LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

கம்பரும் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலும்

தமிழ் இலக்கியங்களின் தனிச்சிறப்புகளுள் மெய்ப்பாட்டுக் கொள்கையும் ஒன்று. நாடகத்தில் தோன்றிய இப்பண்பு. அதன் வழி தோன்றிய இலக்கியத்திலும் தானே பதிந்தது என்பது ஏற்புடையதாகும். தமிழில் அக இலக்கியமும் நாடகப் பண்புடையன என்கின்றார் தமிழண்ணல். சமூக உறவுகளின் தாக்கத்தாலும் மாற்றத்தாலும் மனிதர்களிடையே தோன்றும் உணர்வு வேறுபாடுகளை உலகோர் அறிந்துக்கொள்ளும் வண்ணம் நம் உடல் உறுப்புகளால் வெளிப்படுத்திக் காட்டுவது மெய்ப்பாடாகும்.

கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தருக்கு அல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங்குரைத்தே

(தொல்.மெய்.30)

என்ற நூற்பாவிற்கு விளக்கம் தரும் தமிழண்ணல் சொற்பொருள் மட்டும் அறிந்தார்க்கு மெய்ப்பாடு தோன்றாது. கண்ணாலும், செவியாலும் ஏனைய புலன்களாலும் கண்டு, கேட்டு, உண்டு, உற்று, அறிந்த பழக்கம் உடையவர்க்கே பாடலிலுள்ள பொருளும் மெய்ப்பாடாகத் தோன்றும் என்கிறார்.

1. மெய்ப்பாடு - பகுப்பு

தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகளை உரையாசிரியர்கள், அகத்திற்குரியவை என்றும், அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானவை என்றும் வகைப் படுத்தியுள்ளனர். அகத்திர்குரியவற்றைக் களவுக்குரியது, கற்புக்குரியது இரண்டிற்கும் பொதுவானது என வகைப்படுத்துகின்றார்.

2. அக மெய்ப்பாடுகள் - களவுக்குரியவை

இராமன், சீதை ஆகியோரின் களவுக்காதலில் களவு ஒழுக்கத்திற்குரிய மெய்ப்பாடுகளைக் காண முடிகின்றது. திருமணத்திற்கு பின் இவர்களது கற்பு வாழ்விலும் காப்பியத்தின் பல இடங்களில் கற்பிற்குரிய மெய்ப்பாடுகளைக் காண முடிகின்றது.

''வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கஞ் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கஞ் சாக்காடு என்றச்சிறப்புடை மரபினவை களவென மொழிப''

(தொ.களவு.9) என களவில் நிகழும் மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

2.1. ஒருதலையுள்ளல்

உள்ளப் புணர்ச்சியின் பின் இராமன் முனிவரோடு சென்றுவிடச் சீதை காதல் நோயால் துன்புறுகிறாள். இராமனை அடைய வேண்டும் என்ற வேட்கையால் அவனையே நினைத்து ஓவியப்பாவை போலானாள் எனவும், இராமனது உடலையும், நிறத்தையும், உறுப்புகளையும் வியந்து பேசுகிறாள் எனவும் கம்பர் குறிப்பிடும்,

''அந்தம் இல் நோக்கு இமை அணை இலாமையால்
பைங்கொடி ஓவியப் பாவை போன்றனள்''
(1.10.39)

''கன்றிய மனத்து உறுகாம வேட்கையால்
ஒன்று அல பல நினைந்து உருகும்''
(1.10.60)

இப்பகுதிகள் ஒருதலையுள்ளல் எனும் மெய்ப்பாடாக அமைந்துள்ளன.
2.2. ஆக்கஞ் செப்பல்

மாலையிலும், இரவிலும் சீதை அடைந்த பிரிவுத் துயரைக் கம்பர் பாடல்களில் விளக்குகிறார். இராமனது நிலையைக் கூறும்போது அவன் விடியும் வரை துன்புற்றான் என்பதை,

''...........................கங்குலூம் திங்களும்
தனியும் தானும் அத்தையலும் ஆயினான்''
(1.10.139)

என்ற பாட.லின் மூலம் விளக்குகிறார். ஆக்கஞ்செப்பல் என்பதற்கு இளம்பூரணர், உறங்காமையும் உறுவ ஓதலும் முதலாயின கூறுதல் என விளக்கம் தருவதை இராமன் செயலோடு பொருத்திக் காணும் பொழுது அது ஆக்கஞ் செப்பல் எனும் மெய்ப்பாடாக அமைந்துள்ளது.

2.3. நோக்குவ எல்லாம் அவையே போறல்

சீதையைப் பிரிந்த இராமனுக்குப் பார்க்கும் பொருள் எல்லாம் அவளாகவே தோற்றம் தந்தன எனவும், சீதை கடல், மழை, காயா, குவளை ஆகியவற்றைக் கண்ட போதெல்லாம் இராமனின் உடல் வண்ணத்தை அவற்றில் கண்டு துன்புறுகிறாள் எனக் கம்பர் குறிப்பிடும்.


தெருள் இலா உலகில் சென்று நின்று வாழ்
பொருள் எலாம் அவள் பொன் உரு ஆயவே

இப்பாடலில் நோக்குவதெல்லாம் அவையே போறல் என்ற மெய்ப்பாடு அமைந்துள்ளது.

2.4. மெலிதலும் மயக்கமும்
காதல் நோய் சீதையின் உடலெங்கும் பரவிப்படர்கின்றது அதனை வெளியில் சொல்ல முடியாதவளாக உடல் மெலிகின்றாள். இந்நிலையைக் கம்பர்.

''நோம் உறும் நோய் நிலை நுவலகிற்றிலள்
ஊமரின் மனத்திடை உன்னி விம்முவாள்''

என்று விவரித்துள்ளார்.

3. களவுக்கும் - கற்புக்கும் உரியவை

களவு, கற்பு இரண்டினுக்கும் பொதுவானவைகளும் கற்பிற்கு உரியவையுமான மெய்ப்பாடுகளாகத் தொல்காப்பியர் குறிப்பனவற்றுள் பல கம்பனில் இடம் பெற்றுள்ளன.

3.1. புகு முகம் புரிதல்

புகுமுகம் புரிதல் என்பதற்குப் பேராசிரியர் ஒருவனும் ஒருத்தியும் எதிர்பட்டவழித் தன்னை அவன் நோக்குதற் கண் விரும்பும் உள்ள நிகழ்ச்சி என விளக்கம் தருகின்றார். இவ்விளக்கத்திற்கேற்ப தனியே நின்ற இராமனை மறைந்துநின்று பார்த்துக் காதலுற்ற சூர்ப்பணகை அழகிய வேடம் கொண்டு அவன் காணும்படி முன் வந்து நின்றாள் என்பதைக் கம்பர்.

''செல்வி முக முன்னி அடி செங்கையின் இறைஞ்சா
வெவ்விய நெடுங்கண் அயல்வீசி அயல் பாரா
நவ்வியின் ஒதுங்கி இறை நாணி அயல் நின்றாள்''
(3.5.37)
எனக் குறிப்பிடுகின்றார். இதனைப் புதுமுகம் புரிதல் எனும் மெய்ப்பாடாகக் கொள்ளலாம்.

3.2. அணிந்தவவை திருத்தல் (மூலம்)
3.3. புலம்பித் தோன்றல்

உடலின் வெம்மை தீரச் சாந்தாலும், பூவாலும் புனைந்த பொழுதும் உடல் வாடி நிற்கும் சீதையின் நிலையைப் புறஞ்செயச் சிதைதல் (1:10:50) என்ற மெய்ப்பாடாகவும், தாதியர், சேடியர், செவிலியர் சூழ இருந்தாலும் உள்ளத்தால் தனிமைப்பட்டு இராமனை எண்ணிச் சோர்வுறும் சீதையின் செயலை,

''கன்றிய மனத்து உறு காம வேட்கையால்
ஒன்று அல பல நினைந்து உருகும் காலையே''

(1:10:60)
எனக் குறிப்பிடும் கம்பர் புலம்பித் தோன்றல் என்ற மெய்ப்பாடகவும் சுட்டுகின்றார்.

3.4. இன்பத்தை வெறுத்தல்

பிரிவால் வாடும் இராமனும், சீதையும் நிலவை வெறுக்கின்ற செயலும், இராவணனைக் காணாத அவனுடைய உரிமை மகளிர்க்கு இனிய இசை தேள் கொட்டுவது போல இருந்தது.

''.................கற்பக வல்லியர்
தேளினால் திகைப்பு எய்துகின்றார் சிலர்''

(5:2:176)

3.5. துன்பத்துப் புலம்பல்

இராமன் சீதையின் நினைவால் பம்பைக் காட்சிகளைக் கண்டு புலம்புவதும், கார் காலத்தில் முகில், மயில், முல்லை, ஆகியவற்றைக் கண்டு புலம்புவதும், சிறையிருந்த சீதை, இராமன் நினைவால்,

''கரு மேகம் நெடுங்கடல் கா அனையான்
தரமே, தனியேன் எனது ஆர் உயிர்தான்''

(5:4:3)
எனப் புலம்புவதாக அமைந்த இப்பகுதியும் துன்பத்துப் புலம்பல் எனும் மெய்ப்பாடாக அமைந்துள்ளன.

3.6. கண்துயின் மறுத்தல்

அசோக வனத்தில் சிறையிருக்கும் சீதை மழைத்துளி பெறாத மருந்துச் செடியைப்போலவும், புகையுண்ட ஓவியம் போலவும் வாடியதோடு உறங்குவதையும் மறந்தாள் என்பதை,

''துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்
வெயிலிடைத் தந்த விளக்கு என ஒளி இலா மெய்யாள்''

(5.3.4) எனக்குறிப்பிடுவது கண்துயின் மறுத்தல் மெய்ப்பாடாகும்.

3.7. ஐயம் செய்தல்

இராமன் தன்னை அறிவு இல்லாதவள், அரக்கர்கள் தின்று முடித்திருப்பர் என்றெல்லாம் முடிவு செய்திருப்பானோ, அன்னையரும் தம்பியரும் மீண்டும் வந்து அயோத்திக்கே இராமனை அழைத்துச் சென்றுவிட்டனரோ எனப் பலவாறு எண்ணி அசோகவனத்தில் சீதை துன்புறுவதாகக் கூறும்,

''என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலன் எனத்துறந்தானோ
பெற்ற தாயாரும் தம்பியும் பெயர்த்தும் வந்து எய்தி
கொற்ற மாநகர்க் கொண்டு இறந்தார்களோ''

இப்பாடல்கள் ஐயம் செய்தல் எனும் மெய்ப்பாட்டை நினைவுபடுத்துகின்றன.

3.8. மறைந்தவை உரைத்தல்

கற்பு வாழ்க்கையில் தலைவி களவுக்கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழும் செய்தியைச் சங்கப் பாடல்களில் காண முடிகின்து. இராமனைப் பிரிந்து வாடும் சீதை அசோகவனத்தில் களவுக்கால நிகழ்ச்சிகளை நினைவு கொள்கிறாள்.

''கன்னல் மூன்றில் களப்பட கால் வளை
வில் நலம் புகழ்ந்து ஏங்கி வெதும்புவாள்''

(5:3:22)
என இராமனுடைய தோள்களையும், திருமண நிகழ்ச்சியில் தருப்பையில் கால் வைத்த அழகையும் நினைத்துப் பார்க்கும் பகுதிகள் மறைந்தவை உரைத்தல் என்ற மெய்ப்பாடாக அமைந்துள்ளன.

3.9. புறஞ்சொல் மாணாக்கிளவி

தலைவி, தலைவனுக்குப் பழி நேராமல் காக்கும் புறஞ்சொல் மாணாக்கிளவி எனும் மெய்ப்பாடாகும். சீதை, இராவணனின்,


''எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன் அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்''

(5.5.18)
எனக் கூறுவதை இம்மெய்ப்பாடாகக் கருதலாம். உடம்பு நனி சுருங்கல், அவன் தமருவத்தல், அறனளித்துரைத்தல் ஆகிய மெய்ப்பாடுகளும் கம்பனில் இடம்பெற்றுள்ளன.

''சங்க இலக்கியங்களில் அகத்திணைக்கான கூடலில் மகிழ்வும், பிரிவில் அழுகையுமான மெய்ப்பாடுகள் தலைவியிடமே தோன்றுவதாகக் கூறப்படுகின்றன. ஆனால் கம்பர் ஆடவர், மகளிர் இருவரது மெய்ப்பாடுகளையும் பாடியுள்ளார்'' என்ற மா.சுசிலா என்பாரின் கருத்து நினைத்தற்குரியது.

4. தொகுப்புரை

கம்பனில் தொல்காப்பியரின் மெய்ப்பாட்டுக் கொள்கை நேரடியாகவும், நுணுக்கமாகவும் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியர் மெய்ப்பாடு தோன்றுவதற்கான காரணங்களைத் தொகுத்துக் காட்டுகின்றார். கம்பர் கதை மாந்தர்களின் உணர்வுகள் உடல் உறுப்புகளால் வெளிப்படும் தன்மைகளைச் சிறப்பாக அமைத்துக் காட்டுகின்றார். தொல்காப்பியர் சுட்டும் எண்வகை மெய்ப்பாடுகளுக்கும், களங்களுக்கும் ஏற்றந்தரும் வகையில் கம்பனில் பாடல்கள் அமைந்திருப்பதையும் ஒரே நேரத்தில் பல மெய்ப்பாடுகள் தோன்றும் நிலைகளையும் அறிய முடிகின்றது.

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.