LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

கண்ணகியர் மூவர் - புலவர் சு.தி.சங்கரநாராயணன்

மொட்டு அவிழும் பருவத்து, மலர் போன்று சிறிதே இதழ்கள் பிரித்து உள்ளத்து எழும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதை, புன்னகை, புன்முறுவல், குறுநகை, இளநகை என்பர். நாணமும் மடப்பமும் கொண்டு குறுநகை புரிந்து வாழ வேண்டிய மங்கையரான கண்ணகியர் மூவர் துன்பக் கேணியில் தத்தளித்த வரலாற்றைப் புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் காணலாம்.


சோழ நாட்டு அழிசி என்னும் ஊரில் ஒரு பெருங்காடு. அங்கே இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையான கனிதரும் நெல்லிமரம். வெüவால் ஒன்று வந்து, அம்மரத்திலுள்ள நெல்லிக்கனியை உண்டு மகிழ்ந்தது. பின்னர் தன் இருப்பிடமான கடற்கரை பரதவர் குடியிருப்புக்குச் சென்றது. அங்குள்ள மாமரத்தின் கிளையில் சுகமாகத் தூங்குகிறது. இக்காட்சியை தலைவி ஒருத்தி, தன் கனவில் கண்டதாகத் தன் தோழியிடம் கூறுகிறாள். இந்த உருவகக் கதையால், தலைவி இயற்கைப் புணர்ச்சி (முதல் சந்திப்பு) எய்தி இன்புறுவதை தோழி அறிந்து கொண்டாள். இதை நற்றிணை 87-ஆம் பாடல் கூறுகிறது.

சில நாள்கள் சென்றன. வெüவாலாக உருவகம் செய்த அந்தத் தாழை மனம் கமழும் கடற்கரை ஊர்த் தலைவனைக் கண்டாள் தோழி. பிரிவால் வாடி வதங்கும் தலைவியை ஏற்று மணம் புரிந்து இன்புறுமாறு அவனை அழைக்கிறாள். இவ்வாறு நற்றிணை 19-ஆம் பாடல் கூறுகிறது.

மேலும் சில நாள்கள் கழிந்தன. போர் மூள்கிறது. மூன்றடுக்கு முறையில் படைகள் சூழ்ந்திருக்க, ஆமூர் கோட்டையை மல்லன் ஒருவன் காத்து நிற்கிறான். சோழன் தித்தன் மகனான "போர் வைக்கோப் பெருநற்கிள்ளி' எனும் இளவரசன், அந்த ஆமூர் கோட்டையைக் கைப்பற்றச் செல்கிறான்; எதிரியை முறியடிக்கிறான்; போரில் வெற்றி பெறுகிறான். ஆனால், களம்பட்டான் (வீரமரணம் அடைந்தான்). போர்க்களத்தில் வீரர் பலர், ""ஆடு ஆடு'' (வெற்றி-வெற்றி) என்று ஆர்ப்பரிக்கின்றனர். தலைவன் களத்தில் வீரமரணம் அடைந்ததை அறிந்த சிலர், ""ஆடன்று ஆடன்று'' (வெற்றி அல்ல-வெற்றி அல்ல) என்று கூவிப் புலம்புகின்றனர்.

"போர் வைக்கோப் பெருநற்கிள்ளியை' (வை,கோ-என்னும் இரண்டும் தலைமைப் பண்பை உணர்த்துவன) களவுப் புணர்ச்சியில் ஒரே ஒருமுறை கூடிக்கலந்து மகிழ்ந்த தலைவி, ""ஆடு, ஆடு'' எனவும், ""ஆடன்று ஆடன்று'' எனவும் இருவகையான ஆர்ப்பரிப்பைக் கேட்டாள். உண்மையை அறிய ஊர் எல்லைக்கு ஓடினாள். சற்று மேடான நிலத்திலுள்ள பனை மரத்தின் அடியில் நின்றாள்.

போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த தலைவனை அள்ளி எடுத்துத் தன் மடியில் இருத்தி, மார்புறத் தழுவ ஆசை கொள்கிறது அவளது மனம். ஆனால், மணந்து கொள்ளாத ஒருத்தி களம்பட்ட வீரனைத் தழுவுதல் கண்டு ஊரவர் பழிதூற்றுவார்களே என எண்ணி, அஞ்சி அவளது உடல் நடுங்குகிறது. துணிந்தாள்; அச்சம் தவிர்த்தாள்; தன் காதலனை - வெற்றிபெற்ற தானைத் தலைவனை மார்புறத் தழுவ ஆசை கொண்டு போர்க்களம் நோக்கி ஓடினாள். இந்தத் துன்பியல் காட்சியைப் புறநானூற்றில் (பா.85) காணலாம்.

இம்மூன்று பாடல்களில் நக்கண்ணையார் என்ற பெண்பாற் புலவர் தன் வரலாற்றை வெளியிட்டுள்ளார். மேலும், இவர் செய்த புறம்-83, 84; அகம்-252 ஆகிய மூன்று பாடல்களும் உள்ளன.

மழையில் நனைந்து வருந்திய மயிலுக்குப் போர்வை ஈந்தவன் வள்ளல் பேகன். அவன், தன் மனைவியான கண்ணகியைப் பிரிந்து, பரத்தையான வேறு ஒரு துணைவியோடு இன்புற்று இருந்தான். நீர் வடிக்கும் மழைக் கண்ணுடன் பொழுது கழித்து வரும் மனையாளோடு இணைந்து, பரத்தமை விடுத்து இல்லறம் நடத்துமாறு கபிலர், பரணர், அடிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் ஆகிய புலவர் நால்வர் பேகனுக்கு அறிவுரை கூறிய வரலாற்றையும் புறநானூறு கூறுகிறது.

சிலப்பதிகாரம்-இந்திரவிழா எடுத்த காதையில், கண்ணகியின் துன்புற்ற கருங்கண்ணுக்கும், மாதவியின் செங்கண்ணுக்கும் உவமைக் காட்சியாகத் தேன் வடிக்கும் கழுநீர்ப்பூ ஒன்றையே காட்சிப்படுத்துகிறார் இளங்கோ.

இயற்கைப் புணர்ச்சியாக ஒரே ஒரு முறை மட்டும் கூடி மகிழ்ந்த பின்னர், திருமணம் கைகூடாத நிலையில்-போர்க்களத்தில் பட்டுக்கிடக்கும் தலைவனைத் தழுவ முயன்றும் முடியாமல் மருகி அழும் நக்கண்ணையாரை அறிந்தோம்.

ந+கண்ணை+ஆர்= நக்கண்ணையார். ந-என்பதும், ஆர்-என்பதும் சிறப்பு அடைமொழிகள். கண்+நகி=கண்ணகி. கண்ணால் நகுதலைச் செய்பவள். உள்ளக் கிடக்கை (உள்ளத்தில் உள்ளதை) உணர்த்துவது கண்களே ஆகும். வள்ளல் பேகன் பேகன் மனைவியும், கோவலன் மனைவியும் பெயரில்தான் கண்ணகியரே அன்றி, அவ்விருவரும் அவலத்தில் சிரித்தவர்களே ஆவர். இதனால், கண்ணகி என்ற பெயரே "ராசி' இல்லாதது என்று தமிழ் மக்கள் எண்ணினர் போலும்.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.