்தாள்.

 

 

      வெய்யிலின் ஒளியில் மினுமினுத்த அவளுடைய புடவையும் கைப்பையும், சிலும்பி நின்ற அவளுடைய தலை மயிர்; எடை யந்திரத்தின் மேல் விழுந்திருந்த அவளுடைய நிழல்; அவ்வப்போது அவள் தன் கைக்கடிகாரத்தைக் கவனித்த விதம், மேலும் கீழுமாகப் பார்வையை அலைய விட்ட விதம் – எல்லாமே ஒரு விசே ஷ அழகு பொருந்தியதாக அவனுக்குத் தோன்றின. அரூபமாக அவனுள் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்மையின் அம்சங்கள் – இனி தன்னால் எடுக்கவோ கோர்க்கவோ முடியாதென அவன் கைவிட்டு விட்டிருந்தவை – திடீரென ரூபம் கொண்டது போலிருந்தது, முழுமை பெற்றது போலிருந்தது. இவள்தான், ஆம் இவள்தான். இவளைத்தான் அவன் தேடிக் கொண்டிருந்தான். அப்பாடா! கடைசியில், ஆனால்-அவனுக்கு திடீரென சோர்வும் துக்கமும் உண்டாயிற்று. இப்போது இவளைப் பார்த்து என்ன பிரயோஜனம்! இரண்டு வருடங்கள் முன்பு, ஒரு வருடம் முன்பு, அல்லது குறைந்தபட்சம் ஒரு மாதம் முன்பு, அப்போது சித்ராவை மணப்பது நிச்சயமாகியிருக்கவில்லை. அப்போது அவன் சுதந்திர மானவனாயிருந்தான். ஆனால் இனிமேல் இல்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு நிச்சயமாக இல்லை. அவனுக்கும் சித்ராவுக்கும் திருமணம் நடக்கப்போகிறது, அடுத்த வாரம்.எல்லா நிலைகளையுமே ஒருவன் சேர்ந்தாற்போல அனுபவிப்பதும்தான் எப்படி சாத்தியமாகும்? இவ்வளவு நாட்கள் அவன் கல்யாணம் செய்து கொள்வதை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தான். எந்தவிதமான முடிவுக்கும் வராமலிருந்தான்.

 

       பிறகு திடீரென்று ஒரு மாதம் முன்பு முடிவு செய்தான் சித்ராவை மணப்பதாக. இது அவசரமான முடிவாயிருக்கலாம். சூழ்நிலைகள் அவன் மேல் திணித்ததா யிருக்கலாம். எப்படியோ, இது ஒரு முடிவு. ஒரு ஆரம்பம். நிச்சயமற்ற நிலையிலிருந்து விடுபடுவதற்காக (அதற்கு மாற்றாக) அவன் வலிந்து ஏற்றுக் கொள்ளும் ஒரு நிச்சயம், ஒரு ஸ்திரமான ஏற்பாடு. எல்லா ஏற்பாடுகளையும் போல இந்த ஏற்பாட்டிலும் சில சௌகரியங்கள் இருக்கின்றன. சில சங்கடங்களும் இருக்கின்றன. ஏற்பாடுகளை-தன்னுடன் தானே செய்து கொள்ளும் சமரச உடன்படிக்கைகளை- தீவிரமாக எதிர்த்து வந்திருப்பவனான அவன், இதோ, இன்னொரு ஏற்பாட்டில் சிக்கிக்கொள்ளப் போகிறான். பத்தோடு பதினொன்று…..பத்தோடு பதினொன்றா? ஆமாமுந்தான். இல்லையும்தான். தன் வாழ்க்கையின் பல ஏற்பாடுகளுடன் இதையும் ஒன்றாக ஏற்றுக்கொண்டால் இது பத்தாவதாகவோ பதினொன்றாவ தாகவோ இருக்கலாம். ஆனால் உண்மையில் இது மற்ற எந்த ஏற்பாட்டையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததல்லவா? அவனை மிக அதிகமாக பாதிக்கப் போகும் ஒன்றல்லவா? மேலும் இந்த ஏற்பாட்டின் விசேஷமே (அல்லது துர்ப்பாக்கியமே) இதில் பத்து அல்லது பதினொன்றுக்கு வழியில்லை என்பதுதான். அவன் வாழும் சமூகத்தில், இவ்வகை ஏற்பாட்டில் ஒன்றே ஒன்றுதான் ஒருவனுக்கு ஒரு சமயத்தில் அனுமதிக்கப்படுகிறது. இதே ஏற்பாடு வெற்றிகரமாக அமையலாம்.

 

        அமையாமலும் போகலாம்- அறிவு வளர்ச்சிக்காகப் பள்ளிக்கூடத்துக்கும் கல்லூரிக்கும் செல்லுதல், வயிற்றுப்பாட்டுக்காக ஏதாவது ஒரு ஸ்தாபனத்தில் குறிப்பிட்ட ஒரு வேலையை தினசரி செய்து கொண்டிருத்தல், சிற்றுண்டிக்கும், சாப்பாட்டுக்கும் ஹோட்டல் காரரையும், ரஞ்சகத்திற்கு ரேடியோவையும் சினிமா தியேட்டரையும் வாரப் பத்திரிகைகளையும், போக்குவரத்துத் தேவைகளுக்காக அரசாங்கப் போக்குவரத்தையும் நம்பி யிருத்தல் முதலிய ஏற்பாடுகளில், அந்த ஏற்பாட்டில் நமக்கு அசிரத்தையோ அவநம்பிக்கையோ ஏற்படும் போது அதனுடன் நமக்கு உள்ள சம்பந்தத்தைத் துண்டித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. திருமணம் என்ற ஏற்பாட்டில் இத்தகைய வாய்ப்பு இல்லை. சட்டப்பூர்வமாக இருக்கலாம். சமூகப்பூர்வமாகக் கூட இருக்கலாம். ஆனால் அவன் ரத்தத்தில் ஊறியிருந்த சம்பிரதாய பூர்வமாக இல்லை. சம்பிரதாயங்கள் மீறப்படக் கூடாதவை என்பதல்ல. ஆனால் இந்த மீறல் எந்த அளவு அவனைக் காயப்படுத்தும் அல்லது காயப் படுத்தாமலிருக்கும் என்பதே பிரச்னை. அவன் வளர்ந்த சம்பிரதாயம், சூழ்நிலை ஆகியவற்றின் பல அம்சங்களை அறிவு பூர்வமாக அவன் வெறுத்து வந்தாலும், உணர்ச்சி பூர்வமாக அவன் அவற்றுடன்-அவனையுமறியாமல்- சம்பந்தப்பட்டிருக்கலாம்.

 

         வளரும் குழந்தைகள் தம் தாய்க்கெதிராக வெளிப்படுத்தும் அதிருப்தியும் வெறுப்பும் பல சமயங்களில் தாயின் அரவணைப்புக்கான அவர்களுடைய ஏக்கம், பாதுகாப்பற்ற உணர்ச்சி முதலியவற்றை வித்தாகக் கொண்டிருப்பதைப் போல், அவனுடைய வெறுப்பு உண்மையில் அவனுடைய பிரியத்திலிருந்து எழுந்ததாக இல்லாமலிராதென்பது என்ன நிச்சயம்?ஆம். உணர்ச்சி வேர்கள் அறிவு வேர்களை விடத் தொன்மையானவை, ஆழமானவை. உணர்ச்சிதான் உரைகல். உணர்ச்சிதான் வழிகாட்டி.ஆனால் உணர்ச்சிகள் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவை. வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு திசைகளில் பாயும் தன்னுடைய பிரியத்தையும் சரி, வெறுப்பையும் சரி, அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிரியத்தை வெறுப்பாகவும் வெறுப்பைப் பிரியமாகவும் தப்பர்த்தம் செய்து கொள்கிறோமோ என்று கூடச் சில சமயங்களில் தோன்றிற்று. தன்னுடைய உணர்ச்சிகளை இப்படியென்றால் பிறருடைய உணர்ச்சிகளைப் பற்றி என்ன சொல்வது? அவன் மீது பிரியமும் அக்கறையும் உள்ளவர்கள் என் அவன் நினைத்திருந்தவர்கள் பலர் ஒருவர் பின் ஒருவராக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவனை வஞ்சித்தார்கள். அவர்களுடன் அவன் வீணடித்த பல தருணங்களுக்காக அவனைப் பச்சாதாபப்பட வைத்தார்கள்.

 

       பிற்பாடு பரிசுத்தமான அன்பைக் கூடப் பரிசீலனைக் குள்ளாக்கும் கோழையாக அவன் மாறினதற்கு அஸ்திவார மிட்டார்கள். இந்தப் பிந்தைய கட்டத்துக்கு முந்தின கட்டங்களும் தைரியமுள்ளவையாக இருக்கவில்லைதான். கூச்சம், தயக்கம், தன்னம்பிக்கையின்மை. கல்லூரியில் அவனுக்காகச் சிரித்தவளின், நடந்தவளின், சமிக்ஞைகளைச் சாத்தியக் கூறுகளாகவும், சாத்தியக் கூறுகளை நிச்சயங்களாகவும் மாற்ற இயலாத தன்னம்பிக்கையின்மை. அவன் வேலை பார்த்த தினசரியில் அவன் மனதை மிகவும் கவர்ந்த ஒருத்தியிடம் தன் நேசத்தை வெளிப்படுத்த இயலாமல் தடுத்த கூச்சம், வீறாப்பு. ஒரு நாள் மாலை இந்தக் கூச்சத்தை அவள் தணிக்க முயன்றபோது, அவனுடைய ஆசையின் வேகமும் புரிந்து கொள்ள முடியாமல், தணிந்து போயிற்று. ஒரே மாலை! தன்னிடம் அவனுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது போலிருந்தது. ஒவ்வொரு பளிச்சிடும் பார்வையின் ஓரத்திலும் ஒரு பெரும் சூழ்ச்சியின் வித்து; ஒவ்வொரு வெடிக்கும் சிரிப்பின் விளிம்பிலும் ஓராயிரம் வெடிக்காமல் (சாதுரியமாக) அமுக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சி கள், குரோதங்கள், துவேஷங்கள்.இனி எந்தப் பெண்ணையுமே அவன் ஆழ்ந்து நேசிக்க முடியாது போலிருந்தது. இனி எவளும் இதமான நிரந்தரமான பிணைப்பு ஏற்படுத்திக் கொள்ளத் தூண்டும் கற்பனைகளை அவனில் உருவாக்க முடியாது போலிருந்தது. கற்பனைகளற்ற சூன்யத்தின் தகிப்பு அவனுடைய மாலை நேரங்களையும் இரவுகளையும் பயங்கரமானதாகச் செய்தது. பகல் நேரங்களில் ஒரு மௌடிகமான – வரவழைத்துக் கொள்ளப் பட்ட — வெறியுடனும் ஆர்வத்துடனும் அவனைத் தன் வேலையில் ஈடுபடச் செய்த. அந்தத் தினசரியில் வேலை பார்த்த ஸப் எடிட்டர்கள் எல்லாரிலும் அவன்தான் மிகவும் கெட்டிக்காரனாகக் கருதப்பட்டான்.

 

       சீஃப் ஸப் அதிகமான ‘காபி’களை அவனுக்குத்தான் “மார்க்” செய்தார். செய்திகளைப் பிரசுரத்துக்கேற்ற முறையில் வெட்டுவதிலும் திருத்துவதிலும் பொரத்தமான தலைப்புகள் அளிப்பதிலும் ஒரு யந்திரத்தின் ஒழுங்கையும் லாவகத்தையும் அவன் பெற்றிருந்தான். அந்த யந்திரம் போன்ற இயக்கத்தில் அவன் தன்னைத்தானே இழக்க விரும்பியது போலிருந்தது, மறக்க விரும்பியது போலிருந்தது. இது சீஃப் ஸப்புக்கும் சரி, நியூஸ் ரூமிலிருந்த மற்றவர்களுக்கும் சரி, சௌகரியமாகவே இருந்தது. எந்த இடத்திலும் வேலை செய்வதைத் தவிர்க்க விரும்புபவர்களே பெரும்பாலும் அதிகம் இருப்பதால், வேலையை வரவேற்கும் ஒரு பிரகிருதி இந்தப் பெரும்பான்மையோரின் மீட்சிக்கு உதவுகிறான். அவர் களுடைய நன்றிக்குப் பாத்திரமாகிறான். கிரைம் ஸ்டோரியா? கணேஷ். விமான விபத்தா? கணேஷ். கோதுமை உற்பத்தி, எஃகு ஏற்றுமதி போன்ற புள்ளி விவரங்கள் நிறைந்த-கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு பார்க்க வேண்டிய சமாசாரம்?கணேஷ், கணேஷ், கணேஷ்.அவர்கள் பார்த்த கணேஷ் பிசிரில்லா, மனித தாகங்கள், பலவீனங்கள் யாவும் இற்றுப்போன, ஒரு யந்திரம். தன்னைப் பற்றிய அவர்களுடைய இந்த உருவத்தில் தன்னை ஒளித்துக் கொள்வது அவனுக்கும் இதமாகவும் பாதுகாப்பாகவும் தான் இருந்தது. உள்நாட்டு விவகாரங்கள், உலகெங்கிலுமுள்ள மிகமிகப் பெரிய புள்ளிகளைப் பற்றிய செய்திகள், எல்லாவற்றையும் “எடிட்” செய்யும் உரிமை பெற்றிருந்தவனான தான், பெரும் வல்லரச்சுத் தலைவர்களை விடவும் பலம் பொருந்தியவனென்ற மயக்கமும் அவனுக்கு அவ்வப்போது ஏற்படுவதுண்டு. ஆனால் தன்னிடமிருந்தே ஒருவன் ஒளிந்து கொள்வது எந்த அளவுக்குச் சாத்தியமானது?

 

        அவனைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த கிட்டத்தட்ட அவனுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் போல் தோன்றிய இளம் ஸப் எடிட்டர்கள், அந்தக் குழுவிலிருந்த பெண்பாலருடன், அரட்டைகளிலும், சீண்டல்களிலும் சல்லாபங்களிலும் அவ்வப்போது ஈடுபடு வார்கள்.அவன் மட்டும் முப்பது வயதிலேயே ஐம்பது வயசுக்குரிய அசிரத்தையுடனும் விலகிய போக்குடனும் அமர்ந்திருப்பான். அந்த இளைஞர்கள், வெகுளித்தன மாகவோ விஷமமாகவோ அவனைக் கணிக்க முற்பட்டார்கள். சாமியார், வேதாந்தின், பெண் வெறுப்பன். அவன் தனக்குள் அமுக்கி அமுக்கி வைத்துக் கொண்டிருந்த எது எதுவோ இத்தகைய தருணங்களில் உசுப்பப்படும். இந்த உசுப்புக்கு வடிகால் இல்லாமல் அவன் திணறுவான். முன்பு அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயன்றபோதும் பிறர் இந்த வெளிப்பாடுகளை அவமதித்து அவனைக் காயப்படுத்தினார்கள்; இப்போது, அவன் தன்னை ஒடுக்கிக் கொள்ள முயலும் போதும் ஏனோ இவர்கள் காயப்படுத்துகிறார்கள் என்று குமுறுவான்.பிறகுதான் அவன் மாலை நேர டியூட்டிக்கு தன்னை மாற்றிக் கொண்டான். இளைஞர்கள்-குறிப்பாகப் பெண்கள்- இந்த டியூட்டிக்கு வர விரும்புவதில்லை. திருமண வாழ்க்கையில் சலிப்புற்ற சம்சாரிகள், அவனைப் போன்ற இறுகிப் போன பிரம்மச்சாரிகள் ஆகியோர்தான் மாலை நேர டியூட்டிக்குப் பெரும்பாலும் வருவார்கள்.

 

         இவர்களிடையே அவன் சற்று ஆசுவாசமாக உணர முடிந்தது. சம்சாரிகள், “கல்யாணம் செய்து கொள்ளாதேயப்பா!” என்று அவனுக்கு உபதேசிப்பார்கள். பிரம்மச்சாரிகள், சில சமயங்களில் கிளர்ச்சிக்காகப் பயன்படுத்திய பிறகு மறந்து விட வேண்டிய லாகிரிவஸ்துவாகப் பெண்களை மதித்து, கொச்சையான பாஷையில், கொச்சையான ஹாஸ்யங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். பெண்களின், கல்யாணம் என்ற ஏற்பாட்டின் மீது இந்த தூஷணை மூலம் கணேஷுக்கு ஒரு வக்கிரமான இன்பமும் திருப்தியும் ஏற்பட்டது. அவனைக் கழிவிரக்கத்திலிருந்தும் சுய வெறுப்பிலிருந்தும் இந்தச் சூழ்நிலை காப்பாற்றியது. இப்படியே வாழ்நாள் முழுவதையும் கடத்திவிடலாமென்ற மன உறுதியும் நம்பிக்கையும் கூட அவனுக்கு ஏற்பட்டது. நள்ளிரவுக்கு மேல் டியூட்டி முடியும். அவன் தன் அறைக்குப் போவான். ஹோட்டல்காரர் காரியரில் கொண்டு வைத்திருக்கும் சாப்பாட்டைச் சாப்பிடுவான். தூங்குவான். சில இரவுகளில் நண்பர்களுடன் பிரஸ் கிளப்புக்கோ வேறு எங்காவதோ சென்று நன்றாகக் குடித்து விட்டுப் பிதற்றித் தள்ளுவான், பாடித் தள்ளுவான். தன்னுடைய மனதின் உட்புறத்தில் தன்னையுமறியாமல் சேர்ந்திருக்கக் கூடிய மென்மையான தாகங்களை மதுவினால் கழுவித் துப்புரவாக்கி வெளியே கொட்ட முயலுவது போலிருக்கும் அது.மனதைக் கூட இப்படியெல்லாம் ஏமாற்றிவிடலாம், உடலை ஏமாற்ற முடிவதில்லை. அதன் நமைச்சலைப் பொறுக்க முடிவதில்லை. இந்த நமைச்சலைத் தீர்ப்பதற்காக, அதற்கென உள்ள இடங்களுக்கு, இந்த இடங்களுக்குச் செல்லும் வழக்கமுடையவர்களுடன் அவன் ஓரிரு தடவைகள் சென்று வந்தான். ஆனால் இந்த அனுபவங்கள் அவனுக்கு நிறைவளிப்பதாயில்லை.

 

        வெறுப்பும் கோபமும்தான் ஏற்பட்டது-தன் மேல், தன்னை அழைத்துச் சென்றவர்களின் மேல், அந்த இடங்களில் இருந்த பெண்கள்மேல். தான் ஒரு யந்திரமாக இல்லையென்பதே அவனுடைய கோபத்துக்குக் காரணமாயிருக்கலாம்; பெண்ணை ஸ்பானர், ஸ்க்ரூ டிரைவர் போன்ற ஜடக் கருவியாகத் தேவையுள்ள சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக் கொண்டு பின் அவளுடன் சம்பந்தமில்லாமல் இயங்கக் கூடிய யந்திரம்.யந்திரமில்லையென்றால் பின் என்ன அவன்? அவன் வேண்டுவதென்ன? அவனுக்கு எதுவும் விளங்கவில்லை. விளங்க வேண்டும் போலிருந்தது, அதே சமயத்தில் விளங்காமலிருந்தால் தேவலை போலவும் இருந்தது. புதிய பரிசோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அதே சமயத்தில் முந்தைய அனுபவங்களின் பின்னணியில் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ளத் தயக்கமாகவும் இருந்தது. “நானும் உங்கள் வழிக்கு வரவில்லை. நீங்களும் தயவு செய்து என் வழிக்கு வராதீர்கள்” என்று மானசீகமாகப் பிற மனிதர்களுடன்-குறிப்பாகப் பெண்களுடன்- ஒப்பந்தம் செய்து கொண்டு, அவன் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வந்தான்.இத்தகையதொரு கட்டத்தில்தான் அவன் முதன் முதலாக சித்ராவைச் சந்திதான்; ஒரு நாடக விழாவில்.

 

        சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு நாடகக் குழுவினரால் நடிக்கப்பட்ட சில தமிழ் நாடகங்கள்; மாலை நேர டியூட்டி காரணமாக ஒரே ஒரு நாள்தான் அவனால் போக முடிந்தது. அதுவும் ஒரு நண்பன் மட்டுக் அன்று அங்கே அழைத்துச் சென்றிராவிட்டால், அவன் சித்ராவைப் பார்த்திருக்க மாட்டான். அவளுடன் பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள முயன்றிருக்க மாட்டான். அவளுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக ஆகியிருக்க மாட்டான்-சித்ராவின் எதிர் காலத்தை அவனுடையதுடன் பிணைக்கத் தயாராகுமளவுக்கு எதிர் காலம்…..கணேஷ் மீண்டும் பெருமூச்சு விட்டான். அந்தச் சிவப்புப் புடவைக்காரியின் முகத்தில் திடீரென்று ஒரு புன்னகை தோன்றியது. தன்னைப் பார்த்துத்தானோ, என்ற நினைப்பில் ஒரு கணம் அவன் இதயம் படபடத்தது. இல்லை; அவள் அவனுக்கும் அப்பால் யாரையோ பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் திரும்பினான். சாலையில் அப்போதுதான் வந்து நின்றிருந்த ஆட்டோவிலிருந்து ஒரு இளைஞன் இறங்கிக் கொண்டிருந்தான்! ஆட்டோ டிரைவரிடம் இரண்டு ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தான். டிரைவர் சில்லறையில்லை என்று கூறியிருக்க வேண்டும். அவன் சிவப்புப் புடவையைப் பார்த்து ஏதோ சைகையால் தெரிவித்தான். அவள் அவன் பக்கம் நடந்து சென்று, எவ்வளவு வேண்டுமென்று விசாரித்து. தன் கைப்பையைத் திறந்து சில்லறை எடுத்து டிரைவரிடம் கொடுத்தாள்.

 

       பிறகு அவன் அவள் இடுப்பைச் சுற்றிக் கையை வளைத்து அணைத்துக் கொள்ள இருவரும் கணேஷைக் கடந்து தியேட்டருக்குள் மெல்ல நடந்து சென்றார்கள்; அவனுக்குப் பொறாமையாயிருந்தது….அன்றும் இப்படித்தான். அவனும் நண்பனும் நாடகத்துக்கு துவக்க நேரத்திற்கு மிகவும் முன்பாகவே கொட்டகையை அடைந்துவிட்டதால் வெளியே நின்றவாறு சிகரெட் குடித்துக் கொண்டிருந்தார்கள்; வருகிற பெண்களின் மேல் பார்வையை வீசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராமதுரை தன் குடும்பத்துடன் டாக்ஸியில் வந்து இறங்கினார். டாக்ஸிக்காரன் அவர் நீட்டிய பத்து ரூபாய் நோட்டைப் பார்த்து (சில்லறை இல்லையென்று?) கையை விரித்தான். அவர் பார்வை கொட்டகை வாசலில் நின்ற கூட்டத்தில் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடியது. கணேஷ்தான் முதலில் அவர் கண்ணில் தட்டுப்பட்டான்.அவர் அவனருகில் வந்தார். “ஹலோ!” என்று இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள். அவனுடைய தினசரியின் அலுவலகத்திற்கு அவர் ஒரு முறை வந்தபோது அவன் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தான். அதன் பிறகு சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் ஒரு வார்த்தை. இருவார்த்தை பேசிக் கொள்ளாமல் இருந்ததில்லை. அவர் அவனிடம் விஷயத்தை விளக்கி, எட்டணா வாங்கிக் கொண்டார்.“அப்புறம் தருகிறேன்” என்றார்.“பரவாயில்லை,ஸார்!”அவர் டாக்ஸிக்காரனிடம் திரும்பிச் சென்றபோது அவன் பார்வை அவரைப் பின் தொடர்ந்தது. அதே சமயத்தில் டாக்ஸியருகிலிருந்து ஒரு பார்வை அவன் பக்கம் மிதந்து வந்தது; சித்ராவினுடையது.

 

        இடைவேளையின்போது அவன் காப்பி ஸ்டாலில் தன் நண்பனுடன் நின்றிருந்தபோது, சித்ராவும் தன் தம்பியுடன் அங்கே வந்தாள். அவள் தம்பி கணேஷ் அருகில் வந்து அவனிடம் எட்டணாவை நீட்டினான். கணேஷ் “ஓ இட்ஸ் ஆல்ரைட்” என்று அதை வாங்காமலிருக்க முயன்றான். “இல்லையில்லை; ப்ளீஸ், யூ மஸ்ட் ஹாவ் இட்!’ என்று அவள் வற்புறுத்தி அவனை அந்த எட்டணாவை வாங்கிக் கொள்ளச் செய்தாள்.முதன் முதலாக அவள் அவனுடன் பேசியது அப்போதுதான்.அவள் குரலில், தோரணையில் இருந்த ஒரு நிச்சயமும் பிடிவாதமும் அவனை அந்தக் கணத்தில் கவர்ந்திருக்க வேண்டும். அந்தப் பதினேழு வயதுப் பெண்ணின் சந்தேகமோ சோர்வோ அற்ற நிச்சயம் அவனுக்கு ஏதோ ஒரு வகையில் இதமாக இருந்திருக்க வேண்டும். அந்த வாரம் முழுவதும் அவன் அவள் நினைவாகவே இருந்தான். ஞாயிற்றுக்கிழமை வந்தது. அவர்களுடைய தினசரியின் ஞாயிறு மலரில் நடந்து முடிந்திருந்த அந்த நாடக விழாவை விமர்சித்து புரொபசர் ராமதுரை ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்ததும் தன்மனதில் ஏற்பட்ட அழகிய சலனங்களை அவருடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலினால் உந்தப்பட்டுச் சென்றவன் போன்ற பாசாங்குடன், அவன் அன்று மாலை அவரைத் தேடிச் சென்றான்-ப்ரொபசர்,நான் உங்கள் வீட்டுக்கு வந்த அந்த முதல் நாள் உண்மையில் சித்ராவுக்காகத்தான் வந்தேன் என்பதை அன்று நீங்கள் ஊகித்திருப்பீர்களோ என்னவோ? ஆனால் பிற்பாடு உங்களுக்குத் தெரிந்துவிட்டது.உங்கள் மனைவிக்குத் தெரிந்துவிட்டது.

 

         பாபுவுக்குத் தெரிந்துவிட்டது.ஏன் உங்கள் வீட்டு நாய்க்குக்கூட தெரிந்துவிட்டது.நான் மிக உயர்ந்த இண்ட்லெக்சுவல் மட்டங்களில் உங்களுடன் பேசும்போது, அது ஒரு மூலையில் என்னைப் பார்தவாறு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு பல்லைக் காட்டிக் கொண்டு, பரிகசிப்பதுபோல இலேசாக தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கும்-இதெல்லாம் என்ன வீண் பேச்சு, நீ எதற்காக இங்கே வருகிறாயென்று எனக்குத் தெரியாதா என்று கேட்பது போல. பல சமயங்களில் அந்த நாயுடன் என்னை ஒப்பிட்டுக்கொண்டு பார்க்கும்போது எனக்கு என்மேலேயே சிரிப்பும் இரக்கமும் ஏற்படுவதுண்டு. அதற்கு அனாவசிய நடிப்புகள் கிடையாது. பேச்சுக்கள் கிடையாது. ஒரு பெண்ணின் மேல் ஆசை ஏற்பட்டால் அவளுடைய அப்பாவைப்போய் வசீகரிக்க அது முயல வேண்டியதில்லை.அவள் ஆயுள் காலம் முழுவதும் என்னிடம் பிரியமாக இருப்பாளா, என் போக்குகளை அனுசரித்து நடப்பாளா, சம்பிரதாயப் பிச்சுவாக இல்லாமலும் அதே சமயத்தில் சம்பிரதாயங்கள் மேல் காறி உமிழ்பவளாக இல்லாமலும் இருப்பாளா, என்றெல்லம் அது கவலைப்படத் தொடங்காது.பெரும்பாலான பிராணிகளைவிட அதிக ஆயுளைப் பெற்றிருந்தாலும், இந்த ஆயுளின்பெரும்பகுதியை அனாவசியமாக நடிப்புகளிலும் பேச்சுகளிலும் நினைவு களிலும் தானே மணிதர்களாகிய நாம் செலவிடுகிறோம்? நீங்கள் ஒரு முறை சொன்னதுபோல, கூட்டிக் கழித்துப் பார்த்தால் மனிதன் தன் வாழ்நாளில்செய்யும் உருப்படியான காரியங்கள் பல பிராணிகள் தம்முடைய குறைந்த ஆயுளில் செய்துமுடிக்கும் உருப்படியான காரியங்களைவிடக் குறைவனதாகக்கூடவே இருக்கலாம்…ஆம். அந்த நாயைக் கண்டு அவனுக்குப் பொறாமையாக இருந்தது. அதைப் பார்த்ததுமே அவனுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்த தினங்கள் உண்டு.

 

          அதே சமயத்தில், அது அவன் நன்றிக்குப் பாத்திரமான தருணங்களும் இருக்கத்தான் செய்தன. உதாரணமாக, அந்த முதல் நாளன்று. அவன் சென்ற போது ராமதுரை வீட்டிலிருக்கவில்லை. அவருடைய மனைவியும் மகள் சித்ராவும்தான் இருந்தார்கள். “உட்காருங்கள்; வந்துவிடுவார்!” என்று அவர்கள் அவனை வரவேற்று உட்கார வைத்தார்கள். அவன் கதவைத் தட்டியவுடனேயே குலைக்கத் தொடங்கியிருந்த நாய், அவன் உள்ளே வந்து நாற்காலியில் உட்கார்ந்ததும் அவன் கை, கால், எல்லாவற்றையையும் மோந்து பார்க்கத் தொடங்கியது. “உஷ்! டாமி, சும்மாயிரு” என்று சித்ராவும் அவள் அம்மாவும் நாயை அவனுக்கு உபத்திரவம் கொடுப்பதிலிருந்து தடுக்க முயன்றார்கள். “பரவாயில்லை” என்று அவன் தன் சலிப்பையும், அருவருப்பையும் அடக்கிக் கொண்டு டாமியின் முகம், கழுத்து, முதுகு யாவற்றையும் வக்கணையாகத் தடவிக் கொடுத்தான். அது இதமாகக் காட்டிக் கொண்டு நின்றது. அவன் தொடர்ந்து தடவிக் கொண்டேயிருந்தான். நாய்களை நேசிக்கும் அன்புமயமான, தோரணையற்ற இளைஞனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு அவர்களுடைய நன்மைதிப்புக்குப் பாத்திரமானான். வார்த்தைகள் கூட இதைச் சாதித்திருக்க முடியாது. அன்னியோன்னியமான சூழ் நிலையை உருவாக்கியிருக்க முடியாது.டாமிதான் சம்பாஷணைக்கும் வித்திட்டது. “எங்க வீட்டிலேயும் இப்படி ஒரு நாய் இருந்தது” என்றான் அவன்.“இப்ப இல்லையா?” என்றாள் சித்ரா. “திடீர்னு ஒரு நாள் அது ஓடிப்போயிடுத்து”.

 

          “ஐயையோ; ஏன் அப்படி?”அது உண்மையில் அவர்களுடைய நாயே இல்லை என்று அவன் விளக்கினான். அவனுடைய அப்பாவின் நண்பர் ஒருவருக்கு சொந்தமான நாய் அது. அந்த நபருக்கு டில்லியிலிருந்து மாற்றலானபோது நாயை அவர்கள் வீட்டில் விட்டுச் சென்றார். முதலில் அது சரியாகத்தான் இருந்தது. பிறகு திடீர் திடீரென்று மூன்று நாள், நாலுநாள் டெல்லியில் எங்கெல்லாமோ சுற்றிவிட்டு வரத் தொடங்கியது. எங்கே போய்விட்டு வருகிறதென்று தெரியாது. கடைசியில் ஒருநாள் என்றென்றைக்குமாக ஓடிப் போய்விட்டது.“பாவம், பழைய எஜமானர்களை நினைச்சிண்டிருக்கும் போலிருக்கு” என்றாள் சித்ராவின் அம்மா.“உங்கள் வீட்டிலே அதை யாராவது அலட்சியப்படுத்தினாங்களோ, என்னவோ-அதாவது நீங்க இல்லை. வேறே யாராவது” என்றாள் சித்ரா. தன் வீட்டு மனிதர்களின் இயல்பைப் பற்றிச் சாதுரியமாக அறிந்து கொள்ள முயலுகிறாள் என்று அவன் நினைத்தான்.“அதெல்லாம் எவ்வளவோ பிரியமாகத்தான் வச்சிண்டிருந் தோம்; ஒருவேளை பிரியம் தாங்காமல் ஓடிப் போயிருக்கலாம். என் தங்கை, அதனுடைய கழுத்தைக் கட்டிக் கொஞ்சிண்டேயிருப்பா. எங்கம்மா பிரஸாதம் முதலாக அதுக்கு இட்டு விடுவா”அவன் சிரித்தாள். அவளைச் சிரிக்க வைத்ததில் அவனுக்குப் பெருமையாக இருந்தது.

 

         டாமி அவன் நேசிப்பது தன்னையல்லவென்று திடீரென்று உணர்ந்து கொண்டது போல அவன் தடவலை திரஸ்கரித்துவிட்டுத் தரையில் போய்ப் படுத்துக் கொண்டது. “டாமியை வேறு யார் வீட்டிலேயாவது விட்டால் அது என்ன செய்யும்னு யோசிச்சுப் பார்க்கிறேன்” என்றாள் மாமி.“எங்கேயும் விட மாட்டோம் அதை. நாம் எங்கே போனாலும் அது கூடவே வரும். இல்லையா டாமி?”என்று சித்ரா டாமியருகில் தரையில் உட்கார்ந்து அதைக் கொஞ்சினாள்.“இங்கிலீஷ்காரா ஊரைவிட்டுட்டுப் போறபோது நாயைச் சுட்டுக் கொன்றுடுவாளாமே எப்படித்தான் முடிகிறதோ?” என்று மாமி உடம்பைச் சிலிர்த்துக் கொண்டாள்.“கொடூரமான வழக்கம்” என்று அவன் ஒத்துக் கொண்டான். தன்னைப் போன்ற ஒரு ஸென்டிமென்டல் டைப்பாக அவனையும் அடையாளம் கண்டு கொண்டவள்போல, மாமி அவனைத் திருப்தியுடன் பார்த்தாள்.

 

        சித்ரா இங்கிலீஷ்காரர்களின் அந்த வழக்கத்தை ஆதரித்துப் பேசினாள். அவனைத் திண்டாட்டத்தில் சிக்க வைக்க விரும்பியவள் போல. அவன் உடனே அவன் பக்கம் பேசத் தொடங்குகிறானா என்று பார்க்க விரும்பியவள்போல.ஆனால் அவன் தன் முந்தின கருத்தையே மீண்டும் எதிரொலித்தான். தான் ஒரு இளிச்சவாயன் அல்லவென்று நிரூபித்து அவளுக்கு அவன் மேல் மதிப்பு ஏற்படச் செய்தான்.இப்போது யோசித்துப் பார்க்கும்போது அவ்வளவும் தவறாகத் தோன்றியது. அந்த முதல் நாளன்று அவன் நடந்து கொண்ட விதம் எல்லாமே. அவன் அவர்களுக்காக தன் இயல்புக்கு மாறான ஒரு வே ஷமணிந்திருக்க வேண்டாம். ஆனால் எது வே ஷம், எது வே ஷமில்லை? எது அவனுக்கு இயல்பற்றது? ஏதேதோ உந்துதல்களின் அடிப்படையில் எப்படிக்கெப்படியோ நம்மை ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்திக் கொள்கிறோம். இந்த உந்துதல்கள் உண்மையாயிருக்கிற வரையில் இந்த வெளிப்பாடுகளும் உண்மையானவைதாம். ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொன்று உண்மையாகத் தோன்றுகிறது. முக்கியமானதாகத் தோன்றுகிறது. நம்மை இயக்க வைக்கிறது. அப்படி நம்மை இயக்க வைக்கும் ஒவ்வொரு உண்மையையும் இறுதியில் ஒருநாள் பொய்யென உணர்ந்து நிராசையடைகிறோம். வேறு உண்மைகளில்–அப்படி அந்தக் கணம் தோன்றுபவற்றில்–தஞ்சமடைகிறோம்.

 

        மனித இயக்கத்தின், யத்னங்களின், அடிப்படையே இவ்வகைத் தோற்றங்கள் தாமே? பொய்கள் தாமே?கணேஷ் தலையை பலமாக ஒருமுறை குலுக்கிக் கொண்டான். தன் சிந்தனைகளின் தாக்குதலிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள விரும்பியவனைப் போல் இந்த சிந்தனைகள்தாம் நாளுக்குநாள் எவ்வளவு கூர்மையாகிக் கொண்டு வருகின்றன. அவனையும் அவன் வாழ்வில் சம்பந்தப்படுபவர்களையும் குத்திக் கிளறிப் பரிசீலனை செய்தவாறு இருக்கின்றன. இவ்வகைக் கூர்மையை நோக்கி என் சிந்தனைகள் மேற்கொண்ட படிப்படியான பயணத்தில், ப்ரொபசர், உங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.ஆனால் இந்தப் பயணத்தை மேற்கொள்ளாமலேயே இருந்திருக்கலாமென்று இப்போது சில சமயங்களில் தோன்றுகிறது.மணி ஆறரை. சித்ராவை இன்னும் காணோம். அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. தியேட்டர் வாசலிலிருந்த தர்வான் தன்னை விநோதமாகப் பார்க்கத் தொடங்கி யிருப்பது போலத் தோன்றியது. அவ்வப்போது “ஸ்பேர் டிக்கெட் இருக்கிறதா?” என்று வேறு சிலர் கேட்டு அவன் எரிச்சலைக் கிளப்பினார்கள். அலுப்புத் தாங்காமல், ஒரு மாறுதலுக்காக, அவன் அங்கு உட்கார்ந்திருந்த ஒரு பாலிஷ்காரச் சிறுவனிடம் சென்று ஷூவைப் பாலிஷ் போட்டுக் கொள்ளத் தொடங்கினான். “டிக்கெட் கிடைக்கவில்லையா ஸாப்?” அவன் விளக்கினான்.“ரொம்ப நல்ல படம் ஸாப்”.“நீ பார்த்தாகி விட்டதா”“மூன்று தடவைகள் ஸாப்”“அவ்வளவு நல்ல படமா?”“எனக்கு அந்த ஹீரோயினை ரொம்பப் பிடித்திருக்கிறது ஸாப்”கணேஷுக்கு அந்தச் சிறுவன் மீது பொறாமை ஏற்பட்டது. அந்த ஹாலிவுட் நடிகை மூலம் அவனால் பெற முடிகிற கிளர்ச்சி குறித்து, நிறைவு குறித்து.

 

         பரிசுத்தமான இந்தக் கிளர்ச்சியையும் நிறைவையும் இனி தன்னால் என்றும் பெற முடியப் போவதில்லை. இந்த நடிகை மூலமாகவோ, அவனுடைய மயக்கங்கள் சிதைந்து விட்டிருந்தன. அந்த நடிகையைப் பற்றிய மயக்கம். அவள் அவனுக்கு (ஒரு காலத்தில்) எந்தப் பெண்மையின், வாழ்க்கை முறையின், பிரதிநிதித்துவமாக விளங்கினாளோ அந்தப் பெண்மை யைப் பற்றிய வாழ்க்கை முறையைப் பற்றிய மயக்கம், மன விடுதலை பெற்ற ஆண்கள், பெண்கள், சுதந்திரமான காதல், சுதந்திரமான வாழ்க்கை இளமையில் சினிமா தியேட்டரில் அமர்ந்திருக்கையில் அவன் வாழ்க்கையிலும் இவையெல்லாம் சாத்தியமானவையாகத் தோன்றின. அவனுடைய பெற்றோர், சகோதர சகோதரியர் ஆகியோரிடமிருந்து வேறுபட்டவனாக அவனை உணரச் செய்து அவர்கள் மீது தினசரி அவனுள் வெறுப்புணர்ச்சியைப் பொங்கிப் பொங்கியெழ வைத்தன. அவர்களுடைய கேள்விகளற்ற அசட்டுத் திருப்தி காரணமாய், போலியான ஊன்றுகோல்கள் காரணமாய். ஏன் இந்தப் பொய்யான உறவுகள், என்று அலற வேண்டும் போலிருந்தது. இந்த அமைப்பை அடியோடு இடித்துத் தரை மட்டமாக்கி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் போலிருந்தது. அவனைத் தம்மைப் போன்ற சாமானியமானவனாக நினைத்த ஒவ்வொருவரையும், பின் ஏன் அவனால் அப்படியெல்லாம் செய்ய முடியாமல் போயிற்று? எங்கே அல்லது யாரால் அவனுடைய முயற்சிகள் பங்கப்படுத்தப் பட்டன? அல்லது அவனுள் ஒரு பகுதியே ஒவ்வொரு கணமும் அவனுக்கு எதிராக வேலை செய்து வந்ததா? பாலிஷ் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த அந்தச் சிறுவனைப் பார்க்கப் பார்க்க, இதுவரை அவன் ஈடுபட்ட பயணங்கள, தடங்கள், வெற்றி தோல்விகள் எல்லாமே முக்கியத்துவ மற்றவையாகத் தோன்றின.

 

          பையா, நீ என்னைவிட எவ்வளவோ பரிசுத்தமானவன். இந்தக் கணத்தில் நீ ஷூவுக்குப் பாலிஷ் போடுகிறவனாகவும் நான் அந்த ஷூவை அணிந்திருப்பவனாகவும் இருப்பதை என்னால் நியாயப் படுத்த முடியவில்லை. விதி? சமூக அமைப்பு? எப்படியோ, இந்த ஏற்பாடு எனக்குச் சௌகரியமாக இருக்கிறது. இதை எதிர்த்து நான் புரட்சி செய்யவில்லை. வேறு சில ஏற்பாடுகளுக்கெதிராக எப்படி நான் புரட்சி செய்ய வில்லையோ, அதே போல.டக்! என்று சிறுவன் தன் மரப் பெட்டியில் தட்டினான். காலை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்கு அடையாளமாக. கணேஷ் தன் இன்னொரு காலைப் பெட்டியின் மீது வைத்தான்.ப்ரொபசர், அன்று உங்கள் வீட்டில் நாயைப் பற்றிய சர்ச்சைக்குப் பிறகு நாங்கள் நாடகங்களைப் பற்றிய சர்ச்சையைத் தொடங்கினோம். எனக்கு அந்த நாடகங்கள் பிடித்திருந்தனவா என்று சித்ரா கேட்டாள். ஒரு நாள்தான் வந்தேன். அன்றைக்கு அசட்டுப் பிசட்டென்று இருந்தது என்றேன் நான். ஸ்டுபிட் மெலோட்ராமா, என்றாள் அவள். அது போன்ற வார்த்தைகளை அவள் உபயோகிக்கத் தொடங்கி ஓரிரண்டு வருடங்கள்துர்ன ஆகியிருக்க வேண்டும்; குழந்தை தான் புதிதாக அடைந்த ஒரு பொம்மையைத் தன் பழைய பொம்மைகளைவிட அதிகமாகச் சீராட்டி மகிழ்வதையும் அது குறித்துப் பெருமை கொள்வதையும் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சி அவள் சில ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியபோது எனக்கு ஏற்பட்டது. எனக்கோ வார்த்தைகள் சலித்துப் போயிருந்தன

 

           .திகட்டிப் போயிருந்தன. வார்த்தைகளில் நீச்சலடிப்பதுதானே என் வேலை? சித்ராவின் அம்மாவுக்கு சித்ராவுக்குத் தெரிந்திருந்த அளவு வார்த்தைகள் தெரிந்திருக்கவில்லை. ஆனால் உணர்ச்சிப்பூர்வமாக எங்களிருவரையும் விட அதிகமாக அந்நாடகங்கள் அவளைப் பாதித்திருந்தனவென்பதை எங்களுக்கு அவளால் உணர்த்திவிட முடிந்தது. அந்நாடகங்களில் சிலவற்றின்போது தன் அம்மா பிழியப் பிழிய அழுததைச் சித்ரா எடுத்துச் சொன்னாள். தமாஷாக. ஆனால் எனக்கு அந்த அழுகை மிகவும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரியதாகத் தோன்றியது. என் அம்மாவும் இப்படித்தான் சினிமாவுக்கோ டிராமாவுக்கோ போனால் அழுதுவிடுவாள். கதாபாத்திரங்கள் படும் கஷ்டங்களைப் பார்த்து என்றேன் நான். அப்படி தான் இல்லை என்று சித்ராவுக்குப் பெருமையாக இருந்தது. அது பெருமைக்குரியதுதானா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது.பிறகு நீங்கள் வந்தீர்கள். சம்பாஷணையில் கலந்து கொண்டீர்கள். நீங்கள் இல்லாத சமயத்தில் நான் வந்ததும், உங்கள் மனைவியுடனும் மகளுடனும் பேசிக் கொண்டிருந்ததும்., உங்களுக்கு முழுதும் திருப்தியளிக்கிற ஒரு சூழ்நிலையாக இல்லையென்பதை நான் நுட்பமாக உணர முடிந்தது.அவர்களை நீங்கள் முட்டாளாக்கியிருக்கலாம். என்னை ஆக்க முடியாது என்பது போல நீங்கள் நான் தெரிவித்த ஒவ்வொரு கருத்தையும் (வேண்டுமென்றே) எதிர்த்துப் பேசினீர்கள்.

 

         என் வாதங்களில் ஓட்டைகள் கண்டுபிடித்து என்னை வாயடைத்துப் போகச் செய்ய முயன்றீர்கள். ஓ! அந்த முதல் தடவையும், அதையடுத்து சில தடவைகளும் நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக என்னைச் சற்றுத் தொலைவிலேயே வைத்திருந்தீர்கள்! ஆனால் உங்களை நான் குற்றம் சொல்லவில்லை. என்னை உங்களிடம் அழைத்து வந்தது அறிவுப் பசிதானா என்று நீங்கள் சோதித்துப் பார்க்க விரும்பியது நியாயமே. உங்களுடன் பேசிய பிறகு, எனக்கும் சந்தேகம் உண்டாகத்தான் செய்தது – அதற்கடுத்த தடவைகளில், அறிவுப் பசிதானோ?அன்று நான் உங்களிடம் அந்நாடகங்களை ஆதரித்துப் பேசினேன். அவற்றை அறிவுப்பூர்வமாக மட்டும் அணுகுவது தவறாகுமென்றேன். அவற்றால் உணர்ச்சி பூர்வமாக நம் மக்கள் ஆறுதலும் நிறைவும் பெறுவதைச் சுட்டிக்காட்டி அந்த நிறைவைத்தான் நான் மதிக்கிறேனென்றும், வெறும் அறிவுத் தீனியை அல்லவென்றும் கூறினேன்.“அந்த நிறைவு ஒரு மயக்கமாக இருந்தாலுமா?” என்று கேட்டீர்கள்.“இருக்கட்டும்: வாழ்க்கையே ஒரு மயக்கம்தான்” என்றேன்.“நான் சொல்வது கொச்சையான மயக்கங்களைப் பற்றி என்றீர்கள். இரு பொருள்படப் பேசினீர்களோ என்னவோ!“எது கொச்சை, எது கொச்சையில்லை? இது பற்றிய ஒவ்வொருவர் கணிப்பும் வேறுபடலாமல்லவா?” என்றேன்.“நம்முடன் நாமே தொடர்பு கொள்ள உதவாதவை எல்லாமே கொச்சையான மயக்கங்கள்தான்” என்று நீங்கள் கூறினீர்கள். “அதாவது நம்மை நாமே உணர்ந்து கொள்ளத் தடையாக இருப்பவை”.“இந்தத் தடைப்படுதல் உறைக்க வேண்டாமா, எல்லோருக்கும்?”“நிச்சயம் உறைக்கும். நம் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு சூட்சுமமான உரைகல் இருக்கிறது; உணவுக்கென இருக்கும் நாக்கைப் போல உணர்வுக்கு ஒரு நாக்கு இருக்கிறது. இந்த நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் அபிப்பிராயங்களைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு மதிப்புக் கொடுக்கத் தெரியவேண்டும்.

 

            புஷ்டியாக இல்லாத சிலது பழக்கப்பட்டு விடுகின்றன. காபி, டீ, சிகரெட் மாதிரி; பரவாயில்லை; ஆனால் இதையே ஆகாரமாக வைத்துக் கொள்ள முடியாது. புஷ்டியையே அளவு கோலாக கொண்டாலும் சப்பென்று போய்விடும். ருசிக்காககவும்தான் சாப்பிட வேண்டியிருக்கிறது. மொத்தத்தில், சாப்பிடுவதை இனம் கண்டு கொள்ளத் தெரியவேண்டும். அதற்கு ஒரு பயிற்சியும் அனுபவமும்தான் தேவை. குழந்தைக்குக் கொடுக்கப்படுவதைப் போல இந்தப் பயிற்சி நமக்கு அளிக்கப்படவில்லை. வீட்டிலும் சரி, பள்ளிக்கூடத்திலும் சரி….நீங்கள் பேசிக்கொண்டே போனீர்கள். நான் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.அதன் பிறகு ஒவ்வொரு முறையும் நான் கலைந்த சுருதியுடன்தான் உங்களிடம் வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இந்த சுருதியை நீங்கள் பொறுமையாகச் சீர்படுத்தியிருக்கிறீர்கள். உச்ச கட்டத்துக்கு நம் சம்பாஷணையை அழைத்துச் சென்றிருக்கிறீர்கள்.எதைப் பற்றியெல்லாம் நாம் பேசினோமென்று யோசித்துப் பார்க்கும்போது எதைப் பற்றித்தான் நாம் பேசவில்லை என்று தோன்றுகிறது. நாடகங்களைப் பற்றி, நாயகனைப் பற்றி, தேசம், குடும்பம், திருமணம் என்ற உருவங்களைப் பற்றி, அமைப்புகள் பற்றி….தோல்வி அடைந்த என் உறவுகள், என் நேசங்கள் இவற்றை நான் புதிய கோணத்தில் பரிசீலனை செய்து பார்க்கத் தொடங்கினேன். எதிராளியின் கோணத்திலிருந்து தனிமையைப் பாதிக்காத துணை; நான் பயன் படுத்தப்படாமல் என்னால் பயன் படுத்தக்கூடிய அமைப்பு- இதைத்தானே நான் தேடி வந்திருக்கிறேன்.

 

        முரட்டுக் குதிரையாகத் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்த என்னை நீங்கள் வசமாக தாவிப் பிடித்து லாடமும் லகானும் பூட்டிவிட்டது போல எனக்குச் சில சமயங்களில் தோன்றுகிறது. வேறு சில சமயங்களில், என்ன பைத்தியக்காரத்தனம், குதிரையாவது, பிடிப்பதாவது என்று தோன்றுகிறது. ஒரு வேளை என் ஓட்டத்தில் நான் அடைந்த சோர்வும், உங்கள் வருகையும் ஒரு சேர நிகழ்ந்திருக்கலாம்.அதுவும் சாத்தியந்தான்.மனிதர்களிடம் நம்பிக்கையற்றுப் போயிருந்த எனக்கு மீண்டும் அவர்களிடம் நம்பிக்கை ஏற்படச் செய்தீர்கள். யாருக்கும் யாரிடமும் அக்கறையில்லையென்று விரக்தியடைந்திருந்த என்னை, அக்கறையுள்ளவர்களும் இல்லாமல் போகவில்லை என்ற ஆசுவாசம் பெறச் செய்தீர்கள். பத்து வருடங்கள் முன்பு உங்களைச் சந்தித்திருந்தால் என் வாழ்வின் திசையே மாறியிருக்கு மென்று நினைப்பேன், நான்.ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு சித்ராவுக்குப் பத்து வயதுகூட நிரம்பியிராது.வாழ்க்கை எவ்வளவு விசித்திரமான நிகழ்ச்சிகளை உருவாக்குகிறது. ஒன்றைத் தேடிச் செல்லும்போது இன்னொன்றைப் பெற வைக்கிறது! சித்ராவினால் ஈர்க்கப்பட்டு, நான் முதலில் உங்களிடம் வந்தேன். பிறகு உங்களுக்காகவும் வந்தேன்.ஒரு கட்டத்துக்குப் பிறகு, உங்களுக்காக மட்டுமே வந்திருப்பேனா?அதுதான் இப்போது என் சந்தேகம்.சித்ராவின் காரணமாகப் பல சமயங்களில் நமக்குள் சுருதி சேராமல் போயிருக்கிறது. சம்பாஷனை முயற்சிகள் தோல்வியடைந்து, இறுக்கமான மௌனங்களில் நாம் சிக்கிக் கொள்ள அவசரமாக நான் விடைபெற்றுச் செல்ல நேர்ந்திருக்கிறது.

 

        என் நோக்கங்களைப் பற்றிய உங்கள் சந்தேகம், எனக்கே என்மேல் சந்தேகம். “சித்ரா, பாக்கு இருக்கா? சித்ரா, இன்றைய பேப்பர் எங்கே?” என்று ஏதாவது ஒரு காரணத்தை வைத்து நான் வந்து உட்கார்ந்தவுடன் நீங்கள் சித்ராவைக் கூப்பிடுவீர்கள். அவளைக் குசலம் விசாரிக்க எனக்குச் சந்தர்ப்பம் அளிப்பீர்கள். சில சமயங்களில் எங்களிருவரையும் தனியே விட்டு எழுந்து போயும் இருக்கிறீர்கள்.ஏன் இந்த அவஸ்தை, அவளுக்காகத்தான் வருகிறாயென்றால் அதை அவளிடமோ என்னிடமோ சொல்லித் தொலையேன் என்று நீங்கள் எனக்கு உணர்த்த விரும்புவது போலிருக்கும் அது.நம்மிருவரிடையே சுருதி பேதம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது என்பதாலேயே நான் அந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண முயன்றிருக்கலாம். என் கருத்தை வார்த்தைப் படுத்தியிருக்கலாம்; உங்கள் சந்தேகத்தை அது ஏற்பட்ட ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஊர்ஜிதப் படுத்தியிருக்கலாம். என் பெற்றோரை நீங்கள் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கலாம். எல்லாம் எவ்வளவு சுருக்கமாக நடந்து விட்டது!அடுத்த வாரம் எங்களுக்குக் கல்யாணம்.ஆனால் ?எனக்கு ஒரு ஊன்றுகோலாக விளங்கியது சந்தேகங்களற்ற அவளுடைய நிச்சயம்தான், பரிசுத்தம்தான். ஆனால், நாங்கள் நுழையவிருக்கும் அமைப்பில் நிரந்தரத் தன்மையைப் பற்றிய பயம் காரணமாக அவளுடைய நிச்சயம் ஆட்டம் கண்டு வருவதை நான் பார்க்கிறேன். அவளுடைய நிச்சயம் அனுபவமின்மையினால் எழுந்ததென்ற ஞானோதயம் எனக்கு இப்போதுதான் உண்டாகியிருக்கிறது.

 

           என் குடும்பத்தினரைப் பற்றி ஊடுருவும் கேள்விகளை முன்பே அவள் கேட்டிருக்கிறாள். என் தாயைப் பற்றி, தங்கையைப் பற்றி… இப்போதும் அவர்களைச் சந்தித்த பிறகும் அவள் கேட்கிறாள். ஆனால், இப்போது அவள் விசாரணைகளில் ஒரு புதிய கவலையும் பயமும் தோன்றியிருகிறது! இந்தப் பயம் எனக்கு வருத்தத்தையளிக்கிறது. பாடிப் பறந்த குயிலொன்றைக் கூண்டில் அடைக்கப் பார்க்கும் குறவனைப் போல உணரச் செய்கிறது. இந்தப் பயம், இந்தக் குற்ற உணர்ச்சி-இதன் அடிப்படையிலா நாங்கள் வாழத் தொடங்கப் போகிறோம்?மேலும், என் குடும்பத்தினரைப் பற்றி ஒரு சில வார்த்தைகளில் நான் அவளுக்கு என்ன சொல்ல முடியும், என்ன புரிய வைக்க முடியும்? உங்களைப் பற்றியோ சித்ராவைப் பற்றியோதான் ஆகட்டும், நான் என் குடும்பத்தினரிடமோ, மற்றவர்களிடமோ என்ன சொல்ல முடியும் ? நாலு வருடங்களுக்கு முன்பு சென்னையிலிருக்கும் என் அண்ணாவுடன் போய் வசிக்கத் தொடங்குகிற வரையில் நாங்களெல்லோரும் டில்லியில் சேர்ந்தாற் போலத்தான் இருந்து வந்தோம். ஆனால் ஒரே வீட்டில் இருந்தோமென்று பெயரே தவிர எனக்கு அவர்க்ளைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது. எல்லாம் நோக்கத்தைப் பொறுத்த விஷயம் தானே? மேலும், ப்ரொபசர், என்னைப் பற்றியே எனக்கு எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. பிறரைப் பற்றி யாரிடம் என்ன சொல்ல?சித்ராவுக்கே இந்த அமைப்புப் பற்றி-இதில் அவள் அணிய வேண்டிய வேடம் பற்றி (மனைவி, மருமகள்) இவ்வளவு பயமாக இருக்கிறதே, என் மன்னிக்கு இன்னும் எவ்வளவு பயமாக இருந்திருக்கும் என்று தான் நினைதுப் பார்க்கிறேன்.

 

      மூத்த மருமகளாகிய அவள்தானே மாமனாரோடும் மாமியாரோடும் என்றென்றும் இருக்க வேண்டியவள்? ஆனால், பாவம் அவளுக்குக் கேள்விகள் கேட்க சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. ஏதோ ஜாதகம் சேர்ந்தது. என் அண்ணா, அப்பா அம்மா தங்கை நால்வருமாக ஒரு நாள் அவர்கள் வீட்டிற்குப் போய் டிபன் சாப்பிட்டு விட்டு அவளுடைய நடையுடை பாவனைகளை “டெஸ்ட்” பண்ணிவிட்டு வந்து சேர்ந்தார்கள். பத்தே நிமிடம்! நல்ல பதவிசான பொண்ணு என்றாள் அம்மா. அவ அப்பாவுக்குக் கொஞ்சம் காது கேக்காதோன்னு எனக்குச் சந்தேகம் என்றார் அப்பா. (அது பரம்பரையாக வருவதாக இருக்காதே) சினேகிதமாயிருக்கிற் டைப்பாத்தான் தோணறது என்றாள் என் தங்கை. எனக்கு அவ ஸ்மைல் பிடிச்சிருக்கு என்றான் அண்ணா (மன்னி! மன்னி இத்தனைக்கும் நடுவில் உன்னால் ஸ்மைல் வேறு எப்படிப் பண்ண முடிந்தது?) பெரும் நடிகைகளாக நினைக்கபடுகிறவர்கள் தம் வாழ் நாள் முழுவதும் நடித்திராத ஒரு கடினமான பாகத்தை அந்தப் பத்து நிமிடங்களில் நீ ஏற்று நடித்தாக எனக்குப் பிற்பாடு தோன்றியது. நானாக இருந்தால் நீங்களுமாச்சு உங்கள் கல்யாணமுமாச்சு என்று அவர்கள் அதிர்ச்சி கொள்ளும் படியாக ஏதாவது சொல்லியிருப்பேன். செய்திருப்பேன் என்று நான் ஒரு முறை கூறினேன். அதற்கு நீ சிரித்துக் “நீ பெண்ணல்லவே” என்றாய்.இப்போதுதான் அவனுக்கு அவள் பிரச்னை புரிகிறது. சித்ராவிடம் ஏற்பட்டு வரும் மாறுதல்களைப் பார்க்கும்போது தான் அவனுடைய குடும்பத்தினருக்காகத் தான் அணிய வேண்டிய பல்வேறு வேடங்களில் குறித்து சித்ரா கவலைப்படத் தொடங்கியிருக்கிறாள். தான் என்னென்ன செய்ய வேண்டி வருமோ என்று பயப்படுகிறாள். அவளுடைய மயக்கங்கள் தெளியத் தொடங்கியிருக்கின்றன.

 

        வாழ்க்கை என்பது ஒரு மாலை நேரச் சம்பாஷணை மட்டுமல்ல; சினிமாவுக்கும் டிராமாவுக்கும் போவது மட்டுமல்ல; உல்லாசப் பயணம் போவதும் ரெஸ்டாரெண்டில் காப்பியருந்துவதுமல்ல! வாழ்க்கை தினசரி காலை எழுந்திருப்பது, பல் தேய்ப்பது, குளிப்பது, ஆடையணிவது, பஸ் பிடிப்பது, ஆபிஸ் போவது, மாலையில் மீண்டும் பஸ் பிடிப்பது, வீட்டுக்கு வருவது. வாழ்க்கை என்பது காப்பி போடுவது, கறிகாய் நறுக்குவது, சமைப்பது, தோசை அரைப்பது, துணி துவைப்பது பெருக்குவது, துடைப்பது, பாத்திரம் தேய்ப்பது, கடைக்குப் போவது, ரேஷன் வாங்குவது ஜூரம் வந்து டாக்டரிடம் போவது, குழந்தை பெறுவது, குழந்தையை வளர்ப்பது, அதை டக்டரிடம் கூட்டிப் போவது, எங்கெங்கோ நின்று, எங்கெங்கோ நடந்து, எப்படியெப்படியோ உட்கார்ந்து அலுத்துப்போய் இரவில் படுக்கையில் அப்பாடாவென்று காலை நீட்டிக்கொண்டு படுத்துக்கொள்வது, மறுநாள் காலை வரையில் தூங்குவது, இதுதான் வாழ்க்கை. சலிப்பும் சோர்வும் மிக்கது. பசிக்காகச் சாப்பிட வேண்டியிருக்கிறது. சாப்பிடுவதற்காகச் சமைக்க வேண்டியிருக்கிறது. சாமான்கள் வாங்குவதற்கு பணம் தேவைப்படுகிறது. பணம் சம்பாதிப்பதற்கு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. மறுபடி மறுபடி பசிக்கிறது; மறுபடி மறுபடி வேலை செய்ய வேண்டியிருக்கிறது. பசிக்காக கல்யாணமும் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இது இன்னொரு பசி. வேலைக்குப் போகவுந்தான் அவனுக்கு முதலில் பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்வது? அதைத்தான் எல்லோரும் செய்கிறார்கள்.எல்லோரும் வேலைக்குப் போகிறார்கள்; எல்லாரும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அவனும் எல்லாரையும் போலத்தான்.

 

         சித்ராவும் வேலைக்குப் போக ஆசைப்படுகிறாள். அதைப்பற்றி அவன் அபிப்பிராயம் என்னவென்று கேட்கிறாள். அவனுக்கென்ன வந்தது? அவளும் வேலைக்குப் போகட்டும். அவளும் பஸ் கியூக்களில் நிற்கட்டும், பெண்கள் விடுதலை என்று சொல்லிக்கொண்டு பத்திலிருந்து ஐந்து வரையில் எங்கேயாவது ஒரு அலுவலகத்தில் உட்கார்ந்துவிட்டு அல்லது நின்று விட்டு வரட்டும். விடுதலையாவது மண்ணாங்கட்டியாவது? அன்பே, உலகில் விடுதலையென்று எதுவுமில்லை, உன் அம்மா செய்த தவற்றிலிருந்து நீ தப்பிக்க விரும்புகிறாய். என் அப்பா செய்த தவற்றிலிருந்து நான் தப்பிக்க விரும்புகிறேன். ஆனால் ஒரு சலிப்பிலிருந்து மீண்டும் இன்னொரு சலிப்பில்தான் நாம் சிக்கிக்கொள்ள வேண்டும். தப்புதல் என்று எதுவுமில்லை. எது எதிலிருந்தோ தப்ப முயன்று, ஓடி ஓடி, கடைசியில் கால்வலிதான் மிச்சம்.டக்!பாலிஷ் முடிந்துவிட்டது.அந்தச் சிறுவனுக்கு பத்து பைசா சேர்த்துக் கொடுத்துவிட்டு, அவன் தியேட்டர் வாசலை நோக்கி நடந்தான். இன்னும் சித்ரா வரவில்லை. கால் இப்போது ஒரேயடியாக வலித்தது. இனி நிற்கமுடியாது போலிருந்தது. அவன் அங்கேயே தியேட்டர் வாசலில், படிக்கட்டுகளின் ஓரத்திலிருந்த ஒரு மேடை மீது அமர்ந்தான். கால்களை நன்றாக நீட்டிக் கொண்டான். அப்பாடா! தியேட்டருக்குள் இப்படி இளைப்பாற முடியாது. இவள் இன்னும் சற்றுத் தாமதமாகவே வரட்டும். இந்தப் படத்தைப் பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு சிரத்தையும் இல்லைதான். அவன் அந்த மிருகங்களைப் பற்றிய படத்துக்குக் கூட்டிப்போகிறேன் என்றால், அவளை அவன் ஒரு சிறு குழந்தையாகப் பாவித்து நடத்த முயல்வதாக, அவள் நினைக்கிறாள்.

 

         நீ வேலைக்குப் போவானேன் என்று அவன் சொன்னால், அவன் ஒரு பிற்போக்கானவன் என்று அவள் நினைத்தாலும் நினைப்பாள்.அவனை இவ்வளவு நேரம் காக்கவைத்ததற்காக அவன் கோபித்துக்கொண்டால், சிறிய விஷயத்தைப் பெரிது படுத்துவதாக நினைப்பாள்.அவளுடைய பழக்கங்கள், அபிப்பிராயங்கள், ருசிகள் ஆகிய பலவற்றுடன் அவனுக்கு உடன்பாடு இல்லாமலிருந்த போதும் அவன் அவற்றுக்கு உடந்தையாக இருக்க வேண்டியிருக்கிறது; விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது.அவனுக்குப் பிடிக்காத இந்தப் படத்தைப் பார்ப்பதற்காக அவனைவிடப் பத்து வயது சிறியவளான இவளுக்காக அரை மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்கும் தன்மீது அவனுக்குச் சிரிப்பும் இரக்கமும் எற்பட்டது. இப்படி அவனை எப்போதும் காக்க வைத்ததாலேயே ஒருத்தியை அவன் முன்பு நிராகரித்தான்.தன்னைப் பற்றிய மிகையான நினைவுள்ளவளாகவும் உணர்ச்சியறிவை விட வார்த்தையறிவு அதிகமுள்ள வளாகவும் தோன்றியதால் முன்பு ஒரு பெண்ணிடமிருந்து அவன் மனம் கசந்து விலகிப்போக நேர்ந்திருக்கிறது. சந்திக்கச் சென்ற தருணங்களிலெல்லாம் அவனைக் காக்க வைத்துக் கொண்டிருந்தாள் என்பதால் அந்த இன்னொரு பெண்ணைப் பார்க்கப் போவதை அவன் நிறுத்தியிருக்கிறான். இப்போது இவள் தன்னைப் பற்றிய மிகையான நினைவிள்ளாதவளா என்ன? உணர்ச்சியறிவு அதிகமுள்ளவளா என்ன? இல்லை. இல்லவேயில்லை. ஆனால் இதை எல்லாமும், வேறு எதை எதையே கூட, இவளிடம் சகித்துக்கொள்ள அவன் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டு வருகிறான்.இந்தச் சமரசத்தை முன்பே செய்துகொண் டிருக்கலாமென்று தோன்றியது.

 

             ஐந்து வருடங்கள் முன்பு. மூன்று வருடங்கள் முன்பு. இப்போதும் கூடச் செய்து கொள்வானேன்? செய்து கொள்ளாமலே இருக்கமுடியாதா?அவனுக்கு அங்கிருந்து எழுந்து ஓட வேண்டும் போலிருந்தது. புரொபசரிடம், தன் பெற்றோரிடம், இந்தக் கல்யாணத்தை நிறுத்தச் சொல்ல வேண்டும் போலிருந்தது. புரொபசர், ஐ ஆம் ஸாரி. நான் அமைப்புகளின் எதிரி. பின் ஏன் உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் போவது போலக் காட்டிகொண்டேனென்றா சொல்கிறீர்கள்? எனக்குத் தெரியாது. புரொபசர் நிஜமாகத் தெரியாது. ஒருவேளை…அது சரி; நீங்கள் என்னிடம் அமைப்புக்களை ஆதரித்துப் பேசியது எதனால்?உங்களுக்கு அவற்றில் நம்பிக்கை இருந்ததாலா? அல்லது…அல்லது, என்னை மாட்டி வைக்கலாமென்றா? நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள். இல்லையில்லை, நானேதான் என்னை ஏமாற்றிக்கொண்டேன்…இந்தக் கால் இன்று ஏன் இப்படி வலிக்கிறது? இதுவரை அவன் நடந்த நடையெல்லாம் சேர்ந்து வலிப்பது போலிருந்தது. ஓடின ஓட்டமெல்லாம் சேர்ந்து வலிப்பது போலிருந்தது. பெண்கள் பின்னால் நடந்த நடை, ஓடிய ஓட்டம், பெண்களை விட்டு விலகி ஓடிய ஓட்டம் இனி புதிதாக யார் பின்னாலும் ஓட முடியாது போலிருந்தது. இனி யாரையும் விட்டு விலகியும் கூட ஓட முடியாது போலிருந்தது.தூரத்தில் சித்ராவும் அவள் தம்பியும் வருவது தெரிந்தது.அவனுக்கு ஏற்பட்டது மகிழ்ச்சியா வருத்தமா என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

by parthi   on 12 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.