LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

கந்தர் அந்தாதி-1

ஆறுமுகப் பெருமானுக்கு உகந்த ஆறு நூல்களுள் ஒன்று இந்த கந்தர் அந்தாதி. இதிலுள்ள காப்புச் செய்யுள்களால் இது திருவண்ணாமலையிற் பாடப்பட்டிருத்தல் வேண்டுமெனத் தோன்றுகிறது. நூலிலுள்ள நூறு செய்யுள்களின் முதலெழுத்துக்கள் சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்னும் எட்டெழுத்துக்களுள் அடங்குதல் கவனிக்கத்தக்கது. இந்நூலைப் பாடியவர் அருணகிரி நாதர். 
பெரும்புலமை வாய்ந்த பாரதம் பாடிய வில்லிபுத்தூரார், தமது கல்விச் செருக்கால், தம்மோடு வாது செய்து தோற்றவர்களின் காதைக் குறடு கொண்டு குடைந்து தோண்டும் வழக்கத்தை கொண்டிருந்தார். அவருக்கும் அருணகிரிநாதருக்கும் ஒருமுறை தருக்கம் உண்டாயிற்றென்றும், அப்போது ஆசுகவியாக அருணகிரிநாதர் பாடிய நூல் தான் கந்தர் அந்தாதி என்றும் அந்நூலுக்கு உரையை வில்லிபுத்தூரார் உடனுக்குடன் கூறி வந்தார் என்றும் கூறுவர். அவ்வாறு கூறி வரும் போது 'திதத்த' எனத் தொடங்கும் 54வது செய்யுளுக்கு வில்லிபுத்தூரார் உரை கூற இயலாது திகைத்து தோல்வியுற்றார் என்றும் அதற்கு அருணகிரிநாதரே உரை அருளினார் என்றும் கூறுவர். பின்பு ஏனைய பாடல்களுக்கு வில்லிபுத்தாரே உரை கூறினார் என்றும் கூறுவர். வில்லிபுத்தார் உரை கூற முடியாமல் தோல்வியுற்றாலும் அருணகிரிநாதர் அவருடைய காதை அறுத்து இழிவுபடுத்தாமல், இனி கருணைக்கு விரோதமான இவ்வழக்கத்தை விட்டுவிட வேண்டும் என புத்தி சொல்லி அவர் கையிலிருந்த குறடை எறியச் செய்தார் என்றும் கூறுவர். இக்கருணையைக் கருதியும் 'கருணைக் கருணகிரி' என்னும் வழக்கு எழுந்தது. 
காப்பு
வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்து
வாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவச
வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை
வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே.
ஐராவதம் என்ற யானைக்கு தலைவனாகிய இந்திரனையும், பிரம்மனையும், ஏனைய தேவர்களையும், தாமரை போன்ற கையில் பாஞ்ச சன்யம் என்கிற சங்கை ஏந்தி இருக்கும் திருமாலையும், தட்ச யாகத்தில், வீரபத்திரன் சொருபத்தில் வந்து ஜெயித்த சிவபெருமானின், குமாரனும், கோழிக்கொடியை உடைய குமாரக் கடவுளை, சகோதரனாக பெற்றிருப்பவனும், வயல்கள் சூழ்ந்த அருணாசலத்தில், யானைமுகத்தை உடைய கஜமுகாசுரனை, வெற்றி கொண்ட, யானை முகம் கொண்டவனும் ஆகிய கணபதியை, வணங்குகிறேன். 
உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்
உண்ணா முலையுமை மைந்தா சரணஞ் சரணுனக்கே.
கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்ற, பசு இனங்கள் (வாழ்கின்ற), முல்லை நிலத்திற்கு, தலைவனாகிய திருமாலின், கருமை நிறத்தையும், வலிமையும், உவர்ப்பாகிய குற்றத்தையும் (உடையதாய்), கோட்டையாக உள்ள, கடலில் ஒளிந்திருக்கின்ற அசுரர்களின், ஜிவனை, மாய்த்து, தேவர்கள் உள்ளத்தில் இருந்த, நாம் ... அச்சத்தை, போக்கி அழித்த, தெய்வமே, ஆட்டு வாகனத்தில் ஏறும், உஷ்ணத்தை உடைய அக்னி தேவன், சேர்ந்திருக்கும், நாம் அடைக்கலம் புகுவதற்கு இடமாகிய, அண்ணாமலையில் விளங்கி அருளும், மிகுதியாகப், பெருகும், கற்புடமைக்கும், அழகிய, மை ... அஞ்சனம் தீட்டிய, செவிகளை எட்டிப் பிடிக்கும், விழிகளின், கிருபைக்கும், ஒப்புவமை இல்லாத, உண்ணாமுலை என்கிற பெயர் கொண்ட பார்வதியின், குமாரனே, உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன். 
நூல்
திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச
திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்
திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற
திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே. 1
லட்சுமி தேவிக்கு நாயகனாகிய திருமாலும், நல்ல பெண் தெய்வமாகிய உமையை இடப்பக்கத்தில் வைத்திருக்கும் சிவபெருமானும், மதிக்கும் விதத்தில், பழமையான வேதத்திற்கு, சிறந்த பொருளை விளக்கிய, சாமர்த்தியம் உடைய, இளங்குமாரனாகிய முருகப்பெருமான், நிரந்தரமாக வாசம் செய்யும், வானளாவும் திருப்பரங்குன்றம், சிறந்த செந்தில் பதி, பங்கயம் பொருந்திய பழநி, சுவாமி மலை, அந்தக் கந்தக் கடவுள் திருவிளையாடல் செய்த பல குன்றுகள், நடந்து, பூமி அதிர்கின்ற, யானைக் கூட்டங்கள், வாழ்கின்ற, குளிர்ந்த, கருமேகங்கள் சூழ்ந்த பழமுதிர்சோலையையும், துதி செய்யுங்கள். ..
செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு
செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே
செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச்
செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே. 2
ரிஷப வாகனத்தை உடைய, புனித முர்த்தி யாகிய, ஈசனின், குமாரனே, தெய்வீகமாகிய, சரவணப் பொய்கையின் நீரில், செனித்த, தூயனே, சங்கை ஏந்தியுள்ள திருமாலின் மருகனே, என்றெல்லாம், விருதுகள், முன்னதாகவே சொல்லி வர, அதைக் கேட்டவுடன் அந்த இடத்திலேயே, தன்னிலை அழிந்து சானித்தியம் அடையும் பவனி மாதர்களின், (அவசம் ஆவேசம்), பார்வையும், தெய்வயானையின் மார்பாகிய கவசத்தையும், சட்டையாக தரித்துள்ள, தோள்களை உடைய முருகப் பெருமான், திருவடிகள், என் தலையின் மீது வீற்றிருந்தன. ..
சென்னிய மோகந் தவிராமு தோகண் டிகிரிவெண்ணெய்ச்
சென்னிய மோகம் படவூ தெனத்தொனி செய்தபஞ்ச
சென்னிய மோகந் தரம்புனத் தேன்புணர் தேவைத்தெய்வச்
சென்னிய மோகம் பணிபணி யேரகத் தேமொழிக்கே. 3
சிரசின் மேல், கங்கா ஜலத்தின், ஆரவாரம், நீங்காத (சிவபெருமான் உண்ட), நஞ்சமோ, இந்தத் தலைவியின் கண்? சக்கரம் ஏந்தி, நவநீதத்தைத் திருடிய, புல்லாங்குழல் இசைக்கும் (திருமால்), தேவர்கள் எல்லாம் மயக்கம் அடையும்படி, ஊது என்று கட்டளை இட்டு, சப்தத்தைக் கிளப்பிய, இவளின் (இந்தத் தலைவியின்) கழுத்து சங்கு போன்று இருக்கிறது, வள்ளிபுனத்தில் வாழும் வள்ளியைக் கலந்த, குமரக் கடவுளை, தெய்வீகமாகிய சோழ ராஜன், அதிக ஆசையுடன் வணங்கி, திருப்பணி செய்த, சுவாமி மலையில் வாழும் தேன் போன்ற மொழியை உடைய இந்தப் பேண்ணுக்கு. ..
தேமொழி யத்தம் பெறவோந் தனக்கன்று சேணுலகத்
தேமொழி யத்தம் சினங்காட் டவுணரைச் சேமகரத்
தேமொழி யத்தம் புயமவர் சூடிகை சிந்தவென்ற
தேமொழி யத்தம் பதினா லுலகுமந் தித்ததொன்றே. 4
தேன் போன்ற மொழியை உடைய பார்வதியின், பாதியாகிய சிவபெருமான், பெற்றுக்கொள்ளும்படி, பிரணவத்திற்கு, முன்பு, தேவலோகத்தின், நலனெல்லாம் அழியும்படி, தம்முடைய கோபத்தைக் காட்டிய, சூரபத்மாதிகளை, ஆண் சுராக்கள் வாழும், இடமாகிய சமுத்திரத்தில், கணுக்களை உடைய, கரங்களும், தோள்களும், அவர்களின் சிரங்களும், பூமியில் விழும்படி, அவர்களை ஜெயித்து அழித்த, குமரக் கடவுள், உபதேசித்த, பொருள், ஈரேழு பதினாலுலகமும் ஒரே தன்மையாக பொருந்தி இருந்தது. ..
தித்தவித் தார மனித்தரைத் தேவர் வணங்கமுன்போ
தித்தவித் தாரகை மைந்தர்செந் தூர்க்கந்தர் சிந்துரவா
தித்தவித் தார முடையா ரருள்வெள்ளந் தேக்கியன்பு
தித்தவித் தாரந் தனிவீ டுறத்துக்கச் செவ்வனவே. 5
தித்த என்ற தாள ஜதி விரிவுகளை, தன்னுடைய நடனத்தின் மூலம், அழிவில்லாத நடராஜப்பெருமானுக்கு, மற்ற தேவர்கள் எல்லாம் வணங்கும்படியாக, முன்னொருகாலத்தில் சுவாமி மலையில், உபதேசம் செய்தவரும், விஷேசமான, கிருத்திகை மாதர்களின் புதல்வரும், செந்தில் ஆண்டவரும், நெற்றிப் பொட்டை, சூரியனைப் போல் ஒளி வீசும்படி தரித்துள்ள, அற்புதமான இரண்டு தேவிமார்களை உடைய கந்தப் பெருமான், தன்னுடைய க்ருபா நதியை உள்ளத்தில் நிரப்பி, பக்தியை மூளும்படி செய்து, ஒப்பற்ற மோட்ச வீட்டை நான் அடையும்படி, பல துன்பங்களைத் தருகின்ற, பிறப்பாகிய, அக்னியை, அவியச் செய்தார். ..
செவ்வந்தி நீலப் புயமுரு காபத்தர் சித்தமெய்யிற்
செவ்வந்தி நீலத்தை யுற்றருள் வாய் திங்கட் சேய்புனைந்த
செவ்வந்தி நீலத் தொருபாகர் போன்ற தினிச்சிந்தியார்
செவ்வந்தி நீலத்தி னீடுமுற் றாத திமிரமுமே. 6
சாமந்தி மாலையையும், நீலோற்பல மாலையையும் புனைந்திருக்கும், புயங்களை யுடைய முருகனே, உன் அடியார்களுடைய, இதயமாகிய உண்மை நிலையில், மிகுதியாக பொருந்தி இருக்கும், நீ, க்ருபை கூர்ந்து, அந்த மாலையை நீ கொடுத்து அருள வேண்டும், இளம் பிறையை, அணிந்திருக்கும், சிவந்த மாலைக்காலம், பார்வதி பங்கராகிய பரமசிவனை, போல் விளங்குகிறது, இனிமேல் வரப்போகிறது, உன்னைத் தியானிக்காதவர்கள் அடையும், ஜெனனமாகிய பிறப்பு, வருத்தத்தை விளைவிக்கும், அஞ்ஞான இருளைப் போன்று, நீடித்து நிற்கும், தொலையாத, இராக்காலம். ..
திமிரத் திமிரக் கதரங்க கோபசெவ் வேலகைவேல்
திமிரத் திமிரக் ககுலாந் தகவரைத் தேன்பெருகுந்
திமிரத் திமிரக் தனையாவி யாளுமென் சேவகனே
திமிரத் திமிரக் கனலாய சந்தன சீதளமே. 7
இருள் நிறைந்ததும், திமிங்கலத்திற்கு வாசஸ்தலமாக இருப்பதும் ஆன, சமுத்திரத்தை, கோபித்த, சிவந்த வேலாயுதத்தை உடையவனே, கையிலுள்ள வேலாயுதமும், மழுங்கும்படியாக குற்றிய, ராட்ஸச குலத்திற்கு எமன் போன்றவனே, குற்றிய, மலையிலிருந்து தேன் ஆறு போல் பெருகும், காட்டு ஆற்றின் வளப்பத்தை உடைய வள்ளி நாயகியே, யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனா நாயகியே, மிகவும், என்னை அணைத்து எனது ஆவியை காப்பாற்ற வேண்டும், என்று சல்லாபம் பேசுகின்ற, வீரனே, பூ சப் பூசப், நெருப்பைப் போல தகிக்கின்றது, சந்தனம் முதலிய குளிர்ந்த வஸ்துக்கள் எல்லாம். ..
சீதளங் கோடு புயங்கைகொண் டார்தந் திருமருக
சீதளங் கோடு முடியாளர் சேய்தனக் கேதுளதோ
சீதளங் கோடு னிதருமென் பார்தொழுந் தேவிபெறுஞ்
சீதளங் கோடு கொடிவேன் மயூரஞ் சிலையரசே. 8
மகாலட்சுமியின், மார்பகத்தையும், சங்கையும், திருத்தோளிலும், திருக்கரத்திலும், தரித்துள்ள திருமாலின் மருகனும், குளிர்ந்த சந்திரனின், அழகிய கோணல் வடிவமான பிறையை (தரிக்கும்), சிரசை உடைய பரமசிவனின், குமாரனுமாகிய முருகனுக்கு, என்ன சொத்து உளது என்று கேட்டால், அருவெறுக்கத்தக்க, செல்வம், குற்றத்தையும், துன்பத்தையும், கொடுக்கும், என்று கருதி அதை விட்டு நீங்கிய ஞானிகள், வணங்கும், வள்ளி நாயகி மூலம், கிடைத்த சீர்வரிசைகள், ஊது கொம்பும், சேவல் கொடியும், வேலாயுதமும், மயில் வாகனமும், மலைகளை ஆளும் உரிமையுமே. ..
சிலைமத னம்படு மாறெழுஞ் சேய்மயி லுச்சிட்டவெச்
சிலைமத னம்படு சிந்துவை யிந்துவைச் செய்வதென்யான்
சிலைமத னம்படு காட்டுவர் கேளிருஞ் செங்கழுநீர்ச்
சிலைமத னம்படு தாமரை வாவி திரள்சங்கமே. 9
நீலோற்பலகிரியாகிய திருத்தணி மலையில் காணப்படும், தேனும், அன்னப் பட்சிகளும் நிறைந்திருக்கும், தாமரைத் தடாகத்தில் வசிக்கும், சங்கினங்களே, வில்லை உடைய மன்மதனின், பாணம், என்னைக் கொல்வது போல் தாக்குகிறது, குமாரக் கடவுளின் மயில் வாகனத்தின், எச்சிலாகிய சரப்பத்தின், எச்சிலாகிய தென்றல் காற்றையும், ஒருமுறை கடையப்பட்ட கடலையும், நிலவையும், நான் என்ன செய்து கடப்பேன்? ஆர்பாட்டத்துடன் கோபத்தை, சுற்றத்தார் எல்லோரும், என்மேல் காட்டுகிறார்கள். ..
திரளக் கரக்கரை வென்கண்ட வேலன் றிசைமுகன்மால்
திரளக் கரக்கரை யான்பாட நாடுதல் செய்யசங்க
திரளக் கரக்கரை காண்பான்கைந் நீத்திசை வார்பனிக்க
திரளக் கரக்கரை வானீட்டு மைந்தர்புந் திக்கொக்குமே. 10
ஸ்திரமான, லட்சக் கணக்கான, அசுரர்களை, வெற்றி கொண்ட, வேலாயுதனை, பிரம்மாவுக்கும், திருமாலுக்கும், ஆயிரம் கண்ணுடைய இந்திரனுக்கும், ருத்ராட்சம் அணிந்துள்ள பரமசிவனுக்கும், இறைவனாகிய கந்தக் கடவுளை, நான் புகழ்ந்து பாட உத்தேசிப்பது, சிவந்த சங்குகள் முழங்குகின்ற, கடலை, கடந்து செல்பவன், நீந்திப் போகும் புத்திக்கும், சந்திரனை, பிடிக்கும் பொருட்டு, கையளவை, ஆகாசத்தில் நீட்டும், சிறு பிள்ளையின், புத்தியைப் போலும் இருக்கிறது. ..
திக்கத்திக் கோடு படிபுடைச் சூதத் தெறிபடபத்
திக்கத்திக் கோடு கடடக் கடறடி சேப்படைச்சத்
திக்கத்திக் கோடு துறைத்திறத் தற்ற குறக்குறச்சத்
திக்கத்திக் கோடு பறித்துக்கொ டாதி சிறைபிறப்பே. 11
நாலு திசைகளிலும், எல்லோரும் திகைக்கும்படி பரந்து இருக்கும், பூமியின் கண், நீக்கி அருள்வாயாக, மாமரமாய் நின்ற சூரபத்மனை, விளங்கும்படி, ஆயிரம் பணா மகுடங்களை உடைய ஆதிசேஷனின் தலையின் மேல், இந்த சங்குகள் எல்லாம், ஊறும்படி, பெரிய விசாலமான, சமுத்திரத்தின் கண், அடக்கி அழித்த, சிவந்த வேலாயுதப் படையை உடையவனே, கதறி, மாறுபட்ட, பர சமய கோட்பாடுகளில், நீங்கி நிற்பவனே, (உலையில்) குற்றுவதற்கு, குற நாயகியாகிய வள்ளி நாயகிக்கு, யானையின் தந்தத்தை, பறித்துக் கொடுத்த, ஆதி மூலமே, பஞ்சேந்திரியங்களால் கட்டுண்ட சிறை போன்ற என்னுடைய ஜனனத்தை, நீக்கி அருள்வாய்). ..
சிறைவர வாமையி லேறிச் சிகரி தகரவந்து
சிறைவர வாமையில் கூப்பிடத் தானவர் சேனைகொண்ட
சிறைவர வாமையில் வாங்கிதன் றேங்கழல் யாங்கழலாச்
சிறைவர வாமையி னெஞ்சுட னேநின்று தேங்குவதே. 12
தோகையும், அடியார்களுக்கு அருளும் வரப்பிரசாதத்தையும் உடைய, தாவிச் செல்லும் மயிலில் ஏறி, க்ரவுஞ்ச கிரி, தூளாகும்படி எழுந்தருளி, கரையால், சூழப்பட்டதும், ஆமைகளுக்கு இருப்பிடமானதும் ஆன கடல், ஓ என்று ஓலமிட, அரக்கர்களின் சேனையால், தள்ளப்பட்ட, தேவர்களின் சிறை வாசம் நீங்க, தகுந்த, ஐவேலை, பிரயோகித்த முருகப்பெருமானின், இனிய திருவடிகளை, நான் அணுகாமல் பிரிந்திருப்பதினால், அல்பமாகிய, பஞ்சேந்திரியங்களின், ஆசையாகிய, இருளில், என்னுடைய இருதயம், சேர்ந்து நின்று (இருளொடு), திகைக்கின்றது. ..
தேங்கா வனமும் மதகரி வேந்துடன் சேர்ந்தவிண்ணோர்
தேங்கா வனமுனை யவ்வேற் பணியெனுஞ் சேயிடமேல்
தேங்கா வனமுந் தளர்நடை யாயஞ்சல் செண்பகப்பூந்
தேங்கா வனமுங் கழுநீ ரிலஞ்சியுஞ் செந்திலுமே. 13
நிறைந்திருக்கும், பசுக் கூட்டங்களை மேய்க்கும் திருமாலையும், மும்மதங்களையும் பொழியும் ஐராவதத்திற்கு தலைவனான, இந்திரனையும், அவருடன் சேர்ந்திருக்கும், தேவர்களையும், அவர்களுக்கு இருப்பிடமான அமராவதியையும், ரட்சிப்பது, நம்முடைய, கூரிய வேலாயுதத்தின், தொழிலாகும், என்று சொல்லி (அதைக் கட்டளை இட்ட) முருகனின், வாசஸ்தலம், இதோ இருக்கிறது, திகைத்து, தன் நடையை தோற்கடிக்கிறது என்று அன்னப் பட்சியும், தளர்ந்து போகும், நடையை உடையவளே, பயப்படாதே (அவை யாவன), செண்பக மலரால், விளங்கும், இனிய, பூஞ்சோலையும், செங்கழுநீர் தடாகமும், திருச்செந்தூர் தலமுமேயாகும். ..
செந்தி லகத்தலர் வாணுதல் வேடிச் சிமுகபங்க
செந்தி லகத்தலர் துண்டமென் னாநின்ற சேயசங்க
செந்தி லகத்தலர் ராசிதந் தானைச் சிறையிட்டவேற்
செந்தி லகத்தலர் தூற்றிடுங் கேடு திவாகருளே. 14
சிவந்த குங்கும பொட்டு இட்டு, விளங்கும், ஒளி வீசும் நெற்றியை உடைய வள்ளி நாயகியின், வதனம், தாமரை போன்றது, எள்ளின் பூ போன்றது, நாசி, என்று அவளின் அழகை நலம் புனைந்து உரைத்த, குமரக் கடவுளே, ஜீவராசி கூட்டங்கள் வசிப்பதற்கு, அண்ட கோடிகளை, சிருஷ்டித்த பிரமனை, சிறையில் அடைத்த, வேலாயுதத்தை உடைய, செந்தில் ஆண்டவனே, அகங்காரத்தினால், என்னை வசைகள் பேசுவார்கள், சுற்றத்தார்கள் (அதனால்), எல்லோராலும் துதிக்கப்படும், உன் புயத்தை, எனக்கு தந்தருள வேண்டும் ..
திவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர்
திவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந்
திவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந்
திவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே. 15
பகல் பொழுதில் தானம் கொடுக்கும், கையை உடையை கர்ணனே, பாரியைப் போன்ற கொடை வள்ளலே, என்றெல்லாம் பலரிடமும் பேசி, என்னை உழல வைக்கும், வறுமையாகிய, இருளை, பிளக்கக்கூடிய, ஞான சூரியனே, கர்ணபூரம் என்ற ஆபரணத்தைத் தரித்திருக்கும், வள்ளி நாயகி, பெருமிதத்துடன் (தழுவும்), மார்பை உடையவனே, மாலைப் பொழுதின் நிறத்தை உடைய, சிவபெருமானின், காதில், இனிமையாக பிரணவத்தை உபதேசம் செய்தவனே, வலிய வேலாயுதத்தை ஏந்தி வந்து, என்னுடைய இருதயத்தில் நீ வீற்றருள வேண்டும், ஒளிந்து, எமன் கொள்ளை கொள்ளாதபடி, உயிரைக் காப்பாற்றுவதற்காக ..
சேவற் கொடியும் பனிசாந் தகனுந் திருக்கரத்துச் 
சேவற் கொடியுங் கொடியகண் டாய்தினை சூழ்புனத்துச் 
சேவற் கொடியுந் திவளத் தவளுந்தந் திக்களபச்
சேவற் கொடியு முடையாய் பிரியினுஞ் சேரினுமே. 16
ரிஷப வாகனத்தை உடைய பரமசிவானல், பல் தகர்க்கப்பட்ட, (நிசி + அந்தகன்) பூஷா என்னும் சூரியனும், உன் திருக்கையில் ஏந்தி இருக்கும், கொடியாகிய சேவலும், பொல்லாதவைகளாய் இருக்கின்றன, தினைப் பயிர் நன்றாக வளர்ந்துள்ள கொல்லையை, காவல் புரியும், நீண்ட, காட்டாற்றின் வளப்பத்தை அநுபவிப்பவளுமாகிய (வள்ளியையும்), ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, சந்தன சேறு பூசியிருக்கும், சிவந்த, சொக்கட்டான் கருவி போன்ற மார்பகமும், கொடி போன்ற இடையையும் உடைய (தேவசேனையையும்), இரண்டு பக்கங்களிலும் சேர்த்துக்கொண்டு இருப்பவனே, உன்னைப் பிரிந்திருக்கும் போதும், உன்னிடம் கலந்திருக்கும் போதும், கொடியவைகளாய் இருக்கின்றன). ..
சேரிக் குவடு மொழிவிழி யாடனச் செவ்விகுறச்
சேரிக் குவடு விளைந்ததன் றேநன்று தெண்டிரைநீர்
சேரிக் குவடு கடைநாளி லுஞ்சிதை வற்றசெவ்வேள்
சேரிக் குவடு புடைசூழ் புனத்திற் றினைவிளைவே. 17
இசைந்த, கரும்பையும், மாவடுவையும் (ஒத்த), பேச்சையும், கண்களையும் உடைய (வள்ளி நாயாகியின்), மார்பின் பக்குவ நிலையால், குறவர் குடிலுக்கு, அவளைக் களவு மணம் செய்து கொண்டான் முருகன் என்ற அபவாதம் ஏற்பட்டது, அந்தக் காலத்தில் தானே, நன்றாக விளங்கியது, தெள்ளிய அலைகளை உடைய சமுத்திர ஜலம், ஒன்று சேர்ந்து, பூமியை, அழிக்கின்ற, பிரளய காலத்திலும், அழிவில்லாத, முருகவேளுடைய, வடசேரி தென்சேரியில், மாலையில், பக்கவாக்கில், வயலில், தினைப்பயிரின் விளைவானது ..
தினைவேத் தியன்புசெய் வேந்தன் பதாம்புயத் திற்பத்திபுந்
தினைவேத் தியமுகந் தேற்றினர் மாற்றினர் பாற்றினந்தீத்
தினைவேத் தியர்நெறி செல்லாத விந்தியத் தித்தியினத்
தினைவேத் தியங்குயிர் கூற்றாரி லூசிடுஞ் சீயுடம்பே. 18
தினைப்புனத்திற்கு இறைவியாகிய வள்ளி, காதல் புரிகின்ற, முருகக் கடவுளின், திருவடித் தாமரையில், பத்தி செய்கின்ற உள்ளத்தையும், புத்தியையும், அவருக்கு உரிய நைவேத்தியமாக, விருப்பமுடன் சமர்பித்த அடியார்கள், உண்மையாகவே மாற்றி விட்டார்கள், பருந்துக் கூட்டங்களும், அக்னியும், சாப்பிடுவதும், அழகிய அறிஞர்களால் உணர்த்தப்பட்ட, மார்க்கத்தில் ஒழுகாததும், பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டதும், தின் பண்ட வகைகளின், கழிவாகிய மலஜலமாதிகளை, ஏற்றுக்கொண்டிருப்பதும், உள் நின்று இயங்குகின்ற பிராணனை, எமன் உண்டுவிட்டால், க்ஷண நேரத்தில் ஊசிப்போகும், அருவெருக்கத்தக்க இந்த உடம்பை, மாற்றி விட்டனர்). ..
சீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவிதரத்தோல்
சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்
சீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார்
சீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே. 19
பார்வதியின் பாகராகிய சிவபெருமான், நமக்கு, உபதேசம் செய்வாய் என்று கேட்டு, பணிவுடன் வாயை மூடிக்கொண்டு, காதால் கேட்க, யானைகளும், சிங்கங்களும், தஞ்சமாக உறைகின்றதும், கல்வி ஒழுக்கத்திற்கு இருப்பிடமாகிய, பொதிக மலைக்கு, தலைவனாகிய, அகத்திய முனிவனின், பாட்டனாரும், பாற்கடலை கடைந்தவனாகிய திருமாலின், மருகனாகிய குமரக் கடவுள், அப்போது உபதேசம் செய்ய, தியக்கமுற்றிருந்தார், மிகவும் கேவலமானது, அன்னத்திலும் தாமரையிலும் இருக்கும், பிரம்மன், பழமையான வேதத்தை, எதற்காக கற்றுக் கொண்டான்? ..
செயதுங்க பத்திரி போற்றும் பகீர திகரசெவ்வேற்
செயதுங்க பத்திரி சூடுங் குறத்தி திறத்ததண்டஞ்
செயதுங்க பத்திரி புத்திரி பாதத்தர் செல்வதென்பாற்
செயதுங்க பத்திரி யத்திரி யாதிரென் சிந்தையிலே. 20
கீர்த்தி உடைய, துங்கபாத்திரி நதி, வணங்குகின்ற, கங்கையின், கையில் விளங்குபவனே, சிவந்த வேலாயுதத்தை உடைய வெற்றி வீரனே, சுரபுன்னை இலையை, தரித்திருக்கும், வள்ளியின் மணாளனே, தண்டாயுதமும், உயர்ச்சியும், ஒழுக்கமும் உடைய, (மார்கண்டேயரை அழிக்கப் போனதால் எதிரியாகிய) எமனை, அழியும்படி, கால்களால் உதைத்த சிவ பிரானின், மைந்தனே, தெற்கிலிருக்கும் எமபுரத்திற்கு அழைத்துப் போவதும் யாவராலும் ஒதுக்கப்பட்டதும், ஆபத்துககள் நிறைந்ததுமாகிய வழியில், எனது மனம் முரிந்து, உழலாமல், நீ இருக்க வேண்டும், என் உள்ளத்தில் ..
சிந்தா குலவ ரிசைப்பேரு முருநஞ் சீருமென்றோர்
சிந்தா குலவ ரிடத்தணு காதரு டீமதலை
சிந்தா குலவரி மாயூர வீர செகமளப்பச்
சிந்தா குலவரி மருக சூரனைச் செற்றவனே. 21
ஒருகாலும் அழியாது, நம்முடைய வம்ச பரம்பரையின் பெயரும், நாம் வசிக்கும் இந்த நகரமும், நமது சிறப்பும், என்று பொய்யாக எண்ணுகின்ற, அஞ்ஞானிகள் பால், நான் சேராதிருக்க நீ அருள வேண்டும், அக்னி தான் உருவெடுத்த சேவலை, கொடியாக வைத்து, விளங்கும், பச்சை நிறமுள்ள, மயிலேறிய சேவகனே, இவ்வுலகத்தை அளப்பதற்காக, வாமன அவதாரம் எடுத்த, திருமாலின் மருகனே, சூரபத்மனை வென்றவனே. ..
செற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற்
செற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச் 
செற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்த
செற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே. 22
செற்றை எனும் மீன் இனம், திகழ்கின்ற, வயல்கள், பூஞ்சோலை, மதில்கள் (இவை), திகழ்கின்ற, மலையின் மேல், மேகக் கூட்டம், தவழ்கின்ற, பழநி மலை ஆண்டவனே, எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று, துரியோதனாதிகள் நூறு பேரையும் அழித்து, பஞ்ச பாண்டவர்கள் ஐவரும், புராதனமான ராஜ்ஜியத்தை ஆளும்படி, மனதில் நினைத்து (அப்படிச் செய்த கிருஷ்ணமூர்த்தியின்), ஒரு நேத்திரமாகிய சூரியனின், மைந்தனாகிய எமன், அனுப்பிய, தூதர் கூட்டம், வருகின்ற, கிழ திசை அடைந்த இந்த உடலாகிய கூடு, அக்னியில் தகிக்கப் படுகின்ற, அந்த கடைசி நாளில், எழுந்தருளி, எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று). ..
தினகர ரக்கர தங்கெடுத் தார்குரு தேசிகர்செந்
தினகர ரக்கர மாறுடை யார்தெய்வ வாரணத்தந்
தினகர ரக்கர சத்தி யின் றாகிலத் தேவர்நண்ப
தினகர ரக்கர தந்தீர்வ ரீர்வர் செகமெங்குமே. 23
பகன் பூடா என்னும் இரண்டு சூரியர்களுடைய, நேத்திரத்தையும், பல்லையும், அழித்த சிவபெருமானுக்கு, உபதேசம் செய்த ஞானாசிரியனும், செந்தில் பதியில் இருப்பவரும், ஷடாக்ஷரப் பொருளாய் இருப்பவரும், தெய்வீகமான, வேதங்கள் பூஜித்த, சர்ப்பம் போல் வடிவமுடைய திருச்செங்கோடு மலையை ஆள்பவரும் ஆகிய கந்த பிரானின், அரத்தைப் போன்ற கூர்மையான, கை வேலாயுதம், இல்லை என்றால், தேவர்களின் சிறந்த அமராவதி நகரம், இல்லாமல் போயிருக்கும், வஞ்சனையை உடைய அசுரர்கள், இறப்பைத் தவிர்த்திருப்பார்கள், உலகம் முழுவதையும் நிர்மூலமாக்கி இருப்பார்கள். ..
செகம்புர வார்கிளை யெல்லா மருண்டு திரண்டுகொண்ட
செகம்புர வாதிங்ஙன் செய்ததென் னோமயல் செய்யவன்பு
செகம்புர வாச மெனத்துயில் வார்செப்ப பங்கபங்க
செகம்புர வாமுரல் செந்தூர வென்னத் தெளிதருமே. 24
இவ்வுலகத்திலும், ஊரிலும் உள்ள, ஒழுங்கான, உறவினர் எல்லாரும், பயந்து கொண்டு, கூட்டமாக கூடிக்கொண்டு, ஆட்டினுடைய, தலையை, காப்பாற்றாது, இந்த இடத்தில், வெறியாட நினைத்து அதைக் கொல்லக் கருதுவது என்ன விபா£தம்? (அதற்கு பதிலாக) ஒருதலை காமமாக மயங்கி இருக்கும் இந்தப் பெண்களின் விரக தாபம், சிவந்த, வலிய, ஆதி சேடனை, சொந்த வாசஸ்தலமாக, நித்திரை செய்யும் மகாவிஷ்ணு, புகழ்கின்ற, குற்றமில்லாதவனே, தாமரை வாவியில், சங்குகள், உரக்கமாக சப்தம் செய்கின்ற, செந்தில் பதியானே, என்று அவன் நாமத்தைச் சொன்னால், அந்தக் கணத்திலேயே மயக்கம் தீர்ந்து விடும். ..
தெளிதரு முத்தமிழ் வேதத்திற் றெய்வப் பலகையின்கீழ்
தெளிதரு முத்தமிழா நித்தர் சேவித்து நின்றதென்னாள்
தெளிதரு முத்தமிழ் தேய்நகை வாசகச் செல்விதினைத்
தெளிதரு முத்தமிழ் செவ்வே ளிருப்பச் செவிகுனித்தே. 25
தெளிவைத் தருகின்ற, இயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலும், நான்கு மறைகளிலும், முதலில் விளங்கிய தெய்வீகமாகிய சங்கப் பலகையிலும் (மதுரையில்), மாசற்ற, குற்றால மரத்தின் கீழினும் (தட்சிணாமூர்த்தியாக), முதன்மை ஸ்தானத்தில் விளங்குகின்ற, அழிவில்லாத நித்தியராகிய சிவ பெருமான், பணிந்து நிற்கக் காரணம் என்ன? நட்சத்திரம் போல, பிரகாசிக்கும், முத்தையும், தேவாமிர்தத்தையும், ஒத்த, பல்லையும், வார்த்தையையும் உடைய, மங்கையாகிய, தினை தானியத்தை கொழிக்கின்ற வள்ளி, கொடுக்கும், முத்தத்தில், ஆனந்தத்தில் அமிழ்ந்திருக்கும், முருகப் பெருமான், குருவாய் எழுந்தருளி உபதேசிக்க, செவியைத் தாழ்த்திக் கொண்டு, பணிந்து நிற்கக் காரணம் என்ன?) ..
செவிக்குன்ற வாரண நல்கிசை பூட்டவன் சிந்தையம்பு
செவிக்குன்ற வாரண மஞ்சலென் றாண்டது நீண்டகன்மச்
செவிக்குன்ற வாரண வேலா யுதஞ்செற்ற துற்றனகட்
செவிக்குன்ற வாரண வள்ளி பொற்றாண்மற்றென் றேடுவதே. 26
நாகாசல வேலவனே, என்னுடைய காதுக்கு, உன்னுடைய நீங்காத, உரிமையை (உனக்கும் எனக்கும் விடாத தொடர்பை ஏற்படுத்தி) கொடுக்கும், உன்னுடைய கீர்த்தியை சேர்த்துக் கொள்ள, வலிய, என் இதயமாகிய, செந்தாமரையில் இருக்கும், ஜீவாத்மாவாகிய பட்சி, இல்லற துன்பத்தைப் பார்த்து நடுங்கும் பொழுது, உன்னுடைய கொடியாகிய சேவல், பயப்படாதே என்று சொல்லி, என்னை அடிமை கொண்டது, மிகப் பெரிய, முன்பு செய்த வினையால் விளையும், ஜனனத்திற்கு விதையாகிய, மலை போன்ற ஆசைக் கூட்டத்தை, போர் புரிவதில் வல்லமை உள்ள, உன் திருக்கை வேல், தகர்த்து விட்டது, உன்னுடைய கிரியா சக்தியாகிய தேவயானை, இச்சா சக்தியாகிய வள்ளி இவர்களின், சிறந்த திருவடிகள் என் சிரசின் கண் வந்து அமர்ந்தன, இனி நான் சம்பாதிக்க வேண்டிய வேறென்ன இருக்கிறது. ..
தேடிக் கொடும்படை கைக்கூற் றடாதுளஞ் சேவின்மைமீன்
தேடிக் கொடும்படை கோமான் சிறைபட வேறுளபுத்
தேடிக் கொடும்படை யாவெகு நாட்டன் சிறைகளையுந்
தேடிக் கொடும்படை மின்கேள்வ னற்றுணை சிக்கெனவே. 27
நெஞ்சமே, பாசக் கயிற்றை, சேர்ந்திருக்கும் (பிடித்திருக்கும்), கையை உடைய, எமன், இந்த உடலாகிய கூட்டை அழிப்பதற்கு முன், இப்போதே சம்பாதித்துக்கொள், ரிஷபம், தனுஷ், ஆடு, மீனம், விருச்சிகம் (முதலிய எல்லா ராசிகளையும்), எல்லா திசைகளிலும் உள்ள அண்டங்களையும் சிருஷ்டித்த, பிரம்ம தேவனை, சிறையில் அடைத்து, வேறு தெய்வங்களின், பக்தியில், மாறிப்போகும் மனப்பான்மையை, அடையாத, ஆயிரம் கண்களை உடைய இந்திரனின், சிறையை நீக்கினவரும், நீரிலும் நெருப்பிலும் சமணர்களால் செலுத்தப்பட்ட, பனை ஏடுகளையும், அவர்கள் செய்த பல கொடுர செயல்களையும், அழித்த, சுவாமியான, தெய்வயானை நாயகனாகிய கந்தக்கடவுளின், நல்ல அனுக்கிரகத்தை, உறுதியாக, (தேடிக்கொள் மனமே) ..
சிக்குறத் தத்தை வழங்கா திழந்து தியங்குவர்தே
சிக்குறத் தத்தை வடிவே வெனார்சிவ ரன்பர்செந்தாள்
சிக்குறத் தத்தை கடிந்தேனல் காக்குஞ் சிறுமிகுறிஞ்
சிக்குறத் தத்தை யனகிலெப் போதுந் திகழ்புயனே. 28
(தினைப்பயிரை உண்ண வந்த) கிளிகளை ஓட்டி, அந்த தினைப்பயிரை, ரட்சிக்கின்ற, பெண்ணாகிய, குறிஞ்சி நிலத்தில் வாழும் குறப்பெண்ணாகிய, அந்த வள்ளிநாயகியின், மார்பின் சுவட்டால், சதாகாலமும், பிரகாசிக்கின்ற புயத்தையுடைய கந்தக்கடவுளே, உன் வேலாயுதத்தை புகழ்கின்ற அடியார்கள், உன் சிவந்த திருவடிகளை, உறுதியாய் பற்றிக்கொள்ளக் கண்டும், சில அஞ்ஞானிகள், தம்முடைய புகழ், நலியும்படி, இழச்சிக்கு இடமானதும், குறைந்து போவதுமாகிய, செல்வத்தை, நல்ல வழியில் தர்மம் செய்யாமல், பல வழிகளில் அவற்றைத் தொலைத்து, வருந்துவார்கள், வடிவேலைத் துதிக்காதவர்களே இவர்கள். ..
திகழு மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோ
திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ
திகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபா
திகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே. 29
விளங்குகின்ற, மாலை சூட்டிய, தனது திருவடியை, வணங்குகின்ற அடியார்களின், திருவாக்கின்படி நடக்க (சம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் 11 வது பாட்டாக திருக்கடைக் காப்பு என்று ஒரு பாட்டு உண்டு. அப்பதிகத்தை பாடுவார்க்கு என்ன பலன் கிடைக்கும் என்பார். இதன்மூலமாக அடியாருக்கு அந்தப்பலனைத் தேடிக்கொடுப்பதை இங்கு கூறுகிறார்). தேவாரத் திருப்பதிகங்களை ஓதி, தான் அவதரித்த சீர்காழியையும், தான் காத்தளித்த அமராவதியையும், தான் என்றும் கலியாண சுபுத்திரனாக நிற்கும் திருத்தணியையும், துதித்து, அணியும் திருவெண்ணீறு, மும்மலத்தைப் போக்கடிக்கும், முழுப்பொருள் இதுவே என்று நம்பும் கற்புடமையையும், கொடுக்கும், என்று நினையாத, சமணக் கூட்டங்களை, வருத்தம் தரும், கழுமரத்தில் ஏற்றி, கலக்கம் அடைந்து அழியும்படி, வாதுபுரிந்த சம்பந்தப்பெருமான் ஆகிய குமரக் கடவுள் அன்றி, வேறு பிரத்யக்ஷ தெய்வங்கள் கிடையாது. ..
தெய்வ மணம்புணர் தீகால் வெளிசெய்த தேவரைந்த
தெய்வ மணம்புண ராரிக்கு மருக செச்சையந்தார்
தெய்வ மணம்புண ருங்குழ லாளைத் தினைப்புனத்தே
தெய்வ மணம்புணர் கந்தனென் னீருங்க டீதறவே. 30
மற்ற தேவர்களையும், பூமி, நீர், அந்தக்கரணம், நெருப்பு, காற்று, ஆகாசம் முதலிய ஐந்து பூதங்களையும், படைத்த, பிரம்ம தேவன், நம்மேல் எழுதிய தலை எழுத்தை (முருகனின் நாம சங்கீரத்தனம்), அழித்துவிடும். (அதனால்) மாசற்ற, அழகிய, கருட வாகனனாகிய, நரசிம்மரின் மருகனே, வெட்சி மாலை அணிந்த தெய்வமே, நறுமணம் வீசும், கூந்தலையுடைய வள்ளியை, தினைப்புனத்தில், கந்தர்வ மணம் செய்துகொண்ட, குமரக் கடவுளே என்று துதியுங்கள், உங்கள் தீய வினை எல்லாம் ஒழியும்படி ..
தீதா வசவ னுபவிக்க மண்ணிலும் விண்ணிலுஞ்செந்
தீதா வசவ னியாயஞ்செய் வேதிய ரேதியங்காத்
தீதா வசவ னிமலர்செல் வாசாக் கிரவசத்த
தீதா வசவன் புறப்பா ரெனுமுத்தி சித்திக்கவே. 31
தீமையாகிய, இழிச்சொல், அனுபவிக்கும்படியாய், பூலோகத்தில் புகழ் பெறவும், தேவர்கள் உலகத்தில் போகங்களைப் பெறவும் எண்ணி, சிவந்த அக்னி தேவன், ஏறுகின்ற, ஆட்டை, கருணை இல்லாமல் பலி கொடுத்து யாகம் செய்கின்ற, மறையோரே, இனி அப்படி திகைக்காமல், தெளிவான அறிவை, தந்தருள்க என்று, இடப வாகனத்தை உடைய, சிவபிரானின், மைந்தனே, கருவி கரணங்கள் ஐவேலை செய்யும் விழிப்பு நிலையிலும், அவைகள் ஒடுங்கி இருக்கும் துரிய நிலையிலும், உனக்கு எங்களிடத்தில் கிருபை உண்டாகி கடாட்சிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள், மோட்சம், உங்களுக்கு கிடைக்கும்படி. ..
சித்திக்கத் தத்துவ ருத்திர பாலக செச்சைகுறிஞ்
சித்திக்கத் தத்துவ ரத்தியின் மாவென்ற சேவகவிச்
சித்திக்கத் தத்துவர் வாய்மொழி மாதர்க் கெனுந்திணைவா
சித்திக்கத் தத்துவ ருத்தப் படாதுநற் சேதனமே. 32
அடியேனுக்கு கிட்டும் படி அருள வேண்டும், தத்துவ மூர்த்தியே, சிவனார் குமாரனே, வெட்சி மாலை அணிந்த, குறிஞ்சி நிலத்திற்கு அதிபதியே, அலை தாவுகின்ற, உப்பை உடைய, கடலின் கண், மா மரமாக நின்ற சூரனை, ஜெயித்த, வீரனே, மிகவும் விருப்பமுடன், கரும்பும், அந்த சிவந்த பவளமும், வாயும், மொழியாகும், பெண்களுக்கு, என்று வர்ணிக்கும் காம சூத்திரத்தை, ஓயாமல்படித்து, இதற்கு இனமான வெகுளியினால், துன்பப் படாமல், நல்ல ஞான அறிவை, அடியேனுக்குக் கிட்டும்படி அருள வேண்டும்). ..
சேதனந் தந்துறை யென்றுமை செப்புங் குருந்துறைகாற்
சேதனந் தந்துறை யல்லிமன் வாவிச் செந்தூர்கருத
சேதனந் தந்துறை யென்றறி யார்திற நீங்கிநெஞ்சே
சேதனந் தந்துறை மற்றுமுற் றாடித் திரிகைவிட்டே. 33
அழகிய, திருமுலைப் பால் ஊட்டி, பெரும் பாக்கியமாய் கிடைத்த, என் ஐயன், என்றெல்லாம், பார்வதி கொஞ்சிப் புகழ்கின்ற, குழந்தை, நீங்காமல் வசிக்கின்ற, சிவந்த காலை உடைய, அன்னப்பட்சிகளும், நூலோடுகூடிய, ஆம்பல்களும், நிறைந்திருக்கின்ற, திருச்செந்தூரை, தியானிப்பாயாக, அறிவின்மையால், தங்கள், சமயக் கோட்பாடுகள், என்று உணராத, திருந்தி உழலும் பரசமய கூட்டத்தை விட்டு, மனமே, சேது முதலாகிய, மற்றும் அநேக சமுத்திரங்களையும் நதிகளையும், போய் ஸ்நானம் செய்து, உழல்கின்ற வேலையை, விட்டு, (சேந்தூர் கருது). ..
திரிகையி லாயிர வெல்லாழி மண்விண் டருசிரபாத்
திரிகையி லாயிர வாநந்த நாடகி சேரிமகோத்
திரிகையி லாயிர மிக்குமைந் தாசெந்தி லாயொருகால்
திரிகையி லாயிரக் கோடிசுற் றோடுந் திருத்துளமே. 34
மாறுதல் இல்லாதவனே, ராத்திரி, பகல், சமுத்திரம், பூமி, விண்ணுலகம், இவைகளை எல்லாம் மும்மூர்த்திகளில் முதல்வனாய் நின்று படைத்தவரும், கையில் பிரம்ம கபாலம் ஏந்தியவரும், கைலாய நாதரும், ஆரவாரம் மிகுந்த, ஆனந்த நடனம் செய்பவருமாகிய சிவபெருமானுக்கும், அவரின் இடப்பாகத்தில் சேர்ந்திருக்கும், இமயமலையில் உற்பவித்த, தாயாகிய பார்வதிக்கும், மகிழ்ச்சியைத் தரும், புதல்வனே, செந்தில் பதியானே, குயவனின் சக்கரம் ஒருமுறை சுற்றி வரும் முன் எண்ணற்ற முறை சுற்றி வரும், என் உள்ளத்தை, மாற்றி அமைதியைத் தந்தருள்க. ..
திருத்துள வாரிகல் போதுடன் சேண்மழை தூங்குஞ்சங்க
திருத்துள வாரிதி கண்டுயி லாசெயன் மாண்டசிந்தை
திருத்துள வாரன்னை செந்தூரையன் னள்செம் மேனியென்பு
திருத்துள வார்சடை யீசர்மைந் தாவினிச் செச்சைநல்கே. 35
துளசிமாலை அணிந்த திருமாலின் கரு நிறத்துடன், போட்டி போடுகின்ற, மாலைக்காலத்தோடு, விண்ணிலிருந்து, மழை விடாமல் பெய்கிறது, சங்கு கூட்டங்கள், வசிக்கின்ற, சமுத்திரம், இடை வெளி இல்லாமல் முழங்குகின்றது, இந்தப் பிரிவாற்றாமையினால் மெய்மறந்து இருக்கும் என் மனதை, ஆறுதல் புரிவதற்கு, உரியவர் யார்? பெற்ற தாயும், செந்தில் பதியைப் போல் இருக்கிறாள், சிவந்த மேனியில், எலும்பு மாலையும், உதிர்கின்ற விபூதிப் பொடியும் படிய, நீண்ட, ஜடாபாரத்தை உடைய பரமசிவன், குமாரனே, இனிமேல் என்னால் இந்த விரக தாபம் தாங்க முடியாததால், உன் வெட்சி மாலையை எனக்கு தந்தருள வேண்டும். ..
செச்சைய வாவி கலயில்வல் வாயிடைச் சேடனிற்கச்
செச்சைய வாவி பருகுஞ் சிகாவல செங்கைவெந்தீ
செச்சைய வாவி விடுகெனுஞ் செல்வநின் றாளணுகச் 
செச்சைய வாவி னுயிர்வாழ் வினியலஞ் சீர்ப்பினுமே. 36
வெட்சி மாலை தரித்திருப்பவனே, தாவிப் பாய்கின்றதும், சர்ப்பங்களிடத்தில் பகையும், கூர்மை பொருந்திய, வலிய, வாயினிடத்தில், பாம்பை வைத்துக் கொண்டு, சிவந்த, மலையின் கண், அதனுடைய உயிரை உண்ணுகின்ற, மயிலை வாகனமாக உடையவனே, (பரமசிவன் ஆக்னியைப் பார்த்து) உன்னுடைய சிவந்த கரத்தில், இந்த வெப்பமான அக்னிப் பொரியை ஏந்திக் கொண்டு, சரவண தடாகத்தில் கொண்டு போய் விடு, என்று சொல்ல (அங்கு உற்பவித்த), பாலகனே, உன்னுடைய திருவடிகளை நாங்கள் அடையும்படி, செய்வாயாக இகழ்ச்சிக்கு இடமான, ஐம்புல ஆசையுடன் சேர்ந்த இந்த ஜீவ வாழ்க்கை, இனி மேல் நமக்கு வேண்டாம், செல்வம் அதிகரித்தாலும் (இனி அலம்) ..
சீர்க்கை வனப்பு மலர்வேங்கை யானவன் செஞ்சிலையோர்
சீர்க்கை வனப்பு னிதத்தவ வேடன் றினைவளைக்குஞ்
சீர்க்கை வனப்பு னமதுருக் காட்டிய சேய்தமிழ்நூற்
சீர்க்கை வனப்பு னிமிர்சடை யோன்மகன் சிற்றடிக்கே. 37
மனம் திருந்துதல், அழகாகும், புஷ்பங்கள் உள்ள, வேங்கை மரமாக நின்றவனும், சிறந்த வில்லை உடைய குறவர் கூட்டத்தினர், சந்தேகப்பட்ட தன்மையை, கோபித்து, அந்தக் காட்டில், தூய சன்னியாசி ரூபம் எடுத்தவனும், தினைப் பயிரைக் காவல் காத்து வந்த, சிறந்த வள்ளிக்கு, மலை அரிசி (தினை அரிசி) விளையும் அந்த வயலில், தன்னுடைய உண்மை சொரூபத்தைக் காட்டிய, குமாரக் கடவுளும், தமிழ் இலக்கியத்தில் காணப்படும் 30 சீர்க்கும், தலைவனாக (ஞான ஞானசம்பந்தராக) அவதரித்தவனும், கங்கா ஜலமும், அருகம்புல்லும், விளங்கும் நீண்ட, ஜடாபாரத்தை உடைய சிவகுமாரனாகிய முருகனின், சிறிய திருவடிகளுக்கு (சீர்க்கை வனப்பு) ..
சிற்றம் பலத்தை யரன்புநெய் நூற்றிரி சிந்தையிடுஞ்
சிற்றம் பலத்தை வரஞான தீபமிட் டார்க்குப்பரி
சிற்றம் பலத்தை யருளுஞ்செந் தூரர் பகைக்குலமாஞ்
சிற்றம் பலத்தைப் பதவரந் தோளிலிந் தீவரமே. 38
பர ஆகாச வெளியாகிய, சுவாமியும், பக்தி என்னும், நெய்யை வார்த்து, ஆகம சாஸ்திரம் என்னும் நூலை, திரியாக்கி, இதயமாகிய, தீபம் ஏற்றுகின்ற, தகழியில் இட்டு, ஜீவனுக்கு பற்று கோடாகிய, கிருபை உண்டாகும் பொருட்டு, மெய்ஞான தீபத்தை, ஏற்றின அடியார்களுக்கு, பரிசாக, தனது குக சாயுச்யம் என்னும் பலனை, கிருபை செய்யும், செந்திலாண்டவனின், எதிரிகளை அழித்த, சிறிய பாணம் அல்ல, என் இதயத்தில் தைத்து வருத்துவது, அந்தக் கந்தனின், அழகிய புயத்தில் அணிந்த, நீலோற்பலமாகிய பாணம் தான். ..
தீவர கந்தரி தாம்பகி ராருற வானசெம்பொன்
தீவர கந்தரி யாநொந்த போதினிற் செச்சையவிந்
தீவர கந்தரி சிந்துரை பாக சிவகரண
தீவர கந்த ரிபுதீ ருனதடி சேமநட்பே. 39
வறுமையாகிய பாவத்தை, ஏற்றுக் கொண்டு, மனது உடைந்து வேதனைப் படும்போது, உறவினர் என்று சொல்லப்படும் பெரிய ஐஸ்வரியவான்கள், தீந்து போன, அந்துப்பூச்சியால் அரிக்கப்பட்ட, கேழ்வரகு தானியத்தைக் கூட, தானம் கொடுக்க இசைய மாட்டார்கள் (ஆதலால்), வெட்சி மாலையும் நீலோற்பல மாலை¨யும் புனைந்தவனே, குகையில் வாழும் வள்ளியம்மையையும், யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனையையும், இருபக்கங்களிலும் வைத்திருப்பவனே, சிவ தியானம் செய்யும், புத்தியை, வரமாக அளிக்கும், கந்தப் பெருமாளே, எதிரிகளை அழிக்கும் உனது திருவடிகளே, பொக்கிஷமும் உறவுமாகும். ..
சேமர விக்கம் படையாக வீசுப தேசமுன்னூற்
சேமர விக்கம் பலந்தரு வாய்செரு வாயவெஞ்சூர்ச்
சேமர விக்கம் திரித்தாய் வருத்திய வன்றிறென்றல்
சேமர விக்கம் புயவாளி விண்டிரை தெண்டிரையே. 40
சிவந்த, சூரியனுக்கு, அர்க்கிய ஜலத்தை, + மந்தேகர்களின் தடையை விலக்கும் ஆயுதமாக, இறைக்கின்றவர்களும், தமக்கு செய்யப்பட்ட காயத்திரி மந்திர உபதேசத்தையும், முப்புரி நூலின் தூய்மையையும், காப்பாற்றுகின்ற மறையோர்களின், யாகத்தில் கொடுக்கும் அவிர் பாகத்திற்கு, அழகிய, நல்ல பலனை கொடுப்பவனே, போர் செய்யும், கொடிய சூரபத்மனின், வைரம் பொருந்திய, மாமிசத்தினால் ஏற்பட்ட, (விக்னம்) இடையூறை, அழித்தவனே, என்னைத் துன்புறுத்துகின்றன, காமச் சின்னமாகிய அன்றில் பட்சியும், மன்மதனின் தேராகிய தென்றலும், மணியோசை கேட்கச்செய்வதால் எருதுகளும், கரும்பு வில்லும், தாமரைப்பூ பாணமும் ஆர்ப்பாட்டத்துடன் முழங்குகின்ற தெள்ளிய அலையை உடைய சமுத்திரமுமே. ..
தெண்டன் புரந்தர வக்குன்றில் வாழ்கந்த சிந்துவிலுத்
தெண்டன் புரந்தர லோகஞ் செறாதுசெற் றோய்களைவாய்
தெண்டன் புரந்தர நற்கேள் சிறுவ ரழச்செய்தெம்மைத்
தெண்டன் புரந்தர வின்படி நூக்கிய தீ நரகே. 41
வணங்குகிறேன், நாகாசல வேலவனே, சமுத்திரத்தின் கண், மகாபலசாலியான சூரபத்மன், இந்திர லோகத்தை, அழிக்காதபடி, அவனை வதைத்தவனே, (என்னைக் குறைவரக் காப்பாற்றி) தண்டாயுதத்தை உடைய எமன், தொன்று தொட்டு வந்து, அழகிய நல்ல சுற்றத்தாரும், பிள்ளைகளும், என் உடலைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு அழச்செய்து, எம் உயிரைப் பிரித்து, தெள்ளிய தன்மையை உடைய, தன் ஊராகிய எம்புரிக்கு கூட்டிச் சென்று, தனது உத்தரவின்படி, சென்று நுழைக்கும், நரகாக்கினியைக் நீக்குவாய்) ..
தீனந் தினத்து தரச்செல்வர் பாற்சென் றெனக்கென்பதோர்
தீனந் தினத்து முதரா னலஞ்சுடச் சேர்ந்துசுடுந்
தீனந் தினத்து னிகளைசெங் கோட்டினன் செந்திலந்நீர்
தீனந் தினத்து தவத்துப் பிரசதஞ் செய்யவற்றே. 42
புத்தி கெட்ட, கூட்டத்தாரிடை, கொடையாளி என்று பேசப்படும், அவர்களிடத்தில் போய், எனக்கு தருமம் செய்யுங்கள் என்று இரக்க வைக்கும், மிகவும் கொடியதான, வறுமை, தினந்தோறும், வயிற்றில் பசியாகிய அக்னி எரியும் பொழுது, அதனுடன் சேர்ந்து என்னை தகிக்கின்றது, தீமையாகிய, நம்முடைய, நாள்தோறும் வருத்துகின்ற துன்பத்தை, நீக்க வல்ல, சேங்கோட்டு வேலவனின், செந்திலம்பதியிலுள்ள, அழகிய ஜலம், சிவப்பு நிறத்தைக் கொண்ட, பவளம் போன்ற இதழை, இனிய சங்கைப் போல, வெண்மை நிறமாக, கொடுக்க வல்லதோ? ..
செய்யசெந் தாமரை யில்லாத மாதுடன் செந்தினைசூழ்
செய்யசெந் தாமரை மானார் சிலம்பிற் கலந்துறையுஞ்
செய்யசெந் தாமரை யென்னுங் குமார சிறுசதங்கைச் 
செய்யசெந் தாமரை சேர்வதென் றோவினை சேய்தொலைத்தே. 43
தினை விளையும் நிலத்தை உடைய, ஒழுங்கான, சிறுகுடி என்னும் நகரத்தாருக்கு, தெரியாமல், அந்தத் தினைப்புனத்தைக் காவல் செய்த வள்ளி நாயகியை, சிவந்த கொல்லைப் பயிரைச் சூழ்ந்து கொண்டிருந்த, ஆடு, தாவுகின்ற கடம்பை என்கிற மான் கூட்டம், மற்றும் வேறு ஜாதி மான்கள், நிரம்பி இருக்கும், குன்றில், அவளைக் காந்தர்வ மணம் செய்து கொண்ட, கந்தக் கடவுளே, அழகிய கொன்றை மாலையை உடைய சிவபெருமான், ஐயனே எனப் போற்றுகின்ற குமாரக் கடவுளே, சிறிய சதங்கை அணிந்த, அழகிய, சிவந்த நின் திருவடித் தாமரையை, நான் அடைவது எந்தக் காலம்? இருவினைகளையும் தூரத்தில் நீக்கிவிட்டு. ..
சேதாம் பலதுறை வேறும் பணிகங்கை செல்வநந்தன்
சேதாம் பலதுறை யாதசிற் றாயன் றிருமருக
சேதாம் பலதுறை செவ்வாய்க் குறத்தி திறத்தமுத்திச்
சேதாம் பலதுறை யீதென் றெனக்குப தேசநல்கே. 44
சேது முதலிய, மற்றும் பல புண்ணிய தீர்த்தங்களும், வணங்குகின்ற, கங்காதேவியின் மைந்தனே, நந்த கோபனின் பாலகனாய் அவதரித்து, வெண்ணை திருடனாய் யசோதையால் கட்டப்பட்ட தம்புக் கயிற்றால் அன்றி, வேறு எதற்கும் கட்டுப்படாத, சிறு இடையனாகிய கிருஷ்ண மூர்த்தியின், செல்வ மருமகனே, சிவந்த, ஆம்பல் பூ நிறம்போலும், உற்ற, சிவந்த வாயை உடைய, வள்ளி மணாளனே, மோட்சத்திற்கும் எனக்கும் உள்ள பெரிய தூரத்தை, தாண்டக்கூடிய, நல்ல பலனைக் கொடுக்கக் கூடிய மார்க்கம், ஏது என்று, எனக்கு நீ உபதேசம் செய்ய வேண்டும். ..
தேசம் புகல வயிலே யெனச்சிறை புக்கொருகந்
தேசம் புகல வணவாரி செற்றவ னீசற்குப
தேசம் புகல திகவாச கன்சிறி தோர்கிலன்மாந்
தேசம் புகல கமுதவி மானைச் செருச் செய்வதே. 45
ஐந்து தலையில் ஒரு தலையை, இழந்த, பிரம்மன், எனக்கு உறைவிடமும், அடைக்கல ஸ்தானமும், வேலாயுதமே என்று முறையிட, மரக்கலங்களும் அழகும் நிறைந்த, உக்கிர குமார பாண்டியனாக வருணன் ஏவிய கடலை வற்றச் சேய்தவனும், பரமசிவனுக்கு, பிரணவ உபதேசம் செய்த, சிறந்த மொழியை உடைய கந்தக் கடவுள், கொஞ்சங்கூட அறிந்தானில்லை, பிரகாசம் பொருந்திய மாம் பூவாகிய அம்பு, காமக் கலக்கத்தை ஏற்படுத்தி, மான் போன்ற தலைவியுடன், போர் புரிகின்றதை, (சிறிது ஓர்கிலன்) ..

ஆறுமுகப் பெருமானுக்கு உகந்த ஆறு நூல்களுள் ஒன்று இந்த கந்தர் அந்தாதி. இதிலுள்ள காப்புச் செய்யுள்களால் இது திருவண்ணாமலையிற் பாடப்பட்டிருத்தல் வேண்டுமெனத் தோன்றுகிறது. நூலிலுள்ள நூறு செய்யுள்களின் முதலெழுத்துக்கள் சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்னும் எட்டெழுத்துக்களுள் அடங்குதல் கவனிக்கத்தக்கது. இந்நூலைப் பாடியவர் அருணகிரி நாதர். 
பெரும்புலமை வாய்ந்த பாரதம் பாடிய வில்லிபுத்தூரார், தமது கல்விச் செருக்கால், தம்மோடு வாது செய்து தோற்றவர்களின் காதைக் குறடு கொண்டு குடைந்து தோண்டும் வழக்கத்தை கொண்டிருந்தார். அவருக்கும் அருணகிரிநாதருக்கும் ஒருமுறை தருக்கம் உண்டாயிற்றென்றும், அப்போது ஆசுகவியாக அருணகிரிநாதர் பாடிய நூல் தான் கந்தர் அந்தாதி என்றும் அந்நூலுக்கு உரையை வில்லிபுத்தூரார் உடனுக்குடன் கூறி வந்தார் என்றும் கூறுவர். அவ்வாறு கூறி வரும் போது 'திதத்த' எனத் தொடங்கும் 54வது செய்யுளுக்கு வில்லிபுத்தூரார் உரை கூற இயலாது திகைத்து தோல்வியுற்றார் என்றும் அதற்கு அருணகிரிநாதரே உரை அருளினார் என்றும் கூறுவர். பின்பு ஏனைய பாடல்களுக்கு வில்லிபுத்தாரே உரை கூறினார் என்றும் கூறுவர். வில்லிபுத்தார் உரை கூற முடியாமல் தோல்வியுற்றாலும் அருணகிரிநாதர் அவருடைய காதை அறுத்து இழிவுபடுத்தாமல், இனி கருணைக்கு விரோதமான இவ்வழக்கத்தை விட்டுவிட வேண்டும் என புத்தி சொல்லி அவர் கையிலிருந்த குறடை எறியச் செய்தார் என்றும் கூறுவர். இக்கருணையைக் கருதியும் 'கருணைக் கருணகிரி' என்னும் வழக்கு எழுந்தது. 

காப்பு
வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்துவாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவசவாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணைவாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே.
ஐராவதம் என்ற யானைக்கு தலைவனாகிய இந்திரனையும், பிரம்மனையும், ஏனைய தேவர்களையும், தாமரை போன்ற கையில் பாஞ்ச சன்யம் என்கிற சங்கை ஏந்தி இருக்கும் திருமாலையும், தட்ச யாகத்தில், வீரபத்திரன் சொருபத்தில் வந்து ஜெயித்த சிவபெருமானின், குமாரனும், கோழிக்கொடியை உடைய குமாரக் கடவுளை, சகோதரனாக பெற்றிருப்பவனும், வயல்கள் சூழ்ந்த அருணாசலத்தில், யானைமுகத்தை உடைய கஜமுகாசுரனை, வெற்றி கொண்ட, யானை முகம் கொண்டவனும் ஆகிய கணபதியை, வணங்குகிறேன். 

உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்உண்ணா முலையுமை மைந்தா சரணஞ் சரணுனக்கே.
கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்ற, பசு இனங்கள் (வாழ்கின்ற), முல்லை நிலத்திற்கு, தலைவனாகிய திருமாலின், கருமை நிறத்தையும், வலிமையும், உவர்ப்பாகிய குற்றத்தையும் (உடையதாய்), கோட்டையாக உள்ள, கடலில் ஒளிந்திருக்கின்ற அசுரர்களின், ஜிவனை, மாய்த்து, தேவர்கள் உள்ளத்தில் இருந்த, நாம் ... அச்சத்தை, போக்கி அழித்த, தெய்வமே, ஆட்டு வாகனத்தில் ஏறும், உஷ்ணத்தை உடைய அக்னி தேவன், சேர்ந்திருக்கும், நாம் அடைக்கலம் புகுவதற்கு இடமாகிய, அண்ணாமலையில் விளங்கி அருளும், மிகுதியாகப், பெருகும், கற்புடமைக்கும், அழகிய, மை ... அஞ்சனம் தீட்டிய, செவிகளை எட்டிப் பிடிக்கும், விழிகளின், கிருபைக்கும், ஒப்புவமை இல்லாத, உண்ணாமுலை என்கிற பெயர் கொண்ட பார்வதியின், குமாரனே, உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன். 

நூல்
திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைசதிருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்றதிருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே. 1
லட்சுமி தேவிக்கு நாயகனாகிய திருமாலும், நல்ல பெண் தெய்வமாகிய உமையை இடப்பக்கத்தில் வைத்திருக்கும் சிவபெருமானும், மதிக்கும் விதத்தில், பழமையான வேதத்திற்கு, சிறந்த பொருளை விளக்கிய, சாமர்த்தியம் உடைய, இளங்குமாரனாகிய முருகப்பெருமான், நிரந்தரமாக வாசம் செய்யும், வானளாவும் திருப்பரங்குன்றம், சிறந்த செந்தில் பதி, பங்கயம் பொருந்திய பழநி, சுவாமி மலை, அந்தக் கந்தக் கடவுள் திருவிளையாடல் செய்த பல குன்றுகள், நடந்து, பூமி அதிர்கின்ற, யானைக் கூட்டங்கள், வாழ்கின்ற, குளிர்ந்த, கருமேகங்கள் சூழ்ந்த பழமுதிர்சோலையையும், துதி செய்யுங்கள். ..

செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்புசெப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னேசெப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச்செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே. 2
ரிஷப வாகனத்தை உடைய, புனித முர்த்தி யாகிய, ஈசனின், குமாரனே, தெய்வீகமாகிய, சரவணப் பொய்கையின் நீரில், செனித்த, தூயனே, சங்கை ஏந்தியுள்ள திருமாலின் மருகனே, என்றெல்லாம், விருதுகள், முன்னதாகவே சொல்லி வர, அதைக் கேட்டவுடன் அந்த இடத்திலேயே, தன்னிலை அழிந்து சானித்தியம் அடையும் பவனி மாதர்களின், (அவசம் ஆவேசம்), பார்வையும், தெய்வயானையின் மார்பாகிய கவசத்தையும், சட்டையாக தரித்துள்ள, தோள்களை உடைய முருகப் பெருமான், திருவடிகள், என் தலையின் மீது வீற்றிருந்தன. ..

சென்னிய மோகந் தவிராமு தோகண் டிகிரிவெண்ணெய்ச்சென்னிய மோகம் படவூ தெனத்தொனி செய்தபஞ்சசென்னிய மோகந் தரம்புனத் தேன்புணர் தேவைத்தெய்வச்சென்னிய மோகம் பணிபணி யேரகத் தேமொழிக்கே. 3
சிரசின் மேல், கங்கா ஜலத்தின், ஆரவாரம், நீங்காத (சிவபெருமான் உண்ட), நஞ்சமோ, இந்தத் தலைவியின் கண்? சக்கரம் ஏந்தி, நவநீதத்தைத் திருடிய, புல்லாங்குழல் இசைக்கும் (திருமால்), தேவர்கள் எல்லாம் மயக்கம் அடையும்படி, ஊது என்று கட்டளை இட்டு, சப்தத்தைக் கிளப்பிய, இவளின் (இந்தத் தலைவியின்) கழுத்து சங்கு போன்று இருக்கிறது, வள்ளிபுனத்தில் வாழும் வள்ளியைக் கலந்த, குமரக் கடவுளை, தெய்வீகமாகிய சோழ ராஜன், அதிக ஆசையுடன் வணங்கி, திருப்பணி செய்த, சுவாமி மலையில் வாழும் தேன் போன்ற மொழியை உடைய இந்தப் பேண்ணுக்கு. ..

தேமொழி யத்தம் பெறவோந் தனக்கன்று சேணுலகத்தேமொழி யத்தம் சினங்காட் டவுணரைச் சேமகரத்தேமொழி யத்தம் புயமவர் சூடிகை சிந்தவென்றதேமொழி யத்தம் பதினா லுலகுமந் தித்ததொன்றே. 4
தேன் போன்ற மொழியை உடைய பார்வதியின், பாதியாகிய சிவபெருமான், பெற்றுக்கொள்ளும்படி, பிரணவத்திற்கு, முன்பு, தேவலோகத்தின், நலனெல்லாம் அழியும்படி, தம்முடைய கோபத்தைக் காட்டிய, சூரபத்மாதிகளை, ஆண் சுராக்கள் வாழும், இடமாகிய சமுத்திரத்தில், கணுக்களை உடைய, கரங்களும், தோள்களும், அவர்களின் சிரங்களும், பூமியில் விழும்படி, அவர்களை ஜெயித்து அழித்த, குமரக் கடவுள், உபதேசித்த, பொருள், ஈரேழு பதினாலுலகமும் ஒரே தன்மையாக பொருந்தி இருந்தது. ..

தித்தவித் தார மனித்தரைத் தேவர் வணங்கமுன்போதித்தவித் தாரகை மைந்தர்செந் தூர்க்கந்தர் சிந்துரவாதித்தவித் தார முடையா ரருள்வெள்ளந் தேக்கியன்புதித்தவித் தாரந் தனிவீ டுறத்துக்கச் செவ்வனவே. 5
தித்த என்ற தாள ஜதி விரிவுகளை, தன்னுடைய நடனத்தின் மூலம், அழிவில்லாத நடராஜப்பெருமானுக்கு, மற்ற தேவர்கள் எல்லாம் வணங்கும்படியாக, முன்னொருகாலத்தில் சுவாமி மலையில், உபதேசம் செய்தவரும், விஷேசமான, கிருத்திகை மாதர்களின் புதல்வரும், செந்தில் ஆண்டவரும், நெற்றிப் பொட்டை, சூரியனைப் போல் ஒளி வீசும்படி தரித்துள்ள, அற்புதமான இரண்டு தேவிமார்களை உடைய கந்தப் பெருமான், தன்னுடைய க்ருபா நதியை உள்ளத்தில் நிரப்பி, பக்தியை மூளும்படி செய்து, ஒப்பற்ற மோட்ச வீட்டை நான் அடையும்படி, பல துன்பங்களைத் தருகின்ற, பிறப்பாகிய, அக்னியை, அவியச் செய்தார். ..

செவ்வந்தி நீலப் புயமுரு காபத்தர் சித்தமெய்யிற்செவ்வந்தி நீலத்தை யுற்றருள் வாய் திங்கட் சேய்புனைந்தசெவ்வந்தி நீலத் தொருபாகர் போன்ற தினிச்சிந்தியார்செவ்வந்தி நீலத்தி னீடுமுற் றாத திமிரமுமே. 6
சாமந்தி மாலையையும், நீலோற்பல மாலையையும் புனைந்திருக்கும், புயங்களை யுடைய முருகனே, உன் அடியார்களுடைய, இதயமாகிய உண்மை நிலையில், மிகுதியாக பொருந்தி இருக்கும், நீ, க்ருபை கூர்ந்து, அந்த மாலையை நீ கொடுத்து அருள வேண்டும், இளம் பிறையை, அணிந்திருக்கும், சிவந்த மாலைக்காலம், பார்வதி பங்கராகிய பரமசிவனை, போல் விளங்குகிறது, இனிமேல் வரப்போகிறது, உன்னைத் தியானிக்காதவர்கள் அடையும், ஜெனனமாகிய பிறப்பு, வருத்தத்தை விளைவிக்கும், அஞ்ஞான இருளைப் போன்று, நீடித்து நிற்கும், தொலையாத, இராக்காலம். ..

திமிரத் திமிரக் கதரங்க கோபசெவ் வேலகைவேல்திமிரத் திமிரக் ககுலாந் தகவரைத் தேன்பெருகுந்திமிரத் திமிரக் தனையாவி யாளுமென் சேவகனேதிமிரத் திமிரக் கனலாய சந்தன சீதளமே. 7
இருள் நிறைந்ததும், திமிங்கலத்திற்கு வாசஸ்தலமாக இருப்பதும் ஆன, சமுத்திரத்தை, கோபித்த, சிவந்த வேலாயுதத்தை உடையவனே, கையிலுள்ள வேலாயுதமும், மழுங்கும்படியாக குற்றிய, ராட்ஸச குலத்திற்கு எமன் போன்றவனே, குற்றிய, மலையிலிருந்து தேன் ஆறு போல் பெருகும், காட்டு ஆற்றின் வளப்பத்தை உடைய வள்ளி நாயகியே, யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனா நாயகியே, மிகவும், என்னை அணைத்து எனது ஆவியை காப்பாற்ற வேண்டும், என்று சல்லாபம் பேசுகின்ற, வீரனே, பூ சப் பூசப், நெருப்பைப் போல தகிக்கின்றது, சந்தனம் முதலிய குளிர்ந்த வஸ்துக்கள் எல்லாம். ..

சீதளங் கோடு புயங்கைகொண் டார்தந் திருமருகசீதளங் கோடு முடியாளர் சேய்தனக் கேதுளதோசீதளங் கோடு னிதருமென் பார்தொழுந் தேவிபெறுஞ்சீதளங் கோடு கொடிவேன் மயூரஞ் சிலையரசே. 8
மகாலட்சுமியின், மார்பகத்தையும், சங்கையும், திருத்தோளிலும், திருக்கரத்திலும், தரித்துள்ள திருமாலின் மருகனும், குளிர்ந்த சந்திரனின், அழகிய கோணல் வடிவமான பிறையை (தரிக்கும்), சிரசை உடைய பரமசிவனின், குமாரனுமாகிய முருகனுக்கு, என்ன சொத்து உளது என்று கேட்டால், அருவெறுக்கத்தக்க, செல்வம், குற்றத்தையும், துன்பத்தையும், கொடுக்கும், என்று கருதி அதை விட்டு நீங்கிய ஞானிகள், வணங்கும், வள்ளி நாயகி மூலம், கிடைத்த சீர்வரிசைகள், ஊது கொம்பும், சேவல் கொடியும், வேலாயுதமும், மயில் வாகனமும், மலைகளை ஆளும் உரிமையுமே. ..

சிலைமத னம்படு மாறெழுஞ் சேய்மயி லுச்சிட்டவெச்சிலைமத னம்படு சிந்துவை யிந்துவைச் செய்வதென்யான்சிலைமத னம்படு காட்டுவர் கேளிருஞ் செங்கழுநீர்ச்சிலைமத னம்படு தாமரை வாவி திரள்சங்கமே. 9
நீலோற்பலகிரியாகிய திருத்தணி மலையில் காணப்படும், தேனும், அன்னப் பட்சிகளும் நிறைந்திருக்கும், தாமரைத் தடாகத்தில் வசிக்கும், சங்கினங்களே, வில்லை உடைய மன்மதனின், பாணம், என்னைக் கொல்வது போல் தாக்குகிறது, குமாரக் கடவுளின் மயில் வாகனத்தின், எச்சிலாகிய சரப்பத்தின், எச்சிலாகிய தென்றல் காற்றையும், ஒருமுறை கடையப்பட்ட கடலையும், நிலவையும், நான் என்ன செய்து கடப்பேன்? ஆர்பாட்டத்துடன் கோபத்தை, சுற்றத்தார் எல்லோரும், என்மேல் காட்டுகிறார்கள். ..

திரளக் கரக்கரை வென்கண்ட வேலன் றிசைமுகன்மால்திரளக் கரக்கரை யான்பாட நாடுதல் செய்யசங்கதிரளக் கரக்கரை காண்பான்கைந் நீத்திசை வார்பனிக்கதிரளக் கரக்கரை வானீட்டு மைந்தர்புந் திக்கொக்குமே. 10
ஸ்திரமான, லட்சக் கணக்கான, அசுரர்களை, வெற்றி கொண்ட, வேலாயுதனை, பிரம்மாவுக்கும், திருமாலுக்கும், ஆயிரம் கண்ணுடைய இந்திரனுக்கும், ருத்ராட்சம் அணிந்துள்ள பரமசிவனுக்கும், இறைவனாகிய கந்தக் கடவுளை, நான் புகழ்ந்து பாட உத்தேசிப்பது, சிவந்த சங்குகள் முழங்குகின்ற, கடலை, கடந்து செல்பவன், நீந்திப் போகும் புத்திக்கும், சந்திரனை, பிடிக்கும் பொருட்டு, கையளவை, ஆகாசத்தில் நீட்டும், சிறு பிள்ளையின், புத்தியைப் போலும் இருக்கிறது. ..

திக்கத்திக் கோடு படிபுடைச் சூதத் தெறிபடபத்திக்கத்திக் கோடு கடடக் கடறடி சேப்படைச்சத்திக்கத்திக் கோடு துறைத்திறத் தற்ற குறக்குறச்சத்திக்கத்திக் கோடு பறித்துக்கொ டாதி சிறைபிறப்பே. 11
நாலு திசைகளிலும், எல்லோரும் திகைக்கும்படி பரந்து இருக்கும், பூமியின் கண், நீக்கி அருள்வாயாக, மாமரமாய் நின்ற சூரபத்மனை, விளங்கும்படி, ஆயிரம் பணா மகுடங்களை உடைய ஆதிசேஷனின் தலையின் மேல், இந்த சங்குகள் எல்லாம், ஊறும்படி, பெரிய விசாலமான, சமுத்திரத்தின் கண், அடக்கி அழித்த, சிவந்த வேலாயுதப் படையை உடையவனே, கதறி, மாறுபட்ட, பர சமய கோட்பாடுகளில், நீங்கி நிற்பவனே, (உலையில்) குற்றுவதற்கு, குற நாயகியாகிய வள்ளி நாயகிக்கு, யானையின் தந்தத்தை, பறித்துக் கொடுத்த, ஆதி மூலமே, பஞ்சேந்திரியங்களால் கட்டுண்ட சிறை போன்ற என்னுடைய ஜனனத்தை, நீக்கி அருள்வாய்). ..

சிறைவர வாமையி லேறிச் சிகரி தகரவந்துசிறைவர வாமையில் கூப்பிடத் தானவர் சேனைகொண்டசிறைவர வாமையில் வாங்கிதன் றேங்கழல் யாங்கழலாச்சிறைவர வாமையி னெஞ்சுட னேநின்று தேங்குவதே. 12
தோகையும், அடியார்களுக்கு அருளும் வரப்பிரசாதத்தையும் உடைய, தாவிச் செல்லும் மயிலில் ஏறி, க்ரவுஞ்ச கிரி, தூளாகும்படி எழுந்தருளி, கரையால், சூழப்பட்டதும், ஆமைகளுக்கு இருப்பிடமானதும் ஆன கடல், ஓ என்று ஓலமிட, அரக்கர்களின் சேனையால், தள்ளப்பட்ட, தேவர்களின் சிறை வாசம் நீங்க, தகுந்த, ஐவேலை, பிரயோகித்த முருகப்பெருமானின், இனிய திருவடிகளை, நான் அணுகாமல் பிரிந்திருப்பதினால், அல்பமாகிய, பஞ்சேந்திரியங்களின், ஆசையாகிய, இருளில், என்னுடைய இருதயம், சேர்ந்து நின்று (இருளொடு), திகைக்கின்றது. ..

தேங்கா வனமும் மதகரி வேந்துடன் சேர்ந்தவிண்ணோர்தேங்கா வனமுனை யவ்வேற் பணியெனுஞ் சேயிடமேல்தேங்கா வனமுந் தளர்நடை யாயஞ்சல் செண்பகப்பூந்தேங்கா வனமுங் கழுநீ ரிலஞ்சியுஞ் செந்திலுமே. 13
நிறைந்திருக்கும், பசுக் கூட்டங்களை மேய்க்கும் திருமாலையும், மும்மதங்களையும் பொழியும் ஐராவதத்திற்கு தலைவனான, இந்திரனையும், அவருடன் சேர்ந்திருக்கும், தேவர்களையும், அவர்களுக்கு இருப்பிடமான அமராவதியையும், ரட்சிப்பது, நம்முடைய, கூரிய வேலாயுதத்தின், தொழிலாகும், என்று சொல்லி (அதைக் கட்டளை இட்ட) முருகனின், வாசஸ்தலம், இதோ இருக்கிறது, திகைத்து, தன் நடையை தோற்கடிக்கிறது என்று அன்னப் பட்சியும், தளர்ந்து போகும், நடையை உடையவளே, பயப்படாதே (அவை யாவன), செண்பக மலரால், விளங்கும், இனிய, பூஞ்சோலையும், செங்கழுநீர் தடாகமும், திருச்செந்தூர் தலமுமேயாகும். ..

செந்தி லகத்தலர் வாணுதல் வேடிச் சிமுகபங்கசெந்தி லகத்தலர் துண்டமென் னாநின்ற சேயசங்கசெந்தி லகத்தலர் ராசிதந் தானைச் சிறையிட்டவேற்செந்தி லகத்தலர் தூற்றிடுங் கேடு திவாகருளே. 14
சிவந்த குங்கும பொட்டு இட்டு, விளங்கும், ஒளி வீசும் நெற்றியை உடைய வள்ளி நாயகியின், வதனம், தாமரை போன்றது, எள்ளின் பூ போன்றது, நாசி, என்று அவளின் அழகை நலம் புனைந்து உரைத்த, குமரக் கடவுளே, ஜீவராசி கூட்டங்கள் வசிப்பதற்கு, அண்ட கோடிகளை, சிருஷ்டித்த பிரமனை, சிறையில் அடைத்த, வேலாயுதத்தை உடைய, செந்தில் ஆண்டவனே, அகங்காரத்தினால், என்னை வசைகள் பேசுவார்கள், சுற்றத்தார்கள் (அதனால்), எல்லோராலும் துதிக்கப்படும், உன் புயத்தை, எனக்கு தந்தருள வேண்டும் ..

திவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர்திவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந்திவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந்திவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே. 15
பகல் பொழுதில் தானம் கொடுக்கும், கையை உடையை கர்ணனே, பாரியைப் போன்ற கொடை வள்ளலே, என்றெல்லாம் பலரிடமும் பேசி, என்னை உழல வைக்கும், வறுமையாகிய, இருளை, பிளக்கக்கூடிய, ஞான சூரியனே, கர்ணபூரம் என்ற ஆபரணத்தைத் தரித்திருக்கும், வள்ளி நாயகி, பெருமிதத்துடன் (தழுவும்), மார்பை உடையவனே, மாலைப் பொழுதின் நிறத்தை உடைய, சிவபெருமானின், காதில், இனிமையாக பிரணவத்தை உபதேசம் செய்தவனே, வலிய வேலாயுதத்தை ஏந்தி வந்து, என்னுடைய இருதயத்தில் நீ வீற்றருள வேண்டும், ஒளிந்து, எமன் கொள்ளை கொள்ளாதபடி, உயிரைக் காப்பாற்றுவதற்காக ..

சேவற் கொடியும் பனிசாந் தகனுந் திருக்கரத்துச் சேவற் கொடியுங் கொடியகண் டாய்தினை சூழ்புனத்துச் சேவற் கொடியுந் திவளத் தவளுந்தந் திக்களபச்சேவற் கொடியு முடையாய் பிரியினுஞ் சேரினுமே. 16
ரிஷப வாகனத்தை உடைய பரமசிவானல், பல் தகர்க்கப்பட்ட, (நிசி + அந்தகன்) பூஷா என்னும் சூரியனும், உன் திருக்கையில் ஏந்தி இருக்கும், கொடியாகிய சேவலும், பொல்லாதவைகளாய் இருக்கின்றன, தினைப் பயிர் நன்றாக வளர்ந்துள்ள கொல்லையை, காவல் புரியும், நீண்ட, காட்டாற்றின் வளப்பத்தை அநுபவிப்பவளுமாகிய (வள்ளியையும்), ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, சந்தன சேறு பூசியிருக்கும், சிவந்த, சொக்கட்டான் கருவி போன்ற மார்பகமும், கொடி போன்ற இடையையும் உடைய (தேவசேனையையும்), இரண்டு பக்கங்களிலும் சேர்த்துக்கொண்டு இருப்பவனே, உன்னைப் பிரிந்திருக்கும் போதும், உன்னிடம் கலந்திருக்கும் போதும், கொடியவைகளாய் இருக்கின்றன). ..

சேரிக் குவடு மொழிவிழி யாடனச் செவ்விகுறச்சேரிக் குவடு விளைந்ததன் றேநன்று தெண்டிரைநீர்சேரிக் குவடு கடைநாளி லுஞ்சிதை வற்றசெவ்வேள்சேரிக் குவடு புடைசூழ் புனத்திற் றினைவிளைவே. 17
இசைந்த, கரும்பையும், மாவடுவையும் (ஒத்த), பேச்சையும், கண்களையும் உடைய (வள்ளி நாயாகியின்), மார்பின் பக்குவ நிலையால், குறவர் குடிலுக்கு, அவளைக் களவு மணம் செய்து கொண்டான் முருகன் என்ற அபவாதம் ஏற்பட்டது, அந்தக் காலத்தில் தானே, நன்றாக விளங்கியது, தெள்ளிய அலைகளை உடைய சமுத்திர ஜலம், ஒன்று சேர்ந்து, பூமியை, அழிக்கின்ற, பிரளய காலத்திலும், அழிவில்லாத, முருகவேளுடைய, வடசேரி தென்சேரியில், மாலையில், பக்கவாக்கில், வயலில், தினைப்பயிரின் விளைவானது ..

தினைவேத் தியன்புசெய் வேந்தன் பதாம்புயத் திற்பத்திபுந்தினைவேத் தியமுகந் தேற்றினர் மாற்றினர் பாற்றினந்தீத்தினைவேத் தியர்நெறி செல்லாத விந்தியத் தித்தியினத்தினைவேத் தியங்குயிர் கூற்றாரி லூசிடுஞ் சீயுடம்பே. 18
தினைப்புனத்திற்கு இறைவியாகிய வள்ளி, காதல் புரிகின்ற, முருகக் கடவுளின், திருவடித் தாமரையில், பத்தி செய்கின்ற உள்ளத்தையும், புத்தியையும், அவருக்கு உரிய நைவேத்தியமாக, விருப்பமுடன் சமர்பித்த அடியார்கள், உண்மையாகவே மாற்றி விட்டார்கள், பருந்துக் கூட்டங்களும், அக்னியும், சாப்பிடுவதும், அழகிய அறிஞர்களால் உணர்த்தப்பட்ட, மார்க்கத்தில் ஒழுகாததும், பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டதும், தின் பண்ட வகைகளின், கழிவாகிய மலஜலமாதிகளை, ஏற்றுக்கொண்டிருப்பதும், உள் நின்று இயங்குகின்ற பிராணனை, எமன் உண்டுவிட்டால், க்ஷண நேரத்தில் ஊசிப்போகும், அருவெருக்கத்தக்க இந்த உடம்பை, மாற்றி விட்டனர்). ..

சீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவிதரத்தோல்சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்சீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார்சீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே. 19
பார்வதியின் பாகராகிய சிவபெருமான், நமக்கு, உபதேசம் செய்வாய் என்று கேட்டு, பணிவுடன் வாயை மூடிக்கொண்டு, காதால் கேட்க, யானைகளும், சிங்கங்களும், தஞ்சமாக உறைகின்றதும், கல்வி ஒழுக்கத்திற்கு இருப்பிடமாகிய, பொதிக மலைக்கு, தலைவனாகிய, அகத்திய முனிவனின், பாட்டனாரும், பாற்கடலை கடைந்தவனாகிய திருமாலின், மருகனாகிய குமரக் கடவுள், அப்போது உபதேசம் செய்ய, தியக்கமுற்றிருந்தார், மிகவும் கேவலமானது, அன்னத்திலும் தாமரையிலும் இருக்கும், பிரம்மன், பழமையான வேதத்தை, எதற்காக கற்றுக் கொண்டான்? ..

செயதுங்க பத்திரி போற்றும் பகீர திகரசெவ்வேற்செயதுங்க பத்திரி சூடுங் குறத்தி திறத்ததண்டஞ்செயதுங்க பத்திரி புத்திரி பாதத்தர் செல்வதென்பாற்செயதுங்க பத்திரி யத்திரி யாதிரென் சிந்தையிலே. 20
கீர்த்தி உடைய, துங்கபாத்திரி நதி, வணங்குகின்ற, கங்கையின், கையில் விளங்குபவனே, சிவந்த வேலாயுதத்தை உடைய வெற்றி வீரனே, சுரபுன்னை இலையை, தரித்திருக்கும், வள்ளியின் மணாளனே, தண்டாயுதமும், உயர்ச்சியும், ஒழுக்கமும் உடைய, (மார்கண்டேயரை அழிக்கப் போனதால் எதிரியாகிய) எமனை, அழியும்படி, கால்களால் உதைத்த சிவ பிரானின், மைந்தனே, தெற்கிலிருக்கும் எமபுரத்திற்கு அழைத்துப் போவதும் யாவராலும் ஒதுக்கப்பட்டதும், ஆபத்துககள் நிறைந்ததுமாகிய வழியில், எனது மனம் முரிந்து, உழலாமல், நீ இருக்க வேண்டும், என் உள்ளத்தில் ..

சிந்தா குலவ ரிசைப்பேரு முருநஞ் சீருமென்றோர்சிந்தா குலவ ரிடத்தணு காதரு டீமதலைசிந்தா குலவரி மாயூர வீர செகமளப்பச்சிந்தா குலவரி மருக சூரனைச் செற்றவனே. 21
ஒருகாலும் அழியாது, நம்முடைய வம்ச பரம்பரையின் பெயரும், நாம் வசிக்கும் இந்த நகரமும், நமது சிறப்பும், என்று பொய்யாக எண்ணுகின்ற, அஞ்ஞானிகள் பால், நான் சேராதிருக்க நீ அருள வேண்டும், அக்னி தான் உருவெடுத்த சேவலை, கொடியாக வைத்து, விளங்கும், பச்சை நிறமுள்ள, மயிலேறிய சேவகனே, இவ்வுலகத்தை அளப்பதற்காக, வாமன அவதாரம் எடுத்த, திருமாலின் மருகனே, சூரபத்மனை வென்றவனே. ..

செற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற்செற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச் செற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்தசெற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே. 22
செற்றை எனும் மீன் இனம், திகழ்கின்ற, வயல்கள், பூஞ்சோலை, மதில்கள் (இவை), திகழ்கின்ற, மலையின் மேல், மேகக் கூட்டம், தவழ்கின்ற, பழநி மலை ஆண்டவனே, எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று, துரியோதனாதிகள் நூறு பேரையும் அழித்து, பஞ்ச பாண்டவர்கள் ஐவரும், புராதனமான ராஜ்ஜியத்தை ஆளும்படி, மனதில் நினைத்து (அப்படிச் செய்த கிருஷ்ணமூர்த்தியின்), ஒரு நேத்திரமாகிய சூரியனின், மைந்தனாகிய எமன், அனுப்பிய, தூதர் கூட்டம், வருகின்ற, கிழ திசை அடைந்த இந்த உடலாகிய கூடு, அக்னியில் தகிக்கப் படுகின்ற, அந்த கடைசி நாளில், எழுந்தருளி, எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று). ..

தினகர ரக்கர தங்கெடுத் தார்குரு தேசிகர்செந்தினகர ரக்கர மாறுடை யார்தெய்வ வாரணத்தந்தினகர ரக்கர சத்தி யின் றாகிலத் தேவர்நண்பதினகர ரக்கர தந்தீர்வ ரீர்வர் செகமெங்குமே. 23
பகன் பூடா என்னும் இரண்டு சூரியர்களுடைய, நேத்திரத்தையும், பல்லையும், அழித்த சிவபெருமானுக்கு, உபதேசம் செய்த ஞானாசிரியனும், செந்தில் பதியில் இருப்பவரும், ஷடாக்ஷரப் பொருளாய் இருப்பவரும், தெய்வீகமான, வேதங்கள் பூஜித்த, சர்ப்பம் போல் வடிவமுடைய திருச்செங்கோடு மலையை ஆள்பவரும் ஆகிய கந்த பிரானின், அரத்தைப் போன்ற கூர்மையான, கை வேலாயுதம், இல்லை என்றால், தேவர்களின் சிறந்த அமராவதி நகரம், இல்லாமல் போயிருக்கும், வஞ்சனையை உடைய அசுரர்கள், இறப்பைத் தவிர்த்திருப்பார்கள், உலகம் முழுவதையும் நிர்மூலமாக்கி இருப்பார்கள். ..

செகம்புர வார்கிளை யெல்லா மருண்டு திரண்டுகொண்டசெகம்புர வாதிங்ஙன் செய்ததென் னோமயல் செய்யவன்புசெகம்புர வாச மெனத்துயில் வார்செப்ப பங்கபங்கசெகம்புர வாமுரல் செந்தூர வென்னத் தெளிதருமே. 24
இவ்வுலகத்திலும், ஊரிலும் உள்ள, ஒழுங்கான, உறவினர் எல்லாரும், பயந்து கொண்டு, கூட்டமாக கூடிக்கொண்டு, ஆட்டினுடைய, தலையை, காப்பாற்றாது, இந்த இடத்தில், வெறியாட நினைத்து அதைக் கொல்லக் கருதுவது என்ன விபா£தம்? (அதற்கு பதிலாக) ஒருதலை காமமாக மயங்கி இருக்கும் இந்தப் பெண்களின் விரக தாபம், சிவந்த, வலிய, ஆதி சேடனை, சொந்த வாசஸ்தலமாக, நித்திரை செய்யும் மகாவிஷ்ணு, புகழ்கின்ற, குற்றமில்லாதவனே, தாமரை வாவியில், சங்குகள், உரக்கமாக சப்தம் செய்கின்ற, செந்தில் பதியானே, என்று அவன் நாமத்தைச் சொன்னால், அந்தக் கணத்திலேயே மயக்கம் தீர்ந்து விடும். ..

தெளிதரு முத்தமிழ் வேதத்திற் றெய்வப் பலகையின்கீழ்தெளிதரு முத்தமிழா நித்தர் சேவித்து நின்றதென்னாள்தெளிதரு முத்தமிழ் தேய்நகை வாசகச் செல்விதினைத்தெளிதரு முத்தமிழ் செவ்வே ளிருப்பச் செவிகுனித்தே. 25
தெளிவைத் தருகின்ற, இயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலும், நான்கு மறைகளிலும், முதலில் விளங்கிய தெய்வீகமாகிய சங்கப் பலகையிலும் (மதுரையில்), மாசற்ற, குற்றால மரத்தின் கீழினும் (தட்சிணாமூர்த்தியாக), முதன்மை ஸ்தானத்தில் விளங்குகின்ற, அழிவில்லாத நித்தியராகிய சிவ பெருமான், பணிந்து நிற்கக் காரணம் என்ன? நட்சத்திரம் போல, பிரகாசிக்கும், முத்தையும், தேவாமிர்தத்தையும், ஒத்த, பல்லையும், வார்த்தையையும் உடைய, மங்கையாகிய, தினை தானியத்தை கொழிக்கின்ற வள்ளி, கொடுக்கும், முத்தத்தில், ஆனந்தத்தில் அமிழ்ந்திருக்கும், முருகப் பெருமான், குருவாய் எழுந்தருளி உபதேசிக்க, செவியைத் தாழ்த்திக் கொண்டு, பணிந்து நிற்கக் காரணம் என்ன?) ..

செவிக்குன்ற வாரண நல்கிசை பூட்டவன் சிந்தையம்புசெவிக்குன்ற வாரண மஞ்சலென் றாண்டது நீண்டகன்மச்செவிக்குன்ற வாரண வேலா யுதஞ்செற்ற துற்றனகட்செவிக்குன்ற வாரண வள்ளி பொற்றாண்மற்றென் றேடுவதே. 26
நாகாசல வேலவனே, என்னுடைய காதுக்கு, உன்னுடைய நீங்காத, உரிமையை (உனக்கும் எனக்கும் விடாத தொடர்பை ஏற்படுத்தி) கொடுக்கும், உன்னுடைய கீர்த்தியை சேர்த்துக் கொள்ள, வலிய, என் இதயமாகிய, செந்தாமரையில் இருக்கும், ஜீவாத்மாவாகிய பட்சி, இல்லற துன்பத்தைப் பார்த்து நடுங்கும் பொழுது, உன்னுடைய கொடியாகிய சேவல், பயப்படாதே என்று சொல்லி, என்னை அடிமை கொண்டது, மிகப் பெரிய, முன்பு செய்த வினையால் விளையும், ஜனனத்திற்கு விதையாகிய, மலை போன்ற ஆசைக் கூட்டத்தை, போர் புரிவதில் வல்லமை உள்ள, உன் திருக்கை வேல், தகர்த்து விட்டது, உன்னுடைய கிரியா சக்தியாகிய தேவயானை, இச்சா சக்தியாகிய வள்ளி இவர்களின், சிறந்த திருவடிகள் என் சிரசின் கண் வந்து அமர்ந்தன, இனி நான் சம்பாதிக்க வேண்டிய வேறென்ன இருக்கிறது. ..

தேடிக் கொடும்படை கைக்கூற் றடாதுளஞ் சேவின்மைமீன்தேடிக் கொடும்படை கோமான் சிறைபட வேறுளபுத்தேடிக் கொடும்படை யாவெகு நாட்டன் சிறைகளையுந்தேடிக் கொடும்படை மின்கேள்வ னற்றுணை சிக்கெனவே. 27
நெஞ்சமே, பாசக் கயிற்றை, சேர்ந்திருக்கும் (பிடித்திருக்கும்), கையை உடைய, எமன், இந்த உடலாகிய கூட்டை அழிப்பதற்கு முன், இப்போதே சம்பாதித்துக்கொள், ரிஷபம், தனுஷ், ஆடு, மீனம், விருச்சிகம் (முதலிய எல்லா ராசிகளையும்), எல்லா திசைகளிலும் உள்ள அண்டங்களையும் சிருஷ்டித்த, பிரம்ம தேவனை, சிறையில் அடைத்து, வேறு தெய்வங்களின், பக்தியில், மாறிப்போகும் மனப்பான்மையை, அடையாத, ஆயிரம் கண்களை உடைய இந்திரனின், சிறையை நீக்கினவரும், நீரிலும் நெருப்பிலும் சமணர்களால் செலுத்தப்பட்ட, பனை ஏடுகளையும், அவர்கள் செய்த பல கொடுர செயல்களையும், அழித்த, சுவாமியான, தெய்வயானை நாயகனாகிய கந்தக்கடவுளின், நல்ல அனுக்கிரகத்தை, உறுதியாக, (தேடிக்கொள் மனமே) ..

சிக்குறத் தத்தை வழங்கா திழந்து தியங்குவர்தேசிக்குறத் தத்தை வடிவே வெனார்சிவ ரன்பர்செந்தாள்சிக்குறத் தத்தை கடிந்தேனல் காக்குஞ் சிறுமிகுறிஞ்சிக்குறத் தத்தை யனகிலெப் போதுந் திகழ்புயனே. 28
(தினைப்பயிரை உண்ண வந்த) கிளிகளை ஓட்டி, அந்த தினைப்பயிரை, ரட்சிக்கின்ற, பெண்ணாகிய, குறிஞ்சி நிலத்தில் வாழும் குறப்பெண்ணாகிய, அந்த வள்ளிநாயகியின், மார்பின் சுவட்டால், சதாகாலமும், பிரகாசிக்கின்ற புயத்தையுடைய கந்தக்கடவுளே, உன் வேலாயுதத்தை புகழ்கின்ற அடியார்கள், உன் சிவந்த திருவடிகளை, உறுதியாய் பற்றிக்கொள்ளக் கண்டும், சில அஞ்ஞானிகள், தம்முடைய புகழ், நலியும்படி, இழச்சிக்கு இடமானதும், குறைந்து போவதுமாகிய, செல்வத்தை, நல்ல வழியில் தர்மம் செய்யாமல், பல வழிகளில் அவற்றைத் தொலைத்து, வருந்துவார்கள், வடிவேலைத் துதிக்காதவர்களே இவர்கள். ..

திகழு மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோதிகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூதிகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபாதிகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே. 29
விளங்குகின்ற, மாலை சூட்டிய, தனது திருவடியை, வணங்குகின்ற அடியார்களின், திருவாக்கின்படி நடக்க (சம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் 11 வது பாட்டாக திருக்கடைக் காப்பு என்று ஒரு பாட்டு உண்டு. அப்பதிகத்தை பாடுவார்க்கு என்ன பலன் கிடைக்கும் என்பார். இதன்மூலமாக அடியாருக்கு அந்தப்பலனைத் தேடிக்கொடுப்பதை இங்கு கூறுகிறார்). தேவாரத் திருப்பதிகங்களை ஓதி, தான் அவதரித்த சீர்காழியையும், தான் காத்தளித்த அமராவதியையும், தான் என்றும் கலியாண சுபுத்திரனாக நிற்கும் திருத்தணியையும், துதித்து, அணியும் திருவெண்ணீறு, மும்மலத்தைப் போக்கடிக்கும், முழுப்பொருள் இதுவே என்று நம்பும் கற்புடமையையும், கொடுக்கும், என்று நினையாத, சமணக் கூட்டங்களை, வருத்தம் தரும், கழுமரத்தில் ஏற்றி, கலக்கம் அடைந்து அழியும்படி, வாதுபுரிந்த சம்பந்தப்பெருமான் ஆகிய குமரக் கடவுள் அன்றி, வேறு பிரத்யக்ஷ தெய்வங்கள் கிடையாது. ..

தெய்வ மணம்புணர் தீகால் வெளிசெய்த தேவரைந்ததெய்வ மணம்புண ராரிக்கு மருக செச்சையந்தார்தெய்வ மணம்புண ருங்குழ லாளைத் தினைப்புனத்தேதெய்வ மணம்புணர் கந்தனென் னீருங்க டீதறவே. 30
மற்ற தேவர்களையும், பூமி, நீர், அந்தக்கரணம், நெருப்பு, காற்று, ஆகாசம் முதலிய ஐந்து பூதங்களையும், படைத்த, பிரம்ம தேவன், நம்மேல் எழுதிய தலை எழுத்தை (முருகனின் நாம சங்கீரத்தனம்), அழித்துவிடும். (அதனால்) மாசற்ற, அழகிய, கருட வாகனனாகிய, நரசிம்மரின் மருகனே, வெட்சி மாலை அணிந்த தெய்வமே, நறுமணம் வீசும், கூந்தலையுடைய வள்ளியை, தினைப்புனத்தில், கந்தர்வ மணம் செய்துகொண்ட, குமரக் கடவுளே என்று துதியுங்கள், உங்கள் தீய வினை எல்லாம் ஒழியும்படி ..

தீதா வசவ னுபவிக்க மண்ணிலும் விண்ணிலுஞ்செந்தீதா வசவ னியாயஞ்செய் வேதிய ரேதியங்காத்தீதா வசவ னிமலர்செல் வாசாக் கிரவசத்ததீதா வசவன் புறப்பா ரெனுமுத்தி சித்திக்கவே. 31
தீமையாகிய, இழிச்சொல், அனுபவிக்கும்படியாய், பூலோகத்தில் புகழ் பெறவும், தேவர்கள் உலகத்தில் போகங்களைப் பெறவும் எண்ணி, சிவந்த அக்னி தேவன், ஏறுகின்ற, ஆட்டை, கருணை இல்லாமல் பலி கொடுத்து யாகம் செய்கின்ற, மறையோரே, இனி அப்படி திகைக்காமல், தெளிவான அறிவை, தந்தருள்க என்று, இடப வாகனத்தை உடைய, சிவபிரானின், மைந்தனே, கருவி கரணங்கள் ஐவேலை செய்யும் விழிப்பு நிலையிலும், அவைகள் ஒடுங்கி இருக்கும் துரிய நிலையிலும், உனக்கு எங்களிடத்தில் கிருபை உண்டாகி கடாட்சிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள், மோட்சம், உங்களுக்கு கிடைக்கும்படி. ..

சித்திக்கத் தத்துவ ருத்திர பாலக செச்சைகுறிஞ்சித்திக்கத் தத்துவ ரத்தியின் மாவென்ற சேவகவிச்சித்திக்கத் தத்துவர் வாய்மொழி மாதர்க் கெனுந்திணைவாசித்திக்கத் தத்துவ ருத்தப் படாதுநற் சேதனமே. 32
அடியேனுக்கு கிட்டும் படி அருள வேண்டும், தத்துவ மூர்த்தியே, சிவனார் குமாரனே, வெட்சி மாலை அணிந்த, குறிஞ்சி நிலத்திற்கு அதிபதியே, அலை தாவுகின்ற, உப்பை உடைய, கடலின் கண், மா மரமாக நின்ற சூரனை, ஜெயித்த, வீரனே, மிகவும் விருப்பமுடன், கரும்பும், அந்த சிவந்த பவளமும், வாயும், மொழியாகும், பெண்களுக்கு, என்று வர்ணிக்கும் காம சூத்திரத்தை, ஓயாமல்படித்து, இதற்கு இனமான வெகுளியினால், துன்பப் படாமல், நல்ல ஞான அறிவை, அடியேனுக்குக் கிட்டும்படி அருள வேண்டும்). ..

சேதனந் தந்துறை யென்றுமை செப்புங் குருந்துறைகாற்சேதனந் தந்துறை யல்லிமன் வாவிச் செந்தூர்கருதசேதனந் தந்துறை யென்றறி யார்திற நீங்கிநெஞ்சேசேதனந் தந்துறை மற்றுமுற் றாடித் திரிகைவிட்டே. 33
அழகிய, திருமுலைப் பால் ஊட்டி, பெரும் பாக்கியமாய் கிடைத்த, என் ஐயன், என்றெல்லாம், பார்வதி கொஞ்சிப் புகழ்கின்ற, குழந்தை, நீங்காமல் வசிக்கின்ற, சிவந்த காலை உடைய, அன்னப்பட்சிகளும், நூலோடுகூடிய, ஆம்பல்களும், நிறைந்திருக்கின்ற, திருச்செந்தூரை, தியானிப்பாயாக, அறிவின்மையால், தங்கள், சமயக் கோட்பாடுகள், என்று உணராத, திருந்தி உழலும் பரசமய கூட்டத்தை விட்டு, மனமே, சேது முதலாகிய, மற்றும் அநேக சமுத்திரங்களையும் நதிகளையும், போய் ஸ்நானம் செய்து, உழல்கின்ற வேலையை, விட்டு, (சேந்தூர் கருது). ..

திரிகையி லாயிர வெல்லாழி மண்விண் டருசிரபாத்திரிகையி லாயிர வாநந்த நாடகி சேரிமகோத்திரிகையி லாயிர மிக்குமைந் தாசெந்தி லாயொருகால்திரிகையி லாயிரக் கோடிசுற் றோடுந் திருத்துளமே. 34
மாறுதல் இல்லாதவனே, ராத்திரி, பகல், சமுத்திரம், பூமி, விண்ணுலகம், இவைகளை எல்லாம் மும்மூர்த்திகளில் முதல்வனாய் நின்று படைத்தவரும், கையில் பிரம்ம கபாலம் ஏந்தியவரும், கைலாய நாதரும், ஆரவாரம் மிகுந்த, ஆனந்த நடனம் செய்பவருமாகிய சிவபெருமானுக்கும், அவரின் இடப்பாகத்தில் சேர்ந்திருக்கும், இமயமலையில் உற்பவித்த, தாயாகிய பார்வதிக்கும், மகிழ்ச்சியைத் தரும், புதல்வனே, செந்தில் பதியானே, குயவனின் சக்கரம் ஒருமுறை சுற்றி வரும் முன் எண்ணற்ற முறை சுற்றி வரும், என் உள்ளத்தை, மாற்றி அமைதியைத் தந்தருள்க. ..

திருத்துள வாரிகல் போதுடன் சேண்மழை தூங்குஞ்சங்கதிருத்துள வாரிதி கண்டுயி லாசெயன் மாண்டசிந்தைதிருத்துள வாரன்னை செந்தூரையன் னள்செம் மேனியென்புதிருத்துள வார்சடை யீசர்மைந் தாவினிச் செச்சைநல்கே. 35
துளசிமாலை அணிந்த திருமாலின் கரு நிறத்துடன், போட்டி போடுகின்ற, மாலைக்காலத்தோடு, விண்ணிலிருந்து, மழை விடாமல் பெய்கிறது, சங்கு கூட்டங்கள், வசிக்கின்ற, சமுத்திரம், இடை வெளி இல்லாமல் முழங்குகின்றது, இந்தப் பிரிவாற்றாமையினால் மெய்மறந்து இருக்கும் என் மனதை, ஆறுதல் புரிவதற்கு, உரியவர் யார்? பெற்ற தாயும், செந்தில் பதியைப் போல் இருக்கிறாள், சிவந்த மேனியில், எலும்பு மாலையும், உதிர்கின்ற விபூதிப் பொடியும் படிய, நீண்ட, ஜடாபாரத்தை உடைய பரமசிவன், குமாரனே, இனிமேல் என்னால் இந்த விரக தாபம் தாங்க முடியாததால், உன் வெட்சி மாலையை எனக்கு தந்தருள வேண்டும். ..

செச்சைய வாவி கலயில்வல் வாயிடைச் சேடனிற்கச்செச்சைய வாவி பருகுஞ் சிகாவல செங்கைவெந்தீசெச்சைய வாவி விடுகெனுஞ் செல்வநின் றாளணுகச் செச்சைய வாவி னுயிர்வாழ் வினியலஞ் சீர்ப்பினுமே. 36
வெட்சி மாலை தரித்திருப்பவனே, தாவிப் பாய்கின்றதும், சர்ப்பங்களிடத்தில் பகையும், கூர்மை பொருந்திய, வலிய, வாயினிடத்தில், பாம்பை வைத்துக் கொண்டு, சிவந்த, மலையின் கண், அதனுடைய உயிரை உண்ணுகின்ற, மயிலை வாகனமாக உடையவனே, (பரமசிவன் ஆக்னியைப் பார்த்து) உன்னுடைய சிவந்த கரத்தில், இந்த வெப்பமான அக்னிப் பொரியை ஏந்திக் கொண்டு, சரவண தடாகத்தில் கொண்டு போய் விடு, என்று சொல்ல (அங்கு உற்பவித்த), பாலகனே, உன்னுடைய திருவடிகளை நாங்கள் அடையும்படி, செய்வாயாக இகழ்ச்சிக்கு இடமான, ஐம்புல ஆசையுடன் சேர்ந்த இந்த ஜீவ வாழ்க்கை, இனி மேல் நமக்கு வேண்டாம், செல்வம் அதிகரித்தாலும் (இனி அலம்) ..

சீர்க்கை வனப்பு மலர்வேங்கை யானவன் செஞ்சிலையோர்சீர்க்கை வனப்பு னிதத்தவ வேடன் றினைவளைக்குஞ்சீர்க்கை வனப்பு னமதுருக் காட்டிய சேய்தமிழ்நூற்சீர்க்கை வனப்பு னிமிர்சடை யோன்மகன் சிற்றடிக்கே. 37
மனம் திருந்துதல், அழகாகும், புஷ்பங்கள் உள்ள, வேங்கை மரமாக நின்றவனும், சிறந்த வில்லை உடைய குறவர் கூட்டத்தினர், சந்தேகப்பட்ட தன்மையை, கோபித்து, அந்தக் காட்டில், தூய சன்னியாசி ரூபம் எடுத்தவனும், தினைப் பயிரைக் காவல் காத்து வந்த, சிறந்த வள்ளிக்கு, மலை அரிசி (தினை அரிசி) விளையும் அந்த வயலில், தன்னுடைய உண்மை சொரூபத்தைக் காட்டிய, குமாரக் கடவுளும், தமிழ் இலக்கியத்தில் காணப்படும் 30 சீர்க்கும், தலைவனாக (ஞான ஞானசம்பந்தராக) அவதரித்தவனும், கங்கா ஜலமும், அருகம்புல்லும், விளங்கும் நீண்ட, ஜடாபாரத்தை உடைய சிவகுமாரனாகிய முருகனின், சிறிய திருவடிகளுக்கு (சீர்க்கை வனப்பு) ..

சிற்றம் பலத்தை யரன்புநெய் நூற்றிரி சிந்தையிடுஞ்சிற்றம் பலத்தை வரஞான தீபமிட் டார்க்குப்பரிசிற்றம் பலத்தை யருளுஞ்செந் தூரர் பகைக்குலமாஞ்சிற்றம் பலத்தைப் பதவரந் தோளிலிந் தீவரமே. 38
பர ஆகாச வெளியாகிய, சுவாமியும், பக்தி என்னும், நெய்யை வார்த்து, ஆகம சாஸ்திரம் என்னும் நூலை, திரியாக்கி, இதயமாகிய, தீபம் ஏற்றுகின்ற, தகழியில் இட்டு, ஜீவனுக்கு பற்று கோடாகிய, கிருபை உண்டாகும் பொருட்டு, மெய்ஞான தீபத்தை, ஏற்றின அடியார்களுக்கு, பரிசாக, தனது குக சாயுச்யம் என்னும் பலனை, கிருபை செய்யும், செந்திலாண்டவனின், எதிரிகளை அழித்த, சிறிய பாணம் அல்ல, என் இதயத்தில் தைத்து வருத்துவது, அந்தக் கந்தனின், அழகிய புயத்தில் அணிந்த, நீலோற்பலமாகிய பாணம் தான். ..

தீவர கந்தரி தாம்பகி ராருற வானசெம்பொன்தீவர கந்தரி யாநொந்த போதினிற் செச்சையவிந்தீவர கந்தரி சிந்துரை பாக சிவகரணதீவர கந்த ரிபுதீ ருனதடி சேமநட்பே. 39
வறுமையாகிய பாவத்தை, ஏற்றுக் கொண்டு, மனது உடைந்து வேதனைப் படும்போது, உறவினர் என்று சொல்லப்படும் பெரிய ஐஸ்வரியவான்கள், தீந்து போன, அந்துப்பூச்சியால் அரிக்கப்பட்ட, கேழ்வரகு தானியத்தைக் கூட, தானம் கொடுக்க இசைய மாட்டார்கள் (ஆதலால்), வெட்சி மாலையும் நீலோற்பல மாலை¨யும் புனைந்தவனே, குகையில் வாழும் வள்ளியம்மையையும், யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனையையும், இருபக்கங்களிலும் வைத்திருப்பவனே, சிவ தியானம் செய்யும், புத்தியை, வரமாக அளிக்கும், கந்தப் பெருமாளே, எதிரிகளை அழிக்கும் உனது திருவடிகளே, பொக்கிஷமும் உறவுமாகும். ..

சேமர விக்கம் படையாக வீசுப தேசமுன்னூற்சேமர விக்கம் பலந்தரு வாய்செரு வாயவெஞ்சூர்ச்சேமர விக்கம் திரித்தாய் வருத்திய வன்றிறென்றல்சேமர விக்கம் புயவாளி விண்டிரை தெண்டிரையே. 40
சிவந்த, சூரியனுக்கு, அர்க்கிய ஜலத்தை, + மந்தேகர்களின் தடையை விலக்கும் ஆயுதமாக, இறைக்கின்றவர்களும், தமக்கு செய்யப்பட்ட காயத்திரி மந்திர உபதேசத்தையும், முப்புரி நூலின் தூய்மையையும், காப்பாற்றுகின்ற மறையோர்களின், யாகத்தில் கொடுக்கும் அவிர் பாகத்திற்கு, அழகிய, நல்ல பலனை கொடுப்பவனே, போர் செய்யும், கொடிய சூரபத்மனின், வைரம் பொருந்திய, மாமிசத்தினால் ஏற்பட்ட, (விக்னம்) இடையூறை, அழித்தவனே, என்னைத் துன்புறுத்துகின்றன, காமச் சின்னமாகிய அன்றில் பட்சியும், மன்மதனின் தேராகிய தென்றலும், மணியோசை கேட்கச்செய்வதால் எருதுகளும், கரும்பு வில்லும், தாமரைப்பூ பாணமும் ஆர்ப்பாட்டத்துடன் முழங்குகின்ற தெள்ளிய அலையை உடைய சமுத்திரமுமே. ..

தெண்டன் புரந்தர வக்குன்றில் வாழ்கந்த சிந்துவிலுத்தெண்டன் புரந்தர லோகஞ் செறாதுசெற் றோய்களைவாய்தெண்டன் புரந்தர நற்கேள் சிறுவ ரழச்செய்தெம்மைத்தெண்டன் புரந்தர வின்படி நூக்கிய தீ நரகே. 41
வணங்குகிறேன், நாகாசல வேலவனே, சமுத்திரத்தின் கண், மகாபலசாலியான சூரபத்மன், இந்திர லோகத்தை, அழிக்காதபடி, அவனை வதைத்தவனே, (என்னைக் குறைவரக் காப்பாற்றி) தண்டாயுதத்தை உடைய எமன், தொன்று தொட்டு வந்து, அழகிய நல்ல சுற்றத்தாரும், பிள்ளைகளும், என் உடலைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு அழச்செய்து, எம் உயிரைப் பிரித்து, தெள்ளிய தன்மையை உடைய, தன் ஊராகிய எம்புரிக்கு கூட்டிச் சென்று, தனது உத்தரவின்படி, சென்று நுழைக்கும், நரகாக்கினியைக் நீக்குவாய்) ..

தீனந் தினத்து தரச்செல்வர் பாற்சென் றெனக்கென்பதோர்தீனந் தினத்து முதரா னலஞ்சுடச் சேர்ந்துசுடுந்தீனந் தினத்து னிகளைசெங் கோட்டினன் செந்திலந்நீர்தீனந் தினத்து தவத்துப் பிரசதஞ் செய்யவற்றே. 42
புத்தி கெட்ட, கூட்டத்தாரிடை, கொடையாளி என்று பேசப்படும், அவர்களிடத்தில் போய், எனக்கு தருமம் செய்யுங்கள் என்று இரக்க வைக்கும், மிகவும் கொடியதான, வறுமை, தினந்தோறும், வயிற்றில் பசியாகிய அக்னி எரியும் பொழுது, அதனுடன் சேர்ந்து என்னை தகிக்கின்றது, தீமையாகிய, நம்முடைய, நாள்தோறும் வருத்துகின்ற துன்பத்தை, நீக்க வல்ல, சேங்கோட்டு வேலவனின், செந்திலம்பதியிலுள்ள, அழகிய ஜலம், சிவப்பு நிறத்தைக் கொண்ட, பவளம் போன்ற இதழை, இனிய சங்கைப் போல, வெண்மை நிறமாக, கொடுக்க வல்லதோ? ..

செய்யசெந் தாமரை யில்லாத மாதுடன் செந்தினைசூழ்செய்யசெந் தாமரை மானார் சிலம்பிற் கலந்துறையுஞ்செய்யசெந் தாமரை யென்னுங் குமார சிறுசதங்கைச் செய்யசெந் தாமரை சேர்வதென் றோவினை சேய்தொலைத்தே. 43
தினை விளையும் நிலத்தை உடைய, ஒழுங்கான, சிறுகுடி என்னும் நகரத்தாருக்கு, தெரியாமல், அந்தத் தினைப்புனத்தைக் காவல் செய்த வள்ளி நாயகியை, சிவந்த கொல்லைப் பயிரைச் சூழ்ந்து கொண்டிருந்த, ஆடு, தாவுகின்ற கடம்பை என்கிற மான் கூட்டம், மற்றும் வேறு ஜாதி மான்கள், நிரம்பி இருக்கும், குன்றில், அவளைக் காந்தர்வ மணம் செய்து கொண்ட, கந்தக் கடவுளே, அழகிய கொன்றை மாலையை உடைய சிவபெருமான், ஐயனே எனப் போற்றுகின்ற குமாரக் கடவுளே, சிறிய சதங்கை அணிந்த, அழகிய, சிவந்த நின் திருவடித் தாமரையை, நான் அடைவது எந்தக் காலம்? இருவினைகளையும் தூரத்தில் நீக்கிவிட்டு. ..

சேதாம் பலதுறை வேறும் பணிகங்கை செல்வநந்தன்சேதாம் பலதுறை யாதசிற் றாயன் றிருமருகசேதாம் பலதுறை செவ்வாய்க் குறத்தி திறத்தமுத்திச்சேதாம் பலதுறை யீதென் றெனக்குப தேசநல்கே. 44
சேது முதலிய, மற்றும் பல புண்ணிய தீர்த்தங்களும், வணங்குகின்ற, கங்காதேவியின் மைந்தனே, நந்த கோபனின் பாலகனாய் அவதரித்து, வெண்ணை திருடனாய் யசோதையால் கட்டப்பட்ட தம்புக் கயிற்றால் அன்றி, வேறு எதற்கும் கட்டுப்படாத, சிறு இடையனாகிய கிருஷ்ண மூர்த்தியின், செல்வ மருமகனே, சிவந்த, ஆம்பல் பூ நிறம்போலும், உற்ற, சிவந்த வாயை உடைய, வள்ளி மணாளனே, மோட்சத்திற்கும் எனக்கும் உள்ள பெரிய தூரத்தை, தாண்டக்கூடிய, நல்ல பலனைக் கொடுக்கக் கூடிய மார்க்கம், ஏது என்று, எனக்கு நீ உபதேசம் செய்ய வேண்டும். ..

தேசம் புகல வயிலே யெனச்சிறை புக்கொருகந்தேசம் புகல வணவாரி செற்றவ னீசற்குபதேசம் புகல திகவாச கன்சிறி தோர்கிலன்மாந்தேசம் புகல கமுதவி மானைச் செருச் செய்வதே. 45
ஐந்து தலையில் ஒரு தலையை, இழந்த, பிரம்மன், எனக்கு உறைவிடமும், அடைக்கல ஸ்தானமும், வேலாயுதமே என்று முறையிட, மரக்கலங்களும் அழகும் நிறைந்த, உக்கிர குமார பாண்டியனாக வருணன் ஏவிய கடலை வற்றச் சேய்தவனும், பரமசிவனுக்கு, பிரணவ உபதேசம் செய்த, சிறந்த மொழியை உடைய கந்தக் கடவுள், கொஞ்சங்கூட அறிந்தானில்லை, பிரகாசம் பொருந்திய மாம் பூவாகிய அம்பு, காமக் கலக்கத்தை ஏற்படுத்தி, மான் போன்ற தலைவியுடன், போர் புரிகின்றதை, (சிறிது ஓர்கிலன்) ..

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.